Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 14

14

கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த வண்டியோட்டியோ எதைப் பற்றியும் கவனமில்லாமல் தன் கரத்திலிருந்த கைப்பேசியில் எதையோ பார்த்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

திடீர் என்று ஒரு உருவம், பாதையைக் கடக்கும் என்று அந்த வண்டியோட்டியும் எதிர்பார்க்கவில்லை. எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த வண்டியோட்டி, பாதையில் ஒரு பெண் நடந்துவருவதை கண்டதும், அதிர்ந்து வண்டியின் தடையை அழுத்துவதற்குள்ளாக, அந்த வண்டி அவளை ஒரு உரசு உரசி விட்டுக் கடந்து சென்றிருந்தது.

என்ன ஏது என்பதை உணர்வதற்குள் தரையில் விழுந்திருந்தாள் நேயநறுமை.

அவளுக்குக் கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. என்னாச்சு? அவள் குழம்பித் தடுமாறி நிற்கையில் மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியிருந்தான் ஆதியதுலன்.

சட்டென்று அவள் முன்பாக முட்டி போட்டு அமர்ந்தவன், தரையில் விழுந்து கிடந்தவளின் தோள்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து,

“ஆர் யு ஓக்கே?” கேட்டவனின் குரலில் நடுக்கம் இருந்ததா என்ன? இல்லை நடுங்குவது போல அவளுக்கு மட்டும் கேட்டதா? குழப்பத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்க்க, அந்த விழிகளில் தெரிந்த பயத்தையும் பரிதவிப்பையும் கண்ட நேயநறுமைக்குத் தன் கண்களை நம்பவே முடிய வில்லை.

அவளுக்காக அவன் தவிக்கிறானா என்ன? உள்ளே எழுந்த உவகையுடன் அவனையே பார்த்து நிற்க,

“உன்னைத்தான் கேட்கிறேன் நறுமை! உனக்கு எதுவும் பெரிதாக அடிபடவில்லையே?” கேட்டவாறு அவள் கரங்களைப் பற்றி பயத்தோடு வருடிப் பார்த்தவன், திருப்தி வராதவனாக, முதுகையும் வருடியவாறு விழிகளால் அவள் தேகம் எங்கும் அலசி ஆராய்ந்தான். அஞ்சும்படி எதுவும் தெரிய வில்லை.

ஒரு பக்கம் நிம்மதி எழுந்தாலும், மறு பக்கம் அவளைத் தள்ளிவிட்டுச் சென்ற வண்டியின் மீது கடும் ஆத்திரம் பிறக்கத் திரும்பிப் பார்த்தான். அடித்துத் தள்ளி விட்டு அங்கேயே நிற்க அந்த வண்டியோட்டிக்குப் பைத்தியமா என்ன? கூட்டம் சேர்வது தெரியவும், அந்த இடத்திலிருந்து மாயமாகி இருந்தது வண்டி.

இதற்கிடையில், இவளுக்கு அடி பட்டதும் கூட்டம் சேர்ந்துவிட்டிருந்தது.

“ஆர் யு ஓகே…?” என்று அக்கறையோடு கேட்க,

“யா… ஐ ஆம் ஓகே…” என்று கேட்டவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு எழுந்தபோதுதான் முழங் கையில் வலி தெரிந்தது. உதடுகளைச் சுளித்தவள், வலித்த கரத்தை அழுத்திவிட, அதுவரை அமைதியாக நின்றிருந்த ஆதியதுலனுக்கு ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது.

அவனால் இன்னும் சற்று முன் நடந்ததிலிருந்து வெளியே வரவில்லை. இதயத்தில் சத்தம் காதில் கேட்க, உடலோ அவனையும் மீறி நடுங்கியது. அந்த வண்டி கொஞ்சம் வேகமாக வந்திருந்தாலும் இவள் மீது வண்டி ஏறியிருக்கும்.

அந்த நினைவே தூக்கிப்போட, ஆத்திரத்தோடு எழுந்து நின்றவன், மறு கணம், அவளையும் தூக்கி நிறுத்தி, அவளை ஒரு உலுப்பு உலுப்பி,

“நீ என்ன முட்டாளா? குழந்தையா? பாதையைக் கடக்கும் போது சுத்திவரப் பார்க்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவில்லை? மயிரிழையில் தப்பித்தாய்? இதுவே மொத்தமாக அடிபட்டால் என்னாகியிருக்கும்? யோசிக்க மாட்டாயா? எப்போது பார்த்தாலும் எல்லாவற்றிலும் அலட்சியம். அவசரம் கவனமில்லை… அப்படி அந்தக் கடைக்குப் போக வேண்டும் என்று என்ன அவசியம்?” சீற்றமாகக் கேட்க, அவனுடைய அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள் நேயநறுமை.

அவளுக்குமே நடந்த சம்பவம் அதிர்ச்சிதானே.

“நா… நான்… வந்து… அது…” அவள் தடுமாறி நிற்கையில், சுரீர் என்று அவளுடைய நடு மண்டையில் பலமாக ஒரு கொட்டு விழுந்தது.

“ஐயோ…! அம்மாவா?” பதறியவளாகத் தன்னைக் கொட்டியது யார் என்று திரும்பிப் பார்த்தாள். மீண்டும் நங் என்கிற கொட்டலோடு, ஒரு கடிய பொருள் தரையில் விழுந்தது.

“அவுச்…” வலியில் முனங்கியவள், தலையை அழுத்தி வருடியவாறு குனிந்து பார்த்தாள். பனிக் கட்டி. குழப்பத்தோடு அண்ணாந்து பார்க்க, கண்ணிமைக்கும் நொடியில், குளிரோடு ஊசியாய் குத்தும் மழைத் துளிகளுக்கு மத்தியில் பனிக் கட்டிகள் சடசடவென்று கொட்டத் தொடங்கின. இருவருமே பதறிப் போனார்கள்.

“காட்… ஆலங்கட்டி மழை…” முனங்கியவன், உடனே அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்து அவளை மார்பின் மீது போட்டு, தன் உள்ளங்கையை அவளுடைய தலையின் மீது வைத்து பக்கத்தில் இருந்த கடையை நோக்கி இழுத்துச் சென்றான். அதற்கிடையில் பலத்த காற்றோடு கடிய பனிக் கட்டிகளும் மழைத் தூறலும் அவர்களை ஒரு வழி பார்த்திருந்தது.

ஆதியதுலனோ முடிந்த வரை, தன் பெரிய கரங்களால் அவளை வளைத்துப் பிடித்துத் தனக்குள் புதைத்து, அந்தக் கடிய காலநிலையிலிருந்து காத்தவாறு இழுத்துச் சென்றான்.

யாராவது இந்த அவல நிலையில், வேறு எதைப்பற்றியும் யோசிப்பார்களா என்ன? ஆனால் நேயநறுமைதான், உலகத்திலேயே கண்டுபிடிக்க முடியாத விந்தையான பெண்ணாயிற்றே. அந்த நிலையில் கூட, அவனுடைய அணைப்பையும், அவன் உடல் சூட்டையும் உணர்ந்து கிறங்கி மயங்கி உருகிக் கிடந்தாள். இதய நாளங்களில் ஏஆர் ரஹ்மானின் மெல்லிசை தாறுமாறாகச் சுருதி தப்பி ஓடியது. வெளியே குளிர் தரும் காலம் கூட அவளுக்கு வெம்மையாக மாறிப்போக, அந்த ஆண்மையின் அணைப்பில் மொத்தமாகத் தன்னைத் தொலைத்தவளாக, அவனுக்குள் ஒடுங்கிக்

கொண்டாள். கிடைத்த வாய்ப்பைக் கைவிட விரும்பாது அவனுடைய இடையைத் தன் மென் கரங்களால் வளைத்துப் பிடித்து மேலும் அவனுக்குள் ஒட்டிக்கொண்டாள். அந்த நிலையிலும், வலிக்கச் செய்யும் ஆலங்கட்டி மழை கூட அழகான நறுமணம் வீசும் மலர்களாக மாறிச் சிலிர்க்க வைத்தது.

இவள் இப்படித் தன்நிலை கெட்டுக் கிடக்க, ஆதியதுலன் ஒருமாதிரி அவளை இழுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த கடையின் தாழ்வாரத்திற்குள் நுழைந்திருந்தான்.

தனக்குள் முழுதாய் புதைந்திருந்தவளை மெதுவாக விட்டு விலக, அதுவரை தன்மதி கெட்டுக் கிடந்தவள், அவன் விலகியதும் சுயம் பெற்றவளாக விலகிய நேரம், காயம்பட்ட முழங்கையில் சுரீர் என்கிற வலி.

“ஷ்…” என்கிற முணங்கலோடு வலித்த இடத்தைத் தேய்த்து விட,

“என்னாச்சு?” என்றான் இவன் அக்கறையாக. வலியில் உதடுகளை அழகாகச் சுழித்தவள்,

“விழுந்ததில் அடிபட்டு விட்டது. கொஞ்சம் வலிக்கிறது” சொல்லும்போதே ஆதியதுலன் அவளை நெருங்கிவிட்டிருந்தான்.

“எங்கே வலிக்கிறது உனக்கு…?” கேட்டவனின் குரலில் நிச்சயம் பரிதவிப்பு இருந்தது.

நேயநறுமை பதில் சொல்ல வாய் எடுத்தபோது அவளுடைய கைப்பேசி அடித்தது.

“எக்ஸ்கியூஸ் மி…” என்றவள் உடனே கைப்பேசியை எடுத்துப் பார்க்க நேரிழைதான் அழைத்திருந்தாள். உடனே உயிர்ப்பித்துக் காதில் வைக்க,

“அக்கா… உமக்கும் ஆதிக்கும் எந்தப் பிரச்சனையுமில்லையே… பத்திரமாக இருக்கிறீர்கள் தானே…” பதட்டத்தோடு கேட்க, மெல்லிய புன்னகையைச் சிந்தினாள் நேயநறுமை.

“எங்களுக்கு ஒன்றுமில்லை நேரு… நீர் என்ன செய்கிறீர்? பத்திரமாகத்தானே இருக்கிறீர்?”

“ம்… எங்களுக்கு ஒன்றுமில்லை. நாங்கள் இங்கே நைக்கி கடைக்குள் நிற்கிறோம்…” என்றாள் இளையவள். நிம்மதியோடு பயங்கரமாகச் சுழன்று கொட்டும் ஆலங்கட்டி மழையைப் பார்த்தவாறே,

“இப்போதைக்கு மழை விடும் போலில்லை நேரு…” சொன்னவளின் பார்வையில் அவர்கள் நின்றிருந்த கடையை அண்டிச் சற்றுத் தொலைவில் டிம்ஹட்டன் இருப்பது தெரிந்தது.

“சரி அக்கா… மழை விட்டதும் வருகிறேன். நீர் ஒன்றும் அதிகம் நனையவில்லை தானே… பிறகு காய்ச்சல் என்று நம்மைத்தான் படுத்தி எடுப்பீர்…” தங்கை எச்சரிக்கத் தன்னைக் குனிந்து பார்த்தாள் நேயநறுமை. ஆதியதுலனின் அணைப்பில் அவள் இருந்திருந்தாலும், மழை அவளை நன்றாகவே அணைத்திருந்தது. கூடவே மூக்கும் அடைக்க ஆரம்பித்திருந்தது.

சுத்தம்… மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று தெரிந்தும் நனைந்தது அவள் தவறு. ப்ச்… ஒரு நாள் இரண்டு நாள் படுத்தி எடுக்கும். கூடவே தாயும் படுத்தி எடுப்பார். யோசிக்கும்போதே ஆயாசமானது அவளுக்கு.

“நான்தான் சொன்னேனே… எனக்கு ஒன்றும் இல்லையென்று…” எரிச்சலில் சொல்ல,

“சரி… ஆதி என்ன செய்கிறார். அவரும் நன்றாகத்தானே இருக்கிறார்…” மெல்லிய பதட்டம் தங்கையின் குரலில் தெரிந்ததோ. துணுக்குற்றாள் இவள்.

“அவரும் நன்றாகத்தான் இருக்கிறார்…”

“சரிகா… பத்திரமாக இருங்கள்…” எச்சரித்து விட்டு அவள் கைப்பேசியை வைக்க, இவளும் வைத்துவிட்டு மீண்டும் அந்த டிம்ஹாட்டனைப் பார்த்தாள்.

இந்தக் குளிருக்கு இதமாகக் காப்பிக் குடித்தால் நன்றாக இருக்கும்.

“கொஃபி குடிக்கலாமா?” ஆர்வமாகக் கேட்டாள் நேயநறுமை. அவனும் அவள் பார்த்த திசைக்குப் பார்த்துவிட்டு,

“வை நாட்?” என்றான். அவனுக்கும் அந்தக் குளிருக்குச் சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும் போலத்தான் தோன்றியது. இருவருமாகக் கடைக்குள் நுழைந்ததும், நேயநறுமை முந்திச் சென்று, என்ன வேண்டும் என்று சொல்ல ஆரம்பிக்கையில் அவள் கரத்தைப் பற்றி இழுத்து ஓரமாக விட்டவன், ஆர்டர் எடுக்கும் நபரைப் பார்த்து,

“வன் பிளக் ரெகுலர், வன் ஸ்மால் டபிள் டபிள்… வன் செட் ஆஃப் பாஸ்டன் கிரீம் டோ நட்ஸ்” அவன் சொல்ல, இவளுடைய விழிகளோ வியப்பில் மலர்ந்தன. அவள் டிம்ஹாட்டனுக்கு வந்தால், எப்போதும் டபிள் டபிள்தான் வாங்குவாள். கூடவே பாஸ்டன் கிரீம் டோநட்ஸ் என்றால் அவளுக்கு வேறு எதுவும் தேவையில்லை. உடல் எடையைப்பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டாள். எனக்கு இதுதான் பிடிக்கும் என்று இவனுக்கு எப்படித் தெரியும்? வியந்து நிற்கையில், ஆதியதுலனோ ஆர்டர் கொடுத்து வந்த பொருட்களைத் தட்டில் எடுத்துவைத்துவிட்டுத் திரும்பி நேயநறுமையைப் பார்த்தான். அவளோ அவனைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“என்ன இப்படியே நிற்கும் எண்ணமா உனக்கு?” கிண்டலாகக் கேட்டவன், அங்கிருந்த மேசையை நோக்கி நடக்க, நேயநறுமையும் மூடுக்கப்பட்ட பொம்மையாக அவன் பின்னால் சென்றாள்.

அவளுக்காக வாங்கியதை அவளுக்குப் பக்கமாக வைத்துவிட்டு, அவளுக்கு முன்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்தவாறு தன்னுடைய காப்பியை அருந்தத் தொடங்க, இவளோ, அணிந்திருந்த கம்பளியாடை ஈரமாகிப் போனதால், அதைக் கழட்டி இருக்கையில் தொங்கப் போட்டு விட்டு, தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மறு நிமிடம், ஆதியதுலன் எட்டி அவளுடைய இடது கரத்தைப் பற்றித் திருப்பிப் பார்த்தான்.

அங்கே அவளுடைய வெண்ணிறக் கரத்தில் ஏற்பட்ட கண்டல் காயம் பல்லிளித்துக் கொண்டு இருந்தது. நல்லவேளை தடித்த ஆடை அணிந்து இருந்ததால் கீறல் எதுவுமில்லாமல் தப்பித்தது. ஆனாலும் கொஞ்சம் பலமான காயம்தான். அந்த இடத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவன்,

“நல்ல வேளை… மயிரிழையில் தப்பித்தாய்… இல்லை என்றால் நிச்சயமாக எங்காவது எலும்பு முறிந்திருக்கும்…” சொன்னவன், தன் கரத்தை இழுத்து எடுக்க, இவளுடைய முகமோ சுருங்கிப் போனது.

ஏன் கொஞ்ச நேரம் கரத்தைப் பற்றியிருந்தால் தான் என்னவாம்? மனது சிணுங்கத் தன் கவனத்தை டோநட்டிடம் கொண்டு சென்றாள். எச்சில் ஊற, பெட்டியைத் தூக்கி ஆதியதுலனின் முன்னால் நீட்டினாள்.

“இல்லை… வேண்டாம்…” அவன் மறுக்க,

“ஏன்?” என்றாள் வியப்பாய்.

“அதிகம் இனிப்பு சாப்பிடுவதில்லை…” என்றான் அவன்.

“ஏன் சாப்பிடுவதில்லை?”

“பிடிப்பதில்லை…” என்றவன் காப்பியில் கவனம் செலுத்த, இவளோ, வேண்டாம் என்றால் போ… என்பது போல அதில் ஒன்றை எடுத்து ஒரு கடி கடித்து விழிகளை மூடி இரசித்து உண்டவள், அதன் சுவையில் கிறங்கியவளாக, வாய்க்குள் முழுதாக அதக்கி,

“எண்க்கு இஞ்ச தோஓந்டப் பிக்கும் என்ந்து உ…ங்க்ளுக்கு எப்ப்பதித் தெற்றிய்யும்…” கேட்க, ஏதோ சிங்களம் பேசுவது போல புரியாமல் பார்த்தான் ஆதியதுலன்.

“சாரி?” என்றான் குழப்பமாக. மெதுவாக வாய்க்குள் இருந்ததை மென்று விழுங்கி விட்டு,

“எனக்கு இந்த டோனட்தான் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் டபிள் டபிள்தான் பிடிக்கும் என்று யார் சொன்னார்கள்?” கேட்டவள், இன்னொரு டோனட்டை எடுத்துச் சுவைத்து உண்ணத் தொடங்க, அதிலிருந்த கிரீம் அவளுடைய உதட்டோரம் வழிந்து சென்றது. அதில் தன் பார்வையை நிலைக்கச் செய்த ஆதியதுலனின் தொண்டை ஒரு கணம் கமறியது. அவனால், அவள் உண்ணும் அழகிலிருந்து தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

குண்டுக் கன்னங்களுக்குள் ஆசையாய் டோனட்டை அதக்கும் போது, அது இன்னும் உப்பி அவனைக் கிறங்கடித்தது. அப்படியே இரண்டு கன்னங்களையும் கிள்ளத் தோன்றியது. அந்த டோநட்டிலிருக்கும் கிறீம், உதட்டில் பட்டு நாடியில் வழிந்து, சட்டையில் விழுவது கூடத் தெரியாமல் ஐந்து வயதுக் குழந்தை போல, இரசித்து உண்ணும் அந்த அழகைக் கண்டு தன்நிலை கெட்டுத்தான் போனான் அந்த ஆண்மகன்.

“கேட்டேனே… எப்படித் தெரியும்…” என்றாள் அறியும் ஆர்வத்தோடு.

“உன் தங்கையோடு பேசும்போது உன்னைப் பற்றியும் சொல்வாள். அதிலிருந்து தெரிந்ததுதான்…” சொன்னவன், சட்டென்று அவள் பக்கமாகச் சரிந்து, பெருவிரலால் அந்த அமிர்தத்தைத் துடைத்து எடுக்க முயல, உதட்டைத் தொட்ட பெருவிரல் அத்தனை சுலபத்தில் விலகுவேனா பார் என்பது போல அங்கேயே ஒட்டிக் கொண்டது. அவனுடைய அந்த செயலில் சாப்பிடுவதை மறந்து வியந்து பார்த்தாள் நேயநறுமை.

அப்போதுதான் அவனுக்கும் தான் செய்த காரியம் உறைத்ததுபோல. அதிர்ந்தவன், அவசரமாக அவள் உதட்டில் ஒட்டிக் கிடந்த தன் கரத்தை இழுத்து எடுத்து அங்கிருந்த மென் தாளில் விரல்களைத் துடைத்தவாறு,

“சாரி… உன் உதட்டில்… கிறீம் ஒட்டிக்கிடந்தது” என்றான் விளக்கும் முகமாக. அவசரமாகத் தன் புறங்கையால் உதட்டை அழுந்தத் துடைத்தவள்,

“இதற்கெல்லாம் எதற்கு சாரி…” என்றாள் அவன் செயலில் உள்ளம் குளிர. ஆனாலும் அவள் முகம் சட்டென்று வாடியது.

எத்தனை நல்லவனாக இருக்கிறான்? இவனைப் பற்றித் தெரியாமல், தப்புத் தப்பாக நினைத்துப் பேசியும் இருக்கிறோமே. அம்மா கூட ஒருத்தரைப் பற்றித் தெரியாமல், தவறாகப் பேசுவது மிகப் பெரும் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தான் கேட்கவில்லை.

ஏனோ அவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் போலத் தோன்ற,

“அதுலன்…” என்றாள் மென்மையாக. அவனோ புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்தான்.

“ஐ… ஐ ஆம் சாரி…” என்றாள் நிஜமான வருத்தத்தோடு. இவனோ புரியாமல் என்ன என்பது போலப் பார்க்க, கேள்வியைப் புரிந்து கொண்டவளாக, ஒரு விநாடி அமைதி காத்தவள் பின் அவனைச் சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்து,

“ஆரம்பத்தில் நீங்கள் வருவது எனக்குப் பிடிக்க வில்லை. அதனால்தான் உங்களைத் திட்டினேன்…” என்று சொல்ல, உதடுகளைப் பிதுக்கியவன்,

“அதுதான் தெரியுமே. ஏற்கெனவே இதற்காக மன்னிப்புக் கேட்டுவிட்டாயே” என்றான் அலட்சியமாக.

“கேட்டுவிட்டேன்… ஆனால்… நீங்கள்தான் மன்னித்து விட்டதாக எதுவும் சொல்லவில்லையே…” அவள் குறைபட, இப்போது மென் நகை ஒன்றைச் சிந்தினான் ஆதியதுலன். ஏனோ அவன் விழிகள் கனிந்து போனது.

“அது சரி, உனக்கு ஏன் என்னைப் பிடிக்க வில்லை?” அறியும் ஆர்வத்தோடு கேட்க,

“அது அப்போ… இப்போதுதான் பிடித்திருக்கிறதே…” என்றாள் அவசரமாக.

இப்போது நன்றாகச் சிரித்தவன்,

“சரி… அப்போது ஏன் என்னைப் பிடிக்காமல் போயிற்று?” என்றான் மீண்டும். அதைக் கேட்டதும் இவளிடம் அசட்டுப் புன்னகை ஒன்று மலர்ந்தது. கூடவே தன் வெறுப்புக்கான காரணத்தையும் சொல்லத் தொடங்க, அதை இருக்கையில் சாய்ந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த ஆதியதுலனின் முகம் சட்டென்று மாறியது

What’s your Reaction?
+1
9
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

1 day ago

வெந்தும் தணியுமோ காதல் – 16

16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16B

16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…

3 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…

4 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16A

16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை.…

1 week ago