Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-4

(4)

விதற்பரை தேநீரைக் கொடுத்துவிட்டு ஓடியதன் பிற்பாடு, அவ்வியக்தனுக்குத் தன் கவனம் அண்ணனிடம் செல்வதாகவேயில்லை. மனமோ விதற்பரை சென்ற திசையிலேயே பயணித்துத் தவித்துக் கொண்டிருந்தது.

அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் நரகத்தில் உழன்றவனுக்கு, ஒரு கட்டத்தில் அவளைப் பார்க்காமல் முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட போதுதான் அவனுக்கு உண்மை ஆணி அடித்தது போல நடு மண்டையில் இறங்கியது. அது விதற்பரையில்லாமல் தன்னால் நிச்சயமாக மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று.

அவள் அவனோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவளைப் பார்க்காமல் தன்னால் முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தபோது சற்று ஆடித்தான் போனான். அப்படியானால் ஜெனிலியா சொல்வது போல அவன் காதலிக்கிறானா என்ன?

இந்தத் தவிப்புக்கப் பெயர்தான் காதலா? இந்தத் துடிப்புக்குப் பெயர்தான் காதலா? தன் ஆழ் மனதிடம் பல முறை கேட்டுப் பார்த்தான் விடை தெரியவில்லைதான். அந்த உணர்விலிருந்து தப்ப முடிந்த வரை முயன்றான். பழைய வாழ்க்கைக்குள் நுழைய எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயிற்று. ஒரு கட்டத்தில் களைத்து விழுந்து ஓய்ந்து அமர்ந்த போதுதான், இனி மனதோடு போராடத் தனக்குச் சக்தியில்லை என்பதைத் தெரிந்து கொண்டான்.

நிச்சயமாக அவள் இல்லாமல் தன்னால் அசைய கூட முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

நாட்கள் போகப் போக, அவன் காதல் என்று எண்ணும் உணர்வு மங்கிப்போகும் என்று நினைத்திருந்தவன், அது கொடுத்த சித்திரவதை தாங்க முடியாமல், அவளுடைய காலடியில் விழுந்து என்னை ஏற்றுக் கொள் என்று கெஞ்சவேண்டும் என்று அவன் முடிவு செய்த நேரத்தில்தான், வரப்பிரசாதமாகச் சமர்த்திக்கு வளைகாப்பு என்கிற அழைப்பு வந்தது.

இது போதாதா இவனுக்கு. அத்தனை முக்கிய வேலைகளையும் ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுப் பறந்து வந்துவிட்டான். வந்தவனை ஏமாற்றாமல், வரவேற்றதே அவனுடைய தேவதை என்கிற போது, இதை விட வேறு மகிழ்ச்சி என்ன இருந்து விடப்போகிறது.

தேவதையைக் கண்டாகிவிட்டது, அவளோடு பேசாவிட்டால் எப்படி? இப்போதே அவளிடம் சென்று பேசிவிடவேண்டும் என்கிற வேகம் எழ, அவசரமாகத் தன் தேநீரை விழுங்கிவிட்டு,

“ப்ரோ… இதோ வருகிறேன்…” என்று தன் தேநீர் குவளையைக் காட்டிவிட்டுத் திரும்ப, உத்தியுக்தனோ, தன்னுடைய வெற்றுக் குவலையையும் தம்பியிடம் நீட்டினான்.

“இதையும் எடுத்துச் செல்…” என்று உரிமையாகக் கூறிவிட்டுத் தன் அறை நோக்கித் திரும்ப, அவ்வியக்தனும் உத்தியுக்தன் நீட்டிய குவளையை வாங்கிக்கொண்டு, காற்றிழுத்த பஞ்சாக விதற்பரை சென்ற திசை நோக்கி விரைந்து சென்றான்.

சமையலறையை நெருங்கியதும் உதட்டில் மெல்லிய புன்னகையோடு, சமையலறைக்குள் கால் பதித்த நேரம்தான் புஷ்பாவும் இவன் திசைக்குத் திரும்ப வேண்டும்?

உல்லாசமாக உள்ளே நுழையத் தொடங்கியவன், புஷ்பாவைக் கண்டதும், எதிலோ தாக்கப்பட்டவன் போல விறைத்துப்போய் நின்றான். கூடவே உதட்டில் அந்தக் குதுகலப் புன்னகை வடிந்து செல்ல, இரத்தம் வடிந்து முகமே வெளிறிப்போக, சூட்டை இழந்த உடல், குளிர்ந்து தளர்ந்து போக, அசைய மறந்தவனாய், அப்படியே சிலையென நின்றான்.

புஷ்பாவோ அது உத்தியுக்தன் என்று நினைத்து,

“தம்பி… ஏதாவது வேண்டுமா…?” என்று இதமாய்க் கேட்டவாறு அவனை நெருங்க முயன்ற போதுதான், அது உத்தியுக்தன் அல்ல, அவன் தம்பி என்பதே புரிந்தது.

ஒரு கணம் தடுமாறி ஏதோ பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்து விட்டது போல, இரண்டடி பின்னால் வைக்க. அந்தக் காட்சி, அவ்வியக்தனுக்குக் காதுகளை அடைத்துக் கொண்டு வந்தது.

அந்தச் சமையலறையும், அங்கே நின்றிருந்த புஷ்பாவும், நினைக்கக் கூடாத அந்தப் பயங்கரத்தை அவனுக்கு நினைவு படுத்தினவோ? எப்போதோ மறந்து போன, மறக்க முயன்ற அந்தச் சம்பவம், மீண்டும் அவனைத் தாக்க, எதையும் சிந்திக்க முடியாதவனாகத் தடுமாறியவாறு நின்றவன், எப்படியோ தன்னை மீட்டெடுத்தவனாக ஒரு வித பதட்டத்தோடு, உள்ளே நுழையாமலே எட்டித் தன் கரத்திலிருந்த குவலையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு எதற்கோ அஞ்சி நடுங்கியவன் போல அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறிய நேரம், அவ்வியக்தனின் அந்தப் புதிய நிலை கண்டு குழம்பிப் போய் நின்றாள் விதற்பரை.

இவனுக்கு என்னவாயிற்று? வந்தவன் எதற்குப் பயந்தவன்போல ஓடுகிறான்? புரியாமல் நிற்கையில், அவ்வியக்தன் வெளியே சென்றதும், பெரிய நிம்மதி மூச்சொன்றை எடுத்து விட்ட புஷ்பா,

“இந்தத் தெருப் பொறுக்கி எதற்காக இங்கே வந்து தொலைத்தான்… சீ… அவனைப் பார்க்கும் போதே அருவெறுக்கிறது…” என்றார் முணுமுணுப்பாய்.

கூடவே தன் கோபத்தைப் பாத்திரம் கழுவுவதில் காட்ட, விதற்பரையோ, நெஞ்சில் பலமாய் அடிவாங்கியவள் போல அன்னையைப் பார்த்தாள். தொண்டை அடைக்க,

“ஏன்… எதற்கு அருவெறுக்கிறது…” என்றாள் தன்னை மறந்து.

“ஏனா… கண்ட கண்ட பெண்களுடன் படுத்து எழும்பும் ஒருவனைக் கண்டால் அருவெறுக்காமல் என்ன செய்யும்… பெண் சுகம் தேவையென்றால் ஒருத்தியைத் திருமணம் முடித்து நிரந்தரமாக வைத்திருக்க வேண்டியதுதானே… பெண்களைப் போகப் பொருளாக மதிக்கும் இவனை வீட்டிற்குள் எடுப்பதே மாபெரும் தவறு… அசிங்கம் பிடித்தவன்” என்று சினக்க, விதற்பரைக்கோ உள்ளே எதுவோ விழுந்து நொருங்கிய உணர்வு. கோபத்துடன் அன்னையைப் பார்த்து,

“ஏன்… மாமா மட்டும் என்னவாம்? முன்பு ஜூலியட்டை விரும்பிவிட்டு அத்தையை மணக்கவில்லை…” என்று சிரமப்பட்டுத் தன் கோபத்தை மறைத்தவாறு கேட்க, புஷ்பாவோ கழுவிய பாத்திரத்தை நொங்கென்று பக்கத்தில் வைத்துவிட்டு, ஆத்திரத்தோடு மகளை ஏறிட்டார்.

“உத்தியோடு இவனை ஒப்பிடாதே… தம்பியின் வாழ்வில் நம் சமர்த்திப் போகாமலிருந்திருந்தால், அவன் அந்த ஜூலியட்டோடு மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பார். நம் சமர்த்திச் செய்த தவற்றுக்கு எப்படி உன் மாமாவைத் தண்டிப்பது. ஆனால் இவன் அப்படியா…? பெண் பொறுக்கி, பெண் பொறுக்கி…” என்று எரிச்சலுடன் கூற, ஏனோ முனுக்கென்று இவள் கண்களில் கண்ணீர் பொங்கியது.

அன்னை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. அவனுக்கு வேண்டியது வெறும் பெண்களின் உடல்தானே. அதைத் தன் வாயால் கூடச் சொன்னானே. ஏன், இவளைக் கூட அதற்காகத்தானே தன்னோடு வருமாறு கேட்டான். அப்படியிருந்தும் பாழாய் போன புத்தி அவன் பக்கம்தானே வழுக்கிச் செல்கிறது. சீ சீ எத்தனை கேவலமான மனது இது…’ என்று நொந்து கரைந்தாலும் ஏனோ அன்னை அவனைத் தவறாக நினைப்பதை தாளவே முடியவில்லை.

ஏதோ தன்னையே தவறாகக் கூறியது போல நெஞ்சம் வெடித்துப் போக, வழிய முயன்ற கண்ணீரை அடக்கும் வழி தெரியாமல், உதடுகளைக் கடித்தவள், அவசரமாகத் தான் விட்ட வேலையைச் செய்தவாறு,

“அது… அது அவர் அவர் தனிப்பட்ட வாழ்க்கை. அதை விமர்சிக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை…” என்றாள் இயலாமையில் எழுந்த கோபத்தோடு.

புஷ்பா கழுவிய பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளைத் தொப்பென்று போட்டவாறு,

“அதுவும் சரிதான்… அவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன…? என் முகத்தில் முழிக்காவிட்டால் சரிதான்…” என்றவருக்கு அப்போதுதான் அவள் அவனைக் குட்டிமாமா என்று அழைத்ததும், அவனுக்குப் பிடித்தமான முறையில் தேநீர் வார்த்து எடுத்துச் சென்றதும் உறைத்தது. உடனே தன் வேலையை விட்டுவிட்டு,

“அது சரி… அவனை எப்போது குட்டிமாமா என்று அழைக்கத் தொடங்கினாய்? அவனுக்கு இப்படித்தான் தேநீர் பிடிக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று புருவங்களைச் சுருக்கிச் சந்தேகத்துடன் கேட்க, விதற்பரை சற்று ஆடித்தான் போனாள்.

ஐயோ இதற்கு என்ன பதிலைச் சொல்வாள்? தடுமாறியவள், எப்படியோ தன்னைச் சமாளித்தவளாக,

“அது… அது… அத்தையின் திருமணத்தில் இப்படித்தான் தேநீர் வேண்டும் என்று கேட்டார்… தவிர மாமாவின் தம்பியை குட்டிமாமா என்றுதானே அழைப்பது… அதுதான்… அழைத்தேன்…” என்று சமாளிக்க, நிம்மதி கொண்டவராக,

“ஓ…” என்றுவிட்டு “அவனோடு கவனமாக இருந்துகொள். அவன் பக்கமே போகாதே… அவனும் அவன் பார்வையும்… சைத்தான்…” என்றவாறு தன் வேலையைத் தொடங்க, விதற்பரைக்கு முட்டிக்கொண்டு வந்தது.

இந்த ஒரு சம்பவம் போதாதா அன்னை அவனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதை அறிய… அப்படியானால் அவனைச் சேர எந்த வழியும் இல்லையா? என்று எண்ணியவளுக்கு, ஏனோ உடலில் இருந்து அத்தனை சக்தியும் வடிந்து சென்ற உணர்வில், கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் கரைத்துக் கொண்டிருந்த மாக்கரைசலில் விழுந்து கலந்தது.

அதே வேளை முன்னறையில், அலங்காரம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது.

வீட்டு அலங்காரம் என்று வசந்தன், ரகுநந்தன், பிரபஞ்சன் அந்த வீட்டையே ஒரு பாடு படுத்திவிட்டிருந்தனர். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவ்வியக்தனும் அவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தில் நெருங்க அவர்கள் அவனை நாகரிகமாகவே மறுத்துவிட்டார்கள்.

இதில் ரஞ்சனி, பெரிய மேசை ஒன்றின் விரிப்பைச் சிரமப்பட்டு விரித்துக்கொண்டிருக்க, விரைந்து அவளை நோக்கிச் சென்ற அவ்வியக்தன்,

“நான் உனக்கு உதவட்டுமா?” என்றவாறு மறு பக்கத்து விரிப்பைப் பிடித்து ரஞ்சனிக்கு உதவ, அவளோ அழகிய சிரிப்பொன்றைச் சிந்தி,

“நன்றி குட்டிமாமா…” என்று கிளுகிளுத்தாள். அந்தக் குட்டிமாமாவிலும், அந்த அழகிலும் விதற்பரையைக் கண்ட அவ்வியக்தனுக்கு அந்தக் கணம் ரஞ்சனி முழுதாகப் பிடித்துப் போனாள். இன்னொரு மேசைக்கு விரிப்பை விரிக்க உதவியவாறு,

“உன் பெயர் என்ன?” என்றவனிடம் குதுகலித்தவாறே பதிலைக் கூற, அவளுடைய பாடசாலை, என்ன பாடம் படிக்கிறாள், போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அங்கே வந்த புஷ்பா அதைக் கண்டு பதறிப்போனார்.

இந்தப் பெண் பொறுக்கிக்குத் தன் பன்னிரண்டே வயதான மகளோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? என்று ஆத்திரம் கொண்டவராகத் தன் மகளை நெருங்கி, அவளுடைய முதுகில் பளார் என்று ஒரு அடி கொடுத்தவர்,

“இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய், எத்தனை வாட்டி உன்னை அழைத்தேன், உனக்கு கேட்கவில்லை…?” என்ற சீறிவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல, அவ்வியக்தன்தான் அறைவாங்கியது போல அடிபட்டுப் போனான்.

எதற்காக அவனைக் கண்டதும் விதற்பரையின் அன்னை முகத்தில் இத்தனை வெறுப்பு? அப்படி என்ன தவறு செய்துவிட்டான்? சொல்லப்போனால் இதுவரை அவரோடு பேசியது கூடக் கிடையாதே. அவனைக் கண்டு மெல்லிய புன்னகையில்லை. ஹாய் என்கிற ஒரு வரவேற்பும் இல்லை. ஏன் இந்த ஒதுக்கம்? புரியாதவனாகக் குழம்பியவன், பின் தன் தோள்களைக் குலுக்கி, மனிதர்கள் பலவிதம் போல என்று எண்ணியவனாக வெளியே வந்தாலும், மனதில் ஏற்பட்டிருந்த அந்தச் சங்கடம் சற்றும் குறையவில்லை.

அதன் பின் அன்று மாலை ஏழு மணியளவில் சமர்த்திக்கு மருதாணி இடுவதற்காக ஒரு வட இந்தியப் பெண் வந்திருந்தாள்.

வந்தவளை வரவேற்றது அவ்வியக்தன்தான். வந்த பெண்ணை அழகிய புன்னகையுடன்,

“ஹாய்…” என்றபோது, அந்த ஒற்றைச் சொல்லில் சற்று மயங்கித்தான் போனாள் அந்தப் பெண். பதிலாய் மீண்டும் புன்னகைத்தவள்,

“ஹாய்… என்னுடைய பெயர் அனுராதா…” என்று அறிமுகப் படுத்த, அதற்கும் அழகாய் சிரித்தவன், தன் கரத்தை நீட்டி,

“நான் அவ்வியக்தன்… உத்தியுக்தனுடைய இரட்டை சகோதரன்…” என்றதும் அனுராதாவின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

அதன் பின் அனுராதாவின் விழிகள் அவ்வியக்தனை விட்டு அங்கும் இங்கும் அசையவில்லை. சமர்த்திக் கீழே வரும் வரைக்கும், அவ்வியக்தனோடு சுவாரசியமாகவே பேசி நேரத்தைக் கழிக்க, விதற்பரையோ, அதைக் கண்டும் காணாதவளுமாக உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தாள்.

இவனுக்கு மட்டும் எப்படித்தான் பெண்கள் தானாக வந்து மாட்டுகிறார்களோ. இவனை இத்தனை கம்பீரமாகப் பிறக்கச் சொல்லி யார் கேட்டார்கள். சரி கம்பீரமாகத்தான் பிறந்து தொலைத்தான், குறைந்தது உத்தியுக்தன் போலப் பெண்களோடு ஒட்டாமலாவது இருக்கலாமே? யாராவது ஒருத்தி இழித்துக் கொண்டு வந்தால் போதும் இவனுக்கு… சே…” என்று தனக்குள் புகைந்து தாளித்துக்கொண்டிருக்க, அதை அவ்வியக்தன் சற்றும் உணர்வதாக இல்லை. புஷ்பாவோ அவன் பக்கம் மறந்து கூடத் திரும்பவில்லை.

எப்படியோ சமர்த்தி, ஆடி அசைந்தவாறு கீழே வந்த பிறகுதான், அனுராதா அவ்வியக்தனை விட்டாள்.

அதன் பின், அழகாகச் சமர்த்தியின் கைகளிற்கும் கால்களுக்கும் மருதாணி இட்டவள், சமர்த்தியிடம்,

“வேறு யாரும் மருதாணி இட இருக்கிறார்களா?” என்று கேட்டாள். சமர்த்தி, விதற்பரையைப் பார்த்து,

“வா விது… நீயும் போடேன்…” என்றாள் ஆவலாய். விதற்பரையோ,

“இல்லை அத்தை… மருதாணி போட்டால் வேலை செய்ய முடியாதே…” என்று மறுக்க,

“ஏய்… இன்று முழுவதும் வேலை செய்துகொண்டுதானே இருக்கிறாய்… வா… வந்து போடு…” என்றதும், விதற்பரை, திரும்பித் தன் அன்னையைப் பார்த்துப் போடவா என்பது போல விழிகளால் கேட்டாள்.

புஷ்பாவும் மறுக்காது, தன் விழிகளை மூடித் திறந்து சம்மதம் கூறக் குதுகலத்துடனேயே சமர்த்திக்கு அருகே அமர்ந்து கொண்டாள் விதற்பரை. அவளுக்கும் அழகாக மருதாணி போட தொடங்கினாள் அனுராதா.

திடீர் என்று அவளுடைய முதுகில் ஒரு வித குறுகுறுப்புத் தோன்ற, புரிந்து போனது அவ்வியக்தன் அவளைப் பார்க்கிறான் என்று. விதற்பரையோ அந்த ஊடுருவிய விழிகளின் கூர்மையில் அமர முடியாமல் நெளிய, அனுராதாவோ,

“அசையாதீர்கள்…” என்று எச்சரித்தவாறு, போட்டு முடித்துவிட்டு எழ முயல, அவளைத் தடுத்த உத்தியுக்தன், சற்றுத் தள்ளி தாயின் சேலையோடு பிணைந்து நின்றிருந்த ரஞ்சனியை ஏறிட்டான்.

“நீ போடவில்லையா?” என்றான். ரஞ்சனியோ, ஆவலும் பயமுமாக அன்னையைப் பார்க்க,

“சரி… நீயும் போடு…” என்று அனுமதி கொடுக்க, அவளுக்கும் போட்ட கையோடு புஷ்பாவையும், ரதியையும் போடப்போகிறீர்களா என்று கேட்டாள்.

வேலையிருப்பதால் வேண்டாம் என்று புஷ்பா மறுத்துவிட, இத்தகைய மருதாணிக்குப் பழக்கப்படாத ரதியும் மறுத்துவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார். தன் வேலை முடிந்தது என்பதைப் புரிந்துகொண்ட அனுராதா விடைபெற்றுக் கிளம்பினாள்.

உத்தியுக்தன் ஒரு உறையில், அனுராதாவிற்குரிய பணத்தை வைத்து நீட்ட மறுக்காது பெற்றுக் கொண்டவள், விடைபெறும் போது, அவ்வியக்தனை நெருங்கி, அவனிடம் தன் அறிமுக அட்டை ஒன்றைக் கொடுத்து,

“இது என்னுடைய தனிப்பட்ட தொலைப்பேசி இலக்கம். எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்… உன்னைச் சந்திக்க ஆவலாகக் காத்திருப்பேன்…” என்று கூறியவாறு, காந்தப் புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டு விடை பெற, விதற்பரையோ, மருதாணி இட்ட கரங்களை அழுந்த மூடாமலிருக்கப் பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

உள்ளமோ உலைக்களமாய்க் கொதித்துக்கொண்டிருந்தாலும், அவ்வியக்தனை ஏறிட்டும் பார்த்தாளில்லை. ரஞ்சனியோ, நீண்டநாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கரத்தில் காயாதிருந்த மருதாணியை ஊதி ஊதி விட்டவாறு தன் அறை நோக்கிச் செல்ல, உத்தியுக்தனின் உதவியோடு எழுந்த சமர்த்தியும் உள்ளே செல்ல, இவள் தன் கரங்களில் போட்டிருந்த சித்திரத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள். மனமோ ஏதேதோ சிந்தித்துக்கொண்டிருந்தது.

சற்றுத் தள்ளி நின்றிருந்த அவ்வியக்தன், தனியாக அமர்ந்திருந்த விதற்பரையைக் கண்டதும், முடுக்கப்பட்ட பொம்மை போல அவளுக்கு இரண்டடி தள்ளி இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து, காணாததைக் கண்டது போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய விழி கொடுத்த தகிப்பில் தன் கரங்களைப் பார்ப்பதை விடுத்துச் சற்று விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.

அவன்தான், அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும், எரிச்சலுடன், அவசரமாய் எழுந்து, உள்ளே போக முயன்றவளுக்குத் தடையாகக் குறுக்காக அமர்ந்திருந்தான் அவ்வியக்தன்.

அவனைப் பார்க்கப் பிடிக்காமல், வேறு எங்கோ விழிகளைக் கொண்டு செந்று,

“வழி…” என்றாள் யாருடனோ பேசுவது போல.

“ஊப்ஸ்… சாரி…” என்றவன், இடம் கொடுத்து அமர்வது போல ஒடுங்கி அமர்ந்து கொண்டான். இவனைத் தாண்டிச் செல்லும்வரை காத்திருந்துவிட்டு, அவள் விலகும் தருணம், அவளுடைய காலைத் தட்டிவிட, அதை எதிர்பாராதவள், சமநிலை தவறிக் குப்புற விழ முயன்ற விநாடி, அவளுடைய வயிற்றில் கரம் கொடுத்துத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மடியில் தொப்பென்று அமர்ந்தாள் விதற்பரை.

விழுந்தவளின் வயிற்றை அவனுடைய வலிமை மிக்கக் கரங்கள் இறுக வளைத்துப் பிடித்துத் தன்னோடு நெரித்தும் கொண்டன.

 

What’s your Reaction?
+1
10
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-2/3

(2) அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

2 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

2 weeks ago