Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி பாகம் 1-1

(1)

அன்று சமர்த்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உற்சாகத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தவளின் பாதங்கள் தரையில் படுவதாக இல்லை. காரணம் யாருக்கும் கிடைக்காத அற்புத வாய்ப்பல்லவா அவளுக்குக் கிடைத்திருக்கிறது.

சொல்லப்போனால், பல்கலைக் கழகத்தில் இதழியலில் மூன்றாமாண்டு கற்கும் அவளிடம் அத்தகைய மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அது அவள் திறமைக்குக் கிடைத்த பரிசுதானே! இதை விடப் பெருமை விருது வேறு என்ன இருந்துவிடப் போகிறது?

அப்படி என்னதான் பெரிய வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கிறது இப்படித் துள்ளிக் குதிக்க?

அது வேறு ஒன்றுமில்லை. கடந்த ஒரு மாதமாக அத்தனை ஊடகங்களையும் தன்வசம் கட்டி இழுத்துக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய வாழ்க்கை வரலாறை, மக்கள் சுவாரசியமாகப் படித்து உணறுமாறு அழகாய் வடிவமைத்து எழுதிக் கொடுக்க வேண்டும்.

அப்படி அவனைப் பற்றி எழுதுவதில் என்ன பெருமை இருந்துவிடப் போகிறது?

வெறும் இருபத்தேழு வயதான உத்தியுக்தன் ஆதித்தன், அந்த இளம் வயதிலேயே ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் போட்டிக்கு, வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறான். அதுவும் பல வருடங்களாகத் தொடர்ந்து பதவியிலிருந்து வந்த வில்லியம் நேக்கர் என்பவரை எதிர்த்து அரசியல் களம் குதிக்கிறான். அது பெரிய செய்திதானே.

எதிர்கட்சித் தலைவர் வில்லியம் நேக்கர் அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர். வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர். அதனால் மக்களின் வாக்கு அவருக்குத்தான் என்று அத்தனை பேரும் எண்ணியிருக்கையில், தென்னாசியா இனத்தைச் சேர்ந்த ஒருவனின் பக்கமாக அவர்களின் ஆதரவும் கவனமும் செல்லத் தொடங்குவதென்றால், அது சாதாரணமானது அல்லவே.

இதில் ஊடகங்கள் வேறு, யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று வாக்கெடுப்பு மேற்கொண்ட நிலையில் சுமார் எழுபது சதவிகிதமான மக்களின் வாக்குகள் மதிப்புக்குரிய உத்தியுக்தன் ஆதித்யன் பக்கமே சென்றிருந்தது.

இது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் குடைச்சலை மட்டுமல்ல சிக்கலையும் ஏற்படுத்த அவனை எப்படி வீழ்த்துவது என்று புரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர்.

ஒரு வேளை அவன் சாதாரண மனிதனாக இருந்திருந்தால் சுலபத்தில் அவனை வீழ்த்தி மண்ணைக் கவ்வ வைத்திருக்க முடியும்.

ஆனால் எதிர்க்கட்சியினரின் போதாத நேரம், அவன் கனடாவின் பணக்காரர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவன். அவனால் கனடாவுக்கு வரும் வருமானம் மட்டும் பல கோடி. அப்படி இருக்கையில் அவனை வீழ்த்துவது அத்தனை சாதாரணமில்லையே.

அதுமட்டுமல்ல. அவனுடைய கொள்கைகளும், அவன் மக்களோடு நடந்துகொண்ட விதமும், அத்தனை மக்களையும் சுனங்காது அவன் பக்கம் சுண்டி இழுக்க, இளையவர்களுக்கு அவன் நாயகன் ஆகவும், பெரியவர்களுக்கு வீட்டுப் பிள்ளையாகவும் மாறிவிட்டிருந்தான்.

அவன், கனடாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவனைப் பெற்றவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது ஒரு பேசு பொருளாக இருந்தாலும்கூட, இன அடிப்படையில் வேற்றுமையை அதிகம் தீண்டாத கனடிய மக்களுக்கு அவன் நல்ல ஒரு தலைமைத்துவப் பண்பைக் கொண்டவனாகத் தெரிந்தான்.

தவிர, அவனுடைய வருடாந்த வருமானமே  கனடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் போதுமானதாக இருந்ததாலும், நிச்சயமாக மக்களின் பணத்தில் கைவைக்கமாட்டான் என்கிற உறுதி இருந்ததாலும் அவன் அடுத்த முதல்வராக வருவதில் அந்த நாட்டு மக்களுக்கு முழு சம்மதமே.

கூடுதல் நன்மையாக, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் மிகச் சுத்தமாக இருந்ததால் மக்களின் மரியாதையையும் சுலபமாகவே சம்பாதித்துக் கொண்டான்.

இதில் உச்ச கட்ட நிகழ்வாக, தன் காதலியான ஜூலியட்டை மக்களின் முன்பாகவே பொதுவெளியில் வைத்து நிச்சயதார்த்தம் செய்துகொண்டான்.

அப்போதும் கூட,

“என் சொந்தமாக உங்கள் அனைவரையும்தான் பார்க்கிறேன். என் இல்லற வாழ்க்கை இனிக்க, உங்களுடைய ஆசிதான் எனக்கு மிக முக்கியம். என் உறவுகளும் நீங்கள்தான், என் நட்புகளும் நிங்கள்தான். என்னை வாழ்த்துங்கள்…” என்று சொல்லி ஜூலியட்டின் கரத்தில் மோதிரத்தை அணிவிக்க, அத்தனை மக்களும் அந்த விநாடியே அவன் பக்கம் சாய்ந்தனர்.

இந்த நிலையில் வெற்றி அவனுக்கு நிச்சயமே என்னும் உண்மை நிலை புரிய கையைப் பிசைந்தது எதிர்க்கட்சி.

இதற்கிடையில் பத்திரிகைகள் அவனைப் பேட்டி எடுப்பதும், அவனைப் பற்றிய செய்திகளைப் பிரசுரிப்பதும், அவனுடையதும், காதலியுடையதுமான மகிழ்ச்சியான தருணங்களை வெளியிடுவதும் என்று ஒன்டாரியோவே களைகட்டியது.

பத்திரிகைக்கு வேண்டியது சுவாரசியமான பதிவுகள்தானே. அப்படியென்றால்தானே விற்பனை அமோகமாக நடக்கும். அதனால்தான் உத்தி யுக்தனைப் பற்றிய செய்திகளை அறிய அத்தனை ஊடகங்களும், நான் முந்தி நீ முந்தி என்று போட்டியிடத் தொடங்கின.

இத்தகைய பெறுமதிமிக்க பொறுப்பைத்தான் அவளுடைய கைகளில் கொடுத்திருந்தார்கள். அப்படி இருக்கையில் அவள் துள்ளிகுதிக்காமல் என்ன செய்வாள்? அதுவும் அந்த இளம் வயதில் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றால், அது அவளுடைய திறமைக்குக் கிடைத்த மதிப்புதானே. அதுவும் பகுதிநேரமாகப் பிரைட்டன் என்கிற பத்திரிகையில் வேலை செய்யும் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதை என்ன என்று சொல்வது.

அவள் மகிழ்ச்சிக்கு அது மட்டுமா காரணம்? சொல்லப்போனால் சமர்த்திக்குக் கூட அவன் மீது ஒரு கண்தான். அடிக்கடி அவனுடைய படத் தொகுப்புக்களுக்குள் சென்று அவனைப் பார்த்து ரசிப்பதுண்டு.

அவனுடைய கம்பீரத்திலும், கவர்ச்சியிலும், ஆளுமையிலும், பேச்சுத் திறமையிலும் மொத்தமாகத் தொலைந்து போவாள் சமர்த்தி. சூரினை நெருங்க முடியாது என்று தெரிந்தும் தாமரை மலர்ந்து சிரிப்பதில்லையா. அப்படித்தான் அவளும். உத்தியுக்தனை நெருங்க முடியாது என்று தெரிந்தும் அவனை ரசித்து மகிழ்ந்தாள்.

இவன்தான் நம் மாகாணத்தின் முதல்வராக வரவேண்டும் என்று வேண்டவே தொடங்கியிருந்தாள். என்று அவன் பொது இடத்தில் மக்களின் முன்பாகத் தன் காதலியை நிச்சயம் செய்தானோ, அப்போதே அவன்தான் முதல்வரகா வரவேண்டும் என்று முடிவே செய்துவிட்டாள்.

அப்படிப் பட்டவனைப் பற்றி கட்டுரை எழுதக் கசக்கவா போகிறது. அப்படி எழுதினால், அவனுடைய கவனம் கொஞ்சமாவது இவள் பக்கம் திரும்பாதா. இவள் எழுதும் கட்டுரையைப் பார்த்து அவன் வியந்து பாராட்ட மாட்டானா? அப்போது அவனோடு சேர்ந்து ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும். ஜென்மா சாபல்யம் அடைந்து விடுவாள்.

ஆனாலும், குருவியின் தலையில் பனம்பழம் வைத்த கதையாக ஒரு படபடப்பும் எழவே செய்தது.

சரியாக நன்றாக எழுதவேண்டுமே. எது எப்படியோ, இந்த இனிய செய்தியை அண்ணனிடம் கூறவேண்டும் என்கிற துள்ளலில் அண்ணன் தயாளனைத் தேடி வந்தாள் சமர்த்தி.

அண்ணன் என்றால் சொந்த அண்ணன் என்று இல்லை. தயாளனின் தாயும், இவள் தாயும் சொந்தச் சகோதரர்கள். சகோதரிகள் இருவருக்குமே கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம். மரகதம், தன்னுடைய பதினாறாவது வயதில், திருமணம் முடித்து, அவள் கணவர் குமரனுடன் அருகாமையில் தான் வசித்தாள். மறுவருடமே தயாளனையும் பெற்றெடுத்துவிட்டாள். அதற்குப் பிறகு குழந்தைகள் தரித்து மண்ணுலகம் காணாமல் காற்றோடு காற்றாகி விண்ணுலகம் கண்டுவிட அதற்குப் பிறகு குழந்தைகள் எதுவும் தங்கவில்லை. அதனால் தயாளன் ஒருவனே மகனாகிப்போனான்.

சமர்த்தியின் தாய் கண்ணம்மாவிற்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்ததால் திருமணம் விரைவாக அமைந்துவிடவில்லை.

எப்படியோ நல்ல வரன் கிடைத்துத் திருமணம் முடித்தபோது அவளுக்கு வயது முப்பதையும் தாண்டிவிட்டது. அதன் பிறகு குழந்தை தங்காது போக, குழந்தை வரம் கிடைக்காமல் கோவில் குளம் என்று அலைந்து பத்து வருடங்கள் கழித்த பின், இனிக் குழந்தைகள் இல்லை என்று முடிவு செய்திருந்த காலத்தில் இருபத்தாறு வயதைக் கடந்த தயாளனும் திருமணம் முடித்திருந்தான்.

அவனுடைய மனைவியின் பெயர் புஷ்பா. அப்படியே மரகதத்தினுடைய அத்தனை நல்ல குணங்களையும் பெற்று அந்தக் குடும்பத்திற்கே மகாராணியானாள் அவள்.

தயாளன் திருமணம் முடித்த மறு வருடம் மாதவிடாய் நிற்கும் காலத்தில் கண்ணம்மாவிற்குக் கருத்தரிக்க, அது குழந்தை என்றே கண்ணம்மா நம்பவில்லை. பின்புதான் குழந்தை என்று தெரிந்த போது, குழந்தைக்காக மகிழ்வதா, இல்லை இந்த வயதில் குழந்தை என்று கலங்குவதா என்று திணற, மரகதம்தான், கடவுள் கொடுத்த வரம் சலனப்படாதே என்று தேற்றினார்.

சமர்த்தி பிறந்தபோது இரு வீட்டாரும் பட்ட  மகிழ்ச்சி… அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியுமா என்ன? அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் வானுக்கும் மண்ணுக்குமாகக் குதித்தனர்.

புஷ்பா வந்த ராசிதான் தான் கர்ப்பம் தரித்தோம் என்று கண்ணம்மாவிற்குப் புஷ்பாவின் மீது பக்தியே பிறந்துவிட்டிருந்தது. அதன் பயன் புஷ்பா இரு வீட்டிற்கும் ராணியாகிப்போனாள். கூடவே சமர்த்தியும் அந்த ராணிக்கு மகளாகிப்போனாள்.

ஊராருக்கே அவள் புஷ்பாவின் குழந்தையா இல்லை கண்ணம்மாவின் குழந்தையா என்று புரியாமல் விழிப்பார்கள். அப்படித் தன் குழந்தை போல சமர்த்தியைத் தாங்கிக்கொண்டாள் புஷ்பா.

இப்படியே போயிருந்தால் வாழ்க்கை மிக அற்புதமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே. அது எத்தனை எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அத்தினைக்கு அத்தனை வலியையும் கொடுத்து விடுகிறதே. அதன் பயன், சமர்த்தி பிறந்து ஆறு மாதங்கள் நிறைவதற்குள், ஒரு நாள் எழ முடியாமல் படுத்த கண்ணம்மா மறு நாள் எழுந்து கொள்ளவில்லை. இரு குடும்பங்களும் ஸ்தம்பித்துப் போயின.

அதில் முதலில் சுதாரித்தவர் சடகோபன்தான். கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனியாகக் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்று திணறியவர், உடனே புதுமாப்பிள்ளையானார்.

ஆணும் பெண்ணும் மாறுபடுவதே அங்கேதான். பெரும்பாலான ஆண்கள் தேகசுகத்தை நோக்கி ஓடுவர். பெரும்பாலான பெண்கள் இதயச் சுகத்தைத் தேடி ஓடுவர். அது தவறென்றும் சொல்லி விட முடியாது. அது இயற்கை. ஆணுக்குக் கொடுக்க மட்டும்தான் தெரியும். பெண்ணால்தான் பெற்றுக் கொண்டதை பல்கிப்பெருக்க முடியும். அதனால் அவள் உணர்ச்சி வசப்பட்டவளாகிறாள். அவளுடைய அன்பு உதிரம் சார்ந்தது. உள்ளம் சார்ந்தது. ஆண் அதற்கு எதிர்மாறு. அவர்கள் தேவை உடல் சார்ந்தது… இன்பம் சார்ந்தது. அதனால்தான் ஒரு ஆணால் சுலபத்தில் தன் இணையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் அத்தனை இலகில் தன் இணையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கு விதிவிலக்கும் உண்டு. ஆனால் அது சொற்பத்திலும் சொற்பமே.

சடகோபன் சாதாரண ஆணாயிற்றே. உளத் தேவையை விட உடல் தேவை அவருக்கு முக்கியமாகிப்போனதால் சமர்த்திக்குச் சிற்றன்னை ஒருத்தி வந்தாள்.

விளைவு, பெற்ற குழந்தை பெரும் பாரமாகிப் போனாள். சமர்த்தி அலட்சியப்படுத்தப்பட்டாள். அவளை ஒரு பொருட்டாக மதிக்காது தன் காரியமே முக்கியம் என்பது போல அந்தப் புது மனைவி தாரிகா நடந்துகொள்ள அதைக் கண்டு கலங்கிப்போனது புஷ்பாதான். தன் கணவரின் சிற்றன்னையின் மகள் என்பதை விட, அவர்கள் வீட்டுக் குத்துவிளக்கே அந்தக் குழந்தைதானே.

தாங்க முடியாத வேதனையுடன், மரகதத்திடம் சென்று முறையிட்டு அழ, முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் கரங்களைப் பிசைந்தார் மரகதம். தன் அன்புத் தங்கையின் மகளுக்கு இந்த நிலையா? என்று வருந்தினார். ஆனால் பேச முடியாதே.

இது என் மகள் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன், நீங்கள் யார் இடையில் வர என்று கேட்டுவிட்டால்? என்ன பதிலைச் சொல்வது?

இந்த நிலையில் ஒரு நாள் குழந்தை பசியில் அழுது கொண்டிருக்கப் புஷ்பாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

இரு வீடுகளும் அருகருக்கேதான். அதனால் குழந்தையின் அழுகை, பால் வராத மார்பிலும் பால் வர வைக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த புஷ்பா இறுதியில் முடியாமல் பக்கத்து வீட்டை நோக்கி ஓடிக் கதவைத் தட்டினாள். யாரும் திறக்க வில்லை. கதவைத் தள்ளிப் பார்த்தாள். உள்ளே பூட்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவள், கடைசியாக வீட்டின் கொல்லைப்புறம் சென்று கதவைத் திறக்கக் கதவு தாளிடாமல்தான் இருந்தது. கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கே கண்ட காட்சியில் உயிர் உறைய ஸ்தம்பித்து நின்றாள் புஷ்பா.

ஒரு வயது கூட நிரம்பாத அந்தச் சின்னக் குருத்தின் காலில் கயிறு கட்டி ஏதோ அடிமைபோல ஒரு மேசையில் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது. குழந்தையோ தரையில் கவிழ்ந்தவாறு பசிக்காக அலறிக்கொண்டிருந்தது. அதன் சட்டையெல்லாம் ஈரம்.

இப்படிக் குழந்தையை விட்டுவிட்டு எங்கே போய்த் தொலைந்தாள் அந்தப் பெண்? நெஞ்சம் எல்லாம் துடிக்கத் தாங்க முடியாத வலியுடன் ஓடிப்போய்க் குழந்தையைக் கயிற்றிடமிருந்து விடுவித்து, அவளை மார்போடு அணைத்து ஆசுவாசப் படுத்த குழந்தை இன்னும் வீறிட்டது. கூடவே புஷ்பாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் பொலபொல என்று கொட்டத் தொடங்கியது.

சற்றும் தாமதிக்காமல் முன்புறக் கதவைத் திறந்துகொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தவள், கதறிய குழந்தையின் பசியை ஆற்றலாம் என்கிற வேகத்துடன் பாலைக் காய்ச்சி சூடாற்ற, சத்தம் கேட்டு வந்த மரகதமும் தயாளனும் செய்தி அறிந்து துடித்துப்போனார்கள். தயாளன் கொலை வெறியுடன் கிளம்பியேவிட்டான்.

அவனைச் சமாதானப் படுத்துவதற்குள் இவர்களுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

எப்படியோ காய்ச்சிய பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைக்கு ஊட்ட, அது வரை பசியின் களைப்பில் விம்மிக்கொண்டிருந்த குழந்தை கடகடவென்று அருந்தத் தொடங்கியது.

“சே இவர்களெல்லாம் மனிதார்களா? பெற்ற குழந்தையைப் பார்க்க முடியவில்லையென்றால் ஒரு சொல் எங்களிடமாவது சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாமே. நாங்கள் மாட்டோம் என்றா சொல்லப்போகிறோம்… இத்தனைக்கும் அந்தக் குழந்தை மீது உரிமை உள்ளவர்கள் நாங்கள்…” என்று புஷ்பா ஆத்திரத்தில் திட்ட, மரகதமோ கயிற்றால் கட்டிச் சிவந்திருந்த கால்களை வருடி வருடி ஊதிக்கொண்டிருந்தார்.

பின்புதான் தெரிந்தது, தாரிகா, கடையில் நகை பார்த்துவரச் செல்வதற்காக் குழந்தையைக் கட்டிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள் என்று.

அப்படி நகைகள் பார்த்து வர என்ன அவசரம், புருஷன் வரும் வரைக்கும் காத்திருக்க முடியாதா? அன்று மாலை சடகோபன் வந்ததும் அவனைத் தேடிச் சென்ற குமரன் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.

சடகோபனாலும் பதில் கொடுக்க முடியவில்லை. தவறு அவர்கள் பக்கமாக இருந்ததால் சற்று அடங்கிப்போகவேண்டிய நிர்ப்பந்தம். புஷ்பாவோ,

“இதோ பாருங்கள் சித்தப்பா, உங்களுக்கு இவள் இடைஞ்சலாக இருந்தால் எங்களிடம் கொடுங்கள்… என் குழந்தையாக இவளை வளர்த்துக் கொள்கிறேன்” என்று கூற, அது தாரிகாவிற்குப் பழம் நழுவித் தானாகப் பாலில் விழுந்த கதையாகிப்போனது.

புதிய மனைவி அதுவும் சற்று இளைய மனைவியின் விருப்பத்திற்காகச் சந்தோஷமாகவே தன்னுடைய மகளைத் தாரைவார்த்துக் கொடுத்தான் சடகோபன்.

கூடவே அருகேயிருந்தால், மீண்டும் சமர்த்தியின் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்று அஞ்சியவராகத் தன் புது மனைவியோடு வேறு எங்கோ இடம் பெயர்ந்துவிட்டான் சடகோபன். அதற்குப் பிறகு இவளுக்கும் அவர்களுக்குமான தொடர்பு மொத்தமாக அறுந்து போனது.

தயாளன் புஷ்பா இருவருக்கும் இதுவரை குழந்தைகள் இல்லை என்பதால், அவளைத் தங்கள் கண்ணாகப் பாதுகாத்தனர். இதில் புஷ்பா அவளைத் தன் மகளாகவே எண்ணத் தொடங்கிவிட்டாள்.

சமர்த்தி அவர்களின் பொறுப்பில் விடப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே தயாளனுக்குக் கனடாவில் வேலை கிடைத்தது.

குழந்தை வந்த ராசிதான் என்கிற மகிழ்வோடு இருக்கிற நில புலன்களை விற்றுப் பணமாக்கிக் கொழும்பு வந்து, தாயையும் தந்தையையும் ஒரு வீட்டில் வாடகைக்கு இருத்திவிட்டு, புஷ்பாவையும், சமர்த்தியையும் அழைத்துக்கொண்டு கனடா வந்தார் தயாளன்.

அதன் பின் மறுவருடமே புஷ்பாவும் கருத்தரிக்க, அந்தக் குடும்பமே குதூகலமானது. இந்த நிலையில் தயாளன் தன் தாய் தந்தையையும் கனடாவுக்கு வருவித்தான். புஷ்பாவிற்கு முதல் குழந்தையாக விதற்பரை பிறக்க, காலங்கள் மிக அழகாகவே பயணித்தன.

சமர்த்திக்கு இது தன் அண்ணன் அண்ணி என்பதும், மரகதம் குமரன் இருவரும் தன் பெரியம்மா பெரியப்பா என்பதும் தெரிவதற்கே பால காலங்கள் எடுத்தன.

அதுவும் எல்லோரும் பெற்றவர்களை அம்மா அப்பா என்கிற போது, அவள் மட்டும் ஏன் அண்ணா அண்ணி என்கிறாள்? பன்னிரண்டு வயதில் ஏற்பட்ட அந்தக் குழப்பத்தில் வந்த தெளிவுதான் அவளுடைய இறந்தகாலத்தின் உண்மையை அறியச் செய்தது.

நீங்கள் என் தாய் தந்தையில்லையா. என்னைப் பெற்றவர்கள் வேறு யாரோவா… அவர் எப்படிப் பெற்ற குழந்தையான என்னை இப்படி நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றார்…’ என அழுது கரைவாளோ என்று பயந்து நின்ற புஷ்பாவையும் தயாளனையும் வியப்பில் ஆழ்த்தினாள் சமர்த்தி.

யாரோ பக்கத்து வீட்டிலிருந்த ஒருவர் தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டதுபோல ‘ஓ’ என்றாள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு தனக்கு ஒரு தந்தை இருந்தது என்பதையே சுத்தமாக மறந்துபோனாள் அந்த இளம் குருத்து.

அவள் ஏன் கவலைப்படவேண்டும்? தலையில் தூக்கிக் கொண்டாடத்தான் புஷ்பாவும் தயாளனும் இருக்கிறார்களே. பிறகு என்ன?

என்னதான் தயாளன், புஷ்பாவும் சமர்த்திக்கு அண்ணன், அண்ணியாக இருந்தாலும், அவளுக்கு அவர்கள் மீது, அந்த உறவை விட, தாய் தந்தை என்கின்ற உணர்வுதான் இருந்து வந்தது. தன் தாய் இருந்து இருந்தால் கூட இந்தளவு பாசமாக இருப்பாளா என்பது சந்தேகம்தான். அப்படிப்பட்ட தன் அண்ணன் அண்ணிக்காக உயிரைக் கொடுக்கக் கூடத் தயாரானாள் சமர்த்தி.

விதற்பரைக்குப் பிறகு வசந்தன், ரகுநந்தன், பிரபஞ்சன், ரஞ்சனி, என்று அடுக்கடுக்காக நால்வர்.

கனடா வந்து, தொடர்ந்து ஆறு பிள்ளைகள் என்றானபின் சேமிப்புக் குறைந்து கையும் கணக்கும் தவறாகி வருமானம் குறைவாகவும் செலவு அதிகமாகவும் ஆகிக் கடன் அட்டையில் கடன் ஏறிக் கழுத்தை நெரித்த காலத்திலும் அந்த வீட்டின் மகிழ்ச்சி இம்மியும் குறையவில்லை.

கனடா வந்த புதிதில் தயாளன் செய்த நல்ல காரியம், அந்த நேரத்தில் பணத்தைப் பற்றி யோசிக்காது வீடு ஒன்றை வாங்கியதுதான். இதோ அதற்குக் கூடப் பணம் கட்டிக்கொண்டு வருகிறார். இப்போதைக்கு அவர்களின் சேமிப்பு அந்த வீடு மட்டுமே. அதையும் பிற்பட்ட காலத்தில் மீண்டும் மீண்டும் அடமானம் வைத்துப் பணம் எடுத்துக் குடும்பத்தின் அதீத தேவைகளைச் சீர்படுத்தினார் தயாளன். அதில் தாயும் தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மரணிக்க, அவர்களின் பெயரில் காப்புறுதி போடாத நிலையில் கடனெடுத்துத்தான் அவர்களின் இறுதிக் காரியம் செய்ய வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் ஒரு போதும் தயாளன் ஒடுங்கிப் போகவில்லை. தனக்குத்தான் ஆறு பேர் பக்க பலமாக இருக்கிறார்களே என்கிற இறுமாப்புடன் வளைய வந்தார்.

புஷ்பாவும் சரி, தயாளனும் சரி, ஆறுபேரையும் எக்காலத்திலும் வேற்றுமையோடு நடத்தியதில்லை. அவருக்கு சமர்த்தியும் ஒன்றுதான், புஷ்பாவின் வயிற்றில் பிறந்த மற்ற ஐயவரும் ஒன்றுதான்.

அதுவும் சமர்த்தியை ஒரு போதும் அவர்கள் அடக்கி ஒடுக்க நினைத்ததில்லை. அவளுக்கு தேவைப்பட்ட சுதந்திரத்தைத் தாராளமாகவே கொடுத்தார்கள். எக்காலத்திலும் தாய் தந்தை இல்லாதவள் என்கிற எண்ணம் அவள் மனதில் தோன்றிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

அவர்கள் கொடுத்த சுதந்திரத்தாலும், தைரியத்தாலும் எதிலும் துணிந்து இறங்கிவிடுவாள் சமர்த்தி. அந்தத் துணிவுதான் அவளை ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கி வைக்கப்போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் சற்று நிதானித்திருப்பாளோ?

 

What’s your Reaction?
+1
17
+1
17
+1
6
+1
2
+1
0
+1
0
Vijayamalar

View Comments

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

17 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago