Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-18

(18)

அவ்வியக்தன் புறப்பட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்துத்தான் விதற்பரைக்கு அவன் அங்கில்லாததே உறுத்தியது. எங்கே போனான்? யாரிடம் விசாரிப்பது? உத்தியுக்தன் வேறு கடந்த சில நாட்களாகச் சமர்த்தியைத் தேடி வருவதையும் நிறுத்தியிருந்தான். இந்த நிலையில் அவ்வியக்தனும் வரவை நிறுத்தினால் என்ன செய்வது? எப்படி அவனோடு பேசுவது? விபரத்தைக் கூறுவது?

உடனே கைப்பேசியில் அவ்வியக்தனோடு தொடர்புகொள்ள முயன்றாள். அந்தோ பரிதாபம், அழைப்பு போகவில்லை.

ஏன் போகவில்லை? இரண்டு மூன்று முறை முயன்று தோற்றவள், பொறுமையிழந்தவளாக,

‘நான் விதற்பரை… உங்களிடம் பேசவேண்டும்…’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் பார்த்ததற்கான அடையாளம் தெரிந்ததே தவிர அவனிடமிருந்து பதில் வரவில்லை.

மேலும் ஒரு கிழமை கழிந்தது.

அவனுக்கு பதில் போட்டு போட்டு இவள் கை ரேகை தேய்ந்ததுதான் மிச்சம்.

கடைசியாக,

“உங்களிடம் பேசவேண்டும்… மிக முக்கியம்…”, என்று அனுப்பிய பின்பு அவனிடமிருந்து வந்த செய்தியைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.

“எதற்காக திரும்பத் திரும்ப செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறாய். அதுதான் உன்னை விட்டு தூரமாக வந்துவிட்டேனே. பிறகு என்ன?” அவன் பதிலைக் கண்டு கண்கள் கலங்கினாள் விதற்பரை.

“ஏன் இப்படி சொல்கிறீர்கள். நமக்கிடையில் பேசிக்கொள்ள எதுவும் இல்லையா?” அந்த செய்தியை அடித்து அனுப்பும் போதே அழுகையில் கண்ணீர் கொட்டியது அவளுக்கு.

“நம்மிடம் பேச என்ன இருக்கிறது தற்பரை… அதுதான் அன்று என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் உன் அம்மாவோடு சென்றாய் பார். அந்த ஒரு செயலே போதுமே உன் பதிலை எனக்குக் கூற… இதையெல்லாம்   புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லையே… அது மட்டுமா, எத்தனை முறை அழைத்துப் பார்த்தேன்… உன்னிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்ற பிறகு, உன் முடிவைப் புரிந்துகொள்ள மாட்டேனா… இதை உன் வாயால் வேறு கேட்கவேண்டுமா? வேண்டாம்… விட்டுவிடு, உன் மறுப்பை, நீ சொல்லி அதைக் கேட்கும் சக்தி எனக்கில்லை… ஆனாலும் எனக்கு உன் மீது கோபமில்லை… என் பழைய வாழ்க்கை தெரிந்த பின்னும், என்னோடு சேர்ந்து வாழ ஒத்துக்கொள்வாய் என்று நான் எதிர்பார்ப்பது தவறுதானே… ரனி ஏற்கெனவே சுடச் சுட எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டாள் விதற்பரை… நீ சொன்னது போல நம் இருவரின் பாதைகளும் வேறு வேறுதான். நாம் இணைவது நடக்காத ஒன்றுதான்… அதனால் நம் வாழ்க்கையை நமக்குப் பொருத்தமான பாதையில் பயணிக்க விடலாம்… நீ உன் பாதையில் தெளிவாகத்தான் இருந்தாய்… நான்தான் சறுக்கிவிட்டேன்… இனி இந்த அவ்வியக்தன் எப்போதும் உன் வாழ்க்கையில் குருக்கே வர மாட்டான். தயவு செய்து என்னை இனி அழைக்காதே… முடிந்த வரை உன்னை மறக்க முயற்சி செய்கிறேன். உன் அழைப்பு அந்த முயற்சியைத் தரைமட்டமாக்கும்… அது உன்னை எண்ணித் தவிக்க வைக்கும்…. உன் அருகாமைக்காக ஏங்க வைக்கும்… என் படுக்கை முள் போலக் குத்தும், ஆனால் அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான். நீ எனக்குக் கிடைக்கமாட்டாய் என்று முழுதாக என் உள்ளம் ஏற்றுக்கொள்ளும் போது, நானும் மாறிவிடுவேன்… உன்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்…’ என்கிற குறுஞ்செய்தியைக் கண்டதும், இவளையும் அறியாது கண்ணீர் பொலபொல என்று வழியத் தொடங்கியது.

எல்லாம் கூடி வரும் நேரத்தில் தாளி உடைத்த கதையாக அல்லவா இருக்கிறது அவளுடைய நிலை. கடவுளே இவனுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது, எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான். இங்கே அவள் பட்ட சித்திரவதை அவளுக்கு மட்டுமல்லவா தெரியும். அன்னை வேறு கைப்பேசிய உடைத்த நிலையில் அவன் அழைத்தது இவளுக்கு எப்படித் தெரியும்?

உடனே நடந்தது அனைத்தையும் அவனுக்குப் பதிலாக எழுதி அனுப்ப நினைத்தவள், உடனே அதை அழித்து விட்டுக் கைப்பேசியைச் சற்று நேரம் முறைத்தாள்.

எத்தனை தைரியமிருந்தால், அவனாக அவளைப் பற்றிய ஒரு முடிவுக்கு வருவான்… வாடட்டும்… வதங்கட்டும்… எரிச்சலுடன் நினைத்தவளுக்கு அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று அறியவேண்டும் என்கிற வேகம் பிறந்தது.

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்?” என்று தட்டி அனுப்ப, அடுத்தக் கணம்,

“நீ விட்டுச் சென்றதும், உனக்காக வதங்கிக் கலங்குவேன் என்று நினைத்தாயா…? இப்போது இங்கே என் பெண்தோழியோடு மகிழ்ச்சியாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மனதில் பட்ட ரணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அருகாமையில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று அவனிடமிருந்த பதில் வர, இவளோ அதிர்ந்து போனவளாக, அந்தச் செய்தியையே வெறித்தாள்.

இங்கே அவனுக்காக இவள் துடித்துக்கொண்டிருக்க, அவன் அங்கே ஒருத்தியோடு மகிழ்ச்சியாகவா இருக்கிறான், ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர,

“யு xxxx xxxx xxxx xxxx” என்று முடிந்த வரை தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அவனைத் திட்டியவள், “ஐ கில் யு…” என்று ஆவேசத்துடன் பதில் அனுப்ப, அவனோ,

“அப்போதும் என் தோழியின் மடியில் மகிழ்ச்சியாகவே வீழ்வேன்…” என்று திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கண்டதும் இவளுடைய இரத்த அழுத்தம் உச்சத்தைத் தொட்டது. எத்தனை தைரியம் இவனுக்கு… அவளிடமே புதிதாக முளைத்துவிட்ட ஒருத்தியைப் பற்றிப் பேசுகிறான் என்றால், எத்தனை திண்ணக்கம் இருக்கவேண்டும். இருந்த ஆவேசத்திற்கு அவன் கழுத்தைப் பற்றி நெரிக்கவேண்டும் என்கிற சீற்றம் எழுந்தது.

சம்மதிக்கமாட்டாரோ என்று பயந்த அன்னை சம்மதித்த பின், இனி எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிற முடிவில் அழுத்தம் மறைந்து இன்புற்றிருக்க நினைத்தால், இவன் பெரிய அணுக்குண்டாக அல்லவா போடுகிறான்.

இங்கே இவள் பொறாமையிலும், ஆத்திரத்திலும் வெடித்துச் சிதறும் நிலையிலிருக்க, அவனோ,

“உனக்கொன்று தெரியுமா? பல வாட்டி என்னை மணக்கச் சொல்லி அவளிடம் கேட்டேன்… ஆனால், தன் கணவரைத் தவிர வேறு யாரையும் சிந்தையிலும் தொடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்…” என்று அடுத்தக் குண்டைப் போட, இவளுக்குத்தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகிப் போனது.

“என்னது… திருமணமான பெண்ணுடனா…” என்றவளுக்கு அருவெறுத்துக் கொண்டு வர, அவனோ,

“சோ வாட்… திருமணமான பெண்ணோடு மகிழ்ச்சியாக இருக்க முடியாதா என்ன?” என்றான். அதற்கு மேல் அதை நினைக்கக் கூடத் திடமில்லாதவளாக, “இனிமேல் என் முகத்தில் கூட விழிக்காதீர்கள்…” என்கிற பதிலோடு, கைப்பேசியை அணைத்தவளுக்கு ஓவென்று வந்தது.

அவனைக் காணவில்லை என்று ஏங்கித் தவித்துத் துடித்திருக்க, அவனோ, ஒரு பெண்ணோடு, அதுவும் திருமணமான ஒரு பெண்ணோடு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறானே… இது தெரியாமல் முட்டாள்தனமாக, அவனுக்காக வருந்தி…” என்று எண்ணியவளுக்கு அலையாய் எழுந்த வேதனையில் நெஞ்சம் விம்மி வெடித்துப் போனது. இனி அவன் தனக்கில்லை என்கிற மெய் புரிய, உலகமே அழிந்துவிட்டது போலத் துடித்துப்போனாள் விதற்பரை. பின் ஆத்திரத்துடன் தன் கண்களைத் துடைத்தவள், எழுந்தமர்ந்து நிமிர்ந்து,

போகட்டும்… அவனுக்காக இனி யாரும் இங்கே துடித்துப் பதைக்கப் போவதில்லை. எப்போது அவளுடைய நிலைமை புரியாமல் இன்னொரு பெண்ணை நாடிச் சென்றானோ, அவனுக்காக நிச்சயமாக அவள் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டுக் காத்திருக்கப் போவதில்லை. முடிவெடுத்தவளுக்கு அதை நிறைவேற்ற விடாமல் அழுகையும் வந்தது.

அவனுக்குக் காதல் வெறும் விளையாட்டுப் பொருளாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு அல்லவே. மெய்யாகவே காதலித்துத் தொலைத்து விட்டாளே. அவன் செய்த காரியத்தால் நெஞ்சம் வெடித்துவிடும் போல வலியில் கனத்துப் போகிறதே… ஆவேசத்துடன் தன் கண்களைத் துடித்தவளுக்கு உள்ளே வலியையும் மீறி ஆத்திரம் கனன்று விட்டு எரிந்தது.

அவன் அங்கே மகிழ்ச்சியாக இருக்கும்போது இவள் மட்டும் ஏன் அழுது கரையவேண்டும். இல்லை… அழக் கூடாது. ஆவேசத்துடன் தன் கண்களைத் துடித்தவள், ஆத்திரத்துடன் தன் கைப்பேசியில்,

“எனக்கும் திருமணம் முற்றாகிவிட்டது… விரைவில் திருமணம்…” என்று ஒரு செய்தியை அனுப்பிவிட்டுத் திரையை முறைக்க, அடுத்தக் கணம்

“வாழ்த்துக்கள்…” என்று பதில் வந்திருந்தது.

அதைக் கண்டதும் இவளுக்கு எரிகிற தீயில் எண்ணெய் விட்ட கதையாயிற்று.

“வாழ்த்துக்கள்… அவ்வளவுதானா… கோபம் இல்லை, வலியில்லை, குறைந்தது சிறு தவிப்பு கூட இல்லையே. அன்று, இவள் வேறு திருமணம் முடிக்கப் போகிறேன் என்றபோது, எப்படிக் கோபப்பட்டான். அடுத்த நாள் கூட நீ எனக்குத்தான், எனக்கு மட்டும்தான் என்று சொன்னானே… அதெல்லாம் பொய்தானா? அது சரி அதுதான் புதிதாக ஒருத்தி கிடைத்திருக்கிறாளே… அவள் போதாதா இவளை மறக்கடிக்க… கடவுளே… அவனால் இத்தனை சுதந்திரமாக இருக்கும்போது இவளால் மட்டும் ஏன் அது முடியவில்லை. ஏன் நெஞ்சு கொதிக்கிறது. கலங்குகிறது, அழுது துடிக்கிறது… நிஜமாகவே அன்னை சொன்னது போல, அவனுக்கு அவள் மீது காதல் இல்லையோ. அவள் கிடைக்கமாட்டாள் என்று தெரிந்ததும், சுலபமாகவே மறந்துவிட்டுச் சென்றுவிட்டானா…? நாம்தான் முட்டாள்தனமாக அவனை நினைத்துப் புலம்புகிறோமோ. தாங்க முடியாத வேதனையுடன் விழிகளை அழுந்த மூடிக் கிடந்தவளுடைய கைப்பேசியில் இன்னொரு செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. உடனே கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில்,

“உன் விருப்பத்தின் பெயரில்தானே இந்தத் திருமணம் நடக்கிறது?” என்று இன்னொரு கேள்வி வந்திருந்தது. இவளுக்குள் சுரு சுரு என்று எதுவோ ஏறியது.

“எனக்கென்ன பதினாறு வயதா? என் விருப்பமின்றித் திருமணம் பேச…?” என்று இன்னொரு பதிலை அனுப்பினாள் விதற்பரை. சற்றுப் பொறுத்து,

“யார் அவன்…” என்று அடுத்தக் கேள்வி சுருக்கமாக வந்தது.

“யார் அவன் என்றால்… அவர் ஒரு ஆண்… அதாவது திருமணத்தை விரும்பும் ஒரு ஆண்…” என்றாள் இவள்.

“ஷட் அப்… அன்ட் டெல் மி… ஹூ த xxxx இஸ் ஹீ…” என்கிற சீற்றம் மிகுந்த அவனுடைய வார்த்தைகளைத் தாங்கிக் குறுஞ்செய்தி வர, அதைக் கண்டவளின் முகம் பளிச்சிட்டது.

பொறாமை படுகிறான். மிக மிகப் பொறாமை படுகிறான். கோபப் படுகிறான். அவன் இன்னொரு பெண்ணோடு இருக்கிறான் என்று தெரிந்தபோது எனக்கு எத்தனை ஆத்திரம் வந்தது… அதையும் விடு அதிகம் ஆத்திரப்படுகிறான். அவளையும் மீறி உதடுகள் வில்லச் சிரிப்பைச் சிந்த,

“ம்… அவர் ஒரு பொறியியலாளர்… இருங்கள்… படத்தை அனுப்புகிறேன்… பாருங்கள்…” என்றவள், அவசரமாகக் கூகுள் சென்று, தென்னிந்திய நடிகர்கள்… என்று தட்ட விஜய் அஜித் முதல் கொண்டு ராணா வரை படங்கள் கொட்டிக் கிடந்தன. பிரபலியமானவர்கள் வேண்டாம்.. வேறு யாரையும் தேடலாம்… என்று தேடக் கண்ணில் சிக்கினார் சாம் அன்டர்சன். அவளையும் மீறி உதடுகள் புன்னகையில் சிந்த, அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பி,

“என் வருங்காலக் கணவர்… எத்தனை கம்பீரமாக இருக்கிறார்” என்று குறுஞ்செய்தியையும் அனுப்பி வைக்க, சற்று நேரத்தில் இவளுடைய கைப்பேசி மின்னியது.

எடுத்துப் பார்த்தாள்.

“என்னது… இவனா உன் வருங்காலக் கணவனாக வரப்போகிறவன்…” என்று பதில் வந்திருக்க, அதை வைத்தே அவன் அதிர்ச்சி அடைந்திருக்கிறான் என்று தெரிந்தது.

“ஆமாம் எத்தனை அழகு என்று பாருங்கள்… அத்தனை உயரமில்லை தெரியுமா… என்னுடைய உயரத்திற்குப் பொருத்தமாக இருப்பார். சிலர் என் அருகே நிற்கும் போது அசிங்கமாக உயரமாக இருக்கும்… இவர் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். உடலில் பச்சை குத்தவில்லை…. எய்ட் பாக் வயிறு இல்லை… அப்படியே கொள்ளை கொள்கிறார் தெரியுமா…”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்…”

“எதெல்லாம் எனக்குத் தெரியும்…?”

“அந்தப் பச்சை குத்தவில்லை, எய்ட் பக் வயிறில்ல என்பது…” அதைப் படித்துக் கிளுக் என்று சிரித்தவள்,

“எப்படித் தெரியுமா… பார்த்தேன்…” என்றாள் இவள் தயங்காமல். சற்று நேரம் அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அதே நேரம் விதற்பரையின் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த அவ்வியக்தனுக்கு உடல் பயங்கரமாக எரியத் தொடங்கியது. அவனால் இம்மியும் அவளை இன்னொரு ஆணோடு இணைத்துப் பார்க்க முடியவில்லை. தேகத்தை யாரோ தீயில் வதக்கிய உணர்வில் திணறியவனுக்கு அதன் உச்சக் கட்டமாக, அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் உடலை ரசித்திருக்கிறாள் என்றது அவனைக் கொலை வெறிக்குத் தள்ளியது.

சற்று நேரம் பதில் போட முடியாமல் திணறியவன்,

“எங்கே பார்த்தாய்…” என்றான் அடுத்து. இவளோ,

“திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், கோவிலுக்குப் போனோம். அங்கே மேலாடையைக் கழற்றச் சொன்னார்கள்… அப்போது அவர் கழற்றியதும் பார்த்தேன். பார்த்ததும், அப்பப்பா… மயங்கிப்போனேன் தெரியுமா… அவருக்கு இருக்கும் அந்தத் தொப்பை கூட எத்தனை அழகு…” என்று பதில் எழுத, அதைப் படித்தவனுக்கு அந்த உலகத்தையே தரைமட்டமாக்கவேண்டும் என்கிற வெறி வந்தது. அதை அடக்கியவனாக,

“இவன் பெயர் என்ன?” என்றான் அடுத்து. சாம் அன்டர்சன் என்று எழுதப் போனவள், உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். வேண்டாம் பெயரைச் சொன்னால் இணையத்தில் தேடி இவன் யார் என்று கண்டு கொள்ள வாய்ப்புண்டு… ம்கூம்… அதை விட,

“ஏன் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்…” என்று பதில் அனுப்ப, அவள் நினைத்தது சரிதான் என்பது போல,

“அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும்…” என்றான் தொடர்ந்து.

“அவனை விசாரிக்க என் அம்மா அப்பா இருக்கிறார்கள். என் மாமா இருக்கிறார். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்…”

“அவனுடைய முகத்தைப் பார்த்தால் கோமாளி போலத் தெரிகிறது. உனக்குப் பொருத்தமானவனாகத் தெரியவில்லை…”

“அது சரி, ஹீரோ உருவத்திலிருந்தவர் எல்லாம், எனக்குப் பொருத்தமானவராகவா இருந்தது…? இல்லையே.. அதனால் ஒருவரின் உருவத்தை வைத்துப் பொருத்தமா இல்லையா என்று ஆராய்வதை விட்டுவிட்டேன்… அம்மாவும் அப்பாவும் பொருத்தம் என்கிறார்கள். என் தேர்வுதான் சாக்கடையாகிவிட்டதே. இதாவது சந்தனமாக மணக்கட்டும்” என்று பதில் கூறியவள் அதற்கு மேல் அவன் கேள்வி கேட்காமல் இருப்பதற்காக,

“ஐயோ…! பேபி அழைக்கிறார்… பாய்…” என்று கூறிவிட்டுக் கைப்பேசியை அணைக்க அவ்வியக்தனோ தன் ஆத்திரத்தை அடக்கப் பெரும் பாடுபடவேண்டியிருந்தது.

எதற்காக அவன் இந்த நேரம் அழைக்கிறான்… தன்னை மீறிச் சுவரை ஓங்கிக் குத்தியவன், குத்திய வேகத்தில் கரம் வலிக்க மெல்லிய முனங்கலுடன் கரத்தை உதறிவிட்டுப் பொறுக்க முடியாமல், கைப்பேசியில் சீற்றம் மிகுந்த மூச்சுக்களுடன்,

“இந்த நேரத்தில் எதற்கு உன்னை அழைக்கிறான்…” என்று அனுப்பிவிட்டுப் பொறுமையிழந்தவனாக்க அங்கும் இங்கும் நடந்தவாறு கைப்பேசியை வெறித்துப் பார்த்தான். அவனைப் பத்து நிமிடங்கள் நரகத்திற்குள் தள்ளிவிட்டுப் பதில் போட்டாள் விதற்பரை.

“இது என்ன கேள்வி? மணக்கப் போகிறவர்களுக்குப் பேச ஆயிரம் இருக்கும்… நமது விருப்பு வெறுப்பை அறிந்து வைத்திருக்க வேண்டாமா? திருமணம் ஆன உடனே குழந்தைகளைப் பெறுவதா, இரண்டு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்துவிட்டுப் பிள்ளைகளைப் பெறுவதா என்று ஆலோசிக்க வேண்டாமா. முக்கியமாகத் தேனிலவுக்கு எங்கே போவது வரை ஆலோசித்திருக்கிறோம். நம் இருவருக்குமே இதில் எந்த அனுபவமும் இல்லையா… கொஞ்சம் பேசிப் பேசி நம்மைத் தயாராக்க வேண்டாமா…” என்று பதில் போட்டுவிட்டுக் குலுங்கிச் சிரிக்க இங்கே இவனோ திறந்த வாய் மூடாமல் அந்தப் பதிலையே பார்த்தான்.

தேனிலவு போவது வரை பேசுகிறார்களா… எப்படி… எப்படி அவளால் முடிகிறது… என்னை விடுத்து வேறு ஒருவனுடன் படுக்கையைப் பகிர்வது பற்றிப் பேசுவதா.. அதுவும் குழந்தைகள் பெறுவது வரை பேசுவதென்றால், அத்தனை அன்னியோன்னியமாகவா பேசுகிறார்கள். திகு திகு என்று அடிவயிற்றிலிருந்து எதுவோ எரிந்துகொண்டு எழுந்து நாடி நரம்பெல்லாம் பரவி சென்றது.

“டிட்… டிட் ஹீ டச் யு…” என்றான் எரிக்கும் ஆத்திரத்துடன். அவளோ ஒரு கணம் அந்தச் செய்தியை வெறித்துப் பார்த்தாள்.

ஏன்டா, நீ மட்டும் அங்கே ஒருத்தியோடு அதுவும் திருமணமான ஒருத்தியோடு கூடிக் குலாவுவாய், நான் இங்கே திருநீலகண்டர் விரதம் அனுஷ்டிப்பதை உனக்குக் காட்டவேண்டுமா…

“முழுதாகத் தொடவில்லை… ஆனால் முத்தமெல்லாம் கொடுத்தார்…” என்றதும், அதைப் பார்த்த அவ்வியக்தனின் இரத்த அழுத்தம் இருநூறையும் தாண்டி இதயத்தின் வேகத்தைப் பலமாகக் கூட்டியது. அந்தக் கணமே சென்று, அவனைக் கொன்று குவிக்க நெஞ்சமும் புத்தியும் ஒன்றாய் சேர்ந்து சண்டித்தனம் செய்தன. அதற்கு மேல் பேச முடியாமல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, விதற்பரையோ,

“ஐயோ திரும்பவும் அழைக்கிறார்… வைக்கிறேன்… அட சொல்ல மறந்துவிட்டேனே… இன்னும் ஒரு மாதத்தில் எனக்குத் திருமணம். மனமிருந்தால் வாழ்த்துங்கள்…” என்றவள் கைப்பேசியை அணைத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுக் கண் மூடி அமர்ந்தவளுக்கு மனம் சற்று அமைதிப்பட்டது. ஏதோ பெரிதாகச் சாதித்த மகிழ்ச்சி உள்ளே. கூடவே கசந்துகொண்டும் வந்தது. எல்லாமே ஒரு மாயை என்கிற உணர்வும் வந்தது. கூடவே எதற்காக இத்தனை போராட்டம் என்கிற ஆயாசமும் வந்தது. அதே வேளை அங்கே,

தன் அறையில் நடை பயின்றுகொண்டிருந்த அவ்வியக்தனுக்கு என்ன செய்வது, என்ன சிந்திப்பது என்று எதுவும் புரியவில்லை.

அவள் இன்னொரு ஆணை ரசிப்பதை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெஞ்சமோ தீய்ந்து போனது. தேகமோ முறுக்கேறியது. இரண்டு கிழமைகளுக்கும் மேலாயிற்று அவளைப் பார்த்து. அன்று விதற்பரையின் பாரா முகத்தைக் கண்டபின் தனக்குள் நொறுங்கிப்போனான். ரனியைப் போலவே தன்னுடைய கடந்த காலத்தைத் தெரிந்த பின், தன்னை உதறிவிட்டாள் என்றுதான் அவன் எண்ணினான். யார்தான் மனதளவில் பாதிக்கப்பட்டவனோடு மகிழ்ச்சியாக வாழ நினைப்பார்கள். அதைப் புரிந்து கொண்ட பின், அவளை விட்டு விலகத்தான் நினைத்தான். ஆனால் அது அத்தனை நரகவேதனையைக் கொடுக்கும் என்று சத்தியமாக எண்ணவில்லையே.

இதோ அவளை விட்டு வந்த இந்த இரண்டு கிழமைகளும் எத்தனை உழைப்பு… அத்தனையும் இரவு நேரத்தில் வீணாக்கிவிட்டுப் புத்தி முழுவதும் நிறைத்திருக்கும் தன்னவளை, இனி ஜென்மத்திற்கும் மறக்க முடியாது தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்ட பின், என்ன செய்வது, ஏது செய்வது என்று திக்கித் திணறிய வேளையில், இப்படி ஒரு பயங்கரச் செய்தி. என்ன செய்யப் போகிறான்…

ஆத்திரம் அடங்காதவனாக, கைப்பேசியைத் தூக்கி அவள் அனுப்பிய படத்தை உற்றுப் பார்த்தான். ஏனோ அவன் மீது நல்ல அபிப்பிராயமே வர மறுத்தது. கூடவே அவனுடைய கரங்கள் விதற்பரையைத் தீண்டுவது போலக் கற்பனை பெருகி ஆத்திரத்தில் கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்தன. அதுவும் இரவு நேரத்தில் இவளோடு அவனுக்கென்ன பேச்சு? என்கிற சினம் தலைக்கேறியது.

நேரம் போகப் போக அவ்வியக்தனுக்குள் பெரும் சூறாவளி. அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்… அதிலேயே அவனுடைய மனம் உழன்று கொண்டிருந்தது. சிந்தையோ தாரு மாறாகத் தப்பும் தவறுமாக, அவளையும் அந்தப் பெயர் தெரியாத வில்லனையும் இணைத்து எரிக்கும் நெருப்பில் படுத்துக்கொண்டிருந்தான்.

What’s your Reaction?
+1
27
+1
2
+1
2
+1
18
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

12 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

4 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago