Categories: Ongoing Novel

தகிக்கும் தீயே குளிர்காயவா 24/25/26

(24)

 

ஒருத்தி எத்தனை முறைதான் மயங்கிவிழும் நிலைக்குச் செல்வது… அந்த நிலையிலிருந்தாள் சிவார்ப்பணா. மீண்டும் அநபாயதீரன் நின்ற இடத்தையும், தான் நிற்கப்போகும் இடத்தையும் முகத்திலே வேகமாகக் கடுமையாக வீசிய காற்றையும் மீறிக் குனிந்து பார்த்தாள். வாய்க்குள் இதயம் வந்து துடித்தது. இரண்டு கண்களும் பிதுங்கின.

 

அநபாயதீரனின் தளம் பத்தொன்பதாவது மாடி. அதற்கும் தரைக்குமிடையில் கிட்டத்தட்ட 150 அடிக்கும் மேலாவது உயரம் இருக்கும். கொஞ்சம் அசைந்தாலும்… அதாளபாதாளம் தான். கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை. அவனோ சர்வ சாதாரணமாக வெளியே நீட்டிக்கொண்டிருந்த வெறும் ஒன்றரையடி அகலமுள்ள தளத்தில் நின்றவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தான். அதே வித்தையை அவளும் காட்டவேண்டுமானால்… நினைக்கும்போதே இதயம் வாய்வழியாக வந்துவிடும் போலத் தோன்றியது.

 

மீண்டும் தரையைப் பார்த்தவளுக்கு இப்படியே திரும்பி ஓடிவிட்டால் பரவாயில்லை போலத் தோன்றியது.

 

மெல்லிய தெரு வெளிச்சத்தில் கனடா முழுவதும் அவள் கண்களுக்குத் தெரிந்தது. சி என் கோபுரத்தின் உச்சி கூட மங்கலாகத் தெரிந்தது. எங்கும் மயான அமைதி. ஓரிரண்டு வாகனங்கள் மட்டும் எறும்புகளை விடச் சின்னதாக அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்தன. அதிகாலை இரண்டு மணிக்கு அதுவும் அந்தக் குளிரில், எந்த ஜந்துவும் இப்படி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்காது. அண்ணாந்து பார்த்தால் நிலவை மறைத்த கறுத்த வாணம் கம்பீரமாக நின்றிருந்தது. பயங்கரமாக அடித்த குளிர் காற்றும், கரிய வாணமும் இனிப் பெய்யப்போகும் பனிக்கு அறிகுறியாக இருக்க அது வேறு வயிற்றைக் கலக்கியது.

 

கடவுளே அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அன்று பேருந்தில் கூட இப்படித்தானே அவள் சிக்கியிருந்தாள். அதாவது பரவாயில்லை. இத்தனை உயரமில்லை… ஆனால் இது… கடவுளே சற்று வழுக்கினாலும், பேய்களுடன் சேர்ந்து கும்மியடிக்க வேண்டியதுதான்.

 

அந்த உயரத்தைப் பார்த்ததும், அவனுக்குச் செய்து கொடுத்த சத்தியம் காற்றோடு கரைந்து போக, ஓரடி பின்னால் வைத்து,

 

“ஆர் யு க்ரேசி… நோ… ஐ… ஐ கான்ட்…” என்று அவள் அச்சத்துடனும் கோபத்துடனும் மறுப்பாகக் கூறியவளுக்குக் காற்றின் குளிர் தாங்க முடியாமல் தன்னுடைய ஜக்கட்டை இரண்டு கரங்களாலும், இழுத்து இறுகப் பற்றிக்கொண்டாள்.

 

“அர்ப்பணா… என் மீதிருக்கிற நம்பிக்கையைத் தளர விடாதே… உனக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை எப்போதும் நான் தவற விடமாட்டேன். ப்ளீஸ் ஹோல்ட் மை ஹான்ட் பேபி..” என்று அவன் கூற, அவளோ அவன் பேச்சைக் கருத்தில் கொள்ளாது வாய் பிளக்க உயரத்தைத்தான் கணக்கிட்டுக்கொண்டிருந்தாள்.

 

அதே நேரம், க்ளிக் என்கிற சத்தம் வெளியே இருந்து வர,

 

“அர்ப்பணா… டோன்ட் டு திஸ் டு மி… ஜெஸ்ட் கெட் டவுன்…அன்றைக்கு நீ பேருந்தில் சிக்கிய ஆபத்தோடு பார்க்கையில் இது ஒன்றுமேயில்லை. அன்று உன் உயிரைக் காத்த எனக்கு இன்றும் காக்க முடியாதா? யோசிக்காமல் கீழே இறங்கு… விவாதிக்க இது நேரமில்லை. என்னுடைய கரத்தைப் பற்றிக்கொண்டு வா… அவர்கள் வந்துவிட்டார்கள்… எந்த நேரமும் அவர்கள் உள்ளே நுழையலாம்…” என்று அவன் அவசரப் படுத்த, இருந்த பயத்திலும் தடுமாற்றத்திலும், சிவார்ப்பணா அவன் கூறியதைக் கவனிக்கத் தவறினாள்.

 

“நோ… நான்…”

 

“அர்ப்பணா…” என்று அவன் முடிப்பதற்குள்ளாக, உள்ளே உடைத்துப்போட்டிருந்த கண்ணாடிகள் மிதி படும் ஓசை கேட்டது. கூடவே, “XXX ஷிட்…” என்கிற முனங்கல்களும் கேட்க, எதிரிகள் கையெட்டும் தூரத்தில் நிற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டாள் சிவார்ப்பணா. இனியும் தாமதிக்க முடியாது என்பது புரிந்தது. கீழே இறங்கினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. மேலே நின்றாலும் அதற்கு உத்தரவாதமில்லை. எப்படியோ போகப்போகிற உயிர்… அநபாயதீரனுடன் செல்லட்டும் என்கிற குருட்டுத் தைரியத்தில், எதைப்பற்றியும் யோசிக்காமல், வேறு எந்த வாக்குவாதங்களுக்கும் இடம் கொடுக்காமல், திக்கித் திணறித் தடுமாறி நடுங்கிய உடலைச் சமப்படுத்தி, ஜன்னல் மீது ஏறித் தொப்பென்று கீழே இறங்க முயல, அவளுக்கு அதிக சிரமம் கொடுக்காது, அவள் இறங்கத் தடுமாறுவதற்கு முன்பாக, அவளுடைய இடையைப் பற்றித் தனக்கு அருகாமையில் இறக்கிவிட்டு, முன்னே போகுமாறு தன் கரத்தைக் காட்டினான்.

சிவார்ப்பணாவோ, அநபாயதீரனை எரித்து விடுவது போலப் பார்த்து,

 

“என்னை இந்த நிலைக்குத் தள்ளிய உங்களை நான் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டேன்… மறக்கவும் மாட்டேன்…” என்று சினத்துடன் சீற,

 

“ஐ ஆம் அனர்ட்… ஃபெர்ஸ்ட் கோ…” என்று பதிலுக்கு அவனும் கடுமையாகக் கூறி, அவளுடைய தோளில் கரம் வைத்து முன்னே தள்ளிவிட்டு, ஒரு எம்பு எம்பி, மின்னல் விரைவுடன், திறந்த ஜன்னலைச் சாத்தி விட்டு, ஒவ்வொரு தளத்தையும் பிரிக்கும் இடைவெளியில் அழகுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி அகலமுள்ள சிறிய தளத்தில் மிகக் கவனமாக நடக்கத் தொடங்கினான்.

 

சிவார்ப்பணாவிற்குப் பயத்தில் காயத்தின் வலி கூட மறந்து போனது. ஏன், காலில் பாத அணியில்லாமல், வெறும் காலுடன் நடப்பதால், விறைக்கத்தொடங்கியிருந்த கால் கூட மறந்து போனது.

 

அணிந்த ஜக்கட்டையும் மீறிக் குளிர் ஊசியாக உடலைத் தாக்குவதைக் கூட அவள் உணரவில்லை. உயர்ந்த கட்டடம் என்பதால் காற்று வேறு புயலாக அடித்தது. எங்கே அது தன்னைத் தள்ளிக்கொண்டு போய்விடுமோ என்று கூட அஞ்சினாள் சிவார்ப்பணா. அவள் அச்சத்தை மெய்ப்பிப்பது போலப் பலமாக வீசிய காற்றில் சமநிலை தவற, உடனே அவளுடைய வயிற்றில் கரம் பதித்துச் சுவரோடு சாய்த்துப் பிடித்தான் அநபாயதீரன்.

 

சுவரோடு சுவராகப் பல்லிபோல, ஒட்டி நின்றவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சுவாசம் சீராக.

 

இருந்த பதட்டத்தில் தன்னையும் மீறிக் கீழ்க் கண்ணால், கீழே பார்க்க முயன்றவளை, அவளுடைய மார்புக்குக் குறுக்காகத் தன் இடது கரத்தை அழுத்தப் பதித்துப் பின் புறமாகத் தள்ளியவாறு,

 

“நெவர் எவர் டூ திஸ்… கீழே பார்க்காதே… மேலே பார்….” என்று அவன் அதட்ட, அதற்குக் கட்டுப்பட்டவளாக விழிகளை மேலே பார்த்துவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள் சிவார்ப்பணா.

 

‘படுபாவி… தப்பிச் செல்ல இதை விட வேறு யோசனை உனக்கு வரவேயில்லையா?’ என்பது போல அவனை எரிச்சலுடன் பார்க்க, அதை விழிகளிலிருந்து படித்தவன்,

 

“இன்னொரு யோசனை இருந்தது… அவர்களிடம் பேரம் பேசி முன் வழியே செல்வது… வேண்டுமானால் வா… திரும்ப உள்ளே சென்று…” அவன் முடிக்கவில்லை, ஒரு குண்டு அவனுடைய அப்பார்ட்மன்டின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேற, இவன் அவள் மேல் பதிந்திருந்த கரத்தை விலக்காமலே, தானும் அழுத்தமாகச் சுவருடன் மேலும் ஒட்டி நின்றவாறு

 

“கோ…” என்று அவன் கூறுவதற்கு முன்பாகவே அவனை விட்டு விலகி, நான்கடிகளைக் கண்களை மூடியவாறு கடந்துவிட்டிருந்தாள் சிவார்ப்பணா. பயத்தில் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அதற்கேற்ப அவளுடைய மார்புகள் ஏறி இறங்கின.

 

வேகமாக ஏறியிறங்கிய அவளுடைய மார்பிலும், அச்சத்தால் நடுங்கியவாறு வெளிவந்த மூச்சினையும் அவதானித்த அநபாயதீரன்,

 

“டோன்ட் பானிக்… ஜெஸ்ட் ரிலாக்ஸ்…” என்றவனைக் கொல்லும் வெறியுடன் பார்த்தாள் சிவார்ப்பணா  .

 

“ஜெஸ்ட் ரிலாக்சா… வேண்டுமானால் ஒரு டீக்கு சொல்லுங்களேன்… ஆற அமர இருந்து குடித்து விட்டுச் செல்லலாம்…” என்று சிடுசிடுத்தவளை மெல்லிய நகைப்புடன் அநபாயதீரன் பார்க்க, அவன் மீது தன் கவனத்தை வைத்திருந்த சிவார்ப்பணாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

‘இந்த இக்கட்டான நிலையிலும், அவனால் எப்படி இத்தினை சாதாரணமாகப் பேச முடிகிறது? சிரிக்க முடிகிறது?’ என்று ஆச்சரியத்துடன் எண்ணினாலும், அவனைப் போலத் தன்னால் இருக்க முடியவில்லையே என்கிற பொறாமையும் உள்ளுக்குள் எழுந்தது. ஆனால் அந்தப் பொறாமையும், வியப்பும் அதிக நேரம் நிலைக்க வில்லை.

 

அடுத்த அடியை வைத்தவள் சற்றுத் தடுமாற, வேகமாக அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதித்து அவளை நிலை நிறுத்தியவன்,

 

“பார்த்து சிவார்ப்பணா… கவனத்தை வேறு எங்கும் செலுத்தாதே… ஜெஸ்ட் கோ…” என்று கூற, சிவார்ப்பணாவும் வேறு பேசாமல், விழிகளால் பார்ப்பதால்தானே பயமாக இருக்கிறது. அதை விட மூடிக்கொண்டே செல்லாம் என்கிற எண்ணத்தில், தன் விழிகளை இறுக மூடியவாறு, சுவரோடு முதுகு தேய்ந்தவாறே மெது மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

 

எங்கே கொஞ்சம் எசகுபிசகாக நடந்தாலும், கீழே விழுந்துவிடுவோமா என்று அஞ்சியவளாக, சுவரோடு ஒட்டியவாறு, அரக்கி அரக்கி நடக்க, அந்தக் கட்டிடத்தின் முடிவு வந்ததும் நின்றான் அநபாயதீரன்.

 

அதே நேரம் நிற்காமல் அடுத்த அடியை வைக்கத் தொடங்கியவளைக் கண்டவன், வேகமாக அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான்.

 

நின்றவள் தன் விழிகளைத் திறந்து, அவனை என்ன என்று பார்க்க, அவன் விழிகளால் அந்தப் பாதையின் முடிவைக் காட்ட, திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

 

“அம்மாடியோவ்…” என்று தன்னையும் மறந்து முணுமுணுத்தவளின் விழிகள், தான் அடுத்த அடியை வைக்க இருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் மட்டும் தடுக்காமலிருந்திருந்தால், அடுத்த அடியை வெற்று வெளியில் வைத்திருப்பாள். பிறகு என்ன? சிவலோகப் பதவிதான்.

 

அதைக் கண்டதும், இதயம் மீண்டும் தொண்டைக்குள் வந்து நர்த்தனம் ஆடத் தொடங்க, அதே வேகத்தில் அவன் பக்கமாக நடந்து, அவனை ஒட்டியவாறு நின்றிருந்தாள். அவளையும் மறந்து அவளுடைய இரு கரங்களும், அநபாயதீரனின் இடக்கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டன.

 

“வெய்ட்…” என்று, அவளை நிறுத்தியவன், இறுக்கமாகத் துருத்திக்கொண்டிருந்த செங்கட்டிச் சுவரைப் பற்றிக்கொண்டு திரும்பி அவளுக்கு இரு பக்கமும் கவனமாகக் கால்களைப் போட்டு அவளைத் தாண்டியவன், அதே மாதிரி அந்தக் கட்டிடத்தின் கோணத்திலும் தன் காலை வைத்து மறுபக்கம் சென்று நின்றான்.

 

சிவார்ப்பணாவிற்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சின்ன இடம். இதை எப்படிக் கடந்தான். அதுவும் கிங்காங் போல இத்தினை பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு… அதே நேரம், அவனுடைய முகத்திலோ, இல்லை உடலிலோ எந்த விதமான பதட்டமோ, இல்லை சிறு நடுக்கமோ எதுவுமே தெரியவில்லை. மாறாக, ஏதோ நித்தம் நித்தம் வேலைக்கு இந்தப் பாதையையே பாவித்துச் செல்வது போல, சர்வ சாதாரணமாக, வெண்ணெய்யில் வழுக்கிக்கொண்டு போவதுபோல, செல்பவனை நம்பமுடியா தன்மையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.

 

‘அடேங்கப்பா… குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்பதை என்னமாக நிருப்பிக்கிறான்…’ என்று அந்த நிலையிலும் அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

 

அவனோ, சிவார்பப்பணாவின் அதிர்ச்சியையோ, இல்லை, அவளுடைய வியப்பையோ சிறிதும் கவனித்ததாகத் தெரியவில்லை.

 

அப்படியே சிவார்ப்பணாவின் பக்கம் கரத்தை நீட்டியவன், “கமோன் அர்ப்பணா… ஹோல்ட் மை ஹான்ட்…” என்றான். அப்போதுதான் தன்நிலை பெற்றவள், அவனை நெருங்கி வர முயன்றாள்.

 

தன்னையும் மீறிக் கீழே பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது.

 

‘அம்மாடி… எந்தத் தைரியத்தில் அவன் கட்டளைக்கிணங்க இப்படி வந்தாள். கொஞ்சம் தவறினாலும் சொர்க்கமோ, நரகமோ நிச்சயம். எனக்கு எதற்கு நரகம் கிடைக்கப்போகிறது… நிச்சயம் சொர்க்கம்தான்… நா… நான்தான் எந்தத்…தப்பும் செய்ய…வில்லையே…’ என்று எச்சியைக் கூட்டி விழுங்கியவள், அவன் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்துக் கடக்க முயன்றாள்.

 

ஒற்றைக் காலைத் தூக்கியவளுக்கு அது அந்தரத்திலும், கீழே புள்ளியாகத் தெரிந்த உலகத்தையும் கண்டதும், அத்தினை தைரியமும் வடிந்து போக, மறு படியும் தன் காலைத் தரையில் பதித்து, வெடுக் என்று அவனுடைய கரத்திலிருந்த தன் கரத்தைப் பறித்து எடுத்தவள், சுவரோடு முதுகு அழுந்தியிருக்க, விரிந்திருந்த இரண்டு கரங்களினதும் உள்ளங்கைகள், துருத்திக்கொண்டிருந்த செங்கட்டிகளை அழுந்தப் பற்றியவாறு இருக்க, மீண்டும் கீழே பார்த்தாள். அவளுக்குக் கால்களுடன் சேர்ந்து உடலும் நடுங்கத் தொடங்கின.

‘இந்த நிலையில், அந்தக் கட்டடத்தின் கோணத்தைக் கடப்பது என்றால்… நோ…”

 

உடல் உதறத் திரும்பிப் பார்த்தவள்,

 

“நோ… ஐ… ஐ கான்ட்… என்னை விட்டு விடுங்கள்… இனி என்னால்…” என்று அச்சத்துடன் கூறியவளுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியும் போலத் தோன்றவில்லை.

என்ன செய்கிறோம் என்பதைக் கூட, உணராமல், அமரப் போனவளிடம், அவளுடைய நிலையை முழுதாக உணர்ந்து கொண்டவனாக இவன் பதறினான்.

 

பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவளின், அசைவைக் கொண்டு, அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்பதையும், அவ்வாறு செய்தால், அடுத்து, அவள் சந்திக்கப்போகும் விளைவு எத்தகையது என்பதையும் கண்கூடாகக் கண்டவன்,

 

“டோன்ட்… டோன்ட் ஈவின் திங்க் எபவுட் தட்… டோன்ட் மூவ்… ஸ்டே தெயர்… அன்ட் லிசின் டு மீ அர்ப்பணா…” என்றவன் என்னதான் முயன்றும் அவன் குரலில் தெரிந்த பதட்டத்தை அவனால் தடுக்க முடியவில்லை.

 

மீண்டும் அந்தக் கோணத்தில் கால் பதித்து, அவள் புறமாகத் தன் கரத்தை நீட்டியவனின் விழிகள் அவளுடைய முகத்தை ஊடுருவிப் பார்த்தன.

 

அவளுடைய வெளிறிய முகமும், அதீத பயத்தால், அவள் மெது மெதுவாகத் தன் நிலை இழந்துகொண்டு போகிறாள் என்பதையும் புரிந்துகொண்டவன், முதலில் அவளுடைய கவனத்தைத் திசைதிருப்ப வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டவனாக,

 

“லிசின் டு மி பேபி…” என்று எதையோ சொல்லத் தொடங்க, அடிபட்ட பறவை போல, அநபாயதீரனை ஏறிட்டவள்,

 

“தீரன்… ஆர் யு கிரேசி… என்னால் இனி ஒரு அடிதன்னும் வைக்க முடியாது… பார்த்தீர்கள் அல்லவா… எத்தனைப் பெரிய உயரம்… நோ…” என்று இவள் மேலும் சுவரோடு ஒட்டியவாறு உறைய,

 

“இல்லை அர்ப்பணா… உன்னால் நிச்சயமாக முடியும்… நான்தான் உனக்குப் பக்கத்திலேயே இருக்கிறேனே… பிறகு என்ன… ப்ளீஸ்… என் கரத்தைப் பற்றிக்கொண்டு இந்தப் பக்கம் வா… இன்னும் கொஞ்சத் தூரம்தான்” என்றான்.

 

“நோ… முடியாது… முடியாது… முடியாது… ஒரு வேளை வழுக்கினால்… நான் மட்டுமல்ல… நீங்களும் என்னுடன் சேர்ந்து… ஓ காட்… அது என்னால் முடியாது… நீங்களாவது தப்பிக் கொள்ளுங்கள்…” என்று அவள் உடல் நடுங்கக் கூறினாள். குளிர் காற்று வேறு அவர்களின் பக்கமாக அடித்து வீசியது. இனியும் முடியாது என்பது போல, அவள் வந்த பாதையூடாக நடக்கத் தொடங்க, பதட்டமானான் அநபாயதீரன்.

 

சிவார்ப்பணா மெல்ல மெல்ல தன்னுடைய மன தைரியத்தை இழந்துகொண்டிருக்கிறாள் என்பதை, அநபாயதீரன் உணரத் தொடங்கினான். அவள் மனதளவில் மட்டுமல்லாமல், உடல் அளவிலும் அவள் பாதிப்படைந்திருப்பதால், பலவீனம் அவளைச் சுலபத்தில் பற்றிக்கொண்டு விட்டன என்பதை அவன் புரிந்துகொண்டான்.

 

‘ஏற்கெனவே அவளுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நிச்சயமாக இரத்தம் இன்மையால், எந்த நேரமும் மயக்கம் வரலாம். இத்தினை நேரம் அவள் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்.

 

தவிர அவளுடைய முகம் வேறு நீல நிறத்தைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தது. அது ஆபத்தின் அறிகுறி. உடனடியாக அவளைச் சூடான பகுதிக்கு அழைத்துச் செல்லவேண்டும். இல்லையென்றால் ஹைப்போதேமியா… உடலின் வெப்பம் குறைந்து, தீர்க்க முடியா விளைவினை ஏற்படுத்தும்.

 

ஏற்கெனவே உடல் அளவில் பலவீனமாக இருப்பவளுக்கு, நிச்சயமாக அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். காலம் கடக்கும் முன் அவளைப் பாதுகாப்பாக ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். அதற்கு அவள் சற்றேனும் ஒத்துழைக்க வேண்டும்.

 

போதாததற்கு இன்று உறைபனிமழை என்று வேறு கூறியிருந்தார்கள். வாணம் வேறு அடர்ந்து பரவத் தொடங்குகிறது. எந்த நேரமும், மழையுடன் கூடிய பனி பொழியலாம்… பொழிந்தால் இந்த சிறிய தளத்தை நம்பி முன்னேற முடியாது. சிறிது வழுக்கினாலும் யாரையும் யாரும் காப்பாற்ற முடியாது… நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிக மிகக் குறைவானதே… காலம் கடக்கும் முன் சாதிக்கவேண்டும்…’ என்று அவசரமாக எண்ணியவன்,

 

‘அர்ப்பணா… இந்த மைனஸ் ஃபோர் வெதரில் அதிக நேரம் இப்படியே நிற்க முடியாது. சப்பாத்து கூட நீ அணியவில்லை. மேலும் நீ இரத்தம் இழந்திருக்கிறாய். உடனேயே உன் உடலைச் சூடாக்க வேண்டும். தயவு செய்து பயத்தை விட்டுவிட்டு என் கரத்தைப் பற்றிக்கொண்டு வா…’ என்று சொல்லலாம்தான். ஆனால் அதுவே அவளுடைய பலவீனத்தை அதிகரிக்கும். அந்தப் பலவீனம், அவளுடைய உயிருக்கு உலைவைக்கும்.

 

முழு நம்பிக்கைகளையும் தொலைத்திருப்பவளை, இனித் தான் பிழைக்க மாட்டேன் என்கிற எண்ணத்துடன், பற்கள் ஒன்றோடு ஒன்று தந்தி அடிக்க அவனை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவளை, கோபத்துடன் ஏறிட்டவன், அவள் முன்னால் நீட்டியிருந்த கரத்தைப் பலமாக ஆட்டி,

 

“யு… டாமிட் அர்ப்பணா…. கமோன்… அதிக நேரம் இப்படியே இருக்க முடியாது…. ப்ளீஸ் ஹோல்ட் மை ஹான்ட்…” என்றவனைப் பார்த்து மறுப்பாகத் தலையை ஆட்டினாள் அன்றி அதற்கு  மேல் உதறிய உடலைச் சமப்படுத்த முடியாது மேலும் அமர முயன்றாள்.

 

“நோ…” என்று அலறியவன், அவன் அலறிய அலறலில் மீண்டும் நிமிர்ந்து நிற்க,

 

“லிசின் டு மி… அர்ப்பணா இப்போது நீ வர வில்லை என்றால்… நாம் இருவரும் இப்படியே கீழே குதிக்கவேண்டியதுதான் அதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை. இட்ஸ் அப் டு யு. இதைக் கடந்து வந்துவிட்டால் போதும்… நாங்கள் தப்பியது போலத்தான்… ப்ளீஸ்… என்னை நம்பி வாம்மா…” என்று அவன் கூற, சிவார்ப்பணா என்ன செய்வது என்பது புரியாமல் அவனை ஏறிட்டாள்.

 

“தீரன்… எனக்கு… எனக்குப் பயமாக…”

 

“பயம்தான் நம்முடைய வாழ்க்கையின் முதல் எதிரி…” என்றவனின் பிடி, அந்தச் செங்கட்டியிலிருந்து வழுக்க, அவனுடைய சமநிலை ஒரு கணம் தடுமாறியது. ஆனால் பாய்ந்து இன்னொரு செங்கட்டியை இறுகப் பற்றிக்கொண்டவன், மூச்சு வாங்க,

 

“என்னுடைய கரத்தைப் பற்றிக்கொள் சிவார்ப்பணா…”

 

“தீரன்… எனக்கு… எனக்குப் பயமாக இருக்கிறது… என்ன செய்யட்டும்… காதுகள் இரண்டும்… அடைத்துக்கொண்டு…” அவள் முடிக்கவில்லை,

 

“நோ… நோ… லிசின் டு மி பேபி… சற்று மேலே பார்…?” என்று அவன் பதட்டத்துடன் சொல்ல, சிரமப்பட்டு, மூட முயன்ற விழிகளைத் திறந்து முடிப் பின் அரை விழி திறந்து, மேலே பார்த்தாள். சற்று மேகம் விலகியதால் சற்று பிரகாசமாகத் தெரிந்தான் சந்திரன்

 

“வான் மதி…” என்றாள் இவள் மெல்லிய குரலில்.

 

“எவ்வளவு அழகாக ஒளியை சிந்திக்கெர்ணடிருக்கிறது… ” என்றான் மெல்லிய குரலில்.

 

அவளும் தன்னை மறந்து, சந்திரனையே பார்த்துக்கொண்டிருக்க,

 

“கொஞ்சம் அங்கே தள்ளிப் பார் அர்ப்ணா… கரிய மேகங்கள் சந்திரனை மறைப்பதற்காக வந்துகொண்டிருக்கின்றன…” என்று அவன் கூற, அவளும் திரும்பிப் பார்த்தாள்.

 

“இன்னும் கொஞ்ச நேரம்தான்… அதற்குள் அந்தச் சந்திரன் தன் ஒளியை இழந்துவிடும்…” என்றவன் சற்று நேரம் அமைதி காத்துப் பின் தொடர்ந்தான்.

 

“பயமும் அப்படித்தான் அர்ப்பணா… அது நம்முடைய திடத்தை மழுங்கடித்து விடும்… நம்மைச் சிதைக்க வரும் பயத்தை உதறித் தள்ளிவிட்டோமானால், சீக்கிரமாக மீண்டும் பழைய பொலிவுடன் ஜொலிக்கலாம்… இந்தப் பயம், வேதனையெல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போல. ஒரு கணம் மட்டும்தான் அதனால் நம்முடைய திடத்தை அழிக்க முடியும்… அந்தக் கொஞ்ச நேரத்துப் பயத்துக்காக, நம்முடைய வாழ்வையே நாம் இழந்துவிடக் கூடாது… அதற்கு நாம் வாய்ப்பும் கொடுக்கக் கூடாது… அது கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவது போல…” என்று பேசியவாறு, அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டியவன்,

 

“பயத்தை விடு அர்ப்பணா… அன்று உன்னைப் பேருந்திலிருந்து காத்தது போலவே, இன்றும் உன்னைக் காப்பேன். பிலீவ் மீ… அன்று போலவே கண்ணை மூடிக்கொண்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் வா… கமோன்…” என்று கூறியவாறு நீட்டிய கரத்தை உறுதியாகப் பிடிக்க, ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போலத் தன்னையும் மறந்து நீட்டிய அவன் வலக்கரத்தின் மீது மரத்துப்போயிருந்த, தன்னுடைய இடது கரத்தைச் சிரமப்பட்டு வைத்தாள்.

 

அவன் கரத்தின் மீது தன் கரம் பட்டதும், ஏதோ யானை பலம் வந்தது போல, உடல் முழுவதும் வெம்மை பரவ, அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.

 

தன் கரத்தின் மீது சிவார்ப்பணாவின் கரம் பட்டதுதான் தாமதம், அழுத்தத்துடன், அதை இறுகப் பற்றிக்கொண்டவன், மெதுவாக அவளைத் தன் பக்கமாக இழுத்தவாறு இரு கால்களையும் பதித்து நிமிர்ந்து நிற்க,

 

அவனுடைய கரம் கொடுத்த தைரியத்தில், பல்லி போலச் சுவருடன் ஒட்டியிருந்தவள், இடது காலின் பலத்தில், வலது காலைத் தூக்கி, சுழன்று மறுபக்கம் பதிக்க, இப்போது அவளுடைய முன்னுடல், அந்தக் கட்டத்தின் கோணத்தில் பதிந்திருந்தது.

 

(25)

 

ஆனால் அதற்கு மேல் சிவார்ப்பணாவினால் அசைய முடியவில்லை. பெரும் அச்சத்துடன்,

 

“என்னால்… முடியவில்லையே தீரன்…” என்றவளின் உதடுகள் பிதுங்கி, கண்கள் கலங்கின.

 

“நோ பேபி… உன்னால் முடியும். யு கான் டு இட்… யு ஆர் ஸ்ட்ராங் வுமன். ஐ நோ தட்… கமோன்…” என்று அவளை இறுகப் பற்றியவாறு, அதுவரை, தன்னை சமப்படுத்துவதற்காகச் செங்கல் ஒன்றை அழுந்தப் பற்றியிருந்தவன்,  அதை விடுவித்து, அதி வேகத்துடன், அவளுடைய இடையில் கரத்தினைக் கொடுத்துத் தன்னை நோக்கி, இழுக்க, அவன் கரங்கள் கொடுத்த தைரியத்தில், எதையும் யோசிக்காமல், நடுங்கிய கால்களைக் கூடப் பொருட்படுத்தாது, கடந்து தடுமாறியவளை, வேகமாக இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் அந்த வீரன்.

 

அது வரை, அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது, காத்துவிடவேண்டும் என்கிற உறுதியுடன் இழுத்து எடுத்தவன், அவள் பாதுகாப்பாகத் தன் கை வளைவில் வந்ததுதான் தாமதம், அவளை மூச்சு முட்டும் அளவுக்கு தன்னோடு இறுக அணைத்துக்கொண்டு சற்று நேரம் பேசாதிருந்தான்.

 

இருவருமே கொஞ்ச நேரம், அணைத்த நிலையில், சுவரோடு சுவராக ஒண்டியிருந்தனர்.

 

அவனுடைய கரங்கள், அந்த அணைப்புப் போதாது என்பது போல, அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவள் உடல் முழுவதும் பயணம் செய்து அவள் இன்னும் தன் கை வளைவில்தான் இருக்கிறாள் என்பதைப் பரீட்சித்து உறுதி செய்ய முயன்று கொண்டிருந்தன.

 

“நான் சொன்னேன் அல்லவா… உன்னால் முடியும் என்று…?” என்று வாய் முணுமுணுத்தாலும், உதடுகள் தன் மார்புக் குழியில் தஞ்சம் புகுந்திருந்த அவளுடைய உச்சந்தலையில் அழுந்தப் பதிந்திருந்தன.

 

அவன் உடல்கூடப் பயத்தில் நடுங்கியது. எங்கே அவள் விழுந்துவிடுவாளோ என்கின்ற அச்சத்தில் இறுகிப் போயிருந்தவன், அவள் தன்னுடைய கரத்தில் முழுதாக விழுந்ததும், தன்னை நிதானித்துக் கொள்ள முழுதாக இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொண்டான்.

 

இப்போது சிவார்ப்பணாவின் உடல் அதீத பயத்தினாலும், குளிரிலும் வெடவெடக்கத் தொடங்கியது. கால்கள் வேறு விறைத்துப் போயின.

 

“யு டிட் இட் பேபி… யு டிட் இட்…” என்று கூறியவன் அவள் உடல் தள்ளாடவும் அவளை அழுந்தப் பற்றிக்கொண்டான்.

 

“அர்ப்பணா.. லிசின் டு மி பேபி… உன்னைத் திடப் படுத்திக்கொள். இன்னும் கொஞ்சத் தூரம்தான் கண்ணம்மா… அது வரை தைரியத்தை விடாதே… நீ மயங்கினால் இருவரும் கீழே விழ வேண்டியது தான்… கமோன்…. பி ஸ்டெடி… நான் கூறுவது புரிகிறது அல்லவா… பி ஸ்டாரங்… வி ஆல்மோஸ்ட் தெயர்… அர்ப்பணா… லுக் அட் மி… ஹியர்… லுக் அர்ப்பணா… லுக் அட் மை ஐஸ்” என்று அவன் அவளுடைய கன்னத்தைத் தட்டியவாறு உலுப்ப, சிவார்ப்பணா உதறிக்கொண்டு எழுந்தாள்.

 

அவனுடைய கட்டளைக்கு ஏற்ப அவனுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தாள்.

 

“யு ஆர் ஓக்கே… உனக்கு ஒன்றும் ஆகாது… நான் இருக்கிறேன்… பி ஸ்டெடி…” என்றான் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளை ஊடுருவ விட்டவாறு.

 

அவன் சொல்வது சரிதானே. இப்போது அவள் தன்நிலை கெட்டால் அவளுடன் சேர்ந்து அவனுமல்லவா பெரும் ஆபத்தில் சிக்கிக்கொள்வான். அந்த நினைப்பே அவளின் சோர்வையும், மயக்கத்தையும் உதறிவிட்டு, நிமிர்ந்து நிற்க முயன்றாள். மனம் என்னவோ, உறுதியாகத்தான் இருந்தது. உடல்தான், அவளுடைய மனத்துடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்தும், வேகமாகத் தன்னைத் திடப்படுத்த முயன்றாள்.

 

“எ… எனக்கு… என்னவோ… செய்கிறது தீரன்… தூக்கம் வருகிறது… நான்… நான் தூங்கவேண்டும்…” என்றாள் விழிகளை மூட முயன்றவாறு.

 

உடனே அவளுடைய கன்னத்தை வலுவாகத் தட்டி,

 

“ஹனி… வேக்கப்… திஸ் இஸ் நாட் எ டைம்… ஐ நோ… இன்னும் கொஞ்ச நேரம்தான். அதன் பிறகு… நாங்கள் இருவருமே தப்பிவிடலாம்… நீ விரும்பியது போலவே தூங்கலாம்” என்று அவளின் நினைவு மழுங்காமல் அவளுடைய கவனத்தைத் திசை திருப்ப முயன்றவன், சுற்று முற்றும் பார்த்தான்.

 

எங்கிருந்தோ மெல்லிய பெய்ன்டின் வாடை அவன் நாசியைத் துளைக்க, அவன் முகம் பிரகாசமானது. எங்கோ ஜன்னல் திறந்துவைக்கப் பட்டிருக்கிறது. உற்சாகமாக ஒரு கரத்தால் சிவார்ப்பணாவின் இடையை வளைத்துப் படித்துத் தன்னோடு இறுக்கியவன் மெதுவாகச் சுவருடன் உரசியவாறு நடந்தான். சிவார்ப்பணாவும் முடிந்த அளவு தன்னுடைய பலத்தைத் திரட்டி அவனுடன் இணைந்து நடந்தாள்.

 

அதே நேரம் இருட்டியிருந்த வானத்திலிருந்து பனியுடன் சேர்ந்த மழைத் துளிகள் பூமியைத் தொடத் தொடங்கின. ஒவ்வொரு துளியும் ஊசி முனைகளாக அவர்களின் மீது பட, ஏற்கனவே விறைத்துப்போயிருந்த சிவார்ப்பணா உதறத் தொடங்கினாள். அவளுடைய நிலையை அறிந்துகொண்ட அநபாயதீரன் அவளைத் தன்னோடு முடிந்த மட்டும் அணைத்துக் கொண்டான்.

 

“டாமிட். இந்த நேரம் பார்த்தா ஃப்ரீசிங் ரெய்ன் பொழிய வேண்டும்…” என்று முணுமுணுத்தவன், குனிந்து சிவார்ப்பணாவைப் பார்த்தான். நல்ல வேளை அவள் அணிந்திருந்த ஜாக்கட் லதர் என்பதால், அவள் உடலினுள் குளிர் நீர் புக வாய்ப்பில்லை.

 

வேகமாக அவளை இழுத்துக் கொண்டு பெயின்டின் மணம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

 

அவன் நினைத்தது சரிதான். ஐந்தடி தொலைவில் ஒரு ஜன்னல் சிறிதாகத் திறந்திருந்ததை அநபாயதீரன் கண்டான். அவன் ஜன்னலை நெருங்குவதற்குள்ளாக மழையின் அகோரம் கூடியிருந்தது. சிவார்ப்பணா தெப்பலாக நனைந்திருந்தாள். எந்த நேரமும் அவள் மயங்கி விழும் நிலையில் இருப்பதைக் கண்டான் அநபாயதீரன். ஹைப்பத்தேமியா. உடனடியாக அவளுக்குச் சூடு ஏற்ற வேண்டும். இல்லை என்றால் மரணம் நிச்சயம்.

 

இனியும் காலதாமதம் செய்ய முடியாது என்கிற எண்ணம், அவனை மேலும் உந்தித் தள்ள, இறுகிப் போயிருந்த ஜன்னலை ஒரு இழுவையில் பெரிதாக்கினான்.

 

“அர்ப்பணா கமோன். நான் உன்னைத் தூக்கி ஜன்னல் புறமாக விடப் போகிறேன்…” என்றவாறு பார்த்தவன் நீலமாக மாறிக்கொண்டிருந்த அவளுடைய முகத்தைக் கண்டதும் அதிர்ந்தான். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து என்பதை உணர்ந்தான்.

 

அவளுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவளுடைய இடையைப் பற்றித் தூக்கியவன், கமோன் அர்ப்பணா… ஹெல்ப் மி…” என்று கூற, சிவார்ப்பணாவும் முயன்ற அளவு அவனுக்கு இணங்கினாள். ஒரு வாரு அவளை உள்ளே நுழைத்தவன், மெதுவாக அவளைத் தள்ளி விட, அவள் உள்ளே விழுந்தாள். அதைக் கூட உணராமல் சிவார்ப்பணா நடுங்கத் தொடங்கினாள்.

 

அவளைத் தொடர்ந்து உள்ளே குதித்த அநபாயதீரன் வேகமாகத் திறந்திருந்த ஜன்னலை மூடினான். எச்சரிக்கையுடன் அந்த இடத்தைப் பார்த்தான்.

 

அவன் நினைத்தது சரிதான். யாரோ குடி வர இருக்கும் அப்பார்ட்மன்ட்டுக்குப் புதிதாக வர்ணம் அடித்திருக்கிறார்கள். அதனால் தான் பெயின்டின் மணம் வெளியே போவதற்காக ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.

 

ஜன்னல் திறந்து வைத்திருந்ததால், அந்த அப்பாட்மன்ட் முழுவதும் குளிர்ந்தது. ஹீட்டரில் கை வைத்துப் பார்த்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. விரைந்து ஹீட்டர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றவன், ஹீட்டரைப் போட்டான்.

 

போர்வையாகப் போர்ப்பதற்கு ஏதாவது துணி இருக்கிறதா என்று தேடினான். வர்ணம் அடிக்கும் போது நிலத்தில் படாமல் இருப்பதற்காக விரிக்கும் துணியைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதாவது கிடைத்ததே என்கிற எண்ணத்தில், அதை இழுத்துக் கொண்டு சிவார்ப்பணாவின் அருகே சென்றான்.

 

ஏற்கனவே குளிரில் விறைத்துப் போயிருந்தவள், மழையின் துணையும் சேர்ந்ததால் சுய நினைவை இழக்கும் நிலையிலிருந்திருந்தாள்.

 

தாமதிக்காமல் தன் கரத்திலிருந்த போர்வையை அவளைச் சுற்றி அணிவித்தவன், மெதுவாக அவளைப் படுக்கவைத்தான்.

 

ஏற்கனவே அதிக இரத்தம் இழந்திருக்கிறாள். பேதாதற்கு அதிர்ச்சி வேறு. காலில் வேறு சப்பாத்து அணியவில்லை. முகம் முழுவதும் நீலமாக மாறிக்கொண்டிருக்க, தாமதிக்காமல், தன் தோளில் மாட்டியிருந்த பையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு சிவார்ப்பணாவை நெருங்கினான்.

 

கால்களையும், கையையும் தேய்த்து விட்டவன், போடப்பட்ட ஹீட்டர் வேலை செய்ய அரை மணி நேரமாவது எடுக்கும் என்பதால் அதற்கிடையில் ஏதாவது செய்யவேண்டும்… அவளை விட்டு விலகியவன்  சற்றுத் தள்ளிப் போட்டிருந்த, அவளுடைய பையை அவசரமாகத் திறந்து பார்த்தான். அவளுடைய ஆடைகள் சிலதும், கூடவே ‘ஆல்வேஸ் பாட்’ பாக்கட்டும் இருக்க, சிவார்ப்பணாவின் டி ஷர்ட்டுக்களை எடுத்து விரித்துத் தரையில் வைத்தவன், அதில் நாப்கின் பாடை வைத்து ஆடையோடு சுருட்டி எடுத்தான்.

 

சமையலறை நோக்கிப் பாய்ந்தவன், அங்கிருந்த நுண்ணலை அடுப்பில் (microwave oven) வைத்து ஐந்து நிமிடங்களுக்குச் சூடேற்ற அழுத்திவிட்டு, சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.

 

ஈரமாகிவிட்டிருந்த அவளுடைய தலைமுடியைக் களைந்தவன், எஞ்சியிருந்த டீ சேர்ட்டைக் கொண்டு, அவளுடைய முடியை துடைத்துவிட முயன்றான்.

 

திடீர் என்று, அவனுடைய போதாத நேரம், மழையுடன் கூடிய பனியால், திடீர் என்று மின்சாரம் தடைப்பட்டது. ஒரு கணம் அநபாயதீரனுக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை.

 

தன்னால் முடிந்த தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் வசை பாடியவன், சிவார்ப்பணாவைக் கவனமாகக் கிடத்திவிட்டு, சமையலறை நோக்கி ஓடினான். கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் மட்டுமே வேலைசெய்திருந்தது. அடுப்பின் கதவைத் திறந்து, எந்த அளவு சூடேறியிருக்கிறது என்று பார்த்தான். நல்ல வேளை ஓரளவு சூடேறியிருந்தது. பாட் வைத்திருந்ததால் அது சுலபத்தில் சூட்டை இழக்காது.

 

விரைந்து அவளருகே சென்றவன், ஜாக்கட் ஸிப்பை இழுத்து, அவள் போட்டிருந்த மேல் சட்டைக்கூடாக் சூடேறியிருந்த பாட் வைத்த துணிகள் இரண்டையும் நடு மார்புக்குள் செலுத்தி, மீண்டும் ஸிப்பைப் போட்டுவிட்டான். மிகுதியானவற்றைக் கழுத்தின் இரு புறமும், வைத்து சுற்றியவன் நேரத்தைப் பார்த்தான்.

 

அந்தச் சூடு அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. மின்சாரம் எப்போது வரும் என்பதும் தெரியாது. அதற்கிடையில் அவளுடைய சூட்டை மீட்டெடுக்கவேண்டும்.

 

அவள் காலடியில் அமர்ந்தவன், கால்களைப் பற்றித் தன் மடியில் வைத்து ஒவ்வொரு காலாகத் தேய்த்துச் சூடேற்றத் தொடங்கினான்.

 

‘ஹா.. ஹா…’ என்று அடித் தொண்டையிலிருந்து சூடான காற்றை அவளுடைய பாதங்களை நோக்கி வெளிவிட்டவாறு தேய்த்து விட்டான். சற்று வெளியே தெரிந்த கால்களின் விரல்களைத் தன் வெம்மையான கரங்களுக்குள் பொத்திப் பொத்திப் பிடித்துத் தன் சூட்டை அவளுக்குக் கடத்த முயன்றான். கால்கள் ஓரளவு சூடானது போலத் தோன்ற, அவளை நோக்கிக் குனிந்து, அவளுடைய கரங்களையும் பரபர என்று தேய்த்துச் சூடேற்றினான். தன் அடிக் காற்றின் வெம்மையை அவளுக்குக் கொடுத்தான்.

 

அப்படியிருந்தும் அவளுடைய நடுக்கம் குறைந்தபாடில்லை. அவளை மீறியிருந்த நடுக்கத்தைத் தவிர, அவளிடம் வேறு எந்தச் சலனமும் இருக்க வில்லை. உடனே, தன் பான்ட்டின் பின்னால் துருத்திக்கொண்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கையெட்டும் தூரத்தில் வைத்தவன், சிவார்ப்பணாவை நெருங்கினான்.

 

ஏற்கெனவே ஈரமாகிவிட்டிருந்த தன் தன்னுடைய மேலாடையைக் களைந்து ஓரமாகப் போட்டுவிட்டு, அவள் மேல் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி, அவளைத் தன் கை வளைவில் கொண்டு வந்து, அவளை இறுகத் தன்னோடு அணைத்தவாறு படுத்தவன், அவளுடைய இரு கரங்களையும் தன் இரு பெரிய கரத்தில் எடுத்து, தேய்த்து விடத் தொடங்கினான். அப்படியிருந்தும் குளிர் அடங்க மறுத்தது.

 

“யு ஆர் ஓக்கே… யு ஆர் ஓக்கே… நாளைக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் விழித்துக் கொள்வாய்” என்றவன் தன்னுடைய முகத்தை அவளுடைய கழுத்து வளைவில் புதைத்துக் கொண்டான். பின் விலகி, அவளுடைய தலையின் உச்சியில் இதழ் பதித்தவன், எங்கே அவளுக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவனாக, மென்மையாக அவளுடைய தலையை வருடிக்கொடுத்தான்.

 

எத்தனை நேரம் அவன் அப்படியே இருந்தானோ தெரியாது, தன்னையும் மறந்து வழிகள் மூட அப்படியே உறங்கிப் போனான்.

 

அந்த உறக்கத்திற்கு ஆயுள் அதிகம் இல்லை என்பதை, உணராமலே ஆழ்ந்த உறக்கத்தின் வசமானான் அந்தத் தீரன்.

(26)

 

“ட்ரட்… த்ரட்… தட்…”

 

சிவார்ப்பணாவை அணைத்தவாறு இடதுபக்கம் சரிந்த நிலையில், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த, அநபாயதீரனுக்கு, எங்கோ ஒரு திசையிலிருந்து, எதுவோ எதையோ உரசும் சத்தம் கேட்க, படக் என்று தன் விழிகளைத் திறந்தான்.

 

மின்சாரம் இன்னும் வந்திருக்கவில்லை. அதனால் இன்னும் குளிர் அப்படியேதான் இருந்தது.

 

தன் கை வளவில் சூட்டில் தன்னை மறந்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்த சிவாரப்ப்ணாவைக் கண்டதும், நிம்மதி எழப் பெரிய மூச்சொன்றை விட்டவன், அவள் மென்மையில் நன்றாகக் குளிர் காய்ந்துகொண்டிருந்த, வலக் கரத்தை எடுக்கப் பிரியப்படாதவனாகவே அவளுடைய உடல் சூட்டை அவதானித்தான்.

 

அவளுடைய வெம்மை திரும்பி வந்துவிட்டது என்பதைத் திருப்தியுடன் உணர்ந்துகொண்டவன், தன்னையும் மறந்து குனிந்து, அவளுடைய கழுத்து வளைவில் உதடுகளைப் பொருத்தி, எடுத்து, அவளை எழுப்பாமலே, தன் வலக் கரத்தை விலக்கி, அப்படியே மல்லாக்காகப் படுத்தான்.

 

சோர்வுடன், தன் கைக்கடிகாரத்தில், நேரத்தைப் பார்த்தான். ஐந்து மணி என்றது கடிகாரம்.

 

தூக்கம் இன்மையால் விழிகள் இரண்டும் எரிய, வலது கரத்தால் இரண்டு கண்களையும் அழுந்தத் தேய்த்துவிட்டு, சிவார்ப்பணாவின் தூக்கம் குலையாமல், அவள் புறமாகச் சரிந்து படுத்தவன், தன் கை வளைவிலிருந்த அவளுடைய தலையைக் கவனமாகப் பற்றித் தரையில் மெதுவாகக் கிடத்தியவாறு, விலகி எழுந்தான்.

 

பழக்கப்பட்ட காரியமாகச் சற்றுத் தள்ளி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, அருகேயிருந்த குளியலறைக்குள் நுழைந்தவன், அங்கேயிருந்த கழுவும் தொட்டிக்கு அருகே துப்பாக்கியை வைத்துவிட்டு, அவசர தேவையை நிறைவு செய்தான்.

 

ஏதோ பாரம் நீங்கிய நிம்மதியுடன், கை கழுவும் தொட்டியருகே வந்தவன், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். விழிகள் சிவந்து, தலை குலைந்திருக்க, தண்ணீர் குழாயைத் திறந்து, குளிர் நீரால் முகத்தை அடித்துக் கழுவி, இரண்டு உள்ளங்கைகளாலும் முகத்தைத் தேய்த்து விட்டவனுக்குத் தாடையின் சொரசொரப்பு தெரிய இடது உள்ளங்கையால், அதை வருடிக் கொடுத்தவாறு மீண்டும் கண்ணாடியைப் பார்த்தான். சோர்ந்திருந்த முகம் அவனுக்குப் பிடிக்கவில்லையோ, அப்படியே நின்றவாறு தன் விழிகளைச் சற்று மூடிக்கொண்டான்.

 

மனம் முழுவதும் தன்னுடைய அடுத்த திட்டம் என்ன என்பதை யோசித்தது. இப்போது அவனுடைய சோர்வு பறந்து போகத் தன் விழிகளைத் திறந்தான்.

 

அது வரை பற்றியிருந்த தூக்கம் முழுதாக விடை பெற்றிருந்தது. ஈரமாகிவிட்டிருந்த கரத்தினைக் கொண்டு, கலைந்திருந்த முடியைக் கோதி நிலைப்படுத்தியவன், கை கழுவும் தொட்டியின் ஓரமாக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பான்டின் பின் புறமாகச் செருகியவாறு குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

 

அவன் துப்பாக்கியைப் பின்புறம் செருகியபோது, புடைத்திருந்த தோள்களும், எம்பியிருந்த தசைகளும், மேல் ஆடையில்லாது இருந்ததால், அப்பட்டமாகத் தெரிந்த அவனுடைய எய்ட் பாக் வயிறும், துப்பாக்கி வைத்திருந்ததால் சற்றுக் கீழே இறங்கியிருந்த பான்ட் மூலம் தெரிந்த ‘வி’ வடிவ இடுப்பும், அந்த இணைப்பின் கடினமும், கூடவே அந்த இடையின் இணைப்பில் தெரிந்த மெல்லிய குழிகளும்… அவன் வீரன் வீரன் வீரன் என்று அறைகூவல் விட்டாலும் கூட, இத்தினை கம்பீரமாக, அழுத்தமாக, ஆளுமையுடன் இருக்கிறோம் என்பதைச் சற்றும் உணராதவனாக, உள்ளே வந்தான்.

 

தரையில் முன்தினம் எறிந்திருந்த, தன் ஆடையை எடுப்பதற்காகக் குனிந்தவனுக்கு மீண்டும் அந்த ஓசை கேட்டது.

 

“ட்ரட்… த்ரட்… தட்…”

 

நிமிராமலே, தன் செவிகளைக் கூர்மையாக்கி, எங்கிருந்து அந்தச் சத்தம் வருகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினான்.

 

கூடவே அவனுடைய விழிகள் மேலெழுந்து அந்த அப்பார்ட்மன்டின் வாசல் கதவை நோக்கிச் சென்றது.

 

டீ சேர்ட்டுடன் எழுந்தவன், அதை அணிந்துகொண்டு, பின்புறம் செருகியிருந்த தன் துப்பாக்கியை எடுத்து, லோட் பண்ணுவதற்காக, ஸ்லைடரை இழுக்க, அது எழுப்பிய கிளிக் என்கிற சத்தமே பெரும் சத்தமாகக் கேட்க, அவசரமாகத் திரும்பிச் சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

ஏற்கெனவே மனதளவில் பயந்துபோய், உடல் அளவில் காயப்பட்டு, தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில், இருப்பவளை, எழுப்ப அவன் விரும்பவில்லை. தவிர அவளுக்கு அந்த ஓய்வு தேவை. துப்பாக்கிப் பிரயோகத்தால், அவளுடைய தூக்கம் கலையும்.

 

முடிவு செய்தவன், மீண்டும் தன் துப்பாக்கியை அன்லோட் செய்துவிட்டு, அதைப் பின் புறம் செருகி, சிறு ஓசையும் எழா வண்ணம், அறைக் கதவைச் சாற்றியவன், எதற்கும் தயார் என்பது போல, வாசல் கதவுப் பக்கமாக வந்தான்.

 

கதவைத் திறந்ததும், யார் நின்றாலும், முகத்தில் ஓங்கிக் குத்துவதற்குத் தயாரானவன் போன்று உடல் நிமிரக் கரங்கள் இரண்டும் அதற்குத் தயார் என்பது போல, இறுகியிருக்கத் தன் விரல்களை மடித்து முஷ்டியாக்கி, ஓங்கியவாறு கதவைத் திறந்தவனின் கரங்கள், அந்தரத்திலேயே கொஞ்ச நேரம் நின்றது.

 

காரணம் அந்த ஓசை, முன்புறத்து வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் வேலைக்குப் போகும் அவசரத்தில், தன் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தார்.

 

இவன் திடீர் என்று கதவைத் திறந்ததும், அவரும் பயந்து போய் அச்சத்துடன் திரும்பிப் பார்க்க, ஓங்கிய கரத்தையும், அந்த வீட்டுக்காரரையும் மாறி மாறிப் பார்த்த அநபாயதீரன், அப்படியே மூடியிருந்த விரல்களை நீக்கி, ஐந்து விரல்களையும் நிமிர்த்திப் பிடித்து,

 

“சாரி…” என்று விட்டுத் திரும்பியவனின் விழிகளில், திடீர் என்று ஒரு நிழல் மறைவது தெரிந்தது. தன் புருவத்தைச் சுருக்கி நிழல் வந்த திசையை உற்றுப் பார்த்தவனுக்குச் சந்தேகப்படும்படி எதுவும் தெரியவில்லை. மீண்டும் வலம் இடமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தவன், எதுவும் வித்தியாசமாகத் தெரியாததால்,

 

‘சரிதான்’ என்று உள்ளே போய் கதவை மூடத் தொடங்க,

 

ஐந்து வீடுகளுக்கு அப்பால், வேறு இலக்கத்துடனான தொடர் மாடிக்கட்டிடம் பிரிந்து செல்லும் பகுதியில், நான்கு பேர் சுவரோடு சுவராகப் பதுங்கி நின்றிருந்தனர்.

 

நல்ல வேளை தங்களை அந்த ராட்ஷசன் கவனிக்கவில்லை என்கிற நிம்மதிப் பெரு மூச்சு விட்டவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதில் ஒருவன்,

 

“ஜார்ஜ்… கால் த பாஸ்…” என்று கூற, உடனே அந்த ஜார்ஸ், தன் கைப்பேசியை எடுத்து, யாருடனோ தொடர்பு கொண்டான்.

“வட்…”

 

“வி ஃபவுன்ட் தெம்…” என்றான் ஜார்ஜ்.

 

“குட்… எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள்…”

 

“எங்களுக்ககுச் சற்றுத் தள்ளியிருக்கும் அப்பார்ட்மன் ஒன்றிற்குள் மறைந்திருக்கிறார்கள்…”

 

“மறைந்திருக்கிறார்களா… ஆர் யு ஸ்டுபிட்… டூ யு நோ… ஹூ  இஸ் ஹி? ஃபயர்… வைல்ட் ஃபயர்… அவன் இது வரை யாருக்காகவும் பயந்து மறைந்திருந்ததில்லை. அவனுடைய தாக்குதல் நேரடியாக இருக்கும். எதிரி எழுந்துவிடாதவாறு தாக்குவதில் அவனை விஞ்ச இதுவரை யாரும் பிறந்ததும் இல்லை… பிறக்கப் போவதும் இல்லை…” என்று சீறியது மறு பக்கம், பின் சற்று நிதானித்து,

 

“லிசின்… நான் உங்களுக்கு உதவியாக இன்னும் கொஞ்சப் பேரை அனுப்பி விடுகிறேன்… அது வரை அவனுடைய கண்ணில் படாதவாறு நின்று கொள்ளுங்கள்…? அவனுக்கு, எள் அளவு சந்தேகம் வந்தாலும், உங்களைப் பூண்டோடு அழித்துவிடுவான்… நீங்கள் அனைவரும் அவனுக்கு வெறும் தூசி… புரிந்ததா… இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் உங்களுக்கு உதவி கிட்டும்… அது வரை அவனையும், அவனோடு இருக்கும் அந்தப் பெண்ணையும் கண்காணிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூற,

 

“ஓக்கே சார்…”

 

“அது மட்டுமல்ல… எது நடந்தாலும், அந்தப் பெண் உயிரோடு எனக்கு வேண்டும்… புரிந்ததா?” என்று கூற,

 

“ஷுர் சேர்…” என்றதும், மறு பக்கம் கைப்பேசி வைக்கப்ப்டது.

 

ஒரு கணம் அந்தக் கைப்பேசியை வெறித்தவன், அதை அணைத்து விட்டு, மீண்டும் தன் பான்ட் பாக்கட்டில் வைக்க, அவனுக்கு அருகேயிருந்தவர்களில் ஒருவன்,

 

“பாஸ் என்ன சொன்னார்…?” என்று கேட்டான் கிசுகிசுப்பாக.

 

“உதவிக்கு இன்னும் கொஞ்சப்பேரை அனுப்புகிறாராம். அதுவரை அந்தத் தடியனை கண்காணிக்கவேண்டுமாம்…” என்று கூற,

 

‘வட்… நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம். அவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா…? நம்முடைய திறமைக்கு முன்னால் அவன் வெறும், சருகு… நாம்… எதற்காக அவனுக்குப் பயப்பட வேண்டும்…” என்று அவன் கோபத்துடன் கேட்க.

 

“அது அவன் பெரிய…” என்று கூறிக்கொண்டு, திரும்பிய ஜோர்ஜின் முகத்துக்கு முன்னால், ராட்ஷசன் போல, மிக மிக அருகே, நெருங்கியவாறு நின்றிருந்தான் அநபாயதீரன்.

 

எதிர்பாரா தருணத்தில், திடீர் என்று தனது முகத்திற்கு முன்பாக இப்படி மலைபோல நின்றிருப்பான் என்று ஜோர்ஜ் மட்டுமல்ல, மற்றைய மூவரும் கூட, எதிர்பார்த்திருக்கவில்லை. சடுதியில் அவனைக் கண்டதும், அவர்களையும் அறியாமல் அவர்களின் முகம், பயத்தில் வெளிறிப்போக, அதைக் கண்டு ரசித்தவாறு,

 

“ஆர் யு லுக்கிங் ஃபோர் மீ?” என்று தன் இமைகளை மேலேற்றித் தலையைச் சற்று அசைத்து, பெரும் கிண்டலுடன் கேட்டான் அநபாயதீரன்.

 

ஏனோ அவனுடைய விழிகளைக் கண்ட எதிரிகளுக்கு, எதையும் சரியாகச் சிந்திக்க முடியவில்லை. பதட்டத்தில் எச்சிலைக் கூட்டிய விழுங்கிய ஜார்ஜ்…

 

“நோ… வி… ஆர்… லுக்கிங் ஃபோர்…” என்று ஜோர்ஜ் எதையோ கூறி சமாதானப் படுத்த முயன்றுகொண்டிருக்கும் போது, அவனுடைய சகாக்களின் ஒருத்தன் முந்திரிக்கொட்டைத் தனமாகத் தன் துப்பாக்கியைக் கரத்தில் எடுக்க முயன்ற வினாடி, ஜோர்ஜிலேயே கவனம் வைத்திருந்த அநபாயதீரன், சோர்வாக வைத்திருந்த தன் கரத்தினை சோர்வுடனே தூக்கி, அவனுடைய கரத்தில் விசிறி அடிக்க, அந்தத் துப்பாக்கி சற்றுத் தள்ளிப்போய் விழுந்தது.

 

அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பதை அவர்கள் ஊகிப்பதற்கு முன்பாக, ஜோர்ஜினுடைய மார்பில் பலமாகக் குத்தியவன், அவன் சற்றுக் குனிய, அவனுடைய கீழ் புறத்தில் ஓங்கி முழங்காலால் உதைத்தான். அப்படியே மடங்கித் தரையில் சரிந்தவனின் பின்புறக் கழுத்தில் தன் முழங்காலை மடித்தவாறு விழ, அடுத்த கணம் அவனுடைய கழுத்து உடைந்து போனது.

 

அப்படியே நின்றவாறு, தன் பின்னே நின்றிருந்தவனின் காலைப் பற்றி இழுக்க அவன் மல்லாக்காக விழுந்தான். உடனே எழுந்தவன் தன் காலால் விழுந்தவனின் இடுப்பில் ஒரு உதை உதைய, இரண்டு விலா எலும்புகள் முறிந்த கையோடு வலி பொறுக்க முடியாமல் விலாவைப் பற்றியவாறு திரும்பிக் குப்புறப் படுக்க, அநபாயதீரனோ தனது வலது காலைத் தூக்கி அவன் தலையில் ஓங்கி மிதித்தான். மிதித்த வேகத்தில் முகம் நசுங்கிப் போனான் அவன்.

 

அநபாயதீரனின் அந்த அசுர வேகத்தைத் தாங்க முடியாத எஞ்சிய இரு எதிரிகளுக்கும் மூச்சடைத்தது.

 

இருவரைக் கண்ணிமைக்கும் நொடியில் கொன்றுவிட்டான். எஞ்சியிருக்கும் தாம் இருவரும், அவனுக்கு வெறும் தூசி என்பதைப் புரிந்துகொண்ட மூன்றாமவன், கொஞ்சமாவது தன் மூளையைப் பயன்படுத்தாமல், அநபாயதீரனின் பிடரியில், தன் துப்பாக்கியை வைத்து,

 

“டோன்ட் மூவ்…” என்றவாறு தன் ட்ரிகரை அழுத்தத் தொடங்க, ட்ரிகர் புல்லட்டை வெளியே தள்ளுவதற்கு ஆறு விநாடிகள் மட்டுமே இருந்த நேரத்தில்,

 

“ஆர் யு ஸ்டுபிட்…” என்று கேட்டவாறு, திரும்பாமலே, தன் கரங்களைப் பின்னால் கொண்டு சென்று துப்பாக்கியைப் பற்றியிருந்தவனின் கரத்தைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, சத்தமில்லாது துப்பாக்கி அநபாயனின் கரத்திற்கு வந்து சேர்ந்தது. தன் ஒன்றைக் கரத்தால் எதிரியைப் பிடித்தவாறு, மறு கரத்தால் துப்பாக்கியை அன்லோட் பண்ணித் தூக்கி எறிந்தவன்,  அவன் புறமாகத் திரும்பி அவனைப் பார்த்துக் கிண்டலுடன் சிரித்தான்.

 

பின் தன் வலது கரத்தால் ஓங்கி அவன் கன்னத்தை அறைய, அவன் அறைந்த வேகத்தில் சுவரோடு மோதிக் கீழே விழுந்தவனை நெருங்கியவன், முழங்காலிட்டமர்ந்து, இவனுடைய தலையைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, ‘க்ரக்’ என்கிற சத்தத்துடன் தலை திரும்பி அந்தக் கணமே தன் உயிரைத் தானமாகக் கொடுத்தான் எதிரி.

 

இறுதியாக நின்றிருந்தவனுக்கு எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்பது புரிய, அநபாயதீரன், எழுந்து சுதாரிப்பதற்கு முன்பாக, பின்புறமாக நின்றவாறு அவன் மீது பாய, தன் தலைக்கு அருகாமையிலிருந்த எதிரியின், தலையைத் தன் தலையால் ஓங்கி அடிக்க, அவனுடைய பாறைபோன்ற தலை மோதிய வேகத்தில் ஏற்பட்ட வலியையும், தடுமாற்றத்தையும் போக்குவதற்கு அவன் சற்றுத் தடுமாற, இவனோ வேகமாக எழுந்து அவன் முகத்தைப் பற்றி ஓங்கிச் சுவரில் அடிக்க, அவன் அடித்த வேகத்தில் ட்ரைவால் உடைபட்டுத் தலை உள்ளே சென்று சரிந்து நின்றது. அவன் சட்டையைப் பற்றி எழுப்ப, இப்போது எதிரிக்கு அச்சத்தில் சர்வமும் அடங்கியது.

 

நிச்சயமாக அநபாயதீரனை வெல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாகத் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியவாறு பின்னோக்கிச் சென்றான்.

 

ஒரு கணம் அவனைக் கூர்மையுடன் பார்த்தவன், கெஞ்சுபவனிடம் தன் வீரத்தைக் காட்டித் தன்னை நிலைநாட்ட விரும்பாதவனாக

 

“எப்போதும் உன் முகத்தை எனக்குக் காட்டாதே” என்கிற எச்சரிக்கையுடன் திரும்பி, தமது அப்பார்ட்மன்ட் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

 

ஆனால் எதிரிக்குக் கிரகம் தப்பான இடத்திலிருந்ததோ? முகத்தில் வஞ்சத்தைத் தேக்கித் தன் காலுறையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அநபாயதீரனை நோக்கிப் பாய்ந்தான்.

 

கை நொடிப்பொழுதில், தனக்கு வர இருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், வேகமாகத் திரும்ப, அவன் திரும்பியதால், முதுகின் இடது புறமாகப் பாயவேண்டிய கத்தி, அவனுடைய மேற்கரத்தைக் கிழித்துக்கொண்டு சென்றது. அசையாமல் அப்படியே நின்று  தன் கரத்தைப் பார்த்தான்.

 

ஆழமான காயம் இல்லாவிட்டாலும், இரத்தம் அதிகமாகச் செல்லக்கூடிய வெட்டுதான்.

 

எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவன்,

 

“யு டிட் எ பிக் மிஸ்டேக்…” என்றவாறு அவனை நெருங்க, இப்போது மீண்டும் பயத்துடன் அவன் இரண்டடி வைக்க,

 

“சாரி படி… ஐ டோன்ட் ஹாவ் எனி சாய்ஸ்…” என்றவாறு அவனை நெருங்கியவன், அவன் கழுத்தைச் சுற்றித் தன் கையைப் போட்டு இறுக்கத் தொடங்க, மறு கணம் அவனுடைய இறுதி மூச்சையும் தனதாக்கியிருந்தான்.

 

அந்த நேரம், எங்கிருந்தோ, ஒரு பீப் சத்தம் வர கையில் உயிர்விட்டிருந்தவனை விடாமலே புருவ முடிச்சுடன், திரும்பிப் பார்த்தான்.

 

அது அந்த ஜோர்ஜினுடைய கைப்பேசி, அவனைக் கீழே விழுத்திய போது, அவனுடைய பாக்கட்டிலிருந்து வெளியே விழுந்திருந்தது.

 

கையில் கிடந்தவனை விட்டுவிட்டுத் திரும்பியவன், சென்று அதை எடுத்து உயிர்ப்பித்துப் பார்த்தான்.

 

“ஹெல்ப் எறைவ்ஸ்…” என்கிற குறுஞ்செய்தி மின்னிக்கொண்டிருக்க, அதைப் பார்த்தவனுக்கு இதழ்களில் கிண்டல் புன்னகை மலர்ந்தது.

 

“ப்ளீஸ் சென்ட் மி எ ரியல் ஹீரோ…” என்று மறு செய்தியை அனுப்பியவன், அந்தக் கைப்பேசியை, அருகேயிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, உயிரற்று இருந்தவர்களை நெருங்கினான்.

 

அதே நேரம், கரத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்க, எரிச்சலுடன், தன் டீ ஷேர்ட்டைக் கழற்றியவன், அதைக் கிழித்து ஒரு முனையைத் தன் வாயில் வைத்து மறு முனையை வலது கையால் பற்றி, சுற்றி இறுக்கக் கட்டினான்.

 

ஓரளவு இரத்தம் கட்டுப்பட்டது. திரும்பித் தன் இறந்த எதிரிகளைப் பார்த்தான். அதில் ஒருவன் கறுப்பு நிறத்தில் ஷேர்ட் அணிந்திருக்க, அவனை நிதானமாக நெருங்கியவன், வலது முழங்கால் தரையில் படிந்திருக்க, மறு காலை உயர்த்தி வைத்தவாறு குனிந்து, அந்க் கரிய நிற ஷேர்ட்டை லாவகமாகக் கழற்றி எடுத்துக்கொண்டு எழுந்தவன் அதை உதறி அணிந்துகொண்டான்.

 

கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும், குறைசொல்ல ஒன்றுமில்லை.

 

“நாட் பாட்…” என்று முணுமுணுத்தவன், மீண்டும் இறந்தவர்களை நெருங்கினான்.

 

அவர்களை, ஒருவராக இழுத்துக்கொண்டு சென்று, குப்பை போடும் அறையில் ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுக் கதவை மூடி, சிவார்ப்பணாவை நோக்கி விரைந்தான்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

3 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

1 day ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

1 week ago