Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-24

24

 

அன்று இரவு உத்தியுக்தன் சமர்த்தியை நெருங்கவில்லை. அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியாகச் சென்று படுத்துவிட அது வேறு இவளைப் பெரிதும் வதைத்தது. அந்த ஜுலியட்டின் நினைவு இவளை நெருங்க விடாமல் செய்கிறதோ?

மறு நாள் தூக்கமில்லாமலே விடிந்தது சமர்த்திக்கு. அவன் எழுந்து வந்த பின்னும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவன்தான் அவளிடம் வந்து,

“பாராளுமன்றம் பார்க்க வருகிறாயா?” என்றான் மென்மையாக. இவளோ காது கேளாதவள் போல எங்கோ வெறித்திருக்க,

“உன்னைத்தான் கேட்கிறேன் சமர்த்தி… போக ஆசைப்பட்டாயே… வருகிறாயா?” என்றான். ஏனோ அந்தக் குரலில் அவள் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சற்று வெளியே தெரிந்ததோ? இவளோ சடார் என்று இவன் பக்கமாகத் திரும்பியவள்,

“எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள்… உங்கள் கைக் கடிகாரத்திடமும், சப்பாத்திடமும் அனுமதி கேட்டா அணிந்து கொள்கிறீர்கள்? இல்லை உங்கள் அனுமதி பெற்றுத்தான் உங்கள் கூட வருகின்றனவா?” என்றாள் படு ஆத்திரத்துடன். இவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“என்ன செய்வது… அவற்றிற்கு உயிரில்லையே… சொந்தமாக யோசிக்கப் புத்தியில்லையே… உன்னிடம் அவற்றிடம் செய்வது போல, அனுமதி கேட்காமல் தூக்கிச் செல்ல முடியாதே…” என்று கூற, இவளோ அவனைப் பார்க்கப் பிடிக்காமல் ஜன்னல் புறமாகத் திரும்பி வெட்டவெளியை வெறித்தவாறு,

“என்னுடைய இடம் படுக்கைதானே.. இங்கேயே இருக்கிறேன்…” என்றுவிட்டுக் கலங்கிய கண்களை, துடைத்துவிட, ஏனோ இவனுடைய செயல் ஒரு கணம் தடைப் பட்டது.

அவளுடைய வாட்டம் இவனைச் சற்று வதக்கியதோ? இல்லை இன்னும் எகிற வைத்ததோ? ஒரு கணம் உதடுகள் அழுந்த மூடி நின்றவன், இறுதியாக டையைக் கட்டியவாறு இவளைத் திரும்பிப் பார்த்தான். இவள் மட்டும் அன்று அந்தக் கட்டுரையை எழுதாமல் இருந்திருந்தால், இவளுக்கு இன்று ஏன் இத்தகைய நிலைமை? தன் தோள்களைக் குலுக்கியவன்,

“நீ சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் நிஜம் அதுதான் சமர்த்தி…” என்றவன், மீண்டும் கண்ணாடியைப் பார்த்து டையைச் சரியாக்கிவிட்டு,

“உன்னால் இழந்த கௌரவம், மதிப்பு, மரியாதை மீளக் கிடைத்திருக்கிறது. நீயும் வந்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உனக்குத்தான் பார்க்கப் பிடிக்கவில்லை போலும்… பாதகமில்லை” என்றவன், நடந்து சென்று அங்கு இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துக் குறிப்பிட்ட சானலை வைத்து,

“நீ வராவிட்டால் என்ன? நேரடியாக ஒளிபரப்புகிறார்கள்… அதைப் பார்” என்றுவிட்டுக் கிளம்பியவனின் பார்வையில் பட்டது முன்தினம் அவன் வாங்கிவைத்திருந்த உணவு. இரவு இவள் சாப்பிடவில்லையா என்ன? யோசனையுடன் திரும்பிப் பார்த்தவன்,

“நீ நேற்று இரவு சாப்பிடவில்லையா?” என்றான் சிறு கோபத்தோடு. இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. இவள் வாழ்க்கையே அதளபாதாளத்திற்குள் விழுந்து கிடக்கிறது. சாப்பாடு ஒன்றுதான் குறைச்சல். இருக்காதா பின்னே… அவனுக்கு வேண்டியது இந்தக் குண்டு உடல்தானே. இது மெலிந்தால் எப்படிச் சந்தோஷமாக அனுபவிப்பான்…? பதில் கூறப் பிடிக்காது அப்படியே இருக்க, அவனோ அதற்கு மேல் அவளோடு வாதிடாது கிளம்பி விட்டிருந்தான்.

எப்படியும் வர மறுத்தால், சண்டைபிடித்தாவது அழைத்துச் செல்வான் என்று காத்திருந்தவளுக்கு அவனுடைய வெளியேற்றம் பெரும் வலியைக் கொடுத்தது.

மறுத்ததும் இதுதான் வாய்ப்பு என்று சென்று விட்டானே.. நெஞ்சம் கனத்துப்பேனது சமர்த்திக்கு. கூடவே வயிறு வேறு பசியில் முனங்கத் தொடங்க, சாப்பிடுவதில்லை என்கிற பிடிவாதத்தோடு அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு நேரம் போகப் போகப் பிடிவாதமாக அமர்ந்திருக்க முடியவில்லை. அதற்கு மேல் முடியாதவளாக எழுந்தவள், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த ஒரு கேக்கை எடுத்துச் சுவைத்தவாறு தேநீர் வார்த்துக் கொண்டு மீண்டும் கட்டிலில் ஏறி அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.

அப்போதுதான் வருகையாளர்கள் அவர்களுக்கு உரிய இருக்கையில் அமரவைக்கப்பட்டுக் கொண்டு இருந்தனர். திடீர் என்று மெல்லிய பரபரப்புச் சத்தம் கேட்க, அங்கே உத்தியுக்தன் கவரும் புன்னகையோடு நடந்துவந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால், அரைவாசி மார்பகம் வெளியே தெரிய. கையில்லாத, தொடையிலிருந்து தரைவரை வெட்டப்பட்ட நீண்ட மினுங்கும் ஆடையோடு புன்னகைத்தவாறு வந்துகொண்டிருந்தாள் ஜுலியட்.

அதைக் கண்டதும் இவளுடைய அடிவயிறு எரிந்தது. இதனால்தான் இவளை வற்புறுத்தாமல் சென்றானா… இவள் வந்தால், அந்த ஜூலியட்டோடு கும்மி அடிக்க முடியாது என்பதால்தான் இவளை அலட்சியம் செய்து சென்றானா.

நெஞ்சமெல்லாம் காந்தியது சமர்த்திக்கு. போதாததற்கு இருவரும் அருகருகே அமர்ந்து இவளுடைய இரத்த அழுத்தத்தை ஏகத்திற்குக் கிளப்பிவிட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின், விருது கொடுக்கும் வைபவம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க, பிரதமரின் வருகை மிகப் பெரும் ஆரவாரத்தோடு தொடங்கியது.

அடுத்து பலருக்கு விருது கொடுக்கப்பட்டது. அந்த ஜூலியட்டும் இழித்துக்கொண்டு எதற்கோ ஒரு விருதைப் பிரதமர் கையால் வாங்கிக் கொள்ள, இவள் கையிலிருந்த கேக்தான் கையிலும் வாயிலும் இருந்து படாதபாடு பட்டது.

இறுதியாக முக்கிய விருது கொடுக்கும் நிகழ்வு. உத்தியுக்தனின் பெயரைக் கூற, பெரும் ஆரவாரம் மேடையில் எழுந்தது. பலத்த கைதட்டலோடு அவன் கம்பீரமாக எழுந்து பிரதமரிடம் செல்ல, அவர் எதையோ கூறியவாறு உத்தியுக்தனின் கரத்தைப் பற்றிக் குலுக்கி விருந்தைக் கொடுக்க. இவனும் பதிலுக்கு எதையோ கூறியவாறு விருதை வாங்கிக் கொள்ள. மாறி மாறி வெளிச்சங்கள் இருவர் மீதும் தெறித்தன.

கரத்திலிருந்த விருதை உயர்த்திப் பிடித்தவன், மேடையை விட்டு வெளியே வர, அதற்காகவே காத்திருந்தாள் போலும் அந்த வீணாய்ப் போன ஜூலியட். பாய்ந்து உத்தியுக்தனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட, இவளுடைய இராட்சத குணம் மேலோங்கத் தொடங்கியது.

இறுதியாக விருது நிறைவு பெற, உத்தியுக்தன் வெளியே வந்தான் அந்த ஜூலியட்டோடு.

அவர்கள் இருவரைக் கண்டதும் சுத்திவர பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்க, சளைக்காமல் பதில் கூறினான் உத்தியுக்தன்.

“இந்த விருது பெற்றபோது நீங்கள் என்ன உணர்கிறீர்கள்…?

“மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு, கிடைப்பதாக இருந்தது… சந்தர்ப்ப சூழ்நிலை தட்டிப்போனது. இப்போது மீண்டும் என் கரங்களுக்கு வந்து விட்டது.” என்றவனின் முகத்தல் புன்னகையில்லை. ஆனால் கம்பீரம் இருந்தது. சிரித்தால் முத்து உதிர்ந்துவிடுமா என்ன? பார் உர்ர் என்று’ இதமிளா மனதிற்குள் அவனை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தாள்.

“இதே போல ஒன்டாரியோ முதல்வர் பதவிக்கும் போட்டியிடுவீர்களா?” என்று கேட்டார் இன்னொரு பத்திரிகையாளர்.

“இல்லை… இனி அரசியலில் இறங்கமாட்டேன். ஒரு முறை பொய்த்த நம்பிக்கையை மீளப்பெறுவது சிரமம். தவிர வருந்தி அந்த நம்பிக்கையைப் பெற எனக்கு விருப்பமுமில்லை….”

“நீங்கள் திருமணம் முடித்துவிட்டீர்கள் என்று தெரியும். அப்படியிருக்கையில் உங்கள் மனைவியை அழைத்து வராமல், பெண் தோழியோடு விருது வாங்க வந்திருக்கிறீர்களே…”

“திருமணம் முடித்ததும் பழையதை மறக்க வேண்டும் மறைக்க வேண்டும் என்று ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா என்ன? நான் திருமணம் முடித்திருந்தாலும் நம்முடைய நட்பு ஒரு மோதும் முறிவடையாது” என்றுவிட்டுத் திரும்பி ஜூலியட்டைப் பார்த்துப் புன்னகைக்க, அவளும் தலையை ஆட்டியவாறு காற்றுக்கு அசைந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டே புன்னகைக்க, அதைக் கண்ட சமர்த்தியின் நெஞ்சில் அமிலம் சுரந்தது.

“உங்கள் பெண் தோழியோடு இப்படி வருவதைக் கண்டு உங்கள் மனைவிக்குக் கோபம் வராதா?”

“என் மனைவி ஐந்து வயதுக் குழந்தை இல்லை… புரியாது நடந்து கொள்ள…” என்று பட்டெனச் சொல்ல, இவளுக்குள் திகு திகு என்று எரியத் தொடங்கியது. ஐந்து வயதென்ன, ஐம்பது வயதானாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணோடு ஜோடி போட்டு நின்றால் எரியத்தான் செய்யும் என்று இவனுக்கு யார் சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்…?’ ஆத்திரத்துடன் எண்ணும்போதே,

“உங்கள் மனைவி வரவில்லையா…” என்று கேட்டார் இன்னொரு நபர்.

“இல்லை. அவர்களுக்கு இத்தகைய விழாக்களில் ஆர்வமில்லை…”

“உங்கள் மனைவிதான் உங்களைப் பற்றிய தவறான கட்டுரை எழுதியதாக வதந்தி உள்ளதே…”

“என் மனைவி பற்றிப் பொது மேடையில் பேசுவதை நான் விரும்பவில்லை… மன்னிக்கவும்…”

“ஆனால் இந்த விருது எப்போதோ கிடைக்க வேண்டியது. அதைத் தட்டிப்பறித்தது அவர்கள் எழுதிய கட்டுரைதானே… அப்படியிருக்கையில் அவர்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்…” என்று இன்னொரு நிருபர் கேட்க, ஒரு கணம் நிதானமாக அந்த நிருபரை ஏறிட்டான் உத்தியுக்தன்.

“என் வாழ்க்கைக்காக நீங்கள் நிறையவே கவலைப் படுகிறீர்கள்… அந்தக் கவலையை நானும் என் மனைவியுமாகச் சேர்ந்து பட்டுக்கொள்கிறோம்.. நீங்கள் சிரமப்படாதீர்கள்…” என்று தெளிவாக அவன் அழுத்திக் கூறிவிட்டு,

“என் தனிப்பட்ட வாழ்க்கையை விட வேறு ஏதாவது கேள்விகள்…?” என்று கேட்க,

“உங்கள் வெற்றிக்கான காரணம்…” என்றார் இன்னொரு நிருபர்.

“அதுதான் சொன்னேனே… விடா முயற்சி… அவதானம், கடும் உழைப்பு… முக்கியமாக என் மனைவி..” என்றதும் அங்கிருந்தவர்கள், அவனுடைய பதிலை ஏற்றுக் கொள்வதுபோலக் கரங்களை தட்டித் தம் வாழ்த்தைச் சமர்த்தியோ வியப்புடன் அவன் கூறுவதைக் கேட்டாள். அவனுடைய வெற்றிக்குக் காரணம் அவள் என்று சொல்லியிருக்கிறானே… ஏன்? நம்ப முடியாதவளாக மிச்சப் பேட்டியையும் கண்டு கழித்தாள் சமர்த்தி.

அன்று முழுவதும் உத்தியுக்தன் அறைக்கு வரவில்லை. இரவு பத்துமணியையும் கடந்து விட்டிருந்தது. சமர்த்திக்குப் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. அன்று காலையில் தின்ற கேக்கோடு எதுவும் வயிற்றுக்குள் இறங்கவில்லை. அவனையும் ஜூலியட்டையும் ஒன்றாகக் கண்டபின், அது கூடச் சுவைக்கவில்லை. எழுந்தவள், அங்கிருந்த ஒற்றை இருக்கையில், தொப்பென்று அமர்ந்தவளுக்கு ஏனோ பயம் அப்பிக்கொண்டது.

உத்தியுக்தனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோமோ? நினைக்கும்போதே இதயம் நடுங்கியது. இயலாமையில் தலையைப் பின்னுக்குச் சரித்தவாறே, கண்களை மூடக் கண்ணீர்தான் வழிந்து சென்றது.

எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ, பசியின் களைப்போ, இல்லை மனம் களைத்துப் போனதோ, நித்திராதேவி மெதுவாக அவளை அணைத்துக்கொள்ள, தூக்கத்தின் வசமானாள்.

இருந்தாற் போல, அவள் ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தாள். என்ன என்று அறிவதற்குள், அது சுகமாகவும் இருக்க, மீண்டும் உறங்கிப் போனாள்.

உத்தியுக்தன்தான், கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தபோது, ஒற்றை இருக்கையில் கால்களைக் குறுக்கி வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த சமர்த்தியைக் கண்டதும் ஏனோ இவனுடைய நெஞ்சில் மெல்லிய வலி. தன் தலையைக் குலுக்கியவன், அவளை நெருங்கித் தன் கரங்களில் தாங்கிக்கொள்ள, அந்தப் பட்டு முகம் அவன் மார்பில் சரிந்தபோது எப்போதும் போல அவனுடைய உடலில் பெரும் தடுமாற்றம்.

பற்களைக் கடித்தவன், மெதுவாக அவளை ஏந்திச்சென்று படுக்கையில் கிடத்திவிட்டுப் போர்வையால் காலிலிருந்து மார்புவரை போர்த்திக் கொண்டு நிமிர்ந்தபோது அவனுடைய விழிகள் அவள் முகத்தில் பதிந்தன. அவனையும் மீறி முன்தினம் அவளைக் கடுமையாகச் சாடியது நினைவுக்கு வர, உதடுகள் பெரும் தடுமாற்றத்துடன் ஒன்றோடு ஒன்று அழுத்தி நின்றன.

விருது பெறும் நாளை நினைத்து அவன் மனதளவில் பெரும் தாக்கத்திலிருந்தவனுக்கு வடிகாலாகச் சமர்த்திதான் வந்து சிக்கினாள்.

அவளால்தானே அந்த விருது கிடைக்காது தள்ளிப் போனது. அவளால்தானே அவன் வாழ்க்கையே மாறிப்போனது. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜூலியட்டைக் கண்டதாலும், அவளால் ஏற்பட்ட ஏமாற்றமும், எல்லாமாகவும் சேர்த்து அவனைப் பெரிதும் பாதித்ததால், உணர்ச்சி வசப்பட்டுக் கடுமையாகத்தான் வார்த்தைகளை விட்டுவிட்டான். அப்போது அவள் முகத்தில் தெரிந்த வலியை நினைக்கும்போதே அடிமனது கசந்தது. அதுவும் அவள் சாப்பிடாமல், உறங்கியிருப்பது தெரிய, உள்ளத்தில் பெரும் தவிப்பு.

அதே தவிப்போடு சென்றவன், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து பாலை எடுத்து ஒரு குவளையில் ஊற்றி நுண்ணலை அடுப்பில் சூடாக்கிவிட்டு சமர்த்தியை நோக்கி வந்தான்.

உறங்கும் சமர்த்தியை எப்படி எழுப்புவது என்று புரியாமல், சற்றுத் தடுமாறியவன், குவளையை அவளுக்கு அருகேயிருந்த மேசையில் வைத்துவிட்டு, அவளுக்குப் பக்கமாக அமர்ந்தவன் அவளுடைய செழித்த குண்டுக் கன்னத்தை இதமாய் வருடிக் கொடுத்து,

“சதி…” என்றான் மென்மையாய். அவளோ நித்திராதேவியின் மடியில் தலைவைத்து நன்றாகவே உறங்கிக்கொண்டிருந்தாள்.

“சதி…” என்றான் மீண்டும், அப்போதும் அவள் விழிப்பதாயில்லை. கும்பகர்னியாய் உறங்கும் தன்னவளைக் கண்டு, ஏனோ இவன் முகம் சற்றுக் கனிந்துதான் போயிற்று. இப்போது அவளை நோக்கி மேலும் குனிந்தவன்,

“பம்கின்…” என்றான் கிசுகிசுத்த குரலில். அந்தப் பம்கின் என்கிற சொல் அவளுடைய செவிவழி சென்று உள்ளத்தைத் தட்டியதோ? அந்த எழில் வதன முகத்தவளின் உதடுகளில் அழகிய தென்னங்கீற்றுப் புன்னகையொன்று மலர, அதைக் கண்ட இந்த ஆண்மகன்தான் பேச்சற்றுச் சிலிர்த்துப் போய் நின்றான்.

அந்த அழகில் மெய் மறந்தவனுக்கு அவளுடைய உதடுகளுக்குள்ளேயே குடித்தனம் நடத்திட வேண்டும் என்கிற தாபம் எழுந்தது. அப்போதுதான் அவனுக்கு முழுதாக ஒரு உண்மை புலப்பட்டது. அவன் விரும்புகிறான். சமர்த்தியை முழுதாக விரும்புகிறான். அதை உணர்ந்தவனின் அசைவு அப்படியே தடைப்பட்டு நின்றது.

இது எப்படிச் சாத்தியம். காதலின் மீதான நம்பிக்கை முற்றாக அழிந்துபோன நிலையில், மீண்டும் அந்தக் காதல் வருமா? அதுவும் அவனுடைய வாழ்க்கையையே பாழாக்கியவள் மீது அந்தப் பொல்லாத காதல் வருமா… இல்லை… இல்லை… நிச்சயமாக இல்லை… தன் தலையைக் குலுக்கிவிட்டு, ஏதோ தீயைத் தீண்டியதுபோல எழுந்தவனுக்கு ஏனோ நெஞ்சத்தின் படபடப்பை அடக்கவே முடியவில்லை.

தன்னை மறந்து இடது மார்பில் கரத்தைப் பதித்து விழிகளை மூடி நின்றவனுக்கு இதயத்தின் வேகத்தைக் கரங்களே உணர்ந்தபோது, பெரிதும் அதிர்ந்துதான் போனான்.

எதிலிருந்தோ தப்புபவன் போலத் தன் அறைக்கு நுழைந்து கதவை அடித்துச் சாற்றியவனுக்குச் சற்று நேரம் உலகமே தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு. விழிகளுடன் உதடுகளும் அழுந்த மூடியிருக்க, இரத்தமோ கன வேகமாக உடல் முழுவதும் சுழல, தன் உள மாற்றத்தின் போக்கை உள்வாங்கத் தொடங்கியவனுக்கு பெரும் குழப்பம் எழுந்தது.

அவன் இவளைக் காதலிக்கிறானா என்ன? நினைத்த மாத்திரத்தில் பக்கென்று வியர்த்துக் கொட்டியது உத்தியுக்தனுக்கு.

“நோ… நோ… இல்லை… அப்படியெல்லாம் அவள்மீது காதல் வந்துவிடவில்லை.” உருப்போட்டவனுக்கு அவளைக் கண்ட நாளிலிருந்து இந்தக் கணம் வரைக்கும் அவளால் தான் பாதிக்கப்பட்ட நிஜம் புரிய அதிர்ந்து போனான்.

என்று முதன் முதலாக அவளைக் கண்டானோ, அந்தக் கணமே அவள் இதயத்திற்குள் புகுந்து விட்டது மெல்ல மெல்லப் புரிந்தது அவனுக்கு. அப்போது அவளுடைய முழு உருவமும் அவனுக்குத் தெரியாது. அந்த இரண்டு கண்கள் மட்டும்தான். அந்தக் கண்களே அவனைப் பெரிதும் இம்சிக்க, அவனால் ஜூலியட்டைக் கூட நெருங்க முடியவில்லை.

யோசிக்க யோசிக்க, அதுவரை காட்சிப் பிழையாகத் தெரிந்தவை அனைத்தும் நேராகி விட்டது போலத் தான்றியது அவனுக்கு.

சொல்லப்போனால் ஜூலியட் அவனை விட்டு விலகியபோது கூட இவன் இந்த அளவு கவலைப்படவில்லை, துடிக்கவில்லை. மாறாக ஒரு நிம்மதி தான். ஆனால் அன்று, சமர்த்தி தனது அண்ணன் வீட்டிற்குச் சென்றபோது, அவன் பதறிய பதற்றம். அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று துடித்த துடிப்பு. நெஞ்சம் அதிர்ந்து போனதே. அது மட்டுமா அவளைக் கண்டாலே இரும்பிழுத்த காந்தமாய்ச் சென்றுவிடுகிறானே. நெஞ்சம் காமத்தில் பற்றிக் கொள்கிறதே. இதுவரை யாருக்கு அருகாமையிலும் உறங்கப் பிடிக்காதவனுக்கு, அவள் அருகே துயில்கொள்ளப் பெரிதும் ஏக்கம் தோன்றுகிறதே. இதற்கெல்லாம் காரணம் என்ன?

இதன் பெயர்தான் காதல் என்றால், ஆமாம் அவன் காதலிக்கிறான். அவனுடைய மனைவியைக் காதலிக்கிறான்.

அதை உணர்ந்தபோது, முதன் முறையாக உத்தியுக்தனின் உதட்டில் அழகிய புன்னகை ஒன்று மலர்ந்தது. அன்று தூக்கத்தில் இவன் மீதான காதலைச் சமர்த்தி சொன்ன போது, ஆத்திரப்பட்டாலும், உள்ளம் மலர்ந்து ஒளிவீசியது இவன் ஆழ்மனதிற்கு மட்டும்தான் தெரியும். அது காதலில்லை, என்று முட்டாள்தனமாக இவனே இவனைத் தேற்றிக் கொண்டதோடு, அந்தக் காதலை வளரவிடக்கூடாது என்பதற்காக விலகி நின்றானே. ஆனால் அதைக் கூட அவனால் முழுதாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதுவும் நேற்று ஜூலியட்டைக் கண்டபோது, உள்ளே எந்தக் குறுகுறுப்பும் தோன்றவில்லை. மாறாக நெடுநாள் பழகிய ஒரு தோழியைப் பார்த்த உணர்வுதான். கூடவே சமர்த்தியின் முகத்தில் இருந்த வாட்டம், ஜூலியட்டைக் கண்டு அவள் சலனப்படுகிறான் என்று புரிந்து, அவளை வருத்தப் பிடிக்காமல்தானே வெளியே அழைத்துச் சென்றான். அது மட்டுமா? அன்று ஜூலியட்டிற்கு மது வாங்கிக் கொடுத்தானே அன்றி அவன் ஒரு துளியும் அருந்தவில்லை. அதற்குக் காரணமும் சமர்த்திதான். அவளுக்கு மதுவாடை பிடிக்காது என்பதால்தான் அதைத் தொடவில்லை. சமர்த்தியைப் பழிவாங்க நினைத்திருந்தால், ஜூலியட்டோடு அதே அறையில் வைத்து மது அருந்தியிருக்க முடியும். ஆனால் அது அவனால் முடியவில்லையே. எங்கே ஜூலியட்டினது செய்கையும் தனதான செய்கையும் அவளைக் கலங்கவைத்து விடுமோ என்று நினைத்துத்தானே அங்கிருந்து சென்றான்.

இவ்வளவு ஏன், சமர்த்தி உணவுப் பிரியை என்பதற்காகவே குளிர்சாதனப் பெட்டி முழுவதும் அவளுக்குப் பிடித்த உணவுகளை வைக்கச் சொல்லிச் சொன்னதற்கான காரணம் இப்போது தானே அவனுக்கே புரிகிறது. அவள் சாப்பிட்டால் என்ன, சாப்பிடாமல் இருந்தால் இவனுக்கென்ன…? இவனுக்கேன் வலிக்க வேண்டும்? அதற்கான உண்மைக் காரணத்தை உணர்ந்தபோது அந்த ஆண்மகனின் உடல் சற்று இளகித்தான் போனது.

கூடவே உலகம் மிக அழகாகிப்போன உணர்வு. தொலைத்த ஏதோ ஒன்றைப் பெற்றுவிட்ட ஆனந்தம். அதுவரை காலமும் அன்பென்றால் என்ன என்றே தெரியாதவனுக்கு, அதை அறிந்துகொண்ட பேரானந்தம். எப்போதும் இறுக்கத்துடன் இருக்கும் அவன், அவளைக் கண்டால் மட்டும் சுயம் தொலைப்பதற்காக மொத்தக் காரணமும் புரிந்து போக, முதன் முறையாக உள்ளம் குதியாட்டம் போட்டது.

அந்த உணர்வைக் கலைக்க விரும்பாதவனாகப் படுக்கையில் சென்றமர்ந்தவனுக்குள் பேரச்சம் ஒன்று எழுந்தது.

இவனால் பிறர் போலத் தன் காதலை அழகாகக் காட்ட முடியுமா? எண்ணும் போதே மனம் சோர்ந்து போனது.

நிச்சயமாக அவனுடைய நா சும்மா இருக்காது. வார்த்தைகளைச் சாட்டையாக்கி அவள்மீது வீசும். அதில் எரிந்து போவது அவள்தானே. அது மட்டுமா, இவனுக்கு பிற ஆண்களைப் போலக் காதலை வெளிப்படையாகக் காட்டத் தெரியாது. காதலையும் சரி, அன்பையும் சரி வெளிப்படுத்தும் திராணியற்றவன். அப்படியிருக்கையில், சமர்த்தி எதிர்பார்க்கும் அழகிய காதலை இவனால் முழுதாகக் கொடுக்க முடியுமா? கொடுத்தாலும் புரிந்து கொள்வாளா? அதைப் புரிய வைக்க அவனுக்குச் சுத்தமாகத் தெரியாதே.

‘காட் டாமிட்… பழிவெறியில் மணந்தது என்று நினைத்தால், எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றான் உத்தியுக்தன். தன் மன மாற்றத்தை அந்தக் கணமே அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகம் எழுந்தது. கூடவே அவசரப்படாதே, நிதானமாக இதைக் கையாள வேண்டும் என்று தடுத்தது மனம்.

முதலில் அவன் சொல்வதை அவள் நம்ப வேண்டும். அதுதான் எப்படி? ஒரே இரவில் இவன் தலைகீழாக மாறினான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா என்ன? கைகொட்டிச் சிரிக்க மாட்டார்கள்? அதுவம் சமர்த்தி உயிரற்ற பொருளும் நீயும் ஒன்று என்று சொன்ன பின், உனக்கு உன் மீது காதல் என்றால், சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டாள்.

இதற்கு என்னதான் வழி? குழம்பியவனுக்கு அந்த யோசனை வர, ஓடிச்சென்று தன் லாப்டாப்பை எடுத்து வந்து கட்டிலில் சப்பாணி கட்டி அமர்ந்து, காதல் சார்ந்து ஏதாவது புத்தகங்கள் கிடைக்குமா என்று பார்த்தான்.

‘த ஆர்ட் ஆஃப் லவிங்…” என்கிற புத்தகம் தான் முன்னால் வந்து நின்றது. சமர்த்திப் படித்த புத்தகம்தான் அது. அன்று ‘கார்பேஜ்’ என்று அவனால் தூக்கிப்போடப்பட்டது இன்று, அவனையே செதுக்கும் புத்தகமாக மாற, உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கினான். ஆனால் எதுவுமே மண்டைக்குள் நுழையவில்லை.

புத்தகத்தை வாசிக்க வாசிக்க சமர்த்தியும், அவள் மீதான காதலும், அவளை எப்படி மகிழ்விப்பது என்பதுமான நினைவும்தான் ஓடிக் கொண்டிருந்ததேயன்றி, புத்தகத்திலிருக்கிற ஒரு சொல்கூட இவனுக்குள் நுழைவதாயில்லை. அதுவும் இதுவரை காலமும் இத்தகைய புத்தகத்தைப் படித்துப் பழக்கப்படாதவனுக்கு, அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தைப் படிக்கவே மணிநேரம் எடுக்க, “ஷிட்” என்றவாறு எரிச்சலுடன், மடிக்கணினியை அணைத்து ஓரமாக வைத்தான்.

‘எப்படித்தான் இதையெல்லாம் படிக்கிறாளோ..’ சலித்தவனுக்கு மறுநாளை எப்படிச் சமர்த்தியோடு ஆரம்பிப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை.

எரிச்சலுடன் கட்டிலில் அப்படியே மல்லாக்காகச் சரிந்தவனுக்கு, ஏனோ உடலே பலவீனமான உணர்வு. காதல் என்கிற ஒன்று எத்தனை பொல்லாதது. அது அரக்கனைக் கூட, கோமாளியாக்கி விடுகிறதே. விழிகளை மூடி நின்றவனுக்குத் தூக்கம் அருகிலும் நெருங்கவில்லை.

சமர்த்தியை அணைத்து அவளோடு இணைந்தால் பட்டென்று தூக்கம் வரும். ஆனால், முன்தினம் தாறுமாறாகப் பேசியபின், அவளை நெருங்கவும் தயக்கமாக இருந்தது.

எப்படியாவது முன்தினம் பேசியதற்கு மன்னிப்பு வேண்டவேண்டும். ஆனால் எப்படி வேண்டுவது? சாரி என்கிற ஒரு சொல்லில் எல்லாம் மறந்துவிடுமா என்ன? அவனைப் பொறுத்தவரைக்கும் மனதார அவன் கேட்கும் மன்னிப்பை அவள் உணரவேண்டும். வெற்றுச் சொல்லால் அல்ல. என்ன செய்யலாம்?

புரியாத பரிதாபத் தவிப்போடு தன் சுருள் குழலை ஒற்றைக் கரத்தால் வாரி விட்டுக் கொண்டவனுக்குத் தொலைக்காட்சிப் பெட்டி இவன் கவனத்தைக் கவர்ந்தது.

விளக்கு மேசையில் கிடந்த தானியக்கியை எடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பிக்க, இவன் கிரகம், ஆரம்பமே படுக்கைக் காதல் காட்சிதான்.

சும்மாவே தீயில் தகித்தவனுக்கு அது மேலும் வதைக்க, அவசரமாகச் சானலை மாற்றினான். ஏதோ ஒரு படம். இவனுக்கும் திரைப்படங்களுக்கும் எட்டா தொலைவு. இதில் எப்படிப் பொறுமையாகப் பார்ப்பது?

மீண்டும் சானலை மாற்ற, கறுப்பு வெள்ளைத் திரைப்படம் ஒன்று போனது. அதில் நாயகன் நாயகியின் இதழ்களைக் கவ்விப் பிடித்து முத்தமிட, வேளை கெட்ட வேளையில் அவள் இதழ்களின் மென்மை இவனுக்கு நினைவுக்கு வந்தது. அந்தக் கணமே கதவைத் திறந்து சென்று சமர்த்தியின் உதடுகளைக் கைப்பற்ற ஒரு வித வெறி எழுந்தது. கூடவே அவளை இறுக அணைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லவேண்டும் என்கிற ஆவலும் தோன்றியது. ஆனால் தன்னவளை எழுப்பி அவள் உற்கத்தைக் கலைக்கப் பிடிக்காதவனாகப் பல்லைக் கடித்தவாறு அடுத்தச் சானலை மாற்றினான்.

அதில் ஒரு விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு உணவகம். அங்கே நாயகன் அமர்ந்திருக்க, நாயகி நடந்து வருகிறாள். அதுவரை செய்தித்தாளைப் படித்திருந்த நாயகன் நாயகியைக் கண்டதும், அதை மடித்து வைத்துவிட்டு, முகத்தில் புன்னகை தவழ, எழுந்து அவளுக்கான இருக்கையை இழுத்துவிட்டு, அமரச் செய்து, குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டுவிட்டுத் தன் இருக்கையில் அமர்கிறான். அடுத்து எதுவோ இருவரும் பேசுகின்றனர். திடீர் என்று நாயகன் தன் பான்ட் பாக்கட்டிலிருந்து சிறிய நகைப்பெட்டி ஒன்றை வெளியே எடுத்து, அதை அவள் முன்பாக நீட்டித் திறக்க. அங்கே பளபளத்தது வைர மோதிரம். அந்த மோதிரத்தைக் கண்டதும் நாயகியின் முகம் மகிழ்ச்சியில் மலர, தன் கரங்களைக் குவித்து அர்ப்பணித்து, நாயகனைப் பார்க்க, நாயகனோ,

“வில் யு மரி மீ…” என்கிறான். அந்த விளம்பரத்தைக் கண்டதும் இவனுடைய முகம் பளிச்சென்று மலர, தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு, சடார் என்று படுக்கையை விட்டு எழுந்தான் உத்தியுக்தன்.

தன் இரவாடையைக் களைந்து சாதாரண ஆடை அணிந்தவன், வேகமாகத் தன் அறையை விட்டு வெளியே வந்தான். சமர்த்தி இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். அவளிடம் சென்று ஏதேதோ பேச எழுந்த ஆவலைச் சிரமப்பட்டு அடக்கியவன்,

‘நாளை எல்லாம் சரியாகிவிடும் பம்கின்..” என்று முணுமுணுத்தவன், சத்தம் எழுப்பாது வெளியே வந்து கதவைச் சாத்திவிட்டு, அடுத்து அவன் தேடிச் சென்றது, நகைக் கடை ஒன்றை.

What’s your Reaction?
+1
33
+1
9
+1
1
+1
7
+1
0
+1
0
Vijayamalar

View Comments

  • 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
    அச்சோ அச்சோ பயபுள்ள வந்த நிலைமையப் பாருங்க.
    அய்யாசாமி இங்கன வந்து பாருங்க ஒரு வரலாறு காணாத சம்பவம் நடந்து போச்சு 😂😂😂😂😂😂😂😂.
    பக்கி பய ஸாரி கேக்கறளவுக்கு இறங்கி வந்திருச்சு🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
    காதலிப்பது எப்படி ன்னு புக்கெல்லாம் படிக்க டிரை பண்ணுதே 🤭🤭🤭🤭🤭🤭.
    நெட்டை கொக்கனோட மைண்ட் வாய்ஸ் சாச்சிபுட்டா மச்சான் சாச்சிபுட்டா🤣🤣🤣🤣🤣🤣

    • இவளை லவ் பண்றதுக்கு அவன் கிணத்தில குதிக்கலாம். அவன் தலை எழுத்து. என்ன பண்றது.

  • நா சொல்லல பயபுள்ள ஓவரா சீன போடுறான் கடைசில கவுரபோறாணு ஆனாலும் உனக்கு கொழுப்பு அதிகம் தான் செருப்பும் அவளும் ஓண்ணு சொல்லிட்டு இப்போ நீ கிபிட் வாங்க போற போ போய் சொல்லு உன் லவ் ஆஹ் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்😁

    • அது ஒரு புலோவில அப்படி சொல்லிட்டான். அவ செஞ்ச வேலைக்கு இந்த திட்டுலாம் ஜுஜூபி.

    • ஒரு மாதிரி சோலிய முடிச்சிட்டேன். பாத்தீயளா

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

16 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago