எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்… அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம் மெல்ல மெல்ல அத்தனை மகிழ்ச்சியைத் தொலைக்கத் தொடங்கியது.
அவள் நினைத்தது என்ன, அந்தப் பெட்டிக்குள் இருப்பது என்ன? அவளையும் மீறிக் கண்கள் கலங்கக் கீழ் உதடுகளைக் கடித்தவள், சிரமப்பட்டுத் தன் முகமாற்றத்தைக் காட்டாமல், அவனை நிமிர்ந்து பார்த்து,
“இது… இது எதற்கு?” என்றாள் ஏமாற்றத்தை வெளிக்காட்டாத வகையில். அவனோ அவள் கலக்கத்தைக் கண்டு கொண்டது போல இல்லை. புன்னகையுடன் அவளுடைய கரத்திலிருந்த பெட்டியை வாங்கியவன், அதில் அழகாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பிளாட்டினத்தில் வைரம் பதித்த கைச்சங்கிலியை வெளியே எடுத்து, விதற்பரையின் கரத்தைப் பற்றி அதில் கட்டிவிட்டு, அதன் அழகை ரசித்தான்.
“டு யு லைக் இட்?” என்றான் ஆர்வமாய். இவளும் தன் கரத்தில் வீற்றிருந்த அந்தக் கைச்சங்கிலியை வெறித்தவாறு,
“ஐ… ஐ…” என்றவளுக்கு ஏனோ அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. திக்கித் திணறிக் கமற முயன்ற குரலை அடக்குவதற்கே அவளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.
எத்தனை ஆவலாகக் காத்திருந்தாள். ஆனால் அத்தனையும் ஒரு நொடியில் உடைந்து போன கோட்டைபோல ஆகிவிட்டதே.
அப்போதுதான் கசங்கிய அவளுடைய முகத்தைக் கண்டான் அவ்வியக்தன்.
“ஹே… வட் ஹப்பன்ட்… யு ஆர் நாட் ஹப்பி…” என்று வருத்தத்துடன் கேட்க, அவசரமாகத் தன் வேதனையை விழுங்கியவள், முகத்தைச் சிரித்தாற் போல வைத்து,
“ந… நத்திங்… ஐ ஆம் ஹப்பி… ரியலி ஹப்பி… இந்தப் பரிசை எதிர்பார்க்கவில்லை என்பதால் கொஞ்சம்… அதிர்ந்துவிட்டேன் போல…. ஆனால், ந… நன்றி குட்டிமாமா… எனக்கு.. பிடித்திருக்கிறது…” என்றாள் கண்ணீரை உள் இழுத்தவாறு.
“ஐ ஆம் கிளாட்…” என்றவன், உணவைக் காட்டி,
“சாப்பிடு ஆறப் போகிறது…” என்றான்.
தலையை ஆட்டிவிட்டு உண்ணத் தொடங்கியவளுக்கு ஏனோ அந்தச் சாப்பாடு பெரும் கசப்பைத்தான் கொடுத்தது. எப்படியோ இருவரும் உண்டு முடித்ததும்,
“வேறு ஏதாவது சாப்பிடப் போகிறாயா?” என்றான் அவ்வியக்தன். மறுத்தவள்,
“இல்லை… வயிறு நிறைந்து விட்டது… போதும்…” என்று கூறி எழ, சாப்பிட்டதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, இவளிருந்த இருக்கைக்குப் பின்னால் செருகியிருந்த அவளுடைய மேல்சட்டையைப் போடுவதற்கு உதவி செய்துவிட்டுத் தன்னதையும் போட்டுக்கொண்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து கதவைத் திறந்த போது பனி ஆரவாரத்தோடு இவர்களை அணைத்துக் கொண்டது.
அவ்வியக்தன் அவளை நெருங்கி அவளுடைய கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்தவாறு நடக்கத் தொடங்க, அதுவரையிருந்த அழுத்தம் மொத்தமாய் மறைந்து போக இப்போது மீண்டும் ஆர்வம் துளிர்விட்டது.
இப்போது மோதிரம் கொடுக்கவில்லை என்பதற்காக எப்போதும் கொடுக்கமாட்டான் என்று பொருள் இல்லையே. இன்று கொடுக்கவில்லை என்றால் நாளை. நாளை இல்லையென்றால் நாளை மறு நாள். காலங்கள் இன்றோடு அழிந்து விடப்போகிறதா என்ன? இல்லையே.
மனம் சமாதானமாக, அவன் அருகாமையே போதும் என்கிற கிளுகிளுப்புடன், அவனோடு இணைந்து நடந்தாள்.
இப்போது அவளை அழைத்துச் சென்ற இடம் ஸ்கேட்டிங் நடக்கும் பகுதி. உலகின் மிகப் பெரிய ஸ்கேட்டிங் பிரதேசத்தில், ஒரு முறையாவது வழுக்கிச் செல்லவில்லை என்றால், அது கடவுளுக்கே அடுக்குமா என்ன?
ஏராளமான மக்கள் அங்கும் இங்கும் வழுக்கித் திரிந்த இடத்தைப் பார்த்தவாறே,
“ஸ்கேட்டிங் செய்யப் போகிறாயா?” என்றான்.
“ஆசையாகத்தான் இருக்கிறது… ஆனால் எனக்கு ஸ்கேட்டிங்கும் பெரிதாகத் தெரியாதே. ஒரு முறை பள்ளியில் படிக்கும் போது முயன்றிருக்கிறேன். அதைத் தவிர எனக்கு இதில் பரிட்சியம் இல்லை…” என்றாள் குறையுடன். அதைக் கேட்டு மெல்லியதாகப் புன்னகைத்தவன்,
“நீ கனடாவில்தான் பிறந்து வளர்ந்தாயா என்று ஆச்சரியமாக இருக்கிறது… ஸ்கீயிங் தெரியாது. ஸ்கேட்டிங் தெரியாது…? என்று கிண்டலாகக் கூறு, முகத்தைச் சுளுக்கியவள்,
“அம்மா பெரிதாக ஊக்குவித்தது கிடையாது அயன். எங்கே கை கால்களை உடைத்துவிடுவோமோ என்று பயம்… தவிர இவை பழக அதிகச் செலவாகும். அப்பாவால் கட்டுப்படியாகாது. அதனால் நம் ஆசையை அடக்கி வைத்தோம்…” என்றதும், தோள்களைக் குலுக்கியவன்,
“சரி வா… நான் சொல்லித்தருகிறேன்…” என்றவாறு, அதற்குரிய சப்பாத்தொன்றை அங்கேயே வாங்கி அவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் ஒன்றை வாங்கிப் போட்டவாறு, உறைந்து இறுகிய அந்தப் பனித் தரையில் இறங்கினான்.
அவனுடைய கரங்களைப் பற்றி மிகக் கவனமாக விதற்பரையும் இறங்கினாள்.
இறங்கியவளுக்குக் கால்கள் ஒரு இடத்தில் நிற்பதாயில்லை. அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி அங்கும் இங்குமாக இழுபட, கால்களின் வேகத்திற்குப் புத்தி செயற்படும்போல இல்லை.
ஒரு மாதிரி அவனுடைய கைப்பலத்தில் நிலையாய் நின்றாள் விதற்பரை.
“யு ஓக்கே…?”
“ம்…”
“கையை எடுக்கவா? சமாளித்து நிற்பாயா?”
“ம்…” சொன்னவளை நம்பித் தன் கரங்களை விட்டு சற்றுத் தள்ளிப் போய் நிற்க, கொஞ்ச நேரம் அசையாமல் நின்றாள் விதற்பரை.
சரி இனி கொஞ்சம் முயற்சி செய்யலாம் என்று எண்ணியவளாகக் கால்களை அசைக்க, அது தன் பாட்டுக்கு இழுபடத் தொடங்கியது.
இழுத்த கால்களை எப்படி நேராக்குவது என்று தெரியாமல் தடுமாறி விழத் தொடங்கிய நேரத்தில், வேகமாக அவளை நோக்கி வந்தவனின் கரங்கள் அவளுடைய இடையை இறுக பற்றித் தன்னோடு நெரித்து அவளை நிலை நிறுத்த செய்தவாறு சற்றுத் தூரம் இழுபட்டுச் சென்று, ஓரளவு தன் கால்களை அகட்டிச் சமநிலைப் படுத்தியவாறு நின்று, குனிந்து பார்த்தான்.
“பார்த்து தற்பரை…” என்றான் மென்மையாக.
அவன் கூறிய வார்த்தை இவள் செவிகளில் விழுந்தால் அல்லவோ. அவன் அணைப்பும், நெருங்கிய முகமும் மீண்டும் அவளை நிலையிழக்க செய்ய, தன்னை மறந்து அவனையே இமைக்காது பார்த்தாள். அந்த நேரம் பொழிந்த பனியின் அடர்த்தி இன்னும் சற்று அதிகரிக்க தொடங்க, அதில் ஒரு பனித்துளி அவளுடைய சிவந்த செவ் இதழ்களில் படிந்த கரைந்து போக, அதைக் கண்டவனுக்குள் ஏதோ பிரளயம் ஒன்று உருவாக தொடங்கியது.
அந்தக் கணம், இதழ்களில் பட்டுக் கரைந்த அந்தப் பனித்துளியாகத் தாம் இருக்க மாட்டோமா என்று ஏக்கம் கொண்டவன் போல, பெரும் விரல் கொண்டு அந்தப் பனித்துளியைத் துடைத்தவனுக்கு ஏனோ அந்த விரலை மீட்டெடுக்க முடியவில்லை.
அவளும் எதையோ தேடிப்பிடிக்கும் நோக்கோடு குறுகுறு என்று அவனுடைய விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்.
அதற்குள் நுழைய எங்கே இடம் கிடைக்கும் என்று ஆராய்வது போல, கண்மணிகளை அங்கும் இங்கும் அசைக்க, அந்த விழிகளின் வீரியத்தில், தன்னிலை கெட்டவனாக, அவளை நோக்கிக் குனிய முயன்ற விநாடி, ஒரு உருவம் அவனைப் பலமாக மோதிவிட்டுச் சென்றது.
மோதிய வேகத்தில் இருவரும் பின்பக்கமாகச் சரிந்து தொப்பென்று அந்தக் குளிரும் பனித் தரையில் விழுந்தனர்.
நல்லவேளை அவன் முன்னும் அவள் பின்னுமாக விழுந்ததால், அவள் முகம் அவனுடைய மார்பில் பலமாக மோதிக்கொள்ள. அவனோ, அவளுக்கு எங்கே அடிபட்டு விடுமோ என்கிற பயத்தில் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள, இருவரும் அணைத்த நிலையிலேயே இரண்டடி தூரம் வழுக்கிச் சென்று ஓரிடத்தில் மோதி நின்றனர்.
யார் அது கைக்கு எட்டும் நேரத்தில் வாய்க்கு எட்டாமல் செய்தது? அந்த அழகிய நிலையைக் கசங்கச் செய்தது யார் என்று சற்று ஆத்திரத்தோடு திரும்பிப் பார்த்தான்.
“ஊப்ஸ் சாரி… சாரி… வேகமாக வந்தேன், என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதிவிட்டேன்… மன்னித்து விடுங்கள்…” என்று ஒரு கறுப்பின ஆண்மகன் மன்னிப்பு வேண்டியவாறு, அவர்களை எழுப்பிவிடுவதற்காகக் கை நீட்ட, மெதுவாகத் தன் மீது விழுந்து கிடந்தவளை ஒதுக்கிவிட்டு, அவனுடைய கரத்தைப் பற்றி எழுந்தவன்,
“வோச் அவுட் மான்…” என்றான் தன் கடுப்பு மாறாமலே.
“சாரி மை ஃப்ரன்ட்…” என்ற அவன், அவளை நோக்கிக் கரத்தை நீட்ட, அந்தக் கறுப்பினத்தவனின் கரத்தைப் பற்றுவதற்காகத் தன் கரத்தை உயர்த்தியவளின் தளிர் கரத்தைத் தன் அழுத்தமான கரத்தால் பற்றி எழுப்பி விட்டு முறைப்பு மாறாமலே அந்தக் கறுப்பு இனத்தவனைப் பார்த்து,
“உன்னுடைய உதவிக்கு நன்றி…” என்றான் எரிச்சல் மாறாமல்.
பின் விதற்பரையைக் கவனமாக பற்றி, அவள் சமநிலை கொள்ளும் வரைக்கும் பிடித்திருந்தவன், அடுத்து என்ன செய்வது என்று கூற, அதன் படி அவள் கால்களைச் சற்று அகட்டி வைத்தவாறு நின்றாள். இப்போது இவன் மெதுவாகத் தன் கரத்தை விட விதற்பரையோ, அவன் கை விட்டதும், அலுங்காமல் வழுக்க தொடங்க, இவனும் அவளோடு வழுக்கிச் செல்லத் தொடங்கினான்.
கொஞ்ச நேரம் சுமுகமாக வழுக்கிச் சென்றவள், பின் மெதுவாக ஒற்றைக் காலை உந்தி, வேகத்தைக் கூட்ட முயல, அவள் அசைந்த வேகத்திற்கும், வழுக்கிக் கொண்டிருந்த வேகத்திற்கும் இடையில் பாரிய வேறு பாடு இருந்ததால் தன்னைச் சமாளிக்க முயன்றவள் முடியாமல் பொத்தென்று தரையில் விழுந்து கொஞ்சத் தூரம் இழுபட்டுச் சென்று அங்கே வழுக்கிக்கொண்டிருந்தவர்களுடன் மோதுப்பட. பிறகென்ன வரிசைக்கிரமமாக ஒருத்தரோடு ஒருத்தர் முட்டுப்பட்டுப் பொத்பொத்தென்று சங்கிலித்தொடராக விழத் தொடங்கினர்.
அதைக் கண்டு அடுத்த விநாடி விதற்பரையின் அருகே வந்து சேர்ந்தவன், அவளைப் பற்றி எழுப்பி விட, மீண்டும் கால்கள் அங்கும் இங்கும் இழுபட்டாலும் அதிர்ச்சியுடன், விழுந்துகொண்டிருந்த ஆட்களைப் பார்த்து அதிர்ந்து வாயைப் பிளந்தாலும், இப்படித் தொடர்ச்சங்கிலியாக ஆட்கள் விழுவதற்குத் தான் காரணமாகிவிட்டோமே என்று முதலில் வருந்தியவள், பின் தான் தள்ளிவிட்ட சற்றுப் பருமனான பெண்மணி எழ முயன்று தோற்றுக் கீழே விழுவதையும், அவர் விழ அவருக்குப் பக்கத்தில் எழ முயன்றவரும் தரையில் விழ மீண்டும் தொடராய் ஆட்கள் விழுவதையும் கண்டவளுக்கு அதற்கு மேல் தன் சிரிப்பை அடக்க முடிந்திருக்கவில்லை.
உடனே அவள் நிலையைப் புரிந்துகொண்ட அவன், அவள் சத்தமாகச் சிரிக்கும் முதலே அவளுடைய கரங்களைப் பற்றி இழுத்து சுழன்று சற்றுத் தள்ளிச் சென்றுவிட முதலில் விழுந்தவர் சுதாரித்துத் தன்னைத் தள்ளியது யார் என்று கோபமாகப் பார்ப்பதற்குள் விதற்ரையும் அவ்வியக்தனும் பல அடி தூரம் சென்றுவிட்டிருந்தனர்.
அதற்கு மேல் அடக்க முடியாதவளாகச் சற்று அண்ணாந்து கலகலகவென்று சிரித்தவளைச் சற்றுக் கோபமாகப் பார்த்தவன் கடைசியில் தானும் அவளோடு சேர்ந்து சிரிக்கத் தொடங்கினான்.
பின் அவனுடைய சிரிப்பு மெல்ல மெல்ல மறைந்து, அவள் சிரிப்பதை வெறிக்கத் தொடங்கினான்.
வெண்பற்கள் நன்றாக வெளியே தெரிய, அதற்குப் போட்டியாகச் சிரித்த விழிகளும், அதீத குளிரில் சிவந்த கன்னங்களும் நாசியும், சிவந்த செழித்த அதரங்களும் என அவனை மொத்தமாக விழுத்திச் செல்ல, அவனுடைய கரங்கள் அவளது இடையை மேலும் வளைத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டன.
விதற்பரையோ அவனுடைய பார்வை மாறியதைக் கவனிக்கவில்லை. தன் பாட்டில், நடந்த சம்பவத்தில் தன்னை மறந்து நகைத்தவளாய், கண்களில் வழிந்த கண்ணீரோடு,
“சா… சா… ஹா ஹா ஹா… சாரி… ஐ… ஐ கான்ட் ஸ்டாப்… ஹா ஹா ஹா லாஃபிங்…” என்று மேலும் மேலும் பொங்கி நகைத்தவளை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
எப்படியோ சிரமப்பட்டுத் தன்னுடைய சிரிப்பை அடக்கியவளாகத் தன்னையே விழுங்கிவிடுவது போலப் பார்த்த அவ்வியக்தனைக் கண்டு, நகைப்பு உதட்டிலேயே உறைந்து போக, அந்தப் பார்வையில் தொலைந்து போனாள் அந்தக் காரிகை. அவனுடைய விழிகள் கொடுத்த தாக்கத்தில், அதற்கு மேல் எதையும் யோசிக்கப் புத்தி வழிவகுப்பதாயில்லை.
உலகம் தன் சுழற்சியை மறந்தது, தம்மைச் சுற்றியிருந்த கோடானுகோடி மக்களும் துகள் துகள்களாகக் காற்றோடு மறைந்து போயினர், எலும்பைக் கூட உறைய வைக்கும் குளிர் சட்டென்று இதம் பரப்பும் வெம்மையாக மாறிப்போனது, ஆற்றங்கரை ஓரம் என்பதால் இன்னும் அதீத குளிருடன் வீசிய காற்று கூடக் கணப்படுப்பாய் மாறிப்போக, அவன் கரங்களை அணைத்திருந்த சுகத்தில் தன் பெயர் கெட்டாள் விதற்பரை.
அவள் அணிந்திருந்த ஆடைகளில் எந்த அங்கங்களும் வெளியே தெரியவில்லை. அவனும் அப்படித்தான். சைவருக்கும் கீழே ஐந்து பாகைக் குளிரைத் தாக்குப் பிடிக்கக் கூடிய தடித்த ஆடைகள்தான் இருவரும் அணிந்திருந்தார்கள். கைகளுக்குக் கையுறைகளும், தலைக்குத் தடித்த குல்லாய்களும், காதுகளுக்குள் குளிர் புகாதிருக்க, காதடைப்புகளும், என்றுதான் இருவருமே அணிந்திருந்தார்கள். ஆனாலும் தோலோடு தோல் உரசிய தகிப்பில் இருவருமே மெய்மறந்து நின்றனர் என்பதுதான் நிஜம்.
அவர்களின் மன நிலை டிஜேக்குக் கேட்டதோ, அந்த நேரம் பார்த்து இதமான பாடல் ஒன்றை ஒலிபரப்ப, அது எரியும் தீக்கு எண்ணெய் விட்டது போலானது.
When I get home, babe, gonna light your fire
All day I’ve been thinkin’ about you, babe
You’re my one desire
Gonna wrap my arms around you
And hold you close to me
Oh, babe I want to taste your lips
I want to fill your fantasy,
அவளைத் தன்னோடு அணைத்தவாறு சுழன்று சென்றவன் அவளை மேலும் தன் கைகளுக்குள் இறுக்க இவளோ அந்த அணைப்பில் சொர்க்கம் கண்டவளாய், அவனையே இமைக்காது பார்த்தாள். அந்த விழிகள் அவனைச் செயலிழக்க வைத்தனவோ? பின்னந்தலையில் தன் கரத்தைப் பதித்து, அம்மலர் முகத்தைத் தன் மார்பிலே பதியவைத்தவன் மறு கரத்தால் அவள் இடையை வளைத்துப் பிடித்தவாறு சற்றுத் தூரம் சென்று மெதுவாகச் சுழல,
I don’t what I’d do without you, babe
Don’t know where I’d be
You’re not just another lover
No, you’re everything to me
Every time I’m with you, baby
I can’t believe it’s true
When you’re layin’ in my arms
and you do the things you do
அவளுக்கும் அந்த நேரம் அவனுடைய அணைப்புத் தேவையாக இருந்ததோ…! வளைக்க முடியாத அவன் பரந்த முதுகைத் தன் சிறிய கரங்களுக்குள் அடக்க முயன்றவளாகத் தன்னோடு இறுக்கியவாறு அவனை அண்ணாந்து பார்க்க, அந்தச் செழித்த உதடுகள் அவனை அழைத்தனவோ. சுட்டு விரல் கொண்டு அவளுடைய உதடுகளை மெதுவாக வருடிக் கொடுக்க, அந்த உதடுகளின் சுவை எப்படி இருக்கும் என்று ஏக்கம் கொண்டவனாய் அதையே வெறிக்க, அந்த விரல்களும், அவனுடைய பார்வையும் உள்ளுக்குள் ஏதோ ஒரு பிரளயத்தை உருவாக்க, அந்த விழிகளின் வீச்சைத் தாங்கும் சக்தியில்லாதவளாக, அவனிடமிருந்து வழுக்கியவாறு விலகிச் செல்ல முயன்றாள்.
அவனோ விலகிச் செல்ல முயன்றவளை மேலும் இழுத்தவாறு கையுறை அணிந்த கரங்களால் அவளுடைய கன்னத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்த முயன்றான்.
ஏனோ கள்ளம் புகுந்த உள்ளத்தை வைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியாமல் குடை சாய்த்தாள் விதற்பரை. ஆனாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளுக்கு அவளையும் மீறி உதடுகள் நடுங்கத் தொடங்க, அதை அடக்கும் முகமாக மேற் பற்களால் கடிக்க, அவனோ, தன் பெரு விரல் கொண்டு அந்த உதடுகளைப் பிரிக்க முயன்றவாறு… அவளுடைய உதடுகளை நோக்கி முன்னேறினான். கரங்களோ ஒரு வித வேட்கையுடன் அவளுடைய இடையோடு, பின் முதுகெனத் தவழ்ந்து சென்று அப்படியே கீழ் முள்ளந்தண்டுப் பகுதியில் அழுத்தமாகப் பதிந்துகொண்டது.
அதற்கு மேல் அவனுடைய விழிகளின் வீரியத்தையும், அணைப்பு கொடுத்த அவஸ்தையையும் தாங்கும் சக்தி இல்லாமல், அவனுடைய மார்பில் தன் நெற்றியைப் பதிக்க,
I wanna kiss you all over
And over again
I wanna kiss you all over
‘Til the night closes in
‘Til the night closes in
Stay with me, lay with me
Holding me, loving me, baby
Here with me, near with me
Feeling you close to me, baby
மயிரிழையில் அவள் உதடுகளைத் தொடமுடியாது போன ஏமாற்றத்தோடு, கிடைத்த இடத்திலாவது உதடுகளைப் பொருத்திவிடலாமே என்கிற தாபத்துடன் அவளுடைய உச்சந்தலையில் தன் உதடுகளைப் பதித்துச் சற்று நேரம் இளைப்பாறி நின்றான் அவன்.
அவளோ அவன் உதடுகள் கொடுத்த தகிப்பைத் தாங்கும் சக்தியில்லாமல் விலக முடிய, விட்டானா அவன்? அவளுடைய கரத்தை அழுந்த பற்றி, மேலும் தன்னை நோக்கி இழுத்துத் தன் முன்னுடலோடு அவளுடைய பின்னுடலை மோத வைத்தவனின் உதடுகள் சற்றும் யோசிக்காமல் கழுத்தைச் சுற்றியிருந்த மஃப்ளரில் பதிய, அத்தனை ஆடைகளையும் மீறி அவனுடைய முத்தத்தின் சூடு அவள் தோள்களைச் சென்றடைந்து, உடல் முழுவதும் பல இரசாயன மாற்றத்தைக் கண்ணிமைக்கும் நொடியில் பரப்ப, அதன் சூடு தாங்க முடியாமல் அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது விதற்பரைக்கு.
அவனோ அவளை இன்னும் விட்டுப் பிரிய முடியாதவனாக, ஒரு வித தாபத்துடன் அவளுடைய மேல் கரங்களிலிருந்து அப்படியே தன் கரங்களைக் கீழே கொண்டு சென்று அவளுடைய உள்ளங்கைகளைப் பற்றி, விரித்துப் பிடித்தவாறு சற்றுத் தூரம் இழுத்துச் சென்று சுழன்றவாறு அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான். அவளுடைய முகத்தை உள்ளங்கைகளால் பற்றித் தூக்கியவனின் விழிகள் அவளுடைய விழிகளுடன் ஒரு கணம் ஆழப் படிந்துகொண்டது. அந்த விழிகளில் என்ன கண்டானோ, அதுவரை பளபளத்த அவனுடைய விழிகள் மெதுவாய்க் கனிந்து உருகிக் குழைந்து போயிற்று. உதடுகளோ என்றுமில்லாததாய், எதையோ வேண்டுவன போல இளகிப்போயிற்று. அவளுடைய விழிகளில் கூடிக் குலாவி நின்ற அவனுடைய விழிகள் மெதுவாய்க் கீழிறங்கித் துடித்த அந்தச் செவ்விய இதழ்களில் தஞ்சம் புகுந்துகொண்டன.
உதடுகளா அவை? அப்பப்பா… இரண்டு மாங்கனிகளை அழகாய் வெட்டி ஒட்டி வைக்கப்பட்டு இருக்கிறதோ? ஏனோ அந்தக் கணமே அந்தச் சிவந்த உதடுகளைச் சுவைத்துப் பார்க்கவேண்டும் என்கிற வெறி அவனைப் பாடாய்ப் படுத்த, அந்த நேரம்தானா ஒரு சில பனித் துகள்கள் அவளுடைய உதட்டில் பட்டுக் கரைந்து போகவேண்டும். அப்பப்பா… சும்மாவே அவள் அருகினில் தகித்துக்கொண்டிருந்தவனுக்கு இது போதாதா. அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தியில்லாதவனாக, அவளுடைய உதடுகளைத் தன்னுடைய உதடுகளாhல் ஆழமாக அழுத்தமாக ஆவேசமாக அவசரமாக ஆத்திரத்தோடு பற்றிக் கொள்ள, விதற்பரையோ அந்த முத்தத்தை இனிமையாய் ஈடுபாட்டோடு, இசைந்து, ஈகையுடன் இன்பமாய் நுகர்ந்தாள், உணர்ந்தாள், பெற்றாள்.
இதழ் முத்தம் என்பது வெறும் உணர்ச்சியின் பிடியில் வருவதல்ல. அது காதலுக்கும் காமத்துக்குமான தூதுவன். காதலின் முழுமையும், காமத்தின் ஆரம்பமும் சங்கமிக்கும் அற்புதத் தருணம். அங்கே நான் நீ என்பது தெரியாது. யார் எவர் என்று புரியாது. அனைத்தும் மாயையாகிப்போன ஒரு வித உன்னத உணர்வு.
அந்தக் கணம், அந்த நேரம் உலகை மறந்து தம்மை மறந்து ஒருவருக்குள் ஒருவர் புதைந்துகொள்ளும் வேட்கையோடு பல்லாயிரம் காதலர்களில் ஒருவராய் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இதழ்களை அறுசுவையுடன் உண்டு கழித்திட்ட நேரம் எத்தனையோ.
(33) வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…
(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…
(30) நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…
(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…
(28) மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பாதையில் அவர்கள் மட்டும் தனியாய். உயிர் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் வேகமாகப்…