Categories: Ongoing Novel

நீ பேசும் மொழி நானாக – 29

(29)

 

அன்றைய அவலத்தை நினைத்து நினைத்துப் பேசியவர்கள் யாருக்கும் நடுச்சாமம் ஒரு மணியைக் கடந்தும் உறங்கும் எண்ணம் இருக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சர்வாகமனுக்கு எரிச்சல்தான் வந்தது. இவர்கள் எப்போது தூங்கப்போவது, அவன் எப்போது நிரந்தரியுடன் பேசுவது.

 

ஒரு ஓரமாக நின்றவாறு தன்னையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த நிரந்தரியைக் காணக் காண சர்வாகமனுக்குத் தாள முடியவில்லை.

 

ஓடிச் சென்று  அவளை அணைத்து, தன் கை வளைவிற்குள் வைத்திருக்கவேண்டும் என்கிற பேராவல் எழுந்தது. ஆனால் அதைச் செய்ய முடியாதே… வேதனையுடன், தன்னவளைப் பார்த்து, மெதுவாகக் கண்களை மூடித் திறக்க, அதைப் புரிந்துகொண்டவளின் முகம் நாணத்தால், சிவந்து போனது.

 

அதைக் கண்டவனின் உதடுகளிலிருந்த புன்னகை மேலும் விரிய, அவளைப் பார்த்துத் தன் ஒற்றைக் கண்ணை அடிக்க, அதைக் கண்டவள் தாளமுடியா வெட்கத்தில்   உதடுகளைப் பற்களால் கடித்து அங்கிருந்து ஓடிப்போக, பிரகாஷைத் திரும்பிப் பார்த்தான் சர்வாகமன்.

 

விழிகளால் உள்ளே ஓடிச் சென்ற நிரந்தரியைக் காட்டி, மேலும் கீழுமாக ஆட்ட, அவனும் புரிந்துகொண்டவனாகத் தன் தலையைச் சுழட்டி ஆட்டிவிட்டு, பேசிக்கொண்டிருந்த தந்தையைப் பார்த்து,

 

“ஓக்கேப்பா… நேரத்தைப் பாருங்கள்… ஒரு மணி… இப்போது தூங்கினால்தான், நேரத்திற்கு எழ முடியும்…“ என்று கூற,

 

“அதுவும் சரிதான்… சரி சரி… எல்லோரும் தூங்கப் போங்கள்…“ என்று குலவேந்தர் விரட்ட,

 

“ஓக்கே காய்ஸ்… சீ யு டுமாரோ…” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தான் சர்வாகமன். அங்கிருந்த மேசையின் இழுப்பறையைத் திறக்க, அவன் நிரந்தரிக்கு வாங்கிய கொலுசு வீற்றிருந்தது.

 

ஆவலுடன் அதைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான். அதைத் தன்னவளின் காலில் கட்டிவிடும் நேரத்திற்காகத் தவமாய் தவமிருந்தவன், அந்த வீடே அமைதியாகும் வரை காத்திருந்தான்.

 

அதே நேரம், பிரகாஷ் சமையலறைக்குள் போக, அங்கே நிரந்தரி, ஓரமாகத் தரையில் அமர்ந்து ஒரு காலை மடக்கி மார்போடு வைத்தவாறு கனவில் லயித்திருந்தாள். அவளுடைய முகத்தில், என்றுமில்லாத அந்த மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பூரிப்பும் வழிந்துகொண்டிருக்க, அவளுடைய அழகு பன்மடங்கு கூடிப்போயிருந்தது.

 

“அண்ணி….“ என்று இவன் அழைக்க, அவளோ, கற்பனை உலகில் சஞ்சரித்திருந்தாள்.

 

அவளை நெருங்கியவன், அருகே சென்று,

 

“அண்ணி…” என்று அழைக்கத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளிடம்,

 

“என்ன கனவா?” என்று கேட்டான் கிண்டலாக. முகம் எல்லாம் சிவந்து, பெரும் நாண வசப்பட்டவளாகத் தலையைக் குனிந்து கொண்டவளை இரக்கத்துடன் பார்த்த பிரகாஷ்,

 

“சரி சரி… அண்ணா உங்களைத் தன் அறைக்கு வருமாறு சொன்னார்… தாமதிக்காமல் போங்கள்…” என்று அவன் கூற, அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவள், மறுப்பாகத் தன் தலையை ஆட்டினாள்.

 

“எனக்குத் தெரியாது அண்ணி… உங்களை வரச் சொன்னார்… சொன்னதைச் சொல்லிவிட்டேன், போவதும், மறுப்பதும் உங்கள் இஷ்டம்… நான் வருகிறேன்..” என்று கூறிவிட்டு, அவன் போக இவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

இத்தனை பேர் இருக்கும்  போது, அவனுடைய அறைக்கு எப்படிப் போவது… அதுவும் அத்தை கண்டார்கள்… அவ்வளவுதான்… என்று பயந்தவள், போவதில்லை என்கிற முடிவோடு, தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்தி, கட்டிலில் படுத்தவளுக்குத் தூக்கம் வருவதாயில்லை.

 

நிரந்தரி வருவாள் வருவாள் என்று ஆவலாகக் காத்திருந்த சர்வாகமன், அவள் வராது போக, சலிப்புற்றவனாகக் கீழே வந்தபோது, அனைவரும் விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தனர்.

 

‘ஒரு வேளை பிரகாஷ் சொல்ல மறந்திருப்பானோ?’ என்று எண்ணியவன், பொறுமையற்ற வேகத்துடன், தன்னவளின் அறையை நோக்கிச் சென்றான்.

 

அங்கே அறை வெறுமென சாற்றித்தான் இருந்தது. மெதுவாகத் திறந்து உள்ளே நுழைய, அந்தச் சிறிய அறைக்குத் தோதாக இருந்த அந்த ஒற்றைக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்ததிருந்தாள் அவனுடைய தேவதை.

 

அரவம் எழுப்பாமல், அவளை நெருங்கியவன், தன் பான்ட் பாக்கட்டில் கைவிட்டு அந்தக் கொலுசை வெளியே எடுக்க, அது போட்ட ஓசையில் பதறி விழித்து எழுந்தாள் நிரந்தரி. அவசரமாகத் தன் அறை விளக்கை எட்டிப் போட, அங்கே விழிகளில் கனிவுடன் நின்றிருந்தான் சர்வாகமன்.

 

அவனை அவள் அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அச்சத்தில் படுக்கையில் எழுந்தமர்ந்தவள், தன்னைச் சுருக்கி அமர்ந்து கொள்ள, அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டவனாக, அவளை நெருங்கியவன், கொலுசு பிணைத்திருந்த கரத்தாலேயே அவள் முகத்தைப் பற்றித் தூக்கி, அவள் விழிகளுக்குள் தன் விழிகளைச் செலுத்தி,

 

“என்னடா… பயந்துவிட்டாயா? என்னைத் தவிர உன் அறைக்குள் யார் வரப்போகிறார்கள் ம்?” என்றவன், தன் கரத்தை விலக்கிக் கரத்திலிருந்த கொலுசைத் தூக்கிக் காட்டி…

 

“உனக்காக வாங்கினேன் கண்ணம்மா… பிடித்திருக்கிறதா?” என்று ஆவலாகக் கேட்டான்.  அந்தக் கொலுசைக் கண்டவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

 

கொலுசு அவளுக்குப் பிடிக்கும். மிக மிக மிகப் பிடிக்கும். தாய் இருந்த வரை அணிந்திருந்தாள்… அதற்குப் பிறகு அவற்றை அணியும் பாக்கியம் அவளுக்குக் கிடைக்கவில்லை.

 

பெரும் ஆவலுடன் அவன் கரத்திலிருந்த கொலுசை வாங்க முயல, அதைக் கொடுக்காமல், தன் கரத்தைப் பின்னால் கொண்டு சென்றவன், அவள் படுக்கையில் அமர்ந்து அவள் பாதத்தைப் பற்ற, எப்போதும் போலத் தன் காலை விலக்கினாள் நிரந்தரி.

 

“ஹேய்… இன்னும் என்னம்மா…?” என்று கண்டிப்போடு கூறியவன், அவள் பாதத்தைப் பற்றி இழுத்துத் தன் தொடையின் மீது வைத்து, சேலையைச் சற்று மேல் தூக்கி, பாதத்திலிருந்த வடுவை மெதுவாக வருடிக்கொடுத்து விட்டுக் கொலுசைக் கட்டிவிட்டான். அவள் பாதத்திற்கென்றே வடிவமைத்தது போல இருந்தது அந்தக் கொலுசு.

 

ஈரம் பட்டுப் பட்டு பித்தம் வெடித்துக் கோரமாக இருந்த அப் பாதங்கள் அவனுக்குப் பேரழகாகவே இருந்தன.

 

இரண்டு பாதங்களிலும் கட்டிவிட்டவன், தன்னை மறந்து அந்தக் கால்களின் அழகில் மயங்கியவனாக, அவற்றைத் தன் உள்ளங் கரங்களில் ஏந்தி, சற்று மேலே தூக்கி, அப் பாதங்களில் தன் ஈர உதடுகளைப் பதித்து விலக, செங்கொழுந்தாகிப் போனாள் நிரந்தரி.

 

அவனுடைய உதடுகள் ஒற்றுதலிலும், குறுகுறுத்த அந்த மீசை தாடியின் வருடலிலும், அதுவரை அடங்கியிருந்த பெண்மை என்கிற உணர்ச்சி விழித்துப் பீறிட்டுப் பாய, தன் பழைய காலத்தை மறந்து, இதுதான் தன் வாழ்க்கை இது மட்டுமே நிரந்தரம் என்கிற உணர்வுடன், அத்தனை காதலையும் மொத்தமாய் கூட்டித் தன் விழிகளில் தேக்கி அவனைப் பார்க்க, அவ்விழிகளில் வழிந்த காதலைக் கண்ட, அக் கோமகன், கசிந்து உருகிக் குழைந்து போனான்.

 

“ஓ… நிரந்தரி…” என்றவன் ஆவேசமாக அவளை நெருங்கி அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவன், பின் அவள் முகத்தைப் பற்றித் தூக்கி, மீண்டும் காதல் கசிந்த அவ்விழிகளை வெறியுடன் பார்த்தான்.

 

இதற்காக, இதற்காகத்தானே காத்திருந்தான்… இதற்காகத்தானே அவன் பிறந்தான்… இதோ இந்த தேவதையின் காதல் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தானே ஒரு ஆணாக ஜனித்தான்… இந்தக் கணம், இந்த நிமிடமே பிறந்ததின் பயனை அவன் அடைந்து விட்டானே… இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.

 

அதற்கு மேல் முடியாதவனாகப் பற்றியிருந்த முகத்தைத் தன் உதடுகள் நோக்கி இழுத்து, ஆவேசத்துடன், அவளுடைய செழித்த செவ்விய இதழ்களின் அருகே நின்று இவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மச்சத்தில் தன் உதடுகளைப் பொருத்தினான்.

 

தம்முடைய தாகத்தைத் தீர்க்கத் தவறிவிட்டான் என அத்தையலின் உதடுகள் கோபத்தில் நடுங்கத் தொடங்க, இப்போது தன் உதடுகளைச் சற்று விலக்கி முழுவதுமாக அவளுடைய இதழ்களை முற்றுகை இட்டுக்கொண்டான் அந்த உள்ளம்கவர் கள்வன்

 

இரண்டு உதடுகளும் பேசிக்கொண்டனவோ? யுத்தம் செய்தனவோ…? இல்லை கவிபாடிக் இசைந்து குழைந்தனவோ…? யார் அறிவர். ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியா இணையாகிப் போயின அவ் உதடுகள்.

 

என்ன செய்வது என்று புரியாது துடித்த பெண் உதடுகளுக்கு, ஆசிரியனாகி, மந்திரியாகிப் போனது ஆண் உதடுகள். முத்தம் கூட சுவைக்குமா? தித்திக்குமா? அத் தித்திப்பில், காமன் கணை தொடுக்குமா? தன்னிலை மறந்தான் சர்வாகமன்.

 

தனக்காகப் படைக்கப்பட்ட படையல் அவள். புசிக்காமல் விடுவது குற்றமல்லவா… அவளை ருசித்துச் சுவைக்கும் வேகத்தில் தன் கரங்களை அவள் உடல் எங்கும் கொண்டு செல்ல, முதன் முறையாக ஒரு ஆணின் வருடலில் அதிர்ந்தவள், பின் தெளிந்து, இறைவனுக்குப் படைக்கப்படும் நெய்வேத்தியத்தை, கொடுக்காது மறுப்பது தவறென்பதால், அவனுடைய கரங்களின் வருடலுக்கு இணங்கி மயங்கி நின்றாள் அந்தப் பேதை.

 

இதுவரை அறியாத உணர்விது. உணராத பொருள் இது. தெரியாத வழியிது. சொல்லாத மொழியிது… கற்றறியாதவள் அவள்… கற்றறிந்தவன் போல சொல்லிக் கொடுக்க முயன்ற ஆசிரியன் அவன்… உதடுகளில் தொடங்கிய கற்பித்தல், கன்னங்கள், காதுகள், கழுத்து எனப் பயணித்து அவளுக்குப் புதிய உலகத்தைக் காண்பிக்க முயன்றன.

 

மெது மெதுவாகக் கீழிறங்கிய உதடுகளுக்கு அணைபோடும் வழியும் அவளுக்குத் தெரியவில்லை… அணைபோடவேண்டும் என்றும் அவ் உணர்வுக்குத் தெரியவில்லை. வெறும் தேடலில் அண்ட சராசரங்களை உணர முடியுமா? இருவரும் உணர முயன்ற தருணம் அது.

 

அந்த மெல்லிய மேனியின் மென்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து நுகர்ந்த அந்த மாயவனுக்கு அது  போதவில்லையோ… தாகம் தீரவில்லையோ… இன்னும் இன்னும் எனக் கேட்கும் குழந்தையின் நிலையாகிப்போனான் அவன். செல்லக் குழந்தையவன்… மறுக்க முடியாத குழந்தை அவன்… பாலைவனத்தில் வறண்டுகிடந்தவளுக்கு நீரூற்றி செழிக்க வைத்த வருண பகவன் அவன்… அவன் கேட்டு அவளால் மறுக்க முடியுமா? கேட்கக் கேட்க மறுக்காது கொடுக்கும் கொடை வள்ளியானாள்… அவள் இடம் கொடுத்தால், இவன் மடம் பிடிக்கும் நிலையிலிருந்தான்… முடிவு எப்படிப் போயிருக்குமோ… தன்னவளின் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டவனுக்கு அன்னையின் நினைப்பு தக்க சமயத்தில் அவனைத் தடுத்து நிறுத்தியது.

 

என்ன காரியம் செய்யத் துணிந்தான்? அன்னையின் வளர்ப்பை ஒரு கணத்தில் பொய்ப்பிக்கப் பார்த்தானே… இதை அறிந்தால், அவன் அன்னை அவனை என்ன நினைப்பாள்… இதுதானா அவள் கற்பித்த ஒழுக்கம்…?

 

முற்று முழுதாகத் தன்னிலை பெற்ற சர்வாகமன், தவிப்புடன், சிவந்து குலைந்து நலிந்திருந்த தன் உள்ளத்தில் குடியிருந்த தேவதையைக் காமம் தவிர்த்துக் காதலுடன் பார்த்தான்.

 

“சா… சாரி கண்ணம்மா… உன் விழிகளில் வழிந்த காதலைக் கண்டதும், என் நிலை தவறிவிட்டேன்… சாரிடா… என் மீது… உனக்கொன்றும் கோபம் இல்லையே…” என்று அவன் தவிப்புடன் கேட்க, அவசரமாகக் கட்டிலில் எழுந்தமர்ந்தவளுக்குத் தாம் எது வரை போக இருந்தோம் என்பது புரிய அளவில்லா வெட்கத்துடன், தன் முகத்தை மூடி, மறுப்பாகத் தலையசைக்க இன்பத்தின் பெறுபேற்றை உணர்ந்துகொண்டான் சர்வாகமன்.

 

மூடியிருந்த கரங்களை விலக்கி, அவள் சிவந்த முகத்தை உவகையுடன் பார்த்தவன்,

 

“இனியும் உன்னைத் தள்ளிவைத்திருக்க என்னால் முடியாது கண்ணம்மா… வீ நீட் டு மரி சூன்… எப்போதும் இப்படியே எல்லை தாண்டாமல் இருப்பேன் என்று சொல்ல முடியாது… இதற்கு மேல் என்னால் முடியாது கண்ணம்மா…” என்று அவன் பதற்றத்துடன் கூற, திருமணம் என்கிற சொல்லைக் கேட்டதும், அப்போதுதான் விழித்தெழுந்தவள் போல நிமிர்ந்தாள் நிரந்தரி.

 

திருமணமா… இன்னொரு திருமணமா… ஒருத்தனைக் கட்டி, அவனுடைய வாழ்க்கையை அழித்தது போதாதா… அவன் போன போது, ஒன்றும் தோன்றவில்லை… ஆனால் இவன்… இவனுக்குச் சிறிய காயம் பட்டாலே, நொறுங்கிப்போவேனே… ஏதாவது நடந்தால்… நினைத்த மாத்திரத்தில், அவளுடைய இரத்தம் வடிந்து போக முகம் வெளிற மறுப்பாகத் தலையை ஆட்டினாள் நிரந்தரி.

 

அது வரை காதலில் உருகித் திளைத்தவன், அவள் அக்காதல் காணாமல் போகச் சினம் துளிர்க்க,

 

“எதற்கு மறுக்கிறாய்?” என்றான்.. இல்லை இல்லை கர்ஜித்தான்.

 

அவளோ கரங்களைப் பிணைத்துக் காட்டி, அதற்கு மறுப்பாகத் தலையை ஆட்ட, வந்த சீற்றத்தில், அவளை அறைவதற்காகத் தன் கரத்தை ஓங்கியிருந்தான் சர்வாகமன்.

 

பின் தான் செய்ய விளைந்த காரியம் புரியச் சிரமப்பட்டுத் தன்னை நிலைப்படுத்தியவன்,

 

“ஓங்கி அறைந்தேன் என்றால் தெரியும்… இதற்குப் பிறகும் திருமணம் வேண்டாம் என்கிறாயே… வெட்கமாக இல்லை?” என்று அவன் சீற, அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி,

 

“இல்லை… உன்னுடைய உயிர்தான் எனக்கு முக்கியம்… என்னை மணந்தால், உனக்கு ஆபத்து… நான் உன்னை மணக்க மாட்டேன்…” என்று அதிலேயே நிற்க,

 

“அப்போ இப்போது நடந்ததற்கு என்ன அர்த்தம்?” என்று இவன் சீற, அவளோ, எக்கி, அவன் முகத்தைத் தன் கரங்களால் பற்றி, அவனை மேலும் காதலுடன் பார்த்து,

 

“நீ என் கடவுள்… என்னை உனக்குக் காணிக்கையாக்கிவிட்டேன்… வேண்டுமானால் எடுத்துக்கொள்…. ஆனால் திருமணம் வேண்டாம்…” என்றதும், சர்வாகமனுக்குத் தன்னை அடக்குவதே பெரும் பாடாகப் போனது. அவள் கரத்தை வேகமாகத் தட்டிவிட்டவன்,

 

“இத்தனை சொல்லியும் உன் புத்திக்குள் ஏறவில்லையா? எனக்கு இதில் ஒன்றும் நம்பிக்கையில்லை என்றால், ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்? எனக்கு நீ வேண்டும்… உன் உடல், உன் மனசு எல்லாமே வேண்டும்… அவை அனைத்தும் என் மனைவியாய் வேண்டும்… என் தாய், திருமணம் முடிக்காமல், ஒரு பெண்ணுடன் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுக்கவில்லை… உடலாலும், உணர்வாலும் ஒருத்தி எனக்கு சொந்தமாகவேண்டுமானால், அது நான் கட்டிய மனைவியாக மட்டும்தான் இருக்க முடியும்… அது நீ… நீ மட்டும்தான்… புரிந்ததா…” என்று சீறியவனை எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் நிரந்தரி.

 

அவன் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையாக இருந்தது… இவன் என்னவன் என்கிற உரிமை அவளிடம் பொங்கிப் பிரவாகித்தது… ஆனாலும் அவனை மணக்க அவள் தயாரில்லை… நிச்சயம் தயாரில்லை… அதைப் புரிந்துகொண்டவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

“இவ்வளவு சொல்கிறேன்… நீ என்ன வென்றால்…” பெரும் சினத்துடன் மூச்சுக்களை எடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவன், பின்,

 

“நீ என்ன மறுக்கிறது… நான் சொல்கிறேன் நன்றாகக் கேட்டுக்கொள்… நம் இருவருக்கும் திருமணம் நடக்கும்… நடந்தே ஆகும்… அதை அந்த ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது…” என்று வெடித்தவன், அத்தனை நேரமாக பொங்கிக்கொண்டிருந்த காதல் காணாமல் போக, பெரும் ஏமாற்றமும் கோபமும் துளிர்விடத் தன் முடியைக் கோதிக்கொண்டு அவள் அறையை விட்டு வெளியேறினான்.  அதை இரண்டு கண்கள் சீற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன.

 

தன் அறைக்குள் வந்த ரஞ்சனிக்குத் தாள முடியவில்லை. சே… அந்தக் கேடு கெட்ட நிரந்தரியின் அறைக்குள் சர்வாகமனா… அவன் தகுதியெங்கே, இவள் தகுதியெங்கே… என்ன தைரியம் இருந்தால், நான் இருக்கும் போதே, உள்ளே சென்றிருப்பான்… அங்கே என்ன என்ன நடந்திருக்கும்…” என்று எண்ணியவளுக்குத் தாள முடியவில்லை.

 

வேலைக்காரி என்று நினைத்திருந்தவள், இல்லை ஏற்கெனவே தன் வாழ்க்கையைப் பறித்தவள் என்பதைத் தாய் மரகதம் சொன்னபோதே கொதித்துப் போனாள்.

 

தனக்குப் பேசிவைத்த ஜெயன் யாரோ ஒருத்தியை திருமணம் முடித்துவிட்டான் என்றதைக் கேட்டபோது பெரும் ஏமாற்றம் அடைந்தவள் அதன் பின் அந்த வீட்டை மிதித்ததே கிடையாது. அதனால் நிரந்தரியை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு  கிடைக்கவில்லை. அதன் பின்பு கோணேச்சரத்தில் வைத்துத்தான் குலவேந்தரைக் கண்டதே. அதுவும் சர்வாகமனோடு.

 

அவனைக் கண்ட நொடியில் அவன் மீது காதலில் விழுந்தவள் தன் வைராக்கியத்தை ஒதுக்கிவிட்டு மீண்டும் குலவேந்தரின் வீட்டிற்குத் தானாகவே எல்லோரையும் கிளப்பிக்கொண்டு வந்து சேர்ந்தாள். ஆனால்…

 

“தாலியறுத்த கழுதைக்கு கோடீஸ்வரன் கேட்குதோ… அதிர்ஷ்டம் இல்லாத முண்டச்சி… இருடி… உன்னை இந்த வீட்டை விட்டல்ல, ஊரை விட்டல்ல, இந்த உலகை விட்டே போக வைக்கிறேன்…’ என்று எண்ணியவளுக்கு அன்று அவள் அறைந்தது நினைவுக்கு வந்தது… மேலும் வன்மம் கூட, அவளுடைய முகம் விகாரமாக மாறத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
27
+1
2
+1
0
+1
0
+1
4
+1
2
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago