Categories: Ongoing Novel

தகிக்கும் தீயே குளிர்காயவா 16/17/18

(16)

 

அவளை நோக்கி நீண்டிருந்த அந்தப் பெரிய துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு சீறிக்கொண்டு அவளை நோக்கி வர, இதோ நெற்றியின் மீது ஏறப்போகிறது என்று பதறியடித்தவாறு தன் விழிகளைத் திறந்தாள் சிவார்ப்பணா.

 

எங்கும் இருள் சூழ்ந்திருக்க, ஒரு கணம் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல் மயங்கி நின்றாள். மெது மெதுவாக நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, அவசரமாகப் படுக்கையை விட்டெழுந்தமர்ந்தாள்.

 

அவன் அந்த கிங்காங் அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல முயல, அவனிடமிருந்து தப்புவதற்காக, அவள் ஓடிய போது, யாரோ எவரையோ சுட்டனர். அதில் அவள் சிக்குப்பட்டாள். அதன் பின் ஒரு வாகனம் கட்டுப்பாட்டை மீறி அவளை நோக்கி வந்தது… அதன் பிறகு என்ன நடந்தது? ஆ… தீரன் என்னை இழுத்துக்கொண்டு மறுபக்கம் பாய்ந்தான். அந்த வாகனம் , விளக்குக் கம்பத்துடன் மோதி, வெடித்தது.. அதன் பிறகு? அதன் பிறகு என்ன நடந்தது? அதன் பின் நடந்த எதுவுமே அவளுக்கு நினைவில் இருக்கவில்லை.

 

கடவுளே…! அவனிடம் தப்புவதாக நினைத்து, மீண்டும் அவனிடமே சிக்கிக்கொண்டேனே…’ என்ற தன் தலையில் கைவைத்தவளுக்கு உடலில் அங்கங்கே பட்ட காயங்கள் வலித்தன. உதடுகள் சுழிக்க, தன் பாதத்தைத் தரையில் வைத்தவளுக்கு, இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை.

 

தீரன்தான் அவளை இங்கே கொண்டு வந்திருக்கவேண்டும். எதற்காக இங்கே கொண்டு வந்தான்? எங்கே இருக்கிறாள்…? இது எந்த இடம்? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. எதுவும் புரியாமல், பெரும் அச்சத்துடன், சுற்று முற்றும் பார்த்தாள். மின்சாரக் கடிகாரம, நேரம் எட்டு ஐந்து என்று காட்ட,

 

உடல் தள்ளாட மெதுவாக எழுந்தாள். பயத்தில் வியர்த்தது. இப்போது எங்கே இருக்கிறோம் என்பது கூடத் தெரியவில்லை. ஏதோ கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட உணர்வில் தவித்துப்போனாள். எப்படியோ சுவரைப் பற்றியவள், அதைத் தடவியவாறு தத்தித்தத்தி நடந்தவளுக்கு ஒரு கதவு தட்டுப்பட, அதன் குமிழைக் கண்டுபிடித்துத் திறந்தாள்.

 

அதன் வாசனையே அது குளியலறை என்பதை எடுத்துக் காட்ட, சுவரைக் கரத்தால் தடவி, மின்விளக்கைப் போட்டாள். நிம்மதியுடன், கைகழுவும் இடத்திற்கு வந்து நின்றாள். அவளுக்குக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போதே பயமாக இருந்தது. இது நான்தானா என்கிற சந்தேகமும் எழுந்தது.

 

தலை குலைந்து, முகம் முழுவதும் புழுதி அப்பியிருக்க, ஆங்காங்கே சில காயங்களுடன் , ஏதோ பிச்சைக்காரிபோல அவளுடைய தோற்றம் இருந்தது. முழங்கைகளிலும், முழங்கால்களிலும் எரிச்சல் ஏற்பட, இரு கரங்களையும் திருப்பிப் பார்த்தாள். சிராய்த்திருந்தது. தன் பாவாடையைத் தூக்கிப் பார்த்தபோது, தடுக்கி முன்புறமாக விழுந்தபோது, இரு முழங்கால்களிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அந்தக் காயங்கள் வேறு விண் விண் என்று வலித்தன. குதிக்கால்கள் வேறு தன்னைக் கவனி என்றது.

 

நல்ல வேளை அவளுடைய முகத்தில் நிலைத்திருக்கக் கூடிய பலமான காயங்கள் எதுவுமில்லை.

 

ஆனாலும் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. கொஞ்சக் காலமாக அவளுடைய வாழ்க்கை அவளுடைய கைகளில் இல்லாமல், வேறு யாரோ ஒருவரின் கைகளில் இருக்கிறது? அதை எப்படி மீளப் பெற்றுக்கொள்வது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.

 

கண்ணீர் வழிய மெதுவாகத் தண்ணீர் குழாயைத் திறந்து குளிர் நீரால் முகத்தைக் கழுவினாள்.

 

சிறிது தெளிவு வந்தது போலிருந்தது.

 

தண்ணீர் குழாயை மூடிவிட்டு அருகே இருந்த டவலால் முகத்தைத் துடைத்து மீண்டும் அதே இடத்திலிருந்ததுபோலவே வைத்தவளுக்கு மனதில் ஏதோ தோன்ற விரைந்து சென்று கைதுடைக்கும் பேப்பரால், அந்த மேசையில் தண்ணீர் பட்ட இடங்கள் அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தாள். மனம் திருப்திப் பட்டதும் பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கை அறைக்குள் வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

 

இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத சுழலில் சிக்குண்டவளுக்கு எப்படியாவது அந்த நரகத்திலிருந்து தப்பிவிடவேண்டும் என்கிற வேகம் மட்டும் இருந்தது. ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. அங்கிருந்த படுக்கையில் தொப்பென்று அமர்ந்தவள்இ தன் முகத்தைக் கரங்களால் தாங்கியவாறு,

 

“ஓ… காட்… எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே தலைகீழாக நடக்கிறது? ப்ளீஸ் சேவ் மி…” என்று கெஞ்சியவளின் காதில், யாரோ நடந்த வரும் அரவம் கேட்டது. உடனே உசாரானாள். பரபரவென்று படுக்கையில் சாய்ந்தவள் விழிகளை மூடிக்கொள்ள, கதவு திறந்துகொண்டது.

 

கதவைத் திறந்த வேகத்திலும், காற்றோடு கலந்து வந்த அவனுக்கே உரித்தான பிரத்தியேகமான மணத்திலும், வந்தது அநபாயதீரன்தான் என்பது புரிய, அசையாமல் அப்படியே கிடந்தாள்.

 

அவளை நெருங்கியவன் , அவள் இன்னும் உறக்கத்தில் இருக்கிறாள் என்று நம்பியவனாக விலகியிருந்த போர்வையை இழுத்து ஒழுங்காக அவள் மீது போர்த்திவிட்டு சற்றுத் தள்ளி நின்றவாறு இவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சற்று முன் அவள் சந்தித்த ஆபத்தையும் மீறி, எப்படி ரகு பற்றிய உண்மைகளை இவளிடமிருந்து பெறப் போகிறேன் என்கிற சிந்தனை வேறு அவனை வாட்டியது.

 

கூடவே, தன்னைச் சுற்றியிருக்கும் ஆபத்து பற்றி எதுவும் தெரியாது, குழந்தையாகத் தூங்கும் இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ என்பது கூடத் தெரியாமல், பெரு மூச்சொன்றையும் விட்டான்.

 

மெதுவாகத் திரும்பியவன், குளியலறைக்குள் நுழைந்து, கைகளைக் கழுவி அருகே இருந்த துவாயில் கரத்தைத் துடைக்க அதை எடுத்தபோதுதான், அதில் ஈரம் இருப்பது போல உணர்ந்தான்.

 

அவசரமாக அதை இழுத்து எடுத்துத் தன் மூக்கின் அருகே கொண்டு சென்று நுகர்ந்து பார்த்தான். யாரோ பாவித்திருப்பது புரிந்தது. “டாமிட்…” என்று முணுமுணுத்தவன், அவசரமாக விரைந்து சென்று கதவைத் திறக்க முயன்ற அந்த நேரம், வெளியே எதுவோ பலமாக இழுபடும் சத்தம் கேட்டது.

 

அநபாயதீரன், குளியல் அறைக்குள் நுழைந்ததும், வேகமாக எழுந்த சிவார்ப்பணா, சிறு பொழுதும் தாமதிக்காமல், அருகேயிருந்த கண்ணாடி மேசையைத் தன் பலம் முழுவதையும் திரட்டி கதவை அடைத்ததுபோல வைத்துவிட்டு, வேகமாக அந்த அறையை விட்டு வெளியே கிளம்பும்போது, அவனுடைய அசாதாரண பலம் நினைவுக்கு வந்தது.

 

இந்தக் கண்ணாடி மேசையெல்லாம் அவனுக்கு வெறும் ஜூ ஜூபி. ஒரு தள்ளலில் வெளியே வந்துவிடுவான். மீண்டும் திரும்பியவள், பலம் கொண்ட மட்டும் அங்கிருந்த அந்த கிங்காங்கின் சைசுக்கு ஏற்ற அளவிலிருந்த கிங்சைஸ் கட்டிலைத் தள்ளி, அந்தக் கண்ணாடி மேசையின் முன்பாக வைத்தவள், நிச்சயமாக இனி அவன் வெளியே அத்தனை சுலபத்தில் வரமாட்டான் என்ற நம்பியவளாக, வெளியே ஓடினாள்.

 

சிவார்ப்பணா, தப்புவதற்கு முயல்கிறாள் என்பதை உணர்ந்துகொண்ட அநபாயதீரன் பதறிப் போனான். உலகம் இவள் நினைப்பதுபோலப் பூந்தோட்டமில்லை. அங்கே குத்திக் கிழிக்கும் முட்கள்தான் அதிகம் இருக்கின்றன. மனிதர்களை வேட்டையாடும் கொடிய மிருகங்கள் இருக்கின்றன. அவற்றை இனம் கண்டு தன்னைப் பாதுகாக்கும் தெளிவில்லாத புள்ளிமான் அவள். அவனைப் பிரிந்து செல்லும் ஒவ்வொரு கணமும் அவளுக்குப் பெரும் ஆபத்து… இவளை நிறுத்தியாகவேண்டும்… எப்படி…?

 

பதற்றத்துடன் தன் செல்லை எடுப்பதற்காகப் பான்ட் பாக்கட்டைத் தடவினான். அப்போதுதான் சார்ஜ் போடுவதற்காக மேசையில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “ஒஒஒ ஒஒஒ ஒஒஒ.” என்று கத்தியவன், அவளைத் தடுக்கும் விதம் தெரியாது தடுமாறினான்.

 

“டாமிட்… அர்ப்பணா… லிசின்… டோன்ட் கோ… நான் சொல்வதைக் கேள்… ஓப்பன் த டாம் டோர் ரைட் நவ்…” என்கிற அவன் கடுமை நிறைந்த குரலை அவள் காதுகொடுத்துக் கேட்பதாகவே இல்லை. அவளுக்கு வேண்டியது அங்கிருந்து எங்காவது கண்காணா இடத்திற்கு அதுவும் அந்த அநபாயதீரன் தேடி வராத ஒரு இடத்திற்கு ஓடுவது மட்டுமே.

 

“சிவார்ப்பணா… ஓப்பன் த டோர்… யு கான்ட் கோ அவுட்சைட்… இட்ஸ் நாட் சேஃப்.. எதுவாக இருந்தாலும் பொறுமையாகப் பேசலாம்… நில்…” என்று கர்ஜித்தவன், பலம் கொண்ட மட்டும் குளியலறைக் கதவைக் காலால் உதைத்து திறக்க முயன்றான்.

 

சிவார்ப்பணாவோ, அவனுடைய சத்தத்தையோ, இல்லை அவனுடைய எச்சரிக்கையையோ கேட்கும் நிலையில் இல்லை.

 

இருந்த அவசரத்திற்குச் செருப்பைத் தேடமுடியாது. அதை விட, வெறுங் காலுடன் ஓட வேண்டியதுதான். எவ்வளவு முடியுமோ அத்தனை விரைவாக வாடகைக்கு வாகனம் ஒன்றைப் பிடித்து, வீட்டிற்குச் சென்று கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு… முக்கியமாகக் கொஞ்சப் பணம்… எடுத்துக்கொண்டு எங்காவது யாரும் இல்லா தேசத்திற்கு ஓடவேண்டும்.

 

வேகமாக முன்னறைக்கு வந்தவளுக்கு அப்போதுதான், தன் கைப்பையின் நினைவு வந்தது.

 

ஓ காட்… என்னுடைய பேர்ஸ்… அதில்லாமல் என் வீட்டிற்குப் போய் ஆணி கூட பிடுங்க முடியாது. வீட்டுச் சாவியிலிருந்து வாகனம் சாரதிப் பத்திரம் வரை அதில்தான் இருக்கிறது.

 

மீண்டும் உள்ளே ஓடி வந்தவள், தன்னுடைய கைப்பை எங்கே என்று தேடினாள்.

 

நல்ல காலம்… அது முன்புறத்து டீ டேபிலில் வைக்கப்பட்டிருந்தது.

 

“சிவார்ப்பணா… போகாதே…. கதவைத் திற…” என்று பலம் கொண்ட மட்டும் அநபாயதீரன் கத்துவது கேட்டது.

 

உதட்டில் ஒரு ஏளனப் புன்னகை மலர,

 

“குட் லக் மிஸ்டர் அநபாயதீரன்…” என்று முணுமுணுத்தவள், அதன் பிறகு காற்றாகிப் போனாள்.

 

(17)

 

கிடைத்த டாக்சியைப் பிடித்து வீட்டிற்கு வந்தாள்.

 

அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தவள், அநபாயதீரன் எந்த நேரமும் அவளை வேட்டை நாய் போலத் துரத்திக் கொண்டு வருவான் என்பது புரிந்ததால், கதவைச் சாத்திவிட்டு, சாத்திய வேகத்திலேயே ஆடைகள் ஒவ்வொன்றாகக் கழற்றியவாறு, குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவள் தடுக்கிக் கீழே விழுந்தபோது, ஆடைகள் முழுவதும் தூசியாகியிருந்தது. உடல் முழுதும் அழுக்குப்பட்ட அருவருப்பில் ஷவரின் கீழ் நின்றாள்.

 

மிக விரைவாகக் குளித்து முடித்து வெளியே வந்தவள், குளிருக்கு ஏற்ற ஆடையை அணிந்தவாறே, தன் கைப்பையில், பத்திரமாக வைத்திருந்த பணத்தை எடுத்துத் திணித்தாள்.

 

பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்செல்லும் பையை எடுத்தவள், அதிலிருந்த புத்தகங்களைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு, கைக்குக் கிடைத்த ஆடைகளை அதற்குள் திணித்தாள். குளியலறைக்குள் சென்று அத்தியாவசியப் பொருட்களையும் அதற்குள் போட்டவாறு அதே வேகத்தோடு முன்னறைக்கு வந்தாள். அங்கே ரகு அவளுக்குப் பரிசாகக் கொடுத்த லப் டப் அவளைப் பார்த்துச் சிரித்தது.

 

அதைக் கண்டதும் கோபம் தலைக்கு மேல் ஏறியது. அதை அப்படியே போட்டுடைக்க மனம் பராபரத்தது. ஆனால் ஒருவேளை அவன் கொடுத்த பெண்டனில் பெரிய குண்டு இருந்ததுபோல, இந்த லப் டப்பில் பெரிய அணுகுண்டே இருக்காது என்பது என்ன நிச்சயம்? இதை இங்கே விட்டுவிட்டுச் சென்றால், அது அவளுக்குத்தான் ஆபத்து. அதைவிட,

 

யோசிக்காமல், வேகமாக அதையும் தன்னுடைய பைக்குள் திணிக்க முடியாது திணித்தவள், அதைத் தோளில் மாட்டிய அந்த நேரம், யாரோ அவளுடைய வீட்டின் வாசல் கதவிற்கு முன்னால் வந்து நிற்பதும், சிறிதாக அதைச் சுரண்டுவதும் தெரிய ஆணி அடித்ததுபோல அப்படியே நின்றவளுக்கு, சில விநாடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்துபோய் நின்றாள்.

 

“ஓ… காட்… அநபாயதீரன் இத்தனை சீக்கிரமாகவா வந்துவிட்டான்?” இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

அவனிடம் பிடிபடக் கூடாது… எப்படியாவது தப்ப வேண்டும். எப்படி? எப்படி… கமோன் அநா… திங்க்… திங்க்… என்று தனக்குத் தானே அறிவுறுத்தியவள், யோசனை உதிக்க, முன்புறத்துக் குளோசட்டிற்கு சத்தம் கேட்காமலே வேகமாக ஓடினாள்.

 

மெதுவாகத் தூசி கூடக் கிளம்பாத வகையில், க்ளோசட்டைத் திறந்தவள், அங்கே அமைக்கப்பட்டிருந்த ஃபியூஸ் பெட்டியைத் திறக்க, அது பலநாள் திறக்கப்படவில்லையோ என்னவோ, புதிய ராகத்தில் அது திறக்க, அதிர்ந்து போய்ப் பயத்துடன் வாசலைப் பார்த்தாள்.

 

அந்தப் பக்கமும் சுரண்டல் நின்றுபோயிருந்தது. திரும்பி அவசரமாகப் பிரதான ஃபியூசைக் கோபம் முழுவதையும் திரட்டி, இழுத்துவிட அனைத்து விளக்குகளும் சத்தமின்றி அணைந்தன.

 

இந்த இருட்டில் அவன் சமாளிப்பதற்குள்ளாக அவள் தப்ப வேண்டும். முடியுமா? தவித்த போது, வாசல் கதவு மெதுவாகத் திறக்கப்படும் சத்தம் கேட்க, தாமதிக்காமல், அந்த க்ளோசட்டுக்குள்ளேயே பதுங்கிக்கொண்டாள்.

 

அவள் பதுங்கிக் கொண்டு க்ளோசட்டைப் பூட்டவும், சிறிய கிளிக் என்கின்ற ஓசையுடன் கதவு திறக்கவும் நேரம் சரியாக இருந்தது.

 

வாய்வரை வந்து துடிக்க முயன்ற இதயத்தைத் தன் கரம் கொண்டு அடக்க முயன்றவள், அந்த மெல்லிய இடைவெளிக்குள்ளாக நடந்து வந்த உருவத்தைக் கண்டதும், அவளுடைய இதயம் மேலும் பலமாகத் துடிக்கத்தொடங்கியது.

 

முதலில் அவளை நிலைகுலையச் செய்தது, அவன் அடித்துவிட்டு வந்த கஞ்சா மணம். அது அவளுடைய வயிற்றைப்புரட்ட, சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவாறு, நடுங்கிய கரங்கள் கொண்டு தன் வாயையும் மூக்கையும் பொத்தியவாறு மேலும் கிடைத்த இடைவெளிக்கூடாக உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினாள்.

 

அவள் நினைத்ததுபோல் வந்தது அநபாயதீரன் அல்ல. வேறு யாரோ. அவன் உயரத்திற்கு ஏற்ற பருமனாகப் பார்ப்பதற்கு ராட்சதன் போலிருந்தான். கறுப்பினம் என்பது அவனுடைய உருவம் காட்டியது. முகத்தை வேறு மறைத்திருந்தான். கூடவே அவனுக்குப் பின்னால் இன்னொருவன் வந்துகொண்டிருக்க, இவள் உடல் மேலும் நடுங்கியது. அந்த இருட்டில் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை என்றாலும், அவ் இருவரும் அவளை விட இரண்டு மடங்கு பலமும், பருமனும் கொண்டவர்களாக இருந்ததால், நிச்சயமாக அவர்களிடமிருந்து தப்புவது இயலாத காரியம் என்பது நன்கு தெரிந்தது.

 

யார் இவர்கள். எதற்காக அவளுடைய ஃபிளாட்டிற்கு அத்துமீறி நுழைகிறார்கள். என்னைச் சுற்றியுள்ள மர்மத்தின் விடு பட்ட அத்தியாயமா? இல்லை தொடர் கதையா? இல்லை அநபாயதீரன் அனுப்பிய ஆட்களா? அல்லது ஏதாவது திருடிச் செல்வதற்காக வந்திருக்கிறார்களா? அப்படித் திருடுவதற்கு அவளுடைய வீட்டில் என்ன இருக்கிறது?

 

‘ஏன்டா டேய்… திருடுவதற்கு உங்களுக்கு வீடா கிடைக்கிவில்லை… போயும் போயும் என் வீட்டில் கொள்ளையடிக்க வந்திருக்கிறீர்களே…’ என்று வருத்தப்பட்டவளின் கவலை, அவர்களின் கரத்திலிருந்த பொருளைக் கண்டதும், பயமாக மாறி அது விழிகளினூடாக வழிந்துவிடும் போலத் தெறித்தது.

 

‘து… துப்பாக்கி… இதை எதற்காகக் கொண்டு வந்திருக்கிறார்கள்… திருடுவதற்கு இதையெல்லாமா கொண்டுசெல்வார்கள்…” எங்கே மீண்டும் மயங்கிவிடுவோமோ என்று அஞ்சியவளாக, தான் விடும் மூச்சு கூட அவர்களைத் தன்பக்கம் திருப்பிவிடுமோ என்கிற பதட்டத்தில் மூச்சைக் கூட வெளிவிடாது அப்படியே தன் நிலை கெட்டு நின்றிருந்தாள் சிவார்ப்பணா.

 

அந்தத் துப்பாக்கி… எப்போதும் அவளை நோக்கி நீழலாம். “ஓ… காட் சேவ் மி… ப்ளீஸ் சேவ் மீ… தீரன்… நான் தவறுசெய்துவிட்டேன்… உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கவேண்டும். இருந்திருந்தால், எனக்கு இப்படியொரு நிலை வந்திருக்காது… இப்போது நான் என்ன செய்யட்டும்… ப்ளீஸ்… கம் அன்ட் சேவ் மி… என்னை இப்படியே சாகவிட்டுவிடாதீர்கள்…’ என்று மனதார வேண்டியவள், மீண்டும் உள்ளே நுழைந்தவர்களை அவதானிக்கத் தொடங்கினாள்.

 

உள்ளே நுழைந்தவன், மின் விளக்கைப் போட்டான்.

 

வெளிச்சம் வரவில்லை. தன்னுடைய பென் டோர்ச்சை வெளியே எடுத்து அந்த வெளிச்சத்தில் கவனமாக ஆராய்ந்தான்.

 

வெளிச்சம் இவள் இருந்த பக்கம் மெதுவாகத் திரும்ப, வேகமாகத் தன்னை மறைத்துக்கொண்டாள் சிவார்ப்பணா. அவளுக்கு அச்சத்தில் உடல் நடுங்கியது. முகம் வெளிறியது… உடல் வேர்த்துக் கொட்டியது. இப்படியே கொஞ்ச நேரம் பயமுறுத்தினால் மயக்கம் நிச்சயம். அதனால் அவசரமாகத் தன்னை சமாதானப் படுத்த முயன்றவளாக,

 

“ஓ.. மனமே கொஞ்சம் திடப்படுத்திக்கொள்… மயங்கி விழுவதற்கு இது நேரமில்லை. நீ உன்னைக் காப்பாற்ற வேண்டும். எப்படியாவது காப்பாற்றவேண்டும்… திடப்படுத்திக்கொள்…” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டிருந்தவளுக்கு மீண்டும். அநபாயதீரனின் நினைவு ஆக்கிரமித்தது.

 

அவன் என்னதான் கெட்டவனாக இருந்தாலும், அவனருகே இருக்கும்போது இருந்த பாதுகாப்பும், எந்தத் துன்பம் வந்தாலும், அதை எதிர்கொள்ளலாம் என்கிற தைரியமும் சூழ்ந்திருக்கும். இப்போது அவன் இல்லாத இந்த நிலையில், அவனைத் தேடி மனம் ஏங்கித் தவித்தது. அவன் இருந்திருந்தால், எந்தப் பயங்கரத்தையும் அசால்ட்டாகத் தாங்கிக்கொள்ளலாம் போலத் தோன்றியது.

 

அவளுக்கு அவளை நினைத்தே சிரிப்பு வந்தது.

 

அநபாயதீரனைப் பற்றிச் சிந்திக்கும் நேரமா இது? முதலில் தப்ப வேண்டும்… அவர்கள் உள்ளே நுழைந்ததும், இவள் சப்தம் போடாமல் வெளியேற வேண்டும். முடியுமா? யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவள் இல்லை என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும்.

 

அவள் அங்கில்லை என்பதைத் தமக்குள் பேசியவாறு முகத்திலணிந்திருந்த துணியைக் கழற்றி சற்று முன்னேறத் தொடங்கினர்.

 

அதே நேரம், ஒருவன் அவளிருந்த க்ளோசட்டைத் திறக்கத் தொடங்கினான். அப்போதுதான் அந்த டோச் லைட் வெளிச்சத்தில், மெல்லிய இடுக்கினூடாக அவனுடைய முகம் தெரிந்தது. அவனைக் கண்டதும், அவளிடம் அடைக்கலமாகியிருக்கிற உயிர், வாய் வழியாக வெளியேறி ஓடிவிடும் போலத் துடிக்கத் தொடங்கியது. நம்ப முடியாமல் மீண்டும் உற்றுப் பார்த்தாள்.

 

இவனா… இவன்தானே அன்று அவளைக் கடத்திச் செல்ல முயன்றவன். இப்போத எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். மீண்டும் என்னைக் கடத்திச் செல்லவா? இல்லை… வேறு நோக்கமா? இப்போது நான் என்ன செய்வது?’ எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழிக்க, அவனோ மேலும் கதவைத் திறக்கத் தொடங்கினான்.

 

இதோ திறந்து விட்டான். இன்னும் அரை இஞ்சி திறந்தால் போதும். அவள் வெளிப்பட்டு விடுவாள். இந்தக் கணமே, அவனுடைய கரத்திலிருக்கிற துப்பாக்கி அவளைச் சுடப் போகிறது… அவள் சாகப்போகிறாள்.

 

சிவார்ப்பணாவிற்கு ஐந்தும் கெட்டது. சரி… தன் முடிவு நெருங்கிவிட்டது என்பது அவளுக்குப் புரிய, விழிகளில் குளம் கட்டியது.

 

இதோ… என் இடக்கரம் தெரியப் போகிறது… இதோ…” என்று அஞ்சியவளாகத் தன் இரு விழிகளையும் அழுந்த மூடி, பயத்தில் ஏறியிறங்கிய மார்பகத்தைத் தடுப்பவள் போல, அதில் தன் வலக்கரத்தைப் பதித்து, வியர்வையில் உடல் நனைய, தன் முடிவை எதிர்பார்த்த அந்தத் தருணத்தில்,

 

“ஜெராக்ஸ்…” என்று கூட்டாளி அவனை அழைக்க, திறந்த க்ளோசட்டை அப்படியே விட்டுவிட்டு, நண்பனின் அருகே விரைந்து சென்றான் அந்த ஜெராக்ஸ் என்பவன்.

 

அவன் சிவார்ப்பணா கழற்றியெறிந்த ஆடையைத்தான், தன் கூட்டாளிக்கு டோச்லைட் மூலம் காட்டிக்கொண்டிருந்தான்.

 

அதுவரை அடைத்திருந்த மூச்சை மெதுவாக வெளி விட்டு, சாய்ந்து அமர்ந்தவளுக்குப் புத்தி இடித்துரைத்தது.

 

“ஏய் மக்கு… சாய்ந்தமர்ந்து கதையோசிக்கும் நேரமா இது… பைத்தியக் காரி… கமோன் அநா… தப்புவதற்குரிய நேரம் இதுதான்… கமோன்… தப்பு… சந்தர்ப்பத்தை விடாதே… உன்னால் முடியும்… நிச்சயமாக முடியும்… ‘கமோன் அநா. யுகான் டூ இட். கமோன்…’ என்று ஒரு மனம் அவளைத் திடப்படுத்த, சத்தம் போடாமல் குளோசட்டை மேலும் திறந்து சத்தம் போடாது வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் குளியலறைப் பக்கம் சென்றிருந்தனர்.

 

இருட்டு அவளுக்கு அரணாக இருக்க, மெதுவாக வெளியே வந்தாள்.

 

‘தப்பிவிட்டாள். தப்பிவிட்டாள்…’ எந்தச் சத்தமும் போடாமல், முன்புறக் கதவைச் சிறிது சிறிதாகக் கதவைத் திறந்தாள். ‘இனி கொரிடோரில் ஓட்டமாக ஓட வேண்டியதுதான். அதன் பின் அவளைப் பிடிக்க முடியாது. முடியவே முடியாது…’ என்கின்ற மகிழ்ச்சியில் கதவைத் திறந்து வெளியே வந்தவள் அதிர்ந்து போய் பேய் அடித்ததுபோல ஒரு கணம் நின்றாள்.

 

வெளியே ஒருத்தன் காவலுக்காக நின்றிருப்பான் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அதே போல அந்தக் கதவைத் திறந்துகொண்டு ஒருத்தி வருவாள் என்று அவனும் நினைத்திருக்கவில்லை என்பது அவனுடைய அதிர்ந்த முகம் எடுத்துக்காட்ட,

 

வேகமாகத் தன்னைச் சமாளித்த சிவார்ப்பணா, அந்தக் கணத்தில் தன் புத்திக்குத் தோன்றியதைச் செய்தாள்.

 

தன் தோளில் மாட்டியிருந்த பையைக் கண்ணிமைக்கும் நேரத்தில கழற்றி எடுத்தவள், வேகமாக அவனின் முகத்தில் விசிறி அடித்து, அவனைப் பொறிகலங்கச் செய்தாள். அவன் கலங்கிய அந்த நேரத்தில் மின்னல் விரைவுடன் மீண்டும் தன்பையை முதுகில் போட்டவாறு, எலிவேட்டரை நோக்கி ஓடினாள்.

 

எலிவேட்டர் பட்டனை அழுத்துவதற்கும், வெளியே நின்றவன் சப்தம் கொடுக்க, உள்ளே இருந்தவர்கள் ஓடி வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

 

‘இல்லை இந்த எலிவேட்டரை நம்பினால் நான் சிவலோகப் பதவியைத் தாமதிக்காமல் பெற்று விடுவேன். அதை விட… படிகளைக் கடந்து ஓடுவதுதான் சாலச் சிறந்தது.’

 

நினைத்த மாத்திரத்திலேயே படியின் பக்கமாக ஓடினாள். அவள் திரும்பி ஓடவும், ஒரு தோட்டா வேகமாக அவள் பக்கமாச் சீறிப்பாய்ந்து சுவரில் பட்டுத் தெறிக்கவும் நேரம் சரியாக இருந்தது. சிவார்ப்பணா அது எதையும் நின்று கவனிக்கும் நிலையில் இருக்க வில்லை. அவளுடைய புத்தி வேகமாக ஓடுமாறு கட்டளையிட, ஓடினாள்.

 

“ப்ளீஸ் காட்… சேவ் மி… தீரன்… வெயர் த ஹெல் ஆர் யூ?” என்று தனக்குள் முணுமுணுத்தவள், படிப்புறத்துக் கதவை வேகமாகத் திறக்கத் தொடங்கினாள்.

 

அதே நேரம் இன்னொரு தோட்டா அவளை நோக்கிப் பாய்ந்து வர, அவளும் கதவைத் திறந்துகொண்டு, திரும்புகிற விநாடி, அந்தத் தோட்டா, அவளுடைய தோள்புறத்தைத் தேய்த்துக்கொண்டு செல்ல, அதன் வேகத்தில் ஒரு விநாடி சிவார்ப்பணா அதிர்ந்து போய் சிலையாகி நின்றாள்.

 

நிலமையின் விபரீதம் அவளைத் தாக்க, காயத்தையும் பொருட்படுத்தாமல் வேகமாகப் படிகளை நோக்கி இறங்க முயன்றாள். ஆனால் முந்தைய வேகத்திற்கும் இந்த வேகத்திற்கும் நிறைய மாற்றங்கள்.

 

தோட்டா தாக்கிய வேகத்தில், அதுவரை மனதிலிருந்த பலம் மெது மெதுவாக விடைபெற, எந்தக் கணத்திலும் தான் பிடிபட்டு விடலாம் என்கிற சிந்தனை, அவளை ஆக்கிரமித்ததால், அவளுடைய வேகம் தாமாகத் தடைப்பட்டது. ஒருபக்கத்து மனமோ, சிவார்ப்பணா… மனம் சோராதே… நீ ஓட வேண்டும்… ஓடு… மனத்தைத் திடப்படுத்திக்கொள்… உன்னால் முடியும்… இன்னும் கொஞ்சத் தூரம்தான்…. மூன்றே மூன்று தளங்கள்தான்… நீ தாண்டிவிடலாம்… ஓடு… ஒடு…’ என்று அவளுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தது.

 

இன்னொரு மனமோ, ‘இனி முடியாது சிவார்ப்பணா … நீ பிடிபடப்போகிறாய்… உன்னுடைய வேகம் பெரிதும் மட்டுப்பட்டுவிட்டது… உன்னால் அவர்களை ஜெயிக்க முடியாது… திரும்பிப் பார், அவர்கள் நெருங்கிவிட்டார்கள், திரும்பிப் பார் சிவார்ப்பணா…’ என்று கட்டளையிடத் திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிற உறுதியையும் மீறித் திரும்பிப் பார்த்தாள்.

 

அப்போது ஒருவன் வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு அவளை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

 

மனமும் சோர, உடலோ அதிக வேகத்தைத் தாங்க மாட்டேன் என்பது போலத் தள்ளாடியது. அவளுடைய தாமதம், சுட்டவனுக்குச் சாதகமாக இருந்தது. இரண்டு எட்டில் அவளை அடைந்தவன் அவளை இழுத்து சுவரோடு மோதினான். மோதிய வேகத்தில் அவளுடைய தலை பலமாகச் சுவரில் அடிபட, பொறி பறந்தது அவளுக்கு.

 

அவனோ, சுவரோடு மோதியது மட்டுமல்லாது, தன்னையும் மீறித் திமிறியவளைத், தன்னுடைய பெரிய உடலால் அழுத்தி நகர விடாது செய்தான்.

 

அவனுடைய கைகள், சிவார்ப்பணாவின் குரல் வளையை அழுத்தித் தூக்கியது. கால்கள் இரண்டும் அந்தரத்தில் தொங்கியது.

 

அவனுடைய பலத்திற்கு முன்னால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. மனம் வேறு, பெரிதும் சோர்ந்து இயலாமையில் தன்னிலை கெடத் தொடங்கியது. மூச்சு எடுக்க முடியாமல் தடைப்பட்டது. பேச முடியாது வாய் திக்கியது. கண்கள் வெளியே வரும் போலத் தெறித்தது.

 

“டெல் மி… வியர் இஸ் இட்…” என்று கர்ஜித்தான் அவன்.

 

சிவார்ப்பணாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் என்ன கேட்கிறான் என்பதே அவளுக்கு விளங்கவில்லை. காதுகள் வேறு அடைத்தன. அவன் வாய் அசைப்பது மட்டும்தான் அவளுக்குத் தெரிந்ததன்றி அவன் என்ன சொல்ல முயல்கிறான் என்பது அவளுக்குச் சுத்தமாகப் புரியவேயில்லை.

 

“எ… எதை” என்று கூடக் கேட்க முடியாத அளவிற்குக் குரல்வளை அழுத்தப்பட்டிருந்ததால் உடல் உதறியது. அவளையும் மீறி ஒரு அபாயத்தில் சிக்கும் போது, தன்னைக் காக்குமாறு அவலக் குரலை உடல் எழுப்புமே… அத்தகைய ஒலி அவளிடமிருந்து புறப்பட்டது.

 

அவளுக்குத் தான் சாகப் போகிறோம் என்பது புரிந்தது. அவள் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஆனால் சாவதற்கு முன்பாக, அநபாயதீரனைப் பார்க்காமல் போய்விடப் போகிறோமோ என்பதுதான் அவளுடைய பெரும் வேதனையாக இருந்தது.

 

தன்னையும் மறந்து விழிகள் சுழன்றன. எங்காவது அவன் தென்படுகிறானா என்று ஆவலாக அவள் மனம் தேடியது.

 

அவள் ஏன் அவனைத் தேட வேண்டும்? அவன் ஏன் அவளைத் தேடி வரவேண்டும்? அவன் யார் அவளுக்கு? இதையெல்லாம் எண்ணுவதற்குள்ளாகவே அவளுடைய நினைவு கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு மறையத் தொடங்கியது…

 

(18)

 

சிவார்ப்பணாவிற்கு மூச்செடுப்பதே சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்ச அழுத்தம்தான். அவளுடைய கழுத்து முறிந்துவிடும். மூச்சுக் குழாய் தடைப்படும்… அவள் இறுதி நிமிடங்கள் இவை. என்ன செய்வது? தப்ப வேண்டும்… எப்படி? மங்கிக் கொண்டிருந்த உணர்வுகளிடமிருந்து பேரம் பேசுவதற்கு இது நேரம் இல்லை.

 

“வேக்கப் சிவார்பப்ணா… யு கான் டு இட்…” என்று கட்டளையிட, எப்படியோ தன் புத்தியை நிலைப்படுத்தியவள், இறுதி முயற்சியாகத் துடித்தவள், தன் முழங்காலைச் சிரமப்பட்டு மடித்து, முடிந்த வரை பலம் கூட்டி, அவன் உயிர் நாடியில் ஓங்கி உதையை, அதை எதிர்பார்க்காத அந்த ராட்சசனின் பிடி வேகமாக விலகியது.

 

மூச்சுக்குப் பதில் இருமல் வர, மூச்செடுப்பதா, இருமலைச் சமாளிப்பதா என்று தடுமாறி, தரையில் அமர்ந்தவள், ஒருவாறு இரண்டையும் ஒரே நேரத்தில் நிறைவு செய்தவளுக்கு, உள்ளத்துடன் சேர்ந்து உடலும் நடுங்கியது.

 

இந்த மூன்று யமன்களிடமிருந்தும் அவளால் தப்ப முடியுமா தெரியவில்லை… ஆனால் முடிந்த வரையும்… குறைந்தது தீரன் அவளைத் தேடி வரும் வரையாவது அவள் உயிரோடு இருக்கவேண்டும்… முடியுமா தெரியவில்லை… முடியவேண்டும்… ஆனால் எப்படி என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.

 

தற்போதிருக்கும் உடல் நிலையில் அவளால் நிச்சயமாக ஓட முடியும் போலில்லை. தொண்டை வேறு கயிற்றால் சுருக்கிட்டதுபோல வலித்தது. தன் வலக்கரத்தால், கழுத்தை வருடியவள், அவர்களுடன் பேரம் பேச முயன்றாள்.

 

அந்த ஜராக்ஸ் என்பவன், கோபமாக அவள் பக்கமாக வர, பயத்துடன் தன்னைச் சுருக்கிக்கொண்டவள், விழிகள் அச்சத்தால் தெறிக்கத் தன் கரத்தை நீட்டி அவனைத் தடுக்க முயன்றவளாக,

 

“ஸ்டாப்… ஸ்டாப்… நீங்கள் யார்… எதற்காக என்னைத் துரத்துகிறீர்கள்… தயவுசெய்து சொல்லுங்கள்…” என்று திக்கித் திணறிக் கடுமையாக இருமியவாறு கேட்டவளுக்கே தான் என்ன கேட்டோம் என்பதே புரியவில்லை.

 

“உனக்குத் தெரியாது?” என்று ஆவேசமாக, அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். அவன் அறைந்த வேகத்தில் பல்லு உதட்டில் பதிந்து இரத்தம் கசிய, அந்த வலியைப் பொறுக்க மாட்டாமல் கண்களும், மனமும் மங்கத் தொடங்கின. ஆனாலும் பேச வேண்டும்… இல்லையென்றால், அவளுக்குக் குறிக்கப்பட்ட இறப்பின் நிமிடங்கள் நெருங்கிவிடும்.

 

“லிசின்… எனக்கு உங்கள் கோபம் புரிகிறது… சத்தியமாக எதற்காக என்னைத் துரத்துகிறீர்கள் என்று புரியவில்லை… எதுவாக இருந்தாலும்… சொல்லுங்கள்… எனக்குத் தெரிந்தால், சத்தியமாகச் சொல்கிறேன்…” என்று இவள் பேரம் பேசும் போதே, அவளிடம் உதை வாங்கியவன், எப்படியோ தன் வலி சமப்பட, பெரும் சீற்றத்துடன் அவளைக் கொல்லும் வேகத்துடன் எழ, அதே நேரம் வெளியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டது.

 

மூர்க்கத்தனத்துடன் பாய்ந்து வந்தவனை ஒருவன் தடுத்து சமாதானப் படுத்தியவாறு, எதையோ கூற அவனோ மூசியவாறு சிவார்ப்பணாவைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒருவன் சிவார்ப்பனாவின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து, வாயில் விரலை வைத்து சத்தம் போடவேண்டாம் என்று எச்சரித்தவாறு நிற்க, அந்த ஜெராக்ஸ் என்பவன் தன்னருகே நின்றிருந்தவனிடம், தலையை அசைத்து, உள்ளே யார் வருகிறார்கள் என்று பார்க்குமாறு கட்டளையிட அவன் தன் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தவாறு கதவைத் திறந்து கொரிடோரை எட்டிப் பார்த்தான். கண்ணுக்கு யாரும் தெரியவில்லை.

 

தலையை நிமிர்த்தி விரல்களை அசைத்து எதுவுமில்லை என்று குறிப்புக் கொடுக்க, அவனை உள்ளே நின்று காவல் காக்குமாறு ஜெராக்ஸ் கூற, சரி என்றவாறு உள்ளே நுழைந்து கதவைச் சாத்த, அதுவரை சிவார்ப்பணா தன்னை அடித்த ஆத்திரத்தை அடக்கி வைத்திருந்தவன்,

 

“யு… XXX… ஐல் கில் யு… பிளடி XXX XXX” என்று கர்ஜித்தவாறு, என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் முன்பாகவே, அவளை ஓங்கி உதைய, அவன் உதைந்த வேகத்தில் பின்புறமாகத் தூக்கி எறியப்பட்டவள், சுவரோடு மோதுப்பட்டு முற்று முழுதாகத் தன் சுயநினைவை இழந்து முன்புறமாகத் தரையில் விழுந்தாள்.

 

அவள் சுய நினைவை இழந்துவிட்டாள் என்பதைக் கூட, புரிந்து கொள்ளாத அந்த ராட்சசன், அவளருகே அமர்ந்து, அவளுடைய தலை முடியைப் பிடித்துத் தூக்கி.

 

“யார் மேல் கை வைத்தாய்… என்ன தைரியம் உனக்கு…” என்று ஆங்கிலத்தில் கர்ஜித்தவாறு அவள் இதயத்திற்கு நேராக முதுகின் பக்கமாகத் தன் துப்பாக்கியைப் பிடித்து, சுடுவதற்காக விசையை அழுத்தத் தொடங்கிய நேரம்,

 

“ஹே… ஸ்டாப்… வீ நீட் ஹர்…” என்று ஜெராக்ஸ் அவனைத் தடுக்க முயன்ற நேரம், கீழேயிருந்து மீண்டும் ஒரு சத்தம் வர, குனிந்து பார்த்தான்.

 

அடுத்த கணம், அவன் கிரில்லில் இருந்து, தலைகுப்புற, அப்படியே கீழே விழத் தொடங்கினான்.

 

அநபாயதீரன் பல முறை கதவைத் தள்ளிப் பார்த்தான். சிவார்ப்பணா கண்ணாடி மேசையைக் கதவிற்கு முன்பாக வைத்துவிட்டு ஓடியிருக்க வேண்டும் என்பது புரிந்தது.

 

இப்போது அவள் தப்பி இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. “ஸ்டுப்பிட்… ஸ்டுப்பிட் கேர்ள்… எந்த மாதிரி நிலையிலிருக்கிறோம் என்பதைக் கூடப்  புரியாமல், சே… டாமிட்…’ என்று தனக்குள்ளேயே சீறியவன், எப்படியாவது அவளைக் கண்டு பிடிக்கவேண்டும் என்கிற வெறி தோன்ற, பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள, அவனுடைய பலத்திற்கு, ஈடு கொடுக்க முடியாமல், கண்ணாடி மேசையும், அந்தக் கட்டிலும் வழுக்கிக்கொண்டு சென்றது.

 

அவளை வெளியே போக விடக் கூடாது. போனால்… நினைக்கும் போதே மனம் பதறியது. அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று எண்ணி அஞ்சியவன், சடார் என்று தடை போட்டது போல நின்றான்.

 

‘அச்சமா எனக்கா..? நெவர்… நான் எதற்கும் பதறியது கிடையாது. அச்சம் என்பது என் அகராதியிலேயே  கிடையாது. அவளைக் காப்பாற்ற வேண்டும். அதற்குக் காரணம் வேறு… அதற்காகத்தான் நான் கொஞ்சம் தடுமாறுகிறேன்…” என்று தன்னைச் சமாளித்தவனுக்குத் தன்னை எண்ணி வியந்துபோனான். “எந்த நிலையிலும் நான் தடுமாறியது கிடையாதே… இந்தப் பதற்றம், தடுமாற்றம், அச்சம் இவை நான்  அறியாத உணர்வுகளாயிற்றே… டாமிட்… எனக்கென்னவாகிவிட்டது?’ என்று குழம்பியவன்,

 

‘ஓக்கே மான்… கூல்… நீ செய்யவேண்டிய காரியம் மிக மிக முக்கியமானது… அதனால்தான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறாய்… மற்றும் படி எதுவுமில்லை…’ என்று மனசாட்சி அவனைத் தேற்ற முயல,

 

‘பதற்றமா… எனக்கா? நான் எதற்கும் பதற்றமாகியது கிடையாது டாமிட்…’ என்று இவன் முரண்டு பிடிக்க,

 

‘ஓக்கே ஓக்கே… டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்… ஜெஸ்ட் கோ… அன்ட் ஃபைன்ட் ஹர்… எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்’ என்று தன்னுடைய உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போட்டவன், தாமதிக்காமல், பாய்ந்து வெளியே வந்தான்.

 

தன்னுடைய அறைக்குச் சென்றான். தன்னுடைய அல்மேரா ட்ராயரைத் திறந்து அதிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான். தோட்டாக்கள் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்தான். திருப்திப்பட்டவனாக அதை இடுப்பில் செருகிக் கொண்டவன், மின்னல் விரைவுடன் கதவையும் பூட்டாமல் பாய்ந்து சென்று தன் வாகனத்தில் ஏறினான்.

 

பெரும் ஓசையுடன் அவனுடைய வாகனம் சீறிக்கொண்டு தெருவில் ஏறியது. அடுத்து பத்தாவது நிமிடம், சிவார்ப்பணாவின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்பாகத் தன் காரைக் கொண்டுவந்திருந்தான் அநபாயதீரன்.

 

அவன் தன் காரை நிறுத்தவும், சிவார்ப்பணாவின் கட்டடத்தின் மேற்புறமாகத் துவக்குச் சூட்டின் ஓசை கேட்கவும் நேரம் சரியாக இருக்க, அந்தச் சத்தத்தைக் கேட்டதும், ஒரு முறை அவன் விறைத்துப் போய் நின்றான். உடல் குலுங்கியது. தாமதமாக வந்துவிட்டோமோ என்கிற அச்சம் அவன் உள்ளத்தைக் கதிகலங்கச் செய்தது.

 

தனக்கு ஏற்பட்ட அந்தப் புதிய உணர்வுகளை ஆராயக்கூட முடியாதவனாக, வாகனத்தின் கதவையும் பூட்ட நேரமில்லாதவனாகப் படிகளை நோக்கி வேகமாகப் பாய்ந்து ஓடினான்.

 

இந்த நிலைமையில் லிஃப்ட்டைப் பாவிப்பது உசிதமில்லை என்பதால், படிகளின் பக்கமாக ஓடினான். ஓடும் போதே பின் பான்டில் செருகியிருந்த துப்பாக்கியைக் கரத்தில் எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டான். அவனுடைய கூரிய விழிகள். மேலும் கீழுமாக அலசி ஆராய்ந்துகொண்டிருந்தன.

 

அவனுடைய உயரத்திற்கு, மூன்று படிகளுக்கு ஒன்றாகக் கடந்தவன், துப்பாக்கியைக் கவனமாக இரண்டு கரங்களாலும் உயர்த்திப் பிடித்தவாறு முன்னோக்கிச் சென்றான்.

 

கிட்டத்தட்ட சிவார்ப்பணாவின், தளத்தின் படிகளை நெருங்கத் தொடங்கியவன், சற்று நிதானித்து, தன்னுடைய காலின் சப்தம், வெளி வராதவாறு மெதுவாக முன்னேறினான்.

 

அவன் கவனத்துடன் சென்றதால், இரண்டு நான்கு கால்கள் க்ரிலின் வழியாக, மேட்புரத்தில் தெரியச் சுவரோடு பதுங்கினான்.

 

எந்த ஓசையும் எழும்பாதவாறு, முன்னேறி யாரும் அறியா வண்ணம் எட்டிப் பார்த்தான். அங்கே கண்ட காட்சியில் சர்வமும் அடங்கிப்போனவனாக, அதிர்ச்சியுடன் நின்றது ஒரு கைநொடிப் பொழுது மட்டுமே.

 

அதற்கு மேலும் தாமதிக்க முடியாதவனாக முன்னுக்கு நீட்டியிருந்த தன் துப்பாக்கியை, குறிவைத்தவாறு இரண்டடி நடக்க, அவனுடைய பாதம் எழுப்பிய ஓசை கேட்டு படியின் கிரிள் அருகே சாய்ந்திருந்த ஒருவன் தன் தலையைத் திருப்பிக் குனிந்து பார்க்க

 

தன்னுடைய சப்தம் எதிராளியை விழிக்கச்செய்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அநபாயதீரன் தாமதிக்காமல் அவன் பக்கமாகத் தன் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தான்.

 

இப்படித் திடீர் என்று அசுர வேகத்தில், தம்மை நோக்கி ஒருவன் பாய்ந்து வருவான் என்று அந்த எதிராளி சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும். திகைத்தவன். மறு கணம், உடனே தன் துப்பாக்கியை அநபாயதீரனை நோக்கி நீட்ட முயல, அதற்குள் அநபாயதீரன், துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.

 

அவனைப் போலவே அசுர வேகத்தில் பாய்ந்த தோட்டா, அந்த எதிரியின் நெற்றியில் சத்தமில்லாது ஏறி, வெளியே செல்ல, தான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாமல், எதிராளியின் உயிர், அவனை விட்டுப் பிரிய. பிடிமானம் இல்லாமல், அப்படியே மேலிருந்து கீழாகக் கவிழ்ந்து விழுந்தான்.

 

அடுத்த இரண்டடியை வைத்த அநபாயன், மற்றைய இரு எதிராளிகளையும் நேருக்கு நேராக எதிர்கொண்டு,

 

“லெட் ஹர் கோ” என்று சீறினான்.

 

இந்தத் திருப்பத்தை மற்றவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காத அந்த கறுப்பு மனிதன் அதிர்ச்சியில் திகைத்துப்போயிருந்தது சில விநாடிகளே.

 

அதுவரை சிவார்ப்பணாவின் முதுகில் துப்பாக்கியை வைத்திருந்தவன், உடனே அதன் திசையை மாற்றி அநபாயதீரனின் புரமாக நீட்டிப் பிடித்தான். அநபாயதீரனின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்தைப் பார்த்தவனுக்கு அவனுடன் மோதுவது அத்தனை சுலபமல்ல என்பது புரிந்ததால், உடனே தன் எண்ணத்தை மாற்றிச் சிவார்ப்பணாவின் பின்புற மண்டையில் பதித்து  ஏளனத்துடன் அநபாயதீரனைப் பார்த்துச் சிரித்தான்.

 

“டோன்ட் மூவ்…” என்று தன்னுடைய கரகரத்த குரலில் கூறியவன், அசைந்தால் அவளைச் சுட்டுவிடுவது போலத் துவக்கை இன்னும் அழுத்தினான்.

 

இந்த நிமிடம் அநபாயதீரனால் அவனைச் சுட முடியும் தான். ஆனால் தவறுதலாக அவன் துப்பாக்கி விசையை அழுத்தினால், அதற்கு மேல் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. முதலில் சிவார்ப்பணாவைக் காப்பாற்றவேண்டும். அவளை அவன் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டும்.

 

மாறி மாறி எதிரியையும் சிவார்ப்பணாவையும் பார்த்தான் அநபாயதீரன். குப்புறக் கிடந்தவளின் அசைவற்ற தன்மையும், அவன் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன.

 

மூச்சு இருக்கிறதா இல்லை.. நோ நோ… அவளுக்கு ஒன்றுமில்லை… அவளுக்கு ஒன்றுமேயில்லை… ஷி வில் பி ஆல்ரைட்…’ என்று தனக்குத் தானே தைரியம் சொன்னவன், மீண்டும் எதிராளியின் விழிகளை ஊடுருவிப் பார்த்தான்.

 

அவர்களும் பதற்றத்திலிருப்பது புரிந்தது. அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பவேண்டும். எப்படி…? எப்படி…?’

 

“ஓக்கே… ஓக்கே… லிசின்… டோன்ட்… டு எனி திங் ஸ்டுபிட்… கூல்… அன்ட் லெட் ஹர் கோ… ஐ ப்ராமிஸ் யு… ஐ வில் டூ வட் எவர் யு வோன்ட்… ஜஸ்ட் லெட் ஹர் கோ…” என்று தன்னுடைய குரலின் அழுத்தத்தை மாற்றி கிசுகிசுப்பாக எதிராளி மனம் கசியும் குரலில் கூற, அந்தக் குரலில் ஒரு கணம் தயங்கினான் அந்தக் கயவன்.

 

ஏனோ அந்தக் குரலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது போலத் தோன்றியது. அந்தக் கணம், சிவார்ப்பணாவின் பின்புறத் தலையில் படிந்திருந்த துப்பாக்கியின் பிடி சற்று இளகியது. பின்புதான் தான் என்ன செய்கிறோம் என்பது புரிய, பெரும் சீற்றத்துடன், விழுந்திருந்தவளின் ஜாக்கட்டைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துக் கையணைப்பில் வைத்தவாறு எழுந்து நின்று, துப்பாக்கியை அவள் நெற்றிக் கரையோரம் பதித்து,

 

“பேசாதே… பேசுவது எனக்குப் பிடிக்காது… உன்னுடைய துப்பாக்கியை என் புறமாக வீசு… ம்…” என்று ஆங்கிலத்தில் கர்ஜித்தான் அவன்.

 

அநபாயதீரன் சற்று யோசிக்க, அவன் துப்பாக்கியை இன்னும் சிவார்ப்பணாவின் நெற்றியில் அழுத்தினான்.

 

இவன் பதட்டத்துடன் சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

அவள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் விழிகளை மூடியிருந்தாள். கன்னத்தில் அறைந்ததற்கான அடையாளமாகக் கண்டி வீங்கியிருந்தது. அவனையும் மீறி அந்த மென்மையான கன்னங்கள் நினைவுக்கு வந்தன. உதட்டோரமும் மூக்கிலும் இரத்தம் வடிந்திருந்தன. அவள் மயங்கியிருக்கிறாளா… இல்லை…’ என்று அச்சத்துடன் பார்த்தவன் தன்னுடைய துப்பாக்கியைக் கீழே பதித்தவாறே எதிரியை ஏறிட்டான்.

 

“லுக்… லுக்… இதோ பார்… இப்போது உனக்கு இந்தத் துப்பாக்கிதானே வேண்டும். கொடுத்து விடுகிறேன்…. முதலில் அவளை விடு…” என்று பேரம் பேசியவாறு, மெதுவாக அவனை நோக்கி இரண்டடி முன்னேற இப்போது அவனுக்கும், அந்த எதிரிக்குமிடையேயான தூரம் ஆறடியாகக் குறுகிப்போனது. அநபாயதீரன் தன்னருகே வருவதைப் புரிந்துகொண்ட அந்த எதிரி,

 

“நோ… டோன்ட் மூவ்… நான் சொல்வது உனக்குப் புரியவில்லை? இவளை விடுகிறேன்… முதலில் துப்பாக்கியைக் கீழே போடு… ம்…” என்று ஆங்கிலத்தில் கத்த, இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்பதைப் புரிந்தவனாகத் தன்னுடைய துப்பாக்கியை அவன் முன்னால் போடுவது போலக் குனிந்தான்.

 

அந்தக் கறுப்பனின் விழிகள் துப்பாக்கி தன் புறமாக வருகிறதாக என்பதைக் கூர்மையாகப் பார்த்த அந்த விநாடியை அநபாயதீரன் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டான்.

 

குனிந்தவன், அப்படியே தன் வலக்கரத்தை நிலத்தில் பதித்து, அதன் பலத்திலேயே தன் உடலை எம்பி மேலே தூக்கி, இரண்டு கால்களையும் விரித்து, அதை அந்த எதிரியின் கழுத்தில் பதித்துப் பிணைத்தவாறு, கீழே விழுத்த, சிவார்ப்பணாவைப் பற்றியிருந்த கரம், அந்த எதிர்பாரா தாக்குதலில், தாமாக விடுபட, அநபாயதீரனின் கால் போட்ட கொடுக்குப் பிடியில் சிக்கி, அதிலிருந்த இம்மியும் அசைய முடியாமல் அவன் தரையில் விழுந்த நொடி, அநபாயதீரன். தன் பிடியை விடாமலே எதிரியின் மார்பின் மீது ஏறியமர்ந்திருந்தான்.

 

தன் பலத்த கால்களுக்கிடையில் சிக்கியிருந்தவனை, அப்படியே பிடித்தவாறு, ஒரு கணம் சீற்றத்துடன் பார்த்தவன்,

 

“யார் மீது கையைவைத்தாய்? யு XXX XXX” என்று தன்னை மீறிச் சீறியவன், தன் கரத்தை முஷ்டியாக்கி, அவனுடைய மூக்கில் ஓங்கிக் குத்தினான். அவன் பொறிகலங்கிப் போக, ஆங்காரத்துடன், யாருடைய தலை முடியைப் பற்றினாய், என்றவாறு, அவன் வலக் கரத்தைத் தன் கரங்களில் எடுத்து,

 

“இந்தக் கரங்கள்தானே அவளுக்கு எதிராகத் துப்பாக்கியை ஏந்தியிருந்தன?” என்று கேட்டவன், அவன் தன் உணர்வு பெறுவதற்குள்ளாகவே, அவன் கரத்தை ஆவேசத்துடன் ஒரு திருப்புத் திருப்ப, அது ‘க்ர்க்’ என்கிற ஓசையுடன் உடைந்து தொங்கியது. அது கொடுத்த வலியில் அவன் கத்துவதற்குக் கூட வாய்ப்புக் கொடுக்காமல், அவனுடைய தலையைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, “ஹக்” என்கிற ஒரு சத்தத்துடன் தன் இறுதி மூச்சை விட்டிருந்தான் எதிரி.

 

இவை அனைத்தும் நடந்து முடிய, எடுத்துக்கொண்ட நேரம், ஒரு நிமிடத்திற்கும் குறைவானதே.

 

அதற்குப் பின், அவனை விட்டு விலகியவன், வேகமாக சிவார்ப்பணாவின் அருகே சென்றான். அவனையும் அறியாமல், அவன் கரங்கள் ஏனோ நடுங்கின.

 

எதற்காக நடுங்குகின்றன என்கிற ஆய்வில் இறங்க அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

 

பதற்றமாக அவளை நெருங்கியவன், அவளுடைய முகத்தைப் பற்றி அழைத்துப் பார்த்தான். கலைந்திருந்த கூந்தலை நடுங்கும் கரம் கொண்டு ஒதுக்கினான்.

 

அதே நேரம், வெளியே நின்றிருந்த மூன்றாமவன், ஏதோ சத்தம் கேட்கிறதே என்கிற சந்தேகத்தில் கதவைத் திறந்துகொண்டு தன் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

 

அவன் கதவு திறக்கும்போதே, அதற்குத் தயாரானவன், எதிரி என்ன என்பதை உணர்வதற்குள்ளாக, ஒரு குத்துக் கரணத்தில் அந்த எதிரியின் முன்பாக வந்து நின்றவன், எதிரி தன்னை நிலைப்படுத்தக் கூட நேரம் கொடுக்காமல், இடது முழங்கால் நிலத்தில் பதிந்திருக்க, வலது கால்ப் பாதம், தரையில் பதித்து எழுந்தவன், தன்னுடைய வலது கரத்து முஷ்டியால், அவனுடைய கீழ்ப்புறம் பலமாகத் தாக்க, அவன் உயிர் போகும் வேதனையில் குனிந்தான்.

 

வலியில் குனிந்திருந்தவனின் துப்பாக்கி ஏந்திய கரத்தைக் கொண்டே, அவனுடைய நாடிக்குக் கீழாகத் துப்பாக்கியைப் பிடிக்க வைத்தவன், வலுக் கட்டாயமாகத் துப்பாக்கி விசையை அழுத்த, அந்தக் கணம், தலை சிதறியவாறு கீழே விழுந்தான்.

 

இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்களோ தெரியவில்லை. அவன் தனியனாக இருந்திருந்தால், அவன் சமாளித்துவிடுவான். இப்போது சிவார்ப்பணாவைக் காத்துக்கொள்ள வேண்டும். தவிர, இந்த துப்பாக்கிச் சத்தத்திற்கு எந்த நேரமும் பொலிஸ் வரலாம்… அதற்கு முன்பாக அவன் இங்கிருந்த கிளம்ப வேண்டும்…

 

அவனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம், சொற்பம்… அதற்குள் சிவார்ப்பணாவின் நிலையைப் பரிசோதிக்கவேண்டும். வேகமாக அவளருகே வந்தவனுக்கு, அவள் கிடந்த விதம், பெரும் கலக்கத்தை ஏற்படுத்த, மெதுவாக அவளுடைய கன்னத்தைத் தட்டினான். சுவரில் தெரிந்த இரத்தம் அவளுடையதாக இருக்கமோ.

 

அவனையும் மீறி நடுங்கிய கரங்களால், அவளுடைய பிடரியைத் தொட்டுப் பார்த்தான் பிசுபிசுத்தது. கரத்தை எடுத்துப் பார்த்தான். அவளுடைய இரத்தம். நெஞ்சுக்கூடு காலியான உணர்வில் கலங்கிப்போய் நின்றவன், உள்ளம் பதற, அவளுடைய கன்னத்தை மீண்டும் தட்டிப் பார்த்தான். அவளிடம் எந்த அசைவும் வரவில்லை. அச்சத்துடன், கழுத்திலே கரத்தை வைத்துப் பார்த்தான்.

 

துடிப்பு இருக்க வில்லை. ஒரு கணம் விறைத்துப் போனான். அவனுக்கு உலகமே நின்று விட்டது போன்ற உணர்வில் அதிர்ந்து போய் சிலையாக நின்றான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

4 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

1 day ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

1 week ago