Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!-4

(4)

கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல் நடுக்கம் அப்படியே இருக்க, வீட்டு வாசலிலேயே தொப்பென்று அமர்ந்து விட்டாள்.

இன்னும் அவளுக்குத் தான் கிறிஸ்டீனிடமிருந்து தப்பியதை நம்பவே முடியவில்லை. அன்று மட்டும் அந்த வாடிக்கையாளன் வராது போயிருந்தால், இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்… இதுவே காலத்துக்கும் மறக்க முடியாத வடுவாக மனதில் பதிந்துவிட்டது. இதற்கு மேலும் நடந்து இருந்தால்? நினைக்கும் போதே உடல் உதறியது அவளுக்கு.

ஏனோ மூச்சு அடைப்பது போல இருக்க, அதுவரை முகத்தை மறைத்திருந்த மாஸ்கைக் கழற்றிக் கரங்களில் சுருட்டிக் கொண்டவள், கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள்.

அவளால் இதை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அந்த வாடிக்கையாளன் சொன்னது போல, இன்று அவள், நாளை யாரோ? இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அதற்கு ஒரே வழி, இது பற்றி ஜானிட்டருக்குத் தெரியப்படுத்த வேண்டும். முடிவு செய்தவளாகத் தன் கைப்பேசியை எடுத்தவள், ஜானிட்டரை அழைக்க, மறு பக்கம் வந்தார் ஜானிட்டர்.

“ஹே… திகழ்… என்ன விஷயம். கடையில் எந்தப் பிரச்சனையும் இல்லையே…?” அக்கறையாகக் கேட்கும் மனிதரிடம் அவருடைய மகனின் வண்டவாளத்தை எப்படிச் சொல்வது. ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும். தன்னைத் திடப்படுத்தியவள்,

“ஜானிட்டர்… உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்..”

“சொல்லு திகழ்…”

நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள், இனி நான் வேலைக்கு வருவதாக இல்லை ஜானிட்டர். உன்னிடம் இதைச் சொல்வதற்குக் காரணமே எல்லோரும் என்னைப் போல உன்னை அழைத்துச் சொல்ல மாட்டார்கள். இதுவே காவல் நிலையத்திற்குச் செய்தி போனால், பிறகு உன் மகனைக் காப்பது மிகச் சிரமம். சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் விருப்பம்…” என்றவள் கைப்பேசியை அணைக்க, மறுபக்கம் அவள் சொன்னதைக் கேட்ட ஜானிட்டரின் முகமோ பெரும் வேதனையில் கசங்கிப் போனது.

ஜானிட்டரிடம் விடயத்தைச் சொன்ன நிம்மதியோடு, வீட்டுக் கதவைத் திறக்கத் திறப்பை எடுத்த திகழ்வஞ்சியின் கரம் இன்னும் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.

அவளுக்கே தான் இத்தனை பலவீனமானவள் என்று அன்றைக்குத்தான் தெரியும். தான் மிகுந்த தைரியசாலி என்றுதான் இதுநாள் வரை நினைத்து இருந்தாள். ஆனால் தகாத சம்பவம் நடக்கும் போதுதானே, உண்மையான தைரியத்தின் நிலை என்னவென்று தெரிகிறது.

சமையலறை சென்றவள், ஒரு குவளை குளிர் நீர் எடுத்து கடகடவென்று குடிக்கப் பதட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

சோர்வோடு நடந்து சென்று முன்னறை நீள் இருக்கையில் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்தவளுக்கு அவளுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனக்கண்ணில் ஓடத் தொடங்கியது. உள்ளத்தின் பலவீனத்தாலும், உடலின் நடுக்கத்தாலும் கண்ணீர் பொங்கவா என்று அனுமதி கேட்க, ஆத்திரத்தோடு அந்த அழுகையை அடக்க முயன்றாள் திகழ்வஞ்சி.

அவள் ஏன் அழவேண்டும். எதற்காக அழ வேண்டும்? அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டாள்? ம்கூம்… அவள் செய்தது சரிதான்…’ தன்னையே திடப்படுத்தியவளுக்கு நாளை என்கிற கலக்கம் ஏறி உட்கார்ந்தது.

இதுநாள் வரை அவளுக்கு மூன்றுவேளைச் சோறு போட்டது இந்த வேலைதான். இனி அதுவும் இல்லை என்றால் அடுத்து என்ன செய்வாள்…? இன்னொரு வேலையை அவள் உடனே தேட வேண்டுமே. குழந்தையின் சாப்பாடு, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு, தண்ணீர் கட்டணம் இதை எல்லாவற்றையும் எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? இப்போது கையிருப்பில் வெறும் மூவாயிரம் டாலர்கள்தான் இருக்கின்றன. அதை வைத்து ஒரு மாதத்தை வேண்டுமானால் ஓட்டலாம். அதற்குப் பிறகு…? முக்கியமா ஆராவமுதனின் செலவைக் குறைவின்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும்… நினைக்கும்போதே தலை சுற்றிக்கொண்டு வந்தது.

கூடவே உடல் வேறு களைப்பில் சோர்ந்து போக, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூடத் திராணியற்று, நீளிருக்கையில் தலை சாய்த்து விழிகளை மூட, வீட்டின் மணியோசை கேட்டது..

இந்த நேரத்தில் யார்? ஒருவேளை கிறிஸ்டீனாக இருக்குமோ? பதறித் துடித்து விருக்கென்று எழுந்து அமர்ந்தாள் திகழ்வஞ்சி. அச்சம் பிடரியில் வந்து தாக்க, பிடரி மயிர்க்கால்கள் குத்திட்டு எழுந்து நின்றன. உடல் சூடேறிப் பின் குளிர்ந்தது. இதயத்தின் துடிப்பு அதன் சுவரம் தப்பி வேறு ஒரு சுவரத்தில் ஒலித்தது. அதுவரை மட்டுப்பட்டிருந்த அச்சம் திரும்பவும் அவளைச் சூழ்ந்து கொள்ள எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

திரும்பவும் கதவு மணி அடிக்கும் ஓசை. அதற்கு மேல் அப்படியே அமர்ந்திருக்க முடியாமல் எழுந்தவள், கதவை நோக்கி நகர்ந்தாள்.

கரத்தில் ஏதாவது ஆயுதமிருந்தால் நன்றாக இருக்கும். பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். எலியை விரட்ட அவள் வைத்திருந்த கட்டை கண்களுக்குப் புலப்பட, ஓடிப்போய் அதை எடுத்தவள் கதவை நோக்கி நகர்ந்தாள்.

அதன் சிறிய துவாரம் வழியாக வந்திருப்பது யார் என்று பார்க்க அந்த நபர் முதுகைக் காட்டிக் கொண்டு இருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அது கிறிஸ்டீன் இல்லை என்பது மட்டும் உறுதி. ஓரளவு பயம் வற்றிப் போக, நிம்மதி மூச்சொன்றை எடுத்து விட்டவள் கரத்திலிருந்த கட்டையை ஓரமாக வைத்துவிட்டுக் கதவை மெதுவாகத் திறந்தாள்.

அதே நேரம் மீண்டும் கதவைத் தட்டுவதற்காகத் திரும்பிய அவனும், கதவைத் திறந்த இவளும் ஒருவரை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தனர்.

பார்த்தவர்களின் விழிகள் வியப்பில் விரிந்தன. அதுவும் அந்த ஆடவனின் முகத்தில் வியப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“நீ… நீ… அந்தக் கடையில் வேலை செய்தவள் தானே…?” அவனுடைய அழுத்தம் நிறைந்த குரல் காதில் விழ, அதிர்வு நீங்கி அவனைப் பார்த்தவள்,

“நீங்கள்தானே கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்?” என்றாள் இன்னும் தன் கண்களை நம்ப முடியாதவளாக.

“யெஸ்… த… ஸேம் பேர்சன்…” என்றவன் அவளைத் தலை முதல் கால்வரை ஒரு மாதிரியாகப் பார்த்தான். பின் விழிகளை வீட்டின் உள்ளே செலுத்தினான். மீண்டும் அவளைப் பார்த்தவன்,

“திகழ்வஞ்சி என்பது?” என்றான் யோசனையாக இழுத்தவாறு.

“ம்… இட்ஸ் மீ…” அவள் சொன்னதும் அதுவரை அவனிடமிருந்த யோசனை வடிந்து சென்று அந்த இடத்தில் இறுக்கமும், அழுத்தமும் குடிபெயர்ந்தது. அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தவனுக்கு மெல்லிய குழப்பம். பின் எதையோ கண்டு தெளிந்தவனாக, முகம் இறுகிப் போக,

“நான்… உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும். உள்ளே வரலாமா.. ” என்றான் கல்லை ஒத்த குரலில். அதில் வேண்டுதல் இருக்கவில்லை. மாறாகப் பேசவேண்டும் வா என்கிற கட்டளைதான் இருந்தது.

அன்று கடையில் இவன் மட்டும் தக்க தருணத்தில் வராது போயிருந்தால், அவள் நிலை என்னவாகி இருக்கும். அந்த நன்றிக்கடன் கொடுத்த தைரியத்தில், வழிவிட்டு ஒதுங்கி நிற்க, அவன் அவளைத் தாண்டி உள்ளே வந்தான்.

அப்போதுதான் அவனுடைய உயரமே இவளுக்கு உறுத்தியது. நின்ற நிலையிலேயே வீட்டின் மேற்தளத்தைத் தொட்டு விடுவான் போல அத்தனை உயரமாக இருந்தான். முன்பு பாதுகாப்பை கொடுத்த அவனுடைய பரந்து விரிந்த மார்பு இப்போது சற்றுப் பயத்தை கொடுக்க, நிதானமாக உள்ளே வந்தவனை இமைக்காது பார்த்தாள் திகழ்வஞ்சி.

அவனோ, உள்ளே வந்ததும், தன் வீடு போல, சாவதானமாக நடந்து சென்று அங்கிருந்த நீள் இருக்கையில் அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அந்த வீட்டை ஒரு முறை கண்ணோட்டம் விட்டான்.

மிக எளிமையான பொருட்களால் அலங்கரிக்கப் பட்ட முன்னறையில் ஆடம்பரம் என்று எதுவும் தட்டுப்படவில்லை. தொலைக்காட்சிப் பெட்டி கூட சற்று பழைய காலத்திற்குரியது. அதைக் கண்டவனின் விழிகள் யோசனையில் சுருங்க, நிமிர்ந்து திகழ்வஞ்சியை ஏறிட்டான்.

அவள் நிற்பது உறுத்தியதோ,

“எவ்வளவு நேரத்திற்கு இப்படியே நிற்கப் போகிறாய்? நீயும் உட்காரலாமே…” பக்கத்து இருக்கையைக் காட்ட, மறுக்காமல் வந்து உட்கார்ந்தவள் அவனைத் தயக்கமாகப் பார்த்து,

“நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்… அப்போது சொல்ல முடியவில்லை… சாரி… அன்ட் தாங்ஸ்.” என்று அவள் கூற, அவள் எதற்காக நன்றி சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாகத் தலையை அசைத்தவன்,

“இட்ஸ் ஓகே… என்னால் புரிந்து கொள்ள முடிகிறது…” என்றவன், சற்று நேரம் அமைதி காத்தான். பின் அவளை ஏறிட்டு,

“ஐம்… அபராசிதன். அபராசிதன் ஜெய்ஷங்கர்” என்று தன்னை அறிமுகப்படுத்த அந்த ஜெய்ஷங்கரில் இவளுடைய இதயம் ஒரு முறை துள்ளிக் குதித்தது. ஜெய்ஷங்கரா…? இது… இந்தப் பெயர்? எச்சில் கூட்டி விழுங்கியவள் தன் பதட்டத்தை இயன்றவரை மறைத்துக் கொண்டு,

“ஓ…!” என்றாள். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ தப்பாக நடக்கப் போகிறது என்று மட்டும் உள்ளுணர்வு சொல்ல,

“சொல்லுங்கள் அபராசிதன்… என்னைத் தேடி ஏன் வந்தீர்கள்…?” என்றாள் முடிந்தவரை அமைதியாக. அதைக் கேட்டவனின் உதடுகள் இகழ்ச்சியாக வளைய,

“ம்..! சொல்கிறேன்… என்ன அவசரம்…?” என்றவனின் விழிகள் எதையோ தேடின. அப்போது அருகிலிருந்த விளக்கு மேசையில் அழகாய் வைக்கப்பட்டிருந்த சட்டம் போடப்பட்டிருந்த புகைப் படத்தைக் கண்டதும் விழிகள் மின்ன, எட்டி அதை எடுத்தான்.

அங்கே திகழ்வஞ்சி முகம் முழுக்கப் பூரிப்போடு முத்துப் பற்கள் தெரிய, கண்கள் மின்னச் சிரித்த வண்ணம் தன் மகனை மடியில் வைத்து அணைத்தவாறு இருக்கும் நிலையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.

அந்தப் புகைப்படத்தைக் கண்டவனின் விழிகள் அந்தக் குழந்தையின் உருவத்தை விட்டு அங்கும் இங்கும் அசைவதாயில்லை.

அதுவரை இறுகியிருந்த அவனுடைய முகம் சட்டென்று கனிந்து இளகிப் போயிற்று. ஆசையோடு அந்தக் குழந்தையின் உருவத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவனை ஒரு வித குழப்பத்துடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.

‘யார் இவன்? எதற்காக அவளைத் தேடி வந்திருக்கிறான்? அன்று காலைதான் கடையில் சந்தித்தாள். இப்போது என்னவென்றால் அவளுடைய வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருக்கிறான். ஏன்? எதற்கு?’ பல கேள்விகள் அவளைக் குடைய,

“அப… அபராசிதன்…?” என்றாள் ஒன்றும் புரியாத குழப்பத்தோடு. ஆனால் அவனோ அவள் அழைத்ததைக் கருத்தில் எடுக்காது, குழந்தையிடம் இருந்து தன் விழிகளை விலக்காமலே,

“குழந்தையின் பெயர் என்ன?” என்றான். கேட்கும்போதே அவனுடைய தொண்டை கரகரத்தது.

“ஆரா… ஆராவமுதன்…” அவள் சொல்ல, அதை ஒரு முறை சொல்லிப் பார்த்தான் அபராசிதன். சட்டென்று அழகிய புன்னகை ஒன்று அவனுடைய உதடுகளில் மலர்ந்தது. அடுத்த கணம் அது வடிந்து போக, முகம் இறுக நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“எனக்கு ஆராவமுதன் வேண்டும்…!” என்றான் எந்தவித முன்னுரையும் இல்லாமல்.

அதைக் கேட்ட திகழ்வஞ்சி அதிர்ந்து போனாள். கூடவே “வட் த XXXX…” என்று கேட்டும் விட்டாள்.

ஆனால் அவனோ அவளுடைய அதிர்ச்சியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாறாகத் தன் கரத்திலிருந்த அந்தப் புகைப்படத்தைத் திரும்பவும் அதன் இடத்தில் வைத்துவிட்டு எழுந்து நின்றவன், தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைத் திணித்தவாறு அவளை நெருங்கி நின்று அவளைக் குனிந்து பார்க்க, இவளுடைய நெஞ்சமோ அச்சத்தில் படபடத்து நடுங்கிப் போனது.

ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிய இதயம் வாய்க்குள் வந்து துடித்தது.

பல முறை பயத்தின் சுவையை அறிந்து இருக்கிறாள்தான். ஆனால் இதன் சுவை, அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டுத் தனித்து நின்று இவளைக் கதிகலங்கச் செய்ய இவளும் எழுந்து நின்றுவிட்டாள். ஆனாலும் அவனுடைய அசாத்திய உயரத்தை எட்ட முடியாதவளாக அவனை அண்ணாந்து பார்த்தவளுக்கு உடனே அவனை வெளியே அனுப்பவேண்டும் என்பது மட்டும் புரிய, அதற்கு மேல் அங்கே நிற்காமல் நடந்து சென்றவள், வாசல் கதவைத் திறந்து,

“லிசின்… எனக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன… அதனால்… பிளீஸ்…” என்றவள் ஒற்றைக் கரத்தால் வாசலைக் காட்டி, முடிந்தவரை குரலில் திடத்தைக் கூட்டிக் குறிப்புக் கொடுக்க, அதைக் கேட்டு மெல்லியதாகச் சிரித்தான் அவன்.

அவளுடைய குறிப்பு அவனுக்கு உறுத்தியதாகவே தெரியவில்லை. மாறாக, இடது கரத்துச் சுட்டு விரலால் இடப்பக்க இமையைச் சொரிந்தவாறு அவளை அழுத்தமாகப் பார்த்தவன், மீண்டும் இமையைச் சொரிந்த கரத்தைப் பாக்கட்டிற்குள் திணித்தவாறு அலட்சியமாக நின்றிருக்க, அந்தத் தோரணையே சொன்னது அவன் இப்போதைக்கு வெளியே செல்ல மாட்டான் என்று.

அதைப் புரிந்து கொண்டவளுக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. தொண்டைக்குள் எதுவோ வந்து அடைத்துக் கொண்டது.

“நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது மிஸ்டர் அபராசிதன். திடீர் என்று வந்து ஏதேதோ உள… உளறுகிறீர்கள். இதோ பாருங்கள்.. உங்களிடம் பேசுவதற்கு எனக்கு எதுவுமில்லை. பிரியமுமில்லை. தயவு செய்து வெளியே போங்கள்…” அவள் முடிந்தவரை தன் அச்சத்தை வெளிக்காட்டாமல் கூற, அவனோ உதடுகளைப் பிதுக்கித் தலையை அசைத்தான். பின் கனிந்த முகத்தோடு திரும்பி அந்த மேசையிலிருந்த புகைப் படத்தைப் பார்த்தவன், பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு இதயம் சில்லிட்டது. எதற்காக இத்தனை நாள் பயந்து ஒதுங்கி வாழ்ந்தாளோ, எதற்காக இத்தனை நாள் யாரிடமும் அதிகம் தொடர்பு வைக்காமல் தள்ளியே இருந்தாளோ, அதற்கு முடிவு வந்துவிட்டது என்பதை உள்ளுணர்வு சொல்லக் கதிகலங்கிப் போனாள்.

அவளுடைய அந்த முகபாவனையை வைத்தே அவலத்தை ஊகித்துக்கொண்டாள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட, மீண்டும் இவனுடைய உதட்டில் ஏளனப் புன்னகை மலர்ந்தது.

“நீ ஓரளவுக்கு ஊகித்துவிட்டாய் என்று நினைக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன்… நான்… அமலனின் தம்பி… அதாவது ஆராவமுதனின் சித்தப்பா” அவன் கூறியதுதான் தாமதம், அவளுக்குக் காதுகளை அடைத்துக் கொண்டு வந்தன. இரத்தப் பசையை இழந்தவளாகக் கதவின் குமிழை இறுகப் பற்றியவாறு நின்றவளுக்குத் தேகம் நடுங்கத் தொடங்கியது.

இதோ புலி வருகிறது… வருகிறது என்று பயந்து கிடந்தவளின் முன்னால் பெரிய புலியே வந்து நிற்கிறது. ஐயோ.. இப்போது இவனிடமிருந்து அவளுடைய மகனை எப்படிக் காப்பாள்? அவளால் காக்க முடியுமா? நினைக்கும் போதே இதயத்தில் இரத்தம் கசிய, அது கண்களில் தெரிய அவனை வெறித்துப் பார்த்தாள். இப்போது அவளை நெருங்கியவன் அவளை உற்றுப் பார்த்தான்.

“இதோ பார்… எனக்கு வளவள கொழ கொழ என்று பேசப் பிடிக்காது… அதற்கு நேரமும் இல்லை. நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்… உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்…” என்றான் அவளை இமைக்காமல் பார்த்தவாறு.

“பணமா…? எதற்கு?” நிஜமாகவே அவன் எதற்குப் பணம் கேட்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவனோ உன் நடிப்பை நம்பும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்பது போல இகழ்ச்சியாகச் சிரித்து,

“ஆராவமுதனை என்னிடம் ஒப்படைக்க…” என்றான் அழுத்தமாக.

அவன் சொன்னதுதான் தாமதம் அவன் மீது புயலெனப் பாய்ந்து விட்டாள் திகழ்வஞ்சி.

“யு XXXX பாஸ்டட்… எத்தனை தைரியம் இருந்தால் என்னிடமே என் மகனுக்குப் பேரம் பேசுவாய்?” சீறியவள், கண்ணிமைக்கும் நொடியில் அவனுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறை கொடுக்க, அவள் அறைந்தது அவனுக்கு வலித்ததோ இல்லையோ, அவனுடைய தாடையில் அடிபட்ட அவளுடைய மென்கரம்தான் பயங்கரமாக வலித்தது.

ஆனாலும் அடங்காதவளாக, அவனுடைய ஷேர்ட் காலரைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க முயன்று தோற்று,

“நீ என்ன நினைத்துக்கொண்டாய்…? நீ வந்து கேட்டதும் என் மகனை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ கொடுக்கும் பிச்சைக் காசை வாங்கிக்கொள்வேன் என்று நினைத்தாயா? உனக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்…? உனக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது?” பாயும் புலியெனச் சீற்றத்தோடு கேட்டவள், கட்டுடைத்துப் பாய்ந்த கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், அவனுடைய மறு கன்னத்தையும் அறைவதற்காகக் கரத்தை உயர்த்திய மறு கணம் சுவரோடு தலை அடிபடும் வகையில் மோதி நின்றாள் திகழ்வஞ்சி.

ஆம், தன் சட்டையைப் பற்றியிருந்த அவளுடைய கரத்தைப் பிரித்து எடுத்தவன் கண்ணிமைக்கும் நொடியில் அவளுடைய மார்பில் கரம் பதித்து ஒரு தள்ளுத் தள்ளிவிட, தள்ளிச் சென்று சுவரில் பலமாக மோதி நின்றாள் திகழ்வஞ்சி.

சும்மாவே தலையிடியில் கிடந்தவளுக்கு, அவன் தள்ளிய வேகத்தில் தலை மோதுப்பட, கண்களில் பூச்சிகள் பறந்தன. தலையைப் பற்றியவாறு அவனை நிமிர்ந்த பார்க்க, அவனோ, முகம் கறுக்க, உதடுகள் அழுத்தமாக ஒன்றோடு ஒன்று முட்டி நிற்க, உடல் இறுக, சீற்ற மூச்சோடு அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவனுடைய ஒற்றைக் கரமோ அவள் அறைந்த கன்னத்தை வருடிக் கொடுத்தது.

“யார் மீது கையை வைத்தாய்…?” சீறலாய்க் கேட்டவன், கண்ணிமைக்கும் நொடியில் தன் கரத்தை ஓங்கி அவளுடைய கன்னத்தை நோக்கி இறக்க, அவன் ஓங்கிய வேகத்தில் பற்கள் உதிர்வது நிச்சயம் என்கிற அச்சத்தில், அவள் விழிகளை மூடித் தலையைத் திருப்பிக் கொள்ள, அவனுடைய கரம் அவளுடைய கன்னத்தில் தன் கைத்தடத்தைப் பதிவிட முயன்ற நொடிப் பொழுதில் என்ன நினைத்தானோ, அவளை நோக்கி நகர்ந்த கரம், திசைமாறி சுவரில் பலமாகப் பெரும் சத்தத்தோடு அறைந்து நின்றது.

அப்போது எழுந்த சத்தத்தில் துள்ளி அடங்கினாள் திகழ்வஞ்சி. கூடவே தேகம் உதற அவனை அண்ணாந்து பார்க்க, உள்ளே கொந்தளிக்கும் ஆக்ரோஷத்தோடு அவளை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் அவன்.

ஒரு விநாடி அவனுடைய கூரிய கடுமையான விழிகள் அவளுடைய நீண்ட பெரிய விழிகளில் நிலைபெற்றன. அப்படியே கொஞ்சம் இறங்கி கன்னத்தில் நிலைத்தன. சற்றுக் குண்டுக் கன்னங்கள். பார்த்ததும் கிள்ளத் தூண்டும் அழகான மென்மையான கன்னம். அதில் அவனுடைய ஐந்து விரல்களும் பதிந்தால் எப்படி இருக்கும்…? அவன் கரம் பட்டாலே அது வெடித்து இரத்தத்தைக் கக்குமே. ஒரு பெண்ணை அதுவும் உடல் பலத்தில் அவனை விடப் பல மடங்கு குறைந்தவளிடம் தன் பலத்தைக் காட்டுவதா? அது கற்ற படிப்புக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் இழுக்காகிவிடாதா? அது தான் கடைசி நொடியில் இறங்கிய கரம் திசை மாறி சுவரில் பட்டது. ஒரு வேளை அவள் ஒரு ஆணாக இருந்திருந்தால், இப்போது அந்தக் கன்னம் வெடித்திருக்கும்.

“இதோ போல உன்னை அறைய எனக்கு எத்தனை நேரம் ஆகும்… நான் அறைந்தால் உன்னால் தாங்க முடியுமா?” அவன் கேட்ட விதத்தில் சர்வமும் அடங்கியவளாகச் சுவரோடு பல்லிபோல ஒட்டி நின்றாள் அவள்.

அந்த மருண்ட விழிகளும், வெளிறிய முகமும் அவனுக்கு என்ன சொன்னதோ, தலையை உதறி விட்டு அவளை விட்டு விலகி நின்று கொள்ள, இவளோ நின்ற இடத்திலிருந்தும் அசையச் சக்தி அற்றவளாக, அப்படியே நின்றிருந்தாள்.

கால்களோ பயங்கரமாக நடுங்கின. உடலோ உதறியது. சும்மாவே அவளுக்கு உடல் அத்தனை சரியில்லை. போதாதற்கு அன்று கிறிஸ்டீனிடம் சிக்கி அவனிடம் தப்பி வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் வேறு. அதனால் ஏற்பட்ட பாதிப்பு கூட இன்னும் குறைய வில்லை. இப்போது நினைத்தாலும் அச்சம் எலும்பு வரை ஊடுருவுகிறது. இன்னும் அதிலிருந்து வெளியே வராது திக்கித் திணறி நிற்பவளுக்கு அதைவிடப் பெரிய பூகம்பம் அவளுடைய வீட்டிலேயே அரங்கேறுகிறது என்றால்? அவளுடைய தலையெழுத்தை என்னவென்று சொல்வது.

அதற்கு மேல் நிற்கச் சக்தியற்றுக் கால்கள் தள்ளாட, உடல் வியர்த்துக் கொட்டக் காதுகள் அடைக்க, தொப்பென்று தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள் திகழ்வஞ்சி. அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று அந்த மந்த புத்திக்குத் தெரியவில்லை.

அவள் என்ன இயந்திர மனிதனா நடக்கும் அசம்பாவிதத்தை உணர்ச்சியற்று ஏற்றுக்கொள்ள? சாதாரண மனுஷி. அதுவும் நெஞ்சு முட்ட ஆசாபாசங்கள் நிறைந்தவள். தானும் தன் குழந்தையும் என்று நிம்மதியாக இருந்தவளின் வாழ்க்கையில் தீ வைக்க இடையில் எங்கிருந்து முளைத்தான் இவன். அதுவும் அவளுடைய மகனுக்குப் பேரம் பேசுகிறானே. அதை நினைத்த மாத்திரத்தில் திரும்பவும் உடல் தூக்கிப் போட்டது அவளுக்கு. ஆத்திரத்தில் முகம் சிவக்க, வெறுப்போடு அவனைப் பார்க்க, அவனும் தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளைத் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய முகத்தில் இம்மிக்குக் கூட இரக்கமோ பரிதாபமோ தெரியவில்லை. மாறாகக் கடுமையும், வெறுப்பும்தான் தொக்கி நின்றது. இவளுக்கோ அடுத்து என்ன செய்வது என்றுகூடப் புரியவில்லை. எழுந்து கொள்ளத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருக்க,

“எத்தனை நேரமாக இப்படியே அமர்ந்து இருப்பதாக உத்தேசம்..?” என்றவாறு அவன் தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்க்க, சட்டென்று தன் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள் திகழ்வஞ்சி. அவன் நின்ற தோரணையும், அவன் பேசும் விதமுமே சொன்னது, அத்தனை எளிதில் அவன் ஆராவமுதனை விட்டுப் போகமாட்டான் என்று.

அதை நினைக்கும் போதே நெஞ்சம் கலங்கிப் போனது திகழ்வஞ்சிக்கு.

இவனோடு அவளால் எந்தளவுக்குப் போராட முடியும்? முதலில் அவளால் போராட முடியுமா? அந்தளவுக்கு அவளிடம் சக்தி இருக்கிறதா?

இல்லை.. அமுதன் என் பையன். நான் பெற்ற மகன். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்தவள், எழ மறுத்த கால்களுக்கு வலுக் கொடுத்து, எழுந்து நின்று தன் முன்னால் நின்றிருந்தவனை வெறித்துப் பார்த்தாள். இவனோடு சண்டையிட்டுச் சாதிக்க முடியாது என்று நன்கு புரிந்தது.

மனமே தயவு செய்து உன் கோபத்தை ஒரு கட்டுக்குள் வை. நீ அவசரப்பட்டால் சேதாரம் உனக்குத்தான். உனக்கு உன் மகன் வேண்டும் என்றால், கொஞ்சம் அமைதியாகப் பேசு. உன் நிலையைப் புரிய வை. அவன் நினைப்பது நடக்காது என்பதைத் தெளிய வை. அவன் புரிந்து கொள்வான்… கமான்… உன்னால் முடியும்…” அவள் மனமே அவளைத் திடப்படுத்த முயல, ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், விழிகளில் கெஞ்சலைத் தேக்கியவாறு எழுந்து நின்றாள்.

இன்னும் உடலின் நடுக்கம் குறையவில்லை. கால்கள் பலவீனம் கொண்டவையாகச் சரிய முயல, சுவரோடு உடலை சாய்த்து நின்று,

“ஐ… ஐ ஆம் சாரி… நான் அவசரப்பட்டு உங்களை அடித்து விட்டேன்… இதோ பாருங்கள்… அ.. அமுதன்.. என் மகன்… நான் சுமந்து பெற்ற மகன். எந்தத் தாயும் பணத்துக்காகத் தான் பெற்ற பிள்ளையைத் தாரை வார்த்துக் கொடுக்க மாட்டாள். அவனை எக்காரணத்துக்காகவும் யாருக்காகவும் வாரிக் கொடுக்க மாட்டேன். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்…” என்றாள் முடிந்த வரை தெளிவாக.

ஆனால் அது அவனுடைய செவிக்குள் புகுந்ததாகத் தெரியவில்லை. அவளைத் தலை சரித்துப் பார்த்தவன்,

“ஃபிப்டி தவுசன்ட்…” அவளோ பதில் சொல்லாது அவனை வெறிக்க,

“ஹன்ட்ரட் தவுசன்ட்…” என்றான் அடுத்து.

“தயவு செய்து என் பொறுமையைச் சோதிக்காமல் போய்விடுங்கள்… நீங்கள் மில்லியன் கொடுத்தாலும் என் குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க மாட்டேன்”

“டூ ஹன்ட்ரட் தவுசன்ட்…” அவன் முடிக்க வில்லை சட்டென்று தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள் திகழ்வஞ்சி.

“போதும் நிறுத்துங்கள்…! நீங்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது…! நான் என் குழந்தையைக் கொடுக்க மாட்டேன் கொடுக்க மாட்டேன் கொடுக்க மாட்டேன்…!” என்றாள் கடும் சீற்றமாக. பின் தன் கரங்களை விலக்கியவள், அவனை உறுதியாகப் பார்த்தாள்.

“நீங்கள் பில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் என் பிள்ளையை உங்களிடம் ஒப்படைக்க முடியாது…! மரியாதையாக வெளியே போங்கள்.” சொன்னவளை இளக்காரமாகப் பார்த்தான் அபராசிதன்.

“நம்ப முடியவில்லையே…! குழந்தைக்காகப் பணம் கேட்டு அண்ணாவுக்குச் செய்தி அனுப்பிய ஆள்தானே நீ? இப்போது வேண்டாம் என்கிறாய்? ஆச்சரியமாக இருக்கிறதே?” அவன் சொல்ல அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

இதற்கு என்ன பதிலைச் சொல்வது? அவள் தடுமாற, அவனோ அவள் தடுமாற்றத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் எடுத்தானில்லை. அவளை ஆத்திரத்தோடு ஏறிட்டவன்,

“உன் குழந்தையைச் சுமக்கிறேன், பணம் கொடு என்று குறுஞ்செய்தி அனுப்பியவள்தானே நீ? அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்… அவனை என்னிடம் கொடு என்கிறேன். இப்போது எதற்காக மறுக்கிறாய்? இதோபார்…! ஆராவமுதன் எங்கள் வீட்டு வாரிசு. அவன் இல்லாமல் இங்கிருந்து போக மாட்டேன்.” அவன் சொல்ல முதன் முறையாக இளக்காரமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள் திகழ்வஞ்சி.

“என் பையன் உங்கள் வீட்டு வாரிசு என்பதற்கு என்ன ஆதாரம்? அவன் உங்கள் அண்ணனுக்கு மட்டும்தான் பிறந்தான் என்பதை நான்தான் சொல்லவேண்டும்… இப்போது சொல்கிறேன் என் பிள்ளைக்கு அப்பா உங்கள் அண்ணன் இல்லை வேறு யாரோ… இப்போது… தயவு செய்து வெளியே போங்கள்…” அவள் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, அவனோ அவளை ஒரு மாதிரி பார்த்தான். கூடவே இதழ்களின் ஓரம் கிண்டலாய் ஒரு புன்னகையும் வந்து போக,

“ரியலி?” என்றான். அந்த ஒற்றைச் சொல்லில் தான் எத்தனை கிண்டல், ஏளனம், எகத்தாளம், நக்கல். அதுவே அவளை மேலும் பலமிழக்கச் செய்ய, கீழ் உதட்டைத் தன் முத்துப் பற்களால் கடிக்க, ஒரு கணம் அவனுடைய பார்வை அந்த இதழின் மீது ஆழப் படிந்து பின் அவள் விழிகளைச் சந்தித்தது.

“உனக்கு எத்தனை காதலர்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் ஆராவின் தந்தை என் அண்ணாதான்…” என்றவன் சற்று முன் எடுத்துப் பார்த்த புகைப்படத்தைக் கண்களால் காட்டி,

“அப்படியே அண்ணாவினுடைய கண்கள், மூக்கு, வாய் என்று அச்சடித்தது போலப் பெற்றுப் போட்டிருக்கிறாயே… இது போதாதா அவன் என் அண்ணனின் மகன் என்று சொல்ல? இந்த ஆதாரம் போதாது என்றால், சின்னதாக மரபணு சோதனை செய்தாலே அவன் யாருடைய குழந்தை என்பது நிரூபணம் ஆகிவிடும்…” அவன் சொல்ல, அந்த உண்மையில் ஆடித்தான் போனாள் திகழ்வஞ்சி.

இதோ தன் முன்னால் நிற்பவனின் கூரிய விழிகள் அப்படியே ஆராவமுதனிடம் இருக்கிறதே… அதை விட ஒரு மரபணு சோதனை தேவையா? யார் பார்த்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லிவிடுவார்களே…! ஐயோ…! இப்போது அவள் என்ன செய்யப் போகிறாள்?” அவள் தவித்து நிற்க, இப்போது ஓரடி அவளை நெருங்கி நின்றான் அபராசிதன்.

“இதோ பார்…! உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். உனக்குத் தேவை பணம்…! அதை நான் கொடுக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் ஆராவமுதன் உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடைஞ்சலாகத்தான் இருப்பான். அவனுடைய பொறுப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்… வேண்டுமானால் இங்கேயே உனக்குச் சொந்தமாக ஒரு வீடும் வாங்கிக் கொடுக்கிறேன். கடைசிவரை மாதா மாதம் சம்பளம் போலக் கொஞ்சம் பணத்தையும் போடுகிறேன். நீ எதைப் பற்றியும் கவலைப் படாமல் சந்தோஷமாக உன் விருப்பப்படி வாழலாம்… என்ன சொல்கிறாய்?” அவன் கேட்க, இவளுக்கோ திரும்பவும் அவனை ஓங்கி அறையவேண்டும் என்கிற வேகம் பிறந்தது.

யாருக்கு யார் பணம் கொடுப்பது? அவளுடைய குழந்தைக்குப் பேரம் பேசுவது மட்டுமில்லாமல், எத்தனை தெனாவெட்டாகப் பேசுகிறான். இவனுக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்? அதுவரை இருந்த பலவீனத்தை உதறித் தள்ளியவள், ஆழ மூச்செடுத்து விட்டுக் கதவைத் திறந்து பிடித்தவாறு,

“கெட் அவுட்…” என்றாள் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பி.

ஆனால் அவனுக்கு அவள் சொல்வது எதுவும் காதில் விழுந்தது போல இல்லை.

“நான் சொல்வது உனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்…?”

“நீங்கள் எதுவும் எனக்குச் சொல்லவேண்டாம். நான் கேட்கவும் வேண்டாம். மரியாதையாக வெளியே போங்கள்… இல்லை” அவள் முடிந்த வரை தன் சீற்றத்தை அடக்கியவாறு கூற, அவனோ காது கேட்காதவன் போல அவளைத்தான் பார்த்து இருந்தான்.

“என்னை அத்தனை சுலபத்தில் வெளியேற்ற முடியாது திகழ்வஞ்சி… ஆராவமுதனை என்னோடு அழைத்துச் செல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்…” என்றான் முடிவாக.

“இன் யுவர் ட்ரீம்ஸ்… என்ன? எனக்குச் சட்டம் எதுவும் தெரியாது என்று நினைத்தீர்களா? ஆராவமுதன் நான் பெற்ற பிள்ளை. என் வயிற்றில் உதித்தவன். அவனுக்கு அம்மா அப்பா எல்லாமே நான்தான். எந்தச் சட்டமும் தன் தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்துச் செல்ல ஒப்புக்கொள்ளாது…” உறுதியோடு சொன்னவளைப் புருவம் உயர்த்திப் பார்த்துச் சிரித்தான் அபராசிதன்.

“அதே சட்டம் பெற்ற தாய் சரியில்லை என்றால், அவளுக்குக் குழந்தையை வளர்க்கும் தகுதி இல்லை என்றால், அந்தக் குழந்தையைப் பிரித்துத் தகுந்த இடத்தில் வளர்க்கவும் உத்தரவிடும். நீ கேள்விப் பட்டதில்லை…?” சொன்னவனை வெறித்தவள்,

“என் பிள்ளைக்கு அது தேவைப்படாது…” என்றாள் பட் என்று..

“ரியலி?” என்று அவன் கேட்ட விதத்தில் ஒரு கணம் ஆடித்தான் போனாள்.

அவன் சொல்வதைப் பார்த்தால், ஆராவமுதனை வளர்க்கும் தகுதி தனக்கில்லை என்பது போல அல்லவா இருக்கிறது. எத்தனை தைரியம் இவனுக்கு? ஆத்திரத்தோடு அவனை முறைத்தவள்,

“ஹவ் டெயர் யு…? எத்தனை தைரியம் இருந்தால் என் நடத்தையில் குறை சொல்வீர்கள்…? அந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? நான் எப்படிப்பட்டவள் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… இதற்கு மேலும் இந்த வீட்டில் உங்கள் காலடி படக் கூடாது…! வெளியே போங்கள்…” சீற,

“இதைப் பார்ரா… உண்மையைச் சொன்னால் கோபம் வருகிறதோ…? நீ நல்லவள் என்றால், எதற்குத் திருமணமான ஒருத்தனோடு கட்டிலை பகிர்ந்தாய். இதில் அவனுடைய குழந்தையை வேறு சுமந்து பெற்றிருக்கிறாய்…? உன்னால் என் அண்ணனின் வாழ்க்கை விவாகரத்து வரை போனது பற்றித் தெரியுமா? குழந்தை உருவானதும் பணம் வேறு கேட்டிருக்கிறாய். இதில் நீ வேறு நல்லவள் போலப் பேசுகிறாய்… உனக்கே வேடிக்கையாக இல்லை?” அவன் கேட்க, அதற்கு மேல் அவன் சொல்வதைக் கேட்கும் சக்தியில்லாமல் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள் திகழ்வஞ்சி.

 

What’s your Reaction?
+1
28
+1
3
+1
1
+1
0
+1
3
+1
3
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍😍.
    😤😤😤😤😤😤😬😬😬😬😬
    அடேய் வளந்துகெட்டவனே ஏதோ ஆபத்துல காப்பாத்துனேன்னு பாத்தாக்க வூட்டுக்கே வந்து என்றாளுகிட்ட வந்து குழந்தையை கேட்டு மெரட்டுவே😤😤😤
    டேய் மங்கூஸ்மண்டையா அப்பங்காரன் வந்து கேட்டாளே தரமாட்டோம் இதுல செத்தப்பங்காரன் கேட்டா தந்துடுவோமா? அதுவும் பர்சன்டேஜ் போடறியாடா😡😡😡😡😡😡😡
    குழந்தையும் கிடையாது ஒன்றும் கிடையாது கன்னத்துல வுழுந்த அடி மட்டுமில்லாம உதைப்பதற்குள் ஓடிடு. இல்லைன்னா உன்ற நடுமண்டைல ஆணியெறக்கிடுவேன்.
    வந்துட்டான் வளச்சுகட்டி வளந்துட்டு போடா டேய் பொசகெட்ட பயலே.🫤🫤🫤🫤🫤🫤

Recent Posts

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 17/18

(17)   சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல…

12 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 15/16

(15) உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த…

3 days ago

தொலைந்த எனை மீட்க வா…!-3

(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால்,…

4 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 14

(14) அதன் பிறகு இரண்டு நாட்கள் அழகாகவே கடந்தன. அந்த இரண்டு நாட்களும், அவள் தனக்கு முக்கியமானவள் என்பதை உணர்த்த…

6 days ago

தொலைந்த எனை மீட்க வா…!-2

(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்... “ஷ்... பேபி... இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே... கண்ணா... அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்...!”…

7 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 12/13

(12) அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு…

1 week ago