படுக்கையில் அமர்ந்த நேயநறுமைக்கு இருப்புக் கொள்ளவேயில்லை. திரும்ப திரும்ப ஆதியதுலனும், நேரிழையும் உரிமையாய் பேசியதுதான் மனதில் நின்று வதைத்தது.
‘எதற்காக நான் இப்படித் தடுமாறி நிற்கிறேன்? எனக்குத்தான் அவனைப் பிடிக்காதே…! அவனோடு, நேரிழை நெருங்கிப் பேசினால் எனக்கென்ன வந்தது? நேயா இது தவறு. நேரிழை பேசினால் உனக்கென்ன வந்தது? இதில் மூக்கை நுழைக்காமல் தள்ளியே நின்றுகொள்…’ புத்தி அறிவுரை சொன்னாலும், இதயத்தின் ஒரு ஓரமாக அமுங்கிக் கிடந்த பத்து வயது நேயநறுமை மெதுவாகத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள்.
“நிஜமாகவே உனக்கு அவனைப் பிடிக்காதா?” என்று அந்த இளையவள் கிசுகிசுப்பாகக் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அந்தப் பேதை.
பத்து வயதில் தாய் சொல்லும் கதைகளைப் பிரமிப்புடன் கேட்பதும், அவனை வெறுக்க ஆரம்பித்த பின்னும் கூட, அன்னை ஆதியதுலனோடு பேசும்போது, காதுகளைக் கூர்மையாக்கி அவர்களின் பேச்சைச் செவிமடுப்பதும் என்று அனைத்தும் மின்னலாய் மனதில் தோன்றி மறைய, விதிர் விதிர்த்துப் போனாள் நேயநறுமை. அந்தப் பத்து வயதில் அவன் பெயரைக் கேட்டதும் சில்லென்று இதயத்தில் பூக்கும் ஒருவகை உணர்வு இப்போதும் நினைவுக்கு வர, அதிர்ந்து போனாள் நேயநறுமை. சட்டென்று தன் தலையை உலுப்பி சுயத்திற்கு வந்தவளாக,
‘அது… அது வந்து, அந்த பத்து வயது முட்டாள் தனத்தில் தாய் சொன்ன கதைகளை வியந்து கேட்டதால் ஏற்பட்ட பிரமிப்பு. அதற்குப் பிறகுதான் அவனைப் பிடிக்காமல் போயிற்றே… எப்பவுமே எனக்கு அவன் எதிரிதான்.
ஆமாம் எதிரியேதான். என் அம்மாவின் அன்பையும் பாசத்தையும் முழுதாகப் பெற்றவன் அவன்தான். அவனை எனக்குப் பிடிக்காது பிடிக்காது பிடிக்காது. திரும்பத் திரும்பச் சொல்ல, மனது கொஞ்சம் சமப்பட்டது. தற்காலிகமாக விடை பெற்றுச் சென்ற அவன்மீதான கோபம் மீண்டும் தலை தூக்க, தலையைச் சிலுப்பிக் கொண்டவள், எழுந்து வெளியே வந்தாள்.
வீடு மிக அமைதியாக இருந்தது. நடந்து வந்தவளின் பார்வை அவளுடைய அறையின் மீது நிலைத்தது. களைத்து விழுந்து வந்தவன் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான் போல. அதனால் தான் யாருமே சத்தம் போடாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
‘ம்… அப்படியிருக்கக்கூடாதே.’ உதட்டில் வில்லப் புன்னகை ஒன்று அமர்ந்து கொள்ள, தொண்டையைச் செருமியவள், தன் வெண்கலக் குரலை உயர்த்தி,
“அம்மா… தேத்தண்ணீர்…” என்றாள் சத்தமாக. அவளுடைய அந்த சத்தத்தில் அந்த வீடே ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.
சமையலறையில் எதையோ செய்துகொண்டு இருந்த அம்பிகா, கையிலிருந்த கரண்டியை அந்த சத்தத்தில் ஒரு முறை தவறவிட்டுப் பின் பதறி எடுத்துக்கொண்டு பதட்டத்தோடு வெளியே வந்து, வந்துகொண்டிருந்த மகளை முறைத்தார்.
“ஷ்… ஏன்டி இப்படிச் சத்தம் போடுகிறாய். தம்பி களைத்துப் போய் வந்திருக்கிறார். கொஞ்சம் தூங்கட்டுமே…?” தாய் சத்தமில்லாது கிசுகிசுப்பாய் கடிய,
“என்னம்மா சொன்னீர்கள்? நீங்கள் சொன்னது கேட்கவில்லை…” மீண்டும் கணீர் குரலில் சத்தத்தைச் சிதறடிக்க, அம்பிகாவுக்கோ ஓங்கி அவளுடைய மண்டையில் ஒன்று போட வேண்டும் போலத் தோன்றியது ஆனாலும் தன்னைச் சமப்படுத்தியவராக,
“ஏய்… சனியனே… எதற்குச் சத்தம் போடுகிறாய்… கொஞ்சம் உன்னுடைய வெண்கலக் குரலை அடக்கி மெல்லமாகத்தான் பேசித் தொலையேன்…” திரும்பவும் கிசுகிசுப்பாக வந்தது அவர் குரல்.
“என்னது வெண்கலக் குரலா? இதே குரலைத் தான் எத்தனை இனிமையான குரல் என்று அடிக்கடி சிலாகிப்பீர்கள்… இப்போது திட்டுகிறீர்கள்? இது என்ன நியாயம்?” போருக்கு வந்தாள் அவள்.
அவள் வேண்டும் என்று செய்கிறாள் என்று பெற்றவளுக்குத் தெரியாதா என்ன? கோபமும், ஆத்திரமுமாக மகளை நெருங்கி, அவளுடைய உச்சந்தலையில் ஒரு கொட்டு வைத்து,
“உன் குரல் நன்றாக இருக்கிறது என்று நான் எப்போது சொன்னேன். உன் அப்பாதான் சொல்வார்…” என்றார் அடக்கிய சீற்றத்தோடு.
அதே நேரம் மகளின் தலையில் கொட்டு விழுவதைக் கண்ட தேவசகாயம் பதறியவாறு.
“ஏய்… பட்டு… எதற்கு அவள் தலையில் கொட்டினீர்கள்?” என்றார் தன் தலையை வருடியவாறு.
இது போதாதா அந்தக் குமரிக்கு? உடனே உதடுகளைப் பிதுக்கி, கண்களில் கண்ணீரைத் தேக்கி ஓடிப்போய்த் தந்தையின் தோளில் சாய்ந்து விசும்பியவள்,
“பாருங்கள் அப்பா அம்மாவை… இது இரண்டாவது முறை என் தலையில் கொட்டுவது.” குற்றப்பத்திரிகையை வாசிக்க, அதுவும் சத்தமாக வாசிக்க, அம்பிகா தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.
“ஐயோ… சத்தமாகப் பேசாதேடி…” என்று அவளை அடக்க முயன்ற நேரம்,
“ஏன்…? ஏன் நான் சத்தமாகப் பேசக் கூடாது…? இது என் வீடு…! என் உரிமை…! நான் எதுவும்…” என்று வேண்டுமென்றே இன்னும் பெரிதாகச் சத்தமிட்டுச் சொல்லிக்கொண்டு வர, தந்தையே பொறுமை இழந்தவராக அவளுடைய வாயைப் பொத்திக் கொண்டார்.
இவள் கோபமாகத் தந்தையை முறைக்க, பற்களைக் காட்டி சிரித்தவர்,
“என்னுடைய அம்முக்குட்டி நல்ல குட்டி இல்லையா…! நான் என்ன சொன்னாலும் செய்வீர்கள் தானே… என் பட்டுமா… பிளீஸ்டா… கொஞ்சம் மெல்லமா பேசுங்கள்…. பிளீஸ்… இந்த அப்பாவுக்காக…” குழைந்து, இரங்கி, கெஞ்சிக் கேட்க, உடனே தன் வாயை மூடிக்கொண்டாள் நேயநறுமை.
இவளிடம் காரியம் சாதிக்கவேண்டும் என்றால், இதோ இப்படிக் கெஞ்சினால்தான் உண்டு. அதை விட்டு ஏட்டிக்குப் போட்டியாகக் குரலை உயர்த்தினால் போச்சு. இந்த அடிப்படை அறிவு கூட உனக்கு இல்லை என்பது போல மனைவியை ஏறிட, அம்பிகாவோ கணவனையும் மகளையும் பார்த்து முறைக்க, இவளும் போட்டியாகத் தன் தாயைப் பார்த்து முறைத்தாள்.
“இப்படி மரியாதையாகச் சொன்னால் கேட்கப் போகிறோம்… அதை விட்டுவிட்டு எகிறினால்…?” வேண்டும் என்றே அன்னையை வம்புக்கு இழுக்க,
“என்னது? மரியாதையா…? இருடி… அகப்பைக் காம்பு எடுத்து வந்து பிட்டத்தில் நான்கு போடு போடுகிறேன்… உனக்கு வர வர வாய் நீண்டு கொண்டு போகிறது…” என்று முடிந்தவரையில் கோபத்தையும், குரலையும் தணித்துக் கூற, அதற்கு மேல் விட்டால் ரஷ்ய, அமரிக்கா யுத்தம் ஆரம்பித்து விடும் என்பதைப் புரிந்துகொண்ட தேவசகாயம்,
“கண்ணம்மா… அப்பாவுக்கு ஷேவிங் கிரீம் முடிந்து விட்டது.. போய் வாங்கி வருகிறீர்களா..?” என்றார் கனிவாக.
உடனே திரும்பி தந்தையைக் கோபமாகப் பார்த்தவள்,
“இதை எல்லாம் முன்னாடியே பார்த்து வாங்கி வைக்க மாட்டீர்களா…? சரி சரி… நான் போய் வாங்கி வருகிறேன். ஷேவிங் இரேசர் இருக்கிறதுதானேபா… அதுவும் வாங்கி வரவா? ஷாம்பு… இருக்கிறதா…? இல்லை எதற்கும் அதில் ஒன்று வாங்கி வருகிறேன், அம்மா… உங்களுக்கு என்ன வாங்கி வரட்டும்? சவர்க்காரம் இருக்கிறதா…? பித்தவெடிப்புக்குப் போடக் களிம்பு வாங்கி வருகிறேன்…” உடனே தன் கோபத்தை மறைந்து பெற்றவர்களுக்குப் பொருட்கள் வாங்கி வரத் துருதுருப்புடன் கிளம்ப, அவளை எந்த இடத்தில் சேர்ப்பது என்று தெரியாமல் தாய் குழம்ப, தேவசகாயமோ தலையைச் சொறிந்தார்¢. அது மட்டும்தான் அவரால் செய்யமுடியும்.
“என்னிடம் எல்லாம் இருக்கிறது… நீ போய் ஷேவிங் கிரீம் மட்டும் வாங்கி வா… அப்பாவுடைய ஆஃப்ட்டர் ஷேவ் முடிந்துவிட்டது. அதையும் வாங்கி வருகிறாயா…?” தாய் சொல்ல,
“ம்… எனக்குத் தெரியும்மா… இன்று காலையே கவனித்தேன்… நான் போய் வாங்கி வருகிறேன்… நேரு… நேரு மாமா…” சத்தமாகத் தங்கையை அழைக்க, தாயோ தலையில் அடித்துக் கொண்டார்.
தேவசகாயம் அவளை வெளியே அனுப்புவதற்குக் காரணமே, வீடு கொஞ்சம் அமைதியாக இருக்கட்டும் என்பதால்தான். இப்போது என்னவென்றால், அவளே சத்தமிட்டு ஆதியதுலனை எழுப்பி விடுவாள் போலவே.
“ஏய் மெல்லமாகப் பேசித் தொலை. நேரு அவளுடைய அறையில்தான் இருப்பாள். அங்கே போய்க் கதை…” என்று கிசுகிசுப்புடன் கூற, தாயைப் பொறுமையிழந்து பார்த்தாள் நேயநறுமை.
திரும்ப அடுத்த கட்ட போருக்கு அவள் தயாராக விட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட அம்பிகா கரங்களை அடித்துக் கை கூப்பி,
“அம்மாடி… என்னை விட்டுவிடு… இப்போது உன் கூட யுத்தம் புரிய எனக்கு நேரமும் இல்லை சக்தியும் இல்லை. முதலில் கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வரும் வேலையைப் பார்… உன்னால் முடியவில்லை என்றால் சொல், நான் போய் வாங்கி வருகிறேன்…” அன்னை கறாராகச் சொல்ல, போனால் போகிறது என்று சற்றுத் தணிந்தாள் நேயநறுமை.
அடுத்து தங்கையைத் தேடிச் செல்ல, அவள் பல்கலைக் கழக வேலையாக எதையோ வெண் தாள் ஒன்றில் கிறுக்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய கவனத்தை கலைக்க விரும்பாமல், தயாராகி, குளிருக்குத் தோதாகக் கம்பளியாடையை அணிந்து கொண்டு சமையலறை நோக்கி வந்தவள், அங்கே வேலையாக இருந்த தாயிடமும் தந்தையிடமும் போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டு வாசல் வரை வந்தவளுக்குச் சட்டென்று அந்தக் குறும்புத்தனம் பிறக்க, சப்பாத்தைப் போட்டவள்,
“அம்ம்மாஆஆஆஆ அப்பாஆஆஆஆ…. நேருஊஊஊஊ…. போய்விட்டு வருகிறேன்… கதவைச் சாற்றுங்கள்…” என்கிற பெரிய சத்தத்தில் கத்தியவள், அதற்கேற்ப கதவை அடித்துச் சாற்றிவிட்டுத் திரும்பிய போது அவளுடைய முகத்தில் சிரிப்புக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
நிச்சயமாக இந்தச் சத்தத்தில் அந்த ஆதிய துலன் உறங்கியிருக்க மாட்டான். திடுக்கிட்டு எழுந்திருப்பான்.
ஏதோ சாகசம் செய்துவிட்ட நிறைவில் நடந்து செல்ல, அதே நேரம் அவள் நினைத்தது போலவே படுக்கையில் உறங்கத் தொடங்கியிருந்த ஆதிய துலன், அவள் போட்ட சத்தத்தில் துள்ளிக் குதித்து எழுந்திருந்தான்.
நேயநறுமை வெளியேறியதும், வெண்கலக் கடைக்குள் புகுந்த யானை சேதாரத்தை முடித்துக் கொண்டு வெளியேறிய உணர்வுதான் அம்பிகாவுக்கும், தேவசகாயத்திற்கும். அவள் வெளியேறிக் கதவை அடித்துச் சாத்தியதும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அம்பிகாவோ கோபமாகக் கணவரை முறைத்தார்.
“எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம்… கொஞ்ச மாவது அடங்கிப் போகிறாளா பாருங்கள். ஒன்றைச் செய்யாதே என்றால், அதைச் செய்துவிட்டுத்தான் மறு வேலை. இதைக் கண்டிக்க வந்தால், குறுக்கே புகுந்து அதைத் தடுத்து விடுகிறீர்கள்…”
“ப்ச்… அனுபவம் வரச் சரியாகி விடுவாள் அம்பி… பயமறியாக் கன்று. துள்ளி விளையாடுகிறாள். விளையாடட்டுமே. நம்மோடிருக்கும் வரைக்கும் தானே இந்தச் சுதந்திரம்…” தந்தையாய் மகளுக்குப் பரிந்து கொண்டு வர, அவரோடு பேசுவதும், சுவரோடு முட்டிக்கொள்வதும் ஒன்று என்பதைப் புரிந்து கொண்டவராக,
“அவள் திருந்த முயன்றாலும் நீங்கள் விட மாட்டீர்கள்… என்னவோ செய்து தொலையுங்கள்… எனக்கென்ன வந்தது. நாளைக்கு அவள் கஷ்டப் படும்போது சேர்ந்து அழப் போவது என்னவோ நாம்தான்…” என்றார் எரிச்சலோடு.
“ப்ச்… அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்… முதலில் எனக்கு நல்ல சாயம் போட்டு தேத்தண்ணீர் கொடுங்கள்…” என்று விட்டு சஞ்சிகையைப் படிக்கத் தொடங்க, இங்கே தன் அறையில் உறக்கம் கலைந்த ஆதியதலனின் முகம் இறுகிப்போயிருந்தது.
தூக்கம் திடீர் என்று பறிபோனதில் தலை வலித்தது. இரண்டு நாட்கள் சுத்தமாக உறக்கமில்லை. கொஞ்சம் உறங்கலாம் என்றால், அந்த நேயநறுமை, இப்படி வைத்துச் செய்கிறாள். பேசாமல் விடுதியில் சென்று தங்கியிருக்கலாமோ? காலம் கடந்து யோசித்தவன் நெற்றியை நீவி விட்டவாறு திரும்பவும் படுக்கையில் சரிய, போனால் போகிறது, தூங்கித் தொலை என்பது போலத் தூக்கம் அவனைத் திரும்பவும் அணைத்துக் கொண்டது.
கடையில் வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு நேயநறுமை வீட்டிற்கு வந்த போது, ஆதியதுலன், கொஞ்சம் புத்துணர்வோடு முன்னறையில் அமர்ந்து தேவசகாயம், அம்பிகாவோடு பேசிக்கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நேரிழை அவர்கள் பேசுவதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
உள்ளே வந்தவள், மே மாதத்திற்கு ஏற்ப, அணிந்திருந்த கம்பளி ஆடையைக் கழற்றியவாறு முன்னறைக்கு வர, இவள் வரும் அரவம் கேட்டு, மெல்லிய புன்னகையுடன் திரும்பிப் பார்த்த ஆதியதுலன், மறு கணம் முகம் இறுக அவசரமாகத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
உள்ளே வந்தவளின் விழிகளோ அவளையும் அறியாது முதலில் தேடியது ஆதியதுலனைத்தான். அவன் ஒற்றையிருக்கையில் ஒரு காலை நீட்டியும் மறுகாலை மடக்கியுமிருக்க, வலக்கரமோ அந்த ஒற்றையிருக்கையில் முதுகுச் சட்டத்தின் மீது மடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது. வலது கரத்தில் தேநீர் குவளை குடியிருந்தது.
ஏனோ அவன் அமர்ந்திருந்த அந்த இலகுத் தோற்றம், நேயநறுமையை அவனின்பால் சுண்டி இழுக்கத் தன்னையும் மீறி ஆர்வத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ, அவளைப் பார்த்த நொடியில் தன் பார்வையை விலக்கிக்கொள்ள, அது இவளுக்குள் ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
ஒரே ஒரு விநாடியாக இருந்தாலும், அவன் பார்வையில் தெரிந்த அருவெறுப்பைக் கண்டவள் குழம்பிப் போனாள். ஏன் அவளை அப்படிப் பார்த்தான்? எதற்காக முகத்தைச் சட்டென்று திருப்பிக்கொண்டான்? அந்தப் பார்வையிலிருந்தது என்ன? இதுவரை யாரும் அத்தகைய பார்வையை அவள் மீது செலுத்தியதில்லை. அவளைக் காணும் நபர்களின் விழிகளில் எப்போதும் ஒரு வித மலர்ச்சி தெரியும். ரசனை இருக்கும். குறிப்பாக ஆண்களின் விழிகள் பளிச்சிடும். உதடுகளில் புன்னகை பொங்கும். ஆனால் முதன் முறையாக ஒரு ஆணுடைய பார்வையில் தெரிந்த ஒவ்வாமையைக் கண்டு குழம்பினாள்.
அதே நேரம், தன் மகளை நோக்கித் திரும்பிய அம்பிகாவின் முகமும் சட்டென்று மாறியது. நேராகத் தன் மகளை நெருங்கியவர், அவளுடைய மேல் கரத்தை அழுந்தப் பற்றி,
“நேயா… வா…” என்றவாறு கிட்டத்தட்ட அவளை இழுத்துச் செல்ல, தாயின் அந்தப் பிடியில் ஏதோ மண்டகப்படி விழப்போகிறது என்பது மட்டும் புரிய, அவரோடு இழுபட்டுச் சென்றாள் நேயநறுமை.
தங்கள் அறைக்கு இழுத்து வந்து கதவை அடைத்துச் சாற்றிய அம்பிகா, தன் மகளைப் பார்த்து முறைத்து,
“என்னடி உடுப்பு இது?” என்றார் சீற்றமாக. இவளோ தன்னைக் குனிந்து பார்த்து தோள்களைக் குலுக்கி,.
“ஏன்…? இந்த உடுப்புக்கு என்ன?” கேட்ட மகளை எரிப்பது போலப் பார்த்தவர், இழுத்து கண்ணாடியின் முன்பாக நிறுத்த, அங்கே தெரிந்த தன் அழகிய விம்பத்தை ரசனையுடன் பார்த்தாள் நேயநறுமை.
உடலைக் கவ்விப் பிடித்த, கைகள் நீண்ட மிக இறுக்கமான டீஷேர்ட். அதன் கழுத்து நன்றாகக்
கீழிறங்கி, பெண்மையின் செழிப்பின் கால் பாகத்தை அழகாக வெளியே மிகக் கவர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தது. (அது அவளுக்கு அழகாகத்தான் தெரிந்தது). நீளக் கை வைத்ததற்கு எதிர்மாறாக, அதன் வயிற்றுப் பகுதியின் கீழ்ப்பக்கத்துத் துண்டைக் காணோம். அது மார்பின் அடிவரைதான் இருந்தது. கீழே வெண்ணிறப் பளிங்கு வயிறும், சற்றுப் பூசினாற் போன்ற இடையும் என்னைப் பாரேன் என்று பார்ப்பவர்களைக் கவர்ந்திழுத்தது. அதன் நடுவில் தொப்புள் வேறு மாணிக்கக் கற்களாக மினுமினுக்க, அதற்குத் தோதாக அணிந்திருந்த டைட் டெனிம் பான்டோ, அவளுடைய இடைக்குக் கீழான வளைவு சுழிவுகளை அப்படியே கவ்விப் பிடித்து வெளியே காட்டிக்கொண்டிருந்தது. அதாவது பரவாயில்லை, ஆங்காங்கே கிழிந்திருந்த இடங்களின் ஊடாகத் தெரிந்த திரண்ட தொடையின் வெண்மையை, அந்தக் கிழிந்த பான்ட் வெட்டவெளிச்சமாகக் காட்டிக் கொண்டிருக்க, கவர்ச்சி நாயகியாகத் தெரிந்த தன் அழகில் சொக்கித்தான் போனாள் இளையவள்.
அதுவும் கொஞ்சம் பூசினாற் போன்ற அவளுடைய தேகத்திற்கு அந்தக் கவர்ச்சி சற்று தூக்கலாகவே தெரிய, அந்த நவநாகரீக ஆடையில் எங்குத் தேடியும் எந்தக் குறையும் அவளுக்குத் தெரியவில்லை.
“மா… என்னம்மா பிரச்சனை உங்களுக்கு..?”
“என்ன பிரச்சனையா? எத்தனை முறை சொல்லி இருக்கிறேன், இப்படியான ஆடைகளை அணியாதே என்று… பார்.. அப்படியே உடல் முழுக்கத் தெரிகிறது. இந்த ஆடையோடு ஒரு ஆணுக்கு முன்னாடி வந்து நிற்கிறாயே. கொஞ்சமாவது யோசிக்க மாட்டாயா?” தாய் கேட்க அலட்சியமாக உதடுகளைக் சுழித்தாள் அவள்.
“கமான் மா… இதில் என்ன இருக்கிறது…? எல்லாமே ஆடைகள்தானே.” சிணுங்கிய மகளைக் கொல்லும் வெறியுடன் பார்த்தார் அம்பிகா.
“இப்படி உடலைக் காட்டி ஆடை அணிந்தால் பார்க்கிறவர்கள் தப்பாகப் பார்க்க மாட்டார்களா?” கண்களை உருட்டிக் கேட்க அன்னையைக் கோபமாகப் பார்த்தாள் நேயநறுமை.
“தப்பாகப் பார்ப்பதா? அவர்கள் ஏன் பார்க்க வேண்டும்? இது என்னுடைய உடம்பு. என்னுடைய பணத்தில் வாங்கிய ஆடை. நான் அணிகிறேன். மற்றவனுக்கு என்ன வந்தது? மா… விருப்பமான ஆடைகள் அணிவது என் இஷ்டம். அதைத் தப்பாக ஒருத்தன் பார்த்தால், அது பார்க்கிறவன் தப்பு. அதற்கு நான் என்ன செய்வது?” தன் நிலையில் நின்ற மகளை என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தார் அம்பிகா.
“சரி பார்க்கிறவனிடமே தப்பு இருக்கட்டும், அந்தத் தப்பைச் செய்ய நீ ஏன் தூண்டுகிறாய்? தப்பு செய்தவனை விட, அதைத் தூண்டி விடுகிறவனுக்குத்தான் தண்டனை அதிகம். ஆடை என்கிறது நம்முடைய உடலை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அணிவதில்லை. நம்மைப் பாதுகாப்பதற்காக அணிவது. அது புரியாமல்… முதலில் இந்த ஆடைகளை எல்லாம் கொளுத்தி எறிய வேண்டும்…” கோபமாக மகளிடம் வாதம் செய்தவர், பின் ஆழ மூச்செடுத்து,
“இதோ பார் நேயா… நாம் வாழ்வது கனடாவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு நீதி இருக்கிறது. ஒழுக்கம் இருக்கிறது. வீட்டில் நாம் மட்டும் இருக்கும் போது நீ எந்த ஆடையை வேண்டுமானாலும் போடு. ஆனால் இப்போது விருந்தினராக ஒருத்தர் வந்திருக்கிறார். குறைந்தது அதற்கு மதிப்புக் கொடுத்துக் கொஞ்சம் நாகரிகமாக ஆடைகளை அணிந்து கொள்…” கறாராகச் சொன்ன தாயைப் பொறுமையிழந்து பார்த்தாள் நேயநறுமை.
“இது நாகரிகமான ஆடைதான்மா…”
“எது… எப்படிக் கிழிந்து தொங்கும் ஆடைதான் உனக்கு நாகரிகமா? ஊரில் பிச்சை எடுப்பவர்கள் கூட ஒழுங்காக ஆடைகளை அணிகிறார்கள். நாகரீக ஆடை என்பது, மற்றவர்கள் பார்க்கும் போது நம் மீது மதிப்பும் மரியாதையும் பெற்றுக் கொடுப்பது. இப்படி, அருவெறுப்பாக எண்ணவைப்பதில்லை. போ… போய் நல்ல சட்டையாகப் போட்டுக்கொண்டு வா…” கட்டளையாகக் கூற,
“நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்கள், ஆள் பாதி ஆடை பாதி என்று. இப்போது ஆடைகளைப் பாதியாக அணிந்தால் முறைக்கிறீர்களே…” சொன்ன மகளைத் தலையில் அடித்தவாறு பார்த்தார் அம்பிகா.
“முட்டாள்… ஆள் பாதி, ஆடை பாதி என்பது, ஒருத்தர் எப்படிப்பட்டவர் என்பதை மதிப்பிடுவதற்கு அந்த நபர் ஐம்பது வீதம் என்றால், மிகுதி ஐம்பது விகிதமும் அவர் அணியும் ஆடையிலிருந்து கண்டு கொள்ளலாம் என்பதுதான். இப்படி ஆடையைப் பாதியாக்குவதில்லை. இப்படி உன்னைப் பார்த்தால், எனக்கு என் மகளாகத் தெரியவில்லை. வேறாகத் தெரிகிறது. மரியாதையாக ஆடையை மாற்றிவிட்டு வா… இல்லையா… வராதே…” கடுமையாகச் சொல்லி விட்டு முன்னறைக்குச் செல்ல, இவளோ தாய் கண்டித்தது பிடிக்காமல் உர் என்கிற முகத்தோடு அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
ஏன் அவள் அணிந்திருக்கும் ஆடையில் என்ன தப்பு இருக்கிறது. இன்றைய ட்ரென்டே இதுதானே. அது புரியாமல் இப்படி அம்மா திட்டுகிறார்களே. அதுவும் இன்றைக்கென்று ஆசையாக பார்த்துப் பார்த்துத் தயாரானாள். அதற்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே. நினைக்கும் போது தாளவில்லை இவளுக்கு. மனதிற்குள் வருந்திக்கொண்டிருக்க, சகோதரியைக் காணாமல் தேடி வந்தாள் நேரிழை.
அவளுடைய முகத்தைக் கண்டதுமே புரிந்து போனது தாயிடம் ‘ஓவர் டோஸ்’ திட்டு கிடைத்து இருக்கிறது என்று.
“அக்கா… என்ன திட்டு அதிகமோ…?” சகோதரி கேட்க, தலையைப் பலமாக அசைத்தாள் நேய நறுமை.
“அதைக் கண்டதும் மெல்லிய புன்னகையைச் சிந்தியவள்,
“இப்படி ஆடைகள் அணிவது அம்மாவுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், நீர் ஏன் அணிந்து கொள்கிறீர். இப்படிச் செய்தால் அம்மா திட்டத்தானே செய்வார்கள்?” தாய்க்காகப் பரிந்து வர,
“ஏன் இந்தச் சட்டைக்கு என்ன குறை. இந்தப் பான்ட் என்ன விலை தெரியுமா? இருநூறு டாலர்கள். இந்த டீஷேர்ட் நூறு டாலர். இதை அணிவதே எத்தனை மரியாதை தெரியுமா. என்னுடைய நண்பர்கள் எல்லாம், நன்றாக இருக்கிறது என்று எத்தனை முறை புகழ்ந்தார்கள். ஆனால் இந்த அம்மா…?” கோபமும் வருத்தமுமாகக் கூற, சகோதரியின் அருகே தொப்பென்று அமர்ந்தாள் நேரிழை.
“சரி… சரி… அதனால் என்னக்கா…? இப்படி ஆடைகள் அணிவதும், அம்மாவிடம் திட்டு வாங்குவதும் உமக்கு புதுசா என்ன? தினம் தினம் நீர் வாங்கிக் கட்டிக்கொள்வது தானே…?” சகோதரி சொல்ல, அவளை ஒரு மாதிரிப் பார்த்தவள்,
“ஏன்… எனக்குத் திட்டினால் வலிக்காதா?” என்றாள் கோபமாக. அதைக் கேட்டு குறும்புப் புன்னகை சிந்தியவள், படுக்கையை விட்டு எழுந்து,
“அது… மனுஷங்களுக்கு வலிக்கும்… நீர்தான்… எருமையாயிற்றே… வலிக்கவே வலிக்காது…” என்று கூறி விட்டுக் கலகலவென்று சிரித்தவாறு அங்கிருந்து ஓட,
“என்னது…? எருமையா…? நானா? ஏய்… உன்னை…” என்றவள் அதுவரை தாயின் மீதிருந்த கோபமும், எரிச்சலும் மறைய, தன்னிடமிருந்து தப்பியோடும் தன் தங்கையைத் துரத்திக்கொண்டு அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள்.
அந்த நேரம் பார்த்து, ஆதியதுலனும் அந்தப் பக்கமாக வர, அதை எதிர்பார்க்காதவள், தன்னை நிலை நிறுத்த முயன்று தோற்று, சமநிலை தவறி அவனோடு பலமாக மோதிக்கொள்ள, இப்படி திடீர் என்று நேயநறுமை தன் மீது மோதுவாள் என்பதை எதிர்பார்த்திராத ஆதியதுலனும், தடுமாறி, சிரமப்பட்டுத் தன்னை நிலைநிறுத்த முயன்று தோற்றுக் கடைசியாகத் தன் மீது மோதியவளின் இடை பற்றித் தன்னோடு இறுக அணைத்துச் சுழன்று சுவரோடுப் பலமாக மோதி நின்றான். கண்ணிமைக்கும் நொடியில் இந்த விபத்து நடந்து விட்டிருந்தது.
இருவருக்குமே கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்று புரியவில்லை. அதிர்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, அவன்தான் முதலில் சுயத்திற்கு வந்தான்.
விழிகளால் அவளுடைய நீண்ட விழிகளைக் கவ்வி இழுத்தவன், இமைப்பொழுதும் அவளிடம் மிருந்து பார்வையை விலக்காமல்,
“யு ஓக்கே…” என்றான்.
அவனை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கும் அவனுடைய அணைப்பை விட்டு விலகும் எண்ணம் இருக்கவில்லை. கவர்ந்திழுத்த அவன் விழிகளுக்குள் சங்கடமின்றித் தன் விழிகளைக் கலந்தவள், வாய் திறந்து பதில் கூறாது, தலையை மட்டும் அசைத்து ஆம் என்றாள். ஏனோ அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. உலகம் வேறு தன் அசைவை நிறுத்திய உணர்வு.
அவள் விழுந்த வேகத்தில் இடையோரம், அள்ளி அணைத்துப் பிடித்திருந்ததால், அவனுடைய உள்ளங்கை தாராளமாக அவளுடைய வெற்று இடையில் அழுத்தமாகப் படிந்திருக்க, அக்கரம் கடத்திய வெம்மையை உணர்ந்துகொண்ட இடையோ, அந்த வெம்மையில் மெழுகாய் உருகிக் குழைந்து போனது. அந்தப் புதிய உணர்வில் சிலிர்த்துப் போன உடலோ அவனை விட்டு விலகாது, அக் கடிய மேனியோடு தன் மேனியை அழுத்தி, மேலும் புதிய இலக்கணத்தை உணர முயன்றது.
அதேநேரம், பெண்ணவளின் மென்மையை உணர்ந்து கொண்ட அவனுக்கும், அத்தனை சுலபத்தில் அவளை விட்டு விலகத் தோன்றவில்லை. அவனையும் மீறிப் பட்டிடையைத் தழுவிக் கிடந்த விரல்களில் ஒருவித நடுக்கம். ஒரு வேளை முதன் முறையாக ஒரு பெண்ணின் மேனியைத் தீண்டியதால் வந்த நடுக்கமோ? இல்லை வேறு எதுவும் காரணமோ? தெரியவில்லை. நடுங்கிய விரல்கள், கொஞ்சம் கொஞ்சமாகத் தாகத்திற்குத் தண்ணீர் பருகுவது போல, அந்த இடையின் மென்மையைப் பட்டும் படாமலும் உணர்ந்து பின் அது மட்டும் போதாது என்பதாகக் கொஞ்சமாய் இடையை வருடத் தொடங்க, அந்தப் பெண்மையை உணர்ந்த ஆண்மை, தன்னை மறந்து சிலிர்த்துக் கொண்டது..
நேயநறுமையும் அவனுடைய அந்த செயலில் தன்மதி கெட்டுத்தான் போனாள். வெறும் விரல்களின் வருடல்தான். அதற்கேன் உருகி நிற்கிறேன்? ஏன் என் நிலை கெட்டு நிற்கிறேன்? உலகில் இல்லாமல் அண்ட சராசரத்தின் மத்தியில் நிற்கிறேனே ஏன்? எனக்கு என்னாயிற்று? ஏன் போதை உட்கொண்டது போல மதிமயங்கிக் கிடக்கிறேன்? அவள் குழம்பி நிற்கையில், முதலில் சுயத்திற்கு வந்தது என்னவோ அவன்தான்.
கொஞ்சம் பொறுத்துத்தான், தான் செய்யும் காரியத்தைப் புரிந்தவனாக அதிர்ந்து நின்றான். பதட்டத்தோடு இடையைச் சுற்றியிருந்த தன் கரத்தை இழுத்தெடுக்க முயன்றவாறு,
“சா… சாரி…” என்றான் தடுமாற்றமாக. அவன் விலகத்தான் முயன்றான். இவள்தான் விலக மறுத்து இன்னும் அவனோடு ஒட்டி நின்றாள்.
“இ… இட்ஸ் ஓக்கே…” அவளுடைய வாய் தான் சொன்னது. ஆனால் புத்தி இன்னும் மதி மயங்கித்தான் கிடந்தது. தேகமோ அவனோடு ஒட்டி நிற்க விளைந்தது கரங்களோ பற்றியிருந்த அவன் டீஷேர்ட்டை விடாமல் இறுகக் கசக்கிப் பிடித்திருந்தது.
அவளுடைய அந்த நெருக்கத்தில் மேலும் தவித்தவனாகத் தடுமாறி நின்றவன், சிரமப்பட்டுத் தன்னை ஒரு நிலைப்படுத்தியவனாக,
“கான் ஐ…” என்றான் சற்றுச் சங்கடமாக. இவளோ அவன் பேசும் மொழி எதுவும் புரியாமல் ‘என்ன கான் ஐ?’ என்பது போல அவன் விழிகளை ஏறிட, மெதுவாகக் குனிந்து அவளுடைய கரத்தைப் பார்த்தான்.
அவை, அவனுடைய நெஞ்சுப்புறத்து டீஷேர்ட்டை அழுத்தமாகக் கசக்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. மீண்டும் அவளுடைய முகத்தைப் பார்க்க, அப்போது தான், அவளுக்குத் தான் நிற்கும் நிலையே உறைத்தது.
ஓடிவந்த வேகத்தில் அவன் மார்போடு மோதிச் சரிந்தவள் எதேச்சையாக அவனுடைய மார்புச் சட்டையை இறுகப் பற்றியிருக்கிறாள். பதட்டத்தோடு தன் கரத்தை இழுத்து எடுத்தவள்,
“சா… சாரி… என் தங்கை… ஓடி… நான் அவளைத் துரத்தி” அவள் முடிக்கவில்லை, அவளுடைய பேச்சை இடை நிறுத்தி அவளைத் தன்னிடமிருந்து பிரித்து,
“இட்ஸ் ஓக்கே…!” என்றவாறு அவளால் கசக்கப் பட்ட டீஷேர்ட்டை இழுத்துச் சரியாக்கியவாறு, நிமிர்ந்து அவளை ஏறிட்டான். பின் அவனுடைய பார்வை அவள் மேனியை நிதானமாக அளவிட்டது. அவள் இன்னும் ஆடையை மாற்றாததால், கவர்ச்சி சிலையெனத்தான் நின்றிருந்தாள். அதைக் கண்டு கொஞ்சம் இகழ்ச்சியாய் வளைந்த உதடுகள்,
“ஆளும் பாதி, ஆடையும் பாதி…!” என்று முணுமுணுத்துவிட்டு அவளுக்குப் பக்கமாக இருந்த குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவைச் சாத்த, அவன் சொன்னதைக் கேட்ட நேயநறுமை முதலில் குழம்பி, பின் ஆத்திரத்தோடு அவன் சாற்றிவிட்டுச் சென்ற கதவையே வெறித்துப் பார்த்தாள்.
ஆளும் பாதி, ஆடையும் பாதியா? அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவளுடைய உயரம் குறைவு என்பதால் அப்படிச் சொன்னானா? இல்லை அவளுடைய புத்தியைச் சொல்லிவிட்டுச் செல்கிறானா? நடவடிக்கைகள் குழந்தைத்தனமாக இருப்பதால் அப்படிச் சொன்னானா? எதற்காக அப்படிச் சொன்னான். எது எப்படியாக இருந்தாலும், நிச்சயமாக பாராட்டும் வகையில் அவன் சொல்ல வில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிய, கோபம் புசுபுசு என்று எழுந்தது.
எத்தனை தைரியம் அவனுக்கு? அவளைக் கிண்டலாகப் பேசும் உரிமையை அவனுக்கு யார் கொடுத்தார்கள்? எரிச்சலுடன் நினைத்தவளுக்கு, அதற்குத் தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்கிற முடிவோடு அங்கிருந்து விலகிச் சென்றாள். கடும் கோபமாகத்தான்.
17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…
16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…
15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…
16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…