Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-22

(22)

விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் வந்துபோவார்கள். இங்கே மிகப் பிரசித்தி பெற்றது, ‘ஹிதோ கனல் ஸ்கேட்வே’. ஆறுகளுக்கு இடையில் சுமார் எட்டுக் கிலோமீட்டர் வரைக்கும் குளிர்காலங்களில் உறைந்துபோன நிலையில் பனிச்சறுக்கல் செய்ய மக்கள் குழுமுவார்கள். உலகிலேயே மிகப் பெரிய பனிச்சறுக்கல் பிரதேசம் இதுதான். அதற்காகவே சுற்றுலாப்பயணிகள் தொகையாக வருவார்கள்.

இந்த வின்டர்லூட் விழாவில் உறைய வைக்கும் குளிரை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு மக்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் தம்மை மறந்திருப்பர். திறந்தவெளி உணவகம் முதல், உள்ளே அமர்ந்த உண்பதற்கான உணவகங்கள் வரை ஏராளமாக இருக்கும். இந்த விழாவில் உறைபனி சார்ந்த அத்தனை விளையாட்டுகளும் இடம்பெறுவதோடு, போட்டிகளும் நடக்கும். அதில் சுலபத்தில் அத்தனை பார்வையாளர்களையும் கவருவது, ‘க்ரிஸ்டல் கார்டனில்’ உள்ள பனிச்சிற்பப் போட்டிதான்.

பனிக்கட்டிகளைத் தத்துருபமாகச் செதுக்கி. சிற்பங்கள் செய்வதில் சிற்பிகள் கைதேர்ந்தவர்கள். அந்தச் சிற்பங்களைக் காண்பவர்களுக்கு இமைகளைத் தட்டக்கூட முடியாமல் விரித்திருப்பர்.

விதற்பரைக்கு இந்தத் திருவிழாவைக் காணவேண்டும் என்று கொள்ளை ஆசை. ஏன் நீண்ட நாள் ஆசை என்றே சொல்லலாம். தந்தையிடம் கேட்டபோது கூட, அழைத்துச் செல்வதாகக் கூறினாரே தவிர, அவருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏன் ஒட்டாவாவிற்குப் படிக்க வந்த இத்தனை நாட்களில் கடந்து சென்ற ஒரே ஒரு பனிக்காலத்திலும் அவளால் அங்கே செல்ல முடியவில்லை.

ஆனால் அந்த ஆசையை அறிந்து அழைத்து வந்துவிட்டானே. நன்றியில் கண்கள் பணிக்க, அவனை நாடிச் சென்று இறுக அணைத்து விடுவித்தவள்,

“நன்றி குட்டிமாமா… மிக மிக நன்றி… இந்த விழாவைப் பார்க்கவேண்டும் என்று எத்தனை நாட்கள் ஆசைப்பட்டேன் தெரியுமா?” என்றாள். அவனோ முகத்தைக் கசங்கியவாறு வைத்து,

“இந்தக் குத்திமாமாவை விட்டாலே எனக்கு நன்றி சொன்னது போலத்தான்…” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு, பனிச் சிற்பம் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கே விதம் விதமான உருவச் சிலைகள் அழகுறச் செதுக்கி வைத்திருக்க, திறந்த வாயை மூடாது பார்த்து ரசித்துக் கொண்டு வந்தாள்.

அதை இமைக்காது ரசித்தவாறு பின்தொடர்ந்தான் அவன். கிடைத்த அத்தனை சிற்பங்களையும் தன் கைப்பேசியில் படமாய்ச் சேகரித்தவளுக்குக் குதுகலம் பிடிபடவில்லை.

ஒரு பக்கம் மயில் ஒன்று தோகை விரித்தாடியது. மறு பக்கம் தாய் மான் தன் குட்டி மானோடு அன்பு மொழி பேசியது. இன்னொரு பக்கம் பனிக் கரடி எழுந்து நின்று பயமுறுத்தியது. மறு பக்கம் குதிரை ஒன்று பாயத் தயாரானது. இன்னொரு இடத்தில் காதல் தேவதைக் கரங்களை விரித்துக் காதலுடன் பார்த்தாள். சற்றுத் தள்ளி இயேசு நாதர் சிலுவையில் அறையப் பட்டிருந்தார். அதைக் கண்டதும் கரங்களைக் கூப்பி மேலும் கீழும் ஆட்ட, அதைக் கண்டு,

“இயேசுவை இப்படியா கும்பிடுவார்கள்…” என்றான் நகைப்புடன். இவளோ தோள்களைக் குலுக்கிவிட்டு,

“எப்படிக் கும்பிட்டால்தான் என்ன… நான் கும்பிடுகிறேன் என்று அவருக்குத் தெரியும்தானே… அது போதும்… சிவலிங்கத்திற்கு முன்னால் போய் முட்டுக்காலில் அமர்ந்து ஆமேன் சொன்னாலும் தப்பில்லை, இயேசுநாதர் முன்னால் பிரதட்டை செய்து விழுந்து கும்பிட்டாலும் தவறில்லை… எப்படிக் கும்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை… மனதாரக் கும்பிடுகிறோமா என்பதுதான் முக்கியம்…” என்றவள், திரும்பி அவனைப் பார்த்து,

“நீங்கள் எப்படி… சாமி கும்பிடுவீர்களா?” என்றாள் ஆர்வமாய். தன் தோள்களைக் குலுக்கியவன்,

“ம்கூம்… இதுவரை சாமி கும்பிட்டது கிடையாது. கும்பிடவேண்டும் என்று தோன்றியதும் கிடையாது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் இறங்கியதுமில்லை. பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருக்கிறேனா என்பதை மட்டும் பார்த்துக் கொள்வேன். அவ்வளவுதான்…” என்று கூற, மகிழ்வுடனே அவனுடைய கரத்தைப் பற்றித் தன்னோடு அணைத்தவாறு மேலும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் விதற்பரை.

சற்றுத் தூரத்தில் ஒரு பக்கமாகச் சிற்பிகள் பனிக்கட்டிகளைச் செதுக்கிக்கொண்டிருக்க, ஓடிப்போய் ஆர்வமாக பார்த்தாள். அவளுடைய ஆர்வத்தைக் கண்ட ஒரு சிற்பி,

“நீயும் முயன்று பார்க்கப்போகிறாயா?” என்று கேட்க, குதுகலமாகவே சம்மதித்தவாறு அவரிடமிருந்து வேண்டிய பொருட்களை வாங்கியவள், அவர் சொல்லச் சொல்லச் செதுக்கினாள். குதுகலித்து மகிழும் அவளுடைய எழில் கண்டு, தன் விழிகளை விலக்க முடியாதவனாக அவளையே பார்த்திருந்தான் அவ்வியக்தன்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் இடைவிடாது செதுக்கியவளுக்கு ஒரு கட்டத்தில் கைகள் ஓய்ந்து போகக் கூடவே ஆர்வமும் மங்கிப் போயிற்று. ஒரு சிற்பம் செய்யக் கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். வெறும் அரை மணி நேரம் ஒரே வேலையைச் செய்யும்போதே இத்தனை சலிப்புத் தட்டுகிறதே. இவர்கள் எப்படித்தான் தொடர்ந்து செதுக்குகிறார்களோ. வியந்தவளாய் தன் கரத்திலிருந்த கருவிகளை அந்தச் சிற்பியிடம் கொடுத்துவிட்டு,

“உங்கள் அனைவரையும் நினைக்க மிக ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்ச நாட்களில் உருகிப்போக கூடிய இந்தச் சிற்பத்திற்காக இத்தனை மினக்கெட்டு நீங்கள் செதுக்குவது வியப்பாக இருக்கிறது…” என்றாள் தன்னை மறந்து.

மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்த சிற்பி,

“உலகில் எதுவும் நிரந்தரமில்லை பெண்ணே… அதற்காக வாழ்க்கையை வாழாமலா போய்விடுகிறோம்… அதுபோலத்தான் இதுவும். இன்னும் கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடப் போகின்ற இந்தப் பனிக்கட்டிக்கு உருவங்கள் கொடுக்கிறோம்… நான்கு பேரை மகிழ வைப்பதுதான் இந்தச் சிற்பத்திற்கான வெற்றி…” என்று கூற, அதை ஆமோதித்தவளாக, விடைபெற்று வந்தவளை, மேலும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான் அவ்வியுக்தன்.

கிட்டத்தட்ட ஆறு மணியளவில் இருவருமே களைத்துப் போக,

“போதும் அயன், இனி புறப்படலாம். நடந்து நடந்தே என் கால்கள் வலிக்கின்றன…” என்றாள் மெய்யான களைப்புடன்.

“சரி வா… முதலில் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்…” என்றதும் மறுக்காமல் அவனோடு கிளம்பினாள் விதற்பரை.

நிஜமாகவே அவளுக்கு பசிக்கத் தொடங்கியிருந்தது. நடந்த நடையில் சாப்பிட்ட சாப்பாடு முழுவதும் செரித்து விட்டது.

தன்மீது விழுந்த பனிப் பூக்களைக் கைகள் நீட்டி ஏந்திக்கொண்டவள் அண்ணாந்து பார்த்தாள். சற்று இருண்டுகொண்டு வந்திருந்தது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் அதீத பனி பொழியும் போல…” என்றவளின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்குள் அழைத்துச் செல்ல, அங்கே இன்னொரு உலகம் விரிந்தது.

அது காதலர்களுக்குரிய உணவகமோ? எங்குப் பார்த்தாலும் சிவப்பும் வெண்மையும் என்று அலங்காரம் மங்கிய ஒளியில் கண்களைப் பறித்தது. ஒவ்வொரு மேசையிலும் செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்து அதில் சிவந்த ரோஜா இதழ்களைப் போட்டு அதில் வர்ண மெழுகுதிரிகளை ஏற்றி மிதக்க விட்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம், உள்ளத்தை இளகச் செய்யும் மெல்லிய காதல் ததும்பும் இசை இதமாய்க் காதுகளை வருடிச் சென்றது. நிச்சயமாகக் காதலர்களை மதிமயக்கச் செய்யும் இடம்தான் அது சந்தேகமேயில்லை.

போதாததற்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்களின் நெருக்கத்தைக் கண்டவளுக்கு அத்தனை சுலபத்தில் விழிகளை விலக்க முடியவில்லை. எத்தனை அழகான இடம். காதல் கொண்டவர்களைச் சுண்டி இழுக்கும் இடமாக அல்லவா இருக்கிறது. இங்கு எதற்கு அழைத்து வந்தான்? ஒரு வேளை.. நினைத்தவளுக்கு யாரோ தன் மீது பூக்களை வாரிக் கொட்டிய உணர்வு. உள்ளம் குதியாட்டம் போடத் அவ்வியக்தனை ஏறிட, அவனும் இவளைத்தான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பார்வை சொன்ன மொழியில் என்றுமில்லாத வகையில் முகம் சிவந்து போனது.

கூடவே உள்ளம் குதியாட்டம் போட்டது. அவள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் வந்துவிட்டது. தன் காதலைக் கூறத்தான் இங்கே அழைத்து வந்திருக்கிறான். ‘கடவுளே மகிழ்ச்சியில் இதயம் நிற்காமல் தொடர்ந்து துடிக்க வேண்டுமே…’ அவளையும் மீறி நெஞ்சம் அதிர, உதடுகளைக் கடித்தவாறு தன் படபடப்பை அடக்க முயல, அதைக் கண்ட அவ்வியக்தன்

“ஹே… என்னாச்சு…?” என்றான் வியப்புடன்.

இவளோ ஐயோ கண்டுகொண்டானே… என்று திக்கித் திணறி,

“எ… என்னவா…? ஹீ.. ஹீ.. அது… ஒன்றுமில்லையே… ஏன்… கேட்கிறீர்கள்…” என்றாள் தாராளமாக அசடு கொட்டியவாறு.

“இல்லை உதடுகளைக் கடித்தாயே… அதுதான் கேட்டேன் என்றவனைக் காதலுடன் பார்த்தாள் விதற்பரை. ஆனாலும்,

“உதடுகளைக் கடித்தால் ஏதாவது தேவையென்று அர்த்தமா?” என்று இவள் ஏட்டிக்குப் போட்டியாகக் கேட்க, இவனோ தன் தோள்களைக் குலுக்கிவிட்டு,

“மற்றவர்களைப் பற்றித் தெரியாது, நீ அப்படித்தானே செய்வாய்… எதையாவது கேட்கச் சங்கடப்பட்டால், இல்லை சொல்லத் தெரியாமல் தயங்கும்போது இப்படித்தானே செய்வாய்” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

அதைக் கேட்டு இவளுடைய உள்ளம் பெருமையில் விம்மியது.

என்ன மாதிரி அவளைப் புரிந்து வைத்திருக்கிறான். மலர்ந்து போனாள் விதற்பரை.

அதற்கிடையில்,

“ஹாய்… ஹெள ஆர் யு…?” என்றவாறு வந்தாள் ஒரு அழகிய வெண் தேவதை. மிக மிக அழகாக இருந்தாள். மாடலிங் துறைக்குள் நுழைந்தால் நிச்சயமாகப் பெரிய இடத்திற்கு வருவாள்.

வந்தவளுடைய விழிகள் முன்னால் நின்றிருந்தவனைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்து பின் யோசனையில் சுருங்கிப் பின் விரிந்தன.

இவனோ, மெல்லிய புன்னகையுடன் அவளுடைய முள்ளந்தண்டு முடியும் பகுதியில் தன் கரத்தைப் பதித்து அப்படியே இடை வரை கொண்டு வந்து தன்னோடு இறுக்க, விதற்பரைக்கு மொத்தமும் தொலைந்து போனது. அத்தனை தடித்த ஆடைகளையும் மீறி அவனுடைய கரங்கள் வெற்றிடையில் பட்டது போன்ற தித்திப்பில் மயங்கிக் கிறங்க, இவனோ தன் அழகிய புன்னகையைச் சிந்தியவாறு,

“குட் ரனி… ஹேள ஆர் யு…” என்றான் இதமாய்.

“ரனியா… அப்படியானால் இவளை இவனுக்கு முன்பே தெரியுமா?” வியந்தவாறு நிமிர்ந்து பார்த்தவள், அவ்வியக்தனின் விழிகளில் தெரிந்த மின்னலையும், அதையும் தாண்டித் தெரிந்த ஏதோ ஒரு வித குறுகுறுப்பும் இவளைக் குழம்ப வைத்தது.

“மீ… டு… அன்ட்… திஸ்…” என்று அவளைப் பார்த்து, அழகாய் புன்னகைத்தவன், விதற்பரையைப் பார்த்து ஒற்றைக் கண் அடித்துவிட்டு, மேலும் அவளைத் தன்னோடு நெருக்கி,

“மை….” என்று இழுத்தவாறு ரனியைப் பார்க்க, இரு பெண்களும் அவனுடைய பதிலுக்காக ஒவ்வொரு விதமாகப் பரபரப்புடன் காத்திருந்தனர்.

இப்போது விதற்பரைக்குத் தன் இதயத்தின் துடிப்பு காதுவரை கேட்டது. என்ன சொல்லப் போகிறான்? எப்படி அறிமுகப் படுத்தப் போகிறான்…. காதலி என்பானா? என் உயிர் என்பானா? திருமணம் முடிக்க இருக்கும் பெண் என்பானா? என்ன சொல்லப் போகிறான்…’ பெரும் ஆர்வத்துடன் காத்திருக்க, அவனோ, நிதானமாக

“மை… கேர்ள் ஃப்ரன்ட்…” என்றான்.

அதைக் கேட்டதும் இரு பெண்களின் முகமும் மாறிப் போனது. ரனியின் முகம் கண்டிக் கறுத்துப் போக, விதற்பரையின் முகமோ வாடிப் போயிற்று.

வெறும் பெண் தோழிதானா… காதலி என்று சொன்னால்தான் என்னவாம்?” எரிச்சலுடன் நினைக்க, எப்படியோ சமாளித்த ரனி, பிடிக்காத ஒரு புன்னகையைச் சிந்தவிட்டு,

“வெல்கம் டு அவர் ரெஸ்டாரன்ட்…” என்றுவிட்டு, உணவுகளுக்கான பட்டியல் அடங்கிய தடித்த அட்டைகள் இரண்டை இழுத்து எடுத்தவாறு,

“ஃபொலோ மீ…” என்றாள்.

இருவரும் ரனியைப் பின் தொடர்ந்தனர்.

குறிப்பிட்ட இடம் வந்ததும், சற்று ஒதுக்குப்புறமாக இருந்த இடம் நோக்கி அழைத்து வந்தவள்,

“இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கிறதா? இல்லை வேறு இடம் பார்க்கவா?” என்றாள் அவ்வியக்தனின் மீது நிலைத்த விழிகளை விலக்காமல்.

“நோ… திஸ் இஸ் பேர்ஃபெக்ட்… தாங்ஸ்…” என்றவன், தன் தடித்த மேற்சட்டையைக் கழற்ற முயன்றுகொண்டிருந்த விதற்பரையை நெருங்கி, அதைத் தானே கழற்றி, அங்கிருந்த இருக்கையை இழுத்து அதன் பின்புறமாகக் கொளுவி விட்டு,

“உட்கார்…” என்றான்.

அவனுடைய கரிசனையில் நெஞ்சம் நெகிழ்ந்து போனாள் விதற்பரை.

அவர்கள் இருவரும் அமர்ந்ததும், உணவுப்பட்டியல் அடங்கிய அட்டையை அவர்களுக்கு முன்பாக வைத்துவிட்டு,

“ஏதாவது அருந்த போகிறீர்களா? வைன், ரம், இல்லையென்றால்… மதுரசம்…” தொழில் முறை புன்னகையோடு கேட்டாள்.

“இல்லை… நான் வண்டி ஓட்டவேண்டும்… அதனால் மது எதுவும் வேண்டாம்…” என்றவன் நிமிர்ந்து விதற்பரையைப் பார்த்து,

“நீ ஏதாவது குடிக்கப்போகிறாயா? நீ மதுபானம் குடிக்க மாட்டாய் என்று தெரியும்?” என்றவன், திரும்பி ரனியை ஏறிட்டான்.

“வெறும் தண்ணீர் போதும், கூடவே சூடாய் இருவருக்கும் காபி எடுத்து வாருங்கள்…” என்று அனுப்பிவிட, அவள் சென்றதும், விதற்பரையோ ஆவலாக அவனைப் பார்த்தாள். இவளைக் காதலிப்பதாக எப்போது சொல்லித் தொலைக்கப் போாகிறான்? எரிச்சலுடன் நினைக்கும் போதே,

“தற்பரை…” என்றான் அவ்வியக்தன். இவள் ஆவலுடன் நிமிர்ந்து பார்க்க,

“என்ன சாப்பிடப்போகிறாய்?” என்றான்.

‘ம்கும்…. ரொம்ப முக்கியம்…’ என்று எரிச்சலுடன் எண்ணிவிட்டு, அந்த எரிச்சலுடனே அவனைப் பார்த்து ஈ என்றுவிட்டு வேண்டா வெறுப்பாகத் தன் கரத்திலிருந்த அட்டையைத் திறந்து என்ன உணவைத் தருவிப்பது, என்று பார்க்கத் தொடங்க, இருவருக்குமே, சுடச் சுடக் காப்பி வந்து சேர்ந்தது.

அதில் ஒன்றை எடுத்து, விதற்பரைக்குப் பிடித்தாற் போலக் கலந்து கொடுத்துவிட்டுத் தன்னதையும் ஒரு குவளையில் வார்த்து, ஒரு மிடறு விழுங்கியவாறு, உணவுப் பட்டியலைப் பார்க்கத் தொடங்கினான். சற்றுப் பொருத்து,

“உணவுக்குத் தயாரா?” என்று கேட்டவாறு பேனாவும் காகிதமுமாக வந்தாள் ரினா.

வந்தவளின் பார்வையோ, அவ்வியக்தனை விழுங்குவது போலப் பார்த்து வைத்தது.

ஒரு சில நிமிடங்களில், அவளுக்கும் தனக்கு வேண்டியதைக் கூறி முடித்துவிட்டு உணவு அட்டையை மூடி வைக்க, நன்றியுடன் விடை பெற்ற ரனி போகும் போதே, அவர்கள் முன்பாக இருந்த அட்டைகளையும் எடுத்துக்கொண்டு செல்ல, அவள் கண்ணுக்கு மறையும் வரைக்கும் காத்திருந்த விதற்பரை அவ்வியக்தனின் பக்கமாகக் குனிந்து,

“அந்த ரனியின் பார்வையே சரியில்லை தெரியுமா? உங்களைத் தின்பது போலப் பார்க்கிறாள்…” என்றாள் பொறாமையில் வெந்தவாறு.

அதைக் கேட்டதும், வாய்விட்டே சிரித்தான் அவ்வியக்தன்.

“என்ன கெக்கே பிக்கே சிரிப்பு சிரிக்கிறீர்கள்? நான் சொல்வதை நம்பவில்லையா” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.

“என்ன… பொறாமையா?” என்றான் கிண்டலாக. இவளோ ஆத்திரத்துடன் அவனைப் பார்த்துவிட்டு,

“பொறாமையா.. எனக்கா… வாய்ப்பேயில்லை… ஏதோ… சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொன்னேன்…” விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கணக்காகச் சொல்ல, மேசையிலிருந்த அவளுடைய கரத்தைச் சட்டென்று பற்றினான் அவ்வியக்தன்.

பொறாமை இருந்த இடம் காணாமல் போக, படபடப்போடு அவனைப் பார்த்தாள்.

ஒரு வேளை மோதிரம் போட போகிறானா? கற்பனை ஏகத்துக்கும் எகிறியது.

அவனோ அவளுடைய கரத்தைத் திருப்பி, அதன் உள்ளங்கையை வருடிக் கொடுத்து,

“சோ சாஃப்ட்…” என்று அவள் ஆசையில் அப்போதைக்கு மண் அள்ளிப் போட்டான். பின் அக் கரத்தை விடாமலே விதற்பரையை ஏறிட்டவன்,

“யாருடைய கடைக் கண் பார்வை என் மீது பட்டாலும் நான் பொருட்படுத்த மாட்டேன்… ஆனால் நீ… உன்னுடைய பார்வை மட்டும் என்மேல் பட்டால் போதும்… இந்த உலகத்தில் பெறுமதி மிக்கவன் நானாவேன்…” என்றான் மென்மையாய் கிசுகிசுப்பாய் அதுவும் சுண்டி இழுக்கும் காந்தக் குரலில்.

அதைக் கேட்டதும் விதற்பரையின் முகம் வெட்கத்தால் மொத்தமாய்ச் சிவந்து போனது.

அவளுடைய பார்வை மட்டும் பட்டால் போதும் என்றால் அதன் அர்த்தம் என்ன? இவளை அவன் காதலிக்கிறான் என்றுதானே பொருள்… ஏனோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆடவேண்டும் என்கிற வேகம் எழ, சிரமப்பட்டு அந்த உணர்ச்சியை அடக்கியவளாய், அவசரமாகத் தன் கரத்தை விலக்கி விட்டு,

“ம்கும் இதை நேரடியாகச் சொன்னால்தான் என்னவாம்… குறைந்தா போவீர்கள்?” எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுக்கும் போதே, அவர்கள் சொன்ன உணவு மேசைக்கு வந்தது. நல்ல வேளை கொண்டு வந்தது ரனியில்லை. வேறு யாரோ. வந்தவள் அழகிய புன்னகையைச் சிந்தியவாறு,

“வேறு ஏதாவது சாப்பிடப் போகிறீர்களா?” என்றாள்.

“வேண்டாம்… நன்றி..” அவரை அனுப்பிவிட்டு, மேசையில் வைத்த உணவை எடுத்தவாறு விதற்பரையைப் பார்த்தான் அவ்வியக்தன்.

“தற்பரை…” என்றான் மென்மையாய். மறு கணம் அத்தனை உலகமும் அழகாகிப் போக, ஆவலுடன்,

“ம்…” என்றாள் நெஞ்சம் படபடக்க. அவனோ தன் பான்ட் பாக்கட்டிற்குள் இருந்து சிறிய வெல்வெட் பெட்டி ஒன்றை எடுத்து அவள் முன் நீட்ட, விதற்பரைக்கு அந்த மகிழ்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

இதோ அவள் எதிர்பார்த்த அழகிய தருணம். அவளை நிச்சயம் செய்யப் போகிறான். ஏனோ மகிழ்ச்சியில் அவளுடைய மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. முகம் சிரித்து மகிழ்ந்தாலும், அது என்ன என்று அவனுடைய வாய்வழியாகக் கேட்கும் ஆவலுடன்,

“இது…. இது என்ன…” என்றாள் திக்கித் திணறி.

“திறந்த பார் புரியும்…” என்று எப்போதும் போலக் கிறங்கடிக்கும் புன்னகையைச் செலுத்த, வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதத் தருணத்தை நெருங்கிவிட்டோம் என்கிற குதுகலத்துடன், தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் மெதுவாக அந்தப் பெட்டியைத் திறந்தாள் விதற்பரை.

What’s your Reaction?
+1
19
+1
7
+1
2
+1
1
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

1 day ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 21

(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…

2 weeks ago