Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-12

12

 

அவன் கூறிவிட்டுப் போன முதலிரவு காதில் விழுந்ததுதான் தெரியும் உதறத்தொடங்கினாள் சமர்த்தி. தன் நிலையைக் கூறவும் முடியாமல், மனதிற்குள் வைத்திருக்கவும் முடியாமல் அவனோடு போகவும் முடியாமல், போகாமல் இருக்கவும் முடியாமல் திரிசங்கு நரகத்தில் நின்று தவித்துக் கொண்டிருக்க, அவளுடைய கலக்கத்திற்கு, வெட்கம் என்கிற போர்வையைப் போர்த்தி வெளியே அழைத்து வந்தனர்.

எல்லாம் முடிந்து பயணத்தில் களைத்திருந்த ஜான்சியைப் பத்திரமாகத் தன் வீட்டிற்கு அனுப்பி விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்களும், செய்தி அறிவிப்பாளர்களும், வெளியே குழுமியிருந்தனர்.

வெளியே வந்தவர்களைக் கண்டதும், மின்னல் வேகமாகப் படமெடுக்கத் தொடங்க, அதற்கும் வேகமாகச் சமர்த்தியின் இடை நோக்கித் தன் கரத்தைக் கொண்டு சென்றவன் அவளைத் தன்னோடு இழுத்து உடலோடு பொருத்தியவாறு படத்திற்குத் தோதாகப் போஸ் கொடுக்கிறேன் என்கிற பெயரில் அவளை ஒரு வழியாக்கிவிட்டான் உத்தியுக்தன்.

அவளுடைய இடையோடு தன் கரம் கொண்டு சென்று தன்னோடு நெரித்து ஒரு போஸ். மார்போடு விழவைத்து ஒரு போஸ், அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து ஒரு போஸ். மகிழ்ச்சிபோல அவளைத் தன் கரங்களில் ஏந்தி நின்றவாறு ஒரு போஸ், வயிற்றோடு கரங்களைக் கொண்டு சென்று தன்னுடைய முன்னுடலோடு அவளுடைய பின் புறம் அழுத்தி நிற்குமாறு ஒரு போஸ், என்று அவளை மூச்சுவிட முடியாதவகையில் திணறடித்துக் கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

அவனோ அந்தச் சம்பவத்தை மகிழ்ச்சியாகவே அனுபவித்துக் கொண்டிருந்தான். இவள்தான் திணறித் திக்குமுக்காடிப் போனாள். அதுவும் போஸ் கொடுக்கிறேன் என்று அவனுடைய கரங்கள் வதைத்ததுதான் அதிகம்.

வயிற்றுக்கூடாகக் கரத்தைக் கொண்டு சென்ற போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கரங்கள் கொடுத்த ஸ்பரிசம். அதுவும் அழுத்தமாக அவன் கரங்கள் தீண்டித் தேகம் எங்கும் ஒரு வித நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

அதை மகிழ்ச்சியாகவே பத்திரிகையாளர்கள் படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அதுவும் எந்தப் பத்திரிகையில் அவள் வேலை செய்தாளோ, அதே பத்திரிகை இவர்களின் திருமணப் படத்தைச் சுவாரசியமாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தது.

இறுதியாகப் பத்திரிகையாளர்கள் கேள்விக் கணைகளால் துளைக்கத் தொடங்கினார்கள்.

“உங்கள் கணவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…” என்று ஒருவர் கேட்க இனிய புன்னகையுடன் தன் மனைவியைப் பார்த்தவன்,

“இப்போது உன் கணவரைப்பற்றி அவர்களுக்குக் கூறு சமர்த்தி.” என்றவாறு இடையைச் சற்று அழுத்திக் கொடுக்க, அவளுக்கான அடுத்த கட்டப் பரிச்சை ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.

உத்தியுக்தன் கனடாவின் முக்கியக் குடிமகன். சும்மாவே அவனைப் பேட்டி காண்பதற்காகப் பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் எப்போதும் கூடியிருப்பார்கள். அதுவும் அவன் பெண்பித்தன் என்கிற பெயர் எடுத்த பின்பு அவனைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதே அவர்களின் வேலை ஆனது. குறிப்பாக, வேறு புதிதாகப் பெண்களோடு சுற்றுகிறானா என்பதைக் காண்கானிக்கவே சிலர் இருந்தனர்.

அதுவும் அவன் சும்மா யாரும் ஒரு பெண்ணோடு பேசினால் அடுத்த காதலி இவள்தானோ என்று கூடப் பத்திரிகையில் செய்தி வரத் தொடங்க, வெறுத்துப்போனான் உத்தியுக்தன்.

இதில் அவனோடு நட்பாக இருந்த பெண்களும் தங்கள் பெயர் அவனால் பாதிக்கப்ட்டுவிடுமோ என்று அஞ்சியவர்கள் போல விலகத் தொடங்க மனதார அடிவாங்கினான் அவன்.

அது ஒரு பக்கமிருக்க உடல் சுகத்திற்காக ஏங்கிய பெண்களோ இவனைத் துரத்தத் தொடங்கினர். அதுவரை காலமும் விழி அசைவால் கூடத் தங்களைப் பொருட்படுத்தாதவனின் மெய் பிம்பம் பொய்யாய் தோற்றுவிக்கப் பட, நேரடியாகவே அவனோடு இழைய முற்பட்டவர்கள் பலர்.

அப்படியிருந்தும் நாகரிகமாகத் தன்னைக் காத்துக்கொள்ளச் சற்றுச் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

அவன் நினைத்திருந்தால் எண்ணுக்கணக்கற்ற பெண்களோடு மகிழ்ச்சியாகவே படுக்கையைப் பகிர்ந்திருக்க முடியும். ஆனால் அவனால் அது முடியாத ஒன்று. அவனால் ஏனோ தானோ என்று அவ்வியக்தன் போலக் கிடைத்த பெண்களுடன் உடல் சுகத்திற்காக நெருங்க முடியவில்லை. அப்படி நெருங்கினால் அவனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம். அவனைப் பொறுத்தவரைக்கும் உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல. அது ஆன்மா சார்ந்தது. அது மகிழ்ந்தால்தான் அந்த உறவே சுவைக்கும். நிச்சயமாக இயந்திரத்தனமாக அவனால் ஒரு பெண்ணோடு இணைய முடியாது.

ஜூலியட் அவனை விட்டுச் சென்ற பின்னும் வேறு பெண்களைத் தேடாது ஒதுங்கியிருந்ததற்கும் அதுதான் காரணம்.

ஆனால் அவனுடைய மனப்போக்கை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமே. பெரும் செல்வந்தர்களின் அழைப்புக்காகவே காத்திருந்த பெண்களும் இவன் அணைப்பிற்காய் ஏங்கி அவன் பின்னால் சுற்ற, அது வேறு இவனுடைய பெயரைப் பாதாளச் சாக்கடைக்குள் தள்ளியது. மொத்தத்தில் சமர்த்தியின் புண்ணியத்தால் அவன் பெண்பித்தன் என்கிற பெயரை உலகளவில் நிறைவாகவே வாங்கிக் கொண்டான்.

இப்போது சமர்த்தியை மணந்ததற்கு அதுவும் ஒரு காரணம். இனியாவது அவர்களின் தொல்லை அவனுக்கு இருக்காது தானே. கூடவே அவன் மீது பூசப்பட்ட சகதியைக் கழுவுவதும் அவளுடைய கடமை. இது எல்லாவற்றிட்கும் மேலாக அவளை அன்று தொட்டபோது, ஏதோ புதிதாய் உள்ளே உணர்ந்தான். அத்தனை சுலபத்தில் அவளிடமிருந்து அவனால் விலகவே முடியவில்லை.

அதுவும் படுக்கையில் அவளோடு சரிந்தபோது, அவன் வேறு உலகத்தைக் கண்டான். மனதிலே அவனையும் மீறி ஒரு வித ஆனந்தம். நிறைவு. சொல்லப்போனால் ஜூலியட்டிடம் கூட உணராத ஏதோ ஒன்றை அவளிடம் உணர்ந்தான்.

அன்று மிரட்டுவதற்காகவே என்றாலும் அவளைத் தொடும்போது விழித்துக்கொண்ட ஆண்மையின் தாபத்தை அடக்கும் வழிதெரியாது அந்தக் கணம் அவன் கண்டுகொண்ட வழி திருமணம் ஒன்றுதான். ஒரு கல்லில் நான்கு மாங்காய்கள்.

சுவாரசியத்துடன் தன் புது மனைவியின் தடுமாற்றத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க சமர்த்தியோ, பத்திரிகையாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது திணறிக்கொண்டிருந்தாள். இவனோ அதை ரசித்தவனாய் எப்போதும் போலத் தன் அழகிய புன்னகையைச் சிந்தியவாறு ஊடகவியலாளர்களைப் பார்த்து,

“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் அனைவரும் இத்தனை அக்கறை எடுத்திருப்பதைப் பார்க்கும் போது, எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது… அதுவும் உங்களுடைய வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து என் சார்ந்த பிரச்சனைகளை எண்ணி வருத்தம் கொண்டு, இயன்றளவு என்னைத் திருத்த முயன்ற உங்கள் பரந்த மனப்பான்மையைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து விட்டேன்!” என்று ஆங்கிலத்தில் கிண்டலுடன் ஆரம்பித்தவன்,

சமர்த்தியைத் தன் தோளோடு இறுக அணைத்து,

“என் மனைவி… என்னுடைய சரி பாதி… இப்போது உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறுவாள்…” என்றவன் குனிந்து, “நான் சொல்வது சரிதானே…” என்றான்.

அத்தோடு விட்டிருக்கலாம், பத்திரிகையாளர்களுக்கென்றே குனிந்து அவள் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட, சமர்த்திக்கு மயக்கமே வரும் போலிருந்தது. அதிர்ச்சியில் விழிகள் விரித்து அவனைப் பார்க்க அவனோ பிடித்த உதடுகளை விடும் எண்ணமேயில்லாதவன் போல அவள் உதடுகளுக்குள் மூழ்கிப்போனான்.

அவனுக்குப் பொது இடத்தில் வைத்து உதட்டு முத்தம் கொடுப்பது சாதாரணமாக இருக்கலாம். அதுவும் மேற்கத்திய நாகரிகத்தில் வளர்ந்தவனுக்கு அது ஒன்றும் பெரிய சங்கதியல்லதான். ஆனால் அவளுக்கு…? அதுவும் புஷ்பாவின் கைகளுக்குள் வளர்ந்தவளுக்கு எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாயிற்றே. கட்டிய கணவனாக இருந்தாலும் பொதுவெளியில் கண்ணியம் காக்கவேண்டும் என்கிற விதிக் கோட்பாட்டை அன்றும் கடைப்பிடித்தவர் புஷ்பா. இன்றும் கடைப்பிடித்து வருபவர். அவரைக் கண்டு வளர்ந்தவளுக்கு இது பேரதிர்ச்சியே.

அந்த அதிர்ச்சியில் பதட்டத்துடன் அவனிடம் இருந்து விலக எத்தனிக்க, அவனோ மேலும் அவளைத் தன்னோடு இறுக அணைத்தவாறு, உதடுகளை விடுவித்து,

“ஹனி… அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறு…” என்றபோது அவன் விழிகள் ஏனோ பெரும் தாபத்தோடு அவளுடைய உதடுகளை வெறிக்கத் தொடங்கின. மீண்டும் அந்த உதடுகளைக் கட்டித்தழுவ முயன்ற ஆவலை அடக்க முயல்பவன் போலக் கீழ் உதட்டினைத் தன் மேல் பற்களால் கடித்து மெதுவாக விடுவித்தான்.

பத்திரிகையாளர்களோ அனுமதி கிடைத்த அவசரத்தில் அவள் மீது தாறுமாறாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்க, மேலும் திணறிப்போனாள் சமர்த்தி.

அன்றுதான் அவளுக்கு இன்னொன்றும் புரிந்தது. செய்தி என்கிற பெயரில் ஆயிரம் கேள்விக் கணைகளைத் தூக்கிப் பிரபலங்களின் மீது எறிந்து விடுகிறோம். சொல்லப்போனால் அவர்களுக்கு யோசிப்பதற்குக் கூட அவகாசம் கொடுப்பதில்லை. ஏன் நாகரிகம் கூடப் பார்ப்பதில்லை. ஆனால் அதை நேரடியாக அனுபவிக்கும்போதுதானே அதன் அவஸ்த்தையும் சிக்கலும் புரிகிறது.

“உத்தியுக்தனை எப்படிச் சந்தித்தீர்கள்?”

“யார் முதலில் காதலைச் சொன்னது?

“அவர் பெண்களோடு தொடர்பு கொண்டவர் என்று தெரிந்துமா அவரைக் காதலித்தீர்கள்?”

“அவருடனான தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப் போகிறது?”

“அவருடைய பெண்தோழிகளுடனான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதா?” என்று பதில் கூற முடியாத, கூறப் பிரியப்படாத கேள்விகள். அன்றுதான் அவளுக்கு ஒரு உண்மை புரிந்தது. கேள்விகள் கேட்பது சுலபம். ஆனால் பதில் கூறுவது….?

இன்னொரு நிருபரோ, சற்று அதிகப்படியாகச் சென்று,

“அவருடைய முன்னால் காதலி ஜூலியட் பற்றி ஏதாவது கூறப் போகிறீர்களா?” என்று கேட்டதும் அதிர்ந்துபோனாள் சமர்த்தி.

எந்த ஒரு மனைவியும் முன்னால் காதலி பற்றிப் பெருமையாகவோ மகிழ்ச்சியாகவோ நினைக்க மாட்டாள். அவள் மட்டும் விதிவிலக்கா என்ன?

“தவிப்புடன் நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ அவளைத்தான் கிண்டலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவருடைய காதல் முறிவடைந்த கையோடு உங்களைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாரே… அப்படியானால் உங்களைக் காதலித்ததால்தான் முன்னால் காதலியைக் கைவிட்டாரா? உங்கள் இருவருக்கும் எப்போதிலிருந்து தொடர்பு இருந்து வந்தது?”

“உங்கள் கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த கட்டுரையை நீங்கள்தான் எழுதினீர்களாமே அது உண்மையா?

“நீங்கள் எழுதிய கட்டுரையால்தான் அவருடைய அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, வியாபார உலகமும் தகர்ந்து விழுந்தது… அப்படி இருக்கையில் உங்களை அவர் எப்படிக் காதலித்தார்? எப்படி மணந்தார்? இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கின்றதா?”

“அவரைப்பற்றி நன்கு அறிந்தும் திருமணம் முடிக்கச் சம்மதித்தற்குப் பின்னால் வேறு ஏதாவது காரணம் உண்டா?”

நாலா திசையிலுமிருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட ஊடகங்கவியலாளர்களிடமிருந்து வந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் கூற முடியாது, பதில் கூறத் திராணியற்று அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடவேண்டும் போலத் தோன்றியது.

இப்போது அவன் மீது குற்றமில்லை என்று சொன்னால் அவள் செய்த தவற்றுக்கு ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை என்கிற கேள்வி அவள் மீது வந்து விழும். அதற்கு என்ன பதிலைக் கூறுவாள்? அப்படியே உண்மையைக் கூறினாலும் அத்தனை பேரின் முன்னாலும் அவமானம் ஏற்படும். இவனுக்கு வேண்டியதும் அதுதான். ஆனால் அவளால் அது முடியாதே. இவள் ஒன்றும் பெரிய தியாகியில்லையே தன் பெயரை மொத்தமாய் கெடுத்துக் கொள்ள. சாதாரணப் பெண்தானே.

சமாளிப்பதற்காக வாயைத் திறந்தவளுக்குக் காற்றுதான் வந்தது. திக்கித் தடுமாறிப் பரிதாபத்துடன் உத்தியுக்தனைப் பார்க்க அவன் சற்றும் இரக்கம் கொண்டானில்லை. அதே கழுத்தறுக்கும் புன்னகையோடு இவளைத்தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

எப்படியோ தன்னைச் சமாளித்தவள், விழிகளில் கண்ணீர் முட்ட, பதில் கூறுவதற்காக வாய் எடுத்த நேரம்,

“எக்ஸ்கியூஸ் மீ…” என்கிற அழுத்தமான ஆழமான கம்பீரமான மயக்கும் குரல் பின்னாலிருந்து வந்தது.

அனைவரும் குரல் வந்த திசை நோக்கித் திரும்ப, அங்கே முகத்தில் புன்னகை சிந்த தன் நீண்ட கால்களை முன்வைத்தவாறு சமர்த்திக்கு அருகே வந்து நின்றான் அவ்வியக்தன்.

இவளோ பதட்டத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்க்க, இவளைப் பார்த்துப் புன்னகைத்த அவ்வியக்தன் நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தான். அவனோ, தன் தம்பியை மெல்லிய சலனத்தோடு பார்த்து, எதையோ கூறுவதற்காக வாயைத் திறக்கத் தன் அண்ணனைக் கண்டிப்பாக ஒரு பார்வை பார்த்தவன், தன்னருகே நின்றிருந்த சமர்த்தியின் தோளில் ஒற்றைக் கரத்தைப் போட்டு பாதுகாப்பாக அணைத்தவாறு பத்திரிகையாளர்களைப் பார்த்தான்.

அவ்வியக்தனைக் கண்ட அத்தனை பத்திரிகையாளர்களும் வாய்பிளந்து நின்றனர். இப்படி ஒரு திருப்பத்தை அவர்களும் எதிர்பார்க்கவில்லையோ.

உத்தியுக்தனுக்குத் தம்பி இருக்கிறான் என்று தெரியும். ஆனால் இப்படி அவனை அச்சில் வார்த்தாற்போல இருப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தவிர அவன் இருப்பது அவுஸ்திரேலியா என்பதால், அவனைப் பற்றி அறியும் வாய்ப்பு இவர்களுக்கும் கிடைக்காமல் போயிருந்தது. இப்போது தான் அவனை முதன் முறையாக இப்படி நேருக்கு நேராகப் பார்க்கிறார்கள். அப்படிதான் நினைத்தார்கள்.

“ஹாய்… எவ்ரிபாடி… ஐ ஆம்… அவ்வியக்தன்…” என்றவன் அழகாயப் புன்னகைக்க முன்னால் நின்றிருந்த பெண் பத்திரிகையாளர்கள் கூட ஒரு கணம் மயங்கித்தான் போனார்கள்.

அதே புன்னகையுடன் சுவாரசியமாக அங்கிருந்த பெண்களைத் தன் விழிகளால் அளவிட்டவன்,

“உங்கள் கேள்விகளுக்குப் பதிலை நான் கூறுகிறேன். அதற்கு முன்னால்…” என்றவன் தன் கைவளைவிலிருந்த சமர்த்தியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து பத்திரிகையாளர்களை நோக்கி,

“என் அண்ணன் மனைவி சமர்த்தியை விட்டுவிடலாம்… பாவம் இப்போதுதான் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களைப் பயமுறுத்த வேண்டாமே…” என்றுவிட்டுக் குனிந்து சமர்த்தியைப் பார்த்தவன்,

“இதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள்… அண்ணாவோடு போய் நில்லுங்கள்…” என்று மென்மையாகக் கூறி அனுப்பி வைக்க, ‘தப்பித்தேன்டா சாமி…’ என்பதுபோல உத்தியுக்தனுக்கு அருகே போய் நின்றவள் தன்னையும் அறியாமல் ஆழ மூச்சை எடுத்து விடுவிக்க அதை ஒரு கிண்டல் புன்னகையோடு பார்த்தான் உத்தியுக்தன்.

அதே நேரம் அவ்வியக்தனோ, தன் கூர்மையான விழிகளால் அங்கிருந்த அத்தனை ஊடகவியலாளர்களையும் அளவிட்டவாறு,

“உங்கள் எல்லோருக்கும் நான் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும்…” என்றுவிட்டுத் திரும்பித் தன் அண்ணனைப் பார்க்க அவனோ, “நோ” என்று தன் உதடுகளை அசைத்து மறுத்தான்.

அவ்வியக்தன் அண்ணனைப் பார்த்துக் குறும்புப் புன்னகையுடன் ஒற்றைக் கண்ணடித்துவிட்டுத் திரும்பி முன்னாலிருந்தவர்களை ஏறிட்டு,

“இத்தனை நேரம் நீங்கள் யாரைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ… அதற்கான காரணகர்த்தா நான்தான்…” என்றதும் அங்கே பெரும் மயான அமைதி நிலவியது.

நம்ப மாட்டாமல் அவனை ஏறிட அவ்வியக்தன், முன்னால் நின்றிருந்த ஒரு பெண் நிருபரைச் சுவாரசியமாகப் பார்த்தவாறு,

“யெஸ்… ஐ லவ் கேர்ள்ஸ்… அதுவும் அழகாய், புத்திசாலியாக இருக்கும் பெண்களை எனக்கு மிக மிகப் பிடிக்கும்…” என்றவன் மெதுவாகத் திரும்பி, புஷ்பாவிற்குப் பக்கத்தில் மறைந்தாற் போல நின்றிருந்த விதற்பரையை ஆவலுடன் ஏறிட்டான். பின் திரும்பிப் பத்திரிகையாளர்களைப் பார்த்து,

“அன்று விடுதியில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்றது ப்ளா ப்ளா ப்ளா… இவை எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான். அண்ணாவின் போதாத காலம், என்னை அவர் என்று நினைத்துத் தவறாகப் பத்திரிகையில் போட்டுவிட்டார்கள். அவர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. எங்கள் உருவ ஒற்றுமை அவர்களைத் தவறாக எண்ண வைத்துவிட்டது… அதை எதிர்க்கட்சியாளர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்…” என்றுகூற இப்போது பத்திரிகையாளர்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள்.

“இதை ஏன் முன்பே வந்து கூறவில்லை?”

“இதை எப்படி நம்புவது? ஒரு வேளை உங்கள் அண்ணா, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களை இப்படிப் பேசச் சொல்கிறாரோ?”

“உங்கள் அண்ணனைக் காப்பாற்றுவதற்காக முயல்கிறீர்களா?”

“உங்களை இதுவரை யாரும் கண்டதில்லையே”

என்று பலக் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வர, அதைக் கேட்டு மெல்லியதாகக் குலுங்கிச் சிரித்தான் அவ்வியக்தன். உத்தியுக்தனின் முகமோ கறுத்து இறுகிப் போயிற்று.

“ஒரே நேரத்தில் பல கேள்விகளைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது? நான் என்ன கணினியா நொடிக்கும் குறைவான நேரத்தில் பதில் கொடுக்க, தயவுசெய்து ஒவ்வொரு கேள்விகளாகக் கேளுங்கள்” என்றவன்,

முதல் கேள்வி… இதையேன் முன்னர் வந்து கூறவில்லை… அதற்குக் காரணம்” என்றவன் திரும்பி அண்ணனைப் பார்த்துவிட்டு,

“இதோ இவர்தான்… வெளியே வந்து உண்மையைக் கூறுகிறேன் என்றுதான் சொன்னேன். அதற்கு மறுத்துவிட்டார். தன்னை நம்பாத போது, நான் வெளியே வந்து உண்மையைச் சொன்னாலும் அதை யாரும் நம்பமாட்டார்கள். அப்படியே அவர்கள் நம்பினாலும் எதிர்க்கட்சியாளர்கள் நம்ப விட மாட்டார்கள். தேவையற்று உன் பெயர் தான் இழுபடும். இப்படியே விட்டுவிடலாம் என்று சொன்னார். அது உண்மை என்று இப்போது நீங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்ட பிறகுதான் எனக்குத் தெரிகிறது. அன்று உண்மையைச் சொல்லியிருந்தாலும், இதோ இவர் கேட்டதுபோல், உத்தியுக்தன் தப்புவதற்காக என்னைப் பகடையாக வைத்துக்கொண்டார் என்று தான் கூறுவீர்கள்.” என்றான். பின்

“அடுத்து இன்னொரு கேள்வி கேட்டிருந்தீர்கள்.. என்னை இதுவரை சந்தித்ததில்லை என்று… யார் செர்னனார்கள் சந்திக்கவில்லை என்று… ஒரு முறை என்னை அண்ணா என்று நினைத்துப் பேட்டியே எடுக்க வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க நான் பட்ட சிரமம் எனக்குத்தான் தெரியும். அதனால்தான் நான் கனடா வருவதையே குறைத்துக்கொண்டேன். அப்படியே வந்தாலும் ரகசியமாக அண்ணாவைக் கண்டுவிட்டுச் சென்று விடுவேன்… தாங்ஸ் டு யு…” என்று கிண்டலாகக் கூற, அந்த நேரத்தில் அவனைப் பற்றித் தன் கைப்பேசியின் மூலம் ஆராய்ந்த ஒரு நிருபர்,

“நீங்கள் பெண்களின் விடயத்தில் கொஞ்சம் பலவீனமானவராமே?” என்றார் பெரும் கிண்டலுடன். கேட்டவனைத் தலைசரித்துப் பார்த்தான் அவ்வியக்தன்.

“இது என்ன கேள்வி…? அதனால்தான் அண்ணாவின் வாழ்க்கையே தலைகிழானது… தெரிந்துகொண்டும் கேட்கும் கேள்விக்கு என்ன பதிலைக் கூறுவது?” என்று கேட்டவன் கம்பீரமாக அத்தனை பேரையும் பார்த்து,

“ஏற்கெனவே சொன்ன பதில்தான். எனக்குப் பெண்களைப் பிடிக்கும். மிக மிகப் பிடிக்கும்…” என்று கூற, ஒரு பெண்ணிருப்பாருக்கு பெரும் ஆத்திரம் எழுந்தது.

“என்ன உங்களுக்கு பெண்கள் பாலியல் தொழில்செய்யும் பொம்மை என்று நினைத்தீர்களா?” என்று சீற நிதானமாக அந்த நிருபரை பார்த்தான் உத்தியுக்தன்.

“மன்னிக்கவேண்டும் மிஸ்..” என்று இழுத்தவன் நிருபரின் மார்புவரை தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை நெருங்கிச் சென்று பார்த்து விட்டு,

“சியாரா… நைஸ் நேம்…” என்று சிலாகித்தவன் பின் நிமிர்ந்து அந்த நிருபரைப் பார்த்து,

“ம்.. நல்ல கேள்வி, ஆனால் உணர்ச்சி என்பது ஆண்களுக்கு மட்டும் பொதுவானதா என்ன? எனக்குப் பெண்களைப் பிடிக்கும். அது போல, ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கும் இல்லையா? தவிர, நானாகப் பெண்களைத் தேடிச் சென்றதில்லை சியாரா… தானாகத் தேடிவந்த பெண்களை நான் ஏமாற்றியதும் கிடையாது… மியூச்சுவல் லவ் மேக்கிங்… இதில் ஆண் பெண் வேறு பாடு கிடையாது.” என்றவன் தன்னையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த பெண் நிருபர் ஒருவரைப் பார்த்து மெல்லியதாகக் கண்ணடிக்க, முகம் சிவந்து போனாள் அவள். இவனோ குறும்புடன் பார்த்துச் சிரித்துவிட்டு, நிமிர்ந்து அத்தனை பேரையும் ஏறிட்டு,

“பைத வே… நான் பெண்களை விரும்புகிறேன்… விரும்பவில்லை… அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதில் தலையிட என் பெற்றவர்களுக்குக் கூட அனுமதியில்லை… அப்படி இருக்கையில் ஊடகங்கள் தங்கள் எல்லைகளை மீறாமல் இருப்பது நல்லது. தவிர இதற்கு மேல் என் சார்ந்த தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கிண்டிக் குடைந்தாலோ, இல்லை என் சார்ந்த செய்திகள் எந்த ஊடகத்தில் வந்தாலும் அவர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுப்பேன்… நான் உத்தியுக்தன் அல்ல… நாட்டு மக்களுக்கு வலிக்குமோ என்று பயந்து தயங்கிப் பேச. அவ்வியக்தன்… இப்போது இங்கே நிற்பதற்குக் காரணம் என் அண்ணா… அவனுடைய இலக்கு வேறு… அந்த இலக்கு பாதியிலேயே நொடிந்துபோக நானும் ஒரு காரணம். அதற்காக மன்னிப்பு வேண்டுவது என் கடமை… அதனால்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன். தவிர, எனக்குச் சுதந்திரம் முக்கியம். அதனால் ஊடகங்கள் என்னை விட்டுச் சற்று விலகி நிற்பது நல்லது…” என்று முடிக்க, அதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர்,

“அப்படியானால் ஊடகங்களால் உங்கள் சுதந்திரம் பறிபோகிறது என்கிறீர்களா?” என்றார் கடும் கோபமாக.

“அதில் சந்தேகமா உங்களுக்கு? ஊடகங்கள் நிஜத்தை அலசிப் போடுவதில்லை. அதற்கு நேரம் செலவழிக்க விரும்புவதுமில்லை. இங்கே எது செய்தாலும் குற்றம். என்னுடைய அனுமதியில்லாமல் ஒருவர் படம் எடுத்தால் அதைத் தடுத்தால் அது குற்றம், என்னை மீறி வார்த்தைகளைக் கூறினால் அது குற்றம், தெரிந்த பெண்ணோடு சிரித்துப் பேசினால் அது குற்றம், இவ்வளவு ஏன் பதில் சொன்னாலும் குற்றம், பதில் சொல்லவில்லை என்றாலும் குற்றம்… இவையெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது என்பதால்தான், ஊடகங்களை என் அருகே நெருங்க அனுமதிப்பதில்லை. ஊடகங்கள் தமது கற்பை இழந்து காலங்கள் பலவாயிற்று…” என்று கூற அதற்கு எதிர்மறையான பல குரல்கள் எழுந்தன.

அதையெல்லாம் யோசித்துக் கலங்கினால் அவன் அவ்வியக்தன் அல்லவே. புன்னகையோடு அவர்களின் எதிர்ப்பைக் கேட்டவன்,

“ஓக்கே தென்… ஐ ஹாவ் டு லீவ்…?” என்றவாறு அவன் திரும்ப முயல ஒரு நிருபர்,

“உங்கள் தாய் தந்தையரைப் பற்றி இது வரை நமக்குத் தெரியாதே… அவர்களை நமக்கு அறிமுகப்படுத்த முடியுமா?” என்றார் ஆவலாக. அதைக் கேட்டுப் புன்னகைத்த உத்தியுக்தன்,

“நீங்கள் கேட்கவேண்டிய முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன என்று நினைக்கிறேன்… இதற்கு மேலும் என்னை நீங்கள் தொந்தரவு செய்வது எனக்குப் பிடிக்காது… நன்றி…” என்று புன்னகையுடன் கூறிவிட்டு மேலும் குடைந்த கேள்விகளுக்குப் பதில் கூறாது தன் அண்ணனை நெருங்கி அவனை இறுக அணைத்து விடுவித்து,

“சாரி ப்ரோ…” என்றான் உண்மையான மனவருத்தத்துடன். தன் தம்பியின் அணைப்பை ஏற்றுக்கொண்ட உத்தியுக்தன்,

“லீவ் இட்… நீ உன்னை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்…. தவிர உன் தப்பு என்ன இருக்கிறது… உண்மை அறியாமல் தப்பாகச் செய்தி கொடுத்தவர்களைத்தான் சொல்லவேண்டும்” என்று கோபத்துடன் கூறிவிட்டுத் தம்பியை விடுவிக்க, சமர்த்திக்குத்தான் நெஞ்சம் குற்ற உணர்ச்சியிலும் செய்த தவற்றிலும் கலங்கிப் போனது.

அவ்வியக்தன் எத்தனை சுலபமாக மன்னிப்புக் கேட்டுவிட்டான். அதுவும் பொது மேடையில் ஆனால் இவளால் மட்டும் முடியவில்லையே. இவள் மன்னிப்புக் கேட்டால் இவளையல்லவா கழுவி ஊற்றுவார்கள். அதைத் தாங்கும் சக்தி இவளுக்கு நிச்சயம் கிடையாது. கலங்கி நிற்கையில் அவள் பக்கமாகத் திரும்பிய உத்தியுக்தன்,

“புறப்படலாமா?” என்றான் தன் கம்பீரக் குரலில்.

அவன் கேட்டதுதான் தாமதம், அப்படியே அவனுடைய கரத்தை உதறிவிட்டுக் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது. முடியாதே. வேறு வழியில்லாமல் பலியாடு போல அவன் பின்னால் செல்ல,

அவர்களை ஏற்றிச் செல்ல லெமொசின் காத்திருந்தது.

ஏதோ தீண்டத்தகாதவனின் அருகே இருப்பது போல முடிந்த வரை பல அடிகள் தள்ளிக் கூனிக் குறுகி நடுக்கத்துடன் உட்கார, இவனோ இவளைப் பார்த்தவாறு ஒரு இருக்கையில் அமர்ந்து கதவைப் பூட்டிவிட்டு, தன் காலுக்கு மேல் காலைப் பொட்டு நிமிர, தலைப்பாகை மேல் கூரையில் முட்டிக் கொண்டு நின்றது.

ஏற்கெனவே இவன் பனைமர உயரம். அதில் தலைப்பாகை வேறு கூரையில் முட்ட, எரிச்சலுடன் அதைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, வியர்வையில் நனைந்த குழலை ஒதுக்கிவிட்டபோது அந்த வடு அவள் செய்த காரியத்தை மீண்டும் நினைவு படுத்தியது.

தலை முடியைக் கோதியவனின் கரம் அந்த வடுவில் படச் சுட்டுவிரலால் அதை வருடிக் கொடுத்தவன், அவளை வெறுமையாகப் பார்க்கச் சட்டென்று விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள் சமர்த்தி.

What’s your Reaction?
+1
25
+1
11
+1
3
+1
0
+1
2
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago