நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம் கோபத்தில் சிவந்து போனது.
அங்கே இரண்டு மேசைகள் தள்ளி, கடையில் அவளை ஒரு மாதிரிப் பார்த்து விட்டுச் சென்ற இளைஞர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். சும்மா அமர்ந்திருந்தால் அவனுக்குப் பெரிதாக உறுத்தி இருக்காது. ஆனால் அத்தனை பேரின் பார்வையும், நேயநறுமையைத்தான் காணாததைக் கண்டது போலப் பார்த்துக்கொண்டிருந்தன.
எதற்காக அவளை இப்படி வெறித்துப் பார்க்கிறார்கள்? யோசனையோடு திரும்பிப் பார்த்தவனுக்கு உடல் திகு திகு என்று எரியத் தொடங்கியது.
அவள் அணிந்திருந்த மேலாடை மழையில் நினைந்திருக்க, அது அவளுடைய உடலோடு நன்றாக ஒட்டிக்கொண்டிருந்தது. அதுவும் அந்த ஆடை அவளுடைய உள்ளாடையின் அழகையும் பெண்மையின் வனப்பையும் அப்பட்டமாக வெளியே காட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் நேயநறுமைக்குத் தன் எழில், கவர்ச்சியாக நான்கு பேருக்கு விருந்தாகத் தெரிவது எதுவும் சுத்தமாக உறைக்கவில்லை. அவள் பாட்டிற்கு டோனட் சாப்பிடுவதும், காப்பி அருந்துவதுமாக அவனைப் பார்த்து,
“உங்கள் மீது எனக்கு நிறையப் பொறாமை இருந்தது அதுலன். அந்தப் பொறாமைதான் உங்கள் மீது வெறுப்பாக மாறிவிட்டிருந்தது…” என்று தன் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தாள். கடைசியாகச் சொன்ன எதுவும் அவனுடைய காதுகளுக்குள் விழ வில்லை. மாறாகத் திரும்பி அந்த நபர்களைத்தான் கொல்லும் வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் ஆதியதுலன் அதைக் கவனித்தான். அதில் ஒரு இளைஞனின் கையிலிருந்த கைப்பேசி இவள் பக்கமாக நிமிர்ந்திருந்தது. ஓரளவு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ஆதியதுலனின் இரத்தம் கொதிக்க, சடார் என்று எழுந்து நேயநறுமையை நெருங்கி, அவள் கழற்றி வைத்த கம்பளியாடையை எடுத்து அவள் மீது போர்த்திவிட்டுத் திரும்பி அந்த இளைஞர்களை முறைக்க, அவர்களோ தங்கள் திருட்டுத்தனம் பிடிபட்ட உணர்வில் அவசரமாகத் தங்களின் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். அதுவும் அந்தக் கைப்பேசியை வைத்திருந்த இளைஞனோ, உடனே அதைக் கவிழ்த்து தன் பான்ட் பாக்கட்டிற்குள் வைக்க முயன்றான்.
நொடிப்பொழுதில் அந்த இளைஞனை நெருங்கிய ஆதியதுலன், கொஞ்சம் கூட யோசிக்காமல், ஓங்கிப் பளார் என்று ஒரு அறை கொடுக்க, அந்த அறையில், டிம்ஹோட்டனே ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.
நேயநறுமையோ ஆதியதுலனின் அந்தச் செயலில் பதறியவளாக, மின்னலென அவனை நெருங்கி,
“ஆதி… என்னாச்சு?” என்று கேட்டவாறு அவன் கரத்தைப் பற்ற முயல, அந்தக் கரத்தை ஒரு உதறலில் விலக்கியவன், மறுகணம், அந்த இளைஞனின் பான்ட் பாக்கட்டிற்குள் கரத்தை விட்டு அந்தக் கைப்பேசியைக் கைப்பற்றிக் கொண்டான். அதை உயிர்ப்பிக்க முயல, கடவுச் சொல் கேட்டது.
அதை உயர்த்தி அந்த இளைஞனின் முகத்திற்கு முன்பாகப் பிடிக்கச் சிரமமின்றித் திறந்து கொண்டது கைப்பேசி.
“ஏய்… யார் நீ.. என்ன செய்கிறாய்… என் கைப்பேசியை மரியாதையாகக் கொடு…” அவனிடம் இருந்து பறிக்க முயல, அவனை விட, ஒரு அடி உயரமாக இருந்த ஆதியதுலன், அந்தக் கைப்பேசியை உயர்த்தி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தான். அங்கே ஈரத்தில் நனைந்து இளமையை அழகாகக் காட்டிக்கொண்டிருந்த நேய நறுமையின் எழிலை இரசித்து எடுத்திருந்தான் அந்த இளைஞன். அதைக் கண்டதும் ஆதியதுலனுக்குத் தாங்க முடியாத சீற்றம் எழுந்தது.
திரும்பி அந்த இளைஞனைக் கொல்லும் வெறியோடு பார்த்தவன், மறு கணம் தன் கரத்தாலேயே அந்தக் கைப்பேசியை ஒரு மடக்கு மடக்கி இரண்டாக உடைத்துவிட்டு, அதை ஓங்கித் தரையில் விசிறி அடிக்க, அது சிதறு தேங்காயாகச் சிதறிப் போனது. அப்படி இருந்தும் அத்திரம் அடங்காதவனாக, சப்பாத்துக் காலால் சிதறிய துண்டுகளை நசித்துச் சிதைத்தவன், அந்த இளைஞனின் சட்டையைப் பற்றித் தூக்கித் தன் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து, நெருப்பென எரியும் தீய விழிகளால் அந்த இளைஞனின் விழிகளைப் பார்த்தான். அக்கினிச் சீற்றத்தோடு சினந்து கிடந்த அந்த விழிகளைக் காண முடியாமல் அந்த இளைஞன் நடுங்க, இவனோ அவனை ஒரு உலுப்பு உலுப்பி,
“ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளைப் படம் பிடிப்பது எத்தனை பெரிய குற்றம் தெரியுமா? ஒரு பெண்ணை மதிக்கத்தெரியாத நீ எல்லாம் என்ன ஆண்? உன்னைப் போன்றவர்களைக் காணும் போதுதான், நான் ஒரு ஆணாகப் பிறந்ததை நினைத்து வெட்கப் படுகிறேன்.” தன் சீற்ற மூச்சு, எதிராளியின் முகத்தில் சீறிப்பாயக் கூறியவன், மறு கணம் அவனை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டுத் திரும்பி நேயநறுமையைப் பார்த்தான்.
அவளோ ஆதியதுலனின் அந்த சீற்ற முகத்தைக் கண்டு சர்வமும் நடுங்கப் பேசும் மொழி மறந்து நின்றிருந்தாள். இதுவரை ஆண்களின் கோபத்தை இத்தனை நெருக்கத்தில் கண்டதில்லை. தந்தை எப்போதும் புன்னகையுடன்தான் இருப்பார். இவளுடைய நட்பு வட்டமும் அப்படியே. இது தவிரக் கோபம் என்று பார்த்தால் தாய் மட்டும்தான். அதைக் கூட அவள் பெரிதாக எடுத்ததில்லை. உறவினர்கள் நட்பு வட்டத்தில் கூட இத்தனை அகோரத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கோபத்தைக் காண்பித்ததில்லை. முகம் இறுக, விழிகள் சிவக்க, ஒரு மாதிரி அவன் நின்றிருந்த கோலம் இவளைக் கதிகலங்கச் செய்தது.
அவனுடைய அந்தக் கோப அவதாரத்திற்கு எதிராகப் பேசவோ, ஏன் மூச்சு விடவோ பயந்தவளாக, முகம் வெளிறக் கால்கள் நடுங்க அவள் நின்றிருக்க, ஓரெட்டில் அவளை நெருங்கினான் ஆதியதுலன்.
கொஞ்சம் கூடச் சீற்றம் அடங்காதவனாக அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியேற, முதலில் அவன் செயலில் குழம்பித் தடுமாறி நின்றிருந்தவள், மறு கணம், அவனுடைய அதிகாரச் செயலில் கோபம் எழ, சட்டென்ற அவனுடைய கரத்தை உதறிவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்
இவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவன் இஷ்டத்திற்குத் தள்ளிவிடுகிறான். இழுத்து வருகிறான். நான் என்ன அவன் வீட்டுப் பொம்மையா என்ன? அதுவும் அவன் பற்றிய கரம் வலிக்க, அந்தக் கரத்தை அழுத்தி விட்டவாறு?
“ஷ்… என்னாச்சு… எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்? ஏன் அவனை அடித்தீர்கள்… காவல் துறைக்கு அவர்கள் முறையிட்டால் என்னாகும் தெரியுமா?” அவள் முடிக்கவில்லை, அருகேயிருந்த சுவரில் ஓங்கி ஒரு தட்டுத் தட்டி அவள் பேச்சை இடை நிறுத்தினான் ஆதியதுலன்.
அவனுடைய அந்த செயலில் திடுக்கிட்டுத் துள்ளி விலகி நிற்க, அவள் முன்பாக சுட்டுவிரலை உயர்த்திக் காட்டி,
“ஷ்… பேசாதே…” என்றான் கடுமையாக. சட்டென்று வாயை மூடியவள், அவன் சீற்றத்தில் மலங்க மலங்க விழித்தாள். இன்னும் எதற்காக இத்தனை கோபப்படுகிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? இப்படித்தான் நான்கு பேர் பார்க்கும் வகையில், உடம்பைக் காட்டுவாய்? பெண்தானே நீ…? பெண்களுக்கே இருக்கும் இயல்பான கூச்சம் கூட உனக்கு இல்லையா…? அங்கே ஒருத்தன் உன்னை வெறிக்கப் பார்த்துக்கொண்டு இருப்பது கூடவா உன் மண்டைக்குள் ஏறவில்லை? அப்படி உடம்பைக் காட்டுவதில் என்ன சந்தோஷம் உணக்கு?” அவன் சீற, அவனுடைய அந்தப் பேச்சில் ஆடிப்போனாள் நேயநறுமை. மறு கணம் விழிகள் விரிய, இருந்த அச்சம் மாயமாக மறைந்து போக, அங்கே ஆத்திரம் பொங்கி எழுந்தது.
யார் இவன். என்னை இதுதான் என்று தீர்மானிக்க இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? திகு திகு என்று நெஞ்சிலிருந்து எழுந்த கோபம் புத்தியில் அடிக்க,
“ஹெள டெயர் யு…? என்னை தீர்மானிக்க நீங்கள் யார்?” சீறியவள், பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்க முயன்றவளாக, “எதற்காக இப்படி உளறுகிறீர்கள்?” என்றாள் இழுத்துப் பிடித்த பொறுமையோடு.
அவள் கொஞ்சம் கூட தன் பக்கத்திலிருக்கும் தவறை உணர்ந்துகொள்ளவேயில்லை என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு அதை எப்படி அவளுக்குப் புரியவைப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை.
“மழையில் நனைந்த ஆடை உன் உடலோடு ஒட்டி, உன் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அதை ஒருத்தன் ஒளிப்பதிவு செய்கிறான், கொஞ்சமாச்சும் உடலை மறைத்து ஆடைகளை அணிந்து கொள்… என்று எப்படிச் சொல்வது? அவனுக்கு இப்படிப் பெண்களிடம் தரக்குறைவாகப் பேசித் தெரியாதே. பழக்கமுமில்லை. இயல்பான ஒதுக்கம், அவனுடைய வாயை மூடச் செய்ய,
“உங்களைத்தான் கேட்கிறேன்… என்னாச்சு? எதற்குப் பைத்தியம் போல உளறுகிறீர்கள்…?” என்றாள் கோபமாக.
அதைக் கேட்டவன், கோபத்தோடு பற்களைக் கடித்து எதையோ சொல்ல வந்தான். பின் சட்டென்று வாயை மூடிக்கொண்டான். ஆத்திரத்தில் வார்த்தைகள் எக்குத் தப்பாக வந்து விழுந்து விட்டால் அதை அள்ள முடியாது. ஆனால் அதை எப்படி அவளுக்குச் சொல்லிப் புரிய வைப்பது என்றும் தெரியவில்லை. எரிச்சலோடு நெற்றியை வருடிக் கொடுத்தவன், அவளை நிமிர்ந்து பார்த்து,
“நீ… எப்போதும் இப்படித்தான் அரைகுறை ஆடைகள் அணிவாயா?” என்றான் பொறுமையிழந்து.
“புரியவில்லை…”
“டாமிட்… நீ அணியும் ஆடைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறது” என்றான் பற்களைக் கடித்து.
“தொந்தரவு செய்கிறது என்றால்?”
“அத்தனை பேரின் கவனமும் உன் பக்கம்தான் இருக்கிறது…” அவன் சொல்லி முடிக்கவில்லை, இவள் முகம் மலர்ந்தது. இதில் பெருமை வேறு.
“ரியலி…?” கேட்டவள், பரபரவென்று அங்கும் இங்கும் பார்க்க, இவனுக்கோ ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று கொடுத்தால் என்ன என்பது போலத் தோன்றியது. பற்களைக் கடித்தவன்,
“இது தவறு என்று உனக்குத் தோன்ற வில்லையா?” என்றான் பொறுமையிழந்து.
“எது தவறு?” நிஜமாகவே அவளுக்குப் புரிய வில்லை அது.
“இப்படி… உடலைக் காட்டும் வகையில் ஆடைகள் அணிவது?” என்றான் கொஞ்சம் சங்கடமாக. அவளோ தோள்களைக் குலுக்கி,
“அதனால் என்ன? என்னுடைய உடல் இரசிக்கத் தக்க வகையிலிருப்பது எனக்கு மகிழ்ச்சிதானே… இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?” மேலைத்தேய நாகரிகத்தின் முட்டாள்தனம் பேச, இவனுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.
“எத்தனை பேர் இரசித்துப் பார்க்க?” சுள் என்று எரிந்து விழுந்தவனுக்கு, அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியவில்லை.
அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இலங்கை. ஆனால் இவள், மேற்கத்திய நாடு. ஆனாலும் மேற்கத்திய நாட்டில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் இத்தகைய ஆடைகளைத்தான் அணிகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பணம் படைத்த ஆண்களும் சரி, பெண்களும் சரி, ஒரு சமுகத்தில் நல்ல நிலையிலிருக்கும் பெண்களும் சரி, மிகுந்த நாகரிகமான முறையில்தான் ஆடைகளை அணிவார்கள். அவர்களைப் பார்க்கும் போது மரியாதை தானாக வரும். இப்படி தரக்குறைவானவர்கள்தான் நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடைகளை அணிந்து இதுதான் மேற்கத்திய நாகரீகம் என்று
அத்தனைப்பேரின் மனதிலும் பதியவைத்திருக்கிறார்கள். நாகரீகம் என்பது மற்றவர்களிடமிருந்து மதிப்பைப் பெற்றுக் கொடுக்கும் ஆடைகளே தவிர்த்து, ஆடை குறைப்பில்லை என்று இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? குழப்பத்தோடு விழிகளை மூடி ஆழ மூச்செடுத்து விட்டான். பின் அவளை அழுத்தமாகப் பார்த்து,
“ஆடை என்பது கவர்ச்சிக்கானது அல்ல. அது நம்மை அன்னிய சக்தியிடமிருந்து பாதுகாப்பதற்காக அணிவது. அது உனக்குப் புரிகிறதா இல்லை? இப்போது கொஞ்சத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா? மழையில் நனைந்ததால் உன் ஆடை ஈரமாகியிருந்தது. உன் அங்கங்கள்…” என்றவன் முடிக்க முடியாமல் திணறிவிட்டு, “அதை ஒருத்தன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தான். இதையே நீ கொஞ்சம் நல்லவிதமாக அணிந்து இருந்தால், யாராவது ஒருத்தரின் பார்வை தப்பாக உன் மீது பதியுமா?” அவன் கேட்க, இவளுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சிதான். தன்னை ஒருத்தன் ஒளிப்பதிவு செய்தானா? ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறு பக்கம், அதற்காக என்னோடு எதற்கு எகிறுகிறான் என்கிற கேள்வியும் எழுந்தது.
“அதற்கு நான் என்ன செய்வது? நானா அவனை ஒளிப்பதிவு செய்யச் சொல்லிச் சொன்னேன்? தவிர நல்ல ஆடை, கெட்ட ஆடை என்று ஏதாவது இருக்கிறதா என்ன?” என்றாள் எரிச்சலோடு.
“நீ இப்படி ஆடைகள் அணிந்தால், சும்மா இருப்பவன் கூட தப்பாகத்தான் பார்ப்பான்…” என்றான் சுள் என்று. பின் ஆழ மூச்செடுத்து விட்டு,
“நறுமை… எல்லா ஆண்களும் உன் தந்தை போல இருக்க மாட்டார்கள். நிறைய வக்கிர புத்தியோடும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ அணியும் அரைகுறை ஆடை மேலும் வக்கிர புத்தியைத்தான் தூண்டும்… இல்லையென்றால், உன் மீதிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை அடியோடு நீக்கிவிடும்” அவன் சொல்ல, ஏளனமாகச் சிரித்தவள்,
“கமான்… என்னுடைய அம்மா மாதிரியே உளறாதீர்கள். என்னுடைய ஆடையை வைத்துத் தான் ஒருத்தன் என்னுடைய குணாதிசயங்களைத் தீர்மானிக்கிறான் என்றால், அவனைப் பற்றி நான் அக்கறை கொள்ளத் தேவையில்லை.” அலட்சியமாகச் சொன்னவளை வெறித்துப் பார்த்தான் ஆதியதுலன்.
இதற்கு மேல் அவன் என்னதான் சொல்வது. அவனுக்கும் ஒரு வரைமுறை உண்டுதானே. பற்களைக் கடித்தவன்,
“நான் ஒன்றும் நாகரிக ஆடைக்கு எதிரானவன் இல்லை. ஆனால் அநாகரிக ஆடைக்கு முற்றாக எதிரானவன். நிறையப் பேருக்கு நாகரிகத்திற்கும் அநாகரிகத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஒருத்தர் அணியும் ஆடை அவர் மீது நன்மதிப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சாரி டு சே திஸ்… நீ அணியும் ஆடைகள்தான் உன் மீது நான் வைத்த மதிப்பையும் மரியாதையையும் தரம் தாழ்த்துகிறது. உன்னை நெருங்க விடாமல் செய்கிறது. ஒரு ஆணாக, என் நிலையிலிருந்து சொல்கிறேன், ஒரு
ஆணின் காமத்தைத் தூண்ட நீ அணியும் ஆடைகள்
உதவலாம். ஆனால் மதிப்பைப் பெற்றுக் கொடுக்க அவை தவறி விட்டன… நான் காட்டினால் நீ ஏன் பார்க்கிறாய் என்கிற இரகம் நீ… நீ காட்டினால் பார்க்கத்தான் செய்வேன் என்கிற ஆண் இனம் நான்… என்ன செய்யட்டும். நீ அணியும் ஆடைகளால், என் கவனம் உன்னிடம் செல்ல மாட்டேன் என்கிறது… அது உனக்குப் புரிகிறதா இல்லையா? அது எனக்குப் படுக்கைக்குக் காட்டும் சமிக்ஞை போலத்தான் தெரிகிறது நான் என்ன செய்ய? ” அவன் சொல்ல, அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் நேயநறுமை.
ஒரு வகையில் அவன் சொல்வது உண்மையே. அவள் அணியும் ஆடைகள், அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காக மட்டுமில்லை, அவளுடைய கவர்ச்சி ஆண்களை மயக்கும் என்கிற உள் நோக்கமும் இருக்கவே செய்கிறது. அதில் ஒரு திருப்தி. மகிழ்ச்சி. கர்வம். அதில் தவறு இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. அது இயற்கைதானே. ஆனால் அதுவே அவளை அவனிடமிருந்து தள்ளி வைத்திருக்கிறது என்பதை அவளால் நம்பவே
முடியவில்லை. அதுவும் படுக்கைக்கு அழைக்கும் சமிக்ஞை என்று விட்டானே. என்ன தைரியம் அவனுக்கு? அவனோடு புறப்படுகிறோம் என்று பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்தவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதை நினைத்து அவளால் தாள முடியவில்லை.
அவனை வெறித்துப் பார்க்க,
“உன் தங்கையோடு என்னால் இணைந்து பேச முடிகிறது. சிரிக்க முடிகிறது. ஆனால் உன்னோடு… நான் ஆசைப்பட்டாலும் உன்னை நெருங்க முடிய வில்லை நறுமை. நானும் முயற்சி செய்கிறேன். உன்னோடு நட்பாக இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், காட்… என்னதான் நெருங்க முயன்றாலும், உன்னுடைய செய்கையால் என்னைப் பல மைல் தொலைவுக்கு நிறுத்தி விடுகிறாய்… அருவெறுக்க வைக்கிறாய்… நான் இங்கே வரும் போது, ஏதேதோ நினைத்து வந்தேன். ஆனால்…” என்றவன், என்ன நினைத்தானோ தலையை உலுப்பி விட்டு,
“யு ஆர் வேஸ்ட்…” என்றான் தன்னை மறந்து. அதைக் கேட்டவளுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. கோபத்திலும் அவமானத்திலும் இதயம் பலமாகத் துடித்தது. முன்பு அவன் அருகே இருந்தால் ஒருவித கிளுகிளுப்பில் துடித்த இதயம், இப்போது பெரும் ஏமாற்றத்தில் துடிக்க, முகம் சிவந்தவளாக அவனை வெறித்தாள்.
எதையோ சொல்வதற்காக வாய் எடுப்பதும், பின் மூடுவதுமாக இருந்தவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
அவளுடைய ஆடை அணியும் விதத்தை வைத்துத்தான் இவன் நட்புக் கிடைக்கும் என்றால், அத்தகைய நட்பு எனக்குத் தேவையில்லை. ஆத்திரத்துடன் நினைத்தவள்,
“ஆடை என் தனிப்பட்ட சுதந்திரம். அதில் மூக்கை நுழைக்க என் அம்மாவுக்கே அதிகாரமில்லாத போது நீங்கள் யார் இதை என்னிடம் சொல்ல… நான் அணியும் ஆடைகள்தான் உங்களுக்கான நட்பைத் தீர்மானிக்கும் என்றால், அந்த நட்பு எனக்குத் தேவையில்லை…” ஆத்திரத்துடன் சொன்னவள், அவனை முறைத்தவாறே தன் கைப்பேசியை எடுத்து நேரிழையை அழைத்தாள்.
“நான் வாகனத்திற்குப் போகிறேன், விரைவாக வந்து சேர்…” இருவருக்குமே அது உத்தரவாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்க இப்போது ஆலங் கட்டிகள் விழுவது நின்றிருந்தாலும் மழை இன்னும் பெய்துகொண்டுதான் இருந்தது.
ஆனாலும் அது அவளைப் பாதிக்கவில்லை. மனமோ உலைக்களமாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. நட்பு என்பது மனம் சார்ந்தது. ஆனால் இவனோ உடை சார்ந்தது என்று தூக்கி எறிந்து விட்டானே. நினைக்கும் போதே சீற்றம் அணை உடைத்தது. என் ஆடைகளைத் தப்பாகச் சொல்ல இவன் யார். நான் இப்படித்தான் அணிவேன். பிடித்தால் பார்… பிடிக்கவில்லையா பார்க்காதே….’ கனன்ற ஆத்திரத்தோடு வண்டியை உசுப்பினான் நேயநறுமை.
உள்ளே எழுந்த மன அழுத்தத்தினாலோ என்னவோ உடல் குளிர்ந்து வருவதைக் கூட அவள் உணரவில்லை. கடைசியாக ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்தியவள் கைப்பேசியை எடுத்து நேரிழைக்கு அழைத்தாள்.
“இன்னும் ஐந்து நிமிடத்தில் டிம்ஹாட்டன் முன்னால் வண்டியை நிறுத்துவேன்… வந்துவிடு..” என்றவள் தங்கையின் பதிலைக் கேட்காமல் கைப்பேசியை அணைக்க, சகோதரியின் அந்தக் குரலைக் கேட்ட நேரிழைக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்து போனது.
உடனே டிம்ஹாட்டனை நோக்கி ஓடினாள் நேரிழை. அங்கே வாசலில் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செருகியவாறு கொட்டும் மழையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதியதுலன்.
அவனை நெருங்க, அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த ஆதியதுலன், நேரிழையைக் கண்டதும், தன் இறுக்கத்தைத் தளர்த்தி, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினான்.
“என்னாச்சு? ஏன் அக்கா திடீர் என்று புறப்படு என்றார்கள்?” இவள் கேட்க, உதடுகளைப் பிதுக்கியவன்,
“காரணம் என்ன என்று நீதான் உன் அக்காவிடம் கேட்கவேண்டும்…” என்றான் இவன் அமைதியாக. அந்த நேரம் கிறீச் என்கிற சத்தத்தோடு வண்டி வந்து நிற்க, சட்டென்று ஆதியதுலனின் கரத்தைப் பற்றிய நேரிழை,
“வாருங்கள் அதி… அக்கா மிகவும் கோபமாக இருக்கிறாள்… இந்த நேரம் அவளுடைய பொறுமையைச் சோதிப்பது நல்லதில்லை…” சொன்னவள் அவனை இழுத்துக் கொண்டு வண்டியை நோக்கி ஓட, அந்த நிலையிலும் நேயநறுமையின் விழிகள், ஆதியதுலனின் கரத்தைப் பற்றியிருந்த நேரிழையின் கரத்தின் மீதுதான் கோபத்துடன் படிந்தன.
மழை பெய்துகொண்டிருந்ததால் அவசரமாக ஆதியதுலனுக்கு பின் கதவைத் திறந்து விட்ட நேரிழை, தான் முன்பக்கத்தில் ஏறி உட்கார, அடுத்து ஒரு குலுக்கலோடு வண்டி வீடு நோக்கிப் பாய்ந்தது.
17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…
16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…
16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…
மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை.…