வலித்தது… நெஞ்சம் முழுக்க வலித்தது அதகனாகரனுக்கு. சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தைக் கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லையே. அதனால்தான், கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்றார்களோ மூத்தோர்கள். பெரும் வேதனையுடன், தன் அறைக்குப் போவதற்காக மாடியேறியவனின் கால்கள் தாமாக மீநன்னயாவின் அறைக்கு முன்பாக வந்து நின்றன.
ஏதோ உந்தித் தள்ள அந்த அறைக் கதவைத் திறந்தவனுக்கு, முன்னிரவு நடந்த கூடல் வேளை கெட்ட நேரத்தில் நினைவில் வந்து அவனைத் தவிக்க வைத்தது.
இதோ இப்போது கூட, அவள் வேண்டும் என்று அந்த நேரத்திலும் அவன் புத்தியும் தேகமும் தேடுகிறதே. அதிலிருந்த எப்படி வெளியே வரப்போகிறான். தவித்தவனாக நடந்து சென்றவன், அந்தப் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.
கரங்களால் அவள் படுத்த பகுதியை வருடிக்கொடுத்தான். நினைவுகள் முன்தினத்தைச் சுற்றியே பயணித்தன. விழிகளால் அந்த அறையைச் சுற்றி வலம் வர, அங்கே அவளுடைய பொருட்கள், எல்லாமே எடுக்கப்பட்டிருந்தாலும், அவளுடைய உடலின் மணம், காற்றில் கலந்து, அவன் நாசியைத் தீண்ட, மேலும் அவளுடைய இழப்புப் பூதாகரமாக அவனைத் தாக்க, முதன் முறையாக அவனையும் மீறி விழிகள் கலங்கின. இதயம் கசங்கியது.
சற்றுத் தள்ளிக் கிடந்த அவள் தலையணையை இழுத்து எடுத்தவன், தன் மார்போடு அதை இறுக அணைத்துக்கொண்டவனாக அதில் முகத்தைப் புதைத்தான். மீண்டும் வடுகொண்ட தேகத்தில் முகத்தைப் புதைத்தது நினைவுக்கு வந்து, அவனைத் துடிக்க வைத்தது.
அதுவும் அவன் கரங்கள் பட்டுச் சிலிர்த்த அந்தத் தேகம் மீண்டும் மீண்டும் அவனைக் கசங்க வைத்தது.
முடியாது நிச்சயமாக அவளில்லாத வாழ்வை அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எதையும் இழக்கலாம். ஆனால் அவளை மட்டும் இழக்க முடியாது என்று ஐயம் திரிபற உணர்ந்து கொண்டவன், வேகமாகத் தன் விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டான்.
“நோ… நன்னயா, அத்தனை சுலபத்தில் என்னை விட்டு உன்னால் பிரிந்து செல்ல முடியாது. நீ வெறுத்தாலும், மறுத்தாலும் உன்னோடான வாழ்வு என்னோடுதான்…’ என்று உறுதி கொண்டவனாய் தன் கரத்தில் இருந்த தலையணையைத் தூக்கி எறிந்துவிட்டுத் தன் அறை நோக்கி விரைந்தான் அதகனாகரன்.
அதே நேரம், ஜெயராமோடு பயணித்த மீநன்னயா, அவர்களின் விடுதி வரும் வரைக்கும் அமைதி காத்தாள்.
உள்ளே வந்ததும், வேகமாகச் சென்று தன் பொருட்களைப் பெட்டியில் அடுக்கத் தொடங்க, அதைக் கண்ட ஜெயராமன், அவளைத் தடுக்க முயன்றவராக.
“மீனா… என்ன செய்கிறாய்… இப்போது எதற்கு உன் பொருட்களைப் பெட்டியில் வைக்கிறாய்…?” என்று கேட்க ஒரு வித ஆவேசத்தோடு பெட்டியை மூடியவள், நிமிர்ந்து ஜெயராமைப் பார்த்து,
“நான்… இலங்கைக்கே போகிறேன் ராம்… என்னால்… என்னால் ஒரு கணமும் இங்கே இருக்க முடியாது…” என்று உறுதியுடன் கூற, அவளைக் கோபத்துடன் பார்த்தார் ஜெயராமன்.
“இது என்ன முட்டாள்தனமான பேச்சு… இத்தனை லட்சங்கள் செலவு செய்து உன்னை அழைத்து வந்தது இதற்காகத்தானா…” என்று கோபத்துடன் கேட்க, அவரை அழுகையுடன் பார்த்தாள் மீநன்னயா.
“என்னால்…. முடியாது ராம்… இங்கே இருக்கும் ஒவ்வொரு கணமும் நெருப்பில் நிற்பது போலத் தோன்றுகிறது… தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்…” என்று அதுவரை அடக்கிவைத்திருந்த வேதனையை வெளியிடுபவளாக, அழத் தொடங்க, விரைந்து தன் மகளை நெருங்கிய ஜெயராம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
“ஓ… மை ஏஞ்சல்… ப்ளீஸ் டோன்ட் க்ரை…” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றவர், பின் அவளுடைய முகத்தைப் பற்றி நிமிர்த்தி,
“இதோ பார் மீனா, உன்னோடான வாழ்க்கை இருபத்தொரு வருடங்களை நான் இழந்திருக்கிறேன்… இனியும் அந்த அற்புத தருணத்தை இழக்க நான் விரும்பவில்லை… இதோ பார்… இப்போது நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்துவிடு… நீ வாழ்க்கையில் சந்திக்காத வலிகளையா இனி சந்தித்துவிடப் போகிறாய்…, அதகனாகரன் உன் வாழ்க்கையில் சந்தித்த விபத்து. அந்த விபத்தை இன்றில்லை என்றாலும் இன்னும் கொஞ்ச நாட்களில் மறந்து விடலாம்… காயங்களும் ஆறிவிடும் மீனா…” என்றவரை வேதனையுடன் பார்த்தாள் மீநன்னயா.
“காயங்கள் ஆறிவிடும் ராம்… ஆனால் ஆழமாய்ப் பதிந்த வடு… அது இறுதி மூச்சு வரை என் கூட வருமே…” என்றவளைத் தட்டிக் கொடுத்து விலகிய ஜெயராமன்,
“வடு ஆறாதுதான்… ஆனால் வலி மறைந்துவிடும் மீனா… என்னை நம்புமா… உன்னைக் கனடாவிற்கு அழைத்துச் செல்வதற்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்துவிட்டேன்… விமானச்சீட்டைக்கூட எடுத்துவிட்டேன்… இந்த நேரத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் போவது நியாயமில்லை கண்ணம்மா… உன்னைக் கனடாவிற்கு அழைக்க நான் எத்தனை முயற்சிகள் எடுத்தேன் என்று உனக்கே தெரியும்… அந்த முயற்சி வெற்றிபெற்ற நிலையில் இப்படி நீ தூக்கிப்போட்டுவிட்டுப் போவது சரியில்லை… இது உன் எதிர்காலம் மீனா… உனக்காக வளமான காலம் காத்திருக்கிறது. அதை விட்டுவிட்டு மீண்டும் இலங்கையில் அந்த அநாதை வாழ்க்கை வாழ்வது சரியில்லை… இதற்காகவா இத்தனை சிரமப்பட்டேன்…” என்று கலங்க, இவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இல்லை ராம்… என்னால்… இதிலிருந்து வெளியே வரமுடியும் போலத் தோன்றவில்லையே… நான் என்ன செய்யட்டும்? தவிர அங்கே வந்தால், உங்கள் மனைவியின் தம்பியை நான் சந்திக்கவேண்டி வருமே… நினைக்கும் போதே நெஞ்சம் தகிக்கிறதே…” என்று மார்பை அழுத்திக்கொண்டு சொல்ல,
“இல்லை… நீ சந்திக்க வேண்டி வராது… நாம் புதிய வீடொன்றை எடுக்கலாம்… நமக்கு யாரும் வேண்டாம்… நீ நான் மட்டும் வாழலாம்… உனக்கான கடமை எனக்கு இருக்கிறது மீனா… இதுவரை அதைச் செய்யும் பேறு எனக்குக் கிடைக்கவில்லை… இனி என்னுடைய முழு மூச்சே உன் எதிர்காலத்தை வளப்படுத்த ஆவன செய்வதுதான்… முதலில், உனக்கு நல்லவனாக ஒருவனை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொடுக்கப்போகிறேன்…” என்று அவர் முடிக்கவில்லை தன் காதுகளை மூடிக்கொண்டு,
“போதும் நிறுத்துங்கள்…” என்று கத்தினாள் மீநன்னயா. சற்று நேரம் அப்படியே கிடந்தவள், மெதுவாகத் தன் கரங்களை விலக்கி, ஜெயராமை ஆத்திரத்தோடு விழித்தாள் மீநன்னயா.
“என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்… இன்னொரு திருமணமா… சீ… என்னை என்னவென்று நினைத்தீர்கள்… பூங்கோதையின் மகள் ராம்… நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்று தெரியாமலே உங்கள் நினைவில் சாகும்வரை வாழ்ந்தவர்கள். என்னைப் பெற்ற பின் கூட, வேறு ஒரு ஆணை நிமிர்ந்தும் பார்க்காதவர்கள்… எத்தனை அவமாணங்கள் கேலி கிண்டல்கள்… அத்தனைக்குள்ளும் தலைநிமிர்ந்து என்னை வளர்த்தவர்கள்… அவர்களின் மகளாகப் பிறந்த நான், இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்… நினைக்கும் போதே குமட்டுகிறதே…” என்றவள் தன் விழிகளை மூடி, வேறு ஒரு ஆணை ஏற்க முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தாள். யாரோ தேகத்தின் மீது அமிலத்தை ஊற்றியது போல எரிந்தது. தவிர அதகனாகரன் தவிர வேறு எவனாலும் அவளை அழகாக உணர வைக்க முடியாது… விழிகளில் கண்ணீர் வழியச் சற்று நேரம் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தவளை கருணையுடன் பார்த்த ஜெயராம்,
“நீ என்னுடைய மகளும் கூட மீனா…” என்றார் மென்மையாக. அவளோ பதில் சொல்ல முடியாமல் சற்றுத் தடுமாற, அவளுடைய மனநிலையை நன்றாகவே புரிந்துகொண்டவராக,
“சரிமா… விட்டுவிடு… தெரியாமல் கேட்டுவிட்டேன்… இனி ஒரு போதும் உன் விருப்பத்திற்கு மாறாக ஏதுவும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்… நம்பு… நாம் கனடா போகலாம் கண்ணம்மா… போனதும், விட்ட படிப்பைத் தொடர்… மிச்சத்தைப் பிறகு யோசிக்கலாம்… சரியா…” என்றதும், மீநன்னயாவிற்கு அப்போதுதான் அவருடைய குடும்பமே நினைவுக்கு வந்தது.
அவர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மாதவியம்மா, இதை எப்படித் தாங்கிக்கொள்வார்கள்.. எந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு உறவு இருந்தது ஏற்றுக் கொள்ள முடியாதே. அப்படியிருக்கையில், ஒரு மகளும் இருக்கிறாள் என்று தெரிந்தால் துடித்துப் போவார்களே… அத்தகைய வலியை இந்த நல்ல மனிதருக்குக் கொடுக்க வேண்டுமா…? மறுப்பாகத் தலையை அசைத்தவள்,
“வேண்டாம் ராம்… நான் இலங்கைக்குப் போவதுதான் சரி… என்னால் உங்கள் மனைவிக்குத்தான் பெரும் சிக்கல்… என்னால், புகழேந்தி, பூங்கோதையின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்… வேண்டாம் ராம்… யோசித்துப் பார்த்தால் நான் சொல்வதுதான் சரி என்பதே உங்களுக்குப் புரியும்.” என்ற உறுதியாகக் கூற, ஜெயராமன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார். ஆனாலும்,
“மீனா, அவர்களைப் பற்றிக் கவலைப் படுவதை முதலில் விடு… இத்தனை காலம் அவர்களுக்கு நல்ல தந்தையாக இருந்திருக்கிறேன், நல்ல கணவனாக இருந்திருக்கிறேன்… இனி உன் முறை… தயவு செய்து மறுக்காதே… என் கூட வா…” என்று வேண்ட, சற்று நேரம் எங்கோ வெறித்தாள் மீநன்னயா.
பலதையும் பலமாதிரி யோசித்தாள். அவள் வரவால், ஜெயராமனின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் அது மட்டுமன்றி, என்னதான் மறுத்தாலும், தவிர்த்தாலும், அதகனாகரனை சந்திக்கவேண்டித்தான் வரும். அப்போது நடந்த சம்பவங்கள் அத்தனையும் நினைவில் வந்து வதைக்கும். எதையும் தாங்கலாம்… ஆனால் இதை…. நிச்சயமாக முடியாது… முடிவு செய்தவளாகத் தன் விழிகளை அழுந்த துடைத்து, நிமிர்ந்து ஜெயராமைப் பார்த்தாள்.
அவரும் தவிப்போடுதான் இவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மெதுவாக அவரை நெருங்கியவள், அவர் மார்பில் தன் தலையைச் சாய்த்து அவரை இறுக அணைத்தவாறு சற்று நேரம் நின்றாள்.
இனி எப்போது அவருடைய அணைப்புக் கிடைக்குமோ. ஏக்கத்தோடு எண்ணியவளாக,
“இல்லை ராம்… எப்படி யோசித்தாலும், எனக்கு இலங்கைக்குச் செல்வதுதான் சரியாகப் படுகிறது… உண்மையாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்… என்னை இலங்கைக்குச் செல்ல அனுமதியுங்கள்…” என்றவள் அவரை விட்டு விலகி,
“ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாய். அவளுடைய வேண்டுதலுக்கு முன்பு, பிடிவாதத்திற்கு முன்பு ஜெயராமனால் எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை.
மறு நாளும் மீநன்னயா இலங்கைக்குப் போவதில் பிடிவாதமாகவே இருக்க, நெஞ்சம் கனத்துப் போனார் ஜெயராம். முடிந்தவரைக்கும் அவளுடைய மனத்தை மாற்ற முயன்று தோற்றுப் போனவராகப் பெரும் ஏமாற்றத்தோடு, மூச்சு முட்ட, அந்த விடுதியின் கீழ்த்தளத்திற்கு வந்தவர், அங்கிருந்து வெளியேற முயன்றபோதுதான், அவர் விழிகளில் பட்டான் அதகனாகரன்.
அவனைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்துபோய் நின்றார் ஜெயராமன். இவன் எப்போது வந்தான்? என்கிற கேள்வி எழ, அவனை நோக்கிச் செல்ல முடியாமல் ஆணி அடித்ததுபோல அந்த இடத்திலேயே நிற்க, அதகனாகரனோ யோசனையுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு எங்கோ வெறித்துக்கொண்டிருந்தான்.
அவன் அதிகாலையே வந்துவிட்டிருந்தான். ஆனாலும் அவர்களின் அறையைத் தேடிச் செல்லும் திடம் இல்லாதவனாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டிருந்தான்.
நிமிடங்கள் கடக்கக் கடக்க இப்போது செல்லலாம், பொறுத்துச் செல்லலாம், பின்னர்ச் செல்லலாம் என்று ஐந்து மணி நேரத்தைக் கடத்திவிட்டான். ஆனாலும் அங்கே செல்லும் தைரியம் அவனுக்கு வரவில்லை. குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுத்துக்கொண்டே இருக்க, தவிப்புடன் அமர்ந்திருந்தவனைக் கண்ட ஜெயராமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
விரைந்து சென்று அவனுடைய சட்டையைப் பற்றி உலுப்பவேண்டும் என்கிற ஆவேசம் வந்தது. என்னவெல்லாம் நினைத்திருந்தார். எல்லாம் சரியாக அமைந்திருந்தால், அவனுக்கே தன் மகளைக் கொடுக்கலாம் என்றெல்லாம் கற்பனை வளர்த்திருந்தார். அவர் நினைத்தது நடந்துவிட்டதுதான். ஆனாலும் ரசிக்க முடியாத மாதிரியல்லவா நடந்து தொலைத்து விட்டது. அந்த வலியிலிருந்து அவருடைய மகள் எப்படி வெளியே வரப்போகிறாள். வரத்தான் முடியுமா? அவள் மட்டும் இலங்கைக்குத் திரும்பச் சென்றால், அவளை மீண்டும் வெளிநாடு அழைப்பது இயலாத காரியமாகிவிடும். அவளுடைய வளமான எதிர்காலம் தொலைந்து போகும். கடவுளே அவளை எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறோம்? மீண்டும் மீநன்னயாவின் நினைப்பு அவரை வதைக்க, மேலும் நடுவழியில் நிற்க முடியாமல், தானாகவே அதகனாரகனை நோக்கிச் சென்றார் ஜெயராமன்.
சென்றவர் இயலாமையுடன் அவனுக்கு முன்பாக இருந்த இருக்கையில் தொப்பென்று அமர, அசைவு உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அங்கே கோபத்திலும், வேதனையிலும் முகம் கசங்க அமர்ந்திருந்த ஜெயராமனைக் கண்டதும், முகம் கசங்கத் தலை குனிந்தான் அதகனாகரன்.
அவனையே வெறித்துப் பார்த்த ஜெயராமன்,
“மீநன்னயா இலங்கை போகிறாளாம்…” என்றார் யாருக்கோ கூறுவது போல. அதைக் கேட்டதும், சடார் என்று நிமிர்ந்து பார்த்தான் அதகனாகரன்.
“என்ன சொல்கிறீர்கள்…” என்று அவன் பதட்டத்துடன் கேட்க, அவரோ ஆத்திரத்துடன் அவனைப் பார்த்து முறைத்து,
“தாங்ஸ் டு யு ஆகரன்… தாங்க் யு சோ மச்… இருபது வருடங்கள்… இருபது வருடங்கள் இப்படி ஒரு மகள் இருக்கிறாள் என்றே தெரியாமல் இருந்தேன். தெரிந்த பின், அவளை விட்டுப் பிரியக் கூடாது என்று நினைத்தேன்… ஆனால்.. நீயும் உன் அக்காவும் சேர்த்து என் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்களே…” என்று தன் இயலாமையில் வெடிக்க, அதகனாகரனனோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பற்களைக் கடித்துக்கொண்டு அமைதி காத்தான்.
அவனுடைய புத்திக்குள் ஜெயராமன் சொன்ன எதுவும் பதியவில்லை. மாறாக மீநன்யா இலங்கைக்குப் போயிவிடுவாளோ என்கிற அச்சம்தான் அவனை ஆட்டிப் படைத்து.
இல்லை… அவள் போக முடியாது. போகவும் கூடாது. அவளை எப்படித் தடுப்பது? குழப்பத்துடன் அப்படியே அமர்ந்திருந்தவன், ஜெயராமனிடம் கூடச் சொல்லாமல், இருக்கையை விட்டுச் சடார் என்று எழுந்தான்.
வெளியே வந்தவன், கைப்பேசியை எடுத்துக் கடகடவென்று ஒரு சில இலக்கங்களைத் தட்ட மறு பக்கம் மாதவியின் பதட்டமான குரல்தான் இவன் செவியில் வந்து விழுந்தது.
“அகாரன்… அத்தான் வந்தாரா… என்ன ஆயிற்று… எங்கே அந்தப் பெண்…” என்று கோபமும் அழுகையுமாகக் கேட்க.
“அக்கா… முதலில் அழுவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேள்…” என்றவன் கடகடவென்று நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க, மாதவியே பேசும் சக்தியை இழந்தவர் போல ஆடாது அசையாது அப்படியே நின்றிருந்தாள்.
இவன் ஹலோ ஹலோ என்று பல முறை அழைத்தபின்தான் அவருக்குச் சுயநினைவே வந்தது. கூடவே அவருடைய கரங்கள் பயங்கரமாக நடுங்கத் தொடங்க, எங்கே தன் கைப்பேசி தரையில் விழுந்துவிடுமோ என்று அஞ்சியவர் போல இறுகப் பற்றியவாறு,
“எ… என்னடா சொல்கிறாய்…” என்றார் குரல் கம்ம. தன் கணவனுக்கு ஒரு காதலி இருந்ததையும், அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதையும் மாதவியால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் கணவனா இப்படி… அவரா இப்படி… துடித்தவராக,
“கடவுளே… இப்படி ஒரு காதல் இருந்தது பற்றி எனக்குச் சொல்லவேயில்லையே… ஐயோ அவருடைய சொந்த மகளையா அவரோடு இணைத்துத் தவறாகப் புரிந்துகொண்டேன். கடவுளே இந்தப் பாவத்தை எங்கே கொண்டு சென்று கழுவுவேன்” என்று விம்ம,
“அக்கா… இப்போது அழுது கரைய நமக்கு நேரமில்லை… மீநன்னயாவை இலங்கை செல்லவிடாது தடுக்கவேண்டும்…” என்று கூறியவன், பெரும் தவிப்புடன்,
“உன் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறேன் என்று நினைத்துத்தான் அவளை மணந்தேன்… ஆனால்… அவளை மணந்ததே அவள் வேறு யாருக்கும் சொந்தமாகிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில்தான் என்பதை இப்போதுதான் முழுதாகப் புரிந்துகொண்டேன்… காலம் கடந்த பின் பகலவன் தரிசனம்…” என்ற விரக்தியோடு கூறியவன், பின் ஆழ மூச்செடுத்து,
“அக்கா… அவளை என்னால் இழக்க முடியாது… ஐ நீட் ஹர்…” என்று அவன் சொன்ன விதத்தில் மாதவிக்குப் புரிந்துபோனது தன் தம்பி அவளைக் காதலிக்கிறான் என்று.
எத்தனை முறை அவனைத் திருமணம் முடிக்கவேண்டியிருப்பார். ஒவ்வொரு முறை வேண்டும் போதும், மறுத்து ஒதுங்கியவன், முதன் முறையாகக் காதலில் விழுந்திருக்கிறான். அதுவும் அவள் கணவனின் மகள் மீது.
கடவுளே எத்தனை பெரிய சிக்கலிது. இந்தச் சிக்கலிலிருந்து எப்படி வெளியே வருவது… ? தவிப்பும் குழப்பமும் போட்டிப்போட என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கியவாறு,
“டேய் அவளை எப்படிச் சமாதானப்படுத்த போகிறாய்?” என்றாள் மாதவி தவிப்புடன். இவனோ ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு,
“தெரியவில்லை… அதைப் பிறகு யோசிக்கலாம்… இப்போது முக்கியமானது, இலங்கைக்குப் போகிறேன் என்று அடம்பிடிக்கும் மீநன்னயாவைத் தடுத்து நிறுத்துவது…” என்றவனிடம்,
“அதுதான் எப்படிடா.. அவள்தான் பிடிவாதமாக இருக்கிறாள் என்று சொல்கிறாயே…” என்று மாதவி கலக்கத்துடன் கேட்க,
“அக்கா அவளைத் தடுக்க ஒருத்தரால் முடியும்…” என்றான் இவன் நிதானமாக.
“யார் அது… சொல்.. காலில் விழுந்தாவது அழைத்து வருகிறேன்…” என்று பரபரத்த சகோதரியிடம்,
“அது நீதான் அக்கா…” என்றான் இவன் தொளிவாக. மாதவியோ அதிர்ந்தவராக,
“என்னடா சொல்கிறாய்… நான் எப்படி அவளைத் தடுப்பது…?” என்று புரியாமல் கேட்க,
“முடியும்கா… உன்னால் மட்டும்தான் முடியும். இத்தனை பிரச்சனையில் இருவர்தான் பாதிப்படைந்திருக்கிறார்கள். ஒன்று நீ, மற்றையது நன்னயா… தான் இங்கே இருந்தால், உன் மனமும் சங்கடப்படும் என்று அவள் நிச்சயமாக யோசிப்பாள்… ஒருவேளை அவள் இலங்கை போவதற்கு நீ கூடக் காரணமாக இருக்கலாம். நீ அவளை ஏற்றுக்கொண்டது தெரிந்தால் அவளுடைய மனம் மாற வாய்ப்பிருக்கிறது… ப்ளீஸ் அக்கா… எனக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு நீதான்… நீ போசிப்பார்க்கிறாயா?” என்று வலியுடன் கேட்டவன்,
“அவள் இல்லாமல் எனக்குக் கஷ்டம்கா…” என்ற தம்பியின் குரலில் முதல் முதலாகத் தெரிந்த கரகரப்பைக் கண்டு துடித்துத்தான் போனார் மாதவி. அடுத்தக் கணம்,
“கைப்பேசியை வை ஆகரன்… மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்று உறுதியுடன் கூற, பெரும் நிம்மதியுடன்… கைப்பேசியை அணைத்துவிட்டுத் திரும்பி அந்தக் கட்டடத்தைப் பார்த்தான்.
என்ன நடந்தாலும் அவளை இங்கிருந்து போக விடுவதில்லை என்கிற உறுதி அவன் மனதில் நிலையாய் பதிந்து போயிற்று.
(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…
(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…
(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…
(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…
View Comments
Nice
நன்றி நன்றி