அத்தியாயம் 5
மாப்ளே.. எனும் குரலில் திரும்பிப் பார்த்தான் மகிழ் வேந்தன் .
நீலா ஃபோனு கதறிகிட்டே கெடக்கு , எங்க அந்தப் புள்ள.. என்று கேட்கவும் கை காட்டினான்.
அவள் கோவிலில் இருந்து வெளியேறி வருவதும், உழுது கொண்டிருக்கும் ட்ராக்டர்களைக் கண்டு சற்றே தயங்குவதும், பின் அவசரமாக வரப்பு வழியே நடந்து வருவதும் அவளுக்கு பின்னாலேயே வரும் இந்திரனையும் பார்த்துக் கொண்டேயிருக்க.. காதருகில் வந்து தாழ்ந்த குரலில் பேசினான் செந்தில்,
” அவனுங்க கிணறு மட்டுமா தூர் வாருறேன்ங்கற பேர்ல ஆக்ரமிப்பு பண்றானுங்க.. பாதையும் பாதி தொலவட்டுக்கு கடிச்சு வச்சுருக்கானுங்க, இதையும் ஏன்னு கேட்க மாட்டியா நீ.. என்று பொருமவும்,
ப்ச் என்றவன், நீலாம்பரி அருகில் வந்ததும், அலைபேசியை அவள் புறமாய் நீட்டியவன், “எங்கே போனாலும் கைல வச்சுக்க நீலு. எத்தனவாட்டி சொல்லிருக்கேன்..” எனவும்,
அமைதியாக வாங்கி சோதித்தவள், “அப்பா ஏன் கூப்பிட்டுருக்காங்க?” என்றவாறு அழைத்து காதில் வைத்தாள்.
“ப்பா.. கோவிலுக்கு போனேன்.. ஆங்.. மொட்டை போடறதுக்கு தான் பத்து நாளு இருக்கே.. அப்பறமேட்டு வாங்கலாம்.. பட்டு பாவாடை, பொடவ திருநவேலி டவுன்ல தான் வாங்கனும். சின்னத்தை செய்யறேன் சொன்னாங்களே.. பெரியத்தை யா.. என்னையா,
சரிப்பா, ஞாயிறு மஞ்சு கூட போறேன். சரிப்பா..”
என்று பேசிக் கொண்டிருந்தவளை மெதுவாக கை பற்றி தங்களது தோட்டத்தின் பக்கமாக மகிழ் வேந்தன் இழுக்க, அவனுடைய இழுவைக்கு நகர்ந்தவாறே.. இந்திரனை திரும்பிப் பார்த்து புன்னகை சிந்திவிட்டு பேசிக் கொண்டே சென்றாள் .
ஒரு கையசைவில் மீண்டும் ஆட்களை ஏவி, பாதையை வரப்பாக மாற்றும் வேலையை செய்ய வைக்கும் அண்ணனின் அருகில் சென்ற இந்திரன், ” ஸ்… ஏன் பாரி? பூசாரி கூட என்னப் பாத்து மொறச்சான். கோவில் ஆட்கள்ட்ட தேவயில்லாத பிரச்சனை பண்ற நீ. இதெல்லா நம்ம ப்ளான்ல இல்லியே..” எனவும்,
என்றவனை ஏறிட்டுப் பார்த்தவன், ஊருணி மடைல இருந்து நிலங்களுக்கு தண்ணீர் வர்ற பாதைய சீரு பண்ணா இந்த ரெண்டு குழியும் நெல்லு பயிரு வைக்கலாம்னு நேத்து பேசினோமே.. இப்போ அங்கே தான போயிட்டு வர்ற.. அதை பாத்திட்டு வந்தியா? என்றான்.
“அது.. இல்ல ..” என்று தலையசைத்தவனை கண்கள் சுருக்கிப் பார்த்தவன், சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு குரல் இறக்கி, “அத விட்டு அவ பொறத்தாலே போய்கிட்டு… நீ போற வழி எனக்கு பிடிக்கல கேட்டியா.. ****** நேத்து அவளுக்கு கல்யாணம்னா உனக்கு ஏன்டே பதறுது.. என்னா கண்டவுடன் காதலா.. ?” என்று உறுமியவனை கீழ்க்கண்ணால் பார்த்தவன்,
ப்பூ பூ…. என மெலிதாய் விசிலடித்தவாறு தன் அத்தானுடன் நடந்து செல்லும் அவளைப் பார்த்தான்.
“காதலா… தெரியல. ஆனா பிடிச்சுருக்கு. என் கற்பனை ஃபியான்ஸிக்கு 60% ஒத்து வந்திட்டா, மிச்சம் நாப்பதும் இருக்கிறான்னு தோனிட்டா.. ஹூம்.. ஃபிக்ஸ் ஆகிடுவேன்.” என்று சிரிப்பவனை கொலை வெறியாகப் பார்த்தவன், வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து..
“இங்க வெட்டியா நின்னுட்டு இருக்கிற அந்த ஆளுங்களக் கூட்டிட்டு போய் வாய்க்கால் தூரு வார்ற வேலையப் பாக்க சொல்லு..” எனவும் ,
“சரி ” என்றவாறு திரும்பி மீண்டும் அவள் பக்கமாய் திரும்ப போனவன், “ஊருணி பாத்து போடாங்கறேன்.. ” எனும் அதட்டலில், தோளைக் குலுக்கி விட்டு, “ஏற்கனவே பாதைய குறுக்கிட்டன்னு அந்த பூசாரி கடுப்பில இருக்கான். நீ அந்த பக்கமே திரும்ப திரும்ப வைக்கிற.. சூடம் காட்ற தட்டாலேயே மண்டல போட போறான்.. ம்.. சரி போறேன்.” என்றவாறு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தான் .
அப்போது பாதையை கொத்திக் கொண்டிருந்தவன் தூக்கிய ஜேசிபியின் இயந்திரக் கரத்தில் இருந்து கொட்டிய மண்ணோடு கொத்தாக வந்து விழுந்தது ஒரு பாம்பு. விழுந்த வேகத்தில் படமெடுத்து நின்ற அதனை பார்த்த இந்திரன் துள்ளிப் பின் வாங்கியவன், பக்கவாட்டில் இருந்த வயலுக்குள் குதிக்க, அவனின் அசைவில் மிரண்ட அந்தப் பாம்பு வேகமாக பாரியை நோக்கி வந்தது.
ஜேசிபி ஓட்டிக் கொண்டிருந்தவன் பதறி அலறினான், அய்யா ஓடுங்கய்யா.. பாம்பு உங்கள பாத்து தா வருது.
, அசையாமல் நின்றவன் கண்கள் மட்டும் சுற்றிலும் பார்க்க , காலில் இருந்து சில அடிகள் தள்ளி கீழே கிடந்த மண் வெட்டி கண்டு அதனை எடுக்க குனிய, அவனின் அசைவில் மூர்க்கமடைந்த நாகம் சீறியபடி மூன்றடி எழும்பி முன்னால் வந்து சரியாக அவனின் கையை பதம் பார்த்த நேரத்தில், அதன் மீது வந்து விழுந்தது ஒரு பெரிய மண்கட்டி..
அதன் நடு உடலில் மண் கட்டி விழுந்திருக்க, பாரியின் கைக்கு வந்திருந்த மண் வெட்டி அதன் தலையின் மீதே விழுந்து துண்டித்திருந்தது.
பாரீ…
அத்தான்..
வேந்தா… என கத்தல்கள் கேட்க முன்னால் சரிந்து மண்டியிட்டு கைகள் ஊன்றி நிலைப்படுத்திவன்.. தலை அடிபட்டு இருந்தாலும் வாலில் அசைவு இருப்பது கண்டு மீண்டும் ஒரு முறை அடித்தான்.
அதற்குள் மண் கட்டியை எறிந்து அவனைக் காப்பாற்றி இருந்த மகிழ்வேந்தன் ஓடி அங்கே வர, பின்னோடு அவனை அழைத்தபடியே வந்தனர் நீலாம்பரியும் செந்திலும்.
அவசரமாக ஓடி வந்த வேந்தன், பாம்பு அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடப்பது கண்டு, முகம் இறுக, பாரியை குனிந்து பார்த்தான்.
தரையில் முட்டியிட்டு அம்ர்ந்திருந்தவனைக் கண்டு, பதட்டத்துடன் தூக்கி விட முயல,
தொடாதே.. என்றவன்.. மண் வெட்டியைத் தூக்கி போட்டு விட்டு தானே கையூன்றி எழுந்து நின்றான்.
செந்தில், சத்தமாய், “க்க்கும்.. என்ன தொடாதே.. ன்னு கூப்பாடு வேண்டிக் கெடக்கு. எங்க வேந்தன் மட்டும் சுதாரிச்சு ஒரு செகண்டுல மண்ணாங்கட்டியத் தூக்கிப் போடலேன்னா, நீ இந்நேரம் அதுட்ட கடி வாங்கி மண்ணக் கவ்விட்டு கிடந்துருப்ப மக்கா. இவேம் சலம்பலு தாங்கல..” என்று சத்தமாய் முணுமுணுத்தவன், எழுந்த அவன் தள்ளாடுவது கண்டு, “என்னா முட்டி உடஞ்சுருச்சா.. இல்லே பாம்பு ஒரு போடு போட்ருச்சா..?” என்றான் நக்கலாக.. அதற்குள் இந்திரனும், கிணறு தூர் வாரிக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்திருக்க, இந்திரன் தன் தமையனைத் தாங்கிக் கொண்டான்.
“பாரி .. பாரி ஒன்னும் இல்லை ல.. பேசு.. கடிக்கலைல” என்று கேட்டவனை பற்களைக் கடித்தவாறு நிமிர்ந்து பார்த்தவன்,
“ஏன் கத்தற, நல்லாத்தானே இருக்கேன்.” என்றவாறு தன் கையினை உற்றுப் பார்த்தான்.
வலது கையின் மேற்புறத் தோலில் சிறு சிறு கீறல்கள் தென்பட்டன. ஒரு ரத்தப் புள்ளி வேறு தெரிந்தது.
அப்போது அவனின் அருகில் வந்த நீலாம்பரி பதட்டத்துடன் ,” எங்கே கையைக் காட்டுங்க ” எனவும் ,
கைகளை உதறியவன், “ஒன்னும் தேவையில்ல.” என்றவாறு நகர முற்பட,
“அய்யோ கையைக் காட்டுங்க, பாம்பு கடிச்சிருக்கா ன்னு பாக்கனும். செந்திலண்ணே, சொர்ணாவை கூட்டி வாங்க. பாம்பு கடிச்சதுக்கு, மருந்து மூலிக பறிச்சிட்டு வரச் சொல்லுங்க.” என்றவாறு அவன் அருகில் செல்ல, வேகமாக நகரத் தொடங்கியவன் அவள் நகர்வில் பாதை மறித்ததில் எரிச்சலுற்று கையை உதறினான்.
பதட்டத்துடன் ப்ச் என்றவள்,
அடிபட்டு கிடந்த பாம்பை உற்று நோக்கி மனம் படபடக்க , “நாகப் பாம்புங்க.. நீங்க பாட்டுக்கு கண்டுக்கிடாம இருக்காதீங்க..” என்றவள் இந்திரனிடம்
“ஏங்க, நீங்களாச்சும் உங்க அண்ணாச்சிக்கு சொல்லுங்க. எதிர்பட்டது நாகப் பாம்பு.. கடிச்சிருந்தா ரொம்ப ஆபத்து, அரை மணிக்குள்ளாற ட்ரீட்மெண்ட் பாக்கனும். ஆசுபத்திரிக்கு கூட்டிப் போங்க. அதுக்கு முன்னே கையை, கடிபட்ட இடத்தில நல்லா கழுவிட்டு , தேவைன்னா முழங்கைக்கு கிட்ட விஷம் உடம்புல ஏறாம இருக்க ஒரு கட்டு போடனும். ” எனவும்
அவளை முறைத்தவன், “நான் தான் சொல்றேன்ல கடிக்கல. அதுக்கு முன்னேயே நான் அடிச்சிட்டேன். நீ போ..” என கத்த,
மனம் கேட்காமல் அருகில் நின்றிருந்தவர்களிடம், “அண்ணாச்சி நீங்க தண்ணீர் கொண்டு வாங்க.. சோப்பு ஏதும் இருக்கா.. ஆங் என் பையில இருக்கும். செந்திலண்ணே, எடுத்து வாங்க. இந்தர் உங்கண்ணாச்சி நடக்கக் கூடாது. அந்த கிணத்து மேட்டுல உட்கார வைங்க..” என்று அடுத்தடுத்து சொல்லவும், கண்டு கொள்ளாது நடக்க முற்பட்டவன்,
சகோதரனால் அழுந்தப் பற்றப் பட்டு அமர வைக்கப்பட , முதலில் தள்ள முயற்சித்தவன், பின்பு கையில் உணர்ந்த வித்யாசமான உணர்வால் சிடுசிடுவென முகத்தை வத்தவாறு அமர்ந்தான்.
“கையை நீட்ட சொல்லி கழுவச் சொல்லுங்க .” என்றவாறு இந்திரனை பார்க்க அவன் வேகமாக பாரியின் கையைப் பற்றி காட்டினான். வேகமாக தண்ணீரை ஊற்றியவள் செந்தில் கொணர்ந்த சோப்பினை இந்திரனிடம் தர, அவனும் காயத்தின் மீது தடவி கழுவி விட. . வெளிச்சத்தில் உற்று நோக்க இரண்டு மிக லேசான இரத்தப் புள்ளிகள் கீறல்கள் போலத் தெரிந்தன.
மகிழ்வேந்தனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆழமா படல.. கடிச்சுருக்கா என்னன்னு தெரியல. ” மகிழ்வேந்தனின் புறம் திரும்பி, “அத்தான். எதுக்கும் ஆன்டி வேனம் கொடுத்திட்டா தேவலாம். நடக்கக் கூடாது.. தூக்கிட்டு போங்க.” என்றவளை முறைத்தவன்,
“இந்திரா, அந்த காண்ட்ராக்டர்ட்ட இன்னிக்கு கொடுத்த வேலைகளையெல்லாம் பாக்க சொல்லு.. நா போய்க்கிடுவேன். யாரும் ஏதும் செய்ய வேண்டாம். ” என்றவன், எந்த பதட்டமும் இன்றி கோவில் அருகே நிறுத்தப் பட்டிருக்கும் வாகனம் நோக்கி நடந்து செல்லலானான்.
துளியும் தடுமாற்றம் இன்றி விரைப்பாய் செல்லும் அவனையே சில நொடிகள் பார்த்தவள், மகிழ் வேந்தனும் செந்திலும் ஏற்கனவே தங்கள் வயல் புறமாய் செல்லத் தொடங்கியிருப்பது கண்டு , விரைந்து அவளும் சென்று இணைந்து கொண்டாள்.
செந்தில், “என்னா ஆளு இவன்? ஒதவி செய்ய வர்ற ஆட்களைக் கூட ஒட்ட
விடாத வெரட்டுற ஆள இப்பத்தா பாக்கிறேன். ஹூம். ” எனவும்
சன்னமாய் சிரித்தவன், “சில பேர் அப்படித்தான். அதும் இவன்.. சரியான இடும்பு (திமிர்) புடிச்சவன். இனி நாம ஒதுங்கிப் போறது தா நல்லது. நீலு, நீ இனி கோவிலுக்கு இந்த வழி வராதே.. உனக்கு சாயங்காலத்துக்குள்ள நம்ம கார்த்திக் நிலத்து கிணத்து ஓரமா ஒரு பாதை எடுக்க சொல்லி ஊருணிக் கரை வழியா நடக்கறாப் போல செம்ம பண்ணிடறேன். ” எனவும்,
நீலாம்பரி, ” எதுக்கு அத்தான். இங்க இருக்கிற வேல வுட்டு போட்டு அத பாக்க வேணாம். ம்ம் அம்மாவாச கொடைக்குள்ள பண்ணிட்டா போதும். கார்த்தி அண்ணே மகளுக்கு மொட்ட போட்டு காது குத்தறது அன்னிக்கு தான் முடிவு பண்ணிருக்காங்க. ஆடி பட்டத்துக்கு நிலங்கள ரெடி பண்ணனும், விதைங்க நேர்த்தி பண்ணனும் வேற..”
உடன் நடந்து வந்து கொண்டிருந்த செந்தில், “ஆங் நம்ப தாசில்தார்ட்ட எழுதிக் கொடுத்தா நூறுநா வேல பாக்கப் போறேன்னு சால் அடிச்சிட்டு திரியறவங்கள வச்சிட்டு, அந்த ஊருணிக் கரைய உயர்த்தறது பண்ண வச்சிடுவாங்க, அது பொது வேல தானே.” என்றவனின் தோள் தட்டி எதிரே காட்டினான்.
” செஞ்சிற கிஞ்சிற போறாங்க. அடுத்த அம்மவாசைக்கு தா பண்ணுவானுங்க. அந்த பாரி சொன்னது கேட்டில்ல , அவனுங்க மடை வழில தூர் வாரக் கெளம்பிட்டானுங்க.. அப்புறம் நாம கரையெடுக்கவும் தகராறுக்கு வருவானுங்க. அவனுங்க அங்கன வருமுன்னே இன்னிக்கு பண்ணிடறது நல்லது. அப்படியே இங்கத்தி நெலவரமெல்லா கோயில் ட்ர்ஸ்ட் ஆட்கள் காதில போட்டு வச்சிரனும்.” என்றவன்,
அமைதியாய் நடக்கும் மாமன் மகளை திரும்பி பார்த்து, ” என்ன நீலூ.. இன்ன யோசனை? அந்த பாம்பை கையோட தூக்கிப் போனா ட்ரீட்மெண்ட் ஈஸியா இருக்கும்னு மண்டைக்குள்ள ஓடுதா, பாம்பை இரண்டடி தோண்டின குழிக்குள்ள பாலூத்தி புதைக்கனுமே.. மஞ்சள் குங்குமம் எல்லாம் வைக்கனுமே.. அப்படின்னு ஓடுதா
புன்முறுவல் சிந்தியவள், அதெல்லா அப்போவே ஓடி முடிஞ்சுடுச்சு.. அதான் ஒதுங்கிப் போறது நல்லதுன்னு சொல்லிட்டீங்களே.. அப்பவே அந்த நினப்புங்களையும்.” என்றவாறு ஊற்றி முடியாச்சு என்பது போல சைகை செய்தவள், அடுத்த வாரம் கார்த்தி அண்ணன் அண்ணி வீட்டாளுங்களும் வருவாங்க போலத் தெரியுது அதுக்கு என்ன ஏற்பாடு பண்ணேன்னு யோசிச்சேன்.
அதெல்லாம் நேத்தே பெரிய மாமா சொல்லிட்டாரு, அவங்கள பாவநாசம் சசிகுமார் லாட்ஜில தங்க வச்சு , நேரா கோயிலுக்கு வரச் சொல்லிடலாம்னு.. கார்த்தியும் அவன் சம்சாரமும் வேணா இங்கே வீட்ல தங்குவாங்களா இருக்கும்.
ம் ம்.. பெரியம்மா பெரியப்பா என்ன சொல்றாங்களோ என்றவர்கள் எதிரே அரக்க பரக்க ஓடி வந்த சொர்ணாவைப் பார்த்து நின்றனர்.
வந்தவள் அவசரமாக கத்தியை எடுக்க, யாத்தே என்று அலறினான் செந்தில்
மூச்சு வாங்கியவாறு, பா.. பா.. பாம்பு கடிச்சிருச்சாமே. யாருக்கு, உடனே கடிவாயை வெட்டி ரத்தத்தை வெளியேத்தனும்.. கையா காலா.. எங்கே என்றவாறு எல்லோரையும் ஆராய..
ஆங் மூக்கு.. என்றான் செந்தில்.
என்னாது மூக்கா? என வாய் பிளந்தவளிடம்,
ஆமா.. ஆனா அந்த பேஷண்ட் மூக்குல கத்தி விட்டு ஆட்டப்போற ஒன் ட்ரீட்மெண்ட் பத்தி தெரிஞ்சு எப்பவோ எஸ்கேப்பு.. இந்நேரம் டவுனு ஆஸ்பத்திரி பெட்ல போய் விழுந்திருப்பான். எனவும்
பக்கென்று சிரித்தான் மகிழ்வேந்தன்..
நாயகன் ஆடுவான்…
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…