Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 13

13

மூவரும் விடைபெற்றுக் கிளம்பும் போது நேயநறுமை மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள். காரணம் இன்றியே இதயம் ஏகத்துக்கும் படபடத்தது. இதுநாள் வரை அனுபவித்திராத குதுகலத்தில் நெஞ்சம் துடித்தது. அதுவும் அவன் அவளுக்குப் பின்னால் வந்தபோது, அவன் வாசனையும், தேகச் சூட்டையும் உணர்ந்தவளுக்குப் போதை உட்கொள்ளாமலே அது இரத்தத்தில் கலந்தது போன்ற ஒரு மயக்கம்.

ஓடிப்போய் வாகனத்தின் முன் கதவைத் திறந்தவள், ஆதியதுலனைப் பார்த்து,

“நீங்கள் இங்கே உட்காருங்கள்…” என்றதும், மறுக்காமல் தன் உயரத்தைக் குறுக்கி வண்டியில் அமர்ந்து கொள்ள, அதுவரை கதவைப் பிடித்துக் கொண்டு அவனையே மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அமர்ந்ததும் கதவைச் சாற்றிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தாள். சற்றுத் தாமதமாக வந்த நேரிழை பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

வண்டியை உயிர்ப்பித்தவள், திரும்பி ஆதிய துலனைப் பார்க்க, அவனோ வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய கவனம் தன்னிடமில்லை என்பதில் சற்று வாட்டம்தான். ஆனாலும் வெட்கம் கெட்டு அவனுடைய பக்க வாட்டுத் தோரணையை அணு அணுவாக இரசிக்கத் தொடங்க, வண்டி புறப்படாமல் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு, இவளுடைய தோளில் தட்டிய நேரிழை,

“அக்கா…! என்ன செய்கிறீர்…? வண்டியை எடும். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் நண்பர்கள் அங்கே வந்துவிடுவார்கள்…” சத்தமாகச் சொல்ல, அப்போதுதான் இவளுக்குச் சுயமே பிறந்தது. திடுக்கிட்டு இமை தட்டி விழித்தவள், தன் நினைவு சென்ற திசை உணர்ந்து அசடு வழிந்தவளாக,

“ஹீ… ஹீ… இதோ…” என்று முனங்கியவாறு வண்டியை உயிர்ப்பிக்க, அப்போதுதான் தங்கை சொன்னது உறைத்தது.

“என்னது நண்பர்கள் வருகிறார்களா? ஏன்… எதற்கு? யார் வருகிறார்கள்?” மூத்தவளாகக் கேள்விகளை அடுக்கினாள்.

“அக்கா… நாங்கள் அனைவரும் பணம் போட்டுத்தான் பரிசு வாங்கப் போகிறோம். அதனால் அவர்களும் வருகிறார்கள்…” நேரிழை சொல்ல,

“ஓ…” என்றவள், மீண்டும் பாதையில் கவனத்தைச் செலுத்தினாள்.

ஏனோ என்றுமில்லாத திருநாளாக அந்தப் பயணம் நேயநறுமைக்கு தித்தித்தது. இப்படியே பல மைல் தூரம் அவனோடு செல்வதாக இருந்தாலும் இதே மகிழ்ச்சியுடன் அவளால் செல்ல முடியும்.

அந்தப் பயணம் முழுவதும் நேரிழையும், ஆதியதுலனும்தான் நிறையப் பேசினார்கள். இவள் தான், மகுடிக்கு மயங்கிய பாம்பாக, அவன் குரலிலிலும் அவன் பேச்சிலும் மயங்கிக் கிடந்தாள். உள்ளத்திலே குட்டி குட்டியாய் புதுப் புதுப் பாடல்களுக்கு டூயட் ஆடியவாறு அந்த வணிக வளாகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அந்த வணிக வளாகம் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்டு கட்டப்பட்டது. அங்கும் இங்குமாக நூற்றுக் கணக்கான தனித் தனிக் கடைகள். அத்தனை கடைகளையும் சுற்றிவருவதற்குக் குறைந்தது ஒன்றரை நாட்களாவது தேவை. கனடாவில் மிகப் பிரசித்தி பெற்ற இந்த அங்காடிக்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதுவும் மலிவு விற்பனை இருந்தால் அவ்வளவுதான். கடலலையே திரண்டு வந்தது போல மக்கள் கூட்டம் அள்ளிக் கொட்டியிருக்கும்.

அன்று அவர்கள் வந்த நாளும் அப்படிப்பட்ட ஒரு நாள் தான். வாகனத்தைத் தரிப்பதற்குக் கூட இடமில்லாமல் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது.

“அம்மாடி… என்ன இத்தனை கூட்டம்” நேரிழை வியக்க,

“ஏதோ மலிவு விற்பனை போல…” நேயநறுமை சொன்னவாறு வண்டிக்குத் தரிப்பிடம் தேடினாள். அங்கே சுத்தி, இங்கே சுத்தி கடைசியில் பத்து நிமிட நடை தூரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க,

“அக்கா… இன்று மழை வேறு இருக்கிறது. இவ்வளவு தூரத்தில் வண்டியை நிறுத்தினால் எப்படி?” யோசனையுடன் வணிக வளாகத்திற்கும், வாகனத் தரிப்பிடத்திற்கும் உள்ள தூரத்தை அளவிட்டவாறு கேட்டாள் நேரிழை. மாலை நேரமாக இருந்தாலும், இருண்டிருந்த வானம், மழையின் கனத்தைச் சொன்னது.

 

கேட்ட சகோதரியை இழுத்து அவள் தோளில் கரங்களைப் போட்ட நேயநறுமை,

“மழையில் நனைந்தால் நீ ஒன்றும் கரைந்துவிட மாட்டாய் என் டொமாட்டோ…” என்று கிண்டலாகக் கூற, அவளை முறைத்த இளையவள்,

“நாங்கள் கரைய மாட்டோம்… ஆனால் நீர்தான் மறு நாள் எழும்பியதும் கொக்கு கொக்கு என்பீர். அதுவும் இந்தக் குளிரில் மழையில் நனைந்தால் சொல்லவும் தேவையில்லை…” எச்சரிக்க, சிரித்தாள் பெரியவள்.

“ப்ச்… இரும்பு உடம்புமா… எதுவும் ஆகாது… வா…” என்றவளைக் கிண்டலுடன் பார்த்த நேரிழை,

“யாருக்கு…? உமக்கு? ஸ்டீல் பாடி…? சரிதான்… மூச்சிழுப்பு வரும் போது தெரியும்..” என்று கேலியும் கிண்டலுமாகச் சொல்ல, சிரித்த நேயநறுமை, தங்கையைக் கர இடுக்கில் இறுக்கிப் பிடித்தவாறு அந்த வளாகத்திற்குள் நுழைய, பின்னால் வந்து கொண்டிருந்த ஆதியதுலன் இவர்களின் இந்த நெருக்கத்தைக் கண்டு வியந்து இரசித்தான்.

அவன் தனி ஒருவனாக வளர்ந்தவன் என்பதால், அவனுக்கு இப்படியான சகோதர பாசம் பற்றி எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் தனக்குத் தம்பியோ தங்கையோ வேண்டும் என்று தாய் தந்தையிடம் மல்லுக்கு நின்றிருக்கிறான். ஆனால், இவன் பிறக்கும் போது இந்திரா நிறையவே சிரமப்பட்டார் என்பதால், பாஸ்கரன் இன்னொரு குழந்தைக்குச் சம்மதிக்க வில்லை. அதனால் தனக்குக் கூடப் பிறந்தவர்கள் என்ற யாருமில்லை என்பதில் அவனுக்கு மிகுந்த வருத்தம்தான். இதில் நண்பர்கள் வேறு தங்களுடைய தம்பியைப் பற்றியோ, தங்கையைப் பற்றியோ ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது, தனக்கு அப்படிச் சொல்லிக் கொள்ள யாருமில்லை என்று அவனுக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். அதனால் அத்தகைய பேச்சுகள் வந்தாலே ஒதுங்கிச் சென்று விடுவான் ஆதியதுலன்.

இதில் ஒற்றைப் பிள்ளையாக வளரும் அத்தனை குழந்தைகளுக்கும் உரிய ஒதுக்கம் அவனிடமும் இருந்தது. அவன் சிறுவனாக இருந்த போது மட்டுமில்லை, இப்போது கூட சட்டென்று யாரிடமும் பேசமாட்டான். சேர மாட்டான். அவனுடைய உலகம் தாய் தந்தை மட்டுமே. வெளியாட்கள் என்று அவன் மனம் திறந்து பேசுவதென்றால், அம்பிகா தேவ சகாயம், நேரிழை மட்டும்தான். அதற்குப் பிறகு பல்கலைக் கழகம் என்று சென்ற பிறகு, நண்பர்கள் என்று ஒரு சிலர் அவன் கரத்தைப் பற்ற, அதற்குப் பிறகுதான் அவன் தன் கூண்டைவிட்டுக் கொஞ்சமாக வெளியே வந்தான். இருந்தாலும் அவனுக்கு நண்பர்கள் என்பது மிகச் சொற்பமே. ஆனால் இப்படி அன்னியோன்னியமாக நெருக்கமாக, அணைப்பது, பேசுவது என்று எதுவுமில்லை. அதை அவன் விரும்புவதுமில்லை. அதிலும் அன்னியர்கள் அவனைத் தொடுவது பிடிக்கவே பிடிக்காது.

அந்த வகையில் நண்பர்களைப் பார்த்தால் ஹாய், கை முஷ்டியால் ஒரு மோதல், ஒன்றாக அமர்ந்து அன்றைய படிப்பு, அரசியல், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கார் பந்தயம், எப்போதாவது

திரை சார்ந்த செய்திகள். இதோடு அவனுடைய நட்பு முடிந்து போகும். அதற்காக அவனுக்குப் பெண்களின் மீது ஆசையில்லையா என்றால் இருக்கிறது. அவன் மனதிலும் கள்ளமாய் ஒருத்தி இருக்கிறாள். இரவிலே அவன் கூட உரையாடுவாள். கொஞ்சுவாள். பேசிச் சிரிப்பாள். செல்லமாய் அவனை அணைப்பாள். இவனும் புன்னகைத்தவாறு அவள் மடியில் படுத்து, அவள் குழந்தையாய் பேசுவதை எல்லாம் செவி மடுத்து இரசிப்பான். இருந்தும் அவள் யார் என்று இதுவரை அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியப் போவதுமில்லை. அவனுடைய காதல் மனதோடு மட்டுமே. அதைத் தாண்டி வெளியே வார்த்தைகளாகக் கூட வந்ததில்லை. வரவும் வராது. ஏன் என்றால், அந்தக் காதலுக்குப் பொருளில்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

வீட்டிற்கு வந்தால் அவன் உலகம் அறையோடு சுருங்கிப் போகும். அறைக்குள் நுழைந்தால் மறுநாள் தான் வெளியே தலைகாட்டுவான். இதுதான் அவன். பணமிருந்தும், ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்ததால் ஒதுக்கத்தோடும், சொல்லப்போனால் கொஞ்சம் கூச்ச சுபாவத்தோடு வாழும் ஆண் மகன்.

இப்போது நேரிழையினதும், நேயநறுமையினதும் நெருக்கத்தைப் பார்க்கும் போது மறைந்து போன அந்த ஏக்கம் மீண்டும் துளிர்விட்டது அவனுக்கு. அவனுக்கென்று ஒரு தம்பியோ தங்கையோ இருந்திருக்கலாம். இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதோ இப்படி ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிக் கிடக்காமல், மற்றவர்களைப் போலவே வாய்விட்டுச் சிரித்து மகிழ்ச்சி துக்கத்தைப் பரிமாறி சுதந்திரமாகச் சாதாரண ஒருத்தனாக வாழ்ந்திருக்கலாம்.

பெரும் ஏக்கத்துடன் அவர்களின் பின்னால் நடக்கத் தொடங்க, சற்றுத் தூரம் போனதும், நேயநறுமையின் நண்பர்கள் என்று ஐவர், கையை அசைத்தவாறு வந்தார்கள்.

இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள்.

நண்பர்களுக்கே உரியப் புன்னகையுடன் பெண்களை அணைத்து விடுவித்த நேரிழை, விரல்களை மடக்கி ஆண் நண்பர்களின் கைமுஷ்டிகளைக் குத்தி எடுத்து விலக, அதே போல நேயநறுமையும் நேரிழையின் நண்பர்களையும் அணைத்து விடுவித்து, அவர்களின் நலனை விசாரித்த பின், தனக்குப் பின்னால் ஒதுங்கி நின்றிருந்த ஆதியதுலனைக் காண்பித்து,

“இவர்… ஆதியதுலன்…” என்று அறிமுகப் படுத்த சின்னப் புன்னகையுடன் கரத்தை அசைத்து ஹாய் என்றான் ஆதியதுலன். நெருங்கவில்லை, கை குலுக்கவில்லை. என் எல்லை இதுதான் என்பது போலச் சற்று ஒதுங்கிக் கொள்ள, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதன் பிறகு பேச்சும் சிரிப்புமாக நேரிழை நண்பர்களோடு இணைந்து கொள்ள, ஆதியதுலனும் நேயநறுமையும் ஒருவர் பக்கம் ஒருவராக நடந்து கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

கொஞ்சத் தூரம் சென்றதும்,

“அக்கா.. நான் இவர்களோடு அந்தக் கடைக்குச் சென்று பார்க்கப் போகிறேன். நீங்கள் வேறு இடம் சுற்றிப் பார்ப்பதாக இருந்தாலும் பாருங்கள்…” என்று விட்டு விடை பெற, குதுகலத்துடன் ஆதியதுலனைப் பார்த்தாள். அவனோ வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதுலன்…” அவள் அழைக்க, திரும்பிப் பார்த்தான் அவன்.

“நாம் அந்தக் கடைக்குச் சென்று பார்க்கலாமா? இல்லை… நேரிழை சென்ற இடத்திற்கே போகலாமா?” அவள் கேட்கத் தோள்களைக் குலுக்கியவன்,

“உன் இஷ்டம்…” என்றான் எந்த உணர்ச்சியும் இல்லாமல். முகம் மலர்ந்தவள்,

“சரி வாருங்கள்…” என்றவள் துள்ளல் நடையோடு அந்தக் கடை நோக்கிச் செல்ல, இவனுடைய உதட்டில் அவனையும் அறியாமல் சின்னப் புன்னகை விரிந்தது.

இவளுக்கு நடக்கவே தெரியாதா என்ன? எப்போது பார்த்தாலும் ஓடுகிறாள். இல்லையா துள்ளுகிறாள். அன்றும் அவள் சற்றுக் கவர்ச்சியான ஆடைதான் அணிந்திருந்தாள். நல்லவேளை கொஞ்சம் குளிர் என்பதால் மேலே கம்பளியாடை அணிந்திருந்ததால், முக்கியமான கவர்ச்சி மறைந்து இருந்தது. ஆனால் அவள் அணிந்திருந்த டைட் ஜீன்ஸ் அவளுடைய இடைக்குக் கீழான பெண்ணழகை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்ட, கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் உணர்ந்தான் ஆதியதுலன்.

இத்தகைய ஆடைகள் இருக்கும் உணர்ச்சிகளைச் சாகடித்துவிடும் என்பதை யாராவது இவளிடம் சொல்லக் கூடாதா? தன்னை மீறி நினைத்தவன் வேறு வழியில்லாமல் அவள் பின்னால் செல்ல, அங்கே தொங்கிக் கொண்டிருந்த டீஷேர்ட், பான்டுகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நேயநறுமை.

அவளுடைய கண்களுக்கு ஒரு பக்கமாக இருந்த நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட பான்ட், ஷேர்ட், சட்டைகள், பாவாடைகள் என்று எதுவும் கண்ணில் படுவதாகவில்லை. அவள் எடுத்தவற்றில் பெரும்பாலும் கிழிசல் இருந்தது. இல்லையா அரைவாசியைக் காணோம். கொஞ்ச நேரம் நின்று அவள் ஆடைகள் தேர்வு செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எரிச்சல் வந்தது. கூடவே கூச்சமும்.

ஒரு கட்டத்தில் அங்கிருக்க முடியாமல், வெளியே சென்றுவிடலாம் என்று அவன் நினைத்த நேரத்தில், அவனை முட்டி மோதிக்கொண்டு ஒரு கும்பல் நுழைந்தது.

அவசரமாக அவர்களை விட்டு விலகி நின்று கொண்டவன், எரிச்சலுடன் அந்தக் கும்பலைப் பார்க்க, அவர்களுக்கு அவனை இடித்துவிட்டுச் சென்றது உறைக்கவேயில்லை. தம் பாட்டிற்கு கைக்குக் கிடைத்த ஆடைகளைத் தூக்கிப் பார்த்துக் கொண்டு நகர்ந்தார்கள்.

வந்தவர்கள் முதலில் பொருட்களைத்தான் பார்த்தார்கள். அதன்பின் நேயநறுமையின் பக்கமாகக் கவனம் போக, அவளை வெறித்துப் பார்த்தார்கள்.

பின் ஒருவருக்கு ஒருவர் எதையோ பேசி சிரித்தார்கள். அந்த நேரம் நேயநறுமை இவர்கள் பக்கம் திரும்பவும், சட்டென்று அவர்கள் பொருட்களைப் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டார்கள். அப்போதுதான் ஆதியதுலனும் கவனித்தான், நேய நறுமை அதுவரை அணிந்திருந்த மேலாடையைக் கழற்றிக் கரங்களில் ஏந்தியிருந்தாள்.

அதனால் அவள் அணிந்திருந்த கையில்லாத டீஷேர்டின் ஊடாக அவளுடைய பெண்மையின் அழகு மிக எடுப்பாகத் தெரிய, பட்டு வயிறு அப்பட்டமாக வெளியே தெரிந்துகொண்டிருந்தது. கூடவே உள்ளாடையின் கைப்பாகம் வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. ஆனால் இது எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவ்வளவு ஏன், தன்னை ஆண்கள் வெறித்துப் பார்க்கிறார்கள் என்பது கூட அவளுக்கு உறைக்க வில்லை.

தன் பாட்டில் அவள் ஆடைகளைப் பார்த்திருக்க, இதைக் கவனித்த ஆதியதுலனுக்குத்தான் இரத்தம் கொதித்தது.

இது என்ன கண்டதைக் காணாதது போல அவளை வெறித்துப் பார்க்கிறார்கள்? இதுவரை பெண்களைப் பார்த்ததேயில்லையா? எரிச்சல் இமய மலையாக எழப் பற்களைக் கடித்தான் ஆதியதுலன்.

அதுவும் அந்தக் கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன், நேயநறுமையின் அருகே சென்ற தானும் எதையோ பார்ப்பதைப் போல அவளை முட்டி இடித்துக்கொண்டு செல்ல, அவனோடு கூட வந்த நண்பர்கள், தங்கள் நண்பன் ஏதோ சாகசம் செய்து விட்டான் என்பது போலக் கெக்கே பிக்கே என்று சிரிக்க, அதற்கு மேல் அவனால் அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை.

அதுவும், அந்த இளைஞன் வேண்டும் என்று தன்னை மோதிச் சென்றிருக்கிறான் என்கிற புரிதல் கூட இல்லாமல், தன்னை உரசி விட்டுச் சென்ற இளைஞனை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் கவனத்தை ஆடையில் செலுத்த, அதைக்கண்ட ஆதியதலனின் கைமுஷ்டிகள் இறுகின.

வேண்டும் என்றே உரசிவிட்டுச் சென்று இருக்கிறான். ஓங்கி கன்னத்தில் ஒன்று கொடுத்தால் தான் என்ன? அவனால் நினைக்காமலிருக்க முடிய வில்லை.

இப்போது இன்னொரு இளைஞன், நேய நறுமையை நோக்கி நகரத் தொடங்க, அதற்கு மேல் தள்ளி நிற்க முடியாமல், விரைந்தவன், சட்டென்ற அந்த இளைஞனுக்கும் நேயநறுமைக்கும் இடையில் வந்து நின்று கொண்டான். இதை அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று குறுக்கு ஒருத்தன் நுழைந்ததும், மோத வந்த இளைஞன் சட்டென்று திசைமாறிச் சென்று திரும்பி இவர்களைப் பார்த்தான்.

ஆதியதுலனின் விழிகளில் தெறித்த தீப்பொறியைக் கண்டு, தங்களை அவன் கண்டு கொண்டான் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளைஞன், சட்டென்று பார்வையை மாற்றி வேறு இடம் சென்று விட, இவனோ குனிந்து தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து.

“புறப்படலாமா…?” காதுக்குள் கேட்க, அதுவரை ஆடைகள் பார்ப்பதில் கவனமாக இருந்தவள், அவனுடைய நெருக்கமான ஒலியில், திடுக்கிட்டு திரும்ப, அவள் திரும்பிய வேகத்தில் அவன் ஆண் தேகத்தோடு உரசிக் கொள்ள, அவள் உரசிய வேகத்தில் மின்சாரம் அவள் தேகமெங்கும் பாயத் தடுமாறிச் சரியப் போனவளின் தோள்களைப் பற்றி நிலை நிறுத்த முயன்றான் ஆதியதுலன்.

சும்மாவே அவன் அருகே நிற்கும்போது சொர்க்கம் தெரியும் அவளுக்கு. இதில் அவன் உடல் மீது தொட்டுக் கிடந்தால் எப்படியிருக்கும். சிலிர்த்த உடல், அவனை விட்டு விலகும் எண்ணம் இல்லாமல், அவன் தேக வாசனையை நுகர்ந்து மதி மயங்கிக் கிடந்தது. அவனுடைய பரந்த தோள்களும், அவனுக்கே உரித்தான் பிரத்தியேக வாசனையும், தேகச் சூடும் அவளை முழுதாக அரவணைத்துச் செல்ல, அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வலைகள் சுனாமியாக அடித்துச் சென்றன.

தன்னை மறந்து அவன் அணைப்பில் கிடந்தவளுக்கு அப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது. அவசரமாய் விழிகளை விரித்து அவன் முகத்தைக் குறுகுறு என்று பார்த்தாள் நேயநறுமை.

அவன் மயிர்முனை பட்டாலே இப்படிச் சிலிர்த்துப் போகிறோமே. அப்படி அவனுக்கும் தோன்றுகிறதா? இல்லை அவளுக்கு மட்டும்தான் அப்படி இருந்ததா? ஒரு வித எதிர்பார்ப்போடு அவன் முகம் பார்க்க, அவன் முகமோ இறுகியிருந்தது. அங்கே எந்த உணர்ச்சியும் தெரியவில்ல. இதோ பெண்மை முழுதாக அவன் தேகம் உரசச் சாய்ந்து நிற்கிறோம். இவனுக்கு கொஞ்சம் கூடவா உணர்வுகள் தோன்றவில்லை? ஒரு வேளை அவன்? குழம்பி யோசிக்கையில், உடனே இல்லை என்று இடித்து உரைத்தது புத்தி. அன்று அவள் காலைத் தட்டி விழவைத்து அணைத்துக் கொண்டானே… அவனுக்குப் பெண்களைப் பிடிக்காதென்றால், அப்போதே அவளை உதறித் தள்ளிவிட்டுப் போயிருப்பான். ஆனால் அப்படியில்லாமல், அவள் இடையை வருடினான். அவள் உடல் பாரத்தை உணர்ந்தான். அந்த விழிகளில் ஒரு வித மயக்கம் தெரிந்தது. நிச்சயமாக இவன் மற்ற மாதிரி இல்லை… உறுதியாக அவள் எண்ணும்போதே அவசரமாக அவளைத் தன்னிடம் இருந்து தள்ளி விட்டான் ஆதியதுலன்.

ஏனோ அவள் விழிகளைப் பார்க்கத் தயங்கியவனாக, வெளியே பார்த்தவன்,

“நான் வெளியே நிற்கிறேன், வாங்கி முடித்து விட்டால் வா…” அவளைப் பார்க்காமல் சொல்லி விட்டு வெளியேற, இவளோ தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

“மக்கு.. மக்கு.. இப்படியா பப்பரப்பா என்று அவன் மீது சாய்வாய். என்ன நினைத்துக் கொண்டானோ? சும்மாவே என்னைப் பார்த்தால் முகம் திருப்பிக் கொள்கிறான். இந்த லட்சணத்தில், இப்படி முட்டாள் தனத்தைச் செய்தால் இன்னுமல்லவா ஒதுங்கிப் போவான். மானசீகமாகத் தன்னைத் திட்டிக்கொண்ட நேரம், வெளியே இடிச்சத்தம் கேட்டது.

சுயம் பெற்றவளாக, அந்தக் கடையை விட்டு வெளியே வர, ஆதியதுலன் வாசலில் நின்று வானத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் நிறமே சொன்னது, அள்ளிக் கொட்டப் போகிறேன் என்று.

“மழை அடித்துக் கொட்டப் போகிறது” கழற்றிய மேலாடையை அணிந்தவாறு அவனருகே வந்து நின்ற நேயநறுமை வானத்தைப் பார்த்தவாறே சொல்ல, அவளைத் திரும்பிப் பார்த்தான் ஆதியதுலன்.

மேலாடை அணிந்திருந்தாலும் அதை அவள் பூட்டவில்லை. விரைந்து அந்த ஜிப்பை இழுத்து விட வேண்டும் என்று தோன்றிய உந்துதலை அடக்கியவன், தன் கட்டுப்பாட்டையும் மீறி அவளின் எழிலை நோக்கிப் பாய முயன்ற விழிகளை இழுத்து எடுத்து வெளியே பாயவிட்டு,

“ம்…” என்றான்.

‘மேளன சாமி’ மனதிற்குள் அவனைச் செல்லமாக வைதவள், குளிருக்குத் தோதாகக் கரங்களை தேய்த்து அதை முகத்தில் வைத்தவாறு பக்கத்துக் கடையைப் பார்த்தாள். அது ஒரு நகைக்கடை. உலகின் பிரசித்தி பெற்ற கடை அது. விலைக்கும் குறைவிருக்காது. பெண்களுக்கே உரித்தான துள்ளலுடன்,

“நகைக்கடை பார்க்கலாமா?” ஆதியதுலனைக் கேட்டவள் அவன் அனுமதியையும் வேண்டாமல் உள்ளே நுழைய, வேறு வழியில்லாமல் ஆதியதலன் அவள் கூடவே சென்றான்.

அழகழகாக மேலைத்தேயர்களின் இரசனைக்கு ஏற்ப அடுக்கப்பட்டிருந்தன நகைகள். பெரும்பான்மையானவை வைரம் பதித்து அழகுற வடிவமைத்தி

ருந்தார்கள். பெண்களுக்கு ஒரு பக்கமும், ஆண்களுக்கு ஒரு பக்கமுமாக இருக்க நேயநறுமை பெண்களின் பக்கமாகச் சென்றாள். ஆதியதுலன் ஆண்களின் பக்கம் வந்து மேலோட்டமாகப் பார்த்தான். அதில் ஒரு மோதிரம் அவனைக் கவர, கடைக்காரரிடம், அதை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டான். அவரும் உடனே எடுத்து நீட்ட, அதைக் கரங்களில் போட்டுப் பார்த்தான். ஆண்மை பொருந்திய அவன் கரங்களுக்கு, அந்த பிளாட்டினத்திலான மோதிரம் மிகக் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. விலையைக் கேட்டால் மூவாயிரம் டாலர்கள் என்றார் கடைக்காரர்.

உதடுகளைப் பிதுக்கியவன், அதைத் திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டு விலகிக்கொள்ள, அதை எதேச்சையாகப் பார்த்த நேயநறுமையின் விழிகள் மலர்ந்தன.

அந்த நேரம் ஆதியதுலனுக்கு அந்தக் கடைக்குள் இருக்க எரிச்சல் வந்ததோ என்னவோ,

“வெளியே இருக்கிறேன் நறுமை, பார்த்து முடித்துவிட்டு வா…” என்றவன் வெளியே வந்து நின்று சுவரோடு சாய்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்க, சற்றுப் பொறுத்து நேயநறுமையும் வெளியே வந்தாள்.

அவளைக் கண்டதும் நிமிர்ந்தவன்,

“இனி எங்கே போவதாக உத்தேசம்?” கேட்கும் போதே தொலைவில் இடிச்சத்தம் கேட்டது.

அது எதுவும் இவள் காதில் விழவில்லை. சுற்ற முற்றும் பார்த்தாள். அவளுடைய விழிகளில், தெருவைக் கடந்து சற்றுத் தள்ளியிருந்த கடை ஒன்று பட, முகம் மலர்ந்தது.

‘விக்டோரியா சீக்ரட்…’ முனங்கியவள்,

“அதுலன்… கொஞ்சம் இங்கேயே இருங்கள்.. அந்தக் கடைக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன்..” என்றவள், அவன் அனுமதியையும் கேட்காது சட்டென்று படிகளில் இறங்கி நகரத் தொடங்க, அந்த நேரம் பார்த்து சற்றுத் தள்ளியிருந்த திருப்பத்திலிருந்து ஒரு வாகனம் மிக வேகமாக வந்துகொண்டிருந்தது.

இவள் அந்தக் கடைக்குப் போகும் அவசரத்தில், பாய்ந்து வரும் வண்டியைக் கவனிக்கவில்லை. ஆனால் பாக்கட்டில் கை வைத்தவாறு, துள்ளியோடும் நேயநறுமையைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிய துலன், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அந்த வண்டியின் வேகத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டவனாய்த் திரும்பி நேயநறுமையைப் பார்த்தான். அவள் அப்போதுதான், தெருவில் இறங்கி கடக்கத் தொடங்கியிருந்தாள். நிச்சயமாக அவள் தெருவைக் கடப்பதற்குள், அந்த வாகனம் அவளை முட்டி மோதிவிடும்.

இதயம் வாய்க்குள் வந்து துடிக்க,

“நறுமை… நில்… வண்டி வருகிறது…” என்று கத்தியவன், சற்றும் தாமதிக்காமல் அவளை நோக்கிப் பாய்ந்தான்.

 

What’s your Reaction?
+1
8
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

1 day ago

வெந்தும் தணியுமோ காதல் – 16

16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16B

16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…

3 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…

4 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16A

16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 14

14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…

6 days ago