மீண்டும் நேயநறுமை விழித்தபோது சூழ்நிலையே மாறியிருந்தது. புருவங்கள் சுருங்க அங்கும் இங்கும் பார்த்தாள். அது ஒரு மருத்துவமனை. அதைக் கண்டதுமே இவள் முகம் சுருங்கியது.
“திரும்பவுமா?” சலித்தவளாகப் படுக்கையை விட்டு எழுந்தமரச் சட்டென்று ஒரு அழுத்தமான கரம் அவளைப் பற்றிக்கொண்டது. சோர்வோடு நிமிர்ந்து பார்த்தவளின் முன்னால், உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றிருந்தான் ஆதியதுலன்.
அந்த நிலையிலும் அவன் மீதிருந்த கோபம் விஸ்வரூபம் எடுக்க, சட்டென்று அவனுடைய கரத்தைத் தட்டிவிட, அவனும் உடனே தன் கரத்தை விலக்கிக் கொண்டவனாக,
“என்ன வேண்டும்…?” என்றான் எதுவுமே நடக்காதது போல.
“ஒ… ஒன்றும் வேண்டாம்…” முணுமுணுத்தவள் மீண்டும் இறங்க முயல, சட்டென்று அவளுடைய தோள்களைப் பற்றித் தடுத்தவனின் முகத்தில் இப்போது கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“எதுவும் வேண்டாம் என்றால், எதற்காக இறங்க முயல்கிறாய்?” கேட்டவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,
“கழிவறை போகவேண்டும்… போதுமா” என்றாள் அந்த நிலையிலும் எரிச்சலாக.
மீண்டும் மூச்சுத் திணறுவது போலத் தோன்ற, ஆழ மூச்செடுத்து விட்டவளைக் கண்டுகொண்டவன், அவளுக்குப் பக்கத்திலிருந்த சொட்டு மருந்துத் தாங்கியை ஒரு கரத்தில் பற்றியவாறு, மறு கரத்தை அவளை நோக்கி நீட்ட, நீட்டிய கரத்தை வெறித்துவிட்டு, அவனை எரிச்சலோடு பார்த்தாள் நேயநறுமை.
“எனக்கு மூச்சு எடுப்பதில்தான் சிரமம், நடப்பதில் இல்லை. உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை…” சொன்னவள் அவன் கரத்தில் இருந்த தாங்கியைக் கிட்டத்தட்டப் பறித்து எடுத்துக் கொண்டவள், அதன் பலத்தில் எழுந்து நிற்க முயன்றாள். உடல் தள்ளாடியது.
உடனே அவளைத் தாங்க வந்தவனிடம், முகத்தைத் திருப்பியவள், பிடிவாதமாக நகர மறுத்த உடலை இழுத்துக்கொண்டு கழிவறை செல்ல இவனோ அவளுடைய செயலைக் கண்டு கோபமும், பொறுமையிழப்புமாக நின்றிருந்தான்.
ஆள் வளர்ந்த அளவு அறிவும் வளரவில்லை, மூளையும் வளரவில்லை. தனக்குள் எண்ணிக் கொண்டவனுக்கு ஆயாசமானது.
அவள் மீது கோபம் வந்தாலும், எப்படி வேண்டுமானாலும் போய்த் தொலை என்று எண்ணி விலக முடியவில்லை. அவனையும் மீறி இதயம் பதறுகிறது. இத்தனை சிரமப்படுகிறாளே என்று கலக்கமாகவும் இருக்கிறது. என்ன செய்வது. இவளை வைத்துக் கொண்டு…’ எரிச்சலுடன் நினைக்கும் போதே உள்ளே தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
அடுத்து அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் அவனைப் பார்க்காமல் படுக்கையில் வந்து அமர்ந்து சுவரைப் பார்த்தவாறு,
“எவ்வளவு நேரமாக, இங்கே இருக்கிறேன்..?” என்றாள்.
அவனோ பதில் சொல்லாமல் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அமைதியாக நின்றிருக்க, அவன் பதில் சொல்லாததால் ஏற்பட்ட எரிச்சலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேய நறுமை.
“உங்களிடம்தான் கேட்கிறேன். எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறேன்…”
“ஓ… நீ என்னிடமா கேட்டாய். சாரி, அந்த மேசை கதிரையிடம் கேட்கிறாயோ என்று… நினைத்தேன்” எரிச்சலும் கிண்டலுமாகச் சொல்ல, அவளுடைய உதடுகள் கோபமாக சுளிந்து மீண்டு,
“உயிரில்லாத எதுவும் மனிதன் பேசுவதைக் கேட்பதில்லை. இங்கே உயிரோடு இருப்பது நீங்கள் மட்டும்தானே. அப்படி என்றால் நான் உங்களோடு தான் பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். புரியவில்லை என்றால் நீங்களும்…” என்று முடிக்காமல் இழுத்தவாறு அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ உதடுகளைப் பிதுக்கி,
“இங்கே உயிரோடு இருப்பது நான் மட்டும் இல்லையே… நீயும்தானே. ஒரு வேளை நீயே உன்னிடமே பேசியிருக்கலாம்…” என்றான் அதே கிண்டலுடன். அதைக் கேட்டதும் அவனைப் பார்த்து முறைத்தறவள்,
“என்னிடமே பேசுவதற்கு நான் என்ன பைத்தியமா?” எரிச்சலுடன் கேட்டவள், வேகமாகப் பேசியதில் இருமல் வர, சற்று நேரம் இருமினாள். அதையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் இருமி முடித்ததும்,
“அதில் வேறு சந்தேகம் இருக்கிறதா உனக்கு?” என்றான் நக்கலாக. .
அதைக் கேட்டதும் கொதிநிலைக்குச் சென்று விட்டாள் நேயநறுமை.
“யாரைப் பார்த்துப் பைத்தியம்… கொக்கு… கொக்கு…” என்று அடித் தொண்டையிலிருந்து தொடராய் இருமத் தொடங்க, சட்டென்று அவளை நெருங்கியவன், அவளுடைய நெஞ்சை அழுத்தமாக வருடிக் கொடுத்து, பின் முதுகைத் தட்டி,
“அதுதான் பேச முடியவில்லையே… பிறகு எதற்குச் சிரமப்படுகிறாய்…” என்றான் கண்டிக்கும் குரலில்.
அவனுக்கு அது தப்பாகத் தெரியவில்லைதான். தொடர்ந்து இருமும் அவளுடைய நிலை அறிந்து தன்னை மீறி எழுந்த பதட்டத்தில்தான் அவளுடைய நெஞ்சை அழுத்தமாக வருடி விட்டான். அந்த நேரத்தில் அவள் ஒரு பெண் என்கிற எண்ணம் அவன் சிந்தையைத் தொடவே இல்லை. ஆனால், நேயநறுமைதான் விக்கித்துப் போனாள்.
உள்ளே எடுத்த மூச்சை விட மறந்தவளாக அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ,
“யு… ஓக்கே நவ்…? வைத்தியரை அழைக்கவா?” என்றான் கரிசனையாக. கேட்டவனுக்கு அப்போது தான் தான் செய்யும் காரியமே புரிந்தது. அதிர்ச்சியில் விழிகள் விரிய அவளை வெறித்தவன், மின்னல் விரைவோடு தன் கரத்தை இழுத்து எடுத்துச் சட்டென்று ஓரடி தள்ளி நின்று,
“ஐ… ஐ ஆம் சாரி… நீ… இருமியதும்… நான்…” அவன் தடுமாறி நிற்கையில் நல்ல வேளையாக அவனைக் காப்பாற்றக் கடவுளே அனுப்பிவைத்தது போலப் புயலாக அம்பிகாவும் தேவசகாயமும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களின் முகத்தில் அச்சம் அப்பட்டமாகத் தெரிந்தது.
தங்கள் மகள் சிவந்த முகம் தவிர மற்றும்படி நன்றாக இருப்பதைக் கண்டதும்தான் இருவருக்குமே மூச்சு சீராக வந்தது. அங்கே நின்றிருந்த ஆதிய துலனைக் கண்டதும் ஓடிவந்து அவனுடைய கரத்தைப் பற்றிக்கொண்டார் தேவசகாயம்.
“என்னப்பா நடந்தது…” என்றார் பதட்டத்தோடு.
“மூச்சுத் திணறல் அத்தை… அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவசர ஊர்தியை வரவழைத்து இங்கே அழைத்து வந்தேன்…” என்று சொல்ல அவனை நன்றியோடு பார்த்தார் அம்பிகா.
“மிக மிக நன்றி ஆதி… இவளுக்கு மழை சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. மறுநாளே மூச்சுத் திணறல் என்று அவதிப் பாடுவாள். நனையாதே என்று சொன்னாலும் கேட்பதில்லை…” கோபமாகச் சொன்னவர் திரும்பி தன் மகளைப் பார்த்து முறைத்தார்.
“அதற்குத்தான் பஃப் வைத்திருந்தாயே… அதை இழுத்திருக்கலாமே…” தாய் கண்டிப்புடன் கேட்க,
“ப்ச்… அது முடிந்து விட்டதுமா… கவனிக்க வில்லை…” என்றாள் தாயைக் கண்டதும் உடனே பிறந்த செல்லச் சிணுங்கலோடு.
அது என்னவோ, பெற்றவளைக் கண்டால் கிழவி கூட குழந்தையாகிப் போகும் போல்.
மகள் சொன்னதைக் கேட்டதும், அந்த நிலையிலும் மகளின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தார் அம்பிகா. அவருக்கு இன்னும் உடல் நடுக்கம் நின்றபாடில்லை. அவள் மருத்துவமனையில் என்பதை ஆதியதுலன் அலைபேசியில் அழைத்துச் சொன்னதும், ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு வேலைத்தளத்தில் அனுமதிகேட்டு, அப்படியே தேவ சகாயத்தையும் இழுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டார்.
தாய் முதுகில் ஒரு மொத்து வைத்ததும்,
“அவுச்… அம்மா… வலிக்கிறது..” அழத் தயாராக, உடனே குறுக்காக வந்தார் தேவசகாயம்.
“அம்பி.. என்ன காரியம் செய்கிறீர்கள். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையின் மேல் கை வைக்காதீர்கள் என்று. கேட்கவே மாட்டீர்களா?” மனைவியிடம் கோபமாகக் கேட்கவே, திரும்பித் தன் கணவனை முறைத்த அம்பிகா,
“பேசாதீர்கள்.. இவ்வளவு பொறுப்பில்லாமல் இவள் இருப்பதற்குக் காரணம் நீங்கள்தான். எங்களுக்கு என்ன தேவையென்றாலும் பார்த்துப் பார்த்து வாங்கத் தெரிகிறது தானே. மூச்சிழுப்புக்கு வேண்டிய மருந்து முடிந்துவிட்டது என்றால், அதை வாங்கி வைக்கத் தெரியாதா? எத்தனை முறை இதனால் அவதிப்பட்டிருக்கிறாள்…? அப்ப கூடவா புத்தி வரவில்லை…? அதையும் நானா சொல்ல வேண்டும்? இப்போது பாருங்கள் யார் சிரமப்படுவதென்று…” படபடவென்று பொரிய. தேவசகாயமோ தலையைச் சொரிந்தார்.
“அதற்காக உடல் நலமில்லாத பிள்ளையை அடிப்பதா? என்ன அம்பி நீங்கள்…” என்றவர் மகளை இழுத்து வயிற்றோடு அணைத்துக் கொள்ள, தந்தையின் இடையை அணைத்து சலுகையுடன் அவர் வயிற்றில் தலையைப் புதைத்து, இன்னொரு நாடகத்தை அவள் அரங்கேற்ற ஆரம்பிக்க, ஆதிய துலனுக்கு அங்கே தான் சற்று அதிகப்படி என்று தோன்றியது.
“சரி அத்தை… நீங்கள்தான் வந்து விட்டீர்களே. இனி நான் எதற்கு…? நான் புறப்படவா?” மெதுவாக அவன் கேட்க, அப்போதுதான் அவன் அங்கே இருப்பதே இருவருக்கும் உறைத்தது.
“சாரிபா… உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை… நீ இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” அம்பிகா விழிகள் கலங்கச் சட்டென்று அவரை நெருங்கி அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டான் ஆதியதுலன்.
“என்ன அத்தை இது… நான் இல்லாமல் போயிருந்தால் வேறு யாரும் அந்த இடத்திலிருந்து உங்கள் மகளைக் காப்பாற்றி இருப்பார்கள். இதற்குப் போய்க் கலங்கலாமா?” என்றவன், மெதுவாக அவரை விடுவித்து,
“சரி அத்தை நான் கிளம்புகிறேன்?” என்றவன் தயக்கத்தோடு நேயநறுமையைப் பார்த்தான். அவளோ வேண்டும் என்றே அவனைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக்கொள்ள. அந்த நிலையிலும் அவனுக்குச் சிரிப்பு வரவே செய்தது.
‘இவள் எப்போது வளர்ந்து, எப்போது…’ நினைத்துக்கொண்டு வந்தவன், சட்டென்று தன் நினைவை ஒதுக்கிவிட்டு வெளியே வந்தான். வந்தவனின் நினைவில் அன்று நடந்தது நினைவுக்கு வந்தது.
அவளுக்குக் காய்ச்சல் என்றதும், அப்படியே அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் முன்னறையில் அமர்ந்திருந்தவனின் காதில், அவளுடைய அறையில் எதுவோ விழும் சத்தம் கேட்கப் பதறி எழுந்தவன், மின்னல் விரைவுடன் அவள் தங்கி இருந்த அறைக்கு முன்பாக வந்து நின்று கதவைத் தட்டினான்.
“நறுமை… கதவைத் திற…” பல தடவை தட்டி அழைத்தும் உள்ளேயிருந்த சத்தம் வராமல் போக, ஏனோ இவனுடைய இதயம் வாய்க்குள் வந்து துடித்தது.
அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாகக் கதவைத் திறக்க, நல்ல வேளை கதவு திறந்து கொண்டது.
உள்ளே சென்று பார்த்தால், நேயநறுமை தரையில் குப்புற விழுந்திருந்தாள். கூடவே அவளிடம் இருந்து ஊசிங் சத்தம் கேட்க, அவளுடைய நிலை சரியில்லை என்பதை உடனே புரிந்துகொண்ட ஆதியதுலனுக்கு அதற்கான முதலுதவி என்ன என்று தெரியாமல் கைவைக்க அச்சமாக இருந்தது. தாமதிக்காமல் அவசர ஊர்தியை அழைத்து விட்டு, மறு கணம் அவளைத் தூக்கிப் படுக்கையில் அமர வைத்து, அவளுடைய முதுகைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்த முயன்றான்.
அவளோ அமரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் திணறியவளாய் அவனை நோக்கிச் சரிய அவளை வயிற்றோடு தாங்கிக் கொண்டவனாக,
“ஈசி.. ஈசி… டேக் எ டீப் பிரத்…” என்று அவளுக்குச் சொன்னவன், ஒற்றைக் கரத்தால் அவளை அணைத்தவாறு மறு கரத்தால் அவளுடைய முதுகை நீவி விட, நேயநறுமையோ, தண்ணீருக்குத் துடிக்கும் மீனாக, சுவாசத்திற்காகத் துடித்துக் கெண்டிருந்தாள். அவளுடைய அந்த நிலையைக் காணும் சக்தியில்லாதவனாக,
“உ… உன்னுடைய பஃப் எங்கே…” என்றான் தவிப்பாக.
“அ… அ.. அது… மு.. முடிந்து விட்… டது…” அதைச் சொல்வதற்குள் செத்துப் பிழைத்தாள் அவள். அதைக் கேட்டவனுக்குக் கோபம் வந்தது. மூச்சிழுப்பு நோய் இருக்கிறது என்று தெரியும்தானே. இதைப் பார்த்து வாங்கி வைப்பதில்லையா? அப்படி என்ன அலட்சியம். கோபமாக நினைத்தாலும், அதை அவளிடம் காட்ட முடியாதவனாக,
“ஓகே… ஓகே… அவசர ஊர்தியை அழைத்து இருக்கிறேன். எந்த நேரமும் அவர்கள் வரலாம்…” அவன் சொல்ல, அவன் வயிற்றிலிருந்து தன் முகத்தை விலக்காமலே அவன் கரத்தை இழுத்துத் தன் நெஞ்சில் வைத்து,
“பிளீஸ்… ஏ… தா….வது செய்…யு…ங்க…ள்… எ… ன்…னால்… மு… டி…ய… வி…ல்லை.. சா…க.. போ..கி..றேன்…” அவள் துடிக்க, அவசரமாக அவளுடைய நெஞ்சை நீவி விட்டவன்,
“உனக்கு ஒன்றுமாகாது நறுமை… இன்னும் கொஞ்ச நேரத்தில் மருத்துவமனை போய்விடலாம்… சரியா..” அவன் சொல்ல, அவளோ கண்களில் கண்ணீர் வழிய, உயிர் போகும் தவிப்போடு,
“சா… சாரி… நான்… அப்போ..தே… உங்கள்… பேச்சைக்… கே… கேட்டிருக்க… வேண்டும்…” என்றவள் பற்களைக் கடித்து விழிகளை அழுந்த மூடி, “மு… முடி..ய… வில்லை… ம்… ம்… சே…வ்… மி…” சொன்னவள் அதற்கு மேல் முடியாமல் விழிகள் சொருக ஒரு பக்கமாகச் சரிந்தாள்.
அவள் மயங்கிய விதம் கண்டு பயந்து போனான் ஆதியதுலன். சட்டென்று அவளுடைய தலையை ஒரு கரத்தில் தாங்கி, அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தவன், அவளை மார்போடு அணைத்து,
“நறுமை.. இங்கே பார்… நறுமை…” அவளுடைய கன்னத்தைத் தட்டி அவளை எழச் செய்ய முயன்றபோதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அவனையும் மீறிக் கண்கள் கலங்க, அவளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து செல்லவும் முடியாமல், செல்லாமலிருக்கவும் முடியாமல் தவித்தவன், மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு வாசலை நோக்கிப் பாய்ந்தான்.
வாசலில் துணை மருத்துவர்கள்தான் நின்று இருந்தார்கள். அவர்களைக் கண்ட பின்தான், இவனுக்குச் சீராக மூச்சு வந்தது,
அவசரம் புரிந்து விரைந்து உள்ளே வந்தவர்கள், அவளைப் பரிசோதித்துவிட்டு உடனே முதலுதவியைச் செய்துவிட்டு, அவளையும் அவனையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்கள்.
அவளுக்குச் சிகிச்சையை முடித்து, ஒன்றும் இல்லை, நன்றாகிவிட்டாள் என்று மருத்துவர்கள் சொல்லும் வரைக்கும், அவனுடைய உயிர் அவன் கரங்களில் இல்லை. வைத்தியர் வந்து உள்ளே போய்ப் பார்க்கலாம் என்று சொன்ன பிறகுதான், சீராகவே மூச்சு விட்டான்.
இதோ இப்போதும் அவள் விழிகள் சொருக மயங்கிய விதத்தை நினைக்கும் போதே உள்ளே எதுவோ ஆட்டம் கண்டது. சற்று நேரம் அவனை ஒரு உலுப்பு உலுப்பிவிட்டாளே. இராட்சசி…’ மனதோடு திட்டியவாறு மருத்துவமனையை விட்டு வெளியே வருவதற்குத் தலைப்பட்டவன், எதுவோ அவன் கவனத்தைக் கவர சட்டென்று நின்றான். புருவங்கள் சுருங்கக் குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான். அங்கே சற்றுத் தள்ளி, அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் காத்திருப்புப் பகுதியில், ஒரு ஓரமாகக் கையில் தலையை வைத்தவாறு அமர்ந்திருந்தாள் நேரிழை.
சகோதரியின் நிலையை அறிந்து வந்திருக்கிறாள் என்று எண்ணியவனுக்கு, நேயநறுமையை வந்து பார்க்காமல் ஏன் இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள்? அதுவும் அவசரச் சிகிச்சைப் பிரிவில்? கேள்வி எழ, அவளை நோக்கிச் சென்றான் ஆதியதுலன்.
“நேரிழை?” இவனுடைய அழைப்பு கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த நேரிழையின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவள் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய முகம் வெளிப்படையாகச் சொல்ல, புருவங்களைச் சுருக்கினான் ஆதியதுலன்.
“நேரிழை… இங்கே என்ன செய்கிறாய்?” என்றான் குழப்பமும் கேள்வியுமாக. உடனே புன்னகைத்தவள்,
“என்னுடைய தோழி ஒருத்தி, திடீர் என்று மயங்கி விழுந்துவிட்டாள். பரீட்சை என்பதால் மன அழுத்தம் போல. அதுதான் அழைத்து வந்தேன். எ.. என்னை விடுங்கள். நீங்கள் எங்கே இங்கே… உங்களுக்கு ஒன்றும் இல்லையே…” திகைப்பும் கவலையுமாகக் கேட்க,
“எனக்கு ஒன்றுமில்லை நேரிழை… உன் அக்காவுக்குத்தான்…” அவன் முடிக்கவில்லை, இவளுடைய முகத்தில் பதட்டம் அப்பட்டமாகவே தெரிந்தது.
“அ… அக்காவுக்கு என்ன? கேட்கும் போதே குரலில் அதீத பதட்டம் தெரிந்தது.
“உன் அக்காவுக்குத் திடீர் என்று மூச்சுத் திணறல்” சொன்னவனை அதிர்ச்சியோடு ஏறிட்டவள்,
“ஐயோ..! இப்போ அக்கா எங்கே? எந்தப் பகுதியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள்…?” என்று கேட்டவள், இருக்கையிலிருந்த தன் கைப்பையை எடுத்துத் தோள்களில் போட்டுக்கொண்டு கேட்க, இவனோ,
“ரிலாக்ஸ்.. இப்போது உன் அக்காவுக்கு ஓரளவு பரவாயில்லை. உன் அம்மாவும், அப்பாவும் வந்து விட்டார்கள்… அக்காவோடுதான் இருக்கிறார்கள். நீ போய் பார்…” என்று அவன் சொல்ல, அவனிடம் விபரங்களைக் கேட்டறிந்து ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து செல்ல, மீண்டும் வாசல் பக்கம் திரும்ப முயன்ற ஆதியதுலனின் விழிகளில் பட்டது நேரிழை அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்து இருக்கையிலிருந்த மருத்துவக் கோப்பு ஒன்று.
“அடடே… இதை இங்கே விட்டுவிட்டுச் செல்கிறாளே…” குனிந்து அந்தக் கோப்பை எடுத்தவன், அதை அவளிடம் கொடுப்பதற்காகத் திரும்ப, நேரிழையைக் காணவில்லை.
‘சரி பிறகு கொடுக்கலாம்…’ என்று தனக்குள் நினைத்தவனாக, அந்தக் கோப்போடு அவன் செல்ல முயன்ற நேரம்,
“நேரிழை… நேரிழை தேவசகாயம்…” என்கிற ஒரு தாதியின் அழைப்பில் தடை போட்டது போல நின்றான் ஆதியதுலன்.
17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…
16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…
15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…
16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…