Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-16

16

 

இதோ உத்தியுக்தனும் அவளுமாய்த் திருமணப் பந்தத்தில் இணைந்து இரண்டு கிழமைகள் கடந்திருந்தன. இந்த இரு கிழமையில் அவள் அறிந்தது ஒன்றே ஒன்றைத்தான். அந்த வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்களும் அவளும் ஒன்றுதான்.

தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திவிட்டு அதே இடத்தில் வைப்பதுபோல, இரவு நேரங்களில் அவளை அணைப்பான். தேவை முடிந்ததும் கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்வான். மறு நாள் இவளுக்கு முன்பாகவே எழுந்து அவன் சென்று விடுவான்.

இத்தனை நாட்களில், எப்படியிருக்கிறாய்? சாப்பிட்டாயா…? என்ன சாப்பிட்டாய்? வெளியே போகிறாயா? ஏதாவது வாங்கி வரவா? இத்தகைய கேள்விகள் மருந்துக்கும் அவன் வாயிலிருந்து வராது.

அதை விட்டு வேலை முடித்து வந்ததும் நேராகத் தன் அறைக்குள் நுழைவான். குளிப்பான். அப்படியே தன் அலுவலக அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொள்வான். ஏழு மணி என்றதும் கீழே வந்து உணவு மேசைக்கு முன்பு வந்து அமர்வான். உடனே லீ உணவுப் பதார்த்தங்களை மேசையில் வைக்க அதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் சாப்பிடுவான். சற்று நேரம் தொலைக்காட்சி பார்ப்பான். ஒன்பது மணி என்றதும்தான் இவள் ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்பதே அவனுக்கு ஞாபகம் வரும்.

இவளைப் பார்த்து,

“மேலே வா…” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்து விடுவான். அந்த அழைப்பை இவளாலும் மறுதலிக்க முடிவதில்லை.

கிடைத்த அவனுடனான அந்தத் தனிமையில் அவன் விருப்பத்திற்கு இசைந்து அவனுடைய அன்பைச் சம்பாதிக்க முயன்றவளுக்குப் பெரும் பாறாங்கல்லோடு தலையை முட்டிக் காயப்பட்ட உணர்வுதான் மிஞ்சியது.

இரவில் கணவனாய் அவளை நெருங்குகையில் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து முழுவதுமாய் அவளை ஆட்கொள்ளும்போது எதுவுமே நினைவில் இருக்காது. அவளையும் மீறி புத்தியும் தேகமும் அவன் விருப்பத்திற்கு ஏற்பப் பயணிக்கும். ஆனால் அவன் அணைப்பில் தன்னிலை கெடும்போது அவனது மார்பில் நீங்காத வடுவாகப் பதிந்திருந்த ஜூலியட்டின் உருவம் மொத்தமாய் இவளை நிலை குலைய வைக்கும்.

அந்தக் கணம் தென்றலாய் வீசிய காற்று சூறாவளியாக அவளை மொத்தமாய்ச் சுழற்றிச் சென்று எங்கோ முற்புதரில் போட்டுவிட்டுச் செல்லும்.

அருவெறுப்பும் ஆத்திரமும் மாபெரும் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து, மலர்ந்த அத்தனை இனிய உணர்வுகளையும் கொன்று புதைக்கும். கடைசியில் அவனுடைய அணைப்பே நரகமாகி விடும். மனதோ அத்தனை திடத்தையும் நம்பிக்கையையும் தகர்த்து எறிந்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கும். இவன் என்னவன் அல்ல, இன்னொருத்திக்குச் சொந்தமானவன் என்கிற உணர்வு அவளைப் பாடாய்ப் படுத்தும். உள்ளே அவளையும் மீறிப் பெரும் ஏக்கம் பிறக்கும்.

அவன் அவளை உடலால் துன்புறுத்தவில்லை. சின்ன வலி கூட அவளுக்குக் கொடுக்கவில்லை. வதைக்கவில்லை. ஏன் அவனிடமிருந்து சிறு கடுஞ்சொல் கூட வந்ததில்லை. ஆனால் அவளைத் தொடும் ஒவ்வொரு கணமும் அவளைக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளி வதக்கிவிடுவான். அதுவும் எல்லாம் முடிந்த பின் நீ யாரோ நான் யாரோ என்று விலகிச் செல்லும்போது அவளையும் மீறி விம்மிவிடுவாள் சமர்த்தி.

நாள் போகப் போக, அந்த வீட்டில் உள்ள வேண்டாத பொருட்களுள் அவளும் ஒருத்தி என்கிற எண்ணமும் வளரத் தொடங்கியது. ஏனோ அந்தத் தனிமை மிகப்பெரும் அச்சத்தை அவளுக்குக் கொடுத்தது. எப்போதும் உறவுகளும் நண்பர்களும் சூழ கலகலப்பாய் வாழ்ந்து பழகியவளுக்குத் தான் ஒரு தனித்தீவில் இருப்பது போலவும், இருண்ட உலகில் அவள் மட்டும் தனியாகப் பாதையின்றித் தவிப்பதுபோலவும் தோன்றத் தொடங்கிவிட்டிருந்தது.

எப்படியிருக்கிறாய் என்று தெலைபேசியில் கேட்கும் அண்ணியிடம் உண்மையையும் கூற முடியாமல், பொய்யையும் கூற முடியாமல் பெரிதும் உடைந்துபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.

அதுவும் அவளுக்கு வெளியே செல்லக் கூட அனுமதியில்லை. அப்படியே செல்வதாக இருந்தாலும் அவள் பின்னால் காவலுக்கென்று பெரிய படையே கிளம்பியது.

எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியாமல் ஒரு சிறைக்குள் சிக்குண்ட கைதிபோலப் பெரிதும் நொந்து போனாள். அதையும் மீறி உத்தியுக்தனின் வரவுக்காகப் பாழாய் போன மனம் பரபரக்கும். மொத்தத்தில் அப்படியும் இருக்க முடியாமல் இப்படியும் இருக்க முடியாமல் அதுவும் செய்ய முடியாமல் இதுவும் செய்ய முடியாமல் அப்படியும் யோசிக்க முடியாமல் இப்படியும் யோசிக்க முடியாமல் அலமலந்துபோனாள்.

அன்று ஜான்சி சொல்லியிருந்தார்கள். அவனை மடக்க ஒரே ஒரு ஆயுதம்தான் உண்டு. அது அன்பு. ஆனால் அந்த அன்பைக் கொடுப்பதற்கும் அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை. பெறுவதற்கும் இம்மிகூட இசைந்தானில்லை. அன்பு என்ன விளையாட்டுப் பொருளா, கொடுத்து வாங்க. அது அடி வயிற்றிலிருந்து தோன்றி உள்ளத்திலே உயிரோடு கலந்து பிறக்கவேண்டிய உன்னத உணர்வு அல்லவா? அதைச் சும்மா விலைகொடுத்து வாங்கிவிட முடியுமா என்ன?

அன்றும் உத்தியுக்தனை எப்படி அணுகுவது என்று புரியாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு லீ விடைபெற வந்தபோது தான் நேரமே உறைத்தது. ஏழு மணி. இன்னுமா உத்தியுக்தன் வீட்டிற்கு வரவில்லை?

பொதுவாக லீ விடை பெறுவதற்கு முதலே உத்தியுக்தன் வந்துவிடுவான். அன்று லீ சென்ற பிறகும் உத்தியுக்தன் வரவில்லை. கடந்த இரண்டு கிழமைகளாக ஆறு முப்பது மணியளவில் அவனுடைய வரவுக்குப் பழக்கப்பட்ட சமர்த்திக்கு அவன் தாமதம் மெல்லிய சலனத்தைக் கொடுக்க, தன்னை மறந்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் நடந்தாள்.

எப்போதும் இராணுவத்தில் பயிற்சி எடுத்தவன் போல டான் என்று ஒன்பதிற்கு அவளோடு படுக்கையைப் பகிர அழைத்துச் சென்றுவிடுபவன் நேரம் பத்துமணியாகியும் அவனைக் காணாமல் பெரிதும் தவித்துப்போனாள் சமர்த்தி.

எங்கே போனான்? ஏன் இத்தனை தாமதம். தாமதமாகும் என்று சொல்லக் கூடவா அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை? பிறகு எதற்காக வீட்டில் தொலைபேசி இருக்கிறது. சும்மா அழகுக்காகவா?

சினம் துளித்தாலும் ஒரு பக்கம் அச்சமும் தோன்றத் தொடங்கியது. பதறியவளாகத் தன் அறைக்குச் சென்றவள் அவளுடைய கைப்பேசியை எடுத்தவளுக்கு அவனை எப்படி அழைப்பது என்று கூடத் தெரியவில்லை. அவனுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் கூட அவளுக்குத் தெரியாதே.

ஏனோ சமர்த்திக்குத் தன்னை நினைத்தே அழுகை வந்தது. கட்டிய கணவனின் தொலைபேசி இலக்கம் கூடத் தெரியாது இருக்கிறாள் என்றால் அதை விடக் கேவலம் என்ன இருந்துவிடப் போகிறது.

கண்கள் கலங்க அவனுடைய அலுவலகத்திற்குத் தொலைபேசி எடுத்தாள். அது காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரைக்கும்தான் அலுவலகம் திறந்திருக்கும் என்று குரல் செய்தி வந்தது.

ஆத்திரத்துடன் கைப்பேசியைத் தூக்கிப் போட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அண்ணன் அண்ணிக்கு அழைக்கவும் பயமாக இருந்தது. அவர்கள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு என்ன பதிலைக் கூறுவது? இவன் சார்ந்த நண்பர்கள் யார் என்று கூடத் தெரிய வில்லையே. ஏனோ அந்த உலகத்தை விட்டுத் தொலை தூரத்திற்குப் போய்விட்டவள் போல அன்னியப்பட்டு நின்றாள் சமர்த்தி.

மனமோ, வரும் வழியில் ஏதாவது விபத்தாகி இருக்குமோ? அதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்க இடம் கொடுக்காமல், தன் வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் கீழே வர, இப்போது வாசல் கதவு திறந்தது.

நிமிர்ந்து பார்க்க உத்தியுக்தன்தான். காலையில் அணிந்திருந்த கோர்ட்டைக் கழற்றி இடது தோளில் போட்டவாறு ஒற்றைக் கரத்தால் அதைப் பற்றிக் கொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பெரும் நிம்மதி ஒரு பக்கம் எழுந்தாலும், கோபமும் மறுபக்கம் கனன்று கொண்டு வந்தது.

நறுக்குத் தொனித்தாற்போல நான்கு வார்த்தை கேட்க வாயைத் திறந்தவள் அவன் நடையிலிருந்த தள்ளாட்டத்தைக் கண்டு சொல்ல வந்ததை மறந்து போய் அவனை வெறித்துப் பார்த்தாள்.

குடித்துவிட்டு வந்திருக்கிறானா என்ன? கடும் ஆத்திரத்துடன் அவனை முறைக்க, அவனோ, இவளை நெருங்கி, அவள் தோள்களில் கரங்களைப் போட்டுத் தன்னோடு நெரித்து,

“கம்…” என்றவாறு அவளை இழுத்துக்கொண்டு மாடி நோக்கிச் சென்றான். இவளோ, வேகமாக அவனை உதறிவிட்டு,

“நீங்கள் குடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள்” என்று சீற இவனோ தன் புருவங்களைச் சுருக்கி இவளைப் பார்த்தான்.

“சோ…” என்று அலட்சியமாகக் கேட்டவன், இடது கரத்தால் வருமாறு அழைத்தவாறு,

“கம்… ஐ நீட் யு டெரிபிளி…” என்றவாறு மேலும் அவளைத் தன் கைவளைவுக்குள் இழுக்க, இவளுக்கோ வயிற்றில் இருந்த பெருங்குடல் சிறுகுடல் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணையத் தொடங்கின. பற்களைக் கடித்து, அந்த நாற்றத்தில் இருந்து தன் மனத்தை வேறு திசைக்கு எடுத்துச் சென்றவாறு,

“நோ… என்னை விடுங்கள்… நீங்கள் இப்போது உங்கள் நிலையில் இல்லை…” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

“வட்… நான் என் நிலையில் இல்லையா… யார் சொன்னது?” என்று எரிச்சலுடன் கேட்டவாறு அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்ள, உள்ளே கிலி தொற்றிக் கொண்டது.

எங்கே அவன் தன்னை விழுத்திவிடுவானோ என்று அஞ்சியவளாகத் தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று தோற்றுப் போக, அந்தப் போதையிலும் அவள் கீழே விழுந்து விடாதவாறு தன்னோடு இறுக்கமாப் பற்றியவாறு நிதானமாக படிகளில் ஏறி, அறையை அடைந்தான்.

அறைக்குள் நுழைந்ததும் அவளைத் தூக்கிக் கட்டிலில் போடச் சமர்த்திக்கோ பற்றிக் கொண்டு வந்தது. கூடவே அழுகையில் கண்ணீர் வேறு வந்தது.

வேகமாக அவனிடமிருந்து விடுபட்டு விலக முயன்றவளை அடக்கியவனாக அவள் மீது விழுந்து அவளை அசையவிடாது தடுக்க, திணறிப் போள் சமர்த்தி. அவளையும் மீறிக் குமட்டியது.

“விடுங்கள் என்னை…” என்று திமிற, இவனோ மெல்லியதாகச் சிரித்தவாறு,

“உன்னை விடுவதற்கா மணம் முடித்தேன்…” என்றவன் மறு கணம் அவளைப் பேசவிடாது அரவணைத்தான்.

இறுதியாக எப்போதும்போல அவன் பலத்திற்கு முன்னால், அவன் கரங்கள் செய்த வித்தைகளுக்கு முன்னால் தோற்றவளாக, தன்னை மறந்து அவன் இழுப்புக்கு ஏற்ப இசைந்து கொடுத்தவளை ஆக்கிரமித்துச் சுனாமிப் பேரலை போல அவளை முழுவதுமாக அடித்துச் சென்றவன் இறுதியில் அவளுக்குப் பக்கத்தில் விழுந்து விழிகளை மூடிய போது சமர்த்திக்கு அவளையும் மீறி கண்களில் பொலபொலவென்று கண்ணீர் பெருகத் தொடங்கியது.

வெறும் உடல் சுகத்திற்காக நேந்துவிடப்பட்டவள் போல அல்லவா நடந்து கொள்கிறான். இதை விட அவமானம் வேறு என்ன இருந்துவிடப் போகிறது. இங்கே அவள் மறுப்புக்கோ, விருப்புக்கோ எந்தப் பலனும் கிடையாதா என்ன? தாங்க முடியாத மன வலியில் ஒரு மூச்சு அழுதவள் இறுதியில் எப்போது உறங்கினோம் என்பது கூடப் புரியாமல் தன் விழிகளை மூடிக்கொண்டாள் சமர்த்தி.

அதிகாலை நான்கு மணியளவில் மெதுவாக அசைந்த சமர்த்திக்கு உடலைச் சற்றும் அசைக்க முடியவில்லை.

இது என்னது… புதிதாக உடலை அசைக்க முடியாத உணர்வு? குழப்பத்துடன் திரும்பிப் படுக்க முயன்றவளுக்கும் அது முடியவில்லை. வெற்றிடையைச் சுற்றி கதகதப்பாய் ஏதோ ஒன்று சுற்றியிருப்பதும் உடல் முழுவதும் இனம் தெரியா இன்பத்தைக் கொடுக்கும் வெம்மை பரவி இருப்பதையும் உணர்ந்தவளுக்கு அந்தப் புதுவித சுகத்தை உணர்ந்தவாறு, தன் கரங்களால் இடையைச் சுற்றியிருப்பது என்ன என்று அறிய முயன்றாள்.

முடியடர்ந்த கரங்கள். எதுவோ புரிய அதிர்ச்சியுடன் சடார் என்று தலையைத் திரும்பிப் பார்த்தாள்.

உத்தியுக்தன்தான் அவளைத் தன்னோடு இறுக அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான். நம்ப முடியாமல் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தான். நிஜம் ஒரு போதும் மாறப்போவதில்லையே.

திருமணம் முடித்த இந்த இரண்டு கிழமைகளில் முதன் முறையாக ஒரே கட்டிலில் அவளோடு உறங்கிக் கொண்டிருக்கிறான் அவன். அவள் கனவு காண்கிறாளா என்ன? நிதர்சனம் புரிபடச் சற்று நேரம் எடுத்தது அவளுக்கு.

எதுவோ உந்த அவன் உறக்கம் கலையாமலே அவன் பக்கம் திரும்பிப் படுக்க முயன்ற நேரம், தன் கையணைப்பிலிருக்கும் பொருள் நழுவி செல்வதாக நினைத்தானோ, அவள் இடையை இழுத்துத் தன்னோடு இறுக்கியவாறு

“டோன்ட் கோ பேபி…” என்று முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் உறங்கிப்போக, அந்த முகத்தைக் கண்ட சமர்த்திக்கு ஏனோ நெஞ்சில் இரத்தம் கசிந்தது.

முன்னிரவு பிறந்த ஆத்திரம் அத்தனையும் மாயமாக மறைந்துபோக, அவனிடம் தோற்றுப் போன அவமானம் காணாமல் கலைந்து போக, உறக்கத்தில் தளர்ந்திருந்த அந்த ஆண்மகனின் முகத்தையே விழிகள் கலங்கப் பார்த்தாள்.

குழந்தை முதல் தாய்ப்பாசம் அறியாது வளர்ந்தவன் அல்லவா அவன். அதை உணர்ந்ததும் இவளுடைய தாய்ப்பாசம் மெல்லியதாய் விழித்துக்கொள்ளத் தன்னை நகரவிடாது அணைத்துக் கொண்ட அந்தப் பெரிய குழந்தையின் பரிதவிப்பில் முழுதாகக் கரைந்து போனவளாய் இமைக்காமல் அவனைப் பார்த்தாள்.

எப்போதும் இறுக்கத்துடனிருக்கும் அவனுடைய அந்தக் கம்பீர முகம் முழுவதுமாகத் தளர்ந்திருந்தது. தலை முடி கூடச் சற்றுத் தளர்ந்து நெற்றியில் பரவியிருக்கத் தன்னை மறந்து இடக்கரத்தைத் தூக்கி நெற்றியில் பரவியிருந்த அந்தத் தடித்த முடிகளைச் சற்று ஒதுக்கி விட்டாள்.

அப்போது வலதுபுறத்தில் அன்று அவள் கொடுத்த வடு அப்படியே நிலையாகத் தரித்து இருந்ததைக் கண்டு பட்டும் படாமலும் அந்தக் காயத்தைத் தன் பெருவிரலால் வருடிக்கொடுத்தவள், தன்னையும் மீறி அவனை நோக்கிச் சென்று அந்தக் காயத்தில் தன் மென் உதடுகளைப் பதித்து,

“சாரி உதி…” என்று முணுமுணுத்தவாறு விலக, அந்த ஆண் மகனின் உதடுகளில் தெளிவாய் மெல்லிய இளம் புன்னகை ஒன்று மலர்ந்து பின் காணாமல் சென்றது.

அதைக் கண்ட சமர்த்தியின் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. கைக்குழந்தை ஒன்று அன்னையின் தொடுகையை உணர்ந்ததும் நித்திரையில் கூட ஒரு சிரிப்புச் சிரிக்குமே. அதையும் விஞ்சியிருந்தது பெரியவனின் சிரிப்பு.

இதேபோல எப்போதும் சிரித்திருக்கமாட்டானோ என்கிற ஏக்கம் பிறந்தது சமர்த்திக்கு. அந்தப் புன்னகையைச் சுத்தமாகத் துடைத்தெடுத்தவளே இவள் அல்லவா. ஏனோ இவளுடைய கண்களில் கண்ணீர் முட்ட, பெருவிரலால் அவனுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,

“உதி.. உங்கள் வலிகள் அனைத்தையும் எப்படிப் போக்குவேன்…? எப்போதும் கிடைக்காத அன்பை உங்களுக்கு எப்படிக் கொடுக்கப் போகிறேன்?” என்று மெல்லிய கமறிய குரலில் கேட்டவள் தன்னையும் மறந்து அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்து ஆழ மூச்செடுத்து அந்த ஆண்மகனின் வாசனையை நுகர்ந்து அவனுக்குள் சுருண்டு போக, அது அவனுடைய உறக்கத்தைக் கலைத்ததோ,

“ஹே ஜூ… என்ன அவசரம்… இன்னும் நேரம் இருக்கிறது… தூங்கு…” என்று ஆங்கிலத்தில் பிதற்றியவாறு அவளைப் படுக்கையில் தள்ளி விழிகளை விரிக்காமலே, அவள் மீது விழுந்து, கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து ஆழ மூச்செடுத்து,

“யு ஸ்மெல் குட் பேபி…” என்றான் கிறக்கத்துடன். கூடவே கழுத்தில் உதடுகளைப் பொருத்தச் சமர்த்தியின் உடல் விறைத்துப் போனது. அவனுடைய ஜூ என்கிற அழைப்பில், அதுவரை இருந்த மாய வலை சிதைந்து போகத் துடித்துப் போனாள்.

ஜூலியட்… ஆழ் தூக்கத்தில் கூட அவள் நினைப்புதானா… அப்படியானால் இவனுக்கு நான் ஒன்றுமேயில்லையா… அன்று சொன்னான் தான், அவளுடைய இடத்தை நிரப்பத்தான் உன்னை மணக்கிறேன் என்று. அதை நேரடியாக அனுபவிக்கும் போது இவளால் தாளவே முடியவில்லை.

கூடவே அவனுடைய கரங்கள் அவள் மேனியில் மெல்ல மெல்ல நகரத் தொடங்க, ஜூலியட்டாக நினைத்துக்கொண்டுதான் தன்னை அணைக்கிறான் என்று புரிந்தபோது, யாரோ அமிலத்தை உடலில் ஊற்றிய உணர்வு இவளுக்குள். ஆத்திரத்துடன் மேனியில் படர்ந்த கரங்களைத் தடுத்தவாறு,

“உதிதன்… இது நான்… சமர்த்தி…” என்றாள் தமிழில் தன் பற்களைக் கடித்தவாறு. அவனோ தலையைத் தூக்கி அவளுடைய மார்பில் பதித்து,

“ஜூ… நல்ல முன்னேற்றம்தான்… நீ தமிழ் கூடப் பேசுவாயா… ஆனால் எனக்குத்தான் புரியாதே” என்றதும், என்ன செய்வது என்று தெரியாத திண்டாட்டத்துடன், அவனிடமிருந்து திமிறியவளாக,

“உதிதன்… எழுந்துகொள்ளுங்கள்… இது அந்த ஜ்ஜ்ஜ் சூ.. சீ… ஜு இல்லை… இது நான்… சமர்த்தி…” என்று அவன் தலையைத் தன் மார்பிலிருந்து விலக்க முயன்றவாறு சீற, அவள் தள்ளிய வேகத்தில் அவளுடைய வயிற்றுப் புறத்திற்குத் தள்ளப்பட்டவன், உறக்கம் கலையப்பட்டவனாக சடார் என்று விழிகளைத் திறந்தான். முதலில் அவனுடைய விழிகள் தரிசித்த இடம் இரண்டு மெட்டிகள் அணிந்த அழகிய மென் பாதங்களைத்தான்.

ஜூலியட் எப்போது மெட்டி அணிந்தாள்… தவிர அவளுடைய கால் பாதங்கள் வெளுறிப்போய் எலும்புகள் துருத்தியவாறு சற்று நீளமாக இருக்குமே. இப்படிச் சதைப்பற்றுடன், சிவந்து குண்டு குண்டாக இருக்காதே. அது எப்படி…?” இன்னும் தூக்கம் கலையாதவனாகச் சற்று அசைந்து அந்தக் குண்டுப் பாதங்களைக் கரங்களால் பற்றிப்பார்த்தான். குழந்தைகளின் பாதம் போல மிக மென்மையாக இருந்தன அந்தச் சிறிய பாதங்கள். குழப்பத்துடன் சுட்டுவிரலால் அவளுடைய மெட்டியைத் தொட்டுப் பார்த்தான். கால் விரல்கள் சுருண்ட.

அதைக் கண்டதும் உள்ளத்தில் எதுவோ சிலிர்த்தது. விழிகளை மூடி மூடித் திறந்தவன், தலையைத் தூக்காமலே திருப்பிப் பார்த்தான்.

செழித்த உடல்… தெரிந்ததன்றி முகம் தெரியவில்லை.

சமர்த்தி இன்றைய காலத்துப் பெண்களோடு ஒப்பிடுகையில் சற்றுச் செழுமை கூடியவள்தான். அங்கங்கள் இதற்கென்றே செதுக்கியது போல அத்தனை குளுகுளு என்று இருக்கும். ஏற வேண்டிய இடங்களில் ஏறி, இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, குறுக வேண்டிய இடத்தில் குறுகி என்று கோவில் சிற்பம்போல அப்படி இருப்பாள். மாடலிங்கிற்காகச் சிரமப்பட்டுப் பட்டினி போட்டு மெலியச் செய்த உடம்புக்கும், இயற்கையாய் உணவில் ஆர்வம் கொண்டு ரசித்து ருசிக்கும் சாதாரணப் பெண்ணின் உடம்புக்கும் வித்தியாசம் உண்டுதானே. அதுவும் புஷ்பாவின் பாசமான வளர்ப்பில் அவள் எப்படித் தான் மெல்லியதாகத் தெரிவாள்?

இவனோ நம்பாமல் தன் முகத்தைச் சற்றுத் தூக்கிப் பார்க்க, இப்போது அவன் விழிகளில் தட்டுப்பட்டது சுருண்ட குழலும் வில்போன்ற அடர்ந்த புருவங்களும்தான். மேலும் சற்றுத் தலையைத் தூக்க, கூரிய நாசியும் அதில் சிறிதாய் ஒரு மூக்குத்தியும், சிவந்த, செழித்த இரு கொவ்வை உதடுகளும் என்று மேலும் இவனைக் கிறங்கடிக்க, அப்போதுதான் ஓரளவு சுயத்திற்கு வந்தான் உத்தியுக்தன். அது ஜூலியட் அல்ல சமர்த்தி என்பது தெரிந்ததும்,

“ஷிட்… நீயா…” என்றான் எரிச்சலுடன். கூடவே முன்னைய போதை சற்றுத் தூக்கலாக இருந்தது போலும் இன்னும் புத்தி சரியான செயல் பாட்டிற்கு வரவில்லை. மெல்லிய தள்ளாட்டத்துடன் படுக்கையில் எழுந்தமர்ந்தவன், இரு கரங்களாலும் தலையைப் பற்றியவாறு அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தான்.

சற்று முன் இவளைப் போதையில் ரசித்ததை இவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்போதும் அந்தக் குண்டு உடலின் தொடுகை தேவைபோலத் தோன்ற. சடார் என்று எழுந்தவன் தன் அறைக்குள் சென்று கதவை அடித்து மூடிவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றான்.

கடந்த இரண்டு கிழமைகளாக அவனை அலைக்கழிக்கும் அவள் நினைவிலிருந்து எப்படித் தப்பிப்பதென்று தெரியாமல்தான் அன்று சற்றுத் தூக்கலாகக் குடித்துவிட்டு வந்தான். ஆனால் அதுவே அவனுக்கு வினையாகிப்போனது. அந்தப் போதையிலும் அவளைக் கண்டதும் மொத்தமாய்த் தொலைந்து போனானே. உள்ளேயிருந்து ஏதோ ஒன்று அவளை விட்டு விலகக் கூடாது என்று சண்டித்தனம் செய்கிறதே. அவனால் எப்படி அவளோடு ஒரே படுக்கையில் தூங்க முடிந்தது. அதுவும் சலனமற்ற ஆழ் நிலைத் தூக்கம். இதுவரை இவன் இப்படி உறங்கியது கிடையாது.

ஏன் ஜூலியட்டைக் கூட இத்தகைய தேடலுடன், ஒரு இரவைக் கூட அணைத்தவாறு உறங்கியது கிடையாது. இருவரின் பசியும் தீர்ந்த பின், ஒரு முத்தத்தோடு தன்னறை நோக்கிச் சென்று விடுவான். மூன்று வருடங்களாக அவளோடு ஒன்றாக ஒரே வீட்டிலிருந்திருக்கிறான். ஆனால் ஒரு இரவு கூட முழுதாக ஜூலியட்டை அணைத்தவாறு ஒரே படுக்கையில் உறங்கியதில்லை. இன்பத்தில் அவளோடு பங்கு போடத் தெரிந்தவனால், இரவு உறக்கத்தை மட்டும் பங்குபோடத் தெரியவில்லை.

அதற்குப் பின்னால் அவன் வளர்ந்த முறை தான் காரணம். கைக்குழந்தையாக இருந்த போதே தனியாகப் படுத்துப் பழகியவனுக்கு இன்னொருத்தரின் அருகே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தெரியாது. அவ்வியக்தனோடு கூட அவன் உறங்கியது இல்லை. அவ்வியக்தன் குழந்தையாக இருந்தபோது ஜான்சிவின் அருகே சென்று படுத்திருக்கிறான். ஆனால் இவனால் அது முடிந்ததில்லை. ஏனோ பிடிக்கவில்லை. அவ்வாறு படுத்தல் ஒவ்வாத செயல் போலத் தோன்றும்.

ஆனால் வாழ்வில் முதன்முறையாகத் தன்னிலை கெட்டுச் சமர்த்தியோடு படுக்கையைப் பகிர்ந்து உறங்கியிருக்கிறான். அதுவும் நிம்மதியாக. இது எப்படிச் சாத்தியம். ஒரு வேளை மது அருந்தியதால் நிலை கெட்டு வந்து படுத்தானோ? இல்லையே ஜூலியட்டும் அவனுமாய் முழுப் போதையில் இருந்தபோது கூட அவளருகே அவன் உறங்கியது கிடையாது. இது வேறு ஏதோ ஒன்று. என்ன அது? இப்போது கூட, அவளருகே சென்று அவள் உடல் வெம்மையை உள்வாங்கியவாறு உறங்கலாமா என்று உள் மனது இவனிடம் வேண்டுகிறதே.. அந்த உடல் கொடுக்கும் சுகந்தத்தை நுகர்ந்தவாறு மனம் அமைதி கொள்ளவேண்டும் என்று புத்தி நின்று கெஞ்சுகிறதே. அதற்குக் காரணம் என்ன? கடவுளே இவனுக்கு என்னவாகிவிட்டது? எதற்கு இப்படிப் பொருத்தமில்லாதவற்றை எல்லாம் சிந்திக்கிறான். ஒரு வேளை போதை இவனைக் குழம்பச் செய்கிறதோ? தெரியவில்லை. ஆனால் மெல்ல மெல்ல உணர்வால், உள்ளத்தால் சமர்த்தியை நெருங்கத் தொடங்குவது உத்தியுக்தனுக்குப் புரியத் தொடங்கியது.

எரிச்சலுடன் நிமிர்ந்தவனின் உருவம் அங்கு இருந்த கண்ணாடியில் விழக் கூடவே மார்பில் சிரித்துக்கொண்டிருந்த ஜூலியட்டின் விம்பமும் அங்கே தெரிந்தது. தன்னை மறந்து வலது கரத்து விரல்களால் அந்த விம்பத்தை வருடிக் கொடுக்க இவனுடைய முகம் சற்று இறுகிக் கறுத்துப்போனது. அந்த உருவத்தைப் பார்க்கும்போது கசங்கும் சமர்த்தியின் முகமும் நினைவுக்கு வர ஒரு பக்கம் தவிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆத்திரமாகவும் இருந்தது.

இதை எப்போதோ எடுத்தெறிந்திருப்பான்தான். ஆனால் அதைச் செய்யப்போவதில்லை. இந்த விம்பத்தைக் காணக் காண அவள் செய்த தவறு அவளுக்கு உறுத்தும். அவனால்தான் நினைத்தது போல அவளைப் பழிவாங்க முடியவில்லை. குறைந்தது இதாவது செய்துவிட்டுப் போகட்டும்… ஆத்திரத்துடன் குளியலறை சென்றவன், தண்ணீரைத் திறந்து அவள் மேல் தோன்றிய அந்த உணர்வைக் கழுவும்பொருட்டு முகத்தைக் கழுவத் தொடங்கினான்.

அதே நேரம் படுக்கையில் எழுந்து சென்ற சமர்த்திக்கு இதயத்தின் வேகம் பலமடங்கு அதிகமாகத் தொடங்கியது. ஒருபக்கம் அவனை எண்ணி ஆத்திரம் எழுந்தாலும், மறுபக்கம் பெரும் வலியும் எழவே செய்தது.

முதன் முறையாக அவனுடைய அணைப்பில் உறங்கியவளுக்கு இனி எப்போது அத்தகைய வாய்ப்புக் கிடைக்கும் என்கிற ஏக்கம் வேறு தோன்றியது. அந்த ஜூலியட் நிச்சயமாகப் பெரும் அதிர்ஷ்டசாலிதான். இல்லையென்றால் இத்தனை உண்மையான காதல் அவளுக்குக் கிடைத்து இருக்காதே. ஆனால் அந்த ஜூலியட்தான் அதைத் தவறவிட்டுவிட்டாள்.

இவளால்தான் அவனுடைய வாழ்க்கை கேள்விக்குறியானது. சரி, அவனுடைய வலியைக் களைந்து அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கலாம் என்றாலும் அதற்கும் அவன் வாய்ப்புக் கொடுக்க வேண்டுமே. இவளைக் கண்டாலே இறுகிப்போகும் அவனை எப்படி அணுகுவது. அவனை அணுகாமல் அவன் அன்பை எப்படிப் பெறுவது. அவன் அன்பைப் பெறாது வாழ்க்கையை எப்படி ஓட்டுவது… இது பைத்தியம் தெளிந்தால்தான் திருமணம், திருமணம் நடந்தால்தான் பைத்தியம் தெளியும் என்கிற கதைபோல அல்லவா இருக்கிறது.

என்ன செய்யப்போகிறாள். எப்படி அவன் அன்பைச் சம்பாதிக்கப்போகிறாள். சம்பாதிப்பதற்கும் அவன் வழிவகுப்பானா? புரியாத குழப்பத்தோடு விழிகளை மூடாது அப்படியே கிடந்தாள் சமர்த்தி.

What’s your Reaction?
+1
31
+1
10
+1
3
+1
1
+1
2
+1
1
Vijayamalar

View Comments

  • நம்ம சமர்த்திய பார்த்தாலும் பாவமா தான் இருக்கு இருந்தாலும் அவ பண்ணதும் சாதாரண விஷயம் இல்லை

    • என்னத்த பாவம். தப்பு செஞ்சப்பா இதை யோசிச்சு இருக்கணும்ல

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

16 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago