Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 13/14

(13)

திகழ்வஞ்சியின் வீட்டிற்கு முன்னால் அவசர மருத்துவ ஊர்தி வந்து நிற்பதைக் கண்ட ஈவா பதறிப்போய் ஓடிவந்தாள். அவளைக் கண்டதும், குழந்தையைத் தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு,

“அவசரமாகத் திகழை அழைத்துச் செல்கிறேன். குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்…?” என்றதும் உடனே குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட ஈவா,

“திகழுக்கு என்னாயிற்று?” என்றாள் பதட்டமாக.

சுருக்கமாகத் தனக்குத் தெரிந்ததைக் கூறியவன், அதற்கு மேல் நிற்க முடியாமல், இவனும் சேர்ந்து அவசர மருத்துவ ஊர்தியில் ஏறிக்கொள்ள, வண்டி மிக வேகமாக அருகேயிருக்கும் மருத்துவமனை நோக்கிப் பறந்தது.

திகழ்வஞ்சியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நேரம், அவள் அரைகுறை மயக்கத்தில் இருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றியவாறு அமர்ந்திருந்த அபராசிதனுக்கு ஏனோ நெஞ்சம் நடுங்கியது. அதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அவள் பிழைத்து எழுந்துவிட வேண்டும் என்று மட்டும் மனம் வேண்டிக் கொண்டது.

வலியோடு விழிகளை விரித்த திகழ்வஞ்சி,

“ஆரா… ஆரா…” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

“ஆராக்கு ஒன்றுமில்லை. அவனை ஈவாவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்…” என்றான் அவசரமாக.

“என்… பையன் பத்திரம்… எனக்கு ஏதாவது நடந்தால்…”

“ஹே… லிசின்… உனக்கு எதுவும் ஆகாது. இந்தக் காயம் ஆற்றக் கூடிய காயம்தான். புரிந்ததா? இந்தக் காயத்தால் உனக்கு எதுவும் ஆகாது… நம்பு… மனத்தை மட்டும் தளர விட்டுவிடாதே”

“வ.. வலிக்கிறது…” என்றவளின் முகம் சுருங்க, இவனுடைய கைமுஷ்டிகள் இறுகின.

ஏனோ அவளுடைய வலியை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இது என்ன விந்தை? இத்தனைக்கும் அவன் ஒரு வைத்தியன். சொல்லப் போனால் உணர்ச்சிகரமாக இல்லாமல், புத்தியால் யோசித்து அதற்குத் தீர்வு காணவேண்டியவன். ஆனால், இப்போது ஏன் புத்தி வேலை செய்ய மறுக்கிறது. மனது கிடந்து தவிக்கிறதே. எதனால்?

அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனைக் கண்டு பிடித்துத் துண்டு துட்டாக வெட்டி ஒவ்வொரு திக்கிலும் எறிந்துவிடும் ஆவேசம் பிறக்கிறதே. ஏன்?

“சீ… என்ன யோசிக்கிறேன்? உயிரைக் காக்க வேண்டிய வைத்தியன் நான். நான் போய் ஒருத்தனைக் கொல்ல நினைக்கிறேனே…?” தலையை உலுப்பியவனுக்கு அவளுடைய முகத்தைப் பார்க்கும் போது உயிர்வலியானது.

அதுவும் காயம் பட்ட கன்னமும், வெடித்த உதடுகளும் அவன் நெஞ்சைப் பிசைய, அவளை இழுத்து மார்போடு அணைக்கும் வேகம் வந்தது அவனுக்கு. அந்த நிலைக்குப் புறம்பாக, அவளை முதன் முதலாகச் சந்தித்த நாளும் நினைவுக்கு வந்தது.

முதன் முதலாக அவளைக் கண்டதே கடையில் வைத்துத்தான்.

அவள்தான் ஆராவமுதனின் அன்னை என்று தெரியாமல், திகழ்வஞ்சியின் வீட்டுக்குச் சென்ற வழியில், பசி எடுக்க, வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்த மிஸ்டர் சப் நோக்கி அவன் சென்று கொண்டிருந்த நேரம், அவனுடைய நாசியை இதமான சுக வாசனை தழுவிச் சென்றது. அந்த வாசனை அதுவரை அலைக்கழிந்த அவனுடைய மனத்தை அமைதிப் படுத்துவது போலத் தோன்ற, யார் அது என்று திரும்பிப் பார்த்தான்.

அப்போதுதான் தன் வண்டியைப் பூட்டிவிட்டு அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள் அவள். மாஸ்க் அணிந்திருந்ததால் அவளுடைய முகம் சரியாகத் தெரியவில்லை. எனினும் அந்த விழிகள் அவனை ஒரு கணம் தடுமாறச் செய்தது என்னவோ உண்மை.

நடந்து சென்று கொண்டிருந்தவள், எதேச்சையாக இவன் பக்கம் திரும்பி விழிகளில் புன்னகை தெறிக்க, கனடியர்களின் பழக்கமான அன்னியரைக் கண்டாலும் ‘ஹாய்’ சொல்லும் வழக்கத்தில், “ஹாய்…” என்றுவிட்டு அவனுடைய பதிலையும் கேட்காமல் கடந்து சென்று கடைக்குள் புகுந்து கொள்ள, அந்த விழிகளில் கவரப்பட்டவனாக அவள் பின்னே செல்ல எத்தனித்தான் அபராசிதன். அந்த நிலையிலும் அந்த விழிகளை எங்கோ கண்டது போல அவனுக்குத் தோன்றவே செய்தது. ஆனால் எங்கே என்றுதான் அவனால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த விழிகள் ஆழமாக மனதில் பதிந்துவிட்டது என்பது மட்டும் நிஜம்.

அதற்காகக் கண்டதும் காதலா என்பதெல்லாம் இல்லை. பார்த்ததும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் விழிகளில் புன்னகை மின்ன துள்ளல் நடையோடு சென்றவளைக் கண்டதும், அவளுடைய முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்கிற பேராசையில் அவள் பின்னால் போக முயன்றான். அதற்கிடையில் அவசரமாக அவனுடைய அக்காவிடம் இருந்து அழைப்பு வர, உடனே அந்த அழைப்பை எடுத்துப் பேசிவிட்டு மிஸ்டர் சப்பை மறந்தவனாக, அந்த ‘கன்வீனியன்ட் ஸ்டோர்’ நோக்கி நகர்ந்தான்.

காரணம் தெரியவில்லை. அந்தப் பெண் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு. குறைந்தது அவளுடைய பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடைக்குள் நுழைந்தவன், எதையோ வாங்க வேண்டுமே என்பதற்காக, கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு திரும்ப, அந்தப் பெண் ஒரு ஆணின் அணைப்பில் நின்றிருந்தாள்.

அதைக் கண்டவனுக்கு ஏனோ கோபம் வந்தது. ஒருவித ஒவ்வாமை. இது சரியில்லை என்கிற உணர்வு. உடனே அவர்கள் இருவரையும் பிரித்து விடவேண்டும் என்பது மட்டும் புலனுக்குத் தெரிய, அவர்களின் காதல் அணைப்பைக் குலைக்கக் குறுக்கேயும் புகுந்தான்.

ஆனால், அவள் நிலையைப் பார்த்த பின்புதான் அது அவளுக்குப் பிடித்தமான அணைப்பு அல்ல என்பதே தெரிந்தது. ஒரு விதத்தில் மனதில் நிம்மதிதான்.

ஒரு சில விநாடிகள் என்றாலும், அவள் தன் மாஸ்கைக் கழற்றிய போது, அரைகுறையாகத் தெரிந்த அந்த முகத்தைக் கண்டபோதும் அவனுக்குள் ஒரு வித சலனம். அப்போதும் அந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று தெரிந்தது. ஆனால் எங்கே என்றுதான் அவனால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனாலும், அந்த நிலைமையில் அவளுடைய பெயரையும், விபரத்தையும் கேட்பது நாகரீகம் அல்ல என்பதால் உடனே கிளம்பி விட்டான்.

மிஸ்டர் சப்பில் உணவு வாங்கி உண்டுவிட்டு, திரும்ப திகழ்வஞ்சியின் வீட்டிற்குப் போன பிறகு தான், அவன் கண்டு வியந்த பெண், அமலனின் கள்ளக்காதலி என்பதே தெரிந்தது.

இவன் அழைப்பு மணியை அழுத்தியதும், வந்து கதவைத் திறந்தவளைக் கண்டு அதிர்ந்து தான் போனான் அபராசிதன்.

சற்று முன், தன்னைக் கவர்ந்திழுத்த அந்த உருவம்தான் தன் அண்ணனின் வாழ்க்கையை நாசமாக்கியது என்று தெரிந்த போது நெஞ்சத்தில் பெரும் வலி. அதுவரை அழகாகத் தெரிந்த அந்த உருவம் நொடிப் பொழுதில் உருவம் அழிந்த நாகரிகப் பிசாசாக அவன் கண்களுக்குத் தெரிய அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை.

இதுவரை காலமும் எந்தப் பெண்ணையும் அந்தளவு ரசித்துப் பார்த்ததில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தாலும், அவள்தான் அண்ணனின் வாழ்க்கையை நாசமாக்கியவள் என்பதை ஓரளவு கண்டிருப்பான். ஆனால் தலை முடியில் ஏதேதோ வர்ணம் பூசி, அரைகுறை ஆடையோடு, தொப்புளிலும் மூக்கிலும் வளையம் போட்டு, அதீத முகப்பூச்சில் முகத்தை அழகாகக் காட்ட முயன்ற ஒருத்தி கண்முன்னால் வந்து நிற்பாள் என்று எதிர்பார்த்திருக்க அதற்கு மாறாக, நின்று இருந்தவளைக் கண்டு குழம்பித்தான் போனான். கடைசியாக அவளைத்தான் அவன் தேடிவந்தான் என்பது உறுதியாக, அதுவரை அவள் மீதிருந்த இனம்புரியாத ஆர்வம் மாயமாகி மங்கிப் போய் விட்டிருந்தது.

அதுவும் கொஞ்ச நேரத்திற்குத்தான். அதற்குப் பிறகு அவளோடு பேசும்போது, உள்ளத்தில் அளவிட முடியாத வெறுப்பிருந்தாலும், அதையும் மீறி, அவள்மேல் இனம் தெரியாத ஒரு வித பிணைப்பு தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

இதில் பலமுறை தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையைக் கெடுத்தவள் என்று உருப் போட்டுப் பார்த்தும், பாழாய் போன மனது, அவள் நல்லவளாக இருக்குமோ என்று வாதிட்டது. இப்படித்தானே அண்ணனும் மயங்கியிருப்பான் என்று தெரியாமலில்லை. ஆனால் இந்த மனதுதான் குரங்கு ஆயிற்றே. எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, அதைத்தான் நினைத்துத் தொலைக்கும்.

எந்தத் தாமதமும் இல்லாமல், ஆராவமுதனை அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்து இருக்க, அவள் தன்னையும் அழைத்துச் செல் என்று சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனான். அவள் கேட்டதற்குப் பின்னாலிருக்கும் அமுதனின் சொத்துக்கள்தான் காரணம் என்பது அவனுக்குப் புரியாமலில்லை. அதனால்தான், அவளை அழைத்துச் செல்வதில்லை என்கிற பிடிவாதத்தில் அவனும் இருந்தான். அது மட்டுமன்றி, குழந்தைக்கு முன் உதாரணமாக அவளால் இருக்க முடியாது என்பதும் உறுதியே. தவிர அவளுடைய ஒழுக்கத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வது அவனுடைய வேலையும் இல்லை. அவள் தேவையில்லாத தலைவலி. அது மட்டும் நிச்சயம்.

ஆனால், இப்படி ஒருத்தன் அவளைக் காயப்படுத்துவான் என்று அவன் நினைத்திருக்க வில்லை.

இதோ இப்போது கூடத் தன் மகனுக்காக கலங்கி நிற்கும் அந்தத் தாய் உள்ளத்திற்கு முன்பாகத் தன் வெறுப்பைக் காட்டமுடியாமல், தவித்து நின்றவனுக்கு அவளுடைய முகத்தில் அடித்தாற்போலப் பேசக் கூட முடியவில்லை.

“ஷ்… எவ்ரிதிங் வில் பி ஓக்கே… திகழ்” என்று அவளுடைய தலையை வருடிக்கொடுக்க, அந்த வருடல் கொடுத்த திடத்தில் மெதுவாக விழிகளை மூடினாள் திகழ்வஞ்சி. அந்த நேரம் விழிகளின் ஓரம் கண்ணீர் வழிய, அவசரமாக அதைச் சுட்டுவிரலால் துடைத்துவிட்ட அபராசிதன், அப்போதுதான் கவனித்தான் தன் விழிகளிலும் கண்ணீர் பூத்திருப்பதை.

அதிர்ந்து போனான் அவன். இதுவரை யாருக்காகவும் அவனுடைய விழிகள் கண்ணீரைக் கோர்த்ததில்லை. போயும் போயும் இவளுக்காகக் கண்ணீர் சிந்தத் தயாராகி விட்டதே.

டேய் அபராசிதா. முட்டாள்தனமாக மனதிற்குள் எதையும் வளர்த்துக் கொள்ளாதே. அவள் உன் அண்ணனின் காதலி. இல்லை இல்லை. கள்ளக் காதலி. அவளைப் போய்… மனது அவனை ஏளனம் செய்ய, பற்களைக் கடித்தான் அபராசிதன்.

ஆனால் மனதோ, அவனையும் மீறி அவளுடைய முகத்திலிருந்த காயங்களைக் கண்டு தவித்தது.

நெற்றியின் ஓரம் புடைத்துச் சிவந்திருந்தது. ஒற்றைக் கன்னத்தில், ஐந்து விரல்களின் தடம். முகம் கன்றிப்போயிருக்க, அவளுடைய உதட்டினோரமாகவும் மூக்கிலும் இரத்தம் கசிந்திருக்க, நடக்கக் கூடா சம்பவத்தில் சிக்கியதால், அச்சத்தில் முகம் வெளிறி வெள்ளைத்தாளுக்கும், அவளுக்கும் வித்தியாசம் காணப்படாத அளவு மாறியிருக்க, தன்னை மறந்து ஒற்றைக் கரம் தூக்கி உதட்டோரம் வடிந்த இரத்தத்தைத் தொட்டுப் பார்த்தவனின் நெஞ்சம் ஒரு கணம் குலுங்கியது. அவனையும் மீறி சீற்றமாய் மூச்சு வெளிவர, அந்தக் கிறிஸ்டீனைக் கொல்லும் வெறியே வந்தது அவனுக்கு.

அதுவும் அவனுடைய விழிகள், அவளுடைய பான்டை நோக்கி நகர்ந்தன. பொத்தான் அவிழ்ந்து இருந்தது. ஜிப் அரைவாசி வரை இறங்கியிருந்தது. அதுவே என்ன நடந்திருக்கலாம் என்பதை அவனுக்கு அறிவுறுத்த அவனுடைய கைமுஷ்டிகள் இறுகின.

‘எத்தனை தைரியம் அவனுக்கு. ஒரு பெண்ணிடம் தன் ஆண்மையைக் காட்டும் அந்தக் கோழைக்கு என்ன தண்டனையைக் கொடுப்பது? அவனை உயிரோடு விடுவதே தவறு. சீற்றமாக எண்ணும் போதே, அவசர ஊர்தி அந்தச் சின்ன மருத்துவமனையில் வந்து நின்றது. திகழ்வஞ்சி இருந்தது நகரத்திற்குச் சற்றுத் தள்ளி என்பதால் பெரிய மருத்துவமனைகள் எதுவும் அருகாமையில் இல்லை. அவசரத்திற்குச் சின்ன மருத்துவமனைகள் தான்.

அவளை உள்ளே எடுத்துச் செல்ல, அவர்களின் பின்னால் பதட்டத்தோடு சென்றான் அபராசிதன்.

(14)

உடல் முழுவதும் ஏற்பட்ட வலியில் மெதுவாக விழிகளைத் திறந்தவளுக்கு அந்த இடமே மங்கிப் பின் தெளிவாக, சற்று நேரம் எடுத்தது, அவள் படுத்துக் கிடப்பது மருத்துவமனை என்று புரிந்து கொள்ள.

அந்த மந்தமான நிலையிலும், தனக்கு நடந்தது நினைவுக்கு வர, சட்டென்று விழிகளைத் திறந்து எழுந்தமர முயன்றாள். ஆனால் வலி தாங்க முடியாமல், முனங்கியவள் படுக்கையில் விழப் போக,

“ஹே… பார்த்து?” என்கிற சத்தத்தில் தலையைத் தூக்கித் திரும்பிப் பார்த்தாள். அங்கே அபராசிதன் இறுகிய முகத்தோடு நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் அழுத்திய பாரம் மங்கிப் போக,

“ஆரா…” என்றாள் வலியை மறைக்கும் குரலில்.

“ஹி இஸ் ஓகே… ஈவா வீட்டில் விட்டிருக்கிறேன்…” என்றதும் நிம்மதியோடு தலையணையில் தலை சரிய முயல, அவளை நெருங்கியவன், அவளுடைய தலையைப் பற்றித் தூக்கித் தலையணையைச் சரியாக்கி விட்டு அவளைச் சரியாகப் படுக்க வைக்கத் திகழ்வஞ்சியோ, நன்றியோடு அவனைப் பார்த்தாள்.

அவன் மட்டும் தக்க தருணத்தில் வரவில்லை என்றால், என்னாகி இருக்கும். இப்போது அவளுடைய உயிர் விண்ணுலகுக்குச் சென்றிருக்கும். அவளுடைய மகன், யாருமற்ற அநாதையாகப் போயிருப்பான். நினைக்கும் போதே கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன.

“நன்றி அபராசிதன்..” அந்த வலியிலும் சொன்னவளை முறைத்தவன்,

“உன்னுடைய நன்றிக்காக இதை எல்லாம் செய்யவில்லை…” என்றுவிட்டு அவளுடைய மணிக்கட்டைப் பற்றி நாடித் துடிப்பை அவதானிக்க, குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

முப்பது விநாடிகள் வரை அவதானித்தவன், அவளுடைய கரத்தை விலக்கிவிட்டு அவளைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிக் காயத்தைப் பார்க்க முயல,

“என்ன செய்கிறீர்கள்…” என்றாள் திக்கித் திணறி. இப்போது எரிச்சலோடு அவளை ஏறிட்டவன்,

“பார்த்தால் எப்படித் தெரிகிறது? கேட்டவன், அவள் அணிந்திருந்த மருத்துவமனை ஆடையை அகற்றி இடது மார்புக்கு ஒரு அங்குலத்திற்கும் கீழே கட்டப்பட்டிருந்த காயத்தைப் பார்த்தான். இரத்தப் போக்கு எதுவும் இல்லை. நிம்மதி பெருமூச்சொன்றை விட்டவன்,

“குட்.. இரத்தக் கசிவு எதுவும் இல்லை…” என்றவாறு அவளுடைய ஆடையைச் சரியாக்கிப் போர்வையைத் திரும்பப் போர்த்தியவாறு,

“கொஞ்சம் கத்தி மேலே ஏறியிருந்தால் இதயத்தைத் தொட்டிருக்கும் தெரியுமா…? அந்த வகையில் நீ அதிர்ஷ்டசாலிதான்…” என்றவாறு, அருகாமையிலிருந்த திரையில் அவளுடைய இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் என்பனவற்றைப் பார்த்தான்.

“கொஞ்சம் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது…” யோசனையோடு அவளைப் பார்த்து, வலிக்கிறதா?” என்றான்.

“ம்… உயிர் போகிறது..” அவள் சொல்ல, அவளுக்குப் பக்கத்திலிருந்த மணியை அழுத்தினான் அபராசிதன். சற்று நேரத்திலேயே தாதி உள்ளே வந்தார்.

“யெஸ்…?” கேட்டவரிடம் அவளைச் சுட்டிக் காட்டி,

“வலிக்க ஆரம்பித்து விட்டது…” என்று சொல்ல,

“இதோ வருகிறேன் டாக்டர்” என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, அந்த டாக்டரில் திகைத்தவளாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“நீ… நீங்கள் டாக்டரா?” என்றாள் அந்த நிலையிலும் வியந்துபோய்.

“ம்…” என்றவன் அதற்கு மேல் பேச்சு வளர்க்காமல், அவளை உற்றுப் பார்த்து

“யார்?” என்றான்.

அவன் யாரைக் கேட்கிறான் என்பது புரிந்ததும், மீண்டும் நடந்த நினைவில் முகம் கசங்கிப் போனது அவளுக்கு.

“உன்னைத்தான் கேட்கிறேன் திகழ்வஞ்சி… உன்னை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?” அந்தக் கேள்வியில் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் தெரிய,

“கிறிஸ்டீன்…” என்றாள் விழிகளை மூடி.

“கிறிஸ்டீன் என்பது…”

“அன்று கடையில் ஒருத்தன் என்னோடு தப்பாக நடந்துகொள்ள முயன்றானே… அவன்தான்…” அவள் முடிக்கவில்லை,

“ஏன்?” என்றான் அடுத்து. இவளோ சுருக் என்று எழுந்த வலியில் முகம் கசங்க,

“ஷ்… ஆ… அந்தத் தாதியிடம் மருந்தை சீக்கிரமாக ஏற்றச் சொல்கிறீர்களா… உயிர் வலியாக இருக்கிறது…” அவள் திணற, எழுந்தவன், நின்ற வாக்கிலேயே அவள் பக்கமாகச் சரிந்து, மறுபக்கமிருந்த பொத்தானை அழுத்த, அடுத்த நான்காவது நிமிடம் மருந்தோடு வந்தார் தாதி.

“சாரி… அவரசமாக இன்னொரு நோயாளியைப் பார்க்கவேண்டியதாயிற்று…” சொன்னவர் அவளுக்கு ஏறிக் கொண்டிருந்த டிரிப்பில் மருந்தை ஏற்றிவிட்டுப் போக, ஒரு சில விநாடிகளில் வலி மட்டுப்பட்டது.

நிம்மதி மூச்சோடு திரும்பி அவனைப் பார்த்தவள்,

“அதுதான் அன்று நீங்கள் சொன்னீர்களே, இப்படி ஒருத்தன் தவறாக நடக்கும் போது அதைச் சொல்லவேண்டியவர்களிடம் சொல்லாமல் இருப்பது தவறு என்று. அதுதான் அவனைப் பற்றி, அவனுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அவர் கிறிஸ்டீனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார். கூடவே சொத்தை எல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு எழுதப் போகிறாராம். என்னால் தான் இது எல்லாம் என்று பழிவாங்க வந்திருந்தான்…” என்றவளை, ஏறிட்டவன்,

“அவன்… அவன் உன் கூட தப்பாக நடந்தானா?” கேட்டபோதே அவன் குரலில் சீற்றம் தெரிந்தது.

உதடுகள் கடித்து விடுவித்தவள்,

“ம்…” என்றவளுக்குக் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

“நீங்கள் மட்டும் தக்க தருணத்தில் வராமல் போயிருந்தால், என் குழந்தை இப்போது அநாதை ஆகியிருப்பான்…” என்றாள் கண்கள் கலங்க.

“உன் குழந்தை ஏன் அநாதையாகப் போக வேண்டும். அதற்குச் சித்தப்பா என்று நான் ஒருத்தன் இருக்கிறேனே. சொல்லப் போனால் உன்னை விடச் சிறப்பாகவே அவனைப் பார்த்துக் கொள்வேன்…” அவன் சொல்ல அவனை அடிபட்ட பாவனையுடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அவனால் அன்பை மட்டும்தானே கொடுக்க முடியும். ஆனால் ஆராவமுதனுக்கு அந்த அன்பு மட்டும் போதுமா. முக்கியமாகப் பாதுகாப்பல்லவா வேண்டும். அன்று அபராசிதன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால், அந்தக் கிறிஸ்டின் ஆராவமுதனை…’ அதற்கு மேல் அவளால் அதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. அவள் தவறு செய்துவிட்டாள். அவளுடைய சுயநலத்திற்காகக் குழந்தையைப் பலிகொடுக்கப் பார்த்துவிட்டாள்…’ கலக்கத்தோடு நினைத்தவளுக்கு இன்னும் அந்தக் கிறிஸ்டீனின் விகாரச் சிரிப்பும், அவன் ஆராவமுதன் உறங்கிக் கொண்டிருந்த அறையின் குமிழைத் திறந்த விதமும் மனக்கண்ணில் தோன்றி நடுங்க வைத்தது. கண்களோ கலங்கின.

அதைக் கண்டவன்,

“இப்போது எதற்கு அழுகிறாய்…? அதுதான் உனக்கு ஒன்றும் ஆகவில்லையே…” கேட்டவனின் குரலில் மெல்லியதாய் எரிச்சல். அது அவள் அழுவதைப் பார்க்கப் பிடிக்காததால் வந்த எரிச்சலோ? அவன் உள்ளீட்டுப் பரிசோதனை செய்வதற்கிடையில், அந்த அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இந்த நேரத்தில் யார்? அபராசிதன் நடந்து சென்று கதவைத் திறக்க. அங்கே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்றிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மரியாதையாக, உள்ளே வரப் பணித்தவன், விலகி நின்றுகொள்ள, இருவரும் புன்னகையோடு திகழ்வஞ்சியை நெருங்கினர்.

முதலில் தங்களை அறிமுகப்படுத்திய காவல் துறையினர், தொடர்ந்து திகழ்வஞ்சியிடம் நடந்ததைக் கேட்க, அவள் ஒன்று விடாமல் சொன்னாள்.

அதைக் குறிப்பெடுத்த காவலதிகாரி, நிறையக் கேள்விகளைக் கேட்டார். அபராசிதனைப் பற்றியும் விசாரித்தார். அவனும் தனக்கு நடந்ததையும், தெரிந்ததையும் சொன்னான். அனைத்தையும் கேட்டுக் குறிப்பெடுத்த அதிகாரி,

“கெட் வெல் சூன்… நாங்கள் அவனை விரைவாகவே பிடித்துவிடுவோம்…” என்கிற உறுதியோடு விடைபெற்றுச் செல்ல, அதற்குப் பிறகு நீண்ட நேரம் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது.

ஏனோ இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. ஆனால், அவளுடைய படுக்கைக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்ட அபராசிதன், அவளையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் காவலதிகாரியிடம் நடந்ததை அப்படியே சொல்ல, இவனுடைய இதயம்தான் வேகமாகத் துடித்தது. அவளுக்கு வலித்த இடங்கள் எல்லாம் தனக்கும் வலிப்பது போலத் தோன்ற, தவித்துப் போனான் அபராசிதன். ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் கேட்கக் கூட முடியவில்லை. அந்த விநாடியே, அந்தக் கயவனைத் தேடிச் சென்று மாறுகால் மாறுகை வாங்கிவிடும் வேகம் வந்தது. கோபம் வந்து என்ன செய்வது? அதை செயலாற்றும் நிலையில் அவன் இல்லையே. உடலும் கைமுஷ்டிகளும் இறுகத் திகழ்வஞ்சி சொல்வதைச் செவி மடுத்தான்.

காவலதிகாரிகள் சென்ற பின்னும், இதயத்தில் வலி மிச்சமிருப்பதைக் கண்டவன் வியந்தான். அவளுக்கு வலித்தால் எனக்கு ஏன் வலிப்பது போலத் தோன்றுகிறது? உள்ளே ஏன் என்னவோ தவிப்பாகிறது? இத்தனைக்கும் அடி மனது வரை அவளை வெறுக்கிறான். அப்படியிருந்தும், அவளுடைய வலியை என்னால் உணர முடிகிறதே ஏன்? குழம்பிப் போனான் அவன்.

அதே நேரம் மூக்கு உறிஞ்சும் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தான். அவள் தான், டிரிப் ஏறாத கரம் கொண்டு கண்களைத் துடைத்துக் கூடவே மூக்கை உறிஞ்சியவாறு இருந்தாள்.

“இப்போது எதற்கு அழுகிறாய்? அதுதான் வலிக்கு மருந்து போட்டாயிற்றே… இன்னும் என்ன?” அவள் அழுவதைப் பார்க்கப் பிடிக்காமல் எரிச்சலோடு கேட்டவன் எழுந்து அவளருகே செல்ல, அவளோ மீண்டும் கண்களைத் துடைத்துவிட்டு, எழுந்தமர முயன்றாள்.

உடனே அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு, அவளுடைய முதுகின் புறமாகக் கரத்தை எடுத்துச் சென்று தூக்கி அமர வைத்தவன், எட்டி மேசையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளுடைய உதடுகளில் வைத்து,

“தண்ணீர் குடி… பதட்டமும், பயமும், படபடப்பும் குறையும்.” என்றான். அவளுக்கும் அந்த நேரத்திற்குத் தண்ணீர் தேவையாகத்தான் இருந்தது. மறுக்காமல் வாங்குவதற்காகக் கரத்தைத் தூக்க,

“நான் கொடுக்கிறேன்… நீ குடி…” என்றவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய வாய்க்குள் ஊற்ற, அதுவரை காய்ந்து கிடந்த தொண்டைக்கு அந்தத் தண்ணீர் வரப்பிரசாதமாக இருக்க, இப்போது கடகடவென்று குடித்தாள் திகழ் வஞ்சி.

ஒரு கட்டத்தில் போதும் என்று அவனுடைய கரத்தைத் தள்ளிவிட, போத்தலை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்த மெல்லிழைத் தாளினால் அவளுடைய வாயைத் துடைத்து விட்டு விலக, அவனுடைய அந்த அக்கறையில் வியந்தவளாக அவனை இமை மூடாமல் பார்த்தாள்.

எத்தனை நாளாயிற்று ஒருத்தர் இத்தனை அக்கறையாக அவளுக்காக ஒரு காரியம் செய்து? அவனுடைய அந்த மென்மையான அணுகுமுறை, கொதிக்கும் எரிகற்களின் மீது பனித்துளி விழுந்தது போல, இதம் கொடுக்க, சட்டென்று அவளையும் அறியாமல் மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி விட்டிருந்தது.

அதைக் கண்டவன் புருவங்கள் சுருங்க,

“இப்போது எதற்கு அழுகிறாய்?” அந்தக் குரலில் கறார் தன்மை இருந்தாலும், அதுநாள் வரையும் புரையோடிக் கிடந்த புண்ணுக்கு மருந்து தடவியது போலத் தோன்ற, ஏனோ அழுகை வெடித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

மனதில் தேக்கிவைத்த வலியும் வேதனையும் உடைப்பெடுத்து வெளியேறுகிறது என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு அந்தக் கணமே அவளை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து ஆறுதல் படுத்தும் வேகம் வர, தன்னையும் மறந்து அவளை நோக்கி ஓரடி வைத்தும் இருந்தான். மறு கணம் தடை போட்டவனாக நின்றான்.

‘நான் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறேன்… எனக்கு என்னாயிற்று? ஆமாம் நான் ஏன் இப்படிக் குழம்பி நிற்கிறேன். இவள் அழுதால் எனக்கென்ன வந்தது? எக்கேடும் கெட்டுப் போ என்று இவளை இங்கேயே விட்டுவிட்டு என்னால் ஏன் போக முடியவில்லை? இதுதானே எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு? இதைப் பயன்படுத்தி ஆராவை என் கூட அழைத்துப் போக என்னால் ஏன் முடியவில்லை? இங்கே மருத்துவமனையில் கதியாகக் கிடக்கக் காரணம்தான் என்ன? யோசித்தவனுக்குத் தன் நினைவு போகும் திசை கண்டு தூக்கி வாரிப் போட்டது. கூடவே தன் மீது அருவெறுப்பும் எழுந்தது.

‘சீ… எனக்குப் பைத்தியமா என்ன? அண்ணனைப் பணத்துக்காக வளைத்துப் போட்ட ஒருத்தி மீது கரிசனை கொள்கிறேனே? இது என்ன கேலிக்கூத்து…’

‘இல்லை… நான் ஒரு வைத்தியன். எதிரியாக இருந்தாலும் தேவை என்றால் மருத்துவ உதவி செய்வது என் கடமை. அதனால்தான் அவளை காப்பாற்றினேன். மற்றும் படி வேறு எந்த நோக்கமும் இல்லை… நிச்சயமாக இல்லை..’ தன்னைத் தானே அவன் தெளிவுபடுத்த முயல,

‘கிழித்தாய்…! அதுதான் அவளைத் தூக்கி வந்து மருத்துவமனையில் போட்டாயிற்றே. இனியும் இங்கே எதற்கு நிற்கிறாய். போ. அங்கே ஆரா எவருடையதோ கண்காணிப்பில் தவித்துக் கொண்டு இருக்கிறான். போய் முதலில் அவனை கவனி…”

‘இல்ல… இவளை விட்டு எப்படிச் செல்வது. இவளைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டாமா?’

‘ஏன் இங்கேதான் செவிலியர்கள், வைத்தியர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கிறதே! நீ எதற்கு? இவளுக்கு ஏதாவது தேவை என்றால், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். போ… இங்கே இருந்தால் உன் புத்தி முட்டாள் தனமாக யோசிக்கும்… போய் விடு’ என்று அவனுடைய மனசாட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக அவனிடம் வாதாட, திணறிப்போனான் அபராசிதன்.

அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல், அவள் அழுவதைப் பார்க்கும் திராணியற்றவனாக,

“சரி… நான் புறப்படுகிறேன். எது தேவையாக இருந்தாலும் அந்தப் பொத்தானை அழுத்து… யாராவது உதவிக்கு வருவார்கள்…” அவன் சொல்ல, சட்டென்று அவளுடைய விழிகளில் தெரிந்த அச்சத்தைக் கண்டு, தயங்கி நின்றான் அபராசிதன்.

“பயப்பட எதுவுமில்லை. இது மருத்துவமனை… உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது… தைரியமாக இரு…” என்றவன், அதற்குமேல் அங்கிருக்க முடியாமல், எதிலிருந்தோ தப்பி ஓடுபவனாக வெளியேற, இவளோ அவன் வெளியேறியதும் ஏற்பட்ட வெறுமையில் கதிகலங்கிப் போனவளாக, விழிகளை அழுந்த மூடி அப்படியே கிடந்தாள்.

மனதோ நடந்த சம்பவத்தை நினைத்துக் குமைந்து போனது. இந்த ஜென்மத்தில் அவளால் இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியுமா? தெரியவில்லை. அதிலிருந்து எப்படித் தப்பிப்பது? அதுவும் புரியவில்லை. தன் நிலையை எண்ணிக் கலங்கிப் போனவள், கடைசியாக அப்படியே மருந்தின் வீரியத்தில் உறங்கியும் போனாள்.

 

What’s your Reaction?
+1
38
+1
7
+1
1
+1
0
+1
1
+1
6
Vijayamalar

View Comments

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

20 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

5 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

7 days ago