Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25)

தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும் அந்தப் பெரிய வாகனத்தை நலைப்படத்த முடியவில்லை.

அது ஏரிக்கரை என்பதால் இயலாத காரியமாயிற்று.

ஸ்டியரிங் வீலில் கவனத்தை விடுத்து இழுபட்டுச் சென்ற வாகனத்தை நிறுத்த அவன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ, தடை போட்டாலும் அதன் வேகத்திற்குச் சில்லுகள் ஒத்துக்கொள்ளாமல் இன்னொரு பக்கமாக இழுபட்டுச் செல்ல, முதன் முறையாக அவ்வியக்தனுக்குப் பயம் பற்றிக் கொண்டது.

என்ன நடந்தாலும் விதற்பரையைக் காப்பாற்றவேண்டும் என்கிற எண்ணம் அவனை உசுப்பத் திரும்பிப் பார்த்தான். அவளும் நடக்கும் விபரீதத்தைக் கண்டு அதிர்ச்சியில் விறைத்துப் போய் அலற கூடச் சக்தியற்றவளாக அமர்ந்திருந்தாள்.

மறு கணம், அவளுடைய இருக்கைப் பட்டியைக் கழற்றியவன், “கதவைத் திறந்து வெளியே குதி…” என்று கத்தினான்.

செயல் இழந்திருந்தவளுக்கு அவன் சொன்னது புத்தியில் எட்டினால் அல்லவோ.

என்ன செய்வது என்று கூடப் புரியாமல் மரணத்தின் வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தைக் கண்டு பேச்சற்று நிற்க, இவனோ சற்றும் யோசிக்காமல் அவள் பக்கத்துக் கதவைத் திறந்துவிட்டு, பலமாக இவளைத் தள்ளிக் கீழே விழுத்திவிட்டு நிமிர்வதற்குள், வாகனம், பாய்ந்து, ஐந்தடிக்கும் கீழே உறைந்துபோயிருந்த ஆழமான ஏரியின் இறுகிய பனியை உடைத்துக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி அமிழத் தொடங்கியது.

ஒரு சில விநாடிக்குள் அந்த அவலம் நடந்துவிட்டிருந்தது.

அவ்வியக்தன் தள்ளிய வேகத்தில் இரண்டடிக்கு உயர்ந்திருந்த பனிக் குவியலுக்குள் விழுந்தவள், உருண்டவாறு அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி, வலியில் முனங்கி நிமிர்வதற்குள் இது நடந்துவிட்டிருந்தது.

வாகனம் விழுந்த ஓசையில் பதறித் துடித்து எழுந்தவள், வலித்த கரங்களை உதறியவாறு, ஆற்றை நோக்கி ஓடினாள்.

வாகனம் விழுந்த இடத்தில் தண்ணீர் நிறைந்திருக்க, அது சொன்னது வாகனம் மூழ்கிவிட்டதென்று. இதயம் வாய் வரை வந்து துடிக்க, சற்றும் யோசிக்காமல் கீழே குதித்து வண்டி விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தாள். ஓடிய வேகத்தில் காலை உறை பனி வழுக்கி விடக் குப்புற விழுந்தவள் வழுக்கிக் கொண்டு தண்ணீர் பொங்கிக் கொண்டிருந்த இடம் வரை இழுபட்டுச் சென்று உடலை உறைய வைக்கும் அந்தத் தண்ணீருக்குள் விழ முதல் அங்கிருந்த பாறை ஒன்றைப் பற்றித் தன்னை நிலை நிறுத்தினாள். அதற்குள் உயிர் ஒரு முறை சென்று பின் திரும்பியது.

ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்தியவள், பதறி அடித்துச் சற்று அசைந்து கொண்டிருந்த தண்ணீருக்குள் அவ்வியக்தனின் வாகனம் தெரிகிறதா என்று பார்த்தாள். பெரிதாகத் தெரியவில்லை. மூச்சை இழுத்துக் கொண்டு தலையைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்த்தாள். குளிர் நீர் அவள் முகத்தை விறைக்கச் செய்தாலும் அதை உணரும் நிலையில் அவள் இல்லை.

கண்களுக்கு அந்த வண்டி தட்டுப்படத் தன்னை மறந்து அவனை அழைக்க முயன்றவளுக்கு அப்போதுதான் தண்ணீருக்குள் முகத்தைப் புதைத்ததிருப்பதே நினைவுக்கு வந்தது. அதையும் மீறித் தண்ணீர் மூக்கிற்குள்ளும் வாய்க்குள்ளும் புகுந்து விட்டிருக்க, எழுந்தவள், பலமாக இருமித் தன்னைச் சமப்படுத்தியவாறு முகத்தில் விழுந்த தண்ணீரை வழித்துக் கொண்டு, மீண்டும் தண்ணீருக்குள் முகத்தை விட்டுப் பார்த்தாள்.

எப்படியும் பத்தடியாவது ஆழமிருக்கும். இப்போது எப்படி அவனைக் காப்பது. பதறித் துடித்தவளாகப் பான்ட் பாக்கட்டிற்குள் கையை விட்டுக் கைப்பேசியைத் தேடியவளுக்கு அப்போதுதான் தன்னுடைய கைப்பேசி அந்த வண்டியோடு அமிழ்ந்து போனது புரிந்தது.

விழிகளில் கண்ணீர் கோர்க்க, இதயம் வாய்க்குள் வந்து துடிக்கச் சுற்று முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் யாரும் தெரியவில்லை. இவளுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

யாருமற்ற தனிமை இவள் உடலை பலவீனமாக்கியது. இந்தக் கணமே மயங்கி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சியவளாகத் தன்னை நிலைப்படுத்த முயன்றாள். மூடிய வாகனத்திற்குள் தண்ணீர் நிரம்ப அதி கூடியது ஆறு நிமிடங்கள் எடுக்கும். பெரிய வாகனம் என்றால் ஏழு நிமிடங்கள். அதற்குள் அவனைக் காப்பாற்றி விட வேண்டும்… முடியுமா அவளால்? யோசிக்க அவகாசமில்லை. ஏற்கெனவே மூன்று நிமிடங்கள் ஓடிவிட்டன.

அதற்குமேல் யாரும் வருவார்களா என்று காத்திருக்க முடியாதவளாகத் தன் ஜாக்கட்டைக் கழற்றிப் போட்டவள், சற்றும் யோசிக்காமல் ஆழ மூச்சேடுத்து நுரையீரலை நிரப்பியவாறு அந்தத் தண்ணீருக்குள் குதித்துவிட்டிருந்தாள்.

இவளுக்கு நீச்சல் தெரியும். ஆனாலும் கரை கண்டவள் இல்லை. இருந்தாலும் அதை யோசிக்கும் நிலையிலும் அவள் இருக்கவில்லை. எப்பாடு பட்டாவது அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும். அது மட்டும்தான் மனதில் நிலையாய் நின்றிருக்க, மின்னலேன வாகனத்தை நோக்கிப் பாய்ந்துவிட்டிருந்தாள் விதற்பரை.

அதீத நேரம் மூச்சுப் பிடித்திருக்க முடியாது என்று புரிந்தது. சுவாசப் பையோ மூச்சை எடுத்து விடு என்று திமிறியது. தன் சுவாசத்தை விட, அவனைக் காக்க வேண்டும் என்கிறது மட்டும்தான் அவள் மனதிலிருந்ததன்றி வேறு எதுவும் அவள் சிந்தையில் இருக்கவில்லை.

வாகனத்தை நெருங்கிய போதுதான் தெரிந்தது அவன் ஸ்டியரிங் வீலில் சுயநினைவின்றிக் குப்புற விழுந்து கிடப்பது. இயந்திர வழியாக, வாகனத்திற்குள் தண்ணீர் வந்து அவனுடைய மார்பிற்கும் மேலாக ஏறிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுடைய நாசியைத் தொட்டு விடும். அதற்கிடையில் அவனை வெளியே எடுத்தாகவேண்டும்.

பேதலிக்க முயன்ற புத்தியை நிலை நிறுத்த முயன்றவாறு கதவைத் திறக்க முயன்றாள். உள்ளே மூடியிருந்தது. இழுத்துப் பார்த்தாள். விரைவாக அவனைக் காக்க வேண்டும். இல்லை என்றால் சுவாசத்திற்காக இவளுடைய நுரையீரல் திமிறத் தொடங்கும். எப்படியும் தண்ணீர் அவனுடைய நாசியைத் தொட இரண்டு நிமிடங்களாவது எடுக்கும். அதற்குள்ளாக அவனை வெளியே கொண்டுவரவேண்டும். எப்படி எப்படி? கதவைத் தட்டிப் பார்த்தாள்.

அந்தச் சத்தம் தண்ணீரை மீறி அவனுக்குக் கேட்பதாக இல்லை. இப்போது அவளுடைய சுவாசம் தடுமாறியது… உடல் வெட்டியது. சற்றும் யோசிக்காமல் கடகடவென்று நீந்தியவாறு மேலே வந்தவள், மீண்டும் ஆழ மூச்செடுத்தாள்.

தொண்ணூறு விநாடிகள் தாக்குப் பிடிக்க முடியும். மீண்டும் தண்ணீருக்குள் பாய்ந்தவள், சுற்றிவரப் பார்த்தாள். பெரிய கல் ஒன்று கண்ணில் பட்டது. வேகமாக நீந்திச் சென்று அதைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வண்டியின் அருகே வந்தாள். பலம் அனைத்தையும் சேர்த்துக் கண்ணாடியை உடைக்க முயன்றாள். நான்கு அடியில் விரிசல் கண்டது. மேலும் ஓங்கி ஒரு அடி… உடைந்து விழுந்தது கண்ணாடி. இப்போது தண்ணீர் ஆக்ரோஷமாக உள்ளே பாய்ந்து அவ்வியக்தனை சூழ்ந்து கொண்டது.

திடீர் என்று தண்ணீர் நாசியை நிரப்பத் திமிறியவாறு எழுந்த அவ்வியக்தன் சுவாசத்திற்காகத் துடித்தான். மயக்கத்திலிருந்து விழித்ததால், உடல்தான் செயல்பட்டது. புத்தி மந்தமாகக் கிடந்தது. திமிறிப் பதைத்தவனின் முன்னால் கடல் தேவதையென ஒரு முகம். அதைக் கண்டவனின் விழிகள் இமைக்க மறந்தன. அந்த நிலையிலும் அவன் முகத்தில் மெல்லிய பரவசம். சிரிக்க முயன்றான். முடியவில்லை. மீண்டும் அவனை இருள் சூழ முயன்றது.

விதற்பரையோ நீந்தியவாறே உள்ளே கைவிட்டுக் கதவின் லாக்கை விடுவித்துக் கதவைத் திறந்து, இருக்கைப் பட்டியை அவிழ்த்தவாறு அவ்வியக்தனைப் பார்த்தாள். அவன் நெற்றியிலிருந்து பலமாக வழிந்த இரத்தம் குளிர் நீரில் கரைந்து நின்றுவிட்டிருந்தது.

அடுத்து அவனுடைய தலை முடியைச் சுழற்றிப் பிடித்தவள், இழுத்தவாறு நீந்திக் கொண்டு மேலே வந்து அத்தனை பலத்தையும் சேர்த்துத் தம் கட்டி அவனைத் தூக்கி இறுகிய பனியின் மீது போட்டாள். நல்லவேளை தண்ணீர் என்பதால் அவனைத் தூக்குவது சுலபமாயிற்று. இவளும் மேலே ஏறியதும் இருமத் தொடங்கினாள். என்னதான் தம்கட்டி மூச்சை பிடித்திருந்தாலும் கடைசிநேரத்தில் தண்ணீர் உள்ளே புகுந்துவிட்டிருந்தது.

பல முறை இருமியவாறு ஆழ மூச்செடுத்து விட்டவள், அவனுடைய மூக்கின் மீது கரத்தை வைத்துப் பார்த்தாள். சுவாசம் இருக்கிறதா இல்லையா. விறைத்துப் போன கரங்களுக்கு அது தெரிவதாக இல்லை.

இவளுடைய உடலோ பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் அவனுடைய கன்னத்தைத் தட்டி,

“அ… அயன்…” என்று அழைத்துப் பார்த்தாள். பதிலில்ல அதற்கு மேல் பேச சக்தியற்றவளாய், தொண்டை இறுகிப்போன உணர்வில், உடலில் உள்ள இரத்த நாளங்கள் அனைத்தும் குளிரில் உரைந்து விறைத்துப்போக, அணிந்திருந்த சுவட்டுக்குள்ளாக ஊடுருவிச் சென்ற குளிர் நீர் ஊசியாய் தோல்களுக்கூடாக ஊடுருவி சதைகளையும், உயிரணுக்களையும் துளைத்துக்கொண்டு எலும்புகளைக் குத்திச் செல்ல, தேகமோ உறைந்த நிலையில் விறைத்துப்போக நடுங்கினாள் விதற்பரை.

ஆனாலும் மயங்கிக்கிடந்தவனை மீட்டெடுக்க வேண்டுமே. பதட்டத்தோடு மீண்டும் தட்டிப் பார்த்தாள். ஊசியாய் குத்திய விரல்கள் கொடுத்த நமைச்சலைத் தாங்க முடியாது, தான் அணிந்திருந்த கையுறைகளைக் கழற்ற முயல, விறைத்துப்போன விரல்கள் அசைந்தால் அல்லவோ. உணர்வற்றுப் போன கரத்தைத் தூக்கிப் பற்களால் கையுறைகளின் நுணியைப் பற்றி இழுத்துத் துப்பியவள், விறைப்பினால் உணர்வற்றுப் போன கரங்களை உதறி உதறிச் செயல்பட வைத்தாள். அவை டப் நடனமாடும் மங்கையர்களைப் போல உதறின அன்றி உணர்வு கொள்ளவில்லை.

தன் கரங்களை ஒன்றிக்குள் ஒன்று பொத்தி வாயில் வைத்து ஊதி கரங்களுக்கு உணர்வுகளைக் கொடுக்க முயல வெளியே வந்த காற்று கூடக் குளிராகத்தான் வந்தது. எரிச்சலுடன் அந்த முயற்சியைக் கை விட்டவள், அவனுடைய கன்னத்தைத் தட்டி அழைத்துப் பார்த்தான். அவனிடம் மூச்சுப் பேச்சு இல்லை என்றதும் பயத்தில் இரத்தத்தோடு இதயமும் உறைந்து போனது. அவசரமாய் அவன் பக்கமாகக் குனிந்தவள், காதுகளை அவனுடைய நாசியில் வைத்து மூச்சு வருகிறதா என்று அவதானிக்க முயன்றாள்.

ம்கூம்… எதையும் உணர முடியவில்லை… இன்னும் அங்கே நின்றால், குளிரில் விறைத்து இறந்து போவது உறுதி. அதை விடப் பாதுகாப்பான இடம் தேவை… எங்கே… எங்கே… எப்படியோ சிரமப்பட்டுத் தன் புத்தியை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தவளாக எழுந்தாள். இருமல் வேறு வந்தது. எப்படி அங்கிருந்து வெளியே செல்வது?. சுத்தவரப் பார்த்தாள். பார்க்கும் திசை முழுவதும் ஊசியிலை மரங்களும் வெட்டவெளியுமாகவே தெரிந்தன. அன்று முழுவதும் அழகாய் ஆட்சி செய்த பனிவிழும் காலம் இப்போது அகோரமாய், உயிரை உறையச் செய்யும் பயங்கரமாய் மாறிப்போனது.

பேயாக வீசிய குளிர் காற்றையும், இடம் விடாது கொட்டிய பனியையும் தவிர வேறு எதுவும் துணைக்கில்லை. இப்போது கிலியில் அழுது கரைவதற்கு நேரமில்லை. செயல்படும் நேரம். தன்னைத் திடப்படுத்தியவளாக, விழுந்து கிடந்தவனைப் பார்க்க, சேகரித்த தைரியம் தானாக விடைபெற்றது. இவனை எப்படி எழச் செய்வது?

எப்போதோ பள்ளியில் முதலுதவி படித்தது நினைவுக்கு வர அவனுடைய மார்புக்கு மத்தியில் உள்ளங்கையைப் பதித்து அதன் மீது மறு கரத்தை அழுத்தி வைத்தவாறு பலமாக அழுத்த தொடங்க அவன் குடித்த தண்ணீர் வாய் வழியே வரத் தொடங்கியது. முழுதாக ஒரு நிமிடம் அழுத்திக் கொடுத்த பின்பு அவ்வியக்தனிடமிருந்து மெல்லிய முனங்கல் சத்தத்துடன் கூடவே இருமத் தொடங்கினான். உடனே பாய்ந்து அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டவள்.

“ஈசி… ஈசி…” என்றவாறு அவனுடைய முதுகைத் தட்டிக் கொடுக்க, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து திறந்து மூடியவன்,

“ஐ… ஐ ஆம்… கோல்ட்…” என்றான் திணறலாய்.

“ஐநோ… ஐ நோ… கொஞ்சம் பொறுங்கள்… குளிரில்லாத இடத்திற்குப் போய்விடலாம்…” என்று சமாதானப்படுத்திவிட்டுக் கண்களில் கண்ணீர் கோர்க்கச் சுற்றும் முற்றும் பார்த்தாள். முன்பு கழற்றி வைத்த அவளுடைய தடித்த மேல்சட்டை கண்ணில் பட ஒடிப்போய் எடுத்து வந்து அவனைப் போர்த்திவிட்டு அவனுடைய முடியை வருடிக் கொடுக்க, அவனோ கையது கொண்டு மெய்யது பொத்துவது போலக் கற்பத்தில் குடியிருக்கும் குழந்தை போலச் சுருண்டு கொண்டான்.

இவனை இந்த உறை பனியிலிருந்து மேலே அழைத்துச் செல்ல வேண்டும்… எப்படி? கண்ணீர் தாரையாகக் கன்னத்தில் வடிய,

“அயன்… இதோ பாருங்கள்… நாங்கள்… இங்கிருந்து புறப்பட வேண்டும்… எழுந்து கொள்ளுங்கள்…” என்று அவனை உசுப்ப, அவனோ சுருண்ட நிலையிலிருந்து எழுந்தானில்லை. கூடவே நீலமாகத் தொடங்கிய உதடுகளிலிருந்து அவன் ஹைபதேமியாவை நோக்கிச் செல்கிறான் என்று புரியப் பதறிப்போனாள் விதற்பரை.

மீண்டும் அவனுடைய கன்னத்தைத் தட்டி,

“அயன்… ப்ளீஸ்… எழுந்து கொள்ளுங்கள்… நாங்கள் இங்கிருந்து போக வேண்டும்… இல்லை என்றால் இருவருமே குளிரில் உறைந்து இறக்க வேண்டும்…எழுந்து கொள்ளுங்கள்…” என்று அவனை உலுப்ப, மெதுவாக அசைந்தான் அவ்வியக்தன்.

சிரமப்பட்டு எழுந்தவனைத் தன்னோடு தாங்கிக் கொண்டவளுக்கு அவனை இழுத்துச் செல்வது மிகப் பெரும் சவாலாகவே இருந்தது.

எப்படியோ ஒரு பாதையைக் கண்டு மேலேறித் தரையை அடைவதற்குள் அவ்வியக்தன் மொத்தமாய்ச் சுயநினைவின்றிக் கீழே சரிந்தான். அவனருகே அமர்ந்து அவனுடைய கன்னத்தைத் தட்டியவளுக்குத் தன் குளிர் மரத்துப் போனது.

“அயன்…” என்று அழைத்துப் பார்த்தாள். குளிரின் நடுக்கத்தால் தூக்கிப்போட்ட அவனுடைய உடல் அசைவைத் தவிர வேறு எதுவும் இல்லை. விழிகள் மட்டும் திறக்க முயன்று தோற்று மூடிக்கொண்டன. இவனை இழுத்துக்கொண்டு போகும் சக்தியிருக்கிறதா. கடவுளே யாருடைய உதவியைக் கேட்பது. அழுகை அணை உடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அவனுடைய கன்னத்தைத் தட்டி,

அயன்… விழித்துக் கொள்ளுங்கள்…” என்றபோதே குரல் பயங்கரமாக நடுங்கியவாறு வெளியே வந்தது. தலை வேறு சுற்றிக்கொண்டு வந்தது. இங்கேயே இருந்து பயனில்லை என்பது புரிய, எழுந்தவள், என்ன செய்வது என்று தெரியாமல் சுத்தவரப் பார்த்தாள்.

அடிக்கடி யாரோ அந்தப் பக்கமாக நடந்து சென்றிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக மெல்லிய பாதை, நிறைந்திருந்த பனியையும் மீறித் தெரிய, சற்றும் யோசிக்காமல் அந்தப் பாதை சென்ற திசைக்கு நடக்கத் தொடங்கினாள்.

சற்றுத் தொலைவின் உயரத்தில் ஒரு குடில் தெரிந்தது. பாய்ந்து அந்தக் குடிலை நோக்கி ஓடினாள். அது மேடான பகுதி என்றதனால் அந்தக் குடிலை நோக்கி ஓடுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. இரண்டு முறை வழுக்கி உருண்டு விழுந்தவள், முயற்சியை விடாமல் பாய்ந்து மேலேறி அந்தக் குடிலை வந்தடைந்தபோது இருபது நிமிடங்களை அது விழுங்கியிருந்தது.

அந்தக் குடிலை நெருங்கியதும் கதவைத் தட்டித் பார்த்தாள். யாரும் திறப்பதுபோல இல்லை. மிகச் சிறிய குடில்தான். ஒரு முறை அந்தக் குடிலை சுற்றி வந்தாள். வெட்டிய மரங்களை இழுத்து வருவதற்காகச் சற்று அகலமான தள்ளுவண்டி ஒன்று இருக்க, அதை இழுத்துப் பார்த்தாள். பனியில் உறைந்திருந்தது அது.

அங்கும் இங்கும் பார்த்தவள். ஓரமாகச் சாய்த்து வைத்திருந்த சிறிய கோடாலி ஒன்றைக் கண்டதும் பாய்ந்து எடுக்க, கையையும் மீறி வழுக்கியது கோடாலி. விரல்கள் உணர்ச்சியைத் தொலைத்து விட்டது புரிய, புத்தியை நிலைப்படுத்தி முடிந்த வரை கோடாலியை இறுக பற்றி, உறைந்திருந்த பனியைக் கொத்தி உடைத்துத் தள்ளுவண்டியை வெளியே இழுத்து எடுத்தாள். பெரும் சத்தத்தோடு சிரமப்பட்டு சுழன்றன சில்லுகள்.

கூடவே சற்றுத் தள்ளி கயிறொன்று தொங்கிக் கொண்டிருக்க, அதையும் எடுத்தவளின் விழிகளில் பட்டது அந்த விரிப்பு.

வெட்டி வைத்த விறகுகளின் மீது ஈரம் படாதிருக்க, பிளாஸ்திக்காலான தடித்த போர்வையால் போர்த்தியிருந்தனர். அதை இழுத்து எடுத்தவள், அவ்வியக்தன் விழுந்திருந்த இடத்தை நோக்கி ஓடினாள். ஏறும்போது சிரமமாக இருந்தது, இறங்கும் போது மிகச் சுலபமாக இருக்க அடுத்தப் பதினைந்தாவது நிமிடத்தில் அவ்வியக்தன் விழுந்திருந்த இடத்தைச் சென்று அடைந்திருந்தாள் விதற்பரை.

தள்ளு வண்டியை அவனுக்கு அருகாமையில் வைத்தவள், அத்தனை பலத்தையும் கூட்டி அவனை நிமிர வைத்து, அவன் முதுகுக்கூடாக வண்டியைத் தள்ளியவள், மறுபக்கம் வந்து நின்று அவன் கையிடுக்கிற்குள்ளாகத் தன் கரங்களைக் கொண்டு சென்று உயிரைக் கொடுத்து அவனை இழுத்துத் தள்ளுவண்டியில் அமரச் செய்தாள். அந்தப் பிளாஸ்திக் போர்வையை நான்காக மடித்து அவனைச் சுற்றிப் போர்த்திவிட்டுக் கொண்டு வந்த கயிற்றால், அவனைத் தள்ளுவண்டியோடு சேர்த்துக் கட்டினாள். பின் திரும்பி நின்றவாறு வண்டியின் கைப்பிடியை இறுகப் பற்றியவள், அவனை இழுத்துச் செல்லத் தொடங்கினாள்.

(26)

 

உணர்வற்று விறைத்துப்போயிருந்த கால்களோ, உறைந்த பனியில் நின்று பிடிக்காமல் வழுக்கின. உடனே பக்கத்திலிருந்த மரத்தை இறுகப் பற்றியவாறு வழுக்காது, அதன் உதவியோடு ஓரடி மேலே வந்தாள். ஒற்றையாளாக மேலே ஏறுவதே சிரமம். இதில் திடகாத்திரமான அவளை விட ஒன்றரை மடங்கு பெரிய ஒருவனை இழுத்துக்கொண்டு செல்வது என்பது அத்தனை சுலபமான காரியமா என்ன. ஆனால் அந்தப் பலவீனத்தை அவனைக் காக்கவேண்டும் என்கிற திடம் முறியடிக்க, எப்படியாவது அவனை இங்கிருந்து அந்தக் குடிலுக்குள் எடுத்துச் சென்றுவிடவேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டும் அவளை இயக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல், அந்தக் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் விதற்பரை.

அந்த நேரத்தில் குளிர் கூட மறந்து போனது. விறைத்த அங்கங்கள் கூட மரத்துப் போயின. அவனை மட்டும் காக்கவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் விடாப்பிடியாகத் தன் பலம் முழுவதையும் கூட்டி, அந்தக் குடிலை வந்தடைந்தாள் விதற்பரை.

அந்தக் குடிலின் வாசலை அடைந்ததும், அவனை அங்கே விட்டுவிட்டு மீண்டும் சென்று கதவைத் தட்டிப் பார்த்தாள். யாரும் திறப்பதாயில்லை. கதவுக் குமிழைத் திறந்து பார்த்தாள். அசையவில்லை கதவு. முடிந்த வரைக்கும் மோதிப் பார்த்தாள். எந்த முன்னேற்றமும் இல்லை என்றதும் மீண்டும் அந்த வீட்டைச் சுற்றி வந்தாள். பின் கதவொன்று இருக்கத் திறந்து பார்த்தாள். அதுவும் மூடித்தான் இருந்தது.

இருக்கும் நிலையில் அந்த இடத்தை விட்டால் வேறு போக்கிடமும் இல்லை. குறைந்தது அவ்வியக்தன் சுய நினைவு பெறும் வரைக்காவது அங்கே ஒதுங்குவதை விட வேறு வழியுமில்லை.

மீண்டும் அந்தக் குடிலைச் சுற்றி வந்தவளுக்குக் கண்ணில் பட்டது ஜன்னல். ஓடிப்போய்த் திறந்து பார்த்தாள். அவளுடைய நல்ல காலம் ஜன்னல் திறந்தது.

“ஹலோ யாராவது இருக்கிறீர்களா… தயவு செய்து உதவி செய்யுங்கள்…” என்று உள்ளே குரல் கொடுத்துப் பார்த்தாள். அப்போதுதான் அங்கே யாருமேயில்லை என்பது புரிந்தது. கோடைக் காலத்தில் மட்டும் வந்து தங்குவதற்கான குடில் போல. அடுத்துப் பூச்சிகள் உள்ளே நுழையாதிருக்கப் போட்டிருந்த வலையைக் கழற்றி எறிந்துவிட்டு, உள்ளே நுழைந்து தரையில் பொதார் என்று விழுந்தவள், உடனே எழுந்து ஜன்னலை மூடிவிட்டு வாசல் கதவை நோக்கிப் பாய்ந்தாள். கதவைத் திறந்தவள், அவ்வியக்தனை நெருங்கி, அவனைக் கட்டியிருந்த கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு, அவனைத் தூக்க முயல, அவனோ விழிகளைத் திறக்க முயன்றவன் போல மெல்லியதாக அசைந்தான்.

உடனே அவனை நோக்கி மண்டியிட்டு அமர்ந்தவள்,

“அயன்… தயவு செய்து கொஞ்சம் ஒத்துழையுங்கள்… என்னால் தனியாக உங்களை உள்ளே அழைத்துச் செல்ல முடியாது…” என்று கெஞ்ச, உதறிய தேகத்தோடு, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான். திறந்த கண்களுக்கு யாரோ மங்கலாக இருப்பது மட்டும் தெரிந்தது. யார் என்று தெரியவில்லை. திணறியவனாய்,

“ஐ… ஐ ஃபீல் கோல்ட்…” என்றான் முணுமுணுப்பாய். அந்த முணுமுணுப்பு அவனுக்குக் கூடக் கேட்டிருக்குமா தெரியவில்லை. ஆனாலும் அவனுடைய கன்னத்தைப் பற்றி,

“அயன்… உங்களுக்கு ஒன்றுமில்லை… ப்ளீஸ் எழுந்து கொள்ளக் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்…” என்று கெஞ்ச, அவனுக்கும் அவளுடைய குரல் மெதுவாகக் காதில் சென்றடைந்ததோ, எழ முயற்சி செய்தான். ஆனால் விறைத்த உடல்கள் சற்றும் அவனுக்கு விட்டுக்கொடுப்பதாயில்லை.

எப்படியோ அவனுடைய கரத்தைப் பற்றித் தன் தோள்களைச் சுற்றிப் போட்டவள், இழுத்துக்கொண்டு அந்தக் குடிலை அடைந்து, கதவை அடித்துச் சாற்ற, அதுவரை காதுகளைக் கிழித்துக்கொண்டிருந்த பேய்க் காற்றின் ஓசைத் தடைப்பட்டு நின்றது.

அவனை நடத்திக்கொண்டு வந்தவள், அங்கிருந்த கணப்படுப்பிற்கு முன்னால் கைவிட, தொப்பென்று தரையில் விழுந்தவனின் உடல் பலமாக உதறத் தொடங்கியது. உடலைக் குறுக்கியவாறு, கிடந்தவனைக் கவனிக்கக் கூட நேரமில்லாமல், ஓடிப்போய் மின்சாரக் கணப்பைப் போட்டுப் பார்த்தாள். அந்தக் குடிலுக்கு மின்சாரமே இல்லை. வாய்க்குள் எதையோ சொல்லித் திட்டியவளுடைய உடலும் குளிரில் உதறியது.

முதலில் கணப்படுப்பை எரியூட்டவேண்டும். பின் புறம் நோக்கி ஓடினாள். முடிந்த வரை, விறகுகளை அள்ளி எடுத்துக்கொண்டு, உள்ளே வந்தவள், கணப்படுப்பிற்குள் அவற்றை அடுக்கிவிட்டு, நெருப்புப் பெட்டியைத் தேடினாள். விறைத்த விரல்களுக்குச் சூடேற்ற நூறாவது முறையாக அடித் தொண்டையிலிருந்து காற்றை எடுத்து ஊதினாள். பலனில்லாது போக,

“ஐ கான் டு இட்… ஐ கான் டு இட்…” என்று திரும்பத் திரும்பச் சொன்னவள், மேலும் தேடினாள். கரங்கள் உதறிய வேகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறி விழுந்தன. பக்கத்திலிருந்த சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். கொஞ்ச மெழுகு திரிகள் இருந்தன. அதையும் எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிப் பாய்ந்தாள்.

ஒவ்வொரு கபேர்டாகத் திறந்து பார்த்தாள். அப்போதுதான் அது கண்ணில் பட்டது.

எட்டி அதை எடுத்துப் பார்த்தாள். யாரோ குடித்துவிட்டுப் பத்திரமாக வைத்துவிட்டுச் சென்ற மதுபானப் போத்தலில் அரைவாசி அப்படியே கிடந்தது.

ஒரு வித பரபரப்போடு அதை எடுத்தவள் அதன் மூடியைத் திறந்து கடகடவென்று வாய்க்குள் கொட்ட, அது தொண்டையை எரித்துக்கொண்டு உள்ளே சென்று குடலை எரியச் செய்ததோடு, பிரக்கேறவும் வைத்தது.

அதன் பலன் பலமாக இருமத் தொடங்கியவள், கசப்பையும், இருமலையும் ஒன்றாக விழுங்க முயன்ற நேரம், உள்ளே சென்ற மது, அவள் உடலை எரியச் செய்தது. அதுவரை ஆட்டிப்படைத்த குளிர், சற்று மட்டுப்பட்டது போலத் தோன்ற, சிரமப்பட்டு இன்னொரு மிடறு விழுங்கிவிட்டு, தீ மூட்ட ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள். கபோர்டின் மேல் பகுதியில் கைவிட எதுவோ தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தாள்.

கடவுளுக்கு நன்றி, எரியூட்டும் கருவியொன்று இருந்தது. அதை எடுத்துக்கொண்டு விரைந்தவள், உடனே எரிய மறுத்த, விறகுகளின் மீது மதுவைச் சற்று ஊற்றிவிட்டு நெருப்பைப் பிடிக்கப் பக்கென்று பற்றிக்கொண்டது விறகு.

அதிலேயே மெழுகு திரிகளையும் ஏற்றி ஆங்காங்கே வைத்தவள், அவ்வியக்தனை நோக்கி வந்தாள். மதுப்போத்தலை ஓரமாக வைத்துவிட்டு, அந்தக் குடிலின் அறையை நோக்கிச் சென்றாள். படுக்கை மீதிருந்த விரிப்பை இழுத்து எடுத்துக்கொண்டு மீண்டும் அவனிடம் ஓடிவந்தவள், அவனுடைய ஆடைகள் ஒன்று விடாமல் கழற்றி வீசிவிட்டு, அந்தப் போர்வையால் அவனைப் போர்த்திவிட்டு, சிரமப்பட்டு அவனைத் தூக்கி மார்போடு அணைத்தவள், பக்கத்திலே வைத்திருந்த மதுப்போத்தலை எடுத்து, அவன் வாயில் வைத்து,

“அயன்… இதைக் குடியுங்கள்…” என்றாள். அவனோ குளிரில் நடுங்கினான் அன்றி அவள் சொன்னதைச் செய்தானில்லை. சிரமப்பட்டு அவனுடைய வாயைத் திறக்கச் செய்து அதில் மதுவை ஊற்ற, ஏதோ திரவம் தன் வாயில் ஊற்றப்படுகிறது என்பது தெரிந்தவனாய், அதை விழுங்க, அந்தப் பயங்கரக் குளிருக்கு அந்தத் திரவம் பெரும் இதமாக இருந்திருக்க வேண்டும். கடகடவென்று அதில் அரைவாசியைக் குடித்துவிட்டுப் போதும் என்பது போலப் போத்தலைத் தள்ளி விட, மிச்சமிருந்ததையும் தன் தொண்டைக்குள் விட்டுவிட்டு அந்தப் போத்தலை ஒரு பக்கமாக எறிந்துவிட்டு எழ முயன்றாள்.

சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றியவன்,

“டோன்ட்… டோன்ட்… லீவ்… லீவ்… மீ…” என்றான் நடுங்கிய குரலுடன்.

“இ… இல்லை… போகமாட்டேன்… கொஞ்சம்… பொறுங்கள்… வந்துவிடுவேன்…” என்றவள் அந்த அறைக்குப் போக முதலே தன் ஈர ஆடையைக் களைந்தவாறு உள்ளே நுழைந்தாள். அங்கேயிருந்த இழுப்பறையைத் திறந்து அணிவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.

குளித்த பின்பு அணியக்கூடிய பாத் ரோப் கூடவே சில போர்வைகளும் இருக்க, பார்த்ரோபை எடுத்துப் பார்த்தாள். மிகப் பெரியது. யாரோ ஒரு ஆணுடையது போலும். உடனே அதை அணிந்தவளுக்கு உள்ளே ஊசியாய் குத்திய குளிர் ஓரளவுக்கு மட்டுப்பட்டது. கையோடு இடைப் பட்டியைக் கட்டியவாறு கீழே அழகாய் மடித்து வைத்திருந்த போர்வையை அள்ளிக் கொண்டு, வெளியே வந்தாள். அத்தனை போர்வையையும் கொண்டு அவ்வியக்தனைப் போர்த்திவிட்டு அவனுடைய கன்னத்தில் கரத்தை வைத்துப் பார்த்தாள்.

இன்னும் உடல் சூடேறவில்லை. ஆனாலும் நடுக்கம் சற்றுக் குறைந்திருந்தது. நிம்மதியுடன் திரும்பியவளுக்கு அப்போதுதான் எடுத்து வந்த விறகு போதாது என்பது தெரிந்தது. இன்னும் வேண்டும். ஒரு போர்வையை எடுத்துத் தன் மீது சுற்றியவாறு மீண்டும் விறகுகள் அடுக்கப்பட்ட இடம் நோக்கிச் சென்றவள், முடிந்தவரை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து போட்டுவிட்டு ஒரு சில கட்டைகளை மேலும் எரியும் நெருப்பில் வைத்தாள்.

பின் எழுந்தவள், அங்கும் இங்குமாய்க் கழற்றி எறிந்திருந்த அவனுடைய ஆடைகளையும் தன்னதையும் கணப்படுப்பின் மீது காய்வதற்காகப் போட்டுவிட்டு நெருப்பின் முன்னால் அமர்ந்து கரங்களைச் சூடேற்றத் தொடங்க சற்று நேரம் அமைதியில் கடந்தது.

நெஞ்சமோ எதை எதையோ நினைத்தது. தன்னையும மீறித் திரும்பிப் பார்த்தாள். சரிந்து படுத்திருந்தவனின் முதுகுதான் தெரிந்தது. கூடவே பச்சை குத்திய பெரிய கழும். எழுந்தவள், அவனை நோக்கிச் சென்று, முழங்காலிட்டு அமர்ந்தவள், விலகிய போர்வையைச் சரியாக்க முயல, அவனிடமிருந்து மெல்லிய முனங்கல் சத்தம் கேட்டது.

ஏனோ நெஞ்சம் வலிக்க, அவனுடைய தலை முடியை வருடக் கரத்தை எடுத்துச் செல்ல, மறு கணம் அவள் பக்கமாகத் திரும்பிப் படுத்தவன், அவளுடைய கரத்தை பற்றி இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“மிஸஸ் ஜான்சி… ஐ ஆம் ஸ்கயர்ட்…” என்றான் நடுங்கும் குரலில். விதற்பரையோ, எதுவும் புரியாமல் விழிக்க, அவனோ அவள் கரத்தை மேலும் தன்னோடு இறுக்கியவாறு,

“டோன்ட்… லீவ்… லீவ் மீ… ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ…” என்றான் சிறு குழந்தை போல.

அவனுடைய அந்தப் பலவீன ஓசையும், தவிப்பும், கம்மிய குரலும் விதற்பரைக்குள் எதுவோ செய்ய அவன் பக்கமாகக் குனிந்து தன் ஒற்றைக் கரத்தைப் பற்றியிருந்த அவனுடைய கரத்தை மறு கரத்தால் தட்டி வருடிக் கொடுத்து,

“அயன்…” என்றான் மென்மையாய். அவனோ அவள் சொன்னதைக் கேட்கும் நிலையில் இல்லாதவனாக.

“டோன்ட் டு திஸ் டு மீ… ஓர் ஐ டெல் மை ப்ரோ…” உள்ளுணர்வில் என்ன கண்டானோ? பயந்தவன் போல மேலும் நடுங்கியவனாய்,

“ப்ளீஸ் லெட் மி கோ…” என்று உடலை முறுக்கியவாறு அழுதான்.

“ஐ டோன்ட் வோன்ட் டு டூ திஸ்…” என்று குழறினான்.

“ஐ கான்ட்…” என்றான்.

“ஓகே… ஓக்கே…” என்று எதையோ உளறினான்.

“ப்ரோ… சேவ் மி…” என்று உதடுகளைப் பிதுக்கினான்.

“ஐ வோன்ட் டு கோ டு மிஸஸ் ஜான்சி…”

“மிஸஸ் ஜான்சி… வியர் ஆர் யு…” அழுதான்.

“ஐ நீட் மிஸஸ் ஜான்சி…” கோமாய்ச் சொன்னான்.

ஏனோ அவனுடைய உளறல் விதற்பரையின் நெஞ்சைப் பிசைய, சற்றும் யோசிக்காமல் அருகாமையில் படுத்து, அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்து அவன் அடர் குழலை வருடிக் கொடுத்தவாறு,

“ஷ்… ஷ்.. அயன்… யு ஆர் ஓக்கே நவ்… யு ஆர் சேஃப்…” என்றாள் இதமாய். அவனோ தன்னருகே படுத்திருந்தவளை உணராதவாறு,

“ரனி ஐ லவ் யு…” என்றான் அடுத்து. ஏனோ அதைக் கேட்ட விதற்பரையின் உடல் அதிர்ச்சியில் உறைந்து போனது. அவனைக் குனிந்து பார்த்தாள். இந்தப் பெயர், அன்று அவர்கள் சாப்பிடப் போன இடத்தில் இவர்களைக் கவனிக்க வந்த அந்தப் பெண்ணின் பெயர் அல்லவா?

“ஐ பெக் யு ரனி… ப்ளீஸ் கம் டு மீ…” என்றான் அடுத்து.

இவளோ, அடியும் புரியாமல் நுனியும் புரியாமல், குழப்பத்துடன் அவனை வெறிக்க, அவனோ அடிபட்ட மானாய், முகம் கசங்க அழுதான். அந்த அழுகையில் மொத்தமாய்த் தொலைந்து போனவளாய், அவனை அமைதிப் படுத்துவது ஒன்றே முக்கியக் குறிக்கோளாக இருக்க, மீண்டும் அணைத்துத் தட்டிக் கொடுத்து,

“இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… என்று அவனைச் சமாதானப் படுத்தியும் அவனுடைய அந்தப் பயங்கர நடுக்கம் சற்றும் குறைவதாயில்லை. ஏதேதோ புரியாத வகையில் என்னென்னவோ உளற, இவளோ தன் கன்னத்தில் கண்ணீர் வழிவது கூட உறைக்காமல்,

“ஷ்… ஷ்… உங்களுக்கு ஒன்றுமில்லை… அதுதான் நான் இருக்கிறேன் அல்லவா… யு ஆர் சேஃப் நவ்…” என்று தட்டிக் கொடுத்தவாறு அவனை மேலும் தன்னுள் புதைத்தாள்.

ஏனோ அவனுடைய அந்த நிலையை அவளால் கண்கொண்டு கூடப் பார்க்க முடியவில்லை. அடிவயிற்றில் இனம்புரியாத வலி ஒன்று உருவாகி அடி நெஞ்சை அழுத்தியது. எப்படியாவது அவனுடைய வலியைப் போக்கிவிடச் செய்யவேண்டும் என்கிற வேகம் மட்டும் அவளிடமிருக்க, அவனுடைய தலை உச்சியில் தன் உதடுகளைப் பொருத்தி,

“ஷ்… யாரும் உங்களை விட்டுப் போகவில்லை… தூங்குங்கள்….” என்றாள் மென்மையாக.

அவள் குரல் கொடுத்த தைரியத்திலும், அவளுடைய கரங்களின் வருடலிலும், பிதற்றல் சற்று மட்டுப்பட, அவளுடைய அந்த மென்மையான பேச்சில் இறுக்கம் தளர்ந்தவனாகக் குளிர் மறைந்து உறக்கத்தின் வசமாக, இவளோ அந்த ரனி என்கிற பெயர் கொடுத்த குழப்பத்துடன், தன் விழிகளை மூடினாள்.

மெல்ல மெல்ல மயக்கமோ, தூக்கமோ என்னவென்று அறிய முடியாத ஒன்று அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்ள, இருவரின் உலகமும் இருளத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
18
+1
1
+1
4
+1
0
+1
5
+1
3
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

1 day ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 21

(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…

2 weeks ago