Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 8

(8)

அங்கே யசோதா இன்னும் அம்மேதினியைத் திட்டியவாறு எஞ்சிய பால் பாத்திரத்துடன் வீட்டிற்குள் வந்துகொண்டிருக்க,

“என்ன அத்தை… எதற்கு அம்மணி இப்படி ஓடுகிறாள்?” என்றான் தன் வலியை மறந்தவனாக. அதே சிடுசிடுப்புடன் கந்தழிதரனைப் பார்த்து,

“சும்மாவா விட்டீர்கள்? பிடித்து நான்கு சாத்து சாத்திவிட்டு அனுப்பியிருக்க வேண்டும். இங்கே பாருங்கள்… பூமரத்துக்குப் பால் நல்லதாம் என்று அத்தனையையும் ஊற்றிவிட்டாள்… மாலை வரும் விருந்தினர்களுக்குப் பலகாரம் செய்யலாம் என்று நினைத்தேன்… அத்தனையும் வீணாகப் போயிற்று… வரட்டும்… இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்..” என்று சினந்தார்.

“விருந்தினர்களுக்குப் பால் பலகாரம் கொடுத்தால்தான் பத்தியப்படுமா… சும்மா கிடைப்பதைக் கொடுப்பீர்களா… அதை விட்டுவிட்டு எதற்குச் சிரமப்படுகிறீர்கள்…?” என்று அவன் கடிய,

“அப்படிச் சொல்லுடா கந்து… அதைத்தான் நானும் கேட்டேன்… நல்லவர்கள், வல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள் சொன்னால் யார்தான் கேட்கிறார்கள்…?” என்றவாறு, கந்தழிதரன் தனக்குப் பாதுகாப்பு வழங்குவான் என்கிற தைரியத்தில்  அவனுக்குப் பின்னால் நின்று கொண்டாள்.

இன்னும் தெளியாத அன்னையின் முகத்தைக் கண்டு, அவன் வலது காதுக்கு நேராகத் தன் உதடுகள் போகுமளவு எக்கி நின்று,

“சாமி இன்னும் மலை இறங்கவில்லையா? நான் அவசரப்பட்டு வந்துவிட்டேனோ…” என்றாள் குசுகுசுப்பாய்.

நீண்ட காலத்துக்குப் பிறகான உரிமையில் அந்த நெருக்கத்தில் நெகிழ்ந்து போனான் கந்தழிதரன். கூடவே அவளுடைய திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாமல்,

“என்ன… திடீர் என்று புலி பதுங்குகிறது…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கேட்க, மெல்லியதாக அசடு வழிந்தவள்,

“வெளியே போகும் போது, நேற்று வரை கோணல் வாய் கோகிலா போல நெளிந்திருந்த என்னுடைய துவிச்சக்கர வண்டி திருத்தப்பட்டுப் புதிதாக வந்திருக்கிறதே… எப்படி… நீதானே திருத்திக்கொண்டு வந்தாய்?” என்று மகிழ்வுடன் கேட்க, தன் தோள்களைக் குலுக்கி,

“ஆமாம்… என்னால்தானே உன்னுடைய வண்டி உடைந்து போனது… அதுதான்… இன்று அதிகாலையே அதைத் திருத்துவதற்காக எடுத்துச் சென்றேன்… இப்போது மகிழ்ச்சியா?” என்று கேட்க, இவளுக்கோ உள்ளம் நிறைந்து போனது.

சற்று முன் அன்னையிடமிருந்து தப்ப வேண்டி வெளியே ஓடியவள், அங்கே அவளுடைய மிதிவண்டி திருத்தப்பட்டுப் புத்தம் புதிதாக நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டு, திகைத்துப் போனாள்.

ஓடிச்சென்று அதை வருடிக் கொடுத்தவளுக்குக் கந்தழிதரன்தான் அதைத் திருத்தி எடுத்து வந்திருக்கிறான் என்பதும், அவளுடைய வண்டியைத் திருத்தத்தான் அன்று அதிகாலையே சென்றிருக்கிறான் என்பதும் புரிய நெஞ்சம் நிறைந்து போனது.

அவளுக்காக யோசித்துச் செய்திருக்கிறானே, இதுதான் அவளுடைய கந்தழிதரன். அவளுக்காக, அவளுடைய தேவைகளைக் கேட்காமலே செய்துவிடுவதில் அன்னையையும் ஒரு படி மிஞ்சிவிடுவான்.

அவனிடம் நன்றி கூறவேண்டி, அவனைத் தேடி மீண்டும் வீட்டிற்குள் நுழைய இன்னும் அன்னை அதே நிலையிலிருப்பது தெரிந்தது.

அதே நேரம் தான் ஒருத்தி இங்கே கத்திக்கொண்டிருக்க, தமக்குள் பேசிக்கொண்ட இளையவர்களைப் பார்த்துக் கோபம் கொண்ட யசோதாவோ,

“இங்கே நான் ஒருத்தி கத்திக் கொண்டிருக்கிறேன்… அங்கே அவன் பின்னால் மறைந்து நின்று என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது…” என்று எகிறியவாறு விட்டதை முடிக்கும் எண்ணத்தோடு, அம்மேதினியை நோக்கி வரத் தொடங்க, தன் உருவத்தால் அவளை முழுவதுமாக மறைத்தவன்,

“இட்ஸ் ஓக்கே அத்தை… அவள் தெரியாமல் செய்துவிட்டாள்… இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள்…” என்று அவன் முடிக்கவில்லை,

“அப்படிச் சொல்லுடா கந்து… பால்தானே கொட்டினேன்…” என்று வெள்ளைக்கொடி காட்ட முயல, அதற்கும் முறைத்தார் அன்னை.

“ஏய்… எத்தனை முறை சொல்லிவிட்டேன், இவனை ஒருமையில், அதுவும் ‘டா’ போட்டுப் பேசாதேயென்று… என் முன்னாலேயே அவனை வாடா போடா என்கிறாயா…? பற்களைப் பெயர்த்து விடுவேன் ஜாக்கிரதை… மரியாதை கொடுத்துப் பேசு… அத்தான் என்று சொல்…” என்று பால் பிரச்சனை மறந்து சீற, தன் பாதுகாப்பு வளையத்தை விட்டுச் சற்று வெளியேறி கந்தழிதரனை மேலும் கீழும் பார்த்து,

“அத்தானா…?” என்றாள் வியந்தவள் போல.

இவனோ ரசனை மாறாமல் மெல்லிய புன்னகையுடன் இவளையே பார்த்துக்கொண்டிருக்க, இவளோ,

“அத்தான்…” என்றாள் தேன் ஒழுக. பின் வெக்கையால் அவிழ்த்து விட்டிருந்த அவன் மேல்சட்டையின் பொத்தான்களைப் பார்த்து,

“முதலில் போடு பொத்தான்… எவன் உன்னைப் பெத்தான்… அவன் இன்றோடு செத்தான்…” என்று கிண்டலாகக் கூற, அதைக் கேட்ட யசோதாவிற்குச் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. ஆனாலும் அதை அடக்கியவராக,

“உன்னை…! இரு… இப்போது வருகிறேன்… எங்கே அந்தத் தடி…” என்று சற்றுமுன் எறிந்த தடியைத் தேட, அந்தக் குறும்புக்காரியோ சற்றுத் தள்ளியிருந்த எலியடிக்கும் மெல்லிய பொல்லை எடுத்து, அன்னையிடம் நீட்டியவாறு,

“இந்தா தடி… இதை நீ பிடி… வேண்டுமானால் அடி… இல்லையேல் கடி… பின்னர் விழுவேன் உன் மடி…” என்று அழுவது போலக் கூற, அதற்கு மேல் முடியாமல் பக்கென்று சிரித்துவிட்டார் யசோதா.

“வால்… இது தடி இல்லை… பொல்லு…” என்று திருத்த,

“அம்மாமில்ல… சரி…சரி… இந்தா பிடி பொல்லு, இதனால் என்னைக் கொல்லு… அதற்க்கு முதல் கொஞ்சம் நில்லு… இந்தப் புலி தின்னாது புல்லு…” என்றதும், தன் தலையில் அடித்த யசோதா,

“கடவுளே, உன்னையெல்லாம் எவன் கட்டி அவஸ்தைப் படப் போகிறானோ…” என்றார் சலிப்புடன். அதைக் கேட்டதும் ஏனோ, அம்மேதினியின் பார்வை அவளையும் மீறி கந்தழிதரனிடம் சென்றது. அவனோ, புன்னகை விரிய,

“இப்போதே அவனை நினைத்தால் பக்கென்று ஆகிறது அத்தை…” என்று கூறியபோது இவளுடைய முகம் சுண்டிப்போயிற்று. எனக்கு வரப்போகும் கணவன் பற்றி அம்மா பேசுகிறார்கள், கொஞ்சமாவது சலனப்படுகிறதா இந்தப் பக்கி…’ என்று மனதிற்குள் எரியும்போதே,

“எவனாக இருந்தாலும் பாவம் தப்பிப் பிழைக்கட்டும் அத்தை…” என்றான் கிண்டலுடன். அதைக் கேட்டதும், இவனைத் தீப்பார்வை பார்க்க, பலமாக நகைத்தவாறு அவளுடைய உச்சந்தலையில் தன் உள்ளங்கையை வைத்து, அவள் புறமாகக் குனிந்து,

“உலகத்திலேயே மிக மிகச் சிறந்த கணவன் உனக்கு வரவேண்டுமடி… அதற்காகவேனும் கடவுளை எப்போதும் வணங்குவேன்” என்றவன் திரும்பி யசோதாவைப் பார்த்து,

“அத்தை ஒரு டீ…” என்றவாறு திரும்பியவன், தன்னை மறந்து, “ஷ்…” என்றவாறு முன்னால் சரிந்தான். அதைக் கண்டு யசோதா மட்டுமல்ல, அம்மேதினியும் பதறிப்போனாள்.

“கந்தழி… என்னப்பா ஆயிற்று…” என்றவாறு அவனை நெருங்க, இவனோ,

“ஒன்றுமில்லை அத்தை… புல்டோசர் என் மீது மோதி விட்டது…” என்றான் பற்களைக் கடித்தவாறு.

“புல்டோசரா…?” என்று இரு பெண்களும் நம்பாமல் அவனைப் பார்க்க யசோதாவோ,

“யாழ்ப்பாணத்தில் புல்டோசரா…? இங்கே புல்டோசர் வர வாய்ப்பில்லையே… என்ன சொல்கிறீர்கள் தம்பி?” என்று குழம்ப, அம்மேதினியோ, அவனுடைய பார்வைத் தன்னை அடிக்கடித் தீண்டித் தீண்டிச் செல்வதைக் கண்டு, புல்டோசர் என்று தன்னைத்தான் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். சற்று பூசிய தேகத்தைத்தான் இப்படிச் சொல்கிறான் என்பது தெரிய சுறு சுறு என்று ஏறியது.

“புல்டோசர் உங்களைக் கற்பாறை என்று நினைத்திருக்கும்…” என்றாள் பதிலுக்கு.

“அது சரி… புல்டோசருக்கு எப்படித் தெரியும் இது கற்பாறையா, இல்லை வெறும் கற்களா என்று… அதுதான் அஃகிரினை ஆச்சே…” என்று பதிலுக்கு இவளுடைய காலை வார, இவளோ ஆத்திரத்துடன் இவனைப் பார்த்து,

“புல்டோசர் முட்டிக் காயப்படும் உடலா இது… அம்மாடி… உங்களை முட்டியது… புல்டோசர் இல்லை… பெரிய எருமை” என்று சீற, இவனோ அந்த வலியிலும் சிரித்தவாறே,

“சீ சீ… புல்டோசரைப் போய் எருமை என்கிறாயே அம்மணி… அது கவலைப்படாது?” எனக் கிண்டலாகக் கேட்க, பேச்சுவாக்கில் தன்னையே தான் எருமையென்றது அப்போதுதான் அவளுக்கே புரிந்தது.

பொங்கி எழுந்த ஆத்திரத்தை அடக்க முயன்று தோற்றவளாக, விரல்களை முஷ்டியாக்கி தீப்பொறி தெரிக்கும் அளவுக்கு அவனைப் பார்க்க, இளகினானா அந்தக் கிராதகன். நல்ல வேளை யசோதா இடையில் வந்தார். இல்லையென்றால் அவனுடைய தலைமுடி அம்மேதினியின் கரங்களில் சிக்கியிருக்கும்.

“ஏன்டி… தம்பியே வலியில் சிரமப்படுகிறார்… இப்போது போய் மல்லுக்கட்டுகிறாயே…” என்று கடிந்துவிட்டுக் கந்தழிதரனின் கரத்தைப் பற்றி,

“முதலில் உட்கார் கந்தழி… என்ன பிரச்சனை என்று பார்ப்போம்…” என்றுவிட்டு அவனைப் படியில் அமர்த்த,

“அத்தை… அது ஒன்றுமில்லை… சின்னதாகச் சுளுக்கிவிட்டது… சரியாகிவிடும்…” என்று முனங்க, அதுவரையிருந்த கோபம் பறந்து போகத் தவிப்புடன் கந்தழிதரனைப் பார்த்தாள் அம்மேதினி.

“அது என்ன… சின்னச் சுளுக்கு, பெரிய சுளுக்கு… சுளுக்கில் கூட வகை இருக்கிறதா என்ன?” என்று கிண்டலுடன் கேட்டாலும் ஏனோ கந்தழிதரன் அவஸ்தைப் படுவதை இவளால் பார்க்க முடியவில்லை.

யசோதாவோ, கந்தழிதரனின் பக்கம் திரும்பி,

“முதலில் என்னவென்று பார்க்கலாம் தம்பி…” என்றதும் மறுப்பாகத் தலையை அசைத்தவன்,

“போய் வேலையைப் பாருங்கள் அத்தை… பவானி அத்தை வேறு வருகிறார்கள்… அவர்கள் வந்து போகட்டும்… அதற்குப் பிறகு இதைப் பார்க்கலாம்…” என்று கூற,

“அதுவரை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? அம்மேதினியைக் கேட்டால் ஐந்து நிமிடத்தில் சுளுக்கை எடுத்துவிடுவாள் தம்பி…” என்று அக்கறையாகக் கூற, இவனோ, பயந்தவன் போல,

“அம்மணியா… ஆளை விடுங்கள்…” என்று ஓட முயல்வது போலப் பாசாங்கு செய்ய, அதற்கு வலி இடம் கொடுத்தால் அல்லவோ, மேலும் முனங்க,

“ம்கூம் இந்த வலியோடு நீங்கள் சமாளிக்க மாட்டீர்கள்… இருங்கள் வருகிறேன்…” என்றவர் உள்ளே செல்ல, கந்தழிதரனோ சற்றுச் சிரமப்பட்டுச் சுவரோடு சாய்ந்தமர்ந்தவாறு,

“என்னடி தின்று தொலைத்தாய்… இந்தக் கனம் கனக்கிறாய்…” என்று வலியுடன் கேட்க, இவளோ,

“ம்… உங்கள் இடுப்பை உடைக்கும் அளவுக்குச் சத்தான சாப்பாடுதான் சாப்பிட்டேன்…” என்றாள் சுள்ளென்று.

“எல்லாமே உன்னிடம் அதிகமாகத்தான்டி இருக்கிறது… வாய்… அதற்கேற்ற மேனி… உன்னைக் கட்டப்போகிறவனுடைய நிலையை நினைத்தால்தான் எனக்கு அழுகையே வருகிறது” என்று கூற,

“டேய்… தகரடப்பாத் தலையா… இன்றோடு நீ செத்தாய்…” என்று சீறியவாறு அவனை நோக்கி வரத் தொடங்க, நல்லவேளை யசோதா கையில் எண்ணெய்க் கிண்ணத்தோடு வந்து சேர்ந்தார்.

வலியுடன் அமர்ந்திருந்த தன் மருமகனைக் கண்டு மனம் வருந்தியவராக,

“கந்தழி… சட்டையைக் கழற்று…” என்றுவிட்டு எண்ணெய்யைத் தரையில் வைத்து விட்டு அவனுக்கு அருகாமையில் அமர, கந்தழிதரன் டீ ஷேர்ட்டைக் கழற்ற சிரமப்படுவதைக் கண்டு யசோதாவே அவனுடைய சட்டையைக் கழற்ற உதவி செய்துவிட்டு,

“கந்தழி குப்புறப் படு. இந்தச் சுளுக்குக்கு, எண்ணெய் தடவி, காலால் பிறந்தவர்களைக் கொண்டு அழுத்திவிட்டால் வலி பறந்து போகும்…” என்றவர், நிமிர்ந்து அம்மேதினியைப் பார்த்து,

“வா… மேதினி… தம்பிக்கு சுழுக்கு வந்த இடத்தைக் காலால் அழுத்திக் கொடு…” என்றதும் மறுக்காமல் வந்தாள் அம்மேதினி.

கந்தழிதரன் யசோதாவின் கட்டளைக்கு இணங்கத் தன் டீ ஷேர்ட்டை அணைத்துப் பிடித்தவாறு குப்புறப் படுத்துக் கரங்களுக்குள் முகத்தைப் புதைக்க, அம்மேதினி கந்தழிதரனை நெருங்கினாள்.

பொதுவாகக் குழந்தைகள் பிறக்கும்போது தலைதான் முதலில் வெளி வரும். சில வேளைகளில் கால்கள் முதலில் வெளிவருவதும் உண்டு. அத்தகைய பிரசவங்கள் சிக்கலானதாக இருந்தாலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் மருத்துவக் குணம் கொண்டவர்கள் என்பதும் அவர்களின் பாதம் பட்டால் எந்தச் சுளுக்காக இருந்தாலும் அது சரியாகிவிடும் என்பதும் ஒரு ஐதீகம். அதனால் யாருக்கு சுளுக்கு என்றாலும் இவளை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

இப்போதும் யசோதா எண்ணெய்யை அவளிடம் நீட்ட, வாங்கியவள், உள்ளங்கைகளில் ஊற்றி, அதை அவனுடைய இடையில் தப்பி, மெதுவாகத் தன் தளிர் கரம் கொண்டு நீவிவிடக் குப்புறப் படுத்திருந்தவனுக்கு ஏதோ சொர்க்கத்தில் நுழைந்த உணர்வு.

அவள் கரம் பட்டதும் அவனையும் மீறி உடலில் ஒருவித மின்சாரத்தின் வேகம் விழிகளை மூடி மலர்க் கரம் அழுத்திய இதத்தினை இரசித்துக்கொண்டிருக்க, எண்ணெய் பாத்திரத்தை அன்னையிடம் நீட்டிவிட்டு எழுந்தவள், தன் பாதத்தை அங்கிருந்த சாக்கில் துடைத்துவிட்டுக் கந்தழிதரனின் முதுகின் மீது ஏறி நின்றாள்.

இவனுக்கோ எங்கே முதுகை அசைத்தாலும் இவள் விழுந்துவிடுவாளோ என்கிற அச்சம் வேறு. அதனால் அசையாது அப்படியே படுத்துக்கொள்ள, இவள் அருகேயிருந்த சுவரைப் பற்றியவாறு, மெதுவாக அவனுடைய பரந்த முதுகில் நடக்கத் தொடங்கினாள்.

அப்போதுதான் அவளுடைய கனம் அவனுக்கு உறைத்தது. இவள் மோதியா இடையைச் சுளுக்கிக் கொண்டோம்? அவனால் நம்பவே முடியவில்லை.

அவளோ பாதங்களை அவனுடைய முதுகில் அழுத்தியவாறு நடந்தவள், ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், கால் பெருவிரலால் அவ்விடத்தை அழுத்திக் கொடுத்துவிட்டுப் பின் குதிக்காலால் அந்த இடத்தை அழுந்தி ஒரு தேய் தேய்க்க, ‘க்ரிக்’ என்கிற சத்தம் கேட்டது. மறுகணம் ”அம்மா…” என்று அலறிவிட்டான் கந்தழிதரன்.

அப்படியிருந்தும் இறங்கினாளில்லை அம்மேதினி. மீண்டும் அவன் முதுகில் நின்றவாறு பெருவிரல் கொண்டு அவனுடைய அடி முள்ளந்தண்டிலிருந்து மேல் முதுகுவரை இழுத்துக்கொண்டு வந்தவள் குறிப்பிட்ட இடத்தில் முன்னதைப் போலவே பெருவிரலால் அழுத்திக் கொடுத்து குதிக்காலை வைத்து ஒரு அழுத்து அழுத்த, “டிக்…” என்கிற சத்தம் கேட்டது. முன்னைப்போல வலியில்லை ஆயினும் முனங்கத்தான் செய்தான்.

இப்போது திருப்தியுடன், அவனை விட்டு இறங்க முயல, அவளுடைய போதாத காலம் அவன் சற்று அசைய, அப்போது எண்ணெய் பூசிய அவன் முதுகு அவளுடைய கால்களை வழுக்கி விட, சமநிலை தவறியவள், விழப்போகிறோம் என்பது தெரிந்ததும் தன்னைச் சமப்படுத்த முயல்வதற்குள் தொப்பென்று அவன் முதுகின்மீது குப்பிற விழுந்தாள். சும்மாவே வலியில் கிடந்தவனுக்கு அவள் விழுந்த வேகத்தில் எதோ பூகம்பமே தன்மீது விழுந்தது போலத் தோன்ற

“அம்மா” என்று மீண்டும் அலறிவிட்டான். யசோதா கூட அதிர்ந்துதான் போனார். சும்மாவே சுளுக்கு என்று துடித்துக்கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இவள் வேறு விழுந்துவைத்துவிட்டாளே. பதறியவராக அம்மேதினியைத் தூக்க வர. அவளோ அவன் முதுகின்மீது உள்ளங்கரங்களைப் பதித்து எழ முயன்றாள்.

அந்தோ பரிதாபம். கரங்கள் வழுக்க, இப்போது அவன் மீது முழுவதுமாகச் சரிந்தாள் அந்த மலர்மாலை.

அவன் முதுகின் மீது முன்னுடல் முழுவதும் படரக் கிடந்தவளுக்கு அடுத்து உலகமே மறந்து போயிற்று. அவளுடைய உயிர் சுவாசம் அவனுடைய கழுத்துக் கூடாகப் பாய்ந்து செல்ல, அதற்கான காரணம் புரியாமலே கந்தழிதரனுடைய மயிர்க்கால்கள் எம்பி நின்றன. அவள் விழுந்ததால் ஏற்பட்ட வலி சுத்தமாய் மறந்து போனது. கூடவே அந்தப் பெண்மையின் மென்மையைத் தன்னையும் மீறியும் ஒரு விதப் போதையுடன் உணர்ந்து கொள்ள, மனமோ அதிர்ந்து போனது. அதை உணர்ந்து உடலோ நடுங்கியது. அந்த ஒவ்வாத, புதிய சூழலிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அவன் திணறிக் கொண்டிருக்க அந்த மலர் மகளோ அந்தத் திண்ணிய வலிமை பொருந்திய உடலின் ஆண்மையைத் தன் மென்மை பொருந்திய பெண்மையால் உள்வாங்கி அது கொடுத்த போதையில் தன்நிலை கெட்டிருந்தாள். அவனுடைய தேகத்தின் சூடு கொடுத்த தாக்கத்தால் உள்ளே மாபெரும் இரசாயன மாற்றம். ஈரத்தை உருஞ்சி இழுக்கும் பஞ்சாய், அவன் சூட்டை மொத்தமாய் உள்ளிழுக்க முயன்று கொண்டிருந்தது அந்தப் பெண்மையின் ஏக்கம்.

‘இதுதான் ஆண்மையா…? அவளை இப்படிக் குழைந்து உருகி வழியச் செய்கிறதே… அவனுக்குள்ளேயே புதையச் சொல்கிறதே… வெறும் முதுகுதான்… ஆனால் அவளுக்கான அரணாகத் தோன்றிப் பெரும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறதே.’ ஏனோ அந்தக் கணம், காலாகாலமும் அந்த முதுகில் படுத்து உறங்கிவிடவேண்டும் என்கிற ஏக்கம் தோன்றத் தன்னையும் மீறி விழிகளை மூடினாள் அம்மாது.

அகன்ற தேக்காய் அவன்… அதில் படர்ந்த கொடியாய் இவள்… மரத்தில் படரும் கொடி எப்போதுதான் தானாக மரம் விட்டு விலகியிருக்கிறது? இப்போது அம்மேதினியும் அந்த நிலையில்தான் இருந்தாள்.

எழ முடியாது அப்படியே கிடந்த மகளை நெருங்கிய யசோதா, சடார் என்று அவள் முதுகில் ஒன்று வைக்க, விழிகளை மூடிக் கிடந்தவள் அப்போதுதான் சுயம் பெற்றவளாகத் திடுக்கிட்டு விழித்தாள் அவள் மட்டுமல்ல, அவனும்தான் விழித்துக்கொண்டான்.

“அடிப் பாதகி! ஏற்கெனவே வலியில் இருப்பவன் மீது இப்படி விழுந்து வைத்து விட்டாயே…” என்று பதறித் துடித்துப் பதைத்து எழுந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது நிதானத்திற்கு வர. ஆனாலும் தாய் தன்னைத் திட்டுவது புரியக் கோபத்துடன் அவரைப் பார்த்தவள்,

“அம்மா… சும்மா சும்மா எதற்கு என்னைத் திட்டுகிறீர்கள்… நான் வேண்டும் என்றா விழுந்தேன்… இதோ… இந்தத் தடிமாடு அசைந்தானா… வழுக்கி விட்டது… அதற்கு அவனைத் திட்டுவதை விட்டுவிட்டு என்னை அடிக்கிறாயே…” என்று வலித்த முதுகை நெளித்தவாறு குறைபட, அதுவரை குப்புறக் கிடந்தவன், முழுதாகச் சுயம் பெற்றவனாகத் தலையை மட்டும் திருப்பி அம்மேதினியைப் பார்த்தான்.

“என்னது நான் அசைந்ததால் விழுந்தாயா? ஏன்டி ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு பெண் முதுகின் மீது ஏறி நின்ற மாதிரியா இருந்தது. பெரிய காண்டாமிருகமே என் மீது ஏறியது போல அல்லவா தோன்றியது. இந்த லட்சணத்தில், என் மீது விழுகிறாயே… கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா உனக்கு…?” என்று மிகுந்த வலியில் அவஸ்தை படுவது போல அவன் சிரமப்பட்டவாறு கூற, இவளுக்கோ இரத்த நாளங்கள் விரியத் தொடங்கின.

தன்னை அன்னையிடம் மாட்டிவைக்கத்தான் இப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவளாக,

“ஹலோ… இந்த ஆஸ்கார் விருதுக்கு நடிக்கும் வேலையெல்லாம் இங்கே வேண்டாம்… சுளுக்கெல்லாம் எடுத்தாகிவிட்டது… ஏதோ எண்ணெய் வழுக்கிவிட்டது… விழுந்துவிட்டேன்… நான் பலமாக ஒன்றும் விழவில்லை… சும்மா லைட்டா… மென்மையாகத்தான் விழுந்தேன்… அதற்கு இத்தனை பெரிய அக்கப்போரா… இன்னும் பலமாக விழுந்து அடுத்த நாரியையும் உடைத்திருக்கவேண்டும்… தவற விட்டுவிட்டேன்…” என்று சினக்க,

அவனோ திரும்பப் பயந்து குப்புறக் கிடந்தவாறே தன் அதிர்ச்சியைக் காட்டியவன்,

“என்னது… மென்மையாகத்தான் விழுந்தாயா… ஏய்… இந்த உலகத்திற்கே இது அடுக்குமா… நான் கூடப் பூகம்பம் வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன் தெரியுமா?” என்று புலம்பியவனுக்குத் திரும்பவே அச்சமாக இருந்தது.

‘உண்மையாகவே சுளுக்கை எடுத்தாளா, இல்லை இனி ஒரு போதும் எழாத மாதிரி இருப்பதையும் உடைத்து வைத்தாளா? என்கிற கிலி வேறு தோன்றியது.’ அவள் விழுந்தபோது வலித்த வலி அவனுக்கு மட்டும்தானே தெரியும்.

சந்தேகத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தவனுக்குப் பழைய வலியைக் காணவில்லை. நம்ப மாட்டாதவனாக உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றி முதுகை மட்டும் வளைத்துத் திருப்பிப் பார்த்தான். வலி இல்லவே இல்லை. இப்போதும் நம்ப மாட்டாமல், எழுந்தமர்ந்தவன் உடலை அப்படி இப்படித் திருப்பிப் பார்த்தான். வலி சுத்தமாக இல்லை. ஆனால் மெல்லிய இறுக்கம் மட்டும் இருந்தது.

இப்போதுதான் ஊர் மக்கள் சுளுக்கென்றதும், அவளை ஏன் அழைத்துச் செல்கிறார்கள் என்பது புரிந்தது.

நிம்மதியுடன் அருகே நின்றிருந்தவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“என்னடி அதிசயமாக இருக்கிறது… நீ விழுந்த பின்னும் என் முதுகு உடையாமல் இருக்கிறது…” என்று ஏழரையை இலவசமாக அழைக்க, மறுகணம் தரையிலிருந்து எண்ணெய் குடுவையிலிருந்த எண்ணெய் மொத்தமும் அவனுடைய தலையில் அபிஷேகமானது.

அதிர்ந்து போனார் யசோதா.

“மேதினி…” என்றவாறு கோபத்துடன் அவளை நெருங்க, இவளோ கோபம் மாறாமல் அன்னையைப் பார்த்து,

“இவனுக்குச் சுளுக்கு எடுத்திருக்கக் கூடாது, கொடுத்திருக்க வேண்டும்… செய்த உதவிக்கு நன்றி சொல்கிறானா பார்… கடன்காரா… கடன்காரா…” என்று எகிற,

“நன்றியா? என் முதுகை உடைப்பதற்குச் சதி செய்தது நீ… உனக்கெதற்கு நன்றி சொல்லவேண்டும்?” என்று கேட்டவன், யசோதாவை ஏறிட்டு,

“பவானி அத்தை வருவதற்குள் நான் குளியல் ஒன்றை போட்டுவிட்டுத் தூங்க போகிறேன் அத்தை…” என்றுவிட்டுத் தன் கரத்திலிருந்த டீ ஷேர்ட்டை அம்மேதினியின் மீது வீசி அடித்துவிட்டு,

“ஒரே எண்ணெய்யாக இருக்கிறது… துவைத்து வை…” என்றுவிட்டு அவளுடைய முறைப்பைப் பதிலுக்கு வாங்கிக்கொண்டு கிணற்றடிக்குப் போகத் தன் மகளை நெருங்கிய யசோதா ஓங்கி அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்து,

“உனக்கு வாய் அதிகரித்துவிட்டது… அடக்கப் பழகு… போகிற இடத்தில் சந்தோஷப்படுவாய்…” என்றுவிட்டுத் தான் விட்ட வேலையைச் செய்வதற்காகச் சமையலறைக்குள் நுழைய, இவளோ வலித்த உச்சந்தலையை வருடியவாறு சென்று கொண்டிருந்த அன்னையையே செய்வதறியாது முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

16 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)   மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது…

5 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 12

(12)   இப்படியே இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. கந்தழிதரனின் நண்பர்கள் அவனைத் தேடி வருவதும்,…

7 days ago