அதன் பிறகு இரண்டு நாட்கள் அழகாகவே கடந்தன. அந்த இரண்டு நாட்களும், அவள் தனக்கு முக்கியமானவள் என்பதை உணர்த்த அவன் தயங்கவில்லை.
இருவரும் நிறையச் சிரித்தார்கள். நிறையப் பகிர்ந்துகொண்டார்கள். அவனுடைய விருப்பு வெறுப்பு, இவளுடைய விருப்பு வெறுப்பு என்று ஓயாமல் பேசினார்கள்.
மீநன்னயா ஆச்சரியத்துடன் உணர்ந்து கொண்டது, அதகனாகரன் அவள் மீது சற்று அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்வதுதான். அதுவும் அவளை அதிகம் பாதுகாப்பது போல நடந்துகொள்வான். கூடவே இவள் என்னவள் என்கிற உணர்வைச் சற்றும் தயக்கமின்றி வெளிக்காட்டினான். யாராவது ஆண்கள் இவளைச் சுவாரசியமாகப் பார்ப்பது போலத் தோன்றினாலே இவனுக்குள் பற்றி எரியும்.
அன்றும் அப்படித்தான், உணவகத்தில் இருவரும் உணவு வருவதற்கிடையில் சிற்றுண்டியைக் கொறித்துக்கொண்டிருக்க, அதகனாகரன் கழிவறை சென்றுவிட்டு வருவதாகக் கூறி உள்ளே போக, இவளோ கையிலிருந்த உருளைக்கிழங்குப் பொரியலை சாசோடு தோய்த்து வாயில் வைக்க, அவள் போதாத நேரம், சாசில் ஒரு துளி, அவளுடைய மேலாடையில் பொட்டென்று விழுந்துவிட்டது. பதறியவளாகக் கையிலிருந்ததைத் தட்டில் போட்டுவிட்டு, கை துடைக்கும் தாளால் கறையை அழுந்த துடைக்க முயல, அது நாலா பக்கமும் இழுபட்டதுதான் மிச்சம். நல்ல வேளை, அது சிவந்த மேலாடை என்றதால், கறை பல்லிளிக்கவில்லை. திருப்தி கொண்டவளாய், மீண்டும் சாப்பிடத் தொடங்க, அவள் போதாத காலம், கறையைத் துடைத்த வேகத்தில் இரண்டு பொத்தான்கள் கழன்றுவிட்டிருந்ததைக் கவனிக்கவில்லை.
விளைவு இளமையின் செழுமை அதிகம் இல்லை, கொஞ்சமே கொஞ்சமாய் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. அதுவும் அந்த நீண்ட பின்னிய கூந்தலை தோள்வழியாக முன்பக்கம் விட்டிருக்க அது வேறு அவளுடைய பெண்மையைச் சற்று அதிகமாகவே அழகுற எடுத்துக் காட்ட, அது ஆண்களுக்குச் சற்றுப் போதை கொடுக்கும் கண்காட்சியின் விருந்தாகவே அமைந்து போனது. தாம் ஆண்களின் கவனத்தைத் திசை திருப்புகிறோம் என்பது தெரியாமலே உணவில் கவனமாக இருக்க, அதகனாகரன் கையைத் துடைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
வந்தவன் அப்போதுதான் கவனித்தான், அவர்களுக்கு முன்புறமிருந்த ஆண்கள் கூட்டம் அடிக்கடி எங்கோ வெறிப்பதையும் எதையோ கூறி நகைப்பதையும். ஆண்களின் பார்வை எப்போது எப்படியிருக்கும் என்று தெரியாதவனா அவன். அந்தப் பார்வைக்கான பொருள் அவனுக்கு உடனே புரிந்து போகத் திரும்பியவனின் விழிகள் சரியாக எங்கே படவேண்டுமோ அங்கே பட்டது.
அப்போதுதான் அவர்கள் எதைக் கவனிக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது, ஆத்திரத்துடன் நிமிர்ந்து மீநன்னயாவைப் பார்த்தான். அவளோ இது எதையும் கருத்தில் கொள்ளாது உருளைக்கிழங்கை ரசித்துக்கொண்டிருந்தாள்.
இவள் எத்தனை பேரைத்தான் மயக்கத் திட்டம் போட்டிருக்கிறாள்… அதுதான் கண் முன்னால் நான் இருக்கிறேனே… போதாதா… கடும் ஆத்திரமும் சீற்றமும் வர, ஓரெட்டில் அவளை நெருங்கியவன்,
“ஆட்களுக்குக் கண்காட்சி காட்டி முடித்துவிட்டால், திரையை மூடலாமே…” என்றான் சுள்ளென்று. அப்போதுதான் ஒரு பொரியலை வாய்க்குக் கொண்டுபோனவள், குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்து,
“கண்காட்சியா… என்ன கண்காட்சி?” என்றாள் குழப்பத்துடன். இவனோ பற்களைக் கடித்து ஆத்திரத்தை அடக்கியவனாக,
“கொஞ்சமாவது அறிவு வேண்டாம்… உன் சட்டையில் பொத்தான்கள் கழன்று இருக்கின்றன… முதலில் பூட்டு…” என்றான் அடக்கிய சீற்றம் மிகுந்த குரலில். அப்போதும் புரியாமல் குனிந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் தன் நிலை புரிய, பதறிப்போனவளாப் போத்தானை மூட வந்தாள். ஐயோ விரல்கள் முழுவதும் தக்காளி சாஸ் கிடக்க, பதட்டமாய்க் கரங்கைளத் துடைக்க வருவதற்குள், அவள் திரையை மூடும் வரைக்கும் பொறுமை இல்லாதவனாக, ஏதோ உந்தித்தள்ள. இரண்டெட்டில் அவளை நெருங்கி, அவனே பொத்தானைப் பூட்டிவிடத் தொடங்க, அதிர்ந்து போனாள் மீநன்னயா. பதட்டத்தோடு அவனைத் தடுக்க வருவதற்குள், அவன் இரண்டு பொத்தான்களையும் பூட்டிவிட்டிருந்தான்.
இவள்தான் அந்த ஆணின் கரங்கள் பட்டதும் செயலிழந்து போனாள். ஆனால் இவளுக்கு இருந்த பாதிப்பு அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மாறாகக் கோபம்தான் தெரிந்தது. அதை வெளிக்காட்டும் வகையில்,
“பொது வெளியில் ஆடை கலைந்திருப்பது கூடத் தெரியாமலா உட்கார்ந்திருந்தாய்…” என்றான் இன்னும் கோபம் அடங்காதவனாக. அந்தக் கோபத்தில் கலக்கம் கொண்டவளாய்ப் பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்த்து,
“சாரி… அது கழன்றிருந்தது எனக்குத் தெரியவில்லை…” என்றவளை வெறுப்போடு ஏறிட்டவன், உனக்குத்தான் தெரியவில்லை, அங்கே முன்னால் இருப்பவர்கள் உன்னை வெறித்துப் பார்த்தது கூடவா உறுத்தவில்லை?” என்றான் சுள்ளென்னு. அவளோ ஆச்சரியம் கொண்டவளாகப் புருவங்களைச் சுருக்கி சற்று நகர்ந்து எட்டிப் பார்க்க அவன் சொன்னது சரிதான். திரையை மூடினாலும், எட்டிப் பார்க்கும் பக்தர்கள் போல, மறைத்துக்கொண்ட அதகனாகரனைத் தாண்டி இவளைத்தான் எட்டி எட்டிப் பார்க்க முயன்றுகொண்டிருந்தார்கள்.
அவமானமும், வெட்கமும் போட்டிப்போட சடார் என்று சாதாரணமாக அமர்ந்தவள்,
“சாரி ரஞ்சன்… சத்தியமாகக் கவனிக்கவில்லை…” என்ற போதும், அடங்காதவனாக,
“அடுத்த முறை கவனமாக இருந்து கொள்…” என்றவன் அவள் பக்கமாகக் குனிந்து, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து,
“ஏனோ… என்னைத் தவிரப் பிற ஆண்கள் உன்னை ரசித்துப் பார்ப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை… நன்னயா…” என்றான் ஆழ்ந்த குரலில்.
அந்தக் குரல் கொடுத்த தாக்கத்தால் உடல் சிலிர்த்துப் போனதா, இல்லை அவன் விழிகள் தன் விழிகளோடு கலந்ததால் தேகம் சிலிர்த்ததா, இல்லை அவன் தன் காதலை உரிமையை அதிகாரத்தை இப்படிச் சொன்னதால் மேனி சிலிர்த்ததா அவள் அறியாள். ஆனால் அவனுடைய அந்தப் பேச்சு, அந்த ஆதிக்கம், அந்த உரிமை பிடித்திருந்தது. மிக மிகப் பிடித்திருந்தது. அவளையும் கொண்டாட, அவளுக்காய் யோசிக்க, அவளுக்காய் செயல்பட ஒருத்தன் இருக்கிறானே என்கிற பரவசத்தில் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனும் அவளைத்தான் ஆதிக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்போது புரிந்தது தாமரை ஏன் பகலவனைக் கண்டதும் அவன் பக்கமாகச் சரிகிறது என்று. இரண்டு பேரும் தம்மை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, பூஜைவேளை கரடியாக, அவர்கள் தருவித்த உணவு அவர்களின் மேசையில் அடுக்கப் பட்டது.
உடனே இருவரும் சுயநினைவு வந்தவர்கள் போல, தருவித்த உணவை தம் ப்கம் இழுக்கத் தொடங்கினாலும், மனம் ஒரு வித பரவச நிலையில் இருவருக்குமே இருந்தது.
இருவரும் காதலைச் சொல்லவில்லை. ஆனாலும் அதை ஏதோ ஒரு வழியில் உணர்ந்து கொள்ள, அன்றைய நாள் அவனுக்கு எப்படியோ, அவளுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது.
அதன் பின், அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு, ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அதகனாகரன்.
இவளும் தனக்காய் இன்னொருவன் இருக்கிறான் என்கிற மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தன் அறைக்குப் போக, இங்கே தன் வாகனத்தில் அமர்ந்திருந்த அதகனாகரன், அவள் சென்று மறைந்ததும் தன் கைப்பேசியை எடுத்து, ஒரு சில இலக்கங்களை அழுத்தினான்.
அடுத்த கணம்,
“சொல்லுடா…” என்கிற குரல் இவன் காதை வந்து தீண்டியது.
“நிரஞ்சன்… எனக்கு உன்னுடைய இன்னொரு உதவியும் வேண்டுமே…” என்றவனிடம்,
“சொல்லுடா…” என்றவனிடம், தன் தேவையைக் கூற,
“அட… இதற்கெல்லாமா அனுமதி கேட்பாய்… என்னுடைய சொந்தப் பெயரையே உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறேன். இதைக் கூடச் செய்யமாட்டேனா… தாராளமாக எடுத்துக் கொள்… திறப்பை எப்போது வந்து வாங்குகிறாய்…” என்ற நண்பனிடம் நன்றி கூறிவிட்டுத் தன் சகோதரியை அழைத்தான் அதகனாகரன்.
அவனுடைய அழைப்பை ஏற்றவரிடம், “எக்காரணம் கொண்டும், ஜெயராம் கொஞ்ச நாட்களுக்குக் கைப்பேசியை உபயோகிக்காத மாதிரி பார்த்துக்கொள்….” என்று அறிவித்துவிட்டுத் தன் விடுதிக்கு வந்தான்.
விடுதிக்கு வந்தவனுக்கு ஏனோ இருப்புக் கொள்ளவில்லை. அங்கும் இங்குமாக நடைபயிலத் தொடங்கினான்.
ஆறு மணியைக் கடந்த பின், கரங்களோ அடிக்கடி கைப்பேசியைத் தூக்கிப் பார்த்து, எதிர்பார்த்த செய்தி வருகிறதா என்று ஆவலுடன் பார்த்தான். இப்போது அவன் உதைத்த பந்து மீநன்னயாவின் வாசலை எட்டியிருக்கவேண்டுமே… ம்… ஏன் இன்னும் அழைப்பு வரவில்லை…. யோசனையும் பதட்டமும் அவனை ஆட்கொள்ள இடைவிடாது அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான் அதகனாகரன்.
எல்லாம் பக்காவாக யோசித்து யோசித்துத் திட்டமிட்டு சதுரங்கக் காய்களை நகர்த்தியிருக்கிறான்… நிச்சயமாக, எதிராளி அரக்கிச் செல்ல வாய்ப்பேயில்லை என்பதை உறுதியாகத் தெரிந்துகொண்டவனாக, மீநன்னயாவின் அழைப்புக்காகக் காத்திருக்க, அவனை அதிகம் காக்கவைக்காமல் ஏழுமணியளவில் அவனுடைய கைப்பேசிக்கு மீநன்னயா அழைத்தாள். அதைக் கண்டதும், அவனுடைய உதடுகள் பெரும் நகைப்பைக் காட்ட, உதடுகளோ,
“செக்மேட்…” என்றன.
உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த மேசையில் கால்களைத் தூக்கிப் போட்டுச் சாய்வாக அமர்ந்தவாறு திரையையே வெறிக்க, கைப்பேசியோ, அடித்து ஓய்ந்து போனது.
அதைக் கண்டு அவனையும் மீறிப் புன்னகையில் உதடுகள் மேலும் விரிந்தன. அடுத்த அரை நிமிடத்தில் மீண்டும் மீநன்னயாவிடமிருந்து அழைப்பு வர, அவள் அழைத்த வேகத்திலேயே அவளுடைய அவசரம் இவனுக்குப் புரிந்து போனது.
அது கொடுத்த திருப்தியில் மீண்டும் அது அடித்து ஓயும் வரை ஒருவித நகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சற்றுப் பொறுத்து மீண்டும் கைப்பேசி அடிக்க, அதற்கு மேல் காக்க வைக்காமல், அதை உயிர்ப்பித்தவன்,
“ஹலோ… நிரஞ்சன் பேசுகிறேன்…” என்று யாருடனோ பேசுவது போலக் கூற, மறு பக்கத்தில்,
“ரஞ்சன்… இது நான்… மீநன்னயா…” என்கிற பதட்டமும் பரிதவிப்பும் நிறைந்த கம்மிய குரல்தான் அவனுடைய செவியை ஆனந்தமாக வந்து சேர்ந்தது. இவனோ அப்போதுதான் கேட்பதுபோல,
“நன்னயா… நீயா… என்னம்மா… கொஞ்சத்துக்கு முன்புதானே உன்னை விடுதியில் விட்டுவிட்டு வந்தேன்… ஏதாவது பிரச்சனையா? ஏன் உன்னுடைய குரல் கம்மியிருக்கிறது?” என்று தவித்தவன் போலக் கேட்க, அவளோ,
“ரஞ்சன்… நான்… நான் உங்களைப் பார்க்கவேண்டும்… உடனே இங்கே வருகிறீர்களா… ப்ளீஸ்” என்று கெஞ்ச, அந்தக் குரல் உள்ளுக்குள்ளே இனம்புரியாத ஒருவித அவஸ்தையைக் கொடுத்தாலும், அதை ஒதுக்கிவிட்டு,
“நிச்சயமாகக் கண்ணம்மா… இதோ இப்போதே கிளம்புகிறேன்…” என்றதும், மறுபக்கமிருந்து வெளிப்பட்ட நடுங்கிய மூச்சு இவன் செவியைத் தீண்டிச் செல்ல, அது அவனைச் சுட்டதோ. அவசரமாகக் கைப்பேசியை அணைத்துவிட்டு, அதை முன்னிருந்த மேசையில் எறிந்துவிட்டு, எறிந்த கைப்பேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எதற்கு அவள் கலங்கிய குரலைக் கேட்டதும் உள்ளுக்குள்ளே பதறுகிறது. இந்தக் குரலைக் காட்டித்தானே ஜெயராமையும் மயக்கியிருப்பாள்…! அதை நினைத்ததும் அதுவரையிருந்த மாயை அறுந்துபோய் அங்கே கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது. கூடவே உதடுகளில் ஏளனப் புன்னகையும்.
‘ஜெயராமை மயக்கியதுபோல என்னை மயக்கலாம் என்று நினைத்தாயா மீநன்னயா…? அது இக்காலத்தில் மட்டுமில்லை. எக்காலத்திலும் உன்னால் முடியாது’ என்று கறுவியவனாக நீளிருக்கையின் மேற்புறத்தில் தலையைச் சாய்த்த போது உதடுகளில் வெற்றிப்புன்னகை அப்பட்டமாக மலர்ந்திருந்தன.
யாருடைய வாழ்க்கைக்குள் நுழையப் பார்க்கிறாய்… கலங்கு… நன்றாகக் கலங்கு… உன்னைக் கதறவைத்த பின், அந்தாளைக் கதற வைக்கிறேன்… என் அக்காவின் வாழ்க்கையையா சூனியமாக்கப் பார்க்கிறாய்…’ என்று ஏளனத்துடன் எண்ணியவனாகச் சற்று நேரம் அப்படியே கிடந்தவன், கற்பனையில் அவள் கலக்கத்தைக் கொஞ்ச நேரம் ரசித்துவிட்டுப் பின், எழுந்து சாவதானமாகத் தயாராகி மீநன்னயாவின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.
அதே வேளை ஜெயராமிற்கு நூறாவது முறையாக் கைப்பேசி எடுத்துவிட்டாள் மீநன்னயா. அழைப்புச் சுத்தமாகச் செல்லவில்ல. ஏன் அவளுடைய அழைப்பை எடுக்கவில்லை. என்னவாயிற்று…? கலக்கத்துடன் கைப்பேசியை அணைத்துவிட்டுப் பெரும் அச்சத்துடன் தன்முன்னால் நின்றிருந்தவர்களை ஏறிட்டாள் மீநன்னயா. அந்த இருவரும் அவளைத்தான் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து காவல்துறையினர். சற்று முன்தான் பெரிய அணுகுண்டை அவளுடைய தலையில் போட்டுவிட்டுச் சாவதானமாக நின்றிருந்தார்கள்.
மீண்டும் தொண்டை அடைக்க, இப்போதுதான் தன் நண்பனை அழைத்தோம் என்கிற எண்ணமேயில்லாமல் வாசல் கதவை ஆவலும் பயமுமாகப் பார்த்துவிட்டு அவன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து நின்றிருந்த அந்தக் காவல்துறையினரைப் பார்த்தாள்.
என்ன பேசுவது? என்ன சொல்வது? எதுவும் தெரியவில்லை. அத்தனையும் மந்தமாகிப்போன நிலைமை அவளுக்கு.
உடனே கிளம்பவேண்டும் என்றால் எப்படிக் கிளம்புவது? அவள் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைந்துவிட்டாள் என்பதை அறிந்து அவளைக் கைதுசெய்து, மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்காக வந்திருக்கிறார்கள் அந்தக் காவல் துறையினர்.
உடலிலிருந்து இரத்தம் வடிந்து சென்ற உணர்வுடன், என்ன செய்வது என்று கூடப் புரியாமல், ஜெயராமனையும் அழைக்க முடியாமல், வேறு வழியில்லாது அவளுடைய அடுத்த நம்பிக்கைக்குரிய நிரஞ்சனையும் அழைத்தாகிவிட்டது. நல்லவேளை அவனாவது கைப்பேசியை எடுத்துவிட்டான். அதுவும் முதல் இரு முறை அவனும் எடுக்காது போக, இவள் பட்ட பதட்டம், பயம், கலக்கம். அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு அல்லவா அது.
எப்படியோ அவன் வருவதாகக் கூறிவிட்டான். இனி எந்தச் சிக்கலாக இருந்தாலும் அவன் பார்த்துக்கொள்வான். நிச்சயமாகப் பார்த்துக்கொள்வான். அது போதும் அவளுக்கு.
நம்பிக்கையுடன் காத்திருக்க அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டிருந்தான் நிரஞ்சன்.
அவளுடைய அறைக் கதவைத் தட்டிவிட்டுக் கதவைத் திறந்ததுதான் தாமதம், அதுவரை கையறு நிலையில் என்ன செய்வது என்று தெரியாது தவித்துக்கிடந்த வேளையில், நம்பிக்கை வெளிச்சமாய்க் கதவைத் திறந்த அவனைக் கண்டதும், அதுவரை அடைத்துக்கிடந்த அழுகை வெடித்துக்கொண்டு கிளம்ப, சற்றும் யோசிக்காமல் இருக்கையை விட்டு எழுந்த மீநன்னயா அவனை நோக்கிப் பாய்ந்து அவனை இறுக அணைத்துவிட்டிருந்தாள்.
இப்படித் திடீர் என்று பாய்ந்து தன்னை அணைப்பாள் என்று நிரஞ்சனும் யோசிக்கவில்லை. அவள் பாய்ந்த வேகத்தில் இவனும் தடுமாறி இரண்டு அடி பின்னால் சென்றுதான் தன்னை நிதானிக்கவேண்டியிருந்தது.
தன் மார்பில் விழுந்தவளைத் தன்னை அறியாமல் இறுக அணைத்தவன்,
“ஷ்… என்னம்மா… என்ன நடந்தது…?” என்று கேட்டவன், அப்போதுதான் புதிதாக அங்கே நின்றிருந்த காவல்துறையை பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டு,
“எதற்காகக் காவல் துறை இங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டான் இவன். இவளோ எங்கே அவனை விட்டு விலகினால், காவல்துறை தன்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில், இன்னும் அவனை விட்டுப் பிரியாமல்,
அவன் மார்பிலிருந்து தன் முகத்தையும் விலக்காமல்,
“அவர்கள்… அவர்கள் என்னைத் திரும்ப இலங்கைக்கு அனுப்பப் போகிறார்களாம் ரஞ்சன்…” என்றாள் விம்மலுடன். இவனோ அதிர்ந்தவன் போல,
“வட்…” என்று கத்த, இவளும், அந்தக் காவல்துறையினரைப் பார்த்துவிட்டு,
“வட்ஸ் கோய்ங்க ஆன் ஹியர்…” என்றான் கோபம் போல. அதில் ஒருவர், அவர்களை நோக்கி வந்து,
“ஆமாம், இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்த நாட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அதனால் இவர்களைக் கைதி செய்து, மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப் போகிறோம்…” என்றதும், இவன் அதிர்ச்சியுடன் மீநன்னயாவைப் பார்ப்பதுபோலப் பார்த்தான்.
“சட்டத்திற்குப் புறம்பாகவா?” என்று அதிர்ந்தவன் போல நின்றவன், பின் நம்பாதவன் போல அவளைப் பார்த்து,
“அவர்கள் சொல்வது உண்மையா…? சட்டத்திற்குப் புறம்பாகவா இங்கே வந்திருக்கிறாய்?” என்று அப்போதுதான் செய்தி அறிந்தவன் போலக் கேட்க, என்ன பதிலைச் சொல்வாள்? வாய்விட்டுச் சொல்லக்கூடிய செய்தியா அது. ஜெயராமன் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் எப்படி இங்கிலாந்து வந்தோம் என்று யாரிடமும் சொல்லாதே என்று. அப்படியிருக்கையில் எப்படி உண்மையைச் சொல்வாள்?
கோபத்தோடு கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாது தலை குனிந்தவள், ஆம் என்று தலையை ஆட்ட, இவனோ ஆத்திரம் போல அவளைப் பார்த்து,
“இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” என்றான் அந்தச் செய்தியே புதிது என்பது போல. அவளைப் பற்றி விசாரித்தபோது கரங்களில் விழுந்த அற்புதச் செய்திதான் அது. அதைக் கொண்டுதானே காயை நகர்த்தத் தொடங்கினான்.
உள்ளே எழுந்த மகிழ்ச்சி அலையை மறைத்தவனாக்க கோபம் போல அவளைப் பார்த்துவிட்டுப் பின் காவல்துறையினரிடம்,
“எங்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் தர முடியுமா… ப்ளீஸ்…” என்றதும்,
“ஓக்கே… கோ எஹெட்…” என்றுவிட்டு அவர்கள் வெளியேற, கதவைப் பூட்டிய அதகனாகரன், தன் மீது கிடந்தவளை விலக்கி,
“என்ன இது மீநனன்யா… இங்கே சட்டத்திற்குப் புறம்பாக உள்ளே வரமுடியாது என்று உனக்குத் தெரியாதா? எப்படி இங்கே வந்தாய்?” என்றான். அவன் கேட்ட விதத்திலேயே ஏதோ கொலைக் குற்றம் செய்துவிட்ட உணர்வு அவளைத் தாக்க, எச்சில் கூட்டி விழுங்கியவள்,
“வேறு என்ன செய்வது ரஞ்சன். என்னை இங்கே எடுப்பிக்க வேறு என்ன வழி இருக்கிறது சொல்லுங்கள். இந்த நாட்டின் சட்டம் நியாயமான வழியில் வர வழிவகுக்காதே. ராம் சட்ட ரீதியாக என்னை எடுப்பிக்கப் பல வகையில் முயன்றார். அத்தனையும் தோல்வி என்ற பிறகுதான், சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் கட்டி என்னை இங்கே அழைத்து வந்தார். ஆனால் இத்தனை சுலபமாகக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை…” என்று கலங்கிய குரலில் கூற, இவனோ,
“ஜெயராமை அழைத்தாயா? அவர் என்ன சொன்னார்?” என்றான் குழப்பம் கொண்டவன் போல. இவளோ கண்களில் கண்ணீர் மல்க, நிமிர்ந்து பார்த்து,
“பல முறை அழைத்துப் பார்த்தேன் ரஞ்சன்… அவருக்கு அழைப்பு போகுதில்லை… என்ன செய்யட்டும்… அதுதான் உங்களை அழைத்தேன்…” என்றபோது அவளுடைய கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது.
உடனே அவளுடைய கன்னத்தைத் தன் உள்ளங்கைகளால் பற்றியவன், வழிந்த கண்ணீரைப் பெருவிரலால் வருடிக் கொடுத்து,
“இப்போது எதற்கு இந்த அழுகை. சமாளிக்க முடியாதது என்று எதுவுமில்லை… சமாளிக்கலாம் விடு…” என்று கூற, அவளோ,
“நான் இலங்கைக்குப் போக மாட்டேன் ரஞ்சன்… இத்தனை காலமும் நரகத்தில் வாழ்ந்துவிட்டேன்… இப்போதுதான் சுதந்திரக் காற்றை அனுபவிக்கிறேன். அதை அத்தனை சுலபத்தில் இழக்க விரும்பவில்லை. இனி இங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால், அங்கே என்ன செய்வார்களோ… பயமாக இருக்கிறது ரஞ்சன்…” என்று மீண்டும் அழத் தொடங்கியவளை, இரக்கத்துடன் பார்த்து,
“ஹே… எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டுமா. நம்பு… நான் காவல்துறையினரிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ வருந்தாதே…” என்றவன் அவளைச் சமாதானப் படுத்திவிட்டுக் கதவைத் திறந்தபோது, அவனுடைய உதடுகள் புன்னகையைச் சிந்திக்கொண்டிருந்தன.
அரை மணிநேரம் அந்தக் காவல்துறையினரோடு என்ன பேசினானோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். உள்ளே வந்தவன்,
“நன்னயா… புறப்படு…” என்றான் பரபரப்புடன்.
இவளோ அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து,
“எங்கே…?” என்றாள் திக்கித் திணறி.
“இனி நீ இங்கே இருக்க முடியாது நன்னயா… காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நாம் தப்பவேண்டும்… புறப்படு…” என்று பதட்டமாகக் கூற, அப்போதிருந்த நிலையில் அவளுக்கு வேறு வழியும் இருக்கவுமில்லை.
அந்த நிலையிலும் அவசரமாக ஜெயராமுக்குக் கைப்பேசி எடுக்க முயல, கைப்பேசி இப்போதும் அணைத்துத்தான் வைக்கப்பட்டிருந்தது. இவனோ எரிச்சலுடன் அவளைப் பார்த்து,
“இப்போது யாருக்குக் கைப்பேசி எடுக்கிறாய்?” என்று கேட்க,
“ராமிற்கு… அவருக்குச் சொல்லவேண்டுமே…” என்று நடுங்கிய கரங்களுடன் முயற்சிசெய்ய,
“நன்னயா, இப்போது இதற்கெல்லாம் நேரமில்லை… முதலில் இங்கிருந்து தப்பவேண்டும், நாம் போன பின்னாடி அவரோடு பேசிக்கொள்ளலாம்… இப்போது புறப்படு…” என்று கூற, இவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
உடல் நடுங்க மனம் சோர்வுற, எப்படியாவது இந்தச் சிக்கலிலிருந்து தப்பவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, அவசரமாகக் கிடைத்த ஆடைகளை ஒரு பெட்டியில் திணித்துவிட்டு நிமிர, அவளுடைய கரத்திலிருந்த பெட்டியைத் தன் கரத்திற்கு இழுத்து எடுத்த அதகனாகரன், “வா…” என்கிற அழைப்புடன் வெளியே வந்தான். காவல்துறையினர் மறுபக்கம் திரும்பி நின்றவாறு எதையோ பேசிக்கொண்டிருக்க, இவனோ உதட்டில் தன் சுட்டுவிரலை வைத்து அவளைச் சத்தம்போடவேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்றி, மறுபக்கமாக நடக்கத் தொடங்க, இவளும் அச்சத்துடன் அந்தக் காவல் துறையினரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அவனுடைய இழுப்புக்கு ஏற்ப நடக்கத் தொடங்கினாள்.
படிகளின் பக்கம் அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், அடுத்து ஏறி அமர்ந்த இடம் அதகனாகரனின் வாகனம்தான்.
மீநன்னயாவோ அச்சத்துடன் காவல்துறையினர் தங்களைப் பின் தொடர்கிறார்களா என்று என்று பார்த்து, இறுதியில் இல்லை என்பதை உணர்ந்த பின்தான் நிம்மதியுடன் வாகன இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
“ஓ காட்… நன்றி ரஞ்சன்… நீங்கள் மட்டும் இல்லையென்றால், இந்தச் சிக்கலை எப்படிக் கையாண்டிருப்பேனோ எனக்குத் தெரியவில்லை.” என்று கலகத்துடன் கூற, அவனோ, அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு,
“ஹே… எதற்கு நன்றியெல்லாம்… நமக்கிடையில் நன்றி தூரமாக இருக்கவேண்டும்… புரிந்ததா?” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு, வாகனத்தை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.
(17) சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல…
(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல்…
(15) உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த…
(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால்,…
(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்... “ஷ்... பேபி... இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே... கண்ணா... அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்...!”…
(12) அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு…
View Comments
Nice epi
மிக மிக நன்றி