Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-6

6

கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம் எழுந்தது. மீண்டும் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வர, விழிகள் கலங்கின.

அதைப் புரிந்துகொண்டவன் போல, சமர்த்தியை நெருங்கிய உத்தியுக்தன் முதுகில் முள்ளந்தண்டு முடியும் கீழ்ப்பகுதியில் தன் உள்ளங்கையை வைத்து,

“கம்…” என்றவாறு அழைத்து இல்லை இல்லை சற்றுத் தள்ளிச் செல்ல, வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தாள் சமர்த்தி. அவள் அங்கிருந்து சென்றபோது எப்படி வீடு இருந்ததோ, அதே போல எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. அந்த வாசனையை நுகரும்போதுதான், வீட்டிற்கு வந்துவிட்டோம் என்கிற நிம்மதியே பிறக்கும். மனம் தளர்ந்து இளகும். மனம் பாதுகாப்பாய் உணரும். சமர்த்திக்கும் உள்ளே நுழைந்தபோது அவள் நாசியை வந்தடைந்த அந்த வீட்டிற்கே உரித்தான பிரத்தியேக வாசனை, அதுவரையிருந்த பாதுகாப்பற்ற தன்மையை மெல்ல விலக்கிச் செல்ல, விழிகளை மூடி ஒரு கணம் அதை அனுபவித்தாள்.

கூடவே வேளை கெட்ட நேரத்தில், அவனோடான வாழ்க்கையும் மனக்கண்ணில் தோன்ற, அதுவரை இருந்த இனிமை துணிகொண்டு துடைத்தாற் போலானது.

அவள் வருத்தம் அவளுக்கு. அதுவரை அமைதியாக இருந்த குழந்தை இப்போது பலமாக அவள் வயிற்றை மோத, தன் உணர்வுக்கு வந்தவளாக அசைந்த வயிற்றைக் கரங்கொண்டு பற்றியவளுக்குப் பசித்தது.

ஏதாவது சாப்பிடவேண்டுமே. தன்னை மறந்து சுவரில் மாட்டப்பட்ட அந்தப் பெரிய கடிகாரத்தைப் பார்க்க இரவு எட்டுமணி என்றது கடிகாரம். இந்த நேரத்தில் லீ கூட இருக்க மாட்டாள்.

குழந்தையோ மீண்டும் அவள் வயிற்றில் பலமாக அசைய, அந்த அசைவை முதன் முறையாகக் கண்ட உத்தியுக்தன் வியந்து போனான். ஆச்சரியத்துடன் சமர்த்தியைப் பார்க்க, அவளோ என்ன சாப்பிடுவது என்கிற யோசனையில் சமையலறைப் பக்கம்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை மறந்து சமர்த்தியை நெருங்கியவன், அவள் கரம் படாத வயிற்றுப் பகுதியில் தன் கரத்தைப் பதிக்க, சமர்த்தி சுயநினைவு வந்தவளாக, அவன் கரத்தைத் தட்டியவாறு,

“டோன்ட் டச் மீ…” என்றாள் முறைப்பாய். உடனே கரத்தை விலக்கியவன்,

“ஓக்கே சாரி…” என்று உடனே பின் வாங்கினாலும், குழந்தையின் அசைவை உணர முடியவில்லையே என்கிற வருத்தம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதைப் பற்றிய அக்கறை கொள்ளாது,

“எனக்குப் பசிக்கிறது…” என்றாள் எங்கோ பார்த்தவாறு. அதைக் கேட்டதும், சுயத்திற்கு வந்தவனாய்,

“உனக்கு என்ன பிடிக்கும்? என்ன சாப்பிடுகிறாய்?” என்றான் பரபரப்பாய்.

கூடவே அவளுக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்கிற பரபரப்பும் தொற்றிக் கொள்ள சமையலறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

என்னடா இவன், சமையல் தெரிந்தவன் போல உள்ளே செல்கிறான்? லீ ஏதாவது செய்து வைத்து விட்டுப் போயிருப்பாளோ? நாவில் நீர் ஊற, அவன் பின்னே சென்றவள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.

அங்கே பல பெட்டிகள் உணவோடு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதில் ஆவலுடன் ஒன்றை எடுத்தாள் சமர்த்தி.

அவனோ, அவள் கரத்திலிருந்த பெட்டியைக் கிட்டத்தட்டப் பறித்து,

“நோ… இது வேண்டாம்… நான் புதிதாகச் செய்து தருகிறேன்… என்ன சாப்பிடுகிறாய்? ம்… இரவு என்பதால் கனமான உணவு வேண்டாம். தூக்கம் வராது… இன்னும் பத்து நிமிடங்களில் சுலபமாகச் செரிக்கக் கூடியதாக ஏதாவது செய்து தருகிறேன்… அதுவரை…” என்றவன் அவள் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்தான்.

தொடர்ந்து தான் அணிந்திருந்த தடித்த ஜாக்கட்டைக் கழற்றி அங்கிருந்த மேசையில் போட்டு விட்டு நீண்ட ஷேர்ட்டின் பொத்தான்களைக் கழற்றி, அதை முழங்கை வரை மடித்தவாறு, சமர்த்தியை ஒரு வித ஆர்வத்தோடு பார்த்தான்.

அவளோ இவன் என்ன செய்யப்போகிறான் என்கிற வியப்போடு அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தவன், சற்றுத் தள்ளியிருந்த கபேர்ட்டைத் திறந்து அதிலிருந்த ஒரு சோஸ்பானை கையில் எடுத்து அதைக் காற்றில் சுழலவிட்டுப் பிடித்து அடுப்பில் வைத்து நீல நெருப்பைத் தாமரை என மலரச் செய்ய, தேர்ந்த சமையல் விற்பன்னனாய் நடந்து கொள்ளும் உத்தியுக்தனைத் தன்னை மறந்து ஆவென்று பார்த்தாள்.

அடுத்து இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு, அடுப்பில் கொதிக்கவைத்துவிட்டு, அதில் பஸ்டாவைப் போட்டு மூடினான்.

சோஸ் பானில் எண்ணை ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த ஒரு சில மரக்கறிகளைக் கத்திகொண்டு கடகடவென்று வெட்டி, சோஸ்பானில் போட்டு, அதை அடுப்பிலிருந்து எடுத்து ஒரு எத்து எத்த, ஒரு துளி மரக்கறிகூட வெளியே சிந்தாமல் சிதறாமல் கடல் அலை என மேலே எழுந்து கீழே விழச் சமர்த்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

ஏதோ குக்கிங் சானலை நேரலையாகப் பார்ப்பதுபோன்ற உணர்வில் இமைகளைக் கூட மூட மறந்து பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

இறுதியில் சாப்பாட்டுத் தட்டின் நடுவில் அழகுறச் செய்த பஸ்டாவை வைத்து, அதை ஒரு சில விநாடியில் அலங்கரித்து, அதன் இரு பக்கமும், முள்கரண்டி மற்றும் சிறிய கத்தியோடு மேசையில் வைத்தவன், பெருமை பொங்கச் சமர்த்தியைப் பார்த்து,

“சாப்பாடு ரெடி… வா… வந்து சாப்பிடு…” என்றான். இவளோ வியப்பு மாறாமல் உணவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அன்று ‘சமையல் தெரிந்தவனாகப் பார்த்து மணந்து கொள்கிறேன் என்றதற்குத் தனக்கும் சமைக்கத் தெரியும் என்று காட்ட விளைகிறானோ?’ கேள்வி எழ அவனைக் குறுகுறு என்று பார்த்தாள்.

அவளுடைய விழிகளின் பொருளை உணர்ந்து கொண்டவனுடைய முகம் ஏனோ சிவந்து போனது. வெட்கப்பட்டானோ? இவனா? சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர, இவன் வெட்கப் படுவது ம்கூம் வாய்ப்பில்லை.

ஆனாலும் அவன் முகத்திலிருந்து விழிகளை விலக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க, தன்னைக் கண்டுகொண்டாளோ என்கிற எரிச்சலில்,

“வட்…” என்றான்.

“நீங்கள்… இப்போது… வெட்கப் பட்டீர்கள் தானே…”

அதைக் கேட்டதும் அவனுடைய முகம் மீண்டும் கண்டிச் சிவந்தது. அவசரமானத் தன் முகத்தை மறைத்தவன்,

“ஆர் யு கிரேசி… நான் இதுவரை எதற்கும் வெட்கப்பட்டதில்லை…” என்றான் தட்டில் இருந்த உணவின் அலங்காரத்தைப் பார்த்தவாறு.

‘அதுதானே பார்த்தேன். இவனாவது வெட்கப் படுவதாவது…’ எரிச்சலுடன் நினைத்தவள் அவன் சமையல் செய்யும் அழகைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள். நிச்சயமாக அவனுக்க சமையல் ஒன்றும் புதிதல்ல. அதையே தெரிந்து கொள்ள விளைந்தவளாக,

“உங்களுக்குச் சமையல் தெரியுமா?” என்றாள் இன்னும் வியப்பில் இருந்து விடுபடாதவளாக.

தன் தோள்களைக் குலுக்கியவன், “நான் மட்டுமல்ல, அவ்வியும் நன்றாகச் சமைப்பான். மிஸஸ் ஜான்சி இருந்த போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சென்றபிறகு, வேலையாட்களை மறுத்து நமக்குப் பிடித்ததை நாமே செய்து சாப்பிட்டோம். அப்படிப் பழகியதுதான் இவை… அதற்குப் பிறகு வேலைப் பழு சமையலில் நேரத்தைச் செலவிட முடியவில்லை. ஆனால் சமைக்கப் பிடிக்கும்…” என்று கூறியவன், சமர்த்தியை ஆவலுடன் பார்த்து,

“சாப்பிடு சதி…” என்று கூறிவிட்டு ஆர்வத்துடன் அவளைப் பார்க்க, தனக்காகச் சொற்ப நேரத்தில் அழகாகச் சமைத்துக் கொடுத்த உத்தியுக்தனின் மீது மனம் சற்றுக் கனிந்து போனது மட்டும் நிஜம்.

குழந்தை வேறு வயிற்றில் அசையத் தொடங்க, அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் முள் கரண்டியால் பஸ்டாவைச் சுழற்றி, ஆவலுடன் ஒருவாய் எடுத்து வைக்க அமிர்தமாய் உணவு வயிற்றிற்குள் இறங்கியது.

தன்னை மறந்து விழிகளை மூடி ரசித்து உண்டவளை ஒரு வித ரசனையோடு பார்த்தான் உத்தியுக்தன்.

உண்டு முடித்துவிட்டு இவள் நிமிர்ந்தபோது தான், அவன் இன்னும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதுவரையிருந்த இலகுத்தன்மை காணாமல் போக மனமோ இடித்துரைத்தது.

அவன்தான் சமைத்துக் கொடுத்தான் என்றால், இவள் ஒரு துளி கூட விடாது உண்டு தொலைக்க வேண்டுமா. அவளுடைய தன்மானம் என்னாவிறது. அவஸ்தையுடன் நெளிய, இவனோ, அதைக் கண்டும் காணாதவனுமாக, அவள் முன்னால் தண்ணீர்க் குவளையை வைத்து,

“தண்ணீரைக் குடி…” என்றான்.

அவளுக்கும் இப்போதைக்குத் தண்ணீர்தான் தேவையாக இருந்தது. அவசரமாக அத்தனை தண்ணீரையும் ஒரே மூச்சாகக் குடித்து முடித்தவள், மீண்டும் மேசையில் குவளையை வைத்துவிட்டு,

“சரி… இனி புறப்படலாமா?” என்றாள். இவனோ குழப்பத்துடன் அவளைப் பார்த்து,

“எங்கே…?” என்றான்.

“என் வீட்டிற்கு… அண்ணா அண்ணி வீட்டிற்கு…” என்றதும் அதுவரையிருந்த மகிழ்ச்சி துணிகொண்டு துடைத்தாற்போலானது உத்தியுக்தனுக்கு. முகமும் உடலும் இறுக,

“உன் வீடு இதுதான் சமர்த்தி…” என்று வார்த்தைகளைத் துப்ப, அவளோ, உதடுகளைக் கடித்தவாறு சற்று அமைதி காத்தாள்.

இவனோடு ஒரே வீட்டில் வாழ்வதா? நினைக்கும் போதே நெஞ்சம் கனத்தது. மறுப்பாகத் தலையை ஆட்டியவள்,

“இல்லை.. இது உங்கள் வீடு.. இங்கே என்னால் இருக்க முடியாது உதிதன்… இங்கே இருந்தால் எனக்கு மூச்சு முட்டும். சிறையில் இருப்பதுபோலத் தோன்றும். என்னால் மகிழ்ச்சியாக ஒரு நிமிடத்தைக் கூடக் கடத்த முடியாது. தயவு செய்து என்னை என் அண்ணா வீட்டில் விடுங்கள்… ப்ளீஸ்…” என்று கெஞ்சுவது போலக் கேட்க ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்தான் உத்தியுக்தன்.

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா என்கிற சலிப்பும் தோன்றியது. சிரமப்பட்டு அடக்கியவனாக,

“மீண்டும் நீ அதிலேயே நிற்பது எனக்குப் பிடிக்கவில்லை சதி. இதுதான் உன் வீடு… இங்கிருந்து நீ எங்கும் போக முடியாது…” என்று அவன் முடிக்க முதல்,

“மீண்டும் என்னைச் சிறை வைக்க உத்தேசமோ… என்ன பழைய சமர்த்தி என்று நினைத்தீர்களா? என்று நீங்கள் அந்த ஜூலி…” அவள் முடிக்க முதல்,

“ஸ்டாப் இட்… ஜெஸ்ட் ஸ்டாப்பிட்… இன்னும் ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை உன் வாயில் அந்த ஜுலியட்டின் பெயர் வந்தது… அப்புறம் நான் மனுஷனாகவே இருக்கமாட்டேன்… நானும் பைத்தியக்காரன் போலக் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல அரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன்… திரும்பத் திரும்ப அதிலேயே நின்றால் என்ன அர்த்தம்… இதோ பார் சதி… நான் முடிந்த வரைக்கும் பொறுமையாக இருக்கத்தான் முயல்கிறேன். திரும்பத் திரும்ப இதையே பேசி என் பொறுமையின் எல்லையைத் தாண்ட வைத்துவிடாதே… அதன் பிறகு நீ கர்ப்பிணி என்று கூடப் பார்க்கமாட்டேன் ஜாக்கிரதை…” என்று அடக்கிய குரலில் அவன் சீற, அந்தச் சீறலில் ஒரு கணம் பயந்துதான் போனாள் சமர்த்தி.

அவளையும் மீறி விழிகளில் கண்ணீர் பொங்கி நிற்க, அதைக் கண்டதும் இவனுடைய நெஞ்சம் தான் வாடிப்போயிற்று.

மெல்லிய தவிப்போடு அவளை நெருங்கியவன், அவளுடைய தோள்களில் கரங்களைப் பதித்துத் தன்னை நோக்கி இழுத்து,

“லிசின்… நீ இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறாய். உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நேரங்களில் உட்சுரப்பிகள் சரியான பாதையில் செயல்படாது என்பது எனக்குத் தெரியும். அதுதான் தப்புத் தப்பாக உன்னை யோசிக்க வைக்கிறது பேச வைக்கிறது….” என்றவன் அவளுடைய முகத்தைத் தன் உள்ளங்கைகளால் பற்றி, கன்னங்களைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவன், அவளுடைய கசங்கிய முகத்தை ஒரு வித வலியோடு பார்த்து,

“நான் பொய் சொல்பவன் கிடையாது… சொல்லவும் தெரியாது. இந்தக் கணம் வரை உனக்கு உண்மையாகத்தான் இருக்கிறேன் இருப்பேன்… ஜூலியட் என் வாழ்வில் முடிந்துபோன அத்தியாயம். நாம் இருவரும் வெறும் நண்பர்கள்தான்…” என்றவன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, அவள் எதிர்பார்க்கா தருணத்தில் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதியவளை இறுக அணைத்தவன், தன் விழிகளை மூடி அவள் தலையில் தன் கன்னத்தைப் பதித்துச் சற்று நேரம் அப்படியே நின்றான்.

“என் வாழ்வில் இத்தகைய தருணம் வராதென்று நினைத்திருந்தேன் பம்கின்…” என்று அவன் மென்மையாகக் கூற, அந்தப் பம்கின்னில் சுயநினைவு அடைந்தவளாய், அவசரமாக அவனை விட்டு விலகி,

“நம்பத்தான் முயல்கிறேன் உதி… ஆனால்…” என்றவளின் முகம் கசங்கியது.

பாழாய்ப்போன போன ஜூலியட்டின் உருவம் கண்முன்னால் தோன்றி அவளை இம்சித்தது. அதை உணர்ந்தவன் போலப் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகியவன்,

“யு நீட் ரெஸ்ட்… நன்றாகத் தூங்கி எழுந்தாலே எல்லாம் சரியாகிவிடும்… வா… தூங்கப் போகலாம்” என்றவாறு அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

அவன் ஏந்தியது ஒரு பக்கம் இதமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நெஞ்சம் கனத்துப் போனது.

“இப்படி உங்கள் வீட்டில் இருப்பது எனக்குப் பிடிக்கவேயில்லை தெரியுமா? தப்பு செய்வது போலவே தோன்றுகிறது…” என்று மெல்லிய குரலில் அவள் கூற, தன் கரங்களில் கிடந்தவளைக் குனிந்து பார்த்தவன்,

“ஏற்கெனவே சொல்லிவிட்டேன்… நடந்ததை நாம் இருவரும் மறந்துவிடலாம் என்று. நீதான் அதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறாய்…” என்றவன் அவளை ஏந்தியவாறு படிகளில் ஏறியவன், அறைக்கு வந்ததும் அவளைப் பக்குவமாகப் படுக்கையில் கிடத்திவிட்டு, விரைந்து தன் அறைக்குச் சென்று வெளியே வந்தான். வந்தவனின் கரத்தில் அவனுடைய பெரிய டீ ஷேர்ட் ஒன்று வீற்றிருந்தது. அதை எடுத்துச் சமர்த்தியிடம் நீட்டி,

“இதைப் போட்டுக்கொள்.” என்று கூற அவளோ இவனைப் பார்த்து முறைத்தாள்.

“உங்களுடைய சட்டை ஒன்றும் எனக்கு வேண்டாம்…” என்று உதடுகளைச் சுழித்தவாறு தலையைத் திருப்ப, இவனுக்கு கோபத்திற்குப் பதில், மெல்லிய சிரிப்புதான் தோன்றியது. வளர்ந்தும் குழந்தையாக இருப்பவளை என்ன செய்வது?

“இப்படியேவா படுக்கப்போகிறாய்? இங்கே இருக்கும் உன்னுடைய ஒரு சில ஆடைகளை இந்த நிலையில் அணிய முடியாதே…” என்று அவள் கர்ப்பிணிப்பெண்கள் அணிந்திருந்த பான்டையும் ஷேர்ட்டையும் சுட்டிக் காட்டிக் கேட்க, இவள்தான் உதடுகளைக் கடிக்கவேண்டியதாயிற்று.

அவளுடைய உடுப்புப் பெட்டியை எடுத்துவர விட்டானா இவன்? அவற்றை எடுத்து வர முதலே இழுத்துவந்துவிட்டானே கிராதகன். எரிச்சலோடு அவனை ஏறிட,

“நமக்கே குழந்தை வரப்போகிறது… அப்படி இருக்கையில் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதே சமர்த்தி… ஆடையை மாற்றிவிட்டுப் படுத்துக்கொள்…” என்றவன், அவளுக்குத் தனிமை கொடுத்துத் தன் அறைக்குள் நுழைய, இவளுக்கும் மறுக்க முடியவில்லை.

குளியலறைக்குள் நுழைந்தவள், வெந்நீரில் ஒரு குளியலைப் போட்டு, அவன் கொடுத்த டீஷேர்ட்டை அணிந்தபோது, ஏனோ அதுநாள் வரைக்கும் இல்லாத மன அமைதி அப்போது அவளிடம் ஏற்பட்டிருந்தது.

வெளியே வந்தவள், அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்க அவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பாகத்தான் இருந்தது.

அவனுடைய டீஷேர்ட் அவளுக்கு மிக மிகப் பெரிதாகத்தான் இருந்தது. கூடவே முட்டிக்கால் வரைக்கும்தான் வந்திருந்தது.

ஆனாலும் அவளுக்குப் பாந்தமாகப் பொருந்தி இருந்தது. கூடவே அவனுடைய அணைப்பில் சிக்கியிருப்பதுபோலத் தோன்ற, அதை இழுத்துத் தன்னோடு அணைத்து அவன் அணைப்பதுபோன்ற கற்பனையில் விழிகளை ரசனையுடன் மூடி நிற்க,

“இன்னுமா உறங்கவில்லை?” கண்டிப்பான குரல் பின்னாலிருந்து வந்தது.

அந்தக் குரலில் துள்ளிக் குதித்துத் திரும்பிப் பார்த்தாள் சமர்த்தி.

உத்தியுக்தன்தான். கரத்தில் ஒரு குவளையுடன் நின்றிருந்தான். அதை அவளிடம் நீட்டி,

“இந்தா… பால்… குடி… தூக்கம் வரும்…” என்று கூற, மறுக்காது வாங்கிக் குடிக்க, அவள் குடித்து முடியும் வரைக்கும் காத்திருந்தவன், குவளையைத் தன் கரத்தில் வாங்கி, அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்று படுக்கையின் அருகே விட, தர்ப்பம் புரியாமல் சரிந்து படுத்தாள் சமர்த்தி.

அவள் படுத்த போது சற்று மேலே ஏறிய ஆடை அவளுடைய பளிங்குக் கால்களை அவன் விழிகளுக்கு விருந்தாக்க, அதைக் கூட உணறாதவனாய், போர்வையை எடுத்து அவள் மிது போர்த்தி விட்டு விளக்கை அணைத்துவிட்டு, விடிவெள்ளியை உயிர்ப்பித்துவிட்டு தன் அறைக்குள் நுழைய, இவளுக்கு ஏனோ நெஞ்சம் கனத்துப் போனது.

அவள் மட்டும் குழந்தை உண்டாகாமலிருந்து இருந்தால் இத்தனை கரிசனை, இத்தனை பாதுகாப்பு, இத்தனை அன்பு கிடைத்திருக்குமா? நிஜமாகவே இவன் சொல்வது போல இவனுக்கும் ஜூலியட்டிற்கும் இடையில் எந்தத் தப்பான உறவும் இல்லையா? நெருப்பில்லாமல் சும்மா புகையுமா? புரியாத குழப்பத்துடன், விழிகளை மூடியவள், உறக்கம் வராமல் அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுத்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விழிகள் தாமாக மூடிக்கொண்டன.

அதே நேரம் உத்தியுக்தன், தானும் ஒரு குளியலைப் போட்டு, பிஜாமா ஷேர்ட் அணிந்தவாறு ஒரு முறை சமர்த்தியைக் கவணித்துவிட்டு உறங்கலாம் என்று எண்ணியவனாய், வெளியே வர, அங்கே அவன் மனைவி ஒருபக்கம் சரிந்து நல்ல உறக்கத்திலிருந்தாள்.

அதைக் கண்டதும் உத்தியுக்தனின் உள்ளம் இளகிப் போயிற்று. எல்லையில்லா நிம்மதியும் மகிழ்ச்சியும் ஆறாக ஊற்றெடுத்தது. ஏனோ நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வீடே நிறைந்திருப்பது போன்ற ஒரு உணர்வில் அகமகிழ்ந்துபோனான் அவன்.

சத்தம் எழுப்பாது அவளை நெருங்கியவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளையே இமைக்காது தலை முதல் கால் வரை பார்த்தான்.

அவளிடம்தான் எத்தனை மாற்றம்? முன்பு சதைப்பற்றோடு தெரிந்தவள், இப்போது நன்கு இளைத்திருந்தாள். அந்தக் குண்டுக் கன்னங்களைக் காணவில்லை. அதை நினைக்கும்போதே இவனுக்கு உள்ளத்தில் வேதனை பொங்கியது. கூடவே வைத்தியர் சொன்னதும் நினைவுக்கு வந்தது

அதை நினைத்ததுமே உள்ளம் அமைதியற்றுத் தத்தளித்தது. அவனால் இவளைச் சரியாகப் பார்த்துக் கொள் முடியாதோ? இதுவரை யாரையும் இத்தனை அக்கறையாக அவன் பார்த்துக்கொண்டது கிடையாது. பார்த்துக்கொள்ளவும் தெரியாது.

அப்படியிருக்கையில், தக்க வகையில் இவளைக் கவனிக்க அவனால் முடியுமா? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அவளை விட்டு விலகியிருக்க முடியாது என்பது ஆணித்தரமாகப் புரிந்துபோயிற்று உத்தியுக்தனுக்கு.

இத்தகைய நாள் அவன் வாழ்வில் வரும் என்று யாராவது ஒருவர் சொல்லியிருந்தால் அதை நம்பியிருப்பானா? அவன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த அந்தத் தருணம் மிக அழகாய் மலர்ந்திருப்பதைக் கண்டபோது அவனால் நம்பவே முடியவில்லை.

கடந்த ஏழு மாதங்களாக விட்டுச் சென்ற அமைதியும் நிம்மதியும் அவளைக் கண்ட நொடியில் மீளப்பெற்ற அதிசயத்தை என்னவென்று சொல்வான்? இதோ இந்த நிமிடம், இந்தக் கணம் அவளை அணைத்துக் கொள்ள உடலும் உள்ளமும், புத்தியும் சேர்ந்து அவனைப் பாடாகப் படுத்துகின்றன. ஆனால் அவளைத் தொட முடியாத நிலையில் அல்லவா இருக்கிறான்.

வயிறு பசித்துக் கிடக்கிறது. முன்னால் அறுசுவை உணவு கிடக்கிறது. ஆனால் அதை விரல் நுனியால் கூடத் தொட்டுத் தீண்ட முடியாத சபிக்கப்பட்ட நிலையில் தள்ளப்பட்டிருக்கிறானே. தன்னை மறந்து சமர்த்தியை நெருங்கியவனுக்கு அவளைக் காணக் காண பாசத்தில் இதயம் வீங்கிப் பெருத்து வெடிக்கத் தயாரான நிலையில் இருப்பது போலத் தோன்றியது.

“ஓ காட்… எத்தனை அழகாக இருக்கிறாள்…” என்று எண்ணியவனுக்கு இன்னொரு அச்சமும் பிறந்தது.

இத்தனை சிறியவளாக இருக்கிறாளே… அவன் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பாள்? ஒரு வேளை குழந்தை அவனைப் போலச் சற்றுப் பெரியதாக இருந்தால்? அவளால் பிரசவத்தைத் தாங்க முடியுமா? எண்ணும்போதே உள்ளே குளிர் எடுத்தது. விழிகளோ அச்சத்தோடு அவளுடைய சூல் தாங்கிய வயிற்றை ஏறிட்டன.

அந்த நேரம், திடீர் என்று சமர்த்தியின் வயிறு அங்கும் இங்கும் ஆட, அதைக் கண்டதும் இவனுக்குள் மாபெரும் சிலிர்ப்பு.

தன்னை மறந்து சமர்த்தியை நெருங்கியவனுக்கு ஏனோ நெஞ்சத்தில் ஒரு வித படபடப்பு. சத்தப் போடாமல் அவளுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன், மீண்டும் அவள் வயிற்றை உற்றுப் பார்க்க. இப்போதும் பலமாக அசைந்தது குழந்தை.

அது அவனுடைய விந்து. அத்தனை கோடி விந்தணுக்களிலும், போட்டிப்போட்டு ஜெயித்து வெற்றியாளனாய் முடிசூடுவது என்பது எத்தனை பெரிய சாதனை. அப்படிப் பார்த்தால் உலகின் முதல் அதிசயம் குழந்தையாகத்தானே இருக்க வேண்டும். உலகில் ஜனித்தால் ஆயிரம் போட்டிகள் இருக்கும், அதைக் கடந்து வா என்று பயிற்சி கொடுப்பதற்காக அது உருவாக முதுலே போட்டி வைத்ததோ இயற்கை? இப்போது அந்த சிறிய விந்து கண்கள் காதுகள் மூக்கு வைத்து ஒரு உயிராய் உருவாகி இப்போது தாயின் வயிற்றுக்குள் குதுகலமாய் துள்ளி விளையாடுகிறதே. வியப்புத் தாளவில்லை உத்தியுக்தனுக்கு.

இது அவனுடைய உயிர். அவனுடைய பரம்பரையைக் கூறும் தூண் அல்லவா…? அதனால்தான் குழந்தை வரம் வேண்டி அத்தனை துடிக்கிறார்களோ…?

ஆனால் அவனுக்கு அவ்விக்கும் மட்டும் ஏன் இத்தகைய பாக்கியம் கிடைக்கவில்லை. அவன் தாய் தந்தை இப்போது இவன் உருகிக் குழைவதுபோல ஏன் உருகிக் குழையவில்லை? இவர்கள் மட்டும் ஏன் பிறக்க முதலே நிராகரிக்கப்பட்டார்கள்… பிறந்த பின்னும் சுமையான உறவாகத்தானே தெரிந்தார்கள்.. இந்தக் குழந்தைக்கு முன்னால் பணமும் பகட்டும் முக்கியமில்லை என்று ஏன் தெரியாமல் போனது. நெஞ்சம் வேதனையில் தவித்தது உத்தியுக்தனுக்கு.

இது என் குழந்தை… எந்தச் சந்தர்ப்பத்திலும் அதன் மனதை வருத்த விடக் கூடாதுஉடலில் உயிர் இருக்கும் வரைக்கும் அந்தக் குழந்தைக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கவேண்டும் என்று அந்தக் கணமே சபதம் எடுத்தவனாகக் குனிந்தவன் பட்டும் படாமலும் அவளுடைய வயிற்றில் மெல்லியதாய் ஒரு முத்தம் வைத்தான்.

தந்தை தன்னை முத்தமிடத் துடிக்கிறார் என்ப குழந்தை உணர்ந்து கொண்டதோ? சரியாக அவனுடைய உதட்டை நோக்கிப் பலமாக உதைய, பதறியவனாகத் தன் உதடுகளை விலக்கிய நேரம், குழந்தையின் அசைவில் நல்ல உறக்கத்திலிருந்த சமர்த்தியின் துயில் மெல்லக் கலைந்தது.

அதை உணர்ந்து அஞ்சியவன் போலத் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருக்க, சமர்த்தித் தூக்கத்திலேயே வயிற்றைத் தடவியவாறு மீண்டும் உறங்கிப்போனாள்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாக மீண்டும் அவளுடைய வயிற்றை ஆவலுடன் பார்த்தான்.

குழந்தையின் அசைவைப் பார்க்க மிகப் பெரும் சுவாரசியமாக இருந்தது அவனுக்கு.

சமர்த்தி இடதுபக்கமாகச் சரிந்து படுத்து இருந்ததால், அவளுடைய வலது பக்க வயிற்றின் மேல் பகுதி திடீர் என்று எம்பி நின்றது. அதைக் கண்டதும் உத்தியுக்தனுடைய புன்னகை சற்றுப் பெரிதாகவே விரிந்தது.

அவனுடைய குழந்தை, சும்மா இருக்காமல், உதைபந்து விளையாடுகிறதே, அதுவும் அன்னைக்கு வலிக்கும் என்று கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? மெல்லிய கோபத்துடன், அவளுடைய வயிற்றை நோக்கிக் குனிந்தவன், எம்பிய பகுதியில் தன் வலது கரத்தைப் பட்டும் படாமலும் வைக்க, உடனே மறைந்து போனது அந்த வீக்கம்.

ஆனாலும் மறு கணம் அதே வேகத்தோடு அவன் கரத்தோடு மோதப் பயத்தில் தன் கரத்தைச் சடார் என்று விலக்கியவனுக்கு என்ன உணர்வது என்று கூட முதலில் புரியவேயில்லை.

அதன் பிறகு புத்திக்கு அது மகிழ்ச்சி என்கிற செய்தி போக, சிலிர்த்துப் போனவனாய், தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான். விழிகளில் தோன்றிய கண்ணீரோ இப்போது கன்னத்தில் விழத் தயார் என்பதுபோல முட்டி நின்றது.

“கடவுளே… இதை விடச் சொர்க்கம் ஒரு தந்தைக்கு இருந்துவிட முடியுமா என்ன? நம்ப முடியாதவனாகக் கரத்தைச் சுருட்டியவாறு சமர்த்தியின் வயிற்றைப் பார்த்தான். ஏனோ அந்தக் கணமே அவளுடைய வயிற்றுக்குள் புகுந்து அவன் மகனோடு மகனாக இணைந்திருக்கமாட்டோமா என்கிற பெரும் ஏக்கம் எழுந்தது.

தன்னை மறந்து சமர்த்தியின் வயிற்றை நோக்கிக் குனிந்தவன், பட்டும் படாமலும் அவள் வயிற்றில் மெல்லிய முத்தமிட்டு,

“ஹே… லிட்டில் சப்… இட்ஸ் மி… யுவர் டாட்…” என்றான் மெல்லிய கிசுகிசுப்புடன். எங்கே தன் பேச்சு சமர்த்தியின் தூக்கத்தைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சியவன் போலத் தலையைத் திருப்பி அவளை ஏறிட்டான். நல்லவேளை அவள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். நிம்மதி மூச்சுடன், மீண்டும் கையில் முட்டி நின்ற குழந்தையிடம் தன் கவனத்தைக் கொண்டு சென்றவன், உதடுகள் அவள் வயிற்றில் முட்டும் அளவிற்கு நெருங்கி,

“ஏஞ்சல், நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா?” என்றான் மெல்லிய குரலில். மீண்டும் அவன் குழந்தையிடமிருந்து பெரிய ஒரு அசைவு.

புளகாங்கிதம் கொண்டான் அந்தத் தந்தை.

“மை பேபி… நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொள்… நான் உனக்குச் சத்தியம் செய்கிறேன்… உன்னையும், உன் அம்மாவையும் நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன். என் கண்ணின் இமையாகக் காத்துக்கொள்வேன்… எந்தத் தீய சக்தியும் உங்கள் இருவரையும் நெருங்காது காவல் காப்பேன்… இம்மைக்கும் மறுமைக்கும் உங்கள் இருவருக்கும் மட்டுமாய் வாழ்வேன்…” என்றவனுக்குக் குரல் கம்மியதோ, அடுத்துப் பேச அவனுக்குச் சற்றுச் சிரமமாகிப் போனது. தன்னை நிதானப் படுத்தியவன், “ஐ ப்ராமிஸ் யு பேபி… ஐ வில் டே கெயர் ஆஃப் எவ்ரிதிங்…” என்றவன் மீண்டும் குனிந்த அவளுடைய வயிற்றில் முத்தமிட்டு விலகி,

“படி… மம் நீட் ஹர் ரெஸ்ட்… கொஞ்ச நாட்களாகவே அவளுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கவில்லை… கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமா… கோ டு ஸ்லீப்…” என்று மென்மையாகக் கூற, அவன் கூறியது குழந்தைக்குப் புரிந்ததோ? மீண்டும் அவன் கரங்களுக்கு ஒரு உதை விழுந்தது. மறு கணம் அமைதியாகிப்போனது சமர்த்தியின் வயிறு. அதை உணர்ந்துகொள்ள உத்தியுக்தனுக்குச் சற்று நேரம் எடுத்தது.

திடீர் என்று அவனுடைய கன்னம் குளிர, புருவங்கள் சுருங்கக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தான். அங்கே ஈரம் தெரிய, அதிர்ந்துபோனான் உத்தியுக்தன். அவன் அழுகிறானா என்ன? எத்தனை வலிகளைச் சந்தித்தான். அப்போதெல்லாம் இறுகி நின்றிருந்தானே தவிர, கண்களில் கண்ணீர் தேங்கியது கிடையாது. ஆனால் என்று சமர்த்தியை இந்தக் கோலத்தில் கண்டானோ அந்த விநாடியில் இருந்து அவன் அவனாக இல்லை. இப்போது கண்ணீர் கன்னத்தை நனைக்கும் அளவுக்க அழுகிறான் என்றால், அவனால் அதை நம்பவே முடியவில்லை. மீண்டும் தொட்டுப் பார்த்து விரல்களில் ஈரத்தை உணர்ந்தவனுக்கு, உலகமே தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு.

வேகமாகத் தன் கன்னத்தைத் துடைத்தவனுக்குத் தான் அழுததை எண்ணி ஒரு வித அசட்டுச் சிரிப்பும் தோன்றியது. நல்லவேளை அவனுடைய இந்த நிலையை யாரும் பார்க்கவில்லை.

நிம்மதி கொண்டவனாக, மீண்டும் மீண்டும் கண்களைத் துடைத்துவிட்டு எழுந்தவன் சமர்த்தியின் பாதங்களின் கீழ் கிடந்த போர்வையை எடுத்து அவளுக்கு மேல் போர்த்தி விட முயல, அப்போது தான் கவனித்தான், சமர்த்தியின் பாதங்களை.

அவளுடையது குண்டுப் பாதங்கள்தான். ஆனால் அவை இன்னும் வீங்கிப் பார்ப்பதற்கே பயமாக இரந்தன. போதாததற்கு மெட்டிகளையும் காணவில்லை. அவன் எப்போதும் ரசிக்கும் பகுதியல்லவா அவள் பாதங்கள்.

இப்போது அவை இருந்த நிலையைக் கண்டு ஒரு வித கிலி பரவ, வேகமாக அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, ஓடிப்போய்த் தன் கைப்பேசியை எடுத்து இணையத்தில் தட்டிப் பார்த்தான். அதற்கான காரணங்களை அறிந்து, பயப்படும்படி எதுவுமில்லை என்று தெரிந்தபின்தான் நிம்மதி மூச்சே விட்டான்.

மீண்டும் சமர்த்தியின் அருகே வந்தவன், அவளுக்கு அருகாமையிலிருந்த இன்னொரு தலையணையை எடுத்து, அவளுடைய பாதங்களை உயர்த்தி அதன் கீழ் வைத்தவன், அவளுக்கு வலிக்காத வகையில் இதமாக அழுத்திக் கொடுக்க, அதைச் சமர்த்தியும் உணர்ந்துகொண்டாளோ? அவளுடைய உதடுகளில் மெல்லிய இளநகை ஒன்று பிறந்தது.

சற்று நேரம் இதமாகப் பாதங்களைப் பிடித்து இரத்த சுற்றோட்டத்திற்கு உதவி செய்தவனின் விழிகள் தூக்கத்தில் மெதுவாகச் சொக்கத் தொடங்கின. இனியும் முடியாது என்பதுபோல, எழுந்தவன், என்ன நினைத்தானோ, அவளுக்கு அருகாமையில் சென்று அசைவு ஏற்படாதவாறு படுத்து, சற்றும் யோசிக்காமல் அவள் இடை சுற்றித் தன் கரத்தைப் போடப் போனான். அவன் கரங்களைப் போடும் வேகத்தில் அவள் எழுந்து விட்டால்? தயங்கியவன், பின் மெதுவாகக் கரங்களை இறக்கி, பட்டும் படாமலும் அவளுடைய வயிற்றைச் சுற்றி வைத்துப் பின் அவள் அசையவில்லை என்பதை உணர்ந்து, நிம்மதியுடன் முழுதாகக் கரத்தைப் பதித்து, தன்னவள் தன் கைவளைவில் இருக்கிறாள் என்கிற நிம்மதியுடன் தன் விழிகளை மூடிக்கொண்டான்.

What’s your Reaction?
+1
38
+1
20
+1
6
+1
0
+1
0
+1
0
Vijayamalar

View Comments

  • 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
    பாருங்க டா இது பயபுள்ள சோறாக்குது. பொண்டாட்டி க்கு பரிமாறுது. பால் காச்சிகுடுக்குது. காலையும் அமுக்கி வுடுது.
    இதுல பேசறதை கேட்டுட்டு இந்த குட்டியும் சமத்தா கம்முன்னு ஆகிடுச்சே. நாளபின்னே எதாவது ன்னா இவுனுக்கு தான் சப்போட்டா பழம் விக்குமே இந்த குட்டி வாண்டு🥳🥳🥳🥳🥳🥳

    • ஹா ஹா ஹா பார்த்தீர்களா அவனுடைய ராஜ தந்திரத்தை.

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

16 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago