Categories: Ongoing Novel

தகிக்கும் தீயே குளிர்காயவா 32/33/34

(32)

 

இப்போது அநபாயதீரனுடைய வாகனம், எந்த அவசரமும் இன்றி, நிதானமாக ஓடத்தொடங்கியது. இருந்தாலும், இருவராலும் சற்று முன் நடந்தவற்றிலிருந்து அத்தனை எளிதில் வெளி வரமுடியவில்லை.

 

சற்று நேரம் அமைதி காத்தவள் தன் அருகே அமைதியாகக் காரை ஓட்டிக்கொண்டிருப்பவனிடம் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

 

இவனால் எப்படி எதுவுமே நடக்காததுபோல இருக்க முடிகிறது? சத்தியமாக அவளுக்கு அது புரியவில்லை. ஒருவனுக்கு மனக் கட்டுப்பாடு அவசியம்தான்… ஆனால் இத்தனை அழுத்தம் இருக்கக் கூடாது, என்று எண்ணியவள் சற்று நேரம் அமைதி காத்தாள்.

 

பின் எதற்காகத் தன்னை எதிரிகள் துரத்தவேண்டும் என்கிற எண்ணம் எழத் திரும்பி அநபாயதீரனைப் பார்த்தாள்.

 

“ரகு எதற்கு என்னைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டும்… நான் அவனுக்கு என்ன துரோகம் செய்தேன்… கடந்த ஒரு கிழமையாக… நான் எத்தனைப் பெரிய சித்திரவதைகளை அடைந்துவிட்டேன்… இதற்கு எப்போது விடிவு… நான் எப்போது சாதாரண மனுஷியாகப் பழைய அநாவாக வலம் வரப்போகிறேன்?” என்று பெரும் ஏக்கத்துடன் கேட்க, ஓட்டுவதில் கவனமாக இருந்தவன், திரும்பி அவளைப் பார்த்தான்.

 

இவளுக்கு உண்மை தெரியாது… தெரிந்தால், தாங்குவாளா? எப்படியும் ஏதோ ஒரு கட்டத்தில், அவளுக்கு உண்மைகள் அணைத்தும் தெரியத்தான் போகிறது. தெரியும் போது அதை எப்படிக் கையாள்வாள்… புரியாமல் தவித்தவன், இன்னும் நடுங்கிக்கொண்டிருந்த அவளுடைய இடது கரத்தைப் பற்றி, மெதுவாக அழுத்திக்கொடுத்து,

 

“தெரியவில்லை… அர்ப்பணா… பட்… அதை அந்த நேரம் பார்த்துக்கொள்ளலாம்… இப்போது ஓய்வாக இரு…” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னவன் ‘இனி இந்த அமைதி எத்தனை நேரம் நீடிக்கும் என்று தெரியவில்லை…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

 

“இனி பயந்து ஓட என்னிடம் சக்தியில்லை தீரன்… இதற்கு மேலும் என்னால் ஓட முடியும் போலத் தோன்றவில்லை… உடலோடு மனமும் சேர்ந்து பலவீனப் பட்டிருக்கிறது… களைத்துவிட்டேன்… மிக மிகக் களைத்துவிட்டேன்… நான் என்ன செய்யட்டும்..” என்று அவள் களைப்புடன் கேட்க,

 

அவளுடைய கரத்தை விடுவித்து, நெற்றியில் விழுந்த முடிக் கற்றைகளை, மெதுவாக ஒதுக்கிப் பின் காதிற்குள் செருகியவாறு, “அர்ப்பணா… இன்னும் நாங்கள் முழுதாக ஆபத்திலிருந்து வெளியேறவில்லை. இதற்கே நீ இப்படிச் சோர்ந்தால், நாளையை எப்படி எதிர்கொள்வாய்” என்றான் கனிவாக.

 

“இதை விட இன்னும் இருக்கா?” என்று இவள் வாயைப் பிளக்க, இவன் மெதுவாக நகைத்தவாறு ஒரு வளைவில் காரைத் திருப்பியவாறே,

 

“ஜெஸ்ட் ரிலாக்ஸ்… அர்ப்பணா… எதுவாக இருந்தாலும் நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்… இப்போது… நமக்குக் கொடுத்த ஓய்வு நேரம் மிக மிகச் சொற்பமானதே, அதற்குள், நாம் அடுத்த பிரச்சனையைச் சந்திப்பதற்கு வேண்டிய பலத்தைப் பெறவேண்டும். அதற்கு முதல் ஏதாவது சாப்பிடவேண்டும்… பசி வயிற்றைக் கிள்ளுகிறது… உன்னோடு சேர்த்து முன்தினம் இரவு உண்டதுதான்… இப்போது நேரத்தைப் பார், ஒரு மணியை நெருங்கிக்கொண்டிருக்கிறது… முதலில், குளிக்க வேண்டும். சோ… எங்காவது விடுதியிருந்தால் அங்கே போய் நமது தேவைகளைப் பூர்த்திசெய்யலாம்…” என்று கூறியவன், சற்றுத் தூரம் ஓடிச் சென்று, அங்கிருந்த மருந்துக்கடையொன்றில் தன் காரை நிறுத்திவிட்டு சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

“இங்கேயே இரு… நான் வந்துவிடுகிறேன்…” என்றவாறு உள்ளே சென்றவன், தன் கைப்பேசியை எடுத்து, யாருடனோ தொடர்பு கொண்டான். மறுபக்கம் எடுத்ததும்,

“என்ன நடக்கிறது?” என்று கேட்டவாறு ஒரு கூடையைக் கையில் எடுத்தவாறு நடக்கத் தொடங்கினான்.

 

“எவ்ரிதிங் இன் அவர் கன்ட்ரோல்…” என்று மறு பக்கம் கூற,

 

“குட்” என்றவாறு, தன் கைப்பேசியை, காதுக்கும், தோள்களுக்கும் இடையில் வைத்தவாறு வேண்டிய பொருட்களைக் கூடைக்குள் போட்டு, ஏதோ ஒரு மருந்து போத்தலை எடுத்து, அதில் போட்டிருந்த பொருட்களின் பட்டியலை, படித்தவாறு,

 

“வட் எபவுட் த பொலிஸ்…” என்றவாறு அதையும் தன் கூடைக்குள் போட்டவாறு காசாளரை நோக்கிச் செல்லத் தொடங்க,

 

“தே ஆர் ஹப்பி டு ஹெல்ப் அஸ் ஃபயர்… கொலை செய்யப்பட்டவர்களின் பின்புலம் அறிவதற்கான முயற்சியைத் தாங்கள் எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்…” என்றதும்

 

“ரகு…” என்றான் இவன் அழுத்தமாக.

 

“டோன்ட் வொரி எபவுட் ஹிம்… அவனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்”

 

“ஓக்கே தென்” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைத்துத் தன் பாக்கட்டில் போட்டுவிட்டுக் காசாளருக்கு உரியப் பணத்தைக் கொடுத்து வெளியே வந்தான்.

 

சிவார்ப்பணா அமர்ந்த வாக்கிலேயே உறங்கிப் போயிருந்தாள்.

 

அவளைப் பார்த்து உதட்டளவில் நகைத்தவன், வாங்கி வந்த பையை ட்ரங்கில் போட்டுவிட்டு, அதிலிருந்து சிறிய தலகாணியை எடுத்துக்கொண்டு அவளருகே வந்தான்.

 

உறங்கியவளின் தூக்கம் கலையாமல், அவள் தலையைப் பற்றித் தூக்கி, வசதியாக அந்தத் தலையணியை வைத்துத் தலையைக் கிடத்தியவன், அவளுடைய முடியை வருடிக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஓட்டுநர் இருக்கையில் வந்து காரை ஓட்டத் தொடங்கினான்.

 

மீண்டும் ஒரு வளைவில் அவனுடைய வாகனம் திரும்ப, சிவார்ப்பணாவின் தலை அவன் பக்கமாகச் சரிய, விழப்போகிறாள் என்கிற எண்ணத்தில் தன் கரத்தை நீட்டி அவள் தலையைத் தாங்கிக்கொண்டவன், மீண்டும் அவள் தலையை, சமன் செய்துவிட்டு, சுண்டுவிரலால் பட்டை ஒத்த கன்னத்தை வருடிக்கொடுத்து, அதன் மென்மையை நுகர முயல, அவனுடைய வருடலை அந்த உறக்கத்திலும், உணர்ந்துகொண்டவள், மெல்லிய புன்னகையைச் சிந்தியவாறே அவன் கரத்தில் வாகாகத் தன் தலையைப் பதித்து உறங்கத்தொடங்கினாள்.

 

அதைக் கண்டவனின் முகத்திலும் மெல்லிய மலர்ச்சி.

 

அடுத்த அரை மணி நேரத்தில், ஒரு சிறிய விடுதி ஒன்றிக்கு முன்னால் தன் காரை நிறுத்தியவன், தன் கரத்தைத் தலையணைபோல எண்ணி அதில் தலைசாய்த்து உறங்கிக்கொண்டிருந்தவளை, எழுப்ப மனமில்லாது, வலித்த இடக்கரத்தைப் பொருட்படுத்தாது, அதைக் கொண்டே கியரை திருப்பித் தரிப்பிடத்தில் விட்டு, வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்திக் கொஞ்ச நேரம், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

எத்தனை நேரம்தான் அப்படியே இருப்பது. மெதுவாகத் தன்னிலை பெற்றவன், தன் கரத்தை விடுவித்து, கீழே இறங்கி, ட்ரங்கைத் திறந்து, மடிக்கணினியையும், கூடவே மருந்துக்கடையில் வாங்கிய பையையும் எடுத்துக்கொண்டு, சிவார்ப்பணாவின் பக்கமாக வந்து, அவளுடைய கதவைத் திறந்தான்.

 

உறங்கிக்கொண்டிருந்தவளின் தோளில் கரத்தைப் பதித்து,

 

“அர்ப்பணா… வேக்கப்…” என்று இவன் அழைக்க, ஒருவாறு தன் விழிகளை மலர்த்தி அநபாயதீரனைப் பார்க்க,

 

“விடுதி வந்துவிட்டது அர்ப்பணா… கெட் டவுன்…” என்று கூற, தூக்கக் கலக்கம் மாறாமலே, தன் பையை எட்டி எடுத்தவாறு வெளியே வந்தாள். வந்தவள் ஒரு கணம் தடுமாற, உடனே அவளுடைய தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு,

 

“ஈசி ஹணி…” என்றவாறு தன் கரத்தை எடுக்காமலே, அந்த விடுதிக்குள் அவளுடன் சேர்ந்து நுழைந்தான்.

 

வரவேற்பாளராக, ஒரு ஆணும், பெண்ணுமாக இருவர் நின்றிருந்தனர். அதில் ஏனோ சிவார்ப்பணாவிற்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. காரணம், அவள் தன் வேலையை விட்டுவிட்டு, அநபாயதீரனைக் காணாததைக் கண்டதுபோலப் பார்த்ததுதான். விழிகள் மூடாமல், தான் எழுதிக்கொண்டிருந்ததை விட்டு விட்டு, அவனை வெறித்துப் பார்ப்பதைக் கண்டதும், இவளுக்குச் சுறு சுறு என்று ஏறியது.

 

“முழியைப் பார் முழியை… தேவாங்கு…” என்று தாராளமாக மனதிற்குள் திட்டியவள், தன்னையும் அறியாமல்  அவனை நெருங்கி நின்று, அந்தப் பெண்ணைப் பார்த்து முறைக்க, அவளோ அசடு வழிந்தவாறு தன் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

 

அதே நேரம், அநபாயதீரன், இருவருக்குமாக இரண்டு அறைகளைப் பதிவு செய்ய முயல, அது வரை அந்தப் பெண், தன்னவனைக் கடைக்கண்ணால் பார்க்கிறாளா என்று தீவிர ஆய்விலிருந்தவள், அவன் இரு அறைகள் என்று சொன்னதும், அவசரமாக அவளை மறந்துவிட்டு தன்னவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

 

‘என்னது? தனித் தனி அறைகளா. இவன் என்ன விளையாடுகிறானா? இப்போது அவள் இருக்கும் நிலையில், தனியறையில் இருக்கும்படியாகவா இருக்கிறது?’ நினைக்கும் போதே உடல் நடுங்கியது.

 

‘இந்த இரண்டு நாட்களாக அவள் பட்ட பாட்டிற்குத் தனியாக… மகூம்… நடக்காத விடயம். முடியாது. முடியவே முடியாது… நோ வே… ஜெமே… (jamais)” என்று உறுதியாக முடிவெடுத்தவள், அவனுடைய தடித்த, எம்பிய புஜத்தின் சட்டையைப் பற்றி இழுக்க, இவன் தன் தலையைத் திருப்பி? “என்ன” என்பது போலப் பார்த்தான்.

 

இவளோ தன் கால் பெரும் விரலில் நின்று எக்கியவாறு, அவனுடைய காதின் அருகே தன் உதடுகளைக் கொண்டு சென்று,

 

“எ… எதற்கு இரு அறைகள். ஒன்று போதும்…” என்றாள் கிசுகிசுப்புடன். அவ்வாறு கூறியபோது, அவள் உதடுகள் காதுகளைத் தீண்ட அந்த நிலையிலும் சிலிர்த்துப்போனான் அநபாயதீரன்.

 

“என் கூட சேர்ந்து உன்னால் இருக்க முடியுமா? உனக்குத் தனியுரிமை வேண்டாமா?” என்றான் அவன் வியப்பாக.

 

“ஒரு மண்ணும் வேண்டாம்… நான் உங்கள் கூடத்தான் இருப்பேன்…” என்று அவள் முடிவாக அழுத்தம் திருத்தமாகக் கூறியவள், எங்கே அவன் தன்னை விட்டுவிட்டுத் தனியாகப் போய்விடுவானோ என்கிற சந்தேகம் வலுப்பெற, அவனுடைய கரத்திற்குள் தன் கரத்தைக் கொண்டு சென்று இறுக்கியவாறு நின்றாள்.

 

அந்த இக்கட்டான நிலையிலும், அந்த வரவேற்பாளினியை விழிகளால் வெட்டி எறிய அவள் தவறவும் இல்லை.

 

அவள் உணர்வைப் புரிந்து கொண்டவனாக, மெல்லிய நகையைச் சிந்தியவன், “மேக் இட் வன்…” என்று கூறித், தன்னுடைய பேர்சிலிருந்து ஒரு அட்டையையும், கூடவே சிறிய காகிதம் ஒன்றை, அந்த அட்டைக்குக் கீழே, வைத்தவாறு நீட்ட, அந்தப் பேப்பர் துண்டைப் பார்த்த வரவேற்பாளர் மறு பேச்சில்லாமல், தன் கரத்தில் எடுத்த திறப்பை அதே இடத்தில் வைத்துவிட்டு இன்னொரு திறப்பையடுத்து அவனிடம் நீட்டி மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தார்.

 

இதை சிவார்ப்பணா கவனிக்கவில்லை. அவளுக்குத்தான் எத்தனையோ பிரச்சனைகள் தலையைக் குடைந்துகொண்டிருந்ததே.

 

(33)

 

வரவேற்பாளர், நீட்டிய திறப்பைப் பெற்றுக்கொண்டவன் அவருக்கு நன்றி கூறும் முகமாகத் தன் தலையை அசைத்துவிட்டு, சிவார்ப்பணாவை அழைத்துக்கொண்டு தரையிலேயே அமைந்திருந்த அவனுக்குரிய அறையை நோக்கிச் சென்றான்.

 

நான்கு மாடிகள் மட்டுமே கொண்ட அந்த விடுதியில் ஒரு எலிவேட்டர் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. வியப்புடன் பார்த்தவாறு, அநபாயதீரனின் கையை விடாமலே, அவனுடன் இழுபட்டவாறு சென்றாள் சிவார்ப்பணா. கீ கார்டைக் கதவில் செருகி எடுக்க, கதவு திறந்து கொண்டது.

 

இருவரும் ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர். அறை விஸ்தாரமாக, இருந்தது.

 

உள்ளே நுழைந்ததும், சிவார்ப்பணா இரத்தம் படிந்திருந்த மேற்சட்டையை ஒரு அருவெறுப்புடன் கழற்றி ஓரமாகப் போட்டு அது வரை குளிரில் விறைத்துப்போய், உணர்ச்சியற்ற பாதத்திற்கு உயிர் ஊட்டும் விதமாக அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து, வேகமாகக் கால்களை அழுத்திவிடத் தொடங்கினாள்.

 

அதைக் கண்டதும், கையிலிருந்த மடிக்கணினியைப் பத்திரமாக அங்கிருந்த மேசையொன்றின் இழுப்பறையில் வைத்துவிட்டு, ஒற்றைக் கதிரையை இழுத்து அவளுக்கு முன்பாகப் போட்டவன், அதில் அமர்ந்து, அவள் அழுத்திக்கொண்டிருந்த கால்களைப் பற்றப் போக,

 

“தீரன்… என்ன செய்கிறீ…ர்…க…ள்?” என்று அவள் முடிப்பதற்குள், அவளுடைய காலைத் தூக்கித் தன் மடியில் வைத்திருந்தான். அவள் இழுக்க முயல,

 

“ஸ்டாப் இட் அர்ப்பணா…” என்றவன், பாதத்தைப் பரிசோதித்தான். வெறுங்காலால் ஓடி, நடந்ததால், கால் முழுவதும் சிராய்த்து, வெட்டுப்பட்டு, சில இடங்களில் இரத்தம் கட்டியிருந்தது.

 

மெதுவாகப் பாத மூட்டு, குதிக்கால், உள்ளங்கால், விரல்கள் என்று இரு பாதங்களையும் பற்றியும் நீவியும் அழுத்தியும் கொடுக்க, சிவார்ப்பணா விழிகளை மூடிச் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தாள்.

 

சற்று நேரம் நீவிக் கொடுத்தவன், அவனை நிமிர்ந்து பார்க்க, அவளோ கரங்களைச் சற்று முதுகுப் புறமாகக் கட்டிலில் வைத்துத் தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடி அவன் செய்கையை ரசித்துக்கொண்டிருந்தாள். அதைக் கண்டு தலையை ஆட்டி நகைத்தவன் மீண்டும் மீண்டும் அழுத்திக் கொடுத்துவிட்டுப் பின் அவள் ஒன்றைத் தொடையில் இரண்டு தட்டுத் தட்டி,

 

“நௌ யு ஆர் ஓக்கே…” என்று கூற, ‘அட வடை போச்சே…’ என்பது போல அவனைப் பார்த்துவிட்டு, ‘இன்னும் அழுத்திக் கொடுத்தால் என்னவாம்? சொத்தா குறைந்துபோகும்?” என்பது போல அவனைப் பார்த்துவிட்டுக் கால்களைக் கீழே இறக்க, எழுந்தவன்,

 

“ரூம் சார்விசுக்கு அழைத்து, ஏதாவது சாப்பாடு கொண்டுவரச் சொல் அர்ப்பணா… செம பசி… ஏதாவது சாப்பிட்டால்தான் என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியும்…” என்றவாறு, மருந்துப் பையுடன் குளியலறைக்குள் நுழைந்தான்.

 

தன் மேல் சட்டையைக் கழற்றித் தரையில் போட்டவன், அந்தப் பையிலிருந்த பொருட்களைக் கைகழுவும் தொட்டியோடு இணைந்த மேசையில் கொட்டினான். அதிலிருந்த அல்கஹாலை ஒரு பஞ்சில் நனைத்தவன், வலது கரத்தை மேசையில் உன்றியவாறு இடது கரத்தால், மார்பில் கிழிந்திருந்த காயத்தின் மீது பூசி சுத்தம் செய்ய அது கொடுத்த எரிச்சலில் இவன் பற்கள் ஒன்றோடு ஒன்று நெருமிக்கொண்டன.

 

சுத்தப்படுத்தியபின் தன் காயத்தை நன்கு பரிசோதித்தான். நிச்சயம் தையல் தேவை… தையலுக்கு வேண்டிய ஊசியையும், அதற்குரிய நூலையும் எடுத்து லாகவமாகக் கோர்த்தவன், கண்ணாடியைப் பார்த்தவாறே தனக்குத் தானே தையலிடத் தொடங்கினான்.

 

ஒவ்வொரு முறை குத்தி, அதை வெளியே எடுத்து, அந்த நூலுடன் ஒரு கழட்டு சுழற்றி இழுத்தபோது, பிரிந்திருந்த தோள்களும் சதைகளும் சேர்ந்துகொள்ள, அந்த நேரம் ஏற்பட்ட வலியில், அவனுடைய மார்பினதும், கரங்களினதும், தசைகள் இறுகினதே தவிர, அவன் முகத்தில் வலியின் சாயல் எள் அளவும் தெரியவில்லை.

 

அதே நேரம், பிடித்தவற்றை எடுத்துவருமாறு ரூம் சார்விசுக்குக் கூறிவிட்டுக் கட்டிலில் அமர்ந்து தன் கால்களை ஆட்டிக்கொண்டிருந்தவளுக்கு, யானைப் பசி வயிற்றைக் கிள்ளியது. ஐந்து நிமிடம் கழிய, சாப்பாடு வர, அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் அமர்ந்தவள் அநபாயதீரனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

 

உள்ளே போனவன் பதினைந்து நிமிடங்களாகியும் வந்தானில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. குளியலறையையும், சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தவள், தன் வயிற்றை அழுத்திக் கொடுத்தவாறு,

 

“கல்யாண சமையல் சாதம்… காய்கறிகளும் பிரமாதம்… இது கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்…” என்று பாடியவள் பின் தன் தலையில் தானே தட்டிக்கொண்டாள்

 

‘அதிக பசி இருக்கிற போது பாடும் பாட்டா இது…’ என்று தன்னையே கடிந்தவள், அப்படியே பின்புறமாகச் சரிந்து படுக்கையில் விழுந்தவாறு, தன் வயிற்றைத் தட்டிக்கொடுத்துக்கொண்டு,

 

“ஆவக்காய் மனா அந்தரிடி கோங்குரா பச்சடி மனதிலே” என்று அடுத்த பாட்டைப் பாடியவள், பக் என்று தன் வாயை மூடிக்கொண்டு, எழுந்தமர்ந்தாள்.

எட்டி குளியலறையைப் பார்த்தாள். சாப்பாட்டு மணம் வேறு அவளை வா வா என்று இழுக்க, ஏனோ அவனை விட்டுச் சாப்பிடவும் மனம் வரவில்லை.

 

“தீரன்… குளியல் அறையில் என்ன செய்கிறீர்கள்…” என்று சற்றுக் குரலை உயத்தி இவள் கேட்க, பதிலுக்கு எந்தச் சத்தமும் வராது போக, எரிச்சலுடன்,

 

“தீரன்… தீரன்..” என்று அழைத்துப் பார்த்தாள்.

 

என்னடா இன்னும் ஆளைக் காணவில்லையே என்கிற யோசனையில், ஏதோ ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ள, தன்னையும் மறந்து எழுந்தவள், விரைந்து சென்று குளியலறைக்கு முன்னால் நின்று, கதவைத் தட்டாமலே திறந்துகொண்டு தன் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள்.

 

அப்போதுதான் அநபாயதீரன், தன் மார்புக் காயத்திற்கு இறுதித் தையலைப் போட்டுக்கொண்டிருந்தான்.

 

அதைக் கண்டதும், பசி மறந்து போக, உள்ளம் பதற, அவனை நெருங்கியவளின் அசைவு கண்டு தைத்த கை அப்படியே இருக்க, திரும்பிப் பார்த்தவன்,

 

“வட் ஆர் யு டூயிங் ஹியர்…” என்று எரிச்சலுடன் கேட்டான்.

 

“ம்… சுற்றுலா பார்க்க வந்தேன்… சாப்பாடு வந்துவிட்டது… உங்களைக் காணவில்லையே என்று வந்தேன் ” என்று அலட்சியமாகக் கூறியவள், விரைந்து அவனை நெருங்கி, அவன் கரத்திலிருந்த பஞ்சைத் தன் இடக்கரத்தால், வெடுக் என்று பறித்தாள்.

 

ஒரு கணம் திகைத்தவன்,

 

“ஹேய்… வட் இஸ் திஸ்…” என்று கர்ஜிக்க,

 

“பஞ்சும் மருந்தும்…” என்று கூறியவள், மேசையில் ஊன்றியிருந்த அவனுடைய பலம் பொருந்திய கரங்களைத் தன் கரங்களால் பற்றி விலக்க முயன்றாள். எமகாதகன், அசைந்தால் அல்லவோ.

 

‘கிங்காங்…’ என்று மனதாரத் திட்டியவள், இப்போது, உடலுடன் சேர்த்துத் தள்ளிப் பார்த்தாள். ‘ம்கூம்… இவனுடன் மல்லுக்கட்டுவதற்குப் பதில், மலையோடு மல்லுக்கட்டலாம்…’ என்று சலிப்புடன் எண்ணியவள், தன் இடுப்பில் இரு கரங்களையும் பதித்து அவனை முறைத்தாள்.

 

“கையை எடுங்கள் தீரன்…” என்று இவள் பொறுமையற்றுக் கூற, இவனோ பிடிவாதமாகத் தன் கரத்தை விலக்காது,

 

“ஸ்டாப் இட்… அன்ட் கெட் அவுட்…” என்றான் இவனும் கோபத்தில் மூக்கின் நுணி சிவக்க.

 

“மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடுமா என்ன?” என்று கேட்டவள், அவன் சுதாரிப்பதற்கு முன்பாகவே, அவனுடைய கைகளுக்குள்ளாகச் சட்டெனப் புகுந்து, அவனுக்கும், மேசைக்கும் இடையேயாக அவனைப் பார்த்தவாறு நின்றுகொண்டாள்.

 

இவனோ இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கிடைத்த இடைவெளியில் அவள் இப்படிப் புகுந்து கொள்வாள் என்று அவன் என்ன கனவா கண்டான்.

 

ஆனால் அவளோ, அவனுடைய பாறையை ஒத்த உடல், தன்னுடைய மலர் மேனியை நெரித்துக்கொண்டிருப்பதைக் கூடப் பொருட் படுத்தாமல், வெற்று மேலுடன் நின்றிருந்தவனின் காயத்தினைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மனம் முழுவதும் வலித்தது.

 

ஆனாலும் அந்த நிலையிலிருந்து, அவனுக்கும் விலகவேண்டும் என்று தோன்றவில்லை. அவளுக்கும் விலகவேண்டும் என்று தோன்றவில்லை.

 

ஓரளவு தன்னை நினைவுலகிற்குக் கொண்டுவந்தவன், அவசரமாகப் பெருமூச்சொன்றை விட்டு,

 

“வட் த ஹெல் ஆர் யு டூயிங் அர்ப்பணா?” என்று கேட்க, அவளோ தன் இடது வலது உள்ளங்கையை அவனுடைய இடது மார்பில் பதித்து, மருந்துப் பஞ்சை ஏந்தியிருந்த விரல்களால் தைக்கப்பட்டிருந்த, காயத்தை மெதுவாக வருடிக் கொடுத்து, பரிசோதிக்கத் தொடங்க, இவனுடைய நிலைதான் படு பயங்கரமாக இருந்தது.

 

அவளுடைய கரங்கள், அவனுடைய மார்பில் படிந்ததுதான் தாமதம், இவனுடைய இரத்த ஓட்டமும் இதயத் துடிப்பும் தாறுமாறாக எகிறத் தொடங்கியது.

 

ஆண்மகனுக்கே உரித்தான உணர்வு அந்த மெல்லிய தொடுகையில், சிலிர்த்துக் கொள்ள, அதை அடக்க முயன்றும் முடியாமல் திணறியவன், இனியும் முடியாது என்கிற நிலையில் அவளுடைய கரத்தைப் பற்றித், தள்ளப் போக, அவளோ, வேகமாகத் துடித்த அவனுடைய இதயத்தை உணர்ந்தவளாக,

 

“அடேங்கப்பா… உங்கள் இதயம் எதற்கு இப்படி வேகமாகத் துடிக்கிறது?” என்று புரியாமல் கேட்டாள். கூடவே, தான் உணர்வது சரிதானா என்பதைப் பரிசோதிப்பது போலத் தன் வலக் கரத்தை, மீண்டும் அவனுடைய இடது மார்பில் அழுந்த வைத்து, விழிகளை மூடி, இதயத் துடிப்பை அறிய முயன்றாள்.

 

ஏனோ அவளுக்கு அது தப்பாகத் தெரியவேயில்லை. கூடவே, துடிக்கும் இதயத்தை எப்படியாவது அறிந்துகொள்ளவேண்டும் என்கிற வேகம்தான் இவளுக்கு எழுந்தது. அதனால், அவன் நிலையை அறிய அவள் தவறினாள்.

 

அவனுக்கேற்பட்ட சத்திய சோதனையில், தன் பற்களைக் கடித்த நெருமியவன், அவளைப் பார்த்து சினத்துடன்,

 

“அர்ப்பணா… இனஃப் இஸ் இனஃப்… தயவு செய்து வெளியே போ…” என்று சினந்தவாறு தன் காயத்தின் இறுதி முடிச்சைப் போட்டு இழுத்து, எட்டி அருகேயிருந்த கத்தரிக்கோலை எடுக்க முயன்ற போது, அவனுடைய முன்னுடல் இப்போது தாராளமாக, பசையென அவள் உடலுடன் அழுந்த ஒட்டிக்கொண்டது.

 

தன் உடலோடு பதிந்திருந்த தன் உள்ளம் கொள்ளை கொண்டவளின் பிரத்தியேக சுகந்தத்தில் தன்னை மறந்து நின்றவன், தன் மூச்சை ஆழ இழுத்து, அவள் விட்ட மூச்சை சுவாசிக்க முயன்றான். மேலும் அவளைத் தன்னுடன் நெருக்க வேண்டும் என்று சண்டித்தனம் புரிந்த மனத்துடன், தர்க்கம் பண்ண முடியாமல், மேலும் நெருங்கி நின்றான் அந்த மாயக் கள்வன்.

 

மனம் அவளை விட்டுத் தள்ளி நிற்கவேண்டும் என்று கட்டளையிட்டாலும், அதைச் சுலபமாகப் புறக்கணித்தவன், அந்த மென்மையைத் தன் உடலால் உணரத் தொடங்கினான்.

 

சிவார்ப்பணா கூட, அவனிடமிருந்து விலகவேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவளாக, அவனுடைய அருகாமையை ஒரு வித கிளர்ச்சியுடன் அனுபவிக்கத் தொடங்கினாள்.

 

கிட்டத்தட்ட உயரத்தாலும், எடையாலும் அவளை விட ஒன்றரை மடங்கு பெரியவன்… அவனுடைய கரங்களுக்குள் சிக்குவது என்பது, பெரிய பருந்தின் கரங்களில் சிக்கிக்கொண்ட கோழிக்குஞ்சு போலத்தான் தோன்றும். ஆனால் இந்தப் பருந்து, சாதாரண பருந்தல்ல. இந்தச் சிறியக் கோழிக்குஞ்சைக் காக்கத் தன் உயிரையும் கொடுக்கும் பருந்து.

 

எப்படியோ சுயநினைவு பெற்ற அநபாயதீரன், தாம் இருக்கும் நிலை புரிந்தவனாக, பதறியடித்து, அதற்கு மேல் முடியாதவனாக, வேகமாக இரண்டடி பின்னால் வைக்க, இவளோ இன்னும் மயக்கம் தெளியாதவளாக, பன்மடங்கு, வேகமாகத் துடித்த இதயத்தினை உணர்ந்தவாறு, தன் விழிகளை மூடி நின்றாள்.

 

என்னதான் விலக முயன்றாலும், அவளுடைய கரங்கள் கொடுத்த வெம்மையை அவனால் சுலபத்தில் அழிக்க முடியவில்லை. எப்படியோ, தன் மனத்தைக் கடினமாக்கித் தன் மார்பில் பதிந்திருந்த அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து விலக்க முயன்றவன்,

 

“ப்ளீஸ் அர்ப்பணா… கெட் அவுட் ஃப்ரம் ஹியர்… ஒரு ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன்… இதற்கு மேல்… என்னால்… என்னால்…” என்று எப்படி முடிப்பது என்று புரியாமல் விழித்துக் கடைசியில், கெஞ்சுவது போலக் கூற, அவன் உள்ளம் கவர் கள்ளியோ, தன் விழிகளைத் திறந்து, தன் உதட்டைப் பிதுக்கி, அவனுடைய கரத்திலிருந்து தன் கரத்தை விடுவித்து,

 

“ஷ்…” என்று அவன் உதட்டின் மீது தன் சுட்டு விரலைப் பதித்து, வாய் குவித்துக் கூறியவளின் உதடுகளிலிருந்து தன் விழிகளைப் பிரிக்க முடியாது மேலும் தன்நிலை கெடத் தொடங்கினான் அவன்.

 

‘ராட்சஷி… ஏன்டி என்னைப் படுத்துகிறாய்?’ என்று சலித்தவன், அவளுடைய விரலைத் தன் வலக்கரத்தால் பற்றி,

 

“ஸ்டாப் இட் அர்ப்பணா… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குப் புரியவில்லை… நீ தீயோடு விளையாடுகிறாய்…” என்றான் கடித்த பற்களுக்கூடாக.

 

“நீங்கள் தகிக்கும் தீயென்றால்  நான் குளிரும் பனி… உங்கள் சூட்டை என்னால் குளிர்விக்க முடியும் தீரன்…” என்றவள், அவன் பிடியிலிருந்து தன் கர்தை விலக்கி, மீண்டும் காய்ந்திருந்த அந்தப் பஞ்சில் அல்க்கஹாலை ஊற்றி, அவன் தைத்து முடித்த காயத்தின் மீது வைக்க, இவனுக்கு, அந்தக் காயம் கொடுத்த எரிச்சலை விட, அவளின் அருகாமை கொடுத்த தகிப்பே அதிகமாக இருந்தது. அவளுடைய மனம் தன் பக்கம் சாயத் தொடங்குகிறது எனபதை அவள் பேச்சிலிருந்து புரிந்தவனுக்கு, அந்த எண்ணத்தை வளரவிடுவது அத்தனை உசிதமில்லை என்பதை நன்கு புரிந்துகொண்டான்.

 

அந்த வீர மகனுக்குத் தான் பெரும் தவிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சற்றும் புரிந்துகொள்ளாத பெண்ணவள், அவன் இறுகிய தசைகளைக் கண்டு மருந்தின் எரிச்சலால்தான் அவன் உடல் இறுகி நிற்கிறான் என்று தப்பாகப் புரிந்துகொண்டாள். மீண்டும் தன் உதடுகளைக் குவித்து, அந்தக் காயத்தின் மீது ஊத, மீண்டும் அதலபாதாளத்திற்குள் விழத் தொடங்கினான் அநபாயதீரன்.

 

அவளுடைய சுவாசக் காற்று அந்தக் காயத்தின் மீது பட்டதுதான் தாமதம், அவை காயத்தினூடாகச் சென்று நரம்புகளின் ஊடாகப் பாய்ந்து, இதயம், புத்தி என எங்கும் அவள் காற்று பரந்து விரிந்து செல்வது போல உணர்ந்து அவன் திணறிப்போனான்.

 

வெறும் மூச்சுக் காற்று… இதனால் எத்தனை பெரும் மாயங்கள் செய்கிறாய் பெண்ணே நீ… உள்ளே நுழைந்த உன் சுவாசக் காற்று, என் மூச்சை நிறுத்தித், தானே என்னை ஆட்சி செய்ய விளைகிறதே… நான் என்ன செய்வேன்… என்னை ஆட்சி செய்யும் உன் சுவாசம் என்னை விட்டு நீங்கினால், என் உயிரும் விட்டு நீங்கிவிடும் என்று என் உள்ளம் வேகமாகத் துடித்துக் கூறுகிறதே… அதன் வேகத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்துவேன்…” என்று அவன் மனதிற்குள் பிதற்ற,

 

அவளுடைய கவனம், இப்போது அவனுடைய இடது கரத்துக் கைக்கட்டிற்குச் சென்றது.

 

அதைப் புரிந்துகொண்டவன், தன் கரத்தை வேகமாக விலக்கப்போக, அதைப் பட் என்று பிடித்தவள், மெதுவாக அவனுடைய கட்டை அவிழ்க்கத் தொடங்கினாள்.

 

அவளோ, அதற்கு மேல், தடுக்க முடியாதவனாகத் தன் விழிகளை மூடி, அவள் கரங்கள் படர்ந்த இடங்களில் ஏற்பட்ட சுகந்தத்தில் தன்னிலை மறந்து போயிருந்தான்.

 

இரத்தம் காய்ந்திருந்ததால், கட்டுப் பிரியமாட்டேன் என்று அடம் பிடிக்க, அருகேயிருந்த துணியை எடுத்துத் தண்ணீர் குழாயைத் திறந்து, அதில் நனைத்துக், காய்ந்திருந்த இரத்தத்தின் மீது பிழிந்து ஊற்றி, இளக வைத்து மெது மெதுவாகப் பிரித்தவள், அந்தக் காயத்தின் அளவைக் கண்டதும், வாய் பிளக்க, அவனை நிமிர்ந்து பார்த்து,

 

“பெரிய காயம் தீரன்…” என்றாள் கம்மிப்போன குரலில். விழிகளில் வேறு குளம் கட்டியிருந்தன.

 

அது வரை ஒரு வித தியானத்திலிருந்தவன் மெதுவாகத் தன் விழிகளைத் திறந்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். நீள நயனங்களில், நிறைந்திருந்த கண்ணீரைக் கண்டதும், இவன் தவித்துப் போக,

 

“ஷ்… இட்ஸ் ஓக்கே… வெறும் காயம்தான் அர்ப்பணா… விடு நான் சுத்தம் பண்ணுகிறேன்…” என்று தன் கரத்தை விடுவிக்க முயல, மூக்கை உரிஞ்சியவாறே,

 

“நான்தான் செய்வேன் தீரன்… பே பக்… எனது தோளில் காயம் ஏற்பட்ட போது நீங்கள்தானே தையல் போட்டீர்கள். இப்போது கூட காயம் வலிக்கிறது தெரியுமா?” என்று கண்களிலிருந்து கண்ணீர் வழிவது கூடத் தெரியாமல், கூறியவள், எங்கே அவனுக்கு வலித்து விடுமோ என்பது போல மெதுவாகத் துடைத்து விட்டாள்.

 

அவள் துடைக்கும் அழகையே கண் வெட்டாது அவன் பார்த்துக்கொண்டிருக்க, தன் உதடுகளை மீண்டும் குவித்து, அந்தக் காயத்தின் மீது ஊத, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவனாக, ஒரு பெரிய மூச்சொன்றை எடுத்து விட்டவன்,

 

“சொன்னால் கேட்கமாட்டாய்?” என்றவாறு அவளுடைய முகத்தை இரு உள்ளங்கைகளாலும் பற்றித் தன்னை நோக்கி இழுத்து நிமிர்த்தியவன், அவள், கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் பெருவிரல்களால் துடைத்துவிட்டு, வேறு பேச்சுக்கு இடம் கொடாது, தன் உதடுகளால் அவள் உதடுகளை வன்மமாகக் கைப்பற்றிக்கொண்டான்.

 

அவளுக்கும் அந்தக் கடுமை வேண்டியிருந்ததோ, பாந்தமாக அவனுடைய பிடியில் அடங்கிப்போனாள் சிவார்ப்பணா. மெதுவாக அந்த உதடுகளை விட்டுப் பிரிந்தவன், மீண்டும் அந்த உதடுகள் அவனை வா என்று அழைப்பது போலத் தோன்ற, மீண்டும் தகிப்புடன் அந்த உதடுகளைத் தன் உதடுகளால் இறுகப் பற்றிக் குளிர் காய முயன்றான். அதன் பின் அவன் காட்டியவை அனைத்தும் வேகம் வேகம் வேகம்.

 

உதடுகளால் அவளுடைய முகத்தில் வன்மையாகக் கவி பாடியவன், அப்படியே உதடுகள் என்னும் பேனாவைக் கழுத்தருகே கொண்டு சென்று குறள் வெண்பா பாடிப் பின், அவளுடைய தோள்களிலே, குறுந்தொகை பாடத் தொடங்கினான். வலக் கரத்தால், சற்று தோளில் வழிந்துகொண்டிருந்த டீ ஷேர்ட்டை விலக்கி, முன்தினம் அவன் போட்ட தையலில் தன் உதடுகளைப் பொருத்தியவன், அது போதாது என்று, மேலும் மூங்கில் தோள்களில் தன் உதடுகளைப் பொருத்த, சிவார்ப்பணாவும் தன்னிலை கெட்டு மயங்கி நின்றாள்.

 

பின் தன் இரு கரங்களையும் கலைந்திருந்த அவள் கூந்தலை நோக்கிக் கொண்டு சென்றவன், அதற்குள் தன் விரல்களைச் செலுத்தி இறுகப் பிடித்துப் பின்னால் சரிக்க, அவை கொடுத்த வலியைக் கூட, அவள் இனிமையாக, உதட்டில் மெல்லிய புன்னகை சிந்த அந்தப் புன்னகையைப் பார்த்தவாறே, நன்றாகக் குனிந்து, அவளுடைய கழுத்தை மெதுவாகக் கடித்துப் பின், அதிலேயே தன் உதடுகளைப் பொருத்தி, அப்படியே கோலம் வரைந்தவன், வேகமாக அவளை மறுபக்கம் திருப்பி, முதுகிலே முத்தமிட்டு, மேலே மேலே தன் உதடுகளால் பயணம் செய்தான்.

 

காமத்தின் பிடியிலிருந்து பயனம் செய்தவனின் மனத்தில் ‘அர்ப்பணம் அகண்டம்… கண்டம்… கடவுள்” என்கிற வாக்கியம் நினைவுக்கு வர, அது வரை மாயையிலிருந்தவன் ஆணி அடித்ததுபோல அப்படியே நின்றான்.

 

‘அர்ப்பணம்… சிவார்ப்பணா – அகண்டம்… அ கண்டம்… கண்டம் என்றால் கழுத்து… அ என்றால் அது… அந்தக் கழுத்தில், கண்டம் – எழுத்தாணி, இல்லையென்றால் உயிராபத்தைக் குறிக்கிறது… கடவுள் – உள்ளே கடந்து செல்… அப்படியானால் சிவார்ப்பணாவின் கழுத்தில்தான் அழிவின் படிநிலை எழுதிவைக்கப்பட்டிருக்கிறதோ? என்று எண்ணியவன் ஒரு விதப் பதட்டத்துடன் தன்னையும் மறந்து தோள்களிலே பரவியிருந்த கூந்தலை வலமிருந்து இடமாக, மெது மெதுவாக விலக்க, அங்கே இருந்ததைக் கண்டவன் ஒரு கணம் அசையாது… அதிர்ந்து போய் அப்படியே சிலையென நின்றான்.

 

அத்தனை நேரமாக அவனை ஆட்சி செய்த காமம் கலைந்து மறைந்து போக, உணர்ச்சிகள் அனைத்தும், துண்டிக்கப்பட, அதுவரை காட்டிய வேகம் மாயமாகிப் போக, சீறலாகப் பாய்ந்த மூச்சுக்கள் மாயமாகிப் போக, சற்று நேரம் பேச்சற்று அவள் கழுத்தில் தெரிந்த குறிப்பிட்ட இடத்தைப் பார்த்து விறைத்துப்போய் நின்றவனுக்கு, எதிரிகள் எதற்காக அவள் பின்னால் நிழலெனத் தொடர்கிறார்கள் என்பதன் உண்மை புரிய, பேச்சற்றுப் போய் நின்றான் அந்தக காவலன்.

 

இனியும் தகிக்கும், தன்னால் அவளிடத்தே, குளிர்காய முடியுமா என்கிற சந்தேகமும் அவனுக்கு மெல்ல மெல்ல, வலுப்பெற, கூடவே அவள் மேலிருந்த இரக்கம் கரைந்து, அங்கே இளக்காரமும், கோபமும் சினமும் அவனைப் பற்றிக்கொள்ள, அவன் முகம் கறுத்து இறுகிப்போனது.

 

(34)

 

திடீர் என்று வேகம் காட்டியவன், பின் விவேகம் இழந்து நின்றவனைக் கண்டு ஒன்றும் புரியாமல் மெதுவாகத் திரும்ப, அங்கே முகம் சிவக்கக் கண்களில் சினப் பொறி பறக்கப் பற்களைக் கடித்தவாறு தன் கோபத்தை அடக்க முயன்றுகொண்டிருந்த அநபாயதீரனைக் கண்டு குழம்பிப்போனாள்.

 

“ஏன்… என்னவாகிவிட்டது, நன்றாகத்தானே…” என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் செய்ய விளைந்ததன் தாற்பரியம் புரிய, யாரோ முகத்தில் அறைந்தது போல விதிர் விதிர்த்துப் போனாள் சிவார்ப்பணா.

 

முதன் முதலாக ஒரு ஆண்மகனின் அணைப்பில் தன் நிலை கெட்டு மயங்கியிருந்திருக்கிறாள்… இது எப்படி சாத்தியம்? எப்படி அவனுடைய அணைப்பில் தன்னிலை கெட முடிந்தது?

 

“ஓ மை காட்… அவன் மட்டும் சுதாரிக்கவில்லை என்றால்…’ நினைக்கும் போதே அவளுக்குத் தன்மீதே வெறுப்புத் தோன்றியது.

 

“நா… அது… வந்து…” என்று இவள் தடுமாறியவாறு இயம்ப முயன்றவள், அவன் முகத்தில் தெரிந்த உருத்திர தாண்டவத்தைக் கண்டதும், வாயைக் கப் என்று மூடிக்கொண்டாள். எதற்காக இப்படிக் கோபமாகப் பார்க்கிறான் என்பது புரியாமல் விழிகளும், இமைகளும் சுருங்க நிமிர்ந்து பார்த்தாள். சற்று முன் நடந்தது மறந்துபோக,

 

“தீரன்…” என்றவாறு அவனுடைய கன்னத்தில் தன் கரத்தை வைக்கப் போக, அதை வேகமாகத் தட்டிவிட்டவன், தன் சுண்டுவிரலைத் தூக்கி எச்சரிப்பது போலக் காட்டி,

 

“ஸ்டாப் இட்… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… ஆஸ்கார் விருதுபெற்ற நடிகர்கள் எல்லாம் இந்த அளவுக்கு நடித்து நான் பார்த்ததில்லை… உன்னுடைய அப்பாவி முகத்தைப் பார்த்து இனியும் நான் ஏமாறுவேன் என்று நினைத்தாயா?” என்று அவன் கர்ஜிக்க, அதன் சூட்டில் செய்வதறியாது திகைத்துப் போனாள் சிவார்ப்பனா.

 

“வட்… வட் ஆர் யு டாக்கிங் எபவுட்… தீரன்… ப்ளீஸ்… நீங்கள்…”

 

“அப்போதே நான் விழித்திருக்கவேண்டும். அந்த கீ பெண்டன்… அதைக் கண்டபோதே நான் யோசித்திருக்கவேண்டும்… ரகு தந்த மடிக்கணினி… உன்னிடமிருந்த போதே நான் புரிந்திருக்கவேண்டும்… நீ அப்பாவியல்ல என்று… எப்படி நான் புரிந்துகொள்ளாமல் போனேன்… எப்படி நான் ஏமாந்தேன்… இதுவரை நான் எங்கும், எதிலும் ஏமாந்ததில்லை… ஏமாற்றுப் பட்டதும் இல்லை… என்னையே நீ முட்டாளாக்கியிருக்கிறாய் என்றால்… நீ… எத்தனைப் பெரிய… கேடியாக இருக்கவேண்டும்… சே… நீ குற்றம் செய்வது தெரியாமலே குற்றவாளியாகி இருக்கிறாய் என்று தப்பாக…” என்று கடித்த பற்களுக்கிடையேயாகக் கூறியவன், தன் தலை முடியை அழுந்தக் கோதிக்கொண்டான்.

 

தான் செய்த மடத்தனத்தை எண்ணித் தன் மீதே கோபம் கொண்டவன், தன் முகத்தை அழுந்தத் தேய்த்துக்கொண்டான். எது அவனைத் தப்பாக எண்ண வைத்தது… அந்த நீண்ட விழிகளா? அப்பழுக்கிலா முகமா? அவளுடைய பயந்த சுபாவமா? இல்லை அவளுடைய குழந்தைத் தனமா? எது அவள் குற்றமற்றவள் என்று எண்ண வைத்தது?

 

இலகில் எதிராளியின் மனதைப் படித்துவிடும் வல்லமை கொண்டவன் என்று, சக தோழர்களால் போற்றப்பட்டவன், தோற்றுப்போய்… அதுவும் ஒரு பெண்ணால் தோற்றுப்போய் நிற்கிறான்… யானைக்கும் அடிசறுக்கும் என்று இதைத்தான் சொன்னார்களோ? நினைக்க நினைக்க அவனால் தாளமுடியவில்லை.

 

இவளுக்காக எத்தனை ஆபத்துக்களைச் சந்தித்தான். எல்லாம், தவறு செய்யாத ஒருத்தி, தன் இதயத்தில் பதாகையாகப் பதிந்துபோனவள், எந்த ஆபத்திலும் சிக்கக் கூடாது என்றுதானே… ஆனால் இவள்… இத்தனை பெரிய ரகசியத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவள் போல… சே… தன் பின்னால் எதற்காக எதிரிகள் நிழலாகத் தொடர்கிறார்கள் என்பது இவளுக்கு நிச்சயமாகத் தெரியும். தெரிந்துகொண்டுதான் தெரியாததுபோல நடிக்கிறாள்… அடேங்கப்பா… இப்படி ஒரு யதார்த்த நடிப்பை அவன் கண்டதேயில்லை’ நினைக்கும் போதே அவனால் தாள முடியவில்லை.

 

தன் விழிகளை இறுக மூடியவாறு குனிந்து, தன் இரு முழங்கால்களிலும் தன் கரத்தைப் பதித்தவாறு நிற்க, அவனுடைய வலிக்கான காரணம் புரியாமலே, குழம்பிப்போனாள் சிவார்ப்பணா.

 

அதுவும் தான் ஏதோ பெரும் தவறு செய்தவன் போல வருந்துவதைக் கண்டதும், இவளால் தாளமுடியவில்லை, அவனை வேகமாக நெருங்கியவள்,

 

“தீரன்… வட்… இஸ்… இட்… ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்?” என்றவாறு அவனுடைய தலையைத் தன் மார்போடு அணைக்க, அவள் தொடுகையில் அவன் உடல் இரும்பென இறுக, மனத்தின் அக்கினிப் பொறி பறக்க, புத்தியில் சீற்றம் தீயெனக் கொழுந்துவிட்டு எரிய, ஒரு உதறலில் அவளைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றான் அநபாயதீரன்.

 

திடீர் என்று தன்னை இப்படி உதறித்தள்ளுவான் என்பதை  அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் தள்ளிய வேகத்தில், கைகழுவும் தொட்டியின் மீது வேகமாக இடை மோதி நிற்க, “ஆ…” என்றவாறு தன் இடையைப் பற்றிக்கொண்டாள்.

 

அந்த அலறலில் வழமைபோலப் பதறியவாறு “அர்ப்பணா…” தன் இடக் கரத்தை நீட்டித் தடுக்க முயன்று பார்த்தவன், தன் மீதே கோபம் வர, அந்தக் கோபத்தில் வேகம் வர, விவேகம் கெட, என்ன செய்கிறோம் என்பதை உணரும் முன்னே, நீட்டிய கரம் கொண்டு, பாய்ந்து அவளுடைய கழுத்தைத் இறுகப் பற்றிக்கொண்டான்.

 

“யு… லிட்டில் XXX XXX… யு லை டு மி… வை டிட் யு டூ தட்… சொல்லு… எதற்காக என்னிடம் பொய் சொன்னாய்…? நீ நல்லவள் என்று நம்பி… சே…” என்றவாறு தன் கரத்தின் அழுத்தத்தைக் கூட்ட,  அவள் முதலில் அதிர்ந்து பின் மூச்சுக் காற்றுக் கிடைக்காது சுவாசம் தடைப்பட, திணறிப்போனாள். .

 

அவனுடைய அழுத்தமான பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்கிற தவிப்பில், அவனுடைய கரத்தை இழுக்க முயல, அந்த இரும்புப் பிடியிலிருந்து இம்மியும் அசைய முடியாமல், தவித்தவன், பின் தன் கரத்தைக் காற்றில் அசைத்து, தவித்துத் தடுமாறி, கண்கள் பிதுங்கக் கண்ணீர் பொங்க, என்னவோ சொல்ல வர, சற்று நேரம், சினத்துடன் அவளுடைய தவிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடிந்திருக்கவில்லை.

 

வேகமாகத் தன் கரத்தை விலக்கியவனின் முகம் வலியில் கசங்கிப்போனது.

 

என்ன காரியம் செய்ய விளைந்தான்? அவளுடைய கழுத்திலா கரத்தை வைத்தான்… “டாமிட்…” என்று கத்தியவன், தன் மீதே ஆத்திரம் தோன்ற அவள் கரத்தில் பதிந்த தன் கரத்தை வெறுப்புடன் தூக்கிப் பார்த்தான்.

 

அதே நேரம், அவனுடைய கரம் விலகியதுதான், தாமதம், வேகமாக மூச்செடுக்க முயன்றவள், முடியாமல் இரும, இருமியவாறே கலங்கிய கண்களுடன் தீரனைப் பார்த்து, வலியுடன்,

 

“வலிக்கிறது தீரன்…” என்றாள் முகம் கசங்க.

 

அவனுக்கு  அவள் நிலையைக் கண்டதும், பெரும் வலி எழுந்தது. அவளுடைய வலியைத் தன் வலியாக உணர்ந்தவனுக்கு மெல்லிய நீர் படலம் கூடக் கண்களில் தோன்றியது. சிவந்த அவள் முகமும், கன்னங்களில் வழிந்த கண்ணீரும், துடித்த உதடுகளும்… தன் மீதே வெறுப்புத் தோன்ற, மீண்டும் தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான்.

 

யார் மீது கையை வைத்தான். கொஞ்சம் அதிகம் அழுத்தியிருந்தாலும், அவனுடைய பலத்திற்கு அவளுடைய குரல்வளை உடைந்திருக்குமே? உடைந்திருந்தால்…?’ நினைத்தபோதே உடல் அதிர்ந்தது.

 

“ஆ….ஹ்….” என்று தன்னை மறந்து கத்தியவன், தன் இடக்கரத்தை சுவரில் ஓங்கி அடிக்கத் தொடங்கினான்.

 

“நோ… நோ… நோ…” என்று சினமும், வலியும், ஆக்ரோஷமும் தவிப்பும் போட்டிபோடத் தன் கரத்தை ஓங்கி ஓங்கி அடிக்கத் தொடங்கினான். என்னதான் அவன் ஓங்கி தன் உடல் பொருள் ஆவி முழுவதும் வலிப்பது போல அடித்தாலும், அவன் கரத்தில் மெல்லிய காயம் கூடத் தோன்றவில்லை. பதிலுக்கு, அவன் அடித்த வேகத்தில், குளியலறையிலிருந்த டைல்ஸ் பிளந்து, டிரை வால் உடைந்து உள்ளுக்குள் போனதுதான் மிச்சம்.

 

அநபாயதீரனின் குண நலன் அப்படி. ஆத்திரம் வந்தால் தீர்த்துக்கொள்வான். தன் மீதே ரௌத்திரம் வந்தால், தன்னையே தண்டிப்பான்… எது எப்படியாக இருந்தாலும், அவனுடைய கோபத்திற்கு வடிகால் வேண்டும். அந்த நேரம் அவனைத் தடுப்பது என்பது இயலாத காரியம்.

 

அதுவும், இது அவனுக்குப் புதிது. தான் ஏமாற்றுப் பட்டு விட்டோம் என்கிற கோபத்தை விட, தன்னவள் பொய்த்துப்போனாள் என்கிற சினமும், அவளைத் தான் தண்டித்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வுமே அங்கே அதிகமாக இருந்தது. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அவனுக்குப் புரியவில்லை.

 

எப்போதும் புத்தியால் எதிரிகளை விழுத்திப் பழக்கப்பட்டவனுக்கு, முதன் முதலாக, உணர்வால் வீழ்த்தப்பட்டான். புத்தியும் மனமும் ஒன்றாக இயங்கிச் செயற்படப் பழக்கப் பட்டவனுக்கு, முதன் முதலாக இரண்டும் இரு வேறு துருவங்களில் நின்றதனால், அதற்கேற்ப எப்படிச் செயற்படுவது என்பது புரியாமல் தடுமாறினான்.

 

தடுமாற்றம்… அவன்  இது வரை அறியாத ஒன்று. இதுவரை அனுபவிக்காத ஒன்று. இது வரை புரிந்திராத ஒரு உணர்வு. அதை எப்படிக் கையாள்வது என்பது கூடத் தெரியாத புதிரான நிலையில் அப்போதிருந்தான்.

 

அதுவரை தன்னை சமப்படுத்துவதில் தடுமாறி நின்றவளுக்கு, வெறி வந்தவன் போல, அவன் தன்னைத் தண்டிக்க முயல்வதைக் கண்டதும், பதறியவாறு அவன் அருகே வந்த சிவார்ப்பணா, சுவரை நோக்கி, ஓங்கி அடித்துக்கொண்டிருந்தவனின் கரத்தைப் பற்றித் தடுத்து,

 

“ப்ளீஸ் தீரன்… உங்களை நிதானப் படுத்திக்கொள்ளுங்கள்… எதுவாக இருந்தாலும்… பேசித் தீர்த்துக்கொள்ளலாம்…” என்ற போது, அவளுடைய விழிகளிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழியத் தொடங்க, அதைக் கண்டவனின் மனம் மீண்டும் கசங்கத் தொடங்கியது.

 

‘இது… இந்தப் பாழாய்ப்பபோண உணர்வு வேண்டாம் என்றுதான் அவன் தள்ளித் தள்ளிப் போகப் பார்த்தான். ஆனால் அவனுடைய விதி… மீண்டும் அந்தச் சாக்கடைக்குள் அவனைத் தள்ளிவிட்டது. இப்போது இந்த உணர்விலிருந்து எப்படி வெளியே வருவது…’

 

அவள் கரத்திலிருந்த தன் கரத்தை வேகமாக விலக்கியவன், தன் வலி மாறாமலே, சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“ஏன்… ஏன்டி என்னிடம் பொய் சொன்னாய்? நான்… நான் என்னை விட உன்னை நம்பினேனே… அதை ஒரு நொடியில் பொய்யாக்கி விட்டாயே… ஏன்டி” என்றவனின் குரல் கூட சற்றுத் தழுதழுத்திருந்தது.

 

இப்போது அதுவரையிருந்த ரௌத்திரம் குறைந்து ஏதோ ஒரு பரிதவிப்பு அவனை ஆட்கொண்டது.

 

எதுவாக இருந்தாலும், அவள் கழுத்தில் கரம் வைத்தது தவறு என்பது புரிந்தது. அதுவும் யார் மீது கைவைத்தான்? அவள் தப்பானவளாகவே இருக்கலாம்… அதற்காக… எந்தத் துரும்பும் அவள் மீது படக்கூடாது என்று நினைப்பவன் அவன்… அவனே அவளை வலிக்கச் செய்யலாமா?

 

அவனுடைய நிலையை உடனே புரிந்துகொண்ட சிவார்பப்ணா, அவனை வேகமாக நெருங்கி மீண்டும் அவன் கன்னத்தில் தன் வலக்கரத்தைப் பதித்து, இறுகிப்போய்க் கடுமையாக இருந்த அவனுடைய உதட்டோரம் பெரும் விரலால் வருடிக்கொடுத்தவாறு,

 

“ஹேய்… இட்ஸ் ஓக்கே தீரன்… ஐ அன்டர் ஸ்டான்ட்… தயவு செய்து உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள்… ஐ ஆம் ஓக்கே… சீ…” என்றவாறு அவனுடைய இடக்கரத்தை எடுத்துத் தன் கழுத்தில் பதித்து,

 

“ரியலி ஐ ஆம் ஓக்கே…” என்றாள் மெல்லிய குரலில். அவனுடைய கரம் அவளுடைய கழுத்தில் படிந்ததுதான் தாமதம், கண்டத் தொடங்கிய இடத்தில் தன்னையும் மறந்து வருடிக் கொடுத்தவன்,

 

“ஐம்… ஐ… ஐ ஆம்…” என்று அவன் முடிக்கவில்லை, அவன் உதட்டில் தன் கரத்தைப் பதித்து, அவனுடைய பேச்சைத் தடுத்துத் தன் தலையை அங்கும் இங்கும் ஆட்டியவள்,

 

“டோன்ட் நீட் டு… தீரன்… காரணம் இன்றி நீங்கள் எதையும் செய்யமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்… தயவு செய்து… உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள்…” என்று அவள் மென்மையாகக் கூற, மெதுவாக அவள் கழுத்திலிருந்த தன் கரத்தை விலக்கி, இரண்டடி தள்ளி நின்றவன்,

 

“ஏன்… ஏன் என்னிடம் பொய் சொன்னாய்?” என்றான் மிண்டும்.

 

“பொ…பொய்யா… என்ன… பொய் தீரன்… சத்தியமாக… நான் எந்தப் பொய்யும் சொல்லவில்லை…” என்று அவனை நெருங்கியவாறு கூற முயல, அவள் முன்னால் தன் கரத்தை நீட்டி, அவள் நெருக்கத்தைத் தடுத்தவன்.

 

“கிட்டே வராதே அர்ப்பணா… அங்கேயே நில்…” என்றான் பட் என்று.

 

நிச்சயமாக அவள் அருகே வந்தால், தன்னால் நிதானத்துடன் யோசிக்கமுடியாது என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. தன் புத்தி பேதலித்துவிடும் என்பதும் தெரிந்தது. அருகே அவளுக்குரித்தான சுகந்தத்தை நுகர்ந்தாலே, அவனால் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. அதுவும் அவள் நெருங்கினால், நிச்சயமாகத் தெளிவுடன் சிந்திக்க முடியாது.

 

“என்னை நம்பச் சொல்கிறாயா?” என்றான் அவன் சற்று விரக்தியுடன்.

 

“தீரன்… ஃபோர் எ கோட் சேக்… நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தயவு செய்து தெளிவாகக் கூறுங்கள்… சத்தியமாக எனக்கு ஒன்றும் புரியவில்லை… எனக்குத் தெரிந்து நான் உங்களிடம் எதையும் மறைக்கவில்லை. எந்தப் பொய்யும் சொல்லவில்லை…” சற்றுப் பொறுமையிழந்து அவள் கூற, அடக்க முடியாத கோபத்துடன் சிவார்ப்பணாவை நெருங்கினான் அநபாயதீரன்.

 

எங்கே மிண்டும் தன்னைக் காயப்படுத்திவிடுவானோ என்று அஞ்சியவளாக, வேகமாகப் பின்னால் சென்றவள், கைகழுவும் தொட்டி அவளைத் தடுக்க, உதடுகள் நடுங்கத் தலையைச் சற்றுக் குனிந்து, கை கழுவும் தொட்டியோடு இடை பின்புறம் சரிந்து, சாய்ந்து நிற்க, அவள் அச்சத்தை லட்சியம் செய்யாது, அவள் கூந்தலை ஒதுக்கிப் பின்னங் கழுத்தில், யாருடைய கண்ணுக்கும் அகப்படாத இடத்திலிருந்த அதைச் சுட்டிக்காட்டி

 

“இதற்கு என்ன அர்த்தம்?” என்றான் அவன் கடுமையாக.

 

அப்போதும் சிவார்ப்பணாவிற்குப் புரியவில்லை.

 

தன் தலையைத் திருப்பித் திருப்பிக் கண்ணாடியில் பார்க்க முயன்றும் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. சினம் துளிர்க்க,

 

“உங்களுக்குப் பைத்தியமா தீரன்… என் கழுத்தைப் பார்ப்பதற்கு… என் கண் பிடரியிலா இருக்கிறது? முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்…” என்றாள் இவளும் நிதானத்தைக் காற்றில் பறக்கவிட்டவாறு.

 

உடனே அவளைத் தன்னை நோக்கித் திருப்பிவிட்டவன், பான்ட் பாக்கட்டிலிருந்த கைப்பேசியை வெளியே எடுத்து, வன்மமாகக் கூந்தலை ஒதுக்கித் கழுத்துப் புறத்தைப் படம் பிடித்து, அவள் முன்பாக நீட்டினான்.

 

முதலில் சிவார்ப்பணா அலட்சியமாகத்தான் அதை வாங்கிப் பார்த்தாள். அங்கே தெரிந்ததைக் கண்டதும், அந்த அலட்சியம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கி, பின் அங்கே குழப்பம் தோன்றிப் பின் புரியாமை வந்து, குழம்பி அதிர்ச்சியில் முடிய, நம்ப மாட்டாமல் அவனை ஏறிட்டாள் சிவார்ப்பணா. அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தன்னையும் மறந்து கழுத்தை வருடிக் கொடுத்தவள், மீண்டும் கைப்பேசித் திரையைப் பார்த்தாள். அங்கே.

 

SN5815RPN2207M என்கிற ஆங்கில எழுத்துக்களுடனான சில இலக்கங்கள் அவள் பிடரி முடிகளின் ஆரம்பப் பகுதியில், யாருடைய கண்ணுக்கும் புலப்படாத வகையில், பச்சை நிறத்தில், பொறிக்கப்பட்டிருந்தன. சிவார்ப்பணாவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. புரியாமல் தன்னவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

 

“இ… இது என்ன இலக்கங்கள்? இது எப்படி என் கழுத்தில்… ஓ மை காட்… என்னைச் சுற்றி என்ன நடக்கிறது… இதை என் கழுத்தில் பதித்த நினைவே எனக்கில்லையே…” என்று மீண்டும் நம்பாத பாவனையுடன் அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தாள்.

 

“இது… இது என்ன தீரன்… என் கழுத்தில் இது எப்படி…” என்று இவள் திணற,

 

“ஷட் அப்… இதை… நம்பச் சொல்கிறாயா அர்ப்பணா… உன் கழுத்தில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது… உனக்குத் தெரியாமலா குத்தியிருப்பார்கள்?” என்றான் இவன் கர்ஜனையாக.

 

“கடவுளே… நான் என்ன சொல்லிப் புரியவைப்பேன்… தீரன்… சத்தியமாக எனக்கு இதைப் பற்றி எதுவும்.. எதுவுமே தெரியாது… நம்புங்கள்…” என்று அந்த இலக்கங்கள் இருந்த பின் கழுத்தை வருடிக்கொடுத்தவாறு இவள் கூற,

 

இவனோ அலட்சியமாகத் தன் தோளைக் குலுக்கி நகைத்தான். அவன் நகைப்பில் கதிகலங்கியவள், தன் நெற்றியின் மீது ஒரு கரத்தைப் பதித்து,

 

“ஐயோ… இது என்ன இலக்கங்கள் என்று கூடத் தெரியவில்லையே… இதைப்போய் நான் எப்படி… என் கழுத்தில் பச்சையாகக் குத்தியிருப்பேன்? தீரன்… ப்ளீஸ்… இது என்ன இலக்கங்கள், சொல்லுங்கள்…” என்றாள் இவள் பெரும் தவிப்புடன்.

 

அதற்கு மேல் பொறுமையில்லாதவனாக, சிவார்ப்பணாவின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று, ஒரு இருக்கையில் தள்ளிவிட்டவன், அவள் அமர்ந்ததும்,

 

ஒரு ஓரத்தில் போட்டிருந்த அவனுடைய ஜாக்கட்டைக் கரத்தில் எடுத்து, உள்ளே இருந்த ரகசிய சட்டைப்பையில் மறைத்திருந்த, ரகுவின் கபேர்டிலிருந்து அவளுக்குத் தெரியாமல் எடுத்துவந்த குறிப்பேட்டை எடுத்து அவள் முன்னால் நீட்டினான். அதைக் கண்டதும் அதிர்ந்தாள்.

 

“தீ…ரன்… இது எப்படி உங்கள்… உங்கள்… கைக்குக் கிடைத்தது?” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் காற்றுதான் வந்தது.

 

“ரகுவின் கபேர்டிலிருந்து எடுத்தேன்…” என்று இவன் கூறிக்கொண்டிருக்கும் போதே, கண்ணிமைக்கும் நொடியில், அவன் கரத்திலிருந்த, அந்தக் குறிப்பேட்டைப் பறித்தவள், அந்த மட்டையை மெல்லிய பதற்றத்துடன் வருடிக்கொடுத்தாள். .

 

பின் ஒவ்வொரு தாள்களாகத் திருப்பியவளின் கண்களோ அருவியெனக் கண்ணீரைச் சொரியத் தொடங்கின. பின் அதைத் தன் மார்போடு அழுத்திக் கொடுத்தவள்,

 

“இது… இந்தக் குறிப்பேடு… என் தந்தையுடையது….” என்றாள் கம்மிய குரலில்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

4 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago