Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 16

16

மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு என்று இருமியவாறு முகம் சிவக்க, கண்கள் வீங்கிய நிலையில் எழுந்தவளைக் கண்டு நெரிழை பதறிப் போனாள்.

“அக்கா… காய்ச்சலா…”

“ப்ச்… இப்போது எதற்குப் பதறுகிறீர்… நேற்று மழையில் நனைந்தது… சளி பிடித்து விட்டது… கொக்கு.. கொக்கு..” என்று எரிச்சலுடன் சொன்னவள், மூக்கை உறிஞ்ச, மூத்தவளை முறைத்தாள் நேரிழை.

“எதற்கு இப்போது கோபப்படுகிறீர்? உம்முடைய நன்மைக்குத்தானே கேட்டேன். நேற்று கடைக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து ஒரு மாதிரிதான் இருக்கிறீர். என்ன பிரச்சனை…? ஆதியோடு சண்டை ஏதாவது பிடித்தீரா?” கேட்ட தங்கையை அந்த நிலையிலும் முறைத்தாள் நேயநறுமை.

“நான் எதற்கு அந்த ஆளோடு சண்டை பிடிக்க வேண்டும். அவர் யார் எனக்கு…?” பொங்கிய ஆத்திரத்துடன் கேட்க இடையில் கைவைத்தவாறு சகோதரியை ஒரு மாதிரிப் பார்த்தாள் நேரிழை.

அப்போ அவள் சந்தேகப்பட்டது சரிதான். இவளுக்கும் ஆதிக்கும் இடையில் ஏதோ வாக்கு வாதம் நடந்திருக்கிறது. இதில் அவள் தலையிட முடியாது. நேயநறுமையாகவே தன்னைத் தேற்றிக் கொண்டால்தான் உண்டு.

“சரி… அதை விடும்… உமக்கு மழை ஒத்துக் கொள்ளாது என்று தெரியும் தானே. பிறகு ஏன் நனைந்தீர்…” கேட்ட இளையவளை எரிச்சலுடன் பார்த்தவள்,

“ம்… வேண்டுதல்…” என்றாள் எரிச்சலோடு.

“என்ன நக்கலா? இந்த நிலையிலும் அது குறையவில்லை பாருமேன்” சொன்ன இளையவள், மறக்காமல் சகோதரியின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

“லேசாகச் சுடுகிறது அக்கா…”

“ப்ச்… டைலனோல் போட்டால் சரியாகிவிடும்….” என்றவளுக்கு அப்போதுதான் தங்கை வெளியே செல்லத் தயாராக இருப்பது தெரிந்தது.

“வெளியே புறப்படுகிறாயா…” கேட்டவளுக்குப் பேசக் கூட முடியாமல் தொண்டை நொந்தது.

“ம்… இன்று முக்கியப் பாடம் இருக்கிறது. போகவேண்டும்…” என்றவள் பரபரப்புடன் எடுத்துச் செல்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்க சோர்வோடு எழுந்தாள் நேய நறுமை. உடல் காற்றில் பறப்பது போல இருந்தது. ஆனாலும் சமாளித்தவளாக வெளியே வந்தவளின் விழிகள் அவளையும் மீறி ஆதியதுலனைத் தேடியது. கூடவே தன்னையும் திட்டிக்கொண்டாள்.

இத்தனை மூக்குடைபட்ட பின்பும் அவனைத் தேடும் புத்தியை எந்தச் செருப்பால் அடிப்பது…? எரிச்சலோடு நினைத்தவள், நேராகக் கழிவறை சென்றாள்.

அவசர தேவையை முடித்துவிட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு மாரதன் ஓடிய களைப்பு.

தன் இயலாமையின் மீது எரிச்சல் கொண்டவளாக வெளியே வந்தவள், அமைதியாக இருக்கும் வீட்டைக் கண்டு,

“நேரு… அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போய்விட்டார்களா என்ன?” சோர்வோடு கேட்டாள் இவள்.

“ம்… அவர்களின் விடுப்பு முடிந்துவிட்டது…” என்றதும்,

“ஓ…” என்றவளுக்கு ஆதியதுலன் எங்கே என்று அறியும் ஆவல் வந்தது. முன்தினம் அவளைப் பற்றிய அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்டபின் அவன் முகத்தில் விழிப்பதில்லை என்கிற சபதமே எடுத்திருந்தாள். ஆனால் அந்தச் சபதமெல்லாம், அவன் முன்னால் காற்றோடு கரைந்துபோகும் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“அ… அவர் எங்கே?”

“அவரா? யாரைக் கேட்கிறீர்?”

“வேறு யார்? புதிதாக ஒருத்தர் இந்த வீட்டில் டோரா போட்டிருக்கிறாரே அவரைத்தான் கேட்கிறேன்” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டாள் நேரிழை.

“அவர் ஒன்பது மணி போல, வெளியே கிளம்பி விட்டார். எப்போது வருவார் என்று தெரியாது.” சொன்னவள் சற்றுத் தயங்கி நின்றாள். வீட்டில் யாருமில்லாத நிலையில், தனியாக இருப்பாளா? சின்னதாக முடியால் போனாலே, சாகப்போகும் நோயாளி போல நடந்து கொள்வாள். இதில் தனியே எப்படி இருப்பாள்? கவலை வர,

“நான் வேண்டுமானால் போகாமல் வீட்டிலேயே தங்கி விடவா?” கேட்டாள் நேரிழை. உடனே மறுத்தாள் இவள்.

“அதெல்லாம் வேண்டாம்… நான் என்ன சின்னக் குழந்தையா பார்த்துப் பார்த்துக் கவனிக்க…” கேட்டவளின் குரல் அவளையும் மீறிச் சிடுசிடுப்பாக வந்தது.

பின்னே இருக்காதா, எப்போதும் தோள் சாயும் தந்தை வீட்டில் இல்லை. இவளுக்குக் காய்ச்சல் என்றதும் பதறும் அன்னை வீட்டில் இல்லை. குறைந்தது கண்ணால் கண்டு ரசிக்கும் ஆதியதுலனும் வீட்டில் இல்லை. இதில் சிடுசிடுக்காமல் எப்படியிருப்பது?

“ம்கும்… உமக்கு முடியாமல் போனால் இந்த வீட்டுக்கு என்னாகும் என்று எனக்குத்தானே தெரியும்…” எரிச்சலோடு சொன்ன நேரிழை, தன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.

தங்கை வெளியேறியதும் மயான அமைதி இவளை மேலும் சோர்வுறச் செய்ய, முன்னறைக்கு வந்து நீளிருக்கையில் விழுந்து விழிகளை மூடினாள். உடல் எல்லாம் வலித்தது. குளிர் ஊடுருவி எலும்புகளை நசித்தது. ஆனாலும் எழுந்து சென்று சுவட்டர் போட உடல் அனுமதிக்கவில்லை.

சுருண்டு படுத்துக்கொண்டவளுக்கு டைலனோல் ஒன்றை எடுத்து அருந்தலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்கு எழுந்து சென்று மருந்துக் குப்பியை எடுத்து அதைத் திறந்து மருந்தை எடுத்து வாய்க்குள் போட்டுத் தண்ணீர் குடித்து விழுங்க வேண்டுமே. அம்மாடி எத்தனை பெரிய வேலை அது.

‘ம்கூம்… அம்மா வரட்டும். அவர்கள் வந்து எடுத்துக் கொடுத்ததும் குடித்து விட்டு அவர்களின் மடியில் படுத்து உறங்கினால் எல்லாம் சரியாகி விடும். ஐயோ இந்த அம்மா எப்போதுதான் வந்து தொலைப்பார்களோ…’

நினைத்தவாறே, உறங்க முயன்றாள். இப்படியே இரண்டு மணி நேரம் கடந்திருக்கும், கதவு மணி அடிக்கும் சத்தம் கனவில் கேட்டது. முதலில் அலட்சியமாக அந்தச் சத்தத்தைக் கேட்டும் கேட்காதவளாக உறங்க முற்பட, திரும்பவும் வீட்டு மணி அழைத்தது.

மெதுவாக விழிகளைத் திறந்தவளுக்கு ஒரு சில விநாடிகள் எடுத்தது சூழ்நிலை உறைக்க.

அப்போதுதான் முன்னறை நீளிருக்கையிலேயே விழுந்து படுத்துவிட்டது புரிந்தது. எழுந்தவள், அறைக்குப் போகலாம் என்று நினைத்தபோது திரும்பவும் மணி அடித்தது.

நேரத்தைப் பார்த்தால் ஒரு மணி என்றது கடிகாரம். அம்மா அப்பாவாக இருக்குமோ. இவளுக்குக் காய்ச்சல் என்று தெரிந்து ஓடி வந்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம்தான் திறப்பு இருக்கிறதே. ஒருவேளை ஆதியதுலனாக இருக்குமோ? அதுவரையிருந்த சோர்வு காணாமல் போக, முடிந்தளவு விரைவாகச் சென்று கதவை திறக்கும் போதே, இருமல் வந்தது.

வாயில் மேல் கை வைத்து மறைத்தவாறு இருமியவள் கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்தான் ஆதியதுலன்.

அவனைக் கண்டதும் அவளையும் மீறி விழிகள் மின்னின. கூடவே தடுமாற்றமும்.

ஐயோ, இப்படி முடி கலைந்து, கண்கள் சிவந்து முகம் அதைத்து, அதுவும் உடலை மறைக்கும் இரவாடையில் அசிங்கமாக அலங்கோலமாக இருக்கிறோமே. இந்தக் கோலத்தில் அவளைப் பார்த்தால் என்ன நினைப்பான்? அந்த நிலையிலும் அவளுக்கு உறுத்த, அவசரமாக விலகியவள், அவளை ஏறிட்டுப் பார்க்காமல் விலகிச் செல்ல முயல, அவள் நின்ற விதமும், சோர்வுற்ற உடலும், அவனைச் சற்று அசைத்துப் பார்த்தது போல,

“ஆர் யு ஓக்கே?” என்றான் மென் குரலில்.

அந்தக் குரல் அவளைச் சிலிர்க்க வைத்தாலும், பிறவிக்குணம், சட்டென்று இளகிப்போக விடவில்லை. கூடவே, கோபமும் வந்தது. அன்று நேரிழைக்குக் கரத்தில் சின்னதாகக் காயம் பட்டதற்கு எப்படித் துடித்தான். வெட்டுப்பட்ட அவளுடைய கரத்தில் விரல் வைத்து அழுத்தி, “பார்த்து வெட்டக் கூடாதா?” என்று திட்ட வேறு செய்தான். ஆனால் இவளுக்குக் காய்ச்சல் அடிக்கிறது. உடல் சோர்ந்திருக்கிறது கொஞ்சம் கூட அக்கறையில்லாதவனாக, உணர்ச்சி அற்ற குரலில் ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காகக் கேட்கிறான்.

பதில் சொல்லாமல் தன் அறைக்குப் போக முயன்றவளின் கரத்தைச் சட்டென்று பற்றிக் கொண்டான் ஆதியதுலன்.

அவனுடைய வெம்மையான கரம் அவளுடைய கரத்தைப் பற்றியதுதான் தாமதம், சுர்ரென்று இரத்தோட்டம் பாதம் முதல் தலை உச்சிவரை சென்று அடிக்க, தேகமோ அந்த உணர்ச்சியைத் தாங்க முடியாமல் சிலிர்த்து நடுங்கியது. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. அவனுடைய சுண்டுவிரல் பட்டால் கூட உடல் கிறங்கிப் போகிறது.

உதடுகள் கடித்தவள், அவனுடைய அந்தத் தொடு உணர்ச்சியைத் தாங்கும் சக்தியில்லாதவளாக, அவனுடைய பிடியிலிருந்து தன் கரத்தை விலக்க முயல, அவனோ அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.

காற்றிழுக்கும் சருகாக அவன் இழுத்த வேகத்தில் அவனை நோக்கித் திரும்ப, அவனுடைய கூரிய விழிகள் அவளை ஒரு விநாடி உற்றுப் பார்த்தன.

சிவந்து அதைத்த முகமும், வீங்கிய விழிகளும், அவள் நிலையைச் சொல்ல, சட்டென்று அவளுடைய நெற்றியில் புறங்கையை வைத்துப் பார்த்தான். சும்மா அவன் கரம் பட்டதற்கே தேகம் உணர்ச்சி வசத்தில் மதிமயங்கி ஆட்டம் காண்கிறது. இதில் நெற்றியில் வைத்துப் பார்த்தால் சொல்லவும் வேண்டுமா?. அவன் கரம் பட்டதும் உள்ளே ஏற்பட்ட உணர்ச்சிகளைத் தாங்கும் சக்தியில்லாமல் சட்டென்று அவள் விழிகளை மூட, அவனோ தன் கரத்தை நம்ப மாட்டாதவனாக, அவளுடைய கழுத்து வளைவிலும் பதிக்க அதுவரை மூடியிருந்த விழிகள் சட்டென்று விரிந்தன.

அவனுடைய அந்த அக்கறையில் வியந்தவளாகக் குறுகுறு என்று அவனுடைய முகத்தை ஊடுருவிப் பார்த்தாள். அவளுக்குள்ளே ஏற்பட்ட அந்தப் புது வித இன்ப உணர்ச்சியின் ஒரு பங்கு கூட அவனுக்குள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இவ்வளவு ஏன், அவன் முகத்தில் கொஞ்சம் கூட அவள் மீதான பரிதாபம் தெரியவில்லை. பதிலுக்கு உணர்ச்சியற்ற முகம்தான் தெரிந்தது.

“உனக்குக் காய்ச்சல் அடிக்கிறது.. மருத்துவமனை போகவில்லையா?” கேட்டான்தான். ஆனால் துளியளவும் அக்கறையில்லாத விசாரிப்பு. அவள் என்ன நேரிழையா? துடித்துப் போய் என்னாயிற்று என்று விசாரித்துப் பதற?

முன்தினம் அவன் பேசியது அட்சரம் பிசகாமல் நினைவுக்கு வர, அதுவரை அவன் மீதிருந்த மயக்கம் காணாமல் போனது. சட்டென்று அவனுடைய கரத்தை விலக்கியவள்,

“உங்களுடைய அக்கறை ஒன்றும் எனக்குத் தேவையில்லை…” சொன்னவள், அறைக்குச் சென்று கதவை அறைந்து சாற்றிவிட்டுப் படுக்கையில் இறுக்கமாக அமர்ந்து கொண்டாள்.

அவன் மீதிருந்த கோபத்தில், காய்ச்சலின் வலியும் சோர்வும் கூட மறந்து போனது.

அதே நேரம் வாசல் கதவருகே நின்றிருந்தவனுக்கு ஒரு வித தவிப்பு. முன்தினம் அவளைத் திட்டியதை வைத்து முகம் திருப்பிக்கொண்டு போகிறாள் என்பது புரியவே செய்தது. ஆனால் அவனும்தான் என்ன செய்வது. யாராவது ஒருவர் அவளுடைய தவறைச் சுட்டிக் காட்டத்தானே வேண்டும். நாகரீகம் பார்த்தால் அவள் திருந்துவது எப்போது? தனக்குள் நினைத்தவன், அவளைத் தொட்ட கரத்தை தூக்கிப் பார்த்தான்.

இன்னும் அவளுடைய உடலின் சூட்டின் எச்சம் கரங்களில் மிச்சம் இருப்பது போலத் தோன்ற இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. இவ்வளவு காய்ச்சல் அடிக்கிறதே. மாத்திரை எடுத்தாளா இல்லையா? தவித்தவனாய், அவளுடைய அறைக் கதவுக்கு முன்பாக வந்து நின்று கதவைத் தட்டினான் ஆதியதுலன்.

ஆனால் உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. மீண்டும் பலமாகத் தட்டியவன்,

“நறுமை… கதவைத் திற…” அவனுடைய அழுத்தமான ஆழமான குரல் அவளை உசுப்ப, சட்டென்று படுக்கையில் விழுந்து போர்வையால் தன்னை மூடிக்கொள்ள,

“நறுமை, உன்னைத்தான் கதவைத் திற… வா மருத்துவமனைக்குப் போய் வரலாம்…” என்றான் கதவைத் தட்டியவாறே. இவளோ இறுகிப் போய் அப்படியே படுத்திருக்க, பொறுமை இழந்தான் ஆதியதுலன்.

உடனே தன் கைப்பேசியை எடுத்தவன், அம்பிகாவை அழைத்தான். அவரோ கைப்பேசியை எடுக்காமலிருக்க, அடுத்துத் தேவசகாயத்தை அழைத்தான். அவருடைய கைப்பேசியும் அமைதியாக இருந்தது. உடனே நேரிழையை அழைத்தான். அவளும் அழைப்பை ஏற்கவில்லை. எல்லோரும் எங்கே போய்த் தொலைந்தார்கள்?

“ஷிட்…” உதட்டோரம் முனங்கியவனுக்கு எக்கேடும் கெட்டுப் போ என்று அவளை அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை.

அவளைத் தாயும் தந்தையும் எந்தளவுக்குத் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டவன்தானே. ஒரு பெருமூச்சோடு மீண்டும் கதவைத் தட்டியவன்,

“நறுமை… பிடிவாதம் பிடிக்க இது நேரமில்லை. கதவைத் திற…” இப்போது அவனுடைய குரல் சற்றுத் தளர்ந்திருந்தது. ஆனாலும் இவள் அசைந்தாள் இல்லை. இவனோ சட்டென்று குமிழைப் பிடித்துத் திருக உள்ளே கதவு பூட்டியிருந்தது.

பற்களைக் கடித்தான் ஆதியதுலன். எப்போது பிடிவாதம் பிடிக்கவேண்டும் என்றில்லையா? உடல் நோப்பட்டிருக்கும் இந்த நேரத்திலுமா இப்படி?”

“நறுமை… உன் பிடிவாதத்தால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. வலியில் வதங்குவது நீதான்… தயவு செய்து கதவைத் திற…” மீண்டும் அழைத்துப் பார்த்தான். அசைந்தாளா அவள்? மீண்டும் அமைதியாகக் கடக்கப் பொறுமை இழந்தான் ஆதியதுலன்.

அதற்கு மேல் அவளிடம் சென்று கெஞ்சிக் கேட்கவும் அவனுடைய தன் மானம் இடம் கொடுக்க வில்லை. உள்ளே சுரு சுரு என்று கோபம் எழுந்தது. அவனும் மனிதன் தானே. பொறுமை இழந்தவனாக, சரிதான் போடி என்பது போல, அதற்கு மேல் அங்கிருக்காமல் விலகிச் செல்ல, இவளோ இன்னொரு முறை அழைத்தால் கதவைத் திறக்கலாம் என்கிற முடிவோடு அவனுடைய அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

அதுவரை போர்வையால் முகத்தை மூடிப் படுத்திருந்தவள், அவனுடைய சத்தம் வராமல் போக, போர்வையை விலக்கிக் கதவைத் திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய மௌனம் ஏமாற்றத்தைக் கொடுக்க, எழுந்தமர்ந்தாள் நேயநறுமை.

போய்விட்டானா என்ன? ஏன் கொஞ்சம் நின்று கெஞ்சினால்தான் என்னவாம்? அந்த நிலையிலும் குழந்தைத்தனமாக எண்ணியவள், அவளையும் மீறி அவனைக் காணும் ஆர்வம் உந்தித் தள்ள, படுக்கையை விட்டு எழுந்து மெதுவாக நடந்து சென்று கதவைத் திறக்க, அங்கே வாசலில் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அழுத்தமான பாவனையோடு நின்றிருந்தான் ஆதியதுலன். ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள் நேயநறுமை.

நடு இரவில் பிடிபட்ட திருடன் போலத் திரு திரு என்று விழித்தவள், அவசரமாக உள்ளே போக முயல, சட்டென்று அவளுடைய மேல் கரத்தைப் பற்றியவன், தன்னை நோக்கித் திருப்பி, அவளை இழுத்துத் தன் மார்போடு மோத வைத்து, சோர்ந்திருந்த அவளுடைய விழிகளை அழுத்தமாகப் பார்க்க, இவளோ அந்தப் பார்வையில் மகுடிக்கு மயங்கிய பாம்பாக இமைக்கவும் மறந்து அப்படியே நின்றிருந்தாள்.

ஆவனோ அவளை முறைத்துப் பார்த்து,

“ஃபோர் காட் சேக்… பிளீஸ்… ஜஸ்ட் வன்ஸ் அக்ட் லைக் அன் அடல்ட்” என்று பற்களைக் கடித்துக் கோபமாகச் சொன்னவன், “நீ ஒன்றும் ஐந்து வயதுக் குழந்தையில்லை, கண்ணைக் கட்டிக் கோபம் போட்டு ஒதுங்கிப் போக. இருபது வயது நிறைந்த வளர்ந்த ஒருத்தி. கொஞ்சம் முதிர்ச்சியோடு நடந்து கொள்…” என்று அவன் சொல்லச் சட்டென்று அவனை உதறிவிட்டு விலகி நின்றுகொண்டாள் நேயநறுமை.

திரும்பவும் அவளை இதுதான் என்று அவன் தீர்மானிக்கிறான். எத்தனை தைரியம் அவனுக்கு? கோபம் வர,

“எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. எனக்குக் கை கால்கள் நன்றாகத்தான் இருக்கிறது. நானே பார்த்துக் கொள்கிறேன்…” சொன்னவள், கதவை அறைந்து சாற்றிவிட்டு கதவோடு சாய்ந்து நிற்க, இவன்தான் முகத்தில் அறை வாங்கிய உணர்வில் அப்படியே நின்றிருந்தான்.

அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. இதுவரை யாருமே இப்படி மரியாதை கெட்டதனமாக நடந்துகொண்டதில்லை. ஆனால் இவள்…?’ ஆத்திரத்தோடு நினைத்தவன், ‘எக்கேடும் கெட்டுப் போ… எனக்கென்ன வந்தது…’ என்கிற எரிச்சலோடு அங்கிருந்து விலகியவன், வாசல் கதவை நோக்கிச் சென்றான். கதவைத் திறந்து வெளியேற நினைத்தவனின் கால்கள், அவனையும் மீறித் தயங்கி நின்றன. வெளியேற முடியாமல் எதுவோ அவனைப் பிடித்து நிறுத்தியது.

பற்களைக் கடித்து, ‘ஜ்ஜ்ஜ்ஜ்’ என்றவன், கதவை அறைந்து சாற்றிவிட்டு மீண்டும் உள்ளே வந்து முன்னறையில் அமர்ந்து கொள்ள, அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்க்க அவனுடைய நண்பன்தான். அப்போதுதான் அவனைக் கீழே காக்கவைத்துவிட்டு, முக்கியமான கோப்பு என்றை எடுக்க வந்தது நினைவுக்கு வந்தது. இவளை இப்படியே விட்டுச் செல்ல முடியாது. தயங்கியவன், நண்பனின் அழைப்பை எடுத்துக் காதில் வைத்து,

“டேய் மச்சான்.. மன்னித்துவிடுடா.. இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலையை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா? கொஞ்ச அவசர வேலை வந்து விட்டது…” தயக்கத்துடன் சொல்ல, மறு பக்கம் என்ன சொன்னதோ, இவன் நன்றியோடு கைப்பேசியை அணைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.

எரிச்சல் வந்தது. கோபம் வந்தது. கூடவே பொறுமையும் குறைந்தது. எத்தனை முக்கியமான வேலை அவனுக்காகக் காத்திருக்கிறது. இவள் என்னவென்றால்… கோபத்தோடு தலை முடியை அழுந்த வாரி விட்டவன், மென் இருக்கையில் தலையைச் சாய்த்து விழிகளை மூடி அமர்ந்து கொள்ள, இங்கே அறைக்குள் நின்றிருந்த நேய நறுமையோ, அவன் கதவைச் சாற்றும் சத்தம் கேட்டதும், முகம் வாடினாள்.

அவன் வெளியே சென்று விட்டான் என்று புரிய மீண்டும் மனது தவித்தது. கூடவே முன்தினம் அவளை விமர்சித்ததை நினைத்துக் கோபமும் வந்தது. பேசிய பேச்சுக்கு இது வரை ஒரு மன்னிப்புக் கூடக் கேட்கவில்லையே. உடனே வா என்றதும் இவள் போய்விட வேண்டுமா? நான் என்ன நேரிழையா சட்டென்று விட்டுக் கொடுத்துச் சமாதானமாகப் போக. இது நேயநறுமை. இவளை யாராலும் அசைக்க முடியாது. அழுத்தமாக எண்ணியவள் மீண்டும் படுக்கையில் வந்து விழுந்தாள்.

ஆனாலும் மனது வெறுமையாக இருந்தது. தாயையும் தந்தையையும் மனம் தேடியது. குறைந்தது நேரிழையாவது வந்தால் நன்றாக இருக்கும் என்று தவித்தது மனது. அதற்கு மேல் அதிகம் யோசிக்க விடாமல் உறக்கம் பலமாக அவளை அழைத்துக் கொண்டது.

 

What’s your Reaction?
+1
8
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

1 day ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16B

16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…

3 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…

4 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16A

16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 14

14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை.…

1 week ago