மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ ஒன்று அழுத்துவது போலத் தோன்ற, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து தலையைத் தூக்கக் கலக்கத்துடன் குனிந்து பார்த்தான்.
அங்கே அவனுடைய தோள் வளைவில் தன் தலையைப் பதித்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சமர்த்தி.
முதலில் அதை நிஜம் என்று நம்ப உத்தியுக்தனுக்குச் சற்று நேரம் எடுத்தது.
மனதுக்குப் பிடித்தவளோடு ஒன்றாகப் படுத்து உறங்கும் சுகமே தனிதான் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு, உதடுகளில் அழகிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
போர்வைக்குள் பதுங்கிக் கிடந்தவளின் முகம் மட்டும்தான் வெளியே தெரிந்திருந்தது. பூனைக் குட்டிபோல அவனோடு உரசிச் சுருண்டு படுத்து இருந்தவளைக் கண்டதும் நெஞ்சம் இளகிப் போயிற்று. இத்தகைய இனிய நாள் அவன் வாழ்வில் வரும் என்று எண்ணவேயில்லையே. உள்ளம்தான் எத்தனை மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்துக் கும்மாளமிடுகிறது. இத்தனை நாளாக இந்த மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டிருந்திருக்கிறானே.
தன்னையே திட்டியவனாகத் தன் தோளில் ஒய்யாரமாக உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையைப் பற்றி, மெதுவாகத் தலையணையில் வைத்தவன், சற்றுக் குனிந்து அவள் முடியடர்ந்த தலையில் மென்மையாய் முத்தமிட்டான்.
“குட்மார்னிங்… பம்கின்” என்று முணுமுணுத்து விட்டு, படுக்கையை விட்டு எழுந்த போது, அவளுடைய வீங்கிய கால் நினைவுக்கு வந்தது. மெதுவாகப் போர்வையைத் தூக்கிப் பாதங்களைப் பார்த்தான்.
பாதங்கள் வீங்கித்தான் இருந்தன. ஆனால் முன்னையதைப் போல அல்லாமல் சற்று வற்றி இருந்தன. ஆனாலும் அது அசாதாரணம் போலவே அவனுடைய அன்புக் கண்களுக்குத் தெரிந்தது. அடுத்த முறை வைத்தியரிடம் அழைத்துப் போகும் போது இதைப் பற்றிக் கூறவேண்டும் என்கிற நினைப்புடன் குளியலறைக்குச் சென்றான்.
இவளோ, இன்னும் புதையும் மெத்தைக்குள் தன்னவன் இத்தனை கரிசனத்தோடு தன்னைப் பார்த்துக்கொண்டான் என்கிற நிஜம் புரியாமல் நல்ல உறக்கத்திலிருந்தாள்.
காலை எட்டு மணியைக் கடிகார முற்கள் தொடுவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்பு சமர்த்தியின் வயிற்றுக்குள் மிகப் பெரும் போராட்டமே நடக்கத் தொடங்கியிருந்தது.
தூக்கம் கலையாமலே, “ஸ்டாப் இட் பேபி… நாட் நவ்… ஐ நீட் மை ஸ்லீப்…” என்று முணு முணுத்தவாறு மறுபக்கம் திரும்பிப் படுக்க, மீண்டும் வயிற்றிற்குள் ஜல்லிக்கட்டுப் போட்டி.
“ஐ ஆம் ஹங்க்ரி…” என்று சிணுங்கியவாறு, மெதுவாக விழிகளைத் திறந்தவளுக்கு மிக நெருக்கமாக… அதுவும் முத்தமிடும் அளவுக்கு நெருங்கியிருந்த உத்தியுக்தனின் முகத்தைக் கண்டதும், பதறி அடித்து எழுந்தமர்ந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர…
“காட்… ஆர் யு கிரேசி… யு ஸ்கெயர்ட் மீ ஹாஃப் டு டெத்…” என்றாள் சீற்றமாக. சமர்த்தி இப்படிப் பயப்படுவாள் என்று எண்ணியிராதவனுக்கு மெல்லிய குற்ற உணர்ச்சி வர,
“ஹே…. ஹே… இட்ஸ் ஓக்கே… ஈசி… ஈசி… ஐ ஆம் சோ சாரி… ஓகே…” என்றவன், சற்றுத் தள்ளியிருந்த உணவு வண்டியை இழுத்து வந்து, அவளுக்கு முன்பாக வைத்துவிட்டு,
“டைம் டு ப்ரேக்ஃபெர்ஸ்ட்.” என்றான். உணவைக் கண்டதும் முகம் மின்ன, நாவூறியவள், சற்றுத் தள்ளியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். எட்டு மணி என்பதைக் கண்டதும், குழந்தையின் வேக அசைவுக்கான காரணம் புரிந்துபோயிற்று.
கடந்த ஏழு மாதங்களாகத் தொலைந்து போயிருந்த உறக்கம், நேற்றுதான் கண்டெடுத்து இருந்தாள் சமர்த்தி. அதை முழுதாக அனுபவிக்க விடாமல் தன்னை எழுப்பிய குழந்தை மீதும், அதன் தந்தை மீதும் கோபம் வந்தாலும், உடலின் பலவீனம் உணவு உண்ணவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க,
“ஒரு நிமிடம்…” என்றவாறு படுக்கையை விட்டு எழ முயன்றாள்.
எதற்காக எழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாக, உணவு வண்டியைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, அவள் போர்வையை விலக்கி, எழுவதற்கு உதவி செய்ய முயல, அவனுடைய கரங்களைத் தட்டிவிட்டவள்,
“நான் குழந்தையைத்தான் சுமக்கிறேனே தவிர இயலாதவள் அல்ல… தவிரக் கடந்த ஏழு மாதங்களாக நீங்களா வந்து எனக்கு உதவி செய்தீர்கள்? இத்தனை நாள் பார்த்துக்கொண்ட நான் இனியும் பார்த்துக்கொள்வேன்…” என்று சினந்தவளாகக் குளியலறைக்குள் நுழைந்தவள், தேவையை முடித்துக்கொண்டு, பற்களைத் தீட்டி முகத்தைக் கழுவி வெளியே வந்தபோது உத்தியுக்தன் அங்கு இருந்த இருக்கையில்தான் அமர்ந்திருந்தான்.
இவள் வந்ததும், அவளுக்குப் பக்கமாக வண்டிலைத் தள்ளி, “சாப்பிடு…” என்றான்.
அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அக்கறை இருப்பதைக் கண்டு ஒரு பக்கம் உள்ளம் நெகிழ்ந்தாலும் மறுபக்கம் கோபமும் வந்தது.
எல்லாம் இந்தக் குழந்தைக்காகத்தானே. இது மட்டும் உருவாகாமலிருந்திருந்தால் இவளைத் தேடியே இருந்திருக்கமாட்டானே. அதை நினைக்கும் போது முகம் சிவுசிவு என்று வந்தது. ஆடு பகை குட்டி உறவா… நல்ல நியாயம். எரிச்சலுடன் எண்ணும் போதே எழுந்தவன்,
“சாப்பிட்டுவிட்டுத் தயாராகு… உன் அண்ணா அண்ணியைப் பார்த்துவிட்டு வரலாம்…” என்று கூற, அவன் செய்த சான்ட்விச்சை எடுத்து வாய்க்குள் கொண்டுபோக முயன்ற சமர்த்தியின் கரங்கள் அந்தரத்தில் நின்றன.
அண்ணன் அண்ணி வீட்டிற்குப் போவதா… ஐயோ…! போனால் அவர்களின் முகத்தில் எப்படி விழிப்பாள்? இந்த நிலையை அண்ணி கண்டால் கலங்கிப் போவார்களே. கோபப் படுவார்களே… என்ன செய்வது. ஒரு வேளை அவன் மறுத்திருந்தால் நீயார் மறுப்பது என்றுவிட்டுக் கிளம்பியிருப்பாள். ஆனால் அவனாக வந்து அவளை அழைத்துச் செல்கிறேன் என்றதும், அங்கே போனால் நடக்கும் விபரீதம்தான் வானளவாக உயர்ந்து நின்றது.
ஒரே ஒரு கணம் உத்தியுக்தனை அச்சத்தோடு பார்த்தவள் விழிகள் கலங்க, உதடுகள் நடுங்க, முகம் வெளிற,
“இன்றே போகவேண்டுமா… வேண்டாம்… பி.. பிறகு போய்க்கொள்ளலாமே!” என்று திக்கித் திணறிக் கேட்டாள்.
அவளுடைய மறுப்புக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளாத அளவுக்கு அவன் ஒன்றும் முட்டாள் அல்லவே.
ஒரு கணம் மேடிட்ட அவள் வயிற்றை மென்மையாகப் பார்த்துவிட்டு,
“எப்போது போவதாக எண்ணம்? குழந்தை பிறந்த பின்பா?” என்று கேட்டான்.
அதைக் கேட்டதும், அவள் கன்னத்தில் இரண்டு துளி கண்ணீர் வடிந்து செல்ல, அவளுக்கு அருகாமையில் அமர்ந்தவன், அவளுடைய கன்னத்தை ஒற்றைக் கரத்தால் பற்றி,
“நீ மறுப்பதற்கான காரணம் புரிகிறது. ஆனால் பார். தப்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்தால் அந்தத் தப்பு மறைந்திடாது சதி… எதுவாக இருந்தாலும் எதிர்த்து நிற்கப் பழகவேண்டும். உன் தவற்றை நீ சரிப்படுத்தா விட்டால் வேறு யார் சரிப்படுத்துவார்கள்? நிச்சயமாக உன் அண்ணா அண்ணி கோபிப்பார்கள். ஆனால் அவர்களின் கோபத்திற்குப் பின்னால் பெரும் நியாயம் இருக்கிறது. அவர்கள் கோபித்தாலும், திட்டினாலும் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை.?” என்றவன் இன்னும் தெளியாமலிருந்தவளின் கரத்தில் சான்ட்விச்சை வைத்தான்.
“முதலில் சாப்பிடு… தெம்பு தானாக வந்து விடும்…” என்றவன், அவளுடைய தலையை வருடி விட்டு அறையைவிட்டு வெளியேற, அண்ணன் அண்ணியிடம் போக வேண்டும் என்கிற அதிர்ச்சியையும் விஞ்சியது உத்தியுக்தன் தலையை வருடிக்கொடுத்த அதிர்ச்சி.
நம்ப மாட்டாமல் ஒற்றைக் கரத்தால் அவன் வருடிய தலையைத் தொட்டுப் பார்த்தவளுக்கு இந்தப் புதிய உத்தியுக்தன் புரியாத புதிராகவே தோன்றினான்.
அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் சமர்த்தியை அழைத்துக்கொண்டு தயாளன் வீடு நோக்கிப் பயணமானான் உத்தியுக்தன்.
தயாளனின் வீடு நெருங்க நெருங்கச் சமர்த்தியின் நெஞ்சில் பயப் பந்து உருளத் தொடங்கியது. அவளைக் கண்டதும் என்ன செய்வார்கள். கடவுளே… எப்படிச் சமாளிக்கப்போகிறாள். நினைக்கும்போதே கரங்கள் சில்லிட்டுப் போயின.
வாகனத்தைத் தயாளன் வீட்டிற்கு முன்பாக நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய உத்தியுக்தன், குனிந்து சமர்த்தியைப் பார்க்க, அவளோ, இறங்கும் எண்ணமேயில்லாமல் அண்ணனின் வீட்டைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் நிலை புரிந்தாலும் இவனாலும்தான் என்ன செய்ய முடியும்? இந்தப் பிரச்சனைக்கான தீர்வை அவள்தான் காணவேண்டும். அவள் பக்கமாகச் சென்று கதவைத் திறந்தவன்,
“இறங்கு சதி.” என்றதும் பரிதாபமான அவனைப் பார்த்தவள் மறுப்பாகத் தலையை அசைத்தவள், அவனுடைய ஒற்றைக் கரத்தை இறுகப் பற்றியவாறு அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“நம்.. நம்முடைய வீ… வீட்டிற்குப் போகலாம்…” என்றாள் சிறுபிள்ளையாய்.
நம் வீட்டுக்கு போகலாம் என்று அவள் சொன்னது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அவளை உயிராக வளர்த்தவர்களுக்கும் நியாயம் செய்ய வேண்டுமே. தவிர இன்று இதற்குத் தீர்வு காணாவிட்டால், அந்த குற்ற உணர்ச்சி சமர்த்தியைத் தானே தாக்கும். அதனால் மறுப்பாகத் தலையை அசைத்தவன்,
“நோ… இப்போது இந்தக் கணமே நாம் உன் அண்ணா அண்ணியைப் பார்க்கப் போகிறோம்… இப்படிப் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் தீர்வு கிடைக்காது. கடைசி வரை வாழ்வின் எல்லைவரைக்கும் ஓடி ஒளிய வேண்டியதுதான்.. இறங்கு முதலில்…” என்று கராராய் கூறி அவளுடைய கரத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட இழுத்து இறங்கச் செய்தவன், தட்டுத்தடுமாறி நின்றவளின் கரத்தைப் பற்றி, அழைத்துக்கொண்டு தயாளனின் வீடுவரைக்கும் சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.
சமர்த்தியோ அச்சத்துடன் உத்தியுக்தனின் பின்னால் மறைந்து கொண்டாள்.
ஒரு பக்கம் அண்ணன் அண்ணியை எண்ணி அச்சமும் இன்னொரு பக்கம் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் பாடாய்ப்படுத்தியது. கலக்கமும் தடுமாற்றமுமாய் நின்ற ஒரு சில விநாடிகளில் கதவு திறந்தது.
கதவைத் திறந்த புஷ்பா, அங்கே வாசலில் நின்றிருந்த உத்தியுக்தனைக் கண்டு முதலில் அதிர்ந்து பின் குழம்பி, இறுதியில் மகிழ்ந்து,
“தம்பி… நீங்களா? உள்ளே வாருங்கள்… சதியோடு நேற்று முன்தினம் பேசினேன். நன்றாக இருப்பதாகச் சொன்னாள்… இன்று காலையில் இருந்து முயற்சி செய்து பார்க்கிறேன். இணைப்புக் கிடைக்கவில்லை…” என்று கூறி முடிக்க முதல், உத்தியுக்தன் சற்று விலக, திரை எடுத்ததும் தெரியும் சித்திரம்போலத் தெரிந்தவளைக் கண்டு புஷ்பா அதிர்ந்து போய் நின்றார்.
தான் காண்பது கனவா இல்லை நிஜமா என்று ஒரு கணம் குழம்பிப்போனவராகத் தன் முன்னால் நின்றிருந்த சமர்த்தியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்,
“யார் புஷ்பா…” என்றவாறு வந்த தயாளனும், அங்கே நின்றிருந்த சமர்த்தியைக் கண்டு வாயைப் பிளந்தார்.
புஷ்பாவோ நம்ப மாட்டாமல் தன் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தார். அவர் கனவொன்றும் காணவில்லையே. கண்கள் பணிக்க, நெஞ்சம் விம்ம, மகிழ்ச்சியில் கண்மண் தெரியாது தேகம் நடுங்கத் தன் வளர்ப்பு மகளை நோக்கி ஓரடி வைத்தவர், அப்போதுதான் கவனித்தார் சமர்த்தியின் வயிற்றை.
உத்தியுக்தனுக்குப் பின்னால் நின்றிருந்த பொது வயிறு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அவளை நெருங்கும்போதுதான் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிர்ச்சியில் ஆவெனப் பிளந்த வாயில் தன் உள்ளங்கையை வைத்து அடக்கிய புஷ்பாவிற்குத் தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று கூடப் புரியவில்லை. நம்ப முடியாதவராகச் சமர்த்தியை உற்றுப் பார்த்தார்.
அவளோ குற்றம் செய்த குறுகுறுப்பில் உத்தியுக்தனின் முதுகுப் புறச் சட்டையைப் பாதுகாப்பிற்காக சுருட்டிப் பிடித்தவாறு தலை குனிந்தவாறு நின்றிருந்தாள்.
நம்ப முடியாமல் மீண்டும் வயிற்றைப் பார்த்தார். உள்ளே மாபெரும் ஏமாற்றம் எழுந்து நெஞ்சைப் பிளந்தது. கண்களோ கண்ணீரைச் சொரியத் தொடங்கின.
தயாளனுக்கும் என்ன உணர்வதென்று தெரிய வில்லை. தன் தங்கையின் நிலை கண்டு மகிழ்வதா? ஏன் இது வரை, தங்களுக்குக் கூறவில்லை என்று கோபப்படுவதா? என்று புரியாமல் தடுமாறி நின்றார்.
சமர்த்தியும், உதடுகள் நடுங்க, அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியினால் மயங்கி விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவள் போல, தன்னை நிலைப்படுத்த முயன்று தோற்று, தனக்கு அருகே நின்றிருந்தவனின் கரத்தைப் பற்றி அவனைக் குற்றம் சாட்டுவது போலப் பார்த்தாள்.
உத்தியுக்தனோ, தன் கரத்தைப் பற்றியவளுடைய கையை அழுத்திக் கொடுத்துத் தைரியம் கொடுத்தவாறு அவள் பக்கமாகக் குனிந்து,
“பேசு சதி… உன்னால் நிச்சயமாக இதைச் சமாளிக்க முடியும்…” என்று மென்மையாய் முணுமுணுக்கத் தவிப்புடன் மன்னிப்புக் கேட்கும் யாசகத்தோடும் புஷ்பாவை ஏறிட்டாள். தொண்டை வேறு அடைத்தது.
“சா.. சாரி அண்ணி..” என்றாள் கம்மிய குரலில்.
அப்போதுதான் அந்தச் சிலைக்கு உயிர் வந்தது. மிகப் பெரும் ஏமாற்றத்தில் இதயம் வெடிக்க, ஓவென்று எழுந்த அழுகையை அடக்கும் வழி தெரியாமல், சமர்த்தியை உள்ளே வா என்று கூடக் கூறாமல் தன் அறை நோக்கி ஓடிக் கதவைச் சாற்றிவிட்டு அதன் பின்னே நின்றுகொள்ளச் சமர்த்திக்கும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
அவளுக்குத் தாய்ப்பால் மட்டும்தான் புஷ்பா ஊட்டவில்லை. ஆனால், தாய்க்கும் மேலாக அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தவர். கடைசியாக அவள் தனியாகப் போகப் போகிறேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தபோதும் கூட, அவளுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சம்மதம் கொடுத்தவர். அப்படியிருந்தும் ஒவ்வொரு நாளும் மறக்காது அவளோடது பேசிவிடுவார். அப்படிப் பட்டவரிடம் இத்தனை பெரிய உண்மையை மறைத்துவிட்டாளே.
நெஞ்சம் கலங்க, தன் அண்ணியைக் காயப்படுத்திவிட்டோமே என்கிற கலக்கமும் குற்ற உணர்ச்சியும் அழுகையாக வெடிக்க, உத்தியுக்தனின் மேல் கரத்தில் தன் நெற்றியைப் பதித்து, மெதுவாக விசும்பத் தொடங்கினாள் சமர்த்தி.
அவள் அழுவதைத் தாள முடியாதவனாக அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் உத்தியுக்தன். பின் நிமிர்ந்து விறைத்து நின்றிருந்த தயாளனிடம்,
“நாங்கள் உள்ளே வரலாமா?” என்று கேட்க, பதட்டம் கொண்டவராய்,
“ஐ… ஐ ஆம் சாரி… உள்ளே வாருங்கள் உத்தியுக்தன்… ப்ளீஸ்… உள்ளே வாருங்கள்… புஷ்பாவுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்… அவள் ஏதோ அதிர்ச்சியில்… இப்படி உளறிவிட்டு…” என்று முடிக்க முடியாமல் தடுமாற,
“இட்ஸ் ஓகே… ஐ அன்டர் ஸ்டான்ட்…” என்ற உத்தியுக்தன் சமர்த்தியைப் பற்றியிருந்த பிடியை விடாமலே உள்ளே அழைத்து வந்தவன்,
“கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று தயாளனிம் கேட்க, மறு கணம் ஒரு குவளை தண்ணீர் அவனிடம் நீட்டப்பட்டது.
ஒரு நன்றியோடு, அதை வாங்கியவன், சமர்த்தியிடம் நீட்டியவாறு,
“தண்ணீரைக் குடி சதி” என்றான் மென்மையாய்.
கணவனின் மார்பில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்த சமர்த்தியும், கரிசனையாய் தண்ணீர் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்ற உத்தியுக்தனையும் கண்டவருக்கு, மனத்தை அழுத்தியிருந்த கசப்பு மொத்தமாய் காணாமல் போனது. இனித் தங்கையை எண்ணி வருந்த வேண்டியதில்லை என்கிற உண்மை புரிய, பெரும் நிம்மதியடைந்தவராக, மனம் நிறைய அவர்களை உள்வாங்கிக்கொண்டிருந்தார்..
தன் கணவன் நீட்டிய தண்ணீரைக் குடித்த சமர்த்தி, அவனை விட்டு விலகிக் கன்னத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“நான் அண்ணியிடம் பேசவேண்டும்” என்றாள் விம்மியவாறு.
அந்தக் கணம், உத்தியுக்தனுக்குத்தான் அங்கே அதிகப்படி என்று தோன்ற, அவளுக்கும் அவள் அண்ணன் அண்ணிக்குமான தனிமையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியவனாக சமர்த்தியிடம் இருந்து விலகியவன், தயக்கத்துடன் அவளைப் பார்த்துவிட்டு தயாளனை ஏறிட்டார்.
“வந்து, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது… பிறகு வருகிறேன்… அது வரை இவள் உங்களோடு பேசிக்கொண்டிருக்கட்டும்…” என்று விட்டுத்திரும்ப, இவளோ சடார் என்று அவனுடைய கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
இவன் திரும்பிப் பார்க்க, கலக்கத்தோடு அவன் முகம் ஏறிட்டு, போகாதே என்பது போலத் தலையை ஆட்ட கண்களோ கண்ணீரைச் சொரியத் தொடங்கியது.
உத்தியுக்தனின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.
அவனைத் தடுக்கிறாள் என்றால், அவனோடு இருப்பதைப் பாதுகாப்பாக உணர்கிறாள் என்று தானே பொருள். ஆனால் அவளாகவே முன்னின்று தீர்க்கவேண்டிய பிரச்சனை இருக்கிறதே.
அவன் அங்கேயிருந்தால், அங்கிருப்பவர்களுக்கு மனதார உணர்ச்சிகளைக் கொட்ட முடியாது. அவனுக்காக யோசித்து தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட முயல்வார்கள். அது நிஜமான ஆறுதலைக் கொடுக்காது.
மெதுவாக அவள் பக்கமாகக் குனிந்தவன், அவளுடைய கண்ணீரை முதலில் துடைத்தான். பின் அவளுடைய கன்னத்தில் வலக்கரத்தைப் பதித்து,
“ஹே… இட்ஸ் ஓக்கே… யு கான் ஹான்டில் திஸ்… இன்னும் இரண்டு மணி நேரங்களில் வந்துவிடுவேன்… அதற்குள்… உன் அண்ணியைச் சமாதானப் படுத்திவிடுவாய் அல்லவா…” என்று மென் குரலில் அவளுடைய கன்னத்தை வருடியவாறு கேட்க, மேலும் பயத்துடன் அவனைப் பார்த்தாள் சமர்த்தி.
ஏனோ அந்த நேரத்தில் அவனால் மட்டும்தான் அவளுடைய சிக்கலைத் தீர்க்க முடியும் என்பது போலத் தோன்ற, அவன் மீதிருந்த கசப்புகளை முற்றாக ஒதுக்கி வைத்துவிட்டு, மேலும் அவனை நெருங்கி நின்று,
“அண்ணி இதுவரை என்னைக் கோபித்தது இல்லை. ஆனால் இப்போது..” என்றவள் தவிப்புடன் அவனைப் பார்த்து, “ப… பயமாக இருக்கிறது… என்னை மன்னிப்பார்களா…” என்றாள் குரல் கம்ம. மென்மையாகச் சிரித்தவன்,
“ஷி வில்…! பெற்ற அன்னையை விட, வளர்த்த அன்னையின் பாசம் ஒரு படி மேலானது சமர்த்தி. அதுவும் புஷ்பாவுடைய பாசம் அப்பழுக்கற்றது… உண்மையான நேசம் பாசம் கொண்டவர்கள் கோபம் கொள்வார்களே தவிர, வருந்த வைக்க மாட்டார்கள். பிலீவ் மி… உன் அண்ணியின் கோபம் அதிக நேரத்திற்கு இருக்காது…” என்றவன் தயாளனைப் பார்த்து,
“பார்த்துக்கொள்ளுங்கள்…” என்றவன் சற்றுத் தயங்கிநின்றான்.
“இவளை கொஞ்சம் திட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்…” என்றபோது அவனுடைய இதயம் வலியில் சுருங்கியது.
எப்படியும் கொப தாபத்தோடு புஷ்பா இருப்பார்கள் என்று தெரியும்தான். ஆனால் அந்தக் கோபத்தால் வார்த்தைகள் சுலபத்தில் தடித்து விடும். அப்படித் தடித்துவிடும் போது பாதிப்படைவது எதிராளிதானே.
யாராவது சமர்த்தியை சுடு சொல் சொல்லால் திட்டினால், அதைத் தாங்கும் சக்தி நிச்சயமாக உத்தியுக்தனுக்குக் கிடையாது. அதற்குப் பிறகு அவர்களுடனான உறவை மொத்தமாக முறித்து விடுவான். அப்படி அவன் முறித்துக் கொண்டால், அதற்குப் பிறகு எக்காலத்திலும் அவர்களோடு ஒட்டி உறவாடுவது நடக்காத காரியமாகப் போய்விடும். எது எப்படியாக இருந்தாலும், சமர்த்தியைத் திட்டுவதை அவன் விரும்பவில்லை.
“பயப்படாதீர்க்ள் புஷ் கோபப் படுவாளே தவிர, அதீதமாக எல்லாம் திட்ட மாட்டாள். அவளுக்கு திட்டவும் தெரியாது…” என்று தன் மனைவியைப் பெருமையாக முன் நிறுத்திவிட்டுக் கலங்கி நின்றிருந்த தன் தங்கையை ஏறிட்டார்.
அவள் கலக்கம் இவரையும் தொற்றிக் கொண்டது. நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்த்தவர்,
“நீங்கள் இருந்தால் சமர்த்திக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும் இல்லையா?” என்றார் மென்மையாக.
அதைக் கேட்டு அழகாய் சிரித்தவன்,
“சில நேரங்களில் பெற்ற தாய் தந்தையர் கூட வேற்று ஆட்கள்தான் தயாளன். அப்படி இருக்கையில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? உங்களுக்கும் சமர்த்தியோடு பேச நிறைய இருக்கும்… அவளுக்கும்தான்… இதில் நான் இருந்தால், மனம் விட்டுப் பேச முடியாது… தவிர, அவளுகம் பிரச்சனைகளைக் கையாளப் பழக வேண்டும் இல்லையா… நான் அருகே இருந்தால், என்னைத்தான் எதிர்பார்ப்பாள்…” என்றவன் திரும்பி சமர்த்தியை ஏறிட்டான்.
“எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு பம்கின்… நீ சுலபமாகவே உன் சிக்கலை சமாளிப்பாய்… பார்த்துக் கொள். இல்லை என்றால் என்னை கூப்பிடு. வந்துவிடுவேன்..” என்றவன் குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான்.
கிளம்பும் போதும், “பார்த்துக் கொள்ளுங்கள்…” என்றவனுக்கு ஏனோ சின்னக் குழந்தையை அன்னியர் வீட்டில் விட்டுவிட்டுப் போவது போன்ற கலக்கம் ஏற்பட்டது.
இறுதியாக விடைபெற்றுச் செல்ல, அவன் சென்றதும் சமர்த்தி தயக்கத்துடன் தயாளனைப் பார்த்தாள்.
தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்ற உத்தியுக்தன் மீது கோபமும் வந்தது.
இப்போது எப்படி அண்ணியைச் சமாதானப் படுத்துவது? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலானது சமர்த்திக்கு. தன் தங்கையை நெருங்கிய தயாளன்,
“உனக்கு அண்ணியைப் பற்றித் தெரியாதா தங்கம். இப்போது கோபப் படுவாள். நீ பேசினால் எல்லாம் சரியாகிவிடும்…. போம்மா… போய் அண்ணியோடு பேசு…” என்றதும், அதற்கு மேல் தாமதிக்காமல், கடகடவென்று படிகளில் ஏறியவள், புஷ்பா தயாளனின் அறைக்கு முன்பாக வந்து நின்று கதவைத் தட்டினாள்.
“சா… சாரி அண்ணி… எக்ஸ்ட்ரீம்லி சாரி அண்ணி… நான் உங்களுக்குச் சொல்லக் கூடாது என்பதற்காக மறைக்கவில்லை… சொன்னால் உத்தியுக்தனுக்குத் தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் சொல்லவில்லை… ப்ளீஸ் அண்ணி. இந்த ஒரு வாட்டி என்னை மன்னிக்கக் கூடாதா.. ப்ளீஸ் அண்ணி” என்று வாசல் கதவைத் தட்டியவாறு கெஞ்ச, அறைக்குள் நின்றிருந்த புஷ்பாவிற்கு அழுகையும் ஆத்திரமும் ஒன்றாக வந்தது.
எத்தனை பெரிய பைத்தியக்காரத்தனத்தைச் செய்திருக்கிறாள். பார்க்கும் போது, நிறைமாதம் போல இருக்கிறதே. இத்தனை மாதங்களாக என்ன என்ன கஷ்டப்பட்டாளோ. சமைக்கக் கூடத் தெரியாதே. பச்சை மிளகாய் நறுக்கினால் கூட எரிகிறது என்று கரங்களைத் தூக்கி வைத்துக்கொண்டு அழுவாள்.மசக்கைக் காலத்தை எப்படிச் சமாளித்தாள்? இத்தனை பெரிய விஷயத்தை எங்களிடம் மறைக்கும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? சொந்தக் குழந்தையாக அவளைக் கரங்களில் தாங்கியதற்கு அவள் கொடுக்கும் பெறுபேறு இது தானா? அந்தளவுக்கா அந்நியப்பட்டுப் போனோம்?” என்று எண்ணி எண்ணிக் கலங்கித் துடிக்க, மறுபக்கம் நின்றிருந்த சமர்த்தியோ,
“அண்ணி… நான் செய்தது மிகப் பெரிய தவறுதான். இந்த முறை என்னை மன்னிக்க மாட்டீர்களா…? ப்ளீஸ் அண்ணி… ப்ளீஸ்…!” என்று கெஞ்சத் தயாளனாலும் தன் தங்கை வருந்துவதைத் தாங்க முடியவில்லை.
“புஷ்… என்ன இது இத்தனை பிடிவாதம்… அவள் வேண்டும் என்றா நம்மிடம் மறைத்தாள். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை… மறைத்து விட்டாள். வாம்மா வெளியே… இங்கே பார்… அழுகிறாள்டி…” என்று கெஞ்ச, அப்போதும் புஷ்பா மனம் இரங்கினாரில்லை.
“நான் யாருடனும் பேசப் பிரியப்படவில்லை. அவர்களைப் போகச் சொல்லுங்கள்… ஏன் குழந்தை உண்டாகியிருக்கிறாள் என்று சொன்னால் நான் வயிறு எரிந்து விடுவேன் என்று நினைத்தாளா? எனக்கும் ஆறு குழந்தைகள்…. இல்லை இல்லை ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்… இதை அவளிடம் சொல்லுங்கள்…” என்று உள்ளேயிருந்து சீற, சமர்த்தியோ,
“அது எப்படி ஐந்து என்று சொல்லுவீர்கள்… அப்படியானால் நான் யாராம்…?” என்றாள் இவள் மறுபக்கம்.
“யாருக்குத் தெரியும்… நீ என் மகளா என்ன? நாத்தனார் தானே.. எனக்குப் பிறந்தவளாக நினைத்து இருந்தால், கர்ப்பம் என்பது தெரிந்த உடன் எனக்குச் சொல்லியிருப்பாயே… இந்தக் கைகளால் எத்தனை சுவையாகச் சமைத்துக் கொடுத்து இருப்பேன். உள்ளங்கையில் வைத்துத் தாங்கி இருப்பேனே… என்னை இன்னும் அண்ணியாக நினைப்பதால்தானே மறைத்தாய்.” என்று உள்ளிருந்து புஷ்பா எகிற, இவளுக்கும் தொண்டை அடைத்துப் போனது.
“அண்ணி உங்கள் கையால் சாப்பிடவேண்டும் என்று நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா.. ஆனால் பாருங்கள், உங்களுக்கு உண்மை தெரிந்தால், உத்தியுக்தனுக்குத் தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் நான் மறைத்தேன். மற்றும் படி, உங்களிடம் மறைப்பேனா…?” என்று அழுகையுடன் கேட்க,
“இப்போது மட்டும் எப்படித் தெரிந்ததாம்? கடைசியில் அவர்தானே கண்டு பிடித்திருக்கிறார். அவர் கண்டுபிடிக்கவில்லை என்றால், உன் குழந்தையைக் கூட என்னிடம் நீ காட்டியிருக்க மாட்டாய் அல்லவா?” என்று கேட்டபோது புஷ்பா உள்ளே அழுவது நன்றாகத் தெரியத் துடித்துப் போனாள் சமர்த்தி.
“அண்ணி… நான் சொல்வதை…” என்று கொண்டு வந்தவள், மறு கணம் விழிகள் சொருகத் தரையில் சரியத் தொடங்கப் பாய்ந்து தன் தங்கையைத் தாங்கிக்கொண்ட தயாளன்,
“புஷ்…. சத்தி மயங்கிவிட்டாள்…” என்று அலறிய மறு கணம், கதவு சடார் என்று திறந்தது.
“சத்தி..” என்று பதறியவாறு ஓடிவந்து கணவனின் மடியிலிருந்தவளை இழுத்துத் தன் மடியில் போட்டு,
“என் கண்ணம்மா… ஐயோ… நான் என்ன செய்வேன்… தயா… அம்புலன்சிற்கு அடியுங்கள்… முதலில் உத்தியுக்தனை அழையுங்கள்…” என்று பதறித் துடிக்க, அதுவரை அண்ணியின் மடியில் மயங்கிக் கிடந்தவள்,
“அதெல்லாம் வேண்டாம்…” என்றவாறு வாககச் சரிந்து படுத்து அண்ணியின் மடி வாசனையை நுரையீரல் வரை சுவாசித்து உள் இழுத்தவள், அதன் சுகத்தின் தித்திப்பில்,
“எத்தனை காலமாயிற்று.. அண்ணியின் மடியில் படுத்து…” என்றவாறு அவருடைய கரங்களை இழுத்துத் தன் மார்போடு அணைத்துப் பிடிக்க, புஷ்பா மட்டுமல்ல… தயாளனும் அதிர்ந்துதான் போனார்கள்.
“அடிப்பாவி… அப்போ நீ மயங்கவில்லையா…?” என்று புஷ்பா கேட்க, தலையை நிமிர்த்திப் புஷ்பாவைப் பார்த்து ஒற்றைக் கண் அடித்தவள்,
“மயங்கியது போல நடித்ததால்தானே, கதவின் தாழ் திறந்து இந்த அழகிய முகத்தைப் பார்க்க முடிந்தது” என்று கூற, கோபம் கொண்ட புஷ்பாவோ,
“உன்னை…” என்று ஆத்திரத்துடன் கூறியவாறு அடிப்பதற்குக் கை நீட்டிவிட்டுப் பின் அந்தக் கரம் கொண்டே, மடியில் தலை வைத்திருந்த நாத்தனாரின் தலை முடியைக் கோதிக் கொடுத்தார்.
இதுதான் புஷ்பா. அன்பை மட்டும் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட, அற்புதப் பிறவி.
அதன் பின் புஷ்பாவிற்கும், சமர்த்திக்கும் இடையில் தயாளன் கூட நுழைய முடியவில்லை.
நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவள், இறுதியாக,
“இந்த மடிக்காக இந்த மடியின் வாசனைக்காக நான் ஏங்காத நாட்களே கிடையாது தெரியுமா… என்று முடிக்க, உருகிப்போனார் புஷ்பா.
அதே நேரம் தயாளனின் கைப்பேசி அடிக்க, எடுத்துப் பார்த்தான். உத்தியுக்தன்தான்.
“சொல்லுங்கள் யுக்தன்…” தயாளன் கேட்க சமர்த்தி புஷ்பாவை அணைத்திருந்த அணைப்பை விடுத்து நிமிர்ந்து பார்த்தாள்.
“அது வந்து.. சதியோட கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. அதுதான் உங்களுக்கு எடுத்தேன்…” என்றான் உத்தியுக்தன் சிறு கலக்கத்தோடு.
“ஓ… அவள் கைப்பேசியை சைலன்ட் மோடில் போட்டிருக்கிறாள் போல… நீங்கள் அடித்தது கேட்கவில்லை…”
“ஓ… பரவாயில்லை… அது வந்து… அங்கே எந்த பிரச்சனையும் இல்லையே… சதி நன்றாகத் தானே இருக்கிறாள்… வந்து… புஷ்மா சமாதானம் ஆகிவிட்டார்களா… அவர்கள் ஒன்றும் சதியை திட்டவில்லைதானே…” கேட்கும்போதே அவனுடைய குரலில் மெல்லிய பதட்டம் தெரிந்தது.
புன்னகைத்த தயாளன், “எல்லாம் சுபம்தான் யுக்தன்… இப்போது புஷ்பாவும் சத்தியும் ஒரு கட்சி ஆகிவிட்டார்கள். நான்தான் வெளியே நிற்கிறேன்…” கிண்டலுடன் கூற, நிம்மதி மூச்சொன்றை மறுபக்கம் விட்டான் உத்தியுக்தன்.
“கிலாட் டு ஹியர் தட்… சரி தயாளன்…” என்றவன் கைப்பேசியை அணைக்க, தயாளனின் மனம் நிறைந்து போனது.
“உத்தியா அண்ணா?” அவளையும் மீறிக் குரலில் பரபரப்புத் தெரிந்தது.
“ஆமாம்மா… நீயும் உன் அண்ணியும் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார். எங்கே உன் அண்ணி உன்னைத் திட்டிவிடுவாளோ என்று பயப்படுகிறார்…” அவர் சிரித்தவாறே கூறும்போது மீண்டும் கைப்பேசி அடித்தது.
இப்போது விதற்பரைதான் அழைத்திருந்தாள்.
“அடடே… இவர்களை மறந்துவிட்டோமே…” என்று எழுந்தவர்,
“தங்கம்… நீ இரு… நான் போய் வாண்டுகளை அழைத்து வருகிறேன்… பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரே பிடிவாதம்… அவர்களைத் தரையரங்கில் விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்தபோதுதான் நீ வந்தாய்…” என்றவர் வெளியே செல்ல, சமர்த்திப் புஷ்பாவின் வாலைப் பிடித்தவாறே அவர் செல்லும் இடமெல்லாம் கதை கதையாகப் பேசியவாறு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தாள்.
(1) விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…
27) மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…