மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக் கிடப்பது. மனதில் குழப்பமிருந்தால் தூக்கம் எப்படித்தான் வரும்.
அவசரமாகக் குளித்து முடித்து வெளியே கிளம்புவதற்கு ஏற்பத் தயாராகி கீழே வந்த போது, கமலா காலை உணவை வேகமாகச் செய்யத் தொடங்கியிருந்தார்.
“கமலாக்கா எப்போது வந்தீர்கள்…?” வியக்க,
“கொஞ்சத்துக்கு முன்னாடிதான்மா… டாக்டர் வந்துவிட்டார் என்கிறது தெரிந்தது. அதுதான் காலைச் சாப்பாட்டைச் செய்து வைத்து விட்டால், அவர் சாப்பிட்டுவிட்டே போவார்…” என்றதும் திகழ்வஞ்சியும் அவருக்கு உதவ முன் வந்தாள். உடனே தடுத்து விட்டாள் கமலா.
“அம்மா… சும்மாவே கையை அசைக்க முடியாமல் சிரமப்படுகிறீர்கள். இதில் என்ன உதவப் போகிறீர்கள். சும்மா போய் உட்காருங்கள்…” உத்தரவாகச் சொல்லிவிட்டுத் தன் வேலையில் கண்ணாக, இவளும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொடுக்க, ஒரு வழியாகக் காலை உணவு விரைவாகவே முடிந்துவிட்டிருந்தது.
அவர்கள் உணவை எடுத்து வைக்கவும், அபராசிதன், குளித்துவிட்டு மருத்துவ ஆடையாக நீலநிற ஆடை அணிந்துகொண்டு கைக்குக் கடிகாரம் கட்டியவாறு கீழே வரவும் நேரம் சரியாக இருந்தது.
படிகளில் கால்தடம் சத்தம் கேட்க, அது இவளின் இதயத்திலும் பதிய மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அடர்ந்த சுழல் குழல் அவன் இறங்கிய வேகத்தில் அசைந்தாட, அதற்குத் தோதாகக் கூரிய விழிகளும், தொட்டால் சுடும் நாசியும், இறுகிய அழுத்தமான உதடுகளும், சதுர முகமுமாக, ஆறு அடி நான்கு அங்குல உயரத்தில், மருத்துவமனை சீருடையான நீல நிறப் பான்டும் ஷேர்ட்டும் அணிந்து, அதற்கேற்ப மென் சப்பாத்துமாக ஆணழகனாய் இறங்கிவந்தவனைக் கண்டு ஒரு கணம் மூச்செடுக்க மறந்துதான் போனாள் திகழ்வஞ்சி.
மூன்று நாட்களுக்குப் பிறகு சித்தப்பாக் காரனைக் கண்டுகொண்ட ஆராமுதனோ கால்களை அசைத்துக் குதுகலமாகத் தன்னைத் தூக்குமாறு கரங்களை விரிக்க, மலர்ந்த புன்னகையுடன் குழந்தையை நெருங்கியவன், அதன் உச்சந் தலையில் முத்தமிட்டு விலகித் தன் கையிலிருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, ஆராவமுதனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்த கொள்ள, திகழ்வஞ்சி தன்னையும் மறந்து அவனுக்குப் பரிமாற முன் வந்தாள்.
இவனோ புருவங்கள் சுருங்க அவளை நிமிர்ந்து பார்த்து,
“என்ன செய்கிறாய்?” என்றான்.
“இல்லை… சாப்பாடு பரிமாற…” அவள் சொல்ல, அவளை ஒரு மாதிரிப் பார்த்தான் அவன்.
“என்னுடைய கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு வேண்டியதைப் போட்டுச் சாப்பிட எனக்குத் தெரியும். நீ உட்கார்ந்து சாப்பிடு…” கறாராகச் சொன்னவன், சொன்னது போலவே தன் தட்டில் தானே உணவு பரிமாறிச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்க, ஒரு மாதிரியானது அவளுக்கு.
ஆனால் அவனோ, வாயில் உணவை வைத்தவாறே அவளைப் பார்த்து,
“உட்கார்… சாப்பிடு…” உத்தரவாகச் சொல்ல, மறுக்காமல் அமர்ந்து விட்டாள் திகழ்வஞ்சி.
நேரத்தைப் பார்த்தவாறே அவன் சாப்பாட்டில் அவசரம் காட்ட,
“இப்போது எதற்கு இத்தனை அவசரமாகச் சாப்பிடுகிறீர்கள். மனிதன் உழைப்பதே வயிறார சாப்பிடத்தான். அதற்குக் கூட நேரம் இல்லை என்றால் எப்படி?” தன்னையும் மீறிச் சிறு கண்டிப்புடன் அவள் கேட்க,
“சாப்பாட்டை விட எனக்கு என்னை நம்பி வரும் நோயாளர்கள் முக்கியம். எட்டு மணிக்கு ஒரு நோயாளியைப் பார்க்க வேண்டும்…” சொன்னவன், மேலும் அவசரமாகச் சாப்பிடத் தொடங்க, உமிழ் நீர் கூட்டி விழுங்கினாள் திகழ்வஞ்சி. பின் தன் தொண்டையைச் செருமிவிட்டு,
“உ… உங்கள் அத்தான் எப்படி இருக்கிறார்?” என்றாள் திக்கித் திணறி.
“ம்… இப்போது பரவாயில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார்…” என்றதும் இவளுடைய முகம் மலர்ந்தது.
“அவரை எப்போது மருத்துவமனை விடுவிக்கும்…?”
“அவரிடம் இன்னும் முன்னேற்றம் இருந்தால் விரைவிலேயே வீட்டிற்குச் செல்ல அனுமதித்து விடுவோம்…” சொன்னவன் எழுந்தவாறே தட்டில் இருந்த மிச்ச உணவையும் வாய்க்குள் திணித்தவாறு சமையலறை நோக்கிச் செல்ல, இவளோ அவன் பின்னால் ஓடினாள்.
“கொடுங்கள் தட்டைக் கழுவுகிறேன். நீங்கள் தயாராகுங்கள்…” அவள் சொல்ல இப்போது அவனுடைய முகத்தில் கோபம் தெரிந்தது.
“ஹலோ… என்ன… உபசரிப்பெல்லாம் மிகப் பலமாக இருக்கிறது… என்ன வேண்டும் உனக்கு?” அவன் கேட்க, ஒரு கணம் அசடு வழிந்தாள் திகழ்வஞ்சி.
“இல்லை… நீங்கள்தான் அவசரமாகப் புறப்பட வேண்டும் என்று சொன்னீர்களே..” திக்கித் திணற, அவனோ அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான். பின் தன் தட்டைத் தானே கழுவியவாறு,
“என்ன தயாராகி எங்கோ வெளியே கிளம்பி விட்டீர்கள் போல…” என்றான் அவன் கழுவி முடித்த தட்டை தண்ணீர் வடியும் இடத்தில் வைத்தவாறு.
“அது… வந்து… நானும்… உங்கள் கூட மருத்துவமனை வரப்போகிறேன்?” அவள் சொல்ல, ஒரு குவளை தண்ணீரைக் குழாயிலிருந்து எடுத்தவாறு,
“எதற்கு…?” என்றான்.
“உங்கள் அத்தானைப் பார்க்க…” என்றாள் கரங்களைப் பிசைந்தவாறு. இவள் ஏன் அத்தானைப் பார்க்க இந்தளவு பறக்கிறாள் என்று சந்தேகப் படுவானோ? மெல்லிய அச்சம் எட்டிப் பார்க்க அவனை ஏறிட்டாள். அவனோ தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தான். பின் அந்தக் குவளையையும் கவிழ்த்து வைத்துவிட்டு,
“இதை நேரடியாகக் கேட்கவேண்டியது தானே? எதற்கு இந்த அன்பு நாடகம் எல்லாம்?” அழுத்தமாகக் கேட்டவன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ஐயோ…! நாடகமெல்லாம் இல்லை. என் உபசரிப்பு பொய் இல்லை. உங்கள் அவசரம் புரிந்தது. அதுதான் என்னாலான உதவியைச் செய்யலாம் என்று…” அவள் இழுக்க, தலை சரித்து அவளைப் பார்த்தான் அபராசிதன்.
ஏனோ அவனுடைய விழிகளைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தவள், தன்னை மறந்து. உதடுகளைக் கடித்து நிற்க, அவனுடைய விழிகள் ஒரு விநாடிக்கும் அதிகமாக அந்தக் கடிபட்ட உதடுகளில் நிலைத்து நின்று பின் அவள் முகத்தில் நிலைத்தது. அடுத்த கணம் அவன் முகம் கடினமாக,
“இப்படித்தான் என் அண்ணாவையும் உன் கைக்குள் போட்டாயா திகழ்வஞ்சி…? அவனிடம் வேகிய பருப்பு என்னிடம் வேகும் என்று நினைத்தாயா? சாரிமா… இந்த உபசரிப்பில் மயங்கி விடும் ஆள் நானில்லை… வேண்டும் என்றால், வேறு ஏதாவது முயற்சி செய்…” அவன் சொல்ல அடிபட்ட பார்வையோடு அவனை ஏறிட்டாள் திகழ்வஞ்சி.
எத்தனை சுலபமாக நெருப்பை அள்ளிக் கொட்டிவிடுகிறான். அந்தக் கொட்டிய நெருப்பை அள்ள முடியாது என்று இவனுக்குத் தெரியுமா இல்லையா? சட்டென்று கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது அவளுக்கு. அன்று இவளை அணைத்தான், அவளிடம் ஆறுதல் தேடினான். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி இப்போது இத்தனை கடுமையாகப் பேசுகிறானே… அவனையே வெறித்துப் பார்க்க, அவள் விழிகளில் தேங்கிய கண்ணீரைக் கண்டவன்,
“என்ன அடுத்த ஆயுதமா? அது என்ன ஒன்று என்றதும் சட்டென்று கண்ணீரைத் தேக்கிக் கொள்கிறீர்கள்…? அதையும் எரிச்சலோடு கேட்டவன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
“கிளம்பு…” சொல்லிவிட்டு அவன் திரும்ப, இவளோ வலியோடு அவன் முதுகை வெறித்தாள்.
‘நெஞ்சை எல்லாம் இரணப்படுத்தி விட்டு எதுவுமே நடக்காதது போலக் கிளம்பு என்கிறானே… அப்படியெல்லாம் தன்மானத்தை விட்டு அவன் பின்னால் போகவேண்டிய அவசியமில்லை’ ஆழ மூச்செடுத்துத் தன் வேதனையை விழுங்கியவள்,
“இல்லை… பரவாயில்லை… நான் அவரைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்…” சொன்னவள், அவனருகே நிற்கப் பிடிக்காமல் திரும்பி ஆராவை நோக்கி நகரத் தொடங்க, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டான் அபராசிதன்.
இவளோ அவன் முகம் பார்க்காமல், தன் கரத்தை விடுவிக்க முயல, அவளுடைய மணிக்கட்டை அழுத்தமாகப் பற்றியவன்,
“கிளம்பு என்று சொன்னேன்…” என்றான் அழுத்தமாக.
அதைக் கேட்டதும், கோபத்தோடு அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி. அவளுடைய மனத்தைக் கூர்வாள் கொண்டு அறுத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல வா என்றால், உடனே சென்றுவிடுவாளா? அந்தளவுக்கா அவள் தரம் தாழ்ந்து கிடக்கிறாள்? இப்போது தளராமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“தேவையில்லை அபராசிதன். அதுதான் என் பருப்பு உங்களிடம் வேகாது என்று சொல்லி விட்டீர்களே… பிறகு எதற்கு உங்களோடு வர வேண்டும்? தேவையில்லை… அப்படியே அவரைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றினால், பேருந்திலோ, இல்லை வாடகைக் காரிலோ போய்க் கொள்கிறேன்… நீங்கள் கிளம்புங்கள். உங்களுக்குத் தான் நேரமாயிற்று…” சொன்னவள், அவன் பிடியிலிருந்த தன் கரத்தை உதறிவிட்டு, முன்னறை நோக்கி நடக்கத் தொடங்க, மறு கணம் காற்றில் மிதந்தாள் திகழ்வஞ்சி.
சத்தியமாகச் சட்டென்று இப்படித் தன்னைக் கரங்களில் ஏந்திக் கொள்வான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.
பதறியவளாக,
“என்ன செய்கிறீர்கள்… விடுங்கள் என்னை…” என்றவாறு இறங்க முயன்றவள், சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தாள். நல்லவேளை கமலாவைக் காணவில்லை. குழந்தையையும்தான்… நிம்மதியுடன் அவனுடைய முகத்தை ஏறிட்டவள், மறுத்துக் கீழே இறங்க முயல்வதற்குள், வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள் திகழ்வஞ்சி.
கோபத்துடன் அவனைப் பார்த்து முறைக்க,
“முதலில் ஆராவமுதன் போல நடந்து கொள்வதை நிறுத்து..” கடிந்தவன், ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்து வண்டியை உசுப்ப, இவளோ அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே வெறித்துப் பார்க்க, திரும்பி அவளைப் பார்த்தவாறே வண்டியை எடுத்தான் அபராசிதன்.
சற்றுத் தூரம் போனதும்,
“என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்றான் அவளிடம். அவளோ புருவங்கள் சுருக்கி அவனை ஏறிட்டு,
“புரியவில்லை?” என்றதும்,
“அதுதான், நாம் திருமணம் செய்வதைப் பற்றி..” அவன் கேட்க, திரும்ப வாகனத்தின் ஜன்னலோரம் பார்க்கத் தொடங்கினாள் திகழ்வஞ்சி.
அவள் எங்கே யோசித்தாள்? யோசிக்கிற வகையிலா சம்பவங்கள் நடந்தன? இந்த மூன்று நாளும் அவள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தது, அவளுடைய தந்தையும், அபராசிதனும்தான். இதில் எங்கே திருமணம் பற்றி யோசிப்பது?
“உன்னைத்தான் கேட்கிறேன் திகழ்வஞ்சி. என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” அவன் திரும்பவும் கேட்க, கோபமாகத் திரும்பி அவனைப் பார்த்தவள்,
“எதற்குத் தினம் தினம் நீங்கள் கொட்டும் நெருப்பை அள்ளிப் போடவா? அந்த அவசியம் எனக்கில்லை…” அவள் சொல்ல, அபராசிதனின் முகம் இறுகிப் போனது. ஆத்திரத்தில் முகம் சிவக்க,
“நாம் திருமணம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உனக்குச் சொன்ன பிறகும்…” அவன் முடிக்கவில்லை, அழுத்தமாக அவனை ஏறிட்டவள்,
“அவசியம் எனக்கில்லை. உங்களுக்குத் தான் அபராசிதன். ஆராவமுதன் நிரந்தரமாக உங்களுக்குத் தேவை என்றால், நீங்கள் என்னை மணந்துகொள்ள வேண்டும். என்ன? இது எல்லாம் எனக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று ஒரு பழமொழியே உண்டு தெரியுமா? நீங்கள் என்னை மணந்து கொள்ளக் கேட்டபோதே எதற்காக என்று எனக்குப் புரிந்து விட்டது…” என்றவள், ஆழ மூச்செடுத்து விட்டு,
“அபராசிதன் என் மகன். அவனை யாருக்கும் தத்துக் கொடுக்க மாட்டேன். உங்களையும் மணந்து கொள்ள மாட்டேன்… இந்தத் திருமணம் நடக்காது போதுமா…” அவள் முடிக்க, வண்டி சீற்றத்தோடு ஒரு இடத்தில் நின்றது.
வண்டி நின்ற வேகத்தில் டாஷ்போடில் அடிபடப் போனவள், சட்டென்று கரத்தை முன்னால் ஊன்றித் தன்னைக் காத்துக் கொண்டவளாகத் திரும்பி அபராசிதனை முறைக்க, அவனோ முகம் இறுக அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தான்.
அவன் அமர்ந்திருந்த தோரணையே சொன்னது அவனுடைய கோபத்தின் அளவை.
உள்ளே ஒரு பக்கம் அச்சம் எழுந்தாலும், தைரியமாகவே அவனை ஏறிட, அவனோ ஆழ மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவனாக, இருக்கைப் பட்டியைக் கழற்றினான்.
இவன் ஏன் இருக்கைப் பட்டியைக் கழற்றுகிறான்? குழம்பி நிற்க, வண்டியை விட்டு வெளியே வந்த அபராசிதன், நடந்து வந்து அவள் பக்கத்துக் கதவைத் திறந்து,
“இறங்கு.” என்றான்.
ஐயோ நடுவழியில் இறக்கிவிட்டுப் போகப் போகிறானா என்ன? அதுதான் அப்போதே என் பாட்டில் வருகிறேன் என்று சொன்னேனே. அதைக் கேட்காமல், இப்படி நடுவழியில் இறக்கிவிட்டுப் போகப் பார்க்கிறானே. கைப்பை கூட எடுத்துவர வில்லையே. பேருந்தில் போவதற்குக் கூடப் பணமில்லை… என்ன செய்வது? கலக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இரும்பை விழுங்கியவனாக இறுக்கத்துடன் நின்றிருந்தான்.
தயக்கத்தோடு வெளியே வந்தபோதுதான் அவளுக்குத் தாங்கள் மருத்துவமனை வந்து இறங்கியதே புரிந்தது.
நிம்மதி கொண்டவளாக, நகரத் தொடங்க,
“எங்கே போகிறாய்… என் கூட வா…” சொன்னவன் முன்னால் நடக்க, இவளுக்கு மேலும் கோபம் வந்தது. ஏன் சொல்வதை கொஞ்சம் கரிசனையாகச் சொன்னால்தான் என்னவாம்? எரிச்சலோடு எண்ணியவள் எப்படியாவது விஜய ராகவனைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசையில் அவன் பின்னால் நடக்கத் தொடங்கினாள்.
அவளை அழைத்துக் கொண்டு நான்காவது மாடிக்குச் சென்றவன், இதய சிகிச்சைத் தளத்தை நோக்கிச் செல்ல, அவனுடைய பேஜர் அலறியது. எடுத்துப் பார்க்க அவனை உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.
“நான் உடனே போகவேண்டும்… நேரே போய் வலது பக்கம் திரும்பு, அதில் பதிநான்காவது இலக்கம்தான் அவருடைய அறை..” கூறிவிட்டு அவன் வேகமாக மறுபக்கம் செல்ல, இவளும் அவன் சொன்ன அறை நோக்கி விரைந்தாள். மனதோ அவளையும் மீறிப் படபடக்கத் தொடங்கியது.
(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…
(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…
(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…
(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது…
View Comments
Wow awesome
Thank you so much
அருமையான பதிவு 😍😍😍😍.
ஸ்ஸ்ப்ப்பா இவனோட வாயவச்சிகிட்டு சும்மா இருந்திருந்தாவாவது ஓகே சொல்லி இருப்பா. வாயாலையே கெட்டுபோறான்
ராகவ் வேற என்ன சொல்லப் போறாப்புலையோ கடந்த காலத்தை பத்தி
கொஞ்சம் கஷ்டம்தான்யா. என்ன பண்றது. வாயில கொடுக்கோட பொறந்திருக்கான் போல.