அங்கே, அவ்வியக்தனை வீட்டைவிட்டு வெளியேறு என்று சொன்னதற்குப் பின்னால் கட்டுக்கடங்காமல் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் பெரும் வலியாலும் தன் கரத்திலிருந்த கைப்பேசியைத் தூக்கிப் பார்த்தாள் விதற்பரை.
அது யாருடையது என்று தெரியவில்லை. எதற்காக அவளிடம் கொடுத்தான் என்றும் தெரியவில்லை. உயிர்ப்பித்துப் பார்க்க கடவுச் சொல் கேட்டது. இதை எதற்கு அவளிடம் கொடுத்தான்? ஆத்திரம் கண்ணை மறைக்க, அதை ஓங்கிச் சுவரில் எறிந்துவிட்டு. அது சுக்குநூறாக உடைவதை ஒருவித திருப்தியுடன் பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்தாள். மனம் பெரும் வலியில் தவித்தது.
அவளுடைய அவ்வியக்தனா தவறு செய்தான்? முள்ளில் அமர்ந்திருப்பது போலத் தோன்ற எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் விதற்பரை. இன்னும் தலையழுதமும், பாரமும் விலகவில்லை. எதோ ஒன்று எதோ ஒரு காட்சியை மறைப்பது போன்ற உணர்வில் தலையைப் பற்றியவாறு குனிந்தவளுக்கு எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை.
சோர்வுடன் நிமிர்ந்தவளின் விம்பம் அங்கிருந்த கண்ணாடியில் பட்டுத் தெறிக்க அப்போதுதான் கவனித்தாள், சட்டை இன்னும் மாற்றப்படவில்லை என்று. அதுவும் முன்புறம் தாராளமாகக் கிழிந்திருந்தது. அதைக் கண்டதும் மேலும் அழுகை வந்தது. எழுந்தவள் ஆத்திரத்துடன் அதைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் குளியலறை சென்று நன்கு தேய்த்துக் குளித்தாள்.
மார்புகளில் ஆங்காங்கே கீறல்களும் கண்டல்களும் அவளைத் துடிக்க வைத்தன. அதைத் தவிர உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள் என்ன செத்துப் பிழைத்தாளா சுடுகாடு தெரிவதற்கு. முதன் முறை என்றால் வலிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவளுக்கு எந்த வலியும் தெரியவில்லை. ஆனால் மார்பில் உள்ள காயங்கள் சொல்கின்றனவே ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று. இது போதாதா? மீண்டும் கண்கள் கரித்தன. ஆனாலும் ஒரு பக்கத்துப் புத்தி, உனக்குப் பழச்சாறு விக்டர் தானே கொடுத்தான் என்றது.
கூடவே அன்று விக்டர் பற்றி அவ்வியக்தன் விசாரித்ததும் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. அது, அவனை மேலும் குற்றவாளியாக்க, தாள முடியாத வேதனையுடன் குளித்து முடித்து வெளியே வர மன அழுத்தம் மூச்சை முட்டவைத்தது.
அறைக்குள் முடங்கிக் கிடந்தால் பைத்தியம் பிடிக்கும் என்பது தெரிய, சற்றும் யோசிக்காமல் கிடைத்த சப்பாத்தை அணிந்துகொண்டு, கிடைத்த சுவட்டரைப் போட்டுக்கொண்டு வெளியேறிக் கண் மண் தெரியாமல் நடக்கத் தொடங்கினாள். அவள் சரி பிழை எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. எப்படியாவது அந்த வலியிலிருந்து அவஸ்தாயிலிருந்து ஏமாற்றத்திலிருந்து வெளிவரவேண்டும். அது மட்டும்தான் அவள் புத்தியை ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தது.
தன்னை மறந்து நடந்துகொண்டிருந்தவளை நோக்கிப் பனி மழை பொழியத் தொடங்க, அப்போதுதான் அவளுக்குச் சுய நினைவே வந்தது. இருட்டின் ஆரம்பப் பகுதியைத் தொட்டுவிட்டது புரிய, அதுவரையிருந்த அதிர்ச்சி நீங்கி இப்போது அச்சம் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
குளிர் காலம் என்பதால் விரைவாகவே இருண்டு விடும். கடவுளே இந்தளவு இருளும் வரைக்குமா நடந்திருக்கிறோம்…? அந்த மயான அமைதி நிறைந்த இடம், பெரும் கிலியைப் பரப்ப, சுற்றும் முற்றும் பார்த்தாள். மரமில்லாத இருளில் மூழ்கிய அண்டவெளிதான் அவளைப் பார்த்து வாயைப் பிளந்தது. அப்போதுதான் தான் ஏதோ யோசனையில் இடம் பொருள் ஏவல் என்றில்லாமல் எங்கோ ஒரு திக்கில் நடந்து வந்திருப்பது புரிந்தது.
இது என்ன இடம்? இங்கே எப்படி வந்தாள்? எவ்வளவு தூரம் வந்தாள்? அச்சத்துடன் தன் கைப்பேசியை எடுப்பதற்காகப் பான்ட் பாக்கட்டைத் தட்டிப் பார்த்தாள். அப்போதுதான் எதையும் எடுத்து வராமல் வெளியே வந்ததே நினைவுக்கு வந்தது.
பனி வேறு பெய்யத் தொடங்கிவிட்டதே… அதற்குத் தோதாகச் சப்பாத்தும் அணிந்து வரவில்லை. ஏன் சரியான தடித்த மேலாடை கூட அவள் அணியவில்லை. தன் முட்டாள் தனத்தின் மீது ஆத்திரம் கொண்டவளாக, மேலும் நடக்கத் தொடங்கியவளுக்கு முதலில் நிற்கும் இடம் என்னவென்று கூடத் தெரியவில்லை. எங்குப் பார்த்தாலும் முன்தினம் பெய்த பனியால் வெண்மையாகிப்போன வெட்டவெளிதான் கண்களுக்குத் தெரிந்தது.
சாதாரணமாக இருந்திருந்தால் குதுகலித்திருப்பாள். துள்ளிக் குதித்திருப்பாள். அந்தப் பனியை அள்ளி விளையாட ஆர்வம் கொண்டு ஓடியிருப்பாள். ஆனால் இப்போது யாருமற்ற அந்தத் தனிபை பயங்கர அச்சத்தைக் கொடுக்க, சுத்தவரப் பார்த்தாள். இது வரை இந்தப் பக்கம் வந்த நினைவே இல்லை. ஒரு மதியத்திற்கு இந்தப் பக்கத்தால்தான் வந்திருக்கவேண்டும் என்று எண்ணியவளாகத் திரும்பி நடக்கத் தொடங்கியவள், இரண்டு பாதையாகப் பிளந்து சென்ற தெருவைக் கண்டதும் மேலும் அச்சம் எழுந்தது. எந்தப் பக்ககத்திற்குத் திரும்ப வேண்டும்…? குழம்பியவளாக, வலப்பக்கமாகத் திரும்பி நடக்கத் தொடங்க பனி மேலும் பொழியத் தொடங்கியது.
எத்தனை மணி என்று கூடத் தெரியவில்லை. ஒதுங்க கூட இடமில்லை. தன்னையே திட்டியவாறு மேலும் நடக்கத் தொடங்க அவள் பக்கமாக ஒரு வண்டி வந்து நின்றது. அச்சத்துடன் திரும்பிப் பார்க்க,
“ஹே… டு யு நீட் எனி ஹெல்ப்…” என்றார் ஒரு வெள்ளையினத்து ஆண்மகன். இந்த ஜென்மத்தில் ஒரு ஆணைச் சந்தேகமில்லாமல் பார்க்க முடியுமா தெரியவில்லை. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ.
“நோ தாங்க் யு… என் கணவர் பின்னால்தான் வந்துகொண்டிருக்கிறார்…” என்று கூறி சமாளித்தவள், சிரமப்பட்டுப் புன்னகையைத் தேக்கி, “இப்போது என்ன நேரம் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்க, தன் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு,
“ஆல்மோஸ்ட் நைன்…” என்றவர், “டே கெயர்…” என்று கூறிவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்ல, இவளுக்கு இப்போது வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒன்பது மணியா. அப்படியானால் மூன்று மணி நேரமாகவா நடந்திருக்கிறாள்…? மீண்டும் நடக்கத் தொடங்க, இப்போது பாதை நீண்டு கொண்டே சென்றதன்றி, இம்மியும் குறுகவில்லை. போதாததற்கு எந்த வீடுகளும், கடைகளும் கூடக் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
கடவுளே யாரோடு தொடர்பு கொள்வது? எப்படித் தொடர்பு கொள்வது? குறைந்தது தொலைப்பேசியுள்ள இடங்களாவது வேண்டுமே…” மேலும் அரை மணி நேர நடை. அதீத குளிராலும், பனி தாராளமாகச் சப்பாத்திற்குள் புகுந்ததாலும், பாதங்கள் இரண்டும் விறைத்துப் போயிருந்தன. அவற்றில் உணர்ச்சி இருப்பது போலவேயில்லை. உடலோ அந்தக் குளிரைத் தாங்க முடியாமல் வெடவெடத்தது. கரங்களில் உணர்வில்லை. மூக்கு முகத்தில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. பற்களைக் கடித்துக்கொண்டு ‘எனக்குக் குளிரவில்லை குளிரவில்லை குளிரவில்லை…’ என்று மந்திரம் போல ஜெபித்தவாறே, மேலும் நடந்தவள் ஒரு இடத்தைக் கண்டதும் கண்கள் பளிச்சிட்டன.
சற்றுத் தொலைவில் மின்னிக்கொண்டிருந்தது காஸ் ஸ்டேஷன். அதைக் கண்டதும் ஏதோ கடவுளே கருனை காட்டிய மகிழ்ச்சியில் தன் இயலாமையை உதறித் தள்ளிவிட்டு, முடிந்தளவு விரைவாக உள்ளே செல்ல, இதம் கொடுக்கும் வெம்மை அவளைக் கரம் நீட்டி அழைத்துக்கொண்டது.
சிறிய கடைதான். யாருமில்லாமல் ஒருவர் மட்டும் காசாளர் இடத்தில் நின்று தொலைப்பேசியில் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். அதைக் கண்டதும் இவளுடைய விழிகள் மின்னின.
வறண்ட தொண்டையை உமிழ்நீர் கொண்டு கூட நனைக்க முடியாத அளவுக்கு உடலில் தண்ணீர் வற்றிப் போகத் தடுமாற்றத்துடன் குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆவலாகப் பார்த்தாள். அவள் போதாத நேரம் வாங்கிக் குடிப்பதற்குக் கூடப் பணமில்லை. தவிப்புடன் நின்றிருக்க, அது காசாளர் இடத்தில் அமர்ந்திருந்தவருக்கு உறுத்தியது போலும். தொலைப்பேசியை அதன் இடத்தில் வைத்துவிட்டு, அவள் கோலத்தைக் கண்டு புருவங்கள் சுருங்க,
“ஹாய்… ப்யூட்டிஃபுள் லேடி… வட் கான் ஐ டு ஃபோர் யு…” என்றார் புன்னகையுடன், இவளோ வறண்ட உதடுகளைப் பிளந்து புன்னகைத்தாள்.
“உ… உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவேண்டும்… வழி… வழி தவறிவிட்டேன் போல… இது என்ன இடம்…” என்று சங்கடத்துடன் கேட்க, அவளைப் பரிதாபமாகப் பார்த்த கடைக்காரர், அந்த இடத்தைப் பற்றிக் கூற, இவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“வேறு திசையில் வந்திருக்கிறாள். அதுவும் கிட்டத்தட்ட பதினைந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் சுயத்தைத் தொலைத்தவாறு நடந்து வந்துவிட்டிருக்கிறாள்.. அதை நினைக்கும் போதே இயலாமையில் அழுகை வர, அதைக் கண்ட கடைக்காரருக்கு, அவள் மீது கனிவு பிறந்ததோ, தன் இடத்தை விட்டு வெளியே வந்து, காப்பித் தயாரிக்கும் இயந்திரத்தை நெருங்கி, ஒரு நொடியில் காப்பித் தயாரித்து, அதற்கேற்ப சீனியும் கலந்தவாறு அவளை நெருங்கிக் குவளையை நீட்ட, அந்தக் குளிருக்குக் காப்பி வரப்பிரசாதமாகவே இருக்கும் என்று தெரிந்தும், தயக்கத்துடன் மறுத்து,
“சாரி… இதை வாங்க என்னிடம் பணமில்லையே…” என்றபோது முகம் அவமானத்தில் சிவந்துபோனது.
“இட்ஸ் ஓக்கே… முதலில் இதைக் குடி…” என்று கூறி அவள் கரத்தில் குவலையைத் திணிக்க, நன்றியுடன் வாங்கியவள், ஒரு மூச்சில் அதைக் குடித்து முடித்ததும்தான் அவளுக்குச் சற்று சக்தியே வந்தது.
அவள் குடித்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்த கடைக்காரர்,
“யாரையாவது அழைக்கப்போகிறாயா?” என்றார்.
உடனே தலையை ஆட்ட கோட்லஸ் தொலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினார். அதை வாங்கியவளுக்கு முதலில் யாரோடு பேசுவது என்று புரியவில்லை.
நிச்சயமாக அவ்வியக்தனை அவளால் அழைக்க முடியாது. விக்டரை நினைத்தாலே அன்றைய விழாதான் கண் முன்னே வந்து நின்றது. உதடுகளைக் கடித்தவளுக்கு அழுகை வேறு வந்தது. சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவள், தன் தோழர்களை அழைத்து பார்த்தாள். யாரும் கைப்பேசி எடுக்கவில்லை. என்னாயிற்று. ஏன் ஒருவரும் கைப்பேசி எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தாள். இயலாமையில் கரங்கள் நடுங்கின. கண்கள் கலங்கின. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தவிப்புடன் அந்தக் கடைக்காரரைப் பார்த்தாள். அவரும் இவளைத்தான் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வேறு வழியில்லை… இந்த நிலைமைக்கு அவ்வியக்தனைத் தவிர யாரையும் அழைக்க முடியாது. ஆனால் அவனை அழைக்கவும் அவளால் முடியவில்லை. தன் கன்னத்தைத் துடைத்தவள்,
“வாடகை வாகனம் இங்கே பிடிக்க முடியுமா?” என்றாள் பரிதாபமாய். உதடுகளைப் பிதுக்கியவர்,
“இங்கே இந்த நேரத்தில் எதுவும் பிடிக்க முடியாதே…” என்று வருந்த, உள்ளுணர்வோ அவ்வியக்தனை அழை என்றது. இல்லை… வேண்டாம்… என்று அவள் முடிவுசெய்து தொலைப்பேசியை அவரிடம் நீட்டியபோதுதான் கவனித்தாள் அவ்வியக்தனை அழைத்து விட்டோம் என்று. உடனே அதை அணைக்கப் போக, அத் தோலைபேசியைத் தன் கரத்துக்கு மாற்றிய கடைக்காரர் அவள் யாரையோ அழைக்க முயன்றிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவராக அதை உயிர்ப்பித்து ஸ்பீக்கரில் போட்ட மறுகணம் ஒரு பெண்ணின் குரல் இவர்களை வந்து மோதியது. இவர்களுடைய உரையாடலைக் கேட்க அந்தப் பெண்ணுக்கு நேரமில்லை போலும்.
“மன்னிக்க வேண்டும். அவர் வேலையாக இருக்கிறார்… பிறகு அழையுங்கள்….” என்றவள் தோடர்ந்து “அவுச்… ஹே ஈசி …” என்று எதையோ கூறியவாறு கைப்பேசி அணைத்ததற்கு ஆதாரமாக டீட் டீட் என்கிற சத்தம் கேட்க விதற்பரைக்குச் சர்வ உலகமும் அசைவை நிறுத்தியது போன்ற உணர்வில் விறைத்துப் போய் நின்றாள்.
இவன் இப்படித்தான். இதைத்தான் செய்வான் என்று தெரிந்தும் தாங்க முடியாத வலியில் இதயம் நின்று விடும் போலத் துடித்தது. உதடுகள் அழுகையில் நடுங்கப் பற்களைக் கடித்தவாறு அப்படியே நின்றிருந்தாள் விதற்பரை.
அவனுக்கு வேண்டியது பெண்ணுடைய உடல் தானே. அது கிடைத்த பின் அதன் பின்னே சுற்ற அவனுக்குப் பைத்தியமா என்ன? மீண்டும் மனம் பலவீனப்பட்டுப்போக தவிப்புடன் நின்றிருந்தவளைக் கண்ட கடைக்காரருக்கு இரக்கம் பிறந்ததோ,
“இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்றார் கனிவாக. சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவள், பொங்கி விழ முயன்ற கண்ணீரை உள்ளுக்குள் எடுத்தவாறு மெல்லியதாக நகைத்து,
“ஐ… ஐ ஆம் ஓக்கே… நான்… நான்… நினைக்கிறேன்… அவருக்கு வேலைப் பழு போல…” என்றவள், தான் இருக்கும் இடத்தைக் கூறி அங்கே எப்படிப் போவது என்று கேட்க, அவரோ அங்கிருந்த சுழல் தட்டை நோக்கிச் சென்று, அதிலிருந்து ஒட்டாவா நகரத்தின் வரைபடத்தை இழுத்து எடுத்து அவள் முன்னால் விரித்து,
“நீ இப்போது இங்கே இருக்கிறாய்… இது கிராமம் என்பதால், பேருந்துகள் கிடைக்காது. அதனால் குறைந்தது இன்னும் எட்டு கிலோமீட்டர்களாவது நீ நடக்க வேண்டும்… அங்கே ஒரு பேருந்து வரும்… அதில் ஏறினால்” என்று சொன்னவர் அத்தனை தூரம் நீ எப்படிப் போவாய்? என்பது போலப் பார்த்தார்.
அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்தவளாக, புன்னகைத்தாள் விதற்பரை.
இத்தனை தூரம் நடந்து வந்தவளுக்கு நடந்து போகத் தெரியாதா என்ன? அவருக்கு நன்றி கூறிவிட்டுத் திரும்ப,
“ஒரு நிமிடம் இரு…” என்றவர் கைப்பேசியில் யாரையோ அழைத்தார். அழைத்துவிட்டு இவளைத் திரும்பிப் பார்த்து?
“சற்றுப் பொறு… என் மகன் உள்ளேதான் இருக்கிறான். அவனை அழைத்திருக்கிறேன்… அவன் உன்னை அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் விடுவான்…” என்றதும் மேலும் இவளுக்கு வயிற்றைக் கலக்கியது. நம்பியவனே உண்மையாக இல்லை என்கிற போது தெரியாதவன் எப்படி நல்லவனாக இருப்பான். மறுப்பதற்கு வாயை எடுக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு வந்தான் அவன்.
தலைக்கு இளஞ்சிவப்பில் மை பூசியிருந்தான். காதில் தொங்கட்டான் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் நடந்து வந்த விதத்திலேயே அவனுக்குப் பெண்களைப் பிடிக்காது என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அதுவரையிருந்த அழுத்தம் வடிந்து போக நிம்மதியுடன் நிற்க, அவனோ விதற்பரையை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“யெஸ் டாட்…” என்றான் பெண் போல நெளிந்து வளைந்து குழைந்து.
அவர் கூறியதைக் கேட்டவன், அவர் நீட்டிய வண்டித் திறப்பை வாங்கிக் கொண்டு, அவளை நெருங்கியவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பளிச்சென்று புன்னகைத்தான்.
சுட்டுவிரலை மட்டும் உயர்த்தி அவள் தோட்டைச் சுட்டிக் காட்டி,
“உன்னுடைய தோடு அழகாக இருக்கிறது… எங்கே வாங்கினாய்…” என்று கேட்டபோதே அதில் அதீத பெண்மையிருக்க, இவளோ பதில் சொல்வதா விடுவதா என்று தடுமாறிய தருணத்தில்,
“அலக்ஸ்” என்றார் பெரியவர் கடுமையாக. அதை அலட்சியப்படுத்துவது போல வலக் கரத்தை ‘டோல்’ போலப் போட்டு,
“அவர் அப்படித்தான். நீ வா” என்றவாறு இடையை வளைத்து நடக்கத் தொடங்க, கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்ப அவளைத் தடுத்தார் கடைக்காரர்.
விரைந்து உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது அவருடைய கரத்தில் ஒரு தடித்த மேற்சட்டை இருந்தது.
“இதை அணிந்து கொள் பெண்ணே. இந்தக் குளிருக்கு நீ அணிந்திருக்கும் ஆடை போதாது…” என்று கூற, இப்போது அந்த மேற்சட்டையை மறுக்கும் நிலையில் அவளில்லை. பெரும் நன்றியுடன் பெற்று கொண்டவளிடம், பத்து டாலர் தாளை நீட்டி,
“பேருந்துக்குப் பணம் வேண்டுமே இந்தா…” என்றார். ஏனோ பிச்சை எடுப்பது போல நெஞ்சம் கூசினாலும், மறுக்காது அதை வாங்கிக் கொண்டாள். அதை விட அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை.
“நிச்சயமாக இவற்றைத் திருப்பி உங்களிடம் ஒப்படைத்துவிடுவேன்…” என்று விழிகள் பணிக்க கூறிவிட்டு, அந்த மேற்சட்டையை அணிந்தவாறு வெளியே வந்தாள்.
காத்திருந்த வாகனத்தில் ஏற, அடுத்து பேருந்து நிலையத்தை நோக்கிப் பயணப்பட்டது வண்டி.
அவளை இறக்கிவிட்டு, அவளுடைய நன்றியைப் பெற்றுக்கொண்டு அலக்ஸ் விடை பெற, ஏனோ அந்த உலகத்தில் அவள் மட்டும் தனித்திருப்பதுபோலத் தோன்றியது. எல்லாமே பொய் என்கிற தோற்றம் மனதில் ஆழமாகப் படிந்தது.
அந்தக் கனத்த உணர்விலிருந்து எப்படி வெளியேறப் போகிறாள்? தெரியவில்லை. அத்தனை சக்தியையும் திரட்டி பேருந்தில் ஏறிப் பணத்தை அங்கிருந்த பணப்பெட்டியில் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்த போது, அவள் உள்ளத்தைப் போல யாருமில்லா வெற்று வாகனம்தான் அவளை வரவேற்றது.
திடீர் என்று தண்ணீர் விடாய்க்க எழுந்தான் அந்தப் பதினொரு வயது அவ்வியக்தன். கண்களைக் கசக்கியவாறே, சமையலறைக்குள் நுழைந்தவன், சற்று உயரத்திலிருந்த தண்ணீர் குழாயைத் திருகி எக்கி நின்றவாறு தண்ணீரைப் பிடித்த நேரம், முதுகிலே ஒரு கரம் படரத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அவர்களைப் பராமரிக்கும் பெண்மணி,
“ஹாய்… ஸ்வீட் பை” என்றவாறு அவனை நோக்கிக் குனிந்து, அவனுக்குரிய தனிப்பட்ட பகுதியில் கரத்தை வைக்கத் தொடங்க, பதறியவாறு எழுந்தமர்ந்தான்.
கண்ட கனவின் பலன், நெஞ்சம் வீங்கி வீங்கித் தணிந்தது. உடல் வியர்வையில் குளித்திருந்தது. ஈரமாகிவிட்ட தலை முடியை வாரிவிடுவதற்காகக் கரத்தைத் தூக்கியவனுக்கு அவை நடுங்கிய நடுக்கத்திலேயே தெரிந்தது, எத்தனை பயந்துபோயிருக்கிறோம் என்று.
இன்னும் அக்கனவிலிருந்து வெளி வராதவனாக எழுந்தமர்ந்தவன், தன் முகத்தை உள்ளங்கையில் தாங்கியவாறு சற்று நேரம் அப்படியே நின்றிருக்க, நெஞ்சமோ மெல்ல மெல்லப் படபடப்பைக் குறைத்துக் கொண்டது.
கொஞ்ச நாட்களாகத்தான் அந்தக் கனவு இல்லாமல் நிம்மதியாக இருந்தான். ஆனால் இப்போது மீண்டும் அந்தக் கனவு வந்து அவனை வதைத்துவிட்டது. ஒரு வேளை விதற்பரையும் இந்தச் சிக்கலுக்குள் சென்று வந்தது காரணமாக இருக்கலாம். தொண்டை வறண்டு போக விழிகளை அழுந்த மூடி மூச்செடுத்துத் தன்னைச் சமநிலைப் படுத்த முயன்றான். மனம் அவளைத்தான் தேடி ஏங்கியது.
அவள் அருகே இருக்கும் போது, எதையும் வென்று விடலாம் என்கிற தைரியம் தோன்றும். திடம் வரும். ஆனால்… ஆழ மூச்செடுத்தவாறு எழுந்தவன் குளியலறை சென்று முகத்தைக் கழுவி ஆசுவாசப் படுத்திக்கொண்டு வெளியே வந்தான்.
எழுப்பொலி வைத்த கைப்பேசி அப்போதுதான் சத்தம் போட தொடங்க, அதை எடுத்து அணைத்துவிட்டு விதற்பரையிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. உடனே மனம் வாடிப்போனது அவ்வியக்தனுக்கு. இன்னுமா அவள் உண்மையை உணரவில்லை?
ஏனோ அவள் மௌனம் அவனை வதைக்க” அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அவளுக்கு அழைத்துப் பார்த்தான். ம்கூம், அவளிடமிருந்து சற்றும் இளக்கமிருக்கவில்லை.
“என்னுடைய அழைப்பை எடு…’ என்று குறுஞ்செய்தியையும் அனுப்பிப் பார்த்தான். அதற்கும் பதிலில்லை. ஆனால் அந்தக் குறுஞ்செய்தியை அவள் பார்த்துவிட்டாள் என்பதற்கான அறிகுறி தெரிய, சுரு சுரு என்று கோபம் எழுந்தது.
ஒரு பக்கம் ஓடிச் சென்று அவளைப் பார்க்கவேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் அவளை அழைத்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தாயிற்று. அவளிடமிருந்து பதிலில்லை என்றதும், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் தன் பிடிவாதத்தைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு அவளுடைய வீட்டிற்கு முன்பாக வந்து நின்று கதவைத் தட்டத் தொடங்கினான்.
ம்கூம், அவள் திறக்கவேயில்லை. ஆனால் அவள் உள்ளே இருக்கிறாள் என்பது மட்டும் புரிய, உடனே குறுஞ்செய்தியில்,
‘நீ நன்றாக இருக்கிறாயா, உனக்கொன்றுமில்லையே…’ என்று அனுப்ப, அவள் படித்திருக்கிறான் என்று தெரிந்ததன்றி அவளிடமிருந்து பதில் வரவில்லை.
“ப்ளீஸ் ஓப்பன் த டோர்… ஐ நீட் டு டாக் டு யு…”
“…..”
“நீ உள்ளேதான் இருக்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது… தயவு செய்து கதவைத் திற, உன்னை ஒரு முறையாவது பார்த்துவிட்டுப் போய்விடுகிறேன்..”
“……”
“எதுவாக இருந்தாலும் நாம் பேசித் தீர்க்கலாம்… இதோ பார் நீ நினைப்பது போல நேற்று முன் தினம் எதுவும் நடக்கவில்லை. என் மீது எந்தத் தப்புமில்லை… நீ தவறாகப் புரிந்திருக்கிறாய்… தயவு செய்து கதவைத் திற….”
“….”
“பிளீஸ் ஐ பெக் யு… ஓப்பன் த டாம் டோர்…” என்று அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கதவைத் திறப்பதாயில்லை. அதற்கு மேல் பொறுக்க முடியாமல், கதவைப் பலமாக மோதத் தொடங்கினான் அவ்வியக்தன்.
அதே நேரம் டொரன்டோ செல்வதற்காக ஆடைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த விதற்பரைக்கு ஆத்திரத்தில் உடல் எரிந்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவளைப் பார்க்க வந்தான்? அதுதான் ஒருத்தி முன்னிரவு கிடைத்தாளே… அவளிடம் சென்று கெஞ்சவேண்டியதுதானே…’ எகத்தாளத்துடன் எண்ணத் தொடங்கினாலும், அவனுடைய தட்டலைக் கேட்கும் சக்தியில்லாமல் தன் இரு காதுகளையும் பொத்தியவாறு, விழிகளை இறுக மூடிப் பற்களை ஒன்றோடு ஒன்று கடிபடச் சற்று நேரம் கிடந்தாள்.
பின் அவன் கதவை உடைப்பது போல மோதத் தொடங்கப் பதறியவாறு எழுந்தவளுக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இதைப் பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது பார்த்தால், நிச்சயமாகச் சும்மா இருக்க மாட்டார்கள். காவல்துறையை அழைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவளுக்கு இருக்கும் ஆத்திரத்தில் அவனைச் சிறையில் அடைக்கத்தான் ஆவலாக இருந்தது. ஆனால் அடைபடுவது அவன் மட்டுமல்ல, உத்தியுக்தனின் பெயரும்தான். ஏற்கெனவே சமர்த்தி நாசமாக்கியது போதாதா? அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.
கதவு திறந்ததும் பதட்டத்தோடு, அவளுடைய சோர்ந்த முகத்தையும், தளர்ந்த உடலையும் பார்த்த அவ்வியக்தன்,
“ஓ… பேபி… என்ன செய்து வைத்திருக்கிறாய்… ஏன் முகம் இப்படிக் களைத்துப் போய்…” என்று பதறியவனாக அவள் நெற்றியில் கை வைக்கப் போக, உடனே இரண்டடி தள்ளி நின்று கொண்டவள், அவனை உறுத்துப் பார்த்து,
“கிட்டே வராதீர்கள்…” என்றாள் பெரும் சீற்றத்துடன். உடனே தள்ளி நின்றவன்,
“சரி போகிறேன்… அதற்கு முதல் வா… வைத்தியரிடம் சென்றுவரலாம்.. உன்னைப் பார்த்தால் காய்ச்சல் வந்தவள் போலத் தெரிகிறது…” என்று வருந்த, இவளோ ஏளனத்துடன் அவனைப் பார்த்து,
“ஏன் என் கை கால்கள் முடங்கிப் போய்விட்டனவா என்ன? என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்… யாருடைய உதவியும் எனக்கு வேண்டியதில்லை…” என்று சுள்ளென விழுந்தாள். இவனோ இயலாமையுடன் தன் கரங்களால் முகத்தைத் தேய்த்து விட்டவாறு,
“ஐ கான்ட் பிலீவ் திஸ்…” என்று முனங்கியவன், அவளிடம் எதையோ கேட்க வர, முன் வீட்டுக் கதவைத் திறந்து ஒருவர் வெளியே வந்தார். வாசலில் நின்றிருந்த அவ்வியக்தனையும், கலைந்த தலை, வாடிய முகம் என்று நின்றிருந்த விதற்பரையையும் பார்த்து,
“விதற்பரை… இங்கு ஏதாவது பிரச்சனையா?” என்றார் சந்தேகமாக. இவளோ அவசரமாக உதடுகளில் புன்னகையைத் தேக்கி,
“இ… இல்லை… இங்கே ஒரு பிரச்சனையுமில்லை…” என்றாள் சமாளிப்பாக.
“ஓ… யாரோ கதவை உடைப்பது போலத் தோன்றியது… அதுதான் வெளியே வந்து பார்த்தேன், நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் இல்லைதானே…” என்றார் நம்பாத தொனியில்.
“ஆமாம்… எந்தப் பிரச்சனையுமில்லை…” என்றுவிட்டு அவ்வியக்தனைப் பார்த்து முறைத்து,
“கெட் லொஸ்ட்…” என்று விட்டு, அவன் முகத்தில் அறைவது போலக் கதவைச் சாற்ற அவ்வியக்தன் அக் கதவு தன் முகத்தில் அறைந்த உணர்வில் மலைத்துப் போய் நின்றான்.
அன்று மாலை, அழுது அழுது கரைந்தவளுக்கு டொரன்டோ போகவே மனதில்லை. அன்னை சிறிய அசைவை வைத்தே ஏதோ பிரச்சனை என்று கண்டுகொள்வாள். ஆனால் இங்கிருந்தால் இதோ இப்படி வந்து அவளை வதைப்பான். இரண்டுக்கும் மத்தியில் திணறியவளுக்கு ஆயாசமானது.
நடந்தது நடந்து விட்டது. ஆனால் அதிலிருந்து வெளியேறியே ஆகவேண்டுமே. இப்படியே முடங்கிக் கிடக்க முடியாதே. அவள் நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக, வாழ்க்கையையே தொலைக்க முடியுமா என்ன? அதுவும் பாம்பு கொத்தும் என்று தெரிந்தும் அதை முத்தமிட முயன்றது யார் குற்றம். அவளுடைய குற்றம்தானே. அவன் எப்படிப் பட்டவன் என்று தெரிந்து அவன் மீது காதல் கொண்டது இவளுடைய தவறுதான். ஒரு தகுதியற்றவனுக்காக இவள் ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும். ஏன் கலங்க வேண்டும்… அவளுக்கான எதிர்காலம் பரந்து விரிந்து இருக்கிறது… இந்த வலி வேதனை எல்லாம் அவள் வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதான்… உறுதியுடன் கண்களைத் துடைத்தவளுக்குப் பசித்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களாகச் சரியாக சாப்பிடவில்லை. அதுவும் அன்று முழுவதும் சுத்தமாக உணவு உண்ணவில்லை. அது வேறு உடலைப் பலவீனமாக்கியது. வெளியே சென்று தையாவது வாங்கிக் கொறிக்க வேண்டியதுதான். எழுந்தவளுக்குப் பாதங்கள் வலித்தன. பற்களைக் கடித்துத் தன்னைச் சமப்படுத்தியவள் அறைக்குள் சென்று ஆடையை மாற்றிவிட்டுக் கைப்பையையும் எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தாள்.
இழுப்பறையைத் திறந்து, சப்பாத்தை எடுத்து அணிந்தவளுக்குக் கால்கள் பயங்கரமாக வலித்தன. எரிச்சலுடன் காலைத் தூக்கிப் பார்த்தாள். முன் தினம் நடந்ததன் விளைவு கொப்பளங்களாகிச் சிவந்து வீங்கியிருந்தன. அதைக் கண்டதும் மேலும் கண்ணீர் கோர்த்துக் கொண்டு வந்தது. ஆனாலும், ஆத்திரத்தோடு சப்பாத்தை அணிந்தவள், கதவைத் திறக்க, அங்கே மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்தவாறு பிடித்து வைத்த பாறாங்கல்லாக நின்றிருந்தான் அவ்வியக்தன்.
அதைக் கண்டதும் அதிர்ந்து போனாள் விதற்பரை. எத்தனை நேரமாக இப்படியே நிற்கிறான்? நம்ப முடியாதவளாக அவனையே வெறித்துப் பார்க்க, அவனும் அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ அவனுடைய விழிகளைப் பார்க்கும் சக்தியற்றவளாக அவனுடைய மார்பைப் பார்த்து,
“இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றாள் ஆத்திரத்தை அடக்கியவாறு.
“நீ கதவு திறப்பதற்காகக் காத்திருக்கிறேன்…” என்றான் தெளிவாக. அதைக் கேட்டதும், ஏளனத்துடன் புன்னகைத்தவாறு, கரங்களை அடித்துக் கூப்பி,
“ஐயா… சாமி… போதும்… இத்தோடு உங்கள் பக்கத்திற்கும் ஒரு கும்பிடு, உங்களுக்கும் ஒரு கும்பிடு… தயவு செய்து இனி என் முன்னால் வராதீர்கள்… போதும்… நான் பட்ட அவஸ்தை…” என்றவாறு அவனைக் கடந்து செல்ல முயல, இவனோ இரண்டெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய பாதையை மறைத்து நின்று,
“நோ… உன்னோடு பேசும் வரைக்கும் நான் இங்கிருந்து போகமாட்டேன் நேற்று என்ன நடந்தது என்று தெரியாமல் நீ இங்கிருந்தும் போக முடியாது…” என்றான் உறுதியாக.
“தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது… அதுதான் தெட்டத் தெளிவாக எனக்குப் புரிந்து விட்டதே… சீ… உங்கள் நிழல் பட்டாலே பாவம்… தயவு செய்து வழியை விடுங்கள்…” என்றவாறு விலகிச் செல்ல முயல, அவனோ அவளுக்கு இடம் விடாமல்,
“நோ… யு கான்ட்… அன்டில் யு லிசினிங் மீ…” என்று பிடிவாதமாகச் சொன்னவன் தன் சோர்வுடன் அவளைப் பார்த்து”
“தயவு செய்து நான் சொல்வதைக் கேள் தற்பரை… நீ நினைப்பது போல எதுவும் இல்லை… நம்பு…” என்று எதையோ கூற வர” அவளோ அவனை முடிக்க விடாமல் தன் கரத்தை நீட்டி,
“போதும்… வேண்டாம்… நிறுத்துங்கள்… உங்களைப் போன்ற ஒரு கேவலமான மனிதரோடு பேச நான் தயாராக இல்லை…” என்று சீறிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
ஆனால் அதுவரை பொறுமையாக பேசிக்கொண்டிருந்தவன், அதற்கு மேல் பொறுமையை இழந்தவனாக, அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தன்னோடு இறுக்யிவன், அவள் விலக முடியாதவாறு அவளுடைய இடையைத் தைத்தவாறு கரத்தை எடுத்துச் சென்று தன் உடலோடு அழுத்திக் கொள்ள, பயத்தோடு அவனைப் பார்த்தாள். இவனோ தன் விழித் தீயை அவள் மீது தெறிக்க விட்டவாறு,
“என்ன சொன்னாய்… நான் கேவலமான மனிதனா…? உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்… சொல் என்ன தெரியும்? என்று சீறியவனுக்குத் தன்னை அடக்கவே மிகச் சிரமமாக இருந்தது. ஆனாலும் அவள் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு நிதானித்தவனாக,
“இதை உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை விதற்பரை…” என்றான் பெரும் வலியோடு.
பின் என்ன நினைத்தானோ, அவளை விட்டு விலகி நின்று யாசிப்பது போலப் பார்த்தான்.
“ஐந்து நிமிடங்கள் நான் சொல்வதைக் கேள் விதற்பரை… நீ நினைப்பது போல…” அவன் முடிக்கவில்லை, அவனுக்கு அருகே நின்றாலே சுயத்தை இழந்துவிடுவோமோ என்று அஞ்சியவளாக,
“இல்லை… நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்… மாட்டேன்…” என்றவாறு, விழிகளில் கண்ணீர் கோர்க்க, மூக்கு விடைக்க, அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ஓட முடிந்திருக்கவில்லை. காலில் தோன்றியிருந்த கொப்பளங்கள் உடைந்து பெரும் எரிச்சலையும் வலியையும் கொடுக்க, அதைத் தாள முடியாமல், “ம்மா…” என்கிற முனங்கலோடு வலித்த காலைப் பற்றிக் கொண்டு குனிந்தாள்.
அந்த முனங்கலின் ஓசையில் அத்தனை கோபமும் மறந்து திரும்பிப் பார்த்தான் அவ்வியக்தன். தரையில் மடிந்தமர்ந்து சப்பாத்தைக் கழற்ற முயன்றுகொண்டிருந்தவளைக் கண்டவன், மறு கணம் அவளருகே பாய்ந்து வந்தான்.
அதைக் கண்டவள், உடனே கழற்றிய சப்பாத்தை அணிந்து விட்டு எழ முயல, மறு கணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் அவ்வியக்தன். அடுத்து அவளை அவளுடைய இருப்பை நோக்கி ஏந்திச் செல்ல, இவளோ,
“விடுங்கள் என்னை… என்னைத் தொடும் அருகதை உங்களுக்கில்லை…” என்று ஆத்திரத்துடன் திமிற” அவனோ, சீற்றத்துடன் இவளைப் பார்த்து,
“ஷட் அப்… ஜெஸ்ட் xxxxx ஷட் அப்…” என்று அவன் சீறிய சீறலில் விதற்பரை விதிர் விதிர்த்து வாயை அழுந்த மூடிக்கொண்டாள்.
இத்தனை சீற்றத்தை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் பேசத் தயங்கியவளாய், அச்சத்துடன் அவனைப் பார்க்க, அவனுக்கோ மிதமிஞ்சிய கோபத்தில் உடல் நடுங்கியது.
“ஓப்பன் த டாம் xxxxx டோர்” என்றான் சுள்ளென்று.
உடனே குமிழைத் திருப்பிக் கதவைத் திறக்க, உள்ளே எடுத்து வந்தவன், அவளை முன்னறையிலிருந்த இருக்கையில் அமர்த்திவிடடு, சற்றும் தயங்காமல் அவளுக்கு முன்னால் மண்டியிட்டமர்ந்து, அவளுடைய சப்பாத்தைக் கழற்ற முயன்றான்.
இவளோ, தன் கால்களை இழுத்தவாறு, “ப்ளீஸ் லெட் மி கோ…” என்றாள்.
அழுத்தமாக அவளுடைய காலைப் பற்றி, கழற்றிய சப்பாத்தை ஒரு பக்கமாக எறிந்துவிட்டு, சாக்ஸ் இல்லாத வெற்றுப் பாதத்தைத் தூக்கிப் பார்த்தவன், அதிர்ந்து போனான்.
சிவந்து, தோல் வழன்று, ஒரு சில இடங்களில் பொக்களம் பூத்துப் பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்தது. அதுவும் பெருவிரல்தான் சற்று அதிகம் காயம்பட்டிருந்தது. மறு சப்பாத்தையும் கழற்றிப் பார்த்தான். அதே போல அந் காலும் காயம்பட்டுத்தான் இருந்தது. ஆத்திரத்துடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,
“வட்… வட் த ஹெல் யு டிட் இட் டு யுவர் செல்ஃப்…” என்று சீறியவன்,
“யு ஹாவ் டு ஆன்சர் திஸ்…” என்று பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பிவிட்டு, விரைந்து உள்ளே சென்றான். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் குழாயைத் திறந்து சுடுநீரை எடுத்தவன், அவளுடைய அனுமதியையும் பெறாது, நேராக அவளுடைய அறைக்குள் நுழைந்து கிடைத்த அவளுடைய டீஷேர்ட் ஒன்றை இழுத்து எடுத்துக்கொண்டு அவள் முன்னே வர, இவளோ,
“அது என்னுடைய டீஷேர்ட்… அதை எதற்கு எடுத்து வந்தீர்கள்…” என்று பறிக்க முயன்றாள்.
அவளை அலட்சியமாகப் பார்த்தவன்,
“இதை என்னுடையது என்றா சொன்னேன்…” என்று விட்டு அவளுக்கு முன்பாகச் சப்பாணியிட்டு அமர்ந்து, கரத்திலிருந்த துண்டைத் தண்ணீரில் அமிழ்த்தி எடுத்து முறுக்க,
“ஐயோ… அது சற்று விலை கூடியது… அதை ஏன் இப்படிச் சுடு நீரில் நனைக்கிறீர்கள்…” என்றாள் பதட்டமாக.
எரிச்சலுடன் அவளைப் பார்த்துவிட்டு,
“இதைப்போலப் பத்து வாங்கித்தருகிறேன்… சற்று வாயை மூடிக்கொண்டிருக்கிறாயா?” என்றவன், அவளுடைய பாதத்தைத் தூக்கித் தன் தொடையில் வைத்துவிட்டு, நனைத்த துனியைப் பாதத்தில் வைத்து மெதுவாக ஒத்தடம் கொடுக்க, இவளோ தன்னையும் மறந்து,
“ம்மா…” என்று முனங்கினாள்.
“ஈசி… ஈசி…” என்று சமாதானப் படுத்தியவாறு மேலும் அவள் கால்களுக்கு ஒத்தடம் கொடுத்தவன், வலித்தாலும் பற்களைக் கடித்தவாறு நின்றிருந்தவளை எரிச்சலோடு ஏறிட்டு,
“இப்படிக் காயப்படும் வரைக்கும் அப்படி என்ன செய்து கிழித்தாய்?” என்றான் அடக்க முடியாத ஆத்திரத்தில். அந்த ஆத்திரத்தில் இழையோடிய வலியை அவள் புரிந்து கொள்ளாமல்,
“ம்… காதல் பித்தம் தலைக்கேறியதா.. அதுதான் கண் மண் தெரியாமல் பைத்தியக்காரி போலச் சுற்றிக்கொண்டிருந்தேன். பித்தம் தெளிந்ததும் வீட்டிற்கு வந்துவிட்டேன்… போதுமா…” என்று சீறி விழுந்தவள், அவன் கரங்கள் கொடுத்த தவிப்பில், அதை ஏற்க உடல் குழைந்த குழைவில் தன் மீதே வெறுப்பு கொண்டவளாகக் கால்களை அவன் பிடியிலிருந்து விடுவித்து எழுந்தவள், விந்தியவாறே அவனை விட்டுத் தள்ளிச் சென்று,
“உங்கள் உதவிக்கு நன்றி… இனி நானே பார்த்துக் கொள்வேன்… தயவு செய்து வெளியே போங்கள்…” என்றவள், விழிகளில் கண்ணீர் கோக்க, “அப்படியே எனக்கு உதவி செய்ய ஆசைப்பட்டீர்கள் என்றால், தயவு செய்து என் முகத்தில் இனி விழிக்காதீர்கள்…” என்றாள் குரல் கமற. இவனோ, அழுத்தமாக அவளைப் பார்த்து,
“நோ… ஐ ஆம் நாட்…” என்றான் தெளிவாய் கூடவே அழுத்தத்தோடு.
“சரி… நான் வெளியே செல்கிறேன்…” என்றவாறு நடக்கத் தொடங்க, மறு கணம் அவளுடைய பாதையை மறைத்து நின்றவன்,
“இல்லை… நீயும் போக முடியாது… நடந்த உண்மையை அறியும் வரை…” என்றான் உறுதியாய்.
(1) அதிகாலைச் சூரியன் கிழக்குத் திசையில் மெதுவாக விழிகளைத் திறந்து, தன் பொன் கதிர்களைக் கிடைத்த இடங்களை எல்லாம் நிரப்பித்…
(8) மறு நாள் பெரும் பரபரப்புடனே விடிய, அதிகாலையே பக்திப் பாடல்களைப் போட்டு அத்தனை பேரையும் எழுப்பிவிட்டிருந்தார் புஷ்பா. முன்னிரவு…
(7) மறு நாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பேரில் தயாளன் குடும்பம் அங்கேயே தங்கியது. மறு நாள் அதிகாலையே…
(5) முதலில் அவன் மடியில் விழுந்த அதிர்ச்சியை விட, எங்காவது யாராவது நின்று தம்மைப் பார்த்துவிடப் போகிறார்களோ, முக்கியமாக அன்னை…
(4) விதற்பரை தேநீரைக் கொடுத்துவிட்டு ஓடியதன் பிற்பாடு, அவ்வியக்தனுக்குத் தன் கவனம் அண்ணனிடம் செல்வதாகவேயில்லை. மனமோ விதற்பரை சென்ற திசையிலேயே…
(2) அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும்…