Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 12

(12)

விமான நிலையத்திலிருந்து அபராசிதன் வெளியே வந்தபோது நேரம் எட்டுமணியாகி இருந்தது. தொடர்ந்து ஒரே அலைச்சலாக இருந்ததால் பெரிதும் சோர்ந்துபோனான் அவன். இன்னும் இரண்டு நாட்களில் திரும்ப டொரன்டோ போகவேண்டும். அதற்கிடையில் குழந்தையை எப்படியாவது அவன் கூட அழைத்துச் சென்றுவிட வேண்டும். அந்த முடிவோடு வெளியே வந்தவன், வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு நேராகத் திகழ்வஞ்சியின் வீட்டிற்கு விட்டான். அவன் பல முறை அவளை அழைத்துவிட்டான். ஆனால் அவனுடைய அழைப்பை எடுக்காமல் போக்குகாட்டும் அவள் மீது தாளமுடியாத கோபம் வந்தது.

பேசாமல் ஆராவைக் கடத்திவிடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கிவிட்டான் அபராசிதன். ஆனால் அதற்குப் பிறகு ஏற்படும் சிக்கலை யார் கையாள்வது. இதில் அவன் வைத்தியன் வேறு. அவன் குழந்தை கடத்தியது தெரிந்தால் அவனுடைய எதிர்காலமே நாசமாகிவிடும்.

வேறு வழியில்லை, அவளிடம் திரும்பப் பேசிப்பார்க்க வேண்டியதுதான். அந்த முடிவோடு வண்டியின் வேகத்தைக் கூட்ட, இங்கே

“ஹாய் பேபி..!” என்றவாறு பல்லைக் காட்டியவாறு நின்றவனைக் கண்டு சர்வமும் நடுங்கிப்போனாள் திகழ்வஞ்சி.

“கி… கிறிஸ்டீன்?” அவளையும் மீறிக் குரல் நடுங்கியது.

“யெஸ் பேபி… இட்ஸ் மீ…” அவன் இளிக்க மறு கணம் கதவை அடித்துச் சாத்த முயல, அவனுடைய ஒற்றைக் கால் கதவின் இடுக்கில் வந்து விழுந்தது. தொண்டை வரை வந்து துடித்த இதயத்தை அடக்க முயன்று தோற்றவளாக,

“கிறிஸ்டீன். என்ன செய்கிறாய்? மரியாதையாகப் போய்விடு…” சீறியவள், கதவை மேலும் மூட, அந்த மாமிச மலையைத் தள்ளி அவளால் கதவை மூடவே முடியவில்லை.

“நோ பேபி…! உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும்…” என்றவாறு அவளைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்திருந்தான் அவன்.

அவன் சும்மா பார்த்தாலே அந்தப் பார்வை பெரும் அருவெறுப்பைக் கொடுக்கும். இதில் எதையோ குடித்துவிட்டு வந்திருப்பவனின் பார்வை எப்படியிருக்கும் என்று வேறு சொல்ல வேண்டுமா? திகிலில் நடுங்கிப்போனாள் திகழ்வஞ்சி.

‘இப்படி விறைத்துப் போய் நிற்காதே திகழ்…யோசி…’ புத்தி அவளை உலுப்ப, அவனைக் கண்ட அதிர்ச்சியில் இறுகிப்போயிருந்தவளோ செயலாற்ற முடியாமல் அப்படியே நின்றிருக்க, அவனோ அவளை மெதுவாக நெருங்கினான். அவன் நெருங்க நெருங்க, தன்னை மறந்து பின்னால் நகர்ந்தாள் திகழ்வஞ்சி.

“உனக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அதற்காகத்தான் வந்தேன்…?” என்றவன் பார்த்த பார்வையில் ஈரக் குலையே நடுங்கிப் போனது அவளுக்கு.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்…? எதற்கு நன்றி சொல்ல வந்தேன் என்று புரியவில்லையா? அதுதான் அப்பாவிடம் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாய் போல…” அவன் சொல்ல மேலும் முகம் வெளிறினாள் திகழ்வஞ்சி.

“அவருக்கென்ன? சுலபமாகவே என்னை வெளியே போ என்று துரத்திவிட்டார். இனி அவருடைய சொத்தில் ஒரு சதம் கூடக் கொடுக்க முடியாதாம். அனைத்தையும் அநாதை ஆசிரமத்திற்குக் கொடுக்கப்போகிறேன் என்கிறார். அவர் பெற்ற மகன் நான் உயிரோடு இருக்கும் போது, எதற்குச் சொத்தை யாருக்கோ கொடுக்க வேண்டும்…? இது என்ன நியாயம்? ம்… அதற்குக் காரணமானவள்… நீ.. உன்னை எப்படிச் சும்மா விடுவது?” கேட்டவனை வாய்க்குள் வந்து துடித்த இதயத்தோடு பார்த்தாள் திகழ்வஞ்சி.

“கிறிஸ்டீன்…! இதோ பார்…! உன்னுடைய நன்மைக்காகத்தான் ஜானிடரிடம் சொன்னேன். உன்னைப் பழிவாங்க வேண்டும் என்றால் காவல் துறைக்குச் சென்றிருப்பேன்… தயவு செய்து இதை இப்படியே விட்டுவிடு… இல்லை…” முடிந்தவரை திடமாக அவள் சொல்ல, அதைக் கேட்ட கிறிஸ்டீனோ இளக்காரமாகச் சிரித்தான்.

“இல்லை என்றால் என்ன செய்வாய்? கொன்று விடுவாயா?” என்றான் கிண்டலும் ஏளனமுமாக. கூடவே அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, அதே வேகத்தில் பின்னால் நகர்ந்தவளின் உடல் உதறியது. நாக்கு வறண்டு தொண்டை காய்ந்தது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் வடிந்து சென்ற உணர்வோடு அவனைப் பார்க்க, அதைக் கண்டு கேலியாக நகைத்தவன்,

“என்னம்மா இப்படி நடுங்குகிறாய்…? இத்தனை பயத்தை வைத்துக்கொண்டா, என்னை மிரட்டுகிறாய்…?” கேட்டவனின் குரலில்தான் எத்தனை எகத்தாளம்.

“இவ்வளவு தான் உனக்கு மரியாதை கிறிஸ்டீன்… மரியாதையாக வெளியே போ…” சொன்னவளின் விழிகள் கைப்பேசியைத் தேட, அது அணைத்த நிலையில் கணினிக்கு அருகாமையில் பரிதாபமாகக் கிடந்தது.

அதைக் கண்டதும் உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள், திரும்பி கிறிஸ்டீனைப் பார்க்க, அவனோ, அவளுடைய உடலைத்தான் விழிகளால் துகில் உரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம், வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த அபராசிதனின் விழிகளில் டிம்ஹாட்டன் பட, சட்டென்று வண்டியைக் கடையை நோக்கித் திருப்பினான்.

களைத்துக் கிடந்தவனுக்குக் காப்பி குடித்தால் தான் சோர்வு போகும் என்ற நிலை. விமானத்தில் நல்ல உறக்கத்திலிருந்ததால் அங்கே வாங்கிக் குடிக்க முடியவில்லை. வண்டியை ‘டிரைவ் த்ரூ’விற்குள் விட, அன்றைக்கென்று அதிகமான வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன.

“XXXX” திட்டியவன், பொறுமையிழந்து கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் எட்டு பதினைந்து. எப்படியும் பத்து நிமிடங்கள் எடுக்கும் அவனுக்குத் தேவையானதை வாங்கிச் செல்ல. திரும்பா முனை (Point of no return) வெளியேறவும் வழியில்லை. காத்திருக்கும் நேரத்திற்கு, ஆராவமுதனிடம் செல்ல மனது துடித்தது. அந்தக் குழந்தையின் அழகும், பொக்கைவாய் சிரிப்பும் அவனுடைய உள்ளத்தை உருக வைத்து விட்டதே.

அந்த நேரம் அவனையும் மீறி குழந்தையின் அன்னையிடம் மனது சென்றது. அவளை நினைத்த மாத்திரத்தில் மனமும், புத்தியும் இறுகிப் போனது. அவனுடைய அழைப்பையா ஏற்க மறுக்கிறாய்? இரு உன்னை வைத்துச் செய்கிறேன். மனது அரைக் கூவலிட்டது. கூடவே அவளை நினைத்துக் குழம்பவும் செய்தான்.

அவனுக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை, அமலனிடம் பணம் பறிக்க முயன்றவள், இவனிடம் ஏன் வாங்க மறுக்கிறாள்? அவனுடைய அண்ணன் சித்தரித்த திகழ்வஞ்சிக்கும், இவளுக்கும் நிறைய வேறுபாடு தெரிகிறதே… அது ஏன்? யோசிக்கும் போதே முன்னாடி நின்றிருந்த வாகனம் சற்று முன்னேற, இவனும் தன்னுடைய வாகனத்தை முன்னெடுத்தான்.

“கமோன் பேபி…! எவ்வளவு திட்டமிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன் தெரியுமா? டோன்ட் வேஸ்ட் மை டைம்… இந்நாள்வரை நினைத்த எதையும் அடையாமல் விட்டதில்லை. அது உனக்கே தெரியும்… அப்படி இருக்கிறபோது, உன்னை எப்படி அப்படியே விட்டுவிட்டுப் போக முடியும்…? வா… பத்து நிமிடங்கள்தான்… என் ஆசையைத் தீர்த்துவிட்டுப் போய் விடுகிறேன்…” சொன்னவன் அவளைத் தலை முதல் கால் வரை வக்கிரமாகப் பார்க்க ஈரக்குலையே நடுங்கிப் போனாள் திகழ்வஞ்சி.

அன்று முழுக்கத் தன்னை யாரோ பார்ப்பதாக நினைத்தாளே. ஒரு வேளை அபராசிதன்தான் குழந்தையைக் கடத்த அவளை நோட்டமிடுகிறானோ என்று கூட நினைத்தாளே! ஆனால் அது இவன் தானா? நினைத்த மாத்திரத்திலேயே இருந்த ஒட்டுமொத்த தைரியமும் காற்றோடு காற்றாகக் கரைந்து போனது அவளுக்கு. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கைகால்கள் வேறு பயங்கரமாக நடுங்கின. யாருமில்லாமல் தனியாக அவனிடம் சிக்கிக்கொண்டவளுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று சுத்தமாகத் தெரிய வில்லை.

திகழ்…! மனத்தைத் தளர விடாதே. உன்னால் முடியும். நிச்சயமாக முடியும். உன் விருப்பமின்றி யாராலும் உன்னை நெருங்க முடியாது… கமான்… ஏதாவது ஆயுதங்கள் பக்கத்தில் இருக்கிறதா பார்…! பார் திகழ்…!” புத்தி அவளுக்குக் கட்டளை இட, அந்த நேரம் அவளை நெருங்கினான் கிறிஸ்டீன்.

அவனிடமிருந்து தப்புவதற்கு விழிகளை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தாள். சற்றுத் தள்ளி இருந்த மேசையில் பேனா வைக்கும் இரும்பாலான தாங்கி இருக்க, பாய்ந்தவள், அதை எடுத்து அவனை நோக்கி விட்டெறிய, அது குறி தப்பாமல் அவனுடைய நெற்றியை பலமாகத் தாக்கியது. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. அந்தப் பேனா தாங்கியின் முனை நெற்றியில் பட்ட வேகத்தில் நெற்றியின் ஓரம் குருதி கசிய அவனுடைய சீற்றம் பன்மடங்கானது.

ஆத்திரத்தோடு அவளை நோக்கிப் பாய்ந்தவன், அவள் விலகுவதற்குள், சுண்டியிழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி விழுந்தவளை அவன் அணைக்க இவளோ திமிறி விடுபட முயன்றாள்.

அவளுடைய அசுரத் துடிப்பில் அவளை இறுகப் பிடிக்க முடியாமல் தன் கரத்தைத் தளர்த்த, சரிந்தவளின் கைகளில் அகப்பட்டது கோட்லஸ் கைப்பேசி. அதை எடுத்தவள் ஓங்கி அவனுடைய மண்டையில் அடிக்க, அது கொடுத்த வலியில் முற்றாகத் தன் கைப்பிடியை விலக்க, இவளும் அவன் தலையில் கோட்லஸ் ஃபோனால் தாக்கியதால், ஏற்பட்ட வலியில், தன் கரத்தை உதறியவாறு நரியிடமிருந்து தப்பித்தமான் என அவனை விட்டுத் தப்பிக்க முயல, அந்தக் கொடூரனோ அவளுடைய காலைத் தன் காலால் தட்டிவிட, சமநிலை தவறிக் குப்புற விழுந்தாள் திகழ்வஞ்சி. விழுந்தவளின் நெற்றி தரையில் பலமாக மோதுப்பட பூச்சிகள் பறந்தன அவளுக்கு.

“என்னையா அடிக்கிறாய்…? உன்னை…” என்றவன், அவளைத் திருப்பிப் போட்டு அவள் மீது அமர்ந்தவன், ஆவேசத்தோடு ஒரு கரத்தால் அவளுடைய குரல்வளையைப் பற்றி, மறு கரத்தால் தன் பான்ட் இடைவாரைக் கழற்றத் தொடங்கினான்.

இங்கே மெதுவாக அசைந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட அபராசிதன், கடைசியாக வாங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

“வன் பிளாக் காபி நோ ஷுகர்,” சொன்னவன், என்ன நினைத்தானோ, திரும்பவும் “அன்ட் வன் டபிள் டபிள்…” என்றுவிட்டு வண்டியை நகர்த்த, மனதோ குழம்பியது.

இப்போது எதற்கு அவளுக்கும் சேர்த்து வாங்கினான்? அவசியம் என்ன? தன் மீதே எரிச்சல் வர, அவன் ‘ஆர்டர்’ கொடுத்த பொருட்களை வாங்கும் ஜன்னல் அருகே வந்து நின்றான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனுடைய கரங்களில் அவன் கேட்டது வைக்கப்பட்டது. அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, வண்டியைத் திருப்பித் திகழ்வஞ்சியின் வீட்டுப் பக்கமாக விடத் தொடங்கினான் அபராசிதன்.

அந்தக் கிறிஸ்டீனின் ஆவேசத்திற்குத் திகழ்வஞ்சியால் கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடிய வில்லை. அவன் அழுத்தியதில் மூச்சுத் தடைப் பட்டது. அவன் வேறு அடுத்த படி நிலைக்கு முன்னேறும் ஆவேசத்தோடு, தன் பான்டை விலக்கிய கையோடு, அவளுடைய ஆடையை விலக்கத் தொடங்க, துடித்தாள்.

காலைக் கூட மடிக்க வழியில்லாமல் தொடைகள் மீது ஏறி அமர்ந்திருந்தவனை எப்படி விலக்குவது என்று புரியாமல் திணற, அவன் அவசரம் அவனுக்கு. அதுவரை அவளுடைய குரல் வளையை அழுத்திக் கொண்டிருந்தவன், அந்தக் கரத்தை விடுவித்து, அடுத்த கட்டத்திற்குச் செல்ல முயன்ற நேரம், இருமியவாறு ஆழ மூச்செடுத்துத் தன்னை சமப்படுத்தியவள், மறு கணம் எழுந்து கரத்தை முஷ்டியாக்கி அவனுடைய விழிகளில் ஓங்கி ஒரு குத்துக் குத்த, துடித்துப்போனான் கிறிஸ்டீன்.

வலியில் தன் கண்ணைப் பொத்தியவன் இறுக்கம் தளர்ந்து சரிய, அந்த விநாடியைப் பயன்படுத்தித் தன் காலை விடுவித்தவள், ஓங்கி அவனுடைய அடிவயிற்றில் உதைந்து விட்டு உயிரைக் கையில் பிடித்தவாறு எழுந்தவள், அவன் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டும் என்கிற முடிவோடு ஓட முயல அவளுடைய பான்ட் அவிழ்ந்து விழத் தலைப்பட்டது.

இழுத்து திரும்பவும் சிப்பைப் போட்டவள், ஆத்திரம் தாள முடியாதவளாகச் சரிந்திருந்தவனின் முதுகிலும் ஓங்கி ஒரு உதை கொடுத்துவிட்டுப் பாய்ந்து வெளியேற முயன்ற நேரம் குழந்தையின் நினைப்பு வர, வேகமாகப் புறப்பட்ட வண்டிக்குத் தடை போட்டது போலக் குலுங்கி நின்றாள் திகழ்வஞ்சி.

“ஐயோ..! என் குழந்தை…!” பதறியவள், மீண்டும் அறை நோக்கி நகர்வதற்குள் கிறிஸ்டீன் எழுந்து விட்டிருந்தான்.

விழிகளைக் குத்தியதுதான் குத்தினாள். கொஞ்சம் அழுத்தமாகக் குத்தியிருக்கலாம். ஆனால் அப்போதிருந்த பதட்டத்திலும், ஏற்கெனவே உடலின் பலவீனத்தாலும், பலம் தொலைந்து போனதே. விளைவு, ஆக்ரோஷத்தோடு எழுந்து அவளைப் பார்த்தான் கிறிஸ்டின்.

நடுங்கிப் போனாள் திகழ்வஞ்சி. அவனுக்குப் பக்கமாகத்தான் அறை இருந்தது. அதற்குள் நுழைந்து விட்டால் போதும். கதவைச் சாற்றிப் பூட்டிவிடலாம். ஆழ மூச்செடுத்தவள் தன்னை வெறித்துப் பார்த்தவனைக் கருத்தில் எடுக்காது, பாய்ந்து தன் மகன் இருக்கும் அறையை நோக்கி ஓடுவதற்குள், அவளை மின்னல் விரைவில் பற்றிக்கொண்டான் கிறிஸ்டீன்.

“என்னடி… என்னிடமே ஆட்டம் காட்டுகிறாயா?” சீறியவன், அவள் தன்னைக் காயப்படுத்திய ஆத்திரத்தில் அவளுடைய கன்னத்தை நோக்கிப் பலமாக ஒரு அறை கொடுக்க, அவன் கொடுத்த அறையில் உயிர் துடிக்கச் சுழன்று சென்று அங்கிருந்த சுவரோடு மோதி நின்றாள் திகழ்வஞ்சி. அவள் மோதிய வேகத்தில் ஏற்பட்ட சத்தத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஆராவமுதன் திடுக்கிட்டு விழித்தான்.

அவன் அறைந்த வேகத்தில் உதடுகள் கிழிந்து இரத்தம் வர, அவளுடைய கண்களும் காதுகளும் அதன் புலன்களை இழந்து மங்கத் தொடங்கின. அந்த அரக்கனின் ஒற்றைக் கரமோ, அவளுடைய கூந்தலைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தது.

“என்னடி…? எனக்குப் படம் காட்டுகிறாயா?” என்றவன், அவளைச் சுவரோடு தள்ளிவிட்டுத் தன் பான்ட் பின்பக்கமாகச் செருகியிருந்த கத்தியை வெளியே எடுக்க, அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு சர்வமும் நடுங்கியது.

“கிறிஸ்டீன்… நா.. நான் செய்தது தவறுதான். அதற்கு உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ப்ளீஸ்… என்னை விடு… ” என்று கெஞ்சியவளை அவன் இரசித்துப் பார்த்தான்.

“உன்னை விடுவதா? நோ பேபி… எனக்குத் துரோகம் செய்யும் யாரும் உயிரோடு இருக்கக் கூடாது…” சொன்னவனிடம், சிறைபிடிக்கப்பட்ட புறாவாக அவள் துடிக்க, அவனோ விகாரமாகச் சிரித்தவாறு, அவளைச் சுவரோடு தள்ளி, அவளை அசையவிடாது அழுத்திப் பிடித்து, அவளுடைய இடது மார்பில் கத்தியை இறக்க, அந்தக் கூரிய கத்தியோ வெண்ணெய்யில் வழுக்குவது போல அவளுடைய கீழ் மார்பில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது.

அவளால் வலியில் கத்தக் கூட முடியவில்லை. கத்தினால் ஆராவமுதன் எழுந்து கொள்வான். அவன் எழுந்தால் இவன் கவனம் குழந்தையின் பக்கம் செல்லும். அவள் இருக்கும் நிலையில் குழந்தையைக் காப்பாற்றவே முடியாது. உதடுகளை அழுந்த மூடியவாறு சத்தம் வெளியே வராது காத்துக் கொண்டவளுக்கு முதன் முறையாக அபராசிதனின் நினைவு வந்தது.

அன்று அவன் கேட்டபோதே குழந்தையை அவனிடம் கொடுத்திருக்கலாமோ. ஐயோ, ஆரா எழுந்தால் என்ன செய்வது? இவன் கவனம் குழந்தையிடம் போனால் இவளால் காப்பாற்ற முடியுமா? கடவுளே… எனக்கு என்ன ஆனாலும் சரி, என் குழந்தையை பத்திரமாகக் காத்துக் கொள்… இவள் தத்தளித்து நின்ற நேரம், அவளுடைய அச்சத்தை உண்மையாக்குவது போல, ஆராவமுதனின் அழுகுரல் அறையிலிருந்து கேட்டது.

அந்த சத்தத்தில் திகழ்வஞ்சியின் முகம் வெளிறிப் போக. கிறிஸ்டீனோ அந்த அறையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான். பின் திரும்பி இவளைப் பார்த்து இளித்தான். அந்த இளிப்பே அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அவளுக்கு உணர்த்த,

“நோ… நோ… கிறிஸ்டீன்… பிளீஸ்… உனக்கு… உனக்கு நா.. நான்தானே வேண்டும்… எடுத்துக் கொள்… கு…குழந்தையை…” அவளுக்குப் பேசக் கூட முடியவில்லை.

ஆனால் அவனோ அவளுடைய திணறலையும் தவிப்பையும் இரசித்துப் பார்த்தவாறு, கத்தியை வெளியே எடுத்து, அதில் தோய்ந்திருந்த இரத்தத்தைப் பரவசத்தோடு பார்த்தான். பின் முகர்ந்த பார்க்க இரத்த வாடை அவனை மேலும் போதை கொள்ளச் செய்தது போல.

“ம்… உன் இரத்தத்தில் கூட, இனிப்பு வாசனைதான் வருகிறது…!” என்றான் விகாரமாக. பின் குழந்தை அழும் குரல் பக்கம் கவனத்தைச் செலுத்தி,

“உன் பையன்தானே அது…?” என்று கேட்க ஆடிப்போனாள் திகழ்வஞ்சி. அந்த நேரம் குருதி அவளுடைய ஆடை முழுவதையும் நனைத்தவாறு பொங்கி ஊற்றுவதை உணர்ந்தவளுக்குத் தேகம் நடுங்கியது. இந்த நிலையில் அவள் எப்படிக் குழந்தையைக் காப்பாள்? உடல் குளிர்ந்து பலவீனமாவதை உணர்ந்தவள், விலக முயன்றவனின் ஷேர்ட்டைச் சட்டென்று பற்றி,

“ஒரு அடி… ஒரு அடி என் குழந்தையை நோக்கி நீ வைத்தாலும், உன்னைக் கொன்றுவிடுவேன்…” என்றாள் சீற்றமாக. அதைக் கேட்டவன், நகைத்தான்.

“ரியலி… அதையும் பார்க்கலாமா?” என்றவன் அவளைத் தள்ளிவிட்டு அறை நோக்கி நகர, இவளோ பதறியவாறு அவனைத் தடுக்க முயன்ற நேரம், இரத்தம் படிந்த கரத்தால், கதவுக் குமிழைத் தொட்டான் கிறிஸ்டீன்.

“நோ… கிறிஸ்டீன்…” அவள் அந்த நிலையிலும் அவனிடம் கெஞ்ச, திரும்பிப் பார்த்தான் அந்த இராட்சதன்.

வலியிலும் இயலாமையிலும் சுருண்டு நிற்கும் அவளை இளக்காரமாகப் பார்த்தவாறு, கதவைத் திறந்து அறைக்குள் நுழைய முயன்ற வேளை, இறைவன் துணைக்கு வந்தானோ…? வீட்டு அழைப்பு மணியின் சத்தம் பலமாகக் கேட்டது. அந்தச் சத்தத்தில் ஒரு கணம் அசைவற்று நின்றான் கிறிஸ்டீன்.

இந்த நேரத்தில் யார்? அதுவரையிருந்த ஆக்ரோஷம் காணாமல் போக, இப்போது பதட்டம் தொற்றிக்கொண்டது அவனுக்கு.

திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்தவன், மீண்டும் திரும்பிக் கதவைப் பார்த்தான். திகழ்வஞ்சியும் கதவைத்தான் பார்த்தாள். அதுவரை இருந்த பயமும், பதட்டமும் வடிந்து செல்ல நிம்மதியோடு கதவைப் பார்த்தவளுக்கு மறுபக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தற்காலிகமாக அவளைக் காக்க வந்த கடவுள் போலவே அவளுக்குத் தோன்ற, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவளாகத் தரையில் மடங்கிச் சரிந்தாள்.

இப்போது அழைப்பு மணியை அடித்த கையோடு கதவு தட்டும் சத்தம் கேட்க, அதுவரை கிறிஸ்டீனை விட்டுச் சென்றிருந்த அச்சம் மீண்டும் அவனைப் பலமாகச் சூழ்ந்து கொண்டது. அல்லது அவன் அடித்த போதையின் வேகம் குறைந்ததா தெரியவில்லை.

தற்காலிகமாக ஆராவமுதனை மறந்தவனாகப் பதட்டத்தோடு அங்கும் இங்கும் பார்த்தான். முதலில் அங்கிருந்து தப்ப வேண்டும். அது மட்டும்தான் அவனுடைய புத்திக்குத் தெரிந்தது. மீண்டும் அழைப்பு மணியின் ஓசையில், உடல் தூக்கிப் போட, பதட்டத்தோடு அங்கும் இங்கும் நடந்தான்.

அந்த வீட்டுக்குப் பின்பக்கக் கதவு எதுவும் இல்லை என்பதால், தப்புவதாக இருந்தால் முன்பக்கமாகத்தான் தப்ப முடியும். ஆனால் முன்னால்தான் ஆள் இருக்கிறதே. வேக நடையோடு முன் கதவை நெருங்கியவன் துவாரத்தின் ஊடாக வெளியே யார் நிற்பது என்று பார்த்தான். யாரோ ஒருத்தன், கையில் டிம்ஹாட்டன் காப்பியை ஏந்தியவாறு நின்றிருந்தான்.

பெண்களிடம் காட்டத் தெரிந்த வேகத்தை, ஆணிடம் காட்டத் தெரியாத அந்தக் கோழைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

திரும்பி திகழ்வஞ்சியைப் பார்க்க, அவளோ தரையில் சரிந்து கிடந்தாள். குருதி வேறு தரையை நனைக்க ஆரம்பித்திருந்தது. நிச்சயமாக அவள் தப்ப வழியில்லை. உறுதி செய்தவன், அதற்கு மேல் தாமதிக்காமல், கண்ணிமைக்கும் நொடியில், முன் கதவைத் திறந்தவன், என்ன ஏது என்று யோசிப்பதற்குள்ளாக வாசலில் நின்றிருந்தவனை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து மாயமாக மறைந்து போக, கிறிஸ்டீனால் தள்ளிவிடப் பட்ட அபராசிதனோ, கரத்திலிருந்த காப்பிக் குவளைகளைக் கைவிட்டு, தரையில் கிடந்த பூஞ்சாடி மீது மோதுப் பட்டுச் சமநிலை தவறித் தரையில் விழுந்தான்.

அவனுக்கு ஒரு சில விநாடிகள் தேவைப்பட்டன நடந்ததைக் கிரகித்துக் கொள்ள.

“வட் த XXXXX” சீற்றத்தோடு தள்ளிவிட்டு ஓடிய கயவனைத் தேடியவன் அவன் காணாமல் போகக் குழப்பத்தோடு வீட்டிற்குள்ளே பார்த்தான்.

ஒருத்தன் வேகமாக உள்ளே இருந்து பாய்ந்ததும், குழந்தையின் வீரிட்ட அழுகையும் எதுவோ சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்த, மறு கணம் துள்ளி எழுந்து வீட்டிற்குள் பாய்ந்தான்.

உள்ளே பாய்ந்தவன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போய்ச் சிலையாக நின்றிருந்தான்.

பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. ஆரா ஏன் இப்படி அழுகிறான்? திகழ்வஞ்சி எங்கே? பதட்டத்தோடு அங்கும் இங்கும் பார்க்கத் தரையில் படர்ந்திருந்த இரத்தக் கறை அவனை அதிர வைத்தது. அந்த இரத்தக்கறை வந்த திசையை ஏறிட்டவன் மேலும் துடித்துப் போய் நின்றான்.

அங்கே சுவரின் ஓரமாகத் தரையில் விழுந்து கிடந்தாள் திகழ்வஞ்சி.

“தி… திகழ்…!” பதறியவாறு அவளை நோக்கிப் பாயும்போதே பான்ட் பாக்கட்டிலிருந்த தன் கைப்பேசியைக் கையில் எடுத்துக்கொண்டான் அபராசிதன். அவளை ஓரெட்டில் நெருங்கியவன், கையிலிருந்த கைப்பேசியை உயிர்ப்பித்து, 911 ஐ அழுத்திக் காதில் வைத்து

“இட்ஸ் எமேஜன்சி…!” என்று அவன் சொல்லும் போதே, மெல்ல மெல்ல மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தவள், அவனுடைய குரலில் புத்துயிர் பெற்றவளாக மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தாள். இல்லை பார்க்க முயன்றாள்.

கடவுளே மனித உருக்கொண்டு அவளுடைய கண்முன்னால் வந்து நிற்கிறதோ? அதுவரையிருந்த அழுத்தமும், வேதனையும், வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போக, தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி எழுந்தவள் முடியாமல் அவனை நோக்கிச் சரிய, மின்னலென அவளைத் தாங்கிக்கொண்டான் அபராசிதன்.

அவன் மீது சரிந்தவளோ இரத்தக் கறை கொண்ட தன் கரங்களால் அவனுடைய ஷேர்ட்டைக் கொத்தாகப் பற்றி, அவனைத் தன்னை நோக்கி இழுத்து அவன் மார்பில் மொத்தமாகச் சாய்ந்து அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை சீற்றமாக ஒருவித வலி ஒலியுடன் வெளிவிட்டாள்.

அவளுடைய அந்த ஒலிக் குறிப்பில் ஆடிப் போனான் அந்த ஆண்மகன். தன்னை மறந்து தன் மீது சரிந்தவளை இறுக அணைத்துக் கொண்டவன், கைப்பேசியில் விபரத்தைச் சொல்லிவிட்டு மீண்டும் கைப்பேசியை பான்ட் பாக்கட்டிற்குள் திணித்து விட்டு,

“தி… திகழ்…?” என்றவனின் இதயம் பலமாகத் துடித்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. உயிரின் துடிப்பை உணர்ந்து கொண்டவனாக அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு நகர்ந்தவனின் கால்கள் சகதியில் பட்டது போலத் தோன்றக் குனிந்து பார்த்தான். அங்கே வடிந்து கிடந்த இரத்தத்தைக் கண்டு, அதிர்ந்து போனான்.

நெஞ்சம் பதற, அவளை ஏந்திச் சென்று நீளிருக்கையில் கிடத்திவிட்டு அவள் அணிந்திருந்த கருநீல டீஷேர்ட்டைப் பற்றி ஒரு இழுவை இழுக்க, அது இரண்டாகக் கிழிந்து விலகியது. அங்கே இடது மார்புக்குக் கீழே ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து இரத்தம் பொங்கி வழிவதைக் கண்டவன். மறு கணம் மருத்துவனாக மாறினான்.

கண்ணிமைக்கும் நொடியில் இரத்தபோக்கை நிறுத்துவதற்காகத் தன் ஷேர்ட்டைக் கழற்றி காயத்தின் மீது அழுத்திப் பிடிக்கும் போதே, வெளியே அவசர மருத்துவ வண்டியின் ஒலி காதைப் பிளந்தது.

 

What’s your Reaction?
+1
24
+1
6
+1
1
+1
0
+1
13
+1
3
Vijayamalar

View Comments

Recent Posts

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 27/28

(27) சுவைக்க அறுசுவையுணவு இருக்கும்போது யாராவது அதைத் தவிர்த்து விரதம் இருப்பார்களா என்ன? அந்த ஆண்மகனுக்குத்தான் எத்தனை வேட்கை எத்தனை…

3 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 10/11

(10)   எத்தனை நேரம் உறங்கிக் கிடந்தாளோ. விழிகளை மெதுவாகத் திறந்தாள் திகழ்வஞ்சி. இதுவரை அழுத்தியிருந்த பாரமும் காய்ச்சலும் சற்றுக்…

4 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 25/26

(25) அப்பப்பா... இதழ் தீண்டல் அத்தனை இன்பமாகவா இருக்கும்... அவை சாவகாசமாகத் தன் இணையிடம் குசலமல்லவா விசாரிக்கின்றன. குசலம் விசாரித்ததோடு…

5 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 9

(9) அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால்…

6 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 23/24

(23) தன் அறைக்குள் நுழைந்து, ஆயாசத்தோடு படுக்கையில் சரிந்தபோது, அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். ரஞ்சன்தான் எடுத்திருக்கிறான். பதட்டத்தோடு…

7 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 8

(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால்…

1 week ago