என்னுடைய ஐந்தாம் வகுப்பில் ஏனோ தானோ என்று ஆரம்பித்த எழுத்துப் பயணம், இன்று நாவல் எழுதி வாசகர்களைக் கவரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
ஈழத்தில் யுத்தத்தின் மத்தியில் பிறந்து வளர்ந்தவள் நான். மின்சாரம் இல்லாமல், தொடர்வண்டி அறியாமல், வேற்று ஊர் பற்றித் தெரியாமல் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும், சிதறித் தெறிக்கும் குண்டுகளுக்கு இடையிலும் உயிரைக் கையில் பிடித்து இன்று இருப்பேனா, நாளை மடிவேனா என்கிற சந்தேகத்தோடு வாழ்ந்த பல லட்சம் ஈழத் தமிழர்களுள் நானும் ஒருத்தி. என்னுடைய பத்தாவது வயதில், என் தந்தையைக் காரணமின்றி இழந்தேன். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிப் போன அவருடைய அகால மரணம், நம் குடும்பத்தையே உலுக்கியது. தடம் புரளச் செய்தது. என் தாய் இரும்புப் பெண்மணி. தனி ஒருத்தியாக, அந்தச் சூழலைக் கையாண்டார்கள். எங்களுக்குத் தாயும் தந்தையுமாக மாறினார்கள். அந்த சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் சந்தித்த சவால்கள் ஏராளம் ஏராளம். அவரளவு தைரியமும் திடமும் எனக்கிருக்கிறதா என்று கேட்டால், பெரிய கேள்விக்குறி மனதில் எழும்.
இந்தக் காலகட்டத்தில், உயிர் காக்கத் தப்பிப் பிழைத்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக அண்டி ஓடிய காலங்கள் பல உண்டு. கிணற்றுத் தவளையாக பயணப்பட்டது என் இளமைக் காலம். நான் தொலைத்தது ஏராளம். சதிராடும் பயங்கர வாழ்க்கைக்கு மத்தியில் தத்தித் தவழ்ந்து வளர்ந்து திருமணம் என்கிற விடுதலைப் பந்தத்தில் இணைந்து, சொந்த மண் விட்டு அன்னிய மண்ணில் கால் பதித்தேன். இப்போது அந்த மண்ணே எனக்குச் சொந்த மண் ஆனது.
புதிய உலகம், புதிய வாழ்க்கை, புதிய பயணம் மிக அழகாகவே விரிந்தது. நல்ல கணவன் அவனே என் பல்கலைக் கழகம். அவரிடம் கற்றதும், கற்றுக்கொண்டிருப்பதும் ஏராளம். முத்தாய் மூன்று பிள்ளைகள். ஆண் ஒருவன், பெண்கள் இரண்டு என்று மிக எதார்த்தமான வாழ்க்கை. காலம்தானே நம்மை வழி நடத்துகிறது. 1999 இல் கனடாவில் கால்பதித்த நான், 2005 இல் முதன் முறையாக இரண்டு சிறுகதைகளுக்கு முதல் பரிசு பெற்றேன். அதற்காக சிறந்த எழுத்தாளரோ? என்று நினைத்து விடாதீர்கள். அந்த நேரத்தில் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பப் பூ சக்கரை என்பதுபோலத்தான் என் எழுத்தும் இருந்திருக்கவேண்டும் என்று இப்போது கூட நினைப்பதுண்டு. ஆனாலும் அதுதான் என்னை மேலும் மேலும் எழுத வைத்தது என்று சொல்லாம்.
வாசிப்பில் பைத்தியம் கொண்டவள் நாள். என் உறவினரின் அறிவுரையில் இணைந்த இடம்தான் ஸ்ரீகலா அம்மையாரின் முகப் புத்தகம். நிறைய எழுத்தாளர்கள். புதுமையான எழுத்துகள். நம்மைக் கூட எழுத வைக்கும் ஆற்றல் அந்த எழுத்தாளர்களுக்கு இருந்தது. விளைவு, எழுதும் வேகம் பிறந்தது. ஆனாலும் மெல்லிய கூச்சம். தயங்கிய என்னை ஊக்கப்படுத்தியது முகநூல் நட்புகள்தான்.
என் பதிவுகளைப் பார்த்து ரசித்துச் சிரித்து என் விருப்பத்திற்குத் தூபம் போட்டார்கள். என் எழுத்தையும் படிப்பார்களா என்கிற சந்தேகம் தொண்டை வரை சிக்க வைத்தது. ஆனாலும் தைரியமாக ஸ்ரீமாவிடம் கேட்டேன். கொஞ்சம் கூட தயங்காமல், புதுத் திரி அமைத்துக் கொடுத்து வழி காட்டினார்கள். ஆகஸ்ட் 16 2018 என் முதலாவது நாவல் பயணம் நிலவே என்னிடம் நெருங்காதே. அந்த நாவலைப் படித்து வாசகர்கள் கொடுத்த ஊக்கம் அளப்பரியது.
அந்த நாவலின் மூலம் நான் பெற்ற தோழமைகள் எண்ணுக் கணக்கற்றவர்கள். அவர்களின் பெயரைக் குறிப்பதாக இருந்தால், இந்தப் பக்கம் போதாது போய்விடும். அவர்களின் தொடர் ஆதரவில் 13 நாவல்கள் எழுதியாயிற்று. 8 நாவல்கள் புத்தகங்களாக வந்தாயிற்று.
2022 வரை ஸ்ரீமாவின் கரங்களைப் பற்றி நடைபழகி ஓடத் தொடங்கிய பின், சிறகுகள் முளைத்த பறவைகளாக, தனியாக ஒரு பதிப்பகம். முக நூலின் மூலம் வாசகியாக என் கரம் பற்றிய அன்புத் தோழி எழுத்தாளர் தாமரையின் துணையோடு மிளிர் என்னும் பதிப்பகம் முதன் முறையாக உருப்பெற்றது. அதற்குத் துணையாக நின்ற நட்புகள் ஏராளம். ஆரம்பத்தில் பதிப்பகத்தை எப்படித் தொடங்குவது என்று தயங்கிக் குழம்பி நின்ற தருணத்தில், அது சார்ந்து விபரங்கள் கேட்டபோது, எழுத்தாளர் ஜனனி நவீன், எழுத்தாளர் ஜான்சி போன்றவர்கள் தன்னலமற்று என்ன செய்யவேண்டும் என்று குழந்தைக்குக் கற்பிப்பது போலச் சொல்லிக் கொடுத்தார்கள். விளைவு நம் மிளிர் பதிப்பகத்தின் மூலம் விழியே விலகாதே விலக்காதே, உயிர் நீ மெய் நான் ஆகிய இரண்டு நாவல்கள் வெளி வந்தன. இன்னும் பல நாவல்கள் வர இருக்கின்றன.
தொடர்ந்து அடுத்த கட்டமாக இதோ என் கதைகளைப் பதிவிடுவதற்காகவே சகோதரர் திருமலைச்செல்வனின் துணையோடு ஒரு தளத்தை உருவாக்கியாயிற்று.
என் அன்பு வாசகத் தோழமைகளே நான் தனியாக எழுந்து நடக்கவில்லை. என்னைக் கரம்பற்றித் தூக்கி விட்டவர்களுள் மிகப் பெரும் பங்கினை நீங்கள்தான் வகித்திருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து கொடுத்து வந்த ஆர்வமும் ஊக்கமும்தான் என் முன்னேற்றத்திற்கான பாதை. என் நட்புகளே, வாசகர்களே, எழுதுவது மட்டும்தான் நான். என்னை வழிநடத்திச் செல்லும் ஆசான்கள் நீங்கள் அனைவரும்தான்.
என்றும் இந்த விஜயமலர் வாசகர்களாகிய உங்களுக்கு கடமைப்பட்டவள்.