அவள் சொன்னதைக் கேட்டு, அவளை ஆத்திரத்துடன் ஏறிட்டவன்,
“விவாகரத்தா.. ஓவர் மை டெட் பாடி..” என்றான் சீறலாய். இவளோ நக்கலாய் இவனைப் பார்த்து
“வை நாட்… உங்களுடனான வாழ்க்கைக்குச் சாத்தியமே இல்லை என்கிற போது, இந்தத் திருமணப் பந்தம்தான் எதற்கு? ஆண்கள் நீங்கள் எல்லோரும் திருமணம் முடிக்க முன்னும் ஒருத்தியை வைத்திருப்பீர்கள். திருமணம் முடித்த பின்னும் இன்னொருத்தியை வைத்திருப்பீர்கள். நாங்கள் மட்டும் கணவனே கண்கண்ட தெய்வம் என்பது போல நீங்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டும் காணாததும் போல ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் என் வாழ்க்கையையும் இளமையையும் தொலைத்துவிட்டு நிற்கவேண்டுமா என்ன? இது என்ன பதினெட்டாம் நூற்றாண்டு என்று நினைத்தீர்களா…?” என்றவளைக் கீழ்க்கண்ணால் பார்த்தான்.
என்ன நினைத்தானோ அவனையும் மீறி அவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்ப முயன்று தோற்றுப் போனது.
“நம்முடைய வாழ்க்கை சாத்தியமில்லை என்று உனக்கு யார் சொன்னார்கள் சதி…”
“யார் சொல்லவேண்டும் நான்தான் சொல்கிறேன்… சத்தியமாக இனி உங்களோடு என்னால் வாழ முடியாது… எனக்குச் சுதந்திரம் தேவை… இப்படி நீங்கள் சொல்வதற்கு ஆமா சாமி போட்டு வாழ என்னால் முடியாது. என்னால் மட்டுமல்ல, என் குழந்தைக்கும் அழகான சூழல் வேண்டும்… நிச்சயமாக உங்கள் நிழலின் கீழ் கிடைக்க வாய்ப்பேயில்லை…” என்று மறுப்பாகக் கூற,
“என் குழந்தைக்கு என் நிழலில் இவை கிடைக்காதென்று உனக்கெப்படித் தெரியும்?” என்று அடக்கிய ஆத்திரத்துடன் கேட்டவனைத் தலை முதல் கால் வரை பார்த்தவள்,
“அதற்கு அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திருக்க வேண்டும்… நீங்கள்தான்…” என்றவள் ஏளனத்துடன் சிரித்து,
“இத்தகைய சூழ்நிலை எனக்கு வேண்டாம்…” என்றதும், இவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி அவளை வெறித்தான்.
“என் பருவகால வாழ்க்கையை நான் தீர்மானிக்கவில்லை சதி… அதைத் தீர்மானித்தது என் பெற்றோர்…” என்றான் அடக்கிய ஆத்திரத்தோடு.
“யார் தீர்மானித்தாலும், உங்கள் வறண்ட குணம் என் குழந்தைக்கு வேண்டாம்… அவனை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன்… தயவு செய்து எங்களை நிம்மதியாக விட்டுவிட்டுப் போகிறீர்களா? நீங்கள் என்னதான் கெஞ்சினாலும், மிஞ்சினாலும் உங்களோடு வர நான் தயாராக இல்லை…” என்றதும்,
“சதி நம் குழந்தைக்குத் தந்தை வேண்டும் சதி… தவிரத் தனியாளாக உன்னால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது. உனக்கு ஒரு வேளை சமையல் கூடத் தெரியாது… எப்படிக் குழந்தையின் பசியைப் போக்குவாய்?” என்று அழுத்தமாகக் கேட்க, இவளோ,
“அதற்கு நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்… நிச்சயமாக நான் தனியாளாக இருக்கப் போவதில்லை… என் குழந்தைக்கு நல்ல ஒரு தந்தையை முக்கியமாக நன்றாகச் சமைக்கத் தெரிந்த ஒருவனைத் தேடிக் கொடுக்க என்னால் முடியும்… அது என் பிரச்சனை” என்று திடமாகக் கூற, ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி உடல் இறுக நின்றான் உத்தியுக்தன். பின் தலையை மறுப்பாக ஆட்டி,
“இல்லை சதி… இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். பெற்றவளே இன்னொருத்தனை அழைத்து வந்து இதுதான் என் கணவர் என்று அறிமுகப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் வலியும் எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியாது… அந்த நிலை என் குழந்தைக்கு வர நான் விடவும் மாட்டேன்… வருபவன் எப்படியெல்லாம் குழந்தையைத் துன்புறுத்துவானோ.. எப்படியெல்லாம் மனதால் காயப்படுத்துவானோ… அத்தகைய நிலைக்கு என் குழந்தையைத் தள்ள ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் சதி…” என்று உறுதியாகக் கூற, அதிலிருந்த வலியைக் கவனிக்கத் தவறியவளாய்,
“ரியலி… அதே குழந்தையின் தந்தை இன்னொருத்தியை அழைத்து வந்து இதுதான் உன் புதிய தாய் என்றால் மட்டும் அதன் உள்ளம் குளிர்ந்து துள்ளிக்குதிக்குமோ?” என்றாள் எகத்தாளமாக.
இவனோ சடார் என்று அவளைப் பார்த்து,
“என்ன உளறுகிறாய்? என் உயிர் இருக்கும் வரைக்கும் என் குழந்தையை அத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளவே மாட்டேன்.” என்றான் சீறலாய்.
“ஆமாம் ஆமாம் நீங்கள் எல்லாம் அந்த ஸ்ரீராம சந்திரப் பிரபோ… ஒருத்தியைத் தவிர வேறு யாரையுமே தொட மாட்டீர்கள்…” என்று கிண்டலும் எரிச்சலும் ஒன்றுசேரக் கூற, இவனோ மெல்லியதாகச் சிரித்து,
“நான் ஸ்ரீராமரும் கிடையாது, இராவணனும் கிடையாது. சாதாரண மனுஷன். நீ சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் ஏகபத்தினி விரதன் தான். எவளோடு வாழ்கிறேனோ அவளுக்கு உண்மையாக இருந்தேன். ஜுலியட்டோடு வாழ்ந்த போதும் அவளுக்கு நான் துரோகம் செய்ததில்லை, உன்னை மணந்த பின் உனக்கும் துரோகம் செய்ததில்லை. இனி வாழ் நாள் முழுவதற்கும் நீதான் எனக்குச் சதி…” என்றான் மென்மையாய். அந்தக் குரலில் உருக முயன்ற இதயத்தைத் தட்டி அடக்கியவாறு,
“அடேங்கப்பா…? புல்லரித்துவிட்டது. ஆனால் பாருங்கள் நம்பும் அளவுக்கு நான் முட்டாளில்லை… அதுவும் ஜூலியட்டைப் பார்த்தபிறகு… அதனால் வீணாக முயற்சி செய்யாதீர்கள்…” என்று கூற இவனோ புரியாமல் இவளை ஏறிட்டு,
“என்ன சொல்கிறாய் சதி… ஜூலியட்டிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்” என்றான்.
“என்ன சம்பந்தமா?” என்றவள் தன் வயிற்றைத் தொட்டுக் காட்டி, இந்தக் குழந்தை மட்டும்தான் உங்கள் வாரிசு என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? சொல்லுங்கள்… உங்களால் முடியுமா…?” என்றாள் பெரும் ஆவேசமாய். இவனோ, புருவங்கள் சுருங்க இவளைப் பார்த்துவிட்டு,
“இதில் என்ன சந்தேகம்… ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.. ஜூலியட்டிற்குப் பிறகு நான் தொட்டது உன்னை மட்டும்தான். அதுவும் உன்னை மணப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜூலியட்டுடனான உறவை நிறுத்திக்கொண்டவன்… அப்படியிருக்கையில் எனக்கு வேறு குழந்தைகள் உருவாக வாய்ப்பில்லை… நான் ஒன்றும் கடவுள் இல்லை பார்வையால் பார்க்கும் பெண்களுக்குக் குழந்தை கொடுக்க..?” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூற, இவளுக்குத்தான் நெஞ்சை அடைத்தது. எத்தனை பெரிய பொய்.
“இதை நம்பச் சொல்கிறீர்களா? நேற்று ஜூலியட்டைப் பார்த்த பிறகும் இதை நம்புவேன் என்று நினைத்தீர்களா?” உயிரை எரித்த வேதனையுடன் இவள் கலங்க,
“ஜூலியட்டைப் பார்ப்பதற்கும், நான் சொல்வதை நம்புவதற்கும் என்ன சம்பந்தம்?” என்றான் உண்மையான எரிச்சலுடன்.
“என்ன சம்பந்தமா… ஜூலியட்டும் கற்பமாக இருக்கிறாள்…” என்றாள் சமர்த்திப் பற்களைக் கடித்தவாறு.
“அப்படியா… இருக்கலாம்… அவளைச் சந்தித்து ஐந்து மாதங்களாகின்றன… அதனால் எனக்குத் தெரியவில்லை…” என்றான் அக்கறையற்று.
“அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்…?” என்றதும், இவனோ எரிச்சலுடன் இவளைப் பார்த்தான்.
“எனக்கெப்படித் தெரியும். இதை அவளிடம் தான் நீ கேட்கவேண்டும்…” என்றவனை நம்ப முடியாதவளாகப் பார்த்தாள் சமர்த்தி. ஆத்திரமும் அழுகையும் ஒன்றாகப் போட்டிப்போட்டுக் கொண்டு வர,
“நீங்கள்தான் அந்தக் குழந்தைக்குத் தந்தை என்கிறேன் நான்…” என்று அவள் முடிக்கவில்லை, சீற்றத்துடன் தன் கரத்தை ஓங்கிவிட்டிருந்தான் உத்தியுக்தன்.
அவனுடைய முகம் ஆத்திரத்தில் நெருப்பாய்ப் பற்றிக்கொள்ள, மூச்சுக்காற்றோ, அந்தச் சூட்டை எடுத்துக்காட்டும் வகையில் மிகப் பயங்கரமாக வெளி வர அதை வெளிப்படுத்தும் வகையில் தன் பலம் பொருந்திய கரத்தை அவள் கன்னத்தை நோக்கி இறக்கத் தொடங்கினான்.
அவன் கரத்தை உயர்த்தியதும், தன்னிச்சையாய் சமர்த்தியின் விழிகள் பயத்தில் மூடி, எங்கே அடி விழுந்துவிடுமோ என்று அஞ்சியவள் போலத் தலையைத் திருப்ப, இவனோ இறக்கிய கரத்தைச் சிரமப்பட்டு இடை நிறுத்தி, விரல்களைச் சுருக்கிக் கீழே இறக்கியவாறு,
“சே…” என்றான். இவனுக்கு ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது.
என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். வார்த்தையா அது… துப்பிய தீயல்லவா… யாருடைய குழந்தைக்கு யார் தந்தை? வெறுப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“என்ன சொன்னாய்… அந்தக் குழந்தைக்கு நானா தந்தை.. இதைச் சொன்னதற்காகவே உன் பற்களைக் தட்டி உன் கரங்களில் கொடுத்திருக்கவேண்டும்… சீ… இத்தனை கேவலமாகவா என்னைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறாய்? எப்போது நீ என் மனைவியானாயோ, அந்தக் கணத்திலிருந்து நீ மட்டும்தான் எனக்கு. அதுவும் என்று உன் விழிகளைக் கண்டேனோ அந்த விநாடியிலிருந்து ஜூலியட்டைக் கூட நெருங்க முடியாமல், அல்லல் பட்டவன் நான். நீ சென்ற பின், இத்தனை நாட்களும், உன் நினைவில் தூங்க முடியாமல் தவித்தவன் நான்… அப்படியிருக்கையில், ஜூலியட்டின் குழந்தைக்கு என்னைத் தந்தையாக்கப் பார்க்கிறாயா? யார் குழந்தைக்கு யார் தந்தை… சிந்தனையே அருவெறுக்கிறதே… பேசும்போது உனக்குக் கொஞ்சம் கூடவா அருவெறுக்கவில்லை…” என்று அவன் எகிற, வேளை கெட்ட வேளையில் அவள் முகம் நோக்கி வந்த ஜூலியட்டின் உருவம்தான் நினைவுக்கு வந்தது. போதாததற்கு அவளை அணைத்து நின்ற உத்தியுக்தன். அவனோடு ஆடிய உத்தியுக்தன், இப்படி மாறி மாறித் தோன்ற, ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தவள்,
“நீங்கள் எல்லாம் நடிக்கப் போனால் லியோனார்டோ டிகப்ரியோவையே தூக்கிச் சாப்பிட்டு விடுவீர்கள்…” என்றாள்.
இவனோ, தன் சுட்டுவிரலைத் தூக்கி அவள் முன்னால் ஆட்டி,
“நீ முதன் முறையாக என்னைப் பற்றி அறியாமல் ஒரு கட்டுரை எழுதினாய் பார் அது எனக்கு வலிக்கவில்லை, அன்று அத்தனை பேரின் முன்னாலும் என்னை அவமானப்படுத்தினாய் பார், அதுவும் வலிக்கவில்லை… நான் சொல்வதை நம்பாமல் கண்ட கண்ட பத்திரிகை எழுதுவதை நம்பினாய் பார் அது கூட எனக்கு வலிக்கவில்லை… ஆனால் ஜூலியட்டின் குழந்தைக்கு நான் தந்தை என்றாய் பார்… அது… அதுதான் எனக்கு வலிக்கிறது… நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சீ… ஒவ்வொரு முறையும் உன் செயலாலும் சொல்லாலும் உன் தரத்தையே இழந்துகொண்டிருக்கிறாய் என்று ஏன் உனக்குப் புரியமாட்டேன் என்கிறது?” என்றவன் உதடுகளைக் கடித்து ஒரு கணம் அமைதியாக இருந்தான். பின் தலையைக் குலுக்கி,
“இந்த நிலையில் நான் எதைச் சொன்னாலும் நீ நம்பப் போவதில்லை. என் உணர்வுகளைக் கூறினாலும் நீ புரிந்துகொள்ளப் போவதில்லை… ஆனால் பார்… நம்முடைய சுயநலத்திற்காக, நம்முடைய மகிழ்ச்சிக்காக நம் குழந்தையை அநாதைபோல நடுத்தெருவில் விடுவது சரியா? நான் ஒப்புக் கொள்கிறேன்… நான் வாழ்ந்த சூழல் உன்னதைப் போல இன்ப மயமானது இல்லை. அன்று பட்ட அடிதான், எனக்குக் குழந்தையே வேண்டாம் என்று முடிவுசெய்யக் காரணமாயிற்று. ஆனால் இப்போது…” என்றவன் தவிப்போடு அவள் வயிற்றைப் பார்த்து,
“இது என் குழந்தை சதி… என் இரத்தம்…” என்றவாறு தன் கரங்களை ஏந்தி, இந்தக் கணமே என் கரங்களில் ஏந்தி மார்போடு அனைத்து பாதுகாப்பாய் நான் இருப்பேன் என்று கூறவேண்டும் என்று ஏக்கமே தோன்றுகிறது… சதி… எனக்குக் குழந்தை வரப்போகிறது என்று அறிந்த அந்த நொடி… அந்த விநாடி… ஓ காட்… நான் எப்படி உனக்குப் புரியவைப்பேன்… நான் இழந்தவை அனைத்தையும் அதற்குக் கொடுக்கவேண்டும் என்கிற வெறி, எனக்குக் கிடைக்காத தந்தை பாசம் அதற்குக் கொடுக்கவேண்டும் என்கிற வேகம்,” என்றவன் அவளை நெருங்கி,
“நான் மறந்துவிடுகிறேன்… நீ செய்தவை அனைத்தையும் மறந்து விடுகிறேன்… கம் வித் மி… அன்ட் கிவ் மி எச் சான்ஸ் டு டே கெயர் ஆஃப் யு… சதி… ஜெஸ்ட் எ சான்ஸ்… ஐ வில் டே கெயர் ஆஃப் எவ்ரிதிங்… ஐ ப்ராமிஸ் யு… இதோ பார்… முடிந்த வரை என்னை மாற்ற முயல்கிறேன்… உன் மனம் நோகும்படி நடக்கமாட்டேன்…” என்றவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டவள்
“என்னது… நான் செய்தவற்றை மறந்துவிடப் போகிறீர்களா? ஆனால் நீங்கள் செய்ததை என்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. என்னதான் உங்கள் மீது தவறில்லை என்று சொன்னாலும் அதை நான் நம்பவும் போவதில்லை…” என்றவள்,
“அக்கறையாம் அக்கறை… கண்டறியாத அக்கறை… இந்தக் குழந்தை உருவானது தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கமாட்டீர்கள்தானே… சே… உங்களோடு வாழப் பிடிக்காமல், உங்கள் நிழல் கூட என் மீது படக்கூடாது என்றுதானே இத்தனை தூரம் ஓடி வந்தேன். இங்கேயும் வந்து தொல்லை செய்தால் நான் எங்கு ஓடட்டும்…” என்று சீறலும் அழுகையுமாகக் கூறியவளைப் பொறுமையற்று பார்த்தான் உத்தியுக்தன்.
“என்னோடு வாழப் பிடிக்காமல் ஓடிவந்தாயா? முட்டாள்… உனக்கு மிக நெருங்கியவர்களைக்கூட விட்டுவிட்டு இங்குவரை ஓடி வந்ததற்குக் காரணம் என் மேலிருந்த கோபமோ ஆத்திரமோ இல்லை… தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி. என் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாது பார்க்கப் பிடிக்காது இருப்பதற்குக் காரணமும் அதுதான். இப்போது என்னோடு வர மறுப்பதற்குக் காரணமும் அதுதான். உனக்குப் பிடித்தவன் நான். சொல்லப்போனால் என்னை முற்று முழுதாகக் காதலிப்பவள் நீ… உயிருக்கும் மேலானவனை இப்படி அத்தனை பேரின் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டோமே… எல்லோரும் சேர்ந்து திட்டும் அளவுக்கு நடந்துகொண்டோமே, செருப்படி வாங்க வைத்துவிட்டோமே என்கிற தவிப்பு… குற்றம் செய்த நெஞ்சின் குறுகுறுப்பு இதெல்லாம் சேர்ந்து தான் உன்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. செய்த தவற்றை எதிர்கொள்ள முடியாத கோழைத் தனம் இது. அதை மறைக்க இத்தனை சப்புக்கட்டுக் கட்டுகிறாய்…” என்றதும் சமர்த்தி ஆத்திரத்துடன் தன் காதுகளைப் பொத்தி,
“இல்லை இல்லை இல்லை…” என்று கத்தினாள். ஆனாலும் அவன் சொன்னதன் நிஜம் பூதாகரமாகத் தாக்க, அதுவரை அவனை வெறுப்பதாக நினைத்தவள், அது வெறுப்பல்ல அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் இல்லாமை என்பது புரிய அதிர்ந்து போனாள். இதோ இந்தக் கணம் வரை அவனுடைய முகத்தைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லையே… தவிப்புடன் திணற, இப்போது அவளை நெருங்கியவன்,
“நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்… நான் மறந்து விடுகிறேன்… நீயும் மறந்துவிடு… நாம் நம் குழந்தைக்காகப் புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ளலாம் சதி” என்றவனை ஏறிட்டாள் சமர்த்தி.
இப்போதும் நெஞ்சில் ஒரு வித வலி. அதுதான் குற்ற உணர்ச்சியா? தெரியவில்லை. ஆனால் அவனோடு சேர்ந்து வாழும் தைரியம் மட்டும் இல்லை என்பது புரிந்து போக,
“நான் எங்கும் வருவதாக இல்லை… தயவு செய்து என்னை விட்டுவிடுங்களேன்… நான் இங்கே சந்தோஷமாக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனக்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை, யாருடைய கவனிப்பும் தேவையில்லை… நான் எங்கும்… ஏய்… என்ன செய்கிறீர்கள்… விடுங்கள் என்னை… நோ… விடுங்கள் என்னை…” என்று திணறும்போதே சமர்த்தியைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் உத்தியுக்தன்.
இவளோ அவனிடமிருந்து இறங்கும் முயற்சியில் திமிறினாலும் அவனுடைய இறுகிய பிடியிலிருந்து இம்மியும் இவளால் விலக முடியவில்லை.
“உங்களால் என் விருப்பமின்றி எங்கும் அழைத்துச் செல்ல முடியாது… நான் வரமாட்டேன்… காவல்துறைக்குப் போவேன்… மரியாதையாக என்னை இறக்கி விடுங்கள்…” என்று அவள் திமிற, அவனோ மின்தூக்கியில் ஏறித் தன் வாகனத்தை நெருங்கும்வரை அவளைக் கைவிட்டானில்லை.
“ஒருத்தருக்குச் சொல் புத்தி இருக்கவேண்டும். இல்லையா சொந்த புத்தியாவது இருக்கவேண்டும். இரண்டும் இல்லையென்றால் என்ன செய்வது? சொல்லும்வரை சொல்லியாயிற்று. கேட்கமாட்டேன் என்று காதுகளைப் பொத்திக்கொண்டிருந்தால் என்ன செய்வது?” என்றவன் வாகனத்தை நெருங்கி, அலுங்காமல் குலுங்காமல் அவளை இறக்கிய கையோடு ஓட முயன்றவளைத் தன் கைவளைவில் நிறுத்தி, முன்னிருக்கையில் பிடிவாதமாக அமர வைக்க, இவளோ,
“என் உடுப்புப் பை…” என்றவாறு எழ முயன்றாள். அவள் எழுந்த வேகத்தில் வாகனத்தின் டாஷ்போடில் வயிறு பலமாக முட்ட முயல, தன் உள்ளங்கையால் அவள் வயிற்றைப் பற்றித் தள்ளி உட்காரவைத்தவன், அவளுடைய இருக்கை வாரைப் போட்டுவிட்டு,
“அங்கே ஊருக்குப் போனதும் வேறு ஆடைகள் வாங்கிக்கொள்ளலாம்” என்றவாறு கதவை அறைந்து சாற்றிவிட்டு, மறு பக்கமாக வந்து அமர்ந்தவன் வாகனத்தை உசுப்ப, இவளோ ஆத்திரத்துடன் தன்னருகே அமர்ந்திருந்தவனை வெறித்தாள்.
திரும்பிப் பார்த்து, புன்னகைத்து
“வெல் கம் பக்…” என்றவாறு அக்சிலேட்டரை அழுத்த, மறு கணம் வண்டி விமானநிலையம் நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு…
16B அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க,…
15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம்…
16 -A இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான்…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த…