Categories: Ongoing Novel

நீ பேசும் மொழி நானாக – 31

(31)

 

கொஞ்சம் தாமதித்திருந்தாலும், அவள் மீது அவருடைய வாகனம் ஏறியிருக்கும்.

 

குலவேந்தர், பதற்றமாகக் காரை நிறுத்துவதற்கு முதல், நிரந்தரி வாகனத்தின் முன்னால் வந்து விழுவதைக் கண்ட சர்வாகமன் சற்றும் தாமதிக்காமல் ஓடிய வாகனத்தின் கதவைத் திறந்து பாய்ந்து இறங்கி ஓடிச் சென்று, கீழே விழுந்திருந்தவளை அணைத்துத் தூக்கி நிறுத்தினான்.

 

அவளோ, தன்னவன் வந்துவிட்ட நிம்மதியில், அவனுடைய சட்டையை இறுகப் பற்றியவள், தன் வாயைத் திறந்து எதையோ சொல்ல முயன்றாள்… அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது மற்றவர்களுக்குப் புரியவில்லை… ஆனால் அவள் உள்ளத்திலே குடியிருந்தவனுக்கு உடனே புரிந்து போனது.

 

“என்னம்மா… நீ எந்தத் தப்பும் செய்திருக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும் கண்ணம்மா…  “ என்று கூற, புரியவேண்டியவனுக்குப் புரிந்துவிட்டது என்கிற நிம்மதியில் அதுவரை அழுத்தியிருந்த பாரம் விடைபெற்றுப் போக, அப்படியே சுயநினைவை இழந்தாள் நிரந்தரி.

 

தன்னைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு அப்படியே தரையோடு தரையாகச் சரிவதைக் கண்ட சர்வாகமனுக்கு சர்வமும் அடங்கிப் போனது.

 

பதற்றத்துடன், தரையில் விழாவண்ணம் இறுக அணைத்துத் தாங்கிக் கொண்டவன், அவளைத் தன் இருகரங்களிலும் ஏந்தியவாறு, உள்ளே எடுத்துச் செல்ல முயல, குறுக்கே ஆவேசமாக வந்த வள்ளியம்மை,

 

“தம்பி… இந்தப்பாவி இனி இந்த வீட்டுக்குள் வரக்கூடாது. இவளால்தான் இத்தனை துன்பமும். இத்தனை நாள் இவளை வைத்திருந்து நான் பட்ட பாடு போதும். அவளை முதலில் கீழே இறக்கிவிட்டு உள்ளே வாருங்கள்… தரித்திரம் பிடித்தவள், எங்கேயாவது போய் செத்துத் தொலையட்டும்…” என்று சீற, சர்வாகமன் ஆடிப்போனான்.

 

வள்ளியம்மையை ஒரு புழுப்போலப் பார்த்துவிட்டுக் கரத்தில் கிடந்தவளைத் தரையில் கிடத்தினான். அவளுடைய நாடித் துடிப்பைப் பரிசோதித்தான். கண்களைத் திறந்து பார்த்தான்… பயப்படும் படி எதுவுமில்லை என்றதும், நிம்மதியுடன், பிரகாஷைப் பார்த்து,

 

“பிரகாஷ் சிறிது நீர் கொண்டுவா” எனப் பணிக்க, உடனே அவன் உள்ளே ஓடிச் சென்று நீர் கொண்டுவர அந்த நீரை வாங்கி நிரந்தரியின் முகத்தில் தெளித்தான்.

 

அதே நேரம், சர்வாகமன் பாய்ந்து சென்று நிரந்தரியைத் தாங்கியதோ, அவளுக்குப் பணிவிடைகள் செய்வதையோ, ரஞ்சனி சிறிதும் விரும்பவில்லை. சீற்றத்துடன், அவனருகே வந்தவள்,

 

“என்ன சர்வாகமன் இது. அவளை எதற்கு நீங்கள் தொட்டுத் தூக்கினீர்கள். அவள் செய்த காரியம் தெரிந்தால், அவளை அருகே கூட அண்ட விடமாட்டீர்கள்…” என்று எரிச்சலுடன் கூற, நிமிர்ந்து சர்வாகமன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையில் சொல்ல வந்தது வாயோடு தடைப்பட, இரண்டடி பின்னால் வைத்தாள் ரஞ்சனி.

 

அதே நேரம், மயக்கத்தில் இருந்த நிரந்தரி சற்றுத் தெளிந்து விழிகளைத் திறக்க முயல, அவளுடைய கன்னத்தைத் தட்டிய சர்வாகமன்,

 

“நிரந்தரி… எழுந்திரும்மா… நான் வந்துவிட்டேன்… இனி உனக்கு ஒன்றுமாகாது… வேக்கப்…”  என்று கூற, உள்ளே நுழைந்த அவனுடைய குரல், இழந்த பலத்தை மீட்டுக் கொடுக்க, எழ முற்பட்டாள்.

 

“போதும் உன் நடிப்பு… இதைக் கண்டு ஏமாற நாம் ஒன்றும் குழந்தைகளில்லை… அதுதான் கையும் களவுமாகப் பிடித்துவிட்டோமே… பிறகு எதற்கு இந்த நடிப்பு… எழுந்திரு…” என்று ரஞ்சனி விரட்ட, அங்கிருந்த பிரகா{க்கும், குலவேந்தருக்கும், சர்வாகமனுக்கும் எதுவுமே புரியவில்லை.

 

கூடவே வெளியே நின்றிருந்தவர்கள், இவர்களின் கூத்தைப் பார்த்து ரசிப்பதைக் கண்டதும்,

 

“வள்ளி எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாம்… தயவு  செய்து வளியை விடு…” என்ற குலவேந்தர் கேட்க,

“எதற்கு விட வேண்டும்… இவள் இந்த வீட்டில் ஒரு நிமிஷமும் இருக்கக் கூடாது… இவள் இந்த வீட்டிற்குள் வரவே கூடாது…” என்று பிடிவாதமாக மறுத்த மனைவியை இயலாமையுடன் பார்த்தார் குலவேந்தர்.

 

‘நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நற்பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை’ தன் மனைவி வள்ளியம்மைக்கு எத்தனை சூடு வைத்தாலும் அவள் மாறப்போவதில்லை என்பது புரிய தனக்குள் ‘திருந்தாத ஜென்மம்’ எனத் திட்டியவராக, வள்ளியம்மையின் மீது வெறுப்பாக ஒரு பார்வையை வீசிவிட்டச் சர்வாகமனைப் பார்த்தார்.

 

“சர்வாகமன். நீ அவளை முதலில் உள்ளே கூட்டிப்போப்பா” எனப் பணிக்க,

 

“ஒருக்காலும் இனி அவளை உள்ளே கூட்டிச்செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று வள்ளியம்மை உறுதியாக நின்றார்.

 

“இப்போது என்னவாகிவிட்டது என்று இப்படி அவளைத் துரத்துகிறாய்?” என்று குலவேந்தர் பொறுமையற்றுக் கேட்க,

 

“இன்னும் என்னவாகவில்லை என்று கேளுங்கள்” என்று முகத்தைத் திருப்பியவரிடம், என்ன சொல்வது என்று புரியாமல்,

 

“போதும் வள்ளி, விஷயத்தைச் சொல்… அப்படி என்ன வீட்டிற்குள் வர முடியாத மகா பெரிய தப்பை உன் மருமகள் செய்துவிட்டாள்…” என்று அவர் சலிப்புடன் கேட்டார்.

 

“என்னது.. என் மருமகளா… வாயைக் கழுவுங்கள்… தூ… ஆம்பளை சுகத்துக்கு அலைகிற தறுதலையெல்லாம் என் மருமகளா…” என்று சீற, ஆடிப்போனான் சர்வாகமன்.

 

“ஸ்டாப் இட்…” என்று கர்ஜித்தவாறு நடுவில் புகுந்தான். அவனுடைய விழிகள் தீப்பொறிகளைக் கக்கத் தன் கரத்தில் கிடந்தவளை மெதுவாகத் தரையில் கிடத்திவிட்டு,

 

“என்ன பேச்சுப் பேசுகிறீர்கள் பெரியம்மா… சே… உங்கள் வயதுக்கு ஏற்றாட் போல பேசுங்கள்… முதலில் என்ன நடந்தது என்பதைத் தீர விசாரித்து விட்டுப் பேசுங்கள்…” என்று சீறினான்

 

“அடி… மானங் கெட்டவளே… இந்தத் தம்பியையும் உன் கைக்குள் போட்டு மயக்கிவிட்டாயா… ஓ… அதுதான் அன்று மேல் மாடி சென்றாயா? எதைக் காட்டியடி மயக்கினாய்… எத்தனை சூடு வைத்திருப்பேன்… உனக்கு உறைக்கவேயில்லையா…” என்று கத்திய வள்ளியம்மையை வெறித்துப் பார்த்தான் சர்வாகமன்.

 

வயது போனவர்கள் என்கிற எண்ணம் இல்லாமல், அவளின் முகத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் என்கிற வெறி எழுந்தது. ஆனால் அவனுக்கு வேலை வைக்காமல், அந்தக் காரியத்தை குலவேந்தரே செய்திருந்தார்.

 

தன் மனைவியின் பேச்சைப் பொறுத்துப் பொறுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் தாளாமல், ஓங்கி அறைந்து விட்டிருந்தார்.

 

“போனால்  போகிறது… கட்டிய மனைவியைக் கை நீட்டக்கூடாது என்று நினைத்தால், ஓவராகத்தான் போகிறாய்…. அப்படி என் மருமகள் என்ன மாணம் கெட்ட செயலைச்  செய்துவிட்டாள்…” என்று சீற,

 

“என்னையா அடித்தீர்கள்… என்னையா அடித்தீர்கள்…” என்று கர்ஜித்த வள்ளியம்மை, ரஞ்சனியின் கரத்திலிருந்த கைபெசியைப் பறித்து குலவேந்தரிடம் காட்ட, அதைப் பார்த்த குலவேந்தரும் அதிர்ந்து போனார். அதே கைப்பேசியைப் பறித்துப் பார்த்த சர்வாகமனும் சிலையானான்.

 

பதற்றத்துடன் தன்னவளைத் திரும்பிப்ப பார்க்க, அவள் வலியுடன் அவனைப் பார்த்துக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்க, இவனுடைய இதயம் இரும்பெனக் கனத்தது.

 

அது வரை துடிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த நிரந்தரிக்கு அதற்கு மேல் வள்ளியம்மையின் பேச்சைக் கேட்க முடியவில்லை. அந்த வீட்டில் நிற்கும் ஒவ்வொரு கணமும், அவளுக்கு முள்ளின் மீது நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

 

வள்ளியம்மை, அவளை அடிக்கடி திட்டுவாள்தான். திட்டுவாள் என்பதை விட, விஷம் கொண்ட நாக்கால் கொத்துவாள்தான்… அப்போதெல்லாம் அவளுடைய அதிர்ஷ்டம் கெட்ட தன்மையை வைத்துத்தான் திட்டுவாள்… ஆனால் இப்போது, அவள் ஒழுக்கத்தை அல்லவா கேள்விக்குறியாக்கித் திட்டுகிறாள்… எதைத் தாங்கினாலும் இதைத் தாங்க முடியாதே… அதற்கு மேல் அவளால் அந்த வீட்டில் ஒரு கணமும் நிற்க முடியவில்லை. அவள் முள்ளந்தண்டில்லாதவள் தான்… கோழைதான்… அதற்கெல்லாம் காரணம், தனக்கு மூன்று வேளை சோறு போட்டுத் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் கிடைத்ததே என்கிற நன்றி உணர்ச்சியால்தான்… ஆனால் இது… போதும்… இது வரை அவள் பட்டது போதும்… இனி ஒரு கணமும் அந்த வீட்டில் இருக்கக் கூடாது… முடிவு செய்தவள், தள்ளாட்டத்துடன் எழுந்தாள், வள்ளியம்மையைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

 

“என்னடி நடிக்கிறாயா? இனியும் உன் நடிப்பை நான் நம்புவேன் என்று நினைத்தாயா? இனி ஒரு கணமும் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது… இப்பவே, இந்தக் கணமே நீ வெளியேறிவிட வேண்டும்… போ வெளியே…” என்றவாறு வாசலைக் காட்ட, அதற்கு மேல் அங்கிருக்க அவளுக்குப் பைத்தியமா என்ன.

 

விடு விடு என்று வெளியேற முயல,

 

“நிரந்தரி நில்…” என்று கட்டளையாகக் கூறினான் சர்வாகமன். முன் வைத்த காலைப் பின்வைத்து அப்படியே நிற்க,

 

விரைந்து சென்று அவள் முன்னால் நின்றவன்,

 

“ஐந்து நிமிட்ஙகள்… ஐந்தே ஐந்து நிமிடங்கள் அவகாசம் கொடு… நான் வந்துவிடுகிறேன்…” என்று சொன்னவன், திரும்பி அத்தனை பேரையும் வெறுப்புடன் பார்த்தான்.

 

“எதற்காக இப்படி அவள் மீது அபாண்டமாகப் பழி போடுகிறீர்கள்…” என்று தன் பல்லைக் கடித்தவாறு கேட்க,

 

“தம்பி… என் அண்ணன் மகனிடம்… அவள் தப்பாக…” அவள் முடிக்கவில்லை, தன் கரத்தை நீட்டித் தடுத்தவன்,

 

“ஸ்டாப் இட்… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… ஐந்து வருடமாக அவள் இந்த வீட்டில்தானே இருக்கிறாள்… ஒரு முறையாவது… ஒரு முறையாவது அவள் யாரோடும் தவறாக நடந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எப்படி பெரியம்மா… கண்ணிமைக்கிற நொடியில் உங்கள் வீட்டு மருமகளையே தப்பாகப் பேச முடிகிறது… கொஞ்ச நாள்தான் பெரியம்மா, எனக்கு அவளைத் தெரியும்… என்னால் அவளைத் தப்பாக எண்ண முடியவில்லையே…” என்று அவன் அடக்கிய ஆத்திரத்தில் கூறியவன்,

 

அங்கிருந்தவர்களை ஒருமுறை வெறுப்பாக நோக்கினான். அவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது. தன் கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் கொந்தளிக்கும் நெருப்பாகக் கண்ணில் பொறி பறக்க எல்லோரையும் சுட்டு எரித்து விடுவது போலப் பார்த்தான்.

 

அறிவிலிக்கு உரைப்பவன் அவனிலும் மடையன் என்பதை அவன் அறிந்ததினால் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்க முயன்றான்.

 

இனியும் அவனால் அங்கே தங்க முடியாது என்பது புரிந்தது. நிரந்தரிக்கில்லாத இடம் அவனுக்கும் இல்லை.

 

எதையோ சிந்தித்த சர்வாகமன் கடகட வென்று வீட்டிற்குள் சென்றான். அங்கே இருந்த தனது அத்தனை பொருட்களையும் பெட்டிக்குள் அடைத்தவன், வேகம் குறையாமலே கீழே இறங்கி வந்தான்.

 

நிரந்தரி, அவன் கட்டளைக்கு இணங்க அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள். அவளால் அசையவே முடியவில்லை.

 

அவளை நெருங்கிச் சென்றவன், அவளைப் பற்றித் தன் பக்கம் திருப்பினான்.

 

முன்னிரவு காதலில் கரையுடைந்த அந்த விழிகளில், இப்போது தாங்க முடியாத வேதனை பொங்கிக்கொண்டிருக்க, இவன் இதயத்திலும் இரத்தம் கசிந்தது. உள்ளத்தின் வலியுடன், அவள் முகத்தைப் பற்றியவன்,

 

“கன்ட்ரோல் யுவர் செல்ஃப் கண்ணம்மா…” என்று கம்மிய குரலில் கூற உடைந்து போனாள் நிரந்தரி.

 

வள்ளியம்மையைக் காட்டி,

 

“அத்தை, என்னவெல்லாம் சொன்னார்கள் தெரியுமா… நான் ஆண்களுக்கு அலைபவளாம். இன்னும் ஏதேதோ சொன்னார்கள். நான் அப்படிப்பட்டவள் அல்ல… நான் அப்படிப்பட்டவளாக இருந்திருந்தால் இந்த ஐந்து வருட காலங்களும் யாரையும் ஒருத்தனைப் பார்த்துக்கொண்டு… என் ஆசையைத் தீர்த்திருப்பேன்.”

 

“நான் எதுக்காக எல்லோருடைய கோபங்களையும் சுமந்துகொண்டு, யாருடைய உதவியும் இல்லாமல் தனிமரமாக… எப்படியெல்லாம் தவித்திருப்பேன் தெரியுமா…  என்னைப் பார்த்தாலே, ஏதோ புழுவைப் பார்ப்பது போல அசிங்கமாகப் பார்ப்பார்கள்.. என்னைப் பார்க்க அசிங்கமாகவா இருக்கிறது?” என்று தன்னவனைப் பார்த்தவாறு தன் அடிக்குரலின் ஓசையைக் கதறலாக ஒலித்துக் கேட்க, அவனோ மறுப்பாகத் தலையசைத்து,

 

“இல்லைம்மா… இல்லை… நீ பத்தரை மாற்றுத் தங்கம்… எனக்குத் தெரியும்மா…” என்று தவித்தான் இவன்.

“ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லையே… நான் ஏன் இன்னும் முழுதாக உயிரோடு இருக்கவேண்டும்? நானும் ஒரு பெண்தானே… எனக்கும் ஆசைகள் இருக்காதா?” என்றவள் தன் இரு கரங்களையும் தூக்கிக் காட்டி,

 

“கை நிறையக் காப்புப் போட வேண்டும்… சங்கிலி போட வேண்டும்…” என்று கழுத்தைக் காட்டியவள், பின் புராதன சேலையைத் தூக்கிக் காட்டி” இப்படியில்லாமல் அழகான சேலை அணிய வேண்டும்… கொலுசு அணிய வேண்டும்…” என்று கூறிக்கொண்டு வந்தவளுக்கு அவன் அணிவித்த கொலுசின் நினைவு வந்தது.

 

அது அவளுடைய அறைக்குள்… அவன் கொடுத்த காதல் பரிசு அது… பதற்றமாக அவனைப் பார்த்தவள்,

 

‘தன் காலைக் காட்டி, “கொலுசு… கொலுசு… என் அறையில்… அதை எடுத்துத் தரச் சொல்லுங்கள்… ப்ளீஸ்… எனக்கது வேண்டும்…’ என்று இறைஞ்சியவாறு தன் மொழியில் கேட்க, அப்போதுதான், அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பமாக வந்துகொண்டிருந்த  தாமரையைப் பார்த்து,

 

“தாமரை, உன் அண்ணியுடைய கொலுசு, அவர்கள் அறையில் இருக்கிறதாம்… எடுத்து வருகிறாயா?” என்று பணிக்க, மறு கணம், கொலுசோடு வெளியே வந்தாள் தாமரை.

 

அதைப் பெற்று அவளிடம் நீட்ட, பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டவள், அதைத் தன் மார்போடு அணைத்து, அவனைப் பார்த்து நன்றி பொங்கச் சிரிக்க உள்ளுக்குள் நொறுங்கிப் போனான் சர்வாகமன்.

 

இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

 

“இதோ பார்… அவர்கள் உன்னை நம்பாவிட்டால் என்ன…? நான் உன்னை நம்புகிறேன்  அல்லவா? அது போதும்… நீ யாரைப் பற்றியும் வருந்த வேண்டியதில்லை…” என்று கூற, தன்னுடைய பெரிய விழிகளாலேயே சர்வாகமனை ஏக்கமாகப் பார்தாள் நிரந்தரி. அந்த விழிகளைத் தன் விழிகளால் கவ்விப் பிடித்தவன்,

 

“நிரந்தரி… நான் எது செய்தாலும் உன் நன்மைக்காகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை உனக்கிருக்கிறது அல்லவா?” என்றான் அழுத்தமாக.

 

அவள் சற்றும் யோசிக்காமல் தலையை ஆட்ட, அவள் முகத்தைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், விரைந்து சென்று தன் பையைத் திறந்தான். அதிலிருந்த மாங்கல்யத்தைக் கைகளில் எடுத்தான். தன் கழுத்தில் தொங்கிய சங்கிலியைக் கழற்றி, அதில் மாங்கல்யத்தைக் கோர்த்தான். பின் நிரந்தரியை ஆழமாகப் பார்த்தவாறு, அவளை நெருங்கினான்.

 

What’s your Reaction?
+1
33
+1
14
+1
2
+1
1
+1
0
+1
1
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago