Sun. Dec 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-36

(36)

 

“வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக் கொடுத்தவன்,

“நான் இருக்கிறேன் அல்லவா… பயப்படாதே… நம் குழந்தைகளின் உடலில் சின்னக் கீறு கூட இல்லாமல் காப்பாற்றிவிடுவேன்…” என்றான் அவன் உறுதியுடன்.

குரல் நடுங்க, உள்ளம் அதற்கு ஏற்ப எகிறிக் குதிக்க. இரத்தம் தாறுமாறாக ஓடக் காதுகள் அடைக்க,

“கு… குழந்தைகள்… விதுலா…! அவர்கள்… பயந்து போவார்களே…” என்று எகிற முயன்ற இதயத்தை அடக்கும் வழி தெரியாது மிளிர்மிருதை தவிக்க. அவளைத் திரும்பிப் பார்த்த அபயவிதுலன்,

“அவர்கள் என் குழந்தைகள் மிருதை… எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன்… தவிர…” என்றவன் தன் வாகனத்தை ட்ராக்கிக் டிவைஸ் காட்டும் இடத்தைச் செல்வதற்காகக் குறுக்குப் பாதையில் செலுத்தியவாறு,

“குழந்தைகளைப் பொதுப் பாடசாலைக்கு அனுப்பும் போது எதற்காக நானே ஆடைகள், பள்ளிக்கூடப் பைகள் வாங்கினேன் என்று நினைத்தாய். எல்லாவற்றிலும் ட்ரக்கிங் டிவைஸ் வைத்திருக்கிறேன். குழந்தைகளை எங்கே கடத்திச் சென்றாலும் என்னால் கண்டு பிடிக்க முடியும்…” என்று ஆக்ரோஷத்துடன் கூறியவன் இன்னும் தன் வேகத்தைக் கூட்ட இவளுக்குத்தான் உயிரே ஊஞ்சலாடுவது போலத் தோன்றியது.

“வி… விதுலா…! ப… பயமாக இருக்கிறதே… நான் என்ன செய்யட்டும்…” என்று விழிகள் கலங்க எந்த நேரத்திலும் மயங்கிவிடுவாள் என்பது போலக் கூறிய மிளிர்மிருதையைக் கண்டு,

“உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறதல்லவா… பயப்படாதே மிருதை… அவர்கள் சூழ்நிலைக்கேற்ப நடந்து தங்களைக் காத்துக் கொள்வார்கள்…” என்று அவன் உறுதியுடன் கூற தன் நிலைமை புரியாமல் பேசும் கணவன் மீது ஆத்திரம்தான் வந்தது.

“விதுலா…! அவர்களுக்கு ஐந்து வயது… குழந்தைகள்… எப்படி அவர்களால்… அதுவும் இத்தகைய ஒரு இக்கட்டான நிலையில்… கடவுளே… நான் என்ன செய்ய” என்று ஒரு தாயாய் துடிக்க, திரும்பித் தன் மனைவியைப் பார்த்தவன், அவளுடைய கரத்தைத் தன் வலது கரத்தால் பற்றி அழுத்திக் கொடுத்து,

“எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது மிருதா… ஐ ப்ராமிஸ் யு… அவர்களை முழுதாகக் காத்து உன்னிடம் கொடுப்பது என் பொறுப்பு…” என்றவன் மேலும் தன் வேகத்தைக் கூட்டினான்.

ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால், ஹைவேயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடவேண்டிய ஹொன்டா ஒடிசி. நூற்று முப்பது கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க, உள்ளே ஆத்வீகனும் சாத்வீகனும் பின்னிருக்கையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் மங்கிகேப் அணிந்தவாறு, இருவர் சிறுவர்களயே முறைத்துக்கொண்டிருக்க, குழந்தைகளோ தாங்கள் கடத்தப்பட்டிருக்கிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாதவர்கள் போல, நகை முகத்துடன் அந்தக் கடத்தல் காரர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்தக் கடத்தல் காரர்களுக்கோ குழந்தைகள் சற்றும் அச்சமின்றித் தங்களைப் பார்த்து நகைப்பது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், அதைச் சற்றும் வெளிக்காட்டாது, எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, ஆத்வீகனோ தன் விழிகளை மூடித் தன் தந்தையை எண்ணிக்கொண்டான்.

அன்று அவன் தந்தை இவர்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்பிக்கும் போது, அவர்களுக்குப் போதித்தது நினைவுக்கு வந்தது.

வளமைபோலத் தற்காப்புக் கலையைச் சொல்லிக் கொடுத்தவன், அவர்களின் பயிற்சி முடிந்த கையோடு தன் அருகே அமர்த்தியவாறு,

“டேய்… நான் சொல்லப் போவதை மிக மிகக் கவனமாகக் கேட்கவேண்டும்… நீங்கள் இருவரும் என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும், சாதாரண வாழ்க்கை முறைக்கு உங்களைப் பழக்கப்படுத்தவே நான் விரும்புகிறேன்… அதனால் சாதாரணப் பள்ளிக்குத்தான் நீங்கள் போகப் போகிறீர்கள்…” என்று அவன் கூற, இரு குழந்தைகளின் முகத்திலும் மலர்ச்சி பொங்கியது.

அவர்களின் மூன்றாவது வயதிலிருந்து தாய் தந்தையுடன் இணைந்த காலத்திலிருந்து அவன் இந்த யுத்தக்கலையை அவர்களுக்கு நாள் தவறாது ஒரு மணி நேரம் தன்னும் சொல்லிக் கொடுப்பது வழக்கம்… அப்படிச் சொல்லிக் கொடுக்கும் போது, அவர்களுடைய சிந்தனையையும், மனத்தையும் அதற்கேற்ப செதுக்குவான். அதுவும் அவர்கள் பொதுப் பள்ளிக்குப் போன பிற்பாடு அவன் கொடுத்த பயிற்சிகள் சற்று அதிகம்தான்.

“ஓக்கேப்பா…”

“பட்… இதில் பல சிக்கல்களையும் நீங்கள் சந்திக்கவேண்டி வரும்…”

“என்னதுப்பா?” என்று கேட்ட மகனிடம், எப்படிப் பதில் கூறுவது என்று புரியாமல் சற்றுத் தடுமாறிய அபயவிதுலன்,

“சொல்கிறேன்…” என்றவன்,

“எனக்கு எதிரிகள் அதிகம் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?”

“அமாம்பா.. சொல்லி இருக்கிறீர்கள்…”

“மே பி அவர்களால் உங்களுக்குத் தீங்கு வரலாம்… அதை நீங்கள் கையாளப் பழகவேண்டும்…”

“சரிப்பா…”

“உங்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் பயத்தை வெளிக்காட்டக் கூடாது…”

“சரிப்பா…”

“நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த யுத்த கலையை எதிரியின் பலமறியாமல் அவசியமின்றிப் பிரயோகிக்கக் கூடாது… முக்கியமாக நீங்கள் விரல்களைக் கூட அசைக்கக் கூடாது” என்றவன், எழுந்து தன் பான்ட் பாக்கட்டிற்குள் கைகளை விட்டு உற்றுப் பார்த்து,

“லிசின்… ஏதாவது இக்கட்டான கட்டத்தில்… ஏதாவது ஒரு பிரச்சனை தோன்றினால், அதற்கு உங்களைத் தயார்ப்படுத்த வேண்டும்… முடிந்த வரை எதிரிகளை உங்கள் பக்கம் வளைக்க முயலவேண்டும்… தேவையின்றி அழுதலோ, முறைத்தலோ கத்தலோ கூடாது… அது எதிரியை மேலும் கோபம் கொள்ள வைக்கும்… முடிந்தால் எதிரிகளைச் சற்றுக் குழம்பச் செய்ய வேண்டும்… அதற்கு ஒரே வழி” என்றவாறு திரும்பித் தன் குழந்தைகளைப் பார்த்து,

“நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டவேண்டும்… என்னதான் பயமிருந்தாலும் உங்கள் தைரியத்தை இழக்கக் கூடாது… சிறு அசைவில் கூட உங்கள் அச்சத்தைக் காட்டக் கூடாது… ஆத்வி நீ சாத்விக்கும்… சாத்வி நீ ஆத்விக்கும் துணையாக இருக்க வேண்டும்… புரிந்ததா…” என்ற அபயவிதுலன் அவர்களுக்குச் சொன்னது நினைவுக்கு வர, ஆத்வீகனும் சாத்வீகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களை அறியாமல் அவர்களின் முகம் மலர்ந்து மெல்லிய நகைப்பைக் காட்டியது.

அபயவிதுலனுக்கு அவர்கள் குழந்தைகள் என்கிற எண்ணத்தையும் தாண்டி, எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர்கள் இலகுவாகக் கையாளவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்ததால், தங்கு தடையின்றி அதற்கேற்ப அவர்களுக்குப் போதிப்பான்.

எப்போதும் அபயவிதுலன் அவர்களுக்கு ஒரு கதாநாயகன் ஆயிற்றே… அதனால் அவன் சொல்வது அவர்களுக்கு வேதவாக்காயிற்று. அதைத்தான் இருவரும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். தங்கள் முகத்தில் எவ்விதப் பதட்டமோ, பயமோ, எதுவுமே அவர்கள் காட்டவில்லை. மாறாக ஏதோ சுற்றுலாவிற்குப் போவதுபோல ரசித்துக் கொண்டு வந்தனர்.

அதைக் கண்ட எதிரிகள் சற்றுக் குழம்பித்தான் போனார்கள். அழுவார்கள், கதறுவார்கள், காப்பாற்றுமாறு கூவுவார்கள், விட்டுவிடும் படி கெஞ்சுவார்கள் என்று பார்த்தால், இந்தக் கடத்தலை ரசிப்பது போல அல்லவா இருக்கிறார்கள். அழுது குழறினாலாவது இருக்கும் கோபத்தை அவர்கள் மீது காட்டலாம். இரண்டு போட்டு அமைதியாக இருக்கச் செய்யலாம். இது எதுவும் செய்ய முடியாமல் கரங்களைக் கட்டியல்லவா வைக்கவேண்டியிருக்கிறது.

தங்களை முறைத்துப் பார்த்த எதிரியைக் கண்டு புன்னகைத்த ஆத்விகன்,

“ஹாய் அங்கிள்… ஐ ஆம் ஆத்விகன்… உங்கள் பெயர் என்ன?” என்றான் மெல்லிய குரலில். எதிரியோ அவனைப் பார்த்து முறைத்துவிட்டுப் பதில் கூறாது ஜன்னலூடாகத் திரும்பிப் பார்க்க சிறுவனோ தன் தோள்களைக் குலுக்கிவிட்டு, தன் சகோதரனைப் பார்த்து,

“பாவம்டா… அங்கிள் ஊமை போல…” என்றான் சற்றுத் தன் குரலை உயர்த்தி. அதைக் கேட்ட சாத்விகன், தன் சகோதரன் என்ன செய்ய முயல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவனாக,

“ஆமாம்டா.. பாவம் அல்லவா…” என்று மேலும் உசுப்பேற்ற, அதைக் கேட்டதும் ஆத்திரம் கொண்ட கடத்தல்காரன்,

“ஏய்… யாரை ஊமை என்கிறாய்… சின்னப்பிள்ளை என்று பார்க்கிறேன், இல்லை…” என்று சீற,

“ஐ… நீங்கள் பேசுவீர்களா அங்கிள்… நாங்கள் பேசியதும், அமைதி காத்தீர்களா… ஊமையோ என்று பயந்துவிட்டோம்… ஆமாம்… இந்த அங்கிள் பேச மாட்டாரா?” என்று சாத்விகனின் அருகேயிருந்த எதிரியைச் சுட்டிக்காட்டி ஆத்விகன் கேட்க,

“ஏன் பேசமாட்டான்… நன்றாகப் பேசுவான்…” என்றான் முதலாமவன்.

“அப்போது ஏன் பேச மாட்டேன் என்கிறார்…” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டான் ஆத்விகன்.

“ம்… அவன் மௌன விரதம்… போதுமா…?” என்று சுள்ளென்று விழுந்தான் எதிரி.

“ஓ… விரதமா… பாவம்… அவருக்குப் பசிக்காதா அங்கிள்…” என்று கவலையுடன் கேட்க, ஒரு கணம் சிரிப்பதா, இல்லை முறைப்பதா என்று குழம்பிய எதிரி.

“இது மௌனவிரதம்… பேசாமல் இருப்பது மட்டும்தான் அவன் வேலை… மற்றும்படி வேளா வேளைக்குக் கொட்டிக்கொள்வான்…” என்று தன் நண்பனைப் பார்த்து விழிகளால் சிரிக்க, அதைப் பிடித்துக்கொண்ட சாத்விகன்,

“அட… இது நல்லா இருக்கே… அங்கிள்… என் அண்ணனையும் அப்படி விரதம் இருக்கச் சொல்லுங்களேன்… அவன் பேசினால் சகிக்காது… டேய் ஆத்வி… நீயும் மௌனவிரதம் இரேன்டா…” என்று கெஞ்ச,

“டேய்… யார் பேசினால் சகிக்காது… நானா… நீயா… நீ பேசினால்தான் சகிக்காது…” என்று எகிற,

“நான் பேசினால் சகிக்காதா… உன்னை…” என்றவாறு அவனுடைய தலை முடியைப் பற்றியவாறு விழிகளால் எதையோ கூற, அதை உடனே புரிந்துகொண்ட சாத்விகன்,

“என்னுடைய தலைமுடியையா பிடிக்கிறாய்…” என்றவாறு அவன் சட்டையைப் பற்றி அவன் மீது ஏற முயல, சிறுவர்கள்தானே என்கிற அலட்சியத்துடன் இருந்த இரு குண்டர்களும், திடீர் என்று அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் கலவரமாகி, அவர்களைப் பிரிப்பதற்காகத் தங்கள் கரத்திலிருந்த துப்பாக்கியை அருகே வைத்துவிட்டு,

“டேய்… டேய்… என்னடா செய்கிறீர்கள்… விலகிக்கொள்ளுங்கள்டா…” என்றவாறு அவர்களைப் பிரித்து விட முயன்றான் ஒருவன். அந்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது சாத்விகனுக்கு.

தமையன் மீது தொங்கிப் பாய்ந்தவன் எதிரி மீது விழ, அவனோ சாத்வீகனை விலக்க முயன்ற வினாடி துப்பாக்கியைக் கைப்பற்றியிருந்தான் சிறுவன்.

கண்ணிமைக்கும் நொடியில், துப்பாக்கியை முன்புறமாகப் பிடித்து, கண்ணடியை நோக்கி விசையை எழுப்பப் பெரும் ஓசையுடன் ஓட்டுநர் பக்கத்துக் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. அது மட்டுமன்றி, வெடித்த முன்புறத்துக் கண்ணாடி, சிதைந்து போனதால், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவனின் பார்வையை முழுதாக மறைத்தது. ஒரு கணம்தான் அனைவரும் ஸ்தம்பித்து நின்றது.

இப்படி ஏமாந்துவிட்டோமே என்கிற ஆத்திரத்தில் துப்பாக்கியை வைத்திருந்த சாத்விகனை ஓங்கி அறைந்துவிட்டிருந்தான் அந்த எதிரி.

அதிர்ந்துபோனான் குழந்தை. எதற்காகத் தன் தந்தை எக்காரணம் கொண்டும் விரலை அசைக்கக் கூடாது என்று சொன்னார் என்பதின் பொருளைத் தாமதமாகப் புரிந்துகொண்ட சாத்வி தன்னை அடித்தவனை முறைக்கத் தொடங்க, ஆத்விகனோ,

“டேய்… யார் மீது கையை வைத்தாய்… உன்னை…” என்றவாறு ஓங்கித் தன் தலையால் எதிரியின் மூக்கில் இடிக்க, அவன் இடித்த வேகத்தில் பொறிகலங்கிப்போனான் அந்த எதிரி.

அதே நேரம், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு இனி நிச்சயமாக நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக, வேகமாக வாகனத்தைத் திருப்பி நெடுஞ்சாலையிலிருந்து விலக முயன்றான்.

அது மட்டுமன்றி, இப்போது எழுந்த துப்பாக்கிக் குண்டின் ஓசை, பலரின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கும். எப்போது யார் வேண்டுமானாலும் அவர்களைத் தேடி வரலாம். கூடவே நெடுஞ்சாலையில் இறங்கி நடந்து செல்லவும் முடியாது… அது ஒளிப்பதிவில் அவர்களைச் சிக்க வைத்துவிடும்.

அந்தக் கணம் அந்த வண்டிக்குள் இருந்து மூவருமே என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போயினர். ஓரளவுக்குச் சுய நினைவு வந்த வண்டியோட்டி,

“யாருக்காவது தொலைப்பேசி எடுத்து வண்டி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லுங்கள்… க்விக்…” என்று கத்தியவாறு வண்டியை உடனே வெளியேற்றி எடுத்துச் செல்ல முயன்ற விநாடி, ஒளடி ஒன்று படு பயங்கர வேகத்தில் இவர்களைத் தாண்டிச் சென்றது. பின் அந்த வேகத்தைச் சற்றும் குறைக்காமல் புழுதியைக் கிளப்பியவாறு சுழன்று இவர்களின் காரை மறித்தாற்போல நின்று கொள்ள, அது வந்த வேகத்திலும் சுழன்ற வேகத்திலும் டயர் தேய்ந்ததாலும், பெரும் புழுதி அவ்விடத்தை நிறைத்து வாகனத்தை மறைத்துக் கொண்டது.

அபயவிதுலனின் நெடுஞ்சாலையில் வாகனத்தை ஏற்றிக் கொஞ்சத் தூரம் சென்றதும் தன் குழந்தைகளை நெருங்கிவிட்டதைப் புரிந்துகொண்டான். திரும்பி மிளிர்மிருதையைப் பார்த்த அபயவிதுலன்,

“மிருதா… கைப்பிடியை இறுகப் பற்றிக்கொள்…” என்று உத்தரவிட்டவாறு அக்சிலரேட்டரை அழுத்த, அவன் அழுத்திய வேகத்தில் வாகனம் படு பயங்கரமாக வேகமெடுக்க அதிர்ந்து போனவள், கைப்பிடியைப் பற்றியவாறு உயிரைக் கையில் பிடித்தவாறு அபயவிதுலனைப் பார்க்க, அவனோ தன் கைப்பேசியின் திரையைப் பார்த்தவாறு தன் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினான். கிட்டத்தட்ட 200கிமீ வேகத்தில் காரை செலுத்த, அதைக் கண்டு நடுங்கிய மிளிர்மிருதை,

“விதுலா…! வட் ஆர் யு டூயிங்… ஸ்லோ டவுன்…” என்று அலறிய நேரம், அவனுடைய வாகனம் கிறீச் என்கிற பெரும் சத்தத்துடன், பாய்ந்து சுழன்று திரும்பிச் சரிய முயன்று பின் நேராக விழுந்து ஒரு வாகனத்தின் முன்னால் வந்து நின்ற வேளையில் அதை எதிர்பாராதவளாகத் தன் கைப்பிடியை விட, வாகனம் சுழன்ற வேகத்தில் அவளுடைய தலை ஜன்னலைப் பலமாக அடித்துப் பின் அவன் புறமாகச் சரிந்து பின் முன்புறமிருந்த டாஷ்போடில் அடிக்கப் போன விநாடியில், மிளிர்மிருதையின் நிலையைப் புரிந்துகொண்ட அபயவிதுலன் திருப்பிய ஸ்டியரிங் வீலின் கரத்தை விடாமலே, சடார் என்று வலது கரத்தை விலக்கி அவளுடைய கூந்தலை இறுக பற்றி டாஷ்போடில் தலை அடிபடா வண்ணம் இழுத்துப் பிடித்துக் கொள்ள அவளுடைய நெற்றிப் பலமாக அடிபடாது தப்பிக்கொண்டது.

ஒரு கணம் எல்லாம் குழம்பி சமநிலைக்கு வர, அபயவிதுலனுக்கு ஒரு விநாடிதான்… ஒரே ஒரு விநாடிதான் எடுத்தது…

காவல்துறைகள் சட்டத்திற்குப் பயந்து செயற்படும். அத்தனை சுலபத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தாது… ஆனால் அவனுக்குச் சட்டமெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை… தன் குழந்தைகள் மட்டுமே அவன் கருத்திலிருந்தால் பின்னால் வரும் விளைவுகளைப் பற்றிச் சற்றும் சிந்திக்கவில்லை. தவிர ஆதாரங்களை விட்டுவைத்தால்தானே சட்டத்திற்குப் பயப்படவேண்டும்…?

மிளிர்மிருதையின் கூந்தலை விடுவித்து, அவள் மார்பில் தன் கரத்தைப் பதித்து ஒழுங்காக அமர வைத்தவன், டாஷ்போடைத் திறந்து துப்பாக்கியின் சைலன்சரை எடுத்துக்கொண்டு வாகனத்துக்கதவைத் திறந்து எழுந்த நொடியிலேயே தன் பான்டின் பின்புறம் செருகியிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து சைலன்சரைப் பொருத்தியவாறு அந்த வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அப்போதைக்கு அவன் எதையும் சிந்திக்கும் நிலையிலில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் அவனுடைய குழந்தைகள் எந்த வித சிக்கலும் இல்லாமல் முழுதாக அவன் முன்னால் நிற்பது மட்டுமே. வேறு எதையும் யோசிக்கும் நிலையில் அவனிருக்கவில்லை.

அபயவிதுலன் அந்த வாகனத்தை நெருங்கவும், அதன் ஓட்டுநர் பக்கத்துக் கதவு திறக்கவும் நேரம் சரியாக இருந்தது. அதிலிருந்து முகத்தை மறைத்தவாறு மங்கிக்கேப் அணிந்தவாறு ஒருவன் வெளியேற, அபயவிதுலன் அவனுக்குச் சிந்திக்க நேரமே கொடுக்கவில்லை. உடனே தன் துப்பாக்கியைத் தூக்கியவன், சற்றும் யோசிக்காமல் அவனுடைய நெற்றிப் பொட்டைக் குறிபார்த்துச் சுட, சைலன்சர் பொருத்திய துப்பாக்கியிலிருந்து குண்டு மின்னாமல் முழங்காமல் அவனுடைய நெற்றியை துளைத்துக்கொண்டு போக அதைக் கூட உணராமல் தரையில் விழுந்தான் எதிரி.

அதைக் கண்ட பின்னிருக்கையில் அமர்ந்திருந்த எதிரிகள் ஒரு கணம் நடுங்கி அடுத்து என்ன செய்வது என்று தெரியாது விறைத்துப்போய் நிற்க அபயவிதுலன் தன் தலையை வலப்புறமாக நன்கு சரித்துப் பயணிகளின் கதவைப் பார்க்க இப்போது அந்தக் கதவு மெதுவாகத் திறந்தது.

அதிலிருந்து ஆத்வீகனை அணைத்தவாறு ஒருவன் வெளியேற, ஆத்வீகனோ அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிக்கப் பெரிதும் முயன்றுகொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து மற்றவன், சாத்வீகனை ஏந்நிக்கொண்டு மறுபக்கமாக இறங்கினான். அவர்களின் கரங்களில் துப்பாக்கி குழந்தைகளின் நெற்றிப்பொட்டில் அழுத்தமாகப் பதிந்திருக்க, அபயவிதுலனின் இதயம் வாய்க்குள் வந்து துடிக்கும் நிலையிலிருந்தது.

எந்தத் தந்தைக்கும் இத்தகைய ஒரு இக்கட்டான நிலை வந்திருக்கக் கூடாது… ஆனாலும் அபயவிதுலன் தன் வலியை இம்மிதன்னும் தன் முகத்தில் காட்டினானில்லை.

“ஐ வோர்ன் யு… லெட் தெம் கோ…” என்றான் அழுத்தமாக. அவனுடைய துப்பாக்கி அவர்களை எந்த நேரமும் சுட்டுவிடலாம் என்பது போல உயர்ந்து நின்றது.

ஆனால் சிரித்த எதிரிகள்,

“நீ சுடப்போகிறாயா? பார்த்தாய் அல்லவா… உன் குழந்தைகள் எங்கள் கரங்களில்… உன் விரல் அசைந்தால் கூட உன் குழந்தைகளைக் கொன்றுவிடுவோம்…” என்று அவர்கள் எச்சரிக்க, ஒரு கணம் தடுமாறினான் அபயவிதுலன் .

“ஈசி… ஈசி… லெட் தெம் கோ…” என்று சமாதானப் படுத்தியவாறு தன் துப்பாக்கிய இலகுவாக்கிக் கீழே போட முயன்ற விநாடி, எதிரியின் பார்வை கீழே விழ இருந்த துப்பாக்கியில் செல்ல, அந்த ஒரு கணம் அபயவிதுலனுக்குப் போதுமானதாக இருந்தது. சடார் என்று தரையில் குப்புற விழுந்தவன், ஆத்வீகனை வைத்திருந்தவனின் காலை நோக்கிச் சுட்டான்.

குண்டடிபட்டவன், வலி பொறுக்க முடியாததாலும், சமநிலை தவறியதாலும், தன் கரத்திலிருந்த ஆத்வீகனைக் கைவிட்டுக் கீழே சரியத் தொடங்கினான்.

சாத்வீகனை ஏந்தியிருந்த எதிரி கீழே விழுந்த தன் நண்பனைக் கண்டு ஆத்திரம் கொண்டு அபயவிதுலனைச் சுடுவறத்காகத் துப்பாக்கியைத் தூக்கிய விநாடி, கீழே விழுந்திருந்த ஆத்விகன் சற்றும் தாமதிக்காது, தந்தையை நோக்கிச் சுட முயன்றுகொண்டிருந்தவனின் காலைத் தன் சிறு காலால் முடிந்தவரைக்கும் பலமாக ஓங்கி உதய, அவன் உதைவான் என்று எதிர் பாராத எதிரி சாத்வீகனைக் கைவிடாமலே பின் புறமாகச் சரிந்தான்.

சாத்வீகனோடு கீழே விழுந்த எதிரியின் துப்பாக்கி சற்றுத் தள்ளிப்போய் விழ, கிடைத்த பிடிமானமும் இல்லாது போனதால் ஒரு கணம் திணறியவன், தன் கரத்திலிருந்த சாத்வீகனைத் தள்ளிவிட்டு ஓடத் தொடங்க அடுத்து ஸ்பிரிங் போல எழுந்த அபயவிதுலனின் துப்பாக்கிக் குண்டு எதிரியின் முள்ளந்தண்டைப் பதம்பார்த்துக்கொண்டு இதயத்தைத் துளைத்தவாறு வெளியேறக் குப்புற விழுந்தான் அவன்.

மூவரும் தரையில் விழுந்திருந்ததைக் கண்ட குழந்தைகள் ”அப்பா…” என்றவாறு தந்தையை நோக்கிப் பாய முயல, அவர்களைத் தடுத்தவன்,

“சன்ஸ்.. கோ… கெட் இன்… த கார்… ரைட் நவ்” என்று கர்ஜித்தவாறு, கீழே கிடந்தவர்களை நோக்கிப் போகத் தொடங்கினான். அந்த நேரம் சைரன் ஒலி கேட்க,

“ஷிட்…” என்று முணுமுணுத்தவன், அவசரமாக இறந்திருந்த இருவரின் மங்கிக்கேப்பைக் கழற்றிப் பார்த்தான். இருவருமே புதிய முகங்கள். உயிரோடிருந்த மூன்றாமவனை நெருங்கி அவனுடைய தொப்பியையும் கழற்றிப் பார்த்தான். தெரியாத முகம்.

மீண்டும் சைரன் ஒலி கேட்க, அவனிடம் விசாரிக்க நேரமில்லை என்று தெரிந்தது. அவசரமாக அவன் பான்ட் பாக்கட்டில் கையை விட்டுத் துழாவினான். கைப்பேசி சிக்குப் பட்டது. வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. மற்றவர்களைச் சென்று பரிசோதிக்க நேரமில்லை. எழுந்து நின்றவாறு துப்பாக்கியை அவன் மார்பைக் குறிபார்த்து விசையை இருமுறை அழுத்திவிட்டு அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதைக் கூடப் பரிசோதிக்க நேரமில்லாதவனாக, தன் காரை நோக்கிப் பாய்ந்தான் அபயவிதுலன்.

அடுத்த வினாடி வாகனத்தில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தவாறு திரும்பி மிளிர்மிருதையைப் பார்த்தான். அவளோ எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவளைச் சமாதானப் படுத்துவதற்கு நேரமில்லை. முதலில் இந்த இடத்தை விட்டுச் செல்லவேண்டும். புரிந்தவனாய், தன் காரை உயிர்ப்பித்து அந்தப் பாதையை விட்டு வேகமாக வெளியேறவும், காவல்துறையின் வாகனங்கள் பெரும் கலவரத்துடன் அந்த இடத்தை வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

 

What’s your Reaction?
+1
23
+1
0
+1
8
+1
3
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!