Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 12

12

இதோ ஆதியதுலன் கனடா வந்து ஒரு கிழமை கழிந்திருந்தது. அந்த ஏழு நாட்களும் நேய நறுமையின் மனதில் ஆதியதுலன் நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டான் என்று சொன்னால் அது மிகையல்ல.

இத்தனைக்கும் அவன் இவளோடு அதிகம் பேசுவதில்லை. ஒரு சில வார்த்தைகள்தான். அது கூடத் தேவையென்றால் மட்டும்தான். ஆரம்பத்தில் அந்த இடைவெளியை உடைத்து அவனை நெருங்கி விடத்தான் முயன்றாள். ஆனால் அவளுடைய இயற்கைக் குணம், அதற்கு வழிவிடவில்லை. என்றாவது ஒரு நாள் அவளுடைய மனநிலையை அவன் அறியாமலா போவான்? முதலில் அவள் மீதிருக்கும் தப்பான அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். அதன் பின்பு அவனை நெருங்க வேண்டும். பேசிப் பழகவேண்டும். அதற்குப் பிறகு இதோ நேரிழையோடு அவன் பேசுவது போல அவள் கூடவும் அவன் பேசுவான்தானே. அந்த நம்பிக்கையில் கொஞ்சம் ஒதுங்கி நின்றே அவனை இரசிக்கத் தொடங்கினாள்.

அவன் மகிழ்ச்சியாகச் சிரிக்கும் போது வெளியே தெரியும் வெண்ணிற வரிசைப் பற்களாகட்டும், அளவாய் வெட்டிவிட்ட மீசை தாடியாகட்டும். கேள்வியாக நோக்கும் போது மேலே ஏறியிறங்கும் இமைகளாகட்டும், புரியவில்லை என்கிற போது அவை சுருங்கும் அழகாகட்டும், அவன் கம்பீரமாக நடந்துவரும் அழகாகட்டும், மெல்லிய குரலில் அவன் பேசும்போது அந்தக் குரலில் வெளிப்படும் ஆண்மையாகட்டும், அத்தனையும் அவளை ரசிக்க

வைத்தது. கூடவே அவன் அருகாமையும், அவனுடைய வியர்வையின் வாசனையும் அவளுடைய பெண்மையின் உணர்வுகளைத் தட்டிவிட, அந்த வயதுக்கேற்ற கற்பனையோடு இரும்பிழுத்த காந்தமாய், அவன் இருக்கும் இடத்திற்குத் தானாகச் சென்று ஒதுங்கி அமர்ந்து கொள்வாள்.

இதில் பரீட்சை வேறு அவனோடு ஒப்பிடுகையில் இரண்டாந்தரமாகிப் போனதுதான் பரிதாபமே. பாடமோ புத்தியில் ஏறமாட்டேன் என்றது. புத்தகத்தை விரித்தால் அவன்தான் தெரிந்தான். எழுத்துக்களுக்குப் பதில், அவன் உதிர்த்த வார்த்தைகள்தான் வரிக்கிரமமாகத் தெரிந்தன.

ம்கூம், இப்படியே போனால் பரீட்சையில் கோட்டை விடவேண்டியதுதான் என்று முடிந்தவரை அவனை ஓரம் தள்ளிவிட்டுப் படிக்கலாம் என்று அதில் கவனத்தைச் செலுத்தினால், எங்கே? படிப்பைத் தவிர அவனிடம்தான் மனது சென்று அடைக்கலமாகிக் கிடந்தது.

அன்று இரவில் கூடக் கனவில் அவன்தான் வந்து தொலைத்தான். அவளை அணைத்தான். முத்தமிடுவது போல நெருங்கினான். அவளுடைய இடை பற்றித் தாங்கிக் கொண்டான். இவன் கரத்தின் சூடு அவள் தேகம் முழுக்கப் பரவி அவளை நிலையிழக்கச் செய்கிறது. அதன் சூடு நல்ல உறக்கத்திலிருந்தவளின் தேகம் முழுவதும் பரவுவதை அவளுடைய உள் உணர்வு நன்றாக உணர்ந்து கொண்டது. அந்த சுகத்தில் நன்றாக உறங்கியும் போனாள்.

மறுநாள் அவளால் எழவே முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் கனவு அவளுடைய நினைவலைகளை முழுதாக ஆக்கிரமித்திருக்க, அந்த நினைவலைகளை விட்டு அவளால் விலக முடியவில்லை. ஆனால் அதற்கு அவள் தங்கை விடவேண்டுமே.

விடிந்ததும் அவளை எழுப்ப முயல, இவளோ புரண்டு படுத்துத் திரும்பவும் தான் கண்ட கனவை நினைவலைகளில் தேக்கி இன்பமாய் உணர முயன்றாள். ஏனோ அந்தக் கனவை விட்டு அவளால் எழுந்து வர முடிந்திருக்கவில்லை. பிடித்திருந்தது. திரும்பத் திரும்ப அதையே கனவிலும் நினைவிலும் காண ஆசைப்பட்டவளாகக் கிடந்தவளை எழுப்பினால் அவளும் எப்படித்தான் எழுவாள்?

“ப்ச்… நேரு… ஐந்து நிமிடம்… எழுந்து விடுகிறேன்…” சொன்ன சகோதரியின் பிட்டத்தில் ஓங்கி ஒன்று கொடுத்தவள்,

“இதைத்தான் ஒரு மணி நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர். அங்கே அம்மா கச்சேரியை தொடங்கிவிட்டார்கள். இன்று இந்தத் தவணைக்கான இறுதிப் பரீட்சை மறந்துவிட்டீரா.. இப்படியே படுத்துக் கிடந்தால் பரீட்சையை யார் எழுதுவதாம்” இளையவள் உலுப்ப, அதற்கு மேல் உறங்க முடியாமல், அவசரமாகக் கனவுக்கு விடுதலை கொடுத்துவிட்டு திறக்க மறுத்த விழிகளைச் சிரமப் பட்டுத் திறந்தவாறு தங்கையைக் கொல்வது போலப் பார்த்தாள் நேயநறுமை.

“ஏன் எழுப்பினாய் நேரு மாமா. நல்ல கனவு கண்டுகொண்டிருந்தேன். இப்படி நாசமாக்கி விட்டாயே…” சிடுசிடுத்த சகோதரியை இடுப்பில் கைவைத்துப் பார்த்தாள் நேரிழை.

“முக்கியப் பரீட்சையை மறந்து கனவு காணும் அளவுக்கு அப்படி என்ன பெரிய கனவு அது?” ஆச்சரியம் போலக் கேட்க, சட்டென்று தன் கனவைச் சொல்ல வந்தாள் நேயநறுமை. அடுத்த கணம் வாயை மூடிக் கொண்டாள்.

ம்கூம், இவளுக்கு இப்போது இதைச் சொன்னால், கிண்டலடிப்பாள். என்ன இது? அவரைப் பிடிக்காது என்று சொல்லிக்கொண்டு கனவு வேறு காணுகிறீரே? என்று நக்கலடிப்பாள். கனவே என்றாலும், அவன் கூடக் கொஞ்சிக் குலாவியதை அவளிடம் சொன்னால், தவறாக நினைப்பாள். இதில் அவள் வேறு அவன் மீது மயக்கத்தில் இருக்கிறாளே. முதலில் அந்த மயக்கத்தை அவளிடம் மிருந்து சுத்தமாகத் துடைத்தெடுக்க வேண்டும்.

கொஞ்சமாகச் சாத்தான் அவள் உள்ளத்தில் புகுந்து விளையாட, மறுப்பாகத் தலையை அசைத்தவள்,

“கண்ட கனவைச் சொன்னால் பலிக்காது என் தொங்கச்சி…” சொன்னவள் குதூகலமாக குளியலறை நோக்கிச் சென்றாள்.

தயாராகி வெளியே வந்தபோதே ஆதியதுலன் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாள் நேயநறுமை. அவள்தான் காற்றில் அவனுடைய வாசனையை வைத்து இருக்கிறானா இல்லையா என்பதைக் கண்டுகொள்வாளே. அவன் அங்கில்லை என்பதை, அவனது வாசனையைத் தாங்கிவராத காற்று சொல்ல, மனம் சிணுங்கியது.

அவனைப் பார்த்தால்தான் அந்த நாள் நல்ல நாளாக இருக்கும். பெருமூச்சோடு தாய் தந்தையிடம் விடைபெற்றுப் பல்கலைக் கழகம் சென்றாள் நேயநறுமை.

அன்று மாலை, பரீட்சையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தபோது, முன்னறையில் எல்லோருமே பெரும் நகைப்போடு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இவளுக்குத்தான் அது இரசிக்கவில்லை.

காரணம், பரீட்சையில் வந்த கேள்விகளில் ஒன்று இரண்டைத் தவிர, அனைத்தும் அவள் அறியாத கேள்விகள். இதில் கொஞ்சம் படித்திருந்தாலாவது சமாளித்திருக்கலாம். அதைத்தான் இவள் செய்ய வில்லையே..

ஏனோ மனது பெரும் குற்ற உணர்வில் தவித்தது. அவளுடைய இந்த நிலைக்குக் காரணம் பெற்றவர்கள்தான். பரீட்சை நேரம், அவனை எதற்காக வீட்டிற்கு வரவழைத்தார்கள். அதனால் தானே இவள் மனது கெட்டுப் போனது. படிக்க முடியாமல் அவன் நினைவில் உழன்று இப்போது பரீட்சையில் கோட்டைவிட்டுவிட்டு நிற்கிறாள்.

இருந்தாலும் இந்தக் கேள்விகளைத் தயாரித்த பேராசிரியர் கொஞ்சமாவது இவளைப் போன்ற மாணவர்களைக் கருத்தில் கொண்டு கேள்விகளைத் தயாரித்திருக்கலாம். ஏதோ அறிவுஜீவிகளுக்கு ஏற்றது போலக் கேள்விகளைத் தயாரித்தால், அப்பாவியான இவளைப் போன்ற மாணவர்கள் எப்படித்தான் பரீட்சை எழுதுவது?

வீட்டிற்குள் நுழைந்ததுமே பெரியவர்களின் சிரிப்புச் சத்தம் இவளைப் பாதிக்க, வந்த வீச்சிலேயே சப்பாத்தைக் கழற்றி எறிந்துவிட்டு, ஜாக்கட்டை நின்ற இடத்தில் கழற்றி அப்படியே போட்டுவிட்டு, முகத்தை உர்… என்று வைத்தவள் உள்ளே வந்தாள்.

வந்தவளின் விழிகள் முதலில் தேடியது தந்தையைத்தான். அவருக்குப் பக்கத்தில் நேரிழை அமர்ந்திருக்க, ரோபோ போல நடந்து சென்றவள், நேரிழைக்கும் தந்தைக்கும் இடையே பொத்தென்று விழுந்து அவருடைய தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, உடனே தேவசகாயத்திற்குப் புரிந்து போனது அன்றைய பரீட்சையை அவள் சரியாக எழுதவில்லை என்று.

அவருடைய மகள் ஆஹா ஓஹோ என்று வாய்விட்டுப் புகழும் அளவுக்கு அசாதாரணப் படிப்பாளி அல்லதான். அதற்காக அவள் மக்கும் அல்ல. சாதாரணத்திற்கும் கூடுதல்தான். கொஞ்சம் அவளை ஊக்குவித்தாலே போதும், அதிக மதிப்பெண்களை எடுத்துவிடுவாள். பரீட்சையைச் சரியாக எழுதவில்லை என்றால் போச்சு. இரண்டு நாட்களுக்கு மனம் வாடிக் கிடப்பாள். அதைப் பார்க்கத்தான் இவருக்குத் தாங்காது. தன் மகளின் நிலையை அறிந்து அணைத்துக் கொண்டவர்,

“என்னடா? பரீட்சை சிரமமாக இருந்ததா…” என்றார் கனிவுடன்.

‘ஆம்’ என்பது போலத் தலையாட்ட, குனிந்து அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட்டவர்,

“ஷ்… அதனால் என்னம்மா? கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து இந்தப் பரீட்சையைத் திரும்பச் செய்யலாம் சரியா…?” என்று சமாதானம் செய்ய, அவளோ பதில் சொல்லாமல் அப்படியே கிடந்தாள்..

“ப்ச்.. என்ன இது…? பரீட்சை என்றால் அப்படித் தான் இருக்கும். இதற்கு இந்தளவு கலங்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? இப்படித் தொட்டாச் சிணுங்கியாக இருந்தால்… வாழ்வில் முன்னேற முடியாது…” அம்பிகா கடிய, தேவசகாயம் ஒரு பார்வையால் தன் மனைவியை அடக்கிவிட்டு,

“ஷ்… ஓகேடா… பரீட்சைதானே… திரும்பச் செய்யலாம்..” அவள் சொல்ல இப்போது தந்தையை விட்டு விலகியவள்,

“ப்சு… போங்கப்பா… நானே கடுப்பிலிருக்கிறேன். இப்போது போய்த் தத்துவம் பேசுகிறீர்களே… இந்தப் பரீட்சை வினாத்தாளை உருவாக்கின வன்டசுலின் நன்றாகவே இருக்க மாட்டார். அவருக்குக் கை கால் வாய் எதுவுமே விளங்காது பாருங்கள்.” நன்றாகச் சபிக்க நங் என்று அவளுடைய தலையில் ஒரு கொட்டு விழுந்தது.

வலிக்க,

“அவுச்…” என்று அலறியவாறு நிமிர்ந்து பார்க்கத் தாய்தான் கோபமாக நின்றிருந்தார்.

“நீ நன்றாகப் படித்திருந்தால் சுலபமாக அந்தப் பரீட்சையைச் செய்திருக்கலாம். நீதான் படிப்பதேயில்லை. இதில் எதற்கு உன்னைக் கற்பித்த ஆசிரியரைச் சபிக்கிறாய்? முதலில் இப்படிப் பேச எங்கே கற்றுக்கொண்டாய்?” கோபமாகக் கேட்க, தன் மகளின் தலையில் விழுந்த கொட்டு தனக்கு விழுந்தது போல முகத்தில் வலியைத் தேக்கி மனைவியைப் பார்த்து முறைத்தார் தேவசகாயம். ஆனாலும் அவரைப் பார்த்துத் திட்டவில்லை.

என்ன சொன்னாலும் அந்த இடத்தில் மனைவி செய்தது சரிதானே. ஆனால் அவளோ தலையைத் தடவியவாறு அன்னையைப் பார்த்து முறைத்தாள்.

“அவுச்.. மெல்லமாகக் கொட்டி இருக்கலாமே அம்மா.. வலிக்கிறது” சொன்னவள் பின், கோபமாகத் தாயைப் பார்த்தாள்.

“நான்தான் படிக்கவில்லை…. பரீட்சை சரியாக எழுதவில்லை, அங்கே எங்கள் வகுப்பிலேயே முதல் இடத்தில் ஒருத்தன் இருக்கிறான் யாங் வாங் என்று. வெளியே வந்தபோது அவன் தலை சொட்டையாக இருந்தது. ஏன் தெரியுமா? பரீட்சை வினா புரியாமல் தலையைச் சொறிந்து சொறிந்து மண்டையில் முடியே இல்லை…” அந்த நேரத்திலும் தன் கிண்டல் பேச்சை விடாமல் அவள் சொல்ல, அதைக் கேட்ட நேரிழை பலமாகச் சிரித்துவிட்டாள்.

இவளோ தன் தங்கையைப் பார்த்து முறைத்து,

“அடச் சீ… இப்போது எதற்குச் சிரிக்கிறீர்? உமக்கு என்ன தெரியும் நான் பட்ட பாடு… எங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததைத் தவிர, மிச்ச அனைத்தையும் அந்த வன்டசுலின் கக்கி வைத்திருக்கிறார். படுபாவி படுபாவி… ஒன்றும் அறியாத இளங்குருத்து எங்கள் வாழ்க்கையில் விளையாட அந்தாளுக்கு எப்படி மனது வந்தது?” உலகம் அழிந்தது போலப் புலம்பியவளை அவளுக்கு முன்பு அமர்ந்திருந்தவன் வியந்த புருவங்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய வியந்த பாவனையைக் கண்ட அம்பிகா சிரிப்பொன்றை உதிரவிட்டு,

“இதை எல்லாம் கண்டுகொள்ளாதே ஆதி…! இவள் இப்படித்தான். கொஞ்சம் என்றாலும் உடனே உணர்ச்சி வசப்படுவாள்.” அவர் கூற,

அப்போதுதான் நேயநறுமைக்கு அவன் அங்கே இருப்பதே உறைத்தது.

ஐயையோ…! என்ன பைத்தியக்காரத் தனம் செய்து வைக்கிறாள்? யாருக்கு முன்பாக நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாளோ, அவன் முன்பாக இப்படிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டோமே… தன்னையே திட்டியவள், கொஞ்சம் அசடு வழிந்தவளாக, தந்தையின் தோளில் இருந்து விலகி அமர்ந்தாள்.

அவனைப் பார்க்கச் சங்கடப்பட்டுத் தலை குனிந்துகொள்ள, அம்பிகா தேநீரை மகள் முன்பாக நீட்டினார். உடனே அதை வாங்கி அருந்தத் தொடங்கியவள்,

“அம்மா… எனக்கு இரண்டு டைலனோல் தருகிறீர்களா? தலை இடி மண்டையைப் பிளக்கிறது” என்றாள் நெற்றியை அழுத்திக் கொடுத்தவாறு.

“ஏன் தலையிடிக்கிறது? அந்தளவுக்கு நேற்று முழுக்க உறங்காமல் படித்தாயாக்கும்….” அன்னை கிண்டலாகக் கேட்க திருதிரு என்று விழித்தாள் நேயநறுமை.

எங்கே படித்தாள்? இதோ கண் முன்னால் கண்டும் காணாதது போல ஒருத்தன் அமர்ந்திருக்கிறானே… அவனை அல்லவா நினைத்து உறங்காமல் விழித்திருந்தாள். இதை எப்படித் தாயிடம் சொல்வது? சங்கடத்துடன் நெளிய, இளையவளோ கிளுக் என்று சிரித்தாள்.

“ஏன்டி சிரிக்கிறாய்?”

“ப்ச்.. நத்திங்… சும்மா..” என்றவள் சகோதரியைப் பார்த்துச் சொல்லவா என்று கண்களால் ஜாடை காட்ட, மூத்தவளோ கொன்று விடுவேன் என்பது போலத் தங்கையை முறைத்துப் பார்த்தாள்.

அதைக் கண்டு மேலும் குலுங்கிச் சிரித்தாள் இளையவள். அவளுக்குத்தானே தெரியும் எதனால் சகோதரி உறங்கவில்லை என்று. அவளுக்குத் தன்னுடைய சொந்த படுக்கை வேண்டும். இப்போது அதில்தானே ஆதியதுலன் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இதைச் சொல்ல முடியாதே. ஆனால் உண்மை வேறு என்பது நேயநறுமைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

தன் இரு மகள்களையும் பார்த்துவிட்டு,

“என்னவோ சரியில்லை… என்னாச்சு…” உடனே பஞ்சாயத்தைக் கூட்ட முயல,

“ஐயோ அம்மா… அவளுக்கு விசர்… அதை விடுங்கள்… இப்போது டைலனோல் கொடுக்கப் போகிறீர்களா இல்லையா?” சட்டமாகக் கேட்க, உடனே உள்ளே சென்று மருந்தை எடுத்துக் கொண்டுவந்து மகளிடம் நீட்ட, வாங்கித் தேநீரோடு குடித்தாள் நேயநறுமை.

இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதியதுலன். அவன் விழிகளில் தெரிந்த வியப்பையும், ஆராய்ச்சியையும் அதைக் கண்ட தேவசகாயம்,

“என்ன ஆதி அப்படிப் பார்க்கிறாய்?” என்றார்.

“ஓ… நத்திங் மாமா… இப்படித் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் எந்தத் தடையுமில்லாமல் பாசத்தை மட்டும் வெளிப்படுத்துவதைப் பார்க்க அழகாக இருக்கிறது… சொல்லப் போனால் நிறைவாகவும் இருக்கிறது” என்றான் புன்னகையுடன்.

அதைக் கேட்டுச் சிரித்த தேவசகாயம், மேலும் தன் மகளை இறுக்க அணைத்தவாறு,

“ஊரில் இப்படி வயதுக்கு வந்த பெண் பிள்ளையை அணைத்துக் கொள்வதெல்லாம் பெரிதாக நடப்பதில்லை இல்லையா… அங்கே ஒரு வித கட்டுப்பாடிருக்கும். அண்ணனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஒரு வயது எல்லைக்குள் தூர நிறுத்தப்பட்டு விடுவார்கள். இங்கே அதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. குழந்தையாக இருந்த போது எந்தளவு பாசம் இருந்ததோ, அதேயளவு பாசம் வளர்ந்த பின்பும் காட்ட முடிகிறது…” தேவசகாயம் சொல்ல ஆச்சரியத்தோடு தந்தையைப் பார்த்தாள் நேயநறுமை.

“ஏன்? ஏன்பா அங்கே அணைக்க முடியாது…?”.

“அங்கே அப்படித்தான்… சமூகம் போட்ட கட்டுப்பாடு. அதை மீற முடியாது…” அவர் சொல்ல உதடுகளைப் பிதுக்கினாள் நேயநறுமை.

“ஏன்? ஏன் மீற முடியாது…? ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தாலும் இருபது வயதுக் குமரியாக இருந்தாலும் மகள் மகள்தான் தந்தை தந்தைதான்… அதில் என்ன கட்டுப்பாடு விதிக்க இருக்கிறது?” எரிச்சலுடன் கேட்க தன் மகளின் தலை முடியை வருடிக் கொடுத்த தேவசகாயம்,

“அங்கே வாழ்க்கை முறை வேறுடா…. இரு பாலரும் இங்கே போல நட்பாக எல்லாம் பழக முடியாது. ஆணும் சரி பெண்ணும் சரி ஒரு எல்லைக் கோட்டோடு தங்கள் பேச்சு வார்த்தையை நிறுத்திவிடுவார்கள். அதற்காக அவர்களுக்குள் பாசம் எதுவுமில்லை என்று நினைத்துவிடாதே. பாசத்தைத் தள்ளி நின்று காட்டுவார்கள். அவ்வளவு தான்…”

“கமான்… இது என்ன விதமான பண்பாடு பழக்க வழக்கம்… எனக்குப் புரியவே இல்லை…” என்றவள் எழுந்து தன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டவள்,

“எனக்கு ஐம்பது வயதானாலும் என் அப்பாவின் மடியில் சாய்ந்து தூங்குவேன். இப்படி அணைத்துக் கொள்வேன்… இதோ…” என்றவள் தன் தந்தையின் கன்னத்தில் எச்சில் பட முத்தமிட்டு, “இப்படி முத்தமிடுவேன்… அதைத் தடுக்கவோ, இல்லை தவறு என்று சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை…” உறுதியாகச் சொல்லச் சிரித்தார் தேவசகாயம்.

“அதுசரி… திருமணம் கட்டிச்சென்றால், இந்த அப்பா கண்ணுக்குத் தெரியுமோ தெரியாதோ…” கிண்டலாகச் சொன்ன தாயைப் பார்த்து முறைத்தாள் நேயநறுமை.

“என் திருமணத்திற்கும், என் அப்பாவோடு செல்லம் கொஞ்சுவதற்கும் என்ன சம்பந்தம்?” தாயோடு சண்டைக்குச் செல்ல, இந்தக் காட்சி ஏனோ ஆதியதுலனின் ஆழ் மனதில் அழுத்தமாகப் பதிந்து போக, ஒரு விநாடி அவனுடைய முகம் கனிந்து போனது. விழிகளோ குறுகுறு என்று அவளைப் பார்த்தன. முதன் முறையாக அந்தக் குமரியைக் குழந்தையாகப் பார்க்கத் தலைப்பட்டான். நிஜமாகவே அவள் ஒரு குழந்தைதான். வளர்ந்த குழந்தை.

அதே நேரம் அம்பிகா தந்தையினதும் மகளினதும் பாசத்தைக் கண்டு எரிச்சல் கொண்டவராக,

“சரி சரி… கொஞ்சியது போதும், எழுந்து சென்று முகத்தையாவது கழுவிவிட்டு வா. வெளியே சென்று வந்தால், மேலைக் கழுவு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்…” அம்பிகா திட்டியவாறு ஆதியதுலனைப் பார்த்து,

“அவர்களை விடு ஆதி… இப்படித்தான் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருப்பார்கள்… நீ சொல்லுப்பா… இன்று மாலை உனக்கு நேரம் இருக்கிறதா?” என்றார் ஆவலாக.

அதுவரை தந்தையை அணைத்துக் கொண்டு இருந்தவள், அவரை விட்டு விலகி,

“எதற்கு நேரம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்?” ஆவலாகக் கேட்டாள்.

“அது எதற்கு உனக்கு…” என்றுவிட்டு ஆதி அதுலனைப் பார்த்து,

“இல்லை… நேருவின் தோழிக்குப் பிறந்த நாளாம். அதற்காகப் பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று சொன்னாள். கூடவே, நல்லதாக நான்கு ஆடைகளும் வாங்கவேண்டுமாம்… அதுதான் வணிக வளாகத்திற்குப் போகிறாள்…. உனக்கும் ஊருக்குப் போவதற்கு முன்பு அங்கிருக்கும் உறவினர்களுக்கு ஏதாவது பரிசுப்பொருட்கள் வாங்கவேண்டுமே. இன்று போனால், அதையும் வாங்கிவந்துவிடலாம். இல்லையென்றால் கடைசி நேரத்தில் ஓடித்திரிய வேண்டியிருக்கும்…” சொல்லி முடிக்கவில்லை துள்ளிக் கொண்டு எழுந்தாள் நேயநறுமை.

“ஷாப்பிங்கா… நான் இப்போதே தயார்…” கீச்சிட்டுக் கத்த, அவளுடைய கிறீச்சிட்ட சத்தத்தில் காதுகளைப் பொத்திக்கொண்டார் அம்பிகா.

“ஷ்… அதற்கேன்டி இப்படி சத்தம் போட்டுக் கத்துகிறாய்” என்று சினந்து விட்டு, “உனக்குத்தான் தலை வலி என்று சொன்னாயே. பேசாமல் அறையில் போர்த்து மூடிக்கொண்டு உறங்கு என்று சொல்ல, தாயை முறைத்தாள் நேயநறுமை.

அதியதுலனோடு வெளியே செல்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதற்கு ஆப்பு வைக்கிறாரே அவளைப் பெற்றவர்.

“அது… அதுதான் டைலனோல் போட்டு விட்டேனே… தலைவலியெல்லாம் போய் விட்டது… நானும் அவர்களோடு போவேன்” முடிவாகச் சொன்னவாறு சப்பாணி கட்டி அமர, மகளை முறைத்தார் அம்பிகா.

“அங்கே பரீட்சையில் கோட்டை விட்டுவிட்டு, இங்கே கடை என்றதும் கிளம்பிவிட்டாயா…” கோபமாகக் கேட்க உதடுகளை அழகாகச் சுழித்தாள் மகள்.

“அடப் போங்கள்மா… நானா கோட்டை விட்டேன். எல்லாம் அந்த வன்டசுலினால் வந்தது. தப்புத் தப்பாக வினாத்தாளைத் தயாரித்தால் யார்தான் சரியாகச் செய்வார்களாம்? அந்தாள் மட்டும் கையில் கிடைத்தான், கைமாதான்…” என்றவள்

“நான் கிளம்புகிறேன்…” என்றுவிட்டுத் துள்ளிக் கொண்டு அறைக்கு ஓட அதைக் கண்டு சிரித்தார் அம்பிகா. முகத்தை எட்டு முழத்துக்கு நீட்டிக் கொண்டு வந்ததென்ன, கடைக்குப் போகிறோம் என்றதும், துள்ளிக்கொண்டு ஓடுவதென்ன. இவளை எந்த நிலையில் வைத்துப் பார்ப்பதோ…’ நினைத்த வாறே ஆதியதுலனை ஏறிட்டு,

“சாரிபா… அவள் ஒரு மாதிரி இருந்தாளா, அதுதான் நேரு ஷாப்பிங் போவதால் இவளும் சேர்ந்து போகட்டுமே என்று தூண்டிவிட்டேன். கூடவே உன்னையும் இதில் இழுத்து விட்டேன். எப்படியும் நீயும் ஊருக்குப் போக முதல், ஏதாவது வாங்க வேண்டுமே. நேரு போக இருக்கிற வணிக வளாகம் டொரன்டோவிலேயே மிகப் பெரியது. அங்கே எல்லாப் பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் என்பதால் உனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்குச் சிரமம் என்றால் நீ போகவேண்டாம்…” அவர் சொல்ல,

“ஷாப்பிங்கா…?” என்றவாறு புருவங்களை நெரித்தான் ஆதியதுலன்.

“அம்பி… ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது ஐந்து நிமிடம். ஆனால் பெண்களுக்கு அரை நாள்.. இதில் எதற்கு ஆதியைக் கோர்த்து விடுகிறீர்கள்? பாவம்… பிரயோசனமாக எதையாவது செய்யட்டும்…” என்று நொந்து நூடுல்ஸாகிப் போன அனுபவத்தில் சொல்லக் கணவனை முறைத்தார் அம்பிகா.

“ஹலோ… போகப் பிடிக்கவில்லை என்றால், சும்மா இருக்கவேண்டும். அதை விட்டுப் போகச் சம்மதிக்கிற பிள்ளையைக் குழப்பக் கூடாது…” சொன்னவர், ஆதியதுலனைப் பார்த்து,

“கட்டாயம் எதுவும் இல்லை ஆதி. இவர்கள் ஷாப்பிங் முடித்து வீட்டிற்கு வர, கொஞ்சம் தாமதமாகும். அவர்கள் வீட்டிற்கு வரும் வரைக்கும் கொஞ்சம் படபடப்பாக இருக்கும்… உனக்குக் கஷ்டம் என்றால், பரவாயில்லை, மாமாவைத் துணைக்கு அனுப்பி விடுகிறேன்” என்றதும் விழித்தார் தேவசகாயம்.

“நானா…?” என்று அதிர்ந்தவர் மறு கணம்,

“ஆஆஆ… அம்பி… எனக்குக் கால் வலி… உங்களுக்குத் தெரியும்தானே… என்னால் நீண்ட நேரமாக நிற்கக் கூட முடியாது,.. ஆ…. அவுச்…” என்று முனங்க, அதைக் கண்டு அம்பிகா முறைத்தார்.

இத்தனை நேரம் சும்மா இருந்த மனுஷன், திடீர் என்று காலைப் பிடித்தால், அதற்கான காரணம் இவருக்குப் புரியாதா என்ன?

“ஹலோ.. இந்த சிவாஜிகனேஷன் நடிப்பெல்லாம் என்னிடம் எடுபடாது… பேசாமல் நீங்களும் போய் விட்டு வாருங்கள்…” உறுதியாகச் சொல்லப் பரிதாபமாக விழித்தார் தேவசகாயம். அதைக் கண்டு சிரித்த ஆதியதுலன்,

“சரி அத்தை… நானே போய் வருகிறேன்… மாமா… ஓய்வெடுக்கட்டும்” என்றதும் மகிழ்வாய் புன்னகைத்தார் அம்பிகா.

“உனக்கு ஒன்றும் சிரமமில்லையே…”

“ப்ச்… இல்லை அத்தை. எப்படியும் சும்மா தானே இருக்கப் போகிறேன். அவர்களுக்குத் துணையாகப் போய் வருகிறேன்…” என்றவன் தயாராகுவதற்காத் தன் அறைக்குள் செல்ல, தேவசகாயமோ, நிம்மதி மூச்சொன்றை விட்டார்.

அந்த நேரத்தில், ஆதியதுலனுக்கு கோவில் கட்டிக் கும்பிடக் கூடத் தயாராக இருந்தார். எல்லாம் பட்ட அனுபவம்தான்.

“என்ன… முகம் மலர்ந்திருக்கிறது… ஐயாவுக்குக் கால் வலி போய்விட்டதா என்ன?” இடுப்பில் கைவைத்து மனைவி கேட்க,

“ஹீ… ஹீ… அம்பி… வீட்டில் யாருமில்லாமல் தனிமையில் நாங்கள் இருவரும் இருந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதில்லையா…” என்று அசடு வழிய, சட்டென்று முகம் சிவந்தார் அம்பிகா. ஆனாலும் முகத்தைக் கோபமாக வைத்து,

“சீ… சீ… என்ன பேச்சு பேசுகிறீர்கள்… அதுவும் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில்…” கடுப்பாகச் சொன்னாலும், கணவனின் முகம் பார்க்க தைரியமற்று சமையலறைக்குள் போக முயல, உல்லாசமானார் தேவசகாயம்.

“என் அம்பி… உங்களோடு பேசாமல் வேறு யாரோடு பேச முடியும்…” என்றவர், “ஏன் அம்பி…? நம் பிள்ளைகளோடு ஆதியைத் தனியே அனுப்ப எப்படிச் சம்மதித்தீர்கள்? நீங்கள் பொதுவாக, இந்த விஷயத்தில் கறார் பேர்வழி ஆச்சே…” வியந்து கேட்க, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர், ஈரமான கரத்தை, சமையல் மேடையிலிருந்த துண்டால் துடைத்தவாறு வெளியே வந்து கணவனைப் பார்த்தார்.

“இது நம் காலம் போல இல்லை ‘கண்ணா’… நம் பிள்ளைகளின் எண்ணம் சிந்தனைகள் எல்லாம் முன்னோக்கிப் போகிறது. நாமும் அதற்கு ஈடு கொடுக்க வேண்டுமல்லவா? ஆதி நல்ல பையன். நேயாவுக்குப் பொருத்தமாக இருப்பான். பேசிப் பார்க்கட்டும். யார் கண்டா, ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்துக் கொண்டால் நம் வேலை மிச்சம்…” சொல்ல தன் மனைவியின் நோக்கம் புரிந்து வியந்தார் தேவசகாயம்.

“அட, இது நல்ல யோசனையாக இருக்கிறதே. நான் கூட யோசிக்கவில்லை பாருங்களேன். ம்.. நீங்கள் சொல்வது போல, நேயாவுக்கு நல்ல பொருத்தமாகத்தான் இருக்கிறான்… இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டால் நல்லது… ஆனால் இதில் கொசுறாக எதற்கு நேரிழை? அவளை நம் கூடத் தங்கச் சொல்லலாமா?” அப்பாவியாகக் கேட்ட கணவரை முறைத்தார் அம்பிகா.

“என்னதான் அவர்கள் பேசிப் பழகுவது நல்லது என்று நாம் அதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தாலும், அவர்கள் இருவரையும் எப்படித் தனியாகப் போகவிடுவது? பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்…?” கேட்ட மனைவியிடம்,

“ப்ச்… இது என்ன ஊரா பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்று அஞ்சி ஒதுங்க? கனடாமா… இது எல்லாம் இங்கே சர்வசாதாரணம்…”

“அதற்காக, சும்மா ஒரு ஆண்பிள்ளையோடு பெண்பிள்ளையைத் தனியே அனுப்ப முடியுமா? அது சரிவராது. நேரிழையும் போய் வரட்டும்.. என்ற மனைவியை வியப்போடு பார்த்தார் தேவசகாயம்.

“உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை அம்பி… தற்காலத்துக்கு ஏற்றது போலவும் யோசிக்கிறீர்கள், அதே வேளை பழைய காலத்து ஆள் போலவும் பேசுகிறீர்கள்…” என்று கூறச் சிரித்த அம்பிகா,

“தேவைக்கு மாறுவது தப்பில்லை அதே வேளை அளவுக்கு மீறி மாறுவதும் தவறுதான்…” என்று விட்டு கணவன் குடித்து முடித்த தேநீர் குவளையை வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, தன் மனைவியை நினைத்து அவரால் வியக்காமலிருக்க முடியவில்லை.

பதினான்கு வயதிலிருந்து இந்த நொடி வரை, அவரை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறாள் அவர் மனைவி. அம்பிகா ஆசைப்பட்டது போல, ஆதி மருமகனாக வந்தால், நன்றாகத்தான் இருக்கும். அதனைக் கற்பனையில் கண்டு இரசித்தவராக, மனைவிக்கு உதவும் பொருட்டு சமையலறைக்குள் நுழைந்தார் தேவசகாயம்.

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதற்கு?? நாம் ஒன்று நடக்க விதி இன்னொன்று நினைக்குமே… யாருக்கு யார் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறானோ

What’s your Reaction?
+1
8
+1
2
+1
2
+1
0
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

1 day ago

வெந்தும் தணியுமோ காதல் – 16

16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16B

16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…

4 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-16A

16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…

6 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 14

14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…

7 days ago