உ ப்பா…
NPNN 2
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு… உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு..
ஜீப்பில் இணைக்கப்பட்ட ஒலி பெருக்கி தன்னால் இயன்றளவு சத்தமாய் பாடிக் கொண்டிருக்க, இலைக்கட்டுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை, நெல்லிக்காய் , கொய்யாப்பழங்கள் என மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்க அவற்றை தன் கையில் இருந்த சீட்டில் குறித்தவாறு மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் மகிழ் வேந்தன்.
வாய் , மாங்குயிலே பூங்குயிலே பாடலுடன் இணைந்து சன்னமாய் பாடிக் கொண்டிருக்க.. மனமோ நேற்று வீட்டில் நடந்த சம்பாஷணைகளில் லேசாக பரபரப்புற்று இருந்தது.
திடீரென மாமன் கல்யாணம் என்று சொன்னதும், அப்போது வந்த தாய் தகப்பன் அதையே ஆதரிப்பது போலப் பேசியதும், முழி பிதுங்கி விட்டது. அனுபவத்துடன் இணைந்த படிப்பறிவும் கை கொடுக்க ஓடத்தொடங்க வேண்டிய வேளையில் கால்கட்டு போட்டு உட்கார வைக்கப் பார்க்கிறார்களே என்று யோசனையுடன் பார்க்க, நல்லவேளையாக அம்மச்சி உலக நாயகி வந்து போட்டாரே ஒரு போடு..
ஏனய்யா! அதாம் ஆறு மாசம் நேரம் நல்லால்லங்கேல்ல, அப்புறம் இந்த நல்லது மட்டும் செஞ்சா சரிவருமா.. வெசனமா இருந்தா குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போய்வா. நம்ம கண்மாக்கார அய்யனாருக்கு ஒரு பொங்க வையி.. நல்ல நேரம் வந்தபின்னே நிச்சயமென்ன? கண்ணாலமே வச்சிடலாம். எனவும்,
லேசாக அதிர்ந்தாலும் ஆமா என்றும் இல்லாமல் இல்லையென்றும் இல்லாமல் தலையை ஆட்டி வைத்தான்.
கல்யாணம்!!!
அவனின் ப்ரியமான நீலு.. இதுதான் அம்மா, அப்பா அம்மச்சி என்று சொல்லி வளர்க்கப்பட்டது போல, பொண்டாட்டி என்று சொல்லி வைக்கப்பட்டவள்.. மிக இனிமையான தோழி. அவனின் கோமாளித்தனங்களை ரசிப்பவள், எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பவள். ஆனாலும் கல்யாணம்!! இரு குடும்பத்திலும் தலை மக்கள், பொறுப்பு பொறுப்பு என்று ஊட்டி வளர்க்கப் பட்டவர்கள். பாசமும் நேசமும் வாஞ்சையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டாலும்… தலைவன் சிலாகிக்கும் அந்த வஸ்து, உணரப்படவே இல்லியே என்று எண்ணங்கள் பரவ,
சிறு முறுவலுடன்
‘கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா,
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா..’ என்று பாடியவாறே , உரித்த தேங்காய் ஏற்றும் வண்டியை நோட்டமிட்டவன், லேசாக விரிசல் விட்டிருந்த காய்களை எடுத்து தனியே எறிந்தான்.
“ஏ முத்து, அதையெல்லா ஒடச்சு தேமோரு தயாரிக்க இடத்துக்கு அனுப்பு.” என்றவாறு
எலுமிச்சை மூட்டைகளை எடுத்தவனின் காதுகள் பழக்கமான ஒலியினால் கவரப்பட எட்டிப் பார்த்தான்.
நீலாம்பரிதான்.
வழக்கம் போல பகல் நேர வயல் வேலைகளை மேற்பார்வையிட வந்து விட்டாள் போலும். மஞ்சள் நிறத்தில் சன்ன சரிகையிட்ட சுடிதாரில் கண்களைக் கொள்ளையடிக்க,
‘வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி.’ என சரியாக பாடி உசுப்பேற்றினார் பாலு.
அவளோ இறைபட்டுக் கிடந்த பொருட்களைப் பார்த்து விட்டு,
“என்ன அத்தான் இன்னும் சந்தைக்கு வண்டி கெளம்பலையா? ” என்றவாறே வந்தவள், அவன் விலகி எலுமிச்சை மூட்டையை எடை பார்க்கும் பலகை மேல் ஏற்றுவதைக் கவனித்து வேகமாக வந்து மூட்டையை கவனித்து, அனுமானமாய் எடைக்கல்லை எடுத்து வைத்தாள்.
“இதோ நீலு.. இன்னும் ஒரு அரைக்கிலோ கல்லு வையி.. தோ.. இதெல்லாம் எடை பார்த்து ஏத்திட்டா அனுப்பிடலாம். ” என்றவாறு கணக்கை எழுதியவன்,
“ஏன் நீலூ திருநெல்வேலி போகனும்னியே வர்றியா எனக்கும் கலெக்டர் ஆஃபீஸ்ல வேல இருக்கு, அப்படியே சந்தைக்கு போயிட்டு வரலாம். இன்றைக்கு நாட்டு மாடுங்க விற்பனைக்கு வருதாம். ” என்றவனை சிறு சிரிப்புடன் பார்த்தவள்,
“உள்ள மாடுங்களை பாக்கவே ஆளு கெடைக்காம திண்டாடிட்டு கெடக்கோம். இன்னும் மாடு எதுக்கு , உங்க ஆளு பாடுன செண்பகம் போலவே மாடு கன்னுக்குட்டினு தேடுனா கிடைக்குமா.. ” எனவும் பற்கள் தெரிய சிரித்தவன்,
“ப்ச்.. அதுக்கா இல்ல, நிசம்மாவே நாட்டு மாடுங்க வருதாம் , ஒனக்கு தெரியும் தானே, நம்ம ஆர்கானிக் ஃபெர்ட்டிலைசர்ஸ் தயாரிப்பில நாட்டு மாடுங்க தர்ற உரம் வேற ஏதும் தராது. மூனு மாசம் முன்னே அப்பா வாங்கின மாடு தோதில்ல கேட்டியா, பாலும் போடற தீனிக்கு தக்க இல்ல , ஈத்துக்கு(சினை பிடிக்க) விட்டும் ஒன்னும் தேறல.. ” எனவும்
ஆமோதிப்பாய் தலையசைத்தவள், “நீங்க போயிட்டு வாங்க அத்தான், இங்கே கொடிக்காய்கறி பந்தலுக்குள்ள வேல இருக்கு. பிஞ்சு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. துணி போட்டு மூடறது, கவாத்து பண்றது கல்லு கட்டி விடறது பாக்கனும். இன்னைக்கு அஸோலா பெட் வேற ரெடி பண்ண போறேன். ஆங், தேங்கா மண்டில பணம் இன்னிக்கு தருவாங்க. நாம யோசிச்சது போலவே கருங்கோழி அஞ்சும் இரண்டு சேவலும் வாங்கியாங்க.. ”
“அசோலா பெட் தனியா பண்ணிடுவியா. முத்து அவ்ளோ வெவரம் காணாது. நாளைக்கு பண்ணலாமே.. நா ஃப்ரீ தான்.”
“ஆங் அப்படித்தா சொல்வீங்க. அப்புறம் வீஏஓ பாக்கனும், தாசில்தார்ட்ட கையெழுத்து வாங்கனும் கெளம்பீருவீங்க. செந்திலண்ணே இருக்காருல்லா..”
“இருக்கே இருக்கே.. செந்தில் இருக்க பயமேன்.” என்று சொல்லியவாறு இளநீர் குலையை தொப்பென்று போட்டவன்,
“ஏலே முத்து இந்த எளநீ நாலு வெட்டு தாகத்துக்கு குடிப்போம்..” எனவும்,
கையிலிருந்த துண்டால் ஒரு போடு போட்டவன், “என்னா வேல செஞ்சு சாச்சுட்புட்டவே, எளநீ குடிக்க கிளம்புத?”
“நல்லா கேளுங்கண்ணே
. களையெடுக்கற ஆட்களோட வாய்ச்சவடால் பேசி வேலையத்தா கெடுக்காக.. சின்னப்பயலுவ மீனு புடிக்கானுங்க. அவங்களோட சத்த நேரம் ஆட்டம்.. ஒரு வேல பாக்கல. ” என்றாள்.
முறைத்தவன், “ஏம்மா சொர்ணாக்கா.. நீ களையா வெட்டுன, நீ பாக்க வேலைக்கி மூலிக தேத்திட்டு கிடந்த. வேந்தா, அங்கால பாரு, இரண்டு ஒரப்பையி நெறய சேத்தி வச்சிருக்கா.. நா ஒருத்தே இல்லைன்னா ஒன் நாலு வேலி வெள்ளாமைக் காட்ட ஆரு காபந்து பண்ணுவா.. இப்ப கூட அவசரமா நா ஒங்கிட்ட சொல்ல ஓடி வந்தே, அந்த க்ருஷ்ணா கேட்ஸ் பசங்க இல்ல, அய்யனார் கோயில் எடத்தில நிக்கிறானுவ.. என்னவோ புழுதி ஓட்டப் போறவனுங்க மாரி குறுக்கால நெடுக்கால நடந்துட்டு திரியறானுங்க. பாழடஞ்ச கெணத்த எட்டிப் பாக்குறானுவ.. வா வந்து என்னான்னு கேளு. ”
ஹூம் என்று மறுப்பாய் தலையசைத்தவன், “இந்த வருசம் ஏலத்தில அவனுங்க அந்த இடத்தை எடுத்திருக்கானுங்க.. ”
அதிர்ச்சியான செந்தில், “அப்படியா , இந்த கொடும எப்ப நடந்தது. இரண்டு வருசமா தண்ணியில்ல, இந்த வட்டம் கோட மழ பெஞ்சு கண்மால தண்ணீ வந்திருக்கு. கோவிலு ஒட்டி நெல்லு போடலாம்னு பேசினோமே , எல்லாம் போச்சா..
நீலாம்பரி, “நான் கூட அக்ரி ஆஃபீஸ்ல இருந்து தக்கைப்பூண்டு வெத வாங்கிட்டு வந்தே அத்தான். இன்னிக்கு ஒர் உழவு போடச்சொல்லி வெதக்கனும்னு.. வரப்போரம் நட அகத்தி கீர வெத கூட..”
தலையசைத்தவன், “வேணாம் விடு.. நம்ம பூர்விக நெலம் மேக்காம இருக்கில்ல , அதை ஒழவு போட்டு பண்ணிக்குவோம். சொர்ணம், நீ நீலு கூடமாட ஒத்தாசையா இரு, அசோலா பெட்டு போட.. இவன் ஏதும் சொதப்பாம பாத்துக்க..”
“என்னா மாப்பிள்ள வெளாடுறே. காட்டுல எதுக்கடா பெட்டு?” என்றவனின் பொடனியிலேயே ஒரு அடி போட்டவன்.
“ஏ கூவ, சத்தமா பேசாதடா, கால்நடத் தீவனத்துக்கு அசோலா பாசி வளக்க, தார்ப்பாய் துணில கொளம் போல ரெடி பண்ணிப் போடனும். அதாம்லே பெட்டு..”
ஆங் என்று விழிதாதவன், “அதா, அம்மாம் பெரிய கம்மா இருக்கே , எதுக்கு சின்னதா குளம் தோட்டத்தில கட்டனும், அந்த கம்மாயில போட்டா என்ன?”என தலையைச் சொறிய,
“ஏலே.. அதுக்கு வெயிலு ஆவாதுடா.. ப்ச் ஒனக்கு பாடம் எடுத்து முடிக்காங்க காட்டியும் போடா, எம்மா மூலிக ராணி சொர்ணா, இவனுக்கு கூறு வளருதுக்கு ஏதாச்சும் மூலிக இருந்தா அரச்சு ஊத்து.. எனக்கு சோலி கெடக்கு கிளம்புதேன்..” என்றவன் ஜீப்பின் ஓட்டுனர் இருக்கையில் ஏறியமர்ந்தான்.
மற்ற வண்டியின் ஓட்டுனர்களையும் பெயரிட்டு அழைத்தவன், நீலாம்பரியிடம் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்.
சுற்றுப்புறத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஒலி எழுப்பியபடி அந்த ஜீப் நகர,
” இந்த சவுண்டூ பார்ட்டீ ஜீப்பூ மாத்துன்னா கேக்க மாட்றான்.. எம்மா நீலாம்பரீ, உன்ட்ட ஒரு கேள்வியும் கேட்கலம்மா.. நீ காலால இட்ட வேல நா தலையால செய்யறே சொல்லு நா , என்னாம்மா செய்யனும். ” என கேட்கவும்,
சொர்ணா வாய் பொத்தி சிரித்து,
“எப்படி நீலா, காலால சைக்கிள் ஓட்டுற வேல சொன்னா நீ தலையால நின்னு ஓட்டுவியா..?” எனவும்
முறைத்தவன், “ஏ மூலிக சிகாமணி, நீ போய் மருந்து தேத்துற வேல பாரு, இங்க எந்தங்கச்சி சொல்ற வேல எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும் . போம்மா.. போஓஓஓஓ..”
“அதா வேந்தண்ணே செல்லிட்டாகளே.. நீ சொதப்பாம பாத்துகறது தா, அதாவுது ஒன்னிய மேற்பார்வ பாக்கத்து தா என் வேலையே..” என சொல்லியவாறு கெத்தாக அங்கிருந்த மூட்டை மீது அமரப் போனவள்,
“அண்ணே இந்த மூட்டைங்கள்ல தா அஸோலா பெட்டு போட பையிங்க இருக்கு.. எல்லாம் தூக்கிட்டு மேக்கால காட்டுக்கு போலாம். ” எனவும்
அவசரமாய் சொர்ணாவின் பக்கம் வந்தவன், “ஆங் மொதல்ல இந்த ஆவாத மூட்டைய இழுத்து கடாசுறேன்.”என்றவாறு தூக்கச் செல்வது போல பாவனை செய்ய,
ம்க்கும் என்று நொடித்தவள், சட்டென்று எழுந்து ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
நீலாம்பரி, ம்மோவ், நேராப் போ, அஸோலாக்கு நிழல் வேணும். கோழிப் பண்ணைல இடம் ஒதுக்க சொல்லிருக்கே, வாங்க ஆளும் பேருமா எடுத்துபோய்டலாம், என்றவாறு தானும் ஒர் மூட்டையை எடுக்க போக,
செந்தில், அட நீ போம்மா.. நானும் இந்த மூலிக ராணியும் இரண்டு நடையா எடுத்தாறோம். நீயி போய் ஒன் வழக்கம் போல சாமிய கும்பிட்டு, கோயிலுக்கு எதுக்கால உள்ள நிலத்துல கத்தரிக்கு தண்ணீ பாச்சீருக்கானுவாளான்ன் மட்டும் ஒரு எட்டு பாத்திட்டு வந்துடு.” என்றவாறு மூட்டையினைத் தூக்கினான்.
ஆ.. சரிண்ணே, இதோ பத்து நிமிஷத்தில வந்துடறேன், அங்கே கோயிலு நிலத்துப் பக்க கொடவுனுல தா விதைங்க இருக்கு , எடுத்துட்டு வந்திடறேன்.. என்றவாறு நடக்கத் தொடங்கினாள்.
கோவில் அருகே மதுரா கோட்ஸ்காரர்களின் வாகனம் தெரிந்தது. எங்கே ஆட்களைக் காணோம் என்று சுழற்றிய பார்வையில் புங்கன் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்த ஆட்கள் தென்பட்டனர்.
அப்பா ஓரமாத் நிக்கிறானுங்க. மூஞ்சில முழிக்காத ஓடி போய் சாமி பாத்துட்டு நம்ப வேலைய பாக்கலாம். என்று எண்ணியவள் , கொண்டு வர வேண்டிய பொருட்களை யோசித்து தன் வாகனத்தைக் எடுத்தாள்.
உடலில் ஏனோ குறுகுறுப்பு தோன்ற சரிதான் எவனோ பார்க்கிறான் என்று முணங்கியவளாய் துப்பட்டாவை சரியாக இட்டவாறே, பார்வை கூட அப்புறம் திருப்பாமல், மெதுவாய் தன் வாகனத்தை செலுத்தியவளிற்கு வேகமாக அடித்த காற்றில் சில வார்த்தைகள் காதில் வந்து விழுந்தன.
பல மாசமா ஒழவில்ல, ஏக்கருக்கு இரண்டாயிரம். ஒரு வாரம் பத்து நாள் ஓட்டனும்.. அப்படியே ஓட்னாலும் உடனே எல்லாம் வெள்ளாம வைக்க முடியாது செல மாதம் ஏதாச்சும் தழச்சத்து பயிரு போட்டு ஆறப் போடனும்..என்று கூறும் ஒலியில் திரும்பிப் பார்த்தாள்.
ஆருடா அந்தக் களவாணி.. பல மாசமா பொழங்கல, புழுதி ஓட்ட இரண்டாயிரம் கொரூவானு சாலடிக்கது? என வியப்புடன் பார்த்தாள்.
‘ஓ இந்தஆளா பாவநாசத்தை சேர்ந்த ஆள், வேலையும் சுத்தம் கிடையாது, ஆளும் சரி கிடையாது. ‘ என்று தகப்பன் திட்டி துரத்தியதை பார்த்திருக்கிறாள்.
பக்கத்தில் கை கட்டியவாறு அவன் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவனையும், திரும்பியதும் தன்னைப் பார்த்தும் புன்னகை மன்னனாக மாறும் ஒருவனையும் கண்டவள், சட்டென்று பார்வை விலக்கி கோவிலை நோக்கித் தனது வாகனத்தை செலுத்தினாள்.
வண்டியோடும் பாதை எனினும் ஏற்றமும் இறக்கமுமாய் இருந்த பாதையில் குதித்து குதித்து செல்வதைக் கண்டவனின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன. இருநூறு நடக்க ஏலாம , வண்டில குதிச்சு குதிச்சு போறதப் பாரு என உதடு முணுமுணுக்க,
ஒத்தையடிப் பாதையில என்னா அழகா வண்டியோட்றா, என்று வாய்க்குள் சொன்னவனை முறைத்த பாரி,
ப்ச்.. பெரிய சாதனை தா, இந்தாள எங்கே புடிச்ச லே. பாத்தா நம்பிக்கையா தெரியல ஏதோ ஆயிரம் வேலி போரடிக்க ஆனையக் கூட்டி வரப்போறவேம் போல கூலி சொல்றான். டேவிட்டு கிட்ட சாரிக்கலாம். ஏதும் ஆள் பழக்கமிருக்கா எண்டு.. இவன போச் சொல்லுடே. நாம அக்ரி படிச்சு ரிட்டையர் ஆன ஆள் யாரும் கிடைக்கிறாங்களா பாப்போம். என பேசியவாறே ஏறி பாதை நடுவில் வந்திருந்தனர் இரு சகோதரர்களும்.
இல்ல நீ மொத சொன்ன ஐடியாதா கரெக்ட்டு டேவிட்டு கிட்ட வேல பாத்தவங்க இல்ல இந்த இடம் வெள்ளாம பத்தி தெரிஞ்ச இந்தூருக்காரங்க தான் சரி வரும். என்ற நேரத்தில் ஹாரன் ஒலி கேட்க, சிறு சினத்துடன் திரும்பிப் பார்த்தான் பாரி.
டிவிஎஸ் வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் ஏதோ மூட்டைகள் வைக்கப் பட்டிருந்தன. கால் கூட ஊன்ற இயலா நிலை.
அதனால் தான் நகரச் சொல்லி ஒலி எழுப்பி இருப்பாள் போலும்.
பாதை விட்டு சற்று நகர்ந்தவன், வரப்பு விட்டு இறங்காமல் ஓரமாகவே நிற்க,
அவனுக்கு ஒரு அடி முன்பே நிறுத்தி தடுமாறி காலூன்றினாள்.
அவள் கடக்க முயன்றால், அவளின் பின்னால் இருக்கும் பொதி நிச்சயம் அவனை பதம் பார்த்திருக்கும்.. எரிச்சல் மிக அமைதியாக, இறங்கியவள் , ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மேலேயே வைத்திருந்த ஒரு பெரிய தூக்கி கீழே வைத்தாள்.
பாரியின் முன் வந்தவள் ஒரு பெருமூச்சு விட்டு சீர் செய்தவளாய், தணிந்த குரலில்,
“காட்டை வாங்கிடலாம் வெள்ளாமைய வாங்க முடியாதுங்கறது சரிதான் போல , அந்தாளு சொல்றாப்போல ஒழவும் தேவையில்ல, காத்திருக்கவும் வேணா. போன வாரந்தா வேந்தனத்தான் ஒழவு அடிச்சாரு. அடுத்து பெஞ்ச மழேல இறுகினாப் போல தெரியுது. இன்னும் இரண்டு முறை மட்டும் ஓட்டிட்டு இந்த தக்கைப்பூண்டு விதைங்களப் போட்டு விடுங்க.. இது இந்த குழிக்குன்னே வாங்கினது. நாளைக்கு மழை வரும் அதுக்குள்ளே இதை போட்டுட்டா நல்லா தளைச்சு வளர்ந்துடும் . அடுத்து அம்பதாவது நாள் மடக்கி உழுதுட்டா , அடுத்து இங்கே நீங்க நெல்லே போடலாம். அமோகமா விளையும். ” என்றவள் சற்றே நிறுத்தி,
“கத்துக்குட்டி சொல்றத நாம ஏன் கேட்கனும்னு இருந்தா ஒங்க அக்ரீ ஆஃபீஸருட்ட கேட்டுட்டு கூட பண்ணுங்க.” என்றவள் நகர எத்தனிக்க
“இந்திரா.. என்று அழைத்தவன், நாம ஒன்னும் சும்மா வாங்கற பரம்பரையில்ல.. விதைக்கு எவ்ளோன்னு கேட்டுக் கொடுத்திட்டு வாடே..
என்றுவிட்டு தம்பி கையில் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்து விட்டு தன் வாகனம் நிறுத்தி இருந்த கோவில் புறமாய் நடக்க,
என்ன பாரி வள்ளல் பரம்பரையோ ஐநூறு ரூவா விதைக்கு , ஐம்பதாயிரம் கட்டு நீட்றாரு உங்க அண்ணாச்சி.. என சிறு சிரிப்புடன் கேட்க,
ஹய்யோ எப்படிங்க கரெக்டா சொன்னீங்க , அவர் பெயரு அதான்..
பாரி வேந்தன் .. நான் காரி இந்திரன். என்று சொல்லவும் திரும்பி ஒரு முறை பார்த்தவள்,
ஓ வள்ளல் பரம்பரையா நீங்க! எனவும்,
ஹா ஹா என்று சிரித்தவன், எங்க தாத்தாவோட தாத்தா இந்த நிலங்களையெல்லா வித்து தா , கிருஷ்ணா கோட்ஸ் தொடங்கினாராம். விட்டத புடிக்க வந்திருக்கோம்.
ஓ என்றவள், விதைங்க ஐநூறு ரூபா தா, முன்னே பின்னே விவசாயம் பத்தி தெரிஞ்சவங்க யாரையாச்சும் பக்கத்தில வச்சிட்டு புடிங்க. சின்ன புள்ளைங்க வெள்ளாம வீடு வந்து சேராதுங்காப் போல ஆகிடாம..
என்றவாறு தன் வாகனம் அருகில் செல்ல,
அப்புடியெல்லா வுட்ர மாட்டோம், இது போல விஷயங்கள உங்கட்ட கத்துக்கறேன்.. ஆங் உங்க பேரு?? என்று இழுத்த நேரத்தில்,
இந்தர்.. என தமையனின் சத்தம் கேட்டதும்
ஓகே பாக்கலாம். என்றுவிட்டு வேகமாக அழைப்பொலி வநத் திசையில் நடந்தான்.
நாயகன் ஆடுவான்..
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…