Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-11

11

 

அடுத்து முடியாதோ என்று ஏங்கியிருந்த அத்தனை சடங்குகளும் அவனுக்குச் சாதகமாகவும், அவளுக்குப் பாதகமாகவும் நிறைவு பெற்றிருந்தது. வந்தவர்கள் மணமக்களுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்தி உணவருந்தச் செல்ல, ஐயரோ,

“சரி… மணமக்கள் போய்ப் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கோ…” என்று கூற, மற்றவர்களுக்கு எப்படியோ, சமர்த்திக்குப் பெரும் நிம்மதியானது.

ஐயர் சொன்னதும் உத்தியுக்தன் எழ, வேறு வழியில்லாமல் இவளும் எழுந்தாள்.

நேராகத் தன் தாயை நெருங்கியவன் காலில் விழாமல் அவர்களின் கரங்களைப் பற்றி,

“தாங்க் யு மாம்…” என்றவன் தாய்க்கு அருகாமையிலிருந்தவரை ஒருவித அலட்சியத்துடன் பார்த்துவிட்டு அவரைக் கடந்து செல்லத் தொடங்கிய நேரம்,

“ஹாய் ப்ரோ… கங்ராட்ஸ்…” என்கிற அழுத்தம் நிறைந்த குரலொன்று பின்னாலிருந்து வந்தது.

அதுவரை இறுகியிருந்த உத்தியுக்தனின் முகம் பட்டென்று மலரத் திரும்பிப் பார்த்தான்.

சமர்த்தியும் அந்தக் குரலில் வியந்தவளாகத் திரும்ப, அங்கே உத்தியுக்தனை அச்சில் வார்த்தது போல நின்றிருந்தான் அவன்.

சமர்த்தியால் தன் விழிகளையே சிமிட்ட முடிய வில்லை. அவனைப் பார்க்கும்போதே தெரிந்தது இவன்தான் அவ்வியக்தன் என்று.

இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இளையவன் அண்ணனை விட ஒரு அங்குலம் குறைவாக இருந்தான். அதே சுருண்ட குழல். அதே அடர்த்தியான இமைகள். இருவருடைய நாசிகளும் கூர்மையானவைதான். ஆனால் இவளுக்கென்னவோ உத்தியுக்தனின் விழிகளில் ஒரு பிடி கூர்மை அதிகம் போலத் தோன்றியது. உத்தியுக்தனின் பார்வை எதிராளியை எரிக்கும். ஊடுருவிச் செல்லும்… அவர்களையும் மீறி நடுங்க வைக்கும். ஆனால் இவனுக்கு… சற்றுத் தூங்கிய விழிகள். அதிலொரு அலட்சியம் தெரிந்தது. கூடவே பார்ப்போரைச் சுலபமாகவே கவர்ந்திழுக்கும் மென்மை இருந்தது. இருவருக்குமே சதுர முகங்கள். இறுகிய தேகங்கள். உத்தியுக்தனைப் போலத்தான் அவ்வியக்தனும் தசைகளைத் திரட்டி வைத்திருந்தான். ஆனாலும் உத்தியுக்தனைப் பார்க்கும் போது ஏற்படும் நடுக்கமும் பயமும் இவனைப் பார்க்கும் போது தோன்றவில்லை. ஒரு வேளை அவனுக்குத் தவறு செய்த குற்ற உணர்ச்சி அப்படி அஞ்ச வைக்கிறதோ?

இருவருக்கும் இடையில் உள்ள பெரிய வேற்றுமையே அவ்வியக்தனுக்குப் பெண்கள் என்றால் வெறும் போதை. படுக்கை இன்பம். ஆனால் உத்தியுக்தனுக்கு…!

இவள் மட்டும் குறுக்கே புகாமலிருந்திருந்தால் இத்தனை நேரத்திற்கு நிச்சயித்த பெண்ணைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக இருந்திருப்பான்.

சே… முதலில் இருவரையும் பார்த்திருந்தால், அவள் நிச்சயமாக இப்படி ஒரு கட்டுரை எழுதியே இருக்கமாட்டாள். இப்படிச் சிக்கிப் புலியின் குகைக்குள்ளேயே குடித்தனம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டாள். ஒருவரின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பதே தவறு. இதில் அவனைப் பற்றி உலகம் அறியும் வண்ணம் செய்திகளையுமல்லவா பரப்பிவிட்டாள். அதுவும் எத்தனை தவறான செய்தி. அவனுடைய கோபம் நியாயமானது என்பதால்தானே இவளாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னை மறந்து அவ்வியக்தனை வெறித்தவாறு நிற்க, அவனோ இவளைப் பார்த்து அழகாய் சிரித்து,

“ஹாய்… சமர்த்தி… வெல்கம் அவர் ஃபமிலி…” என்றான் இதமாய். அது வரை சிலையாக நின்றிருந்தவள், சுயத்திற்கு வந்தவளாய்த் தன் தலை உலுப்பியவாறு புன்னகைப்பதா கோபத்துடன் முறைப்பதா, இல்லை அவன் வரவேற்பை ஏற்பதா என்று புரியாமல் குழம்ப, உத்தியுக்தன்தான்,

“ஏன் தாமதம்? உன்னைக் காலையில் எதிர்பார்த்தேன்” என்றான் சற்று இறுக்கமாக.

அவனுடைய குரலில் ஒரு வித இறுக்கம் இருந்தாலும், தன் தம்பியை தேடியிருக்கிறான் என்பது புரிய அண்ணனைப் பார்த்து அழகாய் சிரித்தான் அவ்வியக்தன்.

“என்ன செய்வது ப்ரோ… உன்னுடைய பரிசை எடுத்து வரத் தாமதமாகிவிட்டது…” என்றான் தன் கண்களைச் சிமிட்டி.

என்ன பரிசு என்கிற பரபரப்பு உத்தியுக்தனிடம் தெரியாவிட்டாலும், விழிகள் ஆவலாய் சுற்றிவர, அவ்வியக்தனோ, தன் புன்னகையைச் சற்று விரித்து, கரங்களைத் தட்டி,

“ஆப்ராகடாப்ரா வெளியே வா தேவதையே…” என்று இரு கரங்களையும் அங்கிருந்த தூணை நோக்கிக் காட்ட அதுவரை ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்திருந்த அந்தத் தேவதை வெளியே வந்தது.

அதைக் கண்ட உத்தியுக்தன் முதலில் அதிர்ந்து பின் நம்பமுடியாமல் திகைத்துப் பின் அந்தத் தேவதையை நோக்கிப் பாய்ந்தான்.

கிட்டத்தட்ட அறுபது அறுபத்தைந்து வயதாவது இருக்கும். கருணை பொங்கும் கண்கள். வயதின் காரணமாய் அங்கும் இங்குமாய் சற்று சுருக்கங்கள். வெண்ணிற சேலை. நீண்ட கையுள்ள ஜாக்கட். மார்பில் தொங்கிய சிலுவை. பார்க்கும்போதே தெரிந்தது இயேசுவுக்குத் தன்னை அர்ப்பணித்தவர் என்று.

“மிஸஸ் ஜான்சி?” என்றவாறு அவரை இழுத்துத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான் உத்தியுக்தன்.

பின் தன் மார்புக் குழிக்குள் புதைந்திருந்த அந்த சிறிய உருவத்தின் தலையில் தன உதடுகளைப் பொருத்த, அதைக் கண்டு சிரித்த அவ்வியக்தன்,

“ப்ரோ… மிசஸ் ஜான்சியின் எலும்புகள் நொறுங்கப் போகின்றன… பார்த்து….” என்றான் கிண்டலாய். தம்பியின் குரலைக் கேட்டதும் சுய நினைவு வந்தவன் போல அவரை விடுவித்தவன்,

“மிசஸ் ஜான்சி… யு ஆர் ஹியர்… ஐ கான்ட் பிலீவ் திஸ்” என்றான் முணுமுணுப்பாய். அவரோ கண்களில் கண்ணீர் மல்க அவனுடைய கன்னத்தில் கரங்களைப் பதித்து,

“ஓ மை சைல்ட்” என்றவர் அவனுடைய இரு கரங்களையும் பற்றி அழுத்திக் கொடுத்தது, “என் பிள்ளையின் திருமணம்… எப்படி வராமல் இருப்பேன்… ம்? அவ்வி வந்து என்னை அழைத்து வந்தான் ராஜா… விமானம் தரையிறங்க காலதாமதமாகிவிட்டதா, அதுதான் நேரத்திற்கு வர முடியவில்லை…” என்று குறையோடு கூற, அந்த சுருங்கிய கன்னத்தை வருடி கொடுத்தவன்,

“இட்ஸ் ஒக்கே மிஸஸ் ஜான்சி… இப்போதாவது வந்தீர்களே அது போதும்…” என்றவாறு அவருடைய நெற்றியில் முத்தமிட்டு விலக, சமர்த்தியோ அந்தப் புதிய உத்தியுக்தனை நம்பாமல் பார்த்தாள்.

இவனால் இந்தளவு உணர்ச்சிகளைக் கொட்ட முடியுமா என்ன? அதுவும் பெற்ற தாய் தந்தையரிடம் பட்டும் படாமலும் நின்றிருந்தவன், அவர்களிடம் காட்டவேண்டிய அன்பை யாரோ ஒரு பெண்மணியிடம் காட்டுகிறானே. அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்க, மீண்டும் தன் தம்பியை அணைத்து,

“நன்றி அவ்வி… எனக்காய் மிஸஸ் ஜான்சியை அழைத்து வந்திருக்கிறாய்… மனம் நிறைந்து இருக்கிறது…” என்று நிஜமான மகிழ்வோடு கூற, தன்னருகே நின்றிருந்த ஜான்சியை இழுத்துத் தன் கைவளைவில் வைத்துக்கொண்ட அவ்வியக்தன்,

“ம்… உனக்குத் திருமணம் என்றுதான் சொன்னேன்… மறு கணம் புறப்பட்டு விட்டார்கள். என்ன விசா நேற்று முன்தினம்தான் கிடைத்தது. உடனே என் பேபியை அழைத்துவர இலங்கை சென்றேன். விமானச் சீட்டுதான் கிடைக்கத் தாமதம் ஆயிற்று. நேற்று மதியம்தான் கிளம்பினோம். வரும் வரை உன்னைப் பற்றிப் பேசியே காதுகளைப் புளிக்க வைத்துவிட்டார்… இதோ பார் இரத்தம் கூட வரத் தொடங்கிவிட்டது…” என்று கிண்டலுடன் காதைக் குடைந்துகொண்டு கூற, அவன் தோளில் ஒரு போடு போட்ட ஜான்சி,

“என் பேச்சை எங்கே கேட்டாய்? எதையோ காதில் போட்டு அடைத்தவாறு பாட்டுக் கேட்டுக் கொண்டல்லவா வந்தாய். அதில் அரைவாசி நேரமும் என் தோளில் விழுந்து நித்திரை வேறு… பாருடா உத்தி… என் இடது தோள் கூடக் கீழே சரிந்து விட்டது…” என்று இளையவனின் காலை வாரிவிட, முதன் முறையாக உத்தியுக்தன் மெல்லியதாய் புன்னகைத்தான்.

அதைக் கண்டு ரசித்தவராய், நிமிர்ந்தவரின் விழிகளில் சமர்த்தி தட்டுப்பட, அவ்வியக்தனை விட்டு விலகி, முகம் மலர்ந்தவராய்த் தன் கரங்களை நீட்டி,

“கண்ணம்மா…” என்றார்.

அவரின் கனிவான குரலில் விழிகளைச் சிமிட்டியவள் மறுக்காமல் அந்தக் கரங்களைப் பற்ற, அவளுடைய கரங்களைத் தன் உதட்டில் பொருத்தி எடுத்த ஜான்சி,

“இவன் கூட உன்னுடைய வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் கண்ணம்மா…” என்று கூறியபோது அவருடைய விழிகளில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

அதைச் சற்றுத் தள்ளி நின்றிருந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த ரதிக்கு உள்ளே எதுவோ திகு திகு என்று எரிய முகம் கறுத்தவராக, அந்த இடத்தை விட்டு வெளியேற, உத்தியுக்தனோ, அவ்வியக்தனோ அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இருவரும் மிஸஸ் ஜான்சியையே கனிவோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

மிஸஸ் ஜான்சிதான் பதறினார்.

“அடடே… உங்கள் அம்மா கிளம்பிவிட்டார்கள் போலவே… அவ்வி… போப்பா… சாப்பிட்டார்களா என்று கூடத் தெரியவில்லை… போய் அழைத்து வா கண்ணா…” என்று அனுப்பிவிட்டு இவர்களைப் பார்த்து,

“என்னோடு பேசியது போதும்… போங்கள் போய்ப் பெண்ணுடைய அண்ணா அண்ணியிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள்…, பெற்ற தாய் தந்தையை விட ஒரு பிடி மேலாக இருந்து சமர்த்தியை வளர்த்தவர்கள்… அவர்களையும் உன் தாய் தந்தையாக போற்ற வேண்டும்… ராஜா” என்று மென்மையாகக் கூற, உத்தியுக்தனோ புருவம் சுருங்க ஜான்சியைப் பார்த்தான். அதைக் கண்டு மெல்லியதாக அசடு வழிந்த ஜான்சி,

“ஹீ… ஹீ… உன் மனைவியாக வந்தவள் எப்படிப் பட்டவளாக இருப்பாள் என்று நான் விசாரிக்க மாட்டேனா. இங்கே வந்ததும் பெண்ணைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக விசாரித்து விட்டேனாக்கும்…” என்றவர் மேலும் முகம் மகிழ்ச்சியில் பூரிக்க,

“கண்ணா உனக்கு ஏற்ற இணையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்… எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?” என்று குதுகலிக்க, இவனோ ஏளனத்துடன் திரும்பி சமர்த்தியைப் பார்த்தான். சமர்த்தியும் அவனைத்தான் ஒரு வித பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சரி சரி… போங்கள் போய் அவள் அண்ணன் அண்ணியிடம் வாழ்த்தைப் பெறுங்கள்…” என்று அனுப்பிவிட, அடுத்து இருவருமாக தயாளன் புஷ்பாவை நெருங்கினர்.

அந்த ஜான்சி சொன்னதாலோ என்னவோ, தயாளனை ஒரு முறை இறுக அணைத்து விடுவித்தவன்,

“சாரி… காலில் விழுவதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை” என்று கூற, முகம் மலர்ந்த தயாளன்,

“அதனால் என்ன… மதிப்பும் மரியாதையும் மனதிலிருந்தால் போதும் தம்பி…” என்று கூற புஷ்பாவை நெருங்கி மெல்லிய புன்னகையுடன் அவருடைய கரத்தைப் பற்றிக் குலுக்கி விடுவித்தான்.

சமர்த்திதான் அழுகையினூடே அண்ணன் அண்ணியின் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அதைக் கண்டு புஷ்பாவும் விம்மிவிட்டார்.

“என் கண்ணே…” என்றவர், அவளுடைய தோள்களைப் பற்றி எழுப்பி இறுக அணைத்து

“நீ நன்றாக இருக்கவேண்டும் தங்கம்…” என்று கூறியவாறு விம்ம, அவளும் தன் அண்ணியை இறுக அணைத்தவாறு அப்படியே சிலையாக நின்றுவிட்டாள்.

அவளுக்கு அந்த தெய்வத்தை விட்டுப் பிரிந்து செல்லவே முடியவில்லை. அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று அவளுடைய நிலை என்னவாக இருந்திருக்கும்? எங்காவது பிச்சை எடுத்திருப்பாளா? இல்லை வேலைக்காறியாக ஒரு வீட்டில் ஒடுக்கப்பட்டிருப்பாளா? இல்லை அநாதை ஆச்சிரமத்தில் கேட்பாரற்று மங்கிப்போயிருப்பாளா.. அவளைப் பொறுத்தவரைக்கும் சிலையாய் உள்ள தெய்வங்களை விட, உயிராய்க் கண்முன்னால் நின்றிருக்கும் புஷ்பாவே தெய்வமாகப் பட, அண்ணியை விட்டு விலகியவள், அவர் முன்னால் கைகூப்பிக் கும்பிட்டு,

“அண்ணி… என்னை ஆளாக்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்… உங்களிடம் நான் பட்ட நன்றிக்கடனுக்கு உயிரைக் கொடுத்தாலும் போதாதே…” என்று விசும்ப, சட்டென்று தங்கையை இழுத்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டு,

“என்னம்மா… இத்தனை பெரிய வார்த்தை சொல்கிறாய். எங்களுக்குக் கிடைத்த வரம்மா நீ! கிடைத்த வரத்தை யாராவது சுமையாக நினைப்பார்களா…? நீ எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகுதான் மகிழ்ச்சியே நமக்கு வந்தது…” என்றவர் திரும்பி புஷ்பாவைப் பார்த்து,

“எடுமா அதை…” என்றார். தன் விழிகளைத் துடைத்துக்கொண்ட புஷ்பா புன்னகையோடு திரும்பி விதற்பரையைப் பார்த்து,

“எங்கேமா என் கைப்பை…” என்றதும், தன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த கைப்பையை எடுத்து அன்னையிடம் நீட்ட, அதைத் திறந்தவர், அதிலிருந்த ஒரு பத்திரத்தை எடுத்துச் சமர்த்தியிடம் நீட்டி,

“இது எங்கள் பரிசு தங்கம்…” என்றார். புரியாமல் அதை வாங்கியவள் அந்தப் பத்திரத்தைப் பிரித்துப் பார்க்க, அவர்கள் தங்கும் வீடு சமர்த்தியின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்க அதிர்ந்துபோனாள் சமர்த்தி.

மறுப்பாகத் தலையை அசைத்தவள்,

“என்ன காரியம் செய்திருக்கிறீர்கள் இருவரும்… இல்லை… இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்… நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்…” என்று மறுத்தவாறு அதை அவர்களின் கரத்திலேயே கொடுக்க முயன்றாள்.

உடனே மறுப்பாகத் தலையசைத்த தயாளன்,

“இல்லைடா… இந்த வீடு உனக்குத்தான். நீ மட்டும் அந்தக் கடனைக் கட்டவில்லையென்றால் எல்லோருமே திணறியிருப்போம். இதை உனக்குக் கொடுப்பதில் எங்களுக்குப் பேரானந்தம் தான் தங்கம். நியாயப்படி இது உனக்குரிய வீடு. எங்கள் மகிழ்ச்சிக்காக இதைப் பெற்றுக்கொள்…” என்று கெஞ்சத் துடித்துப்போனாள் சமர்த்தி.

இதற்காகவா அந்தப் பணத்தை வாங்கினாள்..? தன் அண்ணன் அண்ணி ஒருபோதும் பணத்திற்காக யாரிடமும் கையேந்தக்கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காத்தானே அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடும் காரியத்தைச் செய்தாள். இப்போது அந்தப் பணத்தைக் கொண்டு மீட்ட வீட்டை அவள் பெயருக்குக் கொடுத்தால் அது அவளுக்காகப் பணம் வாங்கியதாகிவிடாதா. ஏற்கெனவே குற்ற உணர்ச்சியில் அவள் தவிப்பது போதாதா? இன்னுமா வதைபடவேண்டும்…?” ஏனோ கரத்தில் இருந்த பத்திரம் தீயை ஏந்தியதுபோலத் தகிக்க,

“இ… இல்லை அண்ணி… அது தப்பு… இது உங்களுடைய வீடு. உங்களுக்கு மட்டுமான வீடு…. இதை எனக்குக் கொடுத்துவிட்டு விதற்பரைக்கு என்ன செய்வீர்கள்.. முடியாது அண்ணா…” என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட முடியாதவளாக அண்ணனின் கரத்தில் திணிக்க முயல, மறுப்பாகத் தலையசைத்தார் தயாயன்.

“தங்கம்… அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதேடா… பெற்றவன் நான், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வதும் என் கடமை…” என்று மறுக்க, இவளோ, பரிதவிப்போடு நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்த்தாள்.

அவனோ இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நிச்சயமாக இவனிடம் இருந்து உதவி வராது என்பதைத் தெரிந்து கொண்டவளாக, மீண்டும் அதை அண்ணனின் கரத்தில் திணித்தவாறு,

“அண்ணா… நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா இல்லையா?” என்று கோபமாகக் கேட்டவள்,

“இதோ பாருங்கள் அண்ணா… இது உங்கள் வீடு… நான்… நான் தான் சந்தோஷமாக இதை விடப் பெரிய வீட்டில் இருக்கப் போகிறேனே… எனக்கெதற்கண்ணா இது… ப்ளீஸ்… வேண்டாம் அண்ணா….” என்று உறுதியாக மறுத்தவாறு விம்ம, தயாளனோ தயக்கத்தோடு புஷ்பாவைப் பார்த்தார். புஷ்பாவும்,

“சரி தங்கம்.. நாங்கள் இங்கேயே இருக்கிறோம். ஆனால் இந்த வீடு உன்னுடையது. அதனால் பத்திரமும் உங்களிடமே இருக்கட்டும்…” என்று முடிவாகக் கூற, சமர்த்தியோ என்ன செய்வது என்று தெரியாமல் திணறியவாறு உத்தியுக்தனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

அவளுடைய முகத்தைக் கண்டதும் அவன் என்ன நினைத்தானோ இப்போது இவர்களை நெருங்கி அந்தப் பத்திரத்தைத் தன் கரங்களில் எடுத்தான். உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கூடப் பார்க்காமல் நான்காக மடித்தவன், தயாளனின் கரங்களைப் பற்றி அதில் பத்திரத்தைத் திணித்து,

“இதுவரை காலமும் இவள் உங்கள் மகளாக இருந்தாள். இன்றிலிருந்து இவள் என்னுடைய மனைவி. என்னுடைய மனைவி பிறந்த வீட்டில் இருந்து பொருள் எடுத்துவரவேண்டும் என்கிற நிலையிலோ, இல்லை அவள் எடுத்து வரும் பணத்தில்தான் என் குடும்பத்தை நடத்த முடியும் என்கிற நிலையோ நானில்லை. சொல்லப்போனால் மனைவி வீட்டிலிருந்து ஒரு டாலர் தன்னும் என் வீட்டிற்கு வந்தால் அது எனக்குத்தான் அவமானம். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…” என்று அழுத்தமாகக் கூற ஏனோ தயாளனுக்கு அந்தக் குரலை மறுத்துக் கூறமுடியவில்லை.

ஆனாலும் அந்தப் பத்திரத்தை வாங்கக் கூசியவர் போலத் தயக்கத்துடன் புஷ்பாவைப் பார்க்க, புஷ்பாவும் என்ன செய்வது என்பதுபோலத் தயாளனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

என்ன சொன்னாலும் அந்த வீடு சமர்த்திக் கொடுத்த பணத்திலிருந்துதான் மீட்டெடுத்தார்கள். முறைக்கு அது அவளுக்குச் செல்லவேண்டியது. அதை எப்படித் திருப்பி எடுப்பது? மறுப்பாகத் தலையை அசைத்த புஷ்பா, “இது எங்கள் திருமணப் பரிசு தம்பி…” என்றார் சற்று அழுத்தமாக.

“இருக்கட்டும்… பரிசு என்பது பொருளாகக் கொடுக்கவேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன? அன்பாக ஒரு வாழ்த்து சொன்னாலே அது மிகப் பெரும் பரிசுதான்… தவிர… பரிசு என்பது மணமக்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கவேண்டும் தவிர சங்கடத்தை அல்ல…” என்றவன் மூக்கு விடைக்க அழுது கசங்கிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்துவிட்டு,

“என் விருப்புக்கு மதிப்புக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் மிஸஸ் புஷ்பா…” என்றான் அழுத்தமாக. கூடவே அருகே சங்கடத்துடன் நின்றிருந்த சமர்த்தியின் கரத்தை இறுகப் பற்றியவன்,

“சரி… திருமணம் தான் முடிந்துவிட்டதே… நாங்கள் கிளம்புகிறோம்…” என்றுவிட்டு அவன் புறப்படத் தொடங்க, பதறிய புஷ்பா,

“தம்பி… இன்னும் ஒரு சம்பிரதாயம்தான் பாக்கி… அதையும் முடிக்கவேண்டுமே…” என்றார் தடுமாற்றமாய்.

உத்தியுக்தனுக்கும் சற்றுச் சலிப்பு ஏற்பட்டதோ, புருவங்கள் சுருங்க நின்றான். அவனுக்குத்தான் இந்தச் சம்பிரதாயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லையே. ஆனால் திருமணம் முறைப்படி நடந்தால்தானே அவன் மணமானவன் என்பதையே ஒத்துக்கொள்வார்கள்.

வேறு வழியில்லாமல் புஷ்பாவின் பின்னால் செல்ல, தம்பதியினரை ஒதுக்கமான ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

புஷ்பா, ஒரு வாழை இலையை அவர்களின் முன்னால் வைத்து, அன்றைய திருமண உணவு வகைகளைப் படைத்து, தன் நாத்தனாரிடம்,

“முதலில் நீ தான் அவருக்கு ஊட்டிவிட வேண்டும்… ஊட்டிவிடு…” என்றார். என்னது இவள் ஊட்டுவதா… பயத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனோ தன் பார்வையை மாற்றாமல் அவளைத் தான் கீழ்க்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அண்ணி பார்த்துக் கொண்டு இருக்கிறாரே. மறுக்க முடியாதே. அவரைப் பொறுத்த வரைக்கும் காதல் திருமணம் அல்லவா. அது கண்டராவித் திருமணம் என்று எப்படித் தெரியும்.

குனிந்து இலையைப் பார்த்தவளுக்குக் குழப்பம் தோன்றியது. இதில் அவனுக்குப் பிடித்த உணவு வகை என்ன? என்று குழம்பியவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பும் தோன்றியது. ‘அது சரி பிடித்த உணவு பதார்த்தங்களைக் கொடுத்துக் காக்கா பிடிக்க அவன் காக்காவா என்ன? பருந்தாயிற்றே.

அவள் குழப்பத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர் பெண் ஒருத்தி,

“என்னம்மா யோசனை… மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று யோசிக்கிறாயா? ஒன்றையும் யோசிக்காதே, இன்று இரவே உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லித் தருவார்…” என்று காதில் கூற, சமர்த்திக்கோ ஐயோ என்றிருந்தது.

அவள் நிலை புரியாமல் ஆள் ஆளுக்குக் கிண்டலடித்தால் என்ன செய்வது. இரவு சொல்லித் தரப்போகிறானா, இல்லை கட்டித் தொங்கவிடப் போகிறானா என்று கூடத் தெரியவில்லையே.

“என்னம்மா பார்த்துக்கொண்டிருக்கிறாய்… தம்பிக்கு ஊட்டிவிடு…” என்று புஷ்பா அவள் காதுகளுக்குக் குனிந்து கூற, நடுக்கம் குறையாமலே ஒரு கவளம் உணவைப் பிசைந்து அவன் வாய்க்கு நேராகக் கொண்டு செல்ல, அவன் எந்தத் தடங்கலும் இல்லாமல் வாயைத் திறந்தான்.

அவள் ஊட்டுவதற்காக விரல்களை வாய்க்குள் கொண்டு செல்ல, அந்தப் பொல்லாதவனோ, அவளுடைய அரைவாசி விரல்களையும் சேர்த்து முழுங்கிவிட்டிருந்தான். அவனுக்கு எப்படியோ இவளுக்குத்தான் உள்ளே குறுகுறுத்தது.

“இப்படியே இறுதிக் காலம் வரைக்கும் ஆளுக்கு ஆள் பரிமாறி நிறைவாக வாழவேண்டும்…” என்று புஷ்பா கூற, அந்தக் காட்சியை நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்த ஜான்சி,

“சரி சரி… திருமணமானவர்களுக்கு தனிமை தேவைப்படும். இப்படியே கூட்டமாய் இருந்தால் அவர்கள் எப்படி ஒருவருக்கு ஒருவர் ஊட்டுவதாம்.” என்று கறாரான கேட்க, உடனே புஷ்பா அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டவராக அங்கிருந்தவர்களை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல ரதியும் ஆதித்தனும் உறவினர்கள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.

ஏனோ அவர்கள் முழுமனதாக இந்தத் திருமணத்தில் ஒட்டவில்லையோ என்கிற சந்தேகம் முதன் முதலாகப் புஷ்பாவின் மனதில் விழ, அதையே தயாளனிடமும் வாய்விட்டுக் கூறியிருந்தார்.

“நானும் அதைத்தான் யோசித்தேன்… ஆனால் பார்… அவர்கள் வாழ்க்கைத் தரம் வேறு. நம்முடைய வாழ்க்கைத் தரம் வேறு. இரண்டும் ஒத்துப்போவது அத்தனை சுலபமில்லையே. ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்… விடு… அவர்களோடா நம் மகள் வாழப்போகிறாள்… தம்பியும், அவளும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்…” என்று கூறி விட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த உறவினர்களை நோக்கி நடக்கத் தொடங்கினார் தயாளன்.

அதே நேரம் மணமக்கள் அமைதியாக உண்ணட்டும் என்று அனைவரும் வெளியேறத் தனிமையில் தன் கணவனோடு அமர்ந்திருந்த சமர்த்திக்கு இதயம் வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்கியது. ஏன் எனில் அவனுக்கு ஊட்டுவதற்காய் அன்னத்தைக் குழைத்த கரத்தை அழுந்தப் பற்றியிருந்தான் உத்தியுக்தன்.

“இந்தக் கரங்கள்தானே என்னைப் பற்றித் தப்பாக எழுதியது…?” என்று கேட்கும்போதே அவனுடைய பெருவிரல் அவளுடைய கைத்தல மூட்டில் அழுத்தமாகப் பதியத் தொடங்கியது. அது கொடுத்த வலியில்,

“ஆ…. வலிக்கிறது” என்றவாறு துடிக்க, இவனோ தன் அழகிய வரிசைப் பற்கள் வெளியே தெரியுமாறு அழகாய் சிரித்தவன், அவள் கரங்களைப் பார்த்தவாறு,

“மெல்லிய தளிர் கரங்கள். ஜூலியட்டை விட மிக மிக மென்மையாகத்தான் இருக்கின்றன… கூடவே நரம்புகள் வெளியே தெரியாத வகையில் கடித்து உண்ணத் தோன்றும் குண்டுக் கரங்கள்… இதை ஒரு திருப்புத் திருப்பினால் உடைந்து விடும் போல அத்தனை மென்மை…” என்று கூறியபோது அவன் முகத்திலிருந்த பளபளப்பைக் கண்டு இரத்தம் வடிந்து செல்ல நின்றாள் சமர்த்தி.

இப்போது தானாகவே அவளுடைய கரத்தை விடுவித்தவன் அப்போதுதான் கவனித்தான். அவனுடைய பெருவிரலின் அடையாளம் அவளுடைய வெண் கரத்தில் பதிந்திருப்பதை.

நிச்சயமாகக் கண்டலை ஏற்படுத்தும் என்பது புரிந்தது. அவன் பெருவிரல் பட்டே கண்டும் உடல், அவனுடைய கடிய தேகம் பட்டால்…? ஒரு கணம் பற்களைக் கடித்து விடுவித்தவன், மறு கணம், பந்தியை விட்டு எழுந்து,

“புறப்படு… இன்று நமக்கு முதலிரவு…” என்று விட்டுக் கதவைத் திறந்து வெளியேறப் பேச்சற்றுக் காதடைக்கச் சிலையென அப்படியே நின்றிருந்தாள் சமர்த்தி.

What’s your Reaction?
+1
23
+1
5
+1
2
+1
1
+1
1
+1
2
Vijayamalar

View Comments

  • போமா போ புலி ஒன்னு புள்ளிமானை வேட்டையாட போறமாதிரியே குப்ட்ரான் பாரு நம்ம ஹீரோ

  • சிஸ்டர் உங்க வெப்சைட் ல ஒரு ஐடி வச்சுருக்கேன் பட் இப்போ அது ஓபன் அகல நியூ ஐடி ஓபன் பண்லாம்னா அதுவும் ஓபன் அகல ஒவொரு டைமும் கமன்ட் பண்ண கஷ்டமா இருக்கு இதுக்கு என்ன வழி சொல்லுங்க பிளீஸ்

    • ஏன் அப்படி ஆகுதுன்னு தெரியலையே. இருக்க செக் பண்றேன்.

    • உங்க பெயர்ல அப்படி ஒன்னும் இங்க காணோமேபா. இந்த வெப் பேஜ்தானா, இல்லை பழசில இருந்துச்சா?

    • செக் பண்ணினேன்பா. அதில உங்க பெயரை காணோம். நீங்க எனக்கு உங்க யூசர் நேம், மின்னஞ்சல், ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் நேம், கடவுச் சொல் இதை sivanayani.muhunthansivanayani@gmail.com இதுக்கு அனுப்புங்க. கிரியேட் பண்ணி கொடுக்கறேன்.

    • நீங்க யூசர் வேலை செய்யலைன்னு சொன்னீங்கள்ல. அதுக்குதான் செஞ்சு தர்ரேன்னு சொன்னுன். ஆனா இப்ப நீங்க மெசேஜ் போடுறீங்களே. அப்ப யூசரா அட் ஆகிட்டீங்கன்னுதான் அர்த்தம்.

      • பெண்கள் தளம் ல அக்கௌன்ட் ஓபன் பண்ணனுமா இல்ல உங்களுக்குனு தனியா இருக்க நீங்க பண்ற பதில் எதுமே எனக்கு கட்டளையே இப்போ ந எந்த எபிசோடு ல பன்றேனோ அதுல போன மட்டும்தான் உங்க ரீபிலே பாக்க முடித்து இல்லனா பாக்க முடியல ஏன்

        • நீங்க எந்த எபிசோட்ல கமன்ட் போடுறீங்களோ, அதே இடத்திலதான்மா என் பதில் காட்டும். நான் இங்க பதிவிடுறதை முகப்புத்தகத்தில என்னோட குழுவில போடுவேன். அப்ப உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்திடும். இதில என் முகப்புத்தக லிங் போடுறேன் அதில சேருங்க.

          https://www.facebook.com/groups/541158546669909

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago