அன்று இரவு அம்பிகா உணவு தயாரித்துக் கொண்டிருக்க, தேவசகாயமும், ஆதியதுலனும், நேரிழையும் என்று மூவரும் முன்னறையில் அமர்ந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவளோ அவர்களோடு ஒன்ற முடியாமல் நேரிழையின் அறையில் எதையோ பறிகொடுத்தது போல மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்தாள்.
இதில் நேரிழை வேறு வழக்கத்திற்கு மாறாகக் கலகலத்துச் சிரித்துப் பேச, இவள்தான் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தாள். அன்று கூட இவளிடம் பேசும்போது, என் ஆள் எப்படி என்று வேறு கேட்டாளே. நிஜமாகவே நேரிழைக்கு ஆதிய துலன் மீது ஏதாவது ஈர்ப்பு இருக்குமோ? சீ… சீ… இருக்காது… இருந்திருந்தால் நிச்சயமாகச் சொல்லியிருப்பாள். அவர்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள்… அதற்காக இப்படி கெக்கே பிக்கே என்று சிரித்துப் பேசவேண்டுமா என்ன? கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருந்தால்தான் என்ன? மனது கிடந்து வதங்கியது. இத்தனைக்கும் அவளும் தன் ஆண் நண்பர்களோடு இதேபோல சிரித்துப் பேசும் இரகம்தான். ஆனால் அப்போதைக்கு அது நினைவுக்கு வரவில்லை.
‘சே… இது என்ன நரகவேதனை. அவன் வந்து ஐந்து மணிநேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவள் நிம்மதி அனைத்தையும் ஒட்ட மொத்தமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டான். இந்தப் பாழாய்ப் போன மனது வேறு அவனை விடுத்து வேறு எதையும் நினைக்க மறுக்கிறது. இதிலிருந்து எப்படித்தான் வெளியேறுவது?’ குழம்பிப்போனாள் நேயநறுமை.
எதையும் அலட்சியமாக விட்டெறிந்துவிட்டுப் போகும் அவளால், ஏனோ வந்தவன் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் உதறித் தள்ளிவிட முடிய வில்லை.
அதுவும் தான் அவன் மீது விழுந்ததும், தன் இடை பற்றி அவன் அணைத்த நின்றதும், அந்த நிலையிலும் அவள் இடையை அவன் விரல்கள் பட்டும் படாமல் வருடியதும் என்று, அத்தனையும் ஒட்டு மொத்தமாகத் திரைப்படமாக மனதில் ஓடி அவளுடைய இளமையை உசுப்பிவிட்டுக் கொண்டு இருந்தது. அந்த இளமையின் தாபம் அவளை வதைக்க, வியர்த்து விறுவிறுத்துப் போனாள் நேய நறுமை.
நீண்ட நேரம் தனிமையோடு நின்று போராடியவள், ஒரு கட்டத்திற்கு மேல் அந்தத் தனிமை கொடுத்த நரகவேதனையைத் தாள முடியாமல், உப்பரிகைக்குச் சென்று வெளிக்காற்றைச் சுவாசித்து மனத்தை அமைதிப்படுத்த நினைத்தவளாக எழுந்தவள் அப்போதுதான் கவனித்தாள், அதுவரை இருந்த பேச்சுச் சத்தத்தைக் காணோம்.
தந்தை இத்தனைக்கும் உறங்கப் போயிருப்பார். அவர் வேளைக்குத் தூங்கி வேளைக்கு எழுந்து கொள்ளும் மனிதர். அம்பிகா சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். நேருவும், அந்த வளர்ந்து கெட்டவனும் முன்னறையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள் போல. நினைத்தவளுக்கு இன்னும் தன்னை யாரும் சாப்பிட அழைக்க வில்லையே என்கிறது உறுத்தியது.
இது அவளுடைய வீடு. அவளைச் சாப்பிட வா என்று யார் அழைக்கவேண்டும்? இது இந்த மரமண்டைக்கு ஏறவில்லை. அவள்தான் இப்போது அந்நியப்பட்டு நிற்கிறாளே.
வெறுப்போடு நினைத்தவள், அறையை விட்டு வெளியே வந்து, உப்பரிகை நோக்கி நடக்கத் தொடங்க, அவள் நினைத்ததற்கு மாறாக, ஆதியதுலன் அவனுடைய அறைக்கு முன்பாக சுவரோரம் சாய்ந்து நின்றவாறு கைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் திக்கென்றது அவளுக்கு. மனது வேறு படபடத்தது. இவனைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தால், படுபாவி கண் முன்னால் நிற்கிறானே. இப்போது உப்பரிகைக்குச் செல்ல வேண்டும் என்றால், இவனைக் கடந்தல்லவா போக வேண்டும். ம்கூம்… வேண்டாம். பேசாமல் அறைக்கே போய்விடலாம். முடிவு செய்து திரும்பியவள் சட்டென்று நின்றாள்.
என்னது? அவனுக்குப் பயந்து அவள் திரும்புவதா? இது அவளுடைய அகராதியில் இல்லாத ஒன்றாயிற்றே. அவளுக்குப் பயந்து மற்றவர்கள் பின் வாங்கவேண்டுமே தவிர, அவளல்ல. எண்ணியவள் சட்டென்று அதே வேகத்தில் திரும்பித் தலையை அவனுக்கு எதிர்த்திசையில் திருப்பிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
அவனை நெருங்க நெருங்க நெஞ்சு வேறு பயங்கரமாகத் துடித்தது. கால்கள் வலுவிழந்தது போலத் தளர்ந்தது. ஆனாலும் பிடிவாதமாக, அவனைக் கடந்து போக எத்தனிக்கையில், என்ன நடந்ததோ, சட்டென்று அவளுடைய காலை எதுவோ தட்டி விட்டது.
என்ன ஏது என்று அவள் உணர்ந்து தன்னை சமாளிக்க எண்ணுவதற்குள், அவன் கரங்களில் இரண்டாம் முறையாக விழுந்திருந்தாள் நேய நறுமை. அதுவும் குப்புற. அவனுடைய வலது கரமோ அவளுடைய வயிற்றை அழுந்தப் பற்றி இருக்க, அவனுடைய முன்னுடல், அவளுடைய பின்னுடலோடு ஒட்டி நின்றது.
அதிர்ந்துபோனாள் நேயநறுமை. பதறிப்போய் அவனிடமிருந்து விலக முயல, மறு கணம் சுழன்று அவன் மார்பில் வந்து விழுந்தாள் அவள். அவனுடைய அந்த செயலில் உலகம் தன் அசைவை நிறுத்திய உணர்வில், விழிகளை விரித்து அவனைப் பார்க்க, அவனோ அவள் இடை பற்றி, இழுத்து அவள் உடலைத் தன் உடல் மீது போட்டு இறுக அணைத்தவாறு அவள் விழிகளையே குறுகுறு என்று பார்த்தான்.
அந்தப் பார்வையில் எதைக் கண்டாளோ, நேய நறுமைக்கு அத்தனையும் மறந்து போனது. அவன் மீதிருந்த கோபம், தாபம் அனைத்தும் காணாமல் போக, தன் முகத்திற்கு மிக நெருங்கியிருந்த அவனுடைய முகத்தைக் கண்டு, மொத்தமாய்த் தன்னைத் தொலைந்தவளாக அவனையே பார்த்து இருக்க, மெல்ல மெல்ல அந்த ஆண்மை நிறைந்த முகம் அவள் முகத்தை நோக்கி வருவது போலத் தோன்றியது அவளுக்கு.
நம்ப முடியாதவளாகத் தன்னிலை கெட்டு அப்படியே நின்றிருக்க, குனிந்தவனின் உதடுகள் அவளுடைய காதோரம் வந்து நின்றன. காரணம் தெரியவில்லை, அவனிடம் சீற்ற மூச்சு சூடாய் செவிப்பறையை வருடிச் செல்ல, அது கொடுத்த சுகத்தில் விழிகளை மூடியவள், உடல் தொட்ட அவன் தேகத்தை உணர்ந்து மதிமயங்கி நின்றாள் அப்பேதை.
கூடவே அவனுடைய நாசி, அலைந்த கூந்தலுக்குள் நுழைந்து அதன் வாசனையை ஆழ உள்ளெடுப்பது போல சுவாசித்துத் தன் கடிய உதடுகளால் அவள் காதோரம் மெதுவாக உரசி,
“எதேச்சையாக விழுந்தாயா? இல்லை என்னை மயக்குவதற்காக வேண்டும் என்றே விழுந்தாயா?” என்றான் கிசுகிசுப்பாக.
அதுவரை அவன் கையணைப்பிலும், அவன் நாசியும், உதடுகளும் சொன்ன அந்த அழகிய செய்தியில் தன்னை மறந்து நின்றிருந்தவளுக்கு அவனுடைய அந்தப் பேச்சில் அந்த அழகிய உணர்வு காணாமல் போகச் சட்டென்று அவனை உதறிவிட்டு விலக முயன்றாள். ஆனால் அவனுடைய கரம் அழுத்தமாக அவள் வெற்றிடையைப் பற்றியிருக்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேயநறுமை.
அவனோ, தன் கரத்தின் அழுத்தத்தை இடையில் கூட்டி,
“இந்த ஆடை கூட என்னை மயக்கத்தானே…?” என்றான் அவள் முகம் பார்த்து. அதைக் கேட்டவளுக்குச் சுரணை வர, அவனை எரிப்பது போலப் பார்த்தாள். மறு கணம் குழம்பினாள்.
அங்கே அவன் உதட்டில் பட்டும் படாமலும் ஒரு குறும்புப் புன்னகை இருந்ததோ? இல்லை அவளுக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? தடுமாறி நிற்கையில்,
“என்ன பேச்சைக் காணோம்? இந்த ஆடை என்னைக் கவரத்தானே அணிந்தாய்?” என்றான் அவளையே பார்த்தவாறு. அதைக் கேட்டதும் சுரு சுரு என்று கோபம் வர, அவனை வேகமாக உதறி விட்டு விலகி நின்று,
“என்ன உளறல் இது?” சீற்றமாக வந்தது அவளிடமிருந்து. அவனோ கிண்டலாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு விழிகளால் அவளை அணு அணுவாகத் தரிசித்தான். அவனுடைய பார்வை, எங்கெல்லாம் நிலைக்கக் கூடாதோ அங்கெல்லாம் நிலைத்து நிதானமாக இறங்க, வாழ்க்கையில் முதன் முறையாகக் கூச்சத்தை உணர்ந்தாள் நேய நறுமை. தன்னையும் மறந்து அவன் பார்வை தங்கும் இடங்களை மறைக்கும் வேகம் வந்தது. ஆனாலும் இறுக்கமாக நின்றிருக்க அவனோ நிதானமாக அவளுடைய உடலை தரிசித்து விட்டு,
“உளறவில்லை… அறியும் ஆர்வத்தில் கேட்டேன்…” என்றான் அவள் முகத்தில் விழிகளைப் படரவிட்டவாறு.
“உங்களை மயக்க அப்படி என்ன உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது? ஒன்றும் அந்தளவுக்குப் பெரிய அப்பாடக்கரில்லை… சொல்லப்போனால் இந்த உலகத்தில் நான் வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான்.. எனக்கு உங்கள் முகத்தைப் பார்க்கவே பிடிப்பதில்லை. அப்படியிருக்கையில், உங்களை ஏன் மயக்கவேண்டும்…” சீற்றமாகக் கேட்டவள், அங்கிருந்து விலக முயல, சட்டென்று அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான் ஆதியதுலன். இப்போது அவள் திடமாகவே நின்று இருந்ததால், அவன் இழுத்த இழுப்புக்கு அசையாமல் அப்படியே நின்றவாறு தலையைத் திருப்பி அவனைப் பாரத்து முறைத்தாள்.
அவனோ அவளைத் தலை சரித்துப் பார்த்து,
“அப்படியில்லை என்றால், இன்று கடையிலி ருந்து வந்ததும், நான் முகத்தைத் திருப்பியதைக் கண்டு ஏன் முகம் வாடினாய்?” என்றான் அடுத்து. அதைக் கேட்டவள் திகைத்துப் போனாள். அப்படி என்றால், அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தானா?
அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவள்,
“நான்… நான் எதற்கு வருந்த வேண்டும்? முதலில் நீங்கள் யார் எனக்கு? உங்களைக் கவரவேண்டிய அவசியம் எனக்கில்லை…” அவள் சொல்ல, அவனோ கிண்டல் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“அப்போ யாரை மயக்க இப்படி ஆடைகள் அணிகிறாய்?” என்றான் அதே பாவனையோடு. இப்போது நிதானமாக அவன் கரத்திலிருந்து தன் கரத்தை இழுத்த எடுத்தவள், அவனை நெருங்கி அழுத்தமாகப் பார்த்து,
“கனடாவில் 7.3 மில்லியன் இளைஞர்கள் இருக்கிறார்கள். அதில் என் வயதுக்குத் தக்கதாக இரண்டு மில்லியன் ஆண்களாவது இருக்க மாட்டார்களா? அவர்களைக் கவர்வதற்காக அணிகிறேன். போதுமா…?” கேட்டவள், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உப்பரிகையின் கதவைத் திறந்து வெளியேற, அதைக் கண்ட ஆதியதுலனின் உதடுகளில் இப்போது குறும்புப் புன்னகைத் தாராளமாக வெளிப்பட்டிருந்தது.
“கிரேசி கேர்ள்…” தனக்குள் முனங்கியவன், இப்போது தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்ற, இங்கே உப்பரிகையில் நின்றிருந்த நேயநறுமைக்கு சீற்ற மூச்சு உள்ளே வெளியே என்று போய் வந்து கொண்டிருந்தது,
எத்தனை தைரியம் அவனுக்கு? அவளைப் பார்த்தால் அவனுக்கு எப்படித் தெரிகிறது? உலகத்தில் அவன் மட்டும்தான் ஆம்பளையா? மனது சீற்றமாக எண்ணியது. கூடவே எப்படி விழுந்தோம் என்கிற குழப்பமும் வந்தது. சரியாகத் தானே நடந்து வந்தோம். கால் தடுக்க வாய்ப்பேயில்லை. அப்படி என்றால் எப்படிக் கால் தடுக்கி விழந்தேன்? குழம்பியவளுக்கு அவள் அவனை நெருங்கும் போது அவன் கால் அசைந்தது நினைவுக்கு வந்தது.
அப்படியென்றால், அவன்தான் அவளுடைய காலைத் தடுக்கச் செய்தானா? யோசித்தவளுக்கு அதுதான் நடந்திருக்க வேண்டும் என்று புரிந்தது.
‘பொறுக்கி… நிச்சயமாக அவளுடைய கால்களைத் தட்டி விழுத்தியிருக்கிறான். எத்தனை தைரியம் அவனுக்கு? இந்த நேயநறுமையைப் பற்றி அவனுக்குச் சரியாகத் தெரியாது போல…? அவனை…!’ ஆத்திரத்துடன் எண்ணியவாறு திரும்பும் போதே, அவளுடைய தோளில் ஒரு கரம் விழுந்தது.
திரும்பிப் பார்க்க அவளுடைய தங்கை நேரிழை தான் நின்றிருந்தாள். ஏனோ அவளும் அவனும் சிரித்துப் பேசியது மனதில் தோன்றி வதைக்க, சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவள் வானத்தை வெறித்தாள்.
“அக்கா சாப்பிட வரவில்லையா?” தங்கை கேட்க, ‘ப்ச்’ என்றவள் தங்கைக்குப் பதில் சொல்லாமல் வானத்தை வெறிக்க, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினாள் இளையவள்.
“இன்னுமா உம்முடைய கோபம் போகவில்லை?” நேரிழை கேட்க, திரும்பி தங்கையை முறைத்தவள்,
“இப்போதுதான் உனக்கு என் நினைவு வந்ததாக்கும்…” என்றாள் குற்றம் சாட்டும் வகையில்.
இத்தனை நேரம் சகோதரியைத் தேடாமல் இருந்ததைக் குறையாகச் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட நேரிழை,
“சாரிக்கா… நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, அவர்களைக் கவனிப்பதுதானே முறை… நீரும் வந்து பேசியிருக்கவேண்டும்…” தங்கை சொல்ல, சட்டென்று திரும்பித் தங்கையை முறைத்தாள் நேயநறுமை.
“என்னது…? நான் அந்தாளை விருந்தோம்ப வேண்டுமா? அதற்கு நீர் வேறு யாரையும்தான் பார்க்கவேண்டும். அவனும் அவன் மூஞ்சையும்… என் காலையே தட்டி விட்டு, என்னிடமே என்னை மயக்கப்பார்க்கிறாயா என்று கேட்கிறான். ஜ்ஜ்ஜ்ஜ். பற்களைக் கடித்துக் கெட்டவார்த்தையால் திட்ட, அதிர்ந்தாள் நேரிழை.
“அக்கா… என்ன சொல்கிறீர்… புரியவில்லை…” குழப்பத்துடன் கேட்கத் திரும்பி எரிச்சலுடன் தன் தங்கையைப் பார்த்தாள் நேயநறுமை.
“எனக்கு அவனைப் பிடிக்கவில்லை…” என்றாள் பட் என்று.
“யார்… ஆதியையா?”
“வேறு யாரை? பெயரைப் பார் பெயரை… ஆதியதுலன்… ஒப்பற்ற முதன்மயானவன்… கார்பேஜ்.. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டியது போல…” ஆத்திரத்தில் இவள் எரிந்து விழ, தலையைச் சொறிந்தாள் இளையவள்.
நேயநறுமைக்கு ஒருத்தனைப் பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லைதான். பிடிக்காத மருமகள் நின்றால் குற்றம் இருந்தால் குற்றம் என்பது போல, இவளுக்கும் இனி ஆதியதுலன் என்ன செய்தாலும் அது குற்றமாகத்தான் தெரியும். இனி அவளை மாற்றுவது அத்தனை சுலபமில்லை. அதிலேயே தொங்கிக்கொண்டிருப்பாள்.
“அக்கா… கறுப்புக் கண்ணாடி போட்டு உலகத்தைப் பார்த்தால் உலகம் கறுப்பாகத்தான் தெரியும். நீர் ஆதி மேலிருக்கும் வெறுப்பைக் கழற்றி விட்டு அவரைப் பாரும். அவருடைய நல்லது எல்லாம் உமக்குப் புரியும்…” என்று சொன்ன நேரிழைக்கு எப்படியாவது அவன் மீது இருக்கும் தப்பு அபிப்ராயத்தைப் போக்கி விடவேண்டும் என்கிற தவிப்பு.
பெரியவளோ தங்கையைப் பார்த்து முறைத்து,
“யார் நல்ல மனிதன்? அந்த ஆதியா…? அடப் போடி… நீ வேறு… என் வேதனை புரியாமல். கொஞ்சத்திற்கு முன்பு என்ன நடந்தது தெரியுமா?” ஆத்திரத்துடன் கேட்டவள், நடந்ததைச் சொல்ல வந்தாள். பின் என்ன நினைத்தாளோ, சொல்ல வந்ததை விழுங்கிவிட்டு,
“அவனும் அவனுடைய முழியும்… இன்று நான் கடையிலிருந்து வந்த போது, ஏதோ காணாததைக் கண்டது போல பே என்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தெரியுமா. அவனுக்குப் போய் என் அறையைக் கொடுத்ததை நினைத்தால் வெறுப்பு தான் வருகிறது. அவன் படுத்த கட்டில், மெத்தை தலையணை அனைத்தையும் குப்பையில் போட்டு விட்டு புதிதாக வாங்கிப் போடவேண்டும்…” இல்லாத காரணத்தைத் தங்கையிடம் சொல்லிச் சமாளிக்க, நேரிழையோ சகோதரியைத் தலை சரித்துப் பார்த்தாள்.
அவள் போட்டிருந்த ஆடையை எந்த ஆம்பிளை யாக இருந்தாலும் ‘பே’ என்றுதான் பார்ப்பான். ஆனால் ஆதியதுலன், சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டதை இவளே பார்த்தாள். அது நேயநறுமைக்கும் தெரியும். இவள் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவள்,
“அக்கா… நிஜமாகவே ஆதியதுலன் உம்மைத் தப்பாகப் பார்த்தாரா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லும். அவர் உம்மைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொண்டதை நானே பார்த்தேன்…” இளையவள் அழுத்தமாகச் சொல்ல, அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தாள் பெரியவள்.
உண்மைதான், அவனுடைய அந்த முகத் திருப்பலே இவளுக்குப் பேரிடியாக விழுந்ததே.
“அது… அது வந்து… ஒரு விநாடி என்றாலும் பார்த்தார் நேரு மாமா… நான் என் இரண்டு கண்ணாலும் பார்த்தேன்…” பெரியவள் அதிலேயே நிற்க, சிரித்தாள் இளையவள்.
“அக்கா… அவர் பார்த்ததால்தான் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அதை நான் மறுக்க வில்லையே… பார்க்காமலிருந்திருந்தால் எப்படி முகத்தைத் திருப்பியிருப்பார்…?” இவள் கேட்க, தன் முட்டாள் தனமான பதிலில் அவளுக்கே எரிச்சல் வந்திருந்தது நேரயநறுமைக்கு.
அசடு வழிந்தவள்,
“அது மட்டுமா… இவனால் தானே அம்மா என்னைத் திட்டினார்கள்…” என்றாள் அடங்கி விட்ட குரலில். அதைக் கேட்டு ஒரு பெருமூச்சு விட்ட சகோதரி,
“நீர் கவர்ச்சியாக ஆடை அணிந்து அம்மாவிடம் பேச்சு வாங்கியதற்கும், ஆதியதுலனுக்கும் என்ன சம்பந்தம்? அவரா உம்மை இப்படி ஆடைகள் போடச் சொன்னார்? கமான் அக்கா… கொஞ்சம் முதிர்ச்சியோடு யோசித்துப் பேசுமேன்…” இளையவள் அறிவுரை சொல்ல, தங்கையை முறைத்தாள் பெரியவள்.
“ஏன் எனக்கு முதிர்ச்சியில்லையா…? இன்று உன்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தேன் இல்லையா… தடுக்கி அந்த ஆதியதுலன் மீது விழுந்துவிட்டேன். என்ன சொன்னான் தெரியுமா? ஆளும் பாதி ஆடையும் பாதி என்றார். அதற்கு என்ன அர்த்தம்? அப்போ எனக்கு அறிவில்லை என்று அர்த்தமா? ஆடையும் பாதி என்றதற்கு என்ன அர்த்தம்? என் ஆடையை விமர்சிக்க அவர் யார்? நான் எப்படி வேண்டுமானாலும் அணிவேன். அதைக் கேட்க அவன் யார்?” இவள் கோபமாகக் கேட்க, கொஞ்சமாய் பொறுமையிழந்தாள் நேரிழை.
இதோ இப்படித்தான் நேயநறுமை. சட்டென்று தன் நிலையை விட்டு இறங்கவும் மாட்டாள், யோசிக்கவும் மாட்டாள். என்னதான் விம் போட்டு விளக்கினாலும், புரிந்து கொள்ள மாட்டாள்.
“சரி… சரி… ஆடை அணிவது உம்முடைய சுதந்திரம். அதே போல, அந்த ஆடையை விமர்சிப்பதும் பார்ப்பவர் சுதந்திரம்தானே. அதையேன் பெரிதாக எடுத்துக்கொள்கிறீர். விட்டுத் தள்ளுமேன்…” சகோதரிக்குப் புரிய வைக்க முயன்றாள் நேரிழை. ஆனாலும் இவள் மலையிறங்குவதாக இல்லை. அதுதான் கஷ்டமாயிற்றே.
“ஆனாலும் அந்த ஆள் இருக்கிற இடத்தில் நான் இருப்பதை நினைத்தாலே உடல் எல்லாம் எரிகிறது. அருவெறுக்கிறது. மூச்சு முட்டுகிறது. வெறுப்புதான் வருகிறது. ஐ ஹேட் ஹிம் பாட்டம் ஆஃப் மை ஹார்ட்…” புத்திக்கும் மனதிற்கும் உடலுக்கும் எட்டாத வார்த்தைகளை அவள் எரிச்சலுடன் வெளிப்படுத்த, அதைக் கேட்ட நேரிழை,
“கமான் கா… எதற்காக இத்தனை வெறுப்பும் கோபமும் அவர் மீது? நீர் அவர் பாதையில் போகாத வரை, எந்தப் பிரச்சனையுமில்லையே…? நம்மை நம்பி வந்திருக்கிறார்… புரிந்துகொள்ளும்…” சொன்னவள்,
“அக்கா… இதெல்லாம் சின்ன விஷயம். இதற்காக வயிற்றைப் பட்டினி போடுவீரா? வாரும் சாப்பிட… அவர் போனதும் உம்முடைய சுதந்திரம் உமக்கே திரும்பிக் கிடைத்துவிடப் போகிறது. இதையெல்லாம் பெரிசாக எடுக்கலாமா…? வாரும்..” என்று ஒரு மாதிரியாகச் சகோதரியைத் தேற்றிச் சாப்பிட அழைத்து வந்த நேரம், ஆதியதுலனின் அறைக் கதவும் திறந்தது.
17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…
16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…
15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…
16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…