யார் என்றே தெரியாத ஒருவன், முகம் முழுவதும் மறைத்து தலைக்கவசம் அணிந்தவாறு அவளைப் பயமுறுத்த, பதறித் துடித்தவளாய் இரண்டடி பின்னால் வைத்தவளின் சப்பாத்து அங்கிருந்த கரிய பனியின் மீது பட, அது நேரம் பார்த்துக் காலை வாரி விடத் தடுமாறியவள், எப்படியோ சுதாரித்து நிமிர்ந்து ஆத்திரத்துடன் தன் முன்னால் நின்றிருந்த அந்த வண்டியோட்டியைப் பார்த்து,
“ஹூ த ஹெல் ஆர் யு… வட் யு வோன்ட்…?” என்றாள் சீற்றமாக.
அந்த வண்டிக் காரனோ நிதானமாகத் தன் முகக் கவசத்தைக் கழட்ட, அங்கே தேரிந்த முகத்தைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து போய்ப் பேச்சற்றவளாக நின்றாள்.
அவள் எண்ணத்தின் நாயகன் கற்பனையாய் விரிந்திருக்கிறானோ? நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தாள். விழிகளைச் சிமிட்டியும் பார்த்தாள். இல்லை அது கனவில்லை. அவளுடைய தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது போல, அழகிய புன்னகையுடன் நின்றிருப்பது அவ்வியக்தனேதான்.
அவன்தான் என்று உறுதியானதும் பேரலையாய் அடிவயிற்றிலிருந்து எழுந்த ஆனந்தத்தை எப்படி வர்ணிப்பது. வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உண்டா. அப்பப்பா மகிழ்ச்சி என்றால் இதுவல்லவா மகிழ்ச்சி… அகமும் முகமும் மலர்ச்சியில் கூத்தாட, உதடுகளோ பற்கள் அனைத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்ட,
“மை காட்… அயன் இட்ஸ் யு…” என்கிற பெரும் ஆரவாரத்தோடு அவனை நெருங்கினாள் விதற்பரை. அவனோ
“ஹே… ப்ரின்ஸஸ் எப்படியிருக்கிறாய்… வா… வந்து வண்டியில் ஏறு…” என்று விழிகள் மின்னச் சிரிக்க, இவளோ,
“அம்மாடி… நிஜமாகவே நீங்கள் தானா? எப்போது வந்தீர்கள்… மை காட்… ஐ ஆம் சோ ஹப்பி…” என்று அர்ப்பணித்தவள், முகத்தைச் சுருக்கி, “நீங்கள் இல்லாமல் நாட்களே ஓடவில்லை தெரியுமா… ஐ மிஸ் யு சோ சோ சோ மச்…” என்று பொங்கிச் சிரிக்கக் கூறியவளை அதே ஆர்வம் சற்றும் குறையாதவனாய் பார்த்தான் அவ்வியக்தன்.
இதோ இது… இதற்காகத்தானே ஓடிவந்தான். இந்த மலர்ச்சி, இந்தக் குதுகலம், இந்த நகைப்பு, இதைப் பார்க்கத்தானே அத்தனை வேலைகளையும் போட்டுவிட்டு வந்தான். ஒரு முறையாவது அவளைப் பார்த்துவிடவேண்டும் என்று ஓடி வந்தவனை ஏமாற்றாமல் அவன் கற்பனைக்குச் சற்றும் மாறாமல், அத்தனை பூரிப்புடன் வரவேற்றவளைக் காணக் காண இவனுக்குத் தெவிட்டவில்லை. அவன் வரவைக் கண்டு மனமாரப் பூரிக்கும் இரண்டாவது பெண் என்றால் அது இவள்தானே. இந்த அழகைப் பார்ப்பதற்காக, இதை அனுபவிப்பதற்காக, இதை உணர்வதற்காக, ரசிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வேலைகளை விட்டுவிட்டு அவளிடம் ஓடிவந்துவிடலாம். எத்தனை நஷ்டம் வந்தாலும் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது.
அகம் உருகிப்போனது அவனுக்கு.
“ஐ மிஸ் யு டூ…” என்று கூறிப் புன்னகைத்தவன், இன்று காலைதான் வந்தேன் தற்பரை… வந்த உடன் உன்னிடம்தான் வருகிறேன்…” என்றவாறு அவளிடம் ஒரு முகக் கவசத்தை நீட்டினான். மறுக்காது அதை வாங்கியவள். அதை எப்படிப் போடுவது என்கிற ஆய்வில் இறங்கத் தானே அதை வாங்கி அவள் தலையில் அணிந்து கவனமாகப் பூட்டிவிட்டு,
“இன்று ஏதாவது முக்கியப் பாடங்கள் இருக்கின்றதா?” என்றான் ஆர்வமாய். உடனே மறுப்பாகத் தலையசைத்து,
“இ… இல்லையே… பெரிதாக எதுவுமில்லை. இன்றுதான் இந்தத் தவணைக்கான இறுதி நாள்…” என்று அவசரமாய்ப் பரீட்சையைப் பின்னால் செய்யலாம் என்று அதி முக்கியமான பரீட்சையைப் பின்னுக்குத் தள்ள, அதை நம்பியவனாய்,
“குட்… வண்டியில் ஏறு…” என்றான். சற்றும் தயங்காமல் இரண்டு பக்கமும் காலைப் போட்டு, அவனை நெருங்கி அமர, வாகனத்தை உசுப்பியவன் அதை முக்கியத் தேருவில் செலுத்த, அதிகச் சத்தமில்லாது பயணித்தது அந்த மோட்டார் வண்டி. அதை உணர்ந்தவளாக,
“என்ன குட்டிமாமா வண்டியில் அத்தனை சத்தமில்லையே…” என்றாள் ஆச்சரியமாக.
“வில் யு ப்ளீஸ் ஸ்டாப் காலிங் மி அங்கிள்…” என்று எரிச்சலுடன் மொழிந்தவன், பின்,
“உனக்குத்தான் சத்தம் பிடிக்காதே… அதுதான் சத்தமில்லாததாகப் பார்த்து எடுத்தேன்…” என்றான். எப்போதும் போலத் தனக்காய் யோசித்துச் செய்த அவன் பண்பு பிடித்துப் போக,
“நன்றி அயன்…” என்றாள் மனதார. மலர்ந்தவனாய்,
“இப்போது சொல், உன் நாட்கள் எப்படிப் போயின… நான் போன ஒரு மாதத்திற்குள் சற்று எடை குறைந்து விட்டாய் போலவே… என்ன ‘டயட்டிங்’கா?” என்று மெல்லியதாய்க் கடிய, அவனுடைய மேலும் அவனோடு ஒட்டி அமர்ந்தவாறு,
“அதெல்லாம் இல்லை அயன்… மூன்று வேளையும் நன்றாகவே மொக்கினேனே… கடந்த இரண்டு கிழமைகளாக இறுதிப் பரீட்சை… அதுதான் கொஞ்சம் மன அழுத்தத்திலிருந்ததால் உணவு இறங்க வில்லை. இன்றோடு பரீட்சை முடிகிறது… நிம்மதி…” என்றதும் திடீர் தடையைப் போட்டு அவ்வியக்தன் வண்டியை நிறுத்த, அவன் முதுகோடு பலமாக மோதி நின்றாள் விதற்பரை. கேள்வியாக அவ்வியக்தனைப் பார்க்க,
“இன்று உனக்குப் பரீட்சையா?” என்றான் கண்டிப்பவனாக. உடனே தன் நாக்கைக் கடித்து மனதாரத் தன்னைத் திட்டியவள், பின் அசடு வழிந்து விட்டு,
“ஹீ… ஹீ… அந்தப் பாடம் அத்தனை முக்கியமில்லை குட்டி… அயன்… பிறகும் செய்யலாம்…” என்றாள் அவனோடான நேரத்தை இழக்க விரும்பாமல். ஆனாலும் இவன் சமாதானம் ஆகாமல்,
“யு ஷூர்…?” என்றான் சந்தேகமாய்.
“அதுதான் சொல்கிறேனே… பிறகு என்ன… முதலில் வண்டியை எடுங்கள். இப்படி வண்டியில் போகும்போது நன்றாக இருக்கிறது…” என்று ஆர்வமாகக் கூற, அதற்கு மேல் விவாதம் செய்யாமல் வண்யைக் கிளப்பினான் அவ்வியக்தன்.
“இப்போது சொல்லுங்கள்… உங்கள் வேலை எப்படிப் போனது…?” என்று வினவ, அவனோ புன்னகைத்தவாறே அவளுக்குப் பதில் கூறிக்கொண்டு வேகப் பாதையை நோக்கி வண்டியைத் திருப்பினான்.
மோட்டார் வண்டியோ காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல, ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் அந்த வாகனத்தின் வேகத்திற்கு அஞ்சிச் சற்றும் யோசிக்காமல் அவனுடைய வயிற்றை இறுக அணைத்தவாறு அவன் முதுகோடு ஒட்டி நின்ற விதற்பரைக்கு அந்தப் பயணத்தில் உலகமே புதிதாகத் தெரிந்தது.
முகத்தைக் கிழிக்கும் குளிர் காற்று. அதை மட்டுப்படுத்தும் சூடான அந்த ஆண்மகனின் அருகாமை. எந்த வாகனங்களும் அற்ற தனிமை. சுற்றிவர வெண்பனியில் நிறைந்த உலகம்… அப்பப்பா… இத்தகைய அனுபவம் வாழ்வில் இனி கிடைக்குமா. எப்போதோ மோட்டார் வண்டிப் பயணம் பிடிக்கும் என்று சொன்னதை மனதில் வைத்து இன்று அவளை அழைத்துச் செல்லும் அவனுடைய அன்பில் நெகிழ்ந்துதான் போனாள் விதற்பரை.
சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. பேசத் தோன்றவுமில்லை. அந்த நேரத்திற்கு அந்த அமைதியே இருவருக்கும் நிறைவாக இருக்க, விதற்பரை தன்னை மறந்து அவனுடைய முதுகில் கன்னத்தைப் பதித்து அந்த இனிய தருணத்தை முழுவதுமாக உள் வாங்கிக் கொள்ள, வண்டியை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்த அவ்வியக்தனின் முகத்திலும் என்றுமில்லாத பரவசம்.
ஒரு கட்டத்தில் அவள் பக்கமாகத் தலையைத் திருப்பியவன்,
“தற்பரை… என்னை இறுகப் பற்றிக்கொள்…” என்று கூற, மறுக்காமல் மேலும் அவனை இறுக்கிக் கொள்ள, வாகனத்தின் வேகத்தை இன்னும் அதிகரிக்க, அப்போதுதான் கவனித்தாள் விதற்பரை சடுதியாக ஒரு வளைவு அந்தப் பாதையில் வருவதை.
இந்த வேகத்தோடு அந்த வளைவில் சென்றால் என்னாகும் பதறியவளாக,
“வேகத்தைக் குறையுங்கள்… வேகத்தைக் குறையுங்கள் என்று அலற, அவனோ இன்னும் வேகத்தைக் கூட்ட, விதற்பரையோ பெரும் கூக்குரலோடு, கத்தியவாறு அவனை உடைத்துவிடுவது போல இறுகப் பற்றிக்கொண்டு
“ஓ மை காட் ஓ மை காட்… ஸ்டாப் த பைக்… என்று அலறித் தன் விழிகளை இறுக மூட, அவனோ அந்த வளைவில் வண்டியைச் சரித்துச் சென்று பின் நேராக்கிய பின்னும் அவள் தன்நிலை பெற்றாளில்லை. ஓரளவு தாம் பிழைத்துக் கொண்டோம் என்பதை உணர்ந்தவளாக விழிகளைத் திறந்து பார்த்தாள். இப்போது வண்டி நேராகப் பயணித்துக்கொண்டிருக்க இப்போது இறுக்கம் தளர்ந்து தன் பிடியைத் தளர்த்தி ஒரு பெருமூச்சை விட்டு,
“மை காட்… டு யு ஹாவ் எ டெத் விஷ்… ஓர் ஆர் யு ட்ரைங் டு கில் மீ… நெவல் எவர் டு திஸ் டு மி…” என்று சீறிப்பாய்ந்த காற்றுக்கு எதிராகக் கத்த, இவனோ தலையைப் பின்னால் சரித்துச் சிரித்தவாறு,
“டோன்ட் வொரி பேபி… என்னோடு நீ இருக்கும்போது எது நடப்பதாக இருந்தாலும் அது என்னைத்தாண்டித்தான் உன்னிடம் வரும்…” என்று உறுதி கூறியவன், மேலும் ஒன்றரை மணி நேரங்களில் அவளுடைய உயிரைப் பல இடங்களில் காவுகொள்ள வைத்துப் பின் நேராக்கி எப்படியோ ஒரு மாதிரிப் பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தான்.
அவன் தன் ஹெல்மட்டைக் கழற்ற, அவளோ, ஆளை விட்டால் போதும் என்பது போலக் கீழே இறங்கியவள், தலையில் போட்டிருந்த தலைக்கவசத்தைக் கழற்றி அவனிடம் நீட்ட, அதை வாங்கியவாறே,
“ஆர் யு ஹப்பி நவ்…” என்றான் மலர்ச்சியுடன். உடனே கரங்களை அடித்துக் கும்பிட்டவள்,
“அம்மாடி… இனி இந்த ஜென்மத்திற்கு மோட்டார்வண்டியில் ஏறமாட்டேன்பா சாமி… போதும் போதுமென்றாகிவிட்டது. உங்களைக் கண்ட மகிழ்ச்சியே தொலைந்து விட்டது…” என்று அச்சமும் கோபமும், சிரிப்புமாக அவள் கூற, அதைக் கேட்டு நகைத்தான் அவ்வியக்தன்.
“நீ ஆசைப்பட்டாய் தானே… அதுதான் இன்று அழைத்துச் சென்றேன்…” என்று கூற,
“அதற்காக இப்படியா உயிரைப் பணயம் வைத்து ஓடுவார்கள்…. இன்றுதனர் கடைசி நாள் என்று எண்ண வைத்துவிட்டீர்கள்…” என்று முகத்தைச் சுழிக்க, மெல்லியதாக நகைத்தவன்,
“மோட்டார் வண்டி ஓட்டம் என்றால் நெடும் பாதையில் சும்மா நேராக ஓடுவது என்று நினைத்தாயா… ம்கூம் இப்படி வளைவுகள், வெட்டுகள் வரும் அதையெல்லாம் கடந்து ஓடவேண்டும்… அப்போதுதான் சுவாரசியமாக இருக்கும்… இவையெல்லாம் ஒரு வித அனுபவம்தானே…” என்று கூற, தலையை ஆட்டி,
“உண்மைதான்… பயமாகத்தான் இருந்தது, ஆனால் என் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சிதான்… நன்றி அயன்…” என்று மனதாரக் கூற, மலர்ச்சியுடனே அவள் பக்கமாகச் சரிந்தவன், அவள் முன்புறக் கூந்தலை செல்லமாகக் கரம் கொண்டு கலைத்துவிட்டு,
“சரி நான் கிளம்புகிறேன்…” என்றுவிட்டு வண்டியை உசுப்பினான்.
பின் எதையோ நினைத்தவனாக,
“ஹே… இன்று மாலை நான் உன்னை அழைத்துச் செல்ல வரமாட்டேன்… ஒரு முக்கிய விருந்து இருக்கிறது. நான் கட்டாயம் போகவேண்டும்… நீ தனியாகப் போவாய் தானே…?” என்றான்.
இவளோ இவனைப் பார்த்து முறைத்து,
“அப்போ என்னைப் பார்ப்பதற்காகக் கனடா வரவில்லை. விருந்துக்காக வந்தீர்கள்… கிடைத்த இடைவெளியில் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்…” என்றாள் பொறாமையில் வாயிலும் மூக்கிலும் புகை கக்க.
அவளுடைய அந்தப் பொறாமையை ரசித்தவனாக,
இந்த விருந்துக்கான அழைப்பு வந்திருந்தது. இங்கே புதிதாகத் தொழில் தொடங்கும் எனக்கு இந்த விருந்து உதவியாக இருக்கும். எப்படியும் உன்னைப் பார்க்க வருவதாகத்தான் இருந்தேன். கையோடு இந்த விருந்துக்கும் செல்கிறேன்…” என்றான் இனிமையாய்.
“நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்… எனக்கும் இன்று மாலை பல்கலைக் கழகத்தில் வருட முடிவுக்கான விழா வேறு இருக்கிறது. வீட்டிற்குப் போய் அதற்காகத் தயாராகவேண்டும்…” என்று அவள் கூறியதைக் கேட்டு ஒரு கணம் நிதானித்தான் அவ்வியக்தன். பின் எதையோ யோசித்தவனாக,
“கட்டாயமாக இந்த விழாவிற்காகப் போகவேண்டுமா என்ன?” என்றான். அந்தக் குரலே சொன்னது அவள் அங்கே செல்வது பிடிக்கவில்லை என்று. இவளோ,
“ஆமாம் அயன்… சென்ற வருடம் போவதாக இருந்தது. எனக்கு உடல் நிலை சரியில்லாது போனதால் போக முடியவில்லை. இந்த வருடம் வருவதாக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்…” என்றதும்,
“அதில்லை விதற்பரை… அந்த விழா நீ நினைப்பது போல இருக்காது…” என்று தன் மறுப்பைக் கூறத் தொடங்கத் தன் உதடுகளைச் சுழித்து அவனை ஏறிட்டவள்,
“ம்… அதிகமாய் மூக்கை நுழைப்பது போலில்லை…?” என்றாள் கிண்டலுடன் கூடிய அழுத்தத்துடன்.
அதில் நீ என் விடயத்தில் தலையிடப் பார்க்கிறாய் தள்ளி நின்றுகொள் என்கிற எச்சரிக்கை இருக்க, அவ்வியக்தன் எதுவும் கூறாமல் சற்று நேரம் எதையோ யோசித்தான்.
அவள் கூறுவதும் சரிதான். என்னதான் இருவருக்கும் இடையில் கண்களுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு இருந்தாலும், அவளுடைய தனிப்பட்ட விடயங்களுக்குள் கருத்துச் சொல்லும் அதிகாரம் அவனுக்கு இல்லைதான். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிடவும் முடியாதே. அந்த விழாக்களில் என்ன நடக்கும் என்று அறியாதவன் அல்லவே அவன்.
“ஐ ஆம் சாரி… ஆனால் இந்த விழா நீ நினைப்பது போல நேர்த்தியாக இருக்காது விதற்பரை… ட்ரஸ்ட் மீ… உன் வாழ்வியலுக்கு இது ஒத்து வராது…” என்று அவன் கூற வர, அவனைப் பார்த்து முறைத்தவள்,
“ஹலோ… எனக்குப் பத்தொன்பது வயது முடிந்து அதற்கு மேல் ஆறு மாதங்களும் ஓடிவிட்டன. நான் ஒன்றும் சின்னக் குழந்தையில்லை. எப்படி என்னைப் பாதுகாக்கவேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்…” என்று கறாராகக் கூற, ஒரு கணம் இதழ்களை அழுந்த மூடி நின்றான்.
“ஓக்கே… விழா எங்கே நடக்கிறது?” என்றான் ஒரு வித கறார் குரலில். அவள் கூற,
“சரி எப்படிப் போவாய்?” என்றான் அடுத்து. சற்று இளகியவளாக,
“விக்டர் அழைத்துச் செல்ல வருவான்…” என்றாள்.
“விக்டர்?”
“ம்.. என்னோடு படிப்பவன்…” என்றதும்,
“சரி… ஆனால் பத்திரம்…” என்றான் சிறு கட்டளையாக. இப்போது உதடுகள் விரித்து சிரித்தவள்,
“ஹலோ… என்னிடமேயா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் குட்டி மாமா… நீங்கள் உங்கள் விருந்தைக் கவனியுங்கள்…” என்று கிண்டலாகக் கூறிவிட்டுத் திரும்பச் சடார் என்று அவளுடைய கைத்தலத்தைப் பற்றினான் அவ்வியக்தன். இவளோ வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்க்க,
“ஐம் மீன் இட் விதற்பரை… யு ஹாவ் டு பி கியர்ஃபுள்…” என்றான் அழுத்தமான குரலில். கூடவே அவன் பிடியும் அழுத்தமாக அவளுடைய மணிக்கட்டைப் பற்ற, அந்த அழுத்தம் சொன்ன செய்தியில், மறுக்காது தலையை அசைத்து,
“ஐ வில் அயன்…” என்றாள் மென்மையாய்.
இப்போது கரத்தை விடுவித்தவன், அவள் சென்று கட்டடத்திற்குள் மறையும் வரைக்கும் காத்திருந்துவிட்டு வண்டியை எடுக்க, இதையே சற்றுத் தொலைவிலிருந்து பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டிருந்தான் நகுலன்.
அன்று மாலை, குளித்துத் தயாரான போது நேரம் ஆறு மணியைக் கடந்து விட்டிருந்தது.
இறுதியாக மெல்லியதாய் உதட்டுச் சாயத்தைப் பூசி உதடுகளைச் சற்று நெளித்துச் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவள், திருப்தி கொண்டவளாய், நிமிர்ந்து அணிந்திருந்த ஆடையை நீவியவாறு கண்ணாடியில் பார்த்தாள்.
கழுத்திலிருந்து கணுக்கால் வரை உடலோடு ஒட்டியிருந்த நீண்ட கையுள்ள அந்த ஸ்ட்ராபரி நிற ஆடை அவள் உடலின் நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தது. கணுக்கால் வரை ஒடுங்கிய ஆடை என்பதால், நடப்பதற்கு இலகுவாக வலது முழங்காலுக்கும் சற்று மேலே வெட்டப்பட்டிருக்க, அதற்கூடாக வெளியே தெரிந்தது வெண்ணிறப் பளிங்கு கால்.
அந்த ஆடைக்குப் பொருத்தமாக, கழுத்தில் வெண் முத்தில் செந்நிற கற்கள் பதித்த ஆரம் டாலடித்த். அதே நிறத்தில் பெரிய வளையம் கொண்ட தோடு காதில் தொங்கியது. சற்றுக் கலைந்த முடியை மேலே தூக்கிக் கட்டிய கொண்டை. முன் இரு பக்கமும் கொஞ்சமாய் இழுத்து விடப்பட்ட முடிக் கற்றைகள். அது அவளுடைய முகத்தினை உரசி உரசி சாமரம் வீசிக்கொண்டிருக்க, பாலிவுட் நடிகைகளுக்கும் சவால் விட்டவாறு நின்றிருந்தாள் அந்த அழகு தேவதை.
எந்த நேரமும் விக்டர் வந்துவிடுவான். தன் சட்டைக்குத் தோதாகக் கைப்பையை எடுத்தவள், அதில் கைப்பேசியைப் போடும்போது அவ்வியக்தன் நினைவுக்கு வந்தான்.
உடனே தன் கைப்பேசியில் தன்னைப் படம் எடுத்து, அவனுக்கு அனுப்பி “எப்படியிருக்கிறது” என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பி விட்டு அதைக் கைப்பையில் திணித்தவாறு, முன்னறைக்கு வந்தாள். இழுப்பறையைத் திறந்து அதிலிருந்த பொன்னிறத்திலான மூன்றங்குலக் குதிக்கால் பாதணியை அணியும்போதே அறைக் கதவு தட்டப்பட்டது.
விக்டர் வந்துவிட்டான் என்று புரிய, பாதணியை வேகமாக அணிந்துவிட்டு, அவசரமாய்க் குளிருக்குத் தோதாகத் தடித்த மேற்சட்டையை இழுத்து எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கப் புன்னகையுடன் நின்றிருந்தான் விக்டர். ஆவலுடன் திரும்பிப் பார்த்தவன், இவளைக் கண்டதும், ஒரு கணம் ஆடித்தான் போனான். விழிகளால் அவளை மேய்ந்தவன்,
தன்னை மறந்து விசில் அடித்தவாறு,
“வாவ்… பியூட்டிஃபுள்…” என்று பிதற்ற, அதைக் கேட்டு மெல்லிய வெட்கம் கொண்டவளாக, மேற்சட்டையை அணிந்தவாறு,
“ஸ்டாப் இட் விக்…” என்றவள், கதவைச் சாத்தியவாறு, “கிளம்பலாம்…” என்று விட்டு முன்னே நடக்கத் தொடங்க அந்த நீண்ட சட்டை அவளுடைய உயர்ந்த குதிக்கால் கொண்ட பாதணியில் சிக்கி அவளைத் தடுமாற வைத்தது.
உடனே அவளுடைய கரத்தைப் பற்றி நிலை நிறுத்திய விக்டர்,
“ஈசி விது…” என்றவாறு அவளுடைய கைப்பையைத் தன் கரத்திற்கு மாற்றி, அவளுடைய கரத்தை விடாமலே வாகனம் வரை அழைத்துச் செல்ல, அவனுடைய உதவியை மறுக்காது, கீழே தேய்ந்த ஆடையைச் சற்றுத் தூக்கிப் பிடித்தவாறு அவன் கூட நடக்கத் தொடங்கினாள் விதற்பரை.
விக்டரின் வாகனத்தை நெருங்கிய போதே அவளோடு படிக்கும் இருவர் உள்ளே இருந்து பெரும் ஆர்ப்பாட்டத்தோடு கையாட்ட, இவளும் குதுகலத்துடன் அவர்களை நெருங்கி அவர்களுக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு அவர்களுக்கு அருகே அமர்ந்தாள்.
அவ்வியக்தனின் வரவு அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதாலோ என்னவோ தன் தோழிகளுடன் மனம் விட்டுச் சிரித்து பேசினாள் விதற்பரை.
கிட்டத்தட்ட நாற்பது நிமிட ஓட்டத்தில் அந்த விருந்து மண்டபத்திற்கு முன்னால் வாகனம் வந்து நின்றது.
விழா நடக்கும் விருந்து மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கியபோது, நிறையப் பேர் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தார்கள். வந்துகொண்டிருந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்குச் சுயநினைவே இருக்கவில்லை. யார் யாரோ இழுத்துக்கொண்டு சென்றார்கள். யார் அழைத்துச் செல்கிறார்கள்? நண்பர்களா, காதலர்களா, உறவினர்களா இல்லை எந்தத் தொடர்பும் இல்லாத யாரோ ஒருவரா? எங்கே அழைத்துச் செல்கிறார்கள்.. அழைத்துச் சென்ற பின்னாடி என்ன நடக்கும். அது அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்.
ஏனோ அந்தக் காட்சியைக் கண்ட விதற்பரைக்கு முதன் முதலாக அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.
இதுவரை இத்தகைய இடங்களுக்கு அவள் சென்றதில்லை. தேவையேற்பட்டதும் இல்லை. ஆனால் அத்தனை பேரும் பெரிதாகப் பேசிக் குதுகலமாகச் செல்லும் அந்த விழாவில் என்னதான் நடக்கும் என்கிற பெரும் ஆர்வக் கோளாற்றில் துணிந்து வந்து விட்டாள். ஆனால் ஆரம்பக் காட்சியே அவளை வரவேற்பதற்குப் பதில், ஒரு வித அச்சத்தை அல்லவா கொடுக்கிறது. தன்னை மறந்து தோழிகளைப் பார்க்க, அவர்களோ பெரும் ஆர்ப்பாட்டத்தோடும் குதுகலத்தோடும் மண்டபத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு இது எதுவும் உறுத்தவில்லையா? அல்லது அவள்தான் தேவையில்லாமல் குழம்புகிறாளோ. அவ்வியக்தன் எச்சரித்தது ஒரு வேளை இந்த உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். குழம்பி நிற்க இவளுடைய தயக்கத்தைக் கண்ட விக்டர்,
“ஹே… டோன்ட் பனிக்… இத்தகைய விழாக்களில் இவை சாதாரணம். இங்கே பெரும்பான்மையானவர்கள் தொலைவிலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள். கேட்க ஆட்களில்லை. அதுதான் இப்படி. நீ உள்ளே வா…” என்றவாறு அழைத்துச் செல்ல, யாரோ ஒருவன் இவளோடு மோத வந்தான். அவசரமாக விலகி, விக்டரோடு ஒதுங்கித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவளுக்கு அந்தக் கணமே எங்காவது தப்பி ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது.
இதைத்தான் அவ்வியக்தன் எச்சரித்தானோ? சீ சீ… எதற்காகப் பயப்படுகிறோம். உள்ளே நண்பர்கள்தானே இருக்கப் போகிறார்கள். பிறகென்ன… ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே ஆங்கிலத் துள்ளல் பாடல்கள் சேவிப்பறையை மோத, மின்னிய விளக்கொளியில் இளைஞர்கள் தனியாகவும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறும் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
இது பல்கலைக் கழக மாணவர்களின் விழா என்பதாலும் அத்தனை பேரும் பதினெட்டு வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், மேற்பார்வை பார்ப்பதற்கும் யாரும் இருக்கவில்லை. அது கொடுத்த தைரியமோ என்னவோ, மாணவர்கள் தான்தோன்றிகளாய்த் தங்கள் இஷ்டத்திற்கு யார் யாரையோ அணைத்தார்கள். யார் யாரையோ முத்தமிட்டார்கள். எதையோ குடித்தார்கள். இன்னொருத்தரிடமிருந்து வாங்கிக் குடித்தார்கள். தங்களதையும் கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் யார் எவர் என்று தெரியாமலே அணைத்தவாறு கலகலத்துச் சிரித்தார்கள். அதைப் பார்க்க அருவெறுப்பையும் மீறிப் பெரும் வேடிக்கையாகவும் இருந்தது.
நிச்சயமாக அந்தக் கூட்டத்தோடு தன்னால் ஒன்ற முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வேளை அவளுடைய வளர்ப்பு இதை ஏற்க மறுக்கிறதோ? தெரியவில்லை. அவளுடைய அத்தை இத்தகைய விழாக்களுக்குச் சென்றிருந்தால் ஓரளவு இங்கே என்ன நடக்கும் என்று தெரிந்திருக்கும். அவளுக்குத்தான் இத்தகைய விழாக்களில் ஒரு போதும் ஆர்வமிருந்ததில்லை. அந்த நேரத்திற்கு அம்மாவின் காலைச் சுற்றிக்கொண்டிருப்பாள். புன்னகைக்கும் போதே அவளுடைய கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவித்தல் வந்தது. அவ்வியக்தன்தான். முகம் மலர எடுத்துப் பார்த்தாள். அவள் அனுப்பிய படத்திற்குக் கீழே,
” யு லுக் ட்ராப் டெட் கோர்ஜியஸ் பேபி…” என்கிற அவன் குறுஞ்செய்தியைக் கண்டு அகமும் முகமும் மலர்ந்து வெட்கத்தால் சிவந்து போயிற்று. பதிலுக்கு இவள் நன்றி என்று பதில் அனுப்பிவிட்டு சுத்தவரப் பார்த்தாள்.
ஒரு பக்கமாக அவளுடைய நண்பர்கள் நின்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மதுபானப் போத்தலைத் தலையில் வைத்தவாறு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருக்கப் பக்கத்திலிருந்த ஒருத்தி இன்னொருவனை அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அது அவளுடைய ஆண் நண்பனாக இருக்க வேண்டும்.
ஓரிருவரைத் தவிர அத்தனை பேரும் ஏதோ ஒரு மாய உலகத்தில் நின்றிருந்தார்கள்.
“நீ நினைப்பது போல அந்த விழா இருக்கப் போவதில்லை விதற்பரை…” அவ்வியக்தன் சொன்னது மீண்டும் நினைவில் வந்து அறைய, உதடுகளைக் கடித்தவாறு என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள் விதற்பரை.
நடையை விடுத்து நடுவழியில் நின்றிருந்த விதற்பரையைத் திரும்பிப் பார்த்த விக்டர்,
“என்ன நின்றுவிட்டாய்… வா…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றவன், வகுப்பு மாணவர்களோடு அவளை விட்டுவிட்டு, அந்தக் கூட்டத்தில் மறைந்துவிட்டிருந்தான்.
இவளைக் கண்டதும் நண்பர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வரவேற்றனர். எப்போதும் டெனிம் பான்டும், டீ ஷேர்ட் மற்றும் பருத்தி மேலாடையும் அணிந்து கொண்டு பல்கலைக் கழகத்திற்கு வருபவள் முதன் முறையாக உடலின் வடிவத்தை அழகாய் எடுத்துக் காட்டும் வகையில் வந்தால் ஆர்ப்பரிக்காமல் என்னதான் செய்வார்கள்.
அதில் டானியல் என்கிற மாணவன் நம்ப முடியாமல் அவள் மேடு பள்ளங்களை ரசித்தவாறு,
“வாவ்… லுக் அட் யு… யு ஆர் கோர்ஜியஸ்…” என்று வாய்விட்டுக் கூற, வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் விதற்பரை.
அவளையும் மீறி நேளிந்தவளாக?
“நன்றி டானியல்…” என்று கூறி முடிக்க ஆண்கள் பெண்கள் என்றில்லாமல் அவள் மேனியை ஒரு வித சுவாரசியத்தோடு அளவிடத் தொடங்கியவர்கள் டானியலின் கூற்றை வழி மொழிய மேலும் கூச்சம் கொண்டவளாக,
“ஸ்டாப் இட் காய்ஸ்…” என்று கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, ஆளாளுக்குத் தங்கள் அலங்காரத்தையும் ஆடைகளின் வடிவமைப்பையும் காட்டி அவள் பாராட்டைப் பெற்று மகிழ்வுடன் சிரித்துப் பேசத் தொடங்கினர்.
சற்று நேரம் சுவாரசியமாகத்தான் பொழுது போனது. அதில் அவளுடைய தோழிகள் நடனமாட அழைக்க மகிழ்வுடனே அவர்களுடன் கலந்து கொள்ள அரை மணி நேரம் என்ன ஆட்டம் என்றே தெரியாமல் ஏதோ பாடலுக்குத் தாறுமாறாகத் துள்ளி ஆடி நகைத்து மொத்தமாய்க் களைத்துப் போனவளாய் ஒரு இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள் விதற்பரை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்விட்டு சிரித்தாள். ஏதேதோ குதுகலமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ வந்தாள் அவளுடைய வகுப்பில் படிக்கும் சஞ்சனா. வட இந்தியப் பெண். இங்கேதான் பிறந்து வளர்ந்தவள். அவள் பூர்விகம் இந்தியாவாக இருந்தாலும், முற்று முழுதாக ஆங்கிலேயருடைய பண்பாட்டுக்கு மாறியவள்.
விதற்பரையைக் கண்டதும், பெரும் ஆர்ப்பாட்டத்தோடு,
“வாவ்… லுக் அட் யு…” என்றவாறு அவளை நெருங்கி, அணைத்து அவள் கன்னத்தில் பசக் என்று முத்தம் கொடுக்க, அவளிடமிருந்து வந்த மது வாடையில் குமட்டிக்கொண்டு வந்தது விதற்பரைக்கு.
அவசரமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்தவளாக,
“ஹீ ஹீ… நன்றி” என்று அசடு வழிய, அதில் ஒருத்தன் விதற்பரையை நெருங்கி,
“ஹே… விது… இந்தா டோக்கன்… எந்த மதுவாக இருந்தாலும் நீ தாராளமாகக் குடிக்கலாம்…” என்றவாறு சில சீட்டுக்களை அவள் முன்னால் நீட்டினான்.
உடனே மறுப்பாகத் தலையை ஆட்டிவிட்டு,
“இ… இல்லை… எனக்குப் பழக்கமில்லை. வேறு யாருக்கும் கொடுங்கள்…” என்றதும், அதைக் கேட்ட சஞ்சனா,
“வட்… நீ ஒரு போதும் மது அருந்தியதில்லையா…” என்றாள் அதிர்ச்சியுடன். இவளோ அதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்பது போலப் பார்த்தாள்.
“உன் பதினெட்டாவது பிறந்த நாளில் கூடச் சுவைத்ததில்லையா?” என்றாள் நம்பாதவளாக. விதற்பரையோ, உதடுகளைப் பிதுக்கி,
“ஏன் அன்று அதைச் சுவைக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?” என்றாள் சற்று எரிச்சலாக.
“மை காட்… வாழ்வில் முக்கியமான தருணத்தை இழந்துவிட்டாய்… ம்… நாங்கள் பதினெட்டாவது வயது பிறந்த நாளில் முதல் முதல் செய்யும் காரியமே மதுவைச் சுவைப்பதுதான் தெரியுமா? ஆனால் நீ அதைக் கூடச் செய்யவில்லை என்றால், மனிதனாகப் பிறந்ததற்கு அர்த்தமேயில்லை” என்று அவள் செய்யக் கூடாத மாபாதகத்தைச் செய்தது போல வாயைப் பிளக்க, தன் தோள்களைக் குலுக்கியவள்,
“என் வளர்ப்பு அப்படி. நானும் சரி, என் சகோதரர்களும் சரி மதுவை முகர்ந்து பார்த்தாலே அம்மா பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள்…” என்று கூறிச் சிரிக்க,
“கமான்… நீ என்ன சின்னக் குழந்தையா உன் தாய்த் தந்தைக்குப் பயப்பட. பதினெட்டு வயது வந்தாலே நாம் தனி மனிதர்கள். எங்களை அதிகாரம் செய்ய யாருக்கும் உரிமையில்லை… நம் பெற்றோர்கள் உட்பட. வா.. வந்து ஒரு கொஞ்சமாவது சுவைத்துப் பார்…” என்றாள் அவள் வற்புறுத்தலாய்.
“தனி மனிதர்களா… அப்படியானால் இறந்த பிறகு நாமே நடந்து சென்று சுடுகாட்டில் படுத்துவிடலாமா…?” என்று கிண்டலாக கேட்டவள், பின்பு அவள் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் சஞ்சனா இல்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக,
“ப்ளீஸ் சஞ்சு… எனக்குப் பிடிக்கவில்லை. விட்டுவிடு…” என்றாள் அழுத்தமாய்.
“குடித்துப் பார்க்காமல் பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்…? சுவைத்துப் பார்… விதற்பரை… வருடத்தில் எப்போதாவது தான் இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும். அதை அனுபவிக்காமல் விடுவது முட்டாள்தனம்… கமோன்… கொஞ்சம் சுவைத்துப் பார்… பிறகு நாங்கள் வேண்டாம் என்றாலும், நீ விட மாட்டாய்… கமோன்…” என்றாள் வற்புறுத்தலாய்.
அவள் உடலிலிருந்த தள்ளாட்டத்தைக் கண்ட விதற்பரை, அவள் கரத்திலிருந்த போத்தலை வாங்கி மேசையில் டொக்கென்று வைத்துவிட்டு,
“இனி போதும் சஞ்சனா… இதற்கு மேல் நீ குடித்தால் உன் நிலை அவ்வளவுதான்… இத்தோடு நிறுத்திக் கொள். இல்லையென்றால் உன்னைத் தூக்கித்தான் செல்லவேண்டும்… அந்தக் கோலத்தில் உன் அம்மா அப்பா பார்த்தால் எப்படியிருக்கும்” என்று எச்சரிக்கச் சிரித்த சஞ்சனா,
“ஹே… நான் சுதந்திரப் பறவை தெரியுமா…! என் விடயத்தில் தலையிட அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது? அதே போல அவர்களின் வாழ்க்கையிலும் நான் தலையிடுவது கிடையாது… ” என்று அலட்சியமாகக் கூறியவாறு மேசையில் வைத்த போகத்தலை எடுத்து மேலும் வாய்க்குள் கொட்டிவிட்டு, புன்னகையுடன் விதற்பரையைப் பார்த்து,
“குழிச்சுப் பார் விது… வானத்தில் பழப்பாய்…” என்றாள் குழறலாய். தன் தோழியை எரிச்சலுடன் பார்த்தவள்,
“நீ பறப்பதே போதும்… இதில் நான் வேறா…” என்று கூறும்போதே, சற்றுத் தொலைவிலிருந்து விதற்பரை படும் சங்கடத்தைக் கண்டுகொண்ட விக்டர், விரைந்து அவர்களை நெருங்கி,
“அவள்தான் வேண்டாம் என்று மறுக்கிறாளே… பிறகு எதற்கு வற்புறுத்துகிறீர்கள்…” என்று கண்டித்துவிட்டு, விதற்பரையை ஏறிட்டவன்,
“நீ பழரசம் குடிக்கப்போகிறாயா?” என்றான். இவள் ஆம் என்று தலையை ஆட்ட,
“இதோ வருகிறேன்…” என்றுவிட்டுச் சென்றவன் திரும்பி வரும் போது கரத்தில் பழரசம் இருந்தது. அதை அவளிடம் நீட்டி,
“இந்தா இதைக் குடி…” என்று கூற, நன்றியோடு பெற்றுக் கொண்டவள், அவன் கரத்திலிருந்த பொன்னிறத் திரவத்தைக் கண்டு உதடுகளைச் சுழித்தவளாக,
“அதிகம் குடித்தால் வண்டியை எப்படி ஓட்டுவாய்?” என்றாள் கண்டிப்பது போல. அவனோ சிரித்துவிட்டு,
“இது மதுவல்ல… எனக்கு மதுவின் வாடை பிடிப்பதில்லை… தவிர அது எனக்கு ஒத்து கொள்வதுமில்லை…” என்றவன் தன் கரத்திலிருந்த குவலையைத் தூக்கிக் காட்டி,
“ஆப்பிள் சாறு… பார்ப்பதற்கு மதுபானம் போலவே தோன்றும்… யாரும் குடிக்கிறாயா என்று வற்புறுத்த மாட்டார்கள்…” என்று நகைத்தவாறு கூறிவிட்டு
“சரி… நீ பேசிக்கொண்டிரு… நான் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்…” என்று அந்தக் கூட்டத்தோடு மறைந்து கொள்ள, தன் கரத்திலிருந்த குவலையை வாய்க்குள் விட்டவாறு சுத்தவரப் பார்த்தாள்.
ஏதோ தான் மட்டும் தனித்து நிற்பது போலத் தோன்றியது விதற்பரைக்கு. எல்லோரும் மகிழ்ந்திருக்க, இவளால் மட்டும் அப்படி மகிழ்ந்திருக்க முடியவில்லை. நிச்சயமாக அது அவளுக்கு ஏற்ற இடமில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.
யார் யாரோ கூட்டு சேர்ந்தார்கள். யார் யாரோ ஆடினார்கள். யார் எவர் என்றில்லாமலே தொட்டுப் பேசினார்கள். அணைத்தார்கள். இப்படி எவர் என்று தெரியாமல் ஒருவனின் கரங்கள் மேனியில் பட விட்டுவிட முடியுமா என்ன? நினைவே அருவெறுக்கிறதே… என்று எண்ணியவளுக்கு அவ்வியக்தனின் தொடுகை நினைவுக்கு வந்தது.
அவன் தொடும்போது மட்டும் மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்து சிலிர்த்துப் போகும். மேலும் மேலும் தீண்ட மாட்டானா என்கிற ஏக்கம் பிறக்கும். அவ்வியக்தனின் நினைவில் அவளையும் மீறி உதடுகள் மலர்ச்சியில் சிரிக்க, மீண்டும் ஒரு வாய் குடித்தாள் விதற்பரை. ஏனோ அவன் அருகே இருப்பது போலவும், அதோ சற்றுத் தொலைவில் மகிழ்ச்சியாக ஆடும் ஆண் பெண்களும் போல அவளும் அவனும் சேர்ந்து இணைந்து பிணைந்து ஆட மாட்டோமா என்கிற ஏக்கமும் அவள் மதில் தோன்ற, அவளையும் மீறி உடல் சூடானது. அந்தப் பாணத்தைக் குடிக்கக் குடிக்க உள்ளே ஒரு வித மாற்றம். ஒரு வித தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் மருந்தாய் அவ்வியக்தன்தான் தெரிந்தான்.
அடுத்த மிடற்றைக் குடித்துவிட்டு விழிகளை வேறு பக்கம் திருப்ப, அங்கே நின்றிருந்தான் நகுலன். இவளுடைய பார்வை அவனிடம் நிலைத்ததும், தன் பற்களைக் காட்டி ஈ என்று விட்டுத் தன் கரத்திலிருந்த குவலையைத் தூக்கி இவளிடம் காட்ட, விதற்பரைக்கு எரிச்சல் தோன்றியது.
இவனும் இங்கேதான் இருக்கிறானா? என்று எண்ணியவளாகப் பார்வையைத் திருப்பியவளுக்குத் திடீர் என்று உள்ளே எதுவோ கிறுகிறுக்க தொடங்கியது. உடல் பறப்பது போலத் தோன்றியது. சற்றுத் தெளிவாக இருந்த புத்தி அவளுக்கு எதையோ அறிவுறுத்த, சந்தேகத்துடன் தன் கரத்தலிருந்த குளிர்பானத்தைத் தூக்கிப் பார்த்தாள். அரைவாசிக்கும் குறைவாகத்தான் குடித்திருந்தாள். அப்படியிருந்தும் உள்ளே எதுவோ செய்தது. ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு உறுத்தக் குவலையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு விழிகள் மங்கின. அடி வயிற்றில் எதுவோ குழைந்தது. இதயம் பலவீனமானது போன்ற உணர்வில் உடல் சோர்ந்தது. திடீர் என்று உடல் சூடாகி வியர்த்தது. தரை இடம் பெயர்ந்து அவளைத் தூக்கிக்கொண்டு மேலே வந்தது.
உடனே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும் என்று ஆறாவது அறிவு எச்சரிக்க, எழுந்தவளுக்கு உடல் தள்ளாடியது.
தள்ளாட்டத்தையும் மீறித் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியவளுக்குக் கால்கள் தரையில் பதியாமல் எங்கெங்கோ பதிந்தன. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தன் விழிகளை மூடித் தலையை உலுப்பியவள், சற்றுத் தெளிவானதும், பதட்டத்தோடு விக்டர் எங்கே என்று பார்த்தாள். அவனைக் காணவில்லை.
தன்னை மறந்து நெற்றியில் ஒற்றைக் கரத்தைக் கொடுத்து அழுத்திப் பிடித்தவள்,
“என்கொன்றுமில்லை… ஒன்றுமேயில்லை… இது வெறும் மனப் பிராந்தி… அதைத் தவிர எதுவுமில்லை…’ என்று திரும்பத் திரும்பச் சொன்னவாறு நடக்க முயற்சி செய்ய, கால்கள் துவளத் தொடங்கின.
எப்படியோ முடிந்த வரை தன்னை நிதானப்படுத்தி, ஒரு வித தள்ளாட்டத்துடன் யார் யாருடனோ முட்டி மோதி அவர்களின் அணைப்பில் சிக்கி அசிங்கமான வருடலில் திணறி, அதைப் புரிந்தும் புரியாத நிலையில் தவித்து, வெளியே வந்தபோது, அந்த உலகையே கரத்தால் புரட்டி எடுத்த உணர்வு விதற்பரைக்கு.
வெளியே வந்தவள், முடிந்தவரைக் குழம்பிய புத்தியை நிலைப்படுத்த முயன்றவாறு கைப்பையிலிருந்த கைப்பேசியை வெளியே எடுத்துச் சிரமப்பட்டு உயிர்ப்பித்து அதில் ஒரு சில இலக்கங்களைத் தட்ட முயன்றாள். கரங்கள் நடுங்கின. இலக்கம் ஒன்றுக்குப் பதில் பதினொரு லட்சத்துப் பதினோராயிரத்து நூற்றுப் பதினொன்று காட்ட, எந்த ஒன்றை அழுத்துவது என்று அவளுக்குத் தெரியாமல் விரல்கள் எங்கெங்கோ அழுத்தின. எப்படியோ சிரமப்பட்டு விழிகளை ஒருங்கிணைத்து புத்தியைத் தட்டிச் செயல்பட வைத்து அவ்வியக்தனை அழைக்க, மறு பக்கம் அழைப்பு போனதன்றி அவன் கைப்பேசியை எடுக்கவில்லை.
அவள் கேட்டிருக்க வேண்டும்… அவன் போகவேண்டுமா என்று கேட்டபோதே நிதானித்திருக்க வேண்டும். ஏமாந்து விட்டாள்… நண்பர்கள் என்று நம்பி வந்து ஏமாந்து விட்டாள்…” எவள் திக்கித் திணறும்போதே நான்கு பேர் அவளைச் சுத்தி வளைத்துக்கொண்டனர். யார் அவர்கள்? உணர முயன்றாள். ம்கூம் மங்கிய புத்தி சிறிதும் எழவில்லை. உடலில் ஏதேதோ மாற்றம். ஏதேதோ தேவை. அடுத்து என்ன செய்வதென்றும் புரியவில்லை. அதில் ஒருவன் நகுலன் போலத் தெரிந்தது. ஆனாலும் நிச்சயமில்லை. கிரகிக்க முதலே அவளை நெருங்கித் தப்பாகத் தொட்டான். தள்ளிவிடவேண்டும் என்று புத்திக்குப் புரிந்தது. முயன்றும் பார்த்தாள். ஆனால் கரங்கள் துவண்டு விழுந்தன. தள்ளிப்போ என்று சொல்லவேண்டும் என்கிற ஆவேசம் பிறந்தது. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது என்று தெரியாமல் புத்தி தூங்கிக் கிடந்தது. மெல்ல மெல்லத் தெரிந்த நிழல் உருவங்களும் மறையத் தொடங்க. அந்தக் கரங்கள் அவளுடைய அனுமதியில்லாமலே அவள் அழகிய மேனியில் தொடக் கூடாத இடங்களில் அவசரமாய் தீண்டின. வலிக்கச் செய்தன. பின் ஒரு அவசரத்தோடு, அவளுடைய கரங்களைப் பற்றித் தோள்களின் மீது போட்டுக்கொண்டவர்கள் அவளை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினர்.
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(33) வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…
(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…
(30) நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…