Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 12

12

உத்தியுக்தனுடையதும், சமர்த்தியினதுமான வாழ்க்கை மேடு பள்ளமின்றி ஓரளவு சீராகத்தான் சென்றது. முடிந்த வரை தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சமர்த்தியுடன் சற்று நிதானமாகப் பேசத் தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டான் உத்தியுக்தன். சமர்த்தியும் முடிந்தவரை ஜூலியட்டைப் பற்றிய பேச்சுக்கள் வராத வகையில் நடந்துகொண்டாலும், அவளையும் மீறி வார்த்தைகள் வந்து கொட்டத்தான் செய்தன.

அந்த நேரத்தில் எதுவும் பேசாது விலகிப் போவான் உத்தியுக்தன். இரவுகளில் எப்போதும் போலக் குழந்தையோடு ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு சமர்த்திக்குத் தெரியாமலே அவள் பக்கத்தில் படுத்து உறங்கிப் போவான். காலை அவள் எழ முதலே எழுந்து லீ வரமுதலே அவளுக்கான காலை உணவைச் சரிக்கட்டி அவளை உண்ண வைத்துவிட்டு வேலைக்குப் போவான். கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளில் சமர்த்திப் பழையது போலச் சற்று எடை போட்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியே சமர்த்திக்கான வளைகாப்பு நெருங்கியது.

மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைக்குமாறு உத்தியுக்தன் சொல்லியிருந்ததால், புஷ்மாவும் மறுக்காமல் மிக நெருங்கியவர்களை மட்டும் அழைத்திருந்தார்.

இந்த நிலையில் அவனுடைய தாயை அழைக்குமாறு சமர்த்தி சொல்ல, உடனே மறுத்து விட்டான் உத்தியுக்தன்.

அவர்கள் எல்லாம் எதற்கு… வேண்டியவர்களை மட்டும் அழைத்தால் போதுமானது?” என்றான் ஒரே சொல்லாக.

அவன் சொல்வதை உடனே கேட்டுவிட்டால் அது சமர்த்தி ஆகாதே. அவனைப் பார்த்து முறைத்துவிட்டு,

உங்களுக்குத்தான் உறவுகளின் அருமை தெரியாது. என் குழந்தையும் அப்படியா வளர வேண்டும். நீங்கள் உங்கள் அன்னையை வெறுக்கலாம். என் குழந்தைக்கு அதன் பாட்டி பற்றித் தெரிய வேண்டுமல்லவா…” என்று கறாராகக் கூற, வேறு வழியில்லாமல் மின்னஞ்சல் மூலம் அன்னையை அழைத்தான் உத்தியுக்தன்.

ஜெய் ஏதோ முக்கியக் கூட்டம் இருந்ததால் வரவில்லை. அவர் வரவில்லையென்று அங்கே யாரும் அழுததாகத் தெரியவில்லை. ரதியும் இரண்டு நாட்களின் முன்பே வந்திருந்தார். ஒரு வேளை மகனிடமில்லாத பாசம் பேரக்குழந்தையிடம் வந்ததோ.

வயிற்றைத் தள்ளிக்கொண்டிருந்த சமர்த்தியைக் கண்ட ரதியின் வறண்ட விழிகளிலும் மெல்லிய நீர்ப்படலம் வரத்தான் செய்தது. ஆனாலும் அதை நாகரிகமாகவே மறைத்துவிட்டு,

“ஹவ் ஆர் யு டார்லிங்…” என்கிற விசாரிப்போடு அவருக்கென்று ஒதுக்கிய அறைக்குள் நுழைந்து கொண்டார்.

உத்தியுக்தனின் அந்த ஒட்டாத தன்மை எங்கிருந்து வந்தது என்று இப்போது நன்கு புரிந்தது சமர்த்திக்கு. ஆனாலும் உடனே தன் தலையை ஆட்டி,

‘இல்லையே அண்ணன் அண்ணியோடு அன்பாக நடக்கத்தானே முயல்கிறான். அவனுக்கு உறவுகளின் அருமை தெரியாமலில்லை. அதை வெளிக்காட்டத்தான் அவனுக்குத் தெரியவில்லை.

எது எப்படியோ உத்தியுக்தன் அன்னையை நெருங்கச் சிறு முயற்சியும் எடுத்தானில்லை. வேண்டாத விருந்தினர் வீட்டிற்கு வந்ததுபோலவே நடந்துகொண்டான்.

அன்றும் அவன் சாப்பிடும்போது எவரையும் எதிர்பார்க்காமல் எப்போதும் போல மேசையில் அமர்ந்து தன் உணவைத் தட்டில் போடும் போது, ரதியும் உணவருந்த வந்திருந்தார். தன் மகனைக் கண்டதும், ஏதோ மூன்றாம் நபரைப் பார்ப்பதுபோலத் தயங்கி நிற்க, அங்கே வந்த லீ, ரதியைக் கண்டதும் தலை குனிந்து,

குட்மார்னிங் மாம்… ஐ ப்ரிங் தீ…” என்று விட்டு உள்ளே செல்ல, மறுக்காமல் உத்தியுக்தனுக்கு அருகே வந்து அமர்ந்தார் ரதி.

அந்த நேரம் உத்தியுக்தனுக்கு இருமல் வர, தன்னிச்சையாய் ஒரு குவளையில் தண்ணீரை விட்டு அவனுக்குப் பக்கமாக வைத்து, அவனுடைய தலையில் தட்டப்போக, சடார் என்று தன் தலையைப் பின்னால் சாய்த்தவன்,

“டோன்ட் டச் மி…” என்று விட்டுத் தன் உணவில் கவனம் செலுத்த, ரதியின் முகம்தான் கறுத்துப் போனது.

வாயில் வைத்த உணவை விழுங்கிச் சமாளித்தவர், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் எழுந்து கடகடவென்று தன் அறைக்குச் செல்ல அதைத் தள்ளி நின்ற பார்த்துக்கொண்டிருந்த சமர்த்திக்குத்தான் நெஞ்சம் காந்தியது.

கொஞ்சமாவது அன்னை என்கிற மரியாதை கொடுக்கிறானா பார்… பாவம் எப்படி வருந்தினார்கள்… பெற்ற குழந்தையால் நிராகரிக்கப்படுவதைப் போன்ற கொடுமை இந்த உலகத்தில் ஏதாவது இருக்க முடியுமா என்ன? எரிச்சலுடன் திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள் சமர்த்தி.

திமிர். உடல் முழுக்கத் திமிர். அன்று வேலைக்குக் கிளம்ப முதல் அறைக்கு வந்தவனை ஒரு பிடி பிடித்துவிட்டாள்.

“அப்படி என்ன பிடிவாதம், பெற்றவரோடு நெருங்க மாட்டேன் என்று…? உங்களுக்கெல்லாம் தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாதா?” என்று எகிற, அவனோ நிதானமாக இவளைப் பார்த்துவிட்டு,

“டோன்ட் கம் பிட்வீன் அஸ்…” என்றான் பற்களைக் கடித்தவாறு. இவளோ,

“ஏன்… ஏன் வரக்கூடாது… உங்கள் மனைவி என்றுதானே என்னை இங்கே அழைத்து வந்தீர்கள்… அது உண்மையென்றால் நான் தலையிடுவேன். உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நல்லது கெட்டதிலும் நான் தலையிடுவேன்… அதைத் தடுக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது… அப்படி நான் தலையிடக் கூடாது என்றால், இப்போதே சொல்லுங்கள்… நான் என் அண்ணா அண்ணி வீட்டிற்குப் போய்த் தங்குகிறேன். அங்கே உங்களைப் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு போக மாட்டார்கள்…” என்று சீறினாள் சமர்த்தி.

இவனோ, “ஸ்டாப்… ஜெஸ்ட் ஸ்டாப் இட் சதி… இன்னும் ஒரு முறை என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்லாதே… சொன்னால் அதற்குப் பிறகு நான் மனுஷனாகவே இருக்கமாட்டேன்…” என்று எகிறி விழுந்தவன், இறுக்கத்தோடு நின்ற தன் மனைவியைக் கண்டதும் கோபம் குறைந்தவனாய் அவளைப் பெரும் வலியோடு பார்த்தான்.

என்ன நினைத்தானோ அவளை நெருங்கி இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

“எனக்கு இருக்கும் ஒரே ஒரு உறவு… நீ… நீ மட்டும்தான் சதி… நீயும் என்னை விட்டுப் போனால் நான் என்ன செய்யட்டும்?” என்றவனுக்கு அவள் இல்லாத அந்த ஏழு மாதங்களும் அனுபவத்தை கொடுமை நினைவுக்கு வந்து உடலை நடுங்க செய்தது.

“சாரி சதி… எனக்கு அவர்களை என் அம்மாவாக நினைக்கவே முடியவில்லை… ஏதோ ஒரு அன்னியப் பெண்ணைப் பார்ப்பதுபோலத்தான் தோன்றுகிறது. அவர்கள் என்னைத் தொட வந்தபோது, தெரியாத ஒரு பெண் என்னைத் தொட நெருங்குவது போலச் சங்கடமாக இருக்கிறது நான் என்ன செய்யட்டும்…?” என்றவன் அவளுடைய கரங்களைப் பற்றி, அதில் உள்ள விரல்களை ஒவ்வொன்றாக பற்றி இழுத்து நெட்டி முடித்தவாறே,

“சதி… என் நிலையிலிருந்து பார்த்தால்தான் உனக்கு வலி புரியும். இந்த உலகத்தில் நாங்கள் ஜனித்ததுக்குக் காரணமே, தாங்கள் மலடு அல்ல என்று உலகத்திற்குக் காட்ட மட்டும்தான். மாம், டாட் இருவரும் பணத்தைத் தேடிப் போன நேரத்திற்கு எங்களோடு கொஞ்சநேரம்… கொஞ்ச நேரத்தைச் செலவு செய்திருந்தாலும் அவர்களைப் புரிந்துகொண்டிருப்போம். இப்போது அந்த வாய்ப்பைத் தெலைத்துவிட்டு உடைந்த கண்ணாடிகளை ஒட்டுவது போல, சேர்ந்திருக்கச் சொன்னால் அது எப்படிச் சதி…?” என்றவன், அவள் அதிக நேரம் நிற்கிறாளோ என்பது உறுத்த, அழைத்துச் சென்று அங்கிருந்த படுக்கையில் அமர்த்தி விட்டு, விலகியவன், மார்புகளுக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிச் சற்று நேரம் நின்றான். பின் சங்கடத்தோடு சமர்த்தியை பார்த்து எதையோ சொல்ல முயன்றான். பின் தயங்கினான். சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பினான். பின் முடிவு செய்தவன் போல,

“மிஸஸ் ஜான்சி மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருப்போமோ… அப்போது எங்களுக்குப் பதினொரு வயதிருக்கும் அப்பாவுக்கு விபத்து நடந்ததால் சக்கர நாற்காலியில்தான் அவருடைய வாழ்க்கை. அதனால் அவர் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவேண்டிய நிலை. அப்போது அம்மாதான் வியாபாரத்தைப் பார்த்தார்கள்.

அப்போதே அவர்களுக்கு அந்த ஜேயோடு…” என்றவன் பேச முடியாமல் அமைதி காக்க, இவளுடைய முகமும் கசங்கிப் போனது.

எப்படியோ சமாளித்தவனாகத் தொண்டையைச் செருமியவன்,

“ஜேயோடு வாழத் தொடங்கி விட்டார்கள். இங்கே எல்லோருக்கும் அது தெரியும்… ஆனால் யாராலும் தடுக்க முடியாத நிலை. எங்களை எல்லாம் கிழமைக்கு ஒரு முறைதான் வந்து பார்ப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போது பாவம் அப்பா… ரொம்பவே திணறிப் போவார். ஆனால் மாம் எதைப் பற்றியும் வருந்தியதில்லை. மிஸஸ் ஜான்சிதான் அம்மாவின் இடத்தை எங்களுக்கு நிரப்பினார்கள். அப்படியிருக்கையில் தான், மிஸஸ் ஜான்சி உறவுகளைப் பார்க்க இலங்கைக்குச் சென்றிருந்தார். அப்போது, வேலையாட்கள்தான் எங்களைப் பார்த்துக்கொண்டார்கள்…

ஒரு நாள் இரவு தண்ணீர் அருந்தவென்று சமையலறை சென்றேன்… அங்கே… அங்கே…” என்றவன் திக்கித் திணற, அதுவரை படுக்கையில் அமர்ந்தவளின் நெஞ்சம் ஆட்டம் கண்டது.

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டவளாக,

“உதி..” என்றவாறு அவனை நோக்கிச் செல்ல,

“அவ்வியோடு இங்கே வேலை செய்த நாற்பது வயது பெண் தப்பாக…” என்றவன் அதற்கு மேல் கூற முடியாமல் திணற, சமர்த்தியோ வாயடைத்துப் போனாள்.

“உதி… நோ… நோ… டோன்ட் சே தட்…” என்று மறுத்துத் தலையாட்ட, இவனோ விரக்தியோடு சிரித்து, “இப்போது நினைத்தாலும், அந்தப் பெண்ணை கொல்லும் வெறி எனக்குத் தோன்றும்… சதி… அந்த வயதில் பாலுறுப்புகளின் பயன்பாடு இயற்கையின் தேவைக்கு மட்டுமே என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்தம்மா என்ன செய்கிறார்கள் என்று கூடப் புரியாமல்… இப்போதும் அது கண்ணுக்குள் நிற்கிறது சதி…” என்று திணற,

“அந்தப் பெண்ணைச் சும்மாவா விட்டீர்கள்…” என்று சீறினாள் சமர்த்தி.

“எனக்குக் கூட அவள் என்ன செய்தார்கள் என்கிற தெளிவில்லை. ஆனால் அவ்வி வலியில் அழுவது மட்டும் புரிந்தது. அடுத்து என்ன செய்கிறேன் என்று தெரியாமல் அவ்வியைக் காக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்… வந்த ஆத்திரத்தில் அவளுடைய முகத்தில் ஓங்கி ஒரு உதை கொடுத்தேன். அது தவறிப்போய் வலது கண்ணில் ஆழமாகப் பட்டுவிட்டது. நல்லவேளை அவர்களாலும் காவல்துறைக்குப் போக முடியாத நிலை. பதினொரு வயதுக் குழந்தையோடு தவறாக நடந்தது தெரிந்தால் சட்டம் சும்மா விடுமா என்ன?” என்று கூற,

“ஏன் அவளைப் பிடித்துக் காவல் துறைக்கு ஒப்படைக்கவில்லை உத்தி…” என்று கேட்டவளுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

ஒரு குழந்தையைப் போய்… சீ… அவள் திணறும்போதே, விரக்தியாகச் சிரித்தவன்,

“பெரும் செல்வந்தனுக்குப் பணம்தான் பலம்… பலவீனம் என்ன தெரியுமா? அதே பணம்தான். எல்லோரும் நினைப்பார்கள் பணமிருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்று. இல்லை சதி… நிச்சயமாக இல்லை… பணம் இருப்பவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்தால்தான், அவர்கள் படும் அவலம் தெரியும். செல்வம் செல்வாக்கு இது இரண்டும் இருப்பது வரமல்ல சதி அதுதான் சாபமும் கூட. அப்போது மாம் அண்ட் டாட் இருவருக்கும் அவர்களின் மரியாதை தான் முக்கியமாக இருந்ததே தவிர, அவ்விக்கு நிகழ்ந்த அநீதி பெரிசாகத் தெரியவே இல்லை… அந்த நேரத்தில், பெரும் செல்வந்தரின் மகனை ஒரு வேலைக்காறப் பெண் தப்பாகப் பயன்படுத்தினாள் என்று சொன்னால், மிஸஸ் ரதி ஆதித்யனின் மரியாதை என்னவாகிறது? அதனால் அப்படியே மறைத்து மூடவேண்டியதாயிற்று. இதில் அம்மாவின் விளக்கம்தான் இன்று வரை மறக்க முடியாதது.

அவ்வி என்ன பெண் குழந்தையா, யாரோ தப்பாக நடந்தார்கள் என்பதற்காக மூலையில் போய் அழுவதற்கு. ஆண் பிள்ளைதானே… ஒரு ஆண்பிள்ளைக்கு… இதைக் கூடச் சமாளிக்கத் தெரியவில்லையென்றால் எப்படி…? என்றார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனையைத் தீர்த்து வைக்க நேரம் இருக்க வில்லை. ஜேயோடு சென்றுவிட்டார்கள்” என்றபோது சமர்த்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பாலியல் துன்பத்திற்கு ஆண் என்ன பெண் என்ன? அதுவும் குழந்தைத் தனம் மாறும்முன் தவறாக நடத்துவதென்றால், அதை விடக் கொடுமை என்ன இருந்துவிடப் போகிறது. அந்த வயது பெண் குழந்தைக்குப் பாலியல் துன்பம் நடப்பது எத்தனை கொடுமையோ, அதேயளவு கொடுமையைத்தானே அந்த ஆண் குழந்தையும் அனுபவித்திருக்கும்… நினைக்க நினைக்கச் சமர்த்திக்கு ரதியின் மீது தீராத ஆத்திரம் வந்தது.

பெற்ற குழந்தைக்கு அநீதி நடந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாமல், தன் மரியாதையைக் காத்துக்கொள்ள நினைத்திருக்கிறாரே. சே… இவர்கள் எல்லாம் தாய் தானா? சீற்றத்துடன் எண்ணும் போதே, உத்தியுக்தனின் முகத்தில் மெல்லிய வாட்டம் வந்தது.

“பாவம் மிஸஸ் ஜான்சி… இந்தச் செய்தி அறிந்து ஊருக்குப் போவதையே குறைத்துக் கொண்டார்கள். அவ்வியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்கள். சில வேளைகளில் சமையலறைப் பக்கம் போகவே அஞ்சுவான். மிஸஸ் ஜான்சிதான் அவனை அழைத்துச் சென்று தைரியம் கொடுத்தார். அவன் தேறி வந்துவிட்டான்… சொல்லப்போனால் வயது வந்ததும், பெண்களைத் தேடி அவன் சென்றதற்கு அந்தச் சம்பவமும் ஒரு காரணம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் நான்தான்… எனக்குதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அம்மா எங்களோடு செலவிட்ட நேரம் மிக மிகக் குறைவு சதி. விரல்விட்டு எண்ணி விடாலம். அப்படி இருக்கிறபோது அவர்களிடம் எப்படி பற்று வரும்?

அம்மா மட்டும் எங்களை முன்நிறுத்தி, எங்களுக்காக வாழ்ந்திருந்தால் அவ்விக்கு இத்தனை பெரிய பிரச்சனை வந்திருக்காது… அவனும் மனுஷனா இருந்திருப்பான். அந்தக் கோபம் இந்தக் கணம் வரை உள்ளே கனன்று கொண்டுதான் இருக்கிறது சதி… அந்தச் சம்பவத்திற்குப் பிறகு விபரம் தெரியும் வரைக்கும் நான் யாரையும் என்னருகே விட்டதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையை யாரோடும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்ததற்கும் இதுதான் காரணம்.

அப்பா இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை மாம் அந்த ஜேயைத் திருமணம் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வந்ததும், இதுதான் உங்கள் டாட் என்றார்கள். அது எப்படி? திடீர் என்று ஒரு தந்தையை மாற்ற முடியும். தாய் தந்தை என்னும் உறவு கடையில் வாங்கும் மளிகைச் சாமானா? வாங்கிப் பழக்கப்படுத்திய ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றைப் புதிதாக வாங்கி உரிமை கொண்டாடுவதற்கு. எப்போதுமே மாம் இற்கு, தன் மகிழ்ச்சி மட்டும்தான் முக்கியமாகத் தெரிந்ததேயன்றி, நம்மைப் பற்றி ஒரு போதும் அவர்கள் வருந்தவில்லை தெரியுமா? அன்றைக்கு மொத்தமாக வெறுத்தவன்தான் சதி… இன்று வரைக்கும் அந்த வெறுப்பிலிருந்து மீளவில்லை…

“ஆனால் சதி… நம்முடைய குழந்தை மட்டும் அப்படி வளரக்கூடாது… நாம் இருவரும் உன் அண்ணா அண்ணி போல, நம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்… அவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டும். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் விருது வாங்கும் பொது, முன்னிருக்கையில் அமர்ந்து கைதட்டி ஆரவாரிக்க வேண்டும். ஊக்கம் கொடுக்க வேண்டும். உலகில் குடும்பத்துக்கான முக்கியத்துவத்தை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்… இதற்காகவாவது என் கூடக் கைகோர்த்து வருவாய் தானே… நான் நீ நம் குழந்தைகள் என்று அழகான நந்தவனத்தில் சந்தோஷமாக…” என்று கூறியவன் அவளை நெருங்கி, அவளுடைய கன்னத்தைப் பெருவிரலால் வருடியவாறு, “சே யெஸ்…” என்றான் ஏக்கமாய். இவளோ அவனை வெறித்துப் பார்த்துவிட்டு,

“அதற்கு நம்மிடையே காதல் இருக்க வேண்டும் உதிதன். காதலால் செழிக்கும் குடும்பம் தான் அழகான நந்தவனமாக இருக்க முடியும்… பழிவாங்குவதற்காக விதைக்கப்பட்ட விதை மீது உங்களுக்கு அன்பும் வராது, உதி…” என்றாள் விழிகள் கண்ணீரால் நனைய.

அதைக் கேடடதும் மறுப்பாகத் தலையை அசைத்தவன்,

“இல்லை… இல்லை சதி… அன்றும் இது பற்றிச் சொல்ல வந்தேன்… ஆனால் முடிந்திருக்கவில்லை… உன்னை மணம் முடித்ததற்கு முக்கியக் காரணம் பழிவாங்குவதோ இல்லை நான் குடும்பஸ்தன் என்பதைக் காட்டுவதற்காகவோ மட்டுமில்லை சதி… அதையும் தாண்டி உன்னை மணக்க முடிவு செய்ததற்குக் காரணம், நீ உன் குடும்பத்தின் மீது வைத்திருந்த அப்பழுக்கற்ற அன்பு…” என்றான் அவன்.

இவளோ அதிர்ந்தவளாய் ‘என்ன உளறல் இது’ என்பதுபோல உத்தியுக்தனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நிஜம் அதுதான் சதி… என் வாழ்க்கையில் நடந்த கசப்புகள் அனைத்தும் நிஜமான குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை மறக்கடித்து விட்டன. அது எப்படியிருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது. அதனால்தானோ என்னவோ நான் கொஞ்சம் சுயநலவாதியாகவே இருந்துவிட்டேன். ஆனால் அன்று உன்னைக் கடத்திச் சென்றேன் பார்… அப்போது உன் அண்ணா அண்ணிக்காகத்தான் பணம் வாங்கினாய் என்று சொன்னாய் அல்லவா… அந்தக் கணம் எனக்குள் ஒரு திகைப்பு. உறவுக்காக யாராவது இப்படிச் செய்வார்களா என்று அதிர்ச்சி. பெற்ற குழந்தைகளையே குப்பையாய் தூக்கிப் போடும் மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில், கணவனின் ஒன்று விட்ட தங்கையைத் தன் குழந்தையாய் போற்றி வளர்க்கும் புஷ்பா… அவர்களை அன்னையாக ஏற்று மதித்து வாழும் நாத்தனார்… தங்கைக்காக உயிரைக் கொடுக்கும் அண்ணன், அந்த அண்ணனின் கடன் சுமையைப் போக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராகும் தங்கை… மை காட்… இது எந்த விதமான பிணைப்பு… உங்கள் எல்லோரையும் நினைக்கும் போது, எனக்கு மிகப் பெரும் ஆச்சரியமாகவே இருந்தது சதி. அதுவும் வளர்த்தவர்களுக்காகவே இத்தனை செய்பவள்… தனக்கென்று ஒரு குடும்பம் வந்தால்.. உள்ளங்கையில் தாங்கியிருக்க மாட்டாயா… என் அம்மா போல, சுயநலமாய்க் குடும்பத்தை உதறிவிட்டுப் போகமாட்டாய் தானே… ஜூலியட் போல உன் அன்பு பொய்த்துப் போகாது தானே… அந்தக் கணம் நீதான் என் மனைவி என்று முடிவு செய்தேன். அந்த நுரத்தில், உன்னை விட்டு விலகினால், யாராவது உன்னைத் தட்டிப் பறித்து விடுவார்களோ போய்விடுவார்களோ என்று அஞ்சினேன்… மற்றவையெல்லாம் அதற்கு ஆதரவான காரணங்கள் மட்டும்தான்…” என்றவனை நம்பாமல் பார்த்தாள் சமர்த்தி.

“ஜூலியட்டையும் மணக்கத்தானே முடிவு செய்திருந்தீர்கள்?” என்றாள் குறையுடன்.

“ஆமாம்… அப்படித்தான் முடிவு செய்து இருந்தேன்… நிச்சயதார்த்தத்தைப் பொது வெளியில் ஏன் வைத்தேன் என்று நினைத்தாய்? மக்களின் வாக்குகளை என் சார்பாகப் பெறுவதற்காகத்தான் சதி. திருமணம் முடித்தால் குடும்பஸ்தனானால், மக்களிடையே நன்மதிப்பு இருக்கும் என்பதற்காகத் தான் ஜூலியட்டைத் திருமணம் முடிக்க நினைத்தேன். எப்படியும் ஒருத்தி என் வாழ்க்கைத் துணையாக வரத்தானே வேண்டும். அது ஜூலியட் என்று முடிவு செய்தேன்… ஆமாம் அப்போது எனக்கு ஜூலியட்டைப் பிடித்திருந்தது… அவளுடன்தான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன்தான்… ஆனால் அப்போது உன்னை எனக்குத் தெரியாது அல்லவா…” என்றவன் அவள் தோள்களில் கரங்களைப் பதித்து,

“இது நம்புவது சிரமம் என்று எனக்குத் தெரியும் சதி… ஆனால் அதுதான் நிஜம். இன்று வரை உன் குடும்பத்தை மதிக்கிறேன். புஷ்பா, தயாளன்.. மிக அருமையான மனிதர்கள். அவர்களைப் பார்க்கும் போதுதான், நானும் அவ்வியும் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பது தெரிகிறது…” என்று அவன் கூற சமர்த்தி கூட ஒரு கணம் குழம்பித்தான் போனாள்.

உத்தியுக்தன் ஒரு போதும் அவள் அண்ணன் அண்ணியைப் பற்றித் தவறாகப் பேசியதில்லை. அவர்களைப் பற்றிப் பேசும்போது இவன் முகம் கனிந்துதான் இருந்திருக்கிறதே தவிர, அதில் ஒரு விகிதம் கூட ஆத்திரமோ கோபமோ தெரிந்ததில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறானே தவிர, ஒரு விநாடி கூட அவர்களைத் தரக்குறைவாக அவன் பேசியதில்லை. அப்படியானால் இவன் சொல்வது நிஜம்தானா? நம்புவதா, நம்பாது இருப்பதா என்று குழம்பும்போதே,

“நீ இங்கில்லாதபோது, உன்னைப் பற்றி அறிவதற்காக அடிக்கடி தயாளனோடு பேசி இருக்கிறேன் சதி… பேசப் பேச மாசு அறும் என்று சொல்வார்கள் அல்லவா… உன் அண்ணாவோடு பேசும்போது எனக்குள் இருக்கும் இறுக்கம் மெல்ல மெல்லக் கரைந்து செல்வதை உணர்ந்தேன்… நான் முயல்கிறேன் சதி… முடிந்த வரை உனக்காக மாற முயல்கிறேன். என் கடந்த காலங்களைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு உனக்காக வாழ முயல்கிறேன் சதி… ஐ வில் ட்ரை மை பெஸ்ட்… ஐ வில்…” என்றவன் அவளை நோக்கிக் குனிந்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு விலக,

“அப்படியானால் அந்த ஜூலியட்… அவளுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதா?” என்று இன்னும் நம்பாதவளாகக் கேட்க, இப்போது தன்னை மறந்து சிரித்தவன்,

“சம்பந்தம் இருக்கிறது. ஆனால் நீ நினைப்பது போல அல்ல…” என்று அவன் மென்மையாக கூற,

“அப்படியானால் ஜூலியட்டின் குழந்தைக்குத் தந்தை யார்…” என்றாள் அதை அறிந்துவிடும் ஆர்வத்தோடு. இப்போது மெல்லிய கண்டிப்புடன் அவளைப் பார்த்தவன்,

“சதி… என் சார்ந்த அத்தனையையும் ஒளிவு மறைவின்றி உனக்குக் கூறிவிட்டேன்… ஜூலியட் பற்றிய செய்தியை உனக்குக் கூறுவதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை…” என்று கூற, இவளோ ஆத்திரத்துடன் அவனை முறைத்து,

“ஏன் இல்லை… நான் உங்கள் மனைவிதானே… எனக்குத் தெரிந்தால் என்ன?” என்று சீற, இவனோ, தன்னவளை நெருங்கி அவள் முகத்தைத் தன் இரு கரங்களாலும் பற்றித் தூக்கி,

“பம்கின்… நான் உன்னவன்… என் சார்ந்த அத்தனை உரிமையும் உனக்கு உண்டு. ஆனால் ஜூலியட் உனக்கு மட்டுமல்ல, எனக்கும் அன்னியப் பெண்தான். அப்படியிருக்கையில் அவளைப் பற்றிப் பேசுவது தப்புமா… அதை நான் எக் காலத்திலும் செய்யமாட்டேன்…” என்று விட்டு அவளை விட்டுப் பிரிந்தவன்,

“நான் புறப்படவேண்டும்… பாய்” என்றவன் மீண்டும் அவளுடைய நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமிட்டு விலகிச் செல்ல, அவளுடைய மனமோ சற்று முன் அவன் கூறியதையே நம்பிக்கை இல்லாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிலேயே உளன்றுகோண்டிருந்தது

What’s your Reaction?
+1
35
+1
16
+1
5
+1
0
+1
2
+1
0
Vijayamalar

View Comments

  • அருமை அருமை அருமை 🤗🤗 ட.
    ரதி தாயாக இருக்க தகுதியே இல்லாத ஆள்😡😡😡😡😡😡😡.
    ஜூலி பத்தி அப்படியென்ன ரகசியம்?🙄🙄🙄🙄.
    நயணிம்மா என்ற நாத்தனார் பொண்ணுக்கு கல்யாணம் அதான் சைட்டுக்கு வரமுடியலை ப்பா.

    • நன்றி தங்கம். ஒரு அவசரமும் இல்லை. முதல்ல உங்க வேலையை முடிச்சிட்டு ஆறுதலா வாங்கபா. ஒரு பிரச்சனையும் இல்லை. உங்க நாத்தனார் பொண்ணுக்கு என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க.

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

2 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

23 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 13

13 அன்று மாலை வீடே அல்லோல கல்லோலப் பட்டது. தயாளனும், புஷ்பாவும், ஐந்து வானரங்களுமாக அந்த வீட்டை இல்லை உண்டு…

1 week ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11

11 உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த…

2 weeks ago