அப்பப்பா… இதழ் தீண்டல் அத்தனை இன்பமாகவா இருக்கும்… அவை சாவகாசமாகத் தன் இணையிடம் குசலமல்லவா விசாரிக்கின்றன. குசலம் விசாரித்ததோடு பிரிய முயன்றனவா என்றால் அதுவுமில்லையே. ஏதோ பசைகொண்டு ஒட்டியதுபோல அழுத்தமாக ஒட்டிக்கொண்டல்லவா நிற்கின்றன. மென் உதடு விலகத் துடித்தால் அதைக் கடுமையாக அழுத்திப் பிடித்தன கடிய உதடுகள். சரி கடிய உதடுகள் சற்று ஓய்வெடுக்கலாம் என்று விலக முயன்றால், மென் உதடுகளோ அதற்குத் தடைவிதித்துத் தாராளமாகத் தன்னை அள்ளிக் கொடுத்தன.
அம்மாடி… அது சொர்க்கமல்லவா. எத்தனை நேரம் ஒருவரை ஒருவர் தழுவி முத்தமிட்டவாறு நின்றனரோ, மெதுவா அதகனாகரன்தான் சுயத்திற்கு வந்தான். அப்போதுதான் அவள் இதழ்களில் குடித்தனம் நடத்திக்கொண்டிருப்பதே அவனுக்கு உறைத்தது.
நம்ப முடியாத அதிர்ச்சியில் மெதுவாகத் தன் உதடுகளை விடுவித்துவிட்டுத் தன் முன்னால் செயல் திறன் இழந்திருந்த மீநன்னயாவைப் பார்த்தான்.
அவளும் அந்த முத்தம் கொடுத்த அதிர்ச்சியில் பேச்சற்று அவனைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இது ஒன்றும் உனக்கு வெறுப்பாக இல்லைதானே…” என்று கேட்டான் அதகனாகரன். அதற்கு என்ன பதிலைச் சொல்வாள்… உலகையே மறக்கவைக்கும் சக்தி அந்த உதடுகளுக்கு இருக்கின்றன என்று இப்போதுதானே தெரிந்துகொண்டாள். கடவுளே… என்ன காரியம் செய்யத் துணிந்தாள்… நம்ப முடியாத அதிர்ச்சியில், அழுத்தமான அந்த முத்தத்தால் வறண்டுபோன தன் உதடுகளை விரல்கள் கொட்டு பொத்தியவாறு, அவனைப் பார்க்கும் திராணியற்று தலை குனிந்து நின்றவளுக்கு உள்ளே பெரும் பிரளயமே எழுந்தது.
ஏனோ கால்கள் நடுங்கிக் கொண்டு வந்தன. கூடவே பெரும் படபடப்பில் நெஞ்சம் ஏறி இறங்கியது. உடல் வெளிப்படையாகவே நடுங்கியது. உடலில் ஏதேதோ உணர்வுகள் பேரலையாகத் தோன்றி உச்சந்தலையில் வந்து அடித்தது. அடி வயிறு சுண்டி இழுத்தது. தன்னை மறந்து வயிற்றில் கரம் பதித்தவளுக்கு அப்போதுதான் இன்னொன்றும் உச்சந்தலையில் வந்து அறைந்தது.
இதை எப்படி மறந்தாள். அவன் மணமுடிக்கக் கேட்டதும் இத்தனை குதுகலம் அடைந்தாளே, ஆனால் அதற்குத் தகுதியானவள்தானா இவள். திருமணம் என்றால் எல்லாம்தானே… இதோ… இப்போது அவன் கொடுத்த முத்தமே சொல்கிறதே அவனுடைய எதிர்பார்ப்பை… ஆனால்… அந்த எதிர்பார்ப்பை இவளால் பூர்த்தி செய்ய முடியுமா…?” கலங்கிப்போனவளாய், துடித்தவளாய் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ பெரும் ஆவலோடு இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
இத்தனை கம்பீரமான ஆண்மகனுக்கு ஏற்றவள் இவள்தானா… நிச்சயமாக இல்லையே…. வலியுடன் மறுப்பாகத் தலை அசைத்தவளுக்கு நெஞ்சில் வேதனை முட்டிக்கொண்டு வந்தது.
இல்லை… அவனுக்குரியவள் இவளில்லை. எதற்கோ தப்பவேண்டி, அவனுடைய மகிழ்ச்சியைக் குழிதோண்டிப் புதைக்க அவளால் முடியாது. அவனுக்கு அழகாய் அம்சமாய் ஒருத்தி மனைவியாக வருவதுதான் முறை…. இவள் இல்லை… இவளைப் பற்றிய உண்மை தெரியும்போது, நிச்சயமாக அருவெறுத்துப் போவான். அவளை வெறுப்பான். அவளைத் தொடவே அஞ்சுவான்… இப்போது கொந்தளிக்கும் காதல், படுக்கையறையில் காணாமல் போகும்… அந்த நேரத்தில் அவன் முகத்தில் தோன்றும் அருவெறுப்பைக் காணும் சக்தி சத்தியமாக அவளுக்கு இருக்காது… அந்த நினைப்பே அவளுடைய விழிகளைப் பொங்கச் செய்ய,
“எ… என்னை… மன்னித்து விடுங்கள்… உங்களை மணக்க என்னால் முடியாது…” என்றவள் மறு கணம், எல்லையில்லா வேதனையுடன் அவனை விட்டு விலகிப் படிகளை நோக்கி ஓட, இவன்தான் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கவேண்டியதாயிற்று.
தன் அறைக்குள் புகுந்த மீநன்னயாவிற்கோ நெஞ்சம் வெடித்துவிடும் போலக் கேவல் பிறந்தது. தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிவிட்டு அதில் சாய்ந்தமர்ந்தவாறே தரையில் மடங்கி அமர்ந்தவளால் வாய்விட்டு அழ மட்டும்தான் முடிந்தது.
இப்படி நல்ல ஒரு வாழ்க்கை அவளுக்காகக் காத்திருக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள விடாமல் விதி எப்படிச் சதி செய்கிறது. கடவுளே அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. விம்மல் வெடிக்க, முகத்தைக் கரங்களால் மூடியவள், ஒரு மூச்சு அழுது கரைந்துவிட்டாள்.
அதே நேரம், திருமணத்தை மறுத்துவிட்டு ஓடியவளை நினைத்து அதகனாகரனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது, அவனை மறுக்கும் அளவுக்கு ஜெயராமின் நினைப்பு ஆழமாக அவளுக்குள் இறங்கியிருக்கிறதா என்ன… நினைக்கும்போதே உள்ளே தீப்பற்றிக்கொண்டது.
‘அவரை விட எந்த விதத்தில் அவன் குறைந்துவிட்டான்… அவரை விட இளமையானவன். துடிப்பானவன்… எல்லாவற்றிற்கும் மேலாக, அவரை விடப் படுக்கை சுகத்தை அள்ளி வழங்கக் கூடியவன். அவனை மறுப்பதா…” நினைக்க நினைக்கத் தாளவில்லை அவனுக்கு.
இனி எப்படி அவளை அவன் வழிக்குக் கொண்டுவருவது? இதை விட வேறு எந்த வழியில் அவளை எய்ப்பது என்று அவனுக்குச் சத்தியமாகப் புரியவில்லை. இங்கிலாந்து குடியுரிமை ஆணையாளர்களைக் காட்டிப் பயமுறுத்தியாயிற்று. திருமணம் முடிக்கிறாயா என்று ஆசைகாட்டியாயிற்று. காதல் என்று சொல்லியும் நம்பவைக்க முயன்றாயிற்று. இதற்கு மேல் அடுத்தது என்னதான் செய்வது… இன்னும் இரண்டு நாட்களுக்குள் அதற்கான முடிவைக் கண்டுடிபித்தாகவேண்டுமே. ஜெயராமன் இவளைத் தேடிவந்தால், அதன் பின் அவன் சகோதரியின் வாழ்க்கை மொத்தமாகத் தொலைந்து போகும். என்று நினைத்தவன், அதற்கு மேல் சிந்திக்கும் சக்தியில்லாமல் தலையை உலுப்பிவிட்டு,
‘இல்லை இதை இப்படியே விட முடியாது. எப்படியாவது அவளுடைய மனதைக் கலைத்தே ஆகவேண்டும்… வேறு வழியில்லை… முடிவு செய்தவனாக எழுந்தவன், அவள் அறைக்கு முன்பாக வந்து நின்று பலமாகக் கதவைத் தட்ட, அதே நேரம் கதவில் சாய்ந்தவாறு நின்றிருந்த மீநன்னயா பதறியவாறு விலகி அந்த அறைக் கதவையே வெறித்துப் பார்த்தாள்.
இதயம் பவலமாக அடித்துக் கொள்ள, அசையக் கூடச் சக்தியற்றவளாக அப்படியே நின்றிருக்க,
“ஓப்பன் த டாம் டோர் நன்னயா…” என்றான் இவன் கடும் சீற்றத்துடன். இவளோ கன்னத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்தவாறே இவனுக்குப் பதில் கூறாமல் அப்படியே நின்றிருக்க,
“மீநன்னயா… இப்போது கதவைத் திறக்கப் போகிறாயா இல்லை…” என்று பற்களைக் கடித்தவாறு கேட்க, அதற்கு மேல் அமைதிகாக்க முடியாதவளாக விழிகளை அழுந்த துடைத்துவிட்டுக் கதவைத் திறக்க, அழுததற்கு அடையாளமாகச் சிவந்து வீங்கிய முகத்தைக் கண்ட அதகனாகரன்,
“உன்னுடைய பிரச்சனைதான் என்ன? முதலில் திருமணத்திற்குச் சம்மதம் சொல்வதுபோலத்தானே நின்றாய். ஏன் முத்தமிடும் போதும் அதை ரசித்துக்கொண்டுதானே இருந்தாய்… பிறகு மாட்டேன் என்பதற்கான காரணம் என்ன?” என்று பொறுமையிழந்து கேட்டவன், பின் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவனாக,
“நன்னயா நீ இலங்கைக்குப் போகாமல் இருப்பதற்கான தீர்வையும் சொல்லியாயிற்று… அந்தத் தீர்வுக்கான பதில் நான்தான் என்பதையும் தெளிவாகக் கூறியாயிற்று. இதற்கு மேல் என் காதலையும் விளக்கியாயிற்று… இதற்கு மேல் உனக்கு என்னதான் வேண்டும்…” என்று பொறுமையிழந்து கேட்டவனைத் தவிப்போடு பார்த்தாள் மீநன்னயா.
எப்படிச் சொல்வாள்… சொல்வதற்கு ஒன்றா இரண்டா இருக்கின்றன. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நிற்க,
“யு மேக் மி கிரேசி நன்னயா… உன்னுடைய பிரச்சனைதான் இப்போது என்ன… உனக்கு என்னைத் திருமணம் முடிக்கப் பிடிக்கவில்லையா…” என்று கேட்டவனை அழுகையும் தவிப்பும் ஒன்றுசேரப் பார்த்தாள் மீநன்னயா. பின் கலக்கத்துடன் உதடுகள் துடிக்க,
“பிடித்திருக்கிறது ரஞ்சன்… மிக மிகப் பிடித்திருக்கிறது… உங்களை மட்டும்தான் மணமுடிக்கப் பிடித்திருக்கிறது… ஆனால்…” என்று தவித்துத் துடிக்க, இவனோ பெரும் நிம்மதியுடன்,
“பிறகு என்ன நன்னயா… இதோ பார்… என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்…” என்றவனை ஏக்கத்தோடு ஏறிட்டவள்,
“சில சிக்கல்களுக்குத் தீர்வே கிடையாது ரஞ்சன்… என் சிக்கலும் அப்படிப்பட்டதுதான்… என்னுடைய பிரச்சனையை உங்களால் மட்டுமில்லை… அந்தக் கடவுளால் கூடத் தீர்த்து வைக்க முடியாது…” என்று கலங்கியவளை அலட்சியமாகப் பார்த்தவன்,
“ஒரு வேளை கடவுளால் முடியாமல் போகலாம் நன்னயா… ஆனால் என்னால் முடியும்… நம்பு…” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்து, அப்படியே தன் உதடுகளில் அழுத்தமாகப் பொருத்தி எடுத்து,
“உனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதுதானே…” என்று கேட்க, அவனை விழிகள் கலங்கப் பார்த்தவள்,
“என் கடந்த காலம் அத்தனை சுவையானது இல்லை நிரஞ்சன்… அது கசப்புகளால் உருவானவை… அதை நீங்கள் தெரிந்துகொண்டால் மட்டும்தான் என் மறுப்புக்கான காரணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்… நான் வந்து….” என்று எதையோ கூற வர, உடனே தன் சுட்டுவிரலை அவளுடைய உதடுகளின் மீது பதித்து வெளிவர இருந்த பேச்சைத் தடுத்தான் அதகனாகரன்.
ஒன்று அவளுடைய வாயிலிருந்து அவளுக்கும் ஜெயராமுக்கும் உள்ள கள்ளத்தொடர்பை அறிந்துகொள்ளும் சக்தி அவனுக்குக் கிடையாது. இரண்டாவது, அவனுக்குத் தெரியாத எதையும் அவள் கூறிவிடப் போவதுமில்லை. வீண் நேர விரயம்… கூடவே அவள் சொல்லும் கதையில் எந்தளவு உண்மை பொய் இருக்கிறது என்பதை ஆராய அவனுக்குப் பொறுமையும் கிடையாது. எந்த நேரமும் ஜெயராம் இவர்களைத் தேடி வந்துவிடலாம். அதற்கிடையில் அவளைப் பதிவுத்திருமணம் செய்தாகவேண்டும்.
“நன்னயா… உன்னுடைய கடந்தகாலம் எத்தகையதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்… நடந்து முடிந்த விநாடிகளை மாற்றும் சக்தி நமக்குக் கிடையாது. அதனால் அதைப் பற்றி நீ சொல்வதிலோ, அதைக் கேட்பதிலோ எந்த விதமான பயனும் இல்லை… எதுவாக இருந்தாலும் இப்போது எனக்கு வேண்டியது, நீ இங்கே நிம்மதியாகத் தங்குவது மட்டும்தான். இனி நீ நகரத்திற்குள் போகும்போது, இந்த நாட்டுக் குடியுரிமை உள்ள ஒருவரை மணந்து அவர் மனைவியாகத்தான் போகிறாய். அந்த நபர் நான் மட்டும்தான்… இதைப் பற்றி மட்டும்தான் நீ இப்போதைக்கு யோசிக்கவேண்டுமே தவிர நடந்த முடிந்த கசடுகளை அல்ல…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, சற்று நேரம் அமைதி காத்தவள்,
“நான்… நான் ஜெயராமோடு பேசவேண்டும்…” என்றாள்.
உடனே இவன் தன் கைப்பேசியை அவளிடம் நீட்ட, அதை நடுங்கும் கரங்கள் கொண்டு வாங்கியவள் உடனே ஜெயராமை அழைத்துப் பார்த்தாள். இணைப்புக் கிடைக்கவில்லை. கலக்கத்துடன் தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டவள்,
“இணைப்பு போகவில்லையே…” என்றாள் பெரும் ஏமாற்றத்துடன். இவனும் கைப்பேசியை வாங்கிப் பார்த்து,
“இங்கே சிக்னல் இல்லை நன்னயா…” என்றான் பரிதாபமாக.
பின்னே, அவன்தான் திட்டமிட்டு இணைப்பைத் துண்டித்து வைத்திருக்கிறானே. இல்லையென்றால், அவனுடைய கைப்பேசியிலிருந்து அவன் இருக்கும் இடத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அது மட்டுமில்லை இவளும் ஜெயராமனோடு தொடர்பு கொள்ள முயல்வாள். இதையெல்லாம் யோசித்துத்தான் இந்தக் காட்டிற்கே அழைத்து வந்தான்.
தன் முன்னால் கலக்கத்துடன் நின்றிருந்தவளை ஏறிட்டுப் பார்த்தவன், மீண்டும் அவளை நெருங்கி, அவளுடைய கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்து,
“உன் பயம், யோசனை எனக்குப் புரிகிறது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள், உன் மீது அவருக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறது என்றால், நம்முடைய இந்த முடிவை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார். ஏன் எனில் உனக்கு நடப்பது நன்மையான விடயம் மட்டும்தான்… நம்பு…” என்றவன் இப்போது அவளை விட்டு விலகி,
“ஏதோ சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் விருப்பம். உன் முடிவை விரைவாகச் சொன்னாயானால் அதற்கேற்றது போலக் காரியங்களைச் செய்ய வசதியாக இருக்கும். ஒரு வேளை நீ என்னை மணக்க மறுத்தால்… நாளையே நகரத்திற்குப் போகிறோம். அதன் பிறகு உன் திசைக்கு நான் வரமாட்டேன்….” என்றுவிட்டு வெளியேற, மீநன்னயாவோ என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாத குழப்பத்துடன் மயங்கி நின்றாள்.
என்னதான் அதகனாகரன் அவளைத் தெளியவைத்துவிட்டுச் செல்ல முயன்றாலும், மீநன்னயாவின் தவிப்பு இம்மியும் குறைவதாயில்லை. அவனுக்கு எப்படிப் புரிய வைப்பாள்… இங்கே தங்கவேண்டி அவளுடைய சுயநலத்திற்காக அவனை மணக்கலாம்தான். அவன் அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவனை ஏற்றுக்கொள்ளலாம்தான்… ஆனால் கதை அத்தோடு முடியப்போவதில்லையே… அதற்கு மேலும் நிறைய இருக்கிறதே… கடலாய் பொழிந்த கண்ணீரை அடக்கும் வழி தெரியாமல் அப்படியே கிடந்தவளுக்கு என்ன முடிவு எடுப்பதென்று சுத்தமாகத் தெரியவில்லை.
எல்லாப் பக்கமும் தடைபோட்டது போல அங்கும் போக முடியாமல், இங்கும் திரும்ப முடியாமல் திணறிப்போனாள் மீநன்னயா.
இப்போது அவள் என்ன செய்யப்போகிறாள். அவனை மணந்தால், அஞ்சாமல் சுதந்திரமாக இந்த லண்டன் மாநகரத்தை உலாவரலாம். இல்லை என்றால் அஞ்சி நடுங்கி எங்காவது மறைந்து யாருடைய கண்களுக்கும் தெரியாது வாழவேண்டும்… தவிர இவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் முடிக்க மனம் ஒப்புக்கொள்ளுமா என்றால் அதுவும் கிடையாது. என்ன செய்வது? தவித்தவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. அது ரஞ்சன் இல்லை என்றால், அவளுக்கும் வாழ்க்கையில்லை என்று.
ஆனால் அவனை மணக்க முதல், அவளுடைய வாழ்க்கையில் நடந்த அவலத்தைக் கூறிவிடவேண்டும். அதற்குப் பிறகு அவன் இவளை மணப்பதா இல்லையா என்று முடிவுசெய்யட்டும். ஆழ மூச்செடுத்து நிமிர்ந்தவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
நேராக அவனுடைய அறைக் கதவுக்கு முன்னால் நின்று கதவைத் தட்ட,
“யெஸ்… திறந்துதான் இருக்கிறது…” என்கிற குரல் வந்ததும் உள்ளே சென்றாள். அவன் ஏதோ யோசனையில் மேசையில் கரங்களை ஊண்டியவாறு நின்றிருந்தவன், இவள் உள்ளே வந்ததும் தலையைத் திருப்பி ஏறிட்டான். பின் நிமிர்ந்து நின்று, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,
“சொல்லு… என்ன முடிவு எடுத்திருக்கிறாய்… எனக்கு மனைவியாகி இந்தச் சிக்கலிலிருந்து தப்பப் போகிறாயா, இல்லை நகரத்திற்குப் போய், நீயே உன் பிரச்சனையைப் பார்த்துக் கொள்கிறாயா… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றவனைப் பரிதவிப்போடு பார்த்தவள், பின் தலை குனிந்து குரல் கம்ம,
“என்னை மணப்பதால் உங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும் ரஞ்சன்.. மகிழ்ச்சி கிடைக்குமா தெரியவில்லை…” என்றாள் எல்லையில்லாத வலியுடன். அதற்கு இவனோ,
“நீ அருகிலிருந்தாலே போதும் நன்னயா… மகிழ்ச்சி தானாக வந்துவிடும்…” என்று கூற, அவனை வலியுடன் பார்த்தவள்,
“என் கடந்த கால வாழ்க்கையை நீங்கள் அறிந்து கொண்டால், உங்களால் ஜீரணிக்க முடியாது… அது பின்னாலில் உங்களுக்குப் பெரும் கசப்பையே கொடுக்கும்…” என்றவளை மேலும் நெருங்கியவன், அவளுடைய இடை பற்றித் தன்னை நோக்கி இழுக்க, தளராமல் அவனோடு மோதி நின்றவளைக் குனிந்து பார்த்தான் அதகனாகரன்.
“ஹே… நான் உன் மீது வைத்திருக்கும் காதல் நிஜமானது. நீ எந்த நிலையிலிருந்தாலும், எந்தச் சிக்கலைப் பட்டிருந்தாலும் என் காதலின் அளவு நிச்சயமாகக் குறையாது… இப்போது உன்னை மணக்கக் கேட்டதற்குக் காரணம், உன் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மட்டுமில்லை. உன்னோடு வாழவேண்டும் என்கிற வேட்கையும்தான் காரணம். நீ இப்போது மறுத்தாலும், என்றாவது ஒரு நாள் உன்னை என் பக்கம் சாய்க்கும் என்கிற நம்பிக்கையில்தான் உன்னை மணக்கக் கேட்டேன். எனக்கு வேண்டியது, உன் காதல்… உன் சம்மதம் மட்டும்தான். அதை இப்போது கொடுக்க முடியவில்லை என்றாலும், உன் கடந்த கால வாழ்க்கையின் தடம் மெல்ல மெல்ல மறைந்த பின்பு கொடு… பெற்றுக் கொள்கிறேன்… அதுவரைக்கும் என்னால் காத்திருக்க முடியும்…” என்று கல்லும் உருகும் வகையில் அவன் கூற, அதற்கு மேல் உருகாமல் கேட்டிருக்க அவள் ஜடமா என்ன? ஆனாலும் அவளுடைய நிலை அவளுக்கு மட்டும்தானே புரியும்… அதனால் விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்க,
“உ… உங்களை மணந்தாலும்… உங்கள் தேவையை என்னால் பூர்த்திசெய்ய முடியாது ரஞ்சன்…” என்றாள் பெரும் வலியுடன். இவனோ புருவங்களைச் சுருக்கி,
“புரியவில்லையே…” என்று கூற,
“என்னால்… என்னால் உங்களுடன் படுக்கையைப் பகிர முடியாது… இப்போது மட்டுமல்ல… எப்போதும்…” என்று கூற இவனோ அவளை வெறித்துப் பார்த்தான். அதற்கான காரணம் இவனுக்குப் புரியாதா என்ன? ஜெயராமை மனதில் வைத்துக்கொண்டு இவனோடு எப்படிக் குடும்பம் நடத்த முடியும். ஏளனமாக எண்ணியவன், அதை லாவகமாக மறைத்தவாறு,
“அதுதான் சொன்னேனே… எப்போது என்னை முழுதாக ஏற்றுக்கொள்கிறோயோ அப்போது நம் குடும்ப வாழ்க்கையை வாழலாம்…” என்று அலட்சியமாகச் சொன்னவனுக்கு உள்ளே சிரி்ப்பு பீறிட்டு எழுந்தது.
அவன் சும்மா தொட்டாலே குழைந்து மயங்கிக் கிறங்கிப் போகிறாள். அப்படியிருக்கையில், அவளை அவன் பக்கம் இழுப்பதா சிரமம். தன்மீதிருந்த அதீத நம்பிக்கையில் அவளை அழுத்தமாகப் பார்க்க, இவளோ இன்னும் தெளியாதவளாக,
“ஆனாலும் என்னைப் பற்றி நீங்கள்…” என்று முடிக்க முதல் அவளுடைய உதடுகளில் தன் சுட்டுவிரலை வைத்தவன்,
“ஜெஸ்ட் சே யெஸ் ஆர் நோ…” என்றான். அவனுடைய விரலைப் பற்றி மடக்கி,
“நீங்கள் நிச்சயமாக இதைத் தெரிந்து…” முடிக்க முதலே அவளுடைய உதடுகளில் வைத்து,
“சே… யெஸ் ஆர் நோ…”
“பின்னாலில் நீங்கள் வருத்தப்…”
“சே யெஸ் ஆர் நோ…” அதற்கு மேல் அவனோடு மல்லுக் கட்ட முடியாமல், ஒரு வித கேவலுடன் அவன் மார்பில் விழுந்த மீநன்னயா
அவனுடைய பிடிவாதத்தால் இவளுடைய மறுப்பு மறைந்து போனது. ஒரு பக்கம் குற்ற உணற்சி ஆட்டிப் படைத்தாலும், மறு பக்கம் மெல்லிய சுயநலமும் அவளிடம் பிறக்கத்தான் செய்தது.
அவள் பல முறை சொல்ல வர, அவன்தான் கேட்க மறுக்கிறான். அப்படியிருக்கையில் எதற்கு மறுக்க வேண்டும்…? அவளுக்கும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும். அந்த வாழ்க்கையைக் கொடுக்க இவன் தயாராக இருக்கிறான். அப்படியிருக்கையில் ஏன் தயங்க வேண்டும்? அவனை மணப்பதால் நன்மைகள்தான் அதிகம் உண்டே தவிர தீமையில்லையே… இத்தனை நாட்கள் பட்ட வலிக்கு இப்போது விடிவு கிடைக்கும் என்றால் அதை ஏன் மறுக்கவேண்டும்… அதுவம் அவள் வாழ்க்கையில் திருமணம் உண்டா இல்லையா என்று நினைத்திருக்க, அந்த வாழ்க்கை அவளைத் தேடி வரும்போது ஏன் மறுக்கவேண்டும்? அதுவும் தாம்பத்திய உறவு பற்றி கவலைகொள்ள வேண்டியதில்லையே. அவனும் சம்மதித்துவிட்டானே பிறகு என்ன? அவளுடைய தராசில் நியாயம் என்கிற தராசு மேலேறச் சுயநலம் என்பது கீழிறங்க, அண்ணாந்து அவனைப் பார்த்தவள்,
“ஓ… ரஞ்சன்… நன்றி… என் நன்றியை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்… என் கடந்த கால வாழ்வைப்பற்றி உங்களுக்கு எதுவுமே இல்லையென்றால், அந்தக் கடந்தகாலம் நிறையக் கசப்புகளைக் கொடுத்தாலும் அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால், நான் உங்களைத் திருமணம் முடிக்கிறேன்.. மன நிறைவோடு…” என்று அவள் சொல்ல, அந்த இடத்திலேயே வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதிக்கவேண்டும் போல இருந்தது அதகனாகரனுக்கு.
சும்மா வெற்றியா இது… பேர் வெற்றியல்லவா. இனி சகோதரியின் வாழ்க்கையிலிருந்த பீடையை முழுதாக அழித்து ஒழித்து விட்ட வெற்றியல்லவா இது. இவள் மட்டும் அவனுடைய கட்டுக்குள் வந்தால் போதும்… அதற்குப் பிறகு, அவள் சிறகை உடைப்பது ஒன்றும் அத்தனை கடினமல்லவே.
நிம்மதியுடன் தன் மார்பில் விழுந்தவளை இறுக அணைத்துக் கொண்டவனின் உதடுகளில் வக்கிரமமான புன்னகை ஒன்று தவழ்ந்தது.
அடுத்துக் காரியங்கள் கடகடவென்று அரங்கேறின. மறு நாளே அரண்மனையில் வைத்துப் பதிவுத் திருமணத்தைச் செய்ய நண்பர்களைக் கொண்டு ஏற்பாடு சேய்தான் அதகனாகரன்.
திடீர் திருமணம் என்பதால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன்னை அலங்கரித்துக்கொண்டாள் மீநன்னயா.
நீண்ட செந்நிற பாவாடையும், எப்போதும் பொல வெண்ணிறத்தில் நீண்ட கை கொண்ட மேலாடையும்தான் அவளுடைய திருமண ஆடை. அவளிடம் அணிவதற்குச் சேலை கூட இல்லை.
அதகனாகரனும் வெறும் டீஷேர்ட் பான்ட்தான். உலகத்திலேயே திருமணத்தை இந்தளவு சாதாரணமாக நடத்துபவர்கள் இவர்கள் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
நண்பர்களின் சாட்சிக் கையெழுத்தோடு அழைத்து வரப்பட்ட திருமணப் பதிவாளரின் முன்னிலையில் நன்னயாவும் அதகனாகரனும் சட்டப்படிக் கணவன் மனைவியானார்கள்.
நண்பர்கள் நீட்டிய மோதிரத்தை வாங்கி மீநன்னயாவின் தளிர் கரத்தில் போட்டான் அதகனாகரன். மீநன்னயாவும் அதகனாகரனின் பெரிய விரல்களில் அவர்கள் கொடுத்த மோதிரத்தை அணிவித்தாள். கூடவே எந்த மந்திர ஓதல்களும் இல்லாமல் நண்பன் நீட்டிய தாலியோடான கொடியை வாங்கி அப்படியே அவள் கழுத்தில் போட்டுவிட்டான். அத்தோடு எந்த எடுபாடுகளும் இன்றி, எந்த இழுபாடுகளும் இன்றி இருவரும் கணவன் மனைவியாகிவிட்டிருந்தனர்.
பணம்தான் பாதாளம் வரை பாயுமே. இருப்பதையும் இல்லாததாக்க முடியும், இல்லாததையும் இருப்பதுபோலக் காட்ட முடியும். அதற்கு வழிகளா இல்லை.
இறுதியாக வந்த நண்பர்களும் விடைபெற்றுச் செல்ல, இவர்கள் இருவரும் கணவன் மனைவியாகித் தனித்து விடப்பட்டிருந்தனர்.
மீநன்னயாவிற்கு இன்னும் நம்ப முடியவில்லை. நிஜமாகவே அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டதா என்ன? வாழ்க்கையில் இதற்கான வாய்ப்பு இல்லை என்று நினைத்தாளே… இன்னம் நம்ப முடியாமல் தன் விரல்களைத் தூக்கிப் பார்த்தாள். அழகாய் வட்ட மோதிரம் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்துக்கொண்டிருந்தது. கூடவே மார்பில் தொங்கிய தாலி… அதைத் தூக்கிப் பார்த்தாள். புதிது என்பதற்கு அடையாளமாக மினுமினுத்துக்கொண்டு இருந்தது அது. அதைக் கரங்களில் தூக்கி உற்றுப் பார்த்தவள், தன்னை மறந்து அதை உதடுகளில் பொருத்த, விழிகளில் கண்ணீர் தேங்கிக் கன்னங்களில் வடிந்து சென்றன.
தன்னை மறந்து அந்தத் தாலியையே பார்த்துக்கொண்டிருக்க அவளுடைய தோள்களில் ஒரு கரம் படிந்தது. எப்போதும் போலச் சிலிர்த்துப் போனது உடல். தன் நினைவு கலைந்தவளாகத் தன் தோள்களில் விழுந்த கரங்களின் மீது தன் கரங்களைப் பதித்த மீநன்னயா, நிமிர்ந்து அண்ணாந்து அவனைப் பார்த்து,
“நன்றி ரஞ்சன்…” என்றாள் நிஜமான மகிழ்வுடன். ஏனோ முதன் முறையாக அந்த ரஞ்சன் என்கிற அழைப்பு இவனுக்குள் ஒரு வித கசப்பை ஏற்படுத்த, அதை மறைத்தவனாகப் புன்னகைத்தவன், கரங்களை விலக்காமலே அவளுக்கு அருகாமையில் அமர்ந்தவாறு,
“இப்போது உன் பிரச்சனை தீர்ந்ததா… கையோடு திருமணப்பத்திரத்தையும் எடுத்தாயிற்று… இனி அதை இங்கிலாந்து குடியுரிமை ஆணையத்தில் சேர்ப்பித்து விட்டால், உன் பிரச்சனை தீர்ந்துவிடும்…” என்றவள் ஆர்வத்தோடு,
“அந்தப் பத்திரம் எங்கே… நான் பார்க்கலாமா?” என்றாள் பரபரப்பாய். உடனே சமாளித்தவனாக,
“மேலே எடுத்துச்சென்று வைத்துவிட்டேன் நன்னயா… அங்கே போனதும் கொடுக்கிறேன்…” என்று கூற, உடனே அவன் பக்கமாகத் திரும்பிய நன்னயா, அவனுடைய மார்பில் தன் தலை சாய்த்துப் பெரும் நிம்மதியுடன் அவனை அணைத்துக் கொள்ள, இவனுடைய உடலிலும் ஒரு வித சிலிர்ப்பு.
“மகிழ்ச்சியாக இருக்கிறது ரஞ்சன்… இனி எதையும் ஜெயித்துவிடலாம் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்துவிட்டது…” என்றவளை அவனும் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.
அணைத்துக்கொண்டவனின் கரங்கள் சும்மா அவளைத் தழுவியிருந்தால், அவளும் அப்படியே கிடந்திருப்பாள்… ஆனால் அணைத்தவனின் கரங்கள் சொன்ன கதையோ வேறாக இருந்தது.
முதலில் அவளுடைய முதுகில் பரவியிருந்த அவனுடைய கரங்கள், மெல்ல மெல்ல அவளை வருடுவன போல மேலும் கீழும் ஏறி இறங்கின. இறங்கிய கரங்கள் அந்தத் துடியிடையில் எதைக் கண்டனவோ, அவசரமாக அங்கே குடிபுகுந்து சடுகுடு விளையாடத் தொடங்க அதுவரை அவனுடைய அணைப்பில் தன்னை மறந்து கிடந்தவளுக்கு அவனுடைய கரங்கள் சொன்ன செய்தி புத்தியில் உறைக்கப் பதறியவாறு அவனை விட்டு விலக முயன்றாள்.
விலக முயன்றவளை அப்படியே விட்டுவிட்டால் அவனுடைய திட்டம் என்னாவது? அவனுடைய மார்பில் கரங்களைப் பதித்து அவனிடமிருந்து விலக முயன்றவளை மேலும் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் மீண்டும் அவனோடு மோதி நின்றவளைபு் பொருள் பதிந்த பார்வை ஒன்று பார்த்தான் அதகனாகரன்.
இவளோ அந்த விழிகளுக்கான பதிலைச் சொல்ல முடியாது, அச்சத்துடன் உமிழ் நீர் கூட்டி விழுங்க, அவனோ தன் பார்வையை விலக்காமலே அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.
(10) எத்தனை நேரம் உறங்கிக் கிடந்தாளோ. விழிகளை மெதுவாகத் திறந்தாள் திகழ்வஞ்சி. இதுவரை அழுத்தியிருந்த பாரமும் காய்ச்சலும் சற்றுக்…
(9) அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால்…
(23) தன் அறைக்குள் நுழைந்து, ஆயாசத்தோடு படுக்கையில் சரிந்தபோது, அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். ரஞ்சன்தான் எடுத்திருக்கிறான். பதட்டத்தோடு…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால்…
(21) மெதுவாகத் தூக்கம் கலைந்து எழுந்தாள் மீநன்னயா. ஏனோ அடித்துப்போட்டதுபோலச் சோர்வாக இருந்தது. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்குக் கண்முன்னே விரிந்த…
(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால்…