Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 4

4

சாப்பிட்டு முடிக்கும் நேரம் தேவசகாயத்தின் கைப்பேசி சத்தம் எழுப்ப, எரிச்சலோடு தன் கணவரைப் பார்த்தார் அம்பிகா.

“இந்த நேரத்தில் யார்? ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன், சாப்பிடும் போது கைப்பேசியை அணைத்து வையுங்கள் என்று. எங்கே கேட்கிறீர்கள்? இதில் பிள்ளைகளை எப்படித் திருத்துவது?” சலித்துக் கொள்ள, அசட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தி, இடது கரத்தை பான்ட் பாக்கட்டிற்குள் விட முதல், நேயநறுமை எட்டி தந்தையின் பான்ட் பாக்கட்டில் இருந்த கைப்பேசியை இழுத்து எடுத்துப் பார்த்தாள்.

“பாஸ்கரன்” என்று திரையில் விழுந்த எழுத்தை வாசிக்க, பெரியவர்கள் இருவரின் முகமும் பளிச் என்று மலர்ந்தன. ஆனால் நேயநறுமையின் முகமோ சூடுவைத்த சுண்டெலி கணக்காகச் சுருங்கிப் போனது.

பின்னே அவள் அடியோடு வெறுக்கும் குடும்பத்திலிருந்து அல்லவா அழைப்பு வந்திருக்கிறது. எரிச்சலோடுத் திரையைப் பார்க்க, தேவசகாயமோ, உடனே கரத்தை உதறிவிட்டு மகளின் கரத்தில் இருந்த கைப்பேசியை வாங்கிக் காதில் வைத்துக் குதுகலமாக,

“மச்சான்… எப்படி இருக்கிறாய்…? ஆதி நலம்தானே…?” குசலம் விசாரித்தவாறு எழுந்து செல்ல, இவளோ உண்பதை மறந்து தந்தையை முறைத்தவாறிருந்தாள்..

நடந்து சென்றவர், சற்று நேரம் பேசியவர், முகத்தின் மலர்ச்சி வாடாமல் மீண்டும் சாப்பாட்டு மேசைக்கு வந்தார்.

“அண்ணா என்ன சொன்னார்?” கேட்ட அம்பிகாவின் முகத்திலும் மலர்ந்த சிரிப்பு.

“நல்ல செய்திதான்மா… நம்முடைய ஆதி இங்கே ஏதோ வேலையாக வருகிறானாம். அப்படியே எங்களையும் பார்க்க ஆசைப்படுகிறானாம்…” என்றதும் அம்பிகாவின் முகத்தில் ஆயிரம் வால்ட் வெளிச்சத்தில் பளிச்சிட்டது.

“நிஜமாகவா…? எத்தனை நல்ல செய்தி…! அவன் எப்போது வருகிறானாம்…?” என்றார் ஆவலாக.

“அடுத்த கிழமை வருகிறானாம்… இங்கே டெல்ட்டா விடுதியில்தான் அறை எடுத்துத் தங்கப் போகிறானாம்…” தேவசகாயம் முடிக்கவில்லை. தன் கணவனை முறைத்தார் அம்பிகா.

“உடனே சரி என்று சொல்லிவிட்டீர்களாக்கும்…? நாங்கள் இங்கே இருக்கும் போது அவன் எதற்கு அநாதைபோல விடுதியில் தங்க வேண்டும். அண்ணாவுக்கு எடுங்கள்… நான் பேசிக்கொள்கிறேன்” என்று பரபரப்புடன் சொன்னவர், கரங்களைத் துடைத்து விட்டுக் கணவனின் கைப்பேசியைப் பறித்து, உடனே பாஸ்கரனைத் தொடர்பு கொண்டார். அவர் மறுபக்கம் அழைப்பை ஏற்றதும், ஒரு பிடி பிடித்து விட்டார்.

“அது எப்படி நாங்கள் இங்கே இருக்கும் போது, என் பையனை யாருமே இல்லாதவன் போலத் தனியாக விடுதியில் தங்க வைப்பீர்கள்? இதுதானா நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம்…?” என்று எடுத்த எடுப்பிலேயே பாஸ்கரனோடு உரிமைப் போர் தொடங்க இவருடைய அன்பில் பாஸ்கரன் தான் திணறிப் போனார்.

“அப்படி இல்லைமா…! உங்களுக்குச் சிரமமாக இருக்குமோ என்று…!” இழுத்தார் பாஸ்கரன்.

“சிரமமா? என் பிள்ளையை என்னோடு வைத்திருப்பதில் எனக்கென்ன சிரமம் இருக்கப் போகிறது? என்னை உங்களோடு வைத்திருந்த போது அப்படித்தான் நினைத்திருந்தீர்களா? அவன் எனக்கும் பையன்தான் அண்ணா…! இது புது இடம்… பாவம் தனியாகப் பரிதவித்து விடுவான். ம்கூம்… நாங்கள் இங்கே இருக்கிற போது அவன் விடுதியில் எல்லாம் தங்க முடியாது. அவன் இங்கே தான் நம் கூடத் தங்கப் போகிறான். அவ்வளவு தான்…” அதுதான் முடிவு என்பது போல முடித்தவர், கைப்பேசியை அணைத்து விட்டு, திரும்பித் தன் கணவனையும் பிள்ளைகளையும் பார்க்க, அங்கே நேயநறுமை தாயை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி முறைக்கிறாய்…?”

“பின்னே… யாரைக் கேட்டு அந்த வளர்ந்து கெட்டவனை எங்கள் வீட்டில் தங்க அழைக்கிறீர்கள்…?” என்றாள் எரிச்சலோடு. அம்பிகாவோ விழிகளைச் சுருக்கி,

“யாரைக் கேட்கவேண்டும் என்கிறாய்?” என்றார் அழுத்தமாக.

“எங்களைக் கேட்கவேண்டும்… காட்…! அம்மா எங்களுக்கு இடைக்காலப் பரீட்சை தொடங்கி விட்டது. நாங்கள் எந்தத் தொந்தரவும் இன்றிப் படிக்கவேண்டும்… இதில் புதிதாக யாராவது நம்மோடு தங்கினால், நம் சுதந்திரம் பறிபோய் விடாதா? நம்மால் விருப்பம் போல நடமாட முடியாது. நம் வீட்டிலும் இடம் போதாது. அப்படி இருக்கிற போது, அந்தாள் எங்கே தங்குவாராம்” என்று சிணுங்கினாள் மகள்.

“இது என்ன கேள்வி…? நீ நேரிழையோடு தங்கிக் கொள். உன் அறையை ஆதிக்குக் கொடுக்கலாம்… அதுதான் குளியலறைக்குப் பக்கத்தில் இருக்கிறது. தவிர உப்பரிகையும் பக்கத்தில்..” அவர் முடிக்க வில்லை, ஏதோ தன் சொத்தையே பறிப்பது போன்ற உணர்வில் காதுகளைப் பொத்தி,

“நோ… நகி… நோன்… நைன்… நீ…” என்று பல மொழிகளில் கத்த, தாயோ தன் இடையில் கை வைத்தவாறு மகளை முறைத்தார்.

“அடச் சீ… நிறுத்து… இப்ப எதற்கு மைனா கொத்தியது போல நோ நீ நைன் என்று கத்துகிறாய்…? நீ மறுக்கிறாய் என்பதற்காக, எங்களுக்காக உயிரைக் கொடுத்து உதவி செய்த ஒருவரின் மகனை அம்போ என்று விடச் சொல்கிறாயா?” என்று எரிச்சலுடன் கேட்டார் அம்பிகா.

“யார் அம்போ என்று விடச்சொன்னது. அந்தாள் தான் விடுதியில் தங்கப் போகிறார் என்று அந்தப் பாஸ்கரன் சொன்னாரே… பிறகு என்ன? வேண்டும் என்றால், அந்த ஆம்பளைக்கு மூன்று நேர உணவைத் தாராளமாகச் சமைத்துக் கொடுக்கலாம். யார் வேண்டாம் என்றார்கள்? ஆனால் எங்கள் வீட்டில் தங்க வேண்டாம். அவ்வளவுதான்” அவள் முடிக்கவில்லை,

“அடித்தேன் என்றால், மூஞ்சை முகரை எல்லாம் பெயர்ந்து விடும். என்னோட அண்ணா உனக்கு மச்சானா என்ன? அசால்டாகப் பாஸ்கரன் என்று சொல்கிறாய்? மாமா என்று சொல்லு…” என்றார் கடுமையாக. தாயின் அந்தக் குரலில் பம்மினாலும், தன் மறுப்பை முகத்தில் காட்ட, அம்பிகாவோ அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

“இங்கே பாருங்கள், அந்தக் குழந்தை நம் கூடத்தான் தங்கப் போகிறான்…” என்று முடிவாகச் சொன்னவர், நேயநறுமையைப் பார்த்து, “நீ நேருவோடு தங்கிக் கொள்…” என்றார் முடிவாக. நேயநறுமையோ வெடித்து விட முயன்ற இதயத்தைக் கரம் கொண்டு பற்றி,

“குழந்தையா? நீங்கள் சொன்ன கதைகளை ஒன்றாக இணைத்துக் கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பார்த்தாலும், அந்தக் குழந்தைக்கு வயது இருபத்தேழு இருபத்தெட்டுக்கும் மேல் இருக்குமே… அந்த எருமையைக் குழந்தை என்கிறீர்களே…” சொன்ன மகளை வெட்டவா குத்தவா என்று பார்த்தார் அம்பிகா.

“ஏய்… மரியாதை…! என் பிள்ளை ஆதியதுலனை அவன் இவன் என்று சொன்னால் பெற்ற மகள் என்றும் பார்க்க மாட்டேன்… அவனுக்கு எத்தனை வயசு ஆனாலும் அவன் எனக்குக் குழந்தைதான்…” என்ற அம்பிகாவின் கண்களில் சின்னதாக நீர்ப்படலம்.

அம்பிகாவுக்கும் தேவசகாயத்திற்கும் திருமணம் நடந்த போது, ஆதியதுலன் இரண்டு வயதுக்குழந்தை. பாஸ்கரனும், இந்திராவும் விரிவுரையாளர்கள் என்பதால், இவர்தான் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார் அம்பிகா. கிட்டத்

தட்ட ஐந்து வருடங்கள் அவர் மடியில்தான் ஆதிய துலன் வளர்ந்தான். அம்பிகா கனடா கிளம்பும் போது, ஆதியதுலனைப் பிரிவதை நினைத்துத்தான் அழுதார். கனடா வந்த பின்பும் ஆதியதுலனை எண்ணி நிறைய வாட்டி கலங்கி இருக்கிறார். தொலைப் பேசியில் குழந்தையோடு பேசுவதும் உண்டு. காலப் போக்கில், குழந்தைகள், வேலை என்று ஆன பின்னர் கூட ஆதியதுலனோடு பேசுவதை அம்பிகா நிறுத்தவில்லை.

இதற்கிடையில் இந்திரா நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகிப் போகப் பதறியடித்து அம்பிகா ஈழம் சென்று வந்தார். ஒரு மாதம் இந்திராவைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டார். இவர் திரும்பி கனடா வந்த இரண்டு மாதங்கள் கழிய, இந்திரா படுக்கையில் உயிரை விட்ட செய்தியை அறிந்து அம்பிகா துடித்துப் போனார். அப்போது ஆதியதுலனுக்கு வயது இருபத்தொன்று. அதற்குப் பிறகு அடிக்கடி ஆதியதுலனோடு பேசி உனக்கு அம்மாவாக நான் இருக்கிறேன் கண்ணா. எதற்கும் கலங்காதே.’ என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை.

அவருக்கும், அந்தக் குழந்தைக்கும் உள்ள அன்பின் பாசப்பிணைப்பு பற்றி இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. வேதனையுடன் நினைக்கும் போதே, நேயநறுமையின் தோளைத் தட்டிய நேரிழை,

“அக்கா… எனக்கு என்னவோ அம்மா சொல்வது தான் சரியாகப் படுகிறது. என்ன சொன்னாலும் நன்றி மறப்பது நல்லதில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பல உதவிகள் செய்தவர்கள். சொல்லப் போனால் பாஸ்கரன் மாமாவால்தான் அப்பா கனடாவே வந்தார். அப்படி இருக்கும் போது, ஆதியதுலனை அப்படித் தூர நிறுத்தி, அன்னியர் போல நடந்து கொள்வது சரியில்லை.” என்று தாய்க்கு ஆதரவாக மென்மையாகக் கூற, இப்போது கோப விழிகளைத் தங்கையின் பக்கம் செலுத்தினாள் நேயநறுமை.

‘நீயுமா…?’ என்பது போலப் பார்த்தாள் அவள்.

பின்னே இருக்காதா? உலகத்திலேயே அவள் வெறுக்கும் ஒரே நபர் யார் என்று கேட்டால் அது அந்த ஆதியதுலன்தான். இத்தனைக்கும் அவன் கூடப் பேசியதில்லை. அவனுடைய சிறுவயதுப் புகைப்படங்களைப் பார்த்ததோடு சரி. நெஞ்சு முட்ட வெறுப்பை வைத்திருந்ததால், அவன் பக்கமே திரும்பியதில்லை. அவளை பொறுத்தவரை அவன் அசிங்கம்தான். இப்படி அவனை முழுதாக வெறுப்பதற்கு முழுமுதற் காரணமே அன்னை அம்பிகா தான்.

அவர்கள் குழந்தையாக இருந்த போதே இவர்களோடு ஒப்பிட்டுப் பேசப்பட்ட நபர் என்றால் அது ஆதியதுலன் தான். ஆரம்பத்தில் சிறுமியாக இருந்தபோது அந்த ஆதியதுலன் மீது ஒரு பிரமிப்புத் தோன்றியது உண்மை. அவன் மீது சொல்ல முடியாத ஈர்ப்பு தோன்றி, அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் எழுந்ததும் மெய்யே. ஆனால் அவள் வயதுக்கு வந்த பிறகும், அன்னை அவனோடு ஒப்பிட்டுப் பேசப் பேச மெல்ல மெல்ல அவன் மீதிருந்த அன்பின் மீது பிசிர் தட்டத் தொடங்கியது.

இவள் கணக்குச் சரியாகப் போடவில்லையா, என் ஆதி என்றால் சுண்டுவதற்குள் கணக்குப் போட்டு முடித்துவிடுவான். இவள் சரியாக ஆடையை மடித்து வைக்கவில்லையா, என் ஆதி சின்ன வயதிலேயே தன் ஆடைகளை அழகாக அடுக்கி வைப்பான். இவள் ஒன்றைச் செய்ய முடியாமல் திணறினால், என் ஆதி என்றால் கண்ணிமைக்கும் நொடியில் இதைச் செய்திருப்பான்… இப்படி ஆதிய துலனைப் பெருமையாக இவர்களோடு ஒப்பிட்டுப் பேச இவளுக்கு வெறுத்துப் போனது. அன்னைக்குத் தங்களை விட அந்த ஆதியதுலன்தான் முக்கியம் என்கிற எண்ணம் பொறாமையாக மாறி, அதுவே காலப்போக்கில் மிகப் பெரும் வெறுப்பாக மாறி விட்டிருந்தது.

அதனால், அவனை நினைப்பதைக் கூட அறவே வெறுத்தாள். ஆனால் நேரிழை இவளுக்கு எதிர் மாறு. ஆதியதுலன் அம்பிகாவோடு பேசும் போதெல்லாம், இவளும் குறுக்கே புகுந்து அவனோடு குதூகலமாக சிரித்துப் பேசுவாள். அதைப் பார்க்கும் போது இவளுக்கு உள்ளே எரியும். அந்தக் காட்சியைப் பார்க்கப் பிடிக்காமலே தொலைதூரத்திற்கு ஓடிவிடுவாள் நேயநறுமை.

அப்படி முற்றாக வெறுக்கும் அவனை எப்படிப் புன்னகையோடு இருகரம் நீட்டி வரவேற்பாள்? வாய்ப்புக் கொடுத்தால், கழுத்தை நெரித்துக் கொல்லவும் தயங்கமாட்டாள். ஆனால் அத்தனை பேரும் ஒரே கட்சியாக இருக்க இவள் மட்டும் தனியாகப் பரிதாபமாக நின்றிருந்தாள். கடைசியில் தந்தையாவது உதவ மாட்டாரா என்கிற எண்ணத்தில்,

“அப்பா… எனக்கு அவனைப் பிடிக்காதுப்பா…” என்றாள் சிணுங்கலாக.

“ஏன்டி அவனைப் பிடிக்கவில்லை. அவனைப் போலத் தங்கப் பிள்ளை…” அம்பிகா முடிக்கவில்லை தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள் நேயநறுமை.

“ஷ்… மா.. போதும்… இந்தப் புராணம் கேட்டுக் காதிலிருந்து இரத்தமே வந்துவிட்டது. திரும்பவும் வரவழைத்து விடாதீர்கள்… இப்படித்தான் அந்தாளைப் பெரிதாகச் சொல்லிச் சொல்லியே அவர் மீது வெறுப்பை வரவழைத்து விட்டீர்கள். திரும்பத் தொடங்காதீர்கள்…” என்றவள் அனைவரையும் முறைத்துவிட்டு, “அவர் இங்கே வருவது எனக்குப் பிடிக்கவில்லை…” என்றாள் அழுத்தமாக.

அவளுடைய கோபம் யாரையும் பாதித்ததாகவே தெரியவில்லை. தோள்களைக் குலுக்கிய அம்பிகா,

“அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்… உனக்குப் பிடிக்கவில்லை என்றால், தள்ளியே நின்றுகொள்…” என்றார் கடுமையாக.

அதைக் கேட்டதும் தாயை முறைத்துவிட்டு, கோபத்தோடு தன் உணவைச் சாப்பிடத் தொடங்க,

“கமான் அக்கா…! இப்போது எதற்கு இந்தக் கோபம்…? ம்…? இங்கேயா நிரந்தரமாகத் தங்கப் போகிறார்? இல்லைதானே? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மாதம். அதற்குப் பிறகு அவர் போய்விடுவார். அதுவரைதானேக்கா இந்தக் கஷ்டம்…? கொஞ்சம் சமாளிக்கலாமே?” தங்கை இதமாகக் கூற, அவளை முறைத்தாள் பெரியவள்.

அவள் வேண்டாம் என்று சொன்னால் அன்னை கேட்கப்போவதில்லை என்பது உறுதி. பிறகு எதற்கு வாதிட்டு?

“என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் அந்த ஆள் என் பக்கத்தில் வரக் கூடாது. என்னிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது. முக்கியமாக என் அறையில் தங்கக் கூடாது… யாருக்காகவும் என் அறையை அந்தத் தடிமாட்டுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்…” உறுதியாகச் சொல்லிவிட்டு தன் கோபத்தைச் சாப்பாட்டில் காட்ட, தேவசகாயமோ, பரிதாபமாக இளைய மகளைப் பார்த்தார். எப்போதும் விட்டுக் கொடுப்பவள் அவள்தானே.

“சரிப்பா… நான் அக்காவோடு தங்கிக் கொள்கிறேன்…” என்று கூறியதும், கனிவாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் அம்பிகா. பின் திரும்பி தன் மூத்த மகளை ஏறிட்டு, தலையை அங்கும் இங்கும் அசைத்தவர்,

“உனக்கிருக்கிற பிடிவாதம் மிக மிக அதிகம் நேயா. இந்தக் குணத்தால் நீ நிறைய இழக்கப் போகிறாய்… இது அதிகம் நல்லதிற்கில்லை சொல்லி விட்டேன். பெண் என்பவளுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் குணம் இருக்கவேண்டும். அப்போது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இப்படி இரும்பின் கடினத்தோடு இருந்தால், கடைசியில் துன்பத்தை அனுபவிப்பது நீயாகத்தான் இருப்பாய்.” என்று கோபமும் எரிச்சலுமாகக் கூற,

“இதுதான்மா நான்… நான் யாருக்காகவும் என்னுடைய குணத்தை மாற்றமாட்டேன்…” என்றாள் அழுத்தமாக.

“மாறுவாய் நேயா. நிச்சயமாக மாறுவாய்… உனக்கென்று ஒரு தேவை வருகிற போது, அதற்கான சூழ்நிலை மாறும்போது நீ நிச்சயமாக மாறுவாய். நீ மாறவில்லை என்றாலும், உன்னைக் காலம் மாற்றும்…” என்ற அம்பிகா, அனைவரையும் உறுதியாகப் பார்த்துவிட்டு,

“நேயநறுமையின் அறைதான் ஆதியதுலன் தங்க வசதியானது. அதனால், நேயா, நீ நேருவின் அறையில்தான் தங்கிக் கொள்கிறாய்…” அன்னையின் உரிமையோடு, இதுதான் முடிவு என்பது போலக் கூற, அந்தக் குரலுக்கு மறுத்தேதும் கூறமுடியாத கையாலாகாத் தனத்துடன், கையை உதறிவிட்டு எழுந்த நேயநறுமை, தாயை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட, தேவசகாயமோ, மனைவியைக் குற்றம் சொல்வது போலப் பார்த்தார்.

“என்னம்மா…? குழந்தை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது இப்படிப் பேசவேண்டுமா? பாவம்…! சாப்பிடாமல் போய்விட்டாளே…!” தந்தையாய் வருந்த, கணவனை முறைத்தார் அம்பிகா.

“குழந்தையா? எல்லாம் உங்களைச் சொல்ல வேண்டும். கண்டிக்க விட்டால்தானே? எப்போது பார்த்தாலும் அவளுக்குச் சாதகமாகப் பேசிப் பேசிதான் இப்போது இத்தனை பிடிவாதமாக வளர்ந்திருக்கிறாள்…! போனால் போகட்டும். ஒரு வேளை சரியாக சாப்பிடவில்லை என்றால், உங்கள் மகளின் உடல் எடை ஒன்றும் குறைந்துவிடாது.” மனைவியாய் அதட்ட, அதற்கு மேல் எதையும் பேச முடியாமல், தன் இளைய மகளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு எழ முயல, திரும்பித் தன் கணவனை ஒரு பார்வை பார்த்தார் அம்பிகா.

மதுரை ஆட்சியில் ஆணுக்கு என்ன வேலை? உடனே திரும்பவும் இருக்கையில் அமர்ந்தவர், மனைவி படைத்த உணவைச் சாப்பிடத் தொடங்க, அதைக் கண்டு மென்புன்னகை ஒன்றைச் சிந்தினாள் நேரிழை.

 

What’s your Reaction?
+1
15
+1
2
+1
1
+1
2
+1
0
+1
1
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 16

16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16B

16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…

4 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16A

16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…

6 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 14

14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…

7 days ago