Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-15

15

சமர்த்தித் துயில் விட்டு விழிகளைத் திறக்க எட்டுமணியையும் கடந்துவிட்டிருந்தது. மூடிய இமைகளைச் சிரமப்பட்டுத் திறந்தவளுக்கு முன் தினம் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்தமர்ந்தாள்.

எழுந்த போதே அந்த அறை கொடுத்த மயான அமைதியில் அவன் அங்கில்லை என்று புரிந்தது.

பெரும் நிம்மதி எழ, வலித்த உடலைச் சிரமப்பட்டு இழுத்துச் சென்று குளித்தபோதுதான் நேற்றைய இரவின் வேகம் தேகத்தில் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது.

அதைக் கண்டதும் கண்களில் முணுக்கென்ற கண்ணீர். ஒரு பெண் ஆவலாக எதிர்பார்க்கும் காலங்களில், திருமண வாழ்க்கையும் ஒன்று. அதுவும் காதல்கொண்டு புணரும் காமத்தின் சுகத்தை அனுபவிக்கத்தானே தன் கன்னிமையைக் காத்து வருகிறாள். ஆனால் அதற்குப் பயனற்றுப் போகும் போது அது எத்தனை பெரிய ஏமாற்றத்தையும் வலியையும் அது தோற்றுவிக்கும்.

மனம் கசங்கினாலும் கூட, ஒரு கட்டத்தில் செம்புலப் பெயல்நீர போல வெட்கம் கெட்டு அவனுடைய அணைப்பில் குழைந்துபோனதும் நினைவுக்கு வர, இவளுக்குத் தன்மீதே அருவெறுப்புப் பிறந்தது. ஒரு ஆடவன் விருப்பமின்றித் தொட்டால் உடல் குழைந்துபோகவேண்டுமா. தன்னிலை கெட வேண்டுமா. இது பெண்மைக்கு எத்தனை பெரிய அவமானம். அதுவும் ஏற்கெனவே ஒருத்தியைக் காதலித்து அவளோடு வாழ்ந்தவனின் தொடுகையை ஏற்றுக்கொண்ட இந்த உடல்தான் எத்தனை வெட்கம் கெட்டது. சீ… நினைக்க நினைக்கத் தாளவில்லை சமர்த்திக்கு.

தன் மீதே ஆத்திரம் அந்த நினைவலையைக் கலைக்கும் முகமாகத் தன்னைத் தேய்த்துக் குளித்தபோதும், அவள் முகம் நோக்கி நெருங்கிய அந்த ஆண்மகனின் சிரிப்பற்ற முகம்தான் மனக்கண்ணில் வந்து நின்றது. அவன் கரங்கள் கொடுத்த மாயாஜால வித்தைகளை என்னதான் முயன்றும் அவளால் மறக்கவே முடியவில்லை. அதுவேறு பெரும் கழிவிரக்கத்தைக் கொடுக்க, தன்னைத் திட்டியவாறே குளித்துத் தயாராகிக் கீழே வந்தபோது, ஜான்சி நீளிருக்கையில் அமர்ந்தவாறு தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும் அதுவரையிருந்த இறுக்கம் சற்றுக் குறைய, மெதுவாக அவரை நெருங்கினாள் சமர்த்தி. அரவம் கேட்டு நிமிர்ந்த ஜான்சி, சமர்த்தியைக் கண்டதும் முகம் மலர,

“வாமா… வா… இப்போதுதான் எழுந்தாயா? இத்தனை நேரம் உத்தி என் கூடத்தான் பேசிக் கொண்டிருந்தான். ஏதோ அவசர வேலை என்று கிளம்பினான்.” என்றவாறு பின்னால் நின்றிருந்த வேலையாளைப் பார்த்து,

“லீயிடம் ஒரு தேநீர் சொல்கிறாயா?” என்றார் கனிவாக.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கொதிக்கக் கொதிக்கத் தேநீர் கொண்டு வந்தாள் ஒரு சீனத்துப் பெண். தேநீர் மேசையில் குவளையை வைத்துவிட்டுக் குனிந்து வணக்கம் சொன்ன லீ,

“எஞ்சாய் யுவர் தீ…” என்றாள் ஆங்கிலத்தை நசுக்கிப் பிழிந்தவாறு.

“தங்க் யு லீ…” என்றவாறு குனிந்து தேநீர்க் குவளையைக் கரத்தில் எடுத்தபோது,

“சமர்த்தி, இவர்கள் லீ. இவர்கள்தான் இந்த வீட்டைப் பராமரிக்கிறார்கள். காலை வந்து மாலை சென்று விடுவார்கள்… இவருக்குக் கீழ் இன்னும் இருவர் வேலை செய்கிறார்கள்…” என்று அறிமுகப் படுத்த, மஞ்சள் நிறப் பற்களைக் காட்டி அழகாக சிரித்தாள் லீ.

“என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள்…” என்ற லீ, மீண்டும் குனிந்து வணங்கி விட்டுப் உள்ளே செல்ல, இப்போது சமர்த்தியைக் கனிவுடன் ஏறிட்டார் ஜான்சி.

“ஏன்மா நிற்கிறாய்… உட்கார் கண்ணு…”

ஏனோ அந்த அன்பில் கண்கள் கலங்கிப் போனது சமர்த்திக்கு. மறுக்காமல் அவருக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்ததும் கொஞ்ச நேரம் அவளையே இமைக்காமல் பார்த்தார் ஜான்சி.

“உத்தியை உனக்கு எப்படித் தெரியும்? எங்கே சந்தித்தாய்?” என்று அறியும் ஆவலில் கேட்டார்.

முதலில் அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் சற்றுத் திணறினாள் சமர்த்தி.

ஏற்கெனவே சற்று புத்திக் கூர்மையான ஜான்சிக்கு அவளுடைய தடுமாற்றம் ஏதோ ஒரு செய்தியைக் கூற, விழிகளோ அவள் மறைக்க முயன்று தோற்றுப்போன ஒரு சில கண்டல்களில் நிலைத்தன. சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர், என்ன நினைத்தாரோ,

“உத்தி நல்லவன் சமர்த்தி… மிக மிக நல்லவன்… சுலபத்தில் தவறு செய்யாதவன்…” என்றதும் இதையேன் தனக்குச் சொல்கிறார் என்று புரியாமல் ஏறிட்டாள் சமர்த்தி. ஜான்சிவோ, மேலும் புன்னகைத்து,

“என்னடா திடீர் என்று இப்படிச் சொல்கிறாளே… எதற்குச் சொல்கிறாள் என்று யோசிக்கிறாயா கண்ணு?” என்றவர், அவளுடைய கழுத்தை உற்றுப் பார்த்தார்.

அதை உணர்ந்தவளாகச் சங்கடத்துடன் நெளிந்தவள், பொற்றாலிக்கு மேலாகப் பதிந்திருந்த விரல் அடையாளங்களின் மீது தன் கரத்தை வைத்து மறைக்க முயல, இப்போது அவருடைய விழிகள் அவளுடைய மேல் கரத்தின் மீது அழுத்தமாகப் பதிந்தன.

“காதல் கொண்டு மணந்திருந்தால் இந்த விழிகளில் வெட்கம்தான் இருந்திருக்கவேண்டுமே தவிரப் பயம் இருந்திருக்காது… கூடவே கலங்கியும் இருந்திருக்காது…” என்றவர் மறைக்க முயன்று தோற்றுப்போன ஒன்றிரண்டு கண்டல்களைக் கண்டு, மனம் வருந்தியவராக,

“ரொம்பப் படுத்திவிட்டானா தங்கம்…” என்றார் மெல்லிய வருத்தத்துடன். இவளோ சங்கடத்தில் நெளிந்தவாறு,

“அது வந்து…” என்று தடுமாற, வருத்தப் புன்னகை ஒன்றைச் சிந்தியவர், என்ன நினைத்தாரோ சமர்த்தியை நேர்கோடாகப் பார்த்தார் ஜான்சி.

“என்னைப் பற்றி உத்தி ஏதாவது சொல்லி இருக்கிறானா தங்கம்?” என்று மென்மையாகக் கேட்க, சமர்த்தியோ பொய் சொல்லாது,

“இல்லை ஆண்டி…” என்றாள் சற்றுத் திணறலாய். அதைக் கேட்டுப் புன்னகைத்தவர்,

“பெற்ற தாய்க்குக் கொடுக்காத மரியாதையையும் அன்பையும் எனக்குக் கொடுக்கிறார்களே என்று நீ யோசித்திருப்பாய் தானே?” என்றவர் எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டார்.

“நான்.. வேறு யாருமில்லை தங்கம்.. அவர்களை வளர்த்த ஆயா…” என்று அவர் நிதானமாகக் கூற அதிர்ந்துபோனாள் சமர்த்தி.

வளர்த்த ஆயாவா. ஒரு ஆயாவுக்கு இத்தனை மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்களே ஏன்? அதுவும் பெற்ற அன்னைக்குக் கொடுக்காத மதிப்பும் மரியாதையும்! நம்ப முடியாமல் பார்க்க, அதை உணர்ந்து அழகாய் சிரித்தார் ஜான்சி.

“அதிர்ச்சியாக இருக்கிறதா கண்ணு..? ஆனால் அதுதான் உண்மை… வளர்த்த என்னையே தயாகப் போற்றும் குணம் இந்த உலகத்தில் யாருக்கு இருந்துவிடப் போகிறது சொல்?” என்றவர் பெருமூச்சுடன் பழைய நினைவில் நிலைத்துவிட்டு,

“ரதியும் உத்தியுடைய அப்பாவும் பரம்பரை பணக்காரர்கள்தான் கண்ணு. இருவரும் திருமணம் முடித்து அமரிக்கா சென்று வியாபாரத்தை மேலும் பெருக்கிய காலம். ரதிக்குக் குழந்தைகள் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் குழந்தை பெற்றால் இளமை பறிபோய்விடும் என்கிற பொருத்தமில்லாத பயம். ஆதித்தனுக்கும் செல்வத்தைப் பெருக்குவதிலிருந்த கவனம் தனக்கொரு சந்ததி வேண்டும் என்பதில் இருக்கவில்லை. தவிர குழந்தைகள் இருந்தால் தங்கள் சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கும் என்கிற ஒரு தப்பான எண்ணத்தில் ஐந்து வருடங்களாகக் குழந்தைகள் இல்லாமலேதான் இருந்தார்கள். ஆனால், விதி என்று ஒன்றிருக்கிறதே.” என்றவரின் விழிகளில் சோகம் அப்பிக் கொண்டது.

“அவர்களையும் மீறி உதியும் அவ்வியும் ஜனித்தார்கள். அது ரதிக்குப் பெரும் அதிர்ச்சி. முதலில் கர்ப்பத்தைக் கலைத்துவிடத்தான் முயன்றார்கள். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டு உழைக்கும் சொத்துக்களை அனுபவிக்கச் சந்ததிகள் வேண்டுமே.

அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு இருவரையும் பெற்றெடுத்துவிட்டாள் ரதி. பெற்ற குழந்தைகளுக்குப் பால் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எப்போதும் அழும் குழந்தைகளை ரதியாலும் நெருங்க முடியவில்லை. பெற்றதோடு தன் கடமை முடிந்ததென்று எண்ணிய ரதி, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவென்று என்னை இலங்கையில் இருந்து வருவித்தாள்.” என்ற ஜான்சி புன்னகையுடன் சற்று நேரம் பழைய நினைவிலிருந்தார். பின்,

“நான் ரதிக்கு சற்றுத் தூரத்து உறவு. ஆனால் ரதிக்கிருந்த வசதியில் ஒரு பங்கு கூட எங்களுக்குக் கிடையாது. எனக்குத் திருமணமான புதிதில் அங்கே நடந்த யுத்தத்தில் என் கணவர் குண்டு பட்டு இறந்துவிட்டார். அதன் பின் என் தாய் தந்தையோடுதான் இருந்தேன். எனக்குப் பின்னால் நான்கு தங்கைகள் வரிசையாக இருந்தார்களா அவர்களுக்கும் என் உதவி பெருமளவில் தேவைப் பட்டது. அப்போதுதான் ரதி என்னை இங்கே அழைத்தாள். குடும்பத்தைக் காக்க அமரிக்கா சென்றேன். சென்ற அன்றே உத்தியையும் அவ்வியையும் என் கரத்தில் கொடுத்துவிட்டாள் ரதி…” என்ற ஜான்சியின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி குடிகொண்டது. ஏதோ கனவில் பேசுவது போலப் பேசத் தொடங்கினார்.

“முதன் முதலாக உத்தியை என் கரங்களில் ஏந்தியபோது என் உள்ளத்தில் ஒரு வித பூரிப்பு. சொல்ல முடியாத இன்பம்… எனக்கும் குழந்தைகள் இல்லையா… இருவருமே என் உலகமாகிப் போனார்கள்.

என்னதான் அன்பை ஊட்டி வளர்த்தாலும் பெற்ற தாய் தந்தை அருகே இருப்பதுபோல வருமா சொல்… எடுக்க எடுக்கக் குறையாத பணமிருந்து தான் என்ன பயன்? அதை விடப் பெறுமதியான செல்வங்கள் வீட்டில் இருக்கின்றனவே. இதை ரதியும் புரிந்துகொள்ளவில்லை. ஆதியும் புரிந்து கொள்ளவில்லை.

என்னவோ தெரியவில்லை, ரதிக்குப் பணம் சேர்க்க இருந்த ஆர்வம், நண்பர்களோடு நேரம் செலவழித்தபோது இருந்த மகிழ்ச்சி குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கவில்லை… குழந்தைகளும் பெற்றவளின் அருகாமைக்காக மிகவும் ஏங்குவார்கள் கண்ணு. ஆனால் எந்த ஏக்கம் ரதியின் நெஞ்சைத் தொடவே இல்லை. ஏதோ அவர்களைத் திருப்திப் படுத்த பெயர் தெரியாத பொருட்களை வாங்கிக் குவித்தாளே தவிர, அவர்களுக்கு வேண்டிய அன்னையின் அரவணைப்பைக் கொடுக்கத் தவறி விட்டாள்…

“இந்த நிலையில் ஒரு விபத்தில் ஆதித்தனுடைய வாழ்க்கை சக்கர நாற்காலியோடுதான் என்றான பின், ரதியால் முன்னையதைப் போலக் கணவனோடு உல்லாசமாக இருக்க முடியவில்லை… அதைக் காரணம் காட்டி ஆதித்தனை விவாகரத்துச் செய்துவிட்டு, ஒரு வருடம் கழிய, அவளுடைய வியாபாரத்திற்குப் போட்டியாக இருந்த ஜேய் என்பவனைத் திருமணம் செய்தாள்…” என்றதும் சமர்த்திக்கு நம்ப முடியாத அதிர்ச்சி.

“எ… என்ன ஆண்டி சொல்கிறீர்கள்.. அப்படி என்றால் அது இவர்களின் சொந்தத் தந்தை இல்லையா..” என்று முணுமுணுத்தவளுக்கு உத்தியுக்தனின் ஒதுக்கத்திற்கான காரணம் மெல்ல மெல்லப் புரியலாயிற்று.

தாரை வார்த்துக் கொடுக்கும்போது கூடத் தாயையும் அவர் கணவரையும் நெருங்க விட வில்லை. காலில் விழும்போது கூடக் கைகுலுக்கி விட்டு விலகினான் தவிர, ஆழமான அன்போடு அவர்களைப் பார்க்கக் கூட இல்லை. இத்தனைக்கும் மேலாக இது வரை பெற்றவர்களைப் பற்றிய செய்தியை வெளியே கூறாது மறைத்து வைத்ததற்குப் பின்னால் உள்ள நிஜம் புரிந்த போது ஏனோ நெஞ்சம் கசங்கிப்போயிற்று இவளுக்கு.

“அத்தையின் மறுமணத்தில் இவர்களுக்கு உடன்பாடு இல்லையா ஆன்டி…” என்று தயக்கமாகக் கேட்கச் சற்று நேரம் முகம் வாடி நின்ற ஜான்சி மறுப்பாகத் தலையை ஆட்டி,

“அப்போது அவர்களுக்குப் பதினான்கு வயது இருக்கும். புதிதாக இவர்தான் என் கணவர் என்று அறிமுகப்படுத்தியபோது இவர்களாலும் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஜெயனாலும் இவர்களோடு ஒன்ற முடியவில்லை… பெற்ற தந்தையாலேயே பாசம் காட்ட முடியவில்லை… வந்தவனா அன்பைக் கொட்டப்போகிறான்? இதனால் முற்றாகத் தாயின் மீதிருந்த பற்று அறுந்து போயிற்றுக் குழந்தைகளுக்கு. இவர்களின் பதினாறாவது வயதில் ஆதித்தனும் இறந்த போனார். அதன் பின் நான்தான் அவர்களின் உலகமானேன். எதுவாக இருந்தாலும் என்னிடம்தான் கூறுவார்கள் கண்ணு. நான் விடுப்பில் ஊருக்குப் போனால் மிகவும் உடைந்து போவார்கள். அதற்காகவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை செல்லும் நான் ஒரு வருடத்திற்கு ஒரு முறை என்று என் சகோதரர்களைப் பார்க்கச் செல்வேன்;…” என்ற ஜான்சி, எதையோ நினைத்து முகம் மலர்ந்தவராய்,

“அதன் பிறகு குழந்தைகள் என்னையே தங்கள் தாயாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் ரதியை மதிக்காமல் எதுவாக இருந்தாலும் என்னிடமே வந்து பேசுவார்கள். நாடு விட்டு நாடு சென்று ஒரு சில மாதங்களின் பின்பு வீடு வரும் அன்னையை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. அது ரதிக்கு மெல்லிய பொறாமையை ஏற்படுத்தியது போலும். அவர்களின் பதினெட்டாவது வயதில் இனி என் உதவி வேண்டியதில்லை என்று நிரந்தரமாக என்னை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். பாவம் நானில்லாமல் உத்தியும் அவ்வியும் மிகவும் துடித்துப்போனார்கள். ஒவ்வொரு நாளும் என்னோடு தொலைப்பேசியில் பேசாமல் அவர்கள் தூங்கியதே கிடையாது தெரியுமா? அவர்களின் இருபத்தோராவது வயதில் ஆதித்தனுடைய சொத்து அவர்களுக்குக் கிடைக்க, அதை வைத்துச் சொந்தமாய்த் தொழில் செய்யத் தொடங்கிய பின்பு, என்னை ராணி போல வைத்திருப்பதற்கு வேண்டிய அத்தனை ஆவனவும் செய்தார்கள். என்னை மட்டுமல்ல, என் சகோதரர்களுக்கு கூட வியாபாரம் அமைத்துக் கொடுத்தார்கள். நானும் நிம்மதியாக என் வாழ்க்கையைக் கர்த்தருக்காக அர்ப்பணித்து விட்டேன் என்ற ஜான்சி, எதையோ நினைத்துப் பெருமூச்சொன்றை விட்டார்.

“பெற்றால் மட்டும் தாயாவதில்லையே கண்ணு. ரதி பெற்றது மட்டும்தான்… அவர்கள் எப்படி வளர்ந்தார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது. அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்.. அதை எப்படிச் சமன் செய்வது.. இதையெல்லாம் ஒரு தாயால் மட்டும்தானே யோசிக்கமுடியும். பாவம் என் உத்திக்கும் அவ்விக்கும் அந்தப் பாக்கியமே கிடைக்கவில்லை…

அதனால்தான் தங்களுடைய சிக்கல் நிறைந்த வாழ்க்கை பிறருக்கு மென்ற வாய்க்கு அவலாகிவிடக் கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக அவ்வியும் உத்தியும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிடாமல் வைத்திருந்தார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள். பாவம் என் குழந்தைகளுக்கு அத்தகையதொரு நல்ல குடும்பம் கிடைக்கவில்லை. உனக்காவது உன் அண்ணி இருந்தார்கள். சொந்தக் குழந்தையாக வைத்துப் போற்றி வளர்க்க. ஆனால் அவ்விக்கும் உத்திக்கும் என்னைத் தவிர யாருமே கிடையாது கண்ணு. யார் சொன்னார்கள் பணம் பத்தும் செய்யும் என்று… இல்லை கண்ணு… பணம் கொட்டிக்கிடந்தும் தாய் தந்தை இருந்தும் அவர்களின் பாசமே தெரியாது வளரும் குழந்தைகளின் நிலை என்ன தெரியுமா?” என்றவர் கண்களில் நிறைந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“முன்பாவது அவர்களுக்கு வேண்டிய அன்பை ஓரளவு கொடுக்க நான் இருந்தேன். நான் வெளியேறிய பின், வீட்டில் கிடைக்காத அன்பை வெளியே தேடியிருக்கிறார்கள் போலும்… இதில் அவ்விக்குத் திருமணம் முடிக்கும் எண்ணம் சற்றும் இருக்கவில்லை. எங்கே ரதியும், ஆதித்தனும் தங்களைக் கைவிட்டது போல, தானும் தன் குழந்தைகளைக் கைவிட்டுவிடுவோமோ என்கிற அச்சம். திருமணத்தின் மீதிருந்த நம்பிக்கையை அவனுக்குச் சுத்தமாகத் தகர்த்தெறிந்து விட்டது… உத்தியும் அப்படித்தான் கண்ணு. வீட்டில் தாய் தந்தை தங்கள் குழந்தைகளைச் சரியாக வளர்க்க வில்லை என்றால், அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று இன்றுவரை ரதி உணரவே இல்லை.” என்றவர் அவள் பக்கமாகக் குனிந்து,

“ஆனால் எனக்கு இது பெரிய ஆச்சரியம் சமர்த்தி… உத்தி கடைசிவரை அந்த ஜூலியட்டைத் திருமணம் முடிக்கும் எண்ணத்திலேயே இருக்க வில்லை. ஆனால் திடீர் என்று அவளை மணப்பதாக எனக்குச் சொன்னான். அவள் வேறு தமிழ் பெண் இல்லையா…! கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சிக்கு முன்னால் வேற்று இனம் என்பது பெரிதாகத் தெரியவில்லை. தவிர நான் இருக்கும் வரைக்கும் தமிழர்களின் பண்பாட்டை ஓரளவு சொல்லிக் கொடுத்தேன். ஆனால் ரதி அதற்குத் தடை விதித்துவிட்டாள். இந்த நாட்டுக்குத் தமிழ் கலாசாரம் தேவையில்லை என்றாளா என்னாலும் அதை மறுக்க முடியவில்லை. பணம் கொடுக்கும் முதலாளி சொன்னால் கேட்கவேண்டியது என் கடன் தானே. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. எந்த நாட்டிலிருந்தாலும் தமிழன் என்கிற அடி வேரை அழித்துவிடமுடியுமா சொல்? ஏதோ ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி, பணத்தின் மீது குளித்திட்டால் நாம் வெள்ளையர்களாகிவிடுவோம் என்று நினைக்கிறோம். ஆனால் வெள்ளையனே எங்கள் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அடிமை என்று பலபேர் நினைப்பதில்லை…” என்று கவலையோடு பிதற்றிய ஜான்சி, சமர்த்தியின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவாறு சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

எதையோ சொல்ல முயல்வதும் பின் தயங்குவதுமாக இருந்தவர், தன் தொண்டையைச் செருமி,

“நீதான் அவனைப் பற்றிய கட்டுரையை எழுதினாய் என்று எனக்குத் தெரியும்…” என்றதும் அதிர்வுடன் ஜான்சியைப் பார்த்தாள் சமர்த்தி. முகம் வெளிற நின்றிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தவர்,

“உத்தி சொல்லவில்லை சமர்த்தி. நானாக அறிந்துகொண்டேன். ஆனால் அந்தக் கட்டுரையை எழுதிய பின்னாலும் அவன் சந்தித்த சவால்களை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் இதைக் கூறுகிறேன் உன்னுடைய அந்தக் கட்டுரையால் அவனுடைய வாழ்க்கை ஒரு நாளிலேயே தலைகீழாகி விட்டது. ஒன்டாரியோ முதல்வராக வந்தால், தொழில்சார் இலாபம் இருக்கும் என்று நினைத்து அவனோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும், சற்றும் யோசிக்காமல் இவனுடன் செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விட்டார்கள். அது மட்டுமன்றி சொந்த வாழ்க்கையில் நேர்மை இல்லாதவன், எப்படித் தொழிலில் நேர்மையாக இருப்பான் என்று சொல்லித் தொழில்சார் நட்புகளும் விலகியது. கூடவே அந்த நிறுவனங்களை நம்பி அவன் வேறு சில முதலீட்டுக்கு ஒப்பந்தமாகியிருந்த நிலையில் இவர்களின் விலகலால் அவனால் அந்த ஒப்பந்தத்தைத் தொடர முடியாத நிலை. இதில் பல மில்லியன் டாலர்களை வேறு அவர்களுக்கு நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய அவல நிலை. அப்படி இப்படி என்று ஆறு மாதங்களில் பல பில்லியன் டாலர்கள் அவன் கைகளை விட்டுச் சென்றிருந்தன. போதாததற்கு அவனுடைய நிர்வாகத் திறமையைக் கண்டு, கனடிய வியாபார நிறுவனம் அவனுக்கு விருது கொடுத்துக் கௌரவிக்க இருந்தது. திடீர் என்று ஏற்பட்ட வியாபார வீழ்ச்சி, அந்த விருதையும் தட்டிப்பறித்தது. பிறகு என்ன.. கடைசியாக எல்லாமே கைமீறிச் செல்லும் நிலை… இந்த நேரத்தில் வியாபாரத்தைக் கட்டியெழுப்ப, தாயிடம் உதவி கேட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அந்த ஜெய் இதுவரை காலமும் மதிக்காதவன், பணம் தேவை என்றதும் வந்துவிட்டான் என்று உத்தியை அவமானப்படுத்திவிட்டாரா, பாவம் குழந்தையால் அதைத் தாங்கவே முடியவில்லை.

இந்த நிலையில் கீழே விழுந்தவனை மாடு மிதித்த கதையாக, சில நிறுவனங்களுக்கு நட்ட ஈடு கொடுக்க முடியாத நிலையில், அவன் மீது வளக்கு வேறு பதிவு செய்யப்பட்டது…” என்று முடிக்க அதிர்ந்து போனாள் சமர்த்தி.

“அது மட்டுமன்றிப் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அவனை மறைமுகமாக மிரட்டின. இதற்கிடையில் அவ்விகூடத் தன் உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எவ்வளவோ கெஞ்சினான். இந்த இராங்கிக் காரன், மறுத்துவிட்டான். இதில் ஜுலியட்டின் நிராகரிப்பு வேறு….” என்று வருத்தத்துடன் கூற, சமர்த்திக் கூனிக் குறுகிப் போனாள். அவனுடைய வலிக்கு முழு முதற் காரணமே அவள்தானே. அவள் மட்டும் அந்தக் கட்டுரையை எழுதாமல் இருந்திருந்தால், அந்த ஒளிப்பதிவை எடுக்காது இருந்திருந்தால் உத்தியுக்தனுக்கு இந்தச் சிக்கல் வந்திருக்காதே. கலங்கியவளாய் ஜான்சியைப் பார்த்து,

“இதிலிருந்து எப்படி மீண்டார்…” என்றாள் குரல் அடைக்க.

“இவனுக்குத் தெரியாமலே கொழும்பில் நமக்காக வாங்கிக் கொடுத்த வியாபாரங்கள், வீடுகள் அனைத்தையும் விற்று அவனுக்கு அனுப்பி வைத்தேன். யானைப் பசிக்குச் சோளப்பொரிதான். ஆனால் இல்லாததற்கு அது பரவாயில்லையே. தவிர இவனுக்கு வழக்குப் பதியப்பட்டுவிட்டது என்பதை அறிந்ததும் இனியும் பொறுத்திருக்க முடியாது உத்தியுக்தனின் மறுப்பையும் மீறி அத்தனை கடனையும் கட்டி முடித்தான் அவ்வி. இதனால் இருவருக்கும் இடையில் பெரும் சண்டையே வந்தது என்பது வேறு கதை. எப்படியோ கடவுள் அருளால் என் பிள்ளை நிமிர்ந்துவிட்டான்…” என்ற போது சமர்த்திக்குக் கண்ணீர் பொளபௌவென்று கன்னத்தில் வடியத் தொடங்கியது.

அவள் அந்தக் கட்டுரையை வெளியிட்டபோது இத்தனை சிக்கல்கள் வரும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லையே. நிஜமாகவே அது உத்தியுக்தன் என்று நினைத்துத்தானே வெளியிட்டாள். அது இத்தனை பெரிய பாரதூரமான பிரச்சனையை அவனுக்கும் அவன் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. நெஞ்சம் வேதனையில் விம்ம, ஜான்சியோ,

“உத்தி பார்ப்பதற்குத்தான் முரடன் பொல… ஆனால் அவனை மடக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது தங்கம்… அது அன்பு. இதுவரை என்னைத் தவிர யாரும் அவனிடம் அன்புகாட்டியது கிடையாது. அவன் ஜூலியட்டை விரும்பியதற்குப் பின்னாலும் அவன் தேடியும் கிடைக்காத அன்புதான் காரணம். அவ்வி பெண்களை நாடிப் போவதற்குப் பின்னாலும் அவனுக்குக் கிடைக்காது ஏக்கமாக மாறிப்போன அந்த அன்புதான் காரணம். யாராவது அன்புக்காக ஏங்கித் தேடிப் பார்த்திருக்கிறாயா கண்ணு. என் உத்தியும் அவ்வியும் அதற்காக மிகவும் ஏங்கினார்கள். தாய் தந்தை குழந்தைகளோடு சரியாக அன்பைப் பகிரவில்லை என்றால் அவர்கள் அதைத்தேடி வெளியேதானே செல்வார்கள். அவ்விக்கும் அப்படித்தான் நடந்தது. உத்திக்கும் அப்படித்தான் நடந்தது. உத்திக்கு உணர்வுகளை அவ்விபோல வெளிப்படையாகக் காட்டத் தெரியாது. ஆனால் ஒன்றின் மீது அதீத அன்பு வைத்துவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் கைநழுவ விட மாட்டான்… ஆனால் அவனை மாற்றுவது மிக மிகக் கடினம் தங்கம். குழந்தைகளாக இருக்கும் போது அவ்வி இரவில் ஏதாவது பயங்கரக் கனவு கண்டால் ஓடிவந்து என் கூடப் படுத்துவிடுவான். உத்தி எந்தப் பயமாக இருந்தாலும் தன் கூட்டை விட்டு வெளியே வரவே மாட்டான்… இறுகிப்போய் இருப்பான்… ” என்று ஏதேதோ கூறிக் கொண்டு போகச் சமர்த்தியோ தன் தாயிடம் யாசகம் கேட்டு நின்ற உத்தியுக்தனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

எத்தனை வேதனைப் பட்டிருப்பான். வியாபாரம் படுத்துவிட்டது பணம் தருவாயா என்று அதுவரை காலமும் மதிக்காத ஒருவரிடம் கையேந்தும்போது எப்படிக் கூசியிருப்பான். நினைக்கும்போதே தாள முடியவில்லையே. அவன் எப்படித் தாங்கிக் கொண்டான்.

அவனுடைய கோபத்திற்குப் பின்னாலும் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டவளுக்கு அவளுடைய வலியெல்லாம் பெரிய வலியாகவே அவளுக்குத் தெரியவில்லை.

அவள் செய்தது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம். அந்தக் குற்றத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது இவளுடைய கடன். முடிவு செய்தவளாகத் தன் கண்ணீரைத் துடைத்தவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, பிராயச்சித்தத்தைச் செய்வது அத்தனை சுலபம் அல்ல என்று. அதற்காகப் பல முறை தீக்குளிக்க வேண்டி வரும் என்று அவள் கொஞ்சமும் எண்ணவேயில்லை.

அன்று மாலையே ஜான்சியை அழைத்துச் செல்ல அவ்வியக்தன் வந்திருந்தான். அவனைக் கண்டதும் இரு கரம் நீட்டிய ஜான்சியை இறுக அணைத்து விடுவித்த அவ்வியக்தன்,

“ஹாய் யங் லேடி… ஹெள இஸ் யுவர் டே…” என்று அவருடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து அவர் உச்சந்தலையில் முத்தமிட, அதைக் கண்ட சமர்த்திக்கும் ஏனோ கண்கள் கலங்கின. நிமிர்ந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த தன் கணவனைப் பார்க்க, அவனும் இதைத்தான் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய ஆழ் மனதில் இப்படிச் சென்று ஜான்சியை அணைக்கவேண்டும் என்கிற ஆவல் எழுவதை மெல்லியதாக மலர்ந்த அந்த விழிகளைக் கண்டு புரிந்துகொண்டவளுக்கு, அதைச் செய்ய விடாமல் மெல்லிய கூச்சம் அவனைத் தடுக்கிறது என்பதையும் புரிந்துகொண்டாள்.

தன் இளைய வளர்ப்பு மகனின் அணைப்பில் இருந்த ஜான்சி திரும்பி மாடிப்படிகளின் கீழ் நின்றவாறு இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த உத்தியுக்தனைப் பார்த்து,

“வாடா கண்ணா… இங்கே…” என்று பாசமாய் அழைக்க அடுத்த இரண்டெட்டில் ஜான்சியை நெருங்கி இறுக அணைத்துக்கொண்ட உத்தியுக்தன்,

“ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு மிஸஸ் ஜான்சி…” என்று மென்மையாகக் கூறியவாறு அவரை விடுவிக்க. அவனுடைய கன்னத்தை அன்பாகப் பற்றிய ஜான்சி,

“கர்த்தர் உன் கூடவே இருக்கட்டும் ராஜா… உன் வளர்ச்சிக்கு அவர் துணை புரியட்டும்…” என்று ஆசிர்வதித்துவிட்டு,

“முடிந்தால் தேனிலவுக்கு இலங்கைப் பக்கம் வாருங்கள்… எல்லா இடமும் அழைத்துச் செல்கிறேன்…” என்ற ஜான்சியைப், பிரிய மனமில்லாமலே விடை கொடுக்க, அவ்வியக்தனும் அண்ணனை அணைத்து விடுவித்தான்.

“ஓக்கே ப்ரோ… நான் கிளம்புகிறேன்… மிஸஸ் ஜான்சிக்கு அவர்கள் திருச்சபை சார்ந்து அவுஸ்திரேலிய நண்பர்களோடு பேசவேண்டுமாம்… அதனால் அவர்களை இன்றே அழைத்துச் செல்கிறேன்… அதனால் இப்போதே விடை பெறுகிறேன்… பாய்…” என்று கூறிவிட்டுத் திரும்பி சமர்த்தியைப் பார்த்தவன்,

“ஓக்கே சமர்த்தி… பாய்…” என்று விட்டு விலக, அதைக் கேட்ட ஜான்சி,

“டேய்.. அவர்கள் உனக்கு அண்ணி வேண்டும்” என்று கண்டிக்கத் தோள்களைக் குலுக்கிய அவ்வியக்தன்,

“அண்ணியா… அடப் போங்கள் மிஸஸ் ஜான்சி. அண்ணி என்றால் எதற்கு அவர்களுக்குப் பெயர் வைத்திருக்கிறார்களாம்…” என்று கிண்டலுடன் கேட்டவாறு அவரைப் பக்குவமாகக் கரம் பற்றி அழைத்துச் செல்ல, உத்தியுக்தனும் ஜான்சிவிற்குப் பாதுகாப்பாகப் பின்னால் நடந்து சென்றான்.

What’s your Reaction?
+1
27
+1
9
+1
5
+1
1
+1
3
+1
1
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

17 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago