எத்தனை நேரம் உறங்கிக் கிடந்தாளோ. விழிகளை மெதுவாகத் திறந்தாள் திகழ்வஞ்சி. இதுவரை அழுத்தியிருந்த பாரமும் காய்ச்சலும் சற்றுக் குறைந்திருப்பது போலத் தோன்றினாலும், உடல் வலி இன்னும் இருக்கவே செய்தது.
அந்த நிலையிலும் மகனின் நினைவு வர வேகமாக எழுந்தமர்ந்தவளின் தலை சுற்றியது. தலையைப் பற்றிக்கொண்டவளின் தேகம் குளிர்ந்தது. அந்த நிலையிலும் ஆராவின் காலியான உணவு டப்பா நினைவுக்கு வர, எழுந்தாள் திகழ்வஞ்சி. உடல் சற்றுத் தள்ளாடியது.
ஆனாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு வெளியே வந்தவளின் விழிகளில் முதலில் தட்டுப்பட்டது அபராசிதன்தான். அவனைக் கண்டதும் அதிர்ந்து போனாள் அவள். இவன் இங்கே என்ன செய்கிறான்? எதற்காக வந்தான்? பதட்டத்தோடு, அவனை நெருங்கியவள்,
“நீ… நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றாள் தந்தியடித்த குரலில்.
அதுவரை விழிகளை மூடியிருந்தவன் அவளுடைய குரல் கேட்டதும், மெதுவாக இமைகளைப் பிரித்துப் பார்த்தான்.
அங்கே வாசல் கதவைப் பற்றியவாறு முகம் வெளிற, நின்றிருந்தவளைக் கண்டதும், காரணமின்றி இதயத்தில் இனம்புரியாத அவஸ்தை ஒன்று எழுந்தது. ஆனாலும் அதை ஓரம் தள்ளியவன், முகத்தைக் கரங்களால் தேய்த்து விட்டு எழுந்து நின்றவாறு அவளை பார்த்தான்.
முன்னிரவு அவன் உறங்கவில்லை போல. விழிகள் சிவந்திருந்தன.
“ஒரு நிமிஷம் இரு… வருகிறேன்…” என்றவன் ஏதோ தன் வீடு போல நடந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தான். ஐந்து நிமிடத்தில் முகத்தை கழுவிவிட்டு வெளியே வர, முன்னர் சிவந்திருந்த விழிகள் இன்னும் பயங்கரமாகச் சிவந்திருந்தன. இப்போது அவளை நோக்கி வந்தவன்,
“காய்ச்சல் எப்படி இருக்கிறது?” என்றான் விசாரணையாக. விசாரிப்பவனிடம் எப்படி முகத்தைத் திருப்புவது.
“பரவாயில்லை…”
“குட்…” என்றவன் தனக்குப் பக்கத்திலிருந்த இருக்கையைக் காட்டி,
“உன் கூடக் கொஞ்சம் பேச வேண்டும்… உட்கார்” என்றான்.
அவளிருந்த நிலையில் அமராமல் முடியாது என்பதால், வந்து அமர்ந்தவள்,
“நீ… நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்…” கேட்டவளை நிதானமாகப் பார்த்தான் அபராசிதன்.
“என்ன செய்கிறேன் என்றால்? கதவைக் கூட மூடாமல் தரையில் மயங்கிக் கிடந்தாய். அப்படியே விட்டு விட்டுப் போக முடியவில்லை… அதுதான் நீ விழிக்கும் வரைக்கும் காத்திருந்தேன்” என்றவன் இருக்கையில் சாய்வாக அமர்ந்து, சற்று நேரம் எதையோ யோசித்தான். பின் நிமிர்ந்த அவளைப் பார்த்து,
“இங்கே பார்… நீ இயலாத நிலையில் இருக்கும் போது இப்படிக் கேட்பது எனக்கும் சங்கடமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை… என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்றான் நேரடியாக.
அவன் எதைக் கேட்கிறான் என்று புரியத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு என்ன பதிலைச் சொல்வாள்? அவள் நிலையே இடியப்பச் சிக்கலில் இருக்கிறது. இதில் எதையென்று உரைப்பாள். பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள் திகழ்வஞ்சி.
அவளால் ஆராவமுதனை விட்டுப் பிரிந்து இருக்கவும் முடியாது. அதே நேரம் பழைய வேலையில் சேரவும் முடியாது. எந்தப் புதிய வேலையும் இப்போதைக்குக் கிடைக்கும் போல இல்லை. வேலையில்லாமல் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் எதையும் சமாளிக்க முடியாது. அது தவிர ஆராவமுதனின் செலவே தனி. இதையெல்லாம் அவளால் அடுத்த வேலை கிடைக்கும் வரை தள்ளிப்போட முடியாது. ஆக, வரும் நாட்கள் பொருளாதார, உடல், மன அடிப்படையில் பெரும் சிக்கலாகவே இருக்கப் போகின்றன. அதையும் தாண்டி அந்தக் கிறிஸ்டீன். வேளை கெட்ட நேரத்தில் அந்த கிறிஸ்டீனின் நினைப்பு வந்து அவளை உதறச் செய்தது. இவை அனைத்தையும் விட அவளுக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். நான் ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக் கூடாது? எனக்குச் சாதகமாக மாற்றக் கூடாது? சற்று நேரம் ஏதேதோ யோசித்தாள் திகழ்வஞ்சி.
அதுவரை பயத்தில் தளர்ந்திருந்த முகம், சட்டென்று ஒளி பெற்று மலர்ந்தது. இப்போது நிமிர்ந்து அவனைத் தளராது பார்த்தாள் திகழ்வஞ்சி.
“சரி நீங்கள் ஆராவமுதனை அழைத்துச் செல்வதற்கு நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை…” என்றாள் நிறுத்தி நிதானமாக.
அவள் அழைத்துச் செல்லலாம் என்றதும் மலர்ந்த முகம், அவள் ஒரு நிபந்தனை என்றதும் இறுகியது.
“பணம் தான் எவ்வளவாக இருந்தாலும் தருவதாகக் கூறியிருந்தேனே…” என்றவனை வெறித்தவள்,
“நிபந்தனையென்றால் அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா மிஸ்டர் அபராசிதன்…?” என்றவளை ஒரு மாதிரிப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தான் அபராசிதன்.
சிறுத்தைப் புலிகள் மட்டுமில்லை, கழுதைப் புலிகளும் தங்கள் புள்ளிகளை மாற்றுவதில்லையே. தோரணையாகக் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அமர்ந்தவன்,
“என்ன நிபந்தனை…?” என்றான் அலட்சியமாக.
“ஆராவோடு நானும் வருவேன்…” என்றாள் தெளிவாக.
“வட்…?” கிட்டத்தட்ட அலறிவிட்டான் அபராசிதன். அவனுக்குக் கோபத்தில் உடல் இறுகியது. இவளை அவன் கூட அழைத்துச் செல்வதா? நோ வே… பலமாகத் தலையை மறுப்பாக அசைத்தவன்,
“அதற்கு வாய்ப்பே இல்லை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“அப்படியென்றால், ஆரா எங்கும் வர மாட்டான்…” தெளிவாக வந்தது அவளிடமிருந்து.
“என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? நான் எப்படி உன்னை அழைத்துச் செல்வது… நோ…?” வெறுப்போடு அவன் சொல்ல, இப்போது அவள் தன் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“உங்களுக்கு ஆரா வேண்டும் என்றால், அவனுடைய அன்னையாக நானும் உங்களுக்குத் தேவை…” என்றவளை முகம் இறுகப் பார்த்தான் அபராசிதன்.
“ஆர் யூ கிரேசி…? ஆர் யூ மாட்? என்னுடைய குடும்பத்திற்கென்று தனி மரியாதையே உண்டு. நீ ஒரு…” என்றவன் முடிக்காமல் பற்களைக் கடித்து வார்த்தைகளை விழுங்கிவிட்டு, “நோ… அதற்கு வாய்ப்பேயில்லை. அதை விட வேறு எதையாவது கேள்…? இது மட்டும் முடியாது” என்றவனை இளக்காரமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“இந்தளவு வெறுப்பாகப் பதில் சொல்வதற்கு என்னை திருமணம் செய்யச் சொல்லியா உங்களிடம் கேட்டேன்?” என்று அவள் புருவங்களை உயர்த்திக் கேட்க, அவனோ ஆத்திரத்தோடு இருக்கையை விட்டு எழுந்தே விட்டான்.
ஓங்கி அவளை அறைய எழுந்த உந்துதலைப் பற்களை கடித்து அடக்கியவன், கரங்களை பான்ட் பாக்கட்டிற்குள் திணித்துவிட்டு, எதையோ சொல்வதற்கு வாய் எடுத்தான். ஆனால் அவனைத் தாண்டி அதீத காரமாக வார்த்தைகள் வர முயல, உடனே வாயை மூடிக்கொண்டான். வார்த்தைகளைக் கொட்டுவது சுலபம். அள்ள முடியாது. திரும்பவும் வாயைத் திறக்க, அதே போலத் திரும்பவும் சீற்றம் நிறைந்த கொடிய வார்த்தைகள்தான் வர முயன்றன. சிரமப்பட்டுப் பற்களைக் கடித்துத் தன்னை அடக்கினான்.
ஆனால் அவளோ அவனை அண்ணாந்து பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டு இருக்கையில் சாய்வாக அமர்ந்து அவனை நிதானமாகப் பார்த்தாள்.
“கூல் பாஸ்…! எதற்கு இத்தனை கோபம்…? இங்கே பாருங்கள்… ஆராவமுதன் என் மகன். நான் சுமந்து பெற்ற பிள்ளை. அவனுக்கு இப்போதுதான் ஒரு வயது. அவனுக்கு நான் வேண்டும். அவனை நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக எல்லாம் தூக்கிக் கொடுத்துவிட முடியாது. அவன் போகும் இடம், வாழும் இடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா, அவனுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை நான் பார்க்க வேண்டும்… யார் கண்டா…? நீங்கள் கூடக் குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கைக்கூலியாக இருக்கலாம்…” அவன் சொல்ல அதீத சீற்றத்தில் அவனுடைய உடல் இறுகிப் போனது. தன்னை மறந்து அவளை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்தவன்,
“ஹெள டெயர் யு…? நான் யார் என்று உனக்கு…” அவன் முடிக்க முதல் கரத்தைத் தூக்கி அவனுடைய பேச்சைத் தடுத்தவள்,
“போதும் சார்… நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆராவமுதன் உங்களோடு வரவேண்டும் என்றால் நானும் வருவேன். அதற்குச் சம்மதம் என்றால் சொல்லுங்கள், இல்லை என்றால்…” என்றவளிடம் மறுத்துப் பேச அவன் வாயைத் திறக்க, மீண்டும் அவனுடைய பேச்சைத் தடுத்தவள்,
“நீங்கள் எனக்கு இருபத்து நான்கு மணி நேரம் கொடுத்தீர்கள். நான் உங்களுக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் கொடுக்கிறேன்… யோசித்துப் பதிலைச் சொல்லுங்கள்… ஆனால் ஒன்று மிஸ்டர் அபராசிதன், நான் இல்லாமல் என் மகன் உங்கள் கூட வர மாட்டான்… ஆரா உங்களுக்குத் தேவை என்றால், நானும் உங்களுக்குத் தேவை” என்றவளை வெறுப்போடு பார்த்தான் அபராசிதன். ஆனாலும் எதுவும் பேச முடியாத நிலை.
பேசும் இடத்தில் அவள் இப்போது இருக்கிறாள். கேட்கும் நிலையில் அவன் இருக்கிறான். ஆராவுக்காக அதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.
பற்களைக் கடித்தவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. நிச்சயமாக அவளை அவன் கூட அழைத்துப் போக முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம், அவள் பக்கத்தில் இருக்கும் போது, இவன் தொலைந்து போகிறான். தன் சுயம் இழக்கிறான். அவள் ஏறிட்டுப் பார்க்கும் போது, இதயம் அவளுக்காக இரக்கம் கொள்கிறது. தவிக்கிறது. இது எதுவும் நல்லதிற்கில்லை. ம்கூம்… அவள் கூட இருந்தால், அமலனின் நிலைதான் அவனுக்கும். சுலபமாகவே அவளுடைய வலையில் விழுந்து போவான். அதைக் கண்டுகொண்டுதான் இப்படிக் கேட்கிறாளோ யாருக்குத் தெரியும்.
“இதோ பார்…” அவன் மறுப்பாக எதையோ கூற வர, எழுந்து நின்றாள் திகழ்வஞ்சி. அவளையும் மீறி உடல் தள்ளாட, இருக்கையைப் பற்றிக்கொண்டவள் முயன்ற அளவு அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“யோசியுங்கள் மிஸ்டர் அபராசிதன்… இப்போது அவசரப் பட்டு எந்த பதிலும் சொல்லவேண்டாம். நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் பதிலைச் சொல்லுங்கள் போதும். என்றவள் தளர்வோடு நடந்து சென்று, அங்கிருந்த ‘ஸ்டிக்கி நோட்’ ஒன்றில் தன் கைப்பேசி இலக்கத்தை எழுதியவள், அதைக் கிழித்து அவனிடம் நீட்டி,
“இது என் தொலைப்பேசி இலக்கம். உங்கள் பதிலை அழைத்துச் சொன்னால் கூடப் போதுமானது…” என்றதும், அவளை முறைத்தவாறே அதைப் பறித்து எடுத்தான் அபராசிதன்.
“எத்தனை முறை யோசித்தாலும், உன்னை என் கூட அழைத்துப் போக முடியாது திகழ்வஞ்சி…” அவன் உறுதியாகச் சொல்ல,
“அப்படி என்றால், ஆராவை மறந்து விடுங்கள்…” என்றாள் இவளும் தெளிவாக. அவன் பதிலுக்கு எதையோ சொல்லவர,
“இதோ பாருங்கள் அபராசிதன்… நீங்கள் எப்படியோ, என்னால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அந்தளவு களைப்பாக இருக்கிறது. எனக்கு ஓய்வு தேவை. உங்களுக்கு யோசிக்கத் தேவையான அளவு நேரம் கொடுத்து இருக்கிறேன். இந்த அவகாசம் உங்களுக்கு மட்டுமில்லை. எனக்கும் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளுங்கள்…” அவள் சொல்ல, கொஞ்சம் கோபம் தணிந்தான் அபராசிதன்.
அவளுடைய நிலை அவனுக்குப் புரியவே செய்தது. இந்த நிலையிலும் இத்தனை திடமாக அவள் பேசுவதே அதிசயம்தான்.
“இந்தக் காய்ச்சலோடு ஆராவமுதனை எப்படிப் பார்த்துக் கொள்வாய்…?” சந்தேகமாகக் கேட்டான் அபராசிதன்.
“ஆரா பிறந்த நாள் தொட்டு இன்று வரைக்கும் யாருடைய உதவியும் இல்லாமல்தான் என் குழந்தையை வளர்த்து வருகிறேன். இதோ இப்படி உடல்நிலை காலநிலைக்கு ஏற்ப சற்றுப் பிரச்சனை கொடுத்த போதும் யாருடைய உதவியையும் நாடியதில்லை. இனியும் நாடத் தேவையிருக்காது. நீங்கள் கிளம்புங்கள்…” என்று அழுத்தமாகச் சொன்னவளை முழு நிமிடம் நிதானமாகப் பார்த்தான் அபராசிதன்.
அவனுக்கும் அங்கே தங்க முடியாத நிலை. அவன் எடுத்துக் கொண்ட விடுப்பு முன்தினத்தோடு முடிந்து விட்டது. நாளை காலையில் முக்கியமான சத்திர சிகிச்சை வேறு இருந்தது. அதனால் அன்று மாலையே திரும்ப டொரன்டோ போயாகவேண்டிய நிலைமை. இதில் இவள் கூட வாதாட நேரமும் இல்லை. சத்திர சிகிச்சை முடிந்த கையோடு ஒரு சில நோயாளர்களைப் பார்க்கவேண்டிய அவசியம். இதில் யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது? நினைக்கும் போதே ஆயாசமானது அவனுக்கு.
அவன் நினைத்தது போல ஆராவமுதனை அழைத்துச் செல்வது அத்தனை சுலபமில்லை என்று புரிந்தது. ஆராவமுதனுக்காக அவளையும் தன்கூட அழைத்துச் செல்வது பற்றி அவனால் யோசிக்கவே முடியவில்லை. சட்டத்தின் உதவியை நாடாமல் பணத்தை விட்டெறிந்து குழந்தையை அழைத்துச் செல்லலாம் என்று பார்த்தால், இவள் இத்தனை முட்டுக்கட்டை போடுகிறாளே.
இவனாலும் அவளை எதிர்த்துக் குழந்தையை அழைத்துப் போக முடியாது. அவள் காவல்துறையின் உதவியை நாடினால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஆராவமுதனை மொத்தமாக மறந்துவிட வேண்டியிருக்கும். இதற்கு வேறு என்ன வழி இருக்கிறது என்று முதலில் யோசிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் முடிவு எடுக்க முடியும். பெருமூச்சுடன், நடந்து சென்று தன் பெட்டியை எடுத்தவன், அதைத் திறந்து அதிலிருந்த குப்பி ஒன்றை எடுத்து மேசையில் டொக் என்று வைத்தான்.
அவள் என்ன என்று பார்க்க, “ஐபோபுரோஃபின் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு மாத்திரைகள் வீதம் எடுத்துக் கொள்…” என்றவன், அவள் முகம் பார்க்காமலே வெளியேற, இவளோ அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்த தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் தானும் வருவதாகச் சொன்னது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் அதை விட அவளுக்கும் வேறு வழியும் தெரியவில்லை. மந்தமான புத்தி வேறு ஆக்கப்பூர்வமாக எதையும் யோசிப்பதாக இல்லை. இப்போதிருக்கும் அவளுக்கான ஒரே வழி, அவன் கூடச் செல்வதுதான். யோசனையோடு விழிகளை மூட, புத்தியோ உறக்க நிலைக்கு அவசரமாகச் சென்றது.
இரண்டு நாட்கள் கடந்து சென்றன.. இப்போது திகழ்வஞ்சிக்கு காய்ச்சல் ஓரளவு விட்டிருந்தது. கூடவே தொண்டை வலியும் மட்டுப் பட்டிருந்தது. பழையது போல உடல் கலலக என்று இல்லா விட்டாலும், சோர்வு சற்று விலகி, இயங்கும் அளவுக்கு நன்றாகியிருந்தது.
அன்று காலை எழுந்ததுமே, தனக்குத் தேநீர் வார்த்துக் கொண்டு, கணினியின் முன்னால் வந்தமர்ந்தவள், வேலைக்கு விண்ணப்பம் போடத் தொடங்க அவளுடைய கைப்பேசி அழைத்தது.
அவளையும் மீறி இதயம் துள்ளிக் குதிக்கப் பக்கத்திலிருந்த கைப்பேசியை எட்டிப் பார்த்தாள். எங்கே அது கிறிஸ்டீனாக இருக்குமோ என்கிற அச்சத்தில் வியர்த்துக் கொட்டியது.
நல்லவேளை அது கிறிஸ்டீன் அல்ல. நிம்மதியோடு கைப்பேசியை எடுத்தவள், அதை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,
“ஹலோ…” என்றாள்.
ஒரு சில விநாடிகள் அமைதி காத்த பின்,
“நான்தான் பேசுகிறேன்..” என்றான் அபராசிதன். காரணமின்றியே அவனுடைய ஆண்மை மிக்க குரலைக் கேட்டவளுக்கு இதயம் படபடத்தது. அவள் கொடுத்த நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு முடிய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. அதற்குள் அவன் அழைத்திருக்கிறான் என்றால், அவளுடைய நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு விட்டானா? நம்பிக்கை ஊற்றெடுக்க,
“சொ… சொல்லுங்கள்… என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்” என்றாள் இவள்.
“தயவு செய்து புரிந்து கொள்… என்னால் உன்னை இங்கே அழைத்து வர முடியாது… அதனால் ஒரு முறை…” அவன் முடிக்கவில்லை,
“தென் குட் லக்…” என்றவள் சட்டென்று அவனுடைய அழைப்பைத் துண்டித்துவிட்டு, திரும்பவும் அவன் அழைத்துத் தொல்லை கொடுப்பான் என்கிற எண்ணத்தில் கைப்பேசியை அணைத்தும் வைத்துவிட்டாள்.
அங்கே மறு பக்கம் அபராசிதனின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியிருந்தது.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. விபரமறிந்த ஈஷ்வரி ஒரேயடியாக அவள் இங்கே வரக் கூடாது என்றுவிட்டார். ஆராவமுதனை மட்டும் எப்படி அழைத்து வருவது என்று யோசி என்று தம்பிக்கு முடிவாகச் சொல்லிவிட, இவனும் அந்த முடிவில்தான் இருந்தான். எதற்கும் சட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்பதால், கனடாவின் புகழ் பெற்ற சட்டத்தரணியான அநேகாத்மனோடு பேசியிருந்தான் அபராசிதன்.
அவருடன் பேசியதிலிருந்து குழந்தையைப் பெற்ற தாயிடமிருந்து பிரிப்பது அத்தனை சுலபமல்ல என்றுதான் சொன்னார். ஒரு வேளை தாய் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்து வழக்குப் பதிந்தால், அது இவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாகிப் போகும் என்பதால் மிகக் கவனமாகக் கையாளவேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
ஒரு வேளை இவர்களின் தரப்பிலிருந்து குழந்தையின் தாய் குழந்தையை வளர்க்கத் தகுதி அற்றவள் என்பதை நிரூபித்தால் கூட, குழந்தை இவர்களுடைய பொறுப்பிற்கு உடனே வராது. முதலில் குழந்தை நல அமைப்பினரும் சமூக சேவகர்களும் குழந்தையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு இவன் நல்லவனா, இவனால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியுமா என்று ஆய்வில் இறங்கும். கூடவே தாயின் மீது சொன்ன குற்றம் சரியா என்றும் பரிசோதிக்கும். அது எல்லாம் ஆராய்ந்து முடிந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் குறைந்தது பல மாதங்கள் எடுக்கும். ஏன் வருடக் கணக்கும் எடுக்கலாம். அதுவரை குழந்தை வேறு எங்கோ தான் இருக்கும். இது குழந்தையின் மனநிலையை நிச்சயமாகப் பாதிக்கும்..” என்று அவனுக்குத் தெரிந்ததைத்தான் அவரும் கூறியிருந்தார்.
கடைசியாக அவர் சொன்ன அறிவுரை, “குழந்தையின் தாயுடன் பேசி அவருடைய மனத்தை மாற்றப் பாருங்கள். அதுதான் சிக்கலில்லாத ஒரே வழி…” என்றார். அத்தோடு,
“ஒரு வேளை குழந்தையின் தாய் சம்மதித்தால், குழந்தையை முதலில் உங்கள் குழந்தையாகத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்படிச் சட்டத்தின் உதவியோடு குழந்தையை தத்தெடுத்தால், உங்களுக்கும் ஒரு பிடிமானம் இருக்கும்.” என்றும் அவர் சொல்ல இவனுக்குச் சலிப்புதான் வந்தது.
சும்மாவே குழந்தையைக் கேட்டதற்கு மறுத்தவள், இவன் குழந்தையாகத் தத்தெடுக்கச் சம்மதிப்பாளா என்ன? எரிச்சலுடன் நினைத்தவன், கடைசியாக அவளிடம் பேசிப் பார்க்கலாம் என்று தான் அழைத்தான். ஆனால் அவள் கொஞ்சம் கூட இறங்கி வராது அவனுடைய அழைப்பையே துண்டித்து விட்டாளே.
கண் மண் தெரியாத கோபம் வந்தது அவனுக்கு. ஆனாலும் அடக்கிக் கொண்டான். இது சிந்தாமல் சிதறாமல் செய்யவேண்டிய காரியம். இதற்கு முக்கியமாகப் பொறுமை வேண்டும். ஆழ மூச்செடுத்து தன்னைச் சமப்படுத்தியவன், செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பவும் அவளை அழைத்துப் பார்த்தான். அவளுடைய கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.
திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தவனுக்கு அவனையும் மீறி ஒரு வித பதட்டம் தொற்றிக் கொண்டது. இவனுடைய அழைப்பை ஏற்கக் கூடாது என்பதற்காக அணைத்து வைத்திருக்கிறாளா? கோபம் வந்தது அவனுக்கு. திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்துத் தோற்றவன், அதற்கு மேல் பொறுமையில்லாமல், வினிப்பெக் செல்ல அடுத்த விமானம் எப்போது என்று பார்த்தான்.
மாலை ஐந்து மணி என்றிருந்தது. அப்போதே பறந்து சென்று அவளை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட ஆசை வந்தது. முடியாதே. எரிச்சலோடு ஐந்து மணி விமானத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு, தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.
இங்கே திகழ்வஞ்சியோ தனக்குப் பொருத்தமான வேலை கிடைக்குமா என்று தேடித் தேடி அதற்கு மனுப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த அபராசிதனை நினைக்கவும் நேரமில்லை. சிந்திக்கவும் பிடிக்கவில்லை.
அதற்கிடையில் ஈவாவை அழைத்து இன்று அவள் வீட்டில் இருப்பதால், ஆராவமுதனை அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு அவன் எழும் வரைக்கும் கணினியிலேயே கவனமாக இருக்க எட்டு மணியளவில் கண்களை விரித்தான் ஆராவமுதன்.
அதற்கு மேல் கணினியோடு மல்லுக்கட்டாமல் எழுந்தவள், குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள். குளிக்க வைத்து, டயப்பர் மாற்றி அவனைக் குழந்தையின் இருக்கையில் அமர்த்திவிட்டு, அவனுக்குரிய உணவுப் பெட்டியை எடுத்தபோதுதான் அவனுடைய உணவு முடிந்ததே நினைவுக்கு வந்தது.
முன்தினம் சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். உடல் உபாதையில் அவளால் போக முடிந்திருக்கவில்லை.
“XXXXX” முனங்கியவள் என்ன செய்வது என்று யோசித்தாள். அவசரத்திற்குப் பாலைக் காய்ச்சிப் பால் போத்தலில் ஊற்றிக் குழந்தையின் வாயில் திணித்துவிட்டு, பரபரவென்று குளித்துத் தயாராகி வந்தவள், பாலைக் குடித்து முடித்துப் போத்தலைத் தூர எறிந்துவிட்டு காலை உதைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்த ஆராவை அள்ளி எடுத்து தயாராக்கி வெளியே வந்தாள்.
காரில் குழந்தையின் இருக்கையில் மகனை அமர்த்திவிட்டு, வால்மார்ட்டை நோக்கி வண்டியை விட்டாள்.
ஒரு மாதத்திற்கு வேண்டிய குழந்தைக்கான உணவை வாங்கி தள்ளு வண்டியில் போட்டவள், ஆராவமுதன் ஆசைப்பட்ட விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி வண்டியில் போட்டவாறு குழந்தையோடு எதையோ செல்லமாகப் பேசிச் சிரித்தவாறு நடந்தவளை இரண்டு விழிகள் அகோரமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை அவளுடைய கெட்ட நேரம் கவனிக்கவில்லை.
வாங்கிய பொருட்களுக்குரிய பணத்தை கொடுத்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தவள், மதியம் எளிமையான சமையலை முடித்து விட்டுத் தானும் உண்டு, குழந்தைக்கும் ஊட்டிவிட்டு, குழந்தையை விளையாட விட்டவாறு தன் அறையை அடுக்கத் தொடங்கினாள் திகழ்வஞ்சி.
தினம் வேலைக்குப் போவதும் களைத்து விழுந்து வருவதும், குழந்தையைப் பார்ப்பதும் என்று நேரம் பறந்து போவதால், ஞாயிறுகளில்தான் வீட்டையே அடுக்குவாள் திகழ்வஞ்சி. மற்றும்படி அனைத்தும் போட்டது போட்டபடி இருக்கும். இப்போதுதான் அவளுக்கு வேலை எதுவும் இல்லையே. அதனால், அங்கும் இங்குமாக எறிந்து கிடந்த ஆடைகளைத் துவைக்கப் போட்டுவிட்டு, துவைத்துக் கூடையிலிருந்தவற்றை மடித்து அலமாரியில் வைக்கும்போது அதன் ஓரமாக இருந்த அந்தக் குறிப்பேடு இவளுடைய கண்களில் விழுந்தது.
அதுவரை இயந்திரக் கதியோடு ஆடைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தவளின் செயல் அப்படியே நிற்க, அந்தக் குறிப்பேட்டையே இமைக்காது பார்த்தாள் திகழ்வஞ்சி. பெரும்வலி நெஞ்சை அடைக்க, தன் கரத்திலிருந்த ஆடைகளை, அலமாரியில் திணித்துவிட்டு அந்தக் குறிப்பேட்டைக் கரங்களில் எடுத்துப் பார்த்தாள்.
அவளையும் மீறி அவளுடைய கரங்கள் நடுங்கின. அதை ஆசையோடு வருடிக் கொடுத்தவள், மெதுவாக அதைப் பிரிக்க அவளுடைய சகோதரியின் முத்து முத்தான கையெழுத்தில் அவளுடைய வலி, வேதனை, ஏக்கம், தவிப்பு என்று அனைத்தும் அங்கே கொட்டப்பட்டிருந்தன. பல முறை படித்துவிட்ட குறிப்பேடுதான். ஆனாலும் அப்போதுதான் புதிதாகப் படிப்பது போல நெஞ்சில் வேதனையும் வலியும் பலமடங்கு ஏறியிருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் அதைப் படிக்க முடியாமல் அடித்து மூடிய நேரம், அதிலிருந்து மூன்று புகைப்படங்கள் தரையில் விழுந்தன. குனிந்து அதை எடுத்துப் பார்த்தாள். அதில் ஒன்று அவளும் அவளுடைய சகோதரியும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படம். அது அவர்களின் பதினெட்டாவது வயதில் எடுத்தது.
அவர்கள் இருவருமாகச் சேர்ந்து கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் அதுதான். அதைப் பெரிதாக்கி சட்டம் போட்டுச் சுவரில் மாற்றுவதற்காகத் தனியாக எடுத்து வைத்தது. கடைசி வரை அது நிறைவேறாமலே போயிற்று. பெரும் வேதனையோடு தனக்கு அருகே நின்றிருந்த அந்த அழகியை வருடிக் கொடுத்தவள்,
“ஏன் என்னை மட்டும் தனியே இந்த உலகத்தில் தவிக்க விட்டுப் போனாய்? நீ இல்லாமல் எத்தனை சிரமப்படுகிறேன் தெரியுமா. ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். அம்மா அப்பா இருவரை இழந்த பிறகு உனக்கு நானும், எனக்கு நீயும் என்று இருந்தோமே. ஆனால், என்னை கொஞ்சம் கூடக் கருத்தில் எடுக்காமல் ஏன் போனாய்?” வேதனையுடன் கேட்டவள், வலி மாறாமலே அடுத்தப் புகைப் படத்தைப் பார்த்தாள். அது அவர்களின் அன்னையின் பழைய புகைப்படம். ஏக்கத்தோடு தாயைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் வெடித்து விடும் போல வலித்தது. ஒரு முறை அந்தப் புகைப்படத்தை மார்போடு அணைத்து விடுவித்தவள், அடுத்து கடைசியாக இருந்த புகைப்படத்தை முன்னே எடுத்து வந்தாள். அதில் அவளுடைய தாயும் தந்தையும் திருமணக் கோலத்தில் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தார்கள்.
அன்னை விவாகரத்து எடுத்த உடனே செய்த முதல் காரியம், அவர்களின் திருமணப் படங்கள் அனைத்தையும் எரித்ததுதான். கடைசியாக எஞ்சியது அந்தப் படம்தான். அதுவும் சந்திரா அத்தையின் வீட்டிலிருந்ததால் தப்பித்தது. சந்திராவும் அண்ணன் மீது இருந்த கோபத்தில் அந்தப் புகைப்படத்தை ஒரு ஓரமாகப் போட்டிருக்க, திகழ்வஞ்சிதான் அதைக் கண்டு தன்னோடு எடுத்துவந்துவிட்டிருந்தாள். இப்போது அவர்களிடம் உள்ள தந்தையின் படம் என்றால் அது மட்டும்தான்.
நெஞ்சம் நிறைந்த வலியோடு அதைப் பார்த்தவள், “ஏன்பா… ஏன் எங்களை விட்டுப் போனீர்கள்? கொஞ்சம் கூட எங்களைப் பற்றி யோசிக்கத் தோன்றவில்லையா? அந்த அளவுக்கா உங்கள் காதல் பெரிதாகிப் போயிற்று? உங்களுடைய அந்தக் காதலால் நாங்கள் எல்லோருமே சிதறிப் போய்விட்டோமே…! இப்போது எங்கே இருக்கிறீர்கள்? எங்களைப் பற்றி கொஞ்சமாவது யோசிப்பீர்களா?” ஏக்கத்தோடு கேட்டவள், நெஞ்சம் வலிக்கப் பழைய நினைவை ஒரு கணம் இரை மீட்டாள். பின் வெறுப்போடு தன் தந்தையைப் பார்த்தவள்,
“உங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை…! வெறுக்கிறேன்பா…! உங்களை மனதார வெறுக்கிறேன்…” முனங்கியவள் அதற்கு மேல் அவர் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், அதைத் தூர எறியவும் மனமில்லாமல், அந்தப் புகைப் படங்களைத் திரும்ப அந்தக் குறிப்பேட்டிற்குள் வைத்துவிட்டுப் பழையபடி அந்தக் குறிப்பேட்டை அது இருந்த இடத்தில் செருகியபின், விட்ட வேலையைத் தொடர்ந்தாள் திகழ்வஞ்சி.
அவள் வீட்டை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்த போது நேரம் நான்கு மணியாகி இருந்தது. திரும்பவும் குழந்தைக்கு செப்டம்பர் மாதத்துக் குளிருக்குத் தோதாக ஆடைகளை அணிவித்தவள், தானும் அதற்கேற்ப அணிந்து கொண்டு குழந்தையை அதன் வண்டியில் அமர்த்தி விட்டுப் பக்கத்திலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றாள்.
இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் முழுவதும் இலைகளை உதிர்த்துவிட்டு வெற்று மேனியாக நின்றிருக்க, தரையோ குளிருக்குத் தோதாக மரங்கள் கொட்டி விட்ட இலைகளைப் போர்வையாக்கி உறங்கிக் கொண்டிருந்தது.
அதில் குழந்தைகள் துள்ளிக் குதிப்பதும் அள்ளி எறிவதுமாக விளையாடிக் கொண்டிருக்க, ஆராவமுதனை வண்டியிலிருந்து இறக்கிவிட்டாள் திகழ்வஞ்சி.
அவனும் குடுகுடு என்று ஓடிப்போய் சிறுவர்களோடு இணைந்து விளையாடத் தொடங்க அதைப் பெரும் உவகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதைச் சற்றுத் தள்ளியிருந்த மரத்தின் பின்னாலிருந்த உருவம் ஒன்று முகம் முழுக்க விகாரம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னை இப்படி ஒரு உருவம் வெறித்துப் பார்த்திருப்பதை அறிந்திருந்தால் அவள் ஓரளவு சுதாரித்திருப்பாளோ?
நேரம் ஆறு மணியாக, சட்டென்று இருட்டத் தொடங்கியது. அதனால் அனைவரும் தம் தம் குழந்தைகளோடு விடைபெற்றுச் செல்ல, கடைசியாகத் திகழ்வஞ்சியும் ஆராவமுதனைத் தூக்கி வண்டியில் கிடத்திவிட்டு, வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கொஞ்சத் தூரம் போயிருக்க மாட்டாள், பின்னால் யாரோ நடந்து வரும் சரசரப்புச் சத்தம் கேட்கச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். யாருமில்லை. வீசிய காற்றுக்குச் சருகுகள் அசைவதால் அந்த சத்தம் வந்திருக்கும் என்று எண்ணியவளாக, மீண்டும் குழந்தையைத் தள்ளிக் கொண்டு நடக்க, அந்த உருவம் திகழ்வஞ்சியின் கவனத்தைத் திசைதிருப்பாமல் பின்னால் நடக்கத் தொடங்கியது.
வீட்டை நெருங்கியதும், ஜார்ஜும், ஈவாவும் அவர்களின் வீட்டு வாசலில் கதிரை போட்டு அமர்ந்து எதையோ பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். இவளைக் கண்டதும் கை காட்ட, புன்னகையுடன் அவர்களை நெருங்கியவள், சற்று நேரம் அவர்களோடும் அமர்ந்து பேசிவிட்டு வீட்டுக்குக் கிளம்ப, யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல உணர்ந்தாள் திகழ்வஞ்சி.
சட்டென்று திரும்பிப் பார்க்க வெட்டவெளிதான் அவள் பார்வைக்குத் தட்டுப்பட்டது. ஆனாலும் அவளை உள்ளுணர்வு எதையோ எச்சரிக்க, அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாற்றிய பின்புதான் அவளுடைய சுவாசமே சீரானது.
நிச்சயமாக அது மனப்பிராந்திதான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, எங்கு அபராசிதன் வந்து குழந்தையைக் கடத்திச் சென்றுவிடுவானோ என்கிற அச்சம்தான் இப்படிப் பயப்பட வைக்கிறது.
தன்னையே திடப்படுத்திக் கொண்டவள், திரும்பவும் ஆராவமுதனின் மேல் கழுவி, ஆடை மாற்றி, உணவு கொடுத்து, தூங்கவைத்த பின், போர்வையால் குழந்தையை இழுத்து மூடிவிட்டு சமையலறைக்கு வந்தவள், மதியம் சமைத்த உணவைத் தட்டில் போட்டு முன்னறைக்கு வந்தவள் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் வந்தமர்ந்தாள். அதை உயிர்ப்பித்தவள், பிடித்தும் பிடிக்காமலுமாக ஒரு தொலைக்காட்சித் தொடரை ஓடவிட்டவாறு சாப்பிட்டு முடித்தவள், தொலைக் காட்சிப் பெட்டியை அணைக்காமலே தட்டைக் கழுவி வைத்துவிட்டு நீளிருக்கையில் வந்து அமர்ந்து, ஓடிக்கொண்டிருந்த நாடகத்தை பார்க்கத் தொடங்கினாள்.
மனது அதில் ஒன்ற மறுத்தது. விழிகள் நாடகத்தைப் பார்த்தாலும், மனது அபராசிதனையும், அவனை சந்தித்த நாட்களிலிருந்து நடந்த சம்பவங்களையும் தான் இரைமீட்டுக் கொண்டிருந்தது.
அந்த நேரம் வீட்டின் அழைப்பு மணி இவளை சுயத்திற்கு அழைத்து வந்தது.
இந்த நேரத்தில் யார்? குழம்பியவள், நேரத்தைப் பார்க்க அது எட்டு மணியையும் கடந்திருந்தது.
தொலைக்காட்சியின் ஓசையைக் குறைத்து விட்டு கதவை நோக்கிச் சென்று, அதன் துவாரத்திற்கூடாக வெளியே எட்டிப் பார்த்தாள். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அழைப்பு மணி அடித்ததே, குழம்பியவளாக முன்னறைக்குத் திரும்பிய நேரம், மீண்டும் அழைப்பு மணியின் சத்தம். புரிந்து போனது அவளுக்கு.
யாரோ சிறுவர்கள் குறும்புத்தனம் செய்கிறார்கள் என்று. அதுவும் இந்த நேரத்திலா? கோபம்தான் வந்தது அவளுக்கு.
பற்களைக் கடித்தவள் திறக்காமலிருக்கத் தான் நினைத்தாள். ஆனால் இவள் திறந்து பார்க்கவில்லை என்றால், திரும்பத் திரும்ப அடித்துத் தொல்லை கொடுப்பார்கள். ஆரா வேறு தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனுடைய உறக்கம் கலைந்தால், போச்சு.
அந்தப் பயத்தில், விரைந்து சென்று கதவைத் திறந்து,
“ஸ்டாப் இட் காய்ஸ்…” என்று அவள் குரல் எழுப்பியவாறு நிமிர அங்கே அவள் முன்னால் வந்து நின்றான் அவன்.
அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் முகம் வெளிற, பேசும் சக்தியைத் தொலைத்தவளாக மலங்க மலங்க விழித்து நின்றாள் திகழ்வஞ்சி.
(25) அப்பப்பா... இதழ் தீண்டல் அத்தனை இன்பமாகவா இருக்கும்... அவை சாவகாசமாகத் தன் இணையிடம் குசலமல்லவா விசாரிக்கின்றன. குசலம் விசாரித்ததோடு…
(9) அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால்…
(23) தன் அறைக்குள் நுழைந்து, ஆயாசத்தோடு படுக்கையில் சரிந்தபோது, அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். ரஞ்சன்தான் எடுத்திருக்கிறான். பதட்டத்தோடு…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால்…
(21) மெதுவாகத் தூக்கம் கலைந்து எழுந்தாள் மீநன்னயா. ஏனோ அடித்துப்போட்டதுபோலச் சோர்வாக இருந்தது. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்குக் கண்முன்னே விரிந்த…
(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால்…