Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 2

(2)

 

எப்போதும் யசோதாவிற்குத் தன் மகளை விட, அண்ணன் மகன் கந்தழிதரனின் மீது ஒரு படி பாசம் அதிகம்தான். காரணம் முதல் முதலாக அவனைக் கரங்களில் ஏந்தியவரே அவர்தான். அன்றிலிருந்து அந்த மாயக் கண்ணனின் அடிமையாகிப் போனார் யசோதா. அவன் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு யசோதா மணம் முடித்து, நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தவள்தான் அம்மேதினி. அதுவும் பிறக்கும்போது, காலால் பிறந்ததால், மருத்துவக் குழந்தை என்று ஊர் மக்களின் செல்லம் வேறு.

அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழிந்து பிறந்தவன் செல்வக்குமரன். அம்மேதினி பிறந்த போது, கிட்டத்தட்ட பதினொரு வயதான கந்தழிதரனும் சின்னக் கைகால்களுடன் இவனைக் கண்டு முதல் முதலாக இவனுடைய சுட்டு விரலைப் பிடித்தவாறு பொக்கை வாய் திறந்து சிரித்து ”ங்ஙே..” என்று கதைபேசிய அந்தச் சின்னச் சிட்டை இன்று வரை மறந்ததில்லை. அதனால் எப்போதும் அவனுக்கு அவள் பேபி கேர்ள்தான். அந்த வயதிலேயே இது என்னுடையது என்கிற உணர்வு தோன்றியதற்கான காரணம் எது என்பது இது வரை அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளைப் பிடிக்கும். மிக மிகப் பிடிக்கும். அதுவும் அவள் கலங்கினாள், இவனும் கலங்கும் அளவுக்கு உயிருக்கு மேலாகப் பிடிக்கும்.

ஆரம்பத்தில் அடிக்கடி அவர்களைச் சந்திக்க முடியா விட்டாலும், அங்கே தாய் தந்தை போகிறார்கள் என்றால், முதல் ஆளாகக் கிளப்புபவனும் அவன்தான். திருமணம் முடித்து நான்கு வருடங்களுக்குப் பிறகு பிறந்ததாலோ என்னவோ அம்மேதினிக்கு நிறையவே செல்லம் கொடுத்திருந்தார்கள். அதனால் கொஞ்சம் பிடிவாதமும், தொட்டதிற்கும் அழும் பழக்கமும் கொண்டிருந்தாள் அம்மேதினி.

அவளிடம் இவனுக்குப் பிடிக்காததே அந்தப் பிடிவாதமும், தொட்டதிற்கும் அழும் குணமும்தான். அதனால் இவன் அதை மட்டுப்படுத்த பார்ப்பான். அதன் விளைவே வம்புக்கு இழுப்பதும். கிண்டல் அடிப்பதும்.

அதனால் கந்தழிதரன் அவளுக்குப் பிடித்தமானவனாக இருந்தாலும், தித்திக்கும் எதிரிதான். அதுவும் வளர வளர அந்தப் பிடித்தம் மங்கிப் போக, அவனுடைய குறும்புச் சேட்டையாலும், அவளை வம்புக்கு இழுக்கும் விதத்தினாலும் மொத்தமாக எதிரியாகிப் போனான் கந்தழிதரன். ஆனாலும் ஏதாவது சிக்கல் என்றால் தயங்காமல் அவனிடம் சென்று உதவி கேட்பதும் அவள்தான்.

“டேய்… கந்துவட்டிக் காரா… இந்தக் கணக்கு வரமாட்டேன் என்கிறது… சொல்லிக் கொடு… டேய் கந்தா… பட்டம் அங்கே சிக்கிக் கொண்டது எடுத்துக் கொடு… டேய்… பனை மரம்… இந்தக் கை மூட்டில் வலிக்கிறது… பிடித்து விடு… தரன்… உன் நண்பன் அருண் இருக்கிறான் அல்லவா… அவனுடைய மிதிவண்டியை இன்று உடைத்துவிட்டேன்… பின்னே… என் சட்டையைப் பற்றி இழுத்தான் தெரியுமா? எத்தனை தைரியம் அவனுக்கு… ஐயையோ…. டேய்… கந்து… என்னுடைய பாவாடை பறந்து போய்க் கிணற்றில் விழுந்து விட்டது… எடுத்துக் காயப்போடுகிறாயா” என்று ஏதோ அவள் வீட்டு வேலைக்காரன் போல ஆணையிடுவாள். இவனும் மறுக்காமல் செய்வான்.

ஏதாவது வேலைக்கு ஆகவேண்டுமானால் கந்து, கோபம் வந்தால் கந்துவட்டிக்காரன், கட்டளை இடும்போது தரன்… இப்படி அவன் பெயரைப் பிய்த்துக் கசக்கி, பகுதி பகுதியாகப் பிரிப்பது அவளுக்குக் கைவந்த கலை,

அன்னை யசோதா பலமுறை அவளைக் கண்டித்துப் பார்த்தாள்.

“இது என்ன பதினொரு வயது மூத்தவனை டேய் என்கிறாய்… பல்லைக் கொட்டிவிடுவேன். மரியாதையாக ‘ங்கள்’ போட்டு அழை… அவன் உனக்கு அத்தான் முறை… அத்தான் என்ற கூப்பிட்டுப் பழகு…” என்று கடிய, அன்றிலிருந்து அவனைப் பார்த்தால்,

டேய்ங்கோ… அங்கே… போடாங்கோ, இங்கே… வாடாங்கோ என்றாள். அதற்கான காரணமறிந்து, கையெடுத்துக் கும்பிட்டு,

“தாயே…. இதை விட டேயே பரவாயில்லை… அப்படியே கூப்பிடு” என்று விட்டான்.

இது போதாதா அவளுக்கு? கந்துவே டேய் என்று அழைக்க அனுமதி  கொடுத்துவிட்டான். இனி அதைத் தடுக்க இவர்கள் யார்…?

ஏனோ அவனை ‘ங்கள்’ போட்டெல்லாம் அழைக்க அவளுக்குப் பிடிப்பதில்லை. ஒரு வேளை அவள் குழந்தையாக இருந்தபோதே அவனை அனைவரும் டா போட்டுப் பேசியதால் அவளுக்கும் அது சுலபமாகவே டா போட முடிந்ததோ? எது எப்படியோ அவளைப் பொறுத்தவரை அவனும் அவளும் ஒரே வயதினர்தான். அதுவும் ஆண் பெண் என்கிற பாகுபாடு இல்லாத ஈருடல் ஓருயிர் என்பது போலத்தான்.

இதன் உச்சக் கட்டமாக, பத்து வயதின் இடைப்பட்ட காலம். பள்ளிக்கூடம் போய்விட்டு வீட்டிற்கு வந்தவள் தாயைக் காணாமல் தேட, தாயும் தந்தையும் நகரத்திற்குப் போய் விட்டார்கள் என்று அறிந்து முகம் கசங்க, அவள் தேடிப்போனது கந்தழிதரனைத்தான்.

கந்தழிதரனின் வீட்டிற்குள் நுழைந்தவள், அங்கே வேலையாக நின்றிருந்த மாமியாரைக் கண்டு,

“கந்து எங்கே மாமி…” என்று கேட்க, இவள் முகம் கிடந்த கிடப்பைக் கண்டதும் பள்ளிக் கூடத்தில் ஏதோ பிரச்சனை என்று எண்ணியவராக,

“அறையில்தான் இருக்கிறான்… போய்ப் பார்…” என்று விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போக, எப்போதும் போல அறைக் கதவைத் தட்டாமல் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் அம்மேதினி.

அவன் ஏதோ பிரத்தியேகமாக மாணவர்களுக்குக் கற்பிப்பதால். அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான் போலும். அன்று கற்பிக்க வேண்டிய புத்தகங்களைப் பைக்குள் வைத்துக்கொண்டிருந்தான். சோர்வுடன் வந்தவளைக் கண்டு, தன் காரியத்தில் கண்ணாக இருந்தவாறு, ‘இன்று என்ன சிக்கலை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாளோ  தெரியவில்லையே…’ என்று எண்ணிப் பயந்தவனாக,

“தர் பூசணி என்ன இத்தனை வேளைக்கு வந்து விட்டாய்?” என்று கேட்டான். அவளோ கண்கள் கலங்க, தொப்பென்று அவன் படுக்கையில் அமர்ந்தவாறு தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டுப் பார்க்க, அதைக் கண்ட அந்த ஆண்மகனின் நெஞ்சம் ஏனோ பிசைந்தது.

“ஹே… என்னடி… இன்று யாருடைய மண்டையைப் பிளந்து விட்டு வந்திருக்கிறாய்…?” என்று கேட்க, அவளோ விழிகள் கலங்க,

“நான் சாகப் போகிறேன், கந்து…” என்றாள் குரல் கம்ம. ஏதோ புத்தகத்தை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டிருந்தவன், புத்தகம் தரையில் விழுவது கூட உரைக்காமல், அதிர்ச்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளோ அழுதவாறு கண்களைத் கசக்கியவாறு விம்மத் தொடங்க,

“என்னடி உளறுகிறாய்?” என்றான் ஆத்திரத்துடன். பின் அவள் உண்மையாகவே வருந்துவது புரிய,

“என்னம்மா ஆச்சு… பள்ளிக் கூடத்தில் யாராவது ஏதாவது சொன்னார்களா?” என்று அந்த ஆண்மகன் கனிவாகக் கேட்க, இவனைக் கோபத்துடன் பார்த்தவள்,

“யாராவது ஏதாவது சொன்னால், அவர்களின் வாயிருக்காது… தெரியும்தானே…” என்று அந்த நேரத்திலும் சுள் என்று விழுந்தவள், மேலும் முகம் கசங்கி நிற்க, அவளை நெருங்கி அவளுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன்,

“அப்படியானால் எதற்கு இப்படி விசர் போல அலட்டுகிறாய்?” என்றான் எரிச்சலுடன். இப்போதும் பயத்துடன் அவனை ஏறிட்டவள்,

“எனக்கு இரத்தம் வருகிறதுடா… சாகப் போகிறேனா… அந்த ஜெயா மாமி இருக்கிறார்களே… அவர்களும் இரத்தம் கக்கித்தான் செத்தார்கள்… அப்படி நானும் சாகப்போகிறேனா?” என்று கேட்டபோது, இவனுக்கு வயிற்றைக் கலக்கியது.

“ஏய்… அவர்களுக்கு ஈரல் நோய்… இறுதிக் கட்டத்தில் வைத்தியம் இல்லாமல் இறந்து போனார்கள்… அதற்காக இரத்தமாக வாந்தி எடுத்தால், அது ஈரல் நோய் என்று சொல்ல முடியாதுடி… குடல் புண் இருந்தாலும் இரத்தமாக வாந்தி எடுப்பார்கள்… நீ எதையாவது விழுங்கித் தொலைத்தாயா அம்மணி…” என்று நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கியவாறு கேட்க, இவளோ எரிச்சலுடன் அவனைப் பார்த்து,

“முட்டாள்… நான் வாந்தி எடுத்தேன் என்று சொன்னேனா…” என்று சுள் என்று விழ, இவன்தான் குழம்பிப் போனான்.

“அப்படியானால் மூக்கால் இரத்தம் வருகிறதா… லூசு… மூக்கில் வெடிப்பு ஏற்பட்டாலும் இரத்தம் வரும்… இல்லை யாராவது மூக்கை ஓங்கிக் குத்தினாலும்…” என்றவன் வலக்கரத்தை முஷ்டியாக்கி அவள் முக்கில் பட்டும் படாமலும் குத்தி எடுத்து, “இரத்தம் வரும்… எவன் உன் மூக்கை உடைத்த புண்ணியவான்…” என்று இவன் கிண்டலாகக் கேட்க, அதுவரை பொறுமையாக இருந்தவள்,

“டேய்… நான்தான்டா உன்னுடைய மூக்கை உடைக்கப் போகிறேன்…” என்றவாறு அவனுடைய படுக்கையை விட்டு எழுந்தவள், அவனை அடிக்கப் போகச் சிரித்தவாறு எழுந்த கந்தழிதரனுக்கு, அப்போதுதான் உண்மை உறைத்தது. அவனுடைய பார்வை கட்டிலில் பதிய, அங்கிருந்த குருதியைக் கண்டதும் நிலைமையைப் புரிந்து கொண்டான்.

ஒரு ஆண்மகனாகப் பெரும் சங்கடப்பட்டாலும், ‘அந்த இளங் குருத்து இப்போதே அடக்கி ஒடுக்கப் படப் போகிறதே என்று பெரும் வலியும் எழுந்தது. பதினொரு வயது கூட ஆகவில்லையே… இந்த வயதில் கடவுள் இத்தனை பெரிய பாரத்தைக் கொடுத்திருக்க வேண்டாம்’ என்று எண்ணியவனாக, தன்னை நோக்கிப் பாய்ந்து வந்தவளின் தோள்களைப் பற்றி நிறுத்தியவன்,

“ஹே… ஹே… ரிலாக்ஸ்… தெரியாமல் சொல்லிவிட்டேன்… இப்போது உனக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து விட்டது… முதலில் கட்டிலில் உட்கார்…” என்றான் மென்மையாக. அவளோ,

“போடா… நான் உன் கூடப் பேசவில்லை… உன்னோடு கோபம்… போ…” என்று விட்டு அவன் அறையை விட்டு வெளியேற முயல,

“போதும் அம்மணி… உட்கார்…” என்று அவன் சொன்ன விதத்தில், ஏனோ சற்றுப் பயந்துதான் போனாள் அந்தச் சிட்டு. அச்சத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,

“ஒரு மனிதன் தன்மையாகச் சொன்னால் கேட்கவேண்டும்… இப்படி அடம் பிடித்தால்…” என்று சற்றுக் குரலை உயர்த்தியவன்,

“உட்கார்…” என்றான் மீண்டும் அழுத்தத்துடன். அவள் அமர்ந்ததும்,

“மவளே… நான் வரும் வரைக்கும் இங்கேயே அமர்கிறாய்… புரிந்ததா?” என்று சீறிவிட்டு, வெளியே வந்தவன் அன்னையைத் தேடிச் சென்றான்.

அவர் தேசிக்காய் ஊறுகாய் போடுவதற்காக, மஞ்சள் பொடியை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு வர, நெருங்கியவன்,

“அம்மா…” என்றான்.

“என்னடா…”

“அம்மணி உங்களை வரச் சொன்னாள்…” என்றான் மொட்டையாக.

“என்னை வரச் சொன்னாளா…? ஏன்டா… உன்னைத் தானே தேடி வந்தாள்?” என்று அம்பிகா வியப்புடன் கேட்க,

“என்னைத்தான் தேடி வந்தாள்… இப்போது நீங்கள் தேவைப் படுகிறீர்கள்… போங்கள்… என்ன என்று கேளுங்கள்…” என்று ஒரு வித சங்கடத்துடன் கூற, அம்பிகாவிற்குப் புரிந்தும் புரியாமலும் மகனின் முகத்தை ஒரு கணம் ஆழப் பார்த்தார். அவனோ அன்னையின் விழிகளைப் பார்க்க முடியாத சங்கடத்துடன் எங்கோ பார்த்தவாறு, தன் தலை முடியைக் கோதி விட்டு,

“தனக்கு ஏதோ வியாதி என்று பைத்தியம் போல அலட்டுகிறாள்… ஆனால்…” என்றவன் தயக்கத்துடன் தாயைப் பார்த்துவிட்டு,

“நீங்களே என்னவென்று போய்ப் பாருங்களேன்…” என்றதும் அன்னைக்குப் புரிந்து போனது. முகம் மலர,

“என் ராஜாத்தி… பெரிய மனுஷி ஆகிவிட்டாளா…” என்று குதூகலத்துடன் கேட்டவர், கரத்திலிருந்த தட்டை அவன் கரத்திலேயே கொடுத்துவிட்டு அறைப் பக்கம் ஓட, தட்டை வாங்கியவனுக்கு ஏனோ மெல்லிய கலக்கம் தோன்றியது.

இதில் குதூகலப் பட என்ன இருக்கிறது? வயதுக்கு வந்தால் சந்தோஷப் படவேண்டுமா என்ன…? அவளுடைய சிறகுகள் வெட்டப்பட்டுவிடுமே… சுதந்திரம் முடக்கப்படுமே…’ என்று ஒரு ஆணாக எண்ணியவனுக்கு ஏனோ அவளைப் பற்றி எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அவன் நினைத்தது போல, அவள் சுதந்திரம் ஒன்றும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதே பழைய அம்மேதினியாகத்தான் திரிந்தாள். ஆனாலும் ஆண்களிடம் பெரிதும் ஒதுங்கிப் போனாள். உடனே கை கால் நீட்டுவது குறைந்திருந்தது. அது யசோதா அத்தையின் அறிவுரை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவனிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லாத அதே வாயாடிதான். ஆனாலும், தொட்டுப் பேசுதல், பெரிதும் குறைந்து போயிற்று. எப்போதும் இரண்டடி இடை வெளி விட்டே நின்று கொள்ளுவாள். அதற்கான காரணத்தை அவன் அறிந்து கொண்டதால், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் எப்போதாவது இப்படி ஏதாவது செய்து வைப்பாள். அப்போது அவனாலும் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லைதான்.

இப்படி எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்தப் பயங்கர நாள் வரும் வரை.

90ஆம் ஆண்டு இந்திய இராணுவம் பலாலியை விட்டு வெளியேறியபோது, அந்த இடத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிக் கொள்ள, இலங்கை இராணுவம்தானே, ஒரு முறையாவது தாம் வாழ்ந்த வீட்டின் நிலை என்ன என்பதைத் தள்ளி நின்றவாறு பார்த்துவிட்டு வரலாம் என்று ஆவலுடன் தன் மகன் செல்வக்குமரனையும் அழைத்துக்கொண்டு போன காசிநாதன் அதன் பின் திரும்பவில்லை, உயிரோடும் வரவில்லை, உடலும் திரும்பவில்லை.

‘ஏதேதோ சொன்னார்கள். இலங்கை இராணுவம் பலரை சுட்டதால், இவர்களும் அதில் சிக்கியிருக்கலாம் என்றார்கள். இல்லை அவர்களை சிறைப் பிடித்திருக்கலாம் என்றார்கள்… அப்படியானால், அந்தப் பாலகன் நிலை என்ன? அதற்க்கு யாரிடமும் பதிலில்லை. இன்றுவரை அதற்குப் பின்னால் இருந்த மர்மம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. போனவர்களுக்கும் என்ன ஆனது? உண்மையாகவே சுடப்பட்டுத்தான் இறந்தாரா? இல்லை இராணுவத்தின் பிடியில் சிக்கி இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா…? இத்தகைய பதிலில்லாத கேள்விகளுக்கு விடை தெரியாது நொறுங்கிப்போனது அந்தக் குடும்பம். காணாமல் போன ஆயிரம் ஈழத்தமிழர்களின் பட்டியலில், காசிநாதனும், அவர் மகனும் நோகாமல் இடம்பிடித்துக் கொண்டனர். இறுதியில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற முடிவுக்கு வந்தபோது அவர்கள் பட்ட பாடு.

அந்தக் குடும்பமே உருக்குலைந்து போனது. செய்தி அறிந்து அந்த ஊரே திரண்டு வர, அங்கே முகத்தில் வலியைத் தாங்கிக்கொண்டு தனியனாக நின்றிருந்த கந்தழிதரனைக் கண்டு, அவனால் மட்டுமே தன் வலியைப் போக்க முடியும் என்று நம்புபவள் போல அவனை நோக்கிப் பாய்ந்தவள், அவனுடைய இடையை இறுக அணைத்துக் கதறிவிட்டாள் அம்மேதினி.

“என்னென்னமோ எல்லாம் சொல்கிறார்களே கந்து… அப்பா, செல்வன்… இரண்டு… இரண்டு பேருமே… இல்லையாமே… இவர்கள் பொய்தானே சொல்கிறார்கள்… சொல்லு கந்து… இவர்கள் பொய் தானே சொல்கிறார்கள்… எனக்கு என் தம்பி வேண்டும்… என் அப்பா வேண்டும்… ப்ளீஸ் கந்து… போய்க் கூட்டிக்கொண்டு வாவேன்… ப்ளீஸ்…” என்று அவன் வயிற்றில் விழுந்து கதறியவளை இறுக அணைத்தவாறு  நிற்க மட்டும்தான் அவனால் முடிந்தது.

அதன் பின் அழுது கதறித் துடித்த யசோதாவையும், அம்மேதினியையும் தேற்றுவதற்குள் கந்தழிதரனின் குடும்பத்திற்குப் போதும் போதுமென்றாகி விட்டது. இனி இறந்தவர்களுடன் உடன் கட்டை ஏறவா முடியும். இறந்த, காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களுள் அவர்களும் அடங்குவர், அவ்வளவுதான்.

ஈழத் தமிழர்களின் உயிர் என்ன அற்புதமானதா? அது வெறும் கொசுக்களுக்கு நிகராயிற்றே. ஒரே அடி, உயிர் பிரிந்தது. அவ்வளவுதான்.

நெஞ்சம் துடிக்கக் கண்கள் சிவக்க, அன்புக்கினிய மாமன் இறந்த வலியில் இறுகிப்போய் நின்றிருந்த கந்தழிதரனுக்கு, தன்னிலை கெட்டுக் கதறிய அம்மேதினியைக் கை வளைவில் வைத்துக்கொண்டு ஆறுதல் படுத்தத்தான் அவனால் முடிந்தது.

உண்ணாது உறங்காது தவித்த யசோதாவை அம்பிகா ஆறுதல் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாது கலங்கி நின்றவளுக்கு உணவூட்டுவதிலிருந்து தன் மடியில் உறங்க வைத்தது வரை கந்தழிதரனே செய்தான்.

“என் பேபி கேள்தானே நீ… ப்ளீஸ்… அழாதேடி… சொல்கிறேன் அல்லவா… தேற்றிக்கொள்” என்று அவளை ஆறுதல் படுத்தினான். அவளுக்கும் அப்போதைக்கு அவனே பெரும் ஆறுதலாக இருக்க, அவனை விட்டு விலகினாளில்லை. உறங்கும்போதும் அவன் அணைப்பிலேயே உறங்கினாள்.

ஆனாலும் தன்னையே பின்தொடரும் தம்பியின் இழப்பு அவளைப் பெரிதும் வேதனைப் படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். அதை நினைத்து நினைத்துத் துடிக்கும் போதெல்லாம் எப்படித் தெரிந்துகொள்வானோ… எங்கிருந்தாலும் வந்துவிடுவான்.

தன் மார்போடு அணைத்து அவளை ஆசுவாசப் படுத்துவான். தண்ணீர் குடிக்க வைத்து உறங்கச் செய்வான். அவன் அவளைத் தேற்றிவிட்டான் தான். ஆனால் அவன்… அவனுடைய வலியை யார் அறிவர்.

அந்த அன்பு நிறைந்த அந்த மனிதன் இறந்ததை அந்த ஆண்மகனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்போதுதான் அவர்கள் குடும்பமே அதிர்ந்து நிற்கும் வகையில் ஒரு காரியம் செய்தான்.

யாழ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் கற்றுக்கொண்டிருந்தவன், இலங்கை இராணுவத்திற்கு எதிராகப் போராட வேண்டி விடுதலை இயக்கத்தோடு சேர்ந்தான். அது அவன் குடும்பத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. பெற்றது ஒன்றே ஒன்று. அவனும் போராட்டத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அம்பிகா பரந்தாமன் மட்டுமல்ல, அம்மேதினியின் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.

இப்போது இறந்த மகனுக்காகவும் கணவனுக்காகவும் கதற முடியாமல் போராட்டத்தில் இணைந்த மருமகனுக்காகக் கதறினார் யசோதா. ஆம் கல்வியில் சிகரத்தைத் தொட்ட அந்த ஆண் சிங்கம், நாட்டைக் காக்கவென்று போராட்டத்தில் இணைந்து கொள்ள, அந்தக் குடும்பமே கதறித் துடித்தது.

அப்போது போராட்டம் கடுமையாக நடக்கத் தொடங்கிய நேரம். போராளிகள் அதிகம் வீரமரணத்தைத் தழுவிய காலம் அது. இந்த நிலையில் எப்போது வீர மரணத்தைத் தழுவுவானோ என்று அஞ்சி நடுங்கிப் போயினர். எப்படியோ தெரிந்தவர்களைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாட இவர்களின் நிலை அறிந்து விடுதலைப் புலி இயக்கம், ஆறு மாதங்களின் பின்னர்த் தாமாகவே அவனை விடுவித்தது.

பெற்றோருடன் போக மறுத்தவனை, சமாதானப் படுத்தி அனுப்பி வைக்க, வேண்டா வெறுப்பாகவே வீடு வந்து சேர்ந்தான் கந்தழிதரன்.

வீடு வந்தவனை விளாசித் தள்ளிவிட்டார் பரந்தாமன். இருக்காதா பின்னே… அவனைக் காக்க வேண்டி எத்தனை பேரின் கால்களைப் பிடித்தார். கொஞ்சமாவது பெற்றவர்கள் மீது அக்கறையிருந்தால் இத்தகைய காரியத்தைச் செய்திருப்பானா? ஆத்திரம் தாங்க முடியாது பூவரசம் தடியைப் பிய்த்து அது தெறித்துச் சிதறும் வரைக்கும் அடிக்க, அப்போதும் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு சிலையென இறுகிப்போய் நின்றானே அன்றி ஒரு வார்த்தை கூடப் பேசினானில்லை.

கந்தழிதரனுக்குப் பரந்தாமன் அடிக்க அடிக்க, எப்படியெல்லாம் துடித்துப் போனாள் அம்மேதினி. இப்போது நினைத்தாலும் இவளுடைய உடல் உதறும்.

தன் கணவனைத் தடுக்க முயன்ற அம்பிகா முடியாமல் இருவருக்கும் நடுவில் வந்து நின்று மகனுக்கு விழுந்த சில அடிகளைத் தான் வாங்கிக்கொண்டார் அவர் மட்டுமா, யசோதா கூடக் குறுக்கே விழுந்து அண்ணனின் ஆவேசத்தைத் தடுக்க முயன்று தோற்றுக் கடைசியில் இரண்டு பெண்களும் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கதறிய பின்தான் ஆவேசம் அடங்கினார் பரந்தாமன்.

ஆனாலும் சற்றும் அசையாது உடல்கள் தடிக்க, முகத்திலும் கழுத்திலும் கரங்களிலும் விழுந்த அடிக்கான அடையாளங்கள் அப்படியே தெரிய, அதே இடத்தில் நின்றிருந்த மகனைக் காணக் காண அவருக்கு ஆத்திரத்தோடு துக்கமும் வந்து நெஞ்சை அடைத்துக் கொண்டது.

“ஏன்டா… ஏன்டா இப்படிச் செய்தாய்? உனக்கு என்ன குறை வைத்தோம்… சொல்லுடா… போய்ச் சாவதற்குத்தானா இத்தனை கற்றாய்? டேய்… போராட்டத்திற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்… எங்களுக்கு நீ… நீ மட்டும்தானே இருக்கிறாய்… உனக்கு ஏதாவது நடந்திருந்தால் எங்களைப் பற்றி யோசித்தாயா…” என்று அவர் கதறத்தான் கொஞ்சம் அசைந்து கொடுத்தான் கந்தழிதரன்.

அவர் அழுவதையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தவன்,

“எப்படிப்பா… எப்படிச் சும்மா பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்கள்… எங்கள் நாடுப்பா இது… எங்கள் சொந்த பூமி… இங்கே எங்களுக்கு உரிமையில்லை என்றால் நாம் எங்கேதான் போவது… கடலில் குதித்துச் சாகவா முடியும்… என் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட இடத்தில், இன்று யாரோ ஒருத்தன் உரிமை கோருகிறானே… அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா… மாமாவைப் போல எத்தனை பேர்… எத்தனை பேர் எதற்காகச் செத்தோம் என்பது கூடத் தெரியாமல்… இதையெல்லாம் கைக்கட்டிப் பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்களா? இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டி எத்தனை பேர் இறந்தார்கள்… அப்போது அவர்களைப் பாராட்டத் தெரிந்த நமக்கு, நம் ஊரைக் காக்கப் போராட்டத்தில் இறங்கினால் தாங்க முடியவில்லையா… நினைத்தாலே சிரிப்பாக இல்லை… முடியாதுப்பா… நிச்சயமாக என்னால் முடியாது… இப்படிக் கைக்கட்டி வாய் பொத்தி அடிமையாக வாழச் சத்தியமாக என்னால் முடியாது… என் உரிமை எனக்கு முக்கியம்… நமது கஷ்டத்தைக் கேள்வி கேட்க எவனும் வரமாட்டான்… நாமாகப் போராடினால் மட்டும்தான் உண்டு… தயவு செய்து… என்னை அனுப்பி விடுங்கள்… குறைந்தது ஆயிரம் எதிரிகளையாவது கொன்று விட்டு மடிகிறேன்…” என்று அவன் சீறிய போது, பெற்றவர்களாய் அவர்கள் பட்ட துயரம்.

“போராட ஆயிரம் பேர் இருக்கிறார்கள்டா… நீ போய்த்தான் போராடவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை…” என்று தந்தை ஆத்திரத்துடன் கூற,

“யாரோ ஒரு பிள்ளை போராடினால் உங்களுக்கு இனிக்கிறது… உங்கள் சொந்த மகன் போராட்டத்திற்குப் போவதென்றால் உங்களுக்குக் கசக்கிறதா… நல்ல நியாயம்பா உங்களுடையது…” என்று விரக்தியில் அவன் கூற, ஒரு கணம் வாயடைத்துப் போனார் பரந்தாமன். ஆனால் அம்பிகாதான் துடித்துப் போனார்.

“என்னடா பேசுகிறாய்… நான் என்ன பத்துப் பிள்ளைகளா பெற்றிருக்கிறேன்… ஒவ்வொருத்தனாகப் போராட்டத்திற்கு அனுப்ப. எங்களுக்கு நீ மட்டும்தானேடா இருக்கிறாய்… உனக்காகத்தானேடா நாங்கள் வாழ்கிறோம். அதையேன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய். சொல்லுடா… நீ மட்டும் இறக்கமாட்டாய்… உன்னோடான சந்ததியும் சேர்ந்து இல்லாது போகும். நீ இல்லையென்றால் நாங்கள் ஏதுடா? அதைப் புரியாமல் என்ன பேச்சுப் பேசுகிறாய்… டேய்… போராட்டத்திற்குப் போனால் நீ எதிரிகளைக் கொல்ல மாட்டாய். அவனை நம்பியிருக்கும் அத்தனை குடும்பங்களின் ஆணிவேரையே கொல்வாய்… அந்தப் பாவம் நமக்கு வேண்டாம்டா… உயிர் கொலைடா… ஐயோ… நினைக்கும் போதே பதறுகிறதே… என் மகன் ஒருவனின் உயிரை எடுப்பதா… ஏன்டா உன்னுடைய புத்தி இப்படிப் போகிறது… இதோ பார்… நான் ஒன்றும் தியாகி அல்ல… என் பிள்ளையைத் தாரை வார்த்துக் கொடுக்க. அந்தளவுக்கொன்றும் எனக்குப் பெரிய மனது கிடையாதுடா… கிடையாது… கணவன் பிள்ளைகள் என்று வாழ்கிற சாதாரண மனுஷி…” என்று கதற, மகனோ ஆத்திரத்துடன் தன் அன்னையைப் பார்த்து,

“இது… இதுதான் ஒவ்வொரு தமிழனும் செய்த பெரும் குற்றம்… சிங்களவர்கள் பத்துப் பிள்ளைகளைப் பெற்றுத் தங்கள் இனத்தைப் பெருப்பித்து… இப்போது… எழுபது வீதத்திற்கும் மேல் அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள்… நாகரீகம் பார்த்து, சொத்து பிரிந்துவிடுமோ என்று அஞ்சி ஒன்று இரண்டோடு நிறுத்தியதால் வந்த வினைதான் இன்றைக்குப் போராட்டமாகப் பரந்து கிடக்கிறது… இன்றைக்கு ஈழத்தின் மூத்த குடி வெறும் இருபத்தைந்து வீதத்திற்கும் குறைவுமா… போதாததற்கு வெளிநாடு வேறு போய்விட்டார்கள்… நீங்களும் பாட்டி பூட்டிபோல ஆளுக்குப் பத்துப் பிள்ளைகள் பெற்றிருந்தீர்கள் என்றால், அந்தச் சிங்கள அரசு நம்மிடம் தனி நாடு கேட்டிருக்கும்… அப்போது கைவிட்டுவிட்டு… இப்போது பெற்றது ஒருவன்… எப்படி விடுவோம் என்கிறீர்கள்… இது எனக்கான போராட்டமில்லையம்மா… நமக்கான போராட்டம்…” என்று அவன் எகிற, தங்கள் வலியைப் புரியாமல் பேசும் தன் மகனைக் கண்டு கொதித்தவராக,

“சரி இப்போது என்ன… நீ போராட்டத்திற்குப் போக வேண்டும்… அவ்வளவுதானே… போ… தாராளமாகப் போ… அதற்கு முதல் எங்களுக்குக் கொல்லி வைத்துவிட்டுப் போ…” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு உள்ளே செல்ல ஒரு கணம் கந்தழிதரனும் ஆடித்தான் போனான்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்மேதினியால் கந்தழிதரனை நிமிர்ந்துகூடப் பார்க்க முடியவில்லை. ‘ஏன் அப்படிச் செய்தான், எதற்காக அப்படிச் செய்தான்… இவனால் எத்தனை பேருக்குச் சிரமம். ஐயோ… அத்தை வேறு அழுகிறார்களே… மாமா… எப்போதும் கம்பீரமாக இருக்கும் மாமா எதற்காக இப்படி வதங்கி நிற்கிறார்… இதற்குக் காரணம் இவன்தானே…’ அந்தப் பதினொரு வயது பெண்ணுக்குத் தன் மாமன் மாமியை அழவைத்த கந்தழிதரன் எதிரியாகவே தோன்றினான். கூடவே அவனுக்கு ஏதாவது நடந்திருந்தால் அதை நினைக்கும் போதே அந்தப் பிஞ்சு உள்ளம் பதறித் துடித்தது. அதன் பின் அம்மேதினி அவனுடன் பேசுவதை முற்றாகத் தவிர்த்தாள்.

அப்போதிருந்த நிலையில் கந்தழிதரனும் அவளுடைய ஒதுக்கத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அம்மேதினியின் தந்தை இறந்ததாலும், கந்தழிதரன் விடுதலை இயக்கத்திற்குச் சென்று மீண்டு வந்ததாலும், அவர்களின் வாழ்க்கை பழைய குதுகலத்தை முற்றாகத் தொலைத்தது. அதன் பின் அனைவரிடமும் ஒரு இறுக்கம். அழுத்தம்.

அங்கேயே இருந்தால் தன் மகன் மீண்டும் ஏதாவது பாரதூரமான செயலில் இறங்கி விடுவானோ என்று அஞ்சி, அவர்களின் பெரிய வீட்டை விற்றுவிட்டு சிறிய வீட்டை யசோதாவிடம் ஒப்படைத்துவிட்டு, கொழும்புக்குப் போனவர்கள் . அதற்குப் பிறகு போக்குவரத்துகள் தடைப்பட, இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தொடர்பாடல் பெருமளவில் துண்டிக்கப் பட்டது.

இங்கிருந்து அங்கும் போக முடியாது. அங்கிருந்து இங்கும் வர முடியாது என்கிற நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக அவர்களுடைய நினைவுகள் மெல்ல மெல்ல முக்கியத்துவம் இழக்கத் தொடங்கியது. ஆனாலும் அம்மேதினியால் கந்தழிதரனை மட்டும் மறக்க முடியவில்லை. அடிக்கடி அவனை நினைப்பதுண்டு. எப்படி இருக்கிறானோ என்று எண்ணியதும் உண்டு. அதுவும் ஏதாவது தேவை ஏற்படும் போது, அவளுடைய மனது அவனை அதிகம் தேடியது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் தந்தையினதும் தம்பியினதும் திதி அன்று அவளுடைய உள்ளம் அவனுடைய அருகாமைக்காக ஏங்கியது.

இரண்டு வருடங்கள் கழித்து, அவன் படிப்பைத் தொடரக் கனடாவிற்குச் சென்று விட்டதாகக் கேள்விப்பட்டார்கள். இப்போது விடுப்பில் மீண்டும் தாய்நாடு வந்திருக்கிறான். இப்போது கையோடு தாய் தந்தையை அழைத்துச் செல்லப் போகிறான்.

தாய் தந்தையரை அழைத்துச் சென்றால், மீண்டும் ஈழம் திரும்பும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்கிற சந்தேகத்தில், கிடைத்த நாட்களுள் இவர்களை வந்து கண்டுவிட்டுச் செல்ல முடிவெடுத்து வருகிறான்.

அவன் இவர்களைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பிவிட்டான். ஆனால் பரந்தாமனும் அம்பிகாவும்தான் திணறிப் போனார்கள். மீண்டும் யாழ்ப்பாணம் போகக் கிளம்பியவன், திரும்பவும் போராட்டத்தில் இணைந்து விட்டால். மறுக்கவும் முடியாமல், சம்மதிக்கவும் முடியாமல் தடுமாறிய தாய் தந்தையிடம், திரும்பி வருவேன் என்கிற வாக்குறுதியைக் கொடுத்து விட்டுத்தான் கிளம்பினான் கந்தழிதரன்.

எப்படியோ அவன் யாழ்ப்பாணம் வரும் செய்தியைக் கொழும்புக்கு வந்து போன உறவினர்கள் மூலம் தெரியப் படுத்தியிருந்தார் அம்பிகா.

What’s your Reaction?
+1
18
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 16

(16)   அன்று இரவு ஏனோ கந்தழிதரனுக்கு உறக்கம் சுத்தமாக வரவில்லை. உள் மனனோ, அம்மேதினி முன்பு சொன்னதைத்தான் திரும்பத்…

2 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

1 day ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)   மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது…

5 days ago