வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன்,
“என்னம்மா… சீக்கிரமாக வந்துவிட்டீர்கள்… அப்படியானால் கடற்கரைக்குப் போகலாமா?” என்று ஆவலுடன் கேட்க, தன் மகனை இறுக அணைத்து, விடுவித்த அம்மேதினி. வேகமாக அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு அதன் மீது சாய்ந்து நின்று கொள்ள உடலோ நடுங்கியது. இதயமோ படு வேகமாகத் துடித்தது.
கடவுளே… என்ன காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாள். கண்மண் தெரியாமல் அடித்த அடியில் அவன் உயிர் பிரிந்திருந்தால். அதற்கு மேல் அவளால் எதையும் நினைக்க முடியவில்லை.
‘நிச்சயமாக அவளைச் சும்மா விடமாட்டார்கள். அவள் சிறையிலிருப்பதைப் பற்றி ஒன்றும் வருந்தவில்லை. அவள் வேதனையெல்லாம் மகனைப் பற்றியதுதான். அவளை உள்ளே அடைத்தால் அவனுடைய நிலை என்ன? யாருடைய பொறுப்பில் விடுவாள்? தெய்வமே இது என்ன சோதனை… அஞ்சி நடுங்கிக் கலங்கி நின்றவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை.’
இல்லை. இனி இங்கே இருக்கக் கூடாது… இருக்கவும் முடியாது. எங்காவது போய்விடவேண்டும். போவதென்றால் எங்கே போவது. இராணுவத்தின் பிடியிலிருக்கும் சொந்த ஊருக்கும் போக முடியாது, இந்த நிலையில் எங்கே செல்வது?
பதில் தெரியாத குழப்பத்துடன் எத்தனை நேரமாக அப்படியே நின்றிருந்தாளோ, அவளுடைய அறைக் கதவு தட்டுப்பட இவள் உடல் விறைத்தது. சிரமப்பட்டு எழுந்தவள் சென்று கதவைத் திறக்க, அங்கே முறைத்தவாறு நின்றிருந்தார் வீட்டு எஜமானி தாரகா. அவருக்குப் பின்னால் இரண்டு பெண் காவலர்களோடு, காவலதிகாரியும் ஆத்திரத்துடன் நின்றிருந்தார். அதைக் கண்டதும் இவளுடைய முகம் வெளிறிப்போனது.
இவள் அதிர்ந்து நிற்க, நெருங்கிய காவலதிகாரி,
“சட்டத்திற்குப் புறம்பாகச் சதிவேலையில் ஈடுபட்டதற்காகவும், உன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக உன் முதலாளியைக் காயப்படுத்தியதற்காகவும் உன்னைக் கைதி செய்கிறோம்…” என்று சிங்களத்தில் கூறியவாறு முன்னே வர, விதிர் விதிர்த்துப் போனாள் அம்மேதினி.
“என்ன… என்ன சொல்கிறீர்கள். சட்டத்திற்குப் புறம்பாகச் சதி வேலையில் ஈடுபட்டேனா… என்ன சொல்கிறீர்கள்… சார்… நான் அப்படி எதுவும்…” அவள் முடிக்க முதல் பெண் காவலர், கிடுகிடு என்று உள்ளே சென்றுவிட்டுத் திரும்பியபோது கரத்தில் ஒரு பாலிதீன் பையோடு வந்தார். அதில் இரண்டு வெடிகுண்டுகளிருக்க அதிர்ந்துபோனாள் அம்மேதினி.
“சார்… என்ன இது… சத்தியமாக இது என்னவென்று தெரியாது. எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமில்லை… நம்புங்கள் சார்… இது என்னுடையது இல்லை… நான் எதுவும் செய்யவில்லை… அந்த வரதன்தான் என்னோடு தப்பாக நடக்க முயன்றான் சார்… என்னைக் காப்பாற்றத்தான் நான்…” அவள் முடிக்கவில்லை, தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்த காவலதிகாரி,
“உன்னுடைய பேச்சைக் கேட்க நான் தயாராக இல்லை. மரியாதையாக வண்டியில் ஏறு…” என்று அவள் மறுக்க மறுக்க இழுத்துச் சென்று வண்டியில் ஏற்ற அதிர்ந்து போய் நின்ற தன் மகனிடம்,
“கண்ணா… அம்மா வந்துவிடுவேன்… பத்திரமாக இருந்துகொள்…” என்று துடித்துப் பதைத்த அன்னையை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் மகன்.
அடுத்த அரை மணி நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டாள் அம்மேதினி. மறுநாள், செய்தித்தாளில் தீவிரவாதி என்கிற பெயரில் அவளுடைய படமும், இதுவரை அவள் கண்டே அறியாத ஆயுதங்களின் படங்களையும் போட்டு, அவளுடைய அறையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பிரசுரிக்கப்பட்டது.
அடுத்து அவளுடைய நிலை என்ன? அவள் தமிழச்சியாகப் பிறந்ததற்காகவே சித்திரவதைப் படுத்துவார்களே. அடுத்து அவளை எங்கே அழைத்துச் செல்வார்கள். பூசாவிற்கா.
இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கைதானவர்களைத் தடுத்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட ராணுவ தடுப்பு முகாம் ஆயிற்றே. தடுப்பு முகாம் மட்டுமா. சித்திரவதைக் கூடமுமாயிற்றே. அங்கே கொண்டு சென்றால் அவளுடைய நிலை அவ்வளவுதான். அதன் பின் அவளை இந்த உலகமே மறந்துபோகும். என்ன செய்யப்போகிறாள். எப்படித் தப்பிக்கப் போகிறாள். என்ன கொடுமை இது.
ஆனால் அவள் பயந்ததுபோல உடனே அவளைப் பூசாவிற்கெல்லாம் கொண்டு செல்லவில்லை. கிட்டத்தட்ட ஒரு கிழமை கழிய, அவளைக் காண வந்தான் அந்த வரதன். தலையில் கட்டுடன் வந்தவனின் முகத்தில் அகோர இழிப்பு.
இவளோ வெறுப்புடன் பார்க்க,
“என்னடி பார்க்கிறாய்… வைத்தேன் பார்த்தாயா ஆப்பு… என்னையே அடித்துவிட்டு ஓடுகிறாயா… இனி எப்படி வெளியே வருகிறாய் என்று நானும் பார்க்கிறேன். அடுத்தது என்ன நடக்கும் தெரியுமா? உன்னைப் பூசாவிற்கு அழைத்துச் செல்வார்கள்… அங்கே என்ன என்ன சித்திரவதை நடக்கும் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?” என்று கிண்டலாகக் கேட்க இவளுடைய முகம் வெளிறியது.
பூசாவில் நடக்கும் சித்திரவதை இவள் அறியாததா என்ன. கடவுளே… அந்த வலிகளை எப்படித் தாங்கப் போகிறாள். தெய்வமே… என்னைக் காக்க யார் வரப்போகிறார்கள்..?” அவள் துடித்து மறுக, இப்போது அவளை நெருங்கியவன்,
“வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீ மட்டும் சம்மதித்தாயானால் சுலபமாக இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பலாம். சிம்பிள், எனக்கு வைப்பாட்டியாக வா… உன்னை வெளியே எடுக்கிறேன். இல்லை… உன் வாழ்க்கை முழுவதற்கும் இங்கேதான்… இங்கே என்றால் நான் சொல்வது பூசாவை.” என்று கிண்டலுடன் கூற ஒரு கணம் நடுங்கிப்போனாள் அம்மேதினி.
ஆனாலும் கந்தழிதரனுக்காகப் படைத்த உடலை ஒரு கயவன் தொடுவதா? நினைக்கும்போதே அருவெறுக்க, நிமிர்ந்து தன் முன்னால் நின்றவனை வெறித்துப் பார்த்தாள் அம்மேதினி. மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவள்,
“உன்னுடைய அசிங்கம் பிடித்த கரத்தால் என்னைத் தொடுவதைக் கற்பனையில் நினைக்கும் போதே, பூசாவில் நான் படப்போகும் சித்திரவதை, மயிலிறகால் வருடிய சொர்க்கமாகத் தோன்றுகிறது… வரதன். அதனால் என்னுடைய தேர்வு பூசாதான்…” என்று அவள் ஏளனமாகக் கூற, இவன் முகம் கறுத்துப்போனது. ஆத்திரத்துடன் அவளை முறைக்க, இவளோ,
“என்ன முறைக்கிறாய்? நீ மிரட்டியதும் மிரண்டுவிடுவேன் என்று நினைத்தாயா? எத்தனை போராட்டங்கள், எத்தனை யுத்தகளங்கள் அனைத்தையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவள் நான். இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவேன் என்று நினைத்தாயா? முட்டாள்… உண்மையான தமிழ்த்தாயின் முலைப்பால் குடித்து வளர்ந்தவள் நான். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவேன் என்று நினைத்தாயா… இடத்தைக் காலி செய்… காற்றாவது வரட்டும்…” என்று அலட்சியமாகக் கூற, ஆத்திரத்துடன் அவளை அடிப்பதுபோல நெருங்கினான் வரதன். அவளோ சற்றும் ஆடாது அசையாது வரதனை வெறித்துப் பார்க்க, இப்போது வரதனின் முகத்தில் நரிச்சிரிப்பொன்று பிறந்தது. நிதானமாக அம்மேதினியைப் பார்த்தவன்,
“உனக்கொரு மகன் இருக்கிறான் அல்லவா… அவன் கூட…” என்று முடிக்கவில்லை,
“ஏய்… என் மகனைப் பற்றிப் பேசும் தகுதி உனக்குக் கிடையாது…” என்றாள் இவள் சீற்றத்துடன். அவனோ இவளை ஏளனத்துடன் பார்த்துவிட்டு,
“என்னையா அடித்தாய்… xxxx xxx xxx … இதற்கு நீ பதில் சொல்லவேண்டாம்…” என்றுவிட்டு வெளியேற ஆடிப்போய் நின்றாள் அம்மேதினி.
மூன்று நாட்களுக்கு முன், கனடாவில்
அந்தப் பிரமாண்டமான நிறுவனத்தின் பன்னிரண்டாவது மாடி, முக்கிய அலுவலக அறையில் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்த நவீன மேசையின் பின்னாலிருந்த சுழல் இருக்கையில் தலையைப் பின்னால் சரித்தவாறு வழிகளை மூடி அமர்ந்திருந்தான் அவன்.
அவனுடைய கவனத்தைக் கலைப்பது போல அறைக் கதவு தட்டப்பட, சலிப்புடன் விழிகளைத் திறந்தவன்,
“கம் இன்…” என்றவாறு எழுந்தமர்ந்து சற்று நலுங்கியிருந்த ஆடையை இழுத்துவிட்டு சற்றுச் சாய்வாக அமர்ந்துகொள்ள உள்ளே நுழைந்தான் அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான உதவியாளன் விஜய்.
“குட்மார்னிங் சார்… இன்னும் ஐந்து நிமிடங்களில் கூட்டம் ஆரம்பித்துவிடும்…” என்று கூற,
“யா… இதோ வந்துவிடுகிறேன்…” என்றவன் எழுந்து வாசல் நோக்கி நடக்க, அவனுக்காகக் கதவைத் திறந்து வைத்திருந்தான் விஜய்.
நன்றியோடு, வெளியேறியவன், அந்தப் பிரமாண்டமான அலுவலகத்திற்குள் நுழைய, அவனைக் கண்டதும் மரியாதையுடன் வேலையாட்கள் ஒரு வணக்கத்தைக் கூற, அதை மெல்லிய தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டவாறு கூட்டம் நடக்கும் அறைக்குள் நுழைந்தான்.
வணக்கம் சொன்னவர்களுக்குத் நன்றி கூறியவாறு தன் இருக்கையில் காலுக்கு மேல் காலைப் போட்டு சாய்வாக அமர்ந்து தனக்கு முன்னாலிருந்த மடிக்கணினியைத் திறந்துகொண்டே,
“சோ… வாட் டு யு திங் காய்ஸ்..” என்றான் கம்பீரமாக.
“சார் உங்கள் திட்டத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்… ஆனால் இதில் பெரிய சிக்கல் இருக்கிறது…” என்று ஒருவன் இழுக்க,
“என்னது…” என்றான் அவன்.
“அது… ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு அரசு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறது. பணத்தை அரசுக்குக் கொடுக்கவேண்டுமாம்… அதை வைத்துத் தாங்களே கட்டடம் கட்டிக் கொடுப்பார்களாம்…” என்று அங்கிருந்த ஒருவர் கூற,
“xxx xxxx… சாரி… கெட்ட வார்த்தை பேசியதற்கு… எத்தனையோ நாடுகள், ஈழ மக்களுக்கு உதவும் பொருட்டுக் கோடிக்கணக்காகப் பணம் கொடுத்திருக்கிறது. இன்றுவரை எந்த நல்லதும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை. கொடுத்த பணத்திற்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இந்த நிலையில் இப்போது கொடுக்கும் பணத்தையும், அவர்கள் நாம் எதிர்பார்ப்பதுபோலச் செலவு செய்வார்கள் என்று என்ன நிச்சயம்?” என்று கோபமாகக் கேட்டவன்,
“நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது, இத்தனை காலமாக உள்ளே சென்று உதவி செய்ய அரசு விடவில்லை. இப்போதுதான் தமது சட்டத்தைக் கொஞ்சமாவது தளர்த்தியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்தால் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு ஓரளவு உதவி செய்ய முடியும்… எப்படியாவது பத்து வருடங்களாகச் சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை நாம் செய்து கொடுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும்… ஏற்கெனவே இருக்கிற காணிகளில் நூறு வீடுகள் கட்டுவதற்கான நிலம் பார்த்தாயிற்று. வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்கும் ஆட்களைப் பிடித்தாயிற்று இப்போது போய்க் கட்ட முடியாது, அதற்குரிய பணத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்றால்… எப்படி… நோ…” என்று அவன் கறாராகக் கூற,
“அது புரிகிறது சார்… ஆனால் பத்துவருடங்களாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்… அவர்கள் இனி பழைய இடத்தை விட்டுப் புதிய இடத்திற்கு வருவார்களா தெரியவில்லையே…” என்று மற்றவர் கூற,
“இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை வசந்தன். எல்லோருமே முள்ளின் மீது நிற்பதுபோலத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் சொந்த வீட்டின் அருமை. இந்தச் செயல்திட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கினோம். இன்றுவரை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாது, நிலுவையில் நிற்கிறது. இனியும் காத்திருக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி… நமது சொந்தச் செலவில் அந்தக் குடியிருப்பைக் கட்டி, மக்களின் கரங்களில் ஒப்படைக்கிறோம்…” என்றதும்,
“புரிகிறது சார்… ஆனால் இன்னும் ஈழத்தில் போர் ஓயவில்லையே… தொடர்ந்து போர் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் கிழக்குப் பகுதியில் யுத்தம் ஓயவில்லை… இந்த நிலையில் இத்தனை கோடிகளைச் செலவழித்து வடக்கில் வீடுகள் கட்டவேண்டுமா?” என்று இன்னொருவர் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“அப்போ எப்போது கட்டலாம் என்று சொல்லுங்கள்… ஈழத் தமிழர்கள் எல்லோரும் இறந்த பிறகா? அதற்குப் பிறகு யாருக்குக் கட்டச் சொல்கிறீர்கள்? இதோ பாருங்கள்… இந்தக் கட்டடம் கட்டுவது என்னுடைய ஆத்ம திருப்திக்காக… ஈழப்போர் இன்று ஓயும், நாளை ஓயும் என்று காத்திருந்து இருபத்திரண்டு வருடங்களாயிற்று… இதோ இந்தச் செயல்திட்டத்தைக் கையிலெடுத்து ஐந்து வருடங்களாயிற்று… இன்றுவரை நம்மால் ஒரு அடி கூட நகர முடியவில்லை… இந்த நிலையில் இன்னும் காத்திருந்தால், காலங்கள்தான் விரயமாகுமே தவிர எந்தச் செயல்திட்டமும் நிறைவேறாது…” என்று கூறிவிட்டு வசந்தனைப் பார்த்து,
“வசந்தன், நீங்கள் என்ன செய்வீர்கள் ஏது செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியாது, வருகிற அக்டோபர் பதினைந்தாம் தேதி இந்தக் குடியிருப்புத் திறக்கப்படவேண்டும்…” என்று அவன் முடிவாகக் கூற,
“அக்டோபரா… ஆனால் நமக்குக் காலம் போதாதே சார்… அக்டோபர் வர இன்னும் மூன்று மாதங்கள்தானே இருக்கிறது. அதற்குள் அத்தனை கட்டடங்களும் கட்ட நம்மால் முடியுமா தெரியவில்லையே…” என்று தயங்க, இவனோ அழுத்தமாக அவர்களைப் பார்த்து,
“உங்களால் முடியுமா முடியாதா என்று கேட்கவில்லை வசந்தன்… அன்று முடிக்கிறோம்… திறப்புவிழாவை நான் சொன்ன திகதியில் நடத்துகிறோம்.” என்றான் அவன்.
“சார்… இந்தக் குறிப்பிட்ட திகதியில்தான் திறக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா சார்…” என்று வசந்தன் சற்றுத் தயங்கிக் கேட்க, இவனுடைய முகம் மெல்லியதாக மலர்ந்தது. அதில் மெல்லிய வெட்கமும் பூத்ததோ, முன் பற்கள் இரண்டு தெரியச் சிரித்தவன்,
“யெஸ்… அன்று… எனது திருமண நாள்…” என்றுவிட்டு, அந்தக் குடியிருப்புக்கு வைக்கும் பெயர் கூட என் மனைவியுடையதுதான்… அம்மேதினி…” என்றவாறு எழுந்தான் கந்தழிதரன்.
ஆம் கந்தழிதரன். கடந்த பத்துவருடங்களாக உழைப்பை மட்டுமே உயிர்மூச்சாய்க் கொண்டு வாழ்ந்ததன் பயன், கனடாவின் முன்னணி செல்வந்தர்களுள் அவனும் ஒருவனாய் வளர்ந்திருந்தான். வயது முப்பத்தாறைக் கடந்ததனால் அதற்குச் சாட்சியாக அங்கும் இங்கும் நரையோடிய முடிக் கற்றைகள். அடர்ந்து வளர்ந்திருந்த தாடியிலும் நிறைந்திருந்த நரைமுடி. ஆனாலும் அவனுடைய கம்பீரமும் ஆளுமையும் இம்மிகூடக் குறையவில்லை. அதே கம்பீரத்துடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தவன்,
“ஓக்கே காய்ஸ்… நான் கிளம்பவேண்டும்… நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…” என்றவன் சீரான நடையுடன் வெளியேற அவன் முதுகையே அனைவரும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவன் திருமணம் முடித்தவன் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இதுவரை அவன் மனைவியை யாரும் பார்த்தது கிடையாது. எப்படி இருப்பார் என்று கூடத் தெரியாது. குழந்தைகள் இருக்கிறதா இல்லையா என்பதும் இரகசியமே. அது அங்கே சர்வசாதாரணம்தான். பாதுகாப்புக் கருதித் தனிப்பட்ட வாழ்க்கை முறையை யாருக்கும் வெளியிடமாட்டார்கள். இரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
முப்பத்தாறு வயது நிரம்பிய கனடாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவனான கம்பீர ஆண்மகனைப் பெண்கள் இலகில் விட்டுவைப்பார்களா என்ன? ஒரு பொழுதையாவது அவனோடு கழிக்க ஆசைகொண்டு, அவன் பின்னால் அலைந்த பெண்களில் தொகை எண்ணிலும் அடங்காது. ஆனால் இதுவரை அவர்களின் நிழலைக் கூட அவன் திரும்பிப் பார்த்தது கிடையாது. அவனோடு நேரம் கழிக்க ஆவல்கொண்டு கேட்கும் பெண்களிடம், நான் திருமணம் ஆனவன், என்று சொல்லி விலகும்போதுதான் அவன் மணமானவன் என்பதே அந்தப் பணக்கார வாட்டத்திற்குத் தெரியவந்தது.
ஆனாலும் இன்றுவரை தன் மனைவியை அந்தப் பிரமாண்டமான நிறுவனத்திற்குக் கூட அழைத்து வந்தது கிடையாது. ஏன் எத்தனையோ விழாக்களில் பங்கேற்றிருக்கிறான். அப்போதும் கூட மனைவியை அழைத்து வந்ததில்லை. அப்படியிருக்கும்போது, அவன் மணமானதாகப் பொய் சொல்கிறான் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஏன் அவனுடைய அலுவலகமே, அவன் மணமானவன் என்கிற செய்தி வெறும் கட்டுக்கதை என்றே முடிவுசெய்திருந்தது. இந்த நிலையில், அவனுடைய திருமண நாளுக்காக இடம்பெயர்ந்த ஈழ மக்களுக்குப் பிரமாண்டமான செலவில் வீடுகள் கட்டுவதென்றால்! அதுவும் அவனுடைய மனைவியின் பெயரில்.
கந்தழிதரனோ, இதை எதைப்பற்றியும் அக்கறை கொள்ளாது தன் வாகனத்தில் ஏறியவன், அதை உசுப்ப, அவனுடைய வண்டி பிரமாண்டமான அந்தப் பங்களாவிற்கு முன்னால் வந்து நின்றது.
இறங்கியவன், வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைய அவனை வரவேற்றது, மிக மிகச் சுத்தமான ஆளில்லா பங்களா. டையை இலகுவாக்கியவாறு படிகளில் ஏற, படிகளின் முடிவில் தொங்கிக்கொண்டிருந்தது அம்பிகா பரந்தாமன் மற்றும் அவனும் சேர்ந்து எடுத்த புகைப்படம்.
முப்பது வயது முடிந்தும் திருமணம் முடிக்க மறுத்த மகனிடம், கேட்டு, கெஞ்சி வேண்டி, திட்டி அழுது களைத்துப்போய், இறுதியாக அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டுக் கோவில் குளம் என்று உலகம் முழுவதும் சுற்றத் தொடங்கினர். அப்படிச் சென்றபோதுதான் அவர்கள் சென்ற விமானம் இடையில் தொழில்நுட்பக்க காரணமாக வெடித்துச் சிதற சத்தமில்லாமல் சொர்க்கம் சென்றனர் இருவரும்.
ஏனோ இவனுக்கு அழத் தோன்றவில்லை. அவன் வாழ்வில் பட்ட அடிகளுக்கு மத்தியில், அன்னை தந்தை இறப்புப் பெரிய மரண அடியாக இருக்கவில்லை.
உயிரோடு இருப்பவனுக்குத்தானே இந்த உயிர்வலியெல்லாம்… அவன்தான் பத்துவருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டானே… உயிரோடு.
ஆம், அன்று ரெட்க்ராசில் அவனை ஏற்றி அனுப்பிய ஓரிரு நிமிடங்களில் பொம்மர் போட்ட குண்டில் அவன் கண்முன்னால் வெடித்துச் சிதறியது அந்த மருத்துவமனை. அந்தக் கணம் அவனுடைய இனிய கற்பனையும், காதலும், வேட்கையும், காமமும் மண்ணோடு மண்ணாகக் கரைந்து போகத் தொலைவில் புகையைக் கக்கிய இடத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டு வந்தவன்தான்… அன்று அவன் சிரிப்பைத் தொலைத்தான், மகிழ்ச்சியைத் தொலைத்தான், வாழ்க்கையைத் தொலைத்தான், ஏன் உயிரையும் தொலைத்தான். சொல்லப்போனால் அவனுடைய உலகையே தொலைத்தான்.
நடைப்பிணமாக வந்த மகனிடம் அம்மேதினியும் யசோதாவும் இறந்த செய்தி கேட்டு ஆடிப்போனார்கள் பரந்தாமனும், அம்பிகாவும்.
சாப்பிட மறந்து குளிக்க மறந்து தூங்க மறந்து ஏதோ ஒரு இலக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மகனின் நிலைகண்டு துடித்துப்போனார்கள் இருவரும்.
இறுதியாக அவனைக் கனடாவிற்கு அழைத்துவந்து மனநல மருத்துவர்களிடம் கூட்டிச்செல்ல, எப்படியோ அவனை ஓரளவுக்கு மனிதனாக்கிப் பத்திரமாக அவர்களிடம் கொடுத்தார்கள். அதன் பின் அவன் பேசினான், தூங்கினான், குளித்தான்… ஆனால் பழைய உயிர்ப்பு மட்டும் வரவில்லை.
ஆனாலும் ஏதோ ஒரு இலக்கை நோக்கிப் பயங்கரமாக உழைக்கத் தொடங்கிய மகன், கைக்குக் கிடைத்த ஆடையை அணிந்த மகனிடம் கெஞ்சிக் கூத்தாடி நல்ல ஆடைகளை அணிய வைத்தார் அம்பிகா. பிய்ந்த ச்பபாத்து என்றுகூட உணறாது அணிந்து சென்ற மகனைக் கண்டித்து நல்ல சப்பாத்து அணியவைத்தார். இதோ இந்தக் கார், வீடு, வசதி எல்லாம் அம்பிகாவின் வற்புறுத்தலால் வாங்கியவைதான்.
சிலவேளைகளில் தனிமையிலிருந்து யாரோடோ எதுவோ பேசுவான். என்ன பேசினான், ஏது பேசினான் என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. காலம் காயத்தை ஆற்றும் என்பது நியதி. கந்தழிதரனுடைய வலியைக் காலம் ஓரளவு ஆற்றியது என்றுதான் சொல்லவேண்டும்.
காலம் செல்லச் செல்ல, அவனுடைய முகத்தில் பெரும் அமைதி வந்து நிலைத்தது. சொல்லப்போனால் ஞானநிலைக்குத் தள்ளப்பட்டான் என்றே சொல்லவேண்டும்.
ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம்… செய்கிறோம்… இறந்தோம்… என்கிற மனநிலைதான் அவனுக்கு. உலகமே அழிந்துவிட்டது, இனி எது அழிந்தால்தான் என்ன அவனுக்கு.
ஆனால் அவனைத் தேற்றியது மருத்துவமோ, இல்லை அவர்கள் கொடுத்த மருந்தோ கிடையாது. அவனைத் தேற்றியது அம்மேதினிதான். ஆம் அவள்தான் அவனைத் தேற்றினாள்.
தனிமையில் அவளை எண்ணிக் கதறும்போது, இறுதித் தருணத்தில் பதுங்கு குழியில் அவனிடம் யாசகம் கேட்டதுபோல ஒரு வேளை அவளை மணக்காது இருந்திருந்தால், அவளோடு இணையாது இருந்திருந்தால், அதன் பின் அவளுடைய உயிர் பிரிந்திருந்தால் கந்தழிதரன் தன்னையே மன்னித்திருக்கமாட்டான்.
குறைந்தது அவள் ஆசைப்பட்டதுபோல அவனுடைய மனைவியாகத்தான் இறந்து போனாள். வாழ்வில் உடல் இன்பத்தை அறியாது அவள் இறக்கவில்லை. அதையும் உணர்ந்து அனுபவித்தபின்தான் இறந்தாள். அந்தத் திருப்தி, நிம்மதி அவனை ஓரளவு உயிரோடு ஊசலாட விட்டது.
காலம் போகப் போக இடம்பெயர்ந்த ஈழமக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற அந்த வெறி அவனுக்குள். அதன் பிரதிபலிப்பாகக் கடுமையாக உழைக்கத் தொடங்கினான். இதோ இந்த உயரத்திற்கு வளர்ந்து நின்றான். இப்போது பணம் அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அவனைப் பொறுத்தவரை பணம் வெறும் இலக்கங்கள் அச்சடித்த காகிதங்கள்தான். உறவுகள் நிலையில்லாத மாயை. அவன் வாழ்க்கை வெறும் பாலைவனம்… அந்த நிலையில்தான் தாயும் தந்தையும் விமானத்தில் சென்றபோது உயிர் துறந்த செய்தி கேட்டு அவன் ஆடவில்லை. கதறவில்லை. பதறவில்லை.
ஏதோ ஒரு செய்தி கேட்ட உணர்வு. இறந்தவர்களின் உடல்கள் கூடக் கிடைக்காத நிலையில், வெறும் பெட்டிக்கு இறுதிக்காரியங்களைச் செய்தான். அவ்வளவுதான். இதோ இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறான்… வெறும் நடைப்பிணமாக. ஆனாலும் அவனுக்குள் சின்ன வருத்தம், முதன் முதலில் தன்னவள் தன் காதலைச் சொன்னபோது, அதை ஏற்றுக்கொண்டிருக்கலாமோ? ஏற்றுக்கொண்டிருந்தால் இன்னும் சில நாட்கள் அவளைக் காதலால் குளிப்பாட்டியிருக்கலாமோ… வயது, அது இது என்று தள்ளிப்போட்டதால் அவள் அனுபவிக்கவேண்டிய காதல் சொர்க்கம்… கிடைக்காமலே போய்விட்டதே.
காலம் கடந்த ஞானோதயம்… எண்ணி வருந்தி என்ன பயன்? வேதனையுடன் தன்னறைக்கு நுழைந்தவன், ஆடையைக் களைந்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்து நன்றாகக் குளித்தான். நினைவுகள் இன்னும் தன்னவளிடமே நிலைத்திருந்தது. எப்போதும் போல அவளை நினைத்த உடன் விழிகளில் நீர் தேங்கிக்கொள்ளும். உள்ளே பெரும் ஏமாற்றத்தின் வலி தோன்றும். அந்த வலியுடன் குளித்து முடித்தவன் துடைக்காமலே வந்து கட்டிலில் விழுந்து விழிகளை மூட மீண்டும் அவளுடைய நினைவு. அந்தப் பதுங்கு குழிக்குள் அவளோடான குடித்தனம் நினைவுக்கு வர, அந்த வேதனையிலும் உதடுகள் மலர்ந்து சிரித்தன. அந்தச் சிரிப்புடனேயே சற்றுச் சரிந்து, சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து அங்கிருந்து ஒரு மருந்துக் குப்பியை வெளியே எடுத்தான்.
தூக்க மாத்திரை. கடந்த பத்துவருடங்களாக அதன் துணையின்றி அவன் தூங்கியதில்லை. இப்போதும் அதன் துணையை நாடியவனாக, ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டவன், தகண்ணீர் குடிக்காமலே அதை விழுங்கிவிட்டு, மருந்துக் குப்பியை அதே மேசையில் எறிந்துவிட்டுத் தலையணையில் தலைவைத்துப் படுத்தவாறு விட்டத்தைப் பார்க்க, அவனுடைய அம்மணியின் நினைவு அவனை அரித்தது.
அவள் சார்ந்த புகைப்படங்கள் எதுவும் அவனிடமில்லை. ஆனால் ஆழமாக மனதில் பதிந்துவிட்டவளுக்கு எதற்குப் புகைப்படம். விழிகளை மூடினாலே ஏக்கத்துடன் அவனிடம் காதல் யாசகம் கேட்டவள்தானே முட்டிக்கொண்டு வருகிறாள்.
“ஓ மை பேபி கேர்ள்… ஐ மிஸ் யு டி…” என்றவனுக்கு எப்போதும் போலக் கண்கள் கலங்கிக் கண்ணீர் வழிந்து சென்றது.
இறுதிவரை அவளிடம் தன் காதலைச் சொல்லாதது பெரும் வலியைக் கிளப்பியது. அதையும் சொல்லியிருந்தால் இன்னும் மனம் அமைதி பெற்றிருக்கும். பத்துவருடங்களாக ஒவ்வொரு இரவும் படும் வலிகளில் இதுவும் ஒன்று.
தன் காதலைச் சொல்லவில்லை என்று ஏங்குவான். இன்னொரு முறையாவது அவளை அனுபவித்திருக்கலாம் என்று தவிப்பான். அவனை ரெட்க்ராசில் தள்ளியபோது அவளையும் தன்னோடு இழுத்து வந்திருக்கலாம் என்று துடிப்பான். அவளை முழுதாக அறியாது விட்டோமே என்று தவிப்பான். அவள் இறந்த பின் தானும் இறக்காது உயிரோடு இருந்து தொலைக்கிறோமே என்று நொந்து கலங்குவான். என்ன செய்வது எல்லாம் காலம் கடந்த கவலை. இப்போதும் அந்த இறுதி நாளை நினைத்தால் அவனுடைய அடிவயிறு துடித்துச் சுண்டி எழுந்து இதயத்தைப் பயங்கரமாகத் தாக்கும்.
அந்த வேதனையுடனேயே சரிந்து படுக்க, இப்போது தூக்க மாத்திரை தன் வேலையைச் செய்ய, மெதுவாக விழிகளை மூட, அவனுடைய உலகமும் இருண்டு போனது.
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…
(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…
(30) நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…
(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…
(28) மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பாதையில் அவர்கள் மட்டும் தனியாய். உயிர் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் வேகமாகப்…