திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து விட்டது போல.
ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுத்ததும் தயாராகிக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வரலாம் என்கிற நினைப்போடு, அந்த நீள் இருக்கையில் சாய்ந்து கொள்ள அவளுடைய கைப்பேசி அழைத்தது.
இந்த நேரத்தில் யார்? நெற்றியை நீவிவிட்டவாறு சிரமப்பட்டு எழுந்தவள், அங்கே உயிரூட்டியில் பொருத்தியிருந்த கைப்பேசியை இழுத்து எடுத்து அழைத்திருப்பது யார் என்று பார்த்தாள். அது புது இலக்கத்திலிருந்து வந்திருந்தது. ஒரு வேளை ஆராவமுதனின் சித்தப்பா அந்த அபராசிதனாக இருக்குமோ? பெயரைப் பார் பெயரை… அபராசிதன். வெல்லப்படாதவன் என்று அர்த்தம். சிவனின் இன்னொரு பெயர். அந்தப் பெயருக்கு ஏதுவாக இவளாலும் அவனை வெல்ல முடியாதோ. கடைசியாகக் குழந்தையை அவனிடம் கொடுக்க வேண்டி வந்துவிடுமோ? அச்சம் பேரலையாக எழ, அழைப்பை ஏற்காமலே நடந்து சென்று தேநீர் மேசையில் போட்டுவிட்டு நீளிருக்கையில் தொப்பென்று அமர்ந்து சாய்ந்து கொள்ள, திரும்பவும் அழைத்தது கைப்பேசி.
கொஞ்ச நேரம் அந்தக் கைப்பேசியையே வெறித்தவளுக்கு, ஒரு வேளை ஏதாவது வேலைத் தளத்திலிருந்து அழைக்கிறார்களோ? என்கிற சந்தேகமும் எழுந்தது. அவள்தான் நிறைய இடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாளே. அங்கிருந்து யாராவது அழைத்திருந்தால்?
அந்தக் கணமே தன் உடல் உபாதையை மறந்தவளாகப் பாய்ந்து அந்தக் கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்துக் காதில் வைத்து,
“ஹ… ஹலோ…” என்றாள் புதிதாய் பிறந்த நம்பிக்கையோடு. ஆனால் அவளுடைய நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக வீழ்த்தியது மறு பக்கமிருந்து வந்த அழைப்பு. அழைத்தவன் யார் என்பதை அறிந்ததும் ஆடிப்போனாள் திகழ்வஞ்சி.
“என்ன திகழ்வஞ்சி…? எப்படி இருக்கிறாய்?” என்கிற அந்தக் கரகரப்பான குரலில் தீ சுட்டது போல, கைப்பேசியை நீளிருக்கையில் எறிந்தவள் பீதியோடு அதையே வெறித்துப் பார்க்க, மறு பக்கமிருந்து பயங்கரச் சிரிப்பொலி அவள் செவிப்பறையை வந்து மோதியது.
அழைத்தது வேறு யாருமில்லை. கிறிஸ்டீன். அவனுடைய தந்தைக்குச் சொன்னபிறகு சற்று அடங்கியிருப்பான் என்று நினைத்திருக்க, எந்தவிதப் பயமும் இல்லாமல் அவளை அழைத்திருக்கிறான். அப்படியென்றால் அவனை அவன் தந்தையால் கூட அடக்கி வைக்க முடியவில்லையா என்ன? நினைக்கும் போதே உடல் வெடவெடத்தது.
இப்போது இந்தக் கிறிஸ்டீன் எதற்காக அழைத்தான்…? அவனுடைய சிரிப்பு அது… அதை நினைக்கும் போதே இவளுடைய ஈரக்குலையே நடுங்கிப் போனது.
ஒரு பக்கம் அந்த அபராசிதன். மறு பக்கம் அந்த கிறிஸ்டீன்… இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னப் படப்போகிறாளா என்ன? நோ… நெவர்… அவள் இங்கே இருக்கும் வரைக்கும் தானே அவர்களின் தொல்லை இருக்கும். முதலில் எங்காவது சென்றுவிடவேண்டும். கண்காணாத தேசமாகப் போய்விட வேண்டும். ஆனால் குழந்தையை வைத்துக்கொண்டு யாருமில்லாமல் எங்கே போக முடியும்? கையிருப்பு வேறு பெரிதாக இல்லையே? ஏன் இல்லை… அதுதான் அந்த அமலன் கொடுத்த பணத்தில் மிச்சம் இருக்கிறதே. அதை எடுத்து செலவு செய்யவேண்டியதுதான். வேறு வழியில்லை… முதலில் இங்கிருந்து எங்காவது போகவேண்டும். போயே ஆகவேண்டும்…” முடிவு செய்தவள், சட்டென்று எழுந்து கொள்ள. அதற்கு ஒத்துழைக்காத உடல் அவளை மீண்டும் இருக்கையில் அமர வைத்தது.
தேகமோ நடுங்கியது. குளிர் எலும்புவரை ஊடுருவியது. உடல் முழுவதும் வலித்தது. மெல்ல மெல்லப் புத்தி மந்தமாகிப் போனது. அப்போதிருந்த நிலையில் பிணந்தின்னிக் கழுகான அந்தக் கிறிஸ்டீனையோ, தன்னிடமிருந்து குழந்தையைப் பிரிக்க நினைக்கும் அந்த அபராசிதனையோ, இவ்வளவு ஏன் பெற்ற மகனைப் பற்றியோ, யோசிக்கும் நிலையில் இல்லாமல் விழிகள் அவள் அனுமதியையும் மீறி மூட முயன்றன. ஆனாலும் புத்தி அவளை எழுந்துகொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையை மீற முடியாமல் எழுந்தவள், இரண்டடி வைத்திருக்க மாட்டாள். கால்கள் மடங்கிச் சரிய அப்படியே தரையில் விழுந்தாள் திகழ்வஞ்சி.
எங்கு பார்த்தாலும் குளிர், குளிர் குளிர். அந்தக் குளிரில் உடல் உதறியது. தலைவலி மண்டையைப் பிளந்தது. காய்ச்சல் அடிக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. எழுந்து ஏதாவது மாத்திரை சாப்பிடா விட்டால் அசைய முடியாது என்று தோன்றியது. ஆனாலும் அவளால் இயங்க முடியவில்லை. அவளுக்கு வேண்டியிருந்தது எல்லாம் நிம்மதியான தூக்கம். யாருடைய தொந்தரவும் இல்லாமல், நீண்ட நெடிய தூக்கம். அதற்கு மேல் தன்னோடு போராட முடியாமல் விழிகளை மூட, இருள் அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டது.
அதே நேரம் திகழ்வஞ்சியின் வீட்டிற்கு முன்னால், தன் வண்டியிலிருந்து இறங்கினான் அபராசிதன்.
அன்று காலை எழுந்ததுமே அவன் நினைவை ஆக்கிரமித்திருந்தது ஆராவமுதன்தான்.
எப்படியும் அவள் வேலைக்குப் போகும்போது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக யாரோ ஒருத்தரிடம்தானே விட்டுச் செல்வாள். நாம் போய் அவனை அழைத்து வந்தால், அவன் கூடக் கொஞ்ச நேரத்தைச் செலவு செய்யலாம் என்கிற எண்ணத்தில், தயாராகிக் குழந்தைகளின் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று கைக்குக் கிடைத்த விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொண்டு திகழ்வஞ்சியின் வீட்டிற்கு வந்திருந்தான்.
வந்தவன், அழைப்பு மணியை அடிக்க, யாரும் உள்ளே இருப்பதாகத் தெரியவில்லை. யோசனையில் புருவங்கள் சுருக்கியவன், ஒரு வேளை, இரவோடு இரவாகச் சென்றுவிட்டாளோ? என்கிற சந்தேகம் எழ, மெல்லிய பதட்டத்தோடு சுத்திவரப் பார்த்தான். அவளுடைய கார் தரிப்பிடத்தில் நிற்பதைக் கண்டதும்தான் கொஞ்சம் நிம்மதியானான்.
அப்படியென்றால் எங்கோ பக்கத்தில்தானே இருக்க வேண்டும். இல்லை வீட்டிற்குள் இருந்து கொண்டே கதவைத் திறக்க மறுக்கிறாளா? கோபம் வர, கதவின் குமிழைப் பற்றித் திருப்பிப் பார்த்தான். கதவு எந்த சிரமமும் இன்றித் திறந்து கொண்டது.
ஒரு விநாடி புருவம் சுருங்க திறந்திருந்த அந்தக் கதவையே பார்த்தான் அபராசிதன்.
கதவைக் கூடப் பூட்டாமல் உள்ளே என்ன செய்கிறாள்? யாராவது சட்டென்று உள்ளே நுழைந்தால்? குழந்தையை வைத்துக்கொண்டு இப்படிப் பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்?
எரிச்சலோடு எண்ணியவன், கதவை நன்றாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். நிசப்தமாக இருந்தது வீடு. சரி வெளியே போகும் அவசரத்தில் அவள் பூட்டவில்லை போல… என்று நினைத்தவன், கதவை மூட முயன்ற நேரத்தில்தான் அவன் விழிகளில் இரண்டு பாதங்கள் தட்டுப் பட்டன. ஏதோ உறுத்த, சட்டென்று உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தான்.
திகழ்வஞ்சி தரையில் சுயநினைவின்றிக் கிடந்தாள். அவள் தரையில் விழுந்திருந்த நிலை உறுத்த, தன் கரத்திலிருந்த பைகளை ஓரமாக வைத்துவிட்டு, அவளுக்கு முன்பாக ஒற்றைக்கால் மடித்து அமர்ந்தான்.
சரிந்து கிடந்தவளை நிமிர்த்தியவன் இரத்தப் பசையின்றிக் கிடந்த அவளுடைய முகத்தைக் கண்டு யோசனையோடு நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். அனலாகக் கொதித்தது.
உடனே அவளை சுயத்திற்கு வரவழைக்கும் முயற்சியாக அவளுடைய கன்னத்தைத் தட்டியவன், “தி… திகழ்… வஞ்சி?” என்று அழைத்துப் பார்த்தான்.
அவன் பலமுறை அழைத்த பின்பே அவளிடத்தில் சிறிய அசைவு தெரிந்தது. கொவ்வைப் பழமாகச் சிவந்த விழிகளைத் திறக்க முடியாமல் திறந்து பார்க்க, அங்கே மங்கிய ஒளியில் ஒரு உருவம்.
முதலில் அது யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் குரலும், அக் கரம் அவள் மேனியில் பட்டிருந்த விதமும் அவளுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க, நிம்மதியுடன் விழிகளை மூடிக்கொண்டாள்.
அவளுடைய வலியைப் போக்க கடவுள் மனமிரங்கி இரட்சகனை அனுப்பியிருக்கிறானோ? அவளைப் பாதுகாத்துக் காக்கத்தான் இவன் வந்திருக்கிறானோ? இதயத்தில் இதம் பரவ, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்த முயன்றாள். முடியவில்லை. உடல் எல்லாம் வலித்தது. அதை அவனிடம் சொல்வதற்காக வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தைகள் வர மறுத்தன. உமிழ்நீர் கூட்டி விழுங்க முயன்றவளுக்குத் தொண்டை பயங்கரமாக வலிக்க அந்த முயற்சியைக் கைவிட்டவளாகத் தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை மீண்டும் பார்க்க எத்தனித்தாள். உறக்கம்தான் வந்தது. மீண்டும் விழிகளை மூட முயல, மீண்டும் அவளுடைய கன்னத்தைப் பலமாகத் தட்டி, அவளை விழிப்படையச் செய்தவன்,
“திகழ்வஞ்சி… ஆரா எங்கே…?” கேட்டவாறே, குழந்தையை அங்கும் இங்குமாக விழிகளால் தேடினான். அந்தப் பதட்டம் நிறைந்த குரல் காதுவழியே சென்று புத்திக்குள் நுழைய, எதையோ சொல்ல வாய் எடுத்தாள். குரல் தொண்டைக்குள்ளேயே அடங்கிக் கொண்டது.
“திகழ் உன்னிடம்தான் கேட்கிறேன். ஆரா எங்கே…?” குரல் உயர்த்தி அவன் கேட்டதில், கொஞ்சம் சுயம் பெற்றவளாக,
“ஈ… ஈவா…” என்று முனங்கினாள் திகழ்வஞ்சி. அதைக் கேட்ட பின்புதான் அவனுடைய உடல் சற்று நிம்மதியோடு தளர்ந்தது.
இப்போது அவளை விட்டு எழுந்தவன் கண்ணில் பட்ட கதவைத் திறந்து பார்த்தான். அது தான் அவளுடைய படுக்கையறை போல. எங்கு பார்த்தாலும் குழந்தையின் பொருட்கள்தான் சிதறிக் கிடந்தன. அவளுடைய ஆடைகள் வேறு கூடையில் அடைந்து கிடக்க, ஒரு சில ஆடைகள் தரையில் குவிந்து கிடந்தன.
திரும்ப அவளிடம் வந்தவன், அவளைக் கரங்களில் ஏந்தியவாறு அவளுடைய அறைக்குள் நுழைது படுக்கையில் அலுங்காமல் கிடத்திவிட்டு, ஓரமாகச் சுருண்டிருந்த கம்பளியை இழுத்து அவள் மீது போர்த்திவிட, அவளோ அந்தக் குளிருக்கு இதமாகப் போர்த்தப்பட்ட போர்வையைத் தன்னோடு இறுக்கியவாறு திரும்பிப் படுத்துக் கொள்ள, எழுந்தவன், தன் வாகனத்தின் அருகே வந்தான்.
‘டிரங்கைத்’ திறந்து அதிலிருந்த ஒரு பெட்டியை இழுத்து எடுத்துக் கொண்டு திரும்பவும் வீட்டிற்குள் வந்தான்.
நேராக அவளுடைய அறைக்குள் நுழைந்தவன், தன் கரத்திலிருந்த பெட்டியை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, அதைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த நாடி மாணியை (stethoscope) எடுத்துக் காதில் மாட்டியவாறு அவளை நோக்கிக் குனிந்தான்.
அவளுடைய போர்வையைச் சற்று விலக்கி, மறுபக்கமாகச் சரிந்து படுத்திருந்தவளின் முதுகில் நாடி மாணியை வைத்துப் பரிசோதித்தவனின் புருவங்கள் சுருங்கின. பின் அவளை நேராகப் படுக்க வைத்தவன், நெஞ்சிலும் வைத்து இதயத் துடிப்பு மற்றும் சுவாசப்பையின் செயற்பாட்டையும் அவதானித்தான். கரத்தைப் பற்றி நாடித் துடிப்பைக் கவனிக்கும் போதே, மறு கரத்திலிருந்த கைக்கடிகாரத்தில் விநாடிகளைக் கணக்கிட்டான். தொடர்ந்து கண்ணின் கீழ் இமைகளையும் இழுத்துப் பார்த்தான்.
சுவாசப் பையில் கேட்கும் கரகரப்புச் சத்தம், அது வைரலால் உருவான நிமோனியா என்று சொன்னது. அதற்கு இதுதான் சிகிச்சை என்றில்லை. தானாகச் சரியாகும். தவிர, எந்த மாத்திரைக்கு ஒவ்வாமை ஏற்படும், பக்கவிளைவுகளைக் கொண்டு வரும் என்று எதுவும் தெரியாமல், எந்த மாத்திரையையும் பரிந்துரை செய்ய முடியாது.
இப்போதைக்கு அவளுடைய காய்ச்சலுக்கு ஐபோபுரோஃபின் (ibuprofen) தான் சரியாக இருக்கும். முடிவு செய்தவனாகக் குறிப்பிட்ட மாத்திரைக் குப்பியை வெளியே எடுத்து அதைத் திறந்து அதிலிருந்து இரண்டு மாத்திரைகளைக் கரங்களில் கொட்டி, மீண்டும் குப்பியை மூடிப் பெட்டியில் போட்டுவிட்டு வெளியே வந்தான்.
சமையலறைக்குள் நுழைந்தவன், ஒரு குவளையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் அவளருகே வந்தான். அவளுடைய கன்னத்தைத் தட்டியவன்,
“திகழ்வஞ்சி… எழுந்துகொள்…” எழுப்ப, சிரமப் பட்டு விழிகளைத் திறந்தாள் அவள்.
“வாயைத் திற…” அவன் கட்டளையாகச் சொல்ல, என்ன என்பது போல அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“மாத்திரை குடிக்கவேண்டும்… வாயைத் திற…” அவன் சொல்ல, உடல் வலியோடு எழுந்தமர முயன்றாள்.
உடனே அவளுடைய முதுகில் கரம் பதித்து எழுந்தமர உதவியவன், அவளுக்கு அருகே அமர்ந்து அவளைத் தன்னோடு சாய்த்து அணைத்துப் பிடித்தவாறு அவளுடைய வாய்க்குள் மருந்தைப் போட்டுத் தண்ணீரை ஊட்ட மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் திகழ்வஞ்சி.
அவள் வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் நிலையில் இல்லை. சொல்லப்போனால் எதுவுமே அவளுடைய புத்திக்குள் ஏறவில்லை. ஒருத்தர் சொல்கிறார். அவள் செய்கிறாள். அவ்வளவே.
அபராசிதனோ, தன் கரத்திலிருந்தவளை மீண்டும் படுக்கையில் கிடத்திச் சற்று விலகியிருந்த போர்வையைச் சரியாக்கிவிட்டு எழுந்து நின்றவன், மயக்கத்தில் கிடந்தவளை உற்றுப் பார்த்தான்.
அந்தச் சோர்ந்த நிலையிலும் அழகாகத்தான் இருந்தாள். சொல்லப்போனால், அவன் புகைப் படத்தில் பார்த்ததை விட, இப்போது எந்தவித முகப்பூச்சும் இன்றி, இயற்கையான எழிலோடு கொள்ளை கொள்ளும் வகையில்தான் இருந்தாள்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், எந்தப் பெண்ணைக் கண்டும் அசராத அவனையே ஒரு கணம் அசர வைத்த பெருமை அவளைத்தான் சாரும்.
அந்தப் பெரிய விழிகளும். அவை அதிர்ச்சியில் விரிந்து, அச்சத்தில் தவித்து, பதட்டத்தில் கலங்கி என்று அந்த நிலையிலும் கூட ஒரு மாதிரி காந்தம் போலப் கவர்ந்திழுக்கவே செய்தாள். கூடவே அந்த இதழ்கள்… செழித்த சிவந்த இதழ்கள். அதுவும் அவன் யார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் வறண்டு போன செவ்விய இதழ்களைத் தன் சிவந்த நாக்கை நீட்டி ஈரமாக்கினாளே. அந்தக் காட்சி இன்னும் மறக்காமல் அப்படியே நினைவில் நின்று தொலைக்கிறது. சொல்லப்போனால், அன்று முழுவதும் அந்த உதடுகளும், அதனை அவள் ஈரமாக்கிய விதமும்தான் திரும்பத் திரும்ப நினைவில் வந்து வதைத்தது. காரணம் ஏன் என்று கேட்டால் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவளைக் கண்ட நொடியிலிருந்து பழத்தைக் கண்டதும் ஈ மொய்ப்பது போல, அவளுடைய நினைவுகள்தான் மனதை மொய்த்து நிற்கிறது. இத்தனைக்கும் அவனுடைய அண்ணனோடு முறையற்றுப் படுக்கையை பகிர்ந்து அவன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டவள்.
அதை நினைக்கும்போதுதான் இவனால் தாளமுடியவில்லை. இதோ இப்படி இவன் தடுமாறுவது போலத்தானே அவன் சகோதரனும் தடுமாறியிருப்பான். இவன் என்பதால் நின்று பிடிக்கிறான். அமலன் அப்படியில்லையே. சட்டென்று இரங்கிவிடுவான். அவனிடம் என்ன நாடகமெல்லாம் ஆடி மயக்கினாளோ. நினைத்த மாத்திரத்தில் அவள் மீதிருந்த இரக்கம் வடிந்து போக, அவளுக்காகப் பரிதாபப்பட்ட தன் மீது வெறுப்பும் வந்தது.
“XXXXX… ஐ ஆம் இடியட்.. போயும் போயும் இவளை… சே… என் புத்தி ஏன் இப்படிப் போகிறது…?” என்று நெற்றியில் அறைந்து கொண்டவன், அவசரமாக அவளைவிட்டு விலகி, மேசையிலிருந்த தன் பெட்டியையும் எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தான். ஏனோ நெஞ்சம் கனத்தது அவனுக்கு. அவனுடைய வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக எத்தனை சிக்கல்கள்.
பெருமூச்சோடு, கையிலிருந்த பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, அங்கிருந்த நீளிருக்கையில் தொப்பென்று அமர்ந்தவன், தன் ஷேர்ட்டின் முதல் மூன்று பொத்தான்களைக் கழற்றிவிட்டுத் தலையைப் பின்னால் சாய்த்தான். கண் முன்னால் அவனுடைய அண்ணன் வந்து போக நெஞ்சத்தில் பாறாங்கற்களை வைத்தது போலக் கனத்துப் போனது.
(23) தன் அறைக்குள் நுழைந்து, ஆயாசத்தோடு படுக்கையில் சரிந்தபோது, அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். ரஞ்சன்தான் எடுத்திருக்கிறான். பதட்டத்தோடு…
(21) மெதுவாகத் தூக்கம் கலைந்து எழுந்தாள் மீநன்னயா. ஏனோ அடித்துப்போட்டதுபோலச் சோர்வாக இருந்தது. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்குக் கண்முன்னே விரிந்த…
(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால்…
(19) மறுநாள் மீநன்னயா எழுந்தபோது இரண்டு மூக்கும் முற்றாக அடைத்திருந்தது. அவளால் மூச்சே எடுக்க முடியவில்லை. நேற்று அந்தக் குளிரில்…
(5) உண்மை இத்தனை கசப்பாகவா இருக்கும். பற்களை கடித்துத் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றவள், “போதும்... பிளீஸ்... இதற்கு…
(17) சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல…
View Comments
Wow awesome
அருமையான பதிவு 😍😍😍😍.
இந்த கிறிஸ்டி கொரங்கை ஏதாவது பண்ணுங்கப்பா😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
எதே இவன் டாக்டரா? நாடி புடிச்சு பாக்கறான்? ஸ்டெத்து வச்சு செக் பண்ணறான்?
மாத்திரை பேரெல்லாம் சொல்லறான்?
மாத்திரை குடுத்து கவனிச்சுக்கிறானே?
என்னாங்க டா நடக்குது இங்க?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அப்புடி யென்ன பிரச்சினை அவனோட அண்ணங்காரனுக்கு?🤔🤔🤔