தோளில் கிடந்தவளின் திமிறலைப் பொருட்படுத்தாமல் வேகமாக நடையைக் கட்டிய அதகனாகரன் பதினைந்து நிமிடங்களில் கோட்டையை நெருங்கிவிட்டிருந்தான்.
இப்போது தோளில் கிடந்தவளைத் தரையில் இறக்கிவிட்டு அவள் மீண்டும் திமிற முதல் கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல முயல, அவள் திமிறிய திமிறலில், காலிலிருந்த கல்லொன்று பதமாய் வழுக்கிவிட, சமநிலை தவறிப் பின்பக்கமாய்ச் சரிந்தவளை உணர்ந்து, அவளைத் தன்னை நோக்கி இழுக்க முதல், இவனும் சமப்படுத்த முதல் தடுமாறித் தன்னவளை நோக்கி விழ, அந்த நிலையிலும் எங்கே அவளுக்கு அடிபட்டுவிடுமோ என்று அஞ்சியவன் போல, அவளுடையைத் தலையைத் தன் கரம் கொண்டு தாங்கி அவளோடு தரை சாய்ந்தவாறு சுழர, இப்போது அவனுடைய தேகத்தை மஞ்சமாக்கி அவன் மீது கிடந்தாள் மீநன்னயா.
ஒரு விநாடிதான்… கண்ணிமைக்கும் பொழுதுதான்… என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து உணர்வதற்குள் இருவரும் நிலம்தொட்டுக் கிடந்தனர்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, வேகமான இதயத் துடிப்பு, இவளுடைய செவிப்பறையை வந்து துளைக்க, மெதுவாகத் தலையை நிமிர்த்தினாள் மீநன்னயா.
அங்கே ஒருவித ஆராய்ச்சியுடன் மீநன்னயாவைப் பார்த்துக்கொண்டிருந்தான் அதகனாகரன்.
விழுந்த வேகத்தில் இரண்டு கரங்களிலும் கொள்ளாத கொண்டை அவிழ்ந்து மதிமுகத்தை மறைத்திருக்க, அதைக் கண்டவனுக்குள் பெரும் பூகம்பத்தின் பேராட்சி.
ஐயோ என்னதான் முயன்றும் அந்தக் காமனைத் துரத்தமுடியவில்லையே அவனால்… தன்னை மறந்து முகம் மறைத்த கூந்தலை விலக்க முயல, அதுவரை ஒரு வித மாய உலகத்தில் நின்றிருந்த மீநன்னயா, வேகமாக அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டு ஆவேசத்துடன் எழுந்து கோட்டை நோக்கி நடக்கத் தொடங்க, இவனோ உயர்ந்த தன் கரத்தையே வெறித்துப் பார்த்தான்.
இலக்கு தொடும் தூரத்திலிருந்தாலும் தொட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நின்ற தன் நிலையை வெறுத்தவனாக, ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், முன்னே அவிழ்ந்த கூந்தலைக் கூட்டிக் கொண்டையாகக் கட்டியவாறு ஒரு வித ஆவேச வேகத்துடன் கோட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவளையே பின்பற்றத் தொடங்கினான்.
சற்றுத் தூரம் சென்றதும்தான் அதகனாகரன் அதை உணர்ந்தான். அந்தக் கோட்டை வாசலில் புதிதாய் வாகனம் ஒன்று சமத்தாய் நின்றிருந்ததை. அதைக் கண்டதும் புரிந்துகொண்டான், யார் வந்திருக்கிறார்கள் என்று.
நிமிர்ந்து கோட்டை வாயிலைப் பார்த்தான். அது சாத்தித்தான் இருந்தது. ஆனால் பூட்டப்படவில்லை. மீநன்னயாவைக் காணவில்லை என்று தெரிந்ததும், அப்போதிருந்த பதட்டத்தில் கோட்டைக் கதவைப் பூட்டாமல் புறப்பட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணிச் சபித்தவனாக வேகமாக மீநன்னயாவை நோக்கி நடந்தான். உள்ளமோ ஆத்திரத்தில் குமுறியது.
இந்த நாள் வரும் என்று தெரியும்தான். ஆனால் இத்தனை சீக்கிரத்தில் வரும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனாலும் அவனுக்கு அதைப்பற்றி வருத்தம் இல்லை. அவன்தான் அடையவேண்டிய இலக்கை அடைந்தாயிற்றே. இனி அவர் என்னதான் முயன்றாலும் மீநன்னயாவை அவனிடமிருந்து பிரிக்க முடியாது.
இதுவரை அவளுடைய வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இனி.. நிச்சயமாக அவன் கூட மட்டுமே. யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.
எதுவோ உந்தித் தள்ள, வேகமாக நடந்துகொண்டிருந்த மீநன்னயாவை இரண்டெட்டில் நெருங்கியவன், அவளுடைய கைத்தலத்தைப் பற்ற, இவளோ சீற்றத்துடன் திரும்பி அவனைப் பார்த்துவிட்டுத் தன் கரத்தை உதற முயன்றாள். ஆனால் என்றுமில்லாததாக அந்தப் பிடி மிக மிக அழுத்தமாக இருக்க, எங்கே அவன் தன் கரத்தை உடைத்துவிடுவானோ என்று அஞ்சியவள் போல அவனை அண்ணாந்து பார்த்தாள்.
அவனோ ஒரு கணம் தயங்கியவாறு அந்தக் கோட்டைக் கதவை வெறித்தவன், பின் அவளையும் இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.
அத்தனை ஆத்திரத்தையும் திரட்டிக் கதவைத் திறக்க, அது தானாகத் திறந்து கொண்டது. உள்ளே அந்த வெண்ணிற நீளிருக்கையில், காலுக்கு மேல் காலைப் போட்டவாறு இரு கரங்களையும் விரித்து நீளிருக்கையின் மேல் புறம் வைத்தவாறு கம்பீரமாக அமர்ந்தவாறு அவர்களை வரவேற்றார் ஜெயராம்.
அதகனாகரன் இழுத்துக்கொண்டு வந்ததால், அவனுக்குப் பின்னால் தங்கி நின்று வந்த மீநன்னயா, அங்கே அமர்ந்திருந்த ஜெயராமை கண்டதும், முதலில் அதிர்ந்து பின் திகைத்து அடுத்து மகிழ்ந்து பின் விம்மி, மறு கணம் தன் கரத்திலிருந்த அதகனாகரனின் கரத்தை உதறிவிட்டு,
“ராம்…” என்கிற கதறலுடன் அவரை நோக்கிப் பாய, அவள் பாய்ந்த வேகத்தில் முகம் கனிய எழுந்து நின்ற ஜெயராம் தன் இரு கரங்களையும் விரிக்கப் பலமாக அவரோடு மோதியவள் அவரை இறுக அணைத்து விம்ம, இவரும் அவளைத் தன்னோடு இறுக்கியவாறு,
“ஓ… பேபி…” என்றார். மீநன்னயாவோ அத்தனை வலியும் வேதனையும் கரைந்து போகும் வகையில் கதறியவளாக,
“ஓ… ராம்… ஓ ராம்… எங்கே போனீர்கள்… இனி உங்களைப் பார்க்கவே மாட்டேன் என்று நினைத்து எப்படித் தவித்தேன் தெரியுமா… இந்தக் கொஞ்ச நாட்களில் என்னவெல்லாம் நடந்து விட்டன… ஓ… ராம்…” என்று விம்ம, தன்னுள் புதைந்தவளை இறுக அணைத்துக் கொண்ட ஜெயராம், அவளுடைய உச்சந்தலையில் தன் உதடுகளைப் பதித்து,
“ஓ மை… ஏஞ்சல்… சாரிமா… சாரி… என்னால்தான் உனக்கு இத்தனை சிக்கல்…” என்றவர் அவளுடைய முதுகை வருடிக் கொடுத்துவிட்டு, மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அழுததால் வீங்கிப் போன விழிகளைத் துடைத்து விட்டவாறு,
“அதிகம் கஷ்டம் கொடுத்து விட்டானா…” என்றார் அதகனாகரனை எரிப்பது போலப் பார்த்து.
இவளோ மீண்டும் கண்கள் கலங்க, “என்னை உயிரோடு கொன்றாயிற்று ராம்…” என்றாள் குரல் நடுங்க. அதைக் கேட்டதும் ஆழமாய் ஒரு மூச்செடுத்து விட்ட ஜெயராம், பின் மெல்லியதாகப் புன்னகைத்து மீண்டும் அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“எல்லாம் சரியாகிவிடும் கண்ணம்மா…” என்றவர், அவளுடைய தோள்களைப் பற்றி,
“சரி… போ… போய் உன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வா… இப்போதே புறப்படுகிறோம்… இனி நமக்கு இங்கே வேலையில்லை… நாம் இன்னும் இரண்டு நாட்களில் கனடா போகிறோம்… அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டேன்… இனி நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை சரியா… போ.. போய் உன் பொருட்களை எல்லாம் எடுத்து வா…” என்று கூற, அதுவரை அவர்களின் காதல் நாடகத்தை, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு பார்த்துக்கொண்டிருந்த அதகனாகரன்.
ஜெயராம் சொன்னதும் மறுக்காமல் தன் பொருட்களை எடுப்பதற்காக விலகிய மீநன்னயாவைப் பார்த்ததும் பொறுமை இழந்தவனாக,
“இனஃப்…” என்று கத்தினான் அதகனாகரன்.
ஆனால் ஜெயராமோ இதற்குச் சற்றும் அசைந்து கொடுப்பது போலத் தெரியவில்லை. மெதுவாக மீநன்னயாவிடமிருந்து தன் கரங்களை விலக்கி,
“போ… போய் விரைவாக வா… நேரமில்லை…” என்றதும் தன் கண்களைத் துடைத்த மீநன்னயா, திரும்பி அதகனாகரனைப் பார்த்தான். அவனோ அவளை எரிப்பது போலப் பார்க்க முதன் முறையாக அவனைத் தளராது பார்த்தாள் மீநன்னயா.
முதலைக்குத் தண்ணீரில்தான் பலம். பாம்புக்குப் பரமசிவன் கழுத்துதான் பலம். அவளுக்கு ஜெயராமன் பலம். அந்தப் பலத்துடன், அதகனாகரனை ஏளனத்துடன் பார்த்துவிட்டுத் திரும்பி ஜெயராமைப் பார்க்க. ஜெயராமனும் அதகனாகரனை முறைத்தவாறே
“மீனா…” என்றார். அந்த அழைப்பில் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டவளாக, அதற்கு மேல் அங்கே நிற்காமல் கடகடவென்று மாடிப்படி ஏறத் தொடங்க, இவனோ,
“நன்னயா…” என்றான் சீற்றமாக. ஒரு படியில் கால்வைக்கப் போனவள், அவனுடைய அந்த நன்னயா என்கிற அழைப்பில் இதயம் சில்லிட்டாலும் நிற்காமல் தன் அறை நோக்கி நடக்கத் தொடங்க, முதன் முறையாக அதகனாகரனின் இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது.
அடுத்தக் கணம் ஜெயராமை முறைத்துவிட்டு படு வேகமாக மீநன்னயாவை நெருங்கியவன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனோடு மோதி நின்றவளைக் கீழ்க் கண்ணால் பார்த்துவிட்டு, ஜெயராமை ஏளனத்துடன் பார்த்த அதகனாகரன்,
“அவள் எங்கும் வரமாட்டாள்… அவள் என் கூடத்தான் இருப்பாள்…” என்றான் அழுத்தம் திருத்தமாக.
ஜெயராமோ நிதானமாக அவனுடைய கரத்தையும், அவன் பற்றியிருந்த மீநன்னயாவின் கரத்தையும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு,
“ரியலி…?” என்றார். பின் எதையோ நினைத்துத் தலையை அசைத்து,
“அவளை விடு ஆகரன்… அவள் உனக்குரியவள் இல்லை…” என்றார் அமைதியாகவே. அதைக் கேட்டுக் கிண்டலாகச் சிரித்து,
“ரியலி… அவள்… எனக்கு உரியவள் இல்லை என்றால், வேறு யாருக்கு உரியவள்… உங்களுக்கா…” என்று கேட்க, இப்போதும் தளராமல் அதகனாகரனை ஏறிட்ட ஜெயராமன்,
“நீ சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும் மீநன்னயா எனக்குரியவள்தான் ஆகரன்… அதனால் அவள் என்னோடு இருப்பதுதான் முறை… மரியாதையாக அவளை விடு… இல்லை என்றால்…” என்று அவர் சற்றுக் குரலை உயர்த்த, இவனோ ஆத்திரத்துடன் அவரை உறுத்து விழித்து,
“இல்லையென்றால்…? இல்லையென்றால் என்ன செய்வீர்கள்…? வழக்குப் போடுவீர்களோ…? போடுங்கள்…! தாராளமாகப் போடுங்கள்…! யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கிறேன்… கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்த உங்கள் வாதம் எடுபடுகிறதா…? இல்லை என் வாதம் எடுபடுகிறதா என்று பார்க்கலாம்…?” என்றவன், தன் முன்னால் பெரும் மதிப்பும் மரியாதையும் நிரம்பப் பெற்ற அக்கா கணவர் இன்று கீழ் நிலையில் சென்றுவிட்ட அவலத்தை நினைத்து வருந்தியவனாக.
“ஏன்… ஏன் இப்படிச் செய்தீர்கள்…? எத்தனை நம்பிக்கையும் மதிப்பும் உங்கள் மீது வைத்திருந்தேன்…! அத்தனையும் ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டீர்களே…? கொஞ்சமாவது பூவையும், புகழையும் நினைத்துப் பார்த்தீர்களா…?” என்று வலியுடன் கேட்டவனை அப்போதும் கலங்காமல் நேராகவே பார்த்தார் ஜெயராமன்.
“ஆகரன்… எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம், முதலில், அவள் கையை விடு…” என்று அழுத்தமாகக் கூற, இவனோ ஜெயராமை வெறித்தான். இப்போது அவள் கைத்தலத்தைப் பற்றியவனின் கரத்தின் அழுத்தம் மேலும் கூடிப்போக, விகாரமாக ஜெயராமைப் பார்த்துச் சிரித்தான் அதகனாகரன்.
தன் உதடுகளைப் பிதுக்கி,
“சாரி மிஸ்டர் ஜெயராமன்… அவள் இனி உங்களுக்குச் சொந்தமானவள் அல்ல… ஏன் என்றால்…” என்றவன், அவளை இழுத்து இடையோடு தன் கரத்தை எடுத்துச் சென்று தன்னோடு இறுக்கி, “இவள் என் மனைவி…” என்றான் வெற்றிப் புன்னகையுடன்..
அதைக் கேட்டதும் அதிர்ந்துதான் போனார் ஜெயராமன். விரைந்து இருவரையும் நெருங்கியவர், அதகனாகரனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு, கலக்கத்துடன் நின்றிருந்த மீநன்னயாவை வெறித்தார்.
“அவன் சொல்வது உண்மையா?” என்று கேட்க, அதற்கு என்ன பதிலைச் சொல்வாள். ஆதி முதல் அந்தம் வரை நடந்த கதையைச் சொல்லும் நிலையிலா அவள் இருந்தாள்?தன் முன்னால் நின்றவனின் கூரிய பார்வையைச் சந்திக்கும் சக்தியற்றவளாகத் தலை குனிந்து நிற்க, அதைக் கண்டவருக்கு அதகனாகரன் சொல்வது உண்மை என்பது புரிந்துபோயிற்று. ஒரு கணம் தடுமாறி நின்றவர், பின் வலியோடு மீநன்னயாவைப் பார்த்து,
“ஓ… மீனா…! ஏன்மா…? தப்பு செய்துவிட்டாயே….?” என்று வருந்தியவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் தயங்கியது, ஒரு சில விநாடிகள்தான்… பின் ஆழ மூச்செடுத்து நிமிர்ந்தவர்,
“சரி… நீ அவளை மணந்ததாகவே இருக்கட்டும், ஆனால் ஏமாற்றிச் செய்த திருமணம் செல்லாது… அப்படியே நீ அவளை மணந்திருந்தாலும், அவளுக்குரியவன் நீ இல்லை…” என்றவரைக் கிண்டல் மாறாமல் பார்த்தவன்,
“ரியலி… அவளுக்குப் பொருத்தமானவன் நானில்லை என்றால், வேறு யார்… நீங்களா…?” என்று கேட்டவனை நிமிர்ந்து அவன் விழிகளுக்குள் தன் விழிகளைச் செலுத்திக் கூர்மையாகப் பார்த்தார் ஜெயராமன்.
“நீயும் அக்காவும் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்று நிருபிக்கிறீர்கள்…” என்றார் பெரும் வெறுப்புடன்.
அதைக் கேட்ட அதகனாகரன்,
“பின்னே… நமக்குத் தெரியாமல் இளம் பெண்ணைப் பெண்டாள நினைக்கும் உங்களை…” அவன் முடிக்கவில்லை, ஓங்கி அவனை அறைய எழுந்த கரத்தை சிரமப்பட்டு அடக்க முயன்றவராகத் தன் ஒற்றைக் கரத்தைத் தூக்கி அவன் பேச்சை நிறுத்தினார் ஜெயராமன். பின் ஆழமாக அவனைப் பார்த்து,
“உன்னை என் மூத்த மகனாக நினைத்திருக்கிறேன்… அந்த மரியாதையைக் கெடுத்துவிடாதே ஆகரன்… உனக்கு எதிராக இந்தக் கரத்தை ஓங்க வைத்துவிடாதே…” என்றவர், அருவெறுப்பும் ஆத்திரமும் ஒன்று சேர அவனை விட்டுத் தள்ளி நின்று,
“சே… இத்தனை கேவலமான எண்ணங்கள் சிந்தனைகள் உனக்கும் உன் அக்காவுக்கும். ஒருத்தன் ஒரு பெண்ணுடன் சுற்றித் திரிந்தால், அது தவறாகத்தான் இருக்க வேண்டுமா…? அதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கும் என்று யோசிக் தோன்றாதா…?” என்று சீற்றத்துடன் கேட்க அதைக் கேட்டுச் சிரித்த அதகனாகரன்,
“அட… அப்படியா…? ஒரு ஆண் பெண்ணுடன் செல்வது தப்பில்லை, எப்படிப் போகிறான் என்பதில்தான் கேள்வியே இருக்கிறது… அணைப்பதும், முத்தமிடுவதும், உரசுவதும்… இது சாதாரணப் பெண்ணுடன் போவதற்கான அறிகுறியில்லையே…? ஒரு பெண்ணைத் தொட்டுப் பேசுவதாக இருந்தால், ஒன்றில் அது பெற்ற தாயாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கூடப் பிறந்த சகோதரியாக இருக்கவேண்டும், அதுவே அணைப்பதும் முத்தமிடுவதுமாக இருந்தால், அது கட்டிய மனைவியாக இருக்கவேண்டும், இல்லை என்றால், கட்டிக்கொள்ளப் போகும் காதலியாக இருக்கவேண்டும். இரண்டும் இல்லையென்றால்…” என்றவன் தன் கரங்களுக்குள் சிக்கிப் புழுவாகத் துடித்துக்கொண்டிருந்த மீநன்னயாவை வெறித்துவிட்டு,
“ஆசை நாயகியாக இருக்கவேண்டும்… உங்களுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன… அதையும் மீறி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தால், அவள் உங்களுக்கு யாராக இருக்க முடியும்…?” என்று கேட்க, நிமிர்ந்து அதகனாகரனைப் பார்த்தார் ஜெயராமன்.
“இவள் யாராக இருக்க முடியுமா…?” என்றவர் சற்று நிதானித்தார். மீண்டும் அதகனாகரனைப் பார்த்து,
“நான் பூங்கோதையோடு வெளியே போகும் போது நீ பார்த்திருக்கிறாய் தானே… எப்படிப் போவேன்…” என்று நிதானமாகக் கேட்டார் ஜெயராமன். இவனோ எரிச்சலோடு அவரைப் பார்த்து
“எதற்குப் பூவை இதற்குள் இழுக்கிறீர்கள்…?” என்றான்.
“ப்ச்.. சொல்… பூங்கோதையோடு போகும்போது இரண்டடி தள்ளி நிற்பேனா, இல்லை… தூக்கித் தோளில் போட்டுச் சுமந்து செல்வேனா…?” என்று கேட்டார். ஜெயராம் தன் மக்களுடன் சேர்ந்து இருக்கும் நேரத்தில் பூங்கோதையைத் தரையில் அவர் இறக்கியதே கிடையாது. எந்த நேரமும் தோளில் சுமந்துகொண்டுதான் இருப்பார். அத்தனை அன்பு தன் மகள் மீது. அதையே இவன் கூற,
“நன்றாகவே கிரகித்திருக்கிறாய்…” என்றவர், நிதானமாக, அதகனாகரனை நெருங்கி,, அவன் இரும்புப்பிடியிலிருந்த மீநன்னயாவின் கரத்தை விலக்கி அவளை இழுத்துத் தன்னோடு அணைத்து அவளுடைய உச்சியில் உதடுகளைப் பதித்து எடுக்க, இவனோ ஆத்திரத்துடன் ஜெயராமை முறைக்க, ஜெயராமோ, குனிந்து அச்சத்துடன் நின்றிருந்த மீநன்னயாவைப் பார்த்து,
“கவலைப்படாதே கண்ணம்மா… எல்லாம் சரியாகும்… நான் இருக்கிறேன் அல்லவா…” என்றவர், இப்போது தன் உயரத்திற்கும் ஏற்ப நிமிர்ந்து நின்ற ஜெயராம்,
“இவள் எனக்கு யார் என்றுதானே தெரியவேண்டும்… சொல்கிறேன்… இவள்… என் மகள்…! என் உதிரத்தைப் பகிர்ந்து பிறந்த என் சொந்த மகள்…” என்றார் அழுத்தம் திருத்தமாக.
(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…
(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…
(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…
(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…
View Comments
ஹாய் நயணிம்மா உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖💖
நன்றி தங்கமே. உங்களுக்கும் வாழ்த்துக்கள். உழைக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.
மகளா😱😱😱
ஆமாபா ஆமா