முதலில் அவன் பிடியிலிருந்து விடுபட, முயன்றவள் தோற்றுப்போய் சோர்வுற்ற நேரம், அந்தத் துவாரத்திற்குள் செலுத்திய திறப்பை ஒரு திருப்புத் திருப்ப, சிறிய கிளிக் என்கிற ஓசையுடன் அது திறந்து கொண்டது. திறப்பைக் கொண்டே அந்தக் கதவை இழுக்க. அந்த மர்மக் கதவு எந்த சத்தமில்லாது திறந்துகொண்டது.
அதைக் கண்ட சிவார்ப்பணாவிற்கு அதிர்ச்சியில் தலையே சுற்றிவிடும் போலிருந்தது. அப்படியானால் அவள் அணிந்திருந்த பென்டன், இதன் திறப்புதானா? ரகு எதற்காக அந்தக் கதவின் சாவியை அவளுடைய பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க வேண்டும். எதற்காக அப்படிச்செய்தான்.
ஐயோ அப்படியானால் அவளுடைய கதை இத்தோடு முடிந்தது. இனி அவள் எதைச்சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை. அதைவிட, அவள் இந்த இடத்தை விட்டு மாயமாக மறைவது தான் உத்தமம். வேகமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றவளுக்கு அவளுடைய எண்ணப்படி கால்கள் அசைந்தால் அல்லவோ. அவை அசைய மாட்டேன் என்று அடம் பிடிக்க, உடல் பலவீனமாக அவன் செய்வதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.
அதே நேரம் அநபாயதீரன் அந்தச் சிறிய அறைக்குள் இருந்து ஒரு கரிய நிறப் பையைக் கண்டான். முகம் மலர, இவள் பிடியை விடுவித்துவிட்டு, அதை வெளியே எடுத்து மேசையில் தூக்கிப் போட்டான்.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் அவன் எடுத்த பொருளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளை ஏளனத்துடன் பார்த்துவிட்டு அந்தப் பையின் சிப்பைத் திறந்து, அதிலிருந்த பொருட்களை அப்படியே மேசையில் கவிழ்க்க, அதிலிருந்து, ஐந்து நூறு டாலர் கட்டுக்களும், மூன்று ஐம்பது டாலர் கட்டுக்களும் கூடவே, சில பேபர்களும், தொடர்ந்து கைக்கு அடக்கமான நவீன ரகத் துப்பாக்கிகள் இரண்டும் விழுந்தன. அதைக் கண்டதும் சிவார்ப்பணாவின் கண்கள் தெறித்து விடுமோ என்பது போல விரிந்தன. காதுகள் இரண்டும் அடைத்தன.
நடுக்கத்துடன் அந்த மேசையை நெருங்கியவள் நடுங்கும் கரம் கொண்டு பணக்கட்டொன்றைத் தூக்கிப் பார்த்தாள். அது உண்மையா பொய்யா என்பதை அறியவே அவளுக்குச் சற்று நேரம் எடுத்தன.
ரகு நிச்சயமாக நல்ல காரியம் செய்யவில்லை என்பது மட்டும் நன்கு புரிந்தது. அது மட்டுமல்ல, அவளுக்குத் தெரியாமலே, கண்ணுக்குத் தெரியாத அபாயகரமான சுழலுக்குள் சிக்க வைத்திருக்கிறான். நட்பு என்கிற பெயரில் அவளுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டான். கடவுளே இத்தினை காலமாகக் கழுத்தில் சுமந்திருந்த அந்தப் பென்டனுக்குப் பின்னால் இத்தனை பெரிய பயங்கரம் இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டதே. இப்போது இந்தச் சுழலிருந்து எப்படி வெளியே வரப்போகிறாள்… அவளை யார் மீட்டெடுக்கப் போகிறார்கள்… இதோ… இவள் மீதே பழி போடுவதற்காகப் பிறவி எடுத்தவன் போல, நிற்பவனுக்கு இப்போது அவல் கிடைத்தது போலாகிவிட்டதே. அவள் என்ன சொன்னாலும் இந்தக் கிங்காங் நிச்சயமாக நம்பப் போவதில்லை.
அவன் சங்கிலியைக் கேட்ட உடன் கொடுத்திருந்தாலாவது அவன் ஓரளவுக்கு யோசித்திருப்பான். ஆனால் இப்போது… கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல்… அவனைக் கண்டபடி திட்டியும் விட்டாள். இது போதாதா அவனுக்கு…?’ நினைக்கும்போதே உடலிலிருந்த இரத்தம் முழுவதும் வடிந்துசெல்வது போல உணர்ந்தாள் சிவார்ப்பணா. இத்தகைய நிலையை வாழ்நாளில் ஒரு போதும் சந்தித்தது கிடையாது… ஏதோ ஒரு மீட்சியில்லாத சுழலுக்குள் இழுபடுவது போலத் தோன்ற மெதுவாகத் தள்ளாடினாள்.
அவளுக்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. முகம் வெளிறியது. ஒரு இடத்தில் அமரவில்லை என்றால் அவள் கீழே விழுவது நிச்சயம்.
அவளுடைய தள்ளாட்டத்தை உணர்ந்தவன், கண்ணிமைக்கும் நொடியில் அவளை நெருங்கி விழுந்துவிடாவண்ணம் பற்றிக் கொண்டான்.
விரைந்து அருகே இருந்த இருக்கையைக் காலால் இழுத்து அதில் அவளை அமர்த்தியவாறு, பலவந்தமாக அவள் தலையை அவள் முழங்கால்களுக்கிடையில் அழுத்திப் பிடித்தான்.
“சற்று நேரம் அப்படியே இரு அர்ப்பணா…” என்றவனுடைய சொல்லைக் கேட்காமல் பிடிவாதமாக நிமிர்ந்திருக்கவேண்டும் என்று உள் உணர்வு சொன்னது. ஆனால், அவளுடைய சொல் பேச்சை உடல் கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தது.
மீண்டும் மீண்டும் ரகு ஏன் இப்படிச் செய்தான் என்கிற கேள்வியே அவளுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததால், எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை.
மெதுவாக அவள் தலையிலிருந்து கரத்தை விலக்கியவன்,
“சற்று நேரம் அசையாமல் அப்படியே இரு…” என்கிற உத்தரவுடன், மேசையருகே சென்றான். மேசையில் கொட்டிய பொருட்கள் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராயத் தொடங்கினான்.
அந்தப் பைக்குள் இருந்த காகிதம் ஒவ்வொன்றையும் நன்றாக விரித்துப் பார்த்தவனின் விழிகளில் சிக்கியது அந்தக் கைக்கடக்கமான குறிப்பேடொன்று. எடுத்து விரித்தான். அவன் விரித்தபோதே இறுதியாக எழுதப்பட்டிருந்த பக்கம் தானாக விரிய, அதில் “அர்ப்பணம்… அகண்டம்… கண்டம்… கடவுள்” என்கிற வாக்கியம் இருக்கப் புருவத்தைச் சுருக்கியவாறு மறு பக்கத்தையும் பார்த்தான். அதுபோலவே என்னென்னவோ நிறையக் கிறுக்கியிரந்தன. எல்லாமே பாடல்கள்தான்.
இதை எதற்காகப் பத்திரமாக வைத்திருக்கிறான்? என்று யோசித்தவனாக முன் பக்கம் பார்க்க, அங்கே இருந்த பெயரைக் கண்டதும் இவனுடைய உதடுகள் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
திரும்பி சிவார்ப்பணாவைப் பார்த்தான். அவள் இன்னும் தலையைக் குனிந்திருந்தாள். வேகமாக அதை எடுத்துத் தன் பான்ட்பாக்கட்டிற்குள் போட்டவன், மற்றைய காகிதங்களையும் கவனமாக ஆராய்ந்தான். அவை வேறு வேறு செயல்களுக்காகப் பாவிக்கவேண்டிய வரைபடங்களும், அது சார்ந்த செய்திகளுமே இருக்க அவற்றை ஒதுக்கிவிட்டுப் பரபரப்புடன் மற்றவற்றை ஆராயத் தொடங்கினான்.
அதிலிருந்து ஒரு தாளில், அவனுடைய விழிகள் நிலை குத்தி நிற்க, அவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகையொன்று வந்தமர்ந்தது. அதனையும் அவசரமாகத் தான் அணிந்திருந்த தடித்த ஜாக்கட்டின் உள் புற பாக்கட்டில் சொருகியவன், தனக்குத் தேவையில்லாதவற்றை, மீண்டும் அந்தப் பையில் போட்டுக்கொண்டிருக்கும்போதே, மெதுவாகத் தன் தலையை நிமிர்த்தினாள் சிவார்ப்பணா.
அவளுக்கு நினைக்க நினைக்கத் தாளவில்லை.
ரகு… ஏன்டா என்னை இப்படிச் சிக்கவைத்தாய். உன்னை நான் முழுவதுமாக நம்பினேனே… இப்படி ஏமாற்றிவிட்டாயே…’ என்றெண்ணியவளுக்கு வேதனையில் உதடுகள் துடித்தன.
இனியும் அங்கே நிற்பதில் பயனில்லை என்பது புரிந்தது. மெதுவாக இருக்கையைவிட்டு எழுந்தாள். வேகமாக அந்த இடத்தை விட்டுப் போவதற்காகத் திரும்பியவளை அவனுடைய பெரிய உருவம் மறைத்தது.
“எங்கே போகிறாய்… நான் உன்னிடம் பேச வேண்டும்…” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தில்.
“நான் யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. லீவ் மி எலோன்…” என்று கூறிவிட்டு வேகமாகக் கதவுப் பக்கம் சென்றவளின் வலது தோளை அழுந்தப் பற்றித் தன் புறமாக இழுத்துத் திருப்பினான்.
“யாருக்குக் கதை விடுகிறாய்? உனக்குத் தெரியாமலா ரகு இத்தனை பெரிய வேலை செய்திருக்கிறான். அவனுடைய ரகசிய அறைக் கதவின் திறப்பு உன்னுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் நீ சொல்வதை நம்புவேன் என்றா நினைத்தாய்?…” என்றான் அவன் சீற்றமாக.
“நீங்கள் நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்களுடைய பிரச்சனை. எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நீங்கள் கேட்கின்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை… விடுங்கள் என்னை… நான் போகவேண்டும்…” என்று குரல் கம்மக் கூற,
“எங்கே… உங்கள் தலைவரிடமா? போய் உண்மையை ஒருவன் கண்டு பிடித்துவிட்டான் என்று சொல்லவா?” என்றான் அவன் எகத்தாளமாக.
“உண்மையா? என்ன உளறுகிறீர்கள்… எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… என்கிறேன்… அந்த ரகு என் பிறந்த நாளுக்குப் பரிசுகள் தருவது வழக்கம்… ஏன் இந்தக் கைக்கடிகாரம் கூட அவன்தான் கொடுத்தான்… இந்த கீ பென்டனையும் கொடுத்தான். இதற்குப் பின் இத்தனை பெரிய சிக்கல் இருக்கும் என்று சத்தியமாக இந்த நிமிடம் வரைக்கும் எனக்குத் தெரியாது… சொல்லப் போனால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை தீரன்… அப்படி இருக்கையில் யாரிடம் போய் இதைப் பற்றிச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்றாள் இயலாமையுடன். கூடவே விழிகளில் கண்ணீர் முட்டிக்கொண்டு விழவா வேண்டாமா என்று பொங்க ஆரம்பித்திருந்தது.
“அருமையாக நடிக்கிறாய் அர்ப்பணா… லிசின்… இதற்கு மேலும் நீ சொல்வதை நான் நம்பத் தயாராக இல்லை… சொல்… ரகு வேறு என்ன சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறான். அதோ அந்தத் தாள்களில் இருப்பது முழுவதும் வரை படங்கள். அவை என்ன வரைபடங்கள் தெரியுமா?” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு அந்த மேசையருகே சென்றவன், அதிலிருந்த ஒரு தாளை விரித்து அவள் முன்பாக வைத்து,
“இந்த வரைபடம் என்ன என்று உனக்குத் தெரியுமா ? ஏவுகணைகளின் வடிவமைப்பு… அதுவும் பயங்கர அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய வடிவமைப்பு. இங்கே கனடாவில் தனிநபர் வடிவமைக்க வேண்டுமானால், அதற்குரிய முற்று முழுதான அனுமதி உரிமம் பெற்றிருக்கவேண்டும். விண்வெளிப் பொறியியலில் தன் படிப்பைக் கூட முடிக்காமல், மூன்றாம் வருடமே பல்கலைக்கழகத்தை விடுத்து வெளியேறிய ரகுவிற்கு யார் இதை வரைய அதிகாரம் கொடுத்தது. அதுவும் பக்காவாக… எந்தத் தப்புமின்றி, நவீன முறையில், சொல்லப்போனால், இது வரை இந்த வடிவமைப்பில் யாருமே செய்ததில்லை…” என்று வியந்தவன் மீண்டும் அந்த வரைபடத்தை உற்றுப் பார்க்க,
“அன் பிலீவபிள்… இத்தகைய சிறந்த, வரைபடத்தை, ரகு ஏன் இங்கே மறைத்து வைத்திருக்கிறான். இதை மறைத்து வைக்கவேண்டியதன் அவசியம் என்ன? இதைக் காவல் துறைக் கைப்பற்றினால் என்னவாகும் தெரியுமா? நீ மட்டுமல்ல, ரகுவுடைய பெற்றோர் அனைவரையும் கூண்டோடு கொண்டுபோய் விடுவார்கள்… இதோ பார் அர்ப்பணா… இது நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை… எதுவாக இருந்தாலும் மறைக்காமல் கூறு… ரகுவைப் பற்றி என்ன தெரிந்திருந்தாலும், என்னிடம் சொல்…” என்றான் அவன் அழுத்தம் கூடிய பரபரப்புடன்.
“இது ஏவுகணை சார்ந்த வரைபடமா… எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டவளின் குரலில் அதீத சந்தேகம் தெறிக்க, அவனோ அவளை அலட்சியமாகப் பார்த்து,
“ஏன் என்றால் நானும் இது பற்றிப் படித்திருக்கிறேன்…” என்றான்.
“படித்திருக்கிறீர்கள் என்றால்?” என்றவளின் உடல் விறைத்து நிற்க,
“விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்… எனக்குத் தெரியாதா…” என்று அவன் கடுமையாகக் கேட்க. இரண்டடி தள்ளி நின்றவள் அவனை உற்றுப் பார்த்தாள்.
“ஏரோஸ்பேஸ் என்சினியரிங்கில் பிஎச்டி முடித்தவருக்குப் பூட்டுக் கம்பனியில் என்ன வேலை?” என்று அவள் அழுத்தமாகக் கேட்க, ஒரு கணம் அவனுடைய உடல் விறைத்து நின்றது.
அவசரப்பட்டு உளறியதும் புரியத் தன்னைத் தானே திட்டிக்கொண்டான் அநபாயதீரன். எப்படியாவது சமாளிக்கவேண்டும். எப்படி? முகத்திலிருந்த உணர்ச்சியைச் சடுதியில் மறைத்தவன், பல்கலைக் கழகத்தில், முதல் வருடம் படிக்கும் போது, ஒருபூட்டுக் கம்பனியில் வேலை செய்தேன்…” என்றான் அவன் உண்மைபோல.
சிவார்ப்பணாவும் சந்தேகப் படாமல் நம்பினாள். காரணம், பல்கலைக் கழகத்திற்குப் புலமைப் பரிசு கிடைக்கவில்லை என்றாலோ, கட்டுவதற்குப் போதிய பணம் கிடைக்கவில்லை என்றாலோ, எங்காவது வேலை செய்து பணம் சம்பாதிக்கவேண்டும். அது எந்த வேலையாக இருந்தாலும் தயங்காமல் செய்வார்கள். ஏன் ரகு பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது கூட ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்தான்.
அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்தே, நம்பிவிட்டது புரிய, அதிக யோசிக்க அவகாசம் கொடுக்காமல்,
“இப்போது சந்தேகம் தீர்ந்து விட்டது என்றால், நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாயா? ரவியைப் பற்றிய செய்தி வேறு என்ன உனக்குத் தெரியும்? தயவு செய்து ஒளித்து மறைக்காமல் கூறுகிறாயா?” என்றான் சற்று இதமாக.
என்னவென்று சொல்வாள்? அவளுக்குத் தெரிந்தால்தானே சொல்லமுடியும்? இப்போது இவன் சொல்லும் போதுதானே ரகு எத்தகைய பாரதூரமான செயலைச் செய்துகொண்டிருக்கிறான் என்பதே புரிகிறது.. இதில் அவனைப் பற்றிக் கேட்டால் என்னவென்று பதில் கூறுவது? அவளுடைய அமைதி அவனுடைய சினத்தை அதிகரிக்கச் செய்ததோ, அவளுடைய இருதோள்களையும் பற்றி உலுக்கியவன்,
“ஆன்சர் மீ டாமிட்… ரகு வேறு என்ன என்ன செய்து வைத்திருக்கிறான்… சொல்…” என்றான் கடுமையாக. ஓரளவு சுய உணர்வு பெற்ற சிவார்ப்பணா, வேகமாக அவன் பிடியிலிருந்து விலகி,
“சொல் சொல் என்றால் என்னத்தைச் சொல்வது? எனக்கு எதுவும் தெரியாது என்று என் தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவுக்குக் கூறியாயிற்று. இதற்கு மேலும் நம்ப மாட்டேன் என்றால் நான் என்ன செய்வது… இதோ பாருங்கள், நீங்கள் என்னை அடைத்துக் கேட்டாலும் சரி, அடித்துக் கேட்டாலும் சரி, ரகுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, தெரியாது, தெரியாது…” என்று பொறுமையற்ற எரிச்சலுடன் கூறியவளுக்கு இதற்கு மேலும் அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை. அவனோ அவளை இன்னும் நம்பவில்லை என்பது போலப் பார்த்துக்கொண்டிருக்க,
“கடவுளே… உங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன்… இதோ பாருங்கள்… உண்மையைச் சொல்லிவிட்டேன்… அதற்கு மேலும் நம்பாமல் சொல் சொல் என்றால் நான் என்ன செய்யட்டும்?” என்று சோர்வுடன் சொன்னவள், ரகுவைப் பற்றித் தெரிந்த உண்மையில் கழுத்து வியர்க்க, அதை அழுந்தத் துடைத்து விட்டவாறு,
“அப்படியே தெரிந்தாலும் அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை… ஹூ த ஹேல் ஆர் யு? திடீர் என்று முளைத்த காளான் போல, முன்னால் வந்து நின்றுகொண்டு, ரகு எங்கே அவனைப் பற்றி வேறு என்ன தெரியும் என்று கேட்ட உடனே, நான் உடனே சொல்லிவிட வேண்டுமா?” என்றவள் பின் அவனை உற்றுப் பார்த்து, “
“என்னைச் சந்தேகப் படுகிறீர்களே… நான் ஏன் உங்களைச் சந்தேகப் படக்கூடாது?” என்றவள் கரத்தில் படிந்த ஈரத்தைத் தன் ஆடையில் துடைத்தவாறு அவனை நெருங்கி,
“இது வரைக்கும் ரகு உங்களைப் பற்றி என்னிடம் சொன்னதில்லை. ரகு காணாமல் போன பிறகுதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ரகுவுக்குத் தெரியாத பல செய்திகள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது… ரகுவைத் தேடி அவன் வீட்டிற்கே வந்திருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்… யார் நீங்கள்… ரகு காணாமல் போனதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்… நீங்கள்தான் ரகுவைக் கடத்தி வைத்திருக்கிறீர்களா?” என்றாள் அழுத்தமாக. அதைக் கேட்டதும் மெல்லியதாகச் சிரித்தவன்,
“ரகுவை நான் கடத்தி வைத்திருக்கிறேனா? நைஸ் ஜோக்… சரி அவனைக் கடத்தி வைத்திருக்கிறேன் என்றால் நான் எதற்கு இங்கே வந்து உன் கூட நின்று சமர் செய்துகொண்டிருக்கப் போகிறேன். அவனிடமே நேரடியாகக் கேட்டிருப்பேனே… தவிர அவனைக் கடத்தி வைத்திருந்து நான் என்னத்தை சாதிக்கப்போகிறேன்?” என்றான் அவன் சிறு அலட்சியத்துடன்.
“அதே போலத்தான் ரகுவுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கெப்படித் தெரியும். அதைச் சொன்னால் ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? அவன் காணாமல் போனதற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று ஏன் ஏன் நினைக்கிறீர்கள்? புரிந்துகொள்ளுங்கள் தீரன்… சத்தியமாக இதெல்லாம் எனக்குப் புதிது… இதுவரை ரகு இப்படிச் செய்திருப்பான் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை… நம்புங்கள்…?” என்றாள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாதவளாக.
“அப்படியானால் உனக்கும், ரகுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…”
“இல்லை தீரன் சத்தியமாக இல்லை… நமக்குள் நட்பைத் தவிர நமக்குள் வேறு எதுவும் கிடையாது…” என்று அவசரமாகக் கூற,
“அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்?” என்றான் அந்த செய்னைத் தூக்கிக் காட்டி. இதற்கு என்ன பதிலைக் கூறுவாள்? கூறினால்தான் இவன் நம்புவானா?
“அது… நான்…” என்று தடுமாறியவள், பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டவாறு,
“அதைத்தான் ஏற்கெனவே சொன்னேனே… என் பிறந்தநாளுக்கு ரகு அந்தப் பென்டனை பரிசாகக் கொடுத்தான்… சங்கிலி என் அம்மாவுடையது…. அதைத்தவிர, எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…” என்றவளுக்குக் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக்கொட்டத் தொடங்கியது.
“சரி… நீ சொல்வது போலவே வைத்துக்கொண்டாலும், எதற்காக நான் செய்னைக் கேட்டதும் ஓடப் பார்த்தாய்?” என்றான் அவன் கூர்மையாக.
தான் செய்த மடத்தனத்தை எண்ணி மீண்டும் நொந்தவள்,
“ஏன் என்றால் நான் ஒரு முட்டாள் போதுமா…” என்று சுள்ளென விழுந்தவள், இதோ பாருங்கள் அநபாயதீரன்… எனக்கு உங்களைச் சரியாகத் தெரியாது. உங்களுக்கும் என்னைத் தெரியாது. திடீரென்று செய்னைக் கேட்டதும்… எங்கே நீங்கள் என்னைச் சிக்கவைக்க, இதை வைத்து… தவறாக ஏதும்…” என்றபோதே, தன் நினைப்பு எத்தனை முட்டாள்தனமானது என்பது அவளுக்குப் புரிந்தது.
அதற்கு மேல் கூற முடியாதவளாகத் தடுமாற, அந்த நேரம், அந்த அறைக் கதவு திறக்கத் தொடங்கியது.
திறந்த கதவினூடாக ரகுவின் தந்தைதான். சோர்வுடன் வந்துகொண்டிருந்தார்.
அவரைக் கண்டதும், அவசரமாகத் தன் கண்ணீரை அவர் அறியாமலே துடைத்துவிட்டவள்,
“மா… மாமா…” என்றவளுக்கு அவரைக் கண்டதும், பெரும் நிம்மதி எழுந்தது. அந்த அநபாயதீரனிடமிருந்து தற்போதைக்குப் பெரும் விடுதலை. தன்னை மறந்து, அவரை வேகமாக நெருங்கி நின்றுகொண்டாள் சிவார்ப்பணா.
அவனோ , தன்னுடைய விழிகளை விலக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அதே நேரம், அவளுடைய புருவமத்தியிலிருந்த காயத்தைக் கண்டு பதறியவர்,
“அநா… என்னம்மா நெற்றியில் காயம்… நீ வரும்போது இருக்கவில்லையே…” என்று அவள் நெற்றியில் கை பதித்துப் பதறியவாறு கேட்க,
“ஓ… அதுவா மாமா…” என்று அங்கே நின்றவனைப் பார்த்து முறைத்துவிட்டு,
“அது கால் தடுக்கி விழுந்துவிட்டேன்… மேசையின் நுனி நெற்றியில் அடித்துவிட்டது…” என்று காயத்தின் மீது கைவைத்துக்கொண்டு கூற,
“அடடா… பார்த்து நடக்கக் கூடாதா?” என்று கடிந்துவிட்டுப் பின் சற்று அலங்கோலமாகக் கிடந்த மேசையைக் கண்டு,
“என்னம்மா.. ஏதாவது தடயங்கள்….” என்று அவர் கேட்க, திரு திரு என்று விழித்தாள் சிவார்ப்பணா. அவளையும் மீறி விழிகள் அவசரமாகக் கபேர்டை நோக்கிச் சென்றன.
நல்ல காலம் கபேர்ட் தானாகவே மூடிக்கொண்டதால், அதை வேறு சமாளிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.
இல்லையென்றால் இந்த நல்ல மனிதரிடம் போய் எப்படி ரகுவின் இருண்ட பக்கத்தைப் பற்றிக் கூற முடியும்? கூறினாலும் அவர் தாங்கியிருப்பாரா? ஆனால் இந்த அநபாயதீரன் என்னத்தை உளறி வைக்கப் போகிறானோ… உளறும் போது அவளையும் அல்லவா மாட்டி வைப்பான். அச்சத்துடன் அவனை ஏறிட்டவள், சொல்ல வேண்டாம் என்று விழிகளாலேயே அவனிடம் கெஞ்சினாள்.
அவளுடைய விழிகளுக்குள் தன்னுடைய விழிகளை ஊடுருவ விட்டவன், என்ன நினைத்தானோ,
“இல்லை ரகுப்பா… இதுவரை எதுவுமே கிடைக்க வில்லை. கிடைத்திருந்தால் சொல்லி இருப்பேனே…” என்றான் தன் முகத்தில் வருத்தத்தைத் தேக்கி. அதைக் கேட்டதும், சிவார்ப்பணாவிற்குப் பெரும் நிம்மதியாயிற்று.
அதே நேரம், அநபாயதீரன், சிவார்ப்பணாவைப் பார்த்து விழிகளால் எதையோ கூற அவள் புரியாமல் விழித்தாள். மீண்டும் அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் பார்வையைப் பதித்து, தலையை மெதுவாக ஆட்டி அவளுக்குக் குறிப்புக்கொடுக்க முயல, இவளோ அவன் என்ன கூறுகிறான் என்பதே புரியாமல் தலையை அங்கும் இங்கும் திருப்பிப்பார்த்தாள்.
இவனுடைய முகம் கடுமையாக மாறிப் பின் குறிப்பாக ஒரு இடத்தை உற்றுப் பார்த்து சமிக்ஞை செய்ய, புரியாமல் திரும்பிப் பார்த்தவளின் வாய் ஆ என்று பிளந்து பின் மூடியது.
அது அவர்கள் ரகுவின் கபேர்டிலிருந்து வெளியே எடுத்துப்போட்டிருந்த பை. அதற்குள்ளிருந்து அந்தத் துப்பாக்கியில் ஒன்று நிமிர்ந்து ராகவனைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தது. நல்லவேளை அவற்றிற்கு முன்பாக சில புத்தகங்கள் இருந்ததால், ராகவனின் பார்வையிலிருந்து தப்பியிருந்தது. இல்லை என்றால் வந்த உடனேயே அதைக் கண்டு பிடித்திருப்பார்.
அந்தத் துப்பாக்கியை எடுத்து அப்போதே, அந்த அநபாயதீரனை பட பட என்று சுட்டு விட மனம் பெரும் ஆவல்கொண்டது. ஆனால் அது அவளால் முடியாதே. ஒன்று, அவளுக்குத் துப்பாக்கி பிடிக்கத் தெரியாது. அடுத்துச் சுட்டுவிட்டுச் சிறையில் போய் கழி தின்பது யார்? அடுத்து, அன்று அவன் இல்லாமல் இருந்திருந்தால், இவள் இன்று உயிரோடு இருந்திருக்கமாட்டாள். தவிர அவன் மீது என்னதான் கொலை வெறியாக இருந்தாலும், அவனைக் காயப்படுத்தும் சக்தி அவளிடமில்லை. அதனால்,
“மாமா… ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்… நீங்கள் போங்கள் நான்… நாங்கள் ஏதாவது தடையம் இருக்கிறதா என்றுபார்க்கிறோம்…” என்று நெழிந்தடித்தவாறு, அநபாயதீரன் குறிப்பிட்ட இடத்திற்கு அரக்கி அரக்கி வந்தவள், எதேட்சையாகத் தன் நீண்ட ஃப்ளப்பி பாவாடையைச் சரிப்படுத்துவது போல, அந்த பார்சலை மறைக்க முயன்றாள்.
ஆனால் அவருக்கோ அவள் அவஸ்தை புரிந்தால் அல்லவோ…? போகும் எண்ணம் சிறிதும் இல்லாதவராக,
“எனக்கென்னவோ பயமாக இருக்கிறதம்மா…” என்றவாறு தனக்கருகேயிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கொண்டவர் சோகத்துடன் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.
இவளுக்கோ வேர்த்துக் கொட்டியது. திரு திரு என்று விழித்தவாறு,
“மாமா … ரகுவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. திரும்பி வருவான்… நீங்கள் கவலைப் படாதீர்கள்… அவன் எங்கே இருந்தாலும் பிடித்து அழைத்து வரவேண்டியது என் பொறுப்பு…. நீங்கள் போய் அத்தையைக் கவனியுங்கள், என்று அவரைக் கிளப்ப முயன்றாள். அவரோ,
“உன்னால் எப்படியம்மா முடியும்… அதை விட காவல்துறையிடம் சொல்லுவதுதான் உத்தமம் என்று படுதும்மா…” என்று அவர் வருத்தத்துடன் கூறியதும், அவர் சொன்ன ‘காவல்துறை’ என்கிற வார்த்தையில் சர்வ நாடியும் அடங்கியவளாக,
“காவல்துறையா…” என்றவாறு அநபாயதீரனை ஏறிட்டாள்.
‘இந்தப் பாழாய்ப் போன ரகு இன்னும் எங்கேயெல்லாம் என்னை மாட்டிவைத்திருக்கிறானோ… ஐயோ… அப்படியானால் என்னுடைய இறுதிக் காலம் சிறையில் தானா? அங்கே ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்குமா? அவளுக்கு வேறு அடிக்கடி பசி வயிற்றைக் கிள்ளுமே… கேட்டால் தருவார்களா… அடிப்பார்களா…’ என்று தனக்குள் எண்ணியவளாக, தன நகத்தைக் கடிக்கத் தொடங்கியவளுக்கு அந்த அநபாயதீரன் மீதுதான் படு ஆத்திரம் வந்தது.
அவன் கிண்டத் தொடங்கியதால்தானே இத்தனை பெரிய பூதம் வந்தது. எல்லாம் இவனால்தான், என்றவாறு திரும்பிப் பார்த்து, அநபாயதீரனை முறைத்தாள். பின் ராகவனைப் பார்த்து,
“மா… மா…மா… அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது மாமா… ஒரு இரண்டு நாட்கள் போகட்டும்…. அதற்குப் பிறகும் அவன் வரவில்லை என்றால் நாங்கள் அடுத்த நடவடிக்கையை எடுப்போம்…” என்றவளுக்கு கால்கள் நடுங்கின.
“எனக்கென்னவோ நம்பிக்கையில்லையம்மா…” என்று சலிப்புடன் கூற,
‘டே… தீரா… என்னடா பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்… இங்கே எனக்கு மூச்சே அடைக்கும்போலப் பயமாக இருக்கிறது… நீ என்னவென்றால், ஹாயாக இருந்து, நம்முடைய சம்பாஷனையை ரசிக்கிறாயே… உனக்கே இது நல்லா இருக்கா… சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தாப்போல கெடுத்துவிட்டு, ஒன்றுமே தெரியாத பாப்பா போல, என்னமாக மூஞ்சையை வைத்திருக்கிறாய். பக்கத்தில் வேறு அடங்கிக்கிடக்கிற யமன் எந்த நேரம் வெளிப்பட்டு என்னை மாட்டிவிடப் போகுதோ தெரியவில்லை… ஏதாவது செய்து, என்னைக் காப்பாற்றித் தொலையடா…’ என்பது போல அவனைப் பார்க்க, ஒரு கணம் அப்படியே இருந்தவன், பின், மெல்லிய நகைப்புடன், ராகவனை நெருங்கினான்.
அவர் முன்பாக முழந்தாளிட்டு அமர்ந்தவன்,
“கமோன் ரகுப்பா… தைரியமாக இருக்கவேண்டிய நீங்களே இப்படித் தளர்ந்து போகலாமா? நான் அதைப்பார்த்துக்கொள்ளுகிறேன். நீங்கள் ரிலாக்ஸ்சாக இருங்கள். எந்த மூலையில் உங்கள் மகன் இருந்தாலும் அவனைப்பற்றிய தகவல்களை எடுத்து வருவது என் பொறுப்பு. என்னை நம்புங்கள்…” என்று அவர் கரங்களைப் பற்றிக் கூறியவன், சிவார்ப்பணாவின் இடது புறம் வந்து, நெருக்கி நிற்க, அந்த நிலையிலும் உள்ளம் படபடத்துப் போனாள் சிவார்பப்ணா.
‘ஏய் கிங்காங்… தடியா… இத்தனை பெரிய இடம் இருக்கிறதல்லவா … அங்கே போய் நிற்கவேண்டியதுதானே… எதற்கு என்னை… நெருக்கியடித்து…. ஏய்… ஏய் என்ன செய்கிறாய்…’ என்று பதறியவளாக அவனிடமிருந்து விலக முயல, அவனோ அவளை அலட்சியம் செய்தவாறு, தன்னுடைய வலது கரத்தை அவளுடைய பின் இடையில் படித்து, சற்று முன்னே தள்ளிவிட, அவளும் அதிர்ச்சியுடன் கொஞ்சமே கொஞ்சமாக முன்னே தள்ளி நிற்க, இப்போது அவன் வாகாக மேசையில் சாய்ந்து நின்றுகொண்டான்.
அவனுடைய ஸ்பரிசத்தில் ஒரு கணம் தன்னிலை கெட்டாள் அந்தப் பேதை. அவளைத் தள்ளுவதற்காக மெல்லியதாகத்தான் தீண்டினான். அந்தத் தீண்டலில் அவனுடைய உள்ளங்கையின் வெம்மையைக் கச்சிதமாக உணர்ந்து கொண்டாளே. அது அவள் இரத்தத்தில் கலந்து நாடி நரம்பெல்லாம் சென்று ஒரு வித சுகானுபவத்தை அந்த நேரத்திலும் கொடுக்கிறதே… அதில் தன்னை மறந்து ஒரு வித மோன நிலையில் சிலையென நிற்க, அவளுடைய அந்த உடல் மாற்றத்தைக் கண்டுகொண்ட ராகவன்,
“என்னம்மா… எதற்கு அதிர்ந்துபோயிருக்கிறாய்? இஸ் எவ்ரிதிங் ஓக்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அந்த சிலைக்கு உயிர் வந்தது. அவனுடைய ஒற்றை வருடலில் தன்னிலை கெட வேண்டுமா என்ன? தன் மீதே கோபம் கொண்டவளாக, எப்படியோ சமாளித்தவள்,
“ஹீ… ஹீ… அது ஒன்றுமில்லை… மாமா… ஹீ ஹீ… சும்மா… ஏதோ யோசனை…” என்று இவள் தடுமாறிவிட்டுத் திரும்பி அநபாயதீரனைப் பார்த்து முறைக்க, அவனோ தன் தோள்களைக் குலுக்கிவிட்டு,
“ரகுப்பா… சிவார்ப்பணா உங்கள் மகள் போல… உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள்… நிச்சயமாக உங்கள் மகனைத் தேடிக்கொடுத்துவிடுவாள்… வருந்தாதீர்கள் …” என்று ஆறுதல் படுத்தியவாறு அந்த இடத்தை விட்டு விலக,
“ஹீ… ஹீ… ஆமாம் மாமா… நீங்கள்… கவலை… படாமல்… அத்தையை…” என்று தடுமாறும் போதே, எழுந்த ராகவன், அநபாயதீரன் நின்றிருந்த இடத்திற்கு வரத் தொடங்க, இவளுக்கு முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. ஐயையோ… பக்கத்தில் வந்தால் மேசையிலிருக்கும் பொருட்களைக் கண்டு கொள்வாரே… முடிந்தது… எல்லாம் முடிந்தது…’ என்று உள்ளுக்குள் அலறியவள், அதை வெளிக்காட்டாது,
“மா…மா… நீங்கள்… அங்கேயே… நீங்கள் போய் அத்தையைக் கவணித்துக்…” என்று முடிக்காமல் தடுமாறியவளைக் கணக்கில் எடுக்காமல், அவளை நெருங்கி நின்றவர், அவள் தலையில் கைவைத்து வருடிப் பின் அவள் தோள்களில் தன் கரத்தைப்பதித்து,
“இவள் என் மகள் அல்ல… அதற்கும் மேல்…” என்று குரல் கம்மக் கூறியவர், அவளை இழுத்து அணைத்தவாறு உடல் குலுங்கினார்.
“இவள் இங்கே வருவதால்தான் இந்த வீடே நிறைந்திருக்கிறது…” என்று அவளைப் பற்றி அவர் ஏதேதோ கூறிக்கொண்டிருந்தாலும், சிவார்ப்பணாவின் விழிகள், அந்த மேசையையே வெறித்துப் பார்த்தன.
அந்த பார்சல் இருந்த இடம் இப்போது காலியாக இருந்தது. பெரும் நிம்மதியுடன், அநபாய தீரனைப் பார்க்க, அவனோ தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளைப் பார்த்துத் தன் ஆக்மார்க் கிண்டல் புன்னகையைச் சிந்தியவாறு நின்றிருந்தான்.
ஒரு பக்கம் அந்தச் சிரிப்பைக் கண்டதும் பெரும் நிம்மதி தோன்றினாலும், மறு பக்கம், பெரும் எரிச்சல் எழுந்தது.
“ராட்ஷசன்…” என்று தன் பல்லைக் கடிக்க, அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்த ராகவன், பின் திரும்பி அநபாயதீரனை வேதனையுடன் பார்த்தார்.
“இருக்கிறது ஒரே ஒரு மகன் தம்பி…” என்று கூறியவாறு தன், முகத்தை அழுந்தத் துடைத்தார்.
எனக்குப் பானுவை நினைக்கும் போதுதான்…” என்று அவர் முடிக்காமல் நிறுத்தினார்.
“ரகும்மாவைத் தைரியமாகப் போய் தேற்றுங்கள்… நான் இருக்கிறேன் உங்களுக்கு. கவலைப் படாதீர்கள்…” என்றவன் அவர்களை நெருங்கி
“சரி ரகுப்பா. ஐ நீட் டு கோ… எப்படியும் உங்கள் மகனைப் பற்றிய தகவல்களுடன் வருகிறேன்… சிவார்ப்பணா… நீ எங்காவது போக வேண்டுமா… வேண்டுமானால் நான் அழைத்துச் சென்று ட்ராப் பண்ணிட்டுப் போகிறேன்…” என்றவனை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு, அவன் தன்னோடு வரும்படி அழைப்பது புரிய, இவனோடு போவதும் ஒன்றுதான், பாழும் கிணற்றில் முழுவதும் ஒன்றுதான் என்பதைப் புரிந்தவளாக,
“நான் எங்கும் வருவதாக இல்லை அநபாயதீரன்… நீங்கள் போய் வாருங்கள்…” என்றாள். அவனோ கிண்டலுடன், பாக்கட்டிலிருந்த அவளுடைய செய்னைச் சுட்டுவிரலால் சுழற்றி மேலே எடுத்தவாறு,
“ஆர் யு ஷூர் ?” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறு
அதைக் கண்டதும் அவளால் என்ன பதிலைச் சொல்ல முடியும்? பிளாக் மெய்ல். இவன் இப்படி ஒரு கீழ்த்தரமானவனாக இருப்பான் என்று அவள் நினைக்கவில்லை.
“மாமா… எ… எனக்கு மறந்து விட்டது… நா… நான் போய்விட்டு… மாலை வருகிறேனே…” என்று திக்கித் திணறிக் கூறியவன், அவருடைய பதிலையும் கேட்காது அவசரமாக அங்கிருந்து கிளம்பியவள், போகும் போது மேசையிலிருந்த தன்னுடைய கைப்பையையும் மறக்காமல் எடுத்துக்கொண்டாள்.
விடை பெறுவதற்காக பானுமதியின் அறைக்குள் நுழைந்தவள், அவர் மருந்தின் வேகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரின் தூக்கத்தைக் கலைக்காமல் வெளியேறினாள்.
வெளியே அநபாயதீரன் அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனைக் காணாதவள் போன்று தன்னுடைய வாகனத்திற்குப் போக எத்தனித்தவளின் கையை அவனுடைய வலிமையான கரங்கள் அழுந்தப் பற்றி நிறுத்தின.
“என்னுடைய கார் அங்கே இருக்கிறது…” என்றான் குறிப்புக் காட்டுவது போல.
“சோ வாட்… என்னுடைய கார் இந்தப் பக்கம் நிற்கிறது…” என்றாள் அவள் அழுத்தமாக.
“அது அங்கேயே பத்திரமாக இருக்கட்டும். இப்போது நீ என்னுடனேயே வா…” என்றவன் அவளுடைய அனுமதியையும் பெறாமல் அவளை இழுத்துச் சென்றான்.
“விடுங்கள் கையை… என்ன இது…” என்று அவனிடமிருந்து திமிற எத்தனித்தவள் முடியாமல் தடுமாறினாள்.
அவளுடைய தடுமாற்றத்தை அவன் ஒரு கைப்பிடியாலேயே சமாளித்தவன், வாகனத்தின் முன்பக்கம் அழைத்து வந்து… இல்லை இழுத்து வந்து, அமர்த்தி விட்டு, அவன் மறுபக்கம் வந்து ஏறினான்.
சிவார்ப்பணாவிற்கு கோபத்தில் என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இவன் யார். என்னை எதற்காக இப்படிப் பலவந்தமாக அழைத்துச் செல்கிறான்?’ என்று எதுவும் புரியாமல் ஒரு நிமிடம் மலங்க மலங்க விழித்தாள்.
அதிர்ச்சி விலகியதும், கோபம் கொப்பளிக்க,
“எத்தனைத் தைரியம் உங்களுக்கு…” என்றவள் தன் பக்கத்துக் கதவைத் திறக்க முயன்றாள். அது லாக் ஆகி இருந்தது.
அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் தன்னுடைய தலை முடியை இரண்டு கரங்களாலும் அழுந்தப் பற்றினாள். அழுகை வரும் போல் உதடு துடித்தது.
வாழ்க்கையில் ஏற்படாத புது அனுபவம். முதல் இப்படி நடந்திருந்தாலாவது இதற்கேற்ப எப்படி நடப்பது என்றாவது புரிந்திருக்கும். இது எதுவும் புரியாமல் அவள் விழிக்க வேண்டித்தான் இருந்தது.
அவனுடைய வாகனம் எத்தனை நேரமாக ஓடியதோ சிவார்ப்பணாவிற்குத் தெரியாது. அவள் பெரும் சினத்துடன் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாகனம் திடீர் ஒன்று ஒரு அடுக்க மாடிக் கட்டடத்திற்கு முன்பாக நிற்க சுய நினைவு பெற்றவளாகத் திரும்பிப் பார்த்தாள். புது இடம்.
“இ… இது யார்… வீடு… எதற்காக என்னை இங்கே… அ… அழைத்து வந்திருக்கிறீர்கள்?” என்று பெரும் அச்சத்துடன் கேட்க, அவளை ஏளனமாகப் பார்த்தான் அநபாயதீரன்.
“நீ அழகாக இருக்கிறாயா? அதுதான்… கடத்தி வந்து கற்பழிக்கலாம் என்று ஒரு யோசனை… கமோன்…” என்று அவள் பக்கத்துக் கதவைத் திறந்து விட, சிவார்ப்பணா இறங்காமல் அந்த இடத்திலேயே அமர்ந்தவாறு,
“நோ… உங்களுடன் நான் எங்கும் வரப்போவதில்லை…. மரியாதையாக என்னை என் வீட்டில் கொண்டு சென்றுவிடுங்கள்… இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது….” என்று நெற்றிக்கண்ணைத் திறந்துசொல்ல,
“அடடே… பயமா இருக்கே… என்ன செய்யலாம்?” என்று கிண்டலுடன் கேட்டவன், அவள் முகம் மேலும் சிவந்து போக,
“சிவார்ப்பணா… உன்னோடு தர்க்கம் புரிய எனக்கு நேரமும் கிடையாது… விருப்பமும் இல்லை. மரியாதையாக இறங்கி வந்தியானால்…. உன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டுவிட்டு என் வழியே போய் விடுகிறேன்…” என்றவனை அவள் அச்சத்துடன் பார்த்தாள்.
எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதை இங்கே இருந்தே கேளுங்கள். சொல்லுகிறேன்… ஆனால் உங்களுடன் எங்கும் வர மாட்டேன்…” என்று அழுந்த உட்கார்ந்திருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான் அநபாயதீரன்.
“கோபத்துடன் வாகனத்தின் மேல் புறத்தைத் தன் வலது கரத்தால் குத்தியவன், “மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடுமா என்ன?” என்றவன், அவளை இழுத்துத் தன் கரத்திலே ஏந்திக் கொள்ள முயல, அவன் என்ன செய்யப்போகிறானென்பதைப் புரிந்துகொண்ட சிவார்ப்பணா, அவன் சுதாரிப்பதற்கு முன்பாக அவனைத் தள்ளிவிட்டு,
“கோ டு ஹெல்…” என்றவாறு, அவனை விட்டு விலகி, வேகமாக ஓடத் தொடங்கினாள்.
திடீர் என்று அப்படி ஓடுவாள் என்பதை அநபாயதீரன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“அர்ப்பணா… ஸ்டாப்…” என்று கத்தியவாறு, அவளைப் பின் தொடர்ந்து ஓடத் தொடங்கினான்.
அவளோ கண் மண் தெரியாமல் எங்கே ஓடுகிறோம் என்பது கூடத் தெரியாமல், கிடைத்த பாதைகளுக்குள்ளாகப் புகுந்து எம்பிக் குதித்து அவனுடைய கண்களுக்கு மறையத் தொடங்கினாள். அப்போதுதான் அது நடந்தது.
எங்கிருந்தோ வேகமாக வந்த கரிய நிற வாகனம் ஒன்றின் கண்ணாடி கீழே இறங்கி, அதிலிருந்து முளைத்த துப்பாக்கியொன்று ஓடிக்கொண்டிருந்த சிவார்ப்பணாவைப் பார்த்து எம்பித், தன் தோட்டாவைத் துப்ப, அந்த நேரம், அவள் பெரிய விளக்குக் கம்பத்தைத் தாண்ட, அந்தக் குண்டு அவள் மீது பாயாமல் மரத்திலான விளக்குக் கம்பத்தில் பட்டுத் துளைத்து நின்றது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிவார்ப்பணா, அதிர்ந்து போனாள். அதிர்ச்சியுடன், தன் காதுகளை இரு கரங்களாலும் பொத்தியவாறு நின்று திரும்பிப் பார்க்க, இன்னொரு குண்டொன்று அவளுக்குப் பின்புறமாக இருந்த சுவர் ஒன்றில் பட்டுத் தெறித்தது.
முதலில் என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. யாரோ சுடுகிறார்கள் என்பது மட்டும் அவள் புத்திக்கு எட்டியதே அன்றி, யாரைச் சுடுகிறார்கள் என்பதோ, அவர்கள் தன்னை நோக்கித்தான் சுடுகிறார்கள் என்பதோ, அவளுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை.
எங்கிருந்தோ வரும் குண்டிலிருந்து தப்புவதற்காக, அவள் பாதையை மாற்றி ஓட, இப்போது இன்னொரு குண்டு, அவள் முதுகை நோக்கிப் பாய்ந்து வரத் தயாரானது. அந்த நேரம் கண்ணிமைக்கும் நொடியில், எங்கிருந்தோ சுழன்று வந்த ஒரு கட்டை அவளுடைய பாதங்களைப் பலமாகத் தட்டிவிட, ஓடிய வேகத்தில் சமநிலை தவறி, தரையில் குப்புறச் சாய்ந்தவளைப் பாய்ந்து வந்த தோட்டா, இம்மியளவு இடைவெளியில், துளைக்காமல் தள்ளிப்போய் அங்கிருந்த மரம் ஒன்றில் பாய, அந்த மத்தின் தடித்த பட்டை நாலா பக்கமும் தெறித்துச் சிதறியது.
முதலில் என்ன நடக்கிறது என்று சிவார்ப்பணாவிற்குப் புரியவில்லை. எப்படிக் கீழே விழுந்தோம் என்றும் தெரியவில்லை. எல்லாமே இருட்டடிப்பு செய்ததுபோல மலங்க மலங்க விழித்தாள்.
அதே நேரம் எங்கிருந்தோ பல குண்டுகள், இன்னொரு திசையில் பாய்ந்து வர, குப்புறப் படுத்திருந்தவாறே, திரும்பிப் பார்த்தாள் சிவார்ப்பணா.
இவளை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்த காரை நோக்கி யாரோ துவக்கால் படபடவென்று சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
யார் அவர்கள்? எதற்காக அவளைச் சுட வேண்டும்…? அவளைத்தான் சுட முயல்கிறார்களா? இல்லை வேறு யாரையும் சுடும்போது இடையில் இவள் வந்தாளா? சரி இவளைச் சுட்டவர்களை எதிர்த்தாக்குதல் செய்வது யார்? என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு திசையிலிருந்து ஒரு கார், இவளை நோக்கிப் பயங்கரமாகச் சீறிக்கொண்டு வந்தது.
வாகனத்தின் சத்தம் கேட்டுத் தலையை நிமிர்த்திப் பார்த்தவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால், அந்தக் காரிடமிருந்து விலகிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை. தன்னை நோக்கி வந்த வாகனத்தை வெறித்துப் பார்க்க மட்டுமே அவளால் அப்போதைக்கு முடிந்திருந்தது.
முடிந்தது… அவளுடைய கதை இன்றோடு முடிந்தது… இதோ இந்த வாகனத்தின் சில்லுகளில் சிக்கி சட்னியாகப் போகிறாள்… தன் மரணத்தை நேராகவே பார்க்கப்போகிறாள்… தன்னை மறந்து விழிகளை இறுக மூடி, மரணத்தைச் சுவைப்பதற்குத் தயாராக நிற்க, எங்கிருந்தோ பாய்ந்து வந்தான் அநபாயதீரன்.
அவன் கரத்தில் ஒரு துப்பாக்கி கம்பீரமாக நிலைபெற்றிருக்க, அவனுடைய இரண்டு கரங்களும், அழுத்தமாக அதைப் பற்றி ஏந்தியிருந்தன.
“சாரி படி… குட் பாய்…” என்றவாறு, வேகமாகப் பாய்ந்து வந்துகொண்டிருந்த காரை நோக்கிக் குறிவைத்துச் சுட, அது சத்தமில்லாமல், அந்தக் கண்ணாடியையும், ஓட்டுநரின் நெற்றியையும் ஒருங்கே துளைத்துக்கொண்டு பின்புறக் கதவையும் சிதைத்துக்கொண்டு வெளியேற, அந்தக் கணம் தன் உயிரை வேதனையின்றியே விட்டிருந்தான் அந்த ஓடடுனர்.
இருந்தாலும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சமாளிக்க முடியாமல், சிவார்ப்பணாவின் பக்கமே வர, மின்னல் விரைவுடன் அவளை நெருங்கியவன், அவளை இழுத்துக்கொண்டு மறுபக்கமாகச் சரிந்து உருள, இப்போது. அந்தக் வாகனம், அங்கே வந்துகொண்டிருந்த இன்னொரு வாகனத்தின் மீது பலமாக மோத, மோதிய வேகத்தில் இரு வாகனங்களினதும் பாகங்கள் சிதறித் தெறிக்க, சிதறிய பாகங்கள் சிவார்ப்பணாவைத் தாக்காதவாறு, அவளுடைய முழு உடலையும் தன் பெரிய உடலால் மறைத்து அடைகாத்தான் அந்தத் தீரன்.
இத்தனையும் மிகக் குறுகிய நேரத்தில் நடந்து முடிந்துவிட்டிருந்தது.
சிவார்ப்பணாவிற்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிடும் போல் தலை கிறுகிறுத்தது. அவனுடைய உடல் பாரத்தைத் தாங்க முடியாதவளாக, சிவார்ப்பணாவிற்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. அவனிடமிருந்து திமிறிப் பார்த்தாள். முடியவில்லை.
அவளுடைய நிலையைப் புரிந்து இனி அவளுக்கு ஆபத்தில்லை என்பதை உறுதி செய்து கொண்டவனாக, மெதுவாக அவளை விட்டு விலகியவன், எழுந்து அவள் கரத்தைப் பற்றி எழுப்பி விட்டவாறு,
“லிசின் டு மி வெரி கெயர்ஃபுளி… அர்ப்பணா… நெவர்… எவர் டு திஸ் டு மி… அன்டர்ஸ்டான்ட்…. டாமிட்… இனிமேல் இப்படிச் சொல்வதைக் கேட்காமல், ஏதாவது ஆபத்தில் சிக்கினாய் என்றால், ஐ வில் கில் யு… ” என்று கர்ஜித்தவனுக்குத் தன்னை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது.
சற்று முன்பு நடந்தது படமாக அவன் மனதில் ஓடியது. அவளைத் தேடி ஓடி வந்ததும், யாரோ அவளை நோக்கிச் சுட்டதும், பின் ரகுவிடமிருந்து எடுத்து வந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டதும், அதே நேரம், ஓடிக்கொண்டிருந்த சிவார்ப்பணாவை நோக்கி, துப்பாக்கி தன் குண்டைப் பாய்ச்சத் தயாராக இருந்ததையும், கண நேரம் தாமதிக்காமல், தெருவோரம் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து, அவளுடைய காலை நோக்கி வீசியதும், அவள் தடுக்கி விழுந்ததும்… அவன் கண்முன்னால் படமாக விரிய, ஏனோ அவனுடைய இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அரை விநாடி தாமதித்திருந்தாலும், அந்தக் குண்டு, அவளுடைய முதுகினூடாக சென்று வெளியேறியிருக்கும். நினைக்கும்போதே அவனுடைய உடலில் இனம் புரியாத ஒரு அவஸ்தை தோன்றி மறைந்தது. ஒரு கணம் தன்னும் அவளுடைய உயிரற்ற உடலை அவனால் கற்பனையில் கூடக் காண முடியவில்லை.
பேதாதற்கு, அவளை நோக்கி வந்த இன்னொரு வாகனம்… நினைக்கும் போதே இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
கொஞ்ச நேரம் எதையும் செய்ய முடியாமல் தவித்தவன், தன் கோபத்தை அடக்க முடியாதவனாக, மீண்டும் அவளைப் பார்த்து,
“ஆர் யு க்ரேசி… ஆர் யு மாட்… தக்க தருணத்தில் நான் வரவில்லையென்றால் என்னவாகியிருக்கும்… யு ஸ்டுபின் வுமன்…” என்று சீறியவன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு எங்கோ செல்லத் தொடங்கினான்.
சிவார்ப்பணாவிற்கும் எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. அவளும் பெரும் அதிர்ச்சியில்தான் இருந்தாள். கொஞ்சம்கொஞ்சமாக நடந்தவை நினைவுக்கு வந்தது. அவன் வராமல் இருந்திருந்தால், அவளுடைய நிலை என்ன? மூன்றாவது முறையாக அவளைக் காத்திருக்கிறான்… ஆனால் யார் யாரைச் சுட்டார்கள் எதற்காகச் சுட்டார்கள்… ஏன் சுட வேண்டும்..?’ அப்போது கூட, அவர்கள் தன்னை நோக்கித்தான் தாக்கவந்தார்கள் என்பது கூட அவளுக்குப் புரியவில்லை.
கூடவே அதுவரை நேரமும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இனம்புரியாத தைரியம் அவளை விட்டு மாயமாக மறைய, அந்த இடத்தில், தான் அனுபவித்த அந்தப் பயங்கர நிகழ்வு அவளைச் சூழ, உடல் முழுவதும் அதீத பயத்தில், இரத்தம் முழுவதும் வடிந்து போக, உடல் அதிர்ந்து நடுங்க, காதுகள் அடைக்க, அப்படியே மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டாள் சிவார்ப்பணா.
தான் இழுத்த வேகத்திற்கு வந்துகொண்டிருந்தவளின் நடை தள்ளாடுவதைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், நிதானித்துத் திரும்பிப் பார்க்க, அவளுடைய நிலையைப் புரிந்துகொண்டவனாக, அவள் தரையில் விழுவதற்கு முன்பாக, அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.
அதுவரையில்லாத கும்மிருட்டு சிவார்ப்பணாவைச் சூழ்ந்து கொள்ள, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமலே, மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டாள் அந்தப் பேதை.
(1) விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…
27) மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…