Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 1

(1)

ஜனவரி மாதத்தின் ஆரம்பப் பகுதி. அதிகாலையே சூரியன் எழுந்து தன் கரங்களைச் சற்று அழுத்தமாகவே அத்தனை வீடுகளின் சாளரத்திற்குள்ளாக நுழைத்து வேவுபார்க்க முயன்றுகொண்டிருந்த நேரம். ‘நீ செய்து கொண்டிருப்பது தவறு’ என்று அவனுடைய வெம்மைக் கரங்களைத் தடுத்து நிறுத்த முயன்றது எலும்பை உருக்கும் குளிர். அந்தக் குளிரோடு யுத்தம் புரிந்தவாறே மேலும் பிரகாசமாய்த் தன் ஒளியைப் பரப்பியவாறு, உள்ளே நுழைய முயல, நீ முயன்றால் விட்டுவிடவேண்டுமா என்ன? என்று சவால் விடுவது போலக் கதிரவனைத் தடுத்து நிறுத்தின சாளரம் அணிந்திருந்த தடித்த திரைச்சீலைகள்.

‘ம் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதோ?’ குழம்பிய கதிரவன் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் தன் தலையைச் சொரிய முயன்ற நேரம், வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வரும் வெளிச்சத்தைத் தடுத்து நிறுத்திய திரைச்சீலையை ஒரு இழுவையில் விலக்கி, பகலவனை உள்ளே வரவேற்றார் அந்த வீட்டின் உரிமையாளர் தயாளன்,

இடம் கொடுத்தால் மடம் பிடிப்பது இயற்கைதானே. கண்ணிமைக்கும் நொடியில் தனக்கு வழிவிட்ட அந்த வீட்டின் உரிமையாளர் தயாளனைப் பார்த்துப் புன்னகைத்து, அவரைப் பாராட்டுவது போலத் தட்டிக்கொடுத்தவாறே, தன் ஆதிக்கத்தை அந்த வீட்டின் முன்னறையில் கம்பீரமாய் நிலைநிறுத்தினான் அந்தப் பொல்லாத கதிரவன்.

பூஜ்யத்திற்கும் கீழ், பத்துப் பாகை செல்சியஸைக் கொண்ட குளிரோ, பகலவனுக்குக் கொடுத்த உரிமையைத் தனக்குக் கொடுக்கவில்லையே என்கிற ஆத்திரத்துடன், கண்ணாடி ஜன்னலை முட்டி மோதி உள்ளே வர முயன்றுகொண்டிருக்க, அந்தோ பரிதாபம். குளிருக்கும் வேப்பத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் இரத்தம் சிந்தியது என்னவோ அந்தக் கண்ணாடிச் கதவுகள்தாம். இருவரின் வேகத்தையும் தாங்க முடியாமல் ஜன்னல் ஓரம் கண்ணீர் சிந்த, அந்தக் கண்ணீரை ஒரு துண்டால் துடைத்து எடுக்கத் தொடங்கினார் தயாளன்.

“தயா… நேரமாகிறது… இன்னுமா சுத்தம் பண்ணி முடிக்கவில்லை…” என்று சமையலறையிலிருந்து குரல்கொடுத்த புஷ்பாவின் குரலில், தன் கரத்திலிருந்த துண்டைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, அதுவரை இரைந்துகொண்டிருந்த தூசி உரிஞ்சும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு,

“என்ன புஷ் கேட்டாய்… என்றார் சத்தமாக.

தன் கரத்தில் அகப்பையை ஏந்தியவாறு கணவனை நோக்கி வந்தவர், இன்னும் அவர் முன்னறையைச் சுத்தமாக்காமல் இருப்பதைக் கண்டு சற்றுக் கோபம் கொண்டவராய்,

“தயா… என்ன தயா… இன்னுமா சுத்தம் செய்து முடிக்கவில்லை…? நேரத்தைப் பாருங்கள்… ஒன்பது மணி… ஏழு மணிக்கு வீட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று கிளம்பி ஒழுங்காக ஒரு இடத்தைக் கூடச் சுத்தமாக்கவில்லை” என்று கோபமாய் எகிற, தயாளனோ,

“நான் என்ன செய்ய… நீ பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறாயா இல்லை குப்பைகளைப் போடும் காமதேனுக்களைப் பெற்று வைத்திருக்கிறாயா என்று தெரியவில்லை… போகும் இடங்களில் பொருட்களைப் போட்டுவிட்டுப் போனால், நானும் என்னதான் செய்வது? அடுக்க அடுக்க வந்துகொண்டே இருக்கிறது. அவன் அவன் வீட்டில் எதை எடுத்தாலும் பொன்னும் பொருளுமாகக் கிடைக்கும். நம் வீட்டைப் பார், தொடத் தொடக் குப்பையாக வந்து சேருகிறது…” என்று சலிக்க, புஷ்பாவோ தன் இடையில் கரங்களைப் பதித்து,

“பிள்ளைகள் என்றால் குப்பை போடத்தான் செய்வார்கள். குப்பை போடவில்லை என்றால் அது பிள்ளைகள் இல்லை. ரோபோ…” என்று மறுமொழிய, தயாளன் மனைவியைப் பார்த்து முறைத்தார்.

“ஏன் சொல்லமாட்டாய்… அவர்களைக் கெடுத்து வைப்பதே நீதானே…” என்று குற்றத்தைத் தன் மனைவி மீது தைரியமாகப் போட, புஷ்பாவோ ஆத்திரத்தோடு தன் கணவனை உறுத்துப் பார்த்தார்.

“என்னது நானா? ஏன் சொல்ல மாட்டீர்கள்… அவர்களைக் கண்டிக்க எப்போதாவது விட்டிருக்கிறீர்களா…? அவர்களைத் திருத்த முதலே, ஐயோ…! குழந்தைகளைத் திட்டுகிறாயே… நீயெல்லாம் தாய்தானா’ என்று தடுப்பது யாராம்… நீங்களா இல்லை பக்கத்து வீட்டுக் காரனா…?” என்றார் கடுமையாக.

“என்னது பக்கத்துவீட்டுக்காரனா? உனக்குக் கட்டளையிட அவன் யார்? அவனுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது. நான் எல்லாம் அவன் வீட்டு மனைவிக்குக் கட்டளை போட்டுக்கொண்டா இருக்கிறேன்… பொறு… இன்று பொழுது சாய்வதற்குள் அவனிடம் நாக்கைப் பிடுங்குவது போல நான்கு கேள்விகள் கேட்கிறேன்…” என்று சண்டைக்கு வரிந்துகட்டிக்கொண்டு வர, அதைக் கேட்டுக் கிண்டலாகச் சிரித்தார் புஷ்பா,

“அது ஏன் சாயங்காலம் போவான்… இப்போதே போய் நன்றாகக் கேட்டுவிட்டு வருவதுதானே… ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிற்கவே வக்கில்லையாம், ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்…” என்றதும், அதைக் கேட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தர் தயாளன்.

“ஹீ… ஹீ… அதில்லைடி… அவன் மூஞ்சையை இரவிலேயே பார்க்க முடியாது. இதில் பகலில் பார்த்தால் என் நிலை என்னாவது?. கொரொனாவை மனித உருவில் பார்த்தது போல ஒரு மூஞ்சியை வைத்துக்கொண்டிருக்கும் அவனோடு பேசினால் அந்தக் கொரோனா என்னைப் பிடித்துக் கொள்ளாது?” என்றார் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல.

அதைக் கேட்டு க்ளுக் என்று சிரித்தார் புஷ்பா.

அது ஒன்றுமில்லை, பக்கத்து வீட்டில் இப்போதுதான் யாரோ சீனர்கள் புதிதாகக் குடிபெயர்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் நல்ல மாதிரிதான் இருந்தது. நாள் போகப் போக, எத்தனையோ வருடங்களாக இருக்கும் இவர்களிடமே, குப்பைத் தொட்டியை அங்கே தள்ளி வை, வாகனத்தை எங்கள் வீட்டிற்கு முன்னால் நிறுத்தாதே, உன் பிள்ளைகளை எங்கள் வீட்டுப் பக்கமாக வந்து விளையாடவேண்டாம் என்று சொல், சும்மா சுமா பந்தை எங்கள் வீட்டுப்பக்கமாக எறிகிறார்கள். குழந்தைகளைக் கண்டித்து வை… உங்கள் வீட்டிலிருந்து இரவில் நிறையச் சத்தம் வருகிறது… எங்களால் தூங்க முடியவில்லை என்று ஆயிரம் புகார்கள் வாசிக்கத் தொடங்க, அன்றிலிருந்து அதிகாரப்பூர்வமற்றதாக இவர்களின் பரம எதிரியாகிப் போனார்கள் அந்தப் பக்கத்து வீட்டினர்.

“உங்களுக்கு வாய் மட்டும் இல்லையென்றால் காக்கா எப்போதோ கொண்டு போயிருக்கும்…” என்றார் சிரிப்பை அடக்காமல்.

“இல்லை என்றாலும் கொண்டுபோகாது புஷ். ஏன் என்றால், இங்கேதான் காக்கா இல்லையே…” என்று கூற, தன் தலையில் அடித்த புஷ்பா,

“சரி சரி விரைவாகச் சுத்தப்படுத்துங்கள்… விது இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவாள். ஏதோ விடுப்பு என்பதால் கொஞ்ச நாட்கள் எங்களோடு தங்கினாள். இனி அடுத்த விடுப்புக்குத்தான் இங்கே வருவாள்.” என்று முணுமுணுத்தவாறு திரும்ப, தயாளனோ, மீண்டும் இயந்திரத்தை உயிர்ப்பித்தவாறு, தன் மனைவி போன திசைக்கு ஏற்ப அதைத் திருப்பியவாறு,

“அவளை அத்தனை தொலைவுக்குச் சென்று படிக்க ஏன் விட்டாய்… நம் சதி நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாமல் நம்மோடு இருந்து படித்தது போல, இவளும் இங்கிருந்தே படித்திருக்கலாம். நீதான், ஆசைப்படுகிறாள் போகட்டும் என்று ஒட்டாவா வரை அனுப்பி வைத்திருக்கிறாய்..!” நேரம் பார்த்துக் காலை வார, திரும்பித் தன் கணவனை முறைத்த புஷ்பா,

“அது சரி… மூத்தவள் நம் கைகளுக்குள் இருந்து வளர்ந்ததால்தான் உலகம் தெரியாமல் இருந்துவிட்டாள். ஒரு பிரச்சனை என்றால், அதை எப்படிச் சுமுகமாகக் கையாள்வது என்றும் தெரியாது… யோசிப்பதில்லை… புத்தியில் உதிப்பதை வடிகட்டாமல் அப்படியே கொட்டிவிடுவாள். இவளும் அப்படி இருக்கக் கூடாது என்றுதான் உலகத்தைப் புரிந்துகொள்ளட்டுமே என்று தனியாகத் தங்கிப் படிக்க அனுப்பி வைத்தேன். அது யதவறா? ” என்றார்.

“ஆனால் இங்கிருந்து ஐந்து மணி நேரப் பயணம் புஷ்… பாவம், விடுப்பு கிடைத்தால் மட்டும்தானே இங்கே வர முடிகிறது… சத்தியும் இல்லாமல், இவளும் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறதுமா…” என்று வெறிச்சோடிப்போன வீட்டைச் சுத்தவரப் பார்த்தவாறு அவர் கூற, புஷ்பாவோ, சமைத்து முடித்த காய்கறிகளைப் பெட்டிகளில் பிரித்துப் போட்டுக் கட்டியவாறு,

“எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது தயா… சத்திக்குப் பிறகு இவளும் தொலைவுக்குச் சென்றது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வதற்கான பயிற்சியும் வேண்டித்தானே இரக்கிறது. அவர்களின் முன்னேற்றத்திற்குப் பெற்றவர்கள் நாங்களே தடையாக இருக்க முடியுமா? மூத்தவளின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இவளாவது ஜெயிக்கட்டும் தயா… இவளுக்குப் பிறகு வசந்தன், ரகுநந்தன், பிரபஞ்சன், ரஞ்சனி என்று இருக்கிறார்களே. இவர்களும் ஒவ்வொருத்தராகத் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துப் போனதன் பின், நானும் நீங்களும் மட்டும் தனியாகத்தான் இருக்கப் போகிறோம்… அதற்கு இப்போதே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மெய்யான வருத்தத்துடன் கூற,

“அது உன்மைதான்… ஆனால் அதற்குக் காலங்கள் இன்னும் இருக்கிறதே… இப்போதே அவர்களைத் தொலைவுக்கு அனுப்பவேண்டுமா என்ன? ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் புஷ், மற்ற நால்வரையும் தொலைதூரத்திற்கு அனுப்பப் போவதில்லை. அப்பப்பா பிள்ளைகள் தொலைவுக்குப் படிக்கப் போவதும் போதும், பெற்றவர்கள் படும் பாடும் போதும். எப்போது குழந்தைகள் நம்மோடு வந்து தங்குவார்கள் என்று காத்திருக்கவேண்டியது. வந்து தங்கும் நேரத்தில், கொண்டுபோவதற்குப் பொருட்கள் வாங்கவென்று அங்கும் இங்குமாக ஓடித் திரிய வேண்டியது. வந்து தங்கும் இரண்டு நாட்களும் நிம்மதியாக அவர்களோடு நேரம் செலவழிக்க முடிகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. போகும் நேரத்தில் தொகை தொகையாகச் சமைத்து இதோ இப்படி அடுக்கி வைப்பதிலேயே முழு நேரமும் போகிறது” என்றவாறு தன் மனைவி கட்டிய பெட்டிகளை எடுத்துப் பைகளில் அடுக்கத் தொடங்க,

“என்ன செய்வது, பிள்ளைகளின் எதிர்காலத்தின் நன்மைக்காக இப்படிச் சிரமப்படவேண்டித்தான் இருக்கிறது…” என்றார் புஷ்பா பெருமூச்சுடன்.

என்னதான் சொன்னாலும், மனதில் உள்ள குறைகளை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது போல, மற்றவர்களுடன் பேச முடிவதில்லை. அதுவும் சமர்த்தி அருகேயிருந்தால், புஷ்பாவுக்கு வேலைப் பழுவே தெரியாது. அவள் வேலை செய்யாவிட்டாலும் கைகளுக்குள்ளும் கால்களுக்குள்ளும் சுழன்று திரிவாள். அவளுடைய அலட்டல்களைக் கேட்பதிலேயே வேலைப் பழு பெரிதாக அவருக்குத் தெரிவதில்லை.

விதற்பரை சமர்த்தியைப் போல அல்ல. அவள் அமைதியானவள். சற்று எதார்த்தமானவளும் கூட. சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைச் சுலபத்தில் மாற்றிக் கொள்ளக் கூடியவள். இலகுவாகப் பிறரின் மனநிலையைப் புரிந்துகொள்ளக் கூடியவள். அதனால்தான் அவளைப் பற்றிப் புஷ்பா பெரிதாக வருந்திக் கொள்வதில்லை. அவருடைய வருத்தம் எல்லாம் சமர்த்தியைப் பற்றியதே.

சந்தர்ப்ப சூழ்நிலையால் உத்தியுக்தனை விரும்பி மணந்தாலும், அவனோடு மகிழ்ச்சியாக வாழ்வாள் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், அவர்களுடைய நம்பிக்கையைப் பொய்யாக்கி, அவனோடு வாழ முடியாமல் பிரிந்து தனியாகச் சென்று விட்டாள். அதுவும் அதி தொலைவுக்கு. இப்படிப் பக்கத்தில் யாருமில்லாமல் தனியாகத் அவசரத்திற்குக் கூட உடனே போக முடியாத தொலை தூரத்திற்கு அவள் சென்றதை நினைத்து புஷ்பா வருந்தாத நாளில்லை.

இப்போதும் அவளை நினைத்தால் புஷ்பாவின் விழிகளில் கண்ணீர் தோன்றும். தயாளனும் அதை உணர்ந்தவர் போல,

“சத்தியும் விதுவும் இல்லாமல் வீடு வீடாகவேயில்லை புஷ்…” என்றார் பெரும் வருத்தத்தோடு. திரும்பி அவரைப் பார்த்துப் புன்னகைத்த புஷ்பா,

“எல்லாம் சரியாகிவிடும் தயா… நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை…” என்று கூற, தன் தோள்களைக் குலுக்கிய தயாளன்,

“நம்பித்தானே ஆகவேண்டும். வேறு வழி?” என்றவர், தன் தலையை உலுப்பி, அதிலிருந்து விடு படுபவர் போல,

“அதை விடு, எத்தனை மணிக்குப் பேருந்து நிலையத்திற்குப் போகவேண்டும்?” என்று கேட்டார்.

“பதினொரு மணிக்கு அங்கே இருக்கவேண்டும்…” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, அந்த வீட்டின் மேல்மாடியில் உள்ள அந்தக் குட்டியறையில், அலங்காரத்தை முடித்துக்கொண்டு கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள் அவள்.

கார்மேகம்தனை பிய்த்து வைத்திட்ட திரண்ட குழலோ

பிறைதனை அறுத்துச் செய்திட்ட நுதலோ!

மாறனின் அம்புதனைப் பறித்து ஒட்டிட்ட புருவங்களோ!

ஆழ்கடலில் பெற்ற கயல்தனை தைத்திட்ட விழிகளோ!

மாசற்ற எள்ளுப்பூ கோர்த்திட்ட நாசியோ,

தேனில் ஊறிய மாங்கனிதான் உதடுகளோ

குறையற்ற சங்குதனைக் கழுத்தாய் ஆக்கிட்டனரோ! அப்பப்பா,

மூங்கில் தோள்களும், கனிக்கூடை மார்புகளும், அதைத் தாங்கா ஒடிந்துவிடும் இடையும், விழா இடையைத் தாங்கி நின்ற வாழைத் தொடைகளும்… அடடா… எத்தனை அழகு.. பெண்களுக்கே இலக்கணம் அவள்தானோ?

இத்தனை அழகாய் இருக்கிறோம் என்கிற சிந்தை எதுவும் இன்றிக் கண்ணாடியை மீண்டும் பார்த்தாள் விதற்பரை. தயாளன் புஷ்பாவின் அன்பு மகள். சமர்த்தியின் ஆசை மருமகள்.

அந்தக் குளிரில் பயணிப்பதற்குத் தோதாய், கரிய நிறத்தில் தடித்த பான்ட் அணிந்திருந்தாள். அதற்கு ஏற்ற வெண்ணிறத்தில் தடித்த சுவட்டர். புஷ்பாவின் கண்டிப்பான வளர்ப்பினால் இன்னும் அத்தனை நவநாகரீக உலகத்திற்குள் நுழையாத, அலங்காரம். முகப்பூச்சில் அத்தனை ஆர்வமில்லை என்பதை எடுத்துக்காட்டும் வெற்று முகம். கண்களில் கூட மையில்லை. ஆனாலும் மையிட்ட விழிகள் போல அடர்ந்த கண்ணிமைகள். இடைவரை தொங்கிய அடர்ந்த முடியை ஏதோ புதுவிதக் கொண்டையாகக் கட்டியிருந்ததால், முடிகள் சற்று வெளியே வந்து அங்கும் இங்கும் கிளம்பிக் கிடந்தாலும், அவளுடைய அந்த வட்ட முகத்திற்கு அது மிகப் பொருத்தமாகவே இருந்தது. சொல்லப்போனால், முதிர்ச்சி அடைந்தவள் போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், இன்னும் சின்ன விடயங்களைக் கண்டாலும் துள்ளிக் குதிக்கும் பருவ மங்கைதான் அவள்.

கல்விக்காகத் தொலைதூரம் போயிருந்தாலும், தாய் தந்தையின் மீதிருந்த அளப்பரிய அன்பாலும், அரவணைப்பாலும், பாதுகாப்பு நிறைந்த கூட்டைவிட்டு வெளிவராது, தனக்கென்ற ஒரு கட்டுக்கோப்பில் இதுவரை வாழ்ந்து வருபவள். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தங்கிப் படிப்பதால் நண்பர்களும் அதிகம்தான். ஆனாலும் அவர்களின் மாறுபட்ட கலாச்சாரம் தனக்குள் புகாதவாறு மிகக் கவனமாக இருப்பவள். அதற்குக் காரணம் பலதாக இருந்தாலும், முக்கியமான காரணம், அவள் மீது அளவில்லா நம்பிக்கை வைத்திருக்கும் தாய் தந்தையருக்கு அவள் செய்யும் நன்றிக்கடன். பெற்றோம் வளர்த்தோம் என்றில்லாமல் உயிரைக் கொடுத்து வளர்த்தவர்கள் அல்லவா தாய் தந்தையர். அவர்களுக்காக ஒரு பிள்ளையாய் அவள் செய்யும் நன்றிக்கடன், இது மட்டுமாகத்தானே இருக்க முடியும்.

மீண்டும் ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு? இனி புறப்படவேண்டியதுதான், என்பதை உணர்ந்தவளாக, ஆடைகள் உள்ளடக்கிய பொதியைத் தூக்கி வலது தோளில் போட்டவாறு வெளியே வந்தாள்.

அப்போதுதான் தூக்கத்தை விட்டு எழுந்த வசந்தன் பெரிய கொட்டாவி ஒன்றை வாயைப் பிளந்து விட்டவாறு சகோதரியைப் பார்த்து,

“எங்கே கிழம்பிவிட்டாய் இந்த அதிகாலையில்…” என்றான் அரைவாசிச் சொற்களை விழுங்கியவாறு. அதைக் கண்டு புன்னகையுடன் தன் தம்பியை நெருங்கி, அவனுடைய நடு மண்டையில் பலமாக ஒரு கொட்டு வைத்து,

“அதிகாலையா… நேரம் என்ன தெரியுமா? பத்தரை… இப்போது எழுந்துவிட்டு அதிகாலை என்கிறாயே… இரு அம்மாவிடம் சொல்கிறேன்…” என்றவாறு கீழே இறங்கத் தொடங்க, தன் சகோதரி கொட்டியதால் வலித்த தலையை வருடிக் கொடுத்தவாறு,

“என்ன விது…? இத்தனை விரைவாகக் கிளம்பிவிட்டாய்? இன்னும் கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டுப் போகலாமே…” என்று நிஜமான வருத்தத்துடன் கேட்டான் வசந்தன்.

திரும்பித் தன் தம்பியைப் பார்த்துக் கனிவோடு சிரித்தவள்,

“இல்லைடா இன்னும் இரண்டு நாட்களில் பரீட்சை வருகிறதே… போக வேண்டும்… முக்கிய ஒப்படை செய்து முடிக்க வேண்டும்… அதைச் செய்து கொடுக்கவில்லை என்றால் என் மதிப்பெண்ணில் கை வைத்துவிடுவார்கள்” என்றவாறு கீழிறங்கத் தொடங்க,

“ஏய் இரு இரு…” என்று அவசரமாகத் தடுத்தான் வசந்தன்.

அவள் நின்று என்ன என்பது போலப் பார்க்க, அவளை நெருங்கியவன், அவளுடைய தலையிலிருந்த கீழே விழ முயன்றுகொண்டிருந்த கிளிப்பைக் கழற்றி, வேண்டும் என்றே மண்டையோட்டிற்குள் நுழைப்பது போல, அழுத்திக் கொளுவி விட, அது கொடுத்த வலியில்,

“ஐயோ… அம்மா…” என்று அலறினாள் விதற்பரை. திரும்பி ஓங்கி அவன் தோளில் ஒரு போடு போட்டுவிட்டு,

“கிராதகா… வேண்டும் என்றே செய்கிறாயா?” என்று மேலும் மேலும் அவனைத் தாக்க, அவனோ கொசு கடித்த உணர்வில் அவளுக்கு முதுகு காட்டி நின்று,

“அடிக்கிறதுதான் அடிக்கிறாய், அப்படியே இடப்பக்கமாகத் தோளிலிருந்து பதினைந்து சென்டிமீட்டர் கீழே அடி… அரிக்கிறது…” என்றான் சுகமாய் விழிகளை மூடி.

ஆத்திரத்தில் முகம் சிவக்க,

“ர்… இருடா வந்து வைத்துக் கொள்கிறேன்…” என்றுவிட்டுப் படிகளில் இறங்க, அவனும் சிரித்தவாறே தன் சகோதரிக்குப் பின்னால் சென்று.

“அதுதான் தெரியுமே இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்தப் பக்கம் வரமாட்டாய்…” என்றவாறு சகோதரியின் கொண்டையில் அங்கும் இங்கும் நீட்டியிருந்த முடியை மேலும் மேலும் இழுத்தவாறு வர,

“டேய் சும்மா இரேன்டா…” என்று சினந்தவாறு அவனை அடக்க முயன்றாள் விதற்பரை.

அவனோ தன் செயலைக் கை விடாதவனாக, வேண்டும் என்றே முடியைப் பற்றி இழுத்தவாறு,

“ஏய் ஒன்றில் ஒழுங்கா பின்னு, இல்லை கொண்டையைக் கட்டு… இதென்ன கோழி கிளறியது போல ஒரு கொண்டை.. இதெல்லாம் ஒரு நாகரிகம் என்று கட்டியிருக்கிறாயே… பார்த்துப் போ… குருவிகள் தங்கள் கூடு என்று நினைத்து முட்டை இடப்போகின்றன…” என்று கிண்டலடித்தவாறு வம்புக்கு இழுக்க, தன் தம்பி இழுத்துவிட்ட முடியைச் சரியாக்கிவிட்டவாறே,

“டேய்… கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாயா? தலை வார நேரமில்லைடா… அதுதான் இப்படிக் கொண்டை போட்டிருக்கிறேன். பார்ப்பதற்கு நாகரிகமாகவும் தெரியும். வசதியாகவும் இருக்கும். இதெல்லாம் ஒட்ட நறுக்கும் உனக்கு எங்கே தெரியப் போகிறது…” என்றவள் பின் என்ன நினைத்தாளோ, திரும்பித் தன் தம்பியைப் பார்த்து,

“பெண்கள் அலங்காரத்தில் மூக்கை நுழைக்க எந்த ஆண்களுக்கும் அதிகாரமில்லை…” என்றாள் கறாராய்.

“அது சரி… உன் வயது பெண்கள் அலங்கரிப்பதே ஆண்களைக் கவரத்தானே. இது நான் சொல்லவில்லை… உளவியல் சொல்கிறது… அப்படிப் பார்த்தால், உங்கள் அலங்காரத்தை விமர்சிக்கும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு…” என்று பதில் கொடுக்க, அதைக் கேட்டு மெல்லியதாக நகைத்தவள்,

“தம்பி எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்… இப்போது பெண்களும் பெண்களை ரசிக்கலாம் தெரியும்தானே… அதே போல ஆண்களைப் பெண்கள்தான் ரசிக்கவேண்டும் என்றில்லை. ஆண்களும் ரசிக்கலாம்…” என்று கூற, வீழிகளை விரித்த வசந்தன்

“அவளா நீயி…” என்றான் கிண்டலாய். அதைக் கேட்டுப் பக்கென்று சிரித்தாலும், உடனே முகம் வாடிப்போனது விதற்பரைக்கு.

ஒரு முறை எல்லோரும் கூடியிருந்த காலத்தில், இதே பேச்சு சமர்த்திக்கும் இவளுக்கும் இடையில் வந்தது நினைவுக்கு வந்தது. அப்போது எத்தனை குதுகலமாக இருந்தார்கள். என்று சமர்த்தியின் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாகிப் போனதோ, அப்போதே இந்த வீட்டின் மகிழ்ச்சியும் சற்றுத் தொலைந்துதான் போயிற்று.

விதற்பரைக்குச் சமர்த்தி அத்தை முறை என்கிறதையும் மீறி உற்ற தோழியாகத்தான் இருந்தாள். இருவருக்கும் இடையில் எந்த ரகசியங்களும் இருந்ததில்லை. எத்தனை ஆண்கள் இவர்களைக் கவர முயன்றார்கள் என்பதிலிருந்து, எத்தனை ஆண்கள் நன்றாக இருந்தார்கள் என்கிற விவாதம் வரை இருவரும் சேர்ந்தே நடத்துவார்கள். மனதில் இருக்கும் சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் சமர்த்தியிடம் கூறிவிடுவாள். இருவரும் அதைப் பற்றிப் பேசும்போது, மனம் நிம்மதியடையும். ஆனால் இப்போது, இருவருக்கும் இடையில் பல மைல் தூர வெற்றிடம் வந்துவிட்ட உணர்வு.

வாழ்க்கையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றி விடுகிறது. அதற்குப் பழக்கப்படுத்தியும் விடுகிறது.

பெருமூச்சுடன் சமையலறைக்கு வர, அங்கே புஷ்பா, அவள் கொண்டு செல்வதற்கு வேண்டிய பொருட்களைப் பொதியிட்டுக் கட்டி முடித்துவிட்டிருந்தார்.

தயாராக வந்த மகளைக் கண்டதும், சிடுசிடுப்பு மறைந்து, முகம் மலர்ந்தது புஷ்பாவிற்கு. தயாளனோ, தன் மகளின் அந்த எளிமையான அழகில் கவரப்பட்டவராய்,

“மிகவும் அழகாக இருக்கிறாய் தங்கம்…” என்று கூறி மகளை உச்சி முகர, இவளோ விழிகளில் குறும்புப் புன்னகையுடன் தந்தையைப் பார்த்து,

“உண்மையாகவா… அப்படியானால் இப்போது சொல்லுங்கள்… நான் அழகா, இல்லை அத்தை அழகா…” என்றாள். அதைக் கேட்டதும், ஒரு கணம் திருத் திரு என்று விழித்தவர்,

“இப்படிக் கேட்டால் என்ன சொல்லட்டும். இரண்டு கண்ணில் எந்தக் கண் அழகு என்று கேட்டால் எந்தக் கண்ணைச் சொல்வேன்… இரண்டு கண்களும் ஒரே போல அழகுதான் கண்ணம்மா…” என்று சமாளித்த தந்தையைச் செல்லமாக முறைத்தவள்,

“செல்லாது செல்லாது… ஒன்றைத்தான் சொல்ல வேண்டும்… நானா, அத்தையா அழகு…” என்றாள் அதிலேயே. அதைக் கேட்ட புஷ்பாவும் மகளைப் பார்த்து,

“இதில் என்ன சந்தேகம்… என் சத்திதான் அழகு… அவள்தான் பார்ப்பதற்குப் புஷ்டியாய் செழிப்பாய் இருப்பாள். உன்னைப் பார்… காய வச்ச கருவாடு போல…” என்று கூறத் திரும்பித் தன் தாயை முறைத்து,

“என்னது காய வச்ச கருவாடா?” என்றாள் வாயைப் பிளந்து.

தயாளனோ திரும்பித் தன் மனைவியை முறைத்துப் பார்த்தார். பின் தன் மகளிடம்,

“உன் அம்மாவிற்குச் சாப்பாடே கிடைக்காது பார்… உன் அத்தை ரம்பா என்றால் நீ ஊர்வசி. உன் அத்தை பார்வதி என்றால், நீ உமை. உன் அத்தை ரோஜா என்றால், நீ அடுக்கு மல்லிகை. உன் அத்தை பலாக்கனி என்றால், நீ மாங்கனி… இருவருமே வேறு வேறு வகையில் கொள்ளை அழகுதான்மா… அத்தை கொஞ்சம் பூசினால் போல இருப்பாள். நீ மலர்க் கொடி போலக் கொஞ்சம் மெல்லியதாய் இருக்கிறாள். அதற்காக நீ அழகில்லை என்றாகிவிடுமா?” என்று தந்தை தன் மகளுக்காக வரிந்து பேச,

“அப்போ அத்தையை விட நான்தானே அழகு…” என்றாள் விதற்பரை குதுகலமாக.

இவளோ பெற்ற மகள். அவள் வளர்ப்பு மகள். ஆனால் இருவருமே அவர் உயிராயிற்றே. இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று எப்படிச் சொல்வார்? தயங்கி நிற்க, தன் மகளை நெருங்கிய புஷ்பா,

“ப்ச்.. இப்போது இந்த ஆராய்ச்சி தேவையா? இருவருமே அழகுதான்… போதுமா…” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றாள்.

“என்னவென்றாலும், என்னை விட அத்தை ஒரு படி மேல்தான் இல்லையா…” என்றாள் மெல்லிய குறையுடன்.

“எனக்குப் பொய் சொல்லப் பிடிக்காது விது… எனக்கு உன் அத்தை ஒரு படி மேலேதான். அவளுக்கு ஆறு மாதம் இருக்கும்… ஒரு கயிற்றில் கட்டி, மேசையில் பிணைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த கணம், அந்தக் காட்சியைக் கண்ட நொடி… என் வயிற்றில் அவள் உதிக்கவில்லையே தவிர, என் உள்ளத்தில் பிறந்தாள்… அவளை எடுத்து என் மார்போடு அணைத்தபோது, எக்காலத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை வருந்தவிடக்கூடாது என்று சபதம் எடுத்தேன். இன்று வரை அதைக் கடைப்பிடித்துக்கொண்டும் இருக்கிறேன்… இதோ இந்தக் கணம் வரை அவளைத் திட்ட எனக்கு வாயே வராது தெரியுமா… அவளைக் கைகளில் பொத்திப் பொத்திப் பாதுகாத்ததால் தானோ என்னவோ, இன்னும் உலகம் தெரியாமலே இருக்கிறாள். ஆனால் அவள் எங்கள் தேவதைம்மா… அவளுக்கு நிகராக யாரும் வர முடியாது…” என்று பெரும் வலியோடு கூறிய அன்னையை இரக்கத்தோடு பார்த்த விதற்பரை,

“இத்தனை அன்பை வைத்திருப்பவர்கள் எதற்காக அத்தை எங்கோ ஒரு முலையில் தனியே இருக்க அனுமதிக்கிறீர்கள்… போய் அழைத்து வருவதுதானே…” என்று கூற,

“இல்லைம்மா… இனி அவள் எங்கள் மகள் என்பதை விட, இன்னொருத்தரின் மனைவி. இதுவரை காலமும் நாம் அவளைக் காத்துவிட்டோம். இனி அவள் தன்னைக் காத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? இப்போதே மனதிற்குள் மெல்லிய குற்ற உணர்ச்சி இருந்து வருகிறது. எங்களையே சுற்றி வந்தபோது, அதைத் தடுத்து அவளாக வாழக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டுமோ, அவளையும் சுதந்திரமாக விட்டிருந்தால், பிரச்சனைகளைச் சரியான முறையில் கையாளக் கற்றிருப்பாளோ என்று மனம் அடிக்கடி யோசிக்கிறது…” என்று பெருமூச்சுடன் கூற, இரக்கத்தோடு தன் அன்னையைப் பார்த்தாள் விதற்பரை.

சமர்த்தி இவளைப் போல அல்ல. அவள் எதைச் சொன்னாலும் நம்பிவிடக் கூடியவள். அவளைச் சுதந்திரமாக விட்டிருந்தால், இந்தப் பயங்கரமான உலகில் சுலபமாகவே தொலைந்து போயிருப்பாள்… அன்னையின் கரங்களில் வளர்ந்ததால்தான், எந்தச் சிக்கலிலும் அவள் மாட்டவில்லை. அதை உணர்த்தும் விதமாக அன்னையைப் பார்த்தவள்,

“அம்மா… அத்தையின் உலகமே நீங்களும் அப்பாவும்தான்… இதை விட்டு வெளியே சென்றிருந்தால், அவளால் வாழ்ந்திருக்க முடியாது…” என்று கூற, அதைப் பெருமூச்சுடன் ஏற்றுக்கொண்டவர் போலத் தலையை ஆட்டிவிட்டு, நேரத்தைக் கணக்கில் கொண்டவராக,

“அடடே… நேரம் கடக்கிறது…” என்று பதறியவாறு, மேசையில் வைத்திருந்த பையை இழுத்து எடுத்து அதை விதற்பரையிடம் நீட்டி,

“இந்தா…! ஒரு மாதத்திற்குப் போதுமான கறிகளைச் சமைத்து வைத்திருக்கிறேன். ஐந்து மணி வரை தாக்குப் பிடிக்கும். மறக்காமல் போனதும், குளிர் பெட்டியில் வைத்துவிடு. இல்லையென்றால் கெட்டுவிடும்…” என்றவர் அவள் தோளில் கிடந்த பையைக் கண்டு, “எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டாயா? கைப்பை எடுத்தாயா? பணம் இருக்கிறதுதானே…” என்று நெஞ்சம் கனத்தாலும் அதை வெளிக்காட்டாமல் கேட்க, தன் தாயை நெருங்கி இறுக அணைத்துக் கொண்ட விதற்பரைக்கு எப்போதும் போலக் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகத் தொடங்கியது.

“ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு மா…” என்றவள் அவரை விடுவித்து, “இன்னும் நான்கு மாதங்களில் இன்டெர்ன்ஷிப் தொடங்கிவிடும். முயன்றவரை இங்கேயே எடுக்க முயல்கிறேன்மா…”

“வேண்டுமானால் உத்தியுக்தன் தம்பியிடம் கேட்டுப் பார்ப்போமா தங்கம்… அவருடைய வேலைத்தளத்தில் கிடைத்தால் பாதுகாப்பாக இருக்குமே…” என்றார் தயாளன். அதைக் கேட்டதும், பலமாக மறுத்தவள்

“இல்லைப்பா… நீங்கள் கேட்டீர்கள் என்கிற காரணத்திற்காகவே எனக்கு வேலை கொடுப்பார்தான். ஆனால் வேண்டாம்பா… தேவையற்று அவரிடம் கடமைப்பட எனக்குப் பிடிக்கவில்லை. தவிர என் திறமைக்குத்தான் வேலை கிடைக்கவேண்டுமே தவிர, இன்னொருத்தரின் செல்வாக்கு மூலம் வேலை கிடைக்க கூடாது. தவிர அவர் வேலை கொடுத்தார் என்கிற நன்றி உணர்ச்சி என்னை ஒரு அடிமையாக மாற்ற பார்க்கும். அது வேண்டாமே” என்று மறுக்க, தன் மகள் கூறியதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டார் தயாளன்.

“சரிம்மா உன் விருப்பம்… சரி நேரமாகிறது வா கிளம்பலாம்…” என்றவர் தன் பான்ட் பாக்கட்டிலிருந்து கத்தைப் பணத்தை எடுத்து மகளிடம் நீட்டி,

“இந்தா… இதை வைத்துக்கொள்…” என்றார். அவசரமாக மறுத்தவள்,

“எதுக்குப்பா பணம்.. என்னிடம் இருக்கிறது… நான்தான் பகுதிநேரமாக வேலைக்குப் போகிறேனே… பிறகு எதற்கு இது…” என்று கடிய, தயாளனோ தன் மகளைக் கோபமாகப் பார்த்து,

“ப்ச்… இதென்ன பிடிவாதம் புதிதாக… எப்போதும் தருவதுதானே… இது என் மகளுக்கு நான் கொடுக்கும் பணம்… அதை நீ எப்படி மறுப்பாய்… பிடி இதை…” என்றவர் அவள் கரத்தைப் பற்றி அதில் பணத்தை அழுத்தி வைத்தவாறு, அவள் நெற்றியில் உதடுகளைப் பதித்து எடுத்து,

“கவனமாக இருக்கவேண்டும் கண்ணம்மா… தேவையற்றுப் பல்கலைக் கழகங்களில் நடக்கும் எந்த விழாக்களுக்கும் போகாதே… ஏதேதோ சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டால் வயிறு கலங்குகிறது… படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்து சரியா… ஏதாவது பிரச்சனை என்றால் என்னை அழை, ஓடி வந்துவிடுவேன்…” என்று கூறித் தன் அன்பு மகளை அணைத்து விடுவிக்க, தன் தந்தையின் கன்னத்தில் உதடுகளைப் பொருத்தி எடுத்த விதற்பரை,

“நீங்கள் சொன்னது போலவே நடக்கிறேன்பா…” என்றதும், தயாளன் கலங்கிய கண்களை அவசரமாக மறைத்தவாறு,

“சரி சரி புறப்படு…” என்றுவிட்டு அவளுடைய பையை வாங்குவதற்காக் கரத்தை நீட்ட, உடனே முந்திக்கொண்ட வசந்தன், பையைத் தானே வாங்கிக் கொண்டு, தந்தையின் வாகனத்தை நோக்கி நடந்தான்.

தொடர்ந்து சகோதரி புறப்படுகிறாள் என்றதும் அத்தனை பேரும் அவளை வழியனுப்பக் கீழே வந்துவிட்டிருந்தனர்.

குளிரிலிருந்து தன்னைக் காக்கத் தடித்த ஜக்கட்டை அணிந்து ஜிப்பை இழுத்து விட்டவள், அருகே நின்றிருந்த ரகுநந்தனை அணைத்து விடுவித்தவாறு, அவனுடைய கரத்தில் தந்தை கொடுத்த பணத்தில் ஒரு ஐம்பது டாலரை யாருக்கும் தெரியாமல் திணித்து,

“கவனமாகப் படி, பார்த்து நடந்துகொள், அம்மா அப்பாவைக் கவனித்துக்கொள், இந்தப் பணத்தைப் பத்திரமாக செலவு செய்…” என்று கூறியவாறு பிரபஞ்சனுக்கும், ரஞ்சனிக்கும் இருபது டாலர்களைத் திணித்து ரகுநந்தனுக்குக் கூறியதையே அவர்களிடமும் சொல்லிவிட்டுத் தந்தை தாயோடு வாகனத்தின் அருகே வருவதற்கு வசந்தன் பையை வாகனத்தின் ட்ரங்கிற்குள் பூட்டியிருந்தான்.

அவனையும் நெருங்கி, அவனுடைய கரத்தில் இரண்டு ஐம்பது டாலர்களை வைத்தவள்,

“கொஞ்சம் கவனமெடுத்துப் படி வசு… இந்த முறை நீ எடுக்கும் மதிப்பீடுதான் பல்கலைக் கழகத்திற்குப் புலமைப்பரிசிலைத் தீர்மானிக்கப் போவது. அம்மாவும் அப்பாவும் நம்மை வளர்க்க நிறையச் சிரமப்பட்டுப்போனார்கள். அவர்களை உள்ளங்கையில் நாம்தான் வைத்துத் தாங்க வேண்டும். அதற்கு நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நண்பர்கள் இருப்பது அவசியம். ஆனால், அளவோடு வைத்துக்கொள். புரிந்ததா…” என்று சகோதரியாய் தன் தம்பிக்கு அறிவுரை கூற, தன் சகோதரி கொடுத்த பணத்தை நன்றியோடு பெற்றுக்கொண்டவன்,

“நன்றிக்கா…” என்றவன் சகோதரி அறிவுரை கூறத் தொடங்கியதும், தன் காதுகளுக்குள் சுட்டுவிரலை நுழைத்து,

“ஐயையைய…! அம்மாவை விடப் படு கேவலமாக அறிவுரை கூறுகிறாயே… இந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்… முதலில் புறப்படு… விட்டால் கிருபானந்தவாரியாரையே தோற்கடித்துவிடுவாய்…” என்று கூறிவிட்டுப் பின் முகம் கனிய,

“கவலைப் படாதே… அம்மாவையும் அப்பாவையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். நீ ஒன்றும் வேற்றுக் கிரகத்திற்குப் போகவில்லை. பக்கத்தில் ஐந்து மணி நேரத் தூரத்தில்தான் இருக்கிறாய்… அதனால் போய் வா… பத்திரமாக இரு… என்ன வேண்டுமானாலும் உடனே என்னை அழை… என் நண்பனின் அண்ணனும் ஒட்டாவாவில்தான் படிக்கிறான். உதவி வேண்டுமானால் அவன் செய்வான்…” என்று கூற, புன்னகைத்தவாறே வாகனத்தின் கதவைத் திறந்தவள்,

“அடங்கடா… கடந்த ஒன்றரை வருடங்களாக யாருடைய உதவியும் இல்லாமல்தான் பயணப்படுகிறேன். இனியுமா தேவைப்படப் போகிறது…?” என்றவள் உள்ளே ஏறி அமர, வாகனத்தின் இயந்திரத்தை உயிர்ப்பித்த தயாளன், தன் மகளைப் பார்த்து

“எல்லாம் எடுத்து வைத்துவிட்டாய் தானே… புறப்படலாமா?” என்றார் உறுதி செய்யும் முகமாக.

இவள் தலையசைத்ததும், வண்டி பின்னோக்கிச் சென்று பின் முன்னேற, அதுவரை வண்டி சென்று மறையும் வரை, அத்தனை பேரும் சேர்ந்தாற்போல பார்த்துக்கொண்டே நின்றனர்.

What’s your Reaction?
+1
23
+1
6
+1
4
+1
1
+1
0
+1
0
Vijayamalar

View Comments

  • வாவ் சூப்பர் அடுத்த பாகமும் வந்திருக்கு 🥳🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

7 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago